தும்பி : கசப்பே அண்டாத பரிசு

தும்பி : கசப்பே அண்டாத பரிசு

தெரிந்தோ தற்செயலோ இலக்கியத்திலிருந்து சமூக செயற்பாட்டுக்குள் நுழையும் போது எங்களுக்குள் இருந்த குழந்தைகளாலேயே உந்தப்பட்டோம்.  முக்கியமாக இரண்டு கதைப்புத்தகங்களும் ஒரு சிறார் இதழும் எங்களுடைய முன் தெரிவுகளாக  இருந்தன. முதலாவது `குட்டி இளவரசன்`  பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட உலகின் மகத்தான கதைகளிலொன்று. நாமெல்லாம் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் ; சிலருக்கே அது ஞாபகம் இருக்கிறது என்ற  குட்டி இளவரசனின் சொற்கள் எங்களை கைபிடித்துக் கொண்டுவந்தன. அதன் பின் ஆயிஷா.  குழந்தைகளின் மீது நிகழும் கல்வியின் வன்முறைச் சூழலில் மானிடரின் ஆன்மாவை உலுக்கிய அக்கதையை அமைப்பிலுருந்த ஒவ்வொருத்தரும் பலமுறை குழந்தைகளுக்குச் சொல்லியிருப்போம். என்னுடைய கையினால் மட்டும் நூறுக்குக் குறையாத  ஆயிஷாக்களை வாங்கி பரிசளித்திருக்கிறேன்.  அடுத்து தும்பி இதழ்கள்.  தமிழநாட்டிற்கு சென்றுவரும் போது ஒவ்வொரு தொகுதியும் வாங்கிவருவேன். தேவை ஏற்படும் போது சிவராஜ் அண்ணனுக்கு ஒரு தகவல் சொன்னால் அழகான தும்பிப்பெட்டிகள் பரிசாகவே பறந்து வந்தன.  

சொல்லப்போனால் பணம் கொடுத்து வாங்கும் எந்தப்பரிசையும் கொடுப்பதும் இல்லைப் பெறுவதுமில்லை `புத்தகங்களைத் தவிர` என்ற முடிவுக்கு வந்தது இக்காலத்தில்தான்.  நூலகங்களுக்கு, சிறுவர்கழகங்களுக்கு, தும்பி  இதழ்களைப் பரிசளிக்கும் போது  எப்பொழுதும் நிறைவை உணர்ந்திருக்கிறேன். நட்புக்கும் காதலுக்கும் அவற்றைக் கையளிக்கும் போது ஒவ்வொருத்தரின் கண்களிலும் எழுந்த பேருவகை நெஞ்சிலெழுந்து நிலைகொண்டது. கதை சொல்லும் காலங்களில் எங்களுடன் இருந்த பிள்ளைகளின்  அறியும் கண்களும், பற்றிய கைகளும்  நினைப்பிலெழக் கணம் நடுங்கியது. கசப்புடன் பிரிந்து சென்றவர்கள் கூட  இறகுகளையும், கடற்சிப்பிகளையும்,  குன்றிமணிகளையும் புத்தகங்களையும் கூடத்  திருப்பியளித்தனர். தும்பியைத் தவிர. மானுடக்  கீழ்மைகளின் எந்தக் கசடும்  ஒளியின்மீது  அண்டுவதில்லை. ஒவ்வொருத்தரும் அவ் இதழ்களைப் பெறும் போதும் அவர்களுள் வாழும் குழந்தைகளின் கரங்களால் அவ்விதழ்களைப் பெற்றுக்கொண்டனர். தும்பி சிறார் இதழ்  நம்காலத்தில் வெளிச்சம். அம்புலிமாமாவைப் போல், கோகுலத்தைப் போல்  இக்காலத்தின் குழந்தைமையின் பெருநினைவாகக்  கனியும் பெருஞ்சுடர். இனி ஒன்று என்பது தும்பி பறந்து கொடுத்த தொலைவில் இருந்தே தொடங்க வேண்டும்.

அமைப்பில் இருந்த காலத்தில் எங்களுடைய வேலைகளுக்கு, குறிப்பாக  சித்திரவாக்கம், வடிவமைப்பு போன்றவற்றிற்கு தும்பியும் அதன் அழகியலும் எனக்குள் பெரிய பாதிப்பைச் செய்வதவை. பலதடவை நண்பர்களே, `டேய் இது தும்பியைப் போல இருக்கு, தன்னறத்தின்  வடிவமைப்புப் போல இருக்கு` என்றிருக்கிறார்கள். நானந்தப்பாதிப்பை மனமுவந்து சம்மதித்திருக்கிறேன்.  என் காலத்தில் கற்கும் எந்த துறையாக இருந்தாலும் அக்காலத்தின் மிகச்சிறந்ததன் பாதிப்பை அடைவது அறிதலின்  பகுதிதானே. தும்பி இதழ்களும் அதன் வடிவமைப்பும் நம்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஆகப்பெரிய அடைவுகளில் ஒன்று. தன்னறத்தின் நூல்களைப் போல தமிழில் வடிவமைக்கப்பட்டு செம்மையாகப் பதிக்கப்பட்ட பதிப்புகள் மிக அரிது. அவர்கள் தெரிவு செய்யும் புகைப்படங்கள், ஓவியங்களை திரையில் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.  அவர்கள் கைகாளும் மொழியும், கவிதையும்  நெஞ்சரட்டுபவை. வடிவமைப்பு எனக்குப் பொழுதுபோக்காக இருந்தது. ஆயினும் தும்பியிடமும் தன்னறத்திடமும் இருந்தே கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் என்னுடைய ஆசிரியர்கள் அக்குழுவினர். சுடரினால் இன்னொன்றைஅணைக்க முடியாதில்லையா, அதன் முதலியல்பே  இன்னொன்றை ஏற்றுவதானே.

இவ்வாரம் தும்பி சிறார் இதழ் தனது 81 ஆவது இதழுடன், பொருளாதார நெருக்கடிகளால்  நிறுத்தப்படுகின்றது என்ற செய்தியைக் கேட்டதும், அனல் அடைந்தது அந்நாள். கண், நீர் கட்டியது.  சிவாராஜ் அண்ணனின் கண்களையும் மெல்லிய  கருணை முன் நடுங்கும் கைகளும் எழுந்தது. அவரை அணைக்கக் கூடிய எல்லாக் கைகளும் அணைக்கட்டும். அவருடன் இவ்விதழில் நின்றுழைத்த அத்தனை தோழர்களின் நடுங்கும் கைகளையும்  நீரினுள் அமிழ்த்திப் பற்றிக்கொள்கிறேன். அதன் கதைகளில் வாழ்ந்த , கனவில் உலாத்திய எல்லாக் குழந்தைகளோடும் நானும் நண்பர்களும் உங்களின் அருகில் வந்து அமர்கிறோம். நாம்  கதைக்குள் வாழ்கிறோம் என்பதை எல்லோரும் மீண்டும் காதுகளில் கிசுகிசுத்துக்கொள்கிறோம். நம்மைச் சிறு  கவலைகள் தின்னத் தகாதென்றபடி, இச்சுடரின் வெளிச்சத்தை நெஞ்சினில் கொண்டு சேர்ப்போம்.

தும்பியும் நாங்களும்

இவ் அறிவிப்போடு தும்பி இதழ் அச்சில் உள்ள நிலுவைகளைச் சரிப்படுத்தி, தற்போதுள்ள இதழ் தொகுதிகளை நூலகங்களுக்கும், சிறார்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறார்கள். ஈழத்திலிருந்தும் நாம் இதழ்களை வாங்க முடியும், எனக்கு ஒரு தொகை இதழ்கள் தேவைப்படுகின்றன. பொதுவாக நான் இதழ்களைச் சேமிப்பதில்லை. வாசித்து விட்டு கைமாற்றி விடுவேன். அல்லது பரிசளித்துவிடுவேன்.  என்னால் இயன்ற அளவு இம்முறை இதழ்களை வரவழைக்க எண்ணியிருக்கிறேன். நண்பர் கிரிசாந் இம்முயற்சியில் இருக்கிறார். தேவையான நண்பர்கள் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். (kirishanth300@gmail.com) பாடசாலைகள், நூலகங்கள், சிறார் கழகங்களுக்கு வழங்குங்கள்.   பரிசளியுங்கள், நானிந்த வாழ்வில் வெறுப்பே அண்டாத பரிசை  கண்டடைந்தேன் என்பது என்னளவில் எக்காலமும் குறையாத மகிழ்சியைத்தந்துகொண்டே இராதா என்ன?

யதார்த்தன் 

கிரிசாந்தின் பதிவும் இணைய இணைப்புகளும் கீழே :

நான் தும்பியின் ஐம்பது இதழ்களை வாங்கப் போகிறேன். இலங்கையில் இருப்பவர்கள் புத்தகக் கடைகளிடம் ஓடர்களைச் செய்வதன் மூலமோ அல்லது தும்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டோ துரித தபாலின் மூலமோ இதழ்களைப் பெற முடியும். அதற்கான இணைப்புகளைக் கீழே வழங்கியிருக்கிறேன்.

நான் கப்பல் மூலம் அவற்றை எனது நண்பர்கள் ஊடாகப் பெற்றுக் கொள்கிறேன். அவற்றை இலங்கைக்குக் கொண்டு வரத் தேவையான செலவைக் கணித்திருக்கிறேன். யாரேனும் நண்பர்களுக்குத் தேவையென்றால் எனது பார்சலுடன் சேர்த்து வாங்கித் தருகிறேன். ஆனால் கப்பல் மூலம் என்பதால் கையில் கிடைக்க குறைந்தது 45 நாட்கள் எடுக்கும். செலவு இருப்பதிலேயே மிகக் குறைவானது கப்பல் வழி தான். உங்களுக்கு அறிந்த நண்பர்கள் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்களிடம் இணைப்பை அனுப்பி வாங்கச் சொல்லுங்கள். புலம்பெயர் தமிழர்களும் நேரடியாகவே தும்பியைத் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து தங்களுக்கோ அல்லது ஊர், பாடசாலை நூலகங்களுக்கோ வழங்கி வைக்கலாம். உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் பரிசாகவோ அன்புகொண்டவர்களின் நினைவாகவோ கூடச் செய்யலாம். குழந்தைகளுக்குக் கதைகள் மூலம் கல்வியளிப்பது என்பது பெருந்தொண்டு. யாழ்ப்பாண நூலகத்திற்கு இந்தத் தொகுதியை வாங்கிக் கொடுப்பதென்பது நமது பொக்கிஷத்திற்குள் சில வைரங்களைச் சேகரிப்பது போன்றது, யாரேனும் முன்வந்து செய்யக்கூடியவர்கள் அதனைச் செய்யலாம். வெண்பா, பாத்திமா புக்ஸ், குமரன் போன்ற இணையத்தளங்களின் மூலம் ஓடர் செய்யக் கூடிய கடைகளில் நீங்கள் இதழ்களை ஓடர் செய்யலாம்.

50 இதழ்கள் – 6 kg – 20,800 ரூபாய்கள்
30 இதழ்கள் – 3.6 kg – 12,000 ரூபாய்கள்
15 இதழ்கள் – 1.8 kg – 6000 ரூபாய்கள்
(இலங்கைப் பெறுமதியில் கணிப்பிடப்பட்டுள்ளது)

இவை பருமட்டாக ஆகும் செலவு. இந்த எல்லையை விடக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் இது கப்பலில் எடுப்பதற்கு மட்டும். துரித தபால் அல்லது கடைகளின் விலைவிபரம் தெரியவில்லை. நேரடியாகத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் அவர்களிடம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

– கிரிசாந்

அறிவிப்புகள்

தும்பியின் மூலப்பதிவு : 

ஆகப் பெரிய கனவு:

இதுவரையிலான தும்பி இதழ்கள் பெற

தன்னறம் பதிப்பக நூல்கள் பெற: 

தொடர்புக்கு: 9843870059
thumbigal@gmail.com

சில படங்கள் :

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’