எதிராளி / THE OPPONENT

 

Bruce Lee’s Library

எதிராளி / THE OPPONENT

சமூக செயற்பாடுகளில் இருந்து வெளியேறிய பிறகு இலக்கியம் என்னை  நமட்டுச் சிரிப்புடன் தான் எதிர்கொண்டது.  முன்பிருந்தே பெரும்பாலும் தினசரி ஏதேனும் எழுதுபவன், வாசிப்பவன்.  புனைவெழுதுவதைக் கைவிடாமல் இருந்ததுதான் என் வாழ்வில் எனக்கே நான் செய்துகொண்ட முழு நற்செயல்.  தொடங்கியதெல்லாம் இலக்கியத்தில் என்பதால் அது எங்களை நீங்காமல் உண்மையாக உடனிருந்தது. புனைவு எழுதுவதோ அதை எழுதும் போதே  அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ பயணங்கள் போவதோ எனக்குப் பழக்கமானதும் பிடித்ததும்.  ஆனால் இவ்வளவு காலமும் எழுதிவந்த  கட்டுரைகள் பத்திகள் என்னிடமிருந்து அநியாயத்திற்கு ஆய்வு, விமர்சனம் போன்ற இலக்கியகாரனுக்கு ஒவ்வாத இயல்புகளுடன் இருந்ததை  கண்ட போது பெரியளவில் குழம்பிப்போனேன். முக்கியமாக எனக்குள் மொழியின் இரைச்சல் கேட்டபடியே இருந்தது. ஒன்றைக் காணும் போது  எனக்குச் சில சிக்கல்கள் எழுந்தன. ஓர்  உயிரற்ற புற்று மனதுள் புரையேறிக்கொண்டே இருந்தது.  ஒரு புதுப்படத்தை பார்க்கும் போது பின் சீற்றில் இருந்து யாரோ கதையை முந்திக்கொண்டு சொல்வது போல. ஒரு சம்பவம் சொல்கிறேன்.

பேரூந்தொன்றில் ஏறினேன். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா போவது. ஏறிய போதே கணிசமாகக் கூட்டம். ஆசனங்கள் நிரம்பியிருந்தன. வாசலுக்கு எதிரே இருந்த ஆசனதினருகில்  நின்றிருந்தேன். எனக்கு எதிரில் இருந்த  இரட்டை ஆசனத்தில் வெள்ளை சேட்டு பளிச்சென்று இன் செய்த `ஆபீசர்` தோற்றமுள்ள  நடுத்தரவயதுக்கார் யன்னல் பக்கம் அமர்ந்திருந்தார்.  யன்னல் பக்க பேரூந்து சுவருக்கும் தனக்கும் இடையில் தன் பக்கப் பையை வைத்து தன் வெள்ளைச் சேட்டில் கறையேதும் படிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்.  அவருக்குப் பக்கத்தில் எழுபது எண்பது வயது மதிக்கத்தக்க  சீத்தைச் சேலையணிந்த ஆச்சி ஒருவர் இருந்தார். அவருடைய காலடியில்  கரும்பயனேறிய படுமுடிச்சால் முடிந்த பை ஒன்று கிடந்தது. தலையில் எண்ணேய் வடிந்தது. லேசாக குணுங்கும் எண்ணை வாடையிருந்தது. ஆச்சி பிடரியைச் சீற்றில் சரித்து, வாய் திறந்திருக்க ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். நெற்றியில் மிகப்பெரிய சந்தனப்பொட்டு, நக இடுக்கிலும்  மிச்சமிருந்தது. கழுத்தில் ருத்திராட்சம்.  நன்றாக கண் அயந்து கொண்டிருந்தார். பேருந்தின் ஆட்டம் அவர் உறங்கிப்போக பக்கத்தில் இருந்தவர் பக்கம் சரித்து விழுத்தியது.  தலை சரிய திடுக்கிட்டு திடுக்கிட்டு எழுந்து மீண்டும் மீண்டும் நித்திரையானார். பக்கத்தில் இருந்தவர் தன் கையைச் சரித்து ஆச்சியை உண்டு குடுத்து தன் பக்கம் விழுவதைச் சமாளித்துக்கொண்டிருந்தார். ஆச்சியைப் பார்த்துக்கொண்டே மற்ற ஆசனங்களைக் கவனித்தேன்.. அவரைப்போல் வயதுள்ள ஆண்கள்  பெண்கள் அதே சந்தனப்பொட்டு, அதேபோல் பை, உருத்திராட்சம் அல்லது மணிகள் கோர்க்கப்பட்ட மாலைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தனர். ஏதேனும் திருவிழாவிற்குப் போய் வரக்கூடும். நல்லூர் போன்ற பணக்கார நகரத்தெய்வங்களிடம் போய் தங்கி இவர்களால் மீள முடியாது. சென்று தங்கி, உண்டு வழிபட்டு வரக்கூடிய இடம் செல்வச்சந்நிதி மட்டும்தான்.. அதனாலேயே உள்ளூரில் சந்நிதியை `அன்னதானக் கந்தன் ` என்பர். வீடற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள் அங்கே உண்ணலாம் உறங்கலாம்.  அங்குள்ள மடங்களும் சத்திரங்களும் தினமும் உணவு கொடுத்துக்கொண்டே இருக்கும். யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களில் எனக்கு நெருக்கமான கோவில் அது மட்டும்தான். வெளி ஊர்களில் இருந்து இப்படி நேர்த்திக்காரர்கள், முதியவர்கள் கடைசிக்கால பயத்துடன் வந்து போவது நெடுங்கால மரபு. அவ்வாலயமொரு  நிகழும் கனவு.   ஆச்சி அதில்தானிருந்தார்.

நான் நினைத்தது சரியாகத்தானிருந்தது. இயக்கச்சி வளைவில் திரும்பும் போது ஆச்சி கண்  விழித்து மலங்க என்னைப்பார்தார், வெளியே எட்டிப்பார்த்து விட்டு, மீண்டும் என்னைப்பார்த்து. கண்களில் நிலைத்தார்.  `சன்னதிக்குத்தான் போட்டுவாறன்` என்று விட்டு திரும்ப உறங்கிப்போனர். இப்போது நான் அவரை மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன்.  அப்போது ஆச்சி மீண்டுமொருமுறை சரிந்தார். ஆச்சியின் தலையில் இருந்த  எண்ணேய் பக்கத்திலிருந்தவரின் தோள்பகுதிச் சேட்டில்  கறைப்படுத்தியது. அவர் கையை இழுத்துப்பார்த்துவிட்டு கொஞ்சம் கவலையுடன் தெரியாதவர் போலிருந்தார். . ஆச்சியை பேருந்து தூக்கித் தூக்கி போட்டாலும் உறங்கிக்கொண்டே வந்தார், சரிந்தார், எழுந்தார். மீண்டும் சரிந்தார். பக்கத்தில் இருந்த மனுசன் ஆச்சியை எழுப்பியிருந்தாலோ , விசனப்பட்டிருந்தாலோ அவளின் நித்திரை போய் விட்டிருக்கும். குற்றவுணர்வுடன் உறங்கவும் முடியாமல் விழித்திருக்கவும் முடியாமல் தவித்திருப்பார். அவரை அறியாமல் அவரைச் சுழற்றி விழுத்தும் நித்திரை அவருக்கு  ஒவ்வொருமுறை எழும்போதும்  திடுக்கிடுத்தும். பக்கத்திலிருந்த மனிதரின் ஒரு சிறிய  பொறுத்தல் எவ்வளவு பெரியது.  ஆசனமொன்று வெளிக்கவே நாம் அமர்ந்து கொண்டேன். இருக்கும் போதுதான் ஒன்றை அவதானித்தேன்.  நடந்த சம்பவம் எனக்குள்  விபரணையாக ஓடிக்கொண்டிருந்ததை தற்செயலாக மனமுணர்ந்தது.  எழுதுவதற்காக சொல்வது போல் நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒரு குரல் உள்ளூர காண்பதை  விபரித்துக் கொண்டிருந்தது.  நான் தான் பார்க்கிறேனே பிறகேன் இது சொல்கிறது?  யாரிடம் சொல்கிறது ? அகத்திற்குள் இருப்பது நான் மட்டுமேதானே? இந்த மொழி எழத்தேவையே இல்லையே.  என்னுள் எழுந்தது அக எழுச்சி என்றால் அது எனக்கொரு பிரச்சினையுமில்லை. ஆனால் அதில்  தெள்ளத்தெளிவாக மொழியைக் காண முடிந்தது.  தெளிந்து அமைதியாக ஓடும் நதி ஒன்றின் மேல் இரைந்து கொண்டு பறக்கும்  வண்டொன்று.   அப்படிப்போ இப்படிப்போ அதைச் சிந்தி இதைச் சிந்தி, இது இப்படி இருக்கிறது இது இதனால் நடக்கிறது  என்று இடைவிடாது விபரணையும் தர்க்கமும்  ஓடிக்கொண்டிருந்தது.

ஆழ வாசிக்கும் போது முதலில் அடங்குவது  அறிவுதான்.  கற்பனைக்கும் உணர்வுக்குமான தறி அமைதியாகத் தைத்துச் செல்லும். சத்தங்கள் எழுவதில்லை.  புனைவை எழுதும் போதும் வாசிக்கும் போதும் மனம் அடையும்  இன்பமது. எனக்கு வாசிக்கும் போதும் எழுதும் போதும் மட்டுமல்ல  எல்லா நேரமும் ஒன்றுடன் உணர்வும் கற்பனையுமாகப் பார்த்தால் போதும். அதைப் பார்க்கும் போது எந்தக்குரலும் எழவேண்டாம். எதுவும் என்னைக் கண்காணிக்க வேண்டாம்.

`ஓர் இளம்பாடகன் தனிமையில் மெய்மறந்து பாடுகிறான். அவன் கித்தாரில் ஓடும் விரல்களையோ, சூழலோ அவனுக்கு மறந்து போய் பாடுகிறான். பாடல் அவனை அழித்து தான் மட்டும் நிறைகிறது. பாடப்பாட அது அற்புதத்தைக் கூட்டிச்செல்கிறது. அவ்வேளை  இளம் பெண்கள் அவனைக் காண்கிறார்கள். அவனருகில் வந்து அவர்களின் பாடலைக் கேட்கிறார்கள், வியந்து நிற்கிறார்கள். எதேட்சையாக இவன் இளம் கண்கள் அவர்களைக் கண்டு விட்டது, அவன் தன் பாடல் மேல் கவனத்தைக் குவிக்கிறான், நன்றாகப் பாடவேண்டும் என்று தனக்குரைக்கிறான். உடனே பாடலும் சுரமும் அவனை விட்டுச்செல்கின்றன.“

இன்னொரு இடத்தில் ஆயிரம் கால்களைக் கொண்ட அட்டைப்பூச்சி நடந்து செல்கிறது  அப்பொழுது தவளை ஒன்று அதை மறித்து `கனவானே எப்படி ஆயிரம் கால்களையும் சீராக வைத்து நடந்து செல்கிறாய்? ஒன்றை ஒன்று முட்டாமல் குழம்பாமல் எப்படிச்செல்கிறாய், நீ எவ்வளவு அற்புதமானவன் என்கிறது. `அப்பொழுதுதான் தானொரு மகத்தான செயலைச் செய்கிறேன் என்று அட்டை எண்ணத்தொடங்க கால்கள் தடுமாறுகின்றன.  மனம் என்பது அகங்காரத்தால் நிறையும் போதுதான் தடுமாறுகிறது. அறிவே அகங்காரத்தின் மூலம்,  நீ செயற்பாட்டாளன், நீ எழுத்தாளன், நீ ஆய்வாளன், நீ விமர்சகன், நீ கோட்பாட்டாளன், நீ பக்தன், நீ மாக்சிஸ்ட்  இப்படி ஏதாவது ஏறி நம்மை நம்மிடமே விபரித்துக்கொண்டே இருக்கிறது.  இவ்வளவு நாளும் சேகரமான  அறிவு எனக்குள்  இன்னொரு விபரணையாளனைத் தோற்றுவித்திருக்கிறது. நீ இருக்கிறாய் என்று சொல்வதற்கு. மிக நிச்சயமாக புனைவெழுத்தோ, இலக்கிய வாசிப்போ இதைச் செய்திருக்காது.

சில வருடங்கள் என்னுடைய நாளின் பெரும் பகுதியை ஆய்வுகளுக்கு செலவழித்திருக்கிறேன். அது தவறு என்பதோ, அவ் ஆய்வுகள் பயனற்றவை என்பதோ அல்ல என்னுடைய  அபிப்பிராயம் ,  நான் ஆய்வாளனோ விமர்சகனோ இல்லை என்பதை உணராமல் இருந்து விட்டேன்.  சேகரிக்கும் அறிவு  தகவல்களாக மட்டும் அடுக்கப்படுவது  நிகழ்ந்திருக்கிறது.  அதில் இருப்பவை தகவல்களும் மேலோட்டமான என்னுடைய கருத்துகளும், தொகுப்பும் ஆவணப்படுத்தலும்.  அதன்வழியே கிடைத்த அங்கீகாரமும் புகழும் எனக்குள் தேங்கி இருக்கிறது. நெஞ்சில் வளர்க்கக் கூடிய அகங்காரத்தைப் போல்,  ஒரு எழுத்தாளருக்கோ கலைஞருக்கோ பேரழிவு வேறொன்றுமில்லை. நகுலாத்தையை எழுதும் போது காடுகள், உள்ளூர் தெய்வங்கள், சுடுகாடுகள், நீர் நிலைகள் என்று வன்னி முழுக்க அலைந்துள்ளேன்.  வேட்டைக்காரர்கள், பூசாரிகள், சாமியாடுபவர்கள், பலிக்கோவில் சனங்களோடெல்லாம்   இரவுபகலாகத் திரிந்திருக்கிறேன். அப்போது  ஒரு கணம் கூட தகவல்கள் சேர்கின்றன என்ற எண்ணம் ஏற்படவில்லை. வெறுமனே  அந்தந்த இடத்தில் நிகழும் காட்சியினது  அனுபவத்தைப் பெறுபவனாக இருந்தேன். கையில் ஒரு துண்டு பேப்பரோ பேனாவோ கூட வைத்துக்கொண்டதில்லை. ஆனால் ஆய்வு என்று வரும் போது புத்தகங்கள், களப்பயணங்கள் என்று சேகரித்து எழுதிக் குவிக்க வேண்டியிருக்கும். மூளை சூடாகிவிடும். எடுத்துக்கொண்ட பொறுப்பென்ற எண்ணம் மட்டுமே உந்தித்தள்ளும். அல்லது என்னை நிரூபிக்க ஏதாவது செய்ய  வேண்டுமே என்ற முனைப்பு. அவ் வேளைகளில் மனவெழுச்சிக்குரிய எந்தக் கொந்தளிப்பையும் அடைந்ததில்லை. நான் எதுவோ அதுவன்றிப் பிற இல்லை. இலக்கியத்தில் முதன்மையானது  வாழ்க்கை முன் அகங்காரத்தை இழந்து நிற்பது. உள்ளத்தைத் திறந்து வைப்பது.  அறிவென்பது எவ்வளவு அற்பமானதென்றால், அது நமக்கு நிறைவையே தரப்போவதில்லை.  நிறைவென்பது அறியாமை பற்றி அறிவதுதான்.  நமக்கு ஏதேனும் பொட்டில் அடிப்பது போல் அவ்வப்போது நிகழும் போது அறிவினால் அதைக் கடந்து விடுகிறோம்.  நேஞ்சுக்குள் அவ் அனுபவத்தின் சாரத்தைப் பாய விடுவதில்லை. கற்ற கோட்பாடுகளின் சதுரங்கள் நம்மை மூடிவிட்டிருக்கும். நாம் அறிந்தது மட்டுமே முழுமையானது அதுவே இறுதியானது என்ற எண்ணம் தன்னை விழுங்கும் பாம்பு.  நாமே நமக்கொரு மதமாக மாறியிருப்போம். நமக்கு பேரும் புகழும் வாய்க்கும்,  பதவிகள் கிடைக்கும்,  ஆய்வாளன் , விமர்சகன், கோட்பாட்டாளன் என்று  வெண்கொற்ற குடைகள் எழும், சாமரங்கள் வீசும்.  பெயருக்குப்பின்னால் பட்டங்கள் எழும். பட்டங்களால் அடையாளமாவோம்.  சில வேளை மட்டும். அபூர்வமாக, ஏதேனுமொரு  சுவரில் மோதுண்டு, வழிப்போக்கர்களால்  கைவிடப்பட்டு, மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பும் போது நம்முடைய ஆதித்தனிமை நம்மைச்சூழும். வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகள் தொடங்கிய இடத்தில் நிற்கும். ஒரு எழுத்தாளனாக அஞ்சுவது வாழ்க்கைக்கு மட்டுமே. ஏனெனில் மிகப்பெரியதன் முன் நிற்கும் போதுதான் நாம் சிறுமையை அறிகிறோம்.  பிறருக்கு நம்மை நீருபித்துச் செல்லும் வாழ்க்கையின் முடிவில் தனிமைதான் நம்மை உண்ணத் திறந்திருக்கும்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழி, எனக்கு இலக்கியம். நான் வாசிக்கவும் கற்பனை செய்யவுமாக இங்கே வந்தவன். தற்காப்புக் கலைஞர் பூரூஸ்லியிடம்  நீங்கள்  எதிராளியை எதிர்கொள்ளும் போது என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்படும், அதற்கு அவர் `எதிராளி என்று யாருமில்லை, ஏனென்றால் `நான்` என்று ஒன்றில்லை என்பார். தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய பிறகும் எழுதத் தொடங்கிய பிறகும் மெல்ல மெல்ல இந்தப்பிரச்சினைகள் எனக்குள் தணிவதைக் காணமுடிகிறது.  விபரிக்கும்  குரலடங்கிச் செல்கிறது.  அதுவே குன்றாத மகிழ்வையும் அளிக்கிறது. தன்னகங்காரத்தை எதிர்கொள்வதற்கு பழக்குவதுதான் இலக்கியத்தின் தலையாய பணி. அறிந்ததன் அங்காரத்தை இழக்கும் போது,    ஆயிரங்கால்களால் நடக்க முடியும்.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’