சராசரிகளின் சந்தை
மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன. தேவாலயங்களுக்கு முன்னால் மடுமாதா வருகைக்கான வரவேற்புகள் பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக் கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய காதலி ஒரு கத்தோலிக்கப் பெண் வேறு. இத்தனை வெறுப்பு அவனுக்கு வரலாற்றுப் பெருமிதத்தினாலும், முகநூல் தகவல்களாலும் அவனையறியாமல் உள்ளே வந்திருக்கிறது. நம்முடைய பண்பாடு அழிக்கப்படுகிறது என்ற ஆழமான நம்பிக்கை அவனுள் நஞ்சூறியிருந்தது. கொலனிய எதிர்ப்பு, அல்லது ஐரோப்பிய கலாசார எதிர்ப்பு என்பது சமூக வலைத்தளங்கள் தரும் `கொசுறு` வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு நம்முடைய தாழ்வுணர்ச்சியைக் கட்டமைத்துள்ளாது. `வரலாறு` அற்றவர்கள், இந்த நிலத்தில் உரிமையற்றவர்கள் என்ற தமிழர்களுக்குள் போர்த்தோல்விக்குப் பின் ஆழப்பட்டிருக்கும் ஓர் பேரச்சம். அதனால்தான் எதைச் சொன்னாலும் எங்களுடைய வரலாறு அழிக்கப்படுகிறது, பண்பாடு அழிக்கப்படுகிறது நாங்கள் முது குடிகள், என்று புலம்பத் தொடங்கிவிடுகிறோம். பெளத்த பேரின வாதம் எப்படி இது சிங்கள பெளத்த நாடு என்று மற்ற இன மதங்களை மறுக்கிறதோ அதனுடைய வழிமுறைகளைத்தான் இந்த சமூக வலைத்தளத் தமிழர்களும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் நாலுபந்தியில் யாராவது ஏதாவது எழுதிப்போடுகின்ற வரலாறு இவர்களுக்கு உண்மையாகவும், சரியாகவும் தெரிகிறது. ஒரு வரியில் தகவலொன்றைக் கேள்விப்பட்டு விட்டு நூறு இருநூறு ஆண்டுகாலம் உருவாகி வந்த அசலான பண்பாட்டை ஒரே சொல்லில் அசட்டுத்தனமாக மதவாதமாகவோ இனவாதமாகவோ கக்கி விடுகிறார்கள். நவீன இலங்கைத்தமிழ்ச் சமூகம் என்பதே `மதச்சார்பின்மை` கொண்டது என்பதுதான் கடந்த நூறாண்டில் இலங்கைத் தமிழர்கள் வந்தடைந்த பண்பாட்டு அடைவு. கடந்த நூறாண்டுக்குள் தமிழர்கள் நவீனமடைந்தார்கள், பெரிய விடுதலைப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள் என்பதைக்காட்டிலும் இலங்கைத் தமிழர்கள் அடைந்த மதச்சார்பின்மை வாழ்வு மகத்தானது. சொல்லப்போனால் `மதச்சார்பின்மை` கோட்பாடாக வந்து சேர முதலே இலங்கைத் தமிழர்கள் மதச்சார்பின்மை இயல்புகள், அடிப்படைகள் கொண்டவர்களாக மாறிவிட்டார்கள்.
மடுமாதா கோவில் இருந்த இடத்தில் கண்ணகை அல்லது ஓர் அம்மன் கோவில் இருந்தது என்றொரு வரலாற்றுத்தகவல் உள்ளது. அக்கோவில் இருந்த இடத்தில் மாதா கோவில் கொலனியர்களால் அமைக்கப்பட்டது என்பதை வெறும் தகவலாக மட்டும் பகிரும் போது அதில் இயல்பாகவே மதவெறுப்பு மண்டி விடுகிறது. மாறாக நாம் கேள்விப்படும் ஒவ்வொரு வரலாற்றுத்தகவலையும் வரலாற்று வலையின் மாபெரும் இணைப்புகளில் வைத்துப்பார்க்க வேண்டும். பண்பாட்டின் பேரமைப்பில் பொருத்தி விவாதிக்க வேண்டும். முக நூல் வரலாறுகள் நான்கு பந்திகளில் பரப்பும் வரலாறோ பண்பாடோ இதைக் கிஞ்சித்தும் செய்வதில்லை. இலத்திரனியல் ஊடகங்களை நோக்கி வளைந்திருக்கும் தலைகள் நிமிர்ந்து ஒளியைக்காண வேண்டும்.
கிறிஸ்தவம் , புரடஸ்லாந்து போன்ற மதங்கள் திட்டமிட்டுப் பரப்பப் பட்டவை. அவை திணிக்கப்பட்டவை. முக்கியமாக கொலனித்துவ காலத்தில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களால் கொண்டுவரப்பட்டவை என்பது மதவாதிகளின் வாதம். ஆனால் அவர்கள் தவறவிடும், பெரிய வரலாற்று உண்மை என்னவெனில் இவ் மதம்பரப்புகைகள் நிகழ்ந்த கொலனியகாலம் என்பது மதம் அரசுடன் இணைந்து ஓர் அதிகாரக் கட்டமைப்பாக ஆகியிருந்த காலம். ஐரோப்பாவில் மதம் எவ்வளவு தீவிரமாக அரசு அதிகாரத்தைக் கொண்டிருந்ததோ அதன் இயல்புகளை அதன் கொலனிய நாடுகளிலும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் ஐரோப்பாவில் நடைபெற்ற மறுமலர்ச்சியும், அறிவொளிக்காலமும் அரசிலிருந்து மதத்தைப் பிரித்து எடுத்தன. தனிமனிதவாதம் முதன்மையாக்கப்பட்டது. சனநாயகம் மெல்ல மெல்ல உருவாகி வந்தது. மக்கள் புரட்சிகள் நடந்தன. இவற்றோடு இரண்டு பெரிய உலகப்போர்களைச் சந்தித்தோம். மெல்ல மெல்ல மதச்சார்பின்மை தோன்றி வளர்ந்தது. கொலனியர்கள் கொண்டு சேர்த்த மத அமைப்புகளை அவர்களின் கொலனித்துவ நாடுகளிடமே விட்டு விட்டு ஐரோப்பிய அரசுகள் வெளியேறின. மதவமைப்புகள் நெகிழ்வு கண்டன. உள்ளூர் பண்பாட்டில் மெல்ல மெல்ல இணைந்து கொண்டன. உலகம் முழுவதும் இதுதான் அடிப்படையான வரலாறு. உள்ளூர் பண்பாட்டுக்குள் மதங்கள், அதன் தத்துவங்கள் வந்து சேர்வது இயல்பானதுதான். இஸ்லாம் வணிகம் மூலம் வந்து சேர்ந்தது. பெளத்தம் அசோகனது அரசிடமிருந்து இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஓர் அறிவியக்கமாக மாறித் தமிழ் பெளத்தம் பரவிச் சென்றது. அதன் செல்வாக்கும் சிந்தனைகளும் தமிழர்களிடம் பரவின. எத்த மதமும் அதன் சிந்தாந்த செழுமை வளரும் போது தான் உருவாகிய நிலத்தைத் தாண்டி தான் விதை விழுத்தி வளரக்கூடிய நிலங்களை நோக்கிச் சென்று பண்பாட்டை அடையவது இயல்பான வரலாற்று ஒழுக்குதான்.
அப்படிப்பார்த்தால் இங்கு வாழ்ந்த இயக்கர், நாகர் என்ற பழங்குடிகள் மதமற்றவர்கள், இயற்கை வழிபாடுகளைக் கொண்டவர்கள், அவர்களை சைவம் உள் வாங்கவில்லையா? உள்ளூர் தெய்வங்களை உள்வாங்கவில்லையா? இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் பண்பாட்டில் நிகழ்ந்தவை. பண்பாட்டை யாரும் அழிக்கவோ, ஆக்கவோ முடியாது. அது எல்லாக்காலங்களிலும் நிகழ்வது. அதன அடிப்படை இயல்புகளில் ஒன்று காலத்திற்கு உகந்ததை உள்ளீர்ப்பது, தேவையற்றதைப் புறம் தள்ளுவது. அடிப்படையில் மக்களின் அறிதலும், வாழ்வுமே பண்பாட்டை உருவாக்குவதும் அழிப்பதும். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஏன் சைவத்தில் இருந்தவர்கள் கத்தோலிக்கத்திற்கு மாறினார்கள்? அடித்தட்டு மக்கள், சாதியற்ற, அடிமை முறையற்ற, மதமொன்று வரும் போது கத்தோலிக்கத்தை ஏற்றனர் என்று ஒரு காரணம் இருக்கிறது. அது போல் அரசாங்க வேலை, சமூக அங்கீகாரம், ஆங்கிலக் கல்வி என்பவற்றுக்காக மதம் மாறினர் என்றொரு காரணம் இருக்கிறது. இப்படி எத்தனையோ காரணங்கள். இவை அனைத்தும் இணைந்ததே பண்பாடு. இத்தனை மதங்களுக்கும், இத்தனை சித்தாந்தங்களுக்கும் ,கருத்துகளுக்கும், செயலூக்கங்களுக்கும் தனக்குள் இடம்கொடுத்து நகர்வதே பண்பாட்டின் வரலாறு. அதனால்தான் பண்பாட்டை நிலத்துக்கு உருவகப்படுத்துகிறது மொழி. பண்படுதல் (cultivation) என்பதிலிருந்து அதை விளக்குகிறது. நிலம் எப்பொழுதும் `விதைகளுக்காக திறந்திருக்கிறது`.
இலங்கையில் தமிழ்ப் பெரும்பான்மை மதமான சைவம் அடிப்படையில் மிகுந்த நெகிழ்ச்சியும் பண்பாட்டு ஏற்பும் கொண்டது. உண்மையில் மதச்சார்பின்மையின் பெரிய குணங்குறிகளைக் கொண்டது சைவம். அதன் சித்தாந்தங்கள் வலியுறுத்தக்கூடிய அசலான அறங்களுக்கு எதிரானவைதான் இன்றைக்கு மதவாதிகள் கடைப்பிடிக்கும் அனைத்து நடைமுறைகளும். இவர்கள் எல்லோரும் ஆறுமுக நாவலர் காலத்தை மீண்டும் கொண்டுவந்து நியாயங்களைக் கற்பிக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் ஆறுமுக நாவலர் மீண்டுமொரு ஐந்தாங்குரவராக விக்கிரகப்படுத்தப்படத் தொடங்கியிருக்கிறார். அதனால்தான் மேலே மதச்சார்பின்மை உருவான வரலாற்றைக் குறிப்பிட்டேன். ஆறுமுக நாவலரும் அவர் சகாக்களும் கொலனித்துவ அதிகாரத்திற்கு எதிராக முன்னெடுத்த எதிர்மதப் பிரச்சாரங்கள் நடைமுறை அரசியல் தளமும், சாதிய அடிப்படையும் கொண்டவை. நன்றாக உற்றுப்பார்த்தால் ஐரோப்பியர்கள் மதத்தை அரச அதிகாரத்தின் கரமாக பாவிக்கும் போது நடைமுறை அரசியலில் அதைச் சந்திக்கவே எதிர் மத இயக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சிந்தாந்த அடிப்படையில் பார்த்தால் கூட நாவலர் சைவ சித்தாந்தங்களைக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தங்களை எதிர்ததை விட , ஆச்சாரங்கள், பொதுப்புத்தியில் இருக்கும் மூடநம்பிக்கைகளையும் கையில் எடுத்துக்கொண்டார். அத்தோடு சாதிய கட்டமைப்பு அழிந்து விடும் என்ற அச்சம் அவரிடம் விரவியிருந்தது, அதனாலேயே `சற்சூத்திரக்` கோட்பாட்டை நிறுவி, வேளாள மேலாதிக்கத்தை அழுத்தினார். ஆனால் அவருக்குப் பின் வந்த பண்பாடு தெளிவாக நாவலருக்கு உரிய இடத்தை வகுத்தது. நாவலர் என்றதும் பொதுப்புத்தியில் கூட இன்றைக்கு மிச்சமிருப்பது அவருடைய அச்சுப்பணியும், தமிழ்ப்பணியும் தானே. அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் வெளியிட்ட சைவத்திற்கு எதிரான பிரசுரங்களோ கோசங்களோ சரி நாவலர் போன்றோர் வெளியிட்ட `தூஷண பரிகாரங்களோ` சரி இன்றைக்கு வெறும் தகவல்கள், ஆவணங்கள் என்பதைத் தாண்டி பண்பாட்டில் வேறேதும் இடத்தை அடந்துள்ளனவா? செழுமையான அறிவியக்கம் நிகழும் பண்பாடு, சிதம்பரத்திலெழுந்த அசரீரி போன்றது. காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் எஞ்சச் செய்யும்.
தமிழர்கள் மதவழிப்பண்பாட்டை உடையவர்கள் அல்ல. அவர்கள் மொழி வழிப்பண்பாட்டை உடையவர்கள். மொழிவழிப்பண்பாடு என்பது கலை இலக்கியத்தினாலும் தத்துவத்தினாலும் செழுமை செய்யப்படுவது. அது உலகின் முன்னேறிய சிந்தனைகளால் மட்டும் முன் செல்வது. தமிழின் அறம் என்பது மானுட நேயமும் சகவாழ்வுமே. அதனால் தான் யாதுமூரே யாவரும் கேளீர் என்ற கவிதை இத்தனை ஆயிரம் வருடங்கள் தாண்டி பண்பாட்டின் உச்சத்தில் நிலைத்திருக்கிறது. தமிழ்ப் பண்பாடு போரைப்பாடியதையும் பின் தள்ளியது, மதத்தைப் பாடியதையும் பின் தள்ளியது. அது தன்னுடைய சமகாலமாகச் சூடிக்கொள்வது எல்லாம் வரலாற்றில் கண்டெடுத்த மானுட விழுமியங்களையும் அறத்தையும்தான்.
இலங்கைத் தமிழ் – இலக்கியப் பண்பாட்டில் நாம் தெளிவாக அதன் மதச்சார்பில்லாத அறத்தை அவதானிக்கலாம். அது சமூகத்திலும் பண்பாட்டிலும் நிகழக் காணலாம். கி.பி 18 ஆம் நூற்றாண்டில் வண்ணார் பண்ணையிலொரு புலவர் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் என்று பெயர். களவுப்பழி வந்தபோது அதை நீருபிக்க கொதி நெய்யில் கையை விட்டதால் கை `கூழை`யாகியதால் அவருக்கு அந்தப்பெயர். மனிதர் நல்லை சித்திவிநாயகர் இரட்டை மணி மாலை, நல்லைக்கலி வெண்பா போன்ற சைவ இலக்கியங்களையும் தேவப்பிரசை திருக்கதை, யோசேப்புப் புராணம் போன்ற கிறிஸ்தவ நூல்களையும் இயற்றியவர். ஏனெனில் அவர் நாவலரைப்போல நடைமுறை அரசியலில் இயங்கியவரோ , எதிர் மத இயக்கத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. அவர் ஒரு புலவர். இலக்கியத்தில் இயங்கியவர். இலக்கியத்தில் வெறுப்புக்கே இடமில்லை. அதனால்தான் `இலங்கைத் தமிழ்ச்சூழலின்` பண்பாடு என்பது மதச்சார்பற்ற பண்பாடாக உருவடைந்து வந்தது. தமிழ் இலக்கியமும் கலையும் அதைக் காத்து நின்று உழுது நல்`விதை`யிடுகிறது. ஓர் கதை சொல்கிறேன்,
வட்டுக்கோட்டை கண்ணகையம்மன் கோவிலை `மாதாங் கோவில்` என்றால் தான் ஊரில் பரிச்சம். போர்த்துக்கீச கொலனிய காலத்தில் கொலனிய அரசுச் சிப்பாய்கள் அக்கோவிலை இடிக்க வந்திருக்கிறார்கள். சனங்கள் அவர்களை இனம் கண்டு அதுவொரு பெண் தெய்வத்தின் கோவில் என்று விளக்க முற்பட்டிருக்கிறார்கள். மொழியாடல் பிரச்சினையால் அவர்கள் அதை மாதா கோவிலைப் போன்றது என்று சொல்லி விளக்கப் பார்த்திருக்கிறார்கள். அவர்களும் அதுவொரு `மாதா ` கோவில் என்று விட்டுச்சென்றார்கள் என்பது அதன் தொன்மக்கதை. இன்றைக்கு வரைக்கும் அது மாதாங் கோவில் தான். பண்பாடு என்பது இந்த நெகிழ்வில் வேரோடியே வளர்கிறது. மடுமாதாவிற்கு கத்தோலிக்கர்கள் அளவிற்கு சைவர்களும், பெளத்தர்களும் வந்து வணங்குவதை அனைவருமே அறிவோமில்லையா? மடுவைச்சுற்றி உள்ள ஊர்களில் ஆய்வுகளுக்குச் சென்ற சமயங்களில் அவ்வூரில் இருக்கும் சைவர்கள் கோவில் திசையக் கடக்கும் போது `அம்மாளாச்சி` என்று சொல்லிக் கும்பிட்டதைக் கண்டிருக்கிறேன். நோயோ துன்பமோ வரும் போது `ஆளுயர மெழுகை எரிய விடுகிறேன்` , முழங்காலால் நடந்து வருகிறேன் என்று மாதாவிற்கு நேர்ச்சை செய்வது வடக்கில் அன்றாடங்களில் ஒன்று. அம்மன் கோவிலில் நின்ற நிலையில் உடல் விதிர்த்தழப் பிரார்த்தனை செய்தழும் பெண்களை மாதா கோவிலில் மண்டியிட்டு கண்ணீர் பெருக நிற்க கண்டிருக்கிறேன். அந்தோனியார், மாதா இருவரும் அப்படிப்பட்ட உள்ளூர் தெய்வங்களாகிவிட்டார்கள். பிரார்த்தனையும் நம்பிக்கையுமே ஆன்மீகமானது. அதைத்தான் மதம் முதன்மைப் படுத்த வேண்டும். மாணிக்கவாசகரும், கண்ணப்பநாயனாரும் அதில் இருக்க வேண்டும். எப்பொழுதோ எதோவொரு அதிகாரத்தரப்பு தன் நலனுக்காக வழிபாட்டு இடங்களை இடித்து இன்னொன்றை நிறுவலாம், உலகம் முழுவதும் ஒன்றழிய இன்னொன்று நிறுவப்படுவதுதான் கடந்த கால வரலாறு. இன்றைக்கு இருக்கும் நல்லூரான் சந்நிதியின் கீழ் இஸ்லாமிய சூபி ஒருவரின் கல்லறை இருக்கின்றது அதனால் தான் அங்கே முஸ்லீம்களுக்கு கற்பூரம் விற்கும் உரிமை நெடுங்காலமாக இருந்தது என்றொரு சொல்மொழித் தகவல் யாழ்ப்பாணத்திலிருக்கிறது. அப்படியானால் நல்லூரைக் கொடுத்து விடுகிறீர்களா?
வரலாறு என்பது வாக்கியங்களாக உடைத்து தங்கள் தங்கள் நலனுக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடியல்ல, அது பிரவாகித்தோடும் பேராறு, ஒரு கைக் கவளம் அள்ளி இதுதான் வரலாறு இதுதான் பண்பாடு என்று சொல்வதுதான் `சரசாரிகளின்` வழிமுறை. இன்றைக்கு மதவாதத்திற்கு எதிரான குரலாக நாத்திகத்தைச் சொல்லி மதவாதிகள் மக்களை தங்களின் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் அசலான பண்பாடும் அதன் அறிவியக்கமும் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. பன்மைத்துவமான எந்த நம்பிக்கையையும் பின்பற்றும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது என்பது அதன் அடிப்படை. மதச்சார்பின்மை திரண்டெழுந்து வலுப்பெற்ற காலத்திற்கு முற்பட்ட தகவல்களையும், கொசுறுக் கோசங்களையும் கொண்டு மதவாதிகள் இயங்குகிறார்கள். இன்றைக்கு அவர்களின் சந்தையாக சமூக வலைத்தளங்கள் மாறியிருக்கின்றன. ஏனென்றால் எதைச்சொன்னாலும் எடுபடும் சராசரிகள் அங்கேதான் பெருமளவில் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல அவர்களின் மூளைக்குள் மலத்தைக்கூட வைத்துவிடலாம் என்று அவர்கள் நன்கறிந்திருக்கிறார்கள்.
மேலதிக வாசிப்புக்கு