ஐந்து லட்சம் கவிஞர்கள்

ஓர் அறிவிப்பு

52 வது சுவிஸ் இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து 53வது இலக்கியச் சந்திப்பை இத்தாலியின் சிசில் தீவில் நடத்தலாம் என இருக்கிறேன். அனலைதீவில் நடத்த ஆதரவளித்த நண்பர்கள் ஐரோப்பாவின் காலடியில் நசிவுண்டு கிடக்கும் சிசில் தீவில் 53வது இலக்கியச் சந்திப்பு நிகழ ஆவன செய்ய வேண்டுகிறேன். அந்த சிலக்கியச் சந்திப்பை ஒட்டியும் ஒரு தொகுப்பு வெளியிடலாம் என வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன். இம்முறை கவிதைத்தொகுப்பு.

யாரையும் புண்படுத்தாத, விடுபடல்களே இல்லாத பெருந்தொகுப்பு திட்டம். முதலில் 5 இலட்சம் ஈழப் புலம்பெயர் கவிஞர்களின் 5 இலட்சம் கவிதைகளைத் தொகுக்கலாம் என்றே பணியைத் தொடங்கினேன். ஈழப் புலம்பெயர் சூழலில் ‘முக்கியமான’ – கிட்டத்தட்ட சொற்களைப் பொடிபோடும் அனைவரும் முக்கியமானவர்கள்தான் இல்லையா- 5 லட்சம் கவிஞர்களை தொகுத்து, கவிதைகளை பட்டியலிட்ட போதுதான் ஒன்றைக் கவனித்தேன். முக்கியமான இரண்டு விடுபடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று றியாஸ் குரானா, மற்றது கற்சுறா. முக்கியமான அவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வருவதில் அறப்பிழை இருப்பதால் அய்ந்துலட்சம் என்ற குறைந்தபட்ச எல்லையை விரிவாக்கி பத்துலட்சம் கவிஞர்கள், பத்து லட்சம் கவிதைகள் என்று தீர்மனித்தேன். அப்படி ஈழப் புலம்பெயர் சூழலில் முக்கியமான 10 லட்சம் கவிதைகளை தொகுத்தபின்னரும் மேற்குறிப்பிட்டவர்களுள் ஒருவருக்கே அந்தப் பத்துலட்சத்தில் இடம் கிடைத்திருக்கிறது. அது யார் என்பது இப்போதைக்கு ரகசியம்.

விடுபட்ட கவிஞரை சரியாக ஊகித்து மின்னஞ்சல் செய்யும் வாசகர்களுக்கு பெரும் தொகுப்பு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். தொகுப்பின் பெயர் கழிவறைக் கவிதைகள். அதாவது கழிவறையில் வைத்து பாதுகாக்க, படிக்க வேண்டியவை என்ற இடுகுறிப்பெயருடன் தொலைநோக்காக இடப்பட்டிருக்கிறது. ஆக கவிதை தொகுப்பை கழிவறையில் வைக்க வேண்டும் என்பதே முன்நிபந்தனை. கழிவறையில் அவசரத்து டிஸ்யூ பேப்பர் இல்லாவிட்டால் – அது அப்படி அவசரத்துக்கு எப்போதும் இல்லாமாலாகும் வஸ்துதான் – கவிதைத் தொகுப்பைக் கிழித்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படியான ஒரு பெரும் தொகுப்பின் பயன் சமூகத்தில் அது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். அதற்காக இலகுவான, மென்மையான தண்ணீரில் கரையக்கூடிய எடை குறைந்த தாளில் கவிதைத் தொகுப்பை அச்சடித்துக் கொடுக்க நீலண்டன் தோழர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
கவிதைகளையும், ஊகித்தவர் பெயரையும் அனுப்பவேண்டிய முகவரி : dhpirasath@gmail.com

-தர்மு பிரசாத்

………..

மேற்படி தர்மு பிரசாத்தின் பதிவைப் பார்த்துவிட்டு பிரசாத் இவ்வளவு சனநாயகத்திற்குப் போயிருக்க தேவையில்லை என்று நினைத்தேன்.  ஆனாலும் 5 லட்சம் கவிஞர்கள் என்பது எவ்வளவு பெரிய தமிழ்க் கனவு.  ஆகவே என்னுடைய நண்பர் என்ற அடிப்படையில் அவருக்கு சில சம்பவங்களை ஞாபகப் படுத்த நினைத்தேன்.சில வருடங்களுக்கு முதல்  யாழ்ப்பாணத்தில் தீடிரென யாழ்ப்பாணத்து கவிகளின்  வட்சப் குருப்களில் (ஆமாம் இருக்கின்றன, நீங்கள் உலகம் தெரியாமல் இருப்பதற்கு நானென்ன செய்வது!) சலசலப்பு எழ ஆரம்பித்தது. உளவுச்செய்திகள் வந்தபடியே இருந்தன. தீவிரமாக தேனீர் போட்டுக்கொண்டு கவிகள் இருந்து எழுதத் தொடங்கி இருந்தனர்.  ஏதுகை மோனை களைத்துப்போய் வீரிட்டது.

விடயம் என்னவென்று விசாரித்தால் அந்த ஆயிரம் கவிஞர்கள் என்ற  கனவுப்புத்தகம் வரப்போகிறது.  கொஞ்ச நாளில் அதன் வெளியீடு நிகழ்ந்தது.தொகுப்பிற்கான அறிவிப்பு , போஸ்ரர்கள் எல்லாம் வெளியாகின,   மனுஷ்ய புத்திரனே அஞ்சியது போல்தான் கேள்விப்பட்டேன்.  புத்தகத்தின் கிலோக்கிராம் அறிவிப்போடு  வெளியான முதல் தமிழ் நூல் என்ற பெருமையுடன் வெளிவந்தது. ஒரு சனநாயகத்தின் பேரகராதி. நானே ஆச்சரியப்படும் வகையில் என்னுடைய ஊரிலிருந்து என்னோடு முதலாம் வகுப்பில் படித்த மக்கள் எல்லாம் எழுதி இருந்தார்கள்.  அதில் எழுதாதவர்கள் கவிகளே இல்லை என்பது போல என்னை நடத்தினார்கள். கவிதை வராதது என்னுடைய குற்றமா? குறுகிப்போனேன். அக்கனவின் முன் ஏக்கத்துடன் நின்றான் எனக்குளிருக்கும் குழந்தை.  எழுந்து வரட்டுமா என்று கேட்டான் அடித்துப் புதைத்த கவிஞன்.

அப்பொழுது அப்பாடா நம்காலத்தின் மிகப்பெரிய சனநாயக வெளி இந்தக் கவிதைத் தொகுப்புத்தான் இனி எந்த கவியும் அங்கீராம் இல்லை வாசகர்கள் இல்லை என்று புலம்ப மாட்டார்கள், தொகுப்பில் தங்களைச் சேர்க்கவில்லை என்று குத்தி முறிய மாட்டார்கள். அதைச் சொல்ல முடியாமல் `இந்த தொகுப்பு எந்த அடிப்படையில் தெரிவின் அரசியலைக் கொண்டிருக்கிறது ?` என்று ஊரைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.   ஓ , என் காலமே சனநாயகமே என்று குதித்தேன். ஆனால்  தொகுப்பு வெளிவந்த அடுத்த நாள் இன்னுமொரு ஆயிரம் கவிகள் வந்து , எங்களை ஏன் சேர்க்கவில்லை என்று நின்றார்கள். சொல்லினால் சுடுவேன் என்றார்கள். கவிதையில் வசைத்தார்கள். எரிந்தார்கள்,  புயலடித்தார்கள். சனநாயகத்தின் ஆணி வேரை சொற்களால் சுட்டார்கள், நீதி கேட்டார்கள். போதாதற்கு புயல் ஓய்ந்து கிடந்த ஓர் நாளில் ஜெயமோகன் ஒரு சமூகத்திற்கு இத்தனை கவிஞர்கள் கூடாது  மருந்தடித்து கொன்றுவிடவேண்டும் என்றார். நானே புண்பட்டேன். சனநாயகம் பற்றி அவருக்கு ஒரு கடிதம் எழுத நினைத்து விட்டு  விட்டுவிட்டேன்.

இம்முறை நண்பர்  தர்மு ஐந்து  லட்சம் என்ற கனவை முன் வைத்திருக்கிறார். இப்படியாவது அடங்கட்டும்  இந்த நல்லுலகின் கவிதை வேட்கை.  சனநாயகத்தின் தாகம். என்ன எனக்கொரே ஒரு பயம்தான் ஐந்து லட்சத்து ஓராவது கவியின் சாபத்தில் மனுசர் என்ன ஆகப்போகிறாரோ.

வாழ்த்துக்கள் தோழர்.

-ய

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’