அனுபவத்தை விற்பவர்களும் வாங்குபவர்களும்

அனுபவத்தை விற்பவர்களும் வாங்குபவர்களும்

களிச் சுற்றுலாக்களுக்கும் பயணங்களுக்குமான வேறுபாட்டை பிரித்துக்கொள்வது முக்கியமானது. இன்றைக்கு சுற்றுலாக்கள் மனோரதியப்படுத்தப்பட்டு (Romanticise), அத்துறைசார் வணிக அமைப்புக்களால் சந்தைச் சூழலாக மாற்றப்பட்டுள்ளன. அரசுகளே முன் நின்று இவற்றை வணிக மயப்படுதுவதைக் காண்கிறோம். சுற்றுலாக்கள் மூலம் நம்மிடம் விற்கப்படுபவை டிக்கட்டுகளோ, பயணப் பொதிகளோ அல்ல அங்கே பிரதான சந்தைப்பண்டம், மக்களின் சுற்றுலா அனுபவம் தொடர்பான நம்பிக்கைகள் தான். குறிப்பாக இயற்கை, சூழல், மரபுரிமை, தொல்லியல் சார்ந்து சராசரிகளுக்கு அவர்களே உருவாக்கி அளித்த வெற்று அனுபவங்கள் பற்றிய கற்பிதங்களே வணிகமாக உருவடைந்துள்ளன. பிரசித்தி பெற்ற இடங்களைத் தவிர எதையும் காணத்துணியாதவர்களே சுற்றுலா சார் வணிகத்தின் பிரதான இரைகள். இயற்கையை இரசித்தல், வரலாற்றுப் பெருமை என்பவை எல்லாம் நவீன உலகில் பூதாகரமாக உருவாக்கி அளிக்கப்பட்ட முதலாளித்துவ புரட்டுகள். இவை வளர்ந்து நிற்பது சமூக ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில். ஏனெனில் இங்கே இரசனை என்பதும் அனுபவம் என்பதும் செல்வம், பகட்டு என்பவற்றின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.

ஒரு முன் வசந்தகாலத்தில், மிகிந்தலையில் இருக்கக் கூடிய நாகர் வழிபாட்டு எச்சங்களையும், பெளத்த தொல்லிடங்களையும் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். சுற்றிப்பார்த்து குறிப்புகளை எடுத்த பிறகு களைத்துப்போய் அங்கிருந்த பொய்கைகளில் நீந்திக்கொண்டிருந்த தங்க மீன்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு புலம்பெயர் தமிழர் கொஸ்ரி வந்து அவ்விடத்தில் போட்டோக்களை எடுத்துக்கொண்டிருந்தனர். இருபது பேர்வரையிருப்பார்கள். வழக்கமான அரைக் காற்சட்டை டாம்பீகங்களும் மிதப்பும். உடையல்ல பிரச்சினை. அந்த உடல்கள் தங்களை நடித்துக் கொண்டே இருப்பதில் சலிப்பதேயில்லை. அவர்களுடன் வந்திருந்த தொழில் முறை பயண வழிகாட்டி ஒருவர் சோர்வாக என்னருகில் வந்து அமர்ந்து கொண்டார். இளைஞர். கொழும்புத் தமிழர். இயல்பான முகமனுடன் சம்பாசித்தோம். சுற்றுலாத்துறையில் இளமானிப்பட்டமொன்றைப் பெற்றவர், நான்கைந்து வருடங்களாக தனியார் சுற்றுலா நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். தொல்லியல் இடங்களைப் பற்றிய போதுமான அறிதல் உள்ளவர். மணிநாகன் பள்ளி பற்றி அப்படி விலாவாரியாகச் சொல்லக்கூடிய நபர்களை பல்கலைக்கழகத்தில் கூட கண்டதில்லை. ஆள் ஆச்சரியப்படுத்தினார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவரை அழைத்து வந்த அந்த வெளிநாட்டுக் கொஸ்ரியைக் காட்டி. ஏன் அவர்களை விட்டு விட்டு வந்து விட்டீர்கள் என்று கேட்டேன். அவர் சலித்துக்கொண்டே, அவர்களுக்கு எந்த வழியால் ஏறி எந்த வழியால் இறங்குவது என்று காட்டினால் போதும் வேறேதும் அவர்கள் கேட்க விரும்புவதில்லை என்றார். ஒவ்வொரு இடத்திலும் அவற்றின் வரலாறு, தொல்லியல் பின்னணிகளைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே, அவர்கள் போட்டோக்களை எடுப்பதற்காக கலைந்து சென்று விடுவார்கள், அல்லது எதையாவது வாங்கிக் கொறித்துக்கொண்டு சும்மா பார்ப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தவை எல்லாம், எங்கே நின்று போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான். அல்லது இணைய வாசிகள் பரப்பிய பொய் தகவல்களும் வீண் பெருமைகளும் மட்டும் அவ்விடங்கள் தொடர்பில் அவர்கள் அறிந்திருப்பவை. ‘இதுவும் இராவணன் கட்டினதுதான் சிங்களவன் பிடிச்சிட்டான்’ என்பதான சராசரிகள். மலை உயரங்கள், பொய்கைகள், சிலைகள், பெரிய தூபங்கள், கோபுரங்கள் முக்கியமாகப் பெயர்ப் பலகைகள் முன் போட்டோ பிடித்துக்கொண்டால் போதுமானது, நாங்கள் இங்கே போனோம், என்பதை சமூக வலைத்தளங்களில் போட்டு கோட்டேசன் ஒன்றைத் தட்டிவிட்டால் அவர்கள் நிறைந்து போவார்கள்.. அதனுடைய வரலாறோ , மரபோ அவர்களுக்குப் பொருட்டில்லை. சில வேளைகளிற் சிறியவர்கள் ஆர்வமாகக் கேட்பார்கள், ஆனால் இடையில் `உனக்கேன் உதல்லாம் ?` என்று இழுத்துப்போய் விடுவார்கள் என்று அங்கலாய்துக்கொண்டார். கோவில், தெய்வ சிலைகள் என்றால் மட்டும் நின்று கும்பிடுவார்கள். அவர்கள் அவ்வளவுதான். காசிருப்பவர்களுக்கு அறிவோ இரசனையோ வருவதில்லை, அல்லது அவர்கள் தாங்கள் எதை இரசனை என்கிறார்களோ அதை உண்மையைப் போலாக்கிவிடுகிறார்கள்` என்று சொல்லிச் சிரித்தார்.

ஆனாலும் தனிப்பட்டு உங்களுடைய தொழில் ஈடுபாடுள்ளது இல்லையா, இயற்கையோடும், வரலாற்றுக் கதைகளோடும் புழங்கும் ஒரு தொழில் ?

‘ஆரம்பத்தில் அப்படித்தானிருந்தது. ஆனால் போகப்போக வீட்டிற்கு திரும்ப முடியாத அளவிற்கு வேலை அழுத்தும், இவர்களுடன் சேர்ந்து அலைந்து அலைந்து ஒவ்வொரு இடமும் கசந்து போய்விட்டது. புதிதாக போகும் இடங்கள் கூட அர்த்தமற்றவையாக மாறிவிட்டது, இயற்கை அழகை ரசிப்பது என்பது எவ்வளவு காசிருக்கு எண்டதைப் பொறுத்து மாறுது இல்லையா? இந்த மலை முகட்டில் நின்று பார்க்கும் சூரியோதயத்திற்கும் கண்டியிலோ, ஹட்டனிலோ மலைமீதுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலிருந்து பார்க்கும் சூரியோதயத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன, இல்லையா? என்று கேட்டார். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த வித்தியாசத்தை எது உருவாக்கியது அந்த வெய்யோனும் மலைகளுமா ? அப்படியென்றால் சுற்றுலாக்களின்,பயணங்களின் அர்த்தம்தான் என்ன?

ஏன் சுற்றுலா அல்லது பயணம்? என்று சிந்தித்து இருக்கிறீர்களா. பெரும்பான்மை சராசரி மனிதர்கள் ஏன் சுற்றுலா செல்கிறார்கள்? சதாசர்வமும் வேலை வேலை என்று இருக்கிறோம் ஒரு மன அமைதி வேண்டும், சலிப்பான வாழ்க்கையில் இருந்து கொஞ்ச நாளேனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லக் கூடும், இன்னொரு சாரார் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் `ஒரு எக்ஸ்பீரியன்ஸ், வாழ்க்கையைக் கொண்டாடப் போகிறோம்` என்று சொல்லக் கூடும். இன்னும் சிலர் தனிமையை நாடிச் செல்லக் கூடும், ஒரு அந்தியையோ, கடல் வெளியையோ பார்க்கும் போது அவர்களுக்கு அமைதி கிடைக்கிறது என்று சொல்லக் கூடும். இவை மூன்றிலும் உள்ள சாரம் அன்றாடத்தில் இருக்கக் கூடிய சலிப்பைப் போக்கிக் கொள்வதற்காக சுற்றுலாக்களை மேற்கொள்கிறார்கள் என்பதுதான். எனக்கு இங்கே ஒரு முரண் இருக்கிறது, நம்முடைய அன்றாட வாழ்க்கை அவ்வளவு துக்கமும் சலிப்புமாக இருக்கிறது, சரிதான், ஆனால் சுற்றுலாக்களும் நாம் அவற்றுக்கு கொட்டும் பெருந்தொகை பணமும் உண்மையில் அத்துக்கங்களைப் போக்கின்றனவா? மீண்டும் நம்முடைய நடைமுறை வாழ்வுக்கு திரும்பும் போது நம்முடைய அன்றாடத்தை மேம்படுத்தவோ, அல்லது பிரச்சினைகளைக் கையாளவோ அப்புத்துணர்வூட்டும் சுற்றுலாக்கள் உண்மையில் உதவுகின்றனவா? இரண்டாவது சுற்றுலாக்களின் அனுபவம் என்பது எதனை?

பெரும்பான்மையோர் சுற்றுலாவின் அனுபவம் பற்றிக் கேட்கும் போது, என்ன சொல்கிறார்கள் என்று அவதானித்திருக்கிறீர்களா? அவர்கள் சொல்வதெல்லாம் தங்களைப் பற்றி மட்டும்தான். அவர்கள் அவற்றை நீண்ட காலத்திற்கு நினைவில் கூட வைத்திருக்க மாட்டார்கள், அவர்களிடம் எஞ்சுவது போட்டோக்களும் போனோம் என்ற தகவல்களும். ஏனென்றால் இங்கே பெரும்பான்மை சராசரிகள் தங்களின் மனத்திடம் இருந்து தப்பிக்கவே சுற்றுலாக்களுக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கு தனிப்பட்ட நோக்கங்களோ பார்வைகளோ கிடையாது, அவர்கள் மந்தைக்கூட்டங்களாகி சில நாட்கள் `பரோல்` கிடைத்த சிறைக்கைதிகள் போலே சுற்றுலாவிற்குச் செல்கிறார்கள். அதனாலேயே நான் போரடிக்கிறது வா எங்கையாவது போவம் என்பவர்களுடனோ, மனமறிந்த துயரையோ சலிப்பையோ தற்காலிகமாக தவிர்க்க சுற்றுலாவிற்கு அழைப்பவர்களுடனோ செல்வதை எப்பொழுதும் தவிர்த்து விடுவதுண்டு. ஆகவே நான் சுற்றுலாக்களுக்குச் செல்வதில்லை. பயணங்களையே விரும்பிச் செய்வதுண்டு. அதில் கொண்டாட்டமும் களியும் உண்டு ஆனால் அது அப்பயணத்தின் பிரதான விழைவல்ல. சலிப்பாக இருக்கின்றது என்று கிளம்பிய சில பயணங்கள் அவ்வளவு கசப்பைத் தந்தன. அர்த்தமற்று நினைவழிந்து போயின. அன்றாடம் சலிப்புடனும் துன்பத்துடனும் வாழ்கிறோம் என்றால் முதன்மையாக அவற்றைப் போக்கிக் கொண்டு அன்றாடத்தை மகிழ்சியாகவும் அர்த்தம் பொதிந்த செயலூக்கம் மிக்கதாயும் மாற்றுவதற்கு அல்லவா முயல வேண்டும்? வாழ்க்கையில் இருந்து தப்பிச்செல்வது என்பது எவ்வளவு பெரிய மடைமை? சொந்த உள்ளத்திற்கும் வாழ்விற்கும் அஞ்சுவதும் நோயல்லவா? இப்பொழுதெல்லாம் உச்ச மகிழ்சியும் செயலூக்கமும் கொண்டு இயங்குவதன் ஒரு பகுதியாகவே பயணங்களை மாற்றிக்கொண்டுள்ளேன். அத்தோடு யாருடன் பயணிப்பது என்பதையும் விதந்து கவனிப்பேன். சமதையாக உரையாடலும் கொண்டாட்டமும் உடைய நண்பர்களை அடைவது என்பது ஓர் இரட்சணீய யாத்திரீகம். முன்பெல்லாம், இவர்களுக்கு எல்லாம் புரிகிறது, செயலூக்கத்தோடு இருக்கிறார்கள், சிந்திக்கிறார்கள் என்று நினைத்து ஒரு சராசரி மந்தைக்கூட்டத்தில் இருந்து கதைத்து நாட்களை வீணாக்கி இருக்கிறோம் என்று பின்னர்தான் தெரிந்தது , அருந்தியதையும் எரிந்ததையும் தாண்டி அங்கே எதுவும் நிகழவில்லை. வாசிக்கிறோம் வாழ்க்கையைக் கொண்டாடுகிறோம் என்று தங்களை ஏமாற்றிக்கொண்டவர்களுக்கு அனுதாபம் தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. அதனால், சமதையாக உரையாடலும் ஆர்வமும், செயலூக்கமும் மிக்க நண்பர்களுடனேயே பயணம் செய்வது என்ற தீர்மானத்திலிருக்கிறேன். அது இனியதான ஒன்றும் கூட. ஆகவே இரண்டு கேள்விகளை எழுப்பிக் கொள்வதுண்டு. ஏன் அங்கே போக வேண்டும்? யாருடன் போக வேண்டும்?

இலங்கையில் முதன்மையான சுற்றுலாத்தலமாகவும் தொல்லியல் மற்றும் மரபுரிமைத் தளமாகவும் உள்ளது சிகிரியா. சிகிரியாவிற்கு அண்மையில் பிந்துரங்கல என்ற சிறு குன்றும் தற்பொழுது அதனளவு பிரசித்தமான சுற்றுலாத்தலம். சூரிய உதயத்தில் சிகிரியாவை அக்குன்றில் நின்று பார்க்கும் போது அதன் வனப்பும் பேருருவும் கண்கவரும் வண்ணம் இருக்கும். பலரும் அங்கு சென்று படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கண்டிருப்பீர்கள். அது சிகிரியாவைப் பார்க்கும் ஒரு சிறு குன்று என்பதைத்தாண்டி அதைப்பற்றி அங்கு சென்றவர்கள் யாரும் சொல்லிக்கேட்டிருக்கிறீர்களா?

அக்குன்றின் பெயருக்கு என்ன அர்த்தம் யாராவது சொல்லியிருக்கிறார்களா, அதன் தொல்கதைகளையோ, அங்குள்ள குகைகள், பிராமிக் கல்வெட்டுகள் பற்றியோ யாரும் ஒரு வார்த்தை பேசியோ , கண்டதாகக் குறிப்பிட்டோ பார்த்ததில்லை. பிதுரகல என்பது இக்குன்றின் முன்னைய பெயர். தற்போது இம்மலை பிதுரங்கல என அழைக்கப்படுகிறது. இம்மலையில் சிகிரியாவை கோட்டையாகவும் கலைக்கூடமாகவும் ஆக்கியவன் என்று வரலாறு குறிப்பிடும் காசியப்பன் தன் தந்தையான மன்னர் தாதுசேனனுக்கு பிதிர்க்கடன் செய்தான் என்பது இதன் தொல்கதைகளில் ஒன்று. இதனால் இம்மலை பிதிர்மலை எனப் பெயர் பெற்று, அதுவே சிங்கள மொழியில் பிதுரகல என அழைக்கப்பட்டது. காசியப்பனின் பின் அரசுகட்டில் ஏறிய முகலனும் இம்மலை அடிவாரத்தில் தமையன் காசியப்பனின் உடலை எரித்து, தனது கடமைகளை நிறைவேற்றி, இவ்விடத்தில் காசியப்பனுக்கு ஓர் சமாதியை அமைத்தான் எனக் கூறப்படுகிறது. இம்மலையின் வடக்கு மற்றும் மேற்குப் பக்க அடிவாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட இயற்கையான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் செதுக்கல்கள் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு குகைகளில் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சிவவழிபாடு, நாகவழிபாடு, கண்ணன் அல்லது கணேசன் வழிபாடு ஆகியவை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் முக்கிய தகவல்களைப் பகிர்பவை. மந்தனா தேவியால் பெளத்த சங்கத்திற்கு தானமளிக்கப்பட்ட குகை என்ற குறிப்புடனும் பிராமிக் கல்வெட்டுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. இவை சிகிரியாவின் அழகை காணவும் படம் பிடிக்கவும் மட்டும் செல்லும் சுற்றுலாப்பயணிகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. இதுதான் அடிப்படையான வேறுபாடு.

ஓர் எழுத்தாளனாக , வரலாற்று மாணவனாக ஓரிடத்திற்கு செல்வதற்கு தீர்மானிக்கும் போது அவ்விடத்திலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்ற அடிப்படையான தேவையையும் அறிதல் நோக்கையும் உண்டாக்கிக் கொள்வதுண்டு. இப்பொழுது உள்ள இணைய வசதிகளால் சிறிய ஆய்வைக் கூட செய்துகொள்ளலாம். சொல்லப்போனால் என்னுடைய அறிதலுக்கான ஆர்வமே பயணங்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் நோக்கமும் தேடலும் மாறுபடலாம்.  முன்பொரு முறை கண்டியில் ஒரு  ஹங்கேரியரைச் சந்தித்தேன். சின்ன கண்ணாடிப் போத்தல்களுக்குள் மண் மாதிரிகளைச் சேகரித்துக்கொண்டிருந்தார். தான் போகும் நிலங்களின் மாதிரிகளைச் சேகரிப்பது அவருடைய வழக்கம் என்றார். பொழுது போக்கா என்று கேட்டேன். இல்லை  பயணப்படுவதே அதன் பொருட்டுதானென்றார்.  வாழ்க்கைக்கு இயல்பிலேயே எந்த பொருளும் கிடையாது . நாமாக ஏற்படுத்திக்கொள்வதுதான்.

சென்ற வருட நடுப்பகுதியில் இருந்து மேற்கொண்ட முக்கியமான உள்நாட்டுப்பயணங்களில் இருந்து முன் எப்போதுமில்லாத செயலூக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்து கொண்டே இருக்கிறது. கடந்தவருடம் மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவு நினைவுகளை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் இலங்கை முழுவதும் பல தரப்பினரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அக்காலதில் அப்புத்தலைக்கு (ஹப்புத்தள) சென்று இலங்கைக்கு அம் மக்களை அழைத்து வரும் தீர்மானத்தைக் கொண்டு வந்த லிப்டனின் தோட்டத்தையும் அவர் அமர்ந்திருந்த பிரசித்தமான லிப்டன் இருக்கையையும் பார்க்கச் சென்றிருந்தோம். அப்பயணத்தைப் பற்றி பயணக் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறேன். (ஒப்பாரிக்கோச்சி)அதன் பின்னர் என்னுடைய நாவலுக்காக காலி, மிரிச போன்ற கீழ் கடற்கரை நகரங்களைப் பார்க்கச் சென்றிருந்தோம், அடுத்து மலையடிவாரங்களும் சுரங்க ரயிலும் நீர்வீழ்ச்சியும் கொண்ட இஹல கோட்டேவிற்கும் , பொலநறுவையில் இருக்கும் ஹந்தஹல (Handagala ancient cave temple) என்ற சங்கத்திற்கு தானமளிக்கப்பட்ட பெளத்த குன்று – குகைப்பள்ளி ஒன்றிற்கும் சென்றிருந்தோம். இவை அனைத்தும் மிகவும் குறைவான செலவுகளுடன் பகிரப்பட்ட ஓர் பயணங்கள். முக்கியமாக இவற்றுக்கு நோக்கங்களும் சிறிய ஆராய்ச்சியும் பின்னணியாக இருந்தன.  அரசாங்க பேரூந்துகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் சென்று வந்தவை. சொகுசு ஒரு வகையில் உற்சாகமின்மையையும் அசட்டைத் தனத்தையும், மனக்குவிதலின்மையையும் வழங்கக் கூடியது. ஓர் யாத்திரீகனுக்குரிய பாவனையாவது இருக்க வேண்டுமல்லவா?

Handagala ancient cave temple

நாம் எங்கே போனாலும் எங்கே அமர்ந்தாலும் எங்களில் இருந்துதான் எதையும் காண்கிறோம். காட்சியில் என்ன இருக்கிறது? நாம் என்னவாக இருக்கிறோமோ, எவ்வாறு தயாராக இருக்கிறோமோ, அதையே அடைகிறோம், அதையே காண்கிறோம். இயற்கையைப் புரிந்துகொள்வதற்கும் , சரி புது மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், உரையாடவும், அறிந்தவற்றைத் தொகுத்துக்கொள்ளவும் முதன்மையானது அறிதலே. அழகைக் காண்பதற்கும் முதன்மையான வழி அறிதலே. முக்கியமாக பிறர் சொல்லி, பிறர் பார்த்து , மீண்டும் மீண்டும் இதுதான் அழகு, இதுதான் இயற்கை என்று சொல்லிச் சலித்தவற்றையே மீண்டும் காண எதற்கு அங்கே போய் அமர்ந்திருக்க வேண்டும்? நாம் காணப்போகும் கடலோ , அந்தியோ பிறிதொன்றாக இருக்க வேண்டாமா? அதனைக் காணத்தான் அறிதல் கற்பனையை , தர்க்க புத்தியை, உள்ளுணர்வை , தொகுக்குமாற்றலை வழங்கியிருக்கிறது. அறிதலுடன் இணையக் கூடிய அழகியலைத் தானே இலக்கியத்திலும் கலைகளிலும் அடிப்படையாக ஏற்கிறோம். நம்முடைய பயணம் வெறும் ஊர் சுற்றுகைதானா? நம்மை பிரஸ்தாபித்துக் கொள்ளவும், பொழுதுபோக்கவும் தானா? நம்முடைய நேரமும் உழைப்பும் அவ்வளவு அற்பமானதா ? இதைக் கேட்டுக்கொள்ளுங்கள். இயற்கையை இரசிக்க வேண்டும்தான், நிலக்காட்சிகளைக் காண வேண்டும்தான், அதற்கும் உழைப்பும் பயிற்சியும் வேண்டும். ஓர் குழந்தையைப் போல் அதைக்காண வேண்டும் என்றால்  அதன் பொருட்டு ஓர் பார்வை உருவாகி வராமல் அந்நிலை சாத்தியமேயில்லை. பயணங்களுக்கு உங்களுக்கு என்று தனியான இரசனைகளை, நோக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளப்பாருங்கள். திட்டமிடுங்கள்,  அறியுங்கள். இலக்கியத்தில் பயண இலக்கியங்கள் முக்கியமானவை.  வரலாற்றில் நிற்கும் பயணக் கதைகளைக் கேட்டிருப்பீர்கள். அவை ஒவ்வொன்றும் ஏதையோ தேடிச்செல்லுபவர்கள் பற்றியவைதான் இல்லையா? அவை எவற்றை நமக்குச் சொல்ல வருகின்றன? ஏன் மானுட குலம் அவற்றைத் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கின்றது ? வாழ்க்கையை பயணமாக உருவகிப்பது எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மானுட தத்துவத்தில் நிலைபெற்றிருக்கிறது.  வெறும் சுற்றுலாக்களை யாரேனும் கதைகளாகச் சொல்ல முடியுமா? வெறும் களியாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் சராசரிகளில் இருந்து மீண்டெழ வேண்டும்.  வெளியிலே நிகழும் பயணம் உள்ளேயும் நிகழ வேண்டும். எல்லாப் பயணக் கதைகளும் அகப்பயணங்களைப் பற்றியவைதான். புற உலகு அங்கொரு படிமமாகவோ காட்சியாகவோ மட்டுமே விரிந்து அப்பயணத்தை விளக்குகிறது.

நல்ல பயணிக்கு/பயணிகளுக்கு பணமோ பொருளோ மிகையாகத் தேவையில்லை, ஓர் அந்தியை நட்சத்திர விடுதியில்தான் நின்று காண வேண்டும் என்பதில்லை. விரலுக்கேற்ற வீக்கம்தான். பயணம் செல்வத்தினால் உருவாக்குவதில்லை. அது அகத்தினது செல்வம். வாழ்கையே அதன் சொகுசு.
ஓர் பயணத்தில் நீங்கள் மனத்தை விலக்கத் தேவையில்லை, அதை அருகமர்த்தலாம், அறியலாம், ஊழ்கத்தில் அமரலாம். கொண்டாடலாம், பாடலாம், ஆடலாம்,  நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவே வெளியிலும் இருக்கப் போகிறது. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்` என்றொரு சித்தர் பாடல் உள்ளது. இந்த முதலாளித்துவ நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களும் தங்களின் இலாபத்தைப் பெருக்க உருவாக்கிய சுற்றுலா மாயைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.   அதைப்பார்த்தாலே நடுத்தர, அடித்தட்டு மக்கள் பயணமெல்லாம் பெரிய பொருட் செலவுள்ளது என்றுதான் நினைப்பார்கள். அப்படியொரு மனநிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  பல லட்சம் செலவு செய்து சுற்றுலா செய்யும் எத்தனை நூறுபேரை சமூக வலைத்தளங்களில் காண்கிறோம்.   பகட்டும் தம்பட்டமுமே மிஞ்சுகிறது.

உங்களுக்கு முருகனும் விநாயகரும் மாம்பழத்திற்கு உலகைச் சுற்றி வந்த கதை தெரியும் தானே?

Be like விநாயகர்.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’