நண்பர்களுடன் யூலை முடிவில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு கண்டியில் சென்று இறங்கினோம். நீளமாக திட்டமிடப்படாத அதிகம் பணச்செலவற்ற எக்களுடைய வட்சப் குறூப்பின் பெயரைப்போல அதுவொரு ‘கல்விச்சுற்றுலா’ அவ்வளவுதான். முதலில் கண்டி பிறகு ஹட்டன் மிகுதி எல்லாம் அந்தந்த நேரத்து நியாயம் என்று விட்டு விட்டு புறப்பட்டிருந்தோம். பொதுப்போக்குவரத்தின் மூலம் பிரயாணப்படுவது என்று திட்டமிட்டிருந்தோம். இம்முறை மலையகத்திற்கு செல்வதில் தனிப்பட்டு என்னை ஆர்வப்படுத்தியது மலையக மக்கள் இந்த நாட்டிற்கு தோட்டத்தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டு இருநூறு வருடங்கள் கடந்திருந்த நிகழ்வுகளும் சமநேரத்தில் நடந்து கொண்டிருந்ததுதான். கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் , பண்பாட்டு அமைப்புக்களில் இயங்குபவர்களாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அங்காங்கே விழாக்கள், கண்காட்சிகள், பேரணிகள் ஏற்பாடாகியிருந்தது வடக்கு கிழக்கிலும் நிகழ்வுகள் , பேரணிகள் நடைபெறும் என்ற அறிவிப்புக்களையும் அவதானிக்க முடிந்தது. இன்னொரு பக்கம் பெருந்தொற்றுக்காலத்திற்கும் பின்னர் ஏற்பட்ட நாட்டின் பொருளாதார பெருமந்தம் , போராட்டங்களின் பின்னர் மெல்ல மெல்ல உலகமெங்குமிருந்து சுற்றுலாப்பயணிகளும் புலம்பெயர்ந்த மக்களும் நாட்டுக்கு திரும்பும் விடுமுறைக்காலமும் இதுதான். யாழ்ப்பாணத் தமிழில் சொன்னால் ‘நல்லூர் சீசன்’ . நாடு முழுவதும் சுற்றுலாப்பயணிகளை வழமையை விடவும் நாம் இன் முகத்தோடு வரவேற்கவேண்டிய காலம் என்பதால் அரசாங்கம் விளம்பரங்களைத் துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறது.
கடைசியாக கண்டிக்குச் சென்றது சென்றவருடம் இறுதியில்.சமூகவியல் முதுமானி பட்ட இரண்டாம் செமிஸ்ரர் பரீட்சைகளின் பின்னர் கண்டிக்கு போகவில்லை. பட்டப்படிப்பு தொடங்கிய காலத்தில் புதிதாக ஏற்பட்ட நண்பர்களால் கண்டியின் அழகைத்தாண்டிய நிகழ்வுகளும் ஞாபகங்களும். யாழ்ப்பாணத்தில், வன்னியில், மன்னாரில், புத்தளத்தில் என்று கொஞ்சக்காலத்தில் நிறைய இடத்தில் இடம்பெயர்ந்து சென்ற பொழுதெல்லாம் அந்தந்த இடங்கள் நெருக்கமாக மாற எடுத்த காலத்தை விட கண்டி குறைவாகவே எடுத்துக்கொண்டது. அடிக்கடி ‘ Kandy is not a place it’s a person’ என்பேன். பெளதீகச் சூழலாலும் காலத்தாலும் ஓர் இடத்துடன் நாம் நெருக்கமாவதைக் காட்டிலும் நபர்களுடனான நெருக்கம் அவர்களின் இடங்களையும் நம்முள் நிறைத்துவிட்டுப் போய்விடுகிறது.
கண்டியில் இருந்து ரயிலில் புறப்பட்டு கல்பொடவில் இறங்கி அங்கிருந்த நீர்வீழ்ச்சிக்குப் போவதுதான் முதல்நாள் எங்களிடம் இருந்த உறுதியான ஒரே திட்டம். காலையில் ஓட்டோ ஒன்றைப்பிடித்த போது, ரயிலைப் பிடிப்போமா என்ற சந்தேகத்தில்தான் புறப்பட்டோம். ஓட்டோக்காரர் பேச்சுக்கொடுத்தார். சட்டென்று ‘நீங்கள் இந்தியாவோ ?’ என்று கேட்டார். நாங்கள் யாழ்ப்பாணம் தான் என்றோம். எங்களில் சிங்களம் தெரிந்த நண்பர்கள் நன்றாகத்தான் சிங்களத்தில் அந்த சம்பாசணையை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் ஏன் அந்த மனுசன் இந்தியாவோ எண்டு கேட்கிறார் என்று சிங்களத்தில் பேசிய நண்பர் கேட்கத்தான் அவர் நாங்கள் பேசும் தமிழைக் கொண்டு எங்களை ’இந்தியாக்காரர்கள்’ என்று அழைக்கிறார் என்று புரிந்தது. ‘அவை ஒண்டும் இந்தியாக்காரர்’ இல்லை என்று கத்திச் சொல்லியிருக்கலாம். அல்லது பகிடி பகிடியாககூட அழுத்திச்சொல்லி இருக்கலாம். ஒரு மாபெரும் கூட்டு மனநிலையின் கண்ணுக்குத்தெரிகின்ற எளிய விளைவுதான் அவரும். தனிநபர்கள் மீது பாய்ந்து ஒன்றும் மாறப்போவதில்லை இல்லையா?
அந்த மனிதர் எங்களைக் கண்டிக்குப் புதிதென்று நினைத்துக்கொண்டாரோ என்னவோ பத்து நிமிடம் கூட இல்லாத அந்த ரயில் நிலையப் பயணத்திற்கு 1300 கேட்டார். என்னுடைய சிங்களம் தெரிந்த நண்பர் சிங்களத்தில் குரலைக் கடுமையாக்கிக் கொண்டு அவரை அதட்டி நியாயமான தொகையொன்றைக் கொடுத்து அனுப்பினார். இந்த ஆட்டோக்காரர்கள் தமிழ் சினிமாவில் வரும் நல்ல ஆட்டோக்காரர்களாக இருக்கமாட்டார்களா? ஓட்டோக்களின் பின்னால் எழுதியிருக்கும் நேர்மை, அன்பு, காதல், நட்பு , பாசம் மற்றும் தாய்ப்பாசம் பற்றிய பொன்மொழிகளுக்கு கொஞ்சமேனும் விசுவாசமாக இருக்கவேண்டும். இடம், மொழி தெரியாத வெளியூர்க்காரர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் இன மத பேத மின்றி காசைப்பிடுங்குவது வாடிக்கையாகிவிட்டது.
கண்டி புகையிரத நிலையத்தில் இறங்கி அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் காலை உணவை முடித்துக்கொண்டோம். ரெயில் வரும் வரை சுற்றுலாப்பயணிகளையும் அந்த பழைய ரயில் நிலையத்தையும் வேடிக்கை பார்த்தோம். கண்டிப்புகையிரத நிலையம் இலங்கையில் உள்ள மிகப்பழைய புகையிர நிலையங்களில் ஒன்று. கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை 1867 இல் நடந்தது. முதலில் மலைநாட்டில் உற்பத்தியான கோப்பியை கொழும்புக்கு எடுத்துச்செல்லவும் பின்னர் தேயிலை, இறப்பர் போன்ற அறுவடைகளை எடுத்துச்செல்லவுமே ரெயில் வண்டிகள் கண்டிக்கு வந்தன. உலகம் முழுவதும் ஐரோப்பிய கொலனியர்களின் பிரதான உற்பத்திக்கருவிகளில் ரயிலுமிருந்தது. இலங்கையில் போர் நடந்த தமிழ்ப் பிரதேசங்கள் தவிர மிகுதி இரயில் நிலையங்களின் கட்டட அமைப்பும் வெளியும் கொலனித்துவ காலத்தைக் காட்டக்கூடியன. பெரும்பாலானவை அதே கொலனிய மரபுகளுடன் பேணப்படுகின்றன. தற்பொழுது கொழும்பு – கண்டி ரெயில், கண்டி – பதுளை ரயில் தடங்கள் இலங்கையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா ரயில்கள். அழகிய பெரிய மலைகளைக்கடந்து , காடுகளைக்கடந்து செல்லக்கூடியவை. இங்குள்ள ரயில் பாதைகள் பெரிய நீளமான குடையப்பட்ட மலைச்சுரங்கப்பாதைகளைக் கொண்டவை. நீங்கள் கூகுளில் அல்லது சமூக வலைத்தளங்களில் இலங்கையின் சுற்றுலாத்தலங்கள் பற்றித்தேடும் போது இவ் ரயில்களின் வாசல்களில் தொங்கியபடி வெளிநாட்டுக் காதலர்கள் சாகசமாக முத்தமிட்டுக்கொள்ளும் படங்களைக் காணலாம். இவ் ரயில் வண்டிகள் பயணிக்கும் போது எதிர்ப்படும் சுரங்கங்களின் இருட்டில் பெட்டிகளில் மகிழ்ச்சியாக கூச்சல் எழுப்புவது ஒரு சடங்கைப் போன்றது என்று சொல்லிக்கொண்டே நாங்களும் ‘கூ’ அடித்தோம். ரயிலின் ஏனைய பெட்டிகளிலும் எங்களைப்போல ஏராளம் பேர் இருந்தார்கள். ஆண் பெண் அடையாளம் தெரியாத ‘கூ’ என்ற சத்தம் ஒவ்வொரு சுரங்கத்திலும் துண்டு துண்டாகக் கொண்டாடப்படும். சுரங்கங்கள் கடக்கும் போது அந்த மீ இயல் நிகழ்வு சட்டென்று ஓய்ந்து மக்கள் அன்றாட பயணிகளின் முகங்களுக்குத் திரும்புவார்கள். இவற்றோடு ஒவ்வொரு முறையும் ரயில் சுரங்கங்களுக்குள் செல்லும் போதும் கவியும் இருட்டில் காதலர்கள் முத்தமிட்டுக்கொள்ளலாம் என்பதான சடங்குகளும் மேலதிகமாக இருப்பதை விடயம் அறிந்த நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
சில மாதங்களின் முன்பு தொகுப்பு வேலை ஒன்றிற்காக மலையகத்தில் இருந்து எழுதிய எழுத்தாளர்களின் கதைத்தொகுப்புகளை நூலகம். கோமில் தேடி வாசித்துக்கொண்டிருந்தேன். மு. சிவலிங்கத்தின் ‘ஒப்பாரிக் கோச்சி’ என்ற தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் உள்ள ஒரு முக்கியமான கதை ‘ஒப்பாரிக் கோச்சி’’. பேச்சுவழக்கில் ரயிலை ‘கோச்சி’, கரிக்கோச்சி என்று அழைப்பர். Coach என்ற ஆங்கில அடியில் இருந்து தமிழாக்கி உருவாக்கப்பட்ட சொற்கள் இவை. ஒப்பாரிக்கோச்சி என்பது மலையக மக்களிடையே பிரபலமான ஒரு ரயில். இந்திய வம்சாவழித்தமிழர்களின் பிரஜா உரிமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சிறிமா சாத்திரி ஒப்பந்தத்தின் பின்னர் இவ் ரயில் பிரபலமானது.சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் பின்னர் மலையகத்தில் இருந்து தலைமன்னாருக்கு மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மக்களை ஏற்றிச்சென்ற ரயில். அத்தனை வருடங்கள் அந்த மலைகளோடு பிணைந்து விட்ட மக்கள் நாடற்றவர்கள் என்று விரட்டப்பட்ட கொடுமையும், துயருமாய் கைவிடப்பட்டவர்கள்போல் இங்கே இருப்பவர்களைப் பிரிந்து செல்லும் போது எழுந்த ஒப்பாரிக் குரலோடு ஆட்களைச் சுமந்து சென்ற ரயில்களை இன்றைக்கும் இம்மக்கள் ஒப்பாரிக் கோச்சி என்று நினைவு கூருகின்றார்கள். நரியூரில் இருந்து புலியூருக்கு போனகதையாக ஒவ்வொரு முறையும் இலங்கை – இந்திய அரசுகள் இம் மக்களுக்கு இழைத்த வரலாற்றுக் கொடுமைகளில் இதுவும் ஒன்று. கொலனிய , கொலனித்துவத்திற்கு பின்னரான அரசுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இம் மக்கள் ‘கூலிகளே’ அன்றி அவர்களின் உரிமை, வாழ்வு முறை, சுயமரியாதை என்பவற்றில் துளிகூட அக்கறையிருந்ததில்லை. இலங்கையின் அரசியல் பகடையில் சென்ற நூற்றாண்டில் அதிகம் உருண்டது இம்மக்களின் வாழ்க்கைதான். வீடு என்பது எங்கே நமது மூதாதைகள் எங்கே பிறந்தார்கள் என்பதில் இல்லை. அவர்கள் எங்கே நிலைப்பட்டார்கள், எந்த நிலத்துடன் பொருந்தியிருந்தார்கள், முக்கியமாக எந்த நிலத்தில் தங்களின் உழைப்பைச் செலுத்தினார்கள், எந்த இடத்தில் தங்களின் தெய்வங்களை இருத்தினார்கள், எங்கே காதலித்தார்கள், எங்கே குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், என்பதில்தானே இருக்கிறது.
இரயிலில் சுற்றுலாப்பயணிகளினதும் உள்ளூர் பயணிகளினதும் நெரிசலோடு கல்பொடவில் வந்திறங்க மதியமாகிவிட்டது. ரயிலில் இருந்து இறங்கியதும் தண்டவாளங்களில் நடந்து வந்த சேலை உடுத்தி பெரிய பொட்டும் மஞ்சள் கயிறுகளும் அணிந்த மூத்த பெண்கள் தென்பட்டார்கள். மலையகத்தில் இருக்கும் மூத்த பெண்களின் வாய் மொழியின் வாஞ்சை நன்றாகவிருக்கும். எனக்கு மட்டுமல்ல வேறு நண்பர்களும் மலையக கிளைத்தமிழின் வாஞ்சை பற்றி அதிகம் சிலாகித்துக் கேட்டிருக்கிறேன். உங்களை ஒரு அந்நியராக அவர்கள் உணர்வதே இல்லை. குறிப்பாக வயதான பெண்கள். எனக்கு கண்டியில் ஒரு தோழியிருந்தாள். ஒன்றாகப்படித்தோம். நல்ல வாசகி ஆங்கிலம், தமிழ் , சிங்களம் மூன்றிலும் வாசிக்கவும் சரளமாகப் பேசவும் கூடியவள். அவளிடம் இருக்கும் கூர்மையான அவதானங்கள் பல முறை என்னை உலுக்கியதுண்டு. அவள்தான் கண்டியை எனக்கு அவ்வளவு நெருக்கமாக்கியது. நன்றாக உடுத்துவாள். தைரியமும் சுயமரியாதையும் கொண்ட பெண். கண்டியில் இலங்கையின் ஏனைய பாகங்களைப்போல ‘வாகபிசம்’ போன்ற அடிப்படைவாதங்கள் புரையோடியிருப்பது குறைவு. அங்குள்ள முஸ்லீம் மக்களின் நடை உடை பாவனை தனித்துவமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் விரும்பியதை அழகாக உடுத்துவார்கள். அவர்களின் அலுமாரிக்குள் ஆண்கள் மூக்கை நுழைப்பது குறைவு போல என்று நினைப்பேன். இவளும் நேர்த்தியாக உடுத்துவாள். தான் என்ன உடுத்துகிறேன் என்னவாக இருக்கிறேன் என்பதில் அவளுக்கு இருந்த தெளிவு பலமுறை ஆச்சரியப்படுத்தியதுண்டு. ஆழமாகச் சிந்திக்கவும் உரையாடவும் கூடியவள். அவள் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்திருந்தாள். மலையகத்தில் உள்ள சிறு சிங்கள, தமிழ் கிராமங்களில் வேலை செய்த அனுபங்களைப் பகிர்ந்து கொள்வாள். இவள் பொதுவேலைகளுக்காக , ஆய்வுகளுக்காக செல்லும் போது அந்த மக்கள் இவளை எதிர்கொண்ட விதத்தை பூரிப்போடு சொல்வாள். பாத்திமாக்கள் இப்படி வருவதில்லையே ? என்று அவளை ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்தோடும் நேசத்தோடும் இவளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் போது அவர்களின் அன்றாடத்தில் உள்ள பிரச்சினைகளை,அவர்களின் வாழ்க்கையை, மகிழ்ச்சியைக் கொண்டாட்டங்களைப் பற்றிய அவளுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வாள். அன்றைக்கு ரயிலில் இருந்து இறங்கி கல்பொடவில் நீர்வீழ்ச்சி பற்றி அவர்களிடம் கேட்டபோது அதற்கும் அவ்வளவு வாஞ்சையாகப் பதில் சொன்னார்கள். ‘கவனமா பெய்டு வாங்க’ என்று வசனத்திற்கு வசனம் திரும்பத்திரும்பச்சொன்னார்கள். கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு உருவாகி வரும் பிறர் பற்றிய கரிசனைகள் தனிமனித இயல்புகள், அபத்தங்களுக்கு அப்பாற்பட்டு ஓர் கூட்டு மனநிலையினால் உருவாகியவை. அவற்றில் தாய்மையின் வேர்கள் இருக்கக் காணலாம். அது வெறுமனே குசலம் விசாரிப்பாக இருப்பதோ, அந்நியர்களை ஆச்சரியமாகப் பார்ப்பதோ இல்லை. அது இந்த மனித விலங்குகள் கூட்டாக வாழ ஆரம்பித்த பிறகு திரண்டு எழுந்த ஓர் மனநிலை. நகரமயமாக்கப்பட்ட அல்லது நகரங்களுக்கு நெருக்கமாக்கப்பட்ட ஊர்களில் அரூபமாக இருக்கும் ஒரு வித தயக்கமும் சந்தேகப்பார்வைகளும் கிராமங்களில் காணக்கிடைப்பதில்லை. முக்கியமாகப் பெண்களிடம்.
தமிழ்நாட்டில் அகரம் பவுண்டேசனின் கீழ் இயங்கும் ‘இணை’ என்ற அமைப்பில் இருக்கும் செயற்பாட்டாளர் ஷில்பா செங்குட்டுவன் தமிழ்நாட்டில் இருக்கும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள நலிவுற்ற பள்ளிகளில் வேலை செய்யவோ களப்பணிக்கோ செல்லும் போது ஒவ்வொரு முறையும் தான் வாஞ்சையோடு வரவேற்கப்படுவதும் வேலைகளுக்கான ஒத்துழைப்பு கிடைப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு விசாரித்திருக்கிறார் ‘நம்ம பொண்ணுதானே பொது வேலைக்குன்னு வந்திருக்கு’ என்று எப்படியோ அவளுடைய சாதியை கண்டுபிடித்து அங்குள்ளவர்கள் கரிசனைப் பட்ட போது சலிப்பாக உணர்ந்ததாக ஒரு முறை சொல்லியிருக்கிறார். தான் ஒரு செயற்பாட்டாளராக இருப்பதற்கு கிடைக்கக் கூடிய ஒத்துழைப்பையே விரும்புவதாகச் சொல்லியிருந்தார். நான் இதை இவளுக்குச் சொன்ன போது ‘தான் யார் என்பது அவர்களுக்கொரு பிரச்சினையாகவே’ இருந்ததில்லை தானும் அதை உணர்ந்ததும், இல்லை என்று சொல்லியிருந்தாள். கூட்டாக ஒவ்வொரு சமூகக்குழுவும் அடையக்கூடிய பண்பட்ட தன்மை இது. மானிட அறத்தினுடைய பகுதிகளில் ஒன்று. தனிப்பட்ட இயல்புகளைக் கடந்து கூட்டாக உருவாகி விடும் இயல்புகள் இவை. தங்களின் கூட்டு இயல்பினால் புதியவர்களை ஊடுருவுகிறார்கள். சட்டென்று இறுக்கத்தைக் கனிய வைக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் மலையகக் கிராமங்களுக்குச் செல்லும் போதும் தன்னை இன்னார் என்ற அடையாளங்களுக்கு எந்தப் பொருட்டோ அல்லது அவற்றில் தலையீடோ இருந்ததில்லை என்றிருக்கிறாள். அவள் மூலமாகத்தான் அக்கிராமங்களின் ஆன்மாவை கொஞ்சமேனும் அறிந்துகொண்டேன்.
நான் மலையக கிராமங்களுக்குச் சென்றது மிகவும் குறைவு, 2021 இல் வல்லமை அமைப்புடன் ஹட்டனுக்குச் சென்றிருக்கிறேன். பெரிய மண்வெட்டித்தோட்டம் மாதிரியான ஒரு சில கிராமங்களுக்குச் சென்றிருந்தேன். மலையகம் பற்றி இலக்கியத்திலும் வரலாற்றிலும் உள்ள பெரும்பாலான விடயங்கள் அவர்களின் துயரத்தின் மீது மட்டும் அதிகமாகப் பின்னிச்செல்கிறது. கலைத்தன்மையில் இருந்து வலிந்து அரசியல் படுத்தும் அபாயங்களை எதிர்கொள்வது. இம்மக்களின் துயரும் கண்ணீரும் பொய்யோ வேண்டப்படாதைவையோ அல்ல. ஆனால் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு இவை மட்டும் போதாது என்று நினைக்கிறேன். ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தன்னுடைய வாழ்க்கையின் மொத்தத்தையும் விடுதலைக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அரசியல் வரலாற்றைத்தாண்டி, அம்மக்களின் பண்பாட்டு வரலாறு தன்னுடைய பெரிய உடலை அசைத்துக்கொண்டு பொது வெளிக்கு வரவேண்டும். நாடற்றவர்கள், தோட்டக்காட்டார், கள்ளத்தோணிகள் என்றெல்லாம் இழிவாகக்கூறப்படும் , உரிமை மறுக்கப்படும் இம்மக்கள் தாங்கள் இந்த நிலத்தில் பிணைந்து வாழத்தொடங்கிய நாள் முதல் வெறுமனே தேயிலை , தோட்டங்களில் கூலிக்கு மாரடிக்கவில்லை. இத்தனை துயரத்திலும் இத்தனை சுரண்டலிலும் அந்த நிலத்தில் தங்களின் வாழ்க்கையை நிலத்துக்கே உரிய பண்பாட்டை, மொழியை , சாமிகளை, அறத்தை எல்லாம் உருவாக்கியிருக்கிறார்கள். ஏமாற்றப்பட்டு அழைத்துவரப்பட்டு இன்றைக்கு வரைக்கும் வஞ்சிக்கப்பட்ட இந்தச்சனம் தாங்கள் குடியமர்த்தப்பட்ட நிலத்தில் தங்களின் ‘வீட்டை’ எவ்வாறு உருவாக்கினார்கள் அல்லது அடைந்தார்கள் என்பதான கதைகளையே நான் அதிகம் கேட்க விரும்பினேன்.
வழியில் சிறுவர்கள் கொய்யாப்பழங்கள், நொறுக்குத்தீனிகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். அந்தக்கிராமத்து தொழிலாளர்களையும் காணாக்கிடைத்தது. நீர்வீழ்ச்சியில் மிகுதி இருந்த நாள் முழுவதையும் கழித்தோம். ஒரு இடத்தைப் பார்க்கச்செல்லும் போது குறைந்தது அரைநாளேனும் அங்கேயே இருக்க வேண்டும் எங்களுக்கு. எங்களோடு வந்தவர்கள் எங்களுக்குப் பிறகு வந்தவர்கள் எல்லோரும் வந்தார்கள், குளித்தார்கள், சாப்பிட்டார்கள் போய் விட்டார்கள், நாங்கள் நால்வரும் மட்டும் தான் யாருமில்லாத அந்த வீழ்ச்சியின் நீரையும் பாறைகளையும் அங்கு திரியும் நாய்களையும் அழைந்துகொண்டு திரிந்தோம். கரைகளிலும் பாறைகளிலும் இருந்து பேசினோம். பாறைகளில் தாவிக்குதித்து ஏறிச்சென்று ஒவ்வொரு பக்கத்தில் நின்றும் அந்தப்பிரமாண்டமான வீழ்தலையும் சாரலையும் வாங்கினோம். இருட்டத்தொடங்கும் போதே புறப்பட்டு ரயில் நிலையம் வந்தோம். தேனீர் அருந்தி விட்டு எட்டுமணிக்கு அடுத்த ரயில் வரும்வரை பாட்டுப்பாடிக்கொண்டே மிதமான குளிரில் ரயில் நிலைய கதிரைகளில் சாய்ந்திருந்தோம். அதன் பழைய கொலனிய கட்டட அமைப்பும் மஞ்சள் பல்பின் வெளிச்சமும் ,அதன் பழைய சுவிச் போடுகளும் ரயில் வந்த காலத்தின் நிறத்தை அந்த முன்னிரவில் அந்த ரயில் நிலையத்திற்கு வழங்கியிருந்தன.
கல்பொடவில் இருந்து மாலையில் பதுளை ரயிலில் ஏறி ஹட்டன் சென்றோம். அன்றிரவு வரையிலே எங்களிடம் திட்டமிருந்தது. ஹட்டனுக்கு பிறகு அல்லது ஹட்டனில் என்ன செய்யப்போகிறோம் என்ன பார்க்கப்போகிறோம் என்பது தொடர்பாக நால்வரிடமும் எந்த எண்ணமும் இல்லை. நல்ல களைப்பில் ஒருவரை ஒருவர் ‘நாளைக்கு’ எங்கே போவது என்பதற்கு நீதான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு உறங்கிப்போனோம். காலையில் எழுந்து மீண்டும் ஹட்டனில் இடம் தேட ஆரம்பித்தோம். நான் ஏதேனுமொரு கிராமத்திற்குச் செல்வோம் என்றேன். தொடர்புகள் இல்லாமல் செல்வது கடினம் என்பதால் பெரிய் மண்வெட்டி தோட்டத்தில் அறிமுகமான நண்பர் ஒருவரைத்தொடர்புகொள்ள முயற்சித்தேன். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மதியம் நெருங்க வேறு எங்கெல்லாம் போகலாம் என்று கேட்டேன். ஹப்புத்தளைக்கு போவோமா என்று கேட்டார்கள். என்னைத்தவிர எல்லோரும் அங்கே ஏற்கனவே பலமுறை போய் வந்திருந்தார்கள். என்றாலும் அந்த ஊரில் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள். முகில்கள் அளாவக்கூடிய மலைகள் அங்கு இருப்பதாகச் சொன்னார்கள். சரி போவோம் என்று கிளம்பினோம். ஒப்பாரிக் கோச்சி வந்த அதே ரயில் தடத்தில் ஓடும் இலங்கையின் அழகான இடங்களைக் கடந்து செல்லும் ‘சுற்றுலா’ ரயில்களில் ஒன்று அந்த பதுளை ரயில் பெரிய மலைத்தொடர்கள், மலைக்காடுகள், தேயிலைத்தோட்டங்கள், கிராமங்கள், சிறு மலையக நகரங்களை மேலிருந்தும் கீழிருந்தும் பார்க்க வைத்துஅழைத்துச்செல்லும் ரயில் அது. ஒஹிய என்ற இலங்கையின் மிக உயரமான ரயில் நிலையம் அந்த வழித்தடத்தில்தான் இருந்தது.
இலங்கையின் மொத்த வனப்பின் இதயப்பகுதி மலைநாட்டினுடையது என்பதை இந்த ரயில் பயணத்தினால் உறுதிப்படுத்த முடியும். ஹட்டன் ரயில் நிலையத்தில் எங்களுடன் ரயிலுக்கு காத்திருந்த உள்ளூர் மக்களிடம் டிக்கட் எடுத்துக்கொண்டு நடைமேடையில் வைத்து ஏதோ பஸ்ஸை விசாரிப்பது போல சந்தேகத்த்துடன் ‘இது ஹப்புத்தளையில்’ நிற்குமா என்று கேட்டோம். அவர்கள் ‘அப்புத்தளையில்’ நிற்கும் என்று சிரித்துக்கொண்டே அவ்வூரை தமிழ்ப் பெயரில் அழைத்தார்கள். ஒரு நகரத்தை அல்லது கிராமத்தை உருவாக்கியவர்கள், அதன் உரித்துள்ள சனம் அவ்வூரை எவ்வாறு அழைக்கின்றார்களோ அவ்வாறே அழைக்க விரும்புகிறேன்.
அப்புத்தளைப் பயணம் நன்றாகவிருந்தது. சீசன் சுற்றுலாப்பயணிகளால் நிறைந்திருந்தது.மூன்றாம் வகுப்பில் கிடைக்கும் சுதந்திரமான செளகரியமான பயணம். பொடிமெனிகே, உடரடமெனிகே என்று இரண்டு பெண் ரயில்கள் அந்தத் தடத்தில் ஒடிக்கொண்டிருந்தன. அப்புத்தளையை நான்கு மணி நேர பிரயாணத்தின் பின்னர் சென்றடைந்தோம். அப்புத்தளை மத்திய மாகாணத்திற்குள் வராது. அது ஊவா மாகாணத்திற்குரியது. அழகான பெரிய மலைத்தொடர்களையும் மலைகளையும் கொண்ட மாகாணங்களில் ஒன்று. சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். போய் இறங்கும் போதே கோயில் திருவிழாவில் ‘வேலுண்டு வினையில்லை’ என்று ஒலிபெருக்கியில் அடுத்தடுத்து பக்திப்பாடல்கள் போய்க்கொண்டிருந்தன. சிறுவயதில் கீறியதில் அதிக கற்பனை கொண்டதாய் நினைத்திருந்த மலைகளில் சூரியன் மறையும் மாலைக்காட்சியை தேனீரோடு பார்த்தோம். என்னுடைய கண்டி நண்பி அடிக்கடி மலைகளைப்பற்றிச்சொல்வாள், தான் தன்னுடைய நண்பர்களோடு ஹைக்கிங் போன கதைகளைச் சொல்லியிருக்கிறாள். நான் அவளுக்கு கடல்களைப் பற்றிச்சொல்வேன். ‘மலைகளைப் போட்டோக்களில் பார்ப்பதுபோல ஒரு அபத்தம் ’ என்பாள். கடல் மட்டத்தில் இருந்து 1568 அடி உயரத்தில் இருக்கும் கண்டியில் இருந்து அவள் மலைகளைப்பற்றியும் நான் கடல்களைப்பற்றியும் நிறையப்பேசியிருக்கிறோம். நான் அவளுடைய கண்களின் வழியே இந்த மலைகளைப் பார்க்க விரும்பினேன். அவள் மலைகளையும் நகரங்களையும் உயிருள்ள ஆட்களாக பார்க்கும் செப்படுவித்தை கொண்ட கண்களைப்பெற்றிருந்தாள். அப்புத்தளை கடல் மட்டத்தில் இருந்து 1431 மீற்றர் உயரத்தில் இருந்தது. இரவு விடுதி அறைக்குச்சென்ற பிறகு அப்புத்தளையில் எங்கே போவது என்று கேட்டோம். இந்தப்பயணத்தில் எல்லோரிடமும் பொதுவாக இருந்த ஒரே கேள்வி ‘அடுத்து எங்கே’ என்பதுதான். ஆனால் அது ஒவ்வொரு முறையும் நகைச்சுவையான தருணமாக இருந்தது. திட்டமில்லாத பயணங்களின் செளகரியங்கள் முக்கியமானவை. குறிப்பாக எத்தனை மணிக்கும் எழும்பலாம் எப்பவும் போகலாம் என்பதான சுதந்திரம் கொண்டாட்டமானது. குட்டி இளவரசன் நாவலில் ‘நேராக மட்டும் பார்த்துக்கொண்டு செல்பவர்கள் அதிக தூரம் செல்வதில்லை’ என்றொரு இடத்தில் வரும். இரவு அப்புத்தளையில் பார்க்கத்தக்க இடங்களைப் பட்டியலிட்டோம். லிப்டனின் கதிரையைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். லிப்டன் பெருந்தோட்டத்தில் இருக்கும் மலையின் உச்சிப்பகுதி ஒன்றில் முகில்கள் அளாவும் பெரிய மலைக்காட்சி விரியும் இடத்தில்தான் லிப்டன் அமர்ந்திருப்பாராம். அந்த இடத்தில் தற்பொழுது அவருடைய ஒரு சிலையும் ஆசனும் வைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் போகலாம் என்று நண்பர்கள் சொல்லும் போது லிப்டனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஏனென்றால் இந்தியாவில் இருந்து மக்கள் தொட்டத்தொழிலாளர்களாக அழைத்துவரப் படக் காரணமாக இருந்தவர் சேர் தோமஸ் லிப்டன் (Thomas Lipton (1848–1931). அவருடைய பெயரில் இருக்கும் லிப்டன் தேயிலை உற்பத்திகள் பிரபலமானவை. இலங்கையில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட தேயிலைத்தொட்டங்களில் லிப்டன் எஸ்டேட்டும் ஒன்று. இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கையை அறிமுகம் செய்த ஜேம்ஸ் டெய்லரை (James Taylor) ரோடு 1890 களில் ஏற்பட்ட தொடர்புகளின் பின்னர் இங்கே தேயிலைத்தோட்டங்களை அமைத்தவரும் பின்னர் இந்தியாவில் இருந்து தோட்டத்தொழிலாளிகளை அழைத்துவரக்காரணமாகவும் இருந்தவர் என்ற அடிப்படையில் நான் லிப்டனையும் தோட்டத்தையும் பார்க்க ஆர்வமாகவிருந்தேன். சரி போவோம் என்று முடிவானது.
மதியத்தில் எழுந்து அறையில் இருந்து வெளிப்பட்டு அப்புத்தளை நகருக்கு நடந்து வந்து ஒலிவ்ஸ் என்ற மலைக்காட்சியோடு திறந்திருந்த பெரிய யன்னலற்ற யன்னல்களைக் கொண்ட கடையில் நடந்த களைப்பிற்குப் பானங்கள் அருந்தினோம். அங்கிருந்த பெரிய டீவியில் இலங்கையின் சுற்றுலாத்தலங்களுக்கான விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. லிப்டனின் இருக்கையும் காட்டப்பட்டது. தேயிலைத்தோட்டங்களில் கொழுது பிடுங்கும் பெண்கள் சிரிப்பதும், சுற்றுலாப்பயணிகள் அவர்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொள்வதும் மனோரதியத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ரெஸ்ரோரண்டில் வேலை செய்யும் அவ்வூர் பெண்ணொருவர் மூலம் போகும் விபரங்களைக் கேட்டறிந்தோம், வாஞ்சை மிகுந்த சிரிப்பொன்றோடு அவர் எங்களுக்கு உதவினார். அந்தக் கடையில் வேலை செய்யும் அவருடைய நண்பர் ஒருவர் மூலம் ஓட்டோ ஒன்றை ஒழுங்கு செய்து கொடுத்தார். மதியத்திற்கு பிறகு லிப்டன் பயணம் தொடங்கியது. அன்றுதான் பயணத்தின் இறுதிநாள் அங்கு போய் வந்து ஏழு அரைக்கு பஸ்ஸில் யாழ்ப்பாணம் திரும்புவது என்று தீர்மானம்.
ஆட்டோ ஆபத்தான மலைச்சரிவுகளில் வளைந்து வளைந்து சென்றது. ஒரு நேரத்தில் ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்லக்கூடிய குறுகலான மலைப்பாதை. இம்முறை கிராமங்களுக்கு இடையில் சென்றது. பொதுவாக மலையக தோட்டத்தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களை ’லயங்கள்’ என்று அழைக்கிறார்கள். அச்சொல்லால் அக்குடியிருப்புக்களை அழைக்க எனக்கு தனிப்பட்டு விருப்பமில்லை,ஆனால் அவ் இடங்களின் உரித்து, வீடமைப்பு, பொருளாதார நலிவு என்பவற்றைக் குறிக்கக் கூடிய அதே வேளை இந்த மேட்டுக்குடி மக்கள் பரிதாபமும் சோகமும் மட்டும் லயப்படும் இடமாக காணும் போது மட்டும் ‘ப்ச்’ கொட்டிக்கடந்து விடும் இடங்களாக அவை இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் அவற்றைக் ஊரென்றோ கிராமம் என்றோதான் அழைக்கப் பிரியப்படுகிறேன். தோட்டங்களைக் கடந்து செல்லும் போது தேயிலைக் கொழுந்து கொய்யும் பெண்களைச் சந்தித்தோம். அவர்களிடம் படம் எடுக்க அனுமதி கேட்டு படமெடுத்தோம். அவர்கள் எங்களுடன் அதிகம் மினக்கெடப் பயந்தார்கள், நின்று கதைத்தால் தகவல் கங்காணிக்கோ அல்லது தோட்ட அதிகாரிகளுக்கோ போய் விட்டால் அவர்கள் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றார்கள். அவர்கள் மிரண்ட போது கோபமாக வந்தது. இந்தச்சனத்தை இந்த நாடு எந்த நிலைமையில் இன்னும் வைத்திருக்கிறது ? ஒரு நாளைக்கு அடிப்படையில் கட்டாயமாக அவர்கள் 20 கிலோவரை கொய்ய வேண்டும். ஒரு பெண் வாழ்நாளில் சராசரியாக எத்தனை லட்சம் கிலோ கொழுந்துகளைக் கொய்கிறாள் என்பதைக் கணக்குப்பார்த்துக் கொண்டோம். வைதேகி நரேந்திரனுடன் ஒரு முறை உரையாடும் போது தெய்வானை அம்மாவைப்பற்றிச் சொல்லியிருந்தார்.
தெய்வானை அம்மா. 1915 ம் ஆண்டு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலத்தில் பிறந்தவர். 1920 ம் ஆண்டில் தேயிலைத்தோட்டத்துத் தொழிலாளிகளாக கப்பலில் ஏற்றப்பட்ட தன்னுடைய பெற்றோருடன் இலங்கையின் தலைமன்னாரில் வந்திறங்கியிருக்கிறார். பின்னர், பதுளை மாவட்டத்திலுள்ள வெவஸ்ஸ பெருந்தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழிலாளியாக எட்டு வயது சிறுமி தெய்வானை வேலைக்கு அமர்த்தப்படுகின்றார். எழுபத்து நான்கு வயது வரையிலும் வெவஸ்ஸ பெருந்தோட்டத்தில் கடுங்குளிர், மழை, வெள்ளம், மண்சரிவு, அட்டைக் கடி, உடல் வருத்தம், ஏச்சு, பேச்சு, அதிகாரம் என்று எல்லாவற்றையும் தாங்கி தலையில் தொங்கும் கூடையில் இவர் அத்தனை வருடங்களிலும் பறித்த தேயிலைக் கொழுந்து கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கிலோ வரையிலும் இருக்கும். இன்று, தெய்வானை அம்மா கொழுந்து பறிக்க தொடங்கி 100 வருடங்கள்! என்று சொல்லி தெய்வானை அம்மாவின் அடையாள அட்டையையும் படமும் காட்டியது ஞாபகம் வந்தது. எத்தனை ஆயிரம் தெய்வானை அம்மாக்களால் உருவாக்கப்பட்டது இந்த இலங்கையின் தோட்டங்களும் அவைதரும் செல்வங்களும்? ஆனால் தொட்டத்தில் ஒரு அந்நியருடன் பேச்சுக்கொடுக்கவே பயப்பிடும் அளவிற்குத்தான் அவர்களை வைத்திருக்கிறோம். காலையில் சுற்றுலா விளம்பரங்களில் காட்டப்பட்ட வெளிநாட்டு பயணிகளுடன் சிரித்தபடி போட்டோ எடுத்துக்கொள்ளும் பெண்களின் சிரிப்பு உள்ளுக்குள் எழுந்து மறைந்தது. லிப்டன் தோட்டத்தின் இடையில் உள்ளூர் வழிபாட்டு இடங்கள் தென்பட்டன. மலையகத்தில் உள்ளூர் தெய்வங்களின் வழிபாடுகள், சடங்குகள், பாடல்கள், கலைகள் முக்கியமானவை. அவை இந்த நிலத்துக்கே உரிய வாழ்க்கையாலும் நடைமுறைகளாலும் உருவாகி வந்தவை. இந்த நிலம் எங்களுடைய வீடு என்பதற்கான போராட்டத்தில் அவர்களுக்கான பெரிய அடையாளங்களாகவும் சாட்சிகளாகவும் அந்தத்தெய்வங்கள் அங்கே கொலுவுற்றிருக்கிறார்கள். கட்டப்பட்ட கோவில்கள் அங்காங்கே தெரிந்தாலும் உள்ளூர் வழிபாட்டு முறைகள்தான் அவர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாவை. கல், சூல தெய்வங்கள், மண்குதிரைகள் என்று உள்ளூர் தெய்வங்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். சில இடங்களில் கிறிஸ்துவ சொரூபங்கள், அனுமார் சிலை போன்றவற்றையும் கண்டோம். லிப்டன் சீற்றிற்கு போகும் வழியெங்கும் தொட்ட நிர்வாகத்தினால் ‘இயற்கையைப்’ பாதுகாப்போம் என்பதான பொன்மொழ்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலனவற்றை இயற்கையே அழித்தும் விட்டிருந்தது. இந்த முதலாளிய உலகிற்கு மனிதர்களைக் காட்டிலும் இயற்கையில் இருக்கக் கூடிய கரிசனை எத்தனை அபத்தமானது? தேயிலை கவ்வாத்துச் செய்யாவிட்டால் மரமாக வளர்ந்து விடும் உண்மையில் தேயிலை ஒரு செடி வகை கிடையாது அது ஒரு மரம். ஆனால் அதை வெட்டி வெட்டி குட்டையாக வைத்துக்கொண்டு அதைச் செடி என்று அழைத்துக்கொண்டே இந்தப் பெரிய தோட்டங்கள் இயங்குகின்றன. ஒரு வகையில் மனிதர்களையும் , குறிப்பாக தொழிலாளிகளையும் அவர்களின்உரிமைகளையும் உழைப்புக்கான ஊதியத்தையும், சுயமரியாதை கொண்ட வாழ்க்கையையும் கவ்வாத்து செய்து சுரண்டி மரங்களைச் செடியாகத்தான் பாவித்துக்கொண்டிருக்கின்றனர் முதலாளிகளும் அவர்களின் அரசுகளும்.
லிப்டன் தோட்டம் பெரியது. சுற்றிச்சுற்றி ஏறி கடைசியாக ஓட்டோ லிப்டன் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றது. லிப்டன் நல்ல மலைக்காட்சியைப் பார்க்காமல் எதிர்ப்பக்கம் திருப்பி உட்கார வைக்கப்பட்டிருந்தார். அதாவது அவர் தன்னுடைய தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். லிப்டன் அதில் இருந்து சகவாசமாக தேனீர் அருந்தியிருந்தாலோ, புகைத்திருந்தாலோ திரும்பி அந்தப்பெரிய வெளியையும் முகில்களையும் வானத்தையும் பார்த்துக்கொண்டே மெய் மறந்திருப்பார். ஆனால் தெளிவாக அவரை தோட்டப்பக்கம் திருப்பியிருந்தார்கள். அல்லது அவரே அப்படித்தான் அமர்ந்தாரோ தெரியவில்லை. ஒரு கொலனிய முதலாளிக்குரிய சகல குணங்களும் அவருக்கு இருந்திருக்கும். அவர் காலத்தில் ஐரோப்பாவிற்கு தேயிலை மூலமாக செல்வத்தை எடுத்துச்சென்ற பிரபலமான முதலாளி அவர், குறைந்த ஊதியத்திற்கு உள்ளூரில் யாரும் வரமாட்டார்கள் என்றதும் இந்தியாவில் இருந்து ஒடுக்கப்பட்ட ஏழை மக்களைக் கொண்டுவந்து அந்தமலைகளையும் காடுகளையும் அழித்து தேயிலைத்தோட்டங்களைப் போடுவோம் என்று சிந்தித்த மூளை லிப்டனுடையது. அப்படியென்றால் நிச்சயமாக அவர் தோட்டத்தைத்தான் பார்த்தபடி அமர்ந்திருப்பார் இல்லையா? இலங்கையில் ஒரு வரலாற்று அயோக்கியத்தனத்திற்கு காரணமாக இருந்து விட்டு லண்டனில் விக்டோரியா மகாராணியின் வைரவிழாவிற்கு £20,000 பவுண்டுகள் செலவில் அந்தக்காலத்திலேயே ஏழைகளுக்கு இரவு உணவளித்த கனவானாக தன்னைக்காட்டிக் கொண்டிருக்கிறார். தற்பொழுது இருக்கும் லிப்டனின் சிலையின் கையில் இருக்கும் தேனீர் கப்பை யாரோ உடைத்து விட்டிருந்தார்கள். அல்லது தோட்டத்தில் துன்பப்படும் மக்களின் இரத்தம் நிரம்பி பாரம்தாங்காமல் உடைந்து பொயிருக்க வேண்டும். நாங்கள் லிப்டனின் அருகில் சென்று போட்டோ எடுத்துக்கொண்டோம் அங்கிருந்த லிப்டன் பற்றிய குறிப்பு அவர் ’இந்த தீவின் அழகில் மயங்கி இங்கே தொழில் செய்யவந்தார்’ என்று எழுதியிருந்தது. அயோக்கியர்களைக்கொண்டாடுவதும் சுரண்டுபவர்களை கதாநாயகர்களாகப் புகழ்வதும் இந்தச் சமூகத்தின் நெடுநாள்பட்ட புற்று நோய்தானே. லிப்டனின் அருகில் அமர்ந்து சேர் தோமஸ் லிப்டனின் தோளில் கை போட்டேன். இம்சை அரசன் வடிவேலு பாணியில் ‘என்னடா லிப்டா நீ செய்த வேலைக்கு வெளுத்து விட்டிருக்கோணும் நல்ல வேளை போய்ட’ என்று சொல்லி பகடி சொன்னோம்.
மாலையாகி விட அங்கிருந்த தேனீர் கடையில் தேனீரும் சக்கரையும் வாங்கிக் குடித்தோம். பின்னர் ஓட்டோவில் ஏறி முன்பு போன உணவகம் திரும்பினோம். வழமை போல அந்த சுற்றுலா விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பஸ்ஸிற்கு போக கொஞ்ச நேரமிருந்தது, உணவருந்தி விட்டு அங்கேயே ஓய்வெடுத்தோம். இருளும் போது நடந்து அப்புத்தளை நகருக்குச்சென்றோம். சிறிய நகரம்தான் ஆனால் கொலனிய காலத்தில் இருந்து அம்மக்கள் உருவாக்கிய நகரம். நண்பர்கள் கடைகளுக்குச் செல்ல தனியாக அப்புத்தளைச் சந்தியைச் சுற்றி வந்தேன். ஓட்டோ ஸ்ராண்டில் இருந்த பெரிய சுவரில் அப்புத்தளையின் கொலனிய கால காட்சி ஒன்றை வரைந்து இருந்தார்கள். மலைத்தொடர்களில் திரும்பும் பாதையில் வண்டில்களும் ஒரு சில கட்டடங்களும் இருந்தன. மேலே a part of haputale 1894 என்று எழுதியிருந்தது. நான் அவற்றைப் போட்டோ எடுப்பதைக் கண்ட ஓட்டோக்காரர் ஒருவர் ‘தாங்கள் தான் கீறினோம்’ என்றார். அந்தப்படம் அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் இருக்கும் பழைய அப்புத்தளையின் புகைப்படத்தை வைத்துக்கீறியது என்று அதில் உள்ள நிலக்காட்சி,, கட்டடங்களை விளக்கினார். நாங்கள் பல்தேயஸ் பாதிரியார் பிரச்சாரம் செய்யும் பிரபலாமன பருத்துறை புளியமரத்தின் கொலனிய கால ஓவியம் ஒன்றையே பருத்தித்துறையில் சுவரோவியமாக வரைந்ததை அவருக்கு போனில் எடுத்துக்காட்டினேன். அப்புத்தளையின் இந்தப்புகைப்படமும் இணையத்தில் இருக்கிறது பார்க்கலாம் என்றார். பின்னர் வந்து தேடிப்பார்த்தேன். இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த ஓவியத்தின் கீழ் பக்கத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோக்கள் ஒவ்வொன்றாகச் செல்ல கீழே எழுதி இருந்த வசனம் வெளிப்பட்டது. ‘நாம் கட்டியெழுப்புவோம் நம் நகரத்தை’.
மலையகத்தின் 200 ஆண்டுகளின் பெரிய சமூகத்தனிமை தொடர்ந்தும் இந்த நாட்டின் மிகப்பெரிய அவலமாக நீண்டு கிடக்கின்றது. ஒப்பீட்டளவில் போரைக்கடந்து வந்த தமிழ் மக்களை விடவும் மலையக மக்கள் தொடர்ந்தும் கொடுமைகளுக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கினர், அவர்களுடைய வாழ்வு இலக்கியத்தைத் தாண்டி பெரிதாக எங்கும் பேசப்படுவதில்லை. இலக்கியத்திலுமே மைய உரையாடல்களுக்கு எடுத்துவரப்படுவதும் குறைவு. பேசப்பட்டாலும் அது நேரடியான அரசியல் போராட்டங்கள் பற்றியவைதான்.
லிப்டன் தோட்டத்தினால் திரும்பும் போது மலைப்பாதைகளில் பள்ளிக்கூடம் சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறுவர்களையும் சிறுமிகளையும் கண்டோம். அந்த ஓட்டோ முக்கி முக்கி ஏறிய மலைகளில் ஏறி வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு களைக்கும் என்று நண்பர்கள் சொன்னபோது ‘பழக்கம் தானே’ என்றேன். உடல் பழகிவிடும். ஆனால் நேரமோ வாழ்க்கையோ அப்படிப்பட்டதல்ல. அவர்கள் எல்லோரும் தொடர்ந்து படிப்பதில்லை, எல்லோரும் தங்களின் தாய் தகப்பனை அந்த தேயிலைக்காட்டுக்குள் இருந்து மீட்டும் விடுவதில்லை. சொல்லப்போனால் அவர்களும் அங்கேயே திரும்பச்செல்ல வேண்டியிருக்கும். அல்லது பள்ளிப்பருவத்தில் கொழும்பிற்கோ வேறு நகரங்களுக்கோ வேலைக்குப் போக வேண்டியிருக்கும். இந்தக்குழந்தைகளுக்கும் மக்களுக்கும் இந்த மலைகளும் தோட்டங்களும் நதிகளும் எப்படியான அர்த்தத்தை தருபவை? அந்த மலையின் அழகை அவர்கள் இரசிப்பார்களா? நாமெல்லாம் ஒரு மலையிலோ ஆற்றங்கரையிலோ தனித்துக்கிடக்கும் வீட்டைக் கண்டதும் , இப்படி ஒரு இடத்தில் வந்து நின்மதியாக இருந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு கட்டாயம் ஒரு முறையேனும் சொல்லியிருப்போம். இந்த மக்கள் அங்கேதான் வசிக்கிறார்கள். நாம் கற்பனை செய்யும் அழகுமிகு சொர்க்கத்தில்தான் அவர்களின் கொட்டில்களும் வீடுகளும் இருக்கின்றன. ஆனால் நாம் யாரும் அங்கே வசிக்க தயாராக இல்லைத்தானே? உண்மையில் அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளாக கொலனியர்களாலும் சரி சுதேச ஆட்சிகளாலும் சரி தனிமைப்படுத்தப்பட்டு சுரண்டப்பட்டு வருகின்றார்கள். கொஞ்சம் தூரச்சென்று ரயிலில் இருந்து பார்த்தால் அந்தப் பரந்த பச்சைத்தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் மனிதர்கள் தெரியமாட்டார்கள். நாம் எப்பொழுதும் சுற்றுலாவில் காண வரும் ‘மலைக்காட்சி’ விரிந்து தெரியும். நீங்கள் ஒப்பாரிக் கோச்சி சென்ற அதே வழித்தடத்தில் பொடிமெனிக்காவில் செல்லலாம். ஒவ்வொரு சுரங்கமும் கடக்கும் போதும் கூச்சலிடலாம், முத்தமிடலாம். என்றைக்கேனும் வடக்கு கிழக்கிற்கோ தெற்கிற்கோ தெற்கிற்கோ மலையக தோட்டத்தொழிலாளர்கள் குடும்பமாக இன்பச் சுற்றுலா வந்து கண்டிருக்கிறீர்களா?
இந்த உலகில் மிகப்பெரியளவில் ஏற்றத்தாழ்வுடன் பகிரப்படுவது மகிழ்ச்சிதான்.
-யதார்த்தன்
(இப்பயணக்கட்டுரையைத் எழுதும் போது அங்கு கழித்த நாட்களில் நண்பர்களுடன் மகிழ்ந்திருந்த, பாடிய, உண்ட , உறங்கிய அன்றாடத்தை மட்டும் எங்களுக்காக வைத்துக்கொள்ள நினைத்தேன். அவற்றைத்தாண்டி மீந்த எங்களுடைய சம்பாசணைகள், மற்றும் சம்பவங்களில் இருந்தும் சூழலில் இருந்தும் அவதானித்தவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இவை முறையான ஆய்வுக்குரியகண்களினால் பார்க்கப்பட்டவையோ ஒழுங்குபடுத்தப்பட்டவையோ கிடையாது)