எருமை அறிவு
இலக்கியம் அறிவின் (knowledge) மீதா புத்திசாலித்தனத்தின் (intelligence) மீதா கவனக் குவிப்பைச்ச் செய்ய வேண்டும் என்று நண்பர் கேள்வியொன்றோடு உரையாடலொன்றை முடித்திருந்தார். விலங்கிலிருந்து உன்னித்து எழுந்த மனிதர்கள் இவ்விரண்டு செயலாலும் ஆனவர்கள்தான். மனிதர்களின் அறிவு (knowledge), இன்னொன்று அவர்களின் புத்தி கூர்மை (intelligence) இரண்டுக்குமான அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது இதைப்பற்றிய தெளிவையும் இலக்கியம் எதை அடிப்படையாகக் கொள்கின்றது என்பதையையும் காணலாம்.
மானிட அறிவு என்பது அடிப்படையில் உலகைப் புரிந்து கொள்வதற்கான மனிதர்களின் திறன். உண்மையை அடைவதற்கான மனிதர்களின் கருவி. அவர்களே மற்ற விலங்குகளோடு பகிர்ந்து கொணிருந்த இயற்கையான விலங்கிருத்தலின் விதிகளைக் கடந்து மேலெழுந்து உருவாகிக்கிக் கொண்ட முதன்மையான மானிடத்தன்மை. புத்தி கூர்மை என்பது சிந்தனையினால் உலகைக் கையாளுவதற்காக மனிதர்கள் அடைந்த ஆற்றல். சுருக்கமாகச் சொன்னால் உலகை manipulation செய்வதற்காக அவர்கள் அடையும் ஆற்றல்.
சில நாட்களுக்கு முன்பு யானைக்காவற் கொட்டில்களைப் பார்க்க முல்லைத்தீவுக் காட்டுக்கரைகளில் இருக்கும் வயல்நிலங்களுக்குச் சென்றிருந்தேன். சிறுபோகத்திற்காக குளங்கள் திறந்திருந்தன. குளங்களில் தொடங்கும் சிற்றாறுகள் நிரம்பி மழைநாட்களைப்போல் ஈரம் . மின் வேலிகளின் கரைகளில் யானைத்தடங்கள் நிரம்பியிருந்தன. ஒரு கூட்டம் இரவு அங்கே உலாத்திச் சென்றிருக்க வேண்டும். மொட்டைக்கறுப்பன் நெல் சுணைப்புக் குறைந்தது. அதனால் அவை அப்பயிர்கண்ட நெல்வயல்களை விரும்பித்தேடி வரும் என்றார்கள் வயலவர்கள். யானைத்தடங்களின் மேல் கைவைத்துப்பார்த்தேன். விடலையில் காதலித்த நாட்களில் யாரோ `பாதங்களால் முழு உடலையும் தொடமுடியும்` என்று சொன்னது வேறொன்றாகத் தோன்றியது. சொற்கள் கல்லென்று இருப்பவை. அர்தங்கள் தூசியைப் போல் படிந்து பின் வெளியேறுகின்றன. சொல் அப்படியே இருக்கிறது. யானைகளின் தடங்களில் கை வைக்கும் போது அவற்றின் பேருரு எழுகிறது. ஒவ்வொரு யானையையும் கண்ணால் காணப் பார்த்தேன். நிமிர்ந்த போது வயலை ஒட்டிய சிற்றாற்றங்கரையில் எருமைக்கூட்டமொன்று கடந்துகொண்டிருந்தது. அவற்றின் மேய்ப்பர்கள் காட்டுத்தடிகள் சகிதம் அவற்றைத் தொடர்ந்து சென்றார்கள். அவற்றினுடைய வரிசை கண்களை உறுத்தியது. முன்னால் வலிமையான ஆண் மாடுகளும், பின்னால் தாய்ப்பசுக்களும் கடைசியில் கன்றுகளும் சென்றுகொண்டிருந்தன. சாதாரண வளர்ப்பு மாடுகளின் தாய்ப்பசுக்கள் கன்றுகளை பக்கத்தில் நடத்திச்செல்லும். அவை பட்டியில் நின்றாலும் தங்களின் குடும்ப உணர்வுடன் இருப்பவை. எருமைகள் எப்பொழுதும் அணியொழுங்கு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளும். நகரும் இராணுவ அணிக்கு நிகரான பாதுகாப்பு வளையங்களால் ஆனது அப்பெருநடை. வளர்ப்பு மாடுகளுக்கும் எருமைகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. எருமைகள் மனிதர்களிடம் வந்து சேர்ந்திருந்தாலும் காட்டிலிருந்து முழுவதும் வெளியேறாதவை. கொல்லப்படும் அச்சத்தினால் தங்களின் குழுவை பாதுகாப்பு ஒழுங்குகளுடன் வரிசைப்படுத்திக் கொள்பவை காட்டு விலங்குகள். எனக்குத்தெரிந்து மனிதர்களுடன் இணை வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட விலங்குகளில் எருமைகளே காட்டினோடு இருந்த அவற்றின் ஆதியான பந்தங்களை நடத்தைகளில் அதிகம் வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் கரையோரச்சமவெளிகளுக்கு உகந்த விலங்குகளாக எருமைகள் இருப்பதில்லை. அவை ஆறுகள், குளங்கள் செறிவான வருடம் முழுவதும் நீர் கிடைக்கக் கூடிய காட்டுக்குச் சமீபமாக இருக்கக் கூடிய இடங்களில் பரவி நிலைத்திருக்கின்றன. முல்லைத்தீவிலும் பெருங்குளங்களுக்கு கீழுள்ள பாசன வழிகளில் மட்டும் எருமைகளை அதிகம் காணலாம். அவ் எருமைகளைச் சாய்த்துச்சென்றவர்களிடம் எருமை வளர்ப்பு, பராமரிப்பு, மேய்ச்சலுக்கு விடும் முறைகள் தொடர்பில் சில நுட்பமான விடயங்களைக் கேட்டுத்தெரிந்துகொண்டேன். எருமைகள் யானைகள் அளவிற்கு காட்டின் இயல்பு கொண்ட விலங்குகள் என்றார்கள். அவை தாவர பட்சணிகளாக இல்லாதது இயற்கை கொடுத்த வரம்தான் என்றார் ஒருவர். இத்தனை ஆயிரம் வருடங்கள் மனிதர்களுடன் வாழ்ந்த காட்டு மாடுகளை பசுக்களாகவும் காளைகளாகவும் மாற்றிக்கொண்டது போல், எருமைகளை முழுதாகக் காட்டிலிருந்து பிரிக்க முடியாமைக்கு அவை தங்களின் ஆழ்மத்தில் காட்டையும், நீரையும் இழக்காமல் இருந்து வருவது முக்கியமான காரணமாக இருக்க வேண்டும். மனிதர்கள் அவற்றின் உக்கிரத்துக்கு முன்னால் சென்று நின்று அவற்றை அறிந்ததுதான் அவற்றைப் பகுதியளவேனும் வெற்றிகொள்ள முடிந்திருக்கிறது.
காட்டுமனிதர்கள் மெல்ல மெல்ல இடையர்களாகவும், வேளான்களாகவும் ஆகும் போது விலங்குகளைப் பழக்கத்தொடங்கினார்கள். முக்கியமாக அவர்களின் குலக்குறி வழிபாட்டில் இருக்கக் கூடிய இன்றைய நினைவுகள் அக்காலங்களில் விலங்குகளை எவ்வாறு தொன்மங்களாக ஒழுங்குபடுத்தி இருக்கின்றார்கள் என்பதைக் கவனிக்கும் போது சில நுட்பமான விடயங்களை விளக்க முடிகிறது. கிரேக்க தொன்மங்களில் தீசியஸ் போன்றோரின் வீர சாகச கதைகளில் அரக்கனுக்கு எருமை முகத்தைக் கொடுக்கின்றார்கள், இந்திய தொன்மங்களில் எமனுக்கு வாகனமாக நிற்கிறது , அசுரர்கள் மஹிசம் (எருமை)யாக சித்தரிக்கப்படுகிறார்கள். இப்படி ஆழ் நினைவில் அதுவொரு கடுமையான பயங்கரமான விலங்கு. ஆயினும் அது சிங்கத்தை போலவோ புலியைப்போலவோ தெய்வங்களின் புனித விலங்காக காட்டுக்குள் இருந்து பிரிக்கப்படாமல் மட்டும் இருக்கவில்லை. எருமைகளும் மனிதர்களும் இரண்டுக்குமான ஒப்பந்தமொன்றில் வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர். அவ் ஒப்பந்தம் மனிதர்கள் விலங்குகள் பற்றிக் கண்டடைந்த அறிவின் மீது நிகழ்ந்தது.
மனிதர்கள் விலங்குகளைப் பழக்குவதற்கு, தங்களுடன் சேர்த்துக்கொள்வதற்கு மேற்சொன்ன இரண்டு வகையான மானிடச்செயல் முறைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒன்று மனிதர்களின் அறிவு (knowledge ), இன்னொன்று அவர்களின் புத்தி கூர்மை (intelligence ) காட்டு விலங்குகளான எருமைகளின் தேவையானதைப் பெற்றுக்கொள்ளவும் அவற்றைப் பட்டிகளில் ஒழுங்குபடுத்தவும் அவற்றின் வாழ்க்கையையும் இருப்பையும் புரிந்துகொள்ள வேண்டியிருந்திருக்கும். விலங்குகளைக் கையாள்வதற்காக விலங்காண்டிகளாக இருந்த காட்டுமனிதர்கள் மெல்ல மெல்லச் சேகரித்த அறிவை, அடுத்து வந்த தலைமுறைகள் வளர்த்தெடுத்தனர். தர்க்கப்படுத்தி, கற்பனையில் நிகழ்த்திப்பார்த்து , நுண்ணறிவினால் வியாக்கியானப்படுத்தி, தினமும் அவதானித்து, ஒவ்வொன்றாக கண்டறிந்து மாடுகளைப் புரிந்துகொள்ளப் பார்த்திருப்பர். அவ் அறிவைக் கொண்டு நெருங்கி, போரிட்டு, கொன்று, பழகி, உணவிட்டு, ஆரோகணித்து, அடைத்து வைத்து, மூக்கணாங்க் கயிறு போட்டு, தடவி, அன்புகாட்டி அவற்றை தம் நோக்கிற்கு வளைத்திருப்பர். விலங்குகளை கையாள்வதற்கு மட்டுமல்ல மொத்த மானிடச் செயலுக்கும் அடிப்படையானது அறிதலே. ஏனெனில் புத்திசாலித்தனம் எல்லா விலங்குகளுக்கும் இருக்கும், அது அவற்றின் விலங்கிருத்தலின் , பிழைத்தலின் நடைமுறை. எப்படி வேட்டையாடுவது என்று சிங்கமொன்று கண்டறிந்த வழிமுறைகளில் தொடங்கி, சுற்றுலாப்பயணிகளின் கைகளில் இருக்கும் பண்டங்களை எப்படி லாவகமாக `லபக்` செய்யலாம் என்று ஊர் மந்திகள் பழகிக் கொண்டதுவரை இதற்கு உதாரணம் சொல்லலாம். இச்செயல்களை அறிவு என்று சொல்ல முடியாது இல்லையா? அவற்றை புத்தி என்றே சொல்ல வேண்டும். அதை பழகவும் மேம்படுத்தவும் விலங்குகளின் மூளையும் உடலும் தகவமைந்துள்ளது. மிக முக்கியமாக அவற்றின் உணவு, உறையுள், இனப்பெருக்கு ஆகிய அடிப்படைத்தேவைகளுடன் அவை மட்டுப்படும். அதற்கு வெளியே அவற்றுக்கு இச்செயல்கள் தேவைப்படாது. ஆனால் மானிடரின் அறிவு என்பது அவர்களிடம் உள்ள எல்லாவற்றையும் குறித்த மன ஒழுங்கமைப்பை உருவாக்கிக் கொள்வது. புத்தி ஒவ்வொரு விலங்கிற்கும் மாறுபடும். பொருந்தும் பொருந்தாமல் போகும். தகைவுள்ளது முன் செல்லும் தகைவில்லாதது தோற்று விழும். புத்திக்கு பொதுமை என்பதே கிடையாது. அது தனக்கு வேண்டியதைக் கையாள உருவாக்கும் திறன்மட்டுமே.
மாறாக அறிவு என்பது ஒரு மனிதர் அடைந்தாலே முழுப்பேரையும் நிறைக்கும். மானிடரின் ஒட்டுமொத்த உலகிற்கும் அது பொருந்தும். இப்படிக் கற்பனை செய்யுங்கள், முதல் முதலில் யாரோ ஒரு காட்டுமனிதர் இரண்டு சிக்கி முக்கி கற்களை உரசி நெருப்பை உருவாக்கும் முறையை அடைகிறார். அது அவருக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பீர்களா? அறிவு என்பது அடையப்பட்ட கணத்திலிருந்தே எல்லோருக்குமானதாக ஆகிவிடுகிறது. அதனால்தான் இலக்கியம் அறிவையே முதன்மைப்படுத்துகிறது. அன்பு, தத்துவம், தியானம், , இலக்கியம் இவை எல்லாம் மானுட அறிவை அடிப்படையாகக் கொண்டவை. எல்லோருக்குமானவை. அறிவின் கனி என்பது அடையப்பட்டவுடனேயே எல்லோருக்குமானதாகிவிடுகிற அற்புதத்தை நிகழ்த்திவிடுகிறது. புத்திசாலித்தனத்திற்கு இலக்கியத்தில் பெரிய மதிப்பொன்றும் கிடையாது. இலக்கியத்தில் பித்திற்குரிய இடம் கூட புத்திசாலித்தனத்திற்கு வழங்கப்படுவதில்லை. அறிவை புத்தி பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்காக அறிவை விட அது மேம்பட்டது என்பதற்கில்லை. சொல்லப்போனால் புத்தியே தன்னளவி அழிவையும் உருவாக்கக் கூடியது. புத்தி செய்த பேரழிவுகள் எல்லாம் அறிவின் மீதே பழியாக மாறும் பொதுப்புத்தி மனிதர்களிடம் பரவிக் கிடக்கிறது. இந்தச் சராசரிகளிடையே அறிவாளியை விட புத்திசாலியே முக்கியமானவராக இருக்கிறார். அணுவைக் கண்டறிந்த விஞ்ஞானி அது நாசயாகி மீது வெடித்துச் சிதறுவதைக் கற்பனையிலும் கண்டிருக்க மாட்டார். புத்திசாலிகள் அறிவை வளைப்பவர்கள், பயன்படுத்துபவர்கள். நாம் அன்பையும் , தத்துவத்தையும் கூட நமக்கேற்றதுபோல் வளைத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவே அதன் வடிவமோ உண்மையோ கிடையாது.
பெஷாபென் என்ற அறிஞர் தாய்வழிச்சமூகம் பற்றிக் குறிப்பிட்ட போது சென்ற நூற்றாண்டில் பெரிய கூடாரங்களாக மாக்சிய சிந்தனைப்பள்ளியும் நாசிக்களும் அக் கோட்பாட்டை ஆர்வப்பட்டுப் பயன்படுத்திக்கொண்டனர் பெஷாபென் தாய்வழிச்சமூகங்களில் எல்லாம் சமத்துவமாக இருந்தன, தாயின் அன்பின் கீழ் அனைத்துப் பிள்ளைகளும் சமனானவர்கள் ஒரே மாதிரியான அன்புக்கும் வாய்ப்பிற்கும் உரித்துடையவர்கள் என்றார். அதை மாக்சிய சிந்தனைப்பள்ளி விதந்து ஏற்றுக்கொண்டது. கொண்டாடியது. சிறிது காலம் செல்ல அவர்கள் அவரைக் கைவிட்டு அவரின் புகழ் மங்கிச்சென்றது, தீடிரென நாசிக்கள் , தாய்வழிச்சமூகக் கோட்பாடு, குருதி உறவு, நிலத்தைத் தாயாக கொண்டு அதனுடன் பிணைந்திருத்தல் பற்றி அக்கோட்பாடு குறிப்பிட்டவற்றை தங்களின் தூய்மைவாதம், இனவாதம், நிலப்பற்று போன்றவற்றுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அக்கோட்பாட்டின் பிறிதொரு திசையை பற்றிக்கொண்டனர். இது பேஷாபென்னுக்கு மட்டுமல்ல, நிறைய சிந்தனையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் நிகழ்ந்தது. மனிதர்கள் அறிவை ஆக்கத்திற்கும் அழிவிற்கும் கையாள்கின்றனர். அது முற்றுமுழுதாக அவர்களின் புத்தியின் தெரிவே ஆகும். அறிவு என்பது முழுமை உண்மை சார்ந்தது. நிறைவுறாமல் பெருகிச்செல்லும். அதே நேரம் அதனளவில் அதனிடம் முழுமையும் இருக்கும். சுருக்கமாக வளரும் முழுமை என்று சொல்லலாம். எழுத்தோ தத்துவமோ இம்முழுமை பற்றிய கலைவடிவங்களே.
இலக்கியத்திலும் சரி ஏனைய கலைவடிவங்களிலும் சரி புத்திசாலித்தனம் என்பது பொருட்டாக எடுக்கப்படுவதில்லை. வணிக இலக்கியங்களின் குப்பை மேடுகளில்தான் அவற்றுக்கு மதிப்புண்டு. ஜேம்ஸ்பொண்டும், ஷெர்லொக் ஹோம்ஸும் அறிவைப் புத்திசாலித்தனமாக மாற்றிக்கொள்வதால்தான அவர்களுக்கு கைதட்டுகிறார்கள். நவீன உலகில் புத்திசாலிகளையே அறிவாளிகள் என்று கொண்டாடுவர் சராசரிகள்.. சிங்கமொன்று புல்வெளிகளில் பதுங்கி இருந்து வேட்டையாடுவதை `அடடே அறிவாளிச் சிங்கம்` என்பதைப்போன்றது இது. இன்றைக்கு நம் கல்வி முறையே புத்தியினுடையதுதான். அதனால்தான் நம்மிடம் விஞ்ஞானிகளோ புத்திசீவிகளோ அரிதாக இருக்கிறார்கள். சிந்திப்பவர்களோ படைப்பவர்களோ கண்டுகொள்ளப்படுவதேயில்லை. ஏற்கனவே யரோ ஒரு கணித மேதை கண்டறிந்த சூத்திரத்தைத் தீர்க்கும் மாணவன் அறிவாளி கிடையாது, அவன் புத்திசாலிமட்டும்தான். தான் அடைந்த அறிவை மேவிச்சென்று புதியதொரு கணிதச்சூத்திரத்தை உருவாக்கவில்லை என்றால் அவனை கணிதத்தில் அறிவாளி என்பது அபத்தமின்றிப் பிறிதில்லை. அறிவு படைக்கும் செயல். இலக்கியம் முதன்மையான படைக்கும் நிகழ்வு. உங்களிடம் சில எருமைமாடுகள் இருந்தால் அவற்றைப்பட்டிய தகவல்களை தந்தையிடம் கேட்டறிந்து, அவற்றை மேய்த்து அனுபவமும் பயிற்சியுமாக மேய்ப்பராக மாறுகிறீர்கள். தினமும் அவற்றை மேய்ச்சலுக்கு கொண்டு செல்கிறீர்கள். மாலையில் வீடுதிரும்புகிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் அத்தனை அறிவும் உங்களுடையதல்ல, அதை கண்டறிந்த மூதாதையுடையது. நீங்கள் அவ் மேய்ச்சல் நாட்களில் எருமைகளைப் பற்றி புதிதாக ஒன்றைக் கண்டறிந்தால் அங்கேதான் உங்களுடைய அறிவு நிகழ்கிறது. அது எருமை பற்றிய புதிய உண்மை. புதிய அறிதல். அக்கணம் இந்தப் பூவுலகின் எல்லா மானுடர்க்கும் அவ்வறிவு உரித்தாகிவிடுகிறது. இலக்கியத்திற்கும் இதுவே அடிப்படை.. இத்தனை ஆயிரம் படைப்பாளிகளையும் அவர்களின் அறிவுச்சேகரத்தையும் அனுபவத்தையும் உள்வாங்கி தொகுத்து, உங்களுடைய மொழியை அடைந்து அதில் புதியதொரு மானிட உண்மையைச் சென்றடைவது.