சிவப்பில் உறைந்த காலம்
வாசிப்பையும் எழுத்தையும் இராணுவ ஒழுங்கிற்குக் கொண்டு வந்த பிறகு, படங்களைப் பார்பதை வெகுவாகக் குறைத்திருக்கிறேன். மிக மிகத் தெரிவு செய்து; நண்பர்களின் பரிந்துரைகளை வடிகட்டியே படங்களைப் பார்க்கிறேன். பொழுபோக்குப் படங்களை முழுவதுமாக நிறுத்தி விட்டேன். கடைசியாக ‘பிரம்மயுகம்’ பார்த்தேன். பிடித்திருந்தது. அனுபவக் குறிப்பொன்று என் journal இல் எழுதி வைத்திருக்கிறேன். விரிவாக எழுத வேண்டும். கொலனியம் பற்றிய ஒரு முக்கிய உரையாடல் அதில் இருக்கிறது. காலம் பற்றியும் வரலாறு பற்றியும் அதில் ஒரு உரையாடலைச் செய்ய வேண்டும்.
உள்ளூர் படங்களில் டாக் டிக் டொஸ் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் அதுவும் இன்னும் கை கூடவில்லை. அது வெளியாகும் போது ஊரில் இருக்க வில்லை. உள்ளூர் சினிமாவைத் தொடர்ந்து பார்க்க வேண்டுக் என்ற ஆர்வம் இருக்கிறது. சிங்கள மாற்று சினிமாக்களைக் கவனிப்பதுடன் சிங்கள நண்பர்களின் பரிந்துரைகளையும் குறித்து வைப்பதுண்டு. நம் காலத்தை ஆக்குவதிலும் தகர்ப்பதிலும் சினிமா எடுத்துக் கொண்ட பங்கின் மேல் எப்பொழுதுமோர் கண்ணை வைத்துக் கொள்வது எழுத்தாளன் என்ற வகையில் எனக்கு முக்கியம்தான்.
நேற்றைய தினம் பயணமொன்றில் ‘ சிவப்பு பெட்டி ‘ (Red box ) என்ற குறும்படம் பார்க்கக் கிடைத்தது. திரைக் கலைஞர், நவயுகா நெறியாள்கையில் சிவப்பு பெட்டி யுடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது. படம் பேசும் களமும் கதையும் படமாக்கப்பட்ட விதமும் முக்கியமானதும, மைநூட்டானது.
மலையக மக்கள் இன்று வரை எதிர் நோக்கும் பிரச்சினை அவர்களுக்கொரு நிலமோ வீடோ இல்லாது இருத்தல். நிலமோ வீடோ இல்லாத போது அவர்கள் முகவரியும் அற்றவர்கள். இந்தியாவில் இருந்து தோட்டத் தொழிலாளர்களாக கொண்டு வரும் போதே அவர்களின் பெயரையும் முகவரிகளையும் களைந்து வெறும் இலக்கங்களாகவே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அறியப்பட்டது தோட்டங்களின் பெயரில். லயங்களின் பெயரில். இலங்கையில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகும் அடிமைத் தளைகள் இன்றைக்கும் அவர்கள் மேல் மிச்சமிருக்கின்றன. வீட்டை அடைந்த பிறகு மனிதர்களுக்கு முகவரி என்பது அடையாளம் சம்பந்தப்பட்ட உருவகச்சொல். எளிய மனிதர்களின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று தாங்கள் யார் என்பது. அவர்களுடைய இருப்பு பற்றிய பதில் அவர்களின் வாழ்கைக்கு அர்த்தம் கொடுப்பது. வீடும் முகவரியும் அவர்களின் அடிப்படையான தேவை. வெறுமனே உண்டு உறங்குவதற்கான இடமாக அல்ல. வாழ்வதற்கான இடமாக. வீடென்பது கிடைப்பதா? பெறுவதா? வீடென்பது பேறு. என்றொரு இளம் கவிஞர் எழுதிச் செல்வது அதைத்தான். தேயிலைத் தோட்டங்களில் இருத்தப்பட்ட நாளில் இருந்தே அவர்களிடம் இந்தப் பிரச்சினை இருந்து வந்தது. நாம் தொடர்பாடல் என்றதும் விரல் நுனியில் எழும் கைப்பேசிகளின் ‘டிங்’ என்ற ஒலியைக் கற்பனை செய்யும் காலத்தில் இருக்கிறோம். ஆனால் தபால் கூட எழுத முடியாமல் இருந்தவொரு காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எத்தனை பெரிய தனிமை அவர்களைக் கசக்கிப் பிழிந்திருக்கிறது? அவர்களவில் உறைந்திருந்தது காலம். இத்தேசம் மொத்தமும் உண்ட உணவிலும் வாழ்ந்த வாழ்விலும் அம்மக்களின் உழைப்பு பெரியதல்லவா? மீண்டும் மீண்டும் அவர்களின் துன்பத்தை இலக்கியங்களும் கலையும் சொல்லித் தீராமல் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. அப்பெரும் ஆற்றாமைக்குப் பின்னால் இருப்பது அம்மக்களின் மெய்த்துயர்.
மலையகம் சென்ற போது இந்த முகவரிப் பிரச்சினையின் பிறிதோர் அநீதியைக் பற்றிக் கேள்விப்பட்டேன். மிகத் துன்பப்பட்டு அந்தக் குடும்பங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து உயர்தரம் சித்தி பெற்று பல்கலைக்கழகத்துக்கான வெட்டுப்புள்ளியை கடந்து முதல் படிவத்தை அனுப்புவர். ஆனால் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதற்கான இரண்டாம் படிவம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்படும் ஆனால் முகவரிப் பிரச்சினைகளால் அவை பிள்ளைகளை உரிய காலத்தில் அடையாது. தபாலகத்தில் தேங்கி கடிதங்களுடன் எரியூட்டப்படும். அவர்கள் காத்திருந்து முகம் விழுந்து போவர். மிக அரிதாகச் சிலர் கடன்பட்டு மலையால் இறங்கி கொழும்பிற்கு வருவதற்குள் எல்லாம் கடந்து போய்விடும். இலங்கையில் பெரும்பாலும், மேல் தட்டு வர்க்கத்திற்கு பல்கலைக்கழகம் ஒரு பொழுபோக்கு, மத்திய தர வர்க்கத்திற்கு அது பென்சன் தரும் அரசு வேலை வாய்ப்பு. ஆனால் மலையக மக்களுக்கும் குடும்பங்களுக்கும் அது வாழ்க்கையைத் தொடங்கச் சேகரித்த கனவு. அவர்களுக்கு நிகழ்ந்த இவ் அநீதி படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாதது. சிவப்புப் பெட்டி அதைத்தான் சன்னமான அடித் தொண்டையால் நிகழ்த்திப் பார்த்திருக்கிறது.
நவயுகா இலங்கைத் தமிழ்த் திரைக்கலைஞர். இந்தத் தலைமுறையில் எழுந்த பெண் திரைக்கலைஞர்களுள் முக்கியமானவர். இலக்கியம், நடிப்பு, இயக்கம் இவருடைய களங்கள். பெரிதாக புகழோ பணமோ கிடைக்கப் போவதில்லை. என்று அறிந்தும் நல்ல படம் எடுக்க வேண்டும் என்று நிற்குமொரு தரப்பும் இங்கே உள்ளது. நவயுகா அப்படியொரு குழுவோடு இக்கதையைத் தேர்ந்திருக்கிறார். ஒரு வகையில் ஆவணப்படங்களுக்குரிய தகவல்களோடு முடிந்தாலும், படத்தில் ஒலிக்கும் தோட்டத் தொழிலாளியின் குரலும் , அதன் காட்சி மொழியும் கதை நிகழ்த்துகின்றன. அந்த தபால் பெட்டி எப்போது கறுப்பு வெள்ளையில் இருந்து சிவப்பாகும் என்ற நினைப்போடே காட்சிகளைக் கடந்து கொண்டிருந்தேன். காலக் கோடு மாறும் போது பெட்டி சிவப்பானது. உண்மையில் மனித வரலாறு காலத்தினால் மாற்றப்படுவதில்லை. அது செயலெழுவதால் நிகழ்வது. காலத்தின் இயல்பே உறைந்து போகச் செய்வது தான். மானிடக் கூட்டுச் செயல்களே அதை அசைத்துச் செல்கின்றன. இன்றைக்கு மெல்ல மெல்ல மலையக மக்கள் அடையும் மாற்றங்கள், உரிமைகள் அவர்கள் போராடிப் பெற்றவை. அவர்கள் மேலும் காலடிகளை அதிகப்படுத்த கலை இலக்கியங்கள் அவசியமானது. குறிப்பாக வெகுசன கலையான சினிமாவில் மலையக வாழ்வு படமாக்கப்பட வேண்டும். கதைகளும் வாழ்க்கைச் சித்திரமும் விரிந்து நிகழ வேண்டும். இன்னும் மலையகத்தில் இருந்து பேரிலக்கியங்கள் எழும் காலம் கனியவில்லை. மலையகம் தேக்கி வைத்துள்ள காலமும் துயரும் நிச்சயமாக அங்கு நாவல் போன்ற பெரிய இலக்கியங்களைக் கொண்டு வரும். நாளாகலாம் ஆனால் கட்டாயம் நடக்கும். அது போலச் சினிமாவும். சின்னச் சின்னதாய் எடுக்கப்படும் இத்தகைய குறும்படங்கள் அதற்கான முன் முயற்சிகள். சொல்லப்போனால் தொழில் நுட்பம், இயக்கம் , நடிப்பு என்று இப்படம் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. கொலனிய காலத்தைக் கொண்டு வர கமராவும் கலை இயக்கமும் மிகக்கெட்டு இருப்பதை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சின்ன சின்ன தகவல்களுடன் ஒவ்வொரு ப்ரேமும் நன்றாகக் கதைக்குள் உள்ளெடுத்தது.
குழுவினர்க்கு வாழ்த்துகள்
படத்தின் யூ டியூப் இணைப்பு
வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்
காத்திருக்கின்றன .
என் தந்தையிடமிருந்து எனக்கு
என்னிடமிருந்து இன்னொருமுறை
என் மகனுக்கு .
மகனே ,
உன் தந்தையின் வீட்டை நீ அறிவாயா ?
உன் பட்டினங்களின் பாதைகளை ,
கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாத
நந்திக் கடலிடம் கேள்
உலோக மழை கொட்டிய இரவில்
அங்கு தான் உன்னைத் தலையில் சுமந்து வந்தேன் .
ஆனால் இப்போது
உன் பட்டினங்களிடம் திரும்பு
வீட்டைச் சுற்றி அலையும்
குருவிகளிடம் கேள்
கூடென்பது
இடமா ? இருப்பா ?
சுவர்ப் பிளவில் அரச மரங்கள் – வேர் விடத்
துடிக்கும் உன் வீடு .
எனவே ,
உன் தந்தையின் வீடு இப்போது
ஒரு நினைவாலயம்
அது சந்தையாகும் வரை காத்திருக்காதே
சீக்கிரம் அடைந்து விடு .
வீடென்பது
கிடைப்பதா ? பெறுவதா ?
என் மகனே ,
வீடென்பது பேறு
– கிரிசாந்
மேலதிக வாசிப்பிற்கு