ஊரி : சொல்லின் விழைவு
இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன. அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம். ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில் எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம். எவ்வாறு இருந்த போதும் இலக்கியவாதி அவற்றில் இருந்து விலகி நின்று தன்னைக்காணும் இயல்பை அடைய வேண்டும். அதுவே இலக்கியத்தின் முதன்மையான நோக்கமும் பேரடைவும். எழுத்தாளர், வாசகர் இருவருக்கும் இது பொருந்தும்.
என்னுடைய கதைகளில் `ஊரி` என்ற சொல் அதிகமாக வருவதாக நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். . நகுலாத்தையில் ஈபி காரரின் முகாம் ஒன்றுக்கு ஊரிப்பிட்டி பேஸ் என்று பெயரிட்டிருந்தேன். அதற்கு அப்படிப் பெயர் இடும் போது அப்படியொரு இடம் இருக்காது என்றுதான் நினைத்தேன், ஆனால் புத்தூரால் சாவகச்சேரிக்கு வரும் வீதியில் வண்ணத்திப்பாலத்தின் முடிவில் இருக்கும் சுடலை நிறையக்காலமாக புதர் எழுந்து கிடந்தது. சமீபத்தில் அதைச் சுத்தம் செய்து பற்றைக்குள் புதைந்து கிடந்த அதன் பெயர் பொறித்த கற்பலகையை வெளியே கொண்டு வந்து வெள்ளையடித்து அதன் எழுத்துக்களைப் புதுப்பித்திருந்தார்கள். அவ்விடத்தால் போகும் போதுதான் கவனித்தேன் `ஊரிப்பிட்டி மயானம்` என்றிருந்தது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த இடத்தினால் போய் வந்திருக்கிறேன். ஏன் ஒரு முறை இரவில் கழிப்புச்சடங்கு ஒன்றைப் பார்ப்பதற்காக சாமியாடி ஒருவரின் குழுவோடு, மந்திரித்த பூசணிக்காயுடன் நடு இரவில் அந்த மயானத்திற்குச் சென்றிருக்கிறேன். அந்த வளைவில் பேய்க்கதைகள் கூட உலவுவதுண்டு. காலையில் சென்றால் பத்திற்கு குறையாமல் பாம்புகள் வீதியில் அடிபட்டுக் கிடக்கும். அல்லது காட்டுப்பூனையோ, மரநாயோ, நரியோ கூட வாகனத்தில் மோதுண்டு கிடக்கும். ஊரளவில் அதுவொரு மீயியல்பான வெளி. ஆனால் அதன் பெயரை யாரும் சொன்னதாக நினைவில்லை. அப்பாவிற்கோ ஊர் காரருக்கோ அதன் பெயர் நினைவில் இல்லை. அந்தப்ப் பழைய பெயர்ப்பலகை அப்பாவின் காலத்திலேயே பற்றையேறித்தான் கிடந்திருக்கிறது. பிறகு எப்படி `ஊரிப்பிட்டி` என்று எழுதினேன்? `பிட்டி`, `மேடு` என்ற பின்னொட்டுள்ள ஊர்ப்பெயர்கள், இடங்கள், புலவுகள் இருக்கின்றன. ஊரி என்று கழித்தன்மையுள்ள நுண்ணிய மட்டிகளைக் கொண்ட மண்ணைக் குறிப்போம். மிகச்சிறிய சங்கு வகையான உயிரிகளின் நுண்ணிய சங்குக் கோதுடல்கள் நிறைந்தது அம்மண். மக்கி, ஊரி இரண்டும் தரையை இறுக்கமாக்கப் பயன்படுத்தும் வெண்கழிகள். சில நாட்களுக்கு முதல் அதிகாலையில் எழுந்த போது கனவு போலவும் அல்லாமல் கனவுமாக அல்லாமல் என் குழந்தைப்பருவக் காட்சியொன்று அப்பொழுதுதான் யாரோ மனதுள் நட்டுவிட்டுப்போனது போல நின்றிருந்தது. அதில் நானும் இருந்தேன். அந்தக்காட்சியை நான் அக்குழந்தையில் இருந்து அல்லாமல் வெளியில் இருந்து காட்சிகளாகப் பார்த்தேன்.
எங்களுடைய பழைய காணி சரசாலை `கல்லுமூலையில்` குருவிக்காட்டுக்கு அருகில் இருந்தது. அப்பொழுது கொட்டில் வீடுதான். அப்பா டிராக்டர் வைத்திருந்தார். `மிசின் குணம்` என்றால்தான் ஊருக்குள் தெரியும். அந்தக்காட்சியில் நான் குழந்தை. ஒரு இரும்பு வாளிக்குள் நீர் நிரப்பி பிறந்த மேனியாக யாரோ என்னை இறக்கி விட்டிருந்தார்கள். எங்களுடைய டிராக்டர் கொட்டிலுக்குள் அதன் முன்னால் அந்த வாளி இருந்தது. எனக்கு முன்னால் எங்களுடைய வீட்டுக்கொட்டில். அதன் பக்கத்தில் சமையல் கூடம். எல்லாமே கிடுகினால் வேய்ந்தது. சமையல் கொட்டிலில் இருந்து தார் எரிக்கும் வாசனை வந்துகொண்டிருந்தது. கிடாரமளவு பானையில் கழிவு ஓயில் கொதித்துக்கொண்டிருந்தது. வெளியில் எனக்குச் சற்றுத்தள்ளி அம்மா, அப்பா, அக்கா, மற்றும் சில புதிய முகங்கள் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். தீடீரென யாரோ `நெருப்புப் பத்தீற்று` என்று கத்தினார்கள். அம்மாவின் குரலைப்போலத்தானிருந்தது. எல்லோரும் பரபரப்பானார்கள். நான் திரும்பிக் கொட்டிலைப்பார்க்கிறேன். குசினிக்கொட்டிலின் மேல் நெருப்புப் பரவி தீ நாக்குகள் எழுகின்றன. குப்பென்று வெப்பக்காற்று முகத்தில் வந்து அறைகிறது. அப்பொழு யாரோ `எண்ணை நெருப்பு தண்ணீ உத்தாதேங்கோ` என்று கத்த அனைவரும் கையில் கிடைத்த பாத்திரங்களுடன் மிசின் கொட்டிலுக்குள் ஓடி வருகிறார்கள். என்னைச்சுற்றியிருந்த நிலத்தை அள்ளிச்செல்கிறார்கள். அதை நெருப்பை நோக்கி விசுக்க ஊரி தெறிக்கிறது. அப்பொழுதுதன் மிசின் நிற்பதற்காக மிசின் கொட்டிலின் தரையை ஊரியால் நிரப்பியிருப்பது தெரிகிறது. அதோடு அணைந்து போகிறது காட்சி. அந்த நெருப்பின் வெம்மையும் ஓயில் மணமும் நேஞ்சிலேயே மிதந்தெரிகிறது. ஊரி விசுக்கப்படும் ஒலி ஊரி என்று நினைக்க காதுக்குள் கேட்கிறது. அம்மாவிடம் சென்று அதைச்சொன்னேன். கண்கள் விரிய `நீ அப்ப குழந்தை எல்லோ எப்பிடி ஞாபகம்?` என்றாள். விபரம் விசாரித்தேன். அப்பொழுது சண்டைக்காலம். எரிபொருள் தட்டுப்பாடுகள் இருந்ததால் கழிவு ஓயிலை காய்ச்சி மேலே மிதந்து வரும் எண்ணேய்ப்படிவை எடுத்து மண்ணெண்ணையுடன் கலந்து எரிபொருளாக பாவிப்பார்களாம், அப்படி ஒரு நாள் வீடுபற்றியதை அம்மா நினைவு கூர்ந்தாள். உள்ளம் ஓரளவு வெளிச்சம் கொண்டது. எழுதும் போது எழும் சொல் ஒவ்வொன்றும் துண்டுச்சொல் இல்லை என்ற நினைப்பே பெரிய பரவசமாய் மாறுகிறது. அதற்கொரு சுனையும் ஊற்றும் இருக்கிறது. ஆழத்தில் அடியாழத்தில்.
இதன் உளவியல் பின்னணிகளைத் தெரிந்து கொள்ள சிலவற்றைத்தேடிப் பார்த்தேன். தமிழில் ஜெயமோகன் இப்படி ஒரு நனவை எழுதியிருக்கிறார். அவருடைய குழந்தைமை நனவுகள் பற்றி, நிகழ்தல் தொகுப்பில் இருந்ததை நண்பர் ஒருவர் ஞாபகப் படுத்தினார். நவீன உளவியல் இம்மாதிரி நனவு மனத்தில் எழுந்து வரும் நனவோடைகளை, படிமங்களை ஏற்றுக்கொள்கிறது, குறிப்பாக நம்முடைய கனவுகளும் அப்படிப்பட்ட நனவின் ஊற்றுக்கண் என்பதைக் குறிப்பிடுகின்றது.
நனவோடை என்ற சொல் தமிழில் `நினைவோடை` என்று தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. எழுதப்படுகிறது. நினைவு என்பது நம்முடைய இச்சையுள்ள மனத்தில் இருக்கும் நினைவுகளைச் சொல்வது. அந்நினைவுகள் பெரும்பாலும் தற்காலிகமானவை. நனவோடை என்பது அதன் சொல்லைப்போலவே நனவு மனத்தைச் சேர்ந்தது. அது நம்முடைய விருப்புகள், விழைவுகள், நடத்தைகள், இயல்புகளின் அடிப்படையாய் மாறுவதுடன் நம்முடைய ஆளுமையின் பெரும் பங்கை எடுத்துக்கொள்ளும். இதை நவீன உளவியலால் முழுவதுமாக விளக்கப்படாத ஒரு பகுதி என்று கூடச்சொல்லலாம். நவீன உளவியலே இன்றைக்கு இந் நனவு மனத்தின் புதிர்களை அவிழ்ப்பதில் தான் பெரும் உழைப்பைச் செலவு செய்கிறது. நவீன உளவியலைக் காட்டிலும் இலக்கியம் நனவு மனத்தை தன் மொழியினாலும் படிமங்களினாலும் விரித்துச் செல்கிறது. படைப்பாளிகளின் `படைக்கும்` செயற்பாட்டில் எவ்வளவிற்கு நனவு மனம் எழுந்து வருகிறதோ அந்தளவிற்கு அது மானுட சாரத்தைச் சென்றடைகிறது. இலக்கியத்தின் அதி நோக்கம் அதுதான். ஊற்றைச் சென்று தொடுவது. அறிவியலால் நிரூபிக்க முடியாவிட்டாலும் இலக்கியத்தில் மானுட அடிப்படை என்பதும் ஒரே விசித்திரத்தின் நிலத்தடியில் ஓடும் மண்ணீரைத்தான் வெவ்வேறு கிணறுகளிலும் சுனைகளிலும் அடைகின்றனர். இலக்கியம் உளவியலைக் கடந்து ஆன்மீகமான ஒன்றைச் சென்று சேர்கிறது. தர்க்கம், கற்பனை என்பவற்றின் அடுத்த கட்டம் உள்ளுணர்வு.
ஏன் மீண்டும் மீண்டும் எல்லோரையும் வாசிக்கச் சொல்கிறோம், ஏன் இலக்கியத்தை எல்லாக் கலைகளையும் விடவும் முதன்மையானது என்கிறோம் என்பதற்குப் பின்னால் இருப்பது இதுதான். ஏனைய கலைகளுக்கும் இலக்கியமே அடிப்படையானது. அதுவே மாபெரும் அறிவுச்சேகரம். அறிவியலோ ஆன்மீகமோ வந்து சேரும் இடம் இலக்கியம்தானே? நவீன உளவியலாளர்களில் ப்ராய்ட் தொடக்கம் பெரும்பாலனவர்கள் இலக்கியத்தை முதன்மையான ஆய்வுப்பரப்புகளில் ஒன்றாகக் கொண்டார்கள். தாஸ்தெயவெஸ்கி போன்ற மகத்தான படைப்பாளிகளின் படைப்புகள் இன்றைக்கு நவீன உளவியலில் பாடங்களாகவே பயிலப்படுகின்றன. உலகின் தத்துவ வரலாற்றில் இருந்து இலக்கியத்தை நீக்கிவிடமுடியுமா? அப்படியென்றால் மிஞ்சுவது வறட்டுச்சூத்திரங்களும் முட்டுச்சுவர்களும்தான்.
அறிதலில் முதன்மையானது தன்னையறிதல். இலக்கியத்தில் புறவயமான அவதானங்கள், தகவல்கள் எல்லாம் நமக்குள் செல்வதற்கான புதிர்ப்பாதைகளின் பிடிசுவர்கள்தான், நவீன இலக்கியத்தில் எழுத்தாளர் அளவிற்கு வாசகரும் முக்கியமானவர். ஏனென்றால் எழுத்தாளரின் நனவையோ, விழைவையோ தாண்டிச் செல்லும் தன் சொந்த வாசிப்பை வாசகரால் அடைய முடியும். அறிவியக்கத்தில் நல்ல வாசகருக்குரிய இடம் பெரியது. மடமையைக் கொழுத்தும் அறிதல் என்பது புற உலகைத் தெரிந்து கொள்வது அன்று சொந்த ஆழங்களுக்குள்செல்வது. உங்களுடையை ஊரியும் மட்டியும் இறைந்து கிடக்கும் ஊற்றை அடைவது.