பிணி தீர்ச் சிறுசொல்

பிணி தீர்ச் சிறுசொல்

காலையில் எழும்போதே தடிமன் காய்ச்சல். வெய்யிலைச் சொல்லி நேற்றுப் பழங்களை நிறைய உண்டேன். தர்ப்பூசணி, ஜம்புக்காய், குளிர்த்தண்ணீரை அளவுக்கதிகமாய் குடித்தேன். அதிலெழுந்த விளைவு.  இந்த வெய்யில் எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. வழமையாக நான் இது போல் விசேடமாக வெய்யிலுக்கு என்று எதுவும் உண்பதில்லை. குடிப்பதில்லை. பச்சைத்தண்ணீர் இயல்பிலேயே நிறையகுடிப்பேன். வெய்யில் காலங்களில் அளவு கொஞ்சம் அதிகப்படும். அவ்வளவுதான். முகத்தைப் பற்றியோ தோலைப்பற்றியோ அதன் நிறங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. என்னுடைய கரிய உடல் சிறு பிராயம் முதலே வெய்யிலில் பொருட்படுத்த ஒன்றுமில்லை என்ற உளநிலையை உருவாக்கி விட்டிருந்தது.  வெய்யிலின் முதன்மையான விளைவு சோர்வுதான். ஒவ்வொரு கோடையிலும் சோர்வையே வெல்ல வேண்டியிருக்கும்.காச்சலில் உடல் நொந்து கொண்டிருந்தது. இன்றைக்குச் சில திட்டங்களிருந்தன. பயணமொன்று போக வேண்டும்,  இரண்டு நாட்களாக நாவலின் அத்தியாயம் ஒன்று முடிக்காமல் கிடக்கிறது.  அதை முடிக்க வேண்டும். `அக்னி நதி` நாவல் தொடங்கி முந்நூறு பக்கத்தில் அப்படியே நிறுத்தி வைத்திருந்தேன். ஒன்றை இடையில் நிறுத்தி வைத்திருப்பது மனமுள். இன்னொரு பக்கத்தில் போனில் வாசிக்கத்தொடங்கிய வெண்முரசு `இந்திரநீலம்` முடிந்து போயிருந்தது. இது அதைக் குற்றவுணர்வுப்படுத்திக்கொண்டிருந்தது. இன்றைக்குப் படுத்தால் நாளைக்கும் இந்த உடல் இதைத்தான் செய்யும், காய்ச்சலுக்கே கள்ளம் பண்ணினால் என்னுடலே என்னைச் சிரிக்கும். 

`நடிக்காதே மேன்`

அள்ளி முழுகினேன். உடல் சூட்டு இறங்க  மூச்சு மட்டும் சுட்டுக்கொண்டிருந்தது. தேனீரும் முட்டைத் தோசையும் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட்டேன். பேரூந்திற்கு நிற்கும் போதே தொப்பலாக வியர்த்தது. காய்ச்சல் காயும் போது வியர்ப்பது நற்குறிதான், ஆனால் எனக்கு சாதாரணா மனிதர்களை விட இரண்டு லீட்டர் அதிகம் வியர்க்கும், நானே என்னைக் குளித்துக்கொள்பவன். பேசாமல் இருந்தாலே வியர்த்துக்கொட்டும். ஒரு கட்டத்தில் கோடையில் வேறு உடல் மாரியின் வேறு உடல் என்று நானே பிரித்துக்கொள்ளுமளவிற்கு எனக்கு துல்லியமான உள்ளுணர்வு எழுந்தது.    சொல்லப்போனால் சிறுவயதில் இருதே மழைக்காலத்தை விடவும் வெய்யிலே எனக்கு நெருக்கமானது. ஊரில் வெய்யிலுக்குள் திரிந்தால் `வெய்யில் குளிக்காதே` என்று திட்டும் வழக்கமிருக்கிறது. எல்லோரும் வெய்யிலைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றாட புறணிகளில் அது முக்கியமானது.  இந்த மனிதர்கள் பூமியை அழிக்கத்தான் போகிறார்கள். தொழிற்சாலைகளையும் பெரிய வாகனக் கூட்டத்தையும் படைத்துக்கொண்டே, மரம் நடுங்கள், மரம் நடுங்கள் என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள். புகையை நிறுத்தாமல் மரங்களால் உங்களைக் காப்பாற்ற இயலாது மடையர்களே!  இந்த மந்தர்களுக்கு மத்தியில் என்னால்  என்னுடைய மகிழ்ச்சியையும் அன்றாட ஊக்கத்தையும் இழக்க முடியாது. எவ்வளவு வெய்யில் என்றாலும் சோர்ந்து விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையே ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும் போதும் நினைத்துக் கொள்வது.

பேருந்தில் வேர்த்து வியர்க்க  ஏறும் போது கடையொன்றில் கேட்ட பழைய பாட்டு ஒன்றை கொஞ்சம் பெரிதாகவே முணுத்துக் கொண்டிருந்தேன்.  உடல் நடுங்கிச் சோர்ந்து கொண்டிருந்தது, நானதை மனதில் நின்று எதிர் கொள்கிறேன் என்ற  உணர்வில் பாட்டு ஆனந்தமாய் சொல்லில் நின்றது.  சில சமயங்களில் சொல்லை வலிந்து தொடுத்துத்தான் மனதைத் தைக்க வேண்டும்.

மேகம் கருக்கயிலே

புள்ள தேகம் குளிருதடி

ஆத்த கடந்திடலாம்

புள்ள ஆசையை என்ன செய்வேன்!

பேரூந்தே சோர்ந்து போயிருந்தது, திங்கட் கிழமையை இந்த சமூக வலைத்தளங்கள் கொடூரமான நாளாக காட்டிக் காட்டி இவர்கள் இப்படி ஆகி விட்டார்களா அல்லது இவர்கள் இப்படி இருப்பதால் திங்கட்கிழமை கொடூரமாகி விட்டதா என்றே தெரியவில்லை.  பாதிப்பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள், மிகுதிப்பேர் தூங்கி வழியும் தொங்கிய முகங்கள், உடல் உழைப்புச் சார்ந்த தொழிலாளிகள் ஒன்று கூடும் இடமொன்று மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அண்மையில் இருக்கிறது, காலை வேளைகளில் அங்கே கூடி அத்தொழிலாளிகள் மகிழ்ச்சியாக வேலைக்குச் செல்வதைக் கண்டிருக்கிறேன். ரோட்டு வேலை, வயல் வேலை, கூலி போன்ற கடுமையான உடல் உழைப்பு சார்ந்த குறைந்த வருமானமுள்ள தொழிலாளர்கள்.  அந்த முகங்கள் துயரில் தொங்கிப் பார்த்ததேயில்லை. அவர்களுடைய உடல் உழைப்பதனாலேயே  திடமடைகிறது, புறத்தின் உறுதி அகத்தையும்  சிதறாமல் பார்த்துக்கொள்ளும். உடலுழைப்பற்ற படித்த ஆபீசர்களின் முகங்கள் ஏன் தொங்கிப்போகின்றன, சோர்வு மண்டிக்கிடக்கிறார்கள் என்றால், அவர்களிடம் ஒரு மாபெரும் சலிப்பு வெளி உருவாகி இருக்கிறது. ஒரே வேலை, ஒரே கதிரை,  பணத்தையும், அதிகாரத்தையும் கேளிக்கைகளையும் நோக்கி மீண்டும் மீண்டும்,  ஓடிச் சலித்துப்போன ஆன்மாக்கள். சலிப்பை நீக்க அவர்களுக்கு உடலுழைப்பு உதவப்போவதில்லை. மாறாக உள உழைப்பும் செயலுக்கான ஊக்கமும் அவர்களிடம் அறவே இல்லாமல் போகிறது.  வாரத்தில் பாதி நாட்கள்  `டிப்ரசன்` என்று வாய் உச்சரிக்காமல் இருப்பதேயில்லை. தூக்கமின்மை, தனிமை, சலிப்பு .  சமூக வலைத்தளங்கள் போன்ற கேளிக்கை வெளிகளும், வசை வெளிகளும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர்களின் தனிமையையும் மன அழுத்தத்தையும் கையாள முடியும்? சொல்லப்போனால் அங்கே  இவர்களுக்கு கிடைப்பது இன்னும் அதிக அழுத்தமும் சலிப்புமேயன்றி வேறில்லை.  பேரூந்தில் உறங்குபவர்கள் கூட முழித்துக் கொண்டால் திரும்பவும் போனைத் தோண்டி  சமூக வலைத்தள  குப்பைகளை மண்டைக்குள் ஏற்றத்தொடங்கி விடுகிறார்கள்.  உங்களுக்கு ஒன்று தெரியுமா எங்களுடைய பேரூந்துகளில் காலையில் பாடல்கள் போடுவதை இவர்கள் எல்லாம் சேர்ந்து நிறுத்தியிருக்கிறார்கள். `தூக்கம் கலைந்து விடுமாம், எரிச்சலாக இருக்குமாம்`. குறிப்பாக பழையபாடல்கள். இந்தப் பெருமந்தச் சராசரிகளின் மத்தியில் நின்று ஒருத்தன் பாடிக்கொண்டிருந்தான் என்பதைப் பொறுக்காமல்  கீழே இருந்த தடினமான நடுத்தர வயது மனிதர் `என்ன வேலை செய்றீர்?` எனக்கு இருந்த உற்சாகத்திலும் காய்ச்சலிலும் அவரைச் சீண்ட வேண்டும் போலிருந்தது. `நான் ஒரு எழுத்தாளன்` என்றேன். மனிசர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டார். எனக்கு கிளு கிளுப்பாக இருந்தது. சுற்றியிருந்த கமராக் கண்கள் என்னை மொய்த்து விட்டு அடங்கின. நான் மீண்டும் பாடத் தொடங்கினேன். 

ஆத்த கடந்திடலாம்

புள்ள ஆசையை என்ன செய்வேன்!

மனம் பேரூந்திலேயே காய்ச்சலை வென்று விட வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.  நின்று கொண்டே கிரிசாந்தின் தளத்தில் குறுந்தொகை பற்றி எழுதியதை வாசித்து விட்டு அவருக்கு ஒரு மெசேஜ் செய்தேன். (ஒன்றும் ஆவலடைய வேண்டாம் அதை இங்கே பகிர மாட்டேன்.) வெண்முரசின் எட்டாவது நாவலான காண்டீபம் முதல் அத்தியாயத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன். இளவரசன் சுஜயன், அவனை யானையைத் தூக்கிய பெரிய கழுகுகள் இரத்தம் வழிய வழியத் துரத்துகின்றன, முடிவில் அவனைப் பிடித்து வானத்தில் ஏற அவனுடைய மார்பில் குத்தியிருந்த வாளில் இருந்து குருதி பெருகுகிறது. அவன் அலறிக்கொண்டே எழ, பணிப்பெண் இளவரசே உங்களுக்கு இதுவே வேலையாகி விட்டது, இன்றும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டீர்கள் என்று கடிந்து கொள்கிறாள், எனக்குச் சிரிப்பு குபீர் என்று  வந்தது.  சுற்றி இருந்தவர்களில் என்னுடைய பல்கலைக்கழக நண்பர்களும் இருந்தார்கள். அதே அலுவலக உத்தியோகத்தர்கள். பின்சீற் வலயத்தை கொஞ்சம் அவர்கள் மட்டுமே கலகலப்பாக வைத்திருப்பார்கள். இரட்டை அர்த்த ஜோக்குகளுடன். அவர்கள் நான் போனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்ததைக் கண்டு விட்டு,

`என்ன மச்சான் கடலையோ ?`

எனக்கு அதற்கும் சிரிப்பு வந்தது, சம நேரத்தில் கிரிசாந் நான் போட்ட மெசேஜ்ஜிற்கு ரிப்ளே செய்திருந்தார், அதைப்பார்த்ததும் வில்லங்கத்திற்கு வெட்கப்பட்டுச் சிரித்தேன். அவர்கள் உறுதி செய்து கொண்டார்கள், நான் கடலைதான் போடுகிறேன் என்பதை. சுற்றி இருப்பவர்களை அறியாமையில் திளைக்கும் போது புன்னகைத்துக்கொண்டே நிற்கும் இன்பத்தைச் சமீப நாட்களிலேயே கனியொடு வேர்வரை சுவைக்கப் பழகியிருக்கிறேன். பேரூந்தால் இறங்கினேன். இறங்கிய இடத்தில் ஒரு  சிசிடீவி கமராவில் குருவி ஒன்று எங்கோ மறைந்திருந்த  இன்னொரு குருவியோடு பேசிக்கொண்டிருந்தது. இவர் குரல் எழுப்ப, அவா பதில் குரல் எழுப்ப, காலையிலே காதல். தேகம் வியர்த்து அடங்கியிருந்தது. காய்ச்சல் முழுதாக அற்றுப்போய் மெல்லத் தொடங்கிய மென் காற்றின் குளுமை தேகத்தில்பட குளிர்ந்து உள்ளூறியது.  இந்த வியர்வை நதிக்குள்  இறங்கிச்செல்லும் போது கிடைக்கும் இன்பமது. அந்தக் குருவி தொடர்ந்தும் எசப்பாட்டுப் பாடிக்கொண்டிருந்தது. நான் கீழே நின்றதையோ, அதைப்படம் பிடித்ததையோ சட்டை செய்யவேயில்லை. ஒரு எழுத்தாளனை அது மதிக்கவேயில்லை. ஒரு எழுத்தாளனை விட பறவை மகிழ்ச்சியாக இருக்கிறது.  சிரிப்புப் பொங்கி வந்தது.

ஆத்த கடந்திடலாம்

புள்ள ஆசையை என்ன செய்வேன்!

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’