போர்க்காலத்தில் ஏன் நாவல்கள் எழவில்லை?   நாவற்காலம் 02

போர்க்காலத்தில் ஏன் நாவல்கள் எழவில்லை?   நாவற்காலம் 02

ஈழத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் கூரான இன முரண்களால் எழுந்த  உள்நாட்டு யுத்தத்தோடு ஈழத்தின் நாவல் வளர்ச்சி  மெல்லச் சரிந்தது. பேரியலக்கிய வடிவமான நாவல் முயற்சிகளின்  இச்சரிவின் பின்னால் போர் இருக்கிறதா என்ற கேள்விக்கு  போரும் இருக்கிறது என்ற பதிலே சரியானது என்று நினைக்கிறேன். இச்சரிவை அக்கால சமூக, அரசியல் சூழல் இரண்டு வகையில் பாதித்தது. அதில் முதன்மையானது,   `அரசியல்` நிலைபாடுகள் நாவலின் தேவையை முழுவதுமாக `சமூக அரசியல் நற்கருமங்களிற்கானது` என்ற நோக்கை  உண்டுபண்ணியதாகும். இரண்டாவது இலக்கியப் பண்பாட்டின்  இயங்கு தளங்களின் எல்லைகளைப் போர்ச்சூழல் மட்டுப்படுத்தியது. இவ்விரு போக்குகளும் அக்கால நாவலின் உள்ளடக்கம், அழகியல் இரண்டையும் குன்றச்செய்ததுடன் அதன் வடிவம் மீதும் தளைகளைப் போர்த்தின. ஈழத்தில் ஏற்பட்ட போர் என்பது நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைமைகளையும் போக்கையும் தீர்மானித்தன. இலக்கியத்திலும் அக புறச் சூழல்களில் அது தன் விரிந்த பின்னணியாக எழுந்து நின்றது. போரும் நடைமுறை அரசியலும் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிக்கொண்டன. பண்பாடு அரூப வெளிக்குள் ஒழிந்துகொண்டது. தூலமாக அதைக் கவனிப்பதற்குரிய கண்களை யாவரும் இழந்து போனோம். 

முக்கியமாக போர்க்கால அரசியற் சூழல், கருத்து நிலைகளை இருமைப்படுத்தியதை ஓர் இலக்கிய வாசகராக  பேரிலக்கியங்களின் வீழ்ச்சிக்கான காரணமாகக் குறிப்பிடுகிறேன்.  தமிழ்த்தேசியம், மற்றும் மாக்சியம் ஆகிய இரண்டு பிரதான கருத்து நிலைகள் இங்கு நடைபெற்ற அறிவுச்செயற்பாடுகளில் இருமை நிலையை உண்டுபண்ணின.  இவ்விரண்டு கருத்து நிலைகளும் வெவ்வேறு துருவங்கள் என்றாலும்  இலக்கியத்தில்  இவ்விரண்டும் பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தன, அது  இலக்கியம் என்பது `சமூகத்தை நல்வழிப்படுத்துவது அல்லது சமூகத்தின் நல்லசைவுக்கானது` . மேற்படையாக  இக்கூற்றுகளை எதிர்கொள்ளும்  போது, இதில் என்ன தவறு இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இங்கே ஏற்பட்ட தவறு என்ன என்ன வேன்றால்  இவ்விரண்டு கூடாரங்களுமே  இலக்கியத்தின் `அழகியலைப்` பொருட்படுத்தவில்லை என்பதுதான். இக்கூடாரத்தினர் கருத்து நிலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் இலக்கியத்தில் அழகியலை ஓர் பகட்டுப் பொருளாகவே காணும் அபத்தத்தை அடைந்தனர்.  இலக்கியத்தில் அழகியல் என்பது, கசப்பு மாத்திரை மேல் பூசப்படும் இனிப்புப் போன்றது` என்பதான கொஞ்சம் கூட நவீன இலக்கிய பரிச்சமற்ற சராசரிகளின் மேடைப் பேச்சைப்போன்றே  இவர்களின் பார்வைகள் இருந்தன. தமிழ்த் தேசியம் பேசியவர்களும் சரி, மாக்சியம் பேசியவர்களும் சரி, இலக்கியத்தின் பணி வெறுமனே சமூகத்தின் உடலுக்கு கசப்பு மாத்திரை கொடுத்து வைத்தியம் செய்வதில்லை என்பதை அறியவில்லை. ஒர் அருஞ்சுடரை சிகரட் மூட்டப் பாவித்தாலே போதுமாகவிருந்தது இவர்களுக்கு.

தமிழ்த்தேசிய கருத்து நிலையானது, விடுதலைப்போராட்டம் சார்ந்து எழுந்த இலக்கியங்களை அதன் அழகியல் தரத்தைச் சட்டை செய்யாது  விடுதலை தளைத்துச் செல்வதற்காகப்  பயன்படுத்திக்கொண்டது. அப்படித்தான் புதுவை இரத்தின துரையும், காசி ஆனந்தனும் கவிஞர்களானார்கள். இங்கே இனிமையான  விமர்சனம் என்பது வாய் நிறையைச் சொற்களைக் குழைத்துக் குதப்பி, புகழ்ந்து விடுவதுதான். 

தமிழ் இடதுசாரிகளும் அங்கே எழுந்து வந்த சிந்தனையாளர்களும் கூட  அழகியலையும் இலக்கிய தரிசனத்தையும் பற்றி விரிவாக உரையாடி நான் கண்டதில்லை. பலர் அப்படியொன்று இருக்கிறது என்பதை அறியாமலே இருந்தனர். அவர்கள் கட்சிகளில் இருப்பதும் இலக்கியத்தில் இருப்பதும் ஒரே வகையான செயற்பாடு என்று நினைத்துக் கொள்கின்றனர். `முற்போக்கானது` என்பதே இலக்கியமாக அங்கீகாரமளிக்கப் போதுமானது என்றனர். அல்லது மாக்சிய அளவுகோல்களை காற்றில் அசைத்து அது படக்கூடிய இடங்களை மட்டும் அங்கீகரித்துக்கொண்டனர்.  இவ் இரு சாரரும் இலக்கியத்தை சமூகத்திற்கான , பிரச்சார  ஊது குழலாகப் பொற்தட்டில் ஏந்தினர். மேம்பட்ட கோட்பாடான  மாக்சியம்  பின்னாளில் வளர்த்தெடுத்த இலக்கிய  உரையாடல்கள், பண்பாட்டு உரையாடல்கள் பற்றி இன்று வரைக்கும் இலக்கியச் சூழலோடு நெருங்கி உறவாடும்  மாக்சியர்கள் கூட  அறியவோ உரையாடவோ முயற்சிப்பதேயில்லை. சொல்லப்போனால்  மாக்சியமற்ற நூல்களை வாசிக்க மாட்டோம், பார்க்க மாட்டோம், கேட்க மாட்டோம்  என்று இலக்கியக் கூட்டங்களில் வந்து குந்தி இருக்கும் மாக்சியர்கள் ஏராளம் பேரை நானறிவேன். அவர்களுக்கு  `அழகியல் சமாச்சாரங்களே தெரியாது` 

அடுத்து, எழுபதுகளின் பின்னர், எண்பதுகள், தொண்ணூறுகள் வரை இங்கே இயங்கிய சிற்றிதழ்கள், இலக்கிய இயக்கங்கள், உரையாடல் வெளிகள், பல்கலைக்கழகம் முதலான  சிந்தனைக் கூடங்கள் அனைத்தும் இப்பொதுப்போக்கிற்கு எடுபட்டன.  முக்கியமாக  இலக்கியத்தைக் கண்காணித்து வழிநடத்தும் பொறுப்புள்ள இலக்கிய விமர்சனம் சமரசப்படுத்தப்பட்டது.  இலக்கிய விமர்சனத்தின் வீழ்ச்சியே ஈழத்து இலக்கியத்தின் முதன்மையான பேரழிவு. ஒரு கட்டத்தில் ஈழமே கலை இலக்கிய விமர்சனத்தைத் தலைமையேற்கும் காலம் கனியப்போகின்றது என்ற நிலை ஏற்படும் போது  இலக்கிய விமர்சனம் என்பது `நல்லாருக்கு  அல்லது நல்லா இல்லை`  `சமூகத்திற்கு பயன்படும் பயன்படாது ` போன்ற கூற்றுக்களோடு ஓய்ந்து போனது. 

அப்படியென்றால் இலக்கியம் சமூகத்திற்கானதில்லையா ? என்ற கேள்விக்கு பல அறிவியக்கவாதிகள் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கியம் மட்டுமல்ல எந்தக்கலையும் சமூகத்திற்குப் பயன்படலாம். ஆனால் அது  குறித்தவொரு சமூகத்திற்கோ, இனக்குழுவிற்கோவானதல்ல.  தமிழில் எழுதப்பட்டால் அது தமிழர்களுக்கானதல்ல. அசலான இலக்கியத்திற்கு  `வாதங்கள்` `அடையாளங்கள்` பற்றிய கவலைகளிருப்பதில்லை. எல்லாக் கலைகளைப்போலவும் அது தன்னை நிகழ்த்தி தானொன்றைக் கண்டடைகிறது. அது சமூகத்தில் இருக்கும் பொது உண்மைகளை, அறங்களைச் சட்டை செய்வதில்லை. யாவரும் அறிந்தவற்றைத் திரும்பக் கிளிப்பிள்ளை ஒப்பிப்பிற்கானதல்ல இலக்கியம். இவற்றைத் தாண்டிச்சென்று மானுட குலம் முழுவதற்குமான  `முற்றுண்மைகளை` அடைகிறது. வாழ்க்கையை சமரசமின்றி ஆராய்கிறது. மோதி உடைக்கிறது. மீள மீள எழுதுகிறது.   நவீன இலக்கியத்திடம் இருக்கக் கூடிய சமூக விமர்சனத்தன்மை, யதார்த்தச் சித்திரம், சீண்டும் இயல்பு, தனிமனித நோக்கு / தன்னை முன் வைக்கும் இயல்பு  போன்றவற்றை ஆராயலாம்,  சமூகம் பயன்படுத்திக்கொள்ளலாம், ஏன் தனிமனிதர்கள், கொள்கையாளர்கள், கட்சிகள், இயக்கங்கள் கூடப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் உரிமைப்படுத்திக்கொள்ளவோ தங்களுடைய பிரச்சாரமாக குறுக்கிக் கொள்ளவோ கூடாது. இலக்கியம்  காட்டுவழியிலுள்ள சுனையைப் போன்றது. எல்லாத்திசைகளுக்குமாக  அது திறந்திருக்கும் மிருகத்திற்கும், பறவைக்கும்,  நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் கூட. 

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  போர்க்காலத்தில்  மேடையொன்றில் `விடுதலை` பற்றிய நாடகம் ஒன்று போடப்படுகிறது. நாடகம் மானுட விடுதலையையும், ஒடுக்கப்படுதலுக்கு எதிரான போராட்டத்தையும் நிகழ்த்துகிறது. நாடகத்தின் முடிவில்  குறித்த அரசியல் சித்தாந்தத்தையோ, இயக்கத்தையோ சேர்ந்த சிலர்  மேடையில் ஏறி தங்களின் அமைப்பின் கோசங்களை இடுகின்றனர். கூட்டமும் ஆரவரிக்கிறது, அதையும் நாடகத்தினொருபகுதியாக நினைக்கிறது. நாடகப் பிரதியை எழுதியவரோ ஆற்றுகையாளர்களோ தங்களின் ஆற்றுகைப்பகுதியாக  இக்கோசங்களை இணைக்கவில்லை. பின்னாளில் இப்படி நாடகம் போடுவது என்றால்  இக்கோசங்களுடனும் அரசியல் நிலைப்பாடுகஅவர்கள் நாடகமொன்றையே எழுதினர், அளிக்கை செய்தனர். இங்கே இலக்கியத்திற்கும் இதே தான் நடந்தது.  ஒரு கட்டத்தில் நாடகங்களை கோசங்களாகவே எழுதத் தொடங்கிவிடுகின்றனர்.  சமூகத்தில் எரியும் பிரச்சினைகள் மீது அவை பற்றிக் கொள்கின்றன. கலையானது  `ரெண்ட்` ஆக மாறுகிறது.  இதுதான் ஈழத்தமிழ் இலக்கியத்திற்கும் நிகழ்ந்தது.  யுத்த காலத்தில் யுத்தம் பற்றிய பாடல்கள் இருக்கும்,  கவிதைகள் இருக்கும் ஆனால் அவை எல்லா யுத்தங்களுக்கும் எதிரானவை, அவை தேசியக் கனவையோ, பட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார கனவையோ காண்பவையல்ல, அவற்றின் கனவு  இவை அனைத்திலிருந்தும் மானுடரை விடுவிக்கும் பெருங்கனவு. எல்லைகளற்ற ஆன்மாக்களின் வெளி. ஓர் துண்டுப்பிரசுரத்திற்கும் கதைக்குமுரிய வேறுபாடு தெரியாதது தான் பிரச்சினை இங்கே.

போர்க்காலத்தில் இலக்கியங்கள் தேங்கியதற்கும்,  குறிப்பாக நாவல் முயற்சிகள் , நீள் கதைகளாக  வரண்டு நின்றதற்குரிய பின்னணிகளில்   போர்க்காலத்தில் வாழ்வின்  சமநிலை குலைந்துகொண்டே இருந்தது  முக்கியமான காரணம்தான்.   காயம், குருதி, ஓலம் இவற்றுக்கு மத்தியில் நிலையான பொருளாதாரமும், அமைதியான வாழ்வும் நமக்கு வாய்க்கவில்லை. கலைஞரும் இலக்கியவாதிக்கும் இதெல்லாம் ஒரு பொருட்டா என்று கேட்கலாம். இல்லைத்தான். அதனால்தான் ஈழத்தில் போர்க்காலத்தில் கவிதைகள் உச்சமடைந்தன. அவற்றை பதுங்கு குழிக்குள்ளும், தலைமறைந்திருக்கும் மூலையொன்றிலிருந்தும் எழுத முடிந்தது, சிற்றிதழ்கள், பத்திரிக்கைகளில் பிரசுரமுமானது.  செல்வியும், சிவரமணியும், எஸ் போசும் தங்களின் இன்னுயிரையழித்துக்கொண்டு எழுதித்தீர்க்கவில்லையா? ஆனால் நாவல் கவிதை போன்றதல்ல, அதற்கு ஓரளவேனும் நிலைத்தன்மை வேண்டும், `இருந்து எழுத வேண்டும்`. நம் இருப்பு என்பதே இங்கே தளம்பும்  கடல்தான். இடப்பெயர்வும் புலப்பெயர்வுமாய் சிக்கல்கள் சுழன்று கொண்டே இருந்தன. 

தமிழ் அறிவுச்சூழலும் இலக்கியச்சூழலும் அரசாங்கத்தினாலும், போராளிக் குழுக்களாலும் கண்காணிக்கப்பட்டன. கடத்தல்கள், படுகொலைகள் நிகழ்ந்தன.   செல்வியையும், ராஜினியையும், சிவரமணியையும், எஸ்போஸையும் அச்சுறுத்தினார்கள்,  கடத்தினார்கள் கொன்றார்கள். ஆகவேதான் அக்காலம் `கவிதைகளின் காலம் ` என்று அழைக்கத் தக்காதாயிருந்தது.  நாவல்களோ , நெடுங்கதைகளோ பாதுகாப்பு அச்சத்தினால் எழுதப்படவில்லை என்று சொல்வதைக்காட்டிலும் ஒரு நிலையான வாழ்க்கைச் சூழல் எந்த வர்க்கத்தினருக்கும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். பெரிய இலக்கிய வடிவமான  நாவலைப் பதிக்கவும் பிரசுரிக்கவும் இங்கே நடைமுறைச் சிக்கல்களும் இருந்தன. ஒடுக்குமுறையால் இலக்கியத்தில் உடல்களையே துன்புறுத்தவோ கொல்லவோ முடிந்தது. ஆனால் புற உலகின் நடைமுறைச் சிக்கல்கள் நாவல்கள் உருவாவதில் தடைகளை உண்டுபண்ணாமலில்லை. பணவசதிகளோ இந்திய – தமிழ்நாட்டுத் தொடர்போ தற்போதுள்ள சுழலைப் போலிருக்கவில்லை.  தினசரிப் பத்திரிக்கைகளே `மாட்டுத்தாள்`  பேப்பர்களில் அடிக்கப்பட்ட காலங்களுமிருந்தன. 

யாழ் பொதுசன நூலகம் அழிக்கப்பட்டது ஒருபக்கமிருக்க  உள்ளூர் நூலகங்கள், சனசமூக நிலையங்கள்  இடம்பெயர்வுகளோடு கைவிடப்பட்டன, கறையான்களும் இராம பாணங்களும் நூற்சேகரங்களைத் தின்றன. இவற்றைச் சார்ந்திருந்த  வாசகர் மரபுகளும் இயக்கங்களும்  அழிந்தன. சிற்றிதழ்கள் மெல்ல மெல்ல வெளியீடுகளைக் கைவிட்டன. அல்லது அன்றாட அரசியல் விவாதங்களை நிகழ்த்தும் வெளிகளாக தங்களைக் குறுக்கிக் கொண்டன.  வாசக – எழுத்தாள தளங்கள் இயங்கிய சிற்றிதழ்களின் பேரழிவு யுத்தகாலத்திலேயே தொடங்கியது.

இனப்பிரச்சினை கூராகி வந்த எண்பதுகளிலேயே  வாசிப்புச் சூழல் வணிக எழுத்துக்களுக்கே அதிகம் முக்கியம் தந்தது. வாசிப்பொரு பொழுதுபோக்காகவே நம்பப்பட்டது. நாம்  இன்னொரு வீர ஊழிக்காலத்தை எதிர்கொள்கிறோம் என்ற பொதுப்புத்தியை விடுதலை இயக்கங்கள் வளர்த்தெடுத்தன. சாண்டில்யனும் கல்கியும்  கொண்டாடப்பட்டது இம்மனநிலையோடுதான். இது இரண்டாயிரங்களுக்குப் பிறகும்  தொடர்ந்தது. பொன்னியின் செல்வன் என்ற தொடர் கதை  படமாக வரும் வரைக்கும் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் அதிகம் விற்பனையாகும் பிரதிகளில் ஒன்றாக இருந்துவந்தது.  சென்ற வருட கணக்கின் படி திரைப்படம் வந்தவுடன் அதன் வணிக பீடம் சரிந்து விழுந்துள்ளது. வணிக இலக்கியங்களுக்கு இது நடப்பது ஒன்றும் புதிதில்லை. 

இவை தவிர எளிய மானுடப் பிரச்சினைகளான உறவுச்சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள், குடும்பம்  `குடும்ப நாவல்களின்` பின்னால் பெருந்தொகையான பெண்கள் கூட்டம் ஓடிச்சென்று தற்கொலை செய்துகொண்டது. ரமணிச்சந்திரன், சிவசங்கரி, லக்‌ஷ்மி, தேவிபாலா என்று இன்றைக்கும் நூலகங்களில் ஒரு பெரிய பெண்கள் தரப்பு இவற்றை வாசிக்கிறது. மிச்சப்பேர் டீவி சீரியல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இருக்கிறார்கள்.

அதைப்போல் ஆண்கள் கூட்டம் பொக்கற் நாவல்கள் எனப்பட்ட க்ரைம் திரில்லர்கள் வகையாறா நாவல்களுடன் சல்லாபித்துக் கொண்டது.  அல்லது கிரிக்கட், வணிக சினிமாவுக்குள் மூழ்கிப்போனது. இன்றைக்கு அதிகபட்சம் சுஜாதா தவிர யாரையும் இவர்கள் சீண்டுவதேயில்லை.  ஈழத்தில் தீவிர இலக்கிய வாசகர்கள் எப்பொழுதும் போல சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டு இருந்தார்கள். நவீன இலக்கிய வாசகர்களே தனிநாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.  அதில் பெரிய சோகம் என்னவென்றால் தொண்ணூறு சதவீதமானவர்கள் வாசகர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும் கூட. இவர்கள் இலக்கிய இயக்கங்களில் இருந்து தங்களைக் சிறு குழுக்களாக ஆக்கிக் கொண்டமையும் இலக்கிய உரையாடல்களை மட்டுப்படுத்தியது.  பெரும்பாலும் இக்குழுக்கள்  கவிதை, சிறுகதைகள்  பற்றிய வாசிப்பையும், உரையாடலையும் ஆர்வம் காட்டிய அளவு நாவல் மேல் கவனஞ்செலுத்தவில்லை. அவ்வப்போது எழுந்த பெரும்பான்மையான முயற்சிகள் நீள் கதைகளாகவே கருதப்படக் கூடியவை.

நாவல் பெரிய உழைப்பையும் காலத்தையும் கோரக்கூடிய இலக்கிய வடிவம் என்ற வகையில் அதற்கான  புறச்சூழலும் அகச்சூழலும்  போர்க்காலத்தில் அமையாததற்கு மேற்படி  காரண வரிசைகளை, நானொரு நொண்டிச்சாட்டைப் போல் முன் வைக்க நினைக்கவில்லை. இதன் மூலம்  இரண்டாயிரங்களுக்கு பிறகு நாவல்கள் , நாவல் முயற்சிகள் எழத்தொடங்கின. சமூகமும் வாழ்வும் சமநிலையை மெல்ல அடையத்தொடங்கும் போது இது நிகழத் தொடங்கிற்று. எண்பதுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள்  தங்களை அந்த நாடுகளின் சூழலுடன் பொருத்திக் கொண்டு வாழ்வை கொஞ்சமேனும் திடப்படுத்திக் கொண்டு வாசிக்கவும் எழுதவும் தொடங்கினார்கள். போர்க்காலத்தில் ஈழத்தின் நல்ல நாவல்கள் புலம்பெயர் சூழலில் இருந்தே எழத்தொடங்கியமையை நாமிங்கே நினைவில் கொள்ளவேண்டும். தேவகாந்தன், சோபாசக்தி, சயந்தன், மெலிஞ்சி முத்தன், விமல் குழந்தைவேல், நோயல் நடேசன் என்று ஒப்பீட்டளவில் நாவல்களோடு பெரியதொரு தரப்பு தமிழ்ச்சூழலை நோக்கி எழுந்தது. 

இது எப்படி புலம்பெயர் தேசங்களில் அல்லது நாட்டுக்கு வெளியே சாத்தியமானது ?  அவர்கள் இங்கிருப்பதை விட மேம்பட்ட வாழ்வும் நிலையான தன்மையும் கடுமையான உழைப்பின் மூலம் அடைந்தனர்.  முக்கியமாக சிற்றிதழ்களும் இணைய வெளியும்  அவர்களை இணைத்தன. உரையாடல் வெளியொன்றை விரித்தன.  எக்சில், மூன்றாவது மனிதன் போன்ற  குறிப்பிடத்தக்க இலக்கியச் சிற்றிதழ்களும், பத்திரிகைகளும் வெளிவந்தன. இலக்கியச் சந்திப்புகள், இலக்கியப் பண்பாட்டு அமைப்புகள்  தோன்றி இயங்கின. மிக முக்கியமாக தமிழ்நாட்டோடும் உலக  இலக்கியங்களோடும் பரிச்சமான இலக்கிய வாசகர்கள் எழுந்தார்கள், எழுத்தாளர்கள் எழுத வந்தார்கள்.  தமிழ் இலக்கிய உரையாடல் சர்வதேச வரைபடமொன்றை அடைந்தது. விவாதங்கள் நிகழ்ந்தன. இணையத்தின் வருகையோடும் தொலைத்தொடர்பு சாதங்களின் பெருக்கத்தோடு ஆரம்பத்தில் இலக்கியம் `ப்ளோக்கர்களில்` விவாத களங்களையும் , உரையாடல்களையும் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் என்னும் பொறுப்பற்ற சராசரிகளின்  இன்றைய  குறளி வித்தைக்  களங்களைப் போலில்லாத பொறுப்புள்ள  இணைய உரையாடல் தரப்பு புலம்பெயர் ஈழத்தவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. குறிப்பாக அக்காலத்தில் தமிழிலக்கியச் சூழலில் நிகழ்ந்த சமகால விவாதங்களில், பங்குபற்றும்  வாய்ப்பும் ஈடுபாடும் நம்முடைய படைப்பாளிகளுக்குக் கிடைத்தது,  நிலத்தில் கிடைக்காத வாய்ப்பை புலத்தில் அடையும் போது அவர்களிடமிருந்து ஈழத்தின் கதைகளும் , நாவல்களும் எழுந்தன. முக்கியமாக அவை விமர்சன பூர்வமான வாசகர்களை  வளர்த்தது.  இரண்டாயிரங்களில் தமிழ் இலக்கியச்சூழலில் இடம்பெற்ற பின் அமைப்பியல், பின் நவீனத்துவ கோட்பாட்டு விவாதங்கள், அழகியல் விவாதங்கள் ஈழத்துச் சூழலைப் புலம்பெயர் ஈழத்துப் படைப்பாளர்கள், வாசகர்கள் மூலமே வந்தடைந்தது. நாவற்காலமொன்று உருவாவதற்கு இச்சூழல் முக்கிய தூண்டியாய் அமைந்தது. மிக முக்கியமாக நடைமுறை அரசியல் கோசங்களில் இருந்து மானிட உரையாடலுக்கு இலக்கியம் மெல்ல மெல்லத் திரும்பியது. 

நாவலின் பணி சமூகத்திற்கான நற்செய்திகளை எடுத்துவருவது என்ற நிலையழிந்து, நாவல் முயற்சிகள் கைகூட ஆரம்பித்தன. இன்றைக்கு நிலத்திருந்து நாவல் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு முன்னோடிகள் புலம்பெயர் படைப்பாளிகள்தான். குறிப்பாக நாவலின் உள்ளடக்கம், வடிவம் , மொழி சார்ந்த சமகாலச் சாத்தியங்களை அங்கிருந்தே தொடங்குகிறோம்.  2009 இற்குப் பிறகு  இடம்பெயராத வாழ்க்கை கைகூடத் தொடங்கும் போது  எழுத்து, வாசிப்பு, உரையாடல், விமர்சனம், பதிப்பு, விநியோகம் இவை அனைத்தும் எதோ வகையில் ஈழத்தின் படைப்பாளர்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆனாலும் நாவல் என்பதைக் கறாராக நோக்கும் போது ஓர் பேரழிவைக் கடந்து வந்தவர்கள் என்ற பின்னணியில் நாமிந்த அறிவுச்சூழலுக்கு மகத்தான நாவல்களைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இன்னும் தொடர்கின்றன. ஆனாலும் பேரிலக்கிய வடிவமான நாவலுக்கான சூழல் கனிந்துள்ளது. உரையாடல்களும் விமர்சனங்களும் இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.  நிலத்திலிருந்தும் புலத்திலிருந்தும் நாவல்கள் எழ வேண்டும். வீர ஊழிக்கால மாயைகளில் இருந்து  திரைகளை விலக்கி வாழ்க்கையை  இலக்கியத்தின் பெருஞ்சுடரில் காணவேண்டும்.

 

நாவல் காலம்  01 வாசிக்க

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’