- painting by Alexander Bezrodnykh
கற்றனைத் தூறல்
என்னுடைய எதிராளி கட்டுரையில் கடந்த சில வருடங்களில் என்னுடைய நேரத்தை ஆய்வு, விமர்சனங்களுக்கு செலவழித்துவிட்டேன். என்னுடைய களம் கற்பனையும், புனைவும் என்பதை பின்னாளில் கண்டுகொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர் ஒருவர் கலை இலக்கியத்தில் இருப்பவர்கள் ஆய்வாளர்களாக இருப்பது நல்லது தானே ? தவிர கலை இலக்கிய வாசனை சற்றும் இல்லாதவர்கள் மேற்கொள்கின்ற `துறைசார்ந்த` ஆய்வுகள் மிகவும் ஒற்றைப்படைத்தன்மையும், இறுக்கமும் முக்கியமாக பயன் பெறுமதி குறைவாகவும் இருக்கிறதே? அதோடு இன்றைக்கு பேச்சாளர்கள், பட்டிமன்றக்காரர்கள் எல்லாம், பெயரின் பின்னால் `குறி` சுடுவதற்கு சமூக ஆர்வலர் என்று போட்டுக்கொள்வது போல, ஆய்வாளர் என்றும் போட்டுக் கொள்கிறார்களே? என்று நகைச் சுவைத்திருந்தார்.
நண்பரே நீங்கள் சொல்வது சரிதான். இன்றைக்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமானவை பல்கலைக்கழக பட்டப்படிப்பைக் கடக்க எழுதித் தள்ளப்படுபவையே. பல்கலைக்கழகம் என்ன வேணும், என்கிறதோ அதற்கேற்றால் போல் , அந்தத் தேவைப் பெட்டிகளை நிரப்புவதோடு மட்டும் நின்றுவிடுபவை தான். அதனால் தான் அவை பெரும்பாலும் அச்சுக்கோ பொது வெளிக்கோ விடப்படுவதில்லை. குட்டு வெளிப்படும் என்ற அச்சத்தில் அச்சுவாகனம் ஏறாத ஆய்வுகளே அதிகம். அவை பெரும்பாலும் சொந்தமான கண்டுடறிவொன்றை எட்டாதவையாக இருக்கும். இலங்கைச் சூழலில் இன்று ஆய்வாளர் ஆவது சுலபமாகிவிட்டது. உட்கார்ந்து நான்கு பந்தி சொந்தமாக எழுத முடியாத பெருமந்தர்கள் கூட்டங்களில் பேசுவதோடு சரி. ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் துண்டுகளை எடுத்து இணைத்து மானே தேனே போட்டுப் பேசுவார்கள். தடினமான புத்தகங்களுடன் தங்களின் பிரசன்னத்தை எப்பொழுதும் காட்டிக்கொண்டிருப்பார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் எதையும் வாசிப்பதில்லை. அவர்களுக்கு ஆய்வு என்பது நாவினால் செய்வது என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள். அவர்களின் பேச்சு முடிந்ததும் அதே கூட்டத்தில் இருந்து பிறிதொருவர் எழுந்து `அடடா பல்கலைக்கழக ஆய்வைப்போல் இருக்கிறது` என்று முகஸ்துதி பாடிவிட்டு உட்காருவார். மறைந்த குமாரதேவன் இங்கே நடக்கும் கூட்டங்களில் இப்படியான ஆட்களை எழுந்து தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டுவார், கேள்வி கேட்பார். அவருடைய கேள்விகள் ஆய்வுக்குரிய தரவு ஒருங்குகளுடன் இருக்கும். முக்கியமாக நேர்மையாக இருக்கும். ஆனால் அவர் கடைசி வரைக்கும் தன்னை `வாசகர்` என்றே அழைத்துக்கொண்டவர். ஆகவே இந்த நபர்களைத் தவிர்த்து விட்டு உரையாடுவோம்.
மேலும், ஆய்வென்பது பல்கலைக்கழக சூழலுக்கே உரித்தானது, அல்லது முறை சார் கல்விப்புலம் மட்டுமே சார்ந்தது என்ற நம்பிக்கையும் தவறானது. ஆய்வு முறைகளை, பல்கலைக் கழகத்திற்கு வெளியேயும் இருந்து பலகலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களை விடவும் மேம்பட்டதாக செய்துகொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் சமூகவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும், எழுதும், உரையாடும் . கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் பல்கலைககழகம் சாராதவர். அரசு நிர்வாக ஊழியராக இருந்து ஒய்வு பெற்றவர். ஆனால் இன்றைக்கு இலங்கை சமூகவியல் மானிடவியல் ஆய்வுகள், மொழிபெயர்ப்புகளில் அவரொரு முக்கியமான ஆளுமை. தன் முதுமையிலும் ஆய்வுகள், பெயர்ப்புகள், உரையாடல்களைத் தொடர்ந்து செய்துவருகிறார்.அதே போல ஆய்வு முறைகளை கல்விப்புலமூடாகப் பெற்றுக்கொண்டு கலை இலக்கியப் பின்னணியில் இயங்கிக் கொண்டு செயற்பட்டவர்களும், செயற்படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் கை. கைலாசபதி ,போன்றோர் இவ்வகையைச் சார்ந்த அறிஞர்கள்.
அதே நேரம் ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவர்கள், அறிதலில் திளைக்க எண்ணுபவர்கள் ஆய்வு முறைகளைக் கற்றுக்கொள்வது முக்கியமானதுதான். ஆய்வு என்று வரும் போது தன்னிச்சையாக எழுந்து வரும் சூழல் மிக அரிதாகவே உள்ளது. தவிர முறையாகக் கற்றுக்கொள்வது ஒன்றும் தவறானதல்ல. அதை மட்டுமே கற்றுக்கொள்வதுதான் பிரச்சினை. ஏனென்றால் ஆய்வு முறைமை என்பது இவ்வளவு காலமும் மானுட அறிவியக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரைபுபடுத்தி இருக்கும் அறிதல் முறைமைகளை உள்ளடக்கியவைதான். அவற்றின் அடிப்படைகள், செல் நெறிகளைக் கற்றுக்கொள்வது அவ்வளவு கடினமானதும் இல்லை. இணையத்திலேயே இன்றைக்கு இலவசமான கற்கை நேறிகள் கிடைக்கின்றன. ஆய்வு முறையியல் சார்ந்த புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் நல்ல ஆய்வுகளைத் தேடி தொடர்ந்து வாசித்தாலே அவை பிடிபடும். கற்றனைத் தூறும் அறிவு.
நான், இலக்கியத்தில் எழுதத்தொடங்கிய சமகாலத்திலேயே பல்கலைக்கழகத்திலும் கற்றதால் ஆய்வு முறைமைகளை முறையாகப் பயின்றிருக்கிறேன். முதலாமாண்டில் கலைவரலாற்றுத்துறையிலும் கற்றதால் கலை இலக்கிய ஆய்வுகள் சார்ந்த பரிச்சமும் தொற்றிக்கொண்டது. ஆய்வாளர்கள், புத்திசீவிகளின் பெயர்கள் , கோட்பாடுகள் பரிச்சமாயின. பிறகு நானே எனக்கானவர்களைக் கண்டுகொண்டு தொடர்ந்து வாசித்துச் சென்றேன். ஆய்வுகளை வாசிக்கும் போது அத்தொடர் கண்ணிகள் வெளிப்படையாகவே உசாத்துணைகளில் கிடைக்கும்.
என்னுடைய கலைமானிப்பட்டத்தை `மொழியியல் துறையில்` மேற்கொண்டேன். அங்கே பொது ஆய்வு முறையியலின் அடிப்படைகளை விரிவுரையாளர், மொழிபெயர்ப்பாளர் விமல் சுவாமிநாதனிடம் கற்றுக்கொண்டேன். விமல் சுவாமிநாதன் நல்ல வாசகர். சிங்கள தமிழ் மொழியியல் உறவுகள் குறித்த அவருடைய ஆய்வுகள் முக்கியமானவை. இவை தவிர அவருடைய மொழிபெயர்ப்புகள் சிங்கள- தமிழ் மொழிகளின் பண்பாட்டு உறவுச்செழுமைக்கு இருக்கக் கூடிய முக்கியமான பாதைகளில் ஒன்று. அவரிடமிருந்து ஆய்வுக்கான அடிப்படைகளைப் பெற்றுக்கொண்டேன். இவற்றோடு பல்கலைக்கழக காலத்திலும் பின்னரும் கலைவரலாற்றுத்துறைப் பேராசிரியர் சனாதனன் என்னுடைய கட்டுரைகள் ஆய்வுகள் பற்றி அவ்வப்போது வழங்கும் ஆலோசனைகள் முக்கியமானவை. பின்னர் முதுமானிப்பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் மேற்கொண்டேன். அப்போது பேராசிரியர் மனுரத்ன எங்களுக்கு ஆய்வு முறையியல் கற்பித்தார். அவருடைய ஆய்வு அனுபவங்கள் என்னுடைய் ஆய்வு பற்றிய பார்வைகள் முறைகளில் முக்கியமானவை. குறிப்பாக ஆய்வைக் கோட்பாட்டு வியாக்கினங்களுக்கால் எவ்வாறு கொண்டு போவது என்பது தொடர்பில் அவருடைய ஆலோசனைகள் பயனமைந்தன. கள ஆய்வுகள் தொடர்பில் அவருடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார், மிகவும் பிரியோசனமான வகுப்புகள் அவை. இது தவிர பேராசிரியர் ஹேரத் தன்னுடைய ஆய்வுகள் பற்றிய சொந்த அனுபவங்களை விரிவுரைகளில் பகிர்ந்து கொள்வார். சமூகவியல் கோட்பாடுகள் தொடர்பில் அவருடைய வகுப்புகளில் ஆசிய உற்பத்தி முறைமை, கீழை வல்லாதிக்க முறைமை தொடர்பான ஆய்வுகளின் வரலாறுகள் விமர்சங்களை அவர் முன்வைத்த அடிப்படைகள் திறந்து விட்ட வெளிச்சங்களை நன்றியுடன் நினைவு கூர வேண்டும். பாடப்புத்தகங்களில் இருந்து அனுபவங்களுக்குச் செல்லும் புத்திசீவிகளிடம் கற்கக் கிடைத்தது என்னுடைய நல்லூழ். எல்லா மாணவர்களுக்கும் இது வாய்ப்பதில்லை. இன்றைக்கும் பேராசிரியர் சிவத்தம்பியிடம் கற்ற மாணவர்கள், குறிப்பிட்டத்தக்க பெறுமதியான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கலை இலக்கியம் மற்றும் அனுபவப் பின்னணியில் இருந்து ஆய்வுகளை அணுகுவது முக்கியமானது.
நான் எழுத்தாளனாகப் புனைவிலக்கியத்தின் தளத்தில் இயங்குபவன் என்ற அடிப்படையுடன் தொடங்கியவன். சமூக செயற்பாட்டு இயக்கத்தில் செயற்படும் போது, விதை குழுமத்தில் முறைசார் கல்விப்புலம் சார்ந்து வரலாறு கலைவரலாறு, மரபுரிமை , மானிடவியல் சார்ந்த ஆய்வுகள் தேவைப்பட்டன. அமைப்பில் நானும் பிருந்தாவும் பல்கலைக்கழகம் சார்ந்து ஆய்வுகளைப் பயின்றவர்கள் என்பதால் தொன்ம யாத்திரை இதழின் ஆசிரியர்களாக இருந்தோம். பிருந்தா கலைவரலாற்றுத்துறையில் யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்திலும், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் கற்றவர். ஊர்காவற்றுறை கட்டடக் கலை தொடர்பில் ஆய்வொன்றைச் செய்திருக்கிறார். தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறார். கடுமையாக விரும்பி உழைக்கக் கூடியவர். எங்களுடைய தலைமுறையில் எழுந்து வந்த பெண்களில் முக்கியமான ஆளுமையவர். தற்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைவரலாற்றுத்துறையில் விரிவுரையாளராக இருக்கிறார்.
தொன்ம யாத்திரையில் செயற்படும் போது ஆய்வுப்பணிகளைச் செய்வது செயலூக்கமும் மகிழ்ச்சியும் தந்தபடியே இருந்தது. ஆயினும் எப்பொழுதும் புனைவிலக்கியம் நோக்கியே ஈர்க்கப்படும் ஒருவனாக இருந்தேன். பண்பாட்டு அமைப்பொன்றில் எடுத்துக்கொண்ட பொறுப்பு என்ற அடிப்படையில் அதனுடன் பொருந்தியிருந்தேன். ஆனால் நாம் எதுவோ அதையன்றிப் பிறதை ஓரளவுக்கே செய்ய முடியும். அதுவே என்னை ஆய்வுக்கான உழைப்பிலிருந்து தூரப்படுத்திக்கொண்டிருந்தது. அதன் தேவைகருதி கடைசி வரைக்கும் அவ்வேலைகளைச் செய்துவந்தேன். அவற்றோடு என்னுடைய தனிப்பட்ட கட்டுரைகளையும் ஆய்வுகளாகவே எழுதி வந்தேன். தகவல்களைச் சேகரிப்பது ஒழுங்குபடுத்துவது மூலம் இன்னொன்றைக் கண்டறிதல், அக்கண்ணிகளை இணைத்தல், உரையாடலுக்குள் கொண்டுவருதல், ஆவணப்படுத்தல். இதழ்களில் பிரசுரித்தல். இதுவே அப்பணியின் சுழற்சியாக இருந்தது. அதனளவில் பயனுள்ளதாகவே இருந்தது. அமைப்பிலிருந்த அருண்மொழிவர்மன் பல்கலைக் கழகம் சாராதவர் ஆயினும் அவருடைய தனிப்பட்ட வாசிப்பும், அதன் மூலம் எனக்கு அவரளித்த ஆலோசனைகளையும் நன்றியுடன் நினைவு கூரவேண்டும்.
நகுலாத்தை நாவலை எழுதும் போது , விதை குழுமத்திலிருந்து வெளியேறி இருந்தேன். அப்பொழுது ` அமைப்பென்ற `பொறுப்புள்ள` ஆய்வு வேலைகளை உதிர்த்துவிட்டு சுதந்திரமாக நாவலின் களங்களுக்குள்ள தகவல்களைத் தேடிச்சென்றேன். நாவலுக்குரிய ஆய்வு என்பது, அதை எழுதும் போது எழும் புனைவுக்கான தேவைகளாகவே இருக்கும். பெரும்பாலும் களப்பயணங்களைக் கோரும். ஏனென்றால் ஆய்வை முடித்துக்கொண்டு நாவலை எழுத நினைத்தால் நாவலை வாழ்க்கை முழுவதும் எழுதிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
ஆயினும் நாவலை எழுதும் போது, தொன்ம யாத்திரைக்காக தேடிக்கற்ற நூல்கள் , மேற்கொண்ட கள ஆய்வுகள் பெரியளவில் உதவின. வரலாறு, மானிடவியல் போன்ற துறைகள் கலை இலக்கியங்களுக்கு நெருக்கமானவை. அந்த நெருக்கத்தையும் சரட்டையும் புரிந்துகொண்டால் , அதை வறட்சியான தகவல் பயில்வாகவன்றி வாழ்க்கைக்கு கொண்டுவந்து உள்வாங்க முடியும்.
எடுகோள், அல்லது நோக்கம் சார்ந்து மட்டும் தகவல்களைத் தேடுவதே சலிப்பானது. ஆய்வுகளை மேற்கொள்ளும் போது அடிப்படையான சில தெளிவுகள் , நல்ல வாசிப்பு பின்புலம் என்பவை அடிப்படையானவை. அரசியல் சரிநிலைகளைத் தாண்டி வரலாற்றில் அவ் ஆய்வின் இடம் என்ன என்ற கேள்வி உள்ளிருப்பது முக்கியம். அத்தோடு ஆய்வாளர்கள் தாங்கள் எந்த சிந்தனைப்பள்ளிகளின் தளங்களில் இயங்குபவர்கள் என்ற தெளிவுடனும் இருக்க வேண்டும். என்னுடைய ஆய்வு வேலைகளில் கோட்பாட்டு விவாதங்களின் அடியில் மாக்சியத்தை என்னுடைய தளமாக வளர்த்தெடுத்திருந்தேன். முக்கியமாக அந்தோனியோ கிராம்சி, எரிக் ப்ரம் போன்ற மாக்சிய அறிஞர்கள் பண்பாடுசார் பார்வைகளுக்கு உதவியவர்கள்.அவர்களுக்கு மேலாக கீழைத் தத்துவம் தொடர்பான வாசிப்பு தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுகிறது. இந்த நிலத்தில் நிற்கும், இந்தப்பண்பாட்டைக் கொண்டு `அறிதல்` முறைகளை ஏற்படுத்திக்கொள்வதற்குரிய முயற்சிகளில் இருக்கிறேன். எழுத்தாளனாக இதுதான் என் புனைவின் நிலம் என்னும் போது இந்த நிலமும் பண்பாடும் எழுந்து வந்த வழிகளைக் கண்டறிவது அவசியமென்று நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முதல் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்` தொகுப்பை வாசித்துவிட்டு தமிழினி வசந்தகுமார் `ஏன் உள்ளூர் மரங்களில் தொங்கும் பேய்கள் கண்களில் தெரியவில்லையா?` என்று கேட்டார். அங்கிருந்து தான் நகுலாத்தைக்கு வந்து சேர்ந்தேன். வரலாறும், தொன்மமும் என்னைப் பிடித்துக்கொண்டன.
ஆய்வுகளை விலக்கிவிட்டேன் என்பது இம் முறைசார், கண்டறிவுகளில் இருந்து விலகிக் கொள்வதுதான். மற்றபடி இக்களங்கள் தொடர்பான கற்றலையோ அறிதலையோ நிறுத்தப்போவதில்லை. தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் நாவல் வரலாறு, மானிடவியல் பின்னணிகளைக் கொண்டது. அதற்கான களப்பயணங்கள், வாசிப்பு எல்லாமே நிகழ்ந்தபடியேதான் உள்ளது. சுவாரஸ்யத்திற்கு ஒன்று சொல்கிறேன். எண்பதுகளில் தொடங்கி தினசரிப்பத்திரிகைகளை ஒவ்வொரு நாளாக வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன். தினசரிகளில் காணும் செய்திகளில் இருந்து அன்றைய நாட்கள் ஒவ்வொன்றும் மீள உருவாகி வந்துகொண்டே இருக்கும். செய்திகள் விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் தொடர்ங்கி ஒவ்வொன்றிலும் ஏதோ சுவாரஸ்யம் தட்டுப்பட்டுக்கொண்டே இருக்கும். இதுவே `1980 தொடக்கம் 2009 வரையிலான தினசரிப்பத்திரிக்கைகளில் குடும்ப வன்முறைகள் பற்றிய ஆய்வு` என்று ஓர் எடுகோளோடு ஆரம்பித்திருந்தால் என் கண் விறு விறுவென்று குறித்த செய்திகளை மட்டும் தேடியிருக்கும், இதர செய்தி ஒன்றும் கண்ணில் பட்டிருக்காது என்றே தோன்றுகிறது. ஆய்வென்பது என்னளவில், எழுத்தாளரின் பார்வைக்கு இடப்பட்ட கடிவாளம். ஆனால் புனைவிற்காக நுழையும் போது எந்த முன் தேவைகளும் இல்லாது எனக்காக அவற்றை வாசித்துக்கொண்டே செல்கிறேன். உதாரணத்திற்கு ஒரு செய்தி சொல்கிறேன். `இடம்பெயர்ந்த மக்களின் தந்திகள் தபால் நிலையங்களில் குவிகின்றன` என்ற செய்தி கண்ணில்பட்டது. 2009 மேக்குப் பிறகு வவுனியா, யாழ்ப்பாணம் நலன்புரி நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டன. நலன்புரி முகாம்களில் தபால் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் தபால் நிலையங்கள் ஸ்தம்பிதமாகுளவு தந்திகள் குவிந்துகொண்டிருந்தன. தபால் ஊழியர்கள் சமாளிக்க முடியாது திணறிக்கொண்டிருந்தார்கள். சட்டென்று நெஞ்சில் ஓர் அந்தரம் தொற்றிக்கொண்டது. யுத்த நிலத்திலிருந்து வெளியேறிய சனங்களின் சொற்கள். ஒவ்வொரு கடிதமும், தந்தியும் அந்த யுத்தம் பற்றிய கதைகளின் துயரத்தால் நிரம்பியிருக்கும், தந்திகள் `உயிருடன் இருப்பது தொடர்பிலோ இல்லாதவர்கள் தொடர்பிலோ இருந்திருக்கும். உலகின் கனமான தந்திகளவை. ஓர் எழுத்தாளனாக நான் அந்த அந்தரத்தின் அனுபவத்தை அடைவதே என்னுடைய எழுத்தின் பணியாக இருக்க வேண்டும். மணற்கேணியை அகழ்ந்து செல்லும் கைகள் நீரூற்றைத் தொடுவதுபோல.