Nov 25

நம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.

 

கிபி1505 இல் கடல்வழி தவறி இலங்கையின் தெற்கே, காலித்துறைமுகத்தில் தரை தட்டி நின்ற ஐரோப்பியர்களைக் கண்ட சுதேச மக்கள் அவர்களை  இரத்தைத்தை குடித்து கல்லைச் சாப்பிடும் அரக்கர்கள் வந்திருக்கிறார்கள் என்று தங்களின் மன்னனிடம் சென்று கூறினார்கள்.  வைனையும், கேக்கையும்தான் அவர்கள் அப்படிக்குறிப்பிட்டார்கள். இப்போது கேட்கும் போது இது நகைச்சுவையாக இருக்கும், ஆனால் சுதேசிகள் வர்ணித்தது அத்தனை சரியாக இருந்தது. அவர்கள் கீழைத்தேசத்தின் அரசியலிலும் சமூக வாழ்விலும் ஆடியது இரத்தக்களரிதான். செய்தவையெல்லாம் அரக்கத்தனம் தான். மிளகுக்கும் கடுகிற்கும் வந்ததாகவும் புனித கத்தோலிக்கத்தை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் சொன்னவர்கள் கீழை உலகம் முழுவதும் செய்தது படுகொலைகளும் சுரண்டலும் அடிமை வியாபாரமும். இன்றைக்கு ஐரோப்பியர்கள் நாகரிகமான மனிதர்கள். அவர்களின் அறிவையும் கலாசாரங்களையும் வாழ்க்கை முறையையும் சார்ந்த நாமெல்லாம் நாகரிகமான மானுடர்கள். அவ்வாறு சிந்திக்கவும் கற்பிக்கவும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். நூற்றுக்கு தொண்ணூறு வீதம் நாம் ஐரோப்பியர்களுக்காக அவர்கள் சிந்திக்கச்சொன்னபடி சிந்திக்கிறோம் என்றால் எத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது.  நாகரிகம் என்பதும் அதன் வழிதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

நாகரிகமான மனிதர்கள் மரப்பட்டைகளையோ இலைகுழைகளையோ உடுத்துவதில்லை, நாகரிகமான மனிதர்கள் பூமியை கிராமம் என்று சொல்லுமளவிற்கு தொடர்பாடல் மிக்கவர்கள், நாகரீகமானவர்கள் அம்பு வில்லையன்றி துப்பாக்கிகளையும் அணு குண்டுகளையும் பயன்படுத்துவார்கள், நாகரிகமனிதர்களிடம் விஞ்ஞானமும் கடவுளும் காணப்படும்,  இப்படியாக. நாகரிகமான நமக்கு நம்முடைய கண்களும் காலடியும் படாத யாவும் மர்மமானவை சாகசத்துக்குரியவை சொந்தமாக்கிக்கொள்ள, வேடிக்கை பார்க்க தக்கவை. அல்லது அவை மியூசியத்தில் இருக்க வேண்டியவை.

சென்ரினல் தீவின் பழங்குடிகளுக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உலகின் வெளிச்சத்திற்கு எடுத்துவரப்பட்டு அழிக்கப்படப்போகின்றார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அறுபதாயிரம் வருட தொல்வாழ்வை கொண்டிருக்கும் மக்கள் அவர்கள். அரசு அவர்களை நெருங்கவோ தொந்தரவு செய்யவோ வேண்டாம் என்று சொல்லியும் நாகரிகமடைந்த மக்கள் அவர்களை விடுவதாயில்லை. சமீபத்தில் கர்த்தரை அவர்களிடம் எடுத்துசெல்லப்போகிறேன் என்று புறப்பட்ட ஒரு அமெரிக்க இளைஞனை அவர்கள் கொன்று விட்டார்களாம். அமெரிக்கா அவருடைய உடலை தரும்படி இந்திய அரசை அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? அவர்களை அழித்து விட்டு இளைஞனின் உடலை எடுத்து வருவதா? அமெரிக்க வான்பரப்புக்குள் அனுமதி பெறாத ஒரு கிருமி நாசினி அடிக்கும் கிளைடர் விமானம் நுழைந்தால் கூட என்ன நடக்கும்? சென்ரினல் தீவு வாசிகளுக்கு வேறு நியாயம் . ஏனெனின்ல் அவர்கள் செய்வது படுகொலை, காட்டுமிராண்டித்தனம். அது தற்காப்புக்குள் வராது. நமக்கு தக்காளிச்சட்னி மற்றும் இரத்தம் தொடர்பான நகைச்சுவை அது.

கடந்த சில நாட்களாக உலகின் முக்கால் பங்கு ஊடகங்கள் அவர்களைக் காட்டு மிராண்டிகளாகவே மாற்றிவிட்டன. ஏனெனில் நாகரிகமனிதர்கள் சாதாரண மனிதர்களின் செய்திகளை படிப்பதை விட காட்டுமிராண்டிகளின், அவர்களை வென்று வரும் கதாநாயகர்களின் கதைகளைத்தான் விரும்பிப்படிக்கின்றார்கள்.

மேலைத்தேசத்தில் எல்லா நாடுகளின்  கைகளிலும் வரலாற்றின் இரத்தம்படிந்து கிடக்கின்றது. செவ்விந்தியர்களினதும், இன்காக்களினதும், அஸ்ரெக்கியர்களினதும், மாயன்களினதும், ஆபிரிக்க ஆசிய பிராந்திய பழங்குடிகளினதும், ஏன் கீழை மக்களினதும் வாழ்வினதும் காடினதும் நதிகளினதும் மற்றும் சாவினதும்  இரத்தம், ஐரோப்பியர்களுக்கும் ஆதி மக்களின் கல்லறை மேலே வசிக்கும் அமெரிக்கர்களுக்கும் இது எந்தக்குற்றவுணர்வையும் தரப்போவதில்லை.

இந்த இடத்தில் திருச்சபைகளின் கனத்த மெளனம் அச்சுறுத்துகின்றது. பழங்குடிகளை மதம்பரப்பும் பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஒரு செய்தியை தன்னுடைய பின்பற்றுனர்களுக்கு சொல்லுவதில் என்னவாகப்போகின்றது?  மத வரலாறு எங்கும் அரசுகளும், மக்களும் செய்த இந்தப்படுகொலைகளுக்கு முழு உடந்தையாக இருந்தது மதநிறுவனங்களன்றி வேறெவை? அதற்கு அதன் வரலாறு நன்கு தெரியும். அந்தப்பாவத்தை சுமப்பதற்கே அது இன்னும் நான்கைந்து ஏசுவை தேவனிடமிருந்து தருவிக்க வேண்டியிருக்கும். நின்மதியாக வாழ்ந்துகொண்டிருந்த சென்ரினல் தீவு பழங்குடிகள் காட்டுமிராண்டிகள் என்று சொல்லப்படவும் அங்கு போய் இறந்து போன இளைஞன் மீது பச்சாதாபமும் புனிதத்துவமும் கற்பிக்கப்படத்தொடங்கியாயிற்று. பழங்குடி மக்கள் விட்ட அம்பு ஒன்று அவனுடைய பைபிளில் வந்து குத்தி நின்றதாக அவனுடையது என்று சொல்லப்படும் கடிதத்தில் குறிப்புள்ளதை ஊடகங்கள் திரைப்படக்காட்சியைப்போல வர்ணித்துக்கொண்டிருக்கின்றன. இந்த இளைஞன் இரண்டு நூற்றாண்டுக்கு முதல் அங்கே போய் கர்த்தரின் பேரை அவர்கள் முன் உச்சரித்து விட்டு மாண்டு போயிருந்தால், அல்லது அவர்களைப் பெருந்தன்மையாக மன்னித்து விடுங்கள் என்று கடிதமெழுதியிருந்தால் அவனுக்கு “புனிதர்” பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் சென்ரினல் தீவு மக்களுக்கு யார் கடவுள், அல்லது அவர்களுக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. ஏனெனில் நாகரிகமடைந்த மனிதனுக்கு கடவுளிருக்க வேண்டுமே. அல்லது நாகரிகமடைந்த மானுடர்களிடம் இருப்பதுதான் கடவுள். காட்டுமிராண்டிகளுக்கு கடவுளைத்தெரியாது.

பழங்குடிகளை பாதுகாக்கவோ, அல்லது அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவோ கூடாதோ என்றால் அப்படிக்கிடையாது. அதற்கு முறையிருக்கிறது, அதில் மானுட அறவுணர்வும் அன்பும் தேவைப்படுகின்றது. நம்மைப்போல சகல உரித்தும் இந்த பூமிமீதும் வாழ்வின் மீதும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு நம்முடைய சனநாயகம் தேவையில்லை, அவர்களுக்கு நம்முடைய நாகரிகம் தேவையில்லை. எல்லோரையும் போல அவர்கள் வேண்டுவது இயற்கையில் உலாத்தும் சுதந்திரமான வாழ்வு.  என்னைக்கேட்டால் மரணத்தின் விளிப்புக்கு அவர்களை இயற்கை கொண்டு போகும் போது கூட அவர்களுக்கு நம்முடைய உதவி  தேவையில்லை என்றால், அவர்களை சுதந்திரமாக சாகவிடலாம், அவர்களுடைய எல்லாவற்றையும் தெரிவு செய்யும் உரித்து அவர்களுக்கு இருக்கிறது.

இந்த அடிப்படை எல்லோருக்கும் தெரியும். ஆனால் எது நம்மை அங்கே சாகசப்பயணம் செய்யத்தூண்டுகிறது? அல்லது அவர்களை இரட்சிக்க வேண்டும் என்று கடவுளை எடுத்துப்போகத்தூண்டுகின்றது?

ஒரு பழங்குடியை தொடர்புகொள்ள மானிடவியலாளர்கள் நிறைய முறைகளைக் கையாள்கின்றார்கள், அவர்களின் நோக்கம் மதத்தை பரப்புவதாகவோ இருக்கத்தேவையில்லை. அங்கே அறிதலும் உதவுதலும் மட்டும்தான் நோக்கம்.  தொந்தரவு செய்வதோ சுரண்டுவதோ, அவர்களின் வாழ்வைக்குழப்புவதோ வன்முறை. அதற்கு எதிராக அவர்களிடம் இருந்து புறப்பட்டு வரும் ஒவ்வொரு அம்பும் பைபிளில் சொருகினாலும் நெஞ்சில் சொருகினாலும். அது கொலையில்லை, அது ஒரு போராட்டம். அதுவே அதன் முழுத்தருமமுமாகும்.

இந்த வாரம் முழுக்க இந்த நிகழ்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கும் போது செவ்விந்திய கோத்திரங்களில் இறுதி தலைவர்களில் ஒருவராக இருந்த  முது தந்தை சியாட்டல,1854 இல் அமெரிக்கர்கள் செவ்விந்தியர் வசித்த பெரிய நிலப்பரப்பை வாங்குவதற்கு அவரை அணுகிய போது சொன்ன பதிலின் சிறு பகுதியை கவிஞர் சுகுமாரன் தன்னுடைய கட்டுரை ஒன்றில் மொழியாக்கம் செய்திருந்தமை கண்ணில் பட்டது. ஐரோப்பியர்கள் அழித்த பழங்குடிகளின் வாழ்வு இயற்கையோடு எவ்வாறு பின்னியிருந்தது என்பதற்கு சியாட்டலின் வார்த்தைகள் வரலாற்றை சவுக்கால் விளாசக்கூடியன. இயற்கையும் அதோடு நெருங்கி வாழும் மானுடர்களையும் நாகரிகமற்றவர்கள் என்றும் மரத்தைப்போலவும் விலங்குகளைப்போலவும் அவர்கள் சடப்பொருட்கள் என்றும் கருதும் போது இவை யாவற்றின் மீதும் நாகரிகமனிதன் தீங்கிழைக்கின்றான். அது அவனை நோக்கி அவனே துப்பிக்கொள்வது போலாகும் என்கிறான்  தந்தை சியாட்டல். இந்த இடத்தில் முது தந்தை சியாட்டலின் அந்த வார்த்தைகள் இந்த கட்டுரையை முடித்து வைக்கட்டும்.

 

எங்கள் காலடியிலுள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் , என்பதை  நீங்கள் உங்களின் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களின் உடன் பிறந்தவர்களின் வாழ்கையால் வளமாக்கப்பட்டது இந்தப்பூமி என்று அவர்களிடம் சொல்லுங்கள். இந்த பூமி எங்களின் தாய் என்று எங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தோம், என்பதை உங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியினது பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக்கொள்கிறான்”

-யதார்த்தன்.

Jul 16

இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.

 

மரபு உயிரினம் ((Heritage breed)  )

தென் அமெரிக்க கண்டத்தின்  உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள்.  இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின்  அழகு மிக்க பழையை நகரமான  மச்சு பிச்சு.  பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி  போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என்று எழுதியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தொல்லியல் மற்றும் மரபுரிமை  செல்வாக்குக்கு கொண்ட ஒரு தளமாக மச்சு பிச்சு இருக்கின்றது. சர்வதேச பாதுகாக்கப்பட்ட மரபுரிமைத்தலமாக யுனஸ்கோ அதனை கண்காணிக்கின்றது.  ஆண்டு தோறும் பல லட்சம் பேர் மச்சு பிச்சுவைக்காண வருகின்றனர்.

 

 லாமாவும் மச்சு பிச்சுவும்

மச்சு பிச்சு வெறும் நகரம் மட்டுமல்ல  அதனுடைய வரலாற்று மற்றும் தொல்லியல் பெறுமதியும் அதனுடைய இயற்கைச்சூழமைவும் மரபுரிமை சார்ந்த  பெறுமதியைப்பெற்றவை. மலைகள் , இயற்கை வழிபாட்டு அமைப்புக்கள் ,தாவரங்கள் , லாமா போன்ற விலங்குகள் என்று மச்சு பிச்சு ஒரு இயற்கைக்கூட்டு மரபுமைத்தளமாகவும் உள்ளது. இன்காக்களின் மச்சு பிச்சு மலை நகரத்தை கூகுலில் தேடினால்  முக்கால் பங்கு புகைப்படங்களில் லாமா (Llama) எனப்படும் ஒரு வகை ஒட்டகம் கண்களில் தட்டுப்படும். அந்த ஒட்டக இனத்துக்கு அந்த நிலத்தில் ஒரு பெரும் வரலாற்று நிகழ்த்துகை இருக்கிறது. இன்காக்களின் ஆன்மாவோடு இணைந்த வரலாறு அது.  இன்காக்கள் அழிந்த பிறகும் அந்த நிலத்தின் ஆன்மாவை இன்று வரை தாங்கி நிற்பவை லாமாக்கள் தான். பேரு அரசு லாமாக்களை தேசிய  பாதுகாக்கப்பட்ட இனமாகக்கருதுகின்றது. ஏன் ஒட்டு மொத்த உலகுமே மச்சுபிச்சுவையும் லாமாக்களையும் பிரித்துப்பார்ப்பதில்லை. அது ஒரு  மரபு உயிரியாக (Heritage breed)  மாறியிருக்கின்றது.

 

ஒரு நிலத்தின் உயிரினங்கள் மனிதர்களுக்குரிய அதே உரித்தை அந்த நிலத்தின் மீது கொண்டிருக்கின்றன. அதே போல சிறப்பாக  மனித வாழ்க்கையில் பங்கெடுக்கும்  உயிரினங்கள் அவர்களின் மரபு என்ற  கூட்டு மன உணர்வுக்குள் சென்று தங்கி விடுகின்றன. அவை அடையாளமாகவும் நிலத்தின் தொடர்ச்சியான பங்காளராகவும் மாறிவிடுகின்றன. பொதுவாக ,மரபு உயிரிகளை பின்வரும் வகைப்படுத்தலின் ஊடாக இனங்காணலாம்,

 • இயற்கை நிலையில் அருந்தல் பெறுமானம்.(அழிந்து வரும் ஆபத்து, இயற்கை கூர்ப்பு தேய்வு என்பவற்றினைகருத்தில் கொண்டு)
 • மக்களின் வரலாற்று கதைகளில் பங்கெடுக்கும் தன்மை.
 • மரபு,அடையாளம் போன்ற கூட்டு நனவிலி மனத்தின் நம்பிக்கை.
 • சடங்குகள் , நம்பிக்கைகள் , சமய நிலைகளின் ஊடாக வரும் கலாசார நம்பிக்கைப்பெறுமதி.

 

பொதுவாக இயற்கை அருந்தல் பெறுமானம் உள்ள விலங்குகள் எல்லாம் மரபுரிமைகளுக்குள் சேராதவை, அவை தேசிய பாதுக்காக்கப்படும் இனங்களாக இருக்கும். ஆனால் மரபுரிமைக்குள் வந்து சேரும் உயிரினங்கள் பெரும்பாலும் மனிதனின் கால்நடை வளர்ப்பு அல்லது தொடர்புச்சமுதாயத்தின் தொடர்ச்சியாக மனித வாழ்வோடு பின்னிக்கொண்ட பண்பினைக்கொண்டவை. அபூர்வமாக  சில மனிதர்களுடன் நேரடியாகத்தொடர்பு படா விட்டாலும், மனித நம்பிக்கைகளின், நிலச்சடங்குகளின் வழியாக அவை  மரபுரிமை உயிரினங்களாக மாறும் தன்மையடைகின்றன.

 

உதாரணமாக  மங்கோலிய மேச்சல் நிலங்களின்  வேட்டைக்காரர்களான ஓநாய்கள் தெய்வ நம்பிக்கையுடன் தொடர்பு கொண்டவையாகவும் குறித்த நிலத்தின் ஆன்மாவையும் சமநிலையையும் பாதுகாக்கும் காவலர்களாக கருதப்பட்டு வந்துள்ளன. மங்கோலிய மேச்சல் நிலங்களின் பழங்குடிகளும், இடையர்கள்களும், நாடோடிகளும் ஓநாய்களை நிலத்தின் தேவதைககாளவே பார்த்தனர்.ஜியாங் ரோங் எழுதிய  ஓநாய் குலச்சின்னம் (Wolf Totem)   நாவல் இலக்கிய அழகியலோடு அதை விபரிக்கின்றது. மங்கோலிய மேச்சல் நிலத்தின் ஓநாய்கள் அழியும் போது மக்களின் வாழ்வும் நிலத்தின் ஆன்மாவும் எப்படி சிதைந்து போனது என்பதை ஜியாங்ரோங் துன்பத்தோடு விபரிக்கின்றார்.

இவ்வாறு இயற்கையின் நிலத்தின் வாழ்நிலைப்பெறுமதி கொண்ட மரபுயிரினங்கள் குறித்த நிலத்தில் வாழும் மக்களின் அடையாளத்தையும் சரி வாழ்வுரிமையையும் சரி பாதுகாக்கும் வேலையினைச்செய்கின்றன. இன்காகள் அழிந்த பிறகும் கூட அவர்களின் ஆன்ம நினைவுகளைத்தாங்கிக்கொண்டு லாமாக்கள் மச்சு பிச்சுவில் உலாத்தி திரிகின்றன. அவை  மச்சு பிச்சுவின் ஆன்மாக இருக்கின்றன.

நெடுந்தீவும் குதிரைகளும்

மச்சுபிச்சுவில் உலாத்தி திரியும் லாமாக்களைப்போல, மங்கோலிய மேச்சல் நிலங்களில் உலாத்தும் ஓநாய்களைப்போல  இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் குதிரைகள் இருக்கின்றன. நெடுந்தீவில் இருக்கும் குதிரைகளைப்பொறுத்தவரை அவை ஆயிரம் வருஷத்து வரலாற்றை கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த இங்கே போதுமான தொல்லியல், வரலாற்று , விஞ்ஞா ருசுக்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால்  இங்கே இருக்கும் பெறுமதி என்பது இப்போதும் குதிரைகள் கண்முன்னே உலவித்திரிகின்றன என்பதுதான். நெடுந்தீவின் அடையாளமாகவும் வரலாற்று நிகழ்தலின் மிச்சக்கதையாகவும், மக்கள் வாழ்வுக்கதைகளின் பங்காளர்களாகவும் இருப்பவை இந்தக் குதிரைகள்.

இங்கிருக்கும் குதிரைகள் மேலே சொன்ன அருந்தல் பெறுமானம் , வரலாற்றுப்பெறுமதி, அடையாள மனநிலை, முதலானவற்றோடு நன்கு பொருந்தியவை. இவை எல்லாவற்றையும் விட சிறப்பானது அவை இன்னும் அங்கே தமது பிழைத்தலை மேற்கொள்கின்றன என்பதுதான்.

இக்குதிரைகள் எப்போதிருந்து இத்தீவில் வாழ்வு முறையை அமைத்தன என்பது பற்றிய வரலாற்றுக்கதைகள், பெரும்பாலும் ஐரோப்பிய காலனிய காலங்களின் இருந்தே கிடைக்கின்றன. ஆனால் தென்னிந்திய சேர, சோழ , பாண்டிய, பல்லவ நாடுகளுக்கு அண்மையில் இருக்கும் ஒரு தீவில் , அதாவது வரலாற்று அடிப்படையில் அரசியல் புவியியல் கேந்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்த தீவில் ஐரோப்பியர்தான் குதிரைகளைக்கொண்டுவந்திருந்தனர் என்று பொத்தம் பொதுவாக முடிவு செய்ய முடியாதென்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இன்றுவரை நெடுந்தீவு முழுவதும் குதிரைகளின் வாழ்வியலோடு இணைந்த வரலாற்று எச்சங்கள் அங்கே  குதிரைகள் உலாத்தி திரியும் இடங்களில் நிறையவே தென்படுகின்றன. மேலும் தொல்லியல் அகழ்வுகள் அங்கே செய்யப்பட்டால் இன்னும் பல செய்திகள் மேலெழுந்து வரும். அரசு தொடர்ச்சியா அந்த அனுமதியை வழங்காது இன்னும் தீவை இராணுவ பிரசன்னத்திலேயே வைத்திருக்கின்றது.

குதிரை முதலான விலங்களை மனித வலுவுக்கு மாற்றீடாக பாவிக்கும் பல ஆயிரம் வருடத்தின் மனிதப்பண்பாடு இயந்திர வருகையோடு குறைந்து போனாலும் அதன் தொடர்ச்சியாகவும் சான்றாகவும் இத்தகைய மரபுவிலங்குகள் இருக்கின்றன. அவை கைவிடப்பட்டு ஆபத்துக்கு உள்ளாக இதுவும் ஒரு காரணம் எனலாம்.

நெடுந்தீவின் குதிரைகள் இத்தனை நூறாண்டுகள் கடந்த பின்னரும் கூட  மிகக்கடினமான வறட்சி , பராமரிப்பு இன்மை என்பவற்றிற்கு மத்தியில் இங்கே தங்களுடைய பிழைத்தலை மேற்கொள்கின்றன.

இன்று குதிரைகளின் தன்மையில் இருந்து விகாரப்பட்டு இருக்கும் இவற்றை மட்டக்குதிரைகள் , கோவேறு கழுதைகள் என்றும் பொனிகள் இவற்றை அழைக்கின்றனர். இவை இனக்கலப்பு செய்தவையாக இருக்கின்றன. இவற்றின் இயற்கை கூர்புத்தேய்வையோ , உயிர் நிலைமாற்றத்தையோ தாண்டி அவை நிலத்தில் நடந்து திரியும் அந்த நிலத்தின் மிகநெருக்கமான சொந்தக்காரர்கள் என்றே பார்க்க வேண்டியிருக்கின்றது.

நெடுந்தீவு  நிலத்தின் கடந்த காலம் மீதான வாசிப்பிற்கும் , அடையாளத்திற்கும் இக்குதிரைகள் பிரதிநிதிகளாக இருக்கின்றன. இங்கே இருக்கும் மூத்த பிரஜைகள் தங்களுடைய தீவு பற்றிய ஞாபகங்களில் குதிரைகள் பற்றிய ஏராளம் கதைகளைப் பகிர்கின்றனர்.

தீவில் குதிரைகளை அடைத்து வைப்பதற்கான லாயங்களும் , குதிரைகளைப் பராமரிக்கும் மூலிகை தொட்டிகளும் இன்னும்காணப்படுகின்றன.  நெடுந்தீவில் இருக்கும் மூலிகைத்தொட்டிகளும் சரி, லாயங்கள் , கல்வேலியடைப்புக்களும் சரி தனித்தனியான தன்மையுள்ள குதிரைகளோடு தொடர்புடைய தொல்லியல் மர்புரிமைகளாக இனங்காண வேண்டியன.  இங்கிருக்கும் பெருக்கமரங்கள் குதிரைகளின் உணவு , மூலிகைத் தேவைகளுக்காக கொண்டு வரப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். சிலர் வெடியரசன்  எனப்படும் தீவின் வரலாற்று கதைகளில் , நம்பிக்கைகளில் கூறப்படும்  மன்னன் காலத்தில் இருந்தே குதிரைப்பயன்பாடு இருந்து வந்ததாக குறிப்பிடுகின்றனர். குதிரைகள் வர்த்தகம் , பொதிசுமத்தல் , போர் என்பவற்றுக்குபயன்படுத்தபட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பியருக்கு பிறகு நிலச்சுவாந்தார்கள் , சிலகுடும்பங்கள்தங்கள்தேவைகளுக்காககுதிரைகளைபராமரித்துபயன்படுத்தி

வந்ததாகஅறிகின்றோம்.அத்தோடுஅரசாங்கம்இக்குதிரைகள்திரியும்தரவைகள் , காடுகள் , மேய்சல்நிலங்களைஅடையாளப்படுத்திஅவற்றை

“விலங்குகள்சரணாலயமாக ” அறிவித்துள்ளது .

அத்தோடு பிரதேசசபை , கடற்படை , மற்றும் மக்கள் இணைந்து தொட்டிகள் நீர்நிலைகளை அமைத்து இக்குதிரைகள் பசிதாகத்தால் இறப்பதை கட்டுப்படுத்த முயற்சிகள்செய்கின்றனர்.  மீண்டும் இந்தக்கோடையில் குதிரைகள் தொடர்ச்சியாக இறக்கத்தொடங்கியதை அறியமுடிகின்ற. தொட்டிகளில்  முறையாக தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. தீவில் ஏற்கனவே நீர்ப்பிரச்சினை இருக்கின்றது. ஆயினும் குதிரைகளைப்பராமரிக்க  அரசும்,மக்களும் முன்வரவேண்டும். மச்சு பிச்சுவில் பசுமைமிக்க இடத்தில் லாமாக்கள் சுதந்திரமாக மேய்ந்து நீரருந்திக்கொண்டு  அரச பராமரிப்பில்  உலவுகின்றன, இவை இன்னும் ஆயிரம் வருடங்கள் அங்கே

இன்காக்களின் கதைகளக்காவிக்கொண்டு திரியத்தான் போகின்றன.

  கோடைக்காக கட்டப்பட்ட தொட்டிகள்

ஆனால் நெடுந்தீவின் குதிரைகள் செத்து மடியத்தொடங்கிவிட்டன, வறட்சியும் நீரின்மையும் மத்திய கோட்டுக்கு கீழே வாழும் மக்களையும் குதிரைகளையும்  வாட்டியெடுக்கின்றது. நிலத்தையும் மக்களையும்  அவர்களின் நம்பிக்கையையும் வாழ்வு அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசினது கடைமையேயாகும். அது மட்டுமன்றி  மக்களும்  தங்களுடைய அடையாளமாக, தங்களுக்கு மிக நெருக்கமான உறவாக அவர்களின் நிலத்தின் உயிரினங்களைப்பார்க்க வேண்டியிருக்கின்றது.

மக்கள் உயிரினங்களை தமது வாழ்க்கை தேவைக்கு பயன்படுத்ததொடங்கி பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன.  முன்பிருந்தே  மக்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கையின் சாட்சியான ஒரு ஒப்பந்தம் இருந்தது , பரஸ்பர வாழ்வினைத்தாங்கிக்கொள்ளும்

ஒப்பந்தம் அது. இயற்கை நிலையில் மனித வாழ்வு இருக்கும் போது செய்யப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் தொடர்ச்சி நவீன உலகில் வேகமாக அறுந்தது. அதுவே மனித குலத்துக்கு சாபமாக எதிர்த்திரும்பியது.

 

தமக்கு நெருக்கமான , தமது வாழ்வின் அடையாளமாக இருப்பதை குறித்த நிலத்தின் மக்கள் பாதுகாக்க தவறும் போது மக்கள் தங்களையே இழக்க நேரிடும். எப்படி மங்கோலிய மேச்சல் நில ஓநாய்களை நவீன இயந்திரப்புரட்சியும், காடழிப்பும் , நில அக்கிரமிப்பும், போரும் இல்லாது அழித்த போது மேச்சல் நிலமே மெல்ல மெல்ல அழிந்து போனதோ அதைப்போல நிலத்தின் சக பங்காளரான மரபுயிரினங்களை நாம் இழக்கும் போதும் நம்முடைய இருப்பையும் இழந்து போவது உறுதி.

           குதிரைக்கு வைத்தியம் செய்யும் மூலிகைத்தொட்டிகள்

இலங்கையின்  பேரின பின்னணிக்கு வெளியே இதர இனங்கள் மீதான இனவாத அழிப்பு அவர்களின் சகலவிதமான மரபு அடையாளங்கள் மீதும் நிகழ்தப்பட்டிருக்கின்றது ;நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றது. பெரும்பாலும் கலாசார மரபுரிமைகளின் மீது  நிகழ்த்தப்படும் இத்தாக்குதல் இயற்கை மரபுரிமைகளைப்பொறுத்தவரை குறைவாக இருக்கின்றது. எனினும்  பெரும்பான்மை இனத்தவரின் மரபுரிமைகளை பாதுக்காக்கும் அரசு சிறுபான்மையினங்களின் நிலத்தில் நிலவும் மரபுரிமைகளை கடைநிலைக்கு தள்ளிக்கொண்டே இருக்கின்றது. பின் –போர்ச்சூழலில் எஞ்சியிருக்கும் மரபுகளை  மீள கட்டுவதையும் பாதுகாப்பதையும் இப்போது நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நெடுந்தீவைப்பொறுத்தவரை  தொடர்ச்சியாக அங்குள்ள யாழ்ப்பாணத்தின் மிக முக்கிய தொல்லியல் வரலாற்றையும் மரபுரிமை தளத்தையும் கொண்ட  கூறுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக அங்குள்ள குதிரைகள் மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன. அங்குள்ள மேச்சல் வெளிகளில் அரசு போட்டிருக்கும் குதிரைகள் பாதுக்காக்கப்பட்ட உயிரினங்கள் என்ற உரிமை கோரும் பலகைகள் துருப்பிடிக்கத்தொடங்கி விட்டன. பலகை மட்டுமல்ல அதில் உள்ள அரத்தமும் அழியத்தொடங்கிவிட்டது. செத்துக்கிடக்கும் குதிரிகளின் என்புகளில் வழியும் தசையில் மக்களின் இருப்பும் வழிந்து அழிந்தபடியிருக்கின்றது.

நம்மிடம் காலநிலை பற்றிய கரிசனையோ அல்லது காலநிலையை கையாள்வது தொடர்பான முகாமை நிலைகளோ மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றது, நிலவும் வெப்பத்தையும் சரி மழைவீழ்ச்சி நிலப்பயன்பாடு  காடழிப்பு காட்டு உற்பத்தி என்பவை தொடர்பில் அரசும் சரி மக்களும் சரி விழிப்புணர்வற்றே இருக்கின்றோம் இன்று குதிரைகளும்  நாளை மனிதர்களும் இதற்கு பலியாகப்போகின்றோம், காலநிலை முகாமைத்துவமும் இயற்கை சமநிலையும் பேணப்பட்டால் எத்தகைய வறட்சியையும் சமாளிக்க கூடிய நிலமும் தேசமும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் அக்கறையீனமும் விழிப்புணர்வற்ற மனிதர்களாகவும் இருக்கும் போது தொடர்ச்சியாக குதிரைகளுடன் சேர்ந்து நம்மையும் பலிகொடுக்க வேண்டித்தான் இருக்கப்போகின்றோம். மரபுரிமைகளில் இயற்கை மரபுரிமைகளையும் சரி ஏனைய மரபுரிமைகளையும் சரி காலநிலையில் இருந்து பாதுகாக்க மேலைத்தேச நாடுகளில் பொருத்தமான அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் நம்முடைய தேசங்கள் காலநிலை ,பற்றிய உறுத்துணர்வற்றே இருக்கின்றோம்.

நெருந்தீவு என்னும் கடல் நடுவே இருக்கும் தீவில் மக்களுக்கு ஒரு தனித்துவமான வாழ்வு இருக்கின்றது என்றால், அவர்கள் அதனை வாழ்வதற்குரிய உரித்தை உடையவர்கள் என்றால் அதே உரித்தும் வாழ்வுத்தேவையும் அங்குள்ள குதிரைமுதலான உயிரினங்களுக்கு இயற்கை நிலையிலேயே கிடைக்கின்றது. ஆனால் அவற்றை அழிந்து போக விடுதல் என்பது மக்களின்  வாழ்வையும் சேர்த்து காவுகொள்ளும் என்ற போது அவற்றை பாதுக்காக வேண்டிய கடமை சகல மக்களுக்கும் இருக்கின்றது. நெடுந்தீவுக்கும் அதன் மக்களும்மும் ஒரு பெருத்த வாழ்வுத்தொடர்ச்சியின் ஆன்மா இருக்கின்றது என்றால் அது குதிரிகளிடம் தான் இருக்கும்.

 

-யதார்த்தன்

 

உசாத்துணைகள்

01.குணபாலன்.கா, தீவகம்  வாழ்வும் வளமும்,1994.

02.சிவசாமி.வி ,தீவகம்  ஒரு வரலாற்று நோக்கு.

03.ஊர்காவற்றுறை பிரதேசசபை உள்ளூராட்சி வார சிறப்பு மலர், 2003.

04. பத்மநாதன்.சி, இலங்கைத்தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும்.

05.பத்மநாதன்.சி,இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்.

 1. சிவப்பிரகாசம்.மு.சு, விஸ்னுபுத்திர வெடியரசன் வரலாறு, 1988.
 2. சிற்றம்பலம்.சி.க, யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, 1993.

8.புஸ்பரட்ணம்.ப, தொல்லியல்நோக்கில் தமிழர் பண்பாடு,2003.

9.இந்திரபாலா.கா ,இலங்கையில் தமிழர், 2000.

10.இந்திரபாலா.கா,யாழ்ப்பாணத்து கல்வெட்டுக்கள், சிந்தனை வெளியீடு,1969.

 1. சசிதா குமாரதேவன், வட இலங்கை மரபுரிமைச்சின்னங்களும் அவற்றின் பாதுகாப்பும்.

12.சு. சிவநாயக மூர்த்தி , நெடுந்தீவு மக்களும் வரலாறும்.2013

 1. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
 2. http://www.sustainabletable.org/1383/heritage-animal-breeds-and-heirloom-crop-varieties
 3. https://livestockconservancy.org/index.php/heritage

 

Jul 13

மெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.

 

போர் நினைவுகளும், வெளிப்பாடுகளும், அணுகுமுறையும் தன்னிலை சார்ந்தவை. அவற்றைப் பொதுமைப்படுத்தல்களுக்குள் அடைபட முடியாத விலகல்களின் தொகுப்பாக மட்டுமே வாசித்து, உரையாட முடியும். யதார்த்தனின் புனைவுகளில் திரளும் போர்த் தன்னிலை, போரை உள்ளிருந்து அணுகிய சுயமாகவே இருக்கிறது. அதற்குப் போர் குறித்த புனிதக் கதையாடல்களைத் தக்க வைத்திருக்க வேண்டிய தேவை இருப்பதில்லை. போரை இரத்துச் செய்யும் போக்கே புனைவில் உருவாகி வருகிறது. முள்ளிவாய்க்கால் வரை போரோடு இழுபட்டவனின், போரை மீந்திருக்கும் உடல்களின் வலியாக உரையாடும் புனைவுகளாக வாசிப்பின் வசதிக்காகவகைப்படுத்தலாம். நினைவில் அழியாத காலக்கோடுகளாகும் கதைகளில், முகாம்கள் துயர்சார் குறியீடாகி மீந்திருக்கும் உடல்களின் வலிகளைப், போரில் இலக்குகளாக முன்நிறுத்தப்பட்ட மக்கள்சார் உளவியலில் இருந்து புனைவாக்குகிறார். யதார்த்தன் போரின் உள்ளார்ந்த அழிவை, வீழ்ச்சியை துயரங்களாக முன்வைத்துக் கழிவிரக்கத்தைக் கோருவதில்லை. அவர் போரின் கொடூர எதார்தத்தைப் புனைவுகளாக்கும் போது, நாம் இதுகாறும் ஆதுரமாக நம்பி வந்த ‘போரின் புனிதவுடல்’ அழுகி நம்மைத் தொந்தரவு செய்வதாக உருமாறி விடுகிறது. போரின் / போராட்டத்தின் உள்ளார்ந்த அழிவுகளை உரையாடும் புதிய அலைப் படைப்புகள், இன்னொரு முரண் உரையாடல்சார் வெளியைத் திறந்திருக்கிறது. இப்புதிய அலைப் புனைவுகளின் தொடக்க உரையாடலாக – ‘மெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – கதைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம்.

-ஆக்காட்டி

Jun 14

புத்த (மாற்றப்பட்ட வார்த்தை)

 

 

1

மீளத்திரும்புவோம்
வானத்திலிருந்து
அல்லது கடலிலிருந்து

 

2
புன்னகைக்க சொற்கள் தேவைப்படும்,
அல்லது
நியாயங்கள்
ஒழுங்குமுறைகள்
கோடுகள்
வரைபடங்கள்
அடிக்குறிப்புக்கள்
மேலதிகமாக தேவைப்படலாம்.

3
தொண்டைக்குழியை கடக்கும் வரை
காற்றாயிருந்தது
நினைவின் சீழில்
துருவேறி வார்தையாகியது

3.1
முகத்திலறையும்
காற்றில் எத்தனை வார்த்தைகள்

3.2

முட்டி; உடைந்து ;வெடித்து
வழிந்த பின்னரே
அர்த்தமொன்றை அடைந்தது .

3.3
பிறகு அதுவொரு
கழுத்துக்குள் கனமேறும்
ஆலகால வார்த்தை.
கடலின் மேல் உப்புச்சுவையும்
வானத்தின் கீழ்
பீலி மழைச்சுவையும்
கொண்டது.

4

எதிர்ப்படுகையில்
எவ்வளவு பறந்தாலும்
தலைக்கு மேலே முளைக்கும்
மீளா வானம்
இறங்கியமர
நிலத்தை உமிழா கடல்,
வெறும் கடல்.

5
புத்த
(மாற்றப்பட்ட வார்த்தை)
5.1
மீளத்திரும்புவோம்

5.2
வானத்திலிருந்து
அல்லது கடலிலிருந்து.

6
அலகுகளில் அந்த வார்தையை மீட்ட பிறகு.

-ய-
2.30 பிற்பகல்

May 24

பாலைப்பழமும் பசித்த மானுடமும்

 

இன்று மதியம் சரியான பசி, பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டில் வந்து இறங்கினேன்.  கடையில் ஏதாவது சாப்பிட்டாள் அவள் கண்டிப்பாக கடிந்து கொள்வாள். வேறு வினையே வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு மினி பஸ்ஸில் ஏறி இருந்து கொண்டேன் ,கொடிகாமம் மினி பஸ்ஸிற்கு பக்கவாட்டில் ஒரு பாலைப்பழ வியாபாரி ரெஜிபோம் பெட்டிகளில் பாலைப்பழங்களை நிரப்பி விற்றுக்கொண்டிருந்தார். பசியும் ஆசையுமாக நாவூற்றெடுத்தது, பாலைப்பழத்தில் இருந்து கண்களை எடுத்து மடியில் கிடந்த புத்தகத்தைப்புரட்டினேன், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் என்ற எழுத்துக்கள் கண்களில் பட பசியில் கடுப்பேறியது. அதை மூடினேன். தோழி ஒருத்தி கேட்டாள் என்று எதற்கு அதை இன்று எடுத்து வந்தேன் என்றிருந்தது. பாலைப்பழக்குவியலை நோக்கி கண்கள் திரும்புவதையோ கண்கள் வயிற்றுடன் கதைப்பதையோ நிறுத்த முடியவில்லை. ஜீவனேசனின் நினைவுதான் வந்தது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு போனது இப்படியொரு பின்வசந்தகாலத்தில் என்றுதான் நினைக்கிறேன். மெல்ல காற்றுத்தொடங்கி காய்பருவத்தில் இருக்கும் பழங்களை மெல்ல அருக்கூட்டி பழுக்க வைக்கும் காலம். பரந்தனில் நாங்கள் குடியேறியபின்னர் பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டேன். முதல் நாள் பள்ளிக்கூடம். வகுப்பறைக்குள் நுழைந்தேன்.எல்லோரும்  கருகருவென்ற தேகத்துடன்  , தலையில் எண்ணை வைத்து , புது உடுப்பு போட்டு வாசலில் நிற்கும் என்னை மந்தைக்குள் சந்தடியில்லாமல் நுழையும் ஓநாயைப்போல பார்த்தது வகுப்பு. எப்போதும் அம்மா எனக்குள் இருக்கும் முழுவடிவக்குழப்படிக்காரனை , பக்க எண்ணை வைத்து பக்க உச்சி பிரித்து, சந்தன பொட்டு வைத்து பரமசாதுவாகத்தான் பள்ளிக்கூடம் அனுப்புவாள். மாலையில்  பஞ்சதந்திர கதையில் வரும் “நீல நரியைப்போல்”  வேஷம் கலைந்து உடலெல்லாம் , காயமோ , சட்டையில் அழுக்குடனோ   மொத்த வம்பையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். அன்றைக்கு நான் பரம சாதுவைப்போல் வகுப்புக்குள் நுழையும் போது வகுப்பில்  எனக்கு இருக்க யாரும் இடம் தரவில்லை, யசோதா மிஸ் தன்னுடைய கொஞ்சும் குரலில் “இந்த போய்க்கு ஒரு இடம் குடுங்கோ ” என்று கத்திப்பார்த்தார். முன் வரிசையை அக்கிரமித்திருந்த “படிப்புத்திலகங்கள்” தாங்கள் இருப்பதற்கு ஒரு கதிரையும் , பக்கத்தில் புத்தகப்பையினை வைப்பதற்கும் ஒரு கதிரையும் போட்டு  அந்த கதிரையை, அரியாசனத்தில் தன்னுடன் அமர்ந்திருக்கும் ராணியை சாமரம் வீசுபவன்  கரெக்ட் பண்ணி விடுவானோ என்றை பயத்தில் இருக்கும் மன்னனைப்போல அணைந்த்து வைத்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களை பார்த்தேன் , யாரும் இரங்கி அந்த மகாராணி கதிரையை தருவதாயில்லை. அப்போது பின் வரிசையில் இருந்து ஒரு குண்டு பயல் எழும்பினான்.  நேராக முன் வரிசையில் இருந்த  ஒரு மன்னனிடம் போய், “பாக்கை எடடா” என்றான். அவன் “மிஸ் பாருங்க்கோ ஜீவநேசனை ” என்றான். அவன் குரலில் பயமேறியிருந்தது. மிஸ்சும் கதிரையை கொடுக்க சொல்ல, ஜீவனேசன் புத்தகப்பையை தூக்கி வாங்கில் போட்டு விட்டு கதிரையை தூக்கி கொண்டே, என்னைப்பார்த்து  வாடா என்றான். நான் மகிழ்ச்சியாக அவனுடன் போய் உட்கார்ந்து கொண்டேன்.

மத்தியானம் இன்ரேவல் விட்டது, வெளியே மதில் பக்கம் ஐஸ்பழ வண்டியும் , இதர பல இனிப்பு கடைக்காரர்களும் மதில் மேல் வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். கொண்டுபோன புட்டும், கத்தரிக்காய் குழம்பையும் சாப்பிட்டு விட்டு நானும் ஜீவநேசனும் அந்தப்பக்கம் நடந்து போனோம். மதிலுக்கு மேலாக கச்சான் கொடுக்கும் பேப்பர் பைகளில் எதையோ மாணவர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். நான் ஜீவநேசனிடம் “கச்சானோ” என்று கேட்க. இல்லையடா பாலைப்பழம். என்றான். சத்தியமாக அண்டைக்குத்தான் பாலைப்பழம் என்றொரு பழம் இருப்பதே எனக்குத்தெரியும். பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக , அதன்  சுவை அதன் வடிவத்திலும் கலரிலுமே தெரிந்தது, நல்ல குண்டு குண்டாய் மஞ்சள் நிறத்தில் பழபழத்தது. எனக்கு நாவூறியது. சாப்பிட வேண்டும் போல் இருந்தது. கையைல் ஒரு ரூபாய் கூட இல்லை. ஜீவனேசனிடமும் இல்லை. சாப்பிடணும் போல இருக்கடா என்று சொன்னேன். அவன் ஒண்டும் சொல்லவில்லை. பெல் அடிக்க வகுப்புக்கு திரும்பினோம்.

மாலையில் தேத்தண்ணியை உறிஞ்சியபடி பள்ளிக்கூட முதல் நாளைப்பற்றி அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். வெளியே கேற்றடியில் ஒரு சைக்கிள் வந்து நின்றது.

“பிரதீப் பிரதீப்”

ஜீவனேசனின் குரல்.அம்மா போய் கேற்றைதிறந்தாள் சைக்கிளைத்தள்ளிய வாறு ஜீவனேசன் உள்ளே வந்தான். அவனுக்கு அந்த ஜென்ஸ் சைக்கிள் எப்படி எட்டும் என்று நினைத்துக்கொண்டே கரியலை கவனித்தேன், ஒரு பெரிய கடகம் கட்டப்பட்டிருந்தது, முன் கான்ரிலில் ஒரு சின்ன மணி வேறு கட்டப்பட்டிருந்தது, நான் அவனைப்பார்த்துக்கொண்டிருக்க, சைக்கிளை டபிள் இஸ்ராண்டில் இழுத்து நிறுத்தி விட்டு  கடகத்தில் ஓடிய கயிறை நெகிழ்த்தி விட்டு , கடகத்தை இறக்கி  என் முன் கொண்டு வந்து வைத்தான்.

“இந்தா வேணுமெண்டளவு சாப்பிடு”

நான் கடகத்துக்கு கண்ணை நகர்த்தினேன்.

”பாலைப்பழம்

அத்தனைநிறைய பாலைப்பழத்தைக்கண்டவுடன் அநிச்சையாக கைகள் கடகத்தினுள் இறங்கி  குளிர்ந்த பாலைப்பழகங்களை அள்ளி எடுத்துக்கொண்டது. நான் சாப்பிடுவதை ஆவன் வேடிக்கை பார்த்தபடியிருந்தான்.  அம்மா அவனிடம்  விபரம் விசாரித்துக்கொண்டிருந்தாள்.

ஜீவனேசன்  காலையில் பள்ளிகூடம் வருவான். மாலையில் அந்த சீசனில் என்ன இருக்கிறதோ அதையேல்லாம் ஆய்ந்து சைக்கிளில் கட்டி விற்பான்.மாங்காய், பாலைப்பழம் , நொங்கு , கச்சான் என்று அது மாறிக்கொண்டேயிருக்கும். குடும்ப வறுமையை அந்த சிறு வயதிலேயே தாங்கத்தொடங்கியவன். வறுமை கஸ்ரம் எண்டு அழுதால் அவனுக்கு பிடிக்காது ஆக  அடுத்த சொல்லுக்கு தாவுவோம்.

அவன் நல்ல பகிடிக்காறன் , அண்டைக்கு பிறகு பாலைப்பழம் ஆய என்னை கூட்டிக்கொண்டு போவான், மரமேறச்சொல்லிட்தந்தான், கெற்றப்போல் அடிக்க சொல்லித்தந்தான், காடை, கெளதாரி என்று நாங்கள் செய்த பாவமும் கொலைகளும் ஏராளமாக இருந்தன. பாலை மரங்களைப்பற்றி அவன் நிறையச்சொல்லுவான்.

உரல் சத்தம் கேட்டால் பாலை மரம் காய்க்காது , அதுதான் ஊர்மனைக்குள்ள நிக்கிற பாலையள் காய்க்கிறதில்லை என்பான். நானும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன் அதிக மனிதசந்தடி உள்ள பாலை மரங்கள் காய்த்து பார்ததில்லை. காடுகளில் தான் பாலை மரங்கள் சிலிர்த்துக்காய்க்கும், வன்னியில் எனக்கு தெரிந்து , வவுனிக்குளம் , மல்லாவி என்று பாலைப்பழத்துக்கென்றே எழுதி வைத்த ஊர்கள் , காடுகள் ஏராளம் இருக்கின்றன.

பாலைப்பழமும் வீரைப்பழமும் ஒரே சீசனில் காய்கும் காட்டுப்பழங்கள். இரண்டுக்குமாகத்தான் காட்டுக்குள் இளைஞர்களும் வியாபாரிகளும் போவார்கள் , அந்த சிவப்பு மஞ்சள் பழங்களின் கூட்டணியை சாப்பிடுவதை விட கைகளில் நிரப்பிப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சுவைக்கு  மஞ்சளும் சிவப்பும்தான் நிறங்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

பாலைப்பழத்திற்குப்போகும் போது கையில் ஜீவனேசன் எப்போதும் கருக்கு மட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வான்.  மனிதர்களைப்போல பாலைப்பழத்தில் வேட்கை கொண்ட இன்னொரு ஆளும் இருக்கிறார். கரடி. பாலை மரத்தில் கரடியை சந்திக்கும் போது தாக்க வரும் கரடியின் கையில் கருக்கு மட்டையை கொடுத்தலோ அடித்தாலோ , கையில் காயம் பட்டவுடன் , தன் காயத்தில் வடியும் குருதியின் சிவப்பை பார்த்து பார்த்து வெருண்டு ஓடுமாம், கரடி. எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியாது ஆனால் இந்த மாதிரி கதைகள், நம்பிக்கைகள் அங்கே மிக்க அழகும் சுவாரஸ்யமும் மிக்க தொன்மமாக உலவிக்கொண்டேயிருக்கின்றன.

பாலைப்பழம் , இலங்கையின் கிழக்கில் வாயொட்டி பழம் என்று அறியப்படுகின்றது. அது ஒரு காரணப்பெயர், பெரும்பாலும் இளம் பருவத்தில்  நன்கு கனியாத பாலைப்பழங்களின் பால் வாயை ஒட்டும் , உதடுகளைச்சுற்றிப்படரும். நல்ல கனிந்த பழமுள்ள பாலை மரங்களில் பழங்களை ருசிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை குறைவாக இருக்கும் ,ஆனால் வியாபாரிகள் பிடிங்கி வரும் முழுதாய் பழுத்து ஊழ்த்தாத  பழங்களில் பாலொட்டும். இதற்காக பாலைப்பழம் சாப்பிடமுதல் கொஞ்சம் நல்லெண்ணையை எடுத்து உதடுகளில் தடவிக்கொள்ளும் வழக்கம் உள்ளது , இல்லையென்றால் நான்கைந்து முறை சோப் போட்டு உதடுகளை உறுட்ட வேண்டியிருக்கும்.

பழந்தமிழ்ச் செய்யுளில் இது பற்றி ஒரு பாட்டு இருக்கின்றது

“ஓங்கு நம்பெயர் இந்நிலம் உற்றதென்றுறந்து
வீங்கு பாலைகள் ஆலயிற்பழுப்பன மேன்மேல்
ஆங்கு மேலியக் கனியுணின் வெளிபடாததரம்
நீங்குறமலோட்டத்தொடும் பொருந்துதல் நிசமே”
(உறந்து=மிகுதியாகி; அதரம்=கீழுதடு; ஓட்டம்=மேலுதடு)

பாலை மரம் வன்னிக்காடுகளினது மட்டுமன்றி இலங்கையின் வடக்கு காடுகளின் மிக முக்கிய வளம், பாலை மரங்கள் வரலாற்றுக்காலம் தொட்டே மரத்தின் பொருட்டு இன்று வரை இலங்கையில் சந்தன மரத்தைப்போல் இருப்பவை பாலைமரங்கள். காடுகளின் கம்பீரம் என்றே சொல்லலாம். பாலைப்பழ சீசன் முன்பு சொன்னது போல  வைகாசி ஆனி மாதங்களில் உச்சம் பெறும் , பருவக்காற்றின் அலைக்களிப்பில் பழுக்கும் பழங்களில் பாலையும் ஒன்று.

சிறு வர்த்தகத்துக்குரிய பாலைப்பழங்களை இனி ஏ9 வீதியின் வடக்கு மேலோட்டமெங்கும் காணலாம் , பஸ்களில் ,தெருக்களில் , கோயில்களில் என்று பரவலாக தென்படும். வன்னியின் பாலைப்பழ வியாபார மையம் என்று சொன்னால் அது  முறிகண்டிபிள்ளையார் கோயிலடிதான். எனக்குத்தெரிந்து சீசனில் நல்ல பழங்கள் கிடைக்குமிடங்களில் அது தலையானதொன்று. யாழ்ப்பாணம் டவுனில் பெரும்பாலும் எல்லா பெட்டி கடைகளிலும் பழக்கடைகளிலும் இப்போது பாலைப்பழங்கள் கிடைக்கின்றன.  சென்ற வருடத்தைவிட அதிகமான பாலைப்பழகடைகள் இந்த முறை யாழ்ப்பாணத்தில் தட்டுப்பட்டன.

கொடிகாமம் பஸ் நிற்குமிடத்திற்கு பக்கத்தில் இதுவரை இருந்த நெல்லிக்காய் கடைதான் சீசனுக்கு ஏற்றால் போல் பாலைப்பழக்கடையாக மாறியிருந்தது. இறங்கி வாங்கலாம். பேசை திறந்து காசைப்பார்த்தேன்.  சாவகச்சேரி போவதற்குரிய நாற்பது ரூபாவும் இன்னொரு ஐம்பது ரூபா தாளும் இருந்தன. இன்னொரு இருபது ரூபாய்த்தாள் இலங்கையின் பொருளாதாரத்தினைப்போல் கசங்கி கொஞ்சம் கிழிந்து போயிருந்தது. பசி குறுகுறுத்தது. பஸ்வெளிக்கிட்டது சாவகச்சேரி பஸ்நிலையத்தில் இறங்கினேன் , ஊருக்குப்போகும் பஸ்சுக்கு அரை மணிநேரமிருந்தது. அதற்கு இருபது ரூபாய் ஆகும்.  இருக்கும் ஐம்பது ரூபாயில் முப்பது ரூபாய்க்கு எதும் கச்சான் வாங்குவோம் என்று நினைத்துக்கொண்டே எழப்போனேன். ஒரு ஆண்குரல்

“பாலைப்பழம் பாலைப்பழம்”

திரும்பி பார்த்தேன், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு அட்டைப்பெட்டியில் பாலைப்பழங்கள் நிரப்பிய பையுடன்  நின்றிருந்தார். சுற்றுமுற்றும் பார்த்தேன் நாலைந்து பள்ளிக்கூட வாண்டுகள்  விளையாடிக்கொண்டிருந்தன. பாலைப்பழக்காரனின் குரல் கேட்டதும் , ஆவலாய் ஒரு முறை அங்கே பார்த்து விட்டு, பொக்கற்றில் பஸ்காசு மட்டுமே இருந்திருக்கும் போல ,சட்டென்று தங்கள் மனத்தை திருப்பிக்கொண்டு பழைய விளையாட்டுக்கே திரும்பிக்கொண்டனர். அந்தளவு பக்குவம் எனக்கு இருக்கவில்லை.

“என்ன விலையண்ணை”

“ஐம்பது ரூவாய்”

உள்ளே உருவான உருண்டை வடிவப்பொருள் ஒன்று வெடித்துப்போனது, பேசாமல் இருந்து கொண்டேன். But விதி had an another idea. களைத்துப்போனவனாய் அந்த பாலைப்பழக்காரன் பாலைப்பழ பெட்டியை எனக்குப்பக்கதிலையே வைத்துவிட்டு அசுவாசமாக இருந்து கொண்டான். கையில் இருந்த பசித்த மானுடத்தால் என்னை அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. மனது இன்னொரு B பிளானை உருவாக்கியது. கிழிந்து நைந்து போன அந்த இருபது ரூபாய் தாளை எடுத்து சரி செய்து பசித்த மானுடத்தின் நெஞ்சுக்குக்குள் வைத்து அழுத்தி கிழிந்திருந்த பகுதியை உள் பக்கமாக சுருட்டி மடித்து அழுத்தி வைத்தேன். மினிபஸ்காரன் பரபப்பாக காசை வாங்கி பார்க்காமல் கையிடுக்கில் வைத்துக்கொள்வான் என்று உறுதியாக மனதை நம்பச்சொன்னேன். எத்தனை தரம் ஐந்து ரூபாய் , இரண்டு ரூபாய் என்று மிச்சம் தராமல் விட்டிருப்பான். பரவாயில்லை என்று அற உணர்வுக்கும் கொஞ்சம் சமாதானத்தீனியை தூவிக்கொண்டேன். எனினும் பசித்த மானுடத்தின்  எடை ஏதோ கொஞ்சம் கனமேறியிருப்பதாய் தோன்றியது.

பின்னர் பேசில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து பாலைப்பழத்தை சொந்தமாக்கினேன், நான் வாங்கும் போதேன் எதிரே இருந்த வாண்டுகள் விழிகள் விரிய, உள்ளே இருந்த இலக்கியங்கள் எதையோ குறுகுறுத்தன, பையப்பிரித்து  ஒவ்வொரு பிடி அள்ளி அவர்களைக் கூப்பிட்டு கொடுத்தேன்,  வாங்கிக்கொண்டு தாங்ஸ் சொன்னார்கள்.

“அண்ணை சொண்டிலை படாமல் சாப்பிடுங்கோ வாயொட்டும்”

சிரித்துக்கொண்டேன்.  பசித்த மானிடத்துக்குள் இருந்த  அந்த இருபது ரூபாயின் கனம் காணாமல் போயிருந்தது.

யதார்த்தன் –

 

Mar 30

விற்கப்படும் காயங்களும் வாங்கப்படும் கண்ணீரும் – ரஜனிகாந் வருகையின் ஆர்பாட்டத்தை முன்வைத்து


உண்மை ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இருக்கிறது.
-மல்கம் X –

கடந்த வாரங்களில் இந்திய நடிகர் ரஜனிகாந் இலங்கைக்கு வருகை தர புறப்பட்டார், அதன் பின்னர் தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சூழல்களில் இருந்து வந்த எதிர்ப்புக்களின் பின்னர் அவர் தன்னுடைய வருகையை நிறுத்துவதாக ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட காப்பரேட் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றின் புரமோசன் வேலைகளின் பொருட்டு, அந்த நிறுவனம் கட்டத்தொடங்கிய வீட்டு தொகுதிகளைக்கொடுப்பது போன்ற பாவனையில் அவர் இங்கே புறப்பட்டார் என்பது எல்லோரும் அறிந்தது. இந்திய சூழல் அதனைப் புரிந்து கொண்டதோ இலங்கைச் சூழல் கணிசமான அளவு அந்த பிரக்ஞையுடன் இருந்தது. ஆனால் ரஜினிகாந் வெளியிட்ட அறிக்கையைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் முதலான தமிழ் பிராந்தியங்களில் போஸ்ரர்கள் ஒட்டப்பட்டு ரஜினை வரவிடாதவர்கள் என்று கூறி இந்திய – தமிழ்நாட்டுத்  தலைவர்கள் சிலரை சுட்டிக்காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று அறிவிக்கப்பட்டு பொது மக்கள் கொண்டு வரப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் ஒரு பெரும் கேலிக்கூத்தென்று பலரும் விமர்ச்சித்துக்கொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால் வெறுமனே அதை சாதாரணமாகக் கடந்து போதல் சமகாலத்தில் கருக்கொண்டு வரும் ஆரோக்கியமான சனநாயக போராட்ட சூழலையும் குறுகிய அளவிலேனும் நடக்கும் அரசியல் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும். காசு கொடுத்தால் போராட வரப்போகின்றார்கள் , காசு கொடுத்தால் வாக்குப்போடுவார்கள் என்ற சமூக பிறழ்வை அது ஏற்படுத்திவிடும். எனவே நாம் இந்த போராட்டத்தையும் அதன் பின்னணி சூழலையும் ஆபத்துக்களையும் விளங்கிக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் பழக வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை ரஜினி வருவதும் சரி குறித்த நிறுவனம் வீடு கட்டிக்கொடுத்து விளம்பரம் செய்துகொள்வதும் சரி, முழுமையாக தங்கிவாழும் முதலாளித்துவ கட்டமைப்புக்குள் தன்னை ஒப்புக்கொடுத்து விட்ட இந்த நாட்டுக்குள் சலித்துப்போன ஒன்றாகவே கடந்து விட நினைத்தேன். ஏனெனில் இந்திய சினிமா நிறுவனங்களும் சரி நடிகர்கள் எனும் தனிமனித காப்ரேட்டுக்களும் சரி வெளிநாடுகளில் கேளிக்கை நிகழ்வுகளை வைத்துக்கொள்வதோ , ஈழத்தை சொல்லிக்காட்டி மேடைகளில் நீலிக்கண்ணீரைப் பிழிந்து ஊத்தி  தமிழர்களிடம் டிக்கற்றுக்களை விற்று பெரிய பட்ஜெட் படங்களை  ஓட்டி  காசு பார்ப்பதோ நமக்கு சலித்துப்போனதுதானே . அதை விட எரியும் பிரச்சினைகள் கண்முன்னே இருக்க தூரத்திற்கு எதற்கு செல்லவேண்டும் என்று ரஜனியையும் அவர் வருகையையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன்.
இவ்வளவு நாள் கழித்து , இந்தியாவில் – தமிழ்நாட்டில் நிஜமான உணர்வுடன் போராடிய மக்களுக்கோ ஒடுக்கப்படுபவர்களின் பொருட்டோ குரல் கொடுக்காத ரஜினி, தன்னுடைய படத்தின் புரமோசன் களியாட்டமும் வருகையும் தடைப்பட்டவுடன் ஈழத்தமிழர்களின் வீரத்தையும் , போராட்டத்தையும் வார்த்தை ஜாலங்களால் புகழ்ந்து தன்னுடைய வருகையை அரசியலாக்காதீர்கள் ”தான் மக்களை மகிழ்விக்கும் கலைஞன்” என்று விட்ட உணர்ச்சிப்பொய்கள் தெறிக்கும் அறிக்கையை வாசித்தேன் . அதில் அவர் குறிப்பிட்ட, எதிர்ப்புத் தெரிவித்த தலைவர்களின் பெயர்களையும் அவதானிக்க முடிந்தது.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் தனி மனித காப்பரேட்டான கோடீஸ்வர முதலாளி ரஜனியையும் , அங்கு ஈழம் என்ற பெயரில் நம்முடைய காயங்களில் சீழ்களையும் இறந்த உடல்களையும் வைத்து அரசியல் செய்யும் சீமான் , வைகோ , திருமுருகன் காந்தி போன்றவர்களையும் நான் ஒன்றாகவே பார்க்கின்றேன். இங்கே போஸ்ரர்களில் அவர்களுக்கு எதிராக அடிக்கப்பட்ட வாசகங்களையும் அவர்களையும்  ஒரே தளத்தில்  தான் எதிர்கொள்ள வேண்டும்.  உண்மையில் இனவழிப்பை மேற்கொண்டவர்களை விட இவர்கள் மோசமானவர்கள்.
இனி

ஈழத்தில் நேற்று நடந்த போராட்டத்திற்கு வருவோம். முன்பு சொன்னதைப்போல சமகாலத்தில் ஈழத்தைப்பொறுத்தவரை ஒரு போதுமில்லாத சனநாயக போராட்டங்களையும் வெற்றிகளையும் , மீண்டும் துளிர்க்கும் மக்களின் கூட்டு நம்பிக்கைகளையும் கண்முன்னே காண்கின்றோம். தொடர்ச்சியாக காணாமல்போனவர்களுக்காகவும் நிலங்களுக்காகவும் மரபுரிமைகளுக்காகவும் நீதியின் பொருட்டும் மக்களின் குரல்கள் சனநாயக வழிகளில் ஒன்று படுகின்றது. ஆயுதப்போராட்டத்தை கடந்து வரும்போது உடைக்கப்பட்ட எல்லா நம்பிக்கையும் வாழ்வும் மீளகட்டப்படவேண்டிய தருணமாக மக்கள் இதனை உணரத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இப்படியொரு காப்ரேட் நிறுவனம் மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு சுயலாபம் தேடிக்கொண்டு நாட்டின் சமூக நிலமைகளுக்குள் “சனநாயக வழிப்போராட்டத்தை” கையில் எடுத்துக்கொண்டு பணத்தின் மூலம்  சமூக அரசியலின் உள்ளே வருவது இத்தனை காலமும் திணிக்கப்பட்ட இன வன்முறையை விட மிகக்கொடூரமானது. இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசிய இனங்களின் மனித இருப்பையும் அழிக்கப்போகும் முதல் நச்சு வேர்.
ஈழத்தின் அரசியல் என்பதும் , சமூக அமைப்பு என்பதும் இத்தனை வருட இலவசக்கல்வி மூலமும் , சமூக போராட்டங்கள் மூலமும் தமிழ்நாட்டை விட முன்னேற்றமான கூட்டு மனத்தையும் செயலையும் கொண்டது. தமிழ்நாட்டுச் சினிமா போன்ற கதாநாயகத்துவத்தை நம்பி பாலாபிஷேகம் செய்து அரசியல் அதிகாரத்தை  மிக்சிக்கும் டீவிக்கும் விற்கும் மனநிலை இதுவரை இங்கே இருந்ததில்லை, ஆனால் நேற்றைய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.
நல்லூருக்கு வந்த மக்களில் பெரும்பாலான முதிர்ந்தவர்களும் , நடுத்தரவயதுக்காரர்களும் ”வீடு” தரப்படும் என்று சொன்னதாலேயே புறப்பட்டு வந்துள்ளனர். இளைஞர்கள் அதன் பின்னணியோடு அவர்களின் இளமை தொடர்பான வறுமைகளை தீர்க்கவும் கதாநாயக மோகத்தின் பின்னணியில் வருகை தந்ததாக அறியமுடிகின்றது. இது கூட அந்த இளைஞர்களின் வறுமையின் பின்னணியில் நிகழ்ந்திருக்கலாம். அத்துடன் “தலைவா” போன்ற தமிழ்நாட்டு கதாநாயத்துவ உணர்ச்சிக்கோசங்கள் எழுத்துப்பிழையுடன் அடித்து கொடுக்கப்பட்ட பதாகைகளில் முகத்தை மறைத்துக்கொண்டும் , ஊடகவியலாளர்கள் கேட்பதற்கு உடலை நெளித்து தமது வறுமையையும் இயலாமையையும் சொல்ல முடியாமல் சொல்லிக் கொடுத்ததை திக்கி திணறிய ஒப்பித்த என்னுடைய சனத்தையும் பார்த்தேன்.
நேற்றைய தினம் முகநூலிலும் சரி அதற்கு வெளியிலும் சரி மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தொடக்கம் அனைவரும் குறித்த மக்களை திட்டித்தீர்த்தனர். போராட்டம் என்று சொல்லி நல்லூரில் கொண்டுவரப்பட்ட மக்களிடம் சென்று ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் போது அவர்கள் யாரோ சொல்லி குடுத்ததை தட்டுத்தடுமாறி ஒப்பிக்கின்றனர். அவர்களுக்கு அவர்களின் ஆன்மா அடமானம் வைக்கப்பட்டு சமூக வாழ்வு சுரண்டப்படுவது தெரியாது. உண்மையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவம்; இந்த நாட்டின் சமூக பொருளாதார பூதங்களுடன்  அன்றாடம் போராடும் அடித்தட்டு மக்கள்; அவர்களுக்கு வீடில்லை , நிலங்களில்லை. அவர்களிடம் போய் ஊடகவியலாளர்களும் சரி ஏனையவர்களும் சரி மிக கடுமையான தொனியில் அவர்களை கொலைக்குற்றவாளிகள் போல விசாரிக்கின்றோம். உண்மையில் அந்த மக்கள் அங்கே திரண்டதற்கு நாம் எல்லோரும் தான் காரணம்.

அந்த போராட்டம் ஒரு கேலிக்கூத்து  :என்றும்  இது ஒரு சமூகப்பிரழ்வு , தமிழ்நாட்டில் நிலவும் அதே அபத்த மனநிலை என்றும் நமக்கு புரிகிறது . ஆனால் இது எந்த பின்னணியில் தோன்றியது என்று நமக்கு தெரியாது. அதை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் , இந்த பிரச்சினையின் மூலவேர்கள் எவையென்பதை நாம் யோசிக்கவுமில்லை உரையாடவுமில்லை.
அடிப்படையில் போரின் பின்னர் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வை பேரினச்சூழலின் பின்னணியில் இலங்கை அரசு புறக்கணிக்கின்றது. அடித்தட்டு மக்களைப்பற்றி அரசுக்கு கவலையில்லை. பொருளாதாரத்தை மட்டும் சிந்திக்கும் முதலாளித்தவ அரசுக்கு இனச்சண்டை , சாதிச்சண்டை , மதச்சண்டை எல்லாமே அதிகாரத்தை மக்கள் கேள்வி கேட்காமல் வைத்திருக்க உதவும் கருவிகள்தான். இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட காப்ரேட் நிறுவனம் சர்வதேச அளவில் இயங்கும் ஒரு நவீன ஊடகத்துறையையும் தொழில்நுட்பத்துறையையும் மையப்படுத்திய நிறுவனம். கிடைக்கின்ற தகவலின் படி இப்படியான பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள் ஊடாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் இலங்கையில் பெரிய ஊடக வலயமைப்பை நிறுவ முயற்சிக்கின்றன. இந்தியாவில் அம்பானியும் அவர் நிறுவனமும் எவ்வாறு ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அரசியலையும் ஆட்டும் இந்தியாவின் விதியை தீர்மானிக்கும் ஒரு பெரும் பூதமாக மாறியதோ அதே போல இலங்கை அரசையும் அதன் அரசியல் , பொருளாதாரத்தையும், தன்னிறைவையும் சுரண்டும் பெரும் சர்வதேச நிறுவனங்கள் உள்வருவதற்கான முயற்சியின் ஒரு வடிவம் தான் இது.
இது வெறும் ரஜனி வராத பிரச்சினையில்லை. ரஜனி என்பது இந்த பெரும் முதலாளி இயந்திரங்களை மறைத்து கேளிக்கை நிகழ்த்தும் உருவம். இவ்வுருவத்தை ஆட்டிவிக்கும் பொம்மை நூல் ரஜனியில் தொடங்கி பெரும் முதலாளிகளிடமும் , அகண்ட இந்திய தேசிய வாதம், மற்றும் இந்துத்துவ பேரரசு கனவுடன் இருக்கும் இந்திய தலைவர்கள் , உலகத்தலைவர்களின் கைகளில் பின்னிக்கிடக்கின்றதை நாம் உணர வேண்டும். அல்லது ரஜனியும் இப்பெரும் அடக்கும் , சுரண்டும் வலையமிப்பின் ஒரு சிறுகூறு எனலாம்.
இத்தகையை சமூகச்சுரண்டல்களும் சமூக ஆபத்துக்களும் உள்வருவதற்கு நாமெல்லாம் தான் காரணம்.
நாட்டின் வளத்தையும், தன்னிறைவையும் இருப்பையும் போர்ப்பூச்சாண்டியை காரணம் காட்டி முதலாளித்துவ அரசுகளிடம் அடகு வைத்து விட்டு , நாட்டின் பொருளாதார இருப்பையும் மக்கள் இறைமையையும் சிதைத்து விட்ட தேசிய அரசும் பலவீனமான பிராந்திய அரசும் அதன் ஊழல் மிக்க நிர்வாகமும் இதற்கு முதல் காரணம். அவ்வரசின் அரசாங்கத்தில் இருக்கும் ஒழுங்கானதும், மக்கள் நலனை சிந்திப்பதுமான அரசியல் போராட்டங்களை முன்னெடுக்காத அரசியல்வாதிகள் பெரிய காரணம். பொருளாதாரத்தை மீளகட்டுவதோ , சமூக வாழ்வை ஒழுங்குபடுத்துவதையோ விட்டு விட்டு பிரதான அரசியல் கோசங்களை உணர்ச்சிக்கோசமிட்டுக்கொண்டுமட்டும் இருக்கும் அரசியல் வாதிகளும் சரி அவர்களின் பிராந்திய நிர்வாகமும் சரி இவ்வாறு வறுமைப்பட்ட மக்களை மேலேற்றும் எந்த முயற்சியும் செய்வதாய் இல்லை . காலம்காலமாக சலுகைகளுக்கு ஏங்கும் மனநிலையிலேயே அவர்களை வைத்திருக்க நினைக்கின்றனர். ஒழுங்கான மீள் கட்டுமானம் செய்திருந்தால் அந்த மக்கள் எதோ ஒரு பன்னாட்டு கம்பனி வீடு தருகின்றோம் என்றதும் கியூவில் நின்றிருக்காது. தொழில் வாய்புக்கள் , நிலம் போன்ற அடிப்படையான பிரச்சினையுள்ள மக்களை வலுவூட்டும் செயற்பாடுகளை அரசுதான் செய்ய வேண்டும், ஆனால் அரசு சுய நலநோக்கங்களை கொண்டு இயங்கும் காப்ரேட்களிடம் அவற்றை ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது.

 

ஊடகங்களைப்பொறுத்தவரையில் பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டத்தை எதிர்க்கின்றன. ஆனால் பொருத்தமான முறையில் மக்களுக்கு சிந்திப்பதற்குரிய எழுத்து வடிவங்களை அவை முன் வைக்க தவறுகின்றன. சுதேச ஊடகத்துறையும், ஊடக அறத்துடன் இயங்கும் ஊடகங்களும் தங்களின் வலைப்பின்னலையும் வெளிப்பாட்டு தூரங்களையும் சர்வதேச தரத்துக்கு விரிவாக்க வேண்டும். இந்திய சினிமா , இந்திய ஊடகங்களின் ஆக்கிரமிப்பே இத்தகைய ஆபத்துக்களையும் அபத்தங்களையும் மிக வேகமாக் கடத்துகின்றன. எங்களுடைய புண்களையும் கண்ணீரையும் எங்களிடமே விற்று காசாக்கின்றன இந்திய ஊடகங்கள்.

அறிவுப்புலத்தை வடிவமைத்து சமூகத்தை கட்டமைக்க வேண்டிய பல்கலைககழகங்களும் இப்போது வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அசைவினைப்பலவீனமாக்குகின்றன. அறிவுப்புலத்தை உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் பகிடிவதை பிரச்சினை, வரவேற்பு கேளிக்கையில் பிரச்சினை என்று முரண்பாடுகளுக்குள்ளும் கேளிக்கைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சமூக பிரச்சினையில் பல்கலைக்கழகங்களின் குரல் என்பது மிக மெதுவாக எங்கோ ஒரு தொலைவில் ஒலித்து ஓய்கிறது அவ்வளவுதான்.
அவதானித்துப்பார்தால் சமீபத்தில் நடந்த அறவழிப் போராட்டங்களில் சிறுவர்களும் பெண்களும் ஆர்வமாக பங்கெடுக்கின்றனர். இளைஞர்கள் அதுவும் போரின் காலத்தில் பிறந்த (90களில்) இளைஞர்கள் பெரும் சலிப்பானதும் சோம்பேறித்தனமானதும் பயந்ததுமான போக்கினை காட்டுகின்றார்கள். ஒரு போரின் பின்னர் இருக்கும் ஒரு உளவியல் மனநிலையாகக்கூட இது இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்களை நாங்கள் வலுவூட்டவேண்டும் , அப்படியானால்தான் ஆர்வமாக சமூகத்தினுள் நுழையும் அடுத்த தலைமுறை சனநாயக கருவிகளை கைகளில் தாங்கிச்செல்லும். இதனை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு கல்விப்புலத்திடம் தான் உள்ளது.
மேலும் எழுத்தாளார்கள் , கலைஞர்கள் , புத்திஜீவிகள் , சிவில் அமைப்புக்கள் , பொது அமைப்புக்கள் , சமூக செயற்பாட்டு அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் சிறிய அளவிலேயே முன்னெடுக்க படுகின்றன. ஈழத்து எழுத்தாளர்கள் , எந்த சமூக பிரச்சினைகளிலும் தலையிடுவதில்லை , சமீப காலமாக நடக்கும் சனநாயக வழிப்போராட்டங்களில் 90 % மான எழுத்தாளர்களும் சரி கலைஞர்களும் சரி பங்களிப்பை வழங்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு கட்டுரையை கூட வீட்டில் இருந்து மக்களின் பொருட்டு எழுத அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்க வேலை இருக்கின்றது , குமாஸ்தா எழுத்தாளார்களைப்போல் சமூக அசைவில் எந்த பங்கலிப்புமிலலத ஆக்கங்களை எழுதிக்கொண்டிருக்கின்றனர் .நவீன நீரோ மன்னகளைப்போல பிடில் வாசிக்கும் இத்தகைய எழுத்தாளார்களும் கலைஞர்களும் மக்களுக்கு அறி வூட்ட உழைக்க வேண்டியவர்கள் , நேற்று அவர்கள் அடித்த போஸ்ரரில் வடமாகாணத்தின் கலைஞர்கள் என்ற பெயரிலேயே அழைப்பு அடிக்கப்பட்டிருந்தது.ஒரு காப்ரேட் நிறுவனத்திற்கு தெரிகின்றது மக்கள் கலைஞர்களை நம்புவார்கள் என்று ஆனால் கலைஞர்களுக்குத்தெரியவில்லை என்பதுதான் இந்த சமூகத்தின் பெருஞ்சாபங்களில் ஒன்று.

இவ்வாறு வெறும் போராட்டத்தில் பங்கொண்ட அப்பாவி ஏழை எளிய மக்களை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு நாம் சமூக உரையாடல்களை மூளை உழைப்பின் மூலமும் உடல் உழைப்பின் மூலமும் முன்னெடுக்க வேண்டும். நகரங்களை விட்டும் மேல்தட்டு , மத்திய தர வர்க்க மனநிலைகளில் இருந்தும் விலகி ஒடுக்கப்படும் மக்களாகவும் , இந்த தேசத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் மக்களின் கிராமங்களை நோக்கி போக வேண்டும் , அவர்களுக்கு இடையில் உரையாடலையும் கூட்டு மனத்தையும் சிந்தனையும் நாம் உருவாக்க வேண்டும். நம்முடைய இறுதி நம்பிக்கை மக்கள்தான். அந்த எளிய மக்களின் செயல்தான் கொடும் முதலாளிகளையும் , சுரண்டும் அதிகாரத்தையும் உடைக்கவல்லது. அதை அவர்களுக்கு சொல்லிகொடுக்க வேண்டும். எல்லையற்ற கருணைமிக்கவர்கள் அவர்கள். இந்த சமூகத்தை அவர்களிடமிருந்து கொண்டு வருவோம். எம்முடைய காயங்களும் கண்ணீரும் விற்கப்படுவதையும் வாங்கப்படுவதையும் எதிர்க்கவேண்டும்.
அதற்கு ஒரே வழிதான் , காந்தி சொன்னது.
நீ சமூகத்தில் மாற்றத்தை காண எண்ணுகிறாயா, நீயே மாற்றமாக இருக்கத்தொடங்கு.

 

-யதார்த்தன்

Feb 15

தொன்ம யாத்திரை : கொண்டாட்டம் என்னும் எதிர்ப்பு வடிவம்.

 

போன வருடம் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொன்மயாத்திரை என்ற செயற்பாட்டு வடிவம் பற்றிய சில தெளிவு படுத்தல்களுடன் , இந்த வருடத்துக்கான தொன்ம யாத்திரையைத் தொடங்க நினைக்கிறோம்.  சென்ற வருடம் தொன்ம யாத்திரையின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் சில புரிதல் இன்மைகளை யாத்திரைக்கு உள்ளும் வெளியிலும் அவதானிக்க முடிந்தது. அதில் தொன்ம யாத்திரையின் பிரதான இலக்குச் சொற்களாக இயக்கப்பட்ட  மரபினை  அறிதல் –கொண்டாடுதல் – ஆவணமாக்குதல் என்ற விடயம் பற்றிய விவாதங்கள் யாத்திரையை நோக்கி முன் வைக்கப்பட்டது. இதில் கொண்டாட்டம் என்பதை சில நண்பர்கள் புரிந்துகொண்ட விதத்தில் சிக்கல்களிருந்தன. மரபுரிமைகள் திட்டமிட்டும் , திட்டமிடப்படாமலும் அழிக்கப்படுகின்றன என்ற எரியும் பிரச்சினைக்கு எதிராக வேலை செய்வதற்கு கொண்டாட்டம் என்ற வடிவத்தை ஏன் தொன்மயாத்திரை கையாள்கின்றது என்ற கேள்வி பலமாக முன் வைக்கப்பட்டது.

கொண்டாட்டத்தின் மூலம் வெறும் கேளிக்கை மட்டுமே நிகழ்த்தப்பட முடியும் என்று பலரும் குற்றம் சாட்டினர் , ஏதோ ஒரு சுற்றுலாவைப்போல ஆண்களும் பெண்களும் போய் களித்திருந்து விட்டு அதை சமூக அசைவாக , எதிர்ப்பு வடிவமாக சொல்கின்றார்கள் என்று விமர்சனங்கள் எழுந்தன.

உண்மையில் இதை ஒரு அறிவுத்தளத்தினைக்கொண்ட கொண்டாட்ட வடிவமாகவே தொடர்ச்சியாக முன்னெடுக்க யாத்திரைக்குழு தீர்மானித்திருந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்த கொண்டாட்ட வடிவம் எதன் பின்னனியில் தீர்மானிக்கப்பட்டது , எப்படி இயக்கப்படுகின்றது என்பதனை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அசலான வரலாறு என்பதையும் மரபு என்பதையும் நவீன வரலாற்று வாசிப்பு முறைகள் , அரசின் , அரசனின்வரலாறு , அதிகாரத்தின்வரலாறு , மேல்தட்டு வர்க்கத்தின் வரலாறு ,கல்வியறிவுள்ளவனின்வரலாறு , ஒடுக்குபவனின்வரலாறு , பெருந்தெய்வங்களின் வரலாறு , போரின் வரலாறு ,ஆண்களின்  வரலாறு என்பதில் இருந்து பெயர்த்தெடுத்து , விளிம்பு நிலை மக்களின் கடந்த காலமும் , வாழ்வுமே அசலான வரலாற்று வாசிப்பின் தொடக்கப்புள்ளியும் அசைவுப்புள்ளியும் என்ற நிலையைத்தோற்றுவித்தது. வரலாறு என்பதும் சரி மரபென்பதும் சரி சாதாரண சனங்களினுடையது என்பதைக்கோருகின்றது நவீன வாசிப்பு.

அதிகாரத்தினது பிரதான எதிர்ப்பு வடிவம் என்பது வன்முறையும் கபடமேயாகும். அதற்கு அது இராஜதந்திரம் என்று ஒரு சடங்குப்பெயரை வைத்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட வாக்கியம் ஒன்று உள்ளது

“நீதி என்பது அரசின் வன்முறை

வன்முறை என்பது மக்களின் நீதி”

டியிற்றல் யுகம் தோன்றும் மட்டும் மக்களால் அதிகாரத்துக்கெதிராக கிளர்ச்சி செய்ய முடிந்தது, அதாவது சனநாயகத்தை மலரவைப்பதற்கான எழுச்சிகளை முன்னெடுக்க முடிந்தது. விளக்குமாறுகளும் , மண்வெட்டிகளும் கற்களும் கூட அதிகாரத்துக்கு எதிராக வீசப்படக்கூடியதாகவிருந்தது. காடுகளுக்குள் திட்டம் தீட்டி கெரில்லாக்களால் போராட முடிந்தது. பெரும் அரசுகளையும் அதிகாரத்தையும் பொதுமக்களால் வீழ்த்த முடிந்தது  ஆனால் டியிற்றல் யுகத்தில் இனி இது சாத்தியமா  என்பதை யோசிக்க வேண்டும்.

 

நவீன அரசுகள் என்பவை வன்முறையால் வீழ்த்த முடியாத பொருளாதார , ஆயுத சுவர்களால் மக்களை  சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. தலைக்கு மேல் செய்மதிகளும் கமராக்களும் , சைபர் உலகமும் ஒரு சாதாரண குடிமகனின் அன்றாட வாழ்க்கையை அதிகாரத்துக்கும் ஒடுக்குபவர்களுக்கும் டியிற்றல் தரவுகளாக வழங்குகின்றது, இனி அவனால் காடுகளுக்குள் ஒன்று கூட முடியாது.   ஆயுதப்புரட்சிகள் நடைமுறைச்சாத்தியத்தை விட்டு தூரம் சென்றுவிட்டன. இன்றைய நிலையில் மக்களின் ஆயுதப்புரட்சிகள் , என்பவை முதலாளித்துவ வல்லரசுகள் தங்கள் லாபத்தின் பொருட்டு கன கச்சிதமாக மக்களுக்குத்தெரியாமலே உருவாக்கியவைதான். வலிமையில்லாத அரசுகளை வலிமையான அரசுகள் சொந்த நிலத்தின் மக்களைக்கொண்டே புரட்சி நாடகத்தை நிகழ்த்தி வீழ்த்துகின்றன. மத்திய கிழக்கிலும் சரி கீழைத்தேசத்திலும் சரி இன்று புரட்சிகள் என்பவை முன் வரைபுகளில் இயங்குபவைதான்.

இனி எந்த பஸ்ரில் சிறையும் மக்களால் தகர்க்கப்படப்போவதில்லை , அரண்மனைக்கதவுகள் உடைக்கப்படப்போவதில்லை.இனி அசலான ஆயுதம் ஏந்திய புரட்சிகள் நடக்கப்போவதில்லை. அந்த அளவுக்கு அரசுகள் மக்களை தத்தமது எல்லைக்குள் இறுக்கியாகிற்று.

,தேர்தல்ளோ வாக்குரிமையோ எத்தனை சதவீதம் மக்களின் அசலான சனநாயக மாற்றத்தின் கருவிகளாக உள்ளன? ஹிட்லர் பகிரங்கமாக “சனநாயகம் கோளைகளின் கூக்குரல்” என்றார். இன்றைய அரசுகள் அதை வெளிப்படையாகச்சொல்லவில்லை அவ்வளவுதான் வித்தியாசம், அப்படியென்றால் இனி சனநாயகப்புரட்சியென்பது கிடையாதா ? மக்கள் எழுச்சியென்பது அதிகாரத்தின் பொம்மலாட்டங்களை தாண்டி  நிகழாதா ? அப்படியானால் டியிற்றல் யுகத்தில் மக்களின் அசலான எதிர்ப்பு வடிவம் என்பது எது? ஒடுக்கப்படுவதற்கும் , சுரண்டப்படுவதற்கும் எதிராக உரிமைகளுக்குமாக மக்கள் எதன் மூலம் போராடப்போகின்றார்கள் ?

நவதாராளவாதம் என்னும் முதலாளித்துவ சர்வதேசமும் ,அரசும், மக்களின் மரபு அடையாளங்களை அழிப்பது என்பது , மிக ஆழமானதும் நுட்பமானதுமான செயன்முறையாக்கம் , அது தேசிய சர்வதேச அளவில் செயற்படுகின்றது.

மனித குழுக்களின் இருப்பை அழித்து அவர்களின் வளத்தைச்சுரண்டும் முயற்சியின் பொருட்டே மரபுகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு எதிராக குரல் கொடுக்க , போராட வாக்களித்து  நாம் தெரிவு செய்த பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் அரசு கொண்டிருக்கும் இறைமையை  கையில் எடுத்துக்கொண்டு மக்களைச்சுரண்டி செல்வத்தை தமக்குள் பங்கு போடுபவர்களாக மாறி விட்டார்கள். தேர்தல்ளும் முன்வரைபுகளாலும் பணத்தினாலும் வடிவமைக்கப்படுகின்றன.மக்களின் விழிப்புணர்வு என்பது டியிற்றல் யுகத்தினால் , முடக்கப்படுகின்றது.

முன்பு சொன்னது போல் அசலான சனநாயத்தை நிலைநாட்ட ஆயுதம் தூக்குவதோ , காடுகளுக்குள் ஒழிந்து கொண்டு போராடுவதோ ,சாத்தியமேயில்லை. எனவே தேசத்தின் பிரசைகள் எதன் மூலம் இதனை எதிக்கலாம் ? அதற்கு இரண்டே வழிகள் தான் பிரதானமாயுள்ளன. அவை அறிவும் கொண்டாட்டமுமேயாகும். அறிவுள்ள சமூகத்தின் கொண்டாட்டம்  என்பது விழிப்பு நிலையின் , எதிர்ப்பின் வடிவமாகும்.

இந்தத் தளத்திலேயே தொன்மயாத்திரையும் கொண்டாட்டத்தை ஓர் எதிர்ப்பு வடிவமாக கையாள நினைக்கின்றது . ஒன்று கூடி நின்று ஆயுதம் பிடிக்கவும்  கற்களால் எறிவதை விடஒன்றாய் கூடி நாம் கொண்டாடுதலுக்கு வலு அதிகம். மிக எளிமையாக விளக்குவதற்கு நான் சமீபத்தைய உதாரணங்களையே எடுத்துக்கொள்ள நினைக்கின்றேன்.

தமிழ்நாட்டு மக்களின் சல்லிக்கட்டு போராட்டம் ஞாபகமிருக்கும் , லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய போராட்டம் அது .அங்கே மக்கள் யாரும் கல்லெறியவில்லை ,தடிகளோ பொல்லுகளோ தூக்கவில்லை , ஒன்று கூடினார்கள் , தங்களின் இலகுவான அடிப்படையான  ஒன்று கூடும் சுதந்திரத்தை கையிலெடுத்தார்கள். ஒன்று கூடி அவர்கள் வெறுமனே கோசம் போடவில்லை , பறைகளை இசைத்தார்கள் , பாட்டுப்பாடினார்கள் ,  விளையாடினார்கள் , இரவுகளை போன்களினால் ஒளியூட்டினார்கள் , சல்லிகட்டை இணையத்தில் தேடினார்கள் கொண்டாட்டத்தின் பொருட்டான அறிவு அவர்களிடம் வந்து சேர்ந்தது, மீடியாக்களை தங்களை பார்க்க வைத்தார்கள் , சிதறிக்கிடந்த கூட்டுக்குரலை கடற்கரையில் ஒன்று திரட்டினார்கள் , யாரும் அங்கே சீரியசாக முகங்களை வைத்துக்கொள்ளவில்லை. அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஒரு கல்லை கூட தூக்காத மக்களை காவல்துறையோ , ராணுவமோ எதைச்சொல்லி வெளியேற்றுவது , லட்சம் கைகள் கோர்த்து நிற்கும் ஒரு  பெருங்கணத்துக்குள் அரசின் நீதியாலும் சரி வன்முறையாலும் சரி நெருங்க முடியவில்லை.  அங்கே இருந்த கொண்டாட்டமே அவர்களின் எதிர்ப்பு வடிவம். அவர்கள் கலைந்து செல்லும் வரை அரசால் வன்முறையை நிகழ்த்தமுடியவில்லை. மானுடக்கூட்டுக்கணங்களை தலைக்குமேல் சுழலும் செய்மதிகளாலோ , துப்பாக்கிகளாலோ ஒன்றும் செய்ய முடியவில்லை. போராட்டம் கண்முன்னே வென்றது.

ஏன் சமீபத்தைய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், ஈழத்தில் கேப்பாப்புலவில் மரபார்ந்த தமது பூர்வீக நிலத்தைக்கோரி ஒன்று கூடிய மக்களைப்பாருங்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை , அரசியல் கோசமும் இல்லை, அவர்களிடம் உள்ள கூட்டு வாழ்வையும் கொண்டாட்டத்தையும் ஒரு கொட்டகைக்கு கீழே கொண்டு வந்திருக்கிறார்கள். ஒன்றாக சமைத்து உண்கின்றார்கள் ,சிறுவர்கள் பாட்டுப்பாடுகின்றார்கள்,  கூடி இருந்து படிக்கின்றார்கள். மீடியாக்கள் அங்கே போகத்தொடங்கிவிட்டன, சிங்கள தமிழ் முஸ்லீம்  என்று எல்லாச்சமூகங்களும் அவர்களின் கூட்டுக்கணத்தின் பொருட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அங்கே இருக்கும் கொண்டாட்டமே அவர்களை இன்னும் உறுதியாக பனியிலும் வெயிலிலும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது.

https://www.facebook.com/100009818350190/videos/448851665452108/

சமீபத்தில் கேரளாவில் ஒரு பாடகரின் தாடியை வைத்து அவரைப் பொலீஸ் தீவிரவாதி என்று கைது செய்தது , அதனை எதிர்க்க அவர்கள் நீதிமன்றம் போகவில்லை , மீடியாக்களிடம் ஓடவில்லை , அந்த பாடகன் தன் கிற்றாரை எடுத்துக்கொண்டுபோய் பொலீஸ்நிலையத்தின் முன்னால் நின்று பாடுகின்றான்.

“தாடி வளப்போம் மீசைவளர்ப்போம் நீளத்திற்கு முடியும் வளர்ப்போம்

எங்கட நாடு எங்கட இஸ்ரம் “ என்று. அந்த வீடியோ வைரலாகி உலகமும் முழுவதும் இருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்தது.

சமீபத்தில் சசிகலா முதலமைச்சராவதற்கு எதிப்பு தெரிவித்து , அவரின் வீட்டுக்கு அண்மையாகச்சென்று பாடகி ஒருவர் பாட்டுப்பாடியது அதிகம் பேசப்பட்டது , தமிழ்நாட்டில் நீண்டகாலமாக  கோவனின் எழுச்சிப்பாடல்கள் மக்களை அறிவூட்டும் கொண்டாட்டங்களாக இருக்கின்றன.

கொண்டாட்டத்திற்கு ஒரு வாழ்வுமுறையும் சக்தியும் இருக்கின்றது , கொண்டாட்டமே அறிவை செறிவாக காவிச்செல்லும், வகுப்பில் வைத்து ஒப்பிப்பதை விட குழந்தை ஒன்று விளையாட்டு மூலம் வினைத்திறனாகக் கற்றுக்கொள்ளும். இந்த உளவியலைத்தான் தொன்மயாத்திரை அடிப்படையாகக்கொள்கின்றது.

மரபுரிமை சார்ந்த இடத்துக்குப்போய் அங்கே கொண்டாடுகின்றோம், மரபுணவுகளை சமைத்து உண்கின்றோம் , இசைக்கின்றோம் , ஆடுகின்றோம், கூடவே அந்த மரபை அறிந்துகொள்கிறோம் , மரபுவாழ்வை வாழ்ந்தும் பார்கின்றோம். அங்கே நம்முடைய கொண்டாட்டமே விழிப்புணர்வு.

ஓஷோ சொல்வதனைப்போல

“Celebration is the awareness”

சிந்திக்கின்ற மனிதர்களின் கொண்டாட்டம் என்பது  பெரும் கலைவடிவம். காலம் காலமாக கலை வடிவங்களே சனநாயகத்தின்  உறுதிமிக்க கருவிகளாக இருந்தன, பாட்டும் ஓவியமும் , விளையாட்டும் , இலக்கியமும் அசலான கொண்டாட்டங்களாகவும் அதேவேளை எதிர்ப்பு வடிவங்களாகவும் இருந்தன. கலைகள் கேளிக்கைகள் அல்ல , அவை எதிர்ப்பு வடிவங்கள். மரபுரிமைகள் கலைகளுக்கு நெருக்கமானவை . தொன்மயாத்திரை  மரபு – கலை – கொண்டாட்டம் இவற்றை அறிவுத்தளத்தில் இணைக்க நினைக்கின்றது.

.

சென்றவருடம் மேற்கொண்ட தொன்ம யாத்திரை ஆரோக்கியமான குறிகாட்டிகளை தந்துள்ளது, முதல் தொன்ம யாத்திரை தெருமூடி மடத்தில் நிகழ்த்தப்பட்டது. தெருமூடிமடம் பற்றி ஊடகங்கள் பலவும் எழுதத்தொடங்கிவிட்டன, அந்த சூழல் சார்ந்த மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படத்தொடங்கியுள்ளது, மடத்தின் அருகில் உள்ள ஒரு கோயிலின் தூண்கள் இடிக்கப்படும் போது அது மரபு என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது தொன்ம யாத்திரை குருவிக்காடு . குருவிக்காட்டினை இயற்கையான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அரசு போட் ஒன்றை போட்டுள்ளது, அதை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கும் வேலைகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளன.

நெடுந்தீவில் புதிய பெருக்கமரம் , மூலிகைத்தொட்டி என்பன தொன்மயாத்திரை குழுவினால் இனம் காட்டப்பட்டுள்ளன, பெருக்க மரங்கள் சுற்றுலாத்தலங்களாக புனரமைக்கப்பட்டுள்ளன. யாத்திரைக்கு பிறகு நெடுந்தீவுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் கணிசமாக அதிகரித்துளனர்.

அதேபோல கேணிகள் ,குளங்கள் , ஆவுரஞ்சிக்கற்களை பாதுக்காக்க வடமாகாணசபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கணிசமாக நாம் ஒன்று கூடும் போதே கண்முன்னே மாற்றங்கள் நடக்கின்றன. தொடர்ச்சியாக நாம் சேறிவாக ஒன்று கூடும் போதும் கொண்டாடும்போதும் இன்னும் ஆரோக்கியமான  மாற்றங்கள் நடக்கும்.

கடந்த தொன்ம யாத்திரைகள் கொண்டிருந்த பல குறைபாடுகளை பலரும் சுட்டிக்காட்டினர் , முடிந்தவரை அவற்றை செம்மைப்படுத்த முயற்சித்துள்ளோம்.  யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தொன்மயாத்திரை பற்றிய உரையாடல்கள் மூன்று முறை வெவ்வேறு துறைகளில் செய்யப்பட்டுள்ளன ,  வடமராட்சி முதலான இடங்களில் சிறு சிறு உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை நடந்த தொன்ம யாத்திரை வேலைகளை ஆவணமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக ஊடகங்களின் கவனம் மரபுரிமைகள் மீது திரும்புவதில் தொன்மயாத்திரை முக்கிய பங்கு வகித்துள்ளது.

நாம் இந்த வருடத்திலும் எம்முடைய மரபுகளைத் தேடியறியவும் கொண்டாடவுமாக யாத்திரைகளுக்கான அடிகளை நிதானமாக எடுத்து வைப்போம். அறிவே இனி நமது பிரதான எதிர்ப்பு வடிவம் , அதை கொண்டாட்டம் மூலமாக அடைந்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

வாருங்கள் தோழர்களே இந்த வருடத்தை ஆரம்பிப்போம்.

-யதார்த்தன் –

(செயற்பாட்டாளர் – தொன்மயாத்திரை குழு )

Feb 14

காட்டின் பாதைகளை மறிக்கும் மக்களின் பாடல்கள்.

 


பெருங்குளக்காவலன் போல்

 அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. 

-அகநாநூறு.

மயமலை அடிவாரத்தில் இருக்கிறது அந்த கிராமம் . மலைக்காட்டுகளின் கரையில் காட்டுக்கு மிக நெருக்கமான மக்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் , காட்டுக்குள் ஓடும் நதியும் , காடும் , மலையும் அந்த மக்களின் வாழ்வாதாரம். காலனித்துவம் இந்திய கண்டத்தை பரந்து மூடுகின்றது . அவர்கள் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்ட கோடாலிகளுடன் வருகின்றார்கள் , கிராமத்தை விட்டு காடு மெல்ல மெல்ல தூரம் செல்கிறது , இந்தியா சுதந்திரமடைகிறது , அரசாங்கம் எழுகின்றது , அப்போதும் அவர்கள் கோடாலிகளுடன் வருகின்றார்கள் காடு இன்னும் இன்னும் கிராமத்தை விட்டு விலக்கிச்செல்கிறது , தீடிரென்று ஒருநாள் காட்டுக்குள் ஓடிய நதி பெருக்கெடுக்கின்றது , நதி மணலை எடுத்து செல்கிறது , கூடவே கிராமத்தையும் . பிறகுதான்  அவர்களுக்கு தெரிகிறது , ஏன் நதிபெருகியதென்று . அவர்களின் கிராமமும் வாழ்வும் காட்டு மரங்களின் நிழலில் எப்படி பாதுகாப்பாக இருந்ததென்று , தாம் இயற்கை வாழ்வை விட்டு விலகியதை அவர்கள் உணர்கிறார்கள் . அரசு தொடர்ந்தும் கோடாலிகளுடன் வருகின்றது . கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்க்க தொடங்குகின்றார்கள் , அரசு நகரத்தில் சினிமாவை கொண்டு வருகின்றது ஆண்களை அங்கே திசை திருப்புகின்றது . ஆனால் பெண்கள் தங்களின் கருக்கள் அறுக்கப்படுவதை உணர்கிறார்கள், அவர்களின் வாகங்கள் வரும் பாதைகளை குறுக்கே மறித்து இருக்கிறார்கள் , பகலிரவு என்று  தொடர்ச்சியாக பாடல்களை பாடியபடி காட்டுப்பாதைகளில் களின் பாடல்  அவர்களை இடை மறிக்கின்றது . அவர்கள் பொலீசைக்கூட்டி வந்தார்கள் , சர்க்காருக்கு சொந்த மானது காடென்றார்கள் , எங்களுடைய கிராமம் காட்டின் குழந்தை என்கின்றார்கள் இவர்கள் , ஒன்றாய் சேர்ந்து ஒரே குரலில் பேசுகின்றார்கள் , வருஷக்கணக்கில் போராடுகின்றார்கள் . காட்டில் வாசல்களில் முட்களையும் கற்களையும் அடுக்கி வேலி செய்கின்றார்கள் , மரக்குழந்தைகளை நட்டு மீண்டும் தங்களின் காட்டை உண்டாக்குகின்றனர். அவர்களின் கூட்டுக்குரல்  கோடாலிகளை தடுக்கின்றது . காட்டின் வாசல்களை அடைத்து நின்று அவர்களின் பாடல் காட்டை பாதுக்காக்கின்றது. காடு மீண்டும் தளைக்கின்றது .

 

இது சமீபத்தில் ”நிகழ்படம்” திரையிடலில் பார்த்த ”சிக்போ அசைவு ” எனும் வட இந்தியாவில் இமயமலை காடுகளை பாதுகாத்த ஒரு கிராமத்தின்  பெரும் செயற்பாட்டு வெற்றியை பற்றிய ஆவணப்படத்தின்  சுருக்கம். ”வேலிகளின் மேல்” என்ற இவ் ஆவணப்படம் கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று . சிக்போ மூவ் மெண்ட் பற்றி இணையத்தில் தேடுங்கள் , நிறையத்தகவல்கள் கிடைக்கும். காடுகளின் இதயத்தை அந்த மக்கள் இனம் கண்ட விதமும் அதை பாதுகாத்த விதமும் , கண்டிப்பாக ஒட்டு மொத்த உலகத்திலேயே இருபதாம் நூற்றாண்டில் நிழந்த மகத்தான செயல் என்பது புரியும். உங்கள் உங்கள் நிலத்தில் மரங்களும் காடுகளும் உங்களுடைய வாழ்வின் இதயமாக இருப்பதை பொருத்தி பாருங்கள். நான் அப்படித்தான் பார்த்தேன் .படத்தை பார்த்த பிறகு நான்கைந்து நாட்கள் மீண்டும் மீண்டும் என்னுடைய நிலமும் மரமும் காடுகளும் நீர் நிலைகளும் வந்து கொண்டேயிருந்தன.கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

சிறுவயதிலிருந்தே எனக்கு மரங்கள் நெருக்கமாக இருந்தன,எனக்கு வேறு விளையாட்டுக்கள் அவ்வளவு வராது. எனக்கு பிடிச்சது இரண்டு விளையாட்டுக்கள் தான் ஒன்று பட்டம்கட்டுறதும் ஏத்துறதும், இரண்டாவது மரத்தில் ஏறுவது , பறண் கட்டி விளையாடுவது.

நினைத்தேன் வந்தாய் என்று ஒரு படம்,  அதில் நடிகை தேவயானி ஒரு கொய்யா மரத்தை தன்னுடைய ப்ரண்டு என்று  சொல்லும் ,  கைதட்டியவுடன் ஒருமரம் பழத்தை கொடுக்கும்  என்ற அளவில் அந்த மரம் தேவயானிக்கு நெருக்கமாய் இருக்கும் ரொம்பவே நாடகத்தனம் அல்லது பாண்டசி தனமாக இருந்தாலும் இரசிக்க கூடிய மாதிரி இருக்கும் , எனக்கு மரங்கள் அந்தளவு ப்ண்டசி தனமான நெருக்கம் , கட்டிப்பிடித்து அழுவேன் என்ற அளவுக்கெல்லாம் இல்லாவிட்டாலும் மரங்களின் மேல் எறுவது , பறண்கட்டுவது , விளையாடுவது என்றால் சொளகரியமான ஒரு உணர்வினைத் தருவது போலிருக்கும்.

யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரை அதன் நில அமைப்பு இடைத்தர மரங்களைத்தான் பிரதான பரம்பலாக கொண்டிருக்கும் .குருவிக்காடு என்னும் சிறு கண்டல் நிலத்தாவரங்கள் நிறைந்த இடத்துக்கு சமீபமாக இருக்கும் விவசாயக்கிராமம் , அதிகபட்சம்  என்னுடைய கிராமத்தில் இருக்கும் பெரிய மரங்கள் என்றால் , வேம்பு , மா , வாகை ,புளி , நாவல் ,பனை , தென்னை போன்றன , இடைத்தர மரங்களில்  பூவரசு , முருங்கு , விளாத்தி, அன்னமுன்னா, கமுகு போன்றன முக்கியமானவை . என்னுடைய வீட்டிலும் அதன் சூழலிலும் பெரும்பாலும் இவ்வகையான மரங்களே இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை காடுகளை பற்றியோ காடு சார்ந்த வாழ்வு பற்றியோ எனக்கு சுத்தமாக எந்தப்பரிச்சமும் இல்லை . 2006 இற்கு பிறகு வன்னிக்குப்போன பிறகுதான் காடுகளும் அதுசார்ந்த வாழ்க்கையும் நெருக்கமாகியது, குறிப்பாக நீர் நிலை சார்ந்த காட்டு முறை வாழ்வை அங்கேதான் கண்டேன். இலங்கையில் நடைமுறையில் இருக்கும்  அத்தனை வரலாற்று பாடநூல்களிலும் இலங்கையின் நீர்வள நாகரிகம் ஒருதனியான பாடமாக இருக்கும் , எல்லா பரீட்சைகளிலும் அதுசார்ந்த கேள்வி வந்தே ஆகும் என்று உறுதியாக நம்பலாம். வன்னிக்கு போகும் மட்டும் நீர்வள நாகரீகம் என்றால் என்ன  என்று பாட ரீதியாக மட்டும் விளங்கி வைத்திருந்தேன். ஒரு நீர்நிலை நிலை சார்ந்து , அந்நீர்நிலையை அண்டி எழும் மரங்கள் சார்ந்து , பயிர்கள் சார்ந்து மக்களின் அடிப்படை வாழ்வு என்பது மிக நுட்பமானதும் , தன்னிறைவானதுமாக கட்டப்படுகின்றது . குறிப்பாக வடக்கு மாகாணம் நதிகளால் நீர் பெறுவது இல்லை , கனகராயன் ஆறு , மற்றும் மன்னாரினை இடை வெட்டி ஓடி கடலில் கலக்கும் அருவியாற்றை தவிர நீர் வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் ஆறுகள் மிகக்குறைவ, அதிலும் யாழ்ப்பாணம்  சிறு பருநிலையில் மட்டும் நிறையும் , சிறு குளங்கள் மற்றும் பருவ மழையினால் சேமிக்கப்படும் நிலத்தடி நீரை மட்டும் கொண்டே தனது மரப்பல்வகைமையையும் இருப்பையும் கட்டமைக்கின்றது.

வன்னி நிலத்தை பொறுத்தவரை குளங்களே பிரதான வாழ்வாதார நீர் வழங்கலைச்செய்கின்றன.வன்னியில் அமைக்கப்பட்டிருக்கின்ற குளங்களுக்கும் அதனுடைய காடுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. நன்றாகக் கவனித்தால் அங்கே ஒரு நேர்த்தியான படிமுறை நீரியல் வாழ்வு முறை இருப்பதைக்காணலாம் , அது காடுகளில் தொடங்கி கடலில் முடிகின்றது.

வன்னியைப்பொறுத்தவரை இலங்கையின் அண்சமவெளியின் விளிம்பு நிலைக்காடுகளைகொண்டது அது கரையோரச்சம வெளி வரை பரந்து வந்து முடிகின்றது , வவுனியா மாவட்டம் , முல்லைத்தீவு மாவட்டம் , மன்னார் மாவட்டம் , மற்றும் கிளிநொச்சிமாவட்டத்தின் எல்லைப்பகுதிகள்  அண்சமவெளிக்காடுகளின் முடிவிடங்களாக இருக்கின்றன. அதாவது ஒப்பீட்டளவில் மத்திய மலைக்காடுகளில் தொடங்கும் நூற்றுக்கணக்கான நதிகளை கொண்ட இலங்கையின் காட்டு நில அமைபு  அண்சமவெளியிவரை பரந்து கிடக்கின்றது , மலையகத்தில் இருந்து இலங்கைத்தீவின் கரைகளை நோக்கி ஓடும் நதிகளின் வீரியம் , அளவு போலவே காடுகளும் ஒரு படிமுறையில் பரவி இறங்குகின்றன. அக்காடுகளின் முடிவிடங்களுள் ஒன்றாக வன்னி நிலம் காணப்படுகின்றது.இப்படிமுறை அமைப்புச்சிதையாத வண்ணம் மிகநுட்பமாக வன்னியில் அமைக்கப்பட்ட பெரும்பாலான குளங்கள் காட்டு முகப்புக்களின் கீழேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.அக்குளங்களின் கீழே குடியிருப்புக்களும் கிராமங்களும் எழுந்து நிற்கின்றன.

காடுகளின் முகப்புக்களில் குளங்கள் அமைக்கப்படுவதற்கு காரணம் காடுகள் எடுத்துக்கொண்டது போக வழிந்து கடலை நோக்கி இறங்கும் நீரை அண்சமவெளிகளில்  தேக்கி அந்நீரின் மூலம் நீர்வளப்பண்பாடு உடைய மக்கள் குடிகளை அமைப்பதாகும் . இதனால் தான் எல்லா வரலாற்று புத்தகங்களும் சொல்வதைப்போல இலங்கை நீர்வள நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த நாடு என்பதை அழுத்தி வாசிக்க வேண்டியிருக்கிறது.

காடுகள் இல்லாவிட்டாலும் மழை நீரும் ஆற்று நீரும் வந்து சேரும் தானே , குளங்களை அமைக்கலாம் தானே என்று நினைத்தால் ,ஆனால் மனிதர்களால் காடுகள் அளவிற்கு நீரை முகாமை செய்ய முடியும் என்பது கேள்விக்குறியே.  நதிகளில் ஓடும் நீரும் , சரி மழை நீரும் சரி மண்வளத்தை அள்ளிக்கொண்டு சென்று கடலில் கொட்டி விடும் , இன்று உலகின் பெரும்பாலான நாடுகள்  காடுகளை அழித்து  மழை வீழ்ச்சியையும் , சூழல் வெப்பச்சமநிலையையும் குலைத்தது மட்டுமில்லை , வளமான மண்ணை கடலுக்கு கொடுத்து விட்டு பயிரிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள புயியிலாளர்கள் மண்ணரிப்புக்கு  சொல்லும் முதல் காரணம் காடழிப்புத்தான். ஆக காடுகள் நிலத்தின் வளத்தை பாதுகாக்கின்றன. அத்துடன் தாங்கள் எடுத்துக்கொண்டது போக மீதமான நீரை குறித்த ஒழுங்கில் குளங்களுக்கு அனுப்புகின்றன.எப்படி பருவங்கள் ஒரு சுழற்சியில் இயங்குமோ அப்படி காடுகள் நீரையும் அதுசார்ந்த வாழ்வையும் இயக்குகின்றன. இதை வன்னியில் மட்டுமில்லை , அண்சமவெளியில் இருக்கும் அநுராதபுரம் , பொலநறுவை தொடங்கி கிழக்கு வரை  காணலாம் , கரையோரச்சமவெளியில் மன்னார் தொடக்கம் புத்தளம் வரை நீண்டு செல்லும் காடுகளும் நீர் நிலைகளும் கூட இத்தன்மை வாய்ந்தவை. பெருங்காடுகளும் , ஆறுகளும் இருந்ததால் தான் இலங்கை ஒரு பெரும் நாகரிகமாக எழுந்தது.

சரி யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் வருவோம். தமிழில் அவ்வை ஆச்சி சொன்ன ஒரு   பழ மொழி இருக்கின்றது“ ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்”  என்று.  எனக்கு யாழ்ப்பாணாத்தில் கோடையில் இருக்க சுத்தமாக பிடிக்காது . அந்தளவுக்கு காஞ்சு போய் கிடக்கும் . கடற்கரை பக்கம் மட்டும் கொஞ்சம் அழகாய் இருக்கும் . ஆனா மாரில யாழ்ப்பாணம் ரொம அழகா இருக்கும் , பொதுவா யாழ்ப்பாணாத்தின் நீரியல் வாழ்வு என்பது நிலத்தடி நீரை அடிப்படையாக கொண்டது. மயோசின் சுண்ணப்பாறைகள் யாழ்ப்பாணாத்தின் இதயச்சுவர்களாக நின்று  மழை நீரைச்சேமிக்கின்றன. ஆனால் இன்று குழாய் கிணறத்து அதனையும் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறோம் , அது தவிர  கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண நீர் பாவனைக்கு ஒவ்வாத நிலையை நோக்கி போகத்தொடங்கி விட்டது என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தின் தீவகம் முதலான கரையோரங்களில் முற்று முழுதாக கடல் நீர் பிரசாரணமாகி நிலத்தடி நன்னீர் அற்றுப்போய்விட்டது . மத்திய பகுதி நீரில் அரச கூட்டுக்கொம்பனிகள் , ஓயில் கலந்தது போக ஏனைய இரசாயன மாற்றங்களினால் பாதிக்கப்பட்டுமுள்ளன.  கண்டிப்பாக யாழ்ப்பாணாத்தில் எதிர்காலத்தில் நன்னீர் தட்டுப்பாடு வரப்போவது திண்ணமாகிவிட்டது , நாம் அதை எதிர்கொள்ள எவ்வளவு தயாராக இருக்கிறோம் , என்ன செய்யப்போகின்றோம் என்பது கண்முன்னே எழும் பெரும் கேள்வி .

யாழ்ப்பாணத்தின் நீரியல் நிலமைகளின் சுற்றுச்சமநிலையை காலம் காலமாக பேணி வந்தவை

1 . நிலத்தடியில் இருக்கும் மயோசின் சுண்ணாம்புக்கல் தொகுதிகள் .

 1. யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதியினை ஊடறுத்து ஓடும் நாவற்குழி தொடக்கம் தொண்டமானாறு வரை இருந்த நீர்த்தரவைகள் , மற்றும்சதுப்பு நிலங்கள்.
 2. யாழ்ப்பாணத்தின் மரப்பல்வகைமைகள்.

 

ஆகிய மூன்றுமாகும் .

முன்பு குறிப்பிட்டதனைப்போல யாழ்ப்பாணம் பெரு மரங்களையோ , காடுகளையோ கொண்ட இடமல்ல , அதன் நிலம் பெரும்பாலும் உவர் தன்மை வாய்ந்த கரையோரச்சமவெளியைச்சார்ந்த நிலம் எனவே பனை , தென்னை முதலான மரங்கள் அதிகமாயும் ஏனைய இடைத்தர மரங்களும் காணப்படுகின்றது. ஆக யாழ்ப்பாணத்தின் நிலத்தின் நீர் சுழற்சியை பேணுவதற்கு அண்சமவெளிக்காடுகளைப்போல யாழ்ப்பாணத்தின் மரப்பரம்பல் உதவப்போவதில்லை . ஆனால் யாழ்ப்பாணத்தின் நீர் சமநிலை மற்றும் நில முகாமையில் மரங்களின் பங்கும் முக்கியமானது . குறிப்பாக நீர்த்தரவைகளிலும் , கண்டல் நிலங்களிலும் உள்ள நீரை முடிந்தளவு காலத்திற்கு தேக்கி நிலத்தடிக்கு சுவறச்செய்ய மரங்களின் கூட்டு நிழல் உதவுகின்றது , குருவிக்காடு முதலான சதுப்பு நிலங்களில் பரவியிருக்கும் கண்டல் தாவரங்கள் அதன் பொருட்டே முக்கியமானவையாக இருக்கின்றன.

அதனைப்போல் நீர் நிலைகள் , கடல் கரைகளில்  மண்ணரிப்பை தடுக்க யாழ்ப்பாணத்தின் மண்ணரிப்பு அபாயம் இருக்கும் இடங்களில் மரங்கள்தொகுதியாக நடப்பட வேண்டும். குறிப்பாக   சதுப்பு நில நீர் பரப்புகளுக்கு அண்மையாக மரங்கள் வளர்த்து எடுக்கப்பட வேண்டும் . ஏற்கனவே  யாழ்ப்பாணத்தில் போருக்கு முன்பிருந்த முறையான நீர்ப்பாசனம் போருக்கு பின்னர் சீர் குலைந்தது , அது போதாது என்று அபிவிருத்தியின் பொருட்டு அவரசம் அவசராமக ஓடிய காபெட் வீதி வேலைகளை மிச்சமிருந்த அமைப்புக்களையும் சிதைத்து விட்டன, அதனால் தான்  2015 இல் கடற்கரை பக்கத்தில் இருந்தும் , நாவாந்துறை போன்ற நீர் கடலில் கலக்கும் இடங்களில் வெள்ளம் வந்து மக்களை அசோகரியப்படுத்தியது . உலகத்திலேயே  கூப்பிடு தூரத்தில் கடற்கரை இருக்க மக்கள் குடியிருப்புக்களில் வெள்ளம் தேங்கிய கதையை யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் கண்டேன்.

கடலரிப்பு , மண் அரிப்புக்களை தடுக்க கடற்கரை நிலங்களில்  மரங்கள் நடப்பட வேண்டும்.  இதற்கு மணல் காடு நல்ல உதாரணம் அங்கிருக்கும் சவுக்குகாடுகள்  மிக அவசியமானவை . ஆனால் அது ஏற்கனவே நிறை எரிக்கப்பட்டு விட்டது.தற்பொழுது அடிக்கடி எரிக்கப்படுவதும் கவலைதருகின்றது.

எனினும் ஒப்பீட்டளவில் தற்போதுள்ள வடமாகாண விவசாய அமைச்சின் செயற்பாடுகள் கொஞ்சம் தெம்பளிக்கின்றன. சமீபத்தில் நல்லூர் திருவிழாவில்  வைக்கப்பட்ட விவசாய அமைச்சின் கண்காட்சியில்  மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி விளங்கப்படுத்தினார்கள் . அத்தோடு  கார்த்திகை மரம் நடுகை மாதமாக கடைப்பிடிக்கப்படுகின்றது , நாவற்குளி போன்ற நீர்த்தரவைகள் இருக்கும் கரைகளில்  உவர் நீர் மரங்களை நாட்டி தொடர்ச்சியாக அவற்றை பராமரிப்பது வரவேற்க வேண்டியது . ஆனால் இது போதுமானதாக இல்லை , மரம் நடுகை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் , எங்கே எப்பிடி எந்த மரத்தை நடுவது அது எப்படியான முறைமையாக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம்  குறித்த முறைமையாக்கங்கள் மூலம் மக்கள் மயப்பட்டு செய்யப்பட வேண்டும். அரசியல் ரீதியாக  விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசனின் மேல்  விமர்சனங்கள் இருந்தாலும் , சூழர் சார்ந்து அவருடைய அறிதல் செயற்பாடுகள் மிக முக்கியமானவை . அவர் அரசியலுக்கு வர முதலே அவருடைய சூழலியல் கட்டுரை0கள் நிரம்பிய “ஏழாவது ஊழி” புத்தகத்தை படித்து அவரைப்பற்றி தேடி , அவருடைய முயற்சியால் வந்த நங்கூரம் முதலான இதழ்களை வாசித்து இருக்கிறேன். வடக்கு மாகாண சபையின் விவசாய  மற்றும் சுற்றாடல் துறை அமைச்சு  இன்னும்  வினைதிறனாக இயங்க வேண்டும் .  யாழ் நிலத்தின் நீர்ப்பாசனம் சீர் செய்யப்படுவதுடன் , கண்டல்  காடுகள் பாதுக்காக்கப்படவும் மரப்பல்வகைமை பாதுக்காக்கப்படவும் வேண்டும். அத்துடன் மரம் நடுகை மக்கள் இயக்கமாக மாறவேண்டும்.

அடுத்து இரண்டு விடயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன் , முதலாவது பாத்தீனியம் .  பாத்தீனியம் ஒழிப்பு என்பது ஐங்கரநேசன் முதலானோர் குறிப்பிட்ட காலத்துக்கு முதல் முனைப்புடன் செயற்பட்டனர் , ஆனால் இன்றைக்கு அவர்கள் வைத்த பாத்தீனியத்தை வேரறுப்போம் என்ற  பாதாகைகளுக்கு கீழேயே அது   வளர்ந்து செழித்துபோய் இருக்கிறது.

பாத்தீனியத்தைப்போலவே யாழ்ப்பாணத்தில் இன்னொரு ஆபத்தான தாவரம் பல இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டு பரவி வளர்ந்து கொண்டிருக்கிறது .கருவேல மரம். பாத்தீனியத்தை போலவே இதுவும் அந்நிய மரம் , நிலத்தடி நீரை வீணாக்கும் மோசமான மரம். எனக்கு தெரிந்து கைதடி – கோப்பாய் வீதியின் இரு மருங்கிலும் ஏராளமாய் செழித்து நிற்கின்றது , அத்தோடு கைதடியில் ஏ 9 வீதியின் மருங்குகளிலும் நிறையவே நிற்கின்றது, வல்லை வெளியிலும்  கருவேல மரங்களை அதிகமாக காணக்கிடைக்கின்றது . அதாவது முன்பு குறிப்பிட்ட சதுப்பு தரவை வெளிகளின் அருகில் நின்று  கருவேல மரம் நிலத்தடி நீரை நாசம் செய்து கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டும் கண்டிப்பாக வேரோடு இல்லாமல் செய்யப்பட்டு முற்று முழுதாக அழிப்பட வேண்டும்.  அவற்றை பிடுங்கி விட்டு அங்கே  பொருத்தமான நிலத்துக்குரிய மரங்களை நடவேண்டும்.  மரங்களையும் நீர்ச்சமநிலையையும் பேணுதல் தனியாக அரசின் பொறுப்பல்ல அது மக்களின் பொறுப்பேயாகும் ,  எனவே சமூக செயற்ப்பாட்டு இயக்கங்கள் அதனைச்செய்ய வேண்டும்.

மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள கேணிகள் , குளங்கள் கண்டிப்பாக புனரமைக்க வேண்டும் , இந்த வருடம் அது தொடர்பான  வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று வடக்கு முதலமைச்சர் அறிவித்திருந்தார், ஆனால் வடக்கு மாகாண சபையின் பட்ஜெட்டிலோ  , ஏன் பேச்சு வாக்கில் கூட அது பற்றி எந்த அசைவும் நிகழ்த்தப்பட்டதாக தெரியவில்லை. அரசியல் வாதிகளை  வீட்டில் தனிய இருந்து விமர்சித்தால் வேலைக்கு ஆகாது , ஒன்று திரள்கையும் சமூகச்செயற்பாடுமே அதை சாத்தியமாக்கும். நீரியல் மற்றும் மரங்களின்  இருப்பு உருவாக்கம் தொடர்ச்சியைப்பேண தொடர்ச்சியாக ஒன்று சேர வேண்டியிருக்கின்றது.

கடந்த வருடங்களில் வவுனிக்குளம் முதலான வன்னிக்காடுகளில் இருந்து பெருந்தொகையான மரங்களை அதிகாரங்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணத்தின் பெரும் மர மாபியாக்கள் கடத்தி வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.நமக்கு அதையெல்லாம் கேட்கும் கூட்டுக்குரல் இன்னும் வாய்க்கவில்லை.  தமிழ் ஊடகங்கள் வழமைபோல  மொண்ணைத்தனமாக வே இயங்கப்போகின்றன. அவற்றை நம்பிப்பயனில்லை, இவற்றை எதிர்க்கின்ற கூட்டுக்குரலை நாங்கள் அடைய வேண்டியிருக்கிறது ,  எப்படி இமாலய மலைக்காடுகளை வெட்ட வருபவர்களை  மறித்து  அந்த கிராத்தில் இருக்கும் பெண்கள் ஒரு போராட்டத்தை தொடங்கி அதை “சிக்போ” என்ற பெரும் அசைவாக மாற்றி தங்கள் குரலை உலகின் காதுகளுக்கு எடுத்து சென்றார்களோ அப்பிடியொரு மக்கள் இயக்கம் எமக்கும் தேவைப்படுகின்றது. இது வடக்கு மாகாணத்தில் மட்டுமில்லை ஒட்டு மொத்த இலங்கைக்கும் பொருந்தும்.எல்லா இடமும் இந்தா பிரச்சினைகள் இருக்கின்றன.

மரமும் நீரும் நம்முடைய உயிரும் வாழ்வுமாகும். மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல இதை பலர் நமக்குச்சொல்லி விட்டார்கள் .ஒரு சடங்கைப்போல நானும் இதை சொல்லி அழ வேண்டி இருப்பதை நினைத்து கோபமாக வருகின்றது.யாரும் மரத்தினதும் நீரினதும் ஆன்மாவை ஏன் உணராமல் இருக்கின்றோம்.உலகத்தின் எல்லா இனக்குழுமங்களைவிடவும் நாங்கள் இயற்கையை நேசித்த மரபைக்கொண்டவர்கள்.கடைசியாக ஒன்றை சொல்லி இதனை முடிக்கிறேன்.

தமிழில் இப்போது வழக்கில் இருக்கும்  கதிரை , மேசை , அலுமாரி  போன்ற தளபாடங்களின் பெயர்கள் தமிழ் ச்சொற்களில்லை , அவை போர்த்துக்கீசு , ஒல்லாந்து , ஆங்கிலம் முதலான மொழிகளில் இருந்து வந்து சேர்ந்த  “திசைச்சொற்கள்” என்று படித்திருக்கிறோம் . ஏன் இப்பொருட்களுக்கு தமிழில் பெயரில்ல்லை என்று யோசித்து இருக்கின்றோமா?ஏனெனில் எம்மிடம் அப்பொருட்கள் வெளிநாட்டார் வரும் வரை பாவனையில் இல்லை.அதானாலேயே அவற்றுக்கு பெயரில்லை. நாங்கள் மரத்தை தேவை இன்றி வெட்டுவதில்லை, நாம் இயற்கை வழிபாட்டில் இருந்து வந்தவர்கள் , மரங்கள் எங்களுக்கு தெய்வங்களாக இருந்தன., மரங்களிலேயே தெய்வங்கள் இருந்ததை நம்பினோம். எனவே மரங்களை வெட்டி செய்யும் தளபாடங்கள் எங்களிடம் இருக்கவில்லை, ஆதாலால் எங்களுடைய மொழியில் அந்த சொற்களும் இல்லை.

-யதார்த்தன்

நன்றி – புதுவிதி

Feb 01

மருத்துவ மாணவர்களின் போராட்டம் எதனால் தோற்றுப்போனது ?

 

 

இனி நாங்கள் ஊடகங்களில் போலி மருத்துவர் , போலி மருந்து , போலி வைத்திய சாலை போன்ற சொற்களைக்கேள்விப்படப்போகின்றோம். சினிமாக்களில் வருவதைப்போல  வயிற்றுக்குள் கத்தியையோ , மணிக்கூட்டையோ வைத்து தைக்கும் சுவாரஸமான செய்திகள் அதிகரிக்கப்போகின்றன.

இதுவரை தென்னாசியாவின் தரமான மருத்துவ சேவை நிலவும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மருத்துவ சேவைகளின் கட்டிறுக்கமும் தரமும் மிக்க செயற்பாடுகளில் தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய முதலாளித்துவ மருத்துவர்களின் உற்பத்திக்கூடங்களுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனநாயக சோசலிசகுடியரசின் நீதித்துறை அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது இதனை இன்னொரு வகையில் சொன்னால் தரமற்ற மருத்துவத்தின் இடைவருகைக்கு எதிராக போராடிய இலங்கை மருத்துவ உலகம் தனது போராட்டத்தில் தோற்றுப்போயுள்ளது.

ஒரு நிஜமான மக்கள் போராட்டம் என்பது  சின்ன அசைவினைக்கூட ஏற்படுத்தாமல் எப்போதும் தோற்றுப்போகாது , அது குழாயில் தண்ணீர் வரவில்லை என்பதில் தொடங்கி பெரும்  விடுதலைப்போராட்டம் வரை பொருந்தும், அசலான ஒரு மக்கள் போராட்டத்திற்கு கண்முன்னே உருத்திரளும் வெற்றியென்பது கிடைக்காமல் போகலாம் ஆனால் அது முழுவதுமாக இறந்து போகும் ஒன்றல்ல. அதன்  தொடர்ச்சியென்பது இருந்தபடியே இருக்கும். அதன் ஒற்றைப்பொறியேனும் மீண்டும் ஒரு பெரு நெருப்பை தனக்குள் வைத்தபடி காத்திருக்கும். ஆனால் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தனியார் மருத்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பது இவ்வளவு மோசமாக கண்முன்னே நீத்துப்போக என்ன காரணம் ?

காரணம் மிக சிம்பிளானது , போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படாமல் இருந்ததாகும். ஆனால் இவ்வாறு ஒற்றை வரியில் முடிந்து போகுமளவிற்கு ஒரு போராட்டத்தை , அல்லது எதிர்க்குரலை மக்கள் மயப்படுத்துவது என்பது அத்தனை சுலபமில்லை. அதற்கு வெறும்  உரப்பான குரலும் , பதாகைகளும் மட்டும் போதாது. அது சிந்தனை உழைப்பையும் உடல் உழைப்பையும் கொண்டு ஒரு ஆத்மார்தமான மக்கள்குரலாக , மக்களின் எதிர்ப்பு வடிவமாக வெளிப்படுத்தப்படவேண்டியதொன்றாகும்.  அது ஒரு சமூக வாழ்க்கை முறைமையுமாகும்.

தனியார் மருத்துவ கல்வியின்  வருகைக்கு எதிராக போராட வேண்டும் என்று முடிவெடுத்த , இலங்கை முழுவதும் உள்ள குழுக்கள் தாங்கள் ஏன் தோற்றுப்போனோம் என்பதை இப்போது ஆராய வேண்டும்.

இது மாதிரியான தனியார் மருத்துவ கல்லூரிகள் என்பவை வெறும்   சிறு குழுமத்தால் இயங்கும் அமைப்புக்கள் அல்ல , வெளித்தோற்றத்தில்தான் அது அவ்வாறு தெரியும் , உண்மையில் பெரும் தனியார் கம்பனிகள் என்பவை இந்த அரசினால் காவல் காக்கப்படும் பொன் முட்டை போடும் வாத்துகள். அவை ஒப்பீட்டளவில் குழந்தைகள் போல் தோன்றலாம் , ஆனால் அவை அரசின் குழந்தைகள். அவற்றை எதிர்த்து இல்லாமல் செய்ய மக்கள் குரலால் மட்டுமே முடியும் , அந்த மக்களின் கூட்டுக்குரலை எப்படி உருவாக்குவது என்பதை அறியாமலே தோற்றுப்போயாகிவிட்டது .மக்களின் குரலை  திரட்டுவது என்பது சினிமா ஒன்றை பார்க்க மக்களை அழைப்பது போலில்லை , அது ஒரு வகையான  வாழ்க்கை முறை. அந்த வாழ்கை முறையை கடைப்பிடித்து மக்களை திரட்டுவதில் போராட்டக்காரர்கள் தவறிவிட்டார்கள். ஏன் மக்கள் நமக்காக வரவில்லை. மக்களுக்கு ஏன் இது அவர்களுக்கான போராட்டம் என்று புரியவில்லை ? ஏனென்றால் மக்களுக்கு அந்த பிரச்சினையை புரிய வைக்க கூடிய மக்களுடன் உரையாடக்கூடிய மொழியை நாம் கொண்டிருக்கவில்லை.

அரச மருத்துவ கல்வி அரச மருத்துவ சேவையில் இருப்பவர்கள் இந்த பிரச்சினையை மக்களிடம் சொல்வதற்குரிய ஆன்ம பூர்வமான ,  மனத்தினைகொண்டிருந்தார்களா ? அதற்குரிய வாழ்க்கை முறை போராட்ட காரர்களிடம் இருந்ததா ?

இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பிரதானமானவர்கள்  இலங்கை அரச  மருத்துவக்கல்வித்துறையில் இருந்து அரச மருத்துவ துறைக்குள் நுழைந்தவர்களும் நுழையப்போகின்றவர்களும். குறிப்பாக பலகலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள். அதாவது பிரச்சினையின் வீரியத்தை அசலாக விளங்கிக்கொள்ளக்கூடிய தரப்பு. இத்தரப்பு என்பது சமூக மட்டத்தில் மிக  மதிப்பு மிக்க உயர் குழாமாக தங்களைக் கருதிக்கொள்ளும் அமைப்பு. “டொக்கரிட்டையும் வக்கீலிட்டையும் பொய் சொல்லகூடாது” என்றும் அளவிற்கு மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு குழாமாக அது இருக்கின்றதா?. அப்படிப்பட்ட ஒரு குழாம் அழைப்பு விடுத்தும் ஏன் மக்கள் வரவில்லை ? உண்மையில் மக்களிடத்தில் மருத்துவர்கள் சேவை வழங்குனர்களாக கருதப்படுகின்றார்களா?

தனிப்பட்டு மக்கள்  மருத்துவர்களை தற்காலத்தில் எப்படிப்பார்க்கின்றனர் என்பதனை மருத்துவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். எனக்குத்தெரிந்து மருத்துவர்கள் என்போர் மக்களைப்பொறுத்தவரை வியாபாரிகளே. முன்பு இலவச மருத்துவம் அல்லது மக்கள் நலன்புரி மருத்துவமாக இருந்த அரச மருத்துவம் மக்களால் , போற்றுதலுக்குரிய மதிப்புக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால் அது உலக மருந்து மாபியாக்களின் ஏஜண்டுகளாகவும் , பணம் தனியார் மருத்துவ மனைகளின்  கைக்கூலிகளாகவும் மக்கள் மருத்துவர்களைக் கண்டுகொண்டார்கள்.

அரச மருத்துவ மனைகளில் லைனில் நின்று காணமுடியாத வைத்தியர்களை இலகுவாக  தனியார் கிளின்க்குகளில் மக்கள் கண்டுகொண்டார்கள் , அரச மருத்துவமனைகளில் சிடு சிடுக்கும் , இறுக்கமான முகங்கள் தனியார் மருந்தகங்களில் புன்னகையுடன் அவர்களை வரவேற்றன. மக்களுக்கு மிக நெருக்கமாக இருந்த வைத்தியர்களையும் மக்களையும் ஏசி போட்ட கார் கண்ணாடிகள் பிரித்தன. வைத்தியர்கள் ஒரு சேவை சார் தொழிலாக இல்லாமல்  ஒரு தனியான  முதலாளித்துவ வர்கமாக மாறினார்கள். எங்கோ ஒரு சில மருத்துவர்களை தவிர சேவை நிலையில் இருந்த மருத்துவம வியாபார நிலைக்கு மாறியது. மக்கள் ஒரு பலசரக்கு கடை முதலாளியிடம் நல்ல அரசியை வாங்கி விடவேண்டும் என்ற கரிசனையுடனான உரையாடலையே மருத்துவர்களோடும் மேற்கொள்ள தொடங்கினர் , மக்களின் மனங்கள் இப்படியிருக்க தீடிரென்று மருத்துவர்கள் மக்களுக்கு பிரச்சினை வரப்போகின்றது , ஏழைகள் பாதிகப்படப்போகின்றார்கள். என்றால் மக்கள் நம்பிடுவிடுவார்களா என்ன ? எக்ஸ்ரே மிசின் பழுதாகிப்போனால் மக்கள் பாதிப்பப்படுவார்கள் என்று நீங்கள் அரசிடம் எக்ரே மிசின் வேண்டும் என்று போராடியிருக்கிறீர்களா? சிம்பிளாக துண்டு சீட்டில் ஆயிரக்கணக்கில் வெளியில் எக்ஸ்ரே எடுத்துவரச்சொல்லி அனுப்பி விடுகின்றீர்கள்.  சில லட்சம் முதலுடன் இயங்கும் தனியார் மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்து அரச மருந்தகத்தில் இல்லை என்று ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை , சீட்டெளுதி வெளியில் வாங்கச்சொல்கின்றீர்கள் ?  ஏன் இது மக்கள் பிரச்சினையில்லையா ?

சரி மக்களை விட்டு விடுவோம் மருத்துவ துறையையே எடுத்துக்கொள்வோம் , மருத்துவ துறைக்குள்ளேயே மருத்துவர்கள் ஒரு வர்க்கமாகத்தானே தொழில்படுகின்றார்கள். தாதிகள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று போராடும் போதோ , மருத்துவ துறை சார் விளிம்பு நிலை தொழிலாளிகள் தங்கள் பிரச்சினைக்காக போராடும் போது ஒற்றைக்குரலாவது மருத்துவர்கள் கொடுத்திருக்கின்றார்களா ?

அடிப்படையில் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள் , தனியார் மருத்துவ கல்லூரிகள் வருவது மக்களுக்கு ஆபத்துதான் . ஆனால் அதை ஏன் மருத்துவர்களால் மக்களிடம் சொல்லி மக்கள் குரலை திரட்டமுடியவில்லை என்றால் , தீடீரென நீங்கள் மக்களுக்காக குரல் குடுப்பதன் பின்னனியில் உள்ள சுயநலம் மட்டுமே. உங்களுடைய தொழில் பாதிக்கும் என்ற  பயம் மட்டுமே. உங்களுடைய  உயர்குழாம் நிலை , மிகச்சுலபமாக பகிர்ந்துகொள்ளப்படப்போகின்றதே என்ற கவலை மட்டுமே.  அதனால் இந்த விடயத்தை மக்களுக்கு புரியும் குரலில் உங்களால் பேச முடியவில்லை. அதற்கான வாழ்க்கை முறை பெருவாரியான மருத்துவர்களிடம் இல்லை. இப்படியிருக்க மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டட்தை எப்படி மருத்துவர்களாலோ அல்லது மருத்துவர் ஆகப்போகின்றவர்களாலோ உருவாக்க முடியும்.

துறைசார்ந்தோ , துறைக்கு வெளியிலோ மக்கள் போராடும் போதும் , அல்லல்படும்  போதும் ஒரு சில மருத்துவர்களை தவிர பெருவாரியான மருத்துவர்களின் பொதுக்குரல் எங்காவது ஒலித்ததுண்டா ?

வன்னியில் இருக்கும் போது , போர்க்காலங்களில் சம்பளம் கூட வாங்காமல் இயங்கிய ஏராளம் மருத்துவர்களைப்பார்த்திருக்கிறேன். இங்கும் சேவை நோக்கோடு வேலை செய்யும் , சமூக அக்கறைகொண்ட மருத்துவர்களை எனக்குத்தெரியும் இங்கே அவர்களின் அளவு என்பது மிகச்சொற்பமானதுதான். ஆனால் பெருவாரியாக மருத்துவத்துறை மக்களின் ஆன்மாவில் இருந்து மிகத்தொலைவாகவே இருக்கின்றது.

அடுத்து மருத்துவர்கள் ஆகப்போகின்றவர்களும் இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களுமான மருத்துவ மாணவர்களை பார்க்கவேண்டும்.  யாழ்ப்பாணத்தையும் யாழ்ப்பாண பல்கலைககழகத்தையும் சேர்ந்த மாணவர்களை எடுத்துக்கொள்வோம் . முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தில் மருத்துவ பீடத்தின் இயங்கு முறைமை எப்படிப்பட்டது என்பதனை விளங்கிக்கொண்டால் , அவர்களால் ஏன் மக்களை திரட்ட முடியவில்லை , சக பீடங்களை சேர்ந்த மாணவர்களைத் திரட்ட முடியவில்லை என்பது விளங்கும்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தினைப்பொறுத்தவரை மருத்துவ பீடம் என்பது அமைந்திருக்கும் இடத்தாலும் சரி வளத்தாலும் சரி , மாணவ மனநிலையாலும் சரி  தனியாக தன்னை தகவமைத்துக்கொண்ட ஒன்று. யாழ் பல்கலையைப்பொறுத்தவரை மருத்துவ பீட மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் எந்த போராட்டத்திலும் பங்குபற்றியது கிடையாது. குறைந்த பட்சம் ஒரு அறிக்கையைக்கூட விடுவதில்லை. சக பீட மாணவர்களுடன் பழகுவதோ கிடையாது. பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட போதும் கூட தனிப்பட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலரைத்தவிர பெரும்பான்மையான மாணவர்கள் லீவு எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு போய்விட்டனர். கேட்டால் படிப்பு , அசெய்ன்மெண்ட் , கஸ்ரம் , இது மெடிக்கல்  சும்மா இல்லை என்பார்கள்.

சுதேச மருத்துவ முறைகளான சித்த மருத்துவ  , யுனானி மருத்துவ துறைகள் பல்கலைக்கழகத்திலும் சரி , வெளியில் வேலை செய்வதிலும் சரி பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.  பட்டம் பெறுவதில் தொடங்கின் தொடர்ச்சியாக தங்களின் பிரச்சினைகளுக்கு வலிமையான குரலற்று இருக்கின்றன, அவற்றிற்கு நீங்கள் குரல் கொடுத்து இருக்கின்றீர்களா ? இப்போது எந்தமுகத்தை வைத்துக்கொண்டு அந்த மாணவர்களின் முன் போய் நின்று போராட வாருங்கள் என்பீர்கள் ?

இப்படியிருக்க எப்படி பல்கலைக்கழகம் மருத்துவமாணவர்களின் குரலைக்கேட்கும். ஒரே பல்கலைககழகத்தில் படிக்கும் மாணவர்கள் சுடப்பட்ட போது கூட தெருவுக்கு இறங்காதவர்களின் , ”ஐய்யகோ ஏழைகள் பாதிக்கப்படுவார்காள் ” “போலிமருத்துவம் பாதிக்கப்படும்” என்ற  கோசங்களை நம்புமளவிற்கு பல்கலைக்கழக மாணவர்களும் சரி மக்களும் சரி முட்டாள்களோ அன்மா அற்றவர்களோ கிடையாதுதானே.

அடிப்படையில் இவ்வகையான விடயங்களாலேயே இந்த போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல் தோற்றுப்போனது. ஊடகங்கள் இதனைக்கவனிக தவறியதற்கும் இதுவே காரணமாக இருக்கும். இலங்கையின் ஊடகங்களே எல்லாதுறைகளுக்கும் முதல் வணிகநிறுவனங்களாக அல்லது அரசியல் பிரசார குரல்களாக மாறியவை. அவை அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்காவிட்டால் , மக்களுக்கா அல்லாமல் தாம் சார்ந்த கட்சிகளுக்கு வாலாட்டி கொண்டிருக்கும். எப்போது போராட்டங்கள் மக்கள் மயப்படுகின்றனவோ அப்போதுதான் ஊடகங்களின் கண்கள் போராட்டத்தின் பக்கம் திரும்பும். இலங்கையைப்பொறுத்தவரை ஊடக தர்மம் , ஊடகங்கள் மக்களின் காவலர்கள் என்பதெல்லாம்  வெறும் மிகைக்கற்பனைகள்தான்.

ஒரு மக்கள் போராட்டம் என்பதும் சரி மக்கள் எழுச்சி என்பதும்சரி அரசியல் பயின்றவர்களாலோ புத்திஜீவிகளாலோ மட்டும் ஒழுங்கமைக்கப்படுவதில்லை. அது கலைஞர்களாலும் , எழுத்தாளர்களாலும், மாணவர்களாலும் , சிந்தனைக்குழாங்களாலும், செயற்பாட்டாளர்களாலும் ஒழுங்கமைக்கப்படுவது. அவர்கள் உங்களின் சார்பில் பேசுவதற்கு பணமோ , பதவியோ   தேவையில்லை , மக்களின் ஆன்மாவை பேசத்தக்க குரலில் நீங்கள் அவர்களுடன் உரையாடினால் போதும். உள்ளே சொந்த பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அதனை மக்களின் பெயரால் தீர்த்துகொள்ள முயன்றால் அவர்கள் உங்களை உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.

இவ் அடிப்படையான காரணம் தவிர , போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் , அதுதொடர்பான சிந்தனை செயற்பாடு என்பன மருத்துவ பீட மாணவர்களுக்குன் அறவே கிடையாது ,  ஏசி அறைக்குள் நோட்ஸ்சை ஒப்பித்து விட்டு இருந்தால் மக்களின் பிரச்சினைகளைமட்டுமில்லை , சொந்த பிரச்சினைகளை கூட விளங்கிக்கொள்ள முடியாது. சமூக மட்டத்தினுள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவம் ஒரு பணம் கொழிக்கும் பிஸினசாக உலகம் முழுவதும் மாறிக்கொண்டிருக்கின்றது. உலக மருந்து மாபியாக்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை தங்கள் ஏஜெண்டுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. அதற்கு இந்த முதலாளித்துவ அரசும் உடந்தை. உங்களுடைய மக்களில் இருந்து உங்களை பொருளாதார வர்க்க பிரிப்பினால் பிரிக்கின்றன. சேவை நிலையில் இருந்து மனிதர்களை சுரண்டும் பெருங்கம்பனிகளாக மருத்துவர்கள் மாறிப்போவது எவ்வளவு பெரிய சமூகப்பிறழ்வு.

சட்டரீதியாக இதனை எதிர்கொள்வதற்கு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களின் அறிவுப்புலத்தின் உதவியோ , போராட்டத்தை முன்னெடுக்க அவர்களின் ஆலோசனைகளோ பெறப்பட்டிருக்கலாம் . அது நடந்ததாகத் தெரியவில்லை. அடுத்து  இலங்கை முழுவதும் இயங்கும் சமூக செயற்பாட்டு இயக்கங்கள் , சிவில் அமைப்புக்கள்  என்பனவற்றை போராட்டத்துக்குள் உள்ளீர்த்திருக்கலாம் , அவை இருக்கின்றனவா என்று கூட தெரியாமல் பல்கலைக்கழக வளாகத்தினுள், சமூக அறிவே இல்லாமல் இருக்கும் மாணவர்களாய் இருந்து எந்த பயனுமில்லை.

இந்த தனியார் மருத்துவ கல்லூரிகளின் வருகையில் உள்ள பிரச்சினைகளைப்பற்றி தாங்கள் விளங்கிக்கொண்டவற்றை மக்களுக்கு சொல்ல ஒரு பதாகை வசனத்தைக்கூட எளிமையாக எழுதத்தெரியாமல் மருத்துவராகி என்ன செய்யபோகின்றீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

இதே மருத்துவபீடத்தில் இருந்து போராடப்போனவர்கள் இருக்கின்றார்கள் , மக்களின் பொருட்டு குண்டடி பட்டவர்களை பாதுகாத்து குணமாக்கியவர்கள் இருந்திருக்கிறார்கள். கொடும் அடக்குமுறைக்கு எதிராக மக்களின் குரலாக நின்று குண்டடி வாங்கியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த நோய்க்கு இன்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று மட்டும் அறிந்தவர்கள் அல்ல , அவர்கள் மக்களை நேசித்தார்கள் , சமூக அடக்குமுறைகளைகளையும் சுரண்டல்களையும் எதிர்த்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மக்கள் நின்றார்கள் , பரஸ்பரம் நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார்கள் , அவர்கள் மருத்துவர்களாய் மட்டுமில்லாமல் மனிதர்களாய் வாழும் வகை அறிந்திருந்தார்கள் . மருத்துவத்தில் அவர்கள் கலைஞர்கள் போல் இருந்தார்கள்.

சமூகத்திற்கும் உங்களிற்கும் இடையில் உள்ள இடைவெளியை விளங்கிக்கொள்ளுங்கள். ஏன் அந்த இடைவெளி வந்தது எனபதனை யோசியுங்கள். நீங்கள் சமூகத்தில் இருந்து பிரிந்து ஒரு உயர்குழாமாக மாறிப்போனதன் அபத்தத்தை மனம் கொள்ளுங்கள்.

ஆத்தாமார்தமாக இந்த பிரச்சினையை சுயநலம் இல்லாமல் அணுகத்தக்க வாழ்க்கை முறையினை மருத்துவர்கள் கொண்டிருந்திருந்தால் , இலங்கை அரசை உலுப்பி விடக்கூடிய சக்தி மருத்துவர்களிற்கு இருக்கின்றது. இலங்கை முழுவதும் இருக்கும் மருத்துவர்களும் சரி மருத்துவ மாணவர்களும்சரி ஒரு மணிநேரம் பணி செய்ய மாட்டோம் என்று ஆத்மார்த்தமான சமூக அக்கறையுடன் இந்த முதலாளித்தவ அரசினை எதிர்த்து குரலெழுப்பி வீதிக்கு வந்து பாருங்கள்  அங்கேதான் மக்கள் உங்களுக்காக  காத்திருக்கிறார்கள். அப்போது உங்களால் மக்களுக்கு புரிகின்ற மொழியில்  அவர்களுடன் பேச  இயலுமாயிருக்கும்.

-யதார்த்தன் –

Jan 23

ஈழத்தின் ஜல்லிக்கட்டுக்கோசங்களை ஏன் எதிர்க்கிறேன்?

 

மொழி அபிமானம் , தேச அபிமானம் , இன அபிமானம் 

இல்லாது இருப்பதே ஈடேறுவதற்கான வழி.

-பெரியார் –

மேற்படி பெரியாரின் கருத்து நிலையில் இருந்தே நான் என்னுடைய வாதத்தை தொடங்க நினைக்கிறேன்.  உண்மையில் எனக்கு என்னுடைய மொழியையை அதுசார்ந்த அடையாளங்களையோ , இனத்தைச் சார்ந்த அடையாளங்களை கண்டறியவும் , அதன் தனித்தன்மைகளை ஆராயவும் அது பற்றி எழுதவும்  அவற்றை பாதுக்காக செயல்களை உருவாக்கவும் இருக்கும்  காரணம் , என்னுடைய சமூகம் இன்னொரு சமூகத்தின் பலம் மிக்க குழுவொன்றால் அடக்கப்படுகின்றது , சுரண்டப்படுகின்றது என்பதும் அது நவதாராளவாதம் முதலான பொருள்நிலை அந்நியப்பண்பாட்டினால் நிலத்துக்கு ஒவ்வாத விடயங்களை பின்பற்றிச்செல்வதை முடிந்தளவு கட்டுப்படுத்துவதுமாகும்

இங்கே என்னுடைய  சமூகம் பிறிதோர் இனக்குழுவாலோ  முதாளித்துவ அலகுகளாலோ ,  அடக்கப்படவோ சுரண்டப்படவோ இல்லையெனில் என்னுடைய   இனம் , மொழி , பண்பாடு போன்றசிக்கலான தன்மைகளுக்குள் போய் அடையாளங்களை கண்டுபிடிப்பதில் என் நேரத்தை செலவழிக்க மாட்டேன். இந்த நாட்டில் பிறிதொருவனின் சுதந்திரத்தில் தலையிடாத  எல்லோரிடமும் அன்புள்ள ஒரு வாழ்வு முறை இருக்குமாயின் எனக்கு மரபோ அடையாளமோ  அவசியமற்றது.

ஆனால் ஈழத்தினைப் பொறுத்தவரையில் பேரினவாதம் வரலாற்றையும் , மரபினையும் , மொழியையும்  நல்ல அறிவுத்தளத்திலும் சரி , கோசமாகவும் சரி  எங்களுடைய சமூகத்திற்கு எதிராக முன் வைக்கின்றது. அது இந்த நிலத்தின் வாழ்வியலுக்குரித்துடையவர்கள் நாமல்ல என்கின்றது , எங்களுக்கு நிலத்திலிருந்து எழும் அடையாளம் ஒன்று இல்லையென்கிறது, அது போரினை ஏவி , வன்முறையை நிகழ்த்தி மனித உயிர்களை மட்டுமல்ல மரபடையாளங்களை அழித்து சென்றது , எஞ்சியதை வேறுவடிவங்களில் அழிக்கவும் முயன்றுகொண்டிருக்கின்றது . எனவே அது அழிப்பவற்றை , அழிக்க முயல்பவற்றை காப்பாற்ற நினைக்கிறேன். அதற்காக ஒரு எதிர்பு வடிவமாக நன்கு அறிவுத்தளத்தில் உருவாகிவரும்  மரபுரிமை , மொழிநிலை மீதன்மை என்பவற்றை முன்வைக்க நினைக்கிறேன். குறிப்பாக  “வந்தேறுகுடிகள்” என்று தமிழ் பேசும் சமூகத்தை  அடக்குமுறையாளர்கள் சொல்லும் போது  இந்த நிலத்தில் எனக்கொரு வரலாற்று வாழ்வு இருந்ததற்கான ஆதாரங்களை அறிவியல் பூர்வமாகத் தேடித்  திரட்டவும் முன்வைக்கவும்  என்னுடைய மக்களை பழக்கும் வேலையை செய்ய வேண்டும்.  அது வெறும் கூச்சல்களால் அல்ல , எப்படி சிங்கள பேரினவாத அரசு பாடநூல் ஊடாகவும் , ஊடகங்கள் ஊடாகவும் , இலக்கியம் , சினிமா போன்றவற்றின் ஊடாகவும்  அவற்றை முன் வைக்குதோ அவற்றை அடிப்படை நிலையில் இருந்து எதிர்க்க அறிவு நிலைப்பட்ட எதிர்ப்பு வடிவமாக மரபு , மொழி போன்றவற்றை நான் கொள்ளநினைக்கிறேன்.

இதுவே மரபுகள் தொடர்பில் இனவுணர்வு  ,மொழியுணர்வு தொடர்பில் எனது நிலைப்பாடாகும்.  என்னுடைய  இனத்தை ஒரு ஆதி இனம் , என்னுடைய மொழி தூயமொழி , என்னுடைய மரபென்பதே அதி உன்னதமானது என்ற கோசங்களை நான்  தமிழ்ச்சமூகத்தின் தாழ்வுச்சிக்கலாக மட்டுமே பார்க்கின்றேன்.

என்னுடைய சமூகம் அடக்கப்படாவிட்டால் , அல்லது சுரண்டப்படாவிட்டால் , நான் நேசிக்கும் எனது மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படாவிட்டால், மகிழ்ச்சியாக பாடல்களைப்பாடிக்கொண்டும் ,  சந்தோசமாக கதையெழுத்திக்கொண்டும் நான் வாழ்வை அமைத்துக்கொள்வேன்,  எனக்கு அப்போது மொழி , மரபு , இனம் எதுவும்  தேவையில்லை , எந்த மொழிக்காரனும் எந்த இனத்தவனும் என்னுடன் அன்பாயிருக்கிறானோ அவனுக்கு நான் அன்பு காட்டிக்கொண்டே வாழ்ந்துவிடுவேன்.  எனக்கு மொழி என்பதும் சரி மரபென்பதும் சரி  உணர்ச்சிவசப்படவோ கோவப்படவோ எதிர்க்கவோ பயன்படுத்தும் ஒன்றாக இருக்காது , ஏனெனில் அவை எனக்கு வழிபாட்டுக்குரிய புனிதங்கள் இல்லை , அவை எனக்கு கருவிகள் மட்டுமே. அன்பினை பகிர்ந்து கொள்ளமட்டுமே அப்போதுநான் அவற்றை பயன்படுத்துவேன். ஆனால் துரதிஸ்ரவசமாக என்னுடைய மரபும் , மொழியையும் கேள்வுகுள்ளாக்கப்பட்டு எனது சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் போது  அடக்குமுறையை எதிர்க்கும் வடிவமாக மொழி , மரபு , இனவுணர்வு போன்றவற்றை கையிலெடுத்துக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளேன். ஆனால் அதை நான் ஒரு கோசமாகவோ நடைமுறைக்கொவ்வாத புனிதம் , தன்னிகரில்லாதன்மை , வீரம் போன்ற  துதித்தல் அல்லது மிகை உணர்வினால் பீறிடும் ஒன்றாகவைக்க மாட்டேன் , மாறாக நானதை அறிவுத்தளத்தினான எதிர்ப்பு வடிவமாகவே கையாள நினைக்கிறேன். ஏனெனில் கடந்த காலத்தில் விடுதலைப்போராட்டதலைமைகள் மொழி உணர்வு , இனவுணர்வை வெறும் போருக்கு தூண்டும் கொசமாக வைத்து எனது மக்களையும் , கனவுடன் போராடச்சென்ற போராளிகளையும் பலிகொடுத்ததை நான் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

இதுவே எனது மரபு , மொழி , இனம் தொடர்பான நிலைப்பாடு.

இந்த இடத்தில் இருந்துதான்  நான் ஏன்  ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு ஒன்று சேர்தலை  எதிர்க்கிறேன் என்ற கருத்துநிலைப்பாடுகளைத் தொடங்க வேண்டியிருக்கிறது.

ஜல்லிக்கட்டை ஈழத்தில் ஏன் ஆதரிக்க கூடாது என்பதற்கு நான் வைக்க நினைக்கும் எதிர்ப்பு  கருத்து நிலைகளை பிரதானமாக பின்வரும் இரு வடிவங்களின் கீழ் சொல்ல நினைக்கிறேன்

 1. தமிழ் நாட்டு சகோதரர்களின் ஜல்லிக்கட்டிற்கான எழுச்சியை  ஆதரிப்பதற்கான நேரம் இதுவல்ல.
 2. தமிழ்நாட்டின் பண்பாடு, மரபு என்பதும் ஈழத்து பண்பாடும் மரபும் என்பதும் வெவ்வேறானது.
 3. செய்யப்பட்ட ஆதரவு ஒன்றுகூடல் / போராட்டத்தின் அக,புறத்தில் உள்ள அபத்தங்கள் , மற்றும் அதனை ஆரோக்கியமானதொரு எழுச்சியாகக் கருதி சில நண்பர்கள் வைத்த  வாதங்கள் மீது இருக்கும் எனது எதிர்நிலைக்கருத்துக்கள்.

இவற்றில் முதலும் அடிப்படையானதுமான எனது வாதம் இதுதான் , சரியோ பிழையோ  ஈழத்தமிழ்ச்சூழல் என்பது பொருத்தமான தலைமை நிலைகளை இழந்து வேறு வழியில்லாத மொன்னை தலமைகளுடன் சனநாயக இயங்கு பொறிக்குள் இருக்கின்றது.  இந்நிலையில் தமிழ்பேசும் சமூகங்கள் தமது மரபுரிமைள் , வாழ்வுநிலம் , பொருளாதாரம் முதலியன சுரண்டப்படும்  போதும் , அழிக்கப்படும் போதும் எதிர்ப்பதற்கான நேரடியானதோ மறைமுகமானதோ  அமைந்த , பலம் பொருந்திய கட்டமைப்புகளற்றவர்களாக இருக்கின்றனர் , இந்த நிலையில் அறிவார்ந்த தளத்தில் சொற்பஅளவில்  மரபுகளை , அடையாளங்களை மீள் கட்டுமானத்துக்கும்  , பாதுகாப்புக்கும் விழிப்புணர்வின் பொருட்டும்  வேலைகள் நடக்கின்றன. ஆனால் இனவாதச்சூழலினைப்பொறுத்தவரை அரச இயந்திரத்தின் பெரும்பான்மை ஆதரவுடன்  மாகாவம்சம் தொடங்கி வைத்த ஈழத்தமிழர்களை தீவிலிருந்து அகற்றுவதற்கு பெரும்பான்மை சிங்கள சமூகத்தை ஆற்றுப்படுத்தும்   “ வந்தேறுகுடிகள்” என்ற கோசத்தை இனவாதிகள் தற்பொழுது அறிவார்ந்த தளத்திலும் சரி அரசியல் கோசத்தளத்திலும் சரி நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு முன்வைக்கின்றனர்.

அவர்களின் பிரதான வாதங்களில் ஒன்று  நாம் இந்திய மரபின் தொடர்ச்சிகள்  என்பதாகும் . எனவே இந்த பிரசாரத்தை , அடக்குமுறைய எதிர்கொள்ள நாம்  இந்திய , ஐரோப்பிய , சீன , அரேபிய என்று பல பண்பாடுகளின் தாக்கத்திற்கு உட்பட்டாலும் மொழி , மரபு , கலை இலக்கியம் என்று யாவற்றிலும் வாழும் ஈழநிலத்துக்குரிய தனித்துவதத்தை கண்டறிந்துள்ளோம். இதனை  அறிவியல் பூர்வமாக வரலாற்று மரபின்  ஆவணமாக்கல் மற்றும் அறிவு மீள் நிரப்புதல் மூலம்  நிரூபிக்கவேண்டியிருக்கிறோம்.

சுருங்கச்சொன்னால் , பல்வகைமை கொண்ட பண்பாட்டை எல்லாச்சமூகத்தை போலவே கொண்டிருந்தாலும் , எமக்கென இங்கொரு பிரேத்தியேக தன்மை உண்டு என்பதை பலமாக முன் வைத்தலே இப்போது அவசியமாகும்.

ஆனால் அப்படியான முன் வைப்புக்களும் கண்டறிவுகளும் , அறிவார்ந்த தளங்களில் , அடக்குமுறை இடைவெளிக்குள் புகுந்து  அடையாளங்களை மீள கட்டியெழுப்பும் கருத்து – செயல்கள் மெல்ல மெல்ல நடக்கும் போது , சடுதியாக ஒரு நூறு பேர் வீதிக்கு இறங்கி “தமிழேண்டா , we do jallikattu ” என்றால், சிங்கள இனவாதிகளும், இனவாத ஊடகங்களும் மொழி என்ற பெருஞ்சுவற்றால் பிரிக்கப்படும் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கு  நமது கோசத்தையும் ஒன்று கூடலையும் காட்டி “இப்போது நம்புங்கள் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள்தான்” என்று  பிரசாரத்தை தொடங்கிவிடுவார்கள் . எனவே நான் வைக்கும் முதலும் அடிப்படையானதுமான வாதம் தமிழ்நாட்டு சகோதரர்களுக்கு தோள் கொடுக்குமளாவிற்கு தற்பொழுது எங்களுடைய தோள்களில் இடைவெளியில்லை என்பதாகும் , நாம் சுமந்து செல்லவேண்டிய  சேடமிழுக்கும்  எமது மரபின் உடல் இன்னும் தோள்களில் கிடக்கின்றது. இந்த நேரமென்பது தமிழ் நாடு ஈழசகோதரர்களுக்காக குரல் கொடுப்பது என்பதுவேறு , ஈழத்தவர்கள் தமிழ்நாட்டினோடு கொண்டிருக்கும் அடையாள தொடர்புகளை கோசமிடுவது என்பது வேறானது.

இதன் அடிப்படையில் ,  கண்னுக்கு முன்னால் சொந்த அடையாளமும் மரபும் பறிபோகும் போது , சமூகத்தை கூட விட்டுவிடலாம்  , வீதி அபிவிருத்தி என்ற பெயரிலசொந்த வீட்டின்  நூறுவருசத்து  மதிலை உடைக்கும் போதுகூட கேட்காத நாங்கள்  , அதன் பெறுமதி தெரியாமல் அரசு போடும் நட்ட ஈட்டை வாங்கிக்கொண்டு  அமைதியாக இருந்த நாங்கள் , தீடிரென எழுந்த தமிழ்நாட்டின் சல்லிக்கட்டு எழுச்சியை கண்டுவிட்டு   மீசைகளை ஒட்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம் என்பதன் அபத்தத்தை ஞாபகப்படுத்திக்கொண்டு அடுத்த வாதத்திற்குச்செல்கிறேன்.

முதலில் நாம் எப்படி இந்த கவன ஈர்ப்பின் பால் ஈர்க்கப்பட்டோம் என்று பார்ப்போம் ,  எல்லோருக்கும் தெரிந்ததைப்போல சினிமாவிலும், எப்போதாவது செய்திகளிலும் கேள்விப்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சினை தமிழ்நாட்டு போரட்டக்காரர்களும் , நட்சத்திர பிரபலங்களாலும்  , இணையவாசிகளாலும் பெருமெடுப்பில் அலசப்பட , அது ஒரு போராட்ட வடிவமாக மாற , எப்படியெல்லாம் , சினிமா நடிகரின் திருவுருவ படத்திற்கு பால் ஊத்தும் பண்பாடு எமக்குள் வந்து சேர்ந்ததோ அதே வழியில் நாம் அருட்டப்பட்டோம்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் முன் வைத்த “தூய இனம் ” தமிழேண்டா கோசங்கள் , எங்களை அருட்டூட்டின, ஆனால் நாம் அந்த அருட்டுணர்வை கொஞ்சம் கூட சிந்தனைத்தளத்தில் அணுகினோமா என்று கேட்டால்  , இல்லவேயில்லை.

உண்மையில்  தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த  எழுச்சி என்பது ,  ஜல்லிக்கட்டினால் மட்டும்  தோன்றிய எழுச்சியில்லை , அது வெறுமனே பீட்டா போன்ற  மோசமான அமைப்புக்களை  எதிர்க்க மட்டும் சடுதியாய் கிளம்பியதல்ல , உண்மையில் இத்தனை வருடகாலமாக தமிழ்நாட்டு  அரசியலும் சரி ,  இந்திய தேசிய அரசியலும் சரி ஏற்படுத்திய மோசமான  அரசியல் பொருளாதார சமூக  ஏமாற்றுதல்கள் , சுரண்டல்கள் , புறக்கணிப்புக்கள் என்று சனநாயக  விரோதச்செயல் கள் அனைத்தின் மீதான மக்களின்  குறிப்பாக இளைஞர்களின்  கூட்டு நனைவிலியில் திரண்டிருந்த பெரும் கோபத்தின்  மீது இடப்பட்ட ஒரு சிறு பொறியே  ஜல்லிக்கட்டு பிரச்சினை , அந்த மனநிலை வெறும் சல்லிகட்டாலோ , சமூக வலைத்தளங்கலாலோ மட்டும் கட்டப்பட்டதல்ல , அது இதுவரை காலமும் அங்கு எழுந்த பிரச்சினைகளை , எழுத்தாகவும் , சினிமாவாகவும் , ஏனைய கலை வடிவங்கள் ஊடாகவும் , எல்லாவற்றிற்கும் மேலாக நேரடியான சமூக அனுபவங்களின் கூட்டு நனவிலியின் ஊடாகக் கட்டப்பட்டதாகவிருக்கின்றது. அதைச் செய்வதில் சமூக வலைத்தளங்களும் அவற்றின் ஹாஸ் டாக்குகளும் உதவிய இடம் என்பது இறுதி நிலைகள்தான். தவிர அந்த எழுச்சியை விளங்கிக்கொள்ள பல திசைகளின்  அறிவார்ந்த   சமூக வாசிப்பு முறைகளூடாக இனி வரும் நாட்களில் அணுகப்படும் என்று நினைக்கின்றேன்.

அத்தோடு இனி வரும் நாட்களில் தூலமான அரசியல் கொள்கையோ தலைமைநிலைகளோ இல்லாமல் நடந்த அந்த போராட்டத்தை  எப்படி இந்திய தேசிய அரசியலும்,  மாநில அரசியலும்ம் கையாண்டு  இந்த எழுச்சியின் பயனை அறுவடைசெய்யப்போகின்றன என்பதை இன்று  மேரினாவில் தொடங்கியிருக்கும் வன்முறையில் ஆரம்பித்து அவதானிக்கமுடியும் .நமக்கு அதுமிகத்தொலைவான பிரச்சினை.விட்டுவிடுவோம்.

ஆனால் எந்த அடிப்படையிலும் தமிழ்நாட்டு மனநிலையையோ , ஜல்லிக்கட்டைப்பற்றியோ தெரியாமல் நாங்கள் , ஆதரவு கூடல் என்று தொடங்கியதற்கு   90 % மானவர்களின் காரணம் சுயவெளிப்படுத்தல் , பச்சையாகச்சொன்னால் ,  வலைத்தள ரெண்டில் இணைந்து கொண்டு ஷோ காட்டுதல் என்பதும் , அத்தோடு  இந்த பிரச்சினைக்கு குரல் குடுப்பதாலோ கோசம் போடுவதாலோ இலங்கை பொலிசோ  , இராணுவமோ உங்களை சட்டைகூடச்செய்யாது என்பதால் , safe zone க்குள் நின்று , வழமையாக ஏதும் பிரச்சனை என்றால் கடை , தெருவெல்லாம் பூட்டிவிட்டு வீட்டில் நின்று கொண்டு ஹர்த்தால் போராட்டம் செய்வதைப்போல மிகப்பாதுகாப்பாக மேற்கொள்ளகூடிய  எதிர்ப்புக்கோசக்கூட்டம் என்பதாலும் , செல்பி போடலாம் என்பதாலும் நாமெல்லாம் ஒன்று கூடினோம். இது அவரவர் சுதந்திரம் தானே அதை நீ அப்படி கேட்கலாம் என்றால் , என்னில் கோவப்படவும் உங்களுக்கு உரிமையில்லை.

இதை படித்ததும் டக்கெண்டு கண்கள் சிவக்க உங்களுக்கு  மீண்டும் கோவம் வருமேயானால் , நான் கேட்கும் ஒரே கேள்வி “இந்த கோவம் இங்கே மரபுகள் கண்னுக்கு முன்னால் அழிக்கப்படும் போது ஏன் தைரியம் வரவில்லை ? ஏன் உணர்வு கிளர்ந்து எழவில்லை என்பதாகும்” அப்படியெனில்   ஒன்று கூடலில் நாம் போட்ட வீரக்கூச்சல்கள் , எவ்வளவு சிரிப்பை வரவைக்க கூடியவை. ஏனினில் கிறீஸ்பூதமென்று ஒரு அந்நியன் வீட்டுக்குள் அல்லது பக்கத்து வீட்டுக்குள் நுழையும் போது வீட்டைப் பூட்டி விட்டு பதுங்கிய எமது வீரத்தை பற்றி நாமே புளகாங்கிதமடைந்துகொள்ள வேண்டுமல்லவா.

எப்படி இந்த போராட்டத்தில்  ஷோ காட்டும் மனித இயல்பு உளவியலுடன்  போய்  நின்றோமோ , அதேபோல் மரபுரிமை சார்ந்து இயங்குபவர்கள் , நல்லிணக்கம் , விடுதலை , பற்றி கதைக்கும் அறிவார்ந்த தளத்தில் சிந்திக்கும் எனது  உற்ற நண்பர்கள் இந்த ஒன்று கூடலுக்கு புறப்பட்டுச்சென்றார்கள்.  அவர்களிடம் இதுபற்றிக்கேட்கும் போது ,

 1. இது ஒரு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் மட்டுமே.
 2. பொதுவெளிக்கு மக்களை இப்படியான போராட்டங்களுக்கு அழைத்துவரவும் அவர்களை மரபுரிமை போன்ற விடயங்கள் பற்றி உரையாடவும் வைக்க , எதிர்காலத்துக்கான ஒரு தொடக்கப்புள்ளியாக கையாளலாம் என்றும்

இரண்டு கருத்து நிலைகளை முன் வைத்தார்கள் , ரியாலிட்டியில் இதுதான் நிலைமை என்பதை அவர்கள் எனக்குச்சொன்னார்கள். வேறு வழியில்லை இப்படியான மனநிலையில்தான் இளைஞர்கள் இருப்பார்கள் அவர்களை கொண்டே அடுத்தகட்டத்திற்கு நகரலாம் என்பது அவர்களுடைய  வாதம்.

ஆனால் அவர் முதலில் சொன்ன கவனயீர்ப்பு ஒன்று கூடல் என்பதிலும்சரி பின்னர் சொன்ன தொடக்கப்புள்ளி என்பதிலும் சரி நிறைய அபத்த முரண்களைக்காணக்கூடியதாகவிருந்தது.

முதலாது கவனயீர்ப்பு ஒன்று கூடலிற்கு அழைத்த  போஸ்ரர்களில் அந்த முரண்பாடுகள் தொடங்கின.

அவ் ஒன்று கூடலில் முதலில் வெளியிடப்பட்ட போஸ்ரரில் இருந்த தமிழேண்டா என்ற வாசகம் , வழமையாக  லீட்டர் கணக்கில் பாலாபிசேகம் வாங்கும் விஜயின் போஸ்ரர்களில் இருப்பது போல் தோன்றியது , அந்த போஸ்ரலில் இருந்த ஒரே ஆறுதல்  ,  we support jallikattu  எனபது மட்டுமே , சரி ஆதரவுதானே சொல்லப்போகின்றார்கள் என்று பார்த்தால் அந்த போஸ்ரரை பகிர்ந்த பெரும்பாலானவர்களின் இடுகைகளில் “எங்களுடைய மரபு அழிக்கப்படுவதற்கு எதிராக போராடுவோம் ” “தமிழர் மரபு அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவோம்”  என்பதோடு  வழமையான தூய இன , புனித இனம் போன்ற  கோசங்களும் இருந்தன.  ஜல்லிக்கட்டு ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் எப்போது மரபானது என்று தெரியவில்லை, மலையகத்தமிழர்கள் , யாழ்ப்பாணத்தமிழர்கள் , புலம்பெயர் தமிழர்கள் என்று அனைவருக்கும் ஜல்லிக்கட்டு மரபா என்று வியந்து போனேன். அதற்கிடையில் அடுத்த போஸ்ரரில்  we do jallikaddu  என்று போட்டிருந்தார்கள் , விசாரித்த போது  அது ரெண்டிங்கில் ஆதரவை இணைப்பதற்கான keylink  என்றார்கள்(!) .சரி போஸ்ரரில் என்ன key link ?  அப்போதே எனக்கு குழப்பம் தொடங்கி விட்டது ,  அதற்குப்பிறகு  நல்லூரி முன் வாசலில்  எங்களுடைய இளைஞர்கள் பிடித்திருந்த வாக்கியங்களும் பேட்டிகளும் என்னை மூர்ச்சிரையாக்கி விடுமோ என்று பயந்து விட்டேன் , அசல் அலங்கா நல்லூர் பிரசைகளாகவே மாறி விட்டிருந்த  நண்பர்களைப்பார்த்தேன். இதைக்கூட ஒரு கும்பல் மனநிலை என்று கடந்து விடலாம்.

ஆனால் அவர்கள் வைக்கும் அடுத்த வாதத்தில் எனக்கு உடன்பாடு அறவே கிடையாது. அதாவது பொது எதிர்ப்பு ஒன்றுக்கு பொது எதிரியொன்றை முன் வைத்து இப்படி இளைஞர்களை திரட்ட முடியாது . இப்படியான இடத்தில் நின்றுதான் அப்படியான இளைஞர்களைத்திரட்ட ஏலும் , சாதி , மதம்  போன்ற முரண்பாடுகளில் இருந்து மக்களை மீட்டுக்கொண்டு வந்து ஒரு பொது எதிரிக்கு முன் நிறுத்த இப்படியான போராட்டங்கள் வேண்டும் என்றார்.

அப்படிப்பார்த்தால் கடந்த காலத்தில் புலி மனநிலையை ஏன் எதிர்த்தோம் ?  புலிகளுக்கும் சரி புலிமனநிலையை எதிக்கும் கிரிஷாந்துக்கும் சரி அரசுதானே பொது எதிரி. அப்படியெனில் அதிகபட்ச மக்கள் ஆதரவினைக்கொண்ட புலிமனநிலையை ஆதரித்தால் மக்கள் கூடியிருப்பார்களே ?  புலிகளும் தூய இனம் , ஆதிமொழி போன்ற கொள்கைகளை  பிரசாரம் செய்துதானே என்னுடைய மக்களின் உணர்வைத்தூண்டி , அவர்களை போர்வெறிக்கு பலிகொடுத்து முடித்தார்கள்.

சாதிய அடக்கு முறையில் அடக்குபவன் அடக்கப்படுபவன் , சமயத்தில் அடக்குபவன் அடக்கப்படுபவன் , வர்க்க அடக்குமுறையில் அடக்குபவன் அடக்கப்படுபவன் பொன்ற சமூக பிறழ்வுகள் அனைத்தையும் தீர்காமல் இருக்கும்  இந்தச் சமூகத்தை பொது எதிரியின் முன்னால் நிறுத்த ஒரே தளத்துக்கு கொண்டுவரலாம் என்றால் , புலிகள் என்ன செய்திருந்தால் என்ன யாரை அடக்கினால் என்ன?  அவ் மனநிலையைக்கொண்டு பொது எதிரிக்கு முன்னால் மக்களை அணி திரட்டலாமே ? ஏன் புலி மனநிலையை எதிர்க்கவேண்டும்.

சரி அதை விட்டுவிடுவோம்

எந்தவித அறிவுத்தளமும் இல்லாமல் வெறும் சமூக வலைத்தள ரெண்டிங் அருட்டுணர்வால் , அல்லது  தமிழ் உணர்வு என்ற பெயரில் கோசமாக மட்டும் வளர்ந்து நிற்கும் உணர்ச்சி கூச்சலின்   பொருட்டு உணர்ச்சிவசப்பட்டு  ஜல்லிக்கட்டு ஆதரவு  ஒன்று கூடலுக்கு வரும் இந்த இளைஞர் கூட்டத்தில் 500 இல் நூறு பேரையாவது  அடுத்த ஈழத்துச் சமூகம் சார்ந்த போராட்டம் , அல்லது கவனயீர்ப்புக்கு கொண்டுவரமுடியும் என்று நினைக்கின்றீர்களா ?

சரி கொண்டு வந்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்,

எங்கே அந்த நூறு பேரையும் கொண்டு யாழ்ப்பாணத்தில் சாதி ஒழிப்பு போராட்டமொன்றை ஒழுங்கு செய்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்  , பொலீஸ் இராணுவபயம் கூடத்தேவையில்லை . முன்பு போல் அச்சுறுத்தல்களும் இல்லை. எங்கே சாதி எதிர்ப்பு  போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டுங்கள் பார்க்கலாம் , அதில் குறைந்தது 20 பேராவது கலப்பு திருமணம் ஒன்றிற்கு தயாராக இருப்பார்க்களா?

டி.தர்மராஜ் பகிர்ந்ததையும் இங்கே ஞாபகப்படுத்த நினைக்கிறேன்

“மரபு குறித்தும் பண்பாடுகுறித்தும் பெருமிதம் கொள்வது மட்டும்தான்  எழுச்சியல்ல அதன் சீர் கேடுகுறித்தும் குற்றவுணர்ச்சி கொள்வதும் எழுச்சியாகும் ”

நமது சமூகத்தில் கண்ணுக்குமுன்னால் இருக்கும் உப பிரச்சினைகளையும்  பிரதான பிரச்சினைகளையும் நோக்கி இளைஞர்களை முன் நகர்த்தக் காலம் இருக்கின்றது. ஆறுவருடங்கள் தான் ஆகின்றது  வன்முறையில் இருந்து மக்கள் மீண்டுவந்து , நாம் உருக்குலைந்து போன சிந்தனைத்தளத்தை இன்னும் கட்டவில்லை ,பாடசாலைகள் சீராக இல்லை , பல்கலைககழகங்கள் சீராக இல்லை , பொருளாதார சமநிலையில்லை , சிந்தனையும் செயலும்  ஒருங்கே நடக்கும் அறிவுநிலைச்சமுதாயம்இன்னும்  ஒரு கனவாகவே தொடர்ந்தும் இருக்கின்றது அது பாடசாலை மட்டம் தொடங்கி அறிவின் , செயற்பாட்டின் வழியே கொடுக்கப்படும் போது , எப்படியும் ஒரு கட்டத்தில் சமூகத்தின் மீது நிகழும் அபத்தத்தின்  கொதிநிலையின் கொள்ளவு  இறுக்கம் வெடித்து பீறிடும் . அப்போது அறிவின்  தளத்தில் இயங்கும் இளைஞர்கள் அதனை தாங்குவார்கள் , அதனை தாங்கத்தக்க தோள்கள் அப்போதுதான் அவர்களுக்கு இருக்கும். நாம் இப்போது செய்ய வேண்டியது அந்த பெருவெடிப்பை தாங்கத்தக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கத்தேவையான வேலையையாகும். தீடிரென வலைத்தள ரெண்ட்களில் இருந்து முளைத்துவரும் கோதுதளின் உள் அறிவும் ஆன்மாவும் நைந்து போன வடிவத்திலேயே இருக்கின்றது . அவர்கள் கடந்த காலத்தில் விட்ட பிளைகளின் இக்கால தொடர்ச்சி வடிவங்கள் மட்டுமே.

கொஞ்ச காலத்தின் முன்னர்  நண்பர் கிரிஷாந் எழுதிய கட்டுரை சிறுநறுக்கு  இது ,

….”இப்போது உருவாகியிருக்கும் இந்த தலைமுறை  ஒரு பனியாற்றைப்போன்றது . அதன் உயிர்ப்புள்ள ஓட்டமானது பனிக்கட்டியாக உறைந்திருக்கும் செயலுக்குக் கீழே  தனது சக்தியை வைத்திருக்கின்றது . அறிவின்  செயலுக்கு அதன் பனி உருகவேண்டியிருக்கிறது  அதன் காலம் இப்போதில்லை அதன் கொதி நிலையும் அவ்வளவு பக்குவமடையவில்லை . ஒருநாள் பனியாறு உடைந்து இந்த நதி பெருகும் போது அதன் செயல் பெருகும் போது ஒட்டியிருக்கும் குப்பைகள் அடித்துச்செல்லப்படும்  சுதந்திரமான வேகம் என்பது  அன்பினால் உருவாகும் வேகமே அதுவே எனது தலைமுறையை ஜீவ நீரொட்டத்துக்குள் சேர்க்கும் அப்போதுதான் கனவு பலிக்கும் ”.

Yes

அறிவின் செயலுக்கு அதன் பனி உருக வேண்டும்  நாம் உருவாக்க வேண்டியதும் , கண்டுபிடிக்க வேண்டியதும் தமிழேண்டா என்றும் இனப்புனிதமெனும் மூடக்காழ்ப்பை கக்கும் ஒரு கூட்டத்தையல்ல , நீதிமன்றுக்கு கல்லால் எறியும் ஒரு கூட்டத்தையல்ல , நல்ல அறிவின் வழியே உழைக்கும் ஒரு ஜீவதலைமுறையை  கண்டையவே நாம் உழைக்கவேண்டும்.

இவ்வாறு  வலைத்தள ரெண்டிங் வழியே சமூக போராட்டத்திற்கு வருதல் என்பது கூட அறிவின் வழியே நிகழ்ந்திருக்க வேண்டும் , தமிழ்நாட்டு இளைஞர்களிடம் அறிவு என்பது அவர்களின் நிலம், சார்ந்த , அரசியல் சார்ந்த கடந்த கால நொதிப்பின் பீறிடுகைதான். அது அங்கே நிகழ்ந்தது , அது நிழக பலவருடங்களும் பல அறிவார்ந்த செயல்களின் கூட்டு உழைப்புக்களும் ஏற்படுத்திய  ஒரு மகத்தான வெடிப்பின் பீறிடுகைதான் ஜல்லிக்கட்டு எழுச்சி.

அவர்களுக்கு சமூகதளங்கள் சமூக அழுத்தம் உருத்திரளும் காலத்திற்கு சரியாக கிடைத்த கருவிகள் ,ஆனால்  அந்த நிலத்தினைப்பற்றிய  எந்த  அழுத்தமோ அறிவோ , அனுபவமோ இன்றிய  அடிப்படைவாதங்களை கொண்ட கோசங்களால் அருட்டப்பட்டு  பக்கத்து தேசத்தின் பேஸ்புக் ரெண்டில் அருட்டப்படும் கூட்டம் ஈழத்தில் தெருக்களில் இறங்கி போராட்டம் என்று கூச்சலிடுவது என்பது மிகப்போலியானது . ஒருவனின் அல்லது ஒரு கணத்தின் , உணர்வின் கீழ் ஒன்றிணைந்து விட்டனர் என்பது என்பது மகத்தான செயலொன்றுமில்லை. அறிவித்தளத்தில் அது நடக்கா விட்டால் இந்த இளைஞர் கூட்டத்தின் திரழும் கணம் என்பது நீத்துப்போகும்.  அவர்களால் அந்த போராட்டத்தின் முடிவில் “செல்பியுடன் கூடிய ” ஒரு மேலோட்ட இனக்கோச அறிக்கையை மட்டுமே உருவாக்கிவிட்டு மறைந்து போகமுடியும்.

நம்முடைய இளைஞர்களின் தவறல்ல அது , அது சமூக இடைவெளிகளின் தவறு , கடந்த காலத்தின் தவறு , தலைமைகளின் , புத்திஜீவிகளின் தவறு.

சீனாவில் மாவோவின் படையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் இருந்தார்கள் , அவரின் கீழ் அல்லது அவர் வைத்த வாதத்தின் கீழ் இளைஞர்கள் ஒன்று கூடினார்கள் . அப்போது சீனா கலாசார புரட்சியொன்றுக்கான  கூட்டுக்கொதிநிலையை அடைந்திருந்தது. அது சிந்திக்கவும் செயற்படவும் கூடிய இளைஞர்களை சமூகத்திற்குள் இருந்து எடுத்து வந்து ஒன்று கூட்டியது. கூடிவிட்டார்கள் என்பதற்காக மாவோ அவர்களைக்கொண்டு கூச்சல் போடவில்லை , அவர்களைப் போர் வெறிக்குப் பலியாடுகளாக்கவில்லை  ,பல்கலைக்கழகங்களிற்கும் கிராமங்களிற்கும் அவர்களை அனுப்பினார் ,  ஒரு மேய்பன் ஆட்டை மேய அனுப்புவதைப்போல அனுப்ப பட்ட அவ் இளைஞர்கள் திரும்பும் போது புது மேய்ப்பர்களாக மாறித்திரும்பினர் . ஓநாய்களை அறிவார்ந்து எதிர்த்தும் தம் குடியை கட்டியெழுப்பும் அவர்கள்தான்  அந்த மகத்தான சீன பேரரசை நிமிர்த்தி நிறுத்தினர்.

……………………………………………..

உப குறிப்பு – நீ இந்திய இதழ்களுக்கு எழுதுகிறாய் தானே பிறகேன் இந்திய – தமிழ்நாட்டு பண்பாட்டை நாங்கள் ஆதரிப்பதை எதிர்க்கிறாய் என்றொரு கேள்வி எழுந்தது. ஏன் எதிர்க்கிறேன் என்பதை நான் மேலே சொலிவிட்டேன். இலக்கியத்தை பற்றி கேட்கும் கேள்விக்கு இதுதான் எனது நிலைப்பாடு .

“ நான் மீண்டும் சொல்கிறேன் எனது சமூகம் அடக்கப்படாவிட்டால் நான் இவற்றை சட்டைசெய்யமாட்டேன். தவிர இலக்கியம் என்பது  காலத்தைப்பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாத ஒன்று அது ஒட்டுமொத்த மானுட சமுதாயத்திற்கும் பொதுவானது , அதை நான் அன்பைப்போல நேசிக்கிறேன். அன்பும் இலக்கியமும் வேறில்லை எனக்கு , எனக்கு இலக்கியம் ஒரு சமூக அடையாளம் என்று பார்ப்பதில் அக்கறையில்லை , அது தான் பேசும் நிலத்தின் ஆன்மாவில் இருந்து இலக்கியமாக வந்துள்ளதா என்பது மட்டுமே எனது கவலை. அதனால் அதை தமிழ் நாட்டில் எழுதுவதும் செக்கஸ்லோவாக்கியாவில் உள்ள ஒரு இதழில் எழுதுவதும் எனக்கு ஒன்றுதான். தவிர  அகரமுதல்வனைப்போல ஈழத்தின் பிரச்சினையை  நான் அங்கு விற்கவில்லை , அல்லது குணாகவியழாகனைப்போல “ஆசிரியர் .. அடைப்புக்குள் நாங்கள் இவரை டீச்சர் என்றே அழைப்போம்” என்று  எழுதவில்லை . நான் எனது நிலத்திலிருந்து எனக்கு எது கிடைக்கிறதோ அதை அன்பாக மாற்றி இந்த உலகிற்கே கொடுக்கும் எழுத்தாளனாக  இருக்கிறேன்.சமூகத்திற்கான விடுதலையை  கோரும் ஒரு அன்பின் வடிவமாகவே இலக்கியத்தைப் பார்கிறேன் , மரபு , இனம்  , மொழி உணர்வு ,காலம் எல்லாம் இலக்கியத்தை கட்டுப்படுத்தும் என்பதை நான் ஏற்கமாட்டேன்.  ”

-யதார்த்தன்

Jan 20

ஈழத்து மடப்பண்பாட்டில் நின்று தெருமூடிமடத்தின் இருப்புநிலையை வாசித்தல்.

 

 

 

நாம் வரலாற்றின் விளிம்பு நிலை குழுமத்தினராகவே உள்ளோம். வரலாற்றுத்தொடர்ச்சியை மீளக் கட்டவேண்டிய தேவைகளை தொடர்ச்சியாக உணர்கிறோம். அதன் பொருட்டு மிச்சமிருக்கும் மரபுகளையும் தொல்லியல் கையளிப்புக்களையும் அறியவும் ஆவணப்படுத்தவும் அடுத்த சந்ததிக்குக் கையளிக்கவும் வேண்டியுள்ளது. மிகக்குறைவாகக்கிடைக்கும் மரபார்ந்த தொல்லியல் பண்டங்களை வைத்துக்கொண்டு, அவற்றைத் தொடர்புபடுத்தி அதனைச் சூழ அமைந்த வரலாற்றினை உருவாக்குதல் என்பது ஒரு புனைவைப்போல் முன் வைக்கக் கூடியதல்ல. அது எல்லாவகை வரலாற்று மூலாதாரங்களின் கூட்டு மொத்தத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படுதலே அரோக்கியமானது.

ஈழத் தமிழ்ச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் வடக்குப்பகுதி வரலாற்றின் மைய வாசிப்பிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக அதன் கட்டடக்கலை மரபு பற்றிய எழுத்து முக்கியமானது. வாழும் அல்லது எச்சமாக இருக்கும் கட்டட ஆதாரங்கள் மிகக்குறைவாகவே எமக்குக்கிடைக்கின்றன. காலனியம், போர் என்பவை அதற்கு பிரதான காரணங்களாகவிருக்கின்றன. எனினும் கிடைக்கும் கட்டட மூலாதாரங்கள் முக்கியமனவையாகவும்  செறிவான வரலாற்று எழுத்துக்கான மூல வாசிப்பு நிலைகளைக் கொண்டுள்ள அமைப்புக்களாகவும் உள்ளன.

ஒப்பீட்டளவில் வடக்கில் அதிகம் வாழும், அல்லது எஞ்சியிருக்கும் கட்டக்கலைவடிவங்களாக ”மடங்களைக்” குறிக்கலாம். மடப்பண்பாடு பரவலாக வடக்குநிலம் சார்ந்து அமையப்பெற்று குறித்த காலத்தின் வரலாற்று வாசிப்பினையும் சமூக வாசிப்பினையும் நிகழ்த்த உதவுகின்றது. குறிப்பாக வடமராட்சியின் பருத்தித்துறையில் காணப்படும் இலங்கையின் ஒரேயொரு தெருமூடிமடத்தினை மையமாகக்கொண்டு இக்கட்டுரையைத் தொடர நினைக்கிறேன்.

ஈழத்தமிழ்ச் சமூகம் இந்திய – தமிழ்நாட்டு பண்பாட்டின் நீட்சியைப் பகிர்ந்துகொள்கிறது என்ற வரலாற்றுக் கற்பிதம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் அதனிடம் கேரள, கலிங்க, அரேபிய, பர்மிய, மற்றும் ஐரோப்பிய பண்பாட்டு பகிர்வுகள் இருப்பதை சமநிலையில் வைத்துப்பார்க்கும் தன்மை நம்முடைய கடந்தகால வரலாற்று எழுத்துக்களில் உள்ளதா என்ற கேள்வி தொக்கு நிற்கின்றது . சமுத்திரத்தினால் இடை வெட்டப்படும், இந்துசமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் தீவு என்ற வகையில் அதனிடம் தனித்துவமான குணங்குறிகளை ஒழுங்கு படுத்தத் தக்க மொழி, பண்பாட்டு, கலை, கைவினை வடிவங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அது இந்திய உபகண்டத்திற்கு நெருக்கமாக இருப்பதால் அதன் பண்பாட்டினை உள்வாங்கிக்கொண்டாலும் அதை எவ்வாறு தன் நிலத்துக்குரிய வடிவமாக மாற்றிக்கொண்டது என்பது பற்றி ஆய்வுகள் தேவையாகவிருக்கின்றன.

 

மடப்பண்பாட்டினை எடுத்துக்கொண்டாலும்  இதே நிலையே உள்ளது. அதாவது இந்திய உபகண்டத்தினதும் ஐரோப்பிய காலனித்துவத்தினதும் கட்டடப்பண்பாட்டை உள்வாங்கியிருந்தாலும் இலங்கையின் மடங்களுக்கு என்று தனிக்குணங்குறிகள் இருக்கவே செய்கின்றன. அதனை விளங்கிக்கொள்ள இந்திய மற்றும் ஐரோப்பிய மடப்பண்பாடுகளைப்பற்றிச் சுருக்கமாக பார்த்து விடுவது அவசியமாயிருக்கும்.வரலாற்றின் மிக நுண்ணியதும் தொடக்கமாயும் இருக்கவேண்டியது மொழி ஊடான வாசிப்பு என்ற வகையில் “மடம் ” என்ற சொல்லின் மொழி நிலை வாசிப்பினைக் கவனிக்கலாம்.

தமிழில் மடம், பன்னசாலை, ஆச்சிரமம், சத்திரம், பள்ளி என்ற சொற்களையும் ஆங்கிலத்தில் monastery என்ற சொல்லையையும் சிங்களத்தில் பிரிவெனா என்ற  சொல்லையும் இங்கே எடுத்துக்கொள்ளலாம். தமிழில் பன்னசாலை, ஆச்சிரமம் ஆகிய சொற்கள் மிக நெருக்கமானவை. காரணம் இலங்கைத்தமிழ்க் கிளைமொழிப் பேச்சு வழக்குகளில் பயன்படுத்தப்படாத இச்சொற்கள் இரண்டும் தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ளவை. சொல்லப்போனால் இச்சொற்கள் இரண்டும் ஒரே அர்த்தத்தினைப் பகிருபவை. ஆச்சிரமம் என்பது வடமொழியில் இருந்து இந்து சமயத்தின் ஊடாக தமிழிற்கு வந்த திசைச்சொல். அதற்கான நேரடியான தமிழ் வடிவமாக பன்னசாலையைக் கொள்ளலாம். குறிப்பாக இச்சொற்கள் இரண்டும் இந்து சமயத்தின் சாதுக்கள், துறவிகள், முனிவர்கள் வசிக்கும் இடங்களைக்குறிப்பவை. இச்சொற்கள் இலக்கிய வழக்கு தவிர ஈழத்தமிழில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது இங்கு ஞாபகப்படுத்த வேண்டியதாகும்.

அடுத்து சத்திரம் என்ற சொல், பொதுவாக சத்திரம் என்பதற்கு ஆறுமுகநாவலர் போன்றோர் கொடுக்கும் விளக்கம் ஞானிகள், துறவிகள், நோயாளர்கள், மாற்று திறனாளிகள், முதியவர்கள், பயணிகள் போன்றோர் தங்குமிடம் என்கின்றனர். குறிப்பாக இவ்வாறானவர்களுக்கு உணவு வழங்கும் இடமாக சத்திரங்கள் இருந்திருக்கின்றன; அதாவது சத்திரமானது அன்னதானம், விருந்தோம்பலுடன் நெருக்கமாக இருக்கும் கட்டட அமைப்பினைக்குறிக்கும் சொல் என்பதை மனத்திற் கொள்வோம்.

 

அடுத்து பிரிவெனா என்பதைப் பார்த்தால் சிங்களத்தைப் பொறுத்தவரை பெளத்தமதத்தின் வழியாக கிளர்ந்த சொல்லாக இது இருக்கின்றது. பெளத்த்துறவிகள் தங்கிக் கல்வி பயிலும் இடங்களை இவ்வாறு குறிப்பிட்டனர், இலங்கையைப் பொறுத்தவரை அரசியல், சமூக, சமயச்செல்வாக்கு கொண்ட இடங்களாக வரலாற்றுக்காலம் தொட்டே பிரிவெனாக்கள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன. இவை வட இந்திய, சீன, பர்மிய, யப்பான் தேசங்களில் உள்ள பெளத்த கல்விக்கூடங்களை ஒத்த தன்மைகளைகொண்டிருப்பவை.

பள்ளிகள் என்று சொல்லப்படும் மடம் போன்ற கட்டட அமைப்புக்களைப் பொறுத்தவரையில், பள்ளிகள் பெரும்பாலும் சமண, பெளத்த மதம் சார்ந்த துறவிகள் தங்குமிடமாகவும் குருகுலக்கல்வி முறை சார்ந்த கூடங்களாகவும் இருந்துள்ளன.

இச்சொற்களின் அமைப்பு அர்த்தங்களோடு ஏதோ ஒருவகையில் தொடர்புபடும் “மடம்” என்ற சொல்லைப் பொறுத்தவரை, இந்திய பண்பாட்டில் இருந்த மடங்கள் கொண்டிருந்த உருவ உள்ளடக்கங்களில் இருந்து ஈழத்தின் பண்பாட்டுக்குள்  தெளிவான வேறுபாடுகளுடன் இயங்குவதனைக்காணலாம். அதனை விளங்கிக்கொள்ள இந்திய மடப்பண்பாட்டின் அமைப்பு மற்றும் அதன் தொடர்ச்சியினைக் கவனிக்கவேண்டும்.

மடப்பண்பாட்டினை பொதுநிலையாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.சமயம் சார்ந்தவை

2.சமயச்சார்பற்ற சமூக நிலைப்பட்டவை

சமயம் சார்ந்த கட்டட அமைப்புக்களாக பன்னசாலை ஆச்சிரமம், இரண்டும் இந்து சமயத்தின்  படியான சன்யாசத்தினோடு தொடர்புபட்டவை, அதேவேளை இந்தியாவில் இருக்கும் சமயம் சார்ந்த மடங்களில் அனுட்டானங்கள், சமய ஆய்வுகள், விவாதங்களோடு ஆகியன இடம்பெற்றபோதும் அவை சத்திரங்களாகவும் இருந்திருக்கின்றன. சீன யாத்திரீகனான பாகியன் முதலானவர்களின் குறிப்புக்களில் இருந்து மடப்பண்பாடு இந்து, சமண, பெளத்த நிலைகளால் அதிகம் நிறுவப்பட்டு இயங்கியமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன.

சமூகம் சார்ந்து சத்திரங்களோடு கூடிய விருந்தோம்பலின் பொருட்டும், வழிப்போக்கர்களும் நிராதரவானவர்களும் மாற்று வலுக்காரர்களும் தங்குமிடங்களாகவும் மடங்கள் இருந்துள்ளன. ஆயினும் இந்தியாவைப் பொறுத்தவரை மடம் என்பதிலும் சரி, சத்திரம் என்பதிலும் சரி, ஆச்சிரமம் என்பதிலும் சரி இந்து, பெளத்த, சமண மதங்களின் செல்வாக்குச் செறிவாக இருந்துள்ளது . இவை தவிர மடங்கள் அரசர்களின் நேரடியான கண்காணிப்புக்குள்ளும் செல்வாக்குடனும் இருந்துள்ளமைக்கான சான்றுகள் தமிழ்நாடு முதற்கொண்டு இந்தியா முழுவதும் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் சங்ககாலம், சங்கமருவிய காலங்களில் மடப்பண்பாட்டின் எழுச்சி ஆரம்ப கட்டத்திலேயே இருந்துள்ளது, சங்கமருவிய காலத்தில் எழுச்சிபெற்ற சமண, பெளத்த சமயங்கள் அக்கால மடப்பண்பாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றன.

பல்லவர்காலத்தில் ஏற்பட்ட இந்து, சமண, பெளத்த மதங்களின் போட்டி சமய இயக்கங்களைத் தோற்றுவித்தது. அவை மடப்பண்பாட்டினை வளர்த்துச்சென்றன. சோழர் காலத்திலும் தமிழ் நாட்டில் சமயம் சார்பான மடப்பண்பாடே செறிவாக வளர்ந்து வந்தது. ஆயினும் சோழப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்னர், விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகள் தமிழ் நாட்டினைக் கைப்பற்றிக்கொண்ட பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையிலும் பஞ்சம் போன்றவை ஏற்பட்டபோதும் உணவு, ஓய்வு, ஆதரவு வழங்கும் சமூக நிலைப்பட்ட மடப்பண்பாட்டைச் செறிவாகத் தோற்றுவித்தன. சமயச்சார்பான மடங்கள் ஒரு பக்கத்தில் இந்து சமயத்தை ஆதரித்த நாயக்க பிரதிநிதிகளின் அரசக்கட்டின் ஆதரவுடன் “ஆதீனங்களாக” மாறிக்கொண்டன.

(மடம் மற்றும் மடப்பண்பாட்டின் வளர்ச்சி தொடர்பான மேலதிக வாசிப்புக்களை ஆழமாக தெரிந்துகொள்வதற்கும் மேலதிக நூல்களை அணுகுவதற்கும் குமுதா சோமசுந்தர குருக்களின் – ”யாழ்ப்பாணத்துப்பண்பாட்டில் மடமும் மடக்கலையும்” நூலை பரிந்துரைக்க நினைக்கிறேன்)

நாயக்கர் காலம் என்பதை நன்கு கவனிக்கும்போது நாயக்கர் காலம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஈழத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி நடைபெற்றுவந்ததையும் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.

 

இலங்கையின் மடப்பண்பாடு

இலங்கையின் மடப்பண்பாடு பற்றிய தகவல்கள் கி.மு 2 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிடைக்கின்றன. கிபி 10 நூற்றாண்டு வரை இலங்கையில் மடப்பண்பாடு இருந்தமை பற்றி சிங்கள பாளி இலக்கியங்கள் தகவல்களைத் தருகின்றன. ஆயினும் சிங்கள சமூகக்குழுமத்தில் தமிழ்நாட்டைப்போல பெரும்பான்மை மடங்கள் சமயம் சார்ந்து பெளத்த பள்ளிகளாகவே தொழிற்பட்டு இருக்கின்றன. பிரிவேனாக்களுடன் இணைந்து அவை செயற்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் தமிழ்க் குழுமத்தினைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மடங்களில் பெரும்பான்மையானவை துறவு சார்ந்தவையாகவோ, வழிபாடு சார்ந்தவையாகவோ இருக்கவில்லை. அவை பெரும்பாலும் சமூகமயப்பட்டே இருந்து வருகின்றன.  ஈழத்தில் கோயில்களில் இருக்கும் மடங்கள் கூட துறவிகள் தங்குவது, சமயம் வளர்ப்பது என்பதைத்தாண்டி அன்னதானம் முதலான சமூக நிலைப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

ஈழத்துச் தமிழ்ச்சமூகத்தின் மடப்பண்பாடு பற்றி ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்தே வரலாற்றுத்தகவல்கள் கணிசமாகக் கிடைக்கின்றன. எனினும் மடப்பண்பாடு வடக்குக் கிழக்கில் உச்சம் பெற்றது காலனிய மற்றும் காலனியத்திற்குப் பிந்திய காலங்களிலேயேயாகும். குறிப்பாக ஒல்லாந்தர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் அதிகளவான மடங்கள் வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஒப்பீட்டளவில் வடக்கில் அதிகமான மடங்கள் காணப்பட்டன.

கத்தோலிக்க, புரட்டஸ்லாந்து சமயங்களின் தேவாலயங்களுக்கும் தேவ ஊழியச்சபைகளுக்கும் சொந்தமான என்று சொல்லப்படும் துறவிகளின் மடங்களும் அதிகமாக கட்டப்பட்டன. கத்தோலிக்க துறவிகள் தங்கும், பிரார்தனை செய்யும் இடங்களான அவை முற்றிலும் சமயம் சார்ந்து பெரும்பாலும் தேவாலயங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டன. இன்றுவரை பல இடங்களில் அவை இயங்கி வருவதுடன், அவற்றின் மடக்கலை மடப்பண்பாடு என்பன தனியான ஆய்வுக்கான சாத்தியங்களுடன் மரபுரிமைச் சின்னங்களாக மாறியுள்ளன.

 

இவ்வகையில் ஈழத்தின் மடங்கள் உருவாகவும் இயங்கவும் பின்வரும் காரணிகளைப் பிரதானமாகக் குறிப்பிட இயலும்:

மதப்பிரசாரம்

 1. சாதிய நடைமுறைகளைக் கையாளுதல்
 2. யாத்திரைகள்
 3. அன்னதானம் முதலான உணவு வழங்கல்கள்
 4. உபயம், நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள்
 5. காலநிலை பயணம், பொழுதுபோக்கு

மதப்பிரசாரம்

ஐரோப்பியர் வருகையின் பின்னர், ஐரோப்பியர் கிறிஸ்தவ, புரட்டஸ்லாந்து சமயப் பரப்புரைகளை மேற்கொண்டனர். இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தொடங்கி இலங்கை முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களையும் அவை சார்ந்த மடங்களையும் அமைத்தனர். கிறிஸ்தவ மடங்களின் வருகையும் அதன் செயற்பாடும் ஐரோப்பிய தளத்தில் சுதேச பண்பாட்டை கையாண்டவிதம் தனியான ஆய்வுக்குரிய ஒன்று. அக்கிறிஸ்தவ மதப்பிரசாரத்துக்கு எதிராக சுதேச மதங்களைப் பாதுகாக்க ஆறுமுகநாவலர் போன்றோர் மடங்களை அதிகம் பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கோயில் மண்டபங்களை விடுத்து மடங்களை தெரிவு செய்ய வடக்கின் சாதி அமைப்பு பிரதான காரணமாக இருந்தது.

 

சாதிய நடைமுறைகளைக் கையாளுதல்

யாழ்ப்பாணத்தை மையம் கொண்ட சாதிய நடைமுறைகள், யாழ்ப்பாண மேல் தட்டு வர்க்கத்தினால்  மிக நுட்பமாகக் கையாளப்பட்டன. சுதேச சமயங்களை பிரசாரம் செய்யும் பொருட்டு பொதுமக்களை அணுகும்போது சாதிய அடக்குமுறை மனநிலை கொண்ட நாவலர் போன்றோர் கோயில்களுக்குள் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதிய மக்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக மடங்களிற்கு அவர்களை வரச்செய்து மதப்பிரசாரங்களை, புராணபடனங்களை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் கீரிமலை சிறாப்பர் மடம் பிரபலமாகவிருந்த மடங்களில் ஒன்று. அம்மடத்தின் வாசலில் பின்வரும் குறிப்பு காணப்படுகின்றது

“இம்மடத்தில் சைவ சமயிகள் அல்லாத பிற மதத்தவர்கள் தாக சாந்தி செய்யலாகாது, வசிப்பதற்கு இடங்கொடலாகாது, கட்டிடத்தின் உள்ளாக மாமிசம் புசித்தல், அசூசைப்படுத்துதல், சுருட்டுப் புகைத்தல் ஆகாது, போசனம் செய்பவர்கள் எச்சிமாற்றி போகவேண்டியது, வசிப்பவர்கள் சமாதானமாகவிருந்து போகவேண்டியது….”

என்று இக்குறிப்பு தொடர்ந்து செல்லும்.

இங்கே வெளிப்படையாகப் பார்த்தால் சமயம் சார்பானவர்களை மட்டும் குறிப்பதாக இவ்வறிவுறுத்தல் தெரியும் . ஆனால் இது சாதிய கையாள்கையுடன் தொடர்பு பெற்ற ஒன்றாக இருக்கிறது. எப்படியெனில் காலனிய காலத்தில் ஐரோப்பிய சமயப் பிரசாரகாரர்கள் ஈழத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் சென்றே அவர்களை தமது சமயங்களைப் பின்பற்ற ஆற்றுப்படுத்தினர். அதனால் அக்காலத்தில் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே கத்தோலிக்கத்தைப் பின்பற்றினார்கள். எனவே பிற சமயத்தவர் என்று குறிப்பிடுவதன் உள்ளார்ந்த நோக்கம் சில மடங்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளெடுக்கக் கூடாது என்பதனாலேயே ஆகும். அவை பெரும்பாலும் கோவில் சார்ந்த மடங்களாக இருந்துள்ளன. ஆறுமுக நாவலர் போன்ற மேட்டுக்குடியினர் ஐரோப்பிய கத்தோலிக்கர்களுடன் அன்பு பாராட்டினாலும் சாதிய அடிப்படையில், மதம் மாறிவர்களைச் சாதிய நடைமுறைகளின் பொருட்டு நுட்பமாகவும் திட்டமிட்டும் கையாண்டிருக்கிறார்கள்.

இது போன்ற சாதிய நடைமுறைகள் மடங்களில் கையாளப்பட்ட விதங்கள் பற்றிய குறிப்புக்கள் நிறையவே கிடைக்கின்றன.

 

மடங்களும் யாத்திரைகளும்

இந்துப்பண்பாட்டின் தொடர்ச்சியில் தல யாத்திரைகள் முக்கியமானவை. கதிர்காமம் முதலான கோயில் யாத்திரீகர்கள் ஓய்வெடுக்கவும், உண்ணவும் மடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக போர்த்துக்கேயர் காலத்தில் அடக்கி வைத்திருந்த சமய அனுட்டானங்கள் ஒல்லாந்தர் காலத்தில் தளர்த்தி விடப்படும்போது யாத்திரைகள் அதிகரித்தன. அதன் பொருட்டு மடங்கள் நிறுவப்பட்டன. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட மடங்களைப் பற்றிச் சொல்லும்போது பேராசிரியர் கிருஷ்ணராஜா ஒல்லாந்தர் அமைத்த டச்சு வீதிகளிலேயே அதிகமான மடங்களை இனங்காண முடிவதனைச் சுட்டிக்காட்டுகின்றார். குறிப்பாக அவை ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி, தொட்டி, கிணறு என்பவை சூழ்ந்த தொகுதியாக காணப்படுகின்றன. அவ்வகையில் டச்சு வீதிகளில் காணப்பட்ட மடச்சூழமைவு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் .

“அம்பலம் எனக்குறிக்கப்படுகின்ற வீதியோரத்து மடங்களும் ஆவுரஞ்சிக்கற்களும் கூபங்களும் (கிணறுகள்) யாழ்ப்பாணத்தில் எக்காலகட்டத்தில் இருந்து இணைவு பெற்ற நிறுவனமாகத் தோற்றம் பெற்றிருந்தன என்ற கேள்விக்கு விடையிறுப்பது கடினமான ஒன்றல்ல. யாழ்ப்பாணத்திற்குரிய ஓரங்குல இட விளக்கப் படமொன்றைப் பார்க்கும் ஒருவர், அம்பலம் எனக்குறிக்கப்பட்ட தங்கு மடங்கள் டச்சு றோட்டுடன் இணைந்த பிரதான வீதிகளின் முக்கிய தரிப்பு மையங்களில் இருந்தமைக்கான குறியீடுகளைக்காண முடியும். பண்டாரமடம், பண்டத்தரிப்பு, பண்ணாகம், முத்தட்டுமடம், மருதனார் மடம், ஆறுகால்மடம், சங்கத்தானை, பனைமுனை (light house road), நெல்லியடி, சாரையடி, சுப்பர் மடம், ஓட்டுமடம், மடத்துவாசல், தில்லையம்பலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இத்தகைய தங்குமடங்கள் காணப்பட்டிருந்தன.”

என்று சுட்டிக்காட்டுகின்றார்.

 

சத்திரங்களாகச் செயற்பட்ட மடங்கள்

யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பெரிய ஆலயங்களில் மடங்கள் காணப்படுகின்றன. அவை அன்னதான மடங்களாக இருக்கின்றன. செல்வச்சன்னிதி, வல்லிபுர ஆழ்வார், நயினை நாகபூசணி, தெல்லிப்பளை துர்க்கை அம்மை கோவில் போன்றவற்றில் காணப்படும் மடங்கள் பழமையானவை. கோயில் மடங்கள் பெரும்பாலும் சமயப்பெரியவர்களின் குருபூசை மடங்களாகவும் நினைவு மடங்களாகவும் உள்ளன.

 

நேர்த்தி முதலான சடங்குகளும் நம்பிக்கைகளும்

 

யாழ்ப்பாணத்தில் மடங்கள் நேர்த்தி (நிவர்த்தி) முதலான நம்பிக்கையின் பொருட்டு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கர்பிணிப்பெண்கள் இறந்தால் அவர்களின் ஆன்ம சாந்திக்காக மடம், சுமைதாங்கி, ஆவுரஞ்சிகல், கிணறு, தொட்டி அல்லது கேணி கொண்ட மடத்தொகுதியை அமைக்கும் நம்பிக்கைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் இரவுப்பயணம் என்பவற்றின் போது திருடர் பயம் தவிர, பேய், முனி போன்ற நம்பிக்கைகளின் பொருட்டும் மடங்கள் அமைக்கப்பட்டன. அத்தோடு திண்ணைக்கல்வி முறைக்கும் மடங்கள் பயன்பட்டதாயும் அறிய முடிகின்றது.

 

பொழுதுபோக்கு

ஊர்களில் காணப்படும் மடங்கள் மாலைவேளைகளில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகவும் அரட்டை, சிறு விளையாட்டுக்களை ஆடும் இடங்களாகவும் இருந்துள்ளன. இன்றும் மடங்கள் இளைப்பாறி அரட்டை செய்யும், மனித பகிர்வுகளுக்கான இடமாக இருக்கின்றன.

 

தெருமூடிமடங்கள்

குமுதா சோமசுந்தரக்குருக்கள் போன்ற கலைவரலாற்று , தொல்லியல் வரலாற்று  ஆய்வாளர்கள் மடங்களை பொதுவில் சமயம் சார்ந்தவை , சமூகநிலைப்பட்டவையென்றே அணுகுகுகின்றனர்.அதாவது மடங்களை  அவர்கள் நோக்க அடிப்படையில் பிரிக்கின்றனர்,அதன் மூலம் மடங்களின் நோக்கம், இயல்பு, பயன்பாடு பற்றி வியாக்கியானிக்கலாம். ஆயினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மடங்களை அமைப்பு அடிப்படையில் பாகுபடுத்தும் போது இவை எல்லாவற்றிலிருந்தும் தெருமூடி மடம் தனித்து நிற்பதனைக்காணலாம். நோக்க அடிப்படையில் அவை ஏனைய மடங்களின் பொதுப்பண்புகளைப் பகிர்ந்துகொண்டாலும் தெருவை மூடி அமைக்கும் அமைப்பிலும் தேவை சார்ந்தும் நுட்பமான வேறுபாட்டினையும் கொண்டுள்ளன.

வடக்குப்பகுதியினைப் பொறுத்தவரை இரண்டு வகையான தெருமூடி மடங்கள் இருக்கின்றன.

 1. தற்காலிகமாக அமைக்கப்படும் தெருமூடிமடங்கள்.
 2. நிரந்தரமான தெருமூடிமடங்கள்.

 

தற்காலிக தெருமூடி மடங்கள் பெரும்பாலும் கோயில் திருவிழாக்களை ஒட்டி தண்ணீர்ப் பந்தலுடன் கூடிய கொட்டகை அமைப்பினதாக மரங்கள் சலாகைகள், கிடுகு என்பனவற்றைக்கொண்டு உருவாக்கப்படும் மடங்களாக இருக்கின்றன. நல்லூர் திருவிழா போன்ற கோயில் உற்சவங்களில் போது இப்பொழுதுவரை தற்காலிக மடவமைப்பு வழக்கத்தைக் காணக்கூடியதாகவுள்ளது.

 

நிரந்தரமான தெருமூடிமடங்கள் அமைக்கும் பண்பாடு போர்த்துக்கேயர் காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ந்து வந்திருக்கின்றது. கிபி 16 ஆம் நூற்றாண்டின் பின் இலங்கையில் இத்தெருமூடிமடங்கள் அமைக்கப்பட்டு போர்த்துக்கேயர் காலத்தில் பெருமளவு அழிக்கப்பட்டுமுள்ளது. குறிப்பாக வடமராட்சிப் பிரதேசத்திலும் வலிகாமப் பிரதேசத்திலும் இவ்வாறான தெருமூடிமடங்கள் அதிகமாக அமைக்கப்பட்டன என்று சொல்லபட்டுகின்றது.

 

துறைமுக நகரங்களாகவும் கடல் முகப்புத்தளங்களாகவும் இருந்த காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற துறைமுகங்களுக்கான தெருக்கள் மற்றும் பெருந்தெருக்களில் இத்தகைய தெருமூடி மடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காரணம் துறைமுகங்கள், சந்தைகள், நகர, கிராம பரம்பலுகளுக்கு இடையிலான பயணங்களின் போது ஓய்வு, உணவு, நீர் என்பவற்றிற்காக பயன்படுத்தும் வகையில் இவை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் இன்று பருத்தித்துறை- தும்பளை வீதியில் பருத்தித்துறை கடல்முகப்புத்தளம், மற்றும் பருத்தித்துறை நகரத்திற்கு அண்மையில் காணப்படும் தெருமூடி மடம் மட்டுமே நிலைத்து நிற்கின்றது.

 

பல்வேறு காலங்களில் திருத்தப்பட்டும் புனரமைக்கப்பட்டும் வந்த இம்மடம் பழைய தெருமூடிமடப் பண்பாட்டின் தொடர்ச்சியின் அடையாளமாக வாசிக்கப்படவேண்டியது. ஆய்வுகளின் படி சுமார் 150 வருடங்கள் பழமைவாய்ந்த மடமாக இது காணப்படுகின்றது.

 

பருத்தித்துறை – தும்பளை வீதியில் உள்ள தெருமூடிமடம் அமைந்திருக்கும் இடத்தில் தொடங்கி அதன் வரலாற்று வாசிப்பின் வகிபங்கை மனம் கொள்ளவேண்டும். பருத்தித்துறை வரலாற்றுக்காலம் தொட்டு முக்கியமான கடல் முகப்புத்தளத்திலான துறைமுக நகராக இருந்து வந்துள்ளது, அங்கிருந்து கிளைந்து ஓடும் வீதிகள் பெருங்கற்காலப்பண்பாட்டில் இருந்து இயங்கி வரும் ஏனைய கடல் முகப்புத்தளங்களான வல்வெட்டித்துறை, நெடியகாடு, ஊறணி, கந்தவன், கடவை, இம்பரூட்டி, வல்லிபுரம், மணல்காடு போன்ற கடல் முகப்புத்தளங்களை நோக்கியும், தென்மராட்சி, யாழ்ப்பாணப்பட்டினம் முதலான குடியிருப்புகளின் பரம்பல்களை நோக்கியும் செல்கின்றன. அவ்வகையில் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அண்மையில் சொல்லப்போனால் துறைமுக நகரின் வாசலாகவே இத்தெருமூடிமடம் இருக்கின்றது.

மேலும் இத்தெருமூடிமடம் அருகில் உள்ள சிவன் ஆலயத்தின் எல்லையில் அமைந்துள்ளதோடு அத்தெருமூடிமடத்தினைச் சூழ இந்தியாவின் சிதம்பரத்துடன் சம்பந்தமான பிராமண குடிமை சிவன் கோயிலை மையம் கொண்டு தமது வாழ்வியலை அமைத்துக்கொண்டிருக்கின்ற தகவல்களும் இங்கு முக்கியமானது.இத்தெருமூடிமடத்தின் அருகில் துலாக்கிணறும், ஆவுரஞ்சிக்கல்லும், கற்றொட்டியும், சுமைதாங்கிக்கல்லும் காணப்படுகின்றமை முக்கியமாக குறிப்பப்பட வேண்டியதாகும்.

 

அமைப்பும் கலைப்பாணியும்

 

தெருமூடி மடத்தின் அமைப்பினைப்பொறுத்தவரையில் திராவிட கட்டிட பாணியில் அமைந்துள்ள இதன் அடித்தளம், தூண்கள் மற்றும் சுவர்களும் திராவிடப்பாணி தழுவியவையாக இருக்கின்றன. வெண்வைரச் சுண்ணக்கல்லினால் பொழியப்பட்டு உருவாக்கப்பட்ட தூண்கள், அதன் கபோதகங்கள், மற்றும் தளம் ஆகியன நாகவடிவம் உள்ளிட்ட சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம். பொழிந்த “வெண் வைரக் கற்சதுரங்கள்” பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிக நேர்த்தியாக பரவப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.

 

இருபக்கத்திண்ணைகளிலும் கல் பரவப்பட்ட தளத்தில் இருந்து நான்குபக்கச் சதுரப்பட்டையமைப்புடன் ஆரம்பிக்கும் கற்றூண்கள் அவற்றின் கூரையைத் தாங்கும் பகுதியில் தூண்போதத்துடன் காணப்படுகின்றது. இருபக்கமும் சேர்த்து மொத்தமாக 16 தூண்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆறு தூண்களில் வரிவடிவ சாசனங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. அவை இம்மடத்தைக் கட்டிய உபயகாரர்களின் பெயர்கள் என்று ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். இச்சாசனங்கள் 19 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் வரிவடிவ வளர்ச்சியினை கொண்ட சாசனங்களாகக் காணப்படுகின்றன.

 

தூண்களின் அமைப்பு தனித்துவமானதொன்று; ஒற்றைக் கற்றூண்களான இவை நடுவில் எண்பக்கப் பட்டையுடனான, தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணின் கபோதம் உள்ளிட்ட முழுத்தோற்றமும் பல்லவர்கால கலைமரபினைத் தழுவி உருவாக்கப்பட்டிருப்பதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். பொதுவாக இந்துக் கலைமரபின் தொடர்ச்சியான ஊடுகடத்தலின் விளைவாக இப்பாணியைப் பார்க்க இயலும்.

 

மேலும் இத்தெருமூடிமடத்தின் இருபுறங்களிலும் உயர்ந்த மேடைபோல் காணப்படும் இருபக்கத்திண்ணைகளினதும் வெளிப்புறச்சுவர்கள் சுண்ணச்சாந்தினால் கட்டப்பட்டவையாக உள்ளன. பொதுவாக காலனிய கட்டட மரபின் வருகைக்குப்பின்னர், கடல் முகப்புத்தளங்களுக்கு நெருக்கமான கட்டடங்கள் முருகைக்கற்களால், அல்லது செங்கற்களால் கட்டப்பட்டன. எனினும் கோயில்கள், மடங்கள் போன்றன பாரம்பரியமாக பொழிந்த சுண்ணக்கற்களாலேயே வடக்கில் கட்டப்பட்டன. வடக்கின் முக்கிய புவியியல் கனிமமான சுண்ணக்கற்களிலேயே ஆவுரஞ்சிக்கல், கற்றொட்டி, கிணறு முதலிய மரபார்ந்த கட்டிட அமைப்புத்தொகுதிகளும் கட்டப்படுகின்றமையை இங்கே ஞாபகப்படுத்த வேண்டும்.

 

கூரையமைப்பினைப் பொறுத்தவரையில் தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்தரமாக மேலெழுப்பப்பட்டுள்ள ஓர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறையினால் இத்தெருமூடி மடத்துள்ளான வாகனப்போக்குவரத்து நடைமுறைகளுக்கு சாதகமான சூழல் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தூரப்பார்வைக்குப் பொலிவான அழகியலையும் தோற்றப்பொலிவையும் அவ்வமைப்பு வழங்குகின்றது.

 

இத்தெருமூடிமடத்தின் இருபக்க மண்டபங்களினதும் மேற்கூரையானது தட்டையானதாக அமைக்கப்பட்டுள்ளது, நீள் சதுரக்கூரையமைப்பின் தட்டையான பரப்பை உருவாக்குவதற்கும் நீளமான வெண்சுண்ணக் கற்பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கற்பலகைகளுக்கு மேல் சுண்ணச்சாந்து இடப்பட்டு நீர் கசியாதவாறு வெகுகச்சிதமாக அக்கூரையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உயர்ந்துள்ள பிரதான நடுக்கூரையின் இருபக்கங்களிலும் காணப்படும் இத்தட்டையான இரு கூரைத்தட்டுகளின் கூரை முகப்புக்கள் இருமுனைகளிலும் வெளியே தெரியாதவாறு பக்கவாட்டாக அவற்றின் முகப்பில் எழுப்பப்பட்ட கபோதத்தின் மீதான குறுக்கு அரைச்சுவர்களினால் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஒட்டுமொத்ததாக கட்டப்பட்ட காலத்தில் நின்று இதன் கட்டிடக்கலை மரபினை ஆயும் போது  யாழ்ப்பாணத்துக்கே உரிய “திருப்பணிக்கல் – கட்டிடக்கலை” மரபும் கிறிஸ்தவ கட்டிடக்கலை மரபும், தூண்களில் பல்லவக் கட்டிடக்கலை மரபும் ஒன்றிணைந்த வகையில் மீளுருவாக்கம் பெற்றதாகவே இத்தெருமூடி மடத்தினைக் கொள்ளமுடியும்.

 

தெருமூடி மடத்தின் தற்போதைய நிலையும் அச்சுறுத்தல்களும்

 

ஒட்டுமொத்த இலங்கையிலும் இருக்கும் ஒரேயொரு நிரந்தரமான தெருமூடிமடம் இதுமட்டுமே. தற்பொழுது இத் தெருமூடிமடம் தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியல் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை பொருத்தமாக பராமரிக்கும் வேலைகளை அரசு செய்யவில்லை. அத்துடன் சுற்றுலாத் தலமாக இதனை மாற்றி பாதுகாக்கும் வழிவகைகளை அரசு செய்ய வேண்டியுள்ளது . இதுவரை காலமும் இத்தெருமூடி மடம் பாதுகப்பாக இருந்தமைக்கு அதனைச் சூழ இருக்கும் மக்களும் விளையாட்டுக்கழகங்களுமே காரணமாயிருந்தன. ஆனால் அரசு பொறுப்பெடுத்த பின்னர் அதன் மீது துப்பரவு செய்தல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. அரசியல் பதாகைகள், விளம்பரங்கள் ஒட்டப்படும் போது அது தொடர்பில் அரச இயந்திரத்தின் அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது இருக்கின்றனர் . வீதி அபிவிருத்தி பணிகளின் போது வீதி உயர்ந்து அதன் திண்ணை உயரத்தை குறைத்து விட்டது. அத்துடன், மேற்சுவர்களில் அரசமரம் ஒன்று வளர்ந்து நிற்பதுடன் எதிர்காலத்தில் அது சுவர்களைப்பாதிக்க கூடிய அபாயம் உள்ளது. மரபுரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் தொன்ம யாத்திரை குழுவினர் அது தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்ட போது தாங்கள் அதனை பராமரிக்கவுள்ளதாகவும் அதில் கைவைத்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர் . எனினும் இன்று வரை அது நடந்ததாகத் தெரியவில்லை.

மேலும் தெருமூடி மடத்திற்கு அண்மையில் உள்ள துலாக்கிணறு, ஆவுரஞ்சிக்கல், தொட்டி என்பனவும் சரியான பராமரிப்பின்றியிருக்கின்றன. தொடர்சியாக ஊர் மக்களே அவற்றைப் பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும் மரபுரிமைச்சின்னங்களை பாதுகாக்கும் பொறிமுறையினை தேசிய அரச இயந்திரமும், பிரதேச அரச இயந்திரங்களும் வினைத்திறனாகச் செய்யவேண்டும்.

ஒப்பீட்டளவில் சிங்கள, பெளத்த சின்னங்கள் பராமரிக்கப்படும், பாதுகாக்கப்படும் பொறிமுறைகளில் ஒரு வீதம் கூட தமிழ்ச்சமூகத்தின் மரபுரிமைகள் மீது காட்டப்படுவதில்லை. வெறுமனே அரச இயந்திரம் மட்டுமல்ல, மக்களும், பல்கலைகழகங்கள் போன்ற அமைப்புக்களும் சுதேச மரபுரிமைகளை அறிந்துகொள்ளவும் பாதுகாக்கவும் தேவையான விழிப்புணவினையும் அரிவினையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஊடகங்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்று சமூகத்துடன் நெருக்கமாக உரையாடக்கூடியவர்கள் இத்தகைய மரபுச்சின்னங்களைப்பற்றி எழுதவும், மக்களுடன் உரையாடவும் ஆவணப்படுத்தவவும் வேண்டும். அத்துடன் எவ்வாறு நல்லூரும் நிலாவரையும் சுற்றுலாத்தலமாக பிரபலப்படுத்தப்படுகின்றனவோ அவ்வாறு தெருமூடி மடம் போன்ற ஏனைய மரபுரிமைச் சின்னங்களும் சுற்றுலாத்துறையினால் சுற்றுலாத்தலங்களாக சுற்றுலாப்பயணிகளை நோக்கி மேற்காவப்பட வேண்டும்.

இனவாதிகள் ஈழத்தமிழ் மக்களை தொடர்ச்சியாக வந்தேறு குடிகள், சொந்தமாகப் பண்பாட்டுக் கூறுகளையோ வரலாற்றையோ கொண்டிராதவர்கள், இந்தியப்பண்பாட்டினை பகிர்ந்துகொள்ளும், தமிழ்நாட்டின் தொடரச்சியினைப்பேணும், ஒரு சமூகக் குழுமமெனப் பிரசாரங்களை தொடர்ச்சியாக முன்வைப்பதுடன், ஈழத்தமிழரின் நுண்மையான தனித்துவம் மிக்க மரபுகளை அழித்தும் புறக்கணித்தும் வருகின்றனர். மொழி, கலை, இலக்கியம், பண்பாடு என்று யாவற்றிலும் தனித்துவமான வடிவங்களை உடையவர்கள் ஈழத்தமிழ்ச்சமூகத்தினர். உண்மையில் இந்திய- தமிழ் நாட்டுப் பண்பாட்டினை பகிர்ந்துகொள்கின்றோம் என்பது ஒரு மேலோட்டமான கருத்து நிலை மட்டுமே. நுண்மையான ஆய்வுகளும் சரி வரலாற்று எழுத்தும் சரி ஈழத்துக்கென இந்திய – தமிழ்நாட்டு பண்பாட்டில் இருந்து விலகிய தன்மைகளை மிக நுண்ணியதாகவும் செறிவானதாகவும் ஆதாரத்துடன் முன்வைக்கின்றன.

கல்தோன்றி மண் தோன்ற முதல் தோன்றிய மொழி, வீர இனம், தூய இனம் போன்ற உயர்வு நவிழ்ச்சியும் உணர்ச்சிமயப்படுத்துவதையே நோக்காகக் கொண்ட வெற்றுக்கூச்சல்களும் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்கப் போவதில்லை. மரபுகளையும் பண்பாட்டு வரலாற்று இருப்பையும் இடைவெளிகளையும் அறியவும் அறிவார்ந்த தளத்தில் கட்டுதலும் ஆவணப்படுத்தலுமே வேண்டப்படும் ஒன்றாகும்.

ஈழம் பண்பாடு, அடையாளம், மரபுரிமை, கலை இலக்கியம் என யாவற்றிலும் தனித்துவமான தன்மை கொண்டது என்பதற்கு ஈழத்தின் மடக்கலையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஈழத்தின் மடக்கலை எப்படி இந்தியாவில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் தாக்கங்களை பெற்றாலும் தனக்கென ஒரு பிரத்தியேக வடிவம் அர்த்தம் இரண்டையும் வரலாற்று பெரும் நீரோட்டத்தில் கண்டடைந்துள்ளது எனபதற்கு தெருமூடிமடமும் அதன் சூழவமைவும் கனமான ஆதாரங்களை முன்வைக்கின்றது.

நாம் வரலாற்று எழுத்தில் மரபுரிமைகளை உறுதிப்படுத்தாமை காரணமாக தொடர்ச்சியாக விளிம்புக்கு தள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம். தமிழ் நாட்டிலிருந்து வரும் சமூக வலைத்தள, ஊடக, சினிமா, மொழி உணர்வுநிலை போலியான கோசங்கள் மற்றும் அறிவு நிலைகாரணமாக தமிழ்நாட்டின் பண்பாட்டு நீரோட்டத்தாலும், இலங்கையின் இனவாத நீரோட்டத்தாலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றோம். இதனை எதிர்கொண்டு அறிவார்ந்த சிந்தனை மற்றும் செயற்பாட்டு உருவாக்கத்தளத்தில் வரலாற்று வாசிப்பு, மரபு பற்றிய அறிதலுடன், நம்முடைய சமூகத்தை இருப்பின் மையத்தை நோக்கி நகர்த்தவேண்டும்.

யதார்த்தன்

 

உசாத்துணைகள்.

 1. கிருஷ்ணராஜா, செ. தொல்லியலும் வடமராட்சியின் பண்பாட்டுத்தொன்மையும். பிறைநிலாவெளியீட்டகம்.
 2. குமுதா சோமசுந்தரக்குருக்கள். யாழ்ப்பாணத்துப்பண்பாட்டில் மடமும் மடக்கலையும், குமரன் புத்தக இல்லம்.
 3. இந்திரபாலா கார்த்திகேசு. யாழ்ப்பாணத்தில் தொல்பொருளாராய்ச்சி, இளவேனில் (2ஆம் ஆண்டு மலர் ) 1970.
 4. கிருஷ்ணராஜா, செ. இலங்கை வரலாறு பாகம் 1, பாகம் 2
 5. இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், ஒரு இனக்குழுமம் ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம்.
 6. புஸ்பரட்ணம், ப. தொல்லியல் நோக்கில் இலங்கைத்தமிழர் பண்பாடு.
 7. மணிமாறன், வி. வடமராட்சியில் அடையாளம் காணப்படும் மரபுரிமைச்சின்னங்கள், திருவுடையாள் பிரதேச மலர் (4), பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு.

Jan 06

Pan’s Labyrinth – மந்திரக் கதவின் ஊடாக போரிலிருந்து வெளியேறுபவனின் குறிப்பு

 

என்னுடைய    சிறுவயது முழுவதும்  மாயாஜால கதைகளாலும் , வீரசாகசக் கதைகளாலும் நிரப்பப் பட்டதாகவிருந்தது . இன்று வரை அவற்றின் தாக்கத்தில் இருந்து மீண்டுவரமுடியாமல் இருக்கிறேன். சிறுவயதின் ஒரு பாகத்தை மேற்கத்திய சாகசக்கதைகளான ராபின்ஹீட் , அலிஸ் இன் வொண்டர்லாண்ட் , கலிவரின் பயணங்கள் , ரொபின்சன்  குருசோ தொடங்கி  பழைய கிரேக்க தொன்ம சாகசக்கதைகளான , ஹர்குலிஸ் ,தீஸியஸ் , ஜேசன் , போன்றனவும்  பின் வந்த குளோனிக்கல் ஒவ் நார்னியா  தொடர் நாவல்களும் , ஹாரிபொட்டர் நாவல்களும் பிடித்துக்கொண்டன. கூடவே மாயவி , டெக்ஸ்வில்லர் போன்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களும்.

குறிப்பாக வன்னியில் இருந்த காலம் , அங்கே கரண்ட் இல்லை , தொலைக்காட்சி  கணனி வசதிகள் போர் தொடங்கும் போதே   நிறுத்த வேண்டியதாகிவிட்டது . எனவே முழுநேரப்பொழுது போக்காய் எனக்குப்புத்தகங்களேயிருந்தன, இராணுவம் நெருங்கி வர வர ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தோம். நாளொன்றின் பெரும்பாலான மணிநேரங்கள்  பதுங்கு குழிக்குள் கழிக்க வேண்டும்.  எனக்கு ஷெல் , கிபிர் என்றால் பயம் .  தூரத்தில் சத்தம் கேட்டாலே கைகால் எல்லாம் நடுங்கத்தொடங்கிவிடும். எனவே பதுங்கு குழித்தனிமையையும் , பயத்தையும் விட்டு எப்படியாவது வேறொரு உலகிற்குள் வெளியேறிச் செல்ல வேண்டி இருந்தது . அதற்கான வாயிலாக மாயாஜால ,  வீரசாகசப்புத்தகங்களே எனக்கு  மந்திரக்கதவுகளாகவிருந்தன. கிளிநொச்சி நூலகம் , உருத்திரபுரம் நூலகம் , விசுவமடு மாவீரர் படிப்பகம் என்று எல்லா நூலகத்திலும் அங்கத்தவராக சேர்ந்து எடுத்து வந்த புத்தகங்கள் கொடுக்கப்படாமலே கிடந்தன . அந்த புத்தகங்களை திறந்து ஒரு மந்திரக்கதவினால் அல்லது ஒரு டெலிபொட்டர் டிவைசினால் வெளியேறுவதைப்போல அந்த பதுங்கு குழிக்குள் இருந்தும் , ஷெல்களும் கிபிர்களும் அக்கிரமித்த வானத்தை உடைய அந்த வன்னிப்பெருநிலப்பரப்புக்குள் இருந்தும்  நான் சுலபமாக வெளியேறினேன்.

சண்டை ஓய்ந்து  முகாம்களில் விடப்பட்ட  பிறகும் முட்கம்பி எல்லைகளுக்குள் வசிக்கும் கூண்டு வாழ்விலிருந்தும் வெளியேற எனக்கு புத்தகங்கள் தேவையாக இருந்தன.  எங்களுடைய முகாம் ஒன்றில் ஒரு பெரியவர் இருந்தார் , வன்னியில் இருந்து எல்லோரும்  உடுப்பையும் , நகை நட்டையும் காவி வந்தோம் ஆனால் அவர் தன்னிடம் சேகரமாகி இருந்த காமிக்ஸ் புத்தகங்கள் , கதைப்புத்தகங்களை இரண்டு பெரிய ரவலிங் பையில் போட்டுகோண்டு வந்திருந்தார் , (அவரைப்பற்றி தனியாக எழுத வேண்டும்) அவரிடம் நட்பாகி புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். அங்கேயும் அந்த சூழலில் இருந்து  வெளியேற புத்தகங்களினுள் இருந்த மந்திரக்கதவை நான் பயன்படுத்திக்கொண்டேன்.

 

போன வாரம் நிகழ் படம் திரையிடலில் இயக்குனர் Guillermo Del Toro’  வின் Pan’s Labyrinth  படம் திரையிடப்பட்டது. படம் பார்க்கும் போதே  புத்தகங்களைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டேன்.

Fantasies’ எனப்படும் யதார்த்த உலகும்  கற்பனையுலகும்  கலந்த படம் அது. படம் தொடங்க முதல் இணையத்தில் தேடிய போது ‘Guillermo Del Toro’.  பற்றி அறிந்து கொண்டேன். மிகத்தெரிந்த இரண்டு  படங்களை எடுத்தவர் ‘Hellboy 1 and 2’ படங்கள்  எனக்கு மிகப்பிடித்த படங்கள் இரண்டும்.   தவிர இன்னொரு கொசுறுத்தகவலும் கிடைத்தது . சிறுவயதில் எனக்கு பிரியமான கதைகளுள் C. S. Lewis 1950 களில் எழுதிய நார்னியா(The Chronicles of Narnia) பிரியமானதொன்று  . எழு பாகங்களைக்கொண்ட நார்னியாவின் நான்கு பாகங்களை வாசித்து இருக்கிறேன். 2005 இல் நார்னியா கதைகளை படமாக்கும் படி  இவரிடமே  முதன் முதலில் கேட்கப்பட்டது ஆனால்  Guillermo Del Toro’   அதனை மறுத்துவிட்டார் காரணம் Pan’s Labyrinth   படத்தினை  எடுத்துவிடுதில் அவர் முனைப்பாக இருந்திருக்கிறார் , அவர் நினைத்திருந்தால் அந்த பெரிய பட்ஜெட் கொண்ட ஹோலிவூட் படத்தை தெரிவு செய்து  இயக்கி  பணம் சம்பாதித்து இருக்கலாம் , ஆனால் அந்த கலைஞனின் மூளைக்குள்  Pan’s Labyrinth கதை உட்கார்ந்து கொண்டு குடைந்திருக்க வேண்டும். அதனால் இதனை எடுக்க கிளம்பியிருக்கிறார்.

ஏன் இங்கு நார்னியா பற்றி குறிப்பிடுகின்றேன் என்றால் நார்னியாவுக்கும் Pan’s Labyrinth   இற்கும் நிறைய ஒற்றுமை களும் வேற்றுமைகளும் உள்ளன, ஒற்றுமைகள்  Pan’s Labyrinth   போன்ற படங்களின் பின்னணியை விளங்கவும் , வேற்றுமைகள்  ஏனைய ஹாலிவூட் போன்ற திரை உலகின் படங்களில் இருந்து Pan’s Labyrinth   எப்படி தனியாக விலகி நிற்கின்றது என்பதனையும் விளங்கிக்கொள்ள உதவும். அதற்கு முதல் Pan’s Labyrinth   படம் ஒரு சின்னசுருக்க அறிமுகத்தைப் பார்க்கலாம்.

1944 இல் ஸ்பானியா நாட்டின் உள்நாட்டு யுத்தச்சூழலில் படத்தின் கதை நிகழ்கின்றது.  ஓஃபெலியா என்ற சிறுபெண் படுகாயப்பட்டுக் கிடப்பதில் படம் தொடங்குகிறது. பின்னணியில் ஒரு குரல் அவளது கதையை நமக்குச் சொல்ல ஆரம்பிக்கிறது. பாதாள உலகின் இளவரசியான மோவான்னா, வெளியுலகைப் பார்க்க ஆசைப்பட்டு, அரண்மனையை விட்டுத் தப்பித்து, பூமிக்கு வருகிறாள். ஆனால், சூரிய ஒளியினால் குருடாக்கப்பட்டு, பூமியிலேயே இறந்துவிடுகிறாள். அவளது தந்தையான அரசரோ, தன் பெண் தன்னிடம் திரும்பி வருவாள் என்று அவளுக்காகக் காத்திருக்கிறார்.

ஒஃபெலியாவின் வளர்ப்புத்தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவருடைய பணி, ஸ்பானிய கெரில்லாக்களை வேட்டையாடிக் கொல்வது. அவருடைய மனைவி, கர்ப்பமாக இருப்பதினால், தான் இருக்கும் இடத்துக்கே அவரை வரவழைத்துக்கொள்கிறார். கூடவே ஒஃபெலியாவும் வருகிறாள். ஒபிலியா கைகளில் தேவதைக்கதைகள் பற்றிய கதைப்புத்தகங்களை வைத்திருக்கிறாள் , அவள் தேவதைகள்  பற்றியும்  மாயாஜால உலகம் பற்றியும் நம்பிக்கையுடன் இருப்பவள். அல்லது அவ்வுலகங்களுக்குள் சஞ்சரிக்க ஆசைப்படுபவள்.

அங்கு ஒஃபெலியா ஒரு பூச்சியைப் பார்க்கிறாள். அது அடிக்கடி அவளுக்குத் தட்டுப்படுகிறது. அதனைப் பின் தொடர்ந்து செல்லும் அவள், ஒரு  சுழல் போல இறங்கும் குகைக்குள் நுழைகிறாள். அங்கு ஒரு பான்(ஆட்டுதலையும் கால்களும் கொண்ட மனித உருவம் – இதனைப்பற்றி பின்னால் பார்ப்போம்), அவள் தான் மொவான்னா என்றும் தங்களுடைய இளவரசி என்றும் சொல்கிறது. என்று சொல்லி, அதனை அவள் நிரூபிக்கவேண்டும் என்றும், அதனால், அவள் மூன்று வேலைகளை வரும் பௌர்ணமிக்குள் செய்ய வேண்டும் என்றும், அப்பொழுது அவள், தனது தந்தையான பாதாள உலகின் அரசரிடம் சென்றுவிடலாம் என்றும் கூறுகிறது. இக்கதைகளில் மிகுந்த நம்பிக்கையுள்ள ஒஃபெலியாவும் ஒத்துக்கொள்கிறாள்.

அவள் இம்மூன்று வேலைகளையும் செய்யச்செய்ய, அவள் வளர்ப்புத்தந்தையான ராணுவ அதிகாரி, கெரில்லாக்களை வேட்டையாடுவதையும் நாம் காண்கிறோம். இடையில் பல அதிசயங்கள் நடக்கின்றன. முடிவில், அவளுக்கு என்ன ஆயிற்று என்பதே இப்படம். படத்தில் நிஜ உலகில் நடக்கும் சம்பவங்கள் எப்படி  மாயஜால உலகிற்கினோடு தொடர்பு பட்டு கதை சொல்கின்றன என்பதைப்பார்க்க முதல் இத்தகைய படங்கள் பற்றிய ஒரு சின்ன விபரிப்பை பார்க்கலாம்.

பொதுவாக ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் முதலாம் , இரண்டாம்  உலக யுத்த காலத்திலும் , அதன் பின்னரும் அந்த யுத்தத்துடன் சம்பந்தப்படுத்தி கதைகள் எழுதப்பட்டு பல லட்ச கணக்கில் அந்த கதைகள் விற்று தீர்ந்தன. குறிப்பாக போரின் காலத்தில் போரில் இருந்து வெளியேறி  கற்பனையும் , ஜாலமும் உச்ச அளவில் விரியும் மாயாஜால உலகிற்குள் வாசகரை அழைத்துச்செல்லும் வகையறா நாவல்கள் ஏராளமாக எழுதப்பட்டன. நார்னியா போன்ற நாவல்களும் அவ்வகையினதே . நார்னியா வாசித்தால் அல்லது படம் பார்த்தவர்களுக்கு தெரியும் , குண்டுக்கு பயந்து அல்லது போருக்கு பயந்து தனிமைப்படும் கதாநாயகர்கள் ,ஒரு வளையத்துக்குள்ளோ அலுமாரிக்குள்ளோ நுழைந்து தாங்கள் ராஜாக்களாகவும் ராணிகளாகவும் மாறி சாகசம் புரியும் தேவதையும் மாய விலங்குளும் உலவும் உலகிற்குள் போய் விடுவார்கள் . இத்தகைய கதை உருவாக்கம் ஐரோப்பா முழுவதும் ஒரு  முவ் மெண்டாகவே உருவாக்கப்பட்டு நிகழ்ந்தது , ஏன் இன்று வரை  அத்தகைய புனைவுகளும் , திரைப்படங்களும் எடுக்கப்பட்டுக்கொண்ண்டேயிருக்கின்றன.

 

இத்தகைய புனைவுகளிற்கு மேலைத்தேசத்து  கதாசிரியர்கள்களும் சரி திரைப்பட இயக்குனர்களும் சரி பழைய கிரேக்க உரோம தொன்மங்களை எடுத்து கையாள்வது வழக்கம் , குதிரையும் மனிதனும் சேர்ந்த சென்ரர்கள்(Cantaur) , பறக்கும்  குதிரைகள் (pegasus) , பீனிக்ஸ் பறவை (phoenix) , கிரிபிண்டர்(Grifindor) ,பான்(pan) போன்றவற்றை எடுத்து தங்கள் புனைவுக்குதகுந்தாற்போல் வடிவமைத்துக்கொள்வது வழக்கம்.உலகயுத்தங்களின் பின்னர் போர்க்காலத்தில் இருந்து வெளியேறும் உளவியலை கையாளும் புனைவுகளில் இதனை அதிகம் காணலாம் , நார்னியா தொடங்கி ஹரிபொட்டர் வரை இது தொடர்ந்து வருகின்றது. நார்னியாவில் எனக்கு பிடித்த முக்கியமான பாத்திரம் MR.TUMNUS எனப்படும் பான்.  அதனைப்போலவே ஒரு பான் கதாபாத்திரைத்தை எடுத்து Pan’s Labyrinth   படத்திலுமும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் Guillermo Del Toro’ . பான் என்பது , கிரேக்க புராணங்களின் படி ஆட்டின் கால்கள் , கொம்பு போன்றவை கொண்ட   ஒரு உருவம் , அது காடுகளைப் பாதுகாக்கும் ஒரு தேவதை என்பதும் அது இசைகருவியொன்றை கொண்டு இனிமையாக இசை மீட்டும் என்பதும்  கிரேக்க புராணங்கள் தரும் தகவல்கள்.

 

பானும் ஒஃசிலாவும்

நான் இவ்வளாவு நேரமும் சொல்வதை வைத்து இது ஒரு மாயா ஜாலங்கள் சிறைந்த வீர சாகசக்கதையென்று நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் நினைப்பது தவறு , இது நார்னியாவைப்போல ஹரிபொட்டரைப்போல வீரசாகசக்கதையோ மாயாஜாலக்கதையோ இல்லை. இது முற்றிலும் அதிகாரத்து எதிராக , பேசும் படம் .மானுட இரக்கம் , சர்வாதிகாரத்தின் கொடுங்கோன்மை , பண்பு என்பவற்றைப்பேசும் படம்.  இந்த இடத்தில் தான் நார்னியா போன்ற சாகச மாயாஜால புனைவுகளில் இருந்து Pan’s Labyrinth   வெளியேறி நிற்கின்றது . அது சாகசத்தையையோ போரையோ  மாயா ஜாலத்தையோ கொண்டாடவில்லை ,அது மாயாஜாலத்தை கொண்டு நிஜ வாழ்கையில் மானுட குலத்தின் பேரன்பிற்கும் , உறவுகளிற்கும் எதிராக எழும் அதிகாரத்தின் வன்முறையை கேள்விக்குட்படுத்துகின்றது.

அதாவது படத்தில் நடக்கும் மாயஜால உலகம் என்பது சரிக்கு சமனாக யதார்த்தத்தில் நடக்கும் சம்பவங்களையும் மனிதர்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது.

மாயஜாலம் படத்தின் சுவாரஸ்ய தன்மைக்கும் , மெல்ல நிஜவாழினுள் உள்ளோடி அதன் அபத்தங்களை நைந்து போகச்செய்யும் கேள்விகளை எழுப்பவும் மஜாயாலத்தை கையாள்கின்றார் இயக்குனர். இந்தப்படத்தின் வெற்றியே அதன் நுட்பமான டீட்டெய்லிங்தான். ஒவ்வொரு சின்ன அசைவையும் இயக்குனர் செதுக்கியிருக்கின்றார்.

பிரதான பாத்திரமான சிறுமியும் சரி , அதிகாரத்தி அடையாளமாக நிற்கும் இராணுவ அதிகாரியும் சரி  ஒவ்வொரு பாத்திரமும் , சம்பவங்களும் இடமும் மைநூட்டாக  பிரதான கதைக்குள் உப கதைகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றது .

எனக்கு படத்தில் மிகவும் பிடிதபாத்திரவடிவம்  அந்த  சிறுமியின்  வளர்ப்புத்தந்தையும்  இராணுவ அதிகாரியுமான Captain Vidal பாத்திரம். மிக அருமையான நடிப்பும் வடிவமைப்பும் கொண்ட பாத்திரம் அது . படம் பார்த்து முடிய உரையாடலில் கிரிஷாந் சொன்னது போல சர்வாதிகாரிக்குரிய பொதுவான குணங்குறிகள் அவனிடமிருக்கும் , ஒவ்வொரு நாளும் (போர்க்காலத்தில் கூட )ஷேவ் செய்து கொள்வது (இது யாரையாவது ஞாபகப்படுத்தினால் நான் பொறுப்பல்ல) தன் மேசையில் ஒரு வெண்கட்டி புதிதாக இருந்தால் கூட கண்டு பிடித்து விடுவது  , தன்னுடைய மரணத்தின் மேல் சதாசர்வ காலமும் பயம் , கட்டற்ற அதிகாரச்செருக்கு  என்று அப்பாத்திரத்தை சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் இறுதியில் அதிகாரம் எப்படி காலத்தின் வழியே மானுட நேயத்துக்கும் அன்புக்கும் முன்னால் வலுவிழந்து போகின்றது என்பதை சொல்ல இயக்குனர் இப்பாத்திரத்தை மினகெட்டு செதுக்கியிருக்கிறார்.

அது மட்டுமில்லை ஏனைய பாத்திரங்களும் அதுசார்ந்து கட்டப்படும் திரைக்கதை , வசனம் , இசை , சம்பவங்களும் அருமையாக படம் முழுவதும் இயங்குகின்றன.  படம் பெயருக்கு ஏற்றால் போல் ஒரு சுழலைப்போல இயங்குகின்றது . படம் பார்க்கும் போது மைநூட்டாக ஒவ்வொரு விடயத்தையும் அவதானித்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் . படத்தைபற்றி தேடும் போது

fantastical facts about pan’s labyrinth  என்று கொஞ்சம்  எழுதியிருந்தார்கள் .படம் பார்க்கும் போது இந்த இணைப்பையும் ஒரு முறை படித்து விடுங்கள்

http://mentalfloss.com/article/79882/14-fantastical-facts-about-pans-labyrinth

மேலும் முன்பு சொன்னது போல படத்தின் ஒவ்வொரு மைநூட்டான விடயங்களுமே படத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கதை சொல்கின்றது . படத்தில் அப்படி எனக்கு பிடித்த இரண்டு விடயங்களை சொல்லி இதனை முடிக்க நினைக்கிறேன்.

படத்தின் இறுதியில் மாயக்கதவை திறந்து வெளியேறத்தக்க வெண்கட்டியால் ஒரு கதவு  சிறுமியின் கட்டிலுக்கு பக்கத்தில் கீறப்பட்டிருக்கும் , ஒரு இரண்டு செக்கன்கள் பிரேமில் அதைக்காட்டுவார்கள் அதைக்காட்டி காட்சி மாறும் அதைப்பற்றிகொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஏதாவது பிடிபடுகின்றதா என்று.

அடுத்து சிறுமி தந்தையான அரசரின் உலகிற்கும் போகும் போது ராணியின் கையில் ஒரு குழந்தை இருக்கும் , அத்தோடு அங்கே சுற்றியிருப்பவர்கள் எழுந்து கைதட்டுவார்கள் . இவற்றையும் கவனியுங்கள் படம் முடிந்த பிறகு உங்கள் தலைக்குள் ஏதாவது ஒரு வெட்டுக்கிளி புகுந்து உங்களையும் வேறு உலகிற்கு கொண்டு போகக்கூடும்.

அடுத்து படத்தின் தொழிநுட்ப விடயங்கள் மிக நேர்த்தியானவை  , இப்படத்தின் இசையும் ஒளிப்பதிவும் இரண்டும் நல்ல ஜாலங்கள் என்றே சொல்லலாம். ஒளிப்பதிவு செய்தவர், Guillermo Navarro. இசையமைத்தவர், Javier Navarrete. இப்படத்துக்கு மூன்று ஒஸ்கார் விருதுகள் கிடைத்தன (ஒளிப்பதிவு, ஒப்பனை, கலை). கான் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரயிடப்பட்டபோது, 22 நிமிடங்கள் வரை கைத்தட்டலும் standing ovationனும் இப்படத்துக்குக் கிடைத்தது என்றும் படத்தைப்பற்றி தேடும் போது படித்தேன்.

அதிகாரத்துக்கு எதிராக மாயாஜாலத்தை நிறுத்துவது அல்லது அதிகாரத்தை ,புனைவின் ஊடாக நெகிழ்த்திச்சாய்பது எனும் இவ்வகையான நுட்பங்கள் ஹோலிவூட் வணிக படங்களினைப்போல் இல்லாமல் , யதார்த்தத்தில் நின்று மானுட குலம் அன்பு மற்றும் மனிதக் கூட்டுபோராட்டம் மூலம் நடத்தும் மானுடத்தின் போராட்டத்தை இது போன்ற படங்கள் பேசுதல் அழகானதும் கனதியானதுமான செய்திகளை இரசிகனுக்குள் விதைக்கும். இத்தகைய படைப்புக்கள் தொடர்ச்சியாக வரவேண்டும் .

படம் திரையிட்டதற்கு நிகழ்படத்துக்கும் உரையாடிய நண்பர்களுக்கும் என் நன்றியும் அன்பும்.

-யதார்த்தன்-

 

 

.

Jan 02

ராஜகுமாரியின் குதிரை .

14721657_10155377928299951_1037140126158657078_n-001

 

2002.06.3

விசுவமடு , சோதியா படையணி முகாம்.

அக்காக்கள் அந்தப்பெரிய பள்ளத்தை நிரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடியிருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரைப்பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச்சொன்ன தென்னங்குற்றியில் கால்களை காற்றில் உலவ விட்டபடி கையில் குதிரை பொம்மையுடன் ,துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப்பற்றித்தான் கிடங்கை மூடிக்கொண்டிருக்கும் பெண்போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர்.

“கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப்போட்டாராமடி ”

“அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் பண்ணிவிடோணும்”

“கெளசி அழுதவளோ ?”

“ஓம் பாவம் அவள் சின்னப்பிள்ளை  இஞ்சதான் ஓடி வந்தவள் ”

“பிறகு?”

நாங்கள் ஓடிப்போனம் , அந்தாள் தூசணத்தால கெளசின்ர அம்மாவைப் பேசிக்கொண்டு நிண்டது , எங்களக்கண்டதும் ஆள் கப்சிப்பா வீட்டுக்கு பின்னால போட்டுது.

“பாவம் அவா”

”ஏன் சண்டையாம் ?”

“கெளசிய ஏன் எங்கட பேசுக்கு விட்டதெண்டு கேட்டு அடிச்சவராம்”

“அந்தாளுக்கு குடிச்சிச்சிட்டு  மனிசிய அடிக்க ஒரு காரணம் தேவையடி துர்க்கா  ”

கெளசியை எல்லோரும் பார்த்தனர், அவள் அவர்களைப்பார்த்து கண்ணை சிமிட்டிச்சிரித்தாள் . அவளுடைய வட்ட முகம் அவள் அணிந்திருந்த பாவாடை சட்டையில் அங்காங்கே மின்னிய சிக்குவின்ஸ்களைப்போல பளீச்சிட்டது. எல்லாப்பாவத்தையும் கழுவிவிடும் ஓர் புன்னகை அவளிடமிருந்ததை அவர்கள் உணர்ந்தனர்.ஆனால் யோகந்திரநாதனுக்கு தன்னுடைய குழந்தையின் தேவதைத்தன்மைகள் தெரிந்ததேயில்லை.

கெளஷல்யா பற்றி வீரவேங்கை நிலவழகி எழுதிய டயரிக்குறிப்பு .

யோகேந்திரநாதன் நெடுந்தீவில் இருந்து பஞ்சம் பிழைக்க தந்தையோடும் தாயோடும் விசுவமடுவில் குடியேறியவர். தன்னுடைய 20 ஆவது வயதில் தந்தையின் வெற்றிலைக்கடையைப் பொறுப்பேற்றார் . மேரி செபஸ்ரினாவை காதலித்து திருமணம் செய்த போது அவருக்கு வயது 25 , செபஸ்ரினா கொழும்பைச்சேர்ந்த  இலங்கை பறங்கிய இனத்துப்பெண். நன்றாகத்தமிழ் கதைப்பாள் . கொழும்பில் உறவினர் வீட்டுக்குப்போன இடத்தில் அவள் மீது காதல் கொண்டு அவளைக்கல்யாணம் செய்து அவளோடு அங்கேயே இருந்து விட்டார். அங்கே பிறந்தவள்தான் கெளஷல்யா. தன்னுடைய பேர்த் சேட்டிபிக்கட்  இங்கிலிசில் இருப்பதாய் தன்னுடைய பள்ளிக்கூடத்தோழிகளுக்கும் , பேசில் பெண் போராளிகளுக்கும் சொல்லி அவள் புழகாங்கிதம் அடைவதுண்டு. கெளஷல்யா  ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு வன்னிக்கான பாதை திறக்க , யோகேந்திரநாதன் விசுவமடுவிற்கு திரும்பி மறுபடியும் தன்னுடைய வெற்றிலைக்கடையை ஆரம்பித்தார்.

அவர் தீடிரென்று விசுவமடுவிற்கு திரும்பியது ஏன் என்று  செபஸ்ரினா கேட்கவில்லை , இராமன் இருக்கும் இடம் தானே சீதைக்கு அயோத்தியென்று வாழும் பெண்களில் ஒருத்தியாக இருந்தாள் அவள் .  அவர்களுடைய வீட்டிற்கு அருகில் எங்களுடைய சோதியா படையணியின் முகாம் இருந்தது. விதுசாக்காவின் பொறுப்பில் அறுபது பெண்போராளிகள் இருந்தோம்.

 விசுவமடுவிற்கு வந்த பிறகு யோகேந்திரநாதன் முற்றிலும் மாறிப்போனார் எப்போதும் குடித்து விட்டுவந்து செபஸ்ரினாவை போட்டு அடித்தார். அடிக்கடி அவனுக்கு அவளுடைய உணவில் உப்பு இல்லாமல் இருந்தது அவருக்கு  , அடிக்கடி அவள் கொமினிக்கேசனுக்கு சென்று அவளுடைய குடும்பத்துடன் தொலைபேசியில் கதைப்பதால் தான் சம்பாதிக்கும் பணம் கரைந்து போவதாக குழறினார், கெளசல்யா விடும் சின்ன தவறுக்கு கூட அவளுடைய பிஞ்சுக்காலில் சிவந்து கன்றிப்போகுமளவிற்கு அடித்தார். வாரத்தில் மூன்றுநாள் யாழ்ப்பாணத்திற்கு வெற்றிலை விற்றுவருவதாகக் புறப்பட்டு விடுவார். செபஸ்ரினாவும் தாய்கும் உணவிற்கு எப்போதாவதுதான் காசு கொடுப்பார். செபஸ்ரினாவிற்கு கொழும்பில் இருந்து அம்மா காசு அனுப்புவது அவருக்கு இன்னும் தெரியாது அதைச்சொன்னால் அந்தப்பணமும் சாராயக்கடைக்குப்போய்விடும் என்று அந்த அபலைப்பெண் உணர்ந்திருந்தாள் . அவளுடைய ஒரே நின்மதி கெளஷல்யா மட்டும்தான். கணவன் அடித்து கன்றிப்போன தோளிலும் , சிகரட் காயங்கள் ஆறாத மார்பிலும் தன்னுடைய குழந்தையை தூக்கிப்போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் ,சந்தை ,சேர்ச் என்று போய்வருவாள். அவளுக்கு கெளஷல்யா மட்டுமே ஒரே ஆறுதல் .

ஒரு நாள் நானும் இசையரசியும் சைக்கிளில் வரும் போது கெளஷல்யாவைத் இடுப்பில் தூக்கியவாறு செபஸ்ரினா வந்துகொண்டிருந்தாள். கொழுத்தும் வெய்யில் தன்னுடைய சேலைத்தலைப்பால் கெளசியின் தலையை மூடியிருந்தாள் ,வலது தோளில் கெளஷிக்கு பிரியமான “யுனிக்கோன்” குதிரையின் படம் போட்ட புத்தகப்பை தொங்கியது. அவர்களைப்பார்க்க பரிதாபமாக இருந்தது . நான் ஜென்ஸ் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன் இசையரசி லெடீஸ் சைக்கிளில் . நான் கெளஷியை  சைக்கிள் பாரில் ஏற்றிக்கொள்ள , இசையரசி செபஸ்ரினாவை தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டாள். இசையரசியால் பின்னால் செபஸ்ரினாவை ஏற்றிக்கொண்டு கைகளில் துவக்கையும் வைத்துக்கொண்டு சைக்கிளை மிதிக்க கஸ்ரமாக இருக்கவே செபஸ்ரினா துவக்கை ஏதோ சுவாமிப்பிரசாதத்தை வாங்குவதைப்போல் பயபக்தியுடன் வாங்கி வைத்துக்கொண்டாள்.

என்னுடைய சைக்கிள் பாரில் அமர்ந்திருந்த கெளஷல்யா செபஸ்ரினாவிடம் அந்த துவக்கை தரும்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டே வந்தாள் ,  அன்று வரும் வழியில் செபஸ்ரினா அவளுடைய கதையைச்சொல்லிக்கொண்டே வந்தாள் . அழுதாள்.இடைக்கிட எல்லாம் கர்த்தர் விட்ட வழி ! என்று கண்கலங்கினாள் . இறுதியாக

அவருக்கு யாழ்ப்பாணத்தில ஆரோடையோ தொடர்பெண்டு கதைக்கினம் , ஆனா நான் நம்பேல ! என்றாள் . அதைச்சொல்லும் போது அவளுடைய கண்கள் பனிக்கவில்லை . குரலில் ஒரு விரக்தி ஏறி க் கிடந்தது.

அப்போது கொளஷல்யா துவக்கைக்கேட்டு மீண்டும்  அடம்பிடித்தாள்.

அதன் பிறகு எஙகளுக்கு ஓய்வு நேரம் வரும் போது அல்லது சாப்பாட்டு நேரத்தில் கெளசியைத்தூக்கி வந்துவிடுவோம். அல்லது அவளே ஓடி வந்துவிடுவாள். எங்களுடன் விளையாடுவாள். விதுசாக்கா என்றால் எங்களுக்கு சரியான பயம் . கொஞ்சம் கண்டிப்பான பொறுப்பாளர். ஆனால் கெளஷி விதுசாக்காவின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டுன் அவான்ர கன்னத்தில் அறைவாள் . விதுசாக்காவை அடிக்க கூடிய ஒரேஆள் கெளசிதானடி . என்று சொல்லிச்சிரிப்போம் . எங்களுடைய அதிக பட்ச சந்தோசமாக கெளசி மாறிப்போனாள்.

 

கெளஷல்யா எழுதிய அம்மா , அப்பா மற்றும் குதிரை பற்றிய குறிப்பு

2008.03.23

யோககேந்திரநாதன் கெளஷல்யா

தரம் 10 விசுவமடு மகாவித்தியாலயம்

அம்மா எத்தனைதடவை அழுதாளோ  அத்தனை தடவை நான் அப்பாவை வெறுக்கிறேன் , சே இல்லை அவர் எனக்கு அப்பா இல்லை . எங்களுக்கு துணையா அக்காக்கள் இருக்கினம்  அம்மா இருக்கிறா .எனக்கு ஆர் அப்பா ? எனக்கு என்ர ஜேசுதான் அப்பா .. ஓம் நான் அவரின்ர குழந்தை , அம்மா அப்பிடித்தான் சொல்லித்தந்தவா. ஜேசு எனக்கு எல்லாம் கொண்டுவந்து தருவார் எண்டு அம்மா சொல்லுவா. எனக்கு எப்பவும் குதிரைதான் பிடிக்கும் . அம்மா எனக்கு சின்னன்ல இருந்து கதை சொல்லுவா. அதில வாற குதிரையள எனக்கு பிடிக்கும். அம்மா கதையில சொல்லும் போது எனக்கு குதிரை பத்தோட பதினொண்டாதான் தெரியும் .அப்ப நான் ஏழாம் வகுப்பு   ஒரு நாள் அப்பாவோட யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக்கு போனன் , அப்ப நான் ஏழாம் வகுப்பு   அப்பத்தான் நிஜத்தில  கண்ணால குதிரையைக்கண்டனான். என்ன வடிவு . எனக்கு பார்த்ததும் பிடிச்சிட்டு . தொட்டுபார்ர்கோணும் ஏறிப்பாக்கோணும் எண்டு விருப்பமா இருந்தது.அதுக்குப்பிறகுதான் எனக்கு குதிரையில அவ்வளவு விருப்பம் வந்தது . அண்டைக்கு குதிரைய ரோட்டில ஆமிக்காரன் கொண்டு போனத பாத்ததில இருந்து எனக்கும் ஒரு குதிரை வச்சிருக்கோணும் எண்டு ஆசையா இருந்தது. ஆசுப்பத்திரிக்கு போய் முட்டு வருத்தத்துக்கு மருந்து எடுத்தா பிறகு “குலம் கூல் பார்ல” அப்பா எனக்கு டீயும் வடையும் வாங்கித்ததந்தவர்.எனக்கு மிளகாய் எண்டா புழுத்த பயம் அப்பா என்ர வடைய வாங்கி மிளகாயை பிச்சு எடுத்து தந்தார். அப்ப நான் அப்பாட்ட கேட்டன்.

“அப்பா எனக்கு குதிரை வாங்கித்தாங்கோவன்”

“வீட்ட கொம்மா எத்தின விளையாட்டிச்சாமான் வாங்கி குவிச்சு வச்சிருக்கிறாள் அதை விளையாடு”

“விளையாட்டுக்குதிரை இல்லையப்பா உம்மையான குதிரை”

“உனக்கென்ன விசரோ ? எழும்பி வா பஸ் வெளிக்கிடப் போகுது ”

நான் முகத்தைத் தொங்கப்போட்டபடி வந்து அம்மாட்ட கேட்டன்.

“நீ உழச்சு வாங்கு குட்டியம்மா”

என்றாள். வாங்கோணும்.

பேசில அக்காக்களிடமும் சொன்னன் , நீ வாங்குவாய் செல்லம் என்று முத்தம் கொடுத்தார்கள். நிலவழகி  அக்கா எனக்கு ஒரு குதிரைப்பொம்மை வாங்கித் தந்தவா. முகாமாலைச் சண்டையில் நிலாக்கா வீரச்சாவு எண்டு கெள்விப்பட்டதும் நான் அந்த பொம்மையை கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுதனான்.எப்பவும் நான் படுக்கேக்க அக்கா தந்த குதிரைய தான் கட்டிப்பிடிச்சுக்கொள்ளுவன்.

அண்டைக்கு வீட்ட நடந்த சண்டை இன்னும் கண்ணுக்க நிக்குது . அது நடந்து ரெண்டு வருசம் ஆகீட்டு  . அண்டைக்கு நான் வழமை போல பேசில அக்காக்களோட விளையாடிக்கொண்டு நிண்டனான் . அம்மா தீடீரெண்டு அய்யோ எண்டு குழறிக்கேட்டுது. அக்காக்கள் எல்லாம் பதிறியடிச்சுக்கொண்டு எங்கட வீட்ட ஓடிச்சினம் நானும் பின்னால ஓடினன் . அம்மா எங்கட சாணம் மொழுகின திண்ணையில் தலைய பிடிச்சுக்கொண்டு இருந்தா அம்மான்ர கையெல்லாம் ஒரே ரத்தம்  தலையால வந்த  ரத்தம் அம்மான்ர முழங்கையில இருந்து வடிஞ்சு கொண்டு இருந்தது. அப்பா அம்மாவை கோபமாக தூசணத்தால் திட்டிக்கொண்டு  படலையைத் திறந்தபடி வெளியில போக வெளிக்கிட்டார். அப்பத்தான் விதுசாக்கான்ர கை அப்பான்ர கன்னத்தில ஒரு பெரிய அறை விட்டது. அப்பா தடுமாறிப்போய் விழுந்தார் . அவருக்கு நல்ல வெறி. எழும்பி விதுசாக்காவை அடிக்கப்பார்த்தார். அதுக்குள் பக்கத்து வீட்டுக்காரர் சிலபேர் அவரைப்பிடித்து இழுத்து நிப்பாட்டிட்டினம்.  ஈழநிலா அக்கா என்னை தூக்கினா. நான் அவாவ இடறிட்டு அம்மாட்டை ஓடினன் .அம்மா மயங்கீட்டா. உடன அம்மான்ர தலைக்கு துணியால சுத்தி ஆசுப்பத்திருக்கு கொண்டு போச்சினம். விதுசாக்கா வோக்கிய எடுத்து காவல் துறைக்கு அறிவிச்சா. காவல் துறை வந்து அப்பாவை கூட்டிக்கொண்டு போனது.அண்டைக்குதான் அவரை நான் கடைசியா கண்டது. நான் அம்மா வீட்ட வரும் வரைக்கும் பேசில தான் நிண்டன். என்னை அக்காக்கள் மாறி மாறி மோட்டசைக்கிள்ள அம்மாவைப்பார்க்க கூட்டிக்கொண்டு போவினம் . அக்காக்கள் தான் அம்மாக்கு சாப்பாடு குடுத்தவை . துர்க்கா அக்கா அம்மாவோட துணைக்கு நிண்டவா.

அப்பா அதுக்குப்பிறகு வரேல்ல. நான் அம்மாட்ட நான் அடிக்கடி அம்மாட்ட சொல்லுவன்

“எங்களுக்கு அக்காக்கள் இருக்கினம் தானே ”

“ஓமடி ராசாத்தி”

”அம்மா நான் நல்லா படிச்சு உன்னை ராணி மாதிரி வச்சிருப்பன்”

அம்மா “ஓம் நீ என ராசகுமாரி தானே ” என்று சிரிப்பாள்.

ஓம் நான் ராசகுமாரிதான். குதிரைதான் இல்ல.

2016.06.20

பல்கலைக்கழகப் பேருந்து  குறிகட்டுவன் இறங்கு துறையில் எங்களை இறக்கிவிட்டது.

குறிகட்டுவனில் ,தரித்து நின்ற படகுகளைப் பார்க்க   எனக்குப் பயமாகத்தான் இருந்தது  23 வயதாகின்றது எனக்கு .ஆனால் ஒரு நாளும் படகில் சென்ற அனுபவம் வாய்க்கவில்லை .  மாத்தளனில் காலில் காயப்பட்டு மயங்கிய பின்னர் என்னை கப்பலில்தான் திருகோணமலைக்குகொண்டு வந்ததாக அம்மா சொன்னாள் .அதனால் அந்தக் கப்பல் பயணம் எனக்குத் தெரியாது எனவே குமுதினியில் இன்று நெடுந்தீவு போவதுதான் என்னுடைய முதலாவது கடல்  பயணம். கடல் என்றால் எப்போதும் எனக்குப்பயம் , குறிகட்டுவனில் நின்று கடலைப்பார்த்தேன். நையினாதீவு அருகில் தெரிந்தது.

திருவிழாக்காலமாதலால்  மக்கள் அதிகமாக நையினா தீவுப்படகுகளைப்பிடித்து கோயிலுக்குப்போய் கொண்டிருந்தனர். வழமைபோல நையினா தீவு விகாரைக்குச்செல்லும் சிங்கள் மக்கள் தனி லைனில் கைகளில் தாமரைகளை ஏந்தியபடி நகர்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் குமுதினிக்கு காத்திருந்தோம். காலை வேளைக்கடல் மெல்ல மெல்ல விம்மிக்கொண்டிருந்தது. கடல் பூமிக்கு பக்கத்தில் இருக்கும் இன்னொரு உலகமாக இருக்க வேண்டும் , நான் அப்படித்தான் நம்பினேன். குமுதினி வந்து தரித்து நின்றாள். விதுசாக்க ஒருநாள் மாவீரர் தினத்தில் உரையாற்றும் போது குமுதினிப்படுகொலை பற்றி கண்ணீருடன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நடுக்கடலில் குமுதினி இரத்தத்தாலும் மரணத்தாலும்  நிரப்பப்பட்டாள் , ஒட்டுமொத்த தமிழ்ச்சனமும்  அழுதது என்றாள் விதுசாக்கா , அக்காவின் உறவினர் யாரோ

கொல்லப்பட்டதாக  துர்க்கா அக்கா கிசுகிசுத்ததும் ஞாபகம் வந்தது .

குமுதினியில் ஏறியபோது ஏதோ ஒரு வெக்கை உடலில் மோதியது , என்னுடைய தோழிகளும் நண்பர்களும் ஏறினார்கள் , நெடுந்தீவு மக்களும் ஏறினார்கள் . எண்ணை ஏறிய முகங்களை அளந்தேன்.  அனேகமாக யாழ்ப்பாணாம் டவுனுக்கோ அல்லது வைத்திய சாலைக்கோ போய்விட்டு வருபவர்களாக இருக்கும். அவர்களுக்கு படகுப்பயணம் இயல்பான ஒன்றுதான் . குமுதினி அவர்களை வயிற்குக்குள் வைத்து பலமுறை சுமந்து சென்றிருப்பாள்.

“குழந்தைப்பிள்ளை காறருக்கு இடம் குடுங்கோ” ஓட்டி ஒருவர் பெரிய குரலில் சொன்னார். நாங்கள் மேல்தளத்தில் நிற்க முடிவு செய்தோம் வெய்யிலுக்கு குடைகளை எடுத்துக்கொண்டோம் . நாங்கள் நெடுந்தீவி|ற்கு அங்கிருக்கும் மரபுரிமை சின்னங்களை ஆய்வு செய்ய புறபட்டிருந்தோம்..

அப்பாவை நினைத்துக்கொண்டேன் ,அவர் நெடுந்தீவில் தான் பிறந்தார் , தன்னுடைய ஊர் பற்றி அடிக்கடி சிலாகித்துக்கொள்வார். எனக்கு குதிரைகள் பிடிக்கும் என்று அவருக்கு தெரியும் . எப்போதாவது என்னை அபூர்வமாக தூக்கி மடியில் வைத்துக்கொள்வார் . நெடுந்தீவில் குதிரைகள் இருக்கின்றன என்று சொல்வார் . குதிரைகள் என்றதும் நான் குதூகலமாகி அவர் வாயை ஆவலாக பார்க்க ஆரம்பிப்பேன் . ஆனால் மேலே சொல்ல மாட்டார் . அவருக்கு அது ஒரு சாதாரணவிடயம்தானே. அவருக்கு நான் ஒரு இராஜகுமாரியென்றும்  என்னிடம் குதிரையில்லை என்றும் தெரியாது .அது அம்மாக்கும் அக்காக்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.

அக்காக்கள்

“அம்மா எங்களுக்கு அக்காக்கள் இருக்கிறார்கள் ” அப்போது நான் அம்மாவிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது . அவர்கள் இல்லாமல் போனபின்னர்தான் , அம்மாவையும் என்னையும் மோசமன ஆண் உலகால் நெருங்கிவர முடிந்தது . ஆண் துணையில்லாத வீடு என்பது இந்த உலகத்திற்கு என்னவாய் எல்லாம் தெரிகின்றது. எவ்வளவு கொடூரமான நாக்குகள் இருக்கிறது பலருக்கு. இரத்தமும் சதையுமாலன்ரி பழிச்சொற்களால் செய்ய்பட்ட நாங்குகள்.

 விஸ்வமடுவில் இருந்து எனக்கு கம்பஸ் கிடைத்ததும் யாழ்ப்பாணாம் ஓடிவந்ததற்கு  அதுவும் ஒரு காரணம். நலன்புரி முகாமால் விடுதலையாகி வந்து பழையபடி விஸ்வமடுவில் இருந்தோம். அம்மா ஏ. எல் மட்டும் கொன்வன்ரில் ஆங்கில மொழியில் படித்தவள். நிறைய வாசிப்பாள் , அம்மாவையும் என்னையும் அம்மம்மா கொழுபிற்கு வரும்படி அழைத்தாள் .ஆனால் அம்மா போகவில்லை. நான் பல்கலைக்கழகம் நுழைந்தவுடன் யாழ்ப்பாணம் வந்துவிட்டோம். அம்மா ஒரு நேசரியில் டீச்சராக இருந்தாள் , எனக்கும் அம்மாவிற்கும் போதுமான வருமானம். என்னுடைய பல்கலைக்கழக உதவிப்பணத்தில் படிப்பினைப்பார்த்துக்கொண்டேன். வீட்டில் அயல் வீட்டு பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்தேன் . அப்பாவுடன் இருக்கும் போதும் , முகாமில் இருக்கும் போதும் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும் போது இந்த வாழ்க்கை எனக்குக்கும்  அம்மாவிற்கும் நின்மதியான ஒன்றுதான்.  வனிதா அன்ரிதான் எங்களுக்கு எல்லாமுமாய் இருந்தார்.

. யாழ்ப்பாணத்தில் அம்மாவின் பால்யகால தோழியான வனிதா அன்ரி வீட்டில் நாங்கள் இருந்தோம். வனிதா அன்ரி கல்யாணமாகி அவருடைய கணவர் சவுதியில் இருந்தார் . வருஷத்தில் ஒருமுறைதான் வருவார். மற்றபடி வனிதா அன்ரிக்கு நாங்களும் அவர் எங்களுக்கும் துணையாக இருந்தோம். ஆனாலுமங்கும் சில நாக்குகள் மோசமாவே இருந்தன. ஆனால் வனிதா அன்ரி மிகவும் தைரியசாலி ஏதும் கதைப்பவர்களை ரெண்டில் ஒன்று பார்த்து விடுவாள் . எனக்கு வனிதா அன்ரியைப்பார்க்கும் போது விதுசாக்காவின் ஞாபகம் வரும். அக்காக்களை அடிக்கடி நினைத்து அழுவேன்.

யார் யார் உயிருடன் இருப்பார்கள் என்று நினைத்துப்பார்த்தேன். 2009 ஜனவரியில் அவர்களின் முகாம் கலைக்கப்பட்ட போது என்னிடம் வந்து விடை பெற்றுப்போனார்கள் , அழுது குழறினேன். அம்மாவும் அழுதுவிட்டாள். அம்மாவிற்கு தைரியம் சொல்லிவிட்டு அம்மாவின் கையில சங்கிலி ஒன்றை விதுசாக்க கொடுத்து விட்டுப்போனார். அங்கிருந்த  அறுபது போராளிகளுக்கும் நானொரு மகளாக இருந்தேன். மார்ச் மாசத்தில் விதுசாக்கா வீரச்சாவடைந்ததாக  அறிவித்தார்கள் , அடுத்தடுத்து ஈழநிலாக்கா, தமிழ்நதியக்கா , துர்க்காக்கா என்று அடுத்தடுத்து சந்தனப்பேழைகளில்  வந்தனர் . எனக்கு சாவு என்பது என்னவென்று விபரம் தெரிய ஆரம்பித்த வயதில் எல்லாவற்றையும் சொல்லித்தந்த என்னுடைய அக்காக்கள் சாவையும் ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு சொல்லித்தந்துவிட்டுப்போனார்கள்.

குமுதினிக்குள் இறங்கினோம் ஒர் வெம்மை குமுதினிக்குள் இருந்து வந்து உடலில் மோதியது. தோழிகளின் கைகளைப்பிடித்துக்கொண்டு இறங்கினேன் .நண்பர்கள் படகில் இருக்கும் நெடுந்தீவு மக்களுக்கு இதழ்களை விநியோகிக்கத்தொடங்கினர். நான் படனின் யன்னலால் கடல் பரப்பை பார்த்தபடியிருந்தேன். எப்போதும் அம்மாவின் வயிற்றில் ஏறிப்படுத்துக்கொள்வேன் , அடிக்கடி அம்மா எதையாவது யோசித்து யோசித்து பெருமூச்செறிவாள். அப்போது அவளுடைய வயிறு விம்மி விம்மி எழுந்து அடங்கும் அழுதால் நான் கண்டுபிடித்துவிடுவேன் பிறகு அவளுடைய சோகம் என்னிடம் வந்துவிடுமென்று என்னிடம் எப்போதும் சிரித்துக்கொண்டு , தன்னுடலுக்குள் தன் துன்பமெல்லாம் அடக்கி வைத்திருந்தவள் , அந்த விம்மல் அவளுடைய பெருமூச்சில் தெரியும் , இன்று கடலைப்பார்க்கும் போது அதன்  சலனம் அம்மாவின் பெருமூச்சில் விம்மும் மார்பினைப்போல எனக்குத்தெரிந்தது. அலைகளின் சலனம் குமுதினியை சற்று ஆசைக்கவே நண்பியொருத்தி

“என்னடி இப்பவே இப்பிடி ஆட்டுது” என்று பயந்தாள் . நான் கடலையே பார்த்தபடியிருந்தேன் . குமுதினியின் வயிரு மக்களால் நிறைந்தது . சிங்கள மக்கள் , வெள்ளைக்காரர்கள் , நெடுந்தீவுக்காரர்கள் என்று பல முகங்கள் வியர்க்க விறுவிறுக்க படகினுள் அடைந்துகொண்டனர். குமுதினி மெல்ல நகர ஆரம்பித்தாள்.

நெடுந்தீவு முருகைக்கற்களால் செய்யப்பட்ட தேசம். பெருநிலத்தின் குணங்குறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கடல் நிலம். கற்களை அடுக்கி கட்டிய மக்களின் மதில்சுவர்கள் ஒன்றுக்கொன்று தம்முடைய சொரசொரப்பான உடலால் பின்னிப்பிணைந்து கிடந்தன. கடற்படையின் முகாங்கள் புதுப்பாத்திரமொன்றில் தீடிரென அங்காங்கே உருவான துருக்களைப்போல  சிங்கள பெயர்ப்பலகைகளுடன் இருந்தன. சொற்பமான மனிதர்களையே அங்கே காண முடிந்தது . இலங்கயின் மிகப்பெரிய தீவு அது தொன்மையான சரித்திரத்தையும் மரபுகளையும் கொண்டு நின்றது .  அங்கு வாழ்ந்த பலகுடிகள் இடம்பெயர்ந்து போன பிறகு பாதி நிலம் தரிசாக , கற்கள் சிதறிப்போய் கிடக்கின்றது, எங்குபார்த்தாலும் ஆல மரங்கள் , விழுதுகள் விழுந்த மூத்த ஆலமரங்கள் , எங்கும் முருகைக்கற்கள். நாங்கள் ஒவ்வொரு இடமாக பார்த்தோம் . நான் குதிரகளைப்பார்க்க ஆவலாக இருந்தேன் , ஏற்கனவே கட்டையாகி , பராமரிப்பற்று நொஞ்சுபோய் இருந்த அந்தக்குதிரைகளை நான் போட்டோக்களில் பார்த்திருக்கின்றேன் , ஒல்லாந்தர்களும் , ஆங்கிலேயர்களும் விட்டுப்போன மிச்சங்களின் மிச்சங்களாய் நொடிந்து போய் அந்தக்குதிரைகள் அங்கே துன்பத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தன. பலகதைகளுக்குச்சொந்தமான பழைய தொன்மங்களின் வழித்தோன்றல்கள், குல்சாரி நாவலில் வரும் “குலுங்கா நடையான்” என்ற குதிரை அப்படித்தான் இருக்கும்,

 அப்பா தன்னுடைய அம்மாவின் ஊரைப்பற்றி ,சொன்னது ஞாபகம் வந்தது, விதுசாக்கா கொடுத்த அடியுடன் காவல்துறை அவரைப்பிடித்துக்கொண்டு போனபோது அவரின் முகம் அதே காட்சியோடு என்னுள் பதிந்துகிடக்கின்றது.அவர் யாழ்ப்பாணம் வந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டதாக அம்மாக்கு யாரோ சொன்னதை நான் அப்போது கேட்டிருக்கிறேன் .ஆனால் அப்பா போனதன் பின்னர் அம்மா நின்மதியாக இருந்தாள் என்று நினைத்தேன். இடைக்கிட அவளிடமிருந்து வெளிப்படும் விம்மலுக்கு ஒரே மருந்தாக நான் மட்டுமெ இருந்தேன். ஊரில் இருப்பவர்கலின் கதைகளுக்கு அம்மா முகம் கொடுத்த போது ஒருநாள்

“அப்பா இருந்திருக்கலாமடி” என்று சொல்லிவிட்டாள் . எனக்கு கோபம்தான் வந்தது. அவர் உன்னை அடிச்சே சாக்கொல்லியிருப்பார் அம்மா. என்னை அணைத்துக்கொண்டு அழுதாள்.

நீயும் பெரிய பிள்ளை ஆகிட்டயடி அதுதான் பயமா கிடக்கு.

அம்மா எனக்குள் குறைவான  ஆசைகளை மட்டும் உருவாக்கும் தன்மையை வளர்த்திருந்தாள்.அத்தோடு அவளிடமில்லாத தைரியத்தை நான் கொண்டிருப்பதாய் சொல்வாள் . விதுசாக்காவைப்போலவே நானும் கதைப்பதாய் சொன்னாள் . எஅன்க்கு அது பெருமையாய் இருக்கும். தவிர நானொரு இராஜ குமாரியல்லவா, குதிரையில்லாத ராஜகுமாரி . எனக்கிருந்த அதிகபட்ச ஆசையே குதிரை மட்டும் தான் போலும் . என்னுடைய சிறுபிராயத்தை நினைத்து சிரித்துக்கொள்வேன். அல்லது அழுவேன்.

அன்று மதியத்தின் பின்னர் தான் குதிரைகள் நிற்கும் வெளிகளுக்கு போனோம் . நீண்ட இந்துக்கடல் சிறுகாடுகளுக்கு அப்பால் தெரிந்தது கடற்கரைகளில் உள்ள புல் நிலங்களில் செம்மண் நிறத்தில் அந்த குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் குட்டிகளோடும் கூட்டம் கூட்டமாயும்  தனியாகவும் அவை மேய்ந்துகொண்டிருந்த அவற்றின் தோற்றம் பரிதாபமாய் இருந்தது .  இவற்றில் ஏறி எந்த அலெக்சாண்டரும் போர் புரிய முடியாது , இவற்றில் ஏறி எந்த பிருத்விராஜனும் காதலியை இரட்சிக்கச் செல்ல முடியாது., ஆனாலும் அவற்றை எனக்கு பிடித்துக்கொண்டது . அவை குதிரைகள் வை அப்படி இருப்பது அவற்றின் தவறல்லவே.

என்னுடைய நண்பர்கள் அவை குதிரைகளா , போனிகளா , கோவேறு கழுதைகளா என்று விவாதிக்க தொடங்கிவிட்டனர். நான் அவர்களை விட்டு விலகி வெய்யிலில் நடந்து அவற்றின் அருகில் போனேன். என் அருகாமையை கண்டு விலகி மெல்ல ஓடின. எனக்கு அவற்றை தொட்டுப்பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவை என் அருகில் நிற்க பயந்தன. நணபர்கள் என்னைப்பார்த்து சிரித்தார்கள். சிலர் நாகதாளிப்பழங்களைப் பிடுங்கி உண்ணத்தொடங்கினார்கள் , சிலர் கமராக்களை உயிர்பித்து படங்களைஎடுக்கத்தொடங்கினார்கள்.

எனக்குள் குதிரைகளைக்கொண்டதும் எங்கிருந்தோ ஓர் இனம்புரியாத கூதூகலம் தொற்றிக்கொண்டது. அக்காக்களை நினைத்துக்கொண்டேன். அவர்களுடன் விளையாடுவது போல் ஒரு பிரமை அந்த குதிரைகளை நெருங்கிச்செல்லும் போது எனக்குள் எழுந்தது. கொழுத்தும் வெய்யில் எனக்கொரு பொருட்டாயில்லை.

அப்போது சற்றுத்தள்ளி ஒரு வெளியில் அவனிக்கண்டேன் , ஒரு சிறுவன்.  அவன் உயரமே உள்ள குதிரையொன்றின் மீது ஏறி அந்த வெளியில் உச்சி வெய்யிலில் போய்க்கொண்டிருந்தான் . அவனைக்கண்டதும் என்னுடைய நண்பர்கள்  உற்சாகமானார்கள் . அவனைக் கை தட்டி அழைத்தார்கள் . ரப்பர் கயிற்றால் கட்டப்பட்ட அந்த குதிரையை எங்கள் பக்கம் திருப்பி மெல்ல மெல்ல நடநத்தி வந்தான். நண்பர்கள் சிலர் ,

“அய்யோ பாவம் குதிரை , நொஞ்சான் போல இருக்கு அதில உந்தப்பெடியன் ஏறி வாறான்” என்று பரிதாபப்பட்டார்கள்.

அவன் நெருங்கி வர அவனுடைய முகம் எனக்கு தெரிந்தது , அவனை

விட்டுவிட்டு நான் குதிரையை ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தேன் அவன் நன்றாக நெருங்கி வந்த பின்னால்தான் அவனைப்பார்த்தேன். தூசி ஏறிய தலை , தெத்திப்பல் , கரிய தேகம் குதிரையின் நிறத்தில் ஒரு சேட்டும் நீலநிற பள்ளிச்சீருடைக் காற்சட்டையும் அணிந்திருந்தான். அவன் முகத்தை நான் முதலில் எங்கோ பார்த்த பிரமை தட்டியது. ஆனால் அது பிடிபடாமல் போகவே. நண்பர்களுடன் இணைந்து குதிரையை நெருங்கினேன்.

“தொட்டுப்பாக்கட்டோ ?” அவனிடம் கேட்டேன்.

சிரித்தபடி தலையாட்டினான்.

தோழியொருத்தி

“வேண்டாமடி கடிக்கும்” என்றாள். அதற்கு அவன்.

இல்லை ஒண்டும் செய்யாது தொடுங்கோ

நான் தைரியமாக அதன் பிடரி முடியை வருடினேன் .

அதன் மேல் ஏற்வேண்டும் போல் இருந்தது. அவன் வயதில் இருந்திருந்தால் ஏறியிருப்பேன்.எனக்கு அவன் மேல் பொறாமையாக இருந்தது. என்னுடைய நண்பர்கள் அவனை பேட்டி  எடுத்தனர் குறிப்புக்களை மள மளவென எழுத ஆரம்பித்தர்.

“இது குதிரையோ , கோவேறு கழுதையோ ?

“குதிரைதான்””

“இது ஆற்ற குதிர”

“என்ர ”

“ எத்தின வருசமா வளக்கிறீர் ?”

“மூண்டு வருஷம்”

“பளிக்கூடம் போறேல்லயோ ?”

“சிரித்தான்”

“அப்பா என்ன செய்யிறார் ?”

“அப்பா இல்ல ?”

“என்ன நடந்த ?”

“ஆமி சுட்டது”

“அம்மா ?”

“இருக்கிறா”

”வீடெங்க ?

சொன்னான்.

நிர் ஒரே பிள்ளையோ ?

“இல்ல தங்கச்சி இருக்கு”

உம்மட பேர் என்ன ?

“கனீஸ்ரன்”

முழுப்பெயர் சொல்லும் ?

”யோகேந்திர நாதன் கனீஸ்ரன்”

குதிரையைத்தடவிக்கொடுத்த படி நின்றிருந்த என்னுடைய காதினுள் அவனுடைய முழுப்பெயர் வந்து வீழ்ந்த போது சட்டென்ரு அவனை மீண்டும் பார்த்தேன்.

தெத்திப்பல்

நீட்டு முகம்

கருப்புத்தோல்

அந்தக்கண்கள்.

திருபிக்கேட்டேன். உங்கட அப்பான்ர பேர் என்ன எண்டு  சொன்னனீர் ?

யோகேந்திரநாதன்

என்ன வேலை செய்தவர் ?

வெத்தில கடை வச்சிருந்தவர்.

எனக்கு நிலம் எல்லாம் சுழல்வது போலிருந்தது . கண்களில் நீர் திரள்வதை உணர்ந்தேன் சட்டென்று கண்களை அவனிடம் இருந்து விலகி  தள்ளிப்போனேன் . சட்டென்று அவனுடைய குதிரை என் ஹாண்ட் பாக்கை கடித்து என்னை நிறுத்தியது . அவன் சட்டென்று அதை அதட்டினான். விட்டுவிட்டது .

நண்பனொருத்தன்

குதிரைக்கு என்ன பெயர் ?

“பேர் ஒண்டும் இல்லை”

அவன் விடைபெறத்தயாரானான். குதிரையில் ஏறிக்கொண்டான். எனக்கு அவன் முகத்தை பார்க்க ஏதோ செய்தது .

கெளசி அவன்னு காசேதும் இருந்தா குடுத்து விடு , நாங்கள் கான்பாக்க வான்லயே விட்டிட்டு வந்திட்டம் . கண்களை துடைத்துக்கொண்டு . பையில் இருந்து நூறுரூபா தாளை எடுத்து நீட்டினேன்.

அவன்

இல்லை வேண்டாம்“

“ஏதாவது வாங்கி சாப்பிடும் பிடியும்”

“இல்லவேண்டாம்” உறுதியாகச்சொன்னான். சொல்லியபடி குதிரையை  தட்டிவிட்டான் .

எனக்கு ஏமாற்றமாய் இருந்தது.

அவன் என்னுடைய காசை ஏன் வாங்க வேண்டும் ? அவன்  அவன் இந்த ஏழையின் காசை ஏன் வாங்க வேண்டும் ?

அவனிடம் குதிரையிருக்கிறது.

ஓம்… அவனொரு ராஜகுமாரன் .

யதார்த்தன்

நன்றி –  விகடன் தடம் .

Older posts «