விளக்கேந்திய பெருமாட்டி

விளக்கேந்திய பெருமாட்டி

எங்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் வண்டி கொழும்பு பெரு நகரின் மத்தியில் இருந்த நூறு வருடங்கள் பழமையான சிறுவர் வைத்திய சாலைக்குள் நுழைந்து கட்டடங்கள் தொடங்கும் இடத்தில் நிறுத்தியது. அம்மாவும் நானும் இறங்கிக்கொண்டோம். காவலாளிகள் எங்களிடம் பதிவுகளை எடுத்தார்கள். அம்மா எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும் என்று அவர்களிடம் சொன்னாள், கூடவே என்னால் வாய் பேச முடியாததையும் சொன்னாள். அவர்கள் இருவரும் சட்டென்று என்னில் கனிவை வரவழைத்துக்கொண்டனர். நான் முதல் முதலில் அருகில் பார்க்கும் ’ஆமிக்காரர்’ இல்லாத சிங்களவர்கள் இவர்கள். அவர்களும் ஊமைப் பையனிடம் இரக்கத்தை வரவழைத்துக்கொண்டார்கள். நான் அவர்கள் கேட்கும் விபரங்களை அம்மாவிடம் சைகை மூலம் சொல்லச் சொல்ல அம்மா பதில் சொன்னாள். இடையில் என்ன ’நோய்க்காக” வந்திருக்கிறீர்கள் என்று கேட்க. என்னுடைய இருதயத்தில் ‘ஓட்டை’ அதற்கு ‘ஒப்பிரேசன்’ செய்ய வந்திருப்பதாக அம்மா சைகையாலும் குரலாலும் சிரமப்பட்டு விளக்கினாள் அவர்கள் இருவரின் முகத்தில் இன்னும் கனிவு கூடியது. அவர்கள் ‘எப்படிச் சிங்களம் தெரியும் என்று கேட்டார்கள்’ அம்மாவிற்கு அதை நான் மொழி பெயர்க்காமலே புரிந்து விட்டதால், ‘படிக்கிறான்’ என்றாள். அவர்கள் என்னைப் பாராட்டினார்கள்.

‘இப்படிக் குறைபாடுள்ள பிள்ளைகள் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்’ என்றார் ஒருவர். அடுத்தவர் ‘உங்கள் நாட்டில் சண்டை எல்லாம் முடிந்து விட்டதா?’ என்று கேட்டார். நான் ’ஓம்’ என்று தலையாட்டினேன். அதற்கு மற்றவர்

‘இல்லை இல்லை ரணிலும் பிரபாகரனும் தேன் நிலவில் இருக்கிறார்கள், எப்போதும் சண்டை தொடங்கலாம்’ என்று சொல்லிச்சிரித்தார். பத்து வயது கடந்திருந்ததாலும் நிறையவே தமிழ்ப்படங்கள் பார்ப்பதாலும் தேன் நிலவு என்றால் என்ன என்று எனக்கு தெரிந்திருந்தது. நாங்கள் அவர்களிடம் பேச்சை வளர்க்காமல் நாங்கள் போக வேண்டிய இடத்தைக் கேட்டோம். அந்த வளாகத்தில் இருந்த பல அடுக்குமாடிகளைக் கொண்ட பெரிய கட்டடத்தை அவர்கள் காட்டுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் இடதுபுறமாக அவ்வளவாக வெளிச்சம் இல்லாமல் இருந்த எண்ணூறுகளில் பிரித்தானியர்கள் கட்டிய பழைய கட்டிடங்களின் பக்கம் போகச் சொன்னார்கள். நாங்கள் பைகளையும் ‘கிளினிக் கொப்பிகளையும் எக்ஸ்ரேக்களையும் கையில்’ ஏந்திக்கொண்டு நடந்தோம். எனக்கு பசியில் வையிற்றுக்குள் யாரோ கயிறு முறுக்குவது போலிருந்தது. வாய் மணத்தது. நான் சாப்பிட வில்லை என்பதால் அம்மாவும் சாப்பிட வில்லை. என்னுடைய ஒப்பிரேசனை நினைத்து அம்மா பயந்து கொண்டிருந்தாள். அம்மா இயல்பிலேயே மென்மையானவள். உணர்ச்சிவசப்படுபவள். அப்படியே அம்மாவின் இயல்பு என்னிடம் வந்திருந்தது. நான் அம்மாவைப் போல என்பதே வாழ்க்கை முழுவதும் எனக்குப் பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தான் தந்திரத்தையும் கழிவிரக்கத்தையும் பின்னர் என்வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டேன். காவலாளிகள் காட்டிய வழியைப் பிடித்து நடந்தோம்.

அந்தப்பழைய கட்டங்களுக்கு இடையில் நடக்கும் போது எண்ணூறுகளுக்கே திரும்பி விட்டதைப்போலிருந்தது. பெரிதாக வெளிச்சமில்லை. தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த அதே விளக்குகளைத்தான் பொருத்தியிருந்தார்கள் போலும். பெரிது பெரிதாக குமிழ்கள் மஞ்சள் ஒளியைப் பூஞ்சிக்கொண்டிருந்தன. இடையில் சிறுவர் பூங்கா ஒன்றில் ஊஞ்சல்களும் , சறுக்குகளும் தெரிந்தன. எனக்கு அவற்றில் எப்பொழுதும் பிடிப்பில்லை. பள்ளிக்கூடங்களில், பூங்காக்களில் அவற்றை அமைத்துவிட்டால் பிள்ளைகள் விளையாடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும். உண்மையில் அங்கே விளையாட வேறேதும் இல்லை அல்லது அனுமதிக்கப்படவில்லை எனும் போது வேறு வழியில்லாமல்தான் பிள்ளைகள் இவற்றைத் தெரிவு செய்கிறார்கள் என்று நினைப்பேன். பிறந்தது முதல் ஊரில் ‘வருத்தக்காறன்’ ‘ஊமைபெடியன்’ என்று அறியப்பட்டவன் என்பதால் ஊரில் எல்லோரும் ‘கரிசனையும் கவனமுமாக’ இருப்பார்கள். வீட்டில் வேலை செய்ய விடமாட்டார்கள், ஓடி விளையாடும், ‘பெரிய விளையாட்டுக்களுக்கு’ அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடைய கரிசனையே என்னை இன்னும் பலவீனமாக்கிக் கொண்டே போனது. எனக்கு கிரிக்கட்டோ , உதை பந்தோ பிடிக்காமல் போனது, என்னுடைய இயலாமையால்தான் என்று நினைத்துக்கொள்வேன். சதுரங்கம் நன்றாக ஆடுவேன். கெற்றப்போல் எனப்படும் கவண்களைக் கட்டுவேன். குருவிக்களின் தலை சிதறும் படி அடிப்பேன். எவ்வளவு உணர்ச்சி வசப்படுவேனோ அவ்வளவு குரூரமும் தந்திரமும் உள்ள விலங்காகவும் இருந்தேன். எல்லாவற்றிலும் பயமும், பதட்டமும் எப்போதும் இருக்கும். கைகள் நடுங்கும். எதையும் அவசரமாகச் செய்வேன். தடுமாறுவேன். ஆனால் சதுரங்கம் ஆடும் போதும், கெற்றபோலில் கல்லை வைத்து இழுக்கும் போது யாராவது என்ன தெரிகிறது என்று கேட்டால் ‘கிளியின் கழுத்தில் இருக்கும் ஆரம்’ என்று சொல்லி அடிக்கும் அளவிற்கு மனதும் உடலும் நிதானமாகிவிடும். ஆக என்னுடைய பதட்டமும் , தாழ்வுணர்ச்சியும் எல்லோரும் சேர்ந்து என்னிடம் தந்தது என்று யசுந்தரா சொல்லியிருக்கிறாள்.

பூங்காவைக் கடந்து பதின்மூன்றாம் இலக்க வாடின் வாசலில் ஏறியபோது யசுந்தரா தாதி உடையில் எங்களை எதிர் கொண்டாள். அவளுடைய நெஞ்சில் தொங்கிய சிறிய கடிகாரமும் அதனுடைய சங்கிலியும் டியூப் லைட் வெளிச்சத்தில் பளபளத்தன. நான் இப்போதும் அவளுடைய முகத்தை ஞாபகத்தில் கொண்டுவர முயற்சிப்பேன். என்னுடைய ஒப்பிரேசன் முடிந்து கொழும்பில் இருந்து புறப்பட்ட தினத்திலிருந்து யசுந்தராவின் முகம் எனக்குள் அறவே மறந்து போனது என்று சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அன்றைக்கு வாசலில் அவள் எங்களை எதிர் கொண்ட போது முதற்கொண்டு அவளுடைய முகம் அழிந்து போனது. நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. இனிவரும் நாட்களைப் பற்றிச்சொல்லும் போது நீங்களாகவே அவளுக்கொரு முகத்தைக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.

என்னுடைய கொப்பியையும் மருத்துவ அறிக்கைகளையும் வாங்கிப்பார்த்தாள். நான் அவளிருந்த அந்த வாட்டின் வரவேற்பறையை சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளைப் பெரிதாகச் சட்டை செய்யாமல் அம்மாவிடம் அவள் ஏதேனும் கேட்கும் போது மட்டும் அம்மாவிற்கு மொழி பெயர்த்துச் சொல்லிவிட்டு அறையைத் துருவிக்கொண்டிருந்தேன். கோட்டும் சூட்டும் அணிந்த வெள்ளைக்கார ஆசாமியின் பெரிய ஓவியம் ஒன்று இருந்தது. எங்களுடைய பள்ளிக்கூட சாரணர் அறையில் ஒட்டி வைத்திருந்த பெடன் பவுலைப் போல இருந்தார். அவருக்கு கிழே கறுப்பு வெள்ளையில் விக்டோரிய காலத்து உடைப் பாணியில் உடுத்திய சிறுமியின் முகத்தைக் கொண்ட வெள்ளைக்காரப் பெண்ணின் படமிருந்தது. அவளுடைய படத்திற்கு அருகில் அறைந்த ஆணியில் எட்டு பற்றறி டோச் லைட் ஒன்று தொங்கியது. அப்போது அம்மாவை ‘டொக்டர் பார்க்க விரும்புகிறார்’ என்று சொல்லி உள்ளே இருந்த அவரின் அறைக்கு இன்னொரு தாதி அழைத்துச் சென்றாள். நான் அம்மாவுடன் கிளம்ப என்னைக் கையமர்த்தினாள். ‘டொக்டர் தமிழ்தான், அம்மாவிடம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து ஒன்றைச் சொல்லச் சொல், அவர் அதை விரும்புவார் என்று, சொல்லி மேசையில் இரண்டொரு துண்டுகள் வெட்டிய கேக்கைக் காட்டினாள். அந்த நள்ளிரவில் ‘டொக்டருக்கு பிறந்தநாள் கொண்டாடியிருப்பார்கள் போலும். அம்மா ’தமிழ் டொக்டர்’ என்பதால் முகம் மலர்ந்து உள்ளே போனாள். நான் அந்த வெள்ளைக்காரப் பெண்ணின் விபரம் கேட்டேன்.

‘இது நைட்டிங்கேலின் படம்தானே?’

‘இல்லை நைட்டிங் கேல் புளோரன்ஸைச் சேர்ந்தவள், இத்தாலிப்பெண்ணின் முகச்சாயல் இருக்கிறதா இந்தப்பெண்ணுக்கு?’

எனக்கு எல்லோரும் வெள்ளைக்காரிகளாகத்தான் தெரிந்திருந்தார்கள். இத்தாலிப்பெண்ணுக்கும் ஜெர்மனிப்பெண்ணுக்குமான வித்தியாசங்களை நுணுக்கங்களை நான் அறிந்திருக்கவில்லை. தவிர அந்த படத்தில் இருந்தவள் பறங்கிய இனத்துப்பெண் என்றும், இந்த வைத்திய சாலையில் 1900 களில் பணியாற்றியவள் என்றும் யசுந்தரா சொன்னாள். அவளுடைய கல்லறை அருகிலிருந்த பூங்காவினுள் இருக்கிறது என்றாள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். அருகில் கைக்கெட்டும் தூரத்தில் டொக்ரரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெட்டிய கேக்கும் அதன் மீது போடப்பட்டிருந்த ஐசிங்கும் நாவூறியது.

‘நீ கேக் சாப்பிடுவாய் தானே ? ஒரு துண்டு எடுத்துக்கொள்’

அந்த நள்ளிரவில் அவள் என்னை மிகவும் அறிந்த பையனைப்போல நடத்தினாள். என்னை வாய்பேசாத இதயத்தில் ‘ஓட்டை’ உள்ள பையானப் பாவிக்காதது மகிழ்ச்சியாகவிருந்தது. என்னைப்பற்றி விசாரித்தாள். ஊரைப்பற்றி, போரைப்பற்றி ஒவ்வொரு வரியில் தெரிந்துகொண்டாள். அவளுக்கு என்னுடைய சைகை இலகுவாகப்புரிந்தது. கொஞ்ச நேரத்தில் அம்மா வந்தாள். எங்களுக்கு இரண்டு படுக்கைகளுடன் கூடிய அறையொன்று தரப்பட்டது. பதின் மூன்று நாட்கள் கண்காணிப்பு, பரிசோதனைகளின் பின்னர் எனக்கு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் ஒப்பிரேசன் நடக்கும் என்று சொல்லப்பட்டது.
எனக்கு பொழுது போக்கு பெரிய பிரச்சினையாகவிருந்தது. பகலில் அங்கிருந்த பூங்காக்களில் உலாத்துவேன். அதே சறுக்குகளும் ஊஞ்சல்களும், பெரும்பாலும் என்னைவிட சிறிய சிங்களக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். எங்களுடைய வாட்டுக்கு பக்கத்தில் ஓட்டிசமுள்ள பிள்ளைகளின் வாட் இருந்தது. அங்கிருந்தும் நான்கைந்து பிள்ளைகள் விளையாட வருவார்கள். அவர்களுக்கு அதுவொரு ‘தெரபி’ பகுதி என்பதால் அவர்களுக்குரிய தாதிமார்களோ பராமரிப்பு ஊழியர்களோ அருகில் இருப்பார்கள். ஒரு முறை யசுந்தா என்னை அந்த வார்டிற்கு கூட்டிச்சென்றாள்.

அங்கு அவளுக்குப் பிரியமான பிள்ளையிருந்தாள். திமுத்து .என்னுடைய வயதுதான். அவள் யசுந்தராவிடம் பேசும் போது ஒரு ஓட்டிசப் பிள்ளை போலல்லாமல் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் உரையாடுவாள். ஆனால் அவர்கள் இருவரும் அந்த மாநகரின் நடுவில் இருக்கும் சிறுவர் வைத்தியசாலையில் சந்தித்துக்கொள்வதில்லை. அவர்கள் நீண்ட விசாலமான புல்வெளியொன்றில் புதர் மூடியிருந்த பழைய பெளத்த ஸ்தூபியின் அருகில் சந்தித்துக்கொண்டார்கள். இலட்சக்கணக்கான மணிப்புறாக்கள் மேயும் நீண்ட புல்வெளியின் மத்தியில் அந்த ஸ்தூபி பாழடைந்து கிடந்தது. அந்தப்புல்வெளியைச் சுற்றி லட்சக்கணக்கில் மணிப்புறாக்கள் மேய்ந்துகொண்டிருந்தன. அதன் அடியில் பெரிய புத்தர் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார். நான் அவர்களை அங்கே சந்தித்த போது அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய பிரச்சினையிருந்தது. ஸ்தூபியைச் சுற்றி மேயும் அந்த மணிப்புறாக்களை விரட்ட வேண்டும். அவை அந்த ஸ்தூபியையும் புத்தரையும் கொத்திக் கொத்தி அழித்துவிடும் என்று அச்சம் சூழ்ந்திருந்தது. திமுத்துவிற்கு அந்த இடத்தை யசுந்தராதான் அறிமுகம் செய்திருந்தாள். திமுத்து அங்கிருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாவிருந்தாள். அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் நேரத்திற்காக திமுத்து ஒவ்வொரு நாளும் காத்திருந்தாள். திமுத்துவின் கதை பயங்கரமானது. திமுத்துவைப் பொலிசார் ஒரு பலியிடும் இரவில் இருந்து காப்பாற்றியிருந்தனர். திமுத்து குழந்தைப்பருவத்தில் இருந்து வித்தியாசமாக நடந்து கொண்டாள். அவளுடைய தாய் தந்தையர்கள் கெட்ட ஆவிகளும் , பேய்களும் திமுத்துவை பிடித்துக்கொண்டிருப்பதாகக் கருதினர். மாந்திரீகர்களை த் தேடிச்சென்று அவளைக் குணப்படுத்தப் பார்த்தனர். அவர்கள் ஒரு கட்டத்தில் அதற்குள் மூழ்கிப்போனார்கள். திமுத்துவில் ஏறியிருக்கும் பேய் அவர்களின் சொத்தையும் உயிரையும் அழித்துவிடப்போகின்றது என்று மாந்திரீகர்கள் சொன்னார்கள். இரகசியமாக அவளைப் பலிகொடுத்தால் அவர்களுக்கு அந்தப்பேய்கள் கட்டுப்பட்டு வேண்டிய வரத்தைத் தரும் என்று பயமுறுத்தி- ஆசைகாட்டினார்கள். பலிக்குச் சம்மதித்தார்கள். நள்ளிரவொன்றில் காட்டுப்பகுதியில் நடந்த அந்த பலிச்சடங்கை பொலிசார் இரகசியமாக விசயத்தைத் தெரிந்துகொண்டனர். ஊர்மக்களோடு போய் திமுத்துவை மீட்டனர்.பின்னர் திமுத்துவிற்கு ‘ஓட்டிசம்’ இருப்பதைக் கண்டறிந்து இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள்.

அங்கிருந்த நாட்களில் பகலில் திமுத்துவோடு பேசிக்கொண்டிருப்பேன். யசுந்தரா அவளிடம் எப்படிக் கதைக்க வேண்டும் என்று சொல்லித்தந்தாள். லட்சக்கணக்கில் மணிப்புறாக்கள் மேயும் அவ்விடத்தில் திமுத்துவைச் சந்திக்கும் போதே அவள் பேசினாள். ’நீ அவளுடன் பேச வேண்டும் என்றால் அவளுடைய உலகத்தை நம்பவேண்டும். ஒரு விருந்தாளியைப் போலவோ , வழிப்போக்கனைப்போலவோ அங்கே நுழைய வேண்டும் என்று யசுந்தரா சொன்னபோது எனக்கு சட்டென்று பிடித்துப்போனது.

அம்மாவுடன் இருக்கும் போது அம்மாவின் முகத்தில் தெரியும் என்னுடைய ஒப்பிரேசன் பற்றிய பயம் என்னையும் மிகவும் பலவீனப்படுத்தியது. நான் சாகப்போகிறேன் என்றே நம்பினேன். நான் பயந்தாலோ அழுதாலோ அம்மா பயப்படுவாள் என்று எதையும் காட்டிக்கொள்ளாமல் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டேன். அதனால் பெரும்பாலான நேரங்களில் அம்மாவைத் தவிர்த்துவிட்டு திமுத்துவுடனும், யசுந்தராவுடனும் கழித்தேன். நான் அவர்களிடமும் என்னுடைய பயத்தைக் காட்டிக்கொள்வதில்லை. அழுவதைப் போல நடித்துவிடலாம், ஆனால் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிப்பது லேசில்லை. அங்கிருந்து வீட்டுக்கு ஓடிப்போய் விட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வீட்டுக்கு திரும்பினாலும் ‘வருத்தக்காறன்’ நடைமுறைகள்தானே காத்திருக்கும். ஒப்பிரேசன் முடிந்து திரும்ப வேண்டும். அல்லது திரும்பக்கூடாது என்ற தெரிவுகள்தான் அங்கே வரும் வரைக்கும் எனக்கிருந்தவை. ஆனால் யசுந்தராவும் திமுத்துவும் அந்தப்பெரிய ஒற்றை ஸ்தூபி நின்றிருந்த புது உலகத்தில் என்னைச் சேர்த்துக்கொண்டர். நான் அந்த பெரிய புல்வெளியையும் ஸ்தூபியையும் புத்தரையும் கண்டேன். திமுத்து அங்கே உள்ள மணிப்புறாக்களை விரட்ட வேண்டும் என்று கவலைப்பட்டாள். அவை அந்த இடத்தை அழித்து விடும் என்று அவற்றின் மீது விசனப்பட்டாள்.

நான் அவளுக்கு உதவ விரும்பினேன். அவளுடைய நல்லபிப்பிராயத்தைப் பெறுவேண்டும் என்று இயல்பூக்கம் ஒன்று என்னுள் எழுந்தபடியே இருந்தது. இதற்கு முதல் எந்தப்பெண் பிள்ளையும் என்னைச் சேர்த்துக்கொள்வதில்லை. பெரியவர்களுக்குதான் நான் வருத்தக்காறன், வாய் பேசாதவன். சிறியவர்களுக்கு நான் முரடன், குழப்படிகாரன். அவர்கள் என்னைக் குறைந்தபட்சமேனும் சகித்துக்கொள்வது எனக்குள்ள பிரச்சினையும்நோயும் தான் என்று நன்கறிவேன். அக்கழிவிரக்கத்தைவைத்து என்னுடைய குழப்படிகளைத் தந்திரமாக அவர்கள் மட்டதிலேயே மறைத்துவிடுவேன். அதனால் கொஞ்ச நாட்களில் என்னை அவ்வளவாக யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. குறிப்பாக பெண்பிள்ளைகள். ஆனால் திமுத்து வேறுவிதமாகவிருந்தாள். அல்லது என்னைப்போலவிருந்தாள். அதனால் அந்த மணிப்புறாக்களை விரட்ட அவளுக்கு உதவி செய்ய விரும்பினேன்.

அவளுக்காக நானொரு கவணைச் செய்தேன். இரண்டு தடிகளை எடுத்து அப்பிள் வெட்ட அம்மா வாங்கி வைத்திருந்த கத்தியை பயன்படுத்தி செதுக்கி எடுத்தேன். கைக்குள் அடங்க கூடிய சிறிய கவணில் யசுந்தராவின் மேசையில் இருந்த ரபர் பாண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து சுற்றி இழுவையைத் தயார் செய்து பொருத்தினேன். அதை திமுத்துவிடம் கொடுத்தேன். அந்தக்கவணில் கற்களை வைத்து அடிக்க முடியாது. ரப்பர் பாண்டுகள் அறுந்துவிடும் அதனால் பேப்பர் உருண்டைகளை வைத்து அடிக்கலாம் என்று சைகையில் விளக்கினேன். திமுத்து சிரித்தாள். பேப்பர் உருண்டைகளுக்கு எப்படி மணிப்புறாக்கள் பயப்படும் என்று கேட்டாள்.

‘மணிப்புறாக்களை, உண்மையான கற்களைக் கொண்ட கெற்றப்போல்களால் கூட விழுத்த முடியாது. மணிப்புறாக்கள் மிகவும் கூர்மையான காதுகளைக் கொண்டவை, காற்று அவற்றின் இருதயம் வரை கேட்கும். கெற்றப்போலில் கல்லை வைத்து இழுத்து விடும் போது காற்றில் கற்கள் உரசிச்செல்லும் ஓசை சட்டென்று அவற்றுக்கு கேட்டு விடும் கல் அங்கே சென்று சேரும் முதல் அதன் ‘விசுக்’ என்ற ஓசை போய்ச்சேர்ந்துவிடும் உடனே காற்றில் சிறகுகளால் உதைந்து விருட்டெனக் கிளம்பிவிடும், ஆகவே மணிப்புறாக்களை விரட்ட காற்றை உரஞ்சினாலே போதும்’ என்று அவளுக்கு விளக்கினேன். மிகவும் சிரமப்பட்டு சைகையால் அவற்றை விளக்க வேண்டியிருந்தது ஏனெனில் திமுத்துவினால் எழுதவோ, வாசிக்கவோ முடியாது. அவள் மிகவும் குறைவான சொற்களையும் சைகளையும் கொண்டவள்தான்.

என்னுடைய விளக்கம் அவளுக்கு திருப்தியாகவிருந்தது. என்னுடைய திட்டம் பயனைத் தந்தது. திமுத்து மணிப்புறாக்களை விரட்டினாள். லட்சகணக்கில் அங்கிருந்த மணிப்புறாக்களை அவளுடைய கெற்றப்போல் விரட்டிக் கலைத்தது. அவள் அந்த ஸ்தூபியாகவும் புத்தர் சிலையாகவும் பாவிப்பது அங்கிருந்த மூத்த தலைமைத்தாதியின் கல்லறையைத்தான். அந்தத் தலைமைத்தாதி அவள் வாழ்ந்த காலத்தில் நோயினால் அதிகம் அவஸ்தையுறும் குழந்தைகளை நோயிலிருந்து விடுவிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவாளாம் என்று ஒரு கட்டுக்கதையை வேறு அங்கே பூங்காவைப் பராமரிக்கும் ஊழியர் ஒருவர் எனக்கும் திமுத்துவிற்கு சொல்லிப் பயமுறுத்தினார். ஆனாலும் தினமும் அவ்விடத்தில் இருந்தே கதைப்போம். ஒவ்வொரு நாளும் ‘நைட் டியூட்டிக்கு’ வரும் யசுந்தரா எங்களை வாட்டில் காணாவிட்டால் அங்கேதான் வருவாள்.
அவள் என்னுடைய பயத்தை நன்கறிந்திருந்தாள். எனக்கும் திமுத்துவிற்கும் அங்கிருந்த ஸ்தூபியிலும் புத்தரிலும் ஏன் இவ்வளவு மணிப்புறாக்கள் மொய்க்கின்றன என்பதற்கு ஒரு கதை சொன்னாள்.

கெளதம சித்தாத்தர் துறவுக்குப் பிறகு பரிநிர்வாணம் நோக்கிய பயணத்தில் ஒரு நாள் நோயைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். நோயை அறிந்திருக்கிறோமே தவிர நாம் ஆட்பட்டதில்லை. பிணியைத் தொடாமல் எப்படிப்பிணியை அறிந்து கொள்வது என்று சிந்திக்கத்தொடங்கினார். பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த பிணியொன்றினை தன்னில் வாங்கிக்கொள்வதற்காக ஊர் ஊராகச் சுற்றினார். மருத்துவர்கள், நோயாளிகள், தொழுநோய்க்கூடங்கள், வைத்திய நிலையங்கள், நோயால் அழியும் ஊர்கள் என்று தேசம் முழுவதும் அலைந்து அலைந்து தன்னுடலில் நோயை ஏற்றிக்கொள்ள அலைந்தார். அப்போது தொழு நோயே பெரிய நோயாகவிருந்தது. நாட்டில் உள்ள பெரிய தொழுநோய்க் கிராமம் ஒன்றைத்தேடிச்சென்று அங்குள்ள தொழு நோயாளிகளுடன் வசிக்க ஆரம்பித்தார். அவர்களைப் பராமரிக்கும் வேலையை எடுத்துக்கொண்டார். தனக்கும் தொழு நோய் வர வேண்டும் என்று அவர்களுடன் நெருங்கிப்பழக ஆரபித்தார். வெறுங்கையால் அவர்களைத் தொட்டார். கழுவினார். மருந்திட்டார். அவர்களுடன் எப்போதும் நெருக்கமாகவிருந்தார். அவர்களுக்குப் பெரிய பேச்சுத்துணையாக மாறினார். கதைகளைச் சொன்னார் அவர்களிடம் நோயைப்பற்றிக் கேட்டறிந்தார். அதுவொரு தொழு நோய் கூடமாகவிருந்தாலும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாக தங்களுடைய தொழுநோய்க் கதைகளை சொன்னார்கள். அவர்களில் பலர் புத்தரிடம் தங்களை இரகசியமாகக் கொன்றுவிடும்படி கெஞ்சினார்கள். புத்தர் அவர்கள் குணமடைந்துவிடுவார்கள் என்று தைரியப்படுத்தினார். புத்தரின் அருகாமை அவர்களைக் குணப்படுத்தத் தொடங்கியது. ஒவ்வொருத்தராக குணமடையத்தொடங்கினார்கள். ஆனால் புத்தருக்கு ஏமாற்றமே மிஞ்சிக்கொண்டிருந்தது. அவரை நோய் அண்டவேயில்லை. வேறு வழியில்லாமல் அவர்களைப் பராமரிப்பது கதை கேட்பது என்று நாட்களை ஓட்டினார். அங்கிருந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளின் கதைகளைக் கேட்க நேர்ந்தது. அப்போதுதான் புத்தருக்கு ஒரு விடயம் வெளித்தது அவர்கள் தங்களுடைய நோயையும் நோவையும் பயத்தையும் தாழ்வுணர்வையும் தன்னிடம் ஒப்படைக்க ஒப்படைக்க அவர்கள் குணப்பட்டுக்கொன்றே செல்கின்றனர். எந்த நோயும் அண்டாமலே புத்தருக்கு பிணியின் ஒவ்வொரு குணமும் விளங்கியது ஆனாலும் மிக அருகில் வந்தும் அதைத்தான் தொட வில்லையே என்ற ஏமாற்றம் அவரை வாட்டிக்கொண்டிருந்தது. நாட்கள் வருடங்களாகி ஓட ஒரு நாள் அந்தப்பிராந்தியமே வெளித்தது. ஒவ்வொருத்தராக குணமாகி வெளியேறிச்சென்றனர். அந்த தேசத்தில் பரவியிருந்த தொழு நோய் மெல்ல மெல்ல அகன்று சென்றது. புது நோயாளிகள் எவரும் வராத நாள் ஒன்று வந்தது. நாட்டின் அரசன் வைத்திய சாலையை மூடினான். தொழு நோயாளிகள் இருந்த இடமென்பதால் அங்கே யாரும் போவதைத் தடைசெய்தான். புத்தர் தனியேயிருந்தார். கடைசி நோயாளி வெளியேறிச்சென்ற அன்றைக்கு புத்தருக்கு நோயின் முதல் அறிகுறி வந்து சேர்ந்தது. புத்தர் நோய் வாய்ப்பட்டார். ஒவ்வொருத்தரும் சொன்ன கதையையும் அவருக்கு நினைவில் வந்தது. அவை எல்லாம் அவரில் நிகழத்தொடங்கின. புத்தர் விகாரமாகி பிணியோடு தனியே வாழ்ந்தார். அவரிடம் கதை கேட்பதற்கோ அவருக்கு கதை சொல்வதற்கோ யாருமிருக்கவில்லை. நோய் முற்றிக்கொண்டே சென்றது. வலியும் சீழும் மணமுமாக பிணியின் உச்சியைத் தொட்டார். ஒரு கட்டத்தில் இறந்துவிடுவதே மேலானவிடுதலை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அது இறுதியானது தானா? தான் நோயின் உச்சத்தைக் கண்டுவிட்டேனா என்ற சந்தேகம் வலுத்துக்கிடந்தது. அவர் சந்தித்த அத்தனை நோயாளியும் பிணியின் மீது வெறுப்பும் முழுத்துயருமாய் இருந்தார்கள் ஆனால் புத்தருக்குள் பிணியின் உச்சம் கிடைத்த போதும் , தான் நினைத்ததை அடைந்துவிட்டோம் என்றொரு மகிழ்ச்சி உள்ளே முகிழ்ந்திருந்தது அது அவரைப் பிணியை உண்மையாக அறிந்துகொள்வதைத் தாமதப் படுத்திக்கொண்டிருந்தது. அதனால் அந்தப்பிணியினால் தான் இறந்து போவதே அம்மகிழ்ச்சியை அழித்து பிணியின் முழுமையான தொடுகையை தனக்குணர்த்தும் என்று அறிந்தார். அப்படியே நீட்டி நிமிர்ந்துபடுத்தார். எந்த மருத்துவமோ, சிந்தனையோ இன்றி ஆழ்ந்து நிஷ்டைக்குப் போனார். அச்சிறிய மகிழ்ச்சியை அழித்து தன்னைத் தொடும்படி பிணியை வேண்டினார். ஆனால் அவர் உறங்கும் போதே அவருடைய சிதைந்த உடலில் இருந்து செதில் செதிலாக பிணி வெடித்துக் கழன்றது ஒவ்வொரு செதிலும் மணிப்புறாக்களாக மாறிப்பறந்தன. புத்தர் கண் விழித்த போது அங்கே லட்சக்கணக்கில் மணிப்புறாக்கள் மேய்ந்துகொண்டிருந்தன.
யசுந்தரா சொன்னாள்

புத்தர் பிணியிடமிருந்து மகிழ்ச்சியை அறிந்துகொண்டார்.
…..
என்னுடைய ‘ஒப்பிரேசனுக்கு’ ஏழு நாட்களுக்கு முன்பு அப்பாவும் தம்பியும் ஊரிலிருந்து வந்திருந்தார்கள். தம்பி எனக்காக இறுவட்டுக்களைப் போட்டு பாட்டுக்கேட்கக் கூடிய ‘வோக்மன்’ ஒன்று வாங்கிவந்திருந்தான். நாங்கள் நெடுநாட்களாக வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்த வோக்மன் அது. தம்பி இந்தச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியிருந்தான். ‘அண்ணாவுக்கு’ என்று சொல்லி அப்பாவைச் சம்மதிக்க வைத்து வாங்கியிருக்கிறான். நான் மிகவும் மகிழ்ந்து போனேன். இரவு பகலாக அதைப்போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பேன். மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய பரிசோதனைகளுக்காக வாட்டை விட்டு வெளியே செல்லும் போது அம்மாவிடம் அதை எடுத்து கைப்பைக்குள் பத்திரப்படுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வேன். இரண்டொரு முறை அதை யசுந்தராவிடம் கொடுத்தேன். அவள் அப்படி ஒன்றைப்பார்த்தவளைப்போலல்லாமல் தொட்டுப்பார்த்தாள். ஆரவமாகப் பாட்டுக்கேட்டாள். சிடி சுத்தும் ஓசையை காதில் வைத்துக்கேட்டாள்.

ஒப்பிரேசனுக்கு முன்று நாட்களுக்கு முதல் வைத்தியர்கள் எனக்கு என்னுடைய ஒப்பிரேசனைப் பற்றி விளக்கினார்கள்.நான் நினைத்ததைப்போல என்னுடைய நெஞ்சைப்பிளந்து நோயுள்ள என்னுடைய இருதயத்தை கைகளில் எடுத்து அதில் உள்ள துளையை அடைக்கப்போவதில்லை என்றார். புதிதாக வந்திருக்கும் ‘கோயில்’ முறைமூலம் என்னுடைய தொடையின் முடிவில் ஒரு சிறு துளையை இட்டு நரம்புகளின் ஊடாக கம்பியொன்றைச் செலுத்தி வீடியோ மூலம் என்னுடைய இருதயத்தை அடைக்கும் தொழிநுட்பம் பற்றிப்பேசினார். ஒப்பிரேசன் முடிந்து மூன்று நாட்களில் காயம் ஆறிவிடும், என்னால் இயல்பு வாழ்க்கைக்கு உடனடியாகத் திரும்பி விடலாம் என்றார். எனக்கு ‘அவ்வளவு தானா?’ என்றிருந்தது. இத்தனை நாள் ‘வருத்தக்காறன்’ உலகத்தை விட்டு மூன்று நாட்களில் வெளியேறி விடமுடியுமா என்றிருந்தது. ஆனால் வைத்தியர் கடைசியில் இலங்கைக்கு அந்தத் தொழில்நுட்பம் மிகச்சமீபத்திலேயே வந்திருந்தது. இலங்கையில் அவ்வகை ‘ஒப்பிரேசன்’ செய்யப்படும் மூன்றாவது ஆளும் முதற் சிறுவனும் நான்தான் என்றார்கள். எனக்கு பரிசோதனை எலிகளின் மனநிலை பிடித்துக்கொண்டது. நான் மூன்றாவது எலி!

யசுந்தராவிடம் நானதைக் கூறிய போது, எனக்கு ஒன்றும் ஆகாது என்றாள். தான் பிரார்த்திப்பதாகச் சொன்னாள். திமுத்து என்னை விட பதட்டமாகவிருந்தாள். அதுவும் ஒப்பிரேசனுக்கு ஒரு நாள் இருக்கும் போது அழுதாள். அவள் அழுவதை ஓட்டிச வார்டில் இருந்த தாதியர்கள் வியப்பாகப் பார்த்தார்கள். அங்கு வந்ததில் இருந்து அவள் அழுததில்லை. அதுவொரு நல்ல முன்னேற்றம் என்று சொல்லி எனக்கு நன்றி சொன்னார்கள். சில நாட்களாக அவளுடைய இயல்பில் முன்னேற்றங்கள் தென்படுவதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் யசுந்தராவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாலும். தீடீரென்று கிடைத்த அந்த ‘நல்ல பெயர்’ எனக்கு பிடித்திருந்ததால் அதை இழக்க விரும்பாமல் சிரித்து வைத்தேன். அன்றைக்கு இரவு யசுந்தரா வந்த போது நான் திமுத்துவின் முன்னேற்றம் பற்றி ச் சொல்லி விளக்கினேன். அவள் ‘நீ கவண் செய்து கொடுத்த பிறகுதான்’ திமுத்து மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றாள். அன்றைக்கு இரவு நான் சாப்பிடாமல் வேளைக்கு உறங்கச்சொல்லியிருந்தார்கள். நான் உறங்கிப்போனேன். நடுச்சாமத்தில் முழிப்பு வந்ததது. அம்மா பக்கத்து கட்டிலில் உறங்கியிருந்தாள். வோக் மென்னை கொழுவிக்கொண்டு வெளியே வந்தேன். நீண்ட வராண்டாவில் ஏதோ சந்தடி கேட்டது. ஒன்றிரண்டு விளக்குகளைத் தவிர ஏனையவை நூற்கப்பட்டிருந்தன. மெல்லிய நீல வெளிச்சத்தில் யாரோ ஒரு பிள்ளையை சக்கர நாற்காலி ஒன்றில் வைத்து யசுந்தரா உருட்டிச்செல்வது தெரிந்தது முதல்நாள் சுவரில் கண்ட ‘ரோச் லைட் ’டை நாற்காலியின் பிடியில் மாட்டிருந்தாள். பூங்கா பக்கமாக அந்த நாற்காலியைத் தள்ளிக்கொண்டு இருட்டில் மறைந்து போனாள். நான் ஏதேனும் அவசர நிலைமை போல என்று நினைத்து விட்டு மீண்டும் வந்து படுத்துக்கொண்டேன்.

…..
வழமையாக இரண்டு மணிநேரம் நடைபெறும் ஒப்ரேசன் எனக்கு நான்கு மணிநேரத்தை எடுத்துக்கொண்டது. நான் கண் விழித்த போது உடல் சோர்ந்து ஒடுங்கிப்போயிருந்தேன். அம்மாவும் அப்பாவும் கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தனர். அம்மா தடவிக் கொஞ்சினாள். உள்ள தெய்வங்களின் நேர்த்தியெல்லாம் சொல்லி அழுதாள். வைத்தியர்கள் என்னுடைய ஒப்பரேசன் பற்றி அவளுக்கு விளக்கியிருந்தார்கள். முதலில் ஒரு பக்கத் தொடை முடிவில் வெட்டி கொயிலை உள்ளே செலுத்தும் போது அது தவறி உள்ளே விழுந்துள்ளது. மீண்டும் அடுத்த தொடை முடிவில் வெட்டி விழுந்த கொயிலை எடுத்து அடைத்து முடித்திருக்கிறார்கள். அதனால் நிறையக் குருதியும் நேரமும் விரயமாகியிருக்கிறது. நான் ஏறக்குறைய செத்துப்போய் மீண்டிருக்கிறேன் என்று அம்மா சொல்லி அழுதாள். தம்பி என்னுடைய கையைத் தொட்டு,
‘வோக்மனைக் காணேல்ல’ என்றான்.
……….
என்னை பழைய வாட்டிற்கு திரும்ப அனுப்பவில்லை. பெரிய நவீன மாடிக்கட்டடத்தின் எட்டாவது மாடியில் குளிரூட்டிய அறையில் என்னைக் கண்காணிப்புக்கு வைத்திருந்தார்கள். பொழுது போகவில்லை. யசுந்தராவோ திமுத்துவோ என்னைப்பார்க்க வருவார்கள் என்று நினைத்தேன். சில வேளைகளில் இங்கே அவர்கள் அனுமதிக்கப்படாமலிருக்கலாம். நான் வோக்மன் எப்படிக்காணாமல் போனது என்று அம்மாவிடம் கேட்டேன். அம்மாவிற்குத் தெரியவில்லை. ஒப்பிரேசனுக்கு வரும் போது எங்களுடைய பைகளை அங்கேயே விட்டு வந்திருக்கிறார்கள். பிறகு அப்பாவும் தம்பியும் அவற்றைச் சென்று எடுத்து வந்திருக்கிறார்கள். தம்பி வோக்மனைத் தேடி விட்டு அப்பாவிடம் சொல்ல அப்பா சென்று விசாரித்திருக்கிறார். வாடில் தெரியாது என்றிருக்கிறார்கள். அப்பா ‘சிங்களத்தியள்தான் ஆரோ எடுத்துப்போட்டாளவை’ என்று வாட்டில் இருந்த தாதிகளைச் சொல்லிக் கறுவினார். நான் தம்பியிடம் ‘பின்னேரம் பார்வை நேரம் முடிஞ்சு போகேக்க வாட்டுக்கு போன்னியள் எண்டால் யசுந்தரா எண்டு ஒரு நேர்ஸ் இருப்பா அவாதான் எடுத்து வச்சிருப்பா வாங்கிவாங்கோ’ என்று விளக்கினேன். என்னைக்காட்டிலும் தம்பிதான் அது காணாமல் போனதில் வருத்தமாக இருந்தான். அம்மாக்கோ அப்பாக்கோ விளங்காவிட்டாலும் அதன் மீது அவனுக்கிருந்த அவாவை நான் நன்கறிவேன் இல்லையா?

அப்பாவும் தம்பியும் போய்க் கேட்ட போது, அங்கே அப்படியாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா களவெடுத்தால் என்னெண்டு சொல்லுவாளவை” என்று மீண்டும் கோவப்பட்டார்.

நான்கைந்து நாட்களில் நான் எழுந்து நடக்கத்தொடங்கினேன். எனக்கு டிக்கற் வெட்டி , யாழ்ப்பாணத்தில் கிளினிக் போட்டுத்தந்தார்கள். அதுவரை பாவித்த மருந்து வில்லைகளை இனி முழுங்கத்தேவையில்லை என்றும் எனக்கு இருதய நோய் சரியாகி விட்டது என்றும் சொன்னார்கள். வருடம் ஒருமுறை கிளினிக்கில் காட்டினால் போதும் என்றார்கள். மாசத்தில் இரண்டு தரம் வைத்தியசாலை லைனில் காத்திருந்து, உச்சிக்கொண்டு முன்னால் சென்று வைத்தியரிடம் சென்றுவந்து, தினமும் மருந்து குடிப்பதைக்காட்டிலும் இது எவ்வளவோ பராவாயில்லை என்று தோன்றியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் எங்களை போகலாம் என்று சொன்னார்கள். அன்றைக்கு யசுந்தரா வேளைக்கு வந்துவிடுவாள் என்று தெரியும். நான் அம்மாவிடம் சொல்லி விட்டு வாட்டிற்கு விரைந்து சென்றேன். அங்கே போன போது ஏனைய தாதிக்கள் என்னைக் கண்டு மகிழ்ச்சியாக நலம் விசாரித்தார்கள். நான் ’யசுந்தரா மிஸ்’ வரவில்லையா என்று கேட்டேன்.
‘யார் யசுந்தரா ?’ என்று கேட்டார்கள். பகிடிக்கோ பொய்க்கோ அல்ல அவர்கள் உண்மையாகவே அப்படி யாரையும் அறிந்திருக்கவில்லை என்பது போலவே இருந்தார்கள். நான் மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்த்தேன். வோக்மன் கிடைத்து விட்டது என்றும் சொல்லிப்பார்த்தேன். அவர்களுக்கு அதைச் சைகையாலும் பேனாவை வாங்கி எழுதியும் கேட்டுப்பார்த்தேன். அவர்கள் தெரியாது என்றே சாதித்தார்கள். எனக்கு அழுகை வந்தது. ஒரு வோக்மனை எடுத்த கெட்ட பெயரில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள் ஒருமித்துப் பொய் சொல்கிறார்கள் என்று கோவம் வந்தது. வரவேற்பிடத்தைக் கடக்கும் போது அந்த விக்டோரியா காலத்து உடையணிந்த தாதியின் புகைப்படத்தின் அருகே யசுந்தரா வைத்திருந்த டோச் லைட் பழையபடி மாட்டப்பட்டிருந்தது. நான் வேகமாக வெளியேறி ஓட்டிச வாட்டிற்குப்போனேன். இருண்டு கொண்டிருந்தது. நான் வேகமாகத் திரும்ப வேண்டும். எனினும் திமுத்துவை பார்க்காமல் போக முடியாது. அவளின் கட்டிலைத்தேடிப்போனேன். திமுத்து கட்டிலில் அமர்ந்திருந்தாள். நான் அருகில் போக என்னைக் கண்டு வெருண்டாள். கட்டிலின் மூலையில் ஒடுங்கினாள். அங்கிருந்த தாதிக்கும் அது வியப்பாகவிருந்தது.

’ஏன் என்ன நடந்தது” என்று கேட்டுக்கொண்டு திமுத்துவிடம் போனாள். திமுத்து அவளிடம் ஒடுங்கினாள். என்னைக்கண்டு வெருண்டாள் . கண்களில் பயம் . திமுத்துவிற்கு உடல் நடுங்கியது. மூச்சு எடுக்கச் சிரமப்பட்டாள், முகம் விம்மிப்பொருமி அழப்போனாள். என்னால் அங்கே நிற்க முடியவில்லை. திரும்பி நடக்கத்தொடங்கினேன்.

வாட்டை விட்டு வெளியேறி பூங்காவைக் கடக்கும் போது போது வலது காது மடலில் ஏதோ பட்டு சுரீர் என்று வலித்தது . பூச்சி ஒன்று அடித்து விலகிச்சென்றது போலொரு உணர்வு காதைத்தடவிக்கொண்டு நிலத்தைப்பார்த்தேன். உருட்டப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று கிடந்தது.

(2022)

(நனவோடையும் கனவுமாய் எழுந்து வந்த கதையிது, பால்யம் ஓர்  தேய்கனவாயும், புனைவாயும் மாறிக்கொண்டிருக்கும் போது அதன் அகச்சிக்கல்களைப் புரிந்து கொள்ள சிலவற்றை எழுதிப்பார்ப்பதுண்டு. அதில் ஒன்றுதான் விளக்கேந்திய பெருமாட்டி)

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’