பிற  வாழ்க்கைகள்

The Creation of Adam by Michelangelo Buonarroti, 1511

பிற  வாழ்க்கைகள்

வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே!

நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற பிற வாழ்க்கைகளை தருவது. கற்பனை மனித விலங்கு வளத்துக்கொண்ட அறிதல் முறைகளில் ஒன்று. சொல்லப்போனால் இன்றைக்கு அறிவியல் இவ்வளவு விரிவடைந்து நிற்பதன் அடிப்படையே கற்பனைதான். அறிவியலில் `அனுமானம்` என்றொன்று இருக்கிறது. இந்தப்பிரபஞ்சத்தின் பெளதீக உண்மைகளை வெறுமனே தர்க்கங்கள் மூலம், கணிதங்கள் மூலம் மட்டும் அறிவியல் கண்டு கொள்வதில்லை , அது கற்பனையைக் கொண்டே தன் எடுகோள்களைச் செய்கிறது. `கருந்துளை` பற்றிக் கற்றிருப்பீர்கள்,  அறிவியல் புனைவிலும் சினிமாவிலும் பார்த்திருப்பீர்கள். இது வரை காலமும் கருந்துளை என்பது கற்பனையாலேயே அறிவியலாளர்களும் சரி, புனைகதைகளிலும் சரி அறியப்பட்டது அதற்கு தோராயமான வடிவம் ஒன்றை வழங்கினார்கள். ஆச்சரியப்படும் விதமாக நாசா படம் பிடித்த கருந்துளையும் மனிதர்கள் கற்பனை செய்து வைத்திருந்த கருந்துளையும் பெரியளவில் ஒத்திருந்தன.  அறிவியலோ, கலையோ படைப்பாக்கத்தை நிகழ்த்துவதற்கு அடிப்படையானது கற்பனைதான்.

நவீன இலக்கியம் கற்பனையை அடிப்படையாகவும், மொழியைக் கருவியாகவும் கொண்ட கலைவடிவம். சொல்லப்போனால் நம்முடைய ஆரம்ப அறிதல் முறையும் நமக்கு பிரியமான அறிதல் முறையும் கற்பனைதான். இலக்கியத்தில் எழுத்தாளரின் கற்பனைத்திறனும் நுண்ணுணர்வும்   மொழியும்  எவ்வளவு முக்கியமானதோ அதே போல் வாசகருக்கும் முக்கியமானது. 

முதலில் நவீன இலக்கியத்தில் கற்பனை அடைந்திருக்கும் இடத்தை விளக்கப் பார்க்கிறேன். நம்முடைய மரபிலக்கியங்களில் இருந்து நவீன இலக்கியம் வேறுபடும் இடங்களில் கற்பனையை அவை எவ்வளவு எல்லைப்படுத்துகின்றன. என்பது முக்கியமானது. மரபிலக்கியங்கள்  தாம் சொல்ல நினைப்பதை சொல்லுவதன் மூலம்  உணர்த்துகின்றன.. அவற்றுக்கு உவமைகளை, தற்குறிப்பேற்றங்களை, உள்ளுறைகளை, இறைச்சி போன்ற `உவமான உவமேய`  அடிப்படைக்கூறுகளையும், உள்ளூர வைத்துச் சொல்லும் முறைகளையும் கொண்டவை.  பெரும்பாலும் நேரடியாகச் சொல்பவை. சொல்வதற்குரிய இலக்கண வரையறைகளையும் கொண்டவை. அதில் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறாரோ அதைக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.   நம்முடைய பெளரானிக மரபு இதைப்போன்றதுதான். இதில் மொழிச்சுவை, நாடகீயத்தன்மை, விழுமியங்களை நேரடியாக வலியுறுத்தும் தன்மைகள் பெரும்பாலும் இருக்கும். இங்கே வாசகருடைய பங்களிப்பு என்பது `பாடம்` கேட்பதாகவும், இலக்கணத்தின் எல்லைகளுக்குள் நின்று அதன் சுவையை உணர்தல் என்ற அளவில் குறுக்கப்பட்டிருக்கும்.  சுருக்கமாகச் சொன்னால்  கவிதையோ  கதையோ வெளியில் இருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது. மரபிலக்கியம் அதை எழுதிய ஆசிரியரிடம் நம்மை நேரடியாக அழைத்துச் சென்றுவிடுகிறது.

ஆனால், நவீன இலக்கியம் என்பதன் முக்கியமான அடைவு `வாசகப் பங்களிப்பு. நவீன இலக்கியம் சொல்வதில்லை, அது காட்டுகிறது. நவீன இலக்கியத்தில் ஆசிரியர், கவிதையிலோ  கதையிலோ மிகத்தூரத்தில் இருப்பவர். நவீன இலக்கியம் என்பது  வாசகருடைய கற்பனை,  தருக்கம், நுண்ணுணர்வு என்பவை உள்ளே இறங்கித் தேடத்தக்க மெளனங்களையும் இடைவெளிகளையும் உண்டாக்குவது. நவீன இலக்கியத்தில் நேரடித்தன்மையோ, பட்டவர்தனமோ கிடையாது. அதனால்தான் உவமை, உருவகங்களை விட நவீன இலக்கியத்தில் படிமம், குறியீடு போன்ற உணர்த்தல் நிலைகள் முக்கியப்படுத்தப்பட்டன. நவீன இலக்கியம் கற்பனைக்கான இடைவெளிகளின் மூலம், வாசகருக்கு  சில  தடையங்கள், ருசுக்களை மட்டும் வெளியில் அளிக்கிறது. நவீன இலக்கியத்தில் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்ற கேள்வியே அபத்தமானது. அங்கே வாசகர் ஆசிரியரைச் சென்று சேர வேண்டும் என்ற நிபந்தனைகள் ஏதும் கிடையாது. வாசகர் தன்னைக் கண்டுபிடிப்பதும் அடைவதுமே நவீன இலக்கியத்தில் நிகழ்வது. மரபிலக்கியங்கள்  செய்யுள் ஒன்றில் ஒற்றைச் சித்திரத்தையும்,  உணர்வு நிலையையுமே தருகின்றன. நவீன இலக்கியம் எண்ணற்ற வாழ்க்கையை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் தங்களை வெவ்வேறு விதங்களில் தம்மைக் கண்டறிகிறார்கள். மனிதர்கள்  கற்பனை மூலமே உண்மைகளின்  எண்ணற்ற பெருக்கைச் சென்று தொட முடியும். அதற்கான நிலம்தான் நவீன இலக்கியம். மனிதர்களின் எளிய பிரச்சினைகளைக் கடந்து அவற்றின் நுட்பமான சிக்கல்களை நோக்கி கற்பனை மூலமே நம்மை விரித்துச்செல்கிறது நவீன இலக்கியம். நம்முடைய உடல் எல்லைப்பட்டது. அலையச்சாத்தியமான வெளிகளைத் தாண்டி அதனால் அறிவை நோக்கியோ அனுபவத்தை நோக்கியோ செல்ல முடியாது. ஆகவே மனிதர்கள் உடலால் அல்ல  கற்பனையால் வேறு வேறு உடல்களையும் உள்ளத்தையும் அவை இயங்கும் வாழ்வையும் வாழ்ந்த அனுபவத்தையும் அடைய முடியும். யோசித்துப்பாருங்கள், எத்தனை  கோடி கதைகள், எத்தனை கோடி அர்த்தங்கள், எத்தனை வாழ்க்கைகள்.   பெருகுக ! என்ற சொல்லே சாசுவதமாகி விடுகிறதே!  

நல்ல வாசகர் குறித்த சொற்களினால் எழும் நிலக்காட்சிகளையும், விபரிப்புகளையும் தன் கற்பனையினாலும் கனவினாலும்  அகல விரித்து அதனுள் வாழ ஆரம்பிக்கிறார்.  எப்பொழுதும் ஒவ்வொரு வாசிப்பு அமர்விலும் குறைந்தது ஐம்பது பக்கங்களையேனும் தாண்டாமல் புத்தகத்தைக் கீழே வைக்கக் கூடாது என்று சொல்வது இந்தக்கனவும் வாழும் அனுபவமும்  உளங்கூட வேண்டும் என்பதனால்தான். அப்பொறுமையும் தொடர்ச்சியுமான வாசிப்பில் அங்கே நடமாடும் கதைமாந்தர்களின் இயல்புகளைக் கவனிக்கவும், அவர்களை அசலான மனிதர்களாகக் காணவேண்டும்.  அவர் தம் உரையாடல்களைக் கவனித்து அவர்களின் மனம் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இவற்றோடு அப்பிரதிக்குள் இருக்கும் குறியீடுகள் படிமங்களை  தத்தமது கற்பனையால் பொருள்கொள்ள வேண்டும். கற்பனை விரிவும் ஆழமுமாக வாசிக்க மிகுந்த பயிற்சியும் பொறுமையும் வேண்டும். நிதானமாக சொற்கூட்டி வாசித்துப் பொருள் கொள்ளும் போதே இது சாத்தியம். வேகமாகத் தாவும் வாசிப்பில் கற்பனை அறுந்து போகும். அது பொருள்தராத, அனுபவம் தராத  பயனற்ற வாசிப்பாகும். மரபிலக்கியங்களை வாசிக்கும் போது இலக்கணங்களில் நின்று, அதன்  வாசிப்பு முறைகளை உள்வாங்கி, அதன் அசைகளை உள்வாங்கியே வாசிக்க முடியும்.  எப்படி மரபிலக்கியங்களுக்கு பயிற்சி தேவையோ அதைப்போல் நவீன இலக்கியத்திலும் கற்பனையை அடைவதற்கும் அதன் மூலம் அறிவதற்கும் பயிற்சி தேவை. அப்பயிற்சிகள் வாசகருக்கும் எழுத்தாளருக்கும் அடிப்படையான தேவைகள்.

என்னுடைய எழுத்துப்பயிற்சிகளுக்காக சில வேளைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை நவீன இலக்கியமாக, உரைநடையில் அமைந்த கதையாகவோ சித்தரிப்பாகவோ எழுதிப்பார்ப்பதுண்டு. எனக்குப்பிடித்த குறுந்தொகைப்பாட்டு ஒன்றை அப்படி எழுதிப்பார்த்தேன். அதை இங்கே தருகிறேன். அதன் மூலம் ஓரளவு  நவீன இலக்கியத்தில் கற்பனையின் இடம் எப்படிப்பட்டது என்பதை  ஓர் எழுத்தாளனின் பக்கத்தில் இருந்து உங்களுக்கு உணர்த்தப் பார்க்கிறேன்.

எனக்குப்பிரியமான குறுந்தொகைப்பாடல் இது. ஒளவையார்  பாடியது. குறிஞ்சித் திணைக்குரிய பாடல். தலைவன் கூற்றாக வெளிப்படக் கூடியது.

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்

பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி

அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

நெஞ்சே! நல்ல அறிவுரைகளை  விட்டு விட்டு  பயனற்ற சொற்களையே விரும்புகிறாய்.  மழையின் நீரை எதிர்கொண்ட  சுடப் படாத பசும் மண்பாத்திரம் போல உன்னுடைய ஆசை வெள்ளம் உன்னை அடித்துச் செல்கிறது.  இப்பொழுது நீ வேண்டுவதெல்லாம்  உயர்ந்த மரக் கிளையில்  இருக்கும் பெண்குரங்கானது, தன் குட்டியை விழுந்து விடாமலும் , இறுக்கமாகவும் தழுவிக் கொண்டிருப்பது போல உன்னையொருவர் தழுவி உன் நெஞ்சக் கருத்தையும் துயரையும் செவிசாய்த்துக் கேட்பாரானால், உன்னுடைய இந்த போராட்டம் அர்த்தமுள்ளதாகும்.

என்பது இப்பாடலின் விளக்கம், காதலினால் துயரை அடையும் ஆண்மனத்தை நீரை ஏற்கும் சுடாத கலம் என்ற உவமையால் நமக்கு ஒளவை விளக்குகிறாள். மேலும் அவன் எப்படிப்பட்ட ஆறுதலை விரும்புகிறான் என்றால், உயர் கிளையில்  அமர்ந்திருந்தாலும் குட்டியைத் தழுவிக்கொண்டு இருக்கும் தாய் மந்தியைப் போல அவனையும் அவன் உளக்கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை அவன் நெஞ்சம் தேடுகிறது. இக்காட்சியையும் மையக் கருவையும் புனைவாக எழுதிப்பார்க்கலாம்.

மேற்கு மலைத்தொடர்கள்  முழவொலிக்கு அஞ்சி இருளில் மறையும் வேழங்களைப்போல இருட்டுக்குள் மூழ்கத்தொடங்கின. கருமேகங்கள் எழுந்து வந்து இறங்கி நின்றன. புகாருக்குள் ஆற்றுத் தூரமும்  மலைச்சரிவும் , காடும் வெண் முகிற் பூசலுக்குள் கரைந்திருந்தன. மழை நிதானமாக வலுக்கும் நினைப்பிலிருந்தது. மேற்குச்சரிவிலிருந்து பெருகி வரும்  ஆற்றின் நறும் புனல் பாறையிடுக்குகளில் புகுந்து பீறிடும் போது அங்கு படர்ந்து எழுந்த பாசிபடிவின் நுண்மையான ஏற்றத்தாழ்வுகளைக் கடக்கும் போது மெல்லிய கூவல் ஒலியெழுந்து மழையின் நீரறைதலோடு சேர்ந்து கேட்டன. மனதின் இரைச்சல் எல்லாவற்றிலும் படிகிறது. மழைக் கோடுகள் உடலைக் குற்றித் தெறித்தன. புற உடல் நோவிற்கு இன்றைக்கு எந்த மதிப்புமிருக்கப் போவதில்லை. பெருமூச்சொன்றை விடுவித்தபடி புரவியை  ஆற்றின் ஆழமில்லாப் பகுதிக்கு இறக்கினான். அவனுடைய நெஞ்சக் கனப்பை அப்பெண் புரவியும்  நன்கறிந்திருக்க வேண்டும். அதனால் தன் குலுங்காநடையை நீரில் இன்னும் நிதானப்படுத்தி அவனை தன் முகிலுடலில் தாங்கி நடந்தது.  சற்றுத்தள்ளி  சிறு முழவுகள் ஒலித்தன. செவி தன் பழக்கத்தால் அப்பக்கம் கண்ணைத் திருப்பிற்று. அங்கேதான் பிச்சித் தெய்வத்தின் சிறு கோட்டமிருந்தது. ஆற்றின் அந்தப்பக்கத்திலிருந்த படித்துறை அப்பிச்சியினுடையதுதான்.  அவள் அங்குள்ள குயவர் குடிகளின் தெய்வம். அவளுக்கு  மாலையில் குளிர்த்தி நடந்தது. இரவில் வெறியாட்டு நடக்கும். பிச்சிக்கு குளிர்த்தியென்றால் கோடையிலு மழை கொட்டும் என்று குயவர் தொல்பாடல் ஒன்று சொன்னது. அக்குடிகளின் பெண்கள் அத்துடித்தெய்வத்தின் முன்னால் சக்கரம் அமைத்து நற்கழி மிதித்து தம் கையால் பானை செய்வர். மென்சூட்டில் காய விட்டு சுடாமலே ஆற்றில் தண்ணீர் மொண்டு அதைப் பிச்சிக்குப் பாதி தமக்குப் பாதி தண்ணீரை தலைக்கு வார்த்துக்கொள்வர். அப்படியே ஈர உடை துவழ பிச்சியைத் திரும்பிக் காணாமல் படித்துறையில் இறங்கி  அச்சுடாத பாண்டத்தை ஆற்றில் வீசுவர். குளிர்ந்த  ஆற்றின் நீரோட்டம் அப்பாண்டத்தைச் சுழற்றியும், அமிந்திடும் அலைக்கொந்தழிப்பின் மேல் சுழற்றி வீசியும் விளையாடிவரும். படித்துறையில் வீசப்படும்  அப்பசுங்கலங்கள் மெல்ல மெல்ல ஆற்றின் சீற்றத்திலும் வெறுப்பிலும் கரைந்து சுழிக்குள் சுழன்று தம் உடல் பிரிந்து  நீர் நீறிக் கரைந்து போம். புரவி தன் மடியளவு நீர் மட்டத்தைக் கடக்கும் போது  பாதி உடல் கரைந்த மட்பாண்டங்கள் இவனைக் கடந்து போயின. அவன் மீண்டுமொரு பெருமூச்செறிந்தான். நெஞ்சு விம்மித் தணல் கொண்டது. அப்பாத்திரங்களடையாத பெருஞ்சூழையொன்று நெஞ்சிலெழுந்தது.  ஆற்றைக் கடந்தேறும் போது அவன் நெஞ்சைக் கலைக்கும் வண்ணம் அப்பெண்புரவி கனைப்பொன்றுடன் உடலை மெல்லக் குலுக்கி நீருதிர்ந்துவிட்டுக் காடேகியது. காட்டுப்பாதையின் இருபக்கமும் வானுயர்ந்த கருங்காலுடைய வேம்புகள் நிரையில் உயர்ந்திருந்தன. வேழங்கள் பாதைகளைக்க் கடக்காமலிருக்க குடிகள் அமைத்த வேம்பின் உயிர்வேலியைத் தாண்டிச்சென்றான். மழை ஆற்றை கடக்கும் போதே சட்டென்று நின்றதையிவன் கவனிக்கும் நிலையிலில்லை.கேட்டால், பிச்சியின் மழை அப்படித்தான் என்பர்கள் குயவர்கள். மெல்லிய காற்று ஆற்றுப்பக்கமிருந்து எழுந்து வந்தது.  வைகாசி தொடங்கியதை நினைத்துக்கொள் என்று சொல்லுமாறு வேம்பு தன் மென் பூக்களை  காற்றில் இறக்கி இவன் கரிய குழலில் சொற்களை நிறைத்தது. மேலே அலப்பும் சத்தம் கேட்டது. மந்திகள் காட்டைக் கடந்துக்கொண்டிருந்தன. புரவி நிமிர்ந்து பார்த்து மந்திகளைச் சொல்லிக் கனைத்தது. அதற்கு மந்திகளை ஆகாது.  அவனுடைய கைகள் சேணத்தைக் கைவிடும் நிலையில் இருந்தன. நெஞ்சப்பாரம் கூடிக்கொண்டிருந்தது. அவளுடைய கனத்த கன்னங்களும் துடித்த உதடுகளும் கொடுஞ்சொற்களும் மீண்டும் எழுந்து வந்தன.  மாலைத் தென்றலின் மென்சலனத்தில் வேப்பம் பூ வாசனை எழுந்து நிறைந்தது. கசப்பின் வாசனை. காறி உமிழ்ந்தான். உடனே கண்ணீர் விட்டழும் கண்கள் இன்னும் வாய்க்கவில்லை. விம்மியும் பார்த்துவிட்டான். ஆணுக்கு சினத்தைப்  போலக் கண்ணீர் வரவேண்டும். உடனே கரைந்து போகும்படி இந்த நெஞ்சை யாரேனும் வனைந்து கொடுத்தால் நன்று.  மீண்டும் மேலே அலப்பும் சத்தம் . தலையை நிமிர்ந்து பார்த்தான். குழலில் நின்ற வேப்பம் பூக்கள் உடலில் கொட்டின.  மரத்துயரக் கொப்பில்  தாய் மந்தியொன்று அமர்ந்திருந்தது. அதன் பெருத்த உடலும் வீங்கிச் சிவந்த பிருஷ்டமும் மாலை மங்கலிலும் பளிச்சென்று தெரிந்தன. அது கொஞ்ச நாள் முதலே அதன் நெஞ்சிலிருக்கும் குட்டியை ஈன்றிருக்க வேண்டும்.  அதன் நெஞ்சைத் தழுவிக்கொண்டு அம்மகவு தாயோடு பொருந்தியிருந்தது.  தாயுடலின் வெளியே ஒரு சூலகம். அவ்வளவு உயரத்தில் தாங்குமோ இல்லையோ என்று வெற்றுக் கண்கள் கணக்கிட இயலாத உச்சத்திலிருந்த அக்கொப்பில் தன் மகவைத் தழுவிக்கொண்டு வேப்பம் பூக்களையும் குருத்துகளையும் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தது.  இவன் அதன் சிறு மகவையே கண்ணெடுக்காமல் பார்த்தபடியிருந்தான். ஓர் அணைப்பு. எந்த நிபந்தனையுமில்லாத  உடற் செவி. அடிநெஞ்சில்  உறைந்திருந்த நடுக்கம் உடைந்தது. சொற்கள் பரவி,  உடல் நடுங்கி தலைக்கு நீரேற,  கட்குளம் நிரம்பி விளிம்பெழுந்தது.  மட்கலம்  நீரேற்று நடுங்கிக் குளிரத்தொடங்கியது.                   

Journal entry – yatharthan (12.04.2024)

இப்பொழுது ஓரளவு உங்களுக்கு விளங்கியிருக்கும். இங்கே  உவமைகளும் உருவகங்களும்  மரபிலக்கியத்தின் வழிமுறைகளில் இருந்து நீக்கியிருக்கிறேன். படிமங்களையும், மெளனங்களையும் உண்டுபண்ணியிருக்கிறேன். இங்கே கற்பனை என்பது விவரணை ஊடாக  ஆண் மனத்தின் சிற்றுணர்வை மீறிச்செல்கிறது.  இலக்கியம் கையாளும் உணர்வுகளும் உணர்த்தல் முறைகளும் `உன்னதப்படுத்தல்` என்ற இடத்தை அடைகின்றன. இங்கே வாசகரின் வாசிப்பும் எழுத்தாளரின் மொழியும் கற்பனையும்  சந்தித்து தங்களுக்கான வழிகளைக் கண்டறிந்து செல்கின்றன. நீங்கள் கேட்டிருந்த கனவுக்கும் கற்பனைக்கும் உண்டானதொடர்பும் இங்கேயே நிகழ்கின்றது. நம்முடைய கனவுகளுக்கும் நம் கற்பனைக்கும் நெருக்கமான தொடர்புகளும் பிணைப்பும் இருக்கின்றது என்பதை நவீன உளவியல் விரிவாகவே ஆராய்ந்து இருக்கிறது. கனவும் பித்தும் நவீன இலக்கியங்களில்  உச்ச நிகழ்த்துகைகள்.  நல்ல வாசகரும் எழுத்தாளரும் இவற்றை தம் எழுத்திலும் வாசிப்பிலும் கண்டு கொள்வதன் ஊடாக படைக்கும் இன்பத்தையும் வாசிக்கும் இன்பத்தையும் அடைகின்றனர். நல்ல வாசகருக்கும் எழுத்தாளரைப்போல  நல்ல கற்பனையை அடையும்  நுண்ணுணர்வு  வசப்பட வேண்டும். இடைவிடாததும் தீவிரமானதுமான பயிற்சியினாலும் திறந்த உள்ளத்தினாலும் அதை அடைய முடியும். இன்றைக்கு திறந்த உலக வீடியோ கேம்கள் எவ்வளவு மெய்நிகர் சித்திரங்களை தத்துரூபமாக அமைத்தாலும் அவற்றின் புனைவுத்தொழில் நுட்பம் இன்னுமே உச்ச வளர்ச்சி கண்டாலும். அது  எக்காலத்திலும் அடைய முடியாத ஒன்று  இருக்கிறது.  வாழ்க்கை என்பது அதன் பெயர்.

குறிப்பு –  தமிழில் கற்பனை என்ற அறிதல் முறைபற்றி அதிகம் எழுதியும் பேசியும் கொண்டிருக்கும் ஆசிரியர் ஜெயமோகன் என்னுடைய இவ்வகை உரையாடலுக்கு வெளிச்சங்களை  உண்டுபண்ணியவர். இது போக நண்பர் கிரிசாந்துடன் அன்றாடம் மேற்கொள்ளும்  உரையாடல்களும்  இவ்வகையான புரிதல்களுக்கு அவசியப்பட்ட திறப்புகள். இருவரையும் நானிங்கே குறிப்பிட வேண்டியது முக்கியம் என்று நினைத்தேன்.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’