வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை
ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது. அன்றாட மிடிமையும் அச்சமும் அழுத்திக்கொண்டே இருக்கிறது. இப்படி உழல்பவர்களைக் காணும் போதெல்லாம் `யோவ் மிலிட்டரி இங்கென்னய்யா செய்யிறாய்` என்று கேட்கத்தான் தோன்றும். இருந்தாலும் அவர்களில் பெரும்பான்மையானோரின் சோர்வு அவர்களின் அறியாமை என்று நினைக்கும் போது மலையேற வந்த இடத்தில் அணில் கூடு கலைந்து கிடக்கக் கண்டு உள்ளம் கனப்பதைப் போல் வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை.
சமீபத்தில் ஜெயமோகன் ஈழத்திற்கு வருவதில் ஆர்வமில்லை , அங்கே எனக்கு வாசகர் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு வழமைபோல் ஈழத்து இலக்கியச்சூழலின் அழகியல் வறட்சியையும் விமர்சித்திருந்தார். புன்னகை எழுந்தது. ஈழத்தில் அவருக்கு குறிப்பிட்ட ஒரு வாசகச் சூழல் இருக்கிறது. ஆனால் யாரும் அதை வெளிபடுத்துவதில்லை. அவருடைய ஈழம் பற்றிய புரிதல்கள், அவ்வப்போது ஈழம் தொடர்பில் அவராற்றும் கடுமையான எதிர்வினைகள், இந்திய இராணுவம் பற்றி அவர் முன் வைத்த கருத்துக்கள், முக்கியமாக அவருடைய உலோகம் நாவல் முன் வைக்கும் விடயங்கள் மற்றும் அவர் மீது உருவாகி வந்திருக்கும் ஆர் எஸ் எஸ் முகம் என புறவயமான நடைமுறை இலக்கிய அரசியல் உலகம் அவர் தொடர்பில் கொண்டுள்ள கடுமையான வன்மம் சமூக வலைத்தளங்களில் அவர் பெயரைச் சொன்னாலே வாள் தரித்து வந்து நிற்கும். இதை அவருடைய வாசகர்கள் எதிர்கொள்வதில்லை. ஈழம் தொடர்பில் அவருக்கு இருக்கும் புரிதல்களில் பிரச்சினைகள் இருக்கின்றன. அது நடைமுறை சார்ந்து மட்டும்தான். அவருடைய இலக்கிய மதிப்பீடுகள், அவற்றுக்குக் கொடுக்கும் இடம் என்பனபற்றி அவரிடம் தெளிவுகளில் எனக்குச் சந்தேகம் இருப்பதில்லை. இலக்கியத்தில் சீசருக்குரியதை சீசருக்கு வழங்கக் கூடிய ஆசிரியரவர். மேம்பட்டவர்.
இது தவிர, ஜெயமோகன் சொல்வதைத் தாண்டி , ஈழத்தின் எழுத்தாளர்கள் சலித்துக்கொள்வது போல வாசகர்கள் இல்லையா? அதில் என்ன பிரச்சினைகள் இருக்கின்றன? யாரும் வாசிக்கவில்லை அதனால்தான் எழுதுவதில் இலக்கியவாதி சோர்ந்து போகிறார், இக்காலத்தின் தீயூழ் இதுதான் என்று சொல்வது சரிதானா? இக்கருத்தை ஓர் சராசரி பொதுமனநிலை என்றுதான் கொள்வேன்.
என்னுடைய அவதானத்தில், ஈழத்தின் இலக்கியத்தில் இருக்கும் பிரதான பிரச்சினை அதன் நடைமுறை அரசியல் விவாதக் களமாக மாற்றப்பட்டு இருப்பது . அதனுடைய அழகியல் வறட்சியும், முறையான விமர்சகர்கள் இல்லாததும் முதன்மைக்காரணத்திற்கு முட்டுக்கொடுத்து நிற்கின்றன. இதைச் சொல்ல ஜெயமோகன் தான் வர வேண்டும் என்றில்லை. நாங்களே பலவருடங்களாக தலையில் அடித்துக்கொள்ளுவதுதான். ஜெயமோகன் சொன்னால் மட்டும் இவர்களுடைய தன்முனைப்பு சீண்டப்பட்டுவிடுகிறது.
இங்கே பெரும்பான்மை இலக்கியவாதிகளுக்கு இலக்கியம் பகுதிநேரப் பொழுதுபோக்கு, புகழ் அங்கீகாரம் போன்றவற்றைத் தேடிக்கொள்வது.அதற்கு உழைக்கவோ ,வாசிக்கவோ உரையாடவோ, ஏன் சிந்திக்கவோ கூடத் தேவையில்லை. மினக்கெட்டு யார் வாசிப்பார்கள் ? எழுதினால் மட்டும் போதும், எமக்குத் தொழில் கவிதை. என்று பாரதி சொன்னதை மேடையில் முழங்கும் போது, ஏண்டா நீயும் கவிஞன் அவனும் கவிஞா ? என்று முதிராத காலத்தில் கோவம் கூட வந்திருக்கிறது. பின்னர் அவர்கள் மேல் பெரிய பரிவும் இரக்கமும் கனிந்து விட்டது.
ஈழத்தில் இலக்கியத்தை நடைமுறை அரசியல், சமூக வலைத்தள களரிகளைத் தாண்டி அசலான `அழகியல்` முதிர்ச்சியோடு அணுகும் வாசகர்கள் குறைவுதான். ஆனால் அது குறைவாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் இங்கே இருக்கும் பெரும்பான்மையோர் இயங்கும் இலக்கியத்தின் நடைமுறைச் சிக்கல்களும், உருவாகிவிட்ட இவர்களின் சடங்குகளும். புற உலக முரண்களான , அரசியல் கட்சிகளும், வணிகச் சந்தையும் தீர்மானிக்கும் அன்றாட வாய்ப்பேச்சுக்களுடன் தீவிர இலக்கியம் வாசிப்பதாகச் சொல்பவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொண்டு, ஒரே களத்தில் ஜாரிக்கு நிற்பதுதான். தமிழ்த்தேசியம், இடதுசாரியம், போன்ற அரசியல் செயல் வெளிகள், கட்சிச் சித்தாந்த முரண்கள், இலக்கியத்தையும் தங்களின் களத்தில் நிறுத்திக் கொண்டு விடுகின்றன.
இன்றைக்கு இவர்களின் வழிமுறைகள் என்ன ? எதிர்மனநிலைகளில் ஊறி நின்று, வசைபாடுவது. அதற்கு இலக்கிய வடிவங்களையும் , மேற்கோள்களையும் பயன்படுத்திக்கொள்வது. சொல்லப்போனால் அக்களங்கள் குறைந்த பட்சம் அறிவார்ந்த உரையாடல் களங்களாக இருந்தால் கூடப் பரவாயில்லை, அவர்களின் சித்தாந்தங்கள் தொடர்பிலேயே எந்த வாசிப்பையும் சிந்தனை உழைப்பையும் துளிக்கும் சீண்டாத கூட்டமிது. அவர்களிடம் நிறைந்து கிடப்பது வெறுப்பும் கோசங்களும், எதிர் மனநிலைகளும்தான். தவிர செயற்பாட்டுத்தளத்திற்கு இலக்கியம் உதவலாம், அரசியல் பிரசாரமாக பயன்படலாம், ஆனால் இலக்கியத்தின் பணியல்ல , அதை இவர்களே தங்களுடைய நோக்கங்களுக்காக நீக்கியும், சேர்த்தும் பயன்படுத்துகிறார்கள். ஒரு மேற்கோளாகவோ, கோசமாகவோ.
இலக்கியத்தின் முதன்மையான பணி வாழ்க்கையின் தரிசனங்களை அடைவது. வாழ்க்கையை தத்துவம், கலை போன்றவற்றின் வழியே சென்று தொகுத்தளிப்பது. அதனுடைய வடிவம் கோசமோ, மேற்கோள்வடிவமோ இல்லை. அழகியலே அதன் வழி. . ஈழத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் அழகியல் பின் தள்ளப்பட்டு இலக்கியம் என்பது நடைமுறை அரசியலுடன் இணைக்கப்பட்டது. அழகியல் என்றாலே இன்றைக்கு ஈழத்தில் கெட்டவார்த்தையாகிவிட்டது. ஈழத்தில் நல்ல இலக்கியங்கள் குறிப்பாக நாவல் போன்ற பெரிய இலக்கிய வடிவங்கள் குறைவாகவும் , தரமற்றும் எழுதப்படுவதற்கு , அழகியல் உரையாடல்கள் அற்றுப்போனதற்கும், தத்துவம், கலை போன்றவை மீதான உரையாடல்களும், குறிப்பாக விமர்சனங்கள் முழுதழியும் நிலைக்குக்கும் யார் பொறுப்புச் சொல்வது. சரி இவர்கள் அரசியல் சித்தாந்தங்களையாவது முறையாக் உரையாடுகிறார்களா? அவை உருவாகி வருவதில் தத்துவம் இலக்கியம் போன்றவற்றின் பங்களிப்பை அறிவார்களா? அறியாமையின் இருட்டுக்கு ஒரு நிறம்தான்.
இன்றைக்கு ஈழத்துச் சூழலிலும் சரி புலம்பெயர் சூழலிலும் சரி இயங்கும் பெரும்பான்மையான இலக்கியவாதிகளும். புத்திசீவிகளும், நடைமுறை அரசியல் சார்தோர். முக்கியமாக புலி எதிர்ப்பு ஆதரவு , தமிழ்த்தேசியம் எதிர் முற்போக்கு தமிழ்தேசியம் ! போன்ற மாய இருமைகளுக்குள் உழல்பவர்கள். இவர்கள் `வாசகரே இல்லை` என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சொன்னால் அதைப்போல அறிவீனம் வேறு இருக்க முடியுமா? இவர்கள் எதிர்பார்க்கும் வாசகர் தீவிர இலக்கியத்தில் இல்லைத்தான். சமூக வலைத்தளங்களில் லைக்குகளை எண்ணி மகிழ்பவர்கள் இவர்கள். சோம்பேறிகள். செயலூக்கம் குன்றியவர்கள். அங்கேதான் வாசகரும் வேண்டும் இவர்களுக்கு.
ஒரு முறை வாசகர் குமாரதேவன் ஓர் உரையாடலில் இப்படி ஒரு இலக்கியவாதி வாசகர்கள் , வாசகர்கள் என்று கவலைப்பட்டு, ஆற்றிய உரைக்கு எழுந்து எதிர்வினையாற்றும் போது `நீங்கள் எழுதுற வேலையை மட்டும் பாருங்கோ, வாசகருக்கு தெரியும் வாசிக்க, நீங்கள் ஒண்டும் யோசிக்காமல் எழுதுங்கோ , என்றார். காலாதீதத்திற்கும் இச்சொற்கள் நிற்கவேண்டும்.
வாசகர்களை எதிர்பார்த்து எழுதப்படும் இலக்கியத்தைத்தான் நாங்கள் வணிக இலக்கியம் என்று ஒதுக்கி விடுகிறோம். ஓர் எழுத்தாளருடைய நோக்கம் வாசகர்களைப் பெறுவதா? என்ன வேடிக்கைக்குள் இவர்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியவாதிகள், தீவிர இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் என்று தெரியவில்லை. எழுத்தாளருக்கு இலக்கியம் என்பது தனக்குள்ளான பயணம். வாழ்க்கையை தன்னிலிருந்து புரிந்துகொள்ளுதல். அவருடைய முதன்மையான பணி எழுதுவதுதான். நல்ல இலக்கியமாக அது இருக்கும் போது கட்டாயம் வாசிக்கப்படும். ஒரு பதிப்பாளருடைய கவலையை தலைக்குள் போட்டுக்கொண்டு ஏன் திரிகிறார்கள் இவர்கள் ? புத்தகம் விற்கவில்லை, யாரும் வாசிப்பதில்லை என்று புலம்புவதையும் எதிர்மனநிலையோடு அலைவதையும் நிறுத்தாமல் ஒரு நல்ல வரியைக் கூட எழுத முடியாது. இப்படிப் புலம்பும் பெரும்பான்மையோரிடம் அவதானித்தது ஒருவித சுயவெறுப்பையும் தான். வெறுப்பிற்கு வழிகள் கிடையாது தன்னுள் புழுங்கி தன்னுள் அழுகி அழிவதோடு சரி. இலக்கியத்தின் முதன்மை விழைவு `அகமே`. அதே போல வாசகருக்கு அவருடைய அகவிரிவே முதன்மையானது.
ஈழத்தில் வாசகர் குறைவே தவிர வாசகரே இல்லை என்பதில்லை. சொல்லப்போனால் தமிழ்நாட்டின் வாழ்க்கைச்சூழல், சனத்தொகை என்பவற்றோடு ஒப்பிடும் போது இங்குள்ள வாசகச் சூழல் மிகப்பெரியது. இங்கே யாரும் வாசிப்பதில்லை என்பது சராசரிக்கருத்து. என்னுடைய அவதானத்தில் நல்ல இலக்கியம் வாசிக்கப்படுகிறது. சிலவருடங்களுக்கு முன்பு என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பைப் நண்பர் தர்முப்பிரசாத் ஆக்காட்டி மூலம் போடும் போது முந்நூறு பிரதிகள் அடிப்போம் என்றார், எனக்குள் மிகப்பெரிய தயக்கம் எழுந்தது, நண்பர் அகிலன் பெருந்தொகை பணத்தை முதலிட்டு என்னுடைய நாவலை வடலி மூலம் பதிப்பித்தார், அப்பொழுதும் எனக்கு அதே தயக்கம் எழுந்தது. இவர்கள் இருவருமே பெரிய அமைப்போ பதிப்பகங்களோ கிடையாது, நண்பர்களிடம் பெற்ற சிறு தொகைகளும், கைக்காசும் தான். ஒரு சக மனிதராக எனக்கு அந்தப் பொறுப்பும் , தயக்கமும் எழுந்தாலும், எழுத்தாளனாக நான் எழுதுவதை அறிந்திருந்தேன். பதிப்பாளரைப்பற்றிக் கவலைப்படுவது போல் நான் வாசகரைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. சொல்லப்போனால் எனக்கு என் வாசகர்களைத் தெரியாது. மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் தொகுப்பு ஒரே வருடத்தில் விற்றுத்தீர்ந்தது. புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்பப் பட்ட சொற்ப பிரதிகளைத் தவிர, மிகுதி எல்லாம் இலங்கையிலேயே விற்றுத்தீர்ந்தன. இன்றைக்கு என்னிடம் கூட பிரதிகள் கிடையாது. கேட்பவர்களுக்கு மின்னூலையே தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
நகுலாத்தை வெளியாகி இலங்கையில் மட்டும் எனக்குத்தெரிந்து இரு நூறு பிரதிகள் வரையில் வாங்கப்பட்டு வாசிக்கப்பட்டன. இவை நான் அறிந்து என்னுடைய கையால் வழங்கப்பட்டவையும், புத்தகக் கடைகள் தாங்கள் இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்ததாகச் சொன்ன பிரதிகளின் கணக்குத்தான். தமிழ்நாட்டில் எவ்வளவு விற்றிருக்கிறது என்ற கணக்கை பொருட்படுத்தவில்லை. இதைத் தம்பட்டம் அடிக்கச் சொல்லவில்லை. இலக்கியம் என்னைப் புலம்ப விட்டதில்லை. என்பதற்காகச் சொல்கிறேன்.என்னுடைய பெரும்பாலான வாசகர்கள், சமூக வலைத்தளங்களில் இல்லை. நானே இதை அறிந்த போது மிகவும் மகிழ்ந்து போனேன்.
சமூக செயற்பாடுகளில் இருந்து வெளியேறி முழு மனவிழைவாக இலக்கியம் மட்டுமே என்று வந்த பிறகு இணையத்தளமொன்றை பெற்று அதில் தொடர்ந்து எழுதிவருகிறேன். என்னுடைய கட்டுரை ஒன்றை கடந்த மூன்று மாதங்களில் மெல்ல மெல்ல அதிகரித்து இன்றைக்குச் சராசரியாக நூற்றம்பது பேர்வரை தொடர்ந்து வாசிக்கிறார்கள். நான் மட்டுமல்ல நண்பர் கிரிசாந்தும் எட்டு மாதங்களுக்கு முன் தொடங்கிய தன்னுடைய இணையத்தளத்தில் தினமும் எழுதுகிறார். அவர் சமீபத்தில் தொடங்கிய அவருடைய `அழி களம்` என்ற நாவலைச் சராசரியாக தினமும் இருநூறுபேர்வரை வாசிக்கிறார்கள். நம்முடைய சூழலுக்கும் சனத்தொகைக்கும் இவை பெரிய தொகை. இத்தனைக்கும் நாங்கள் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்து நான்கைந்து மாதங்கள்தானிருக்கும். தினமும் வாசகர்கள் வாசிக்க வருகிறார்கள். குன்றாது செயல்புரிதல் தனிப்பட்டு மகிழ்ச்சியையும் மனவிரிவையும் அளிக்கிறது தளத்தில் வாசிக்கும் வாசகர்களை நான் அறியேன். ஆர்வமும் இல்லை. சில கடிதங்கள், கேள்விகள் வரும் போது அவற்றையொட்டி உரையாடல்களைச் செய்கிறேன். இதில் என்னுடைய எழுத்து வாசிக்கப்படுவது என்பது எனக்கு மேலதிகமாக கிடைக்கும் மகிழ்ச்சியான செய்தி மட்டுமே. இலக்கியத்தால், எனக்கிருக்கும் முதன்மை விருப்பம் என்னுடைய சொந்த அகத்திற்குரியது. இலக்கியத்தின் அழகியலும் அது விரிக்கும் வாழ்க்கையும், அவிழ்க்கும் புதிர்களும் என்னைக் குன்றாது செயல்புரியச் செய்கிறது. சொல்லிலே துயின்று சொல்லிலே எழுந்து வாழ்வை வாழும் இன்பம். உயர்த்திய காண்டீபம். வாசகருக்கு வாசித்தல் செயல் இன்பம், எழுதுவபவருக்கு எழுத்துச் செயல் இன்பம்.
வாசகர்களை உருவாக்க முடியாது , அவர்களாகவே உருவாகி வருவதைத் தவிர வேறேதும் வழிகள் கிடையாது. இங்கே பிரச்சினை என்னவென்றால் எழுதுபவர்கள் , வாசகரை உங்களை விட ஒருபடி கீழே இறக்கி வைக்கிறீர்கள். வாசிப்பதை ஒரு கலைச்செயற்பாடாக ஏற்றுக்கொண்டாலே பிரச்சினை தீர்ந்துவிடும். அவர்களுக்காக அவர்கள் வாசிக்கிறார்கள். நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதற்காக அல்ல, ஏன் பலசமயங்களில் எழுத்தாளரைத் தாண்டிச்சென்று வேறொன்றை அடையும் வாசிப்பு நிகழ்வதில்லையா ? இங்கே நடக்கும் பெரிய நகைச்சுவை என்ன என்றால் முதலில் வாசகராகவே எழுத்தில் நுழையும் இலக்கியவாதிகள் எழுதத்தொடங்கினால் வாசிப்பதை விட்டுவிடுகிறார்கள்.
ஈழத்தின் இலக்கியம் மீண்டும் அதன் செயலின் காலத்தை விரித்தெழ வேண்டும். வாசகரும் எழுத்தாளரும், அன்றாட நடைமுறை அரசியல், சமூக வலைத்தள சராசரிகளுடன் குழாயடிச்சண்டைகள், பொழுது போக்கு, ஓய்வு, கேளிக்கைகள் போன்ற செயலின்மைகள் அண்டாது இயங்க வேண்டும். ஓடும் போதும் முகம் வாடுவதில்ல. வியர்வை கொட்டக்கொட்ட உடல் ஒளி கொள்ளும். மனம் விரிந்து கிடக்கும் . நின்றால்தான் களை எழும். நல்ல இலக்கியவாதிக்கு அதை நிரந்தரப்படுத்தும் கலையே இலக்கியம். இங்கே எழுத்துச் சூழலில் பெரிய சோம்பேறித்தனம் இருக்கிறது, இலக்கியம் தரமாக இல்லை, அழகியல் இல்லை என்று ஜெயமோகன் சொன்னால் களமாடக் கிளம்பி விடுகிறார்கள், அவ் ஊக்கத்தை வாசிக்க, எழுத, சிந்திக்கப் பாவிக்கலாம். ஜெயமோகனுக்கு இந்தச் சூழல் பற்றிய , எங்களுடைய நிலம் பற்றிய, வாழ்வு பற்றிய சித்திரம் முழுமையாக தெரியாமல் இருக்கலாம். அவர் இலக்கியங்கள் மூலம் தான் இந்த நிலத்தைக் காண்கிறார். மதிப்பிடுகிறார். ஒரு வாசகராக அவரிடம் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் ? அவருடைய மதிப்பீடுகளில் சிக்கல் இருந்தால் முறையாக எதிர்வினையாற்றியிருக்கிறீர்களா? நான் இந்நிலத்தில் வாழ்பவன். வாசிப்பவன். பத்துவருடங்களுக்கு மேல் சமூக செயற்பாட்டில் இருந்தவன், , தீவிர இலக்கியத்திலும் இயங்குபவன். நான் சொல்கிறேன் இங்கே அழகியல் வறட்சியும் தரமில்லாத இலக்கியமுமே பெரும்பான்மை. போதுமா? வசைக்கும் விவாதத்திற்கும் வித்தியாசங்களைப் புரிந்துகொள்ளுங்கள். இலக்கியம் ஒரு அறிவுச்செயற்பாடு, எங்களுடைய காலத்தையே மேம்பட்ட காலமாக கருதுகிறேன். இலக்கியத்தை அறிவியக்கத்தோடு பொருத்துவது நம்முடைய காலத்தில் நிகழும், நல்ல வாசகர்கள் உருவாகி வருகிறார்கள், நல்ல எழுத்து நிகழத்தொடங்குகிறது. நான் இந்தக்காலத்தைப்போல் எந்தக்காலத்திலும் என்னுள் இத்தனை உறுதியையும் மகிழ்வையும் அடைந்ததில்லை. வாசகரே இல்லாவிட்டாலும் எழுதத்தான் போகிறேன். யாருமில்லாத காட்டிலும் தனிப்பாறையில் அமர்ந்து என்னை நானே மீட்டுவேன். உங்களுக்கொரு இரகசியம் சொல்கிறேன். எழுத்தின் பித்தில் எழுத்தாளாரின் உலகத்தில் யாருமே இல்லை. அவரும் அவர் படைத்தவை மட்டும்தான் இருக்கின்றன. புற உலகமும் வாசகரும் இல்லை. எழுத்து ஓர் மாபெரும் தனிமை. எழுத்தாளர் மிகப்பெரிய தனிமையின் ஊழ்கத்தில் திளைத்திருப்பவர். தெய்வத்தைப்போல.