பறவையின் பங்கு

யாழ்ப்பாணப்பகுதிகளில் மா, புளி போன்ற  பயன் தரும் மரங்களை அவை காய்த்து முதிரும் நிலையில் அறுவடை செய்தலை , ‘மரம் உலுப்புதல்’ என்பர். உலுப்பப்படும்  போது மரத்தின் சொந்தக்காரர்கள், மரத்தை உலுப்புவர் ஆகியோருக்கு அறுவடையில் குறிப்பிட்ட அளவு பங்குகள் கிடைக்கும். அவற்றோடு மரத்தின் குறித்த காய், கனிகளுள்ள கிளைகள் உலுப்பப்படாது பறவைகள், விலங்குகளுக்கு விடப்படும். இப்படியொரு மரபு இருந்திருக்கிரது. பின்னர் மெல்ல மெல்ல வழங்கொழிந்தது. மரத்தின் முழு அறுவடையும் சொந்தக்காரருக்கு வந்ததுடன் அறுவடை செய்பவர்  பணக் கூலியை மட்டும் பெற்றுக்கொண்டார். தற்பொழுது  இம்மரபின் மிச்சம் போன்று தென்னை மரங்களை அறுவடை செய்யும் போது  மரம் ஏறும் தொழிலாளிகள் அதற்கு கூலியாக சில தேங்காய்களை எடுத்துச்செல்வது நடைமுறையில் இருக்கிறது.  மானுட விழுமியங்களை விட பணம்  மேலானதென்ற நடைமுறை  மேலெழுந்து வந்த போது  பண்பாட்டிலிருந்து இத்தகைய மரபுகள் தேய்ந்தழிந்து போகின்றன. நுகர்வுப்பண்பாடு ஒரு பக்கம் அழிக்க முற்போக்கு முகாம்களும் மரபுகள் மீது  பொதுமைப்படுத்தப்பட்ட புறக்கணிப்பையே செய்கின்றன. மரபுகள்  பழைய காலத்து பிற்போக்குத்தனங்களானவை. பகுத்தறிவுச் சமூகத்தில் அவற்றுக்கு இடமில்லை.  என்பது அத்தரப்பின் வாதம். 

மரபை பகுத்தறிவு – அறிவியல் களத்தில் மட்டும் வைத்து எதிர்கொள்ளப்படும் போது ஏற்படும் அபாயங்களில் இதுவும் ஒன்று. மரபுகள்  கடந்தகாலத்திலிருந்து கைமாற்றப்பட்ட பிற்போக்குத்தனங்களையும் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எல்லாக்காலத்திலும் அதன் பிறிதொரு பகுதியில் இருந்து அதன் இறுக்கத்தை உடைத்து நகர்த்தும் செயலும் குரலும் இருந்துகொண்டே இருந்ததைக் காணவேண்டும். சமகாலத்தில் நடக்கும் அபத்தம் என்னவென்றால் அடிப்படைவாதிகள் மரபுகளில் இருக்கும் தங்களுக்குச் சாதகமான அம்சங்களைப் பாதுகாப்பதற்கு மரபுகளில் இருக்கக் கூடிய விழுமியங்கள், எதிர்க்குரல்களை நைச்சயமாக தங்களுக்கு ஏற்றால் போல் திரித்து எடுத்துக்கொள்கிறார்கள்.  சிந்திப்பவர்கள் யாரும் அதைக் காணாத போது அவர்களுக்கு அதுவொரு வாய்ப்புத்தான்.

மரபுகளை அவை கொண்டிருக்கின்ற பெரும்பான்மை ஒடுக்குமுறை இயல்போடு மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அதனுள்ளே இருந்த உடைப்போ கலகக் குரலோ கூட முக்கியமானதும். உரையாடலுக்குக் கொண்டுவர வேண்டியதுமாகும். யாழ்ப்பாணம் சாதிய இறுக்கம் மிக்க , கடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நிலம். ஆனால் இந்தியாவிலோ இலங்கையின் தமிழ், சிங்கள பகுதிகளிலோ இல்லாத நடைமுறை ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்தது.  அடிப்படையில் சாதி என்பதே பிறப்பினால் வழங்குப்படுவது. அதை மாற்றிக்கொள்ள முடியாது.  ஒருவர் தன் வர்க்கம், பாலினத்தைக் கூட மாற்றிக்கொள்ளலாம் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால் சாதிய நடைமுறைகள் அறுத்துச்சொல்லும் ‘தேசவழமை’  ’மஞ்சள் நீர் குடித்தல்’ என்றொரு சடங்கைக் குறிப்பிடுகிறது.  அது  ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் பிள்ளைகளை ‘தத்து எடுக்க’ முடியும் என்கிறது. மஞ்சள் நீர் குடித்தல் என்ற தூய்மையாக்கல் சடங்கின் மூலம் அதைச் செய்ய முடியும். இதில் சாதிய நடைமுறைகள், இருப்பினும், வேறெங்கும் இல்லாதவொரு நடைமுறை இங்கே எவ்வாறு உருவாகி வந்திருக்கும் என்ற கேள்வியும் அதனுள் இருக்கிறது.  நுணுகிப் பார்த்தால் சாதி என்பது பிறப்பினால்  அறுதியிடப்பட்டது, மாற்ற முடியாதது என்ற கோட்பாட்டின்  மீது மீறலொன்று  நிகழ்ந்திருக்கிறது இல்லையா?  சாதியின் மிகப்பெரிய அமைப்பைப்யும் அதிகாரத்தையும் உணர்ந்தவர்களுக்கு இம்மரபு/ சடங்கு ஆச்சரியப்படுத்தாமல் இருக்காது.

இன்றைக்குத் தமிழ்ச்சூழலில்  பகுத்தறிவுவாதத்தின் அடிப்படையில் செயற்படுபவர்களின் பெரிய விக்கிரகமாயிருப்பவர் பெரியார். தன் காலத்தில் கடுமையாக மரபு, சடங்குகளுக்கு  எதிராக எதிர்வினையாற்றிவர்.  செயற்பட்டவர். சாதியின் வேராகிய மதத்தை நாத்திகத்தையும் பகுத்தறிவையும் முற்படுத்துவதன் மூலம் எதிர்த்தார், சாடினார். அவருடைய காலத்தில் அவருடைய வழிமுறைகளுக்கு தேவையிருந்தது.  அவருடைய வழிமுறைகள்  எல்லாக்காலத்திற்கும் போதுமானவை, அல்லது அவையே இறுதியானவை என்பதான குரலே பெரும்பான்மை முற்போக்காளார்களிடம் இருப்பது. பெரும்பாலும் பெரியாரை மட்டுமே வாசிப்பதனாலும் வழிபடுவதனாலும் ஏற்படும் சமூக வலைத்தள நிலைமைகளில் இதுவும் ஒன்று. 

மரபு என்பது அடிப்படையில் கைமாற்றப்படுதலை தன் இயக்கு விதியாகக் கொண்டது. தொன்ம யாத்திரை போன்ற மரபுரிமைச் செயற்பாடுகளைப் முன்னெடுக்கும் போது  மரபு  மரபுரிமை என்ற இரண்டு சொற்பதங்களைப் பயன்படுத்தியிருந்தோம்.  சாதியம் போன்ற பழைய மரபுகளை விடுத்து அல்லது கண்டித்துக்கொண்டு, சமூக பண்பாட்டுச்சூழலுக்கான மரபுகளை இனம்கண்டு எடுத்து அவற்றின் மீது சனநாயகத்தின் வழிகளைச் செலுத்துவன் மூலம் அவற்றை மரபு – உரிமைகளாக நிலைப்படுத்துவது அதன் நோக்கம். அது தொன்ம யாத்திரையை முன்னெடுப்பதற்கு அடிப்படையான பண்பாட்டுப் புரிதலை வழங்கியது.  நாங்கள் பெரியார் பற்றிப் பேசிக்கொண்டே எப்படிக் கண்ணகை வழிபாட்டைப் பாதுகாக்கச் சொல்கிறோம் என்பது பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்தப்புரிதலை அடைய எப்பொழுதும் இலக்கியம்  எங்களுக்குப் பின்னணியாக இருந்தது. நாங்கள் பெரியாரை ஏற்றுக்கொண்டோம் ஒரு சிந்தனைப்பள்ளியின்  முன்னத்தியாக. அவரையே இறுதியானவராக என்றைக்கும் கருதியதில்லை. இதற்கு நாங்களொன்றும்  முன்னோடிகளில்லை.

Tho pa with Periyarபெரியாருடைய சிந்தனைப்பள்ளியில் இருந்து வந்தவர்களில் முக்கியமான ஆளுமையான தொ.பரமசிவன் போன்றவர்கள் மானிடவியல், சமூகவியல் ஆய்வுகளுக்குள் இறங்கும் போது  பெரியாரை  மீறிச்செல்கிறார்கள். பெரியார் நாத்திகத்தை முன்வைத்தார், கடவுள் மறுப்பைச் செய்தார் என்பதை நிதானமாக வியாக்கியானப்படுத்துகிறார்கள். குறிப்பாக நாட்டார் மரபுகளை பகுத்தறிவு – நாத்திகத்தின் பெயர்களால் கைவிட முடியாது. அங்கே இருக்கும் நம்முடைய பண்பாட்டு விதைகளும் அறிவுச்சேகரங்களும் முக்கியமானவை. மீள கண்டடையவும் ஆவணப்படுத்தப்படவும் வேண்டியவை என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். இன்றைக்கு தமிழ்ச் சூழலில்  முக்கியமான மானிடவியலாளர்கள் பலரும் பெரியாரின் சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள்  என்பது முக்கியமானது. அசலான குரு சீட மரபென்பது அதுதான். தத்துவத்திலோ சிந்தனைப்பள்ளியிலோ குரு அடுக்கிச் சென்ற கல் வரிசையில் நடந்து சென்று தன்னுடைய கல்லை அதன் மேல் வைப்பதே அறிவியக்கம் அசையும் முறைமையாகும்.  ஒவ்வொன்றையும் அறியும் போதும் அது முழுமையானதில்லை என்ற அணுகுதல் நமக்கு அவசியமானது. 

மரபுகளுக்குள் இருக்கும்  பண்படு நிலைகளின் மேல் தொடர்ந்தும் மதவாதிகளும், சாதிமான்களும்  உரிமையெடுத்துக்கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் முற்போக்குத்தரப்பாயிருக்கும் ஒரு பெரிய கும்பலினதும் சரி களத்தில் இறங்கி வேலை செய்யும் பெரும்பாலான பண்பாட்டு அமைப்புகளும் சரி முன்னெடுக்கும் தலையாய பணி பிற்போக்கு வாதிகளை எதிர்ப்பது சாடுவது,  அவ்வளவுதான். மேலதிக பயில்வுகளோ வாசிப்போ கிடையாது. சொந்தப்பார்வையொன்று கிடையாது. பெரியாரே வெங்காயம்! நான் சொல்கிறேன் என்று நம்பாதே சிந்தி என்றார்.  களத்தில் நின்றால் கூட நமக்கு அறிதலும் உரையாடலும் தான் முக்கியமானது. எனெனில் உடலை வலிமைப்படுத்திக்கொண்டு செய்யும்  புஜ பல யுத்தங்கள் பண்பாட்டில் கிடையாது. அறிவியக்கத்திலும் கிடையாது. 

முற்போக்குக் கூடாரத்தின்  தலையாய பிரச்சினை எல்லாவற்றையும் இருமை எதிர்நிலைகளிலேயே புரிந்துகொள்வது.  நல்லது கெட்டது என்பது மட்டுமே இருக்கிறது என்ற  நம்பிக்கை ஆழ வேரூன்றியிருக்கிறது. உண்டு அல்லது இல்லை.  நாத்திகம் அல்லது ஆத்திகம்.  உண்மையில் இது அடிப்படைவாதிகளுக்கு இருக்கக் கூடிய மனநிலை.  எந்த உழைப்பையும் கொடுக்காமல் அடைந்த  துரித அறிவு அவ்வளவுதான் இருக்கும். ஏனெனில் நாம் போரிடவே விரும்புகிறோம். போருக்குத்தான் இரண்டு தரப்புகள் போதுமானது.  சிந்தனைக்குத்தான் நூறு தரப்புகள் வேண்டும். ஒரு மரத்தின் அறுவடையில் சொந்தக்காரன், தொழிலாளி  மட்டுமல்ல பறவையும் உண்டு.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’