தொகுத்துக்கொள்ளுதல்   `திருப்பொற்சுண்ணம் `

தொகுத்துக்கொள்ளுதல்   `திருப்பொற்சுண்ணம் `

அறிதல் முறைகளில்  பிரதானமாக இரண்டு செயல்கள் உண்டு. பகுத்தலும் தொகுத்தலும். அறிபவற்றைப் பகுத்துப்பகுத்துச் சென்று உண்மையை அடைவது பகுத்தல். அறிபவற்றை ஒட்டுமொத்தமாக தொடர்புபடுத்தி அல்லது கோர்த்து முழுச் சித்திரத்தை அடைவது தொகுத்துக்கொள்ளுதல்.  மனிதர்களின் மேம்பட்ட அறிதல் வடிவங்களில் ஒன்றான இலக்கியத்தில் இவ்விரண்டும் அடிப்படையானவை.  தொகுத்தலுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லாக synthesis  என்பதைப் பாவிக்கலாம் என்று நினைக்கிறேன். தொகுத்துக்கொள்ளுதல் என்பது வெறுமனே கூட்டிச் சேர்ப்பது அல்ல.  தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற அறிவுச்செயன்முறைக்கு உட்படுத்துவது. விவாதிப்பது, கண்டடைவது. ஆகவேதான் synthesis என்பதைக் கலைச்சொல்லாகப் பாவிக்க வேண்டும். அறிவுச்செயற்பாட்டில்  அடிப்படையான முரணியக்கம் (dialectic) ஒன்று உண்டு.  ஆய்வாக்கம் அல்லது எடுகோள் (thesis) மற்றும் அதற்கான எதிர்வினையாற்றுகை (antithesis)  இரண்டும் மோதி மீண்டு நகரும் புள்ளியையே synthesis என்ற சொல்லினால் குறிக்க முடியும். 

இலக்கியத்தில் இரண்டுவகையான தொகுத்தல் முறைமைகள் இருக்கின்றன. முதலாவது அறிந்தவற்றை   நிகர்மனம் தொகுத்துக்கொள்ளுதல். இரண்டாவது எழுதும் போது  நனவிலிருந்து தொகுத்துக்கொண்டு வெளிப்படுதல். முதலாவது புனைவில்லாத இலக்கிய ஆக்கங்களுக்கு அதிகம் பயன்படுகிறது. இரண்டாவது புனைவுகளின் போது அல்லது ஏனைய எழுத்துச்செயல்களின் போது நிகழ்வது.  மேலும் அறிபவற்றைத் தொகுத்துக்கொள்வதற்கு ஒவ்வொருவருவரும் விசேடமாக சில தனி வழிகளையும் அமைத்துக்கொள்ள முடியும். எனக்கு அறிந்தவற்றை எழுதிப்பார்த்துக்கொள்வதும், சொல்லிப்பார்த்துக்கொள்வதும், சொல்லும் போதே கற்பனையையும் விரித்து, நடைமுறை வாழ்வில் இருந்து உதாரணங்களை ஏற்படுத்திக்கொள்வதும் பழக்கம். அதனால்தான் என்னுடைய கட்டுரைகளில் சிறிய உதாரணத்தைக்கூட கதைத் துண்டின் ஊடாக விளக்குவதுண்டு. அதேபோல் என்னோடு நானே வாய் விட்டுச்சொல்லி விவாதிப்பதும் உண்டு. எழுதிப்பார்க்கும் போதும் விவாதித்துப் பார்க்கும் போதும் நினைவில் தங்குவதுடன் புதிய வெளிச்சங்கள் எழும். குறிப்பாக ஒவ்வொரு கண்ணியும் வலையாக மாறித் தொகுத்துக்கொண்டு பேருருவாகும்.

சமீபத்தில் திருவாசகம் வாசித்துக் கொண்டிருதேன். மிகப்பழைய பதிப்பொன்று. `திருப்பொற்சுண்ணம்` பகுதியை கடக்கும் போது  சுண்ணப்பாட்டு  ஈழத்தில் சைவ ஈமக் கிரிகைகளின் ஒரு பகுதியாக இருப்பது நினைவில் வெட்டியது.முக்கியமாகக் கந்தசாமி அய்யாவை நினைத்துக்கொண்டேன்.

எங்களுடைய ஊரில் கந்தசாமி ஐய்யா என்ற பெரியவர் இருந்தார். எனக்கு ஊர் தெரிந்த நாட்களில் அவர் இல்லாத எந்தச்சடங்கையும் வீடுகளில் கண்டதில்லை.  பிறப்பு, பூப்பு, மணம், மரணம் என எவ்வகைச் சடங்காக இருந்தாலும் அவருடைய பிரசன்னமிருக்கும். `செத்த வீட்டில் சவத்திற்கும்,  கலியாணவீட்டில் மாப்பிளைக்கும் அடுத்து முக்கியமானவர் கந்தசாமிதான்` என்று பகடியாகச் சொல்வார்கள். எப்பொழுது என்ன வரிசையில், முறைப்படி சடங்கு  சாங்கியத்தில் நிகழ்த்த வேண்டும் என்பதை அவரே கண்காணிப்பார். முன் நின்று செய்வார்.  குறிப்பாகத் துக்கச்சடங்குகளில் அவருடைய இடம் முக்கியமானது. சமயங்களில் சடங்கைச் செய்யக் கூடிய  பூசாரிகள் தவறும் போதும் கூட அவற்றைத் திருத்துவார்.   ஒரு துக்கச் சடங்கில்  அவர் வெளிப்படுத்தக் கூடிய உடல் மொழியும் சொல்லும்  நிதானமும்  ஆச்சரியபடுத்தும்.  ஒப்பாரிகளுக்கும் மெளனங்களுக்கும் மத்தியில் அவருடைய குரல் அசரீரித் தன்மையுடன் கிரியைகளையும் நடைமுறைகளையும் நெறிப்படுத்துவதையும் கண்டிருக்கிறேன். முக்கியமாக சுண்ணம் இடிக்கும் போது அவர் பாடும் `திருப்பொற்சுண்ணம்,  அத்துட்டிவீட்டில் மெளனம் கனத்திருக்க. அவர் குரல் மட்டும் எழுந்து இறங்கிச்செல்லும். அக்கிரிகைகளை அவர் எந்தப்பயனும் கருதாமல் முன்னின்று செய்யபவராக இருந்தார்.   குடும்பத்தகராறோ பகைமையோ இருக்கின்ற வீட்டில்  கூட துக்கம் நிகழ்ந்துவிட்டால் முதலாளாகச் சென்று செய்ய வேண்டியவற்றைக் கவனிக்கத்தொடங்கிவிடுவார். வேறு ஊர்களில்  அபரச்சடங்குகளின் போது குழப்பங்கள் நடக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்வார்கள். ஆளாளுக்கு பிணத்தை வைத்துக்கொண்டு முறுக்கிக் கொள்வார்கள். சமயங்களில்  இடுகாட்டில் கூட முறுகல்களைப் பார்த்திருக்கிறேன். சடங்கு ஒருவகையில் அதிகாரத்தை அளிப்பதும் தானே.  அவ்விடத்தைத்தான் கந்தசாமியார் நிரப்பினார். அவர் பேச்சுக்கு மறுபேச்சுக்கிடையாது. முறுகல் கிடையாது.  வாய்ச்சண்டைகள் கிடையாது. இந்நினைவு ஓடிக்கொண்டிருக்கும் போதே  திருப்பொற்சுண்ணம் எப்படி ஈமைக்கிரியைகளுக்குள் வந்தது என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டேன்.

நானறிந்தவரையில் தமிழ்ச் சமூகத்தில் ஈழத்தில் தான் சைவர்கள் ஈமைக்கிரியைகளின் போது  மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணப் பாடல்களைப் பாடுகின்றனர். உரலில் வாசனைப் பொருட்களை இட்டு சொந்தம் கூடி நின்று உலக்கை பிடித்து இடிக்கும் இறுதிக்கட்ட ஈமைச்சடங்குகளில் ஒன்றாக இன்றும் இங்கே பின்பற்றப் பட்டு வருகிறது.

பொற்சுண்ணம் என்பது  தமிழ்ப்பெண்கள் தங்களுடைய உடலில் பூசிக்கொள்வதற்கான வாசனைத்திரவியங்களை இடிக்கும் போது பாடும் பாடல்களாகும். மாணிக்கவாசகர் பெண்கள் பாடுவது போலவே பாவித்து சிவனை நோக்கி இப்பாடல்களைப் பாடுகின்றார். மாணிக்கவாசகர் வாழ்ந்த, பங்கெடுத்த பக்தி இலக்கிய காலத்தில் பெளத்தம், சமணம் முதலிய அவைதீக மதங்கள் பெண்களை விலக்கி உலகியலை மறுக்கும் போது அதற்கு எதிராக உலகியல் வாழ்வையும், பெண்ணுக்கு முதன்மையான இடத்தையும் பக்தி இலக்கியம் வழங்கியது. ஒருவகையில் பக்தி இயக்கம் வெற்றிபெறுவதில் இவ் இயல்பு  பெரும்பங்கெடுத்திருந்தது. பெண்களின்  உடலிடும் வாசனைப் பொருளை இடிக்கும் போது கூடிப்பாடும்  பாடல்களை மாணிக்கவாசகர் சிவனுக்குச் சமைக்கிறார். திருவாசகத்தில் கவிதையும் அக்காலத்தின் அக்காலச் சித்தாந்தங்களின் தரிசனங்களும் செறிவாக இருக்கின்ற பகுதிகளில் திருப்பொற்சுண்ணமும் ஒன்று. முற்று முழுதாக உலகியல் தன்மையோடும் பெண்களாடும் களிப்பாட்டு வடிவமும் சார்ந்த சுண்ணப்பாட்டு எப்படி ஈமைச் சடங்கிற்குள், நுழைந்து கொண்டது. முக்கியமாக ஈழத்தில் இன்று வரைக்கும் எப்படி நிலைத்திருக்கின்றது என்ற எண்ணம்  மனத்தை உந்திக்கொண்டே இருந்தது. நானறிந்த ஒவ்வொன்றையும் முதலில் சொல்லியும் எழுதியும், பார்த்துக்கொண்டேன், பின்னர் சில அடிப்படையான ஆய்வுகளைச் செய்தேன். அப்பொழுது முக்கியமாக எனக்குத்தோன்றிய விடயம் , சைவத்தில் `பிணம் ` என்பது  `சிவமாகவே` உருவகிக்கப்படுவது. ஈழத்தின் சைவ ஈமைச்சடங்குகளில்  உயிர் பிரிந்த உடல்  சிவமாகப் பாவிக்கப்படுகிறது. நீராட்டி, நீறிட்டுச் சடங்குகள் செய்யப்படுவது. சைவத்தின் முதற்  தெய்வமான சிவன் `காடுடைய சுடலை` வாசி.  ஈழத்தில் இருக்கும் சிவன், சக்தி வடிவங்களோடு நெருக்கமான உள்ளூர் தெய்வங்கள் பெரும்பாலும்  இடுகாட்டுடன் இணைந்திருப்பவை. அண்ணமார், சுடலைமாடன், காடேறி தொடங்கி  அத்தெய்வங்கள் இடுகாட்டுடனும் சிவ நம்பிக்கைகளுடனும்  தொடர்பான  உள்ளூர் தொன்மங்களாலானவை.

சட்டென்று மனது  களி கொண்டு அடங்கியது, உள்ளுணர்வு எதையோ தவறவிடுகிறேன் என்றது.  நண்பர் , இந்து நாகரீகத்துறை விரிவுரையாளர்  தி. செல்வமனோகரன் அவர்களின் ஞாபகம் வந்தது. சைவ சித்தாந்தம் , தமிழ் மெய்யியல் தொடர்பில் அவருடைய வாசிப்பும், ஆய்வுகளும் விரிந்தவை. இலக்கியம், பதிப்பு, செயற்பாடு, விமர்சனம் என்பவற்றிலும் சமகாலத்தில் செயலூக்கத்துடன் இயங்குபவர். ஒருவகையில் எங்கள் தலைமுறையில் வாசிப்பும் அறிதலும்  மேம்படுவதில் அவருடைய  பங்கு கணிசமானது.  இப்படித் திக்கி நிற்கும் போதெல்லாம்  றமணன் அண்ணைக்கோ (தி.செல்வமனோகரன்) அல்லது என்னுடைய  தமிழாசிரியர் சத்தியவேந்தனுக்கோ அழைப்பேன்.  செல்வ மனோகரனுக்கு அழைப்பெடுத்தேன்.  விடயத்தைச் சொல்லி சுண்ணம் , ஈமை உடலைச் சிவமாகக் கருதுவதால் அதற்கு வாசனைத்திரவியங்களைப் பூசுவதாக  எடுத்துக்கொள்ளலாமா ?  என்று கேட்டேன்.  அவரும் அதையே சொன்னார் ,   அங்கே உடல் `சிவப்பாவனை` செய்யப்படுகின்றது என்றார். முக்கியமாக   ஈழத்தில்  ஈமைச்சடங்குகளில்  திருவாசகத்தைப் பாடுவது தொடர்பில்   வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் சொன்னார். எனக்கு இதுவொரு புதுத்தகவல்.  அத்துடன் தன்னுடைய அவதானம் ஒன்றையும் சொன்னார். உடல் சிவமாகப் பாவிக்கப்படுவதால்தான்,  சடங்கு செய்யும் பிராமணர் சென்ற பிறகுதான் ஒப்பாரியிடுவார்கள்` என்றார். முக்கியமான அவதானமாகப் பட்டது.  தெய்வத்தின் முன் அமங்கலமாக அழக்கூடாது என்ற நம்பிக்கையின் வடிவங்களில் ஒன்றாக இருக்கலாம். இறுதியாக, அவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே எனக்குள்  எழுந்திருந்த  இவ்விடயம் தொடர்பான போதாமையை  நிகர்மனது உணர்ந்தது. இச்சடங்குகளை சைவத்தின் எந்த தரிசன மரபுக்குள், குறிப்பாக  ஈழத்திற்கு என்றே  பிரத்தியேகமாக உருவாகி வந்திருக்கும் இந்தச் சடங்கு எவ்வகையான சித்தாந்த பின்புலத்திற்குள் வரக்கூடும் என்று கேட்டேன். இந்து மதத்தில் உள்ள சாங்கியம் தொடக்கம் , உத்தர மீமாம்சம் வரையான ஆறு தரிசனங்கள் ஈழத்தின் சைவப்பின்புலத்தில் இயங்கும் வாய்ப்புண்டா என்று கேட்டேன். அவர் தெளிவாக `இவை சைவ சிந்தாந்த மரபைச் சார்ந்தவை, குறிப்பாக` பதி` கோட்பாட்டைச் சார்ந்தவை, ஆன்மா பதியை அடைவதற்கான சடங்குகள் இவை என்றார். எந்தச்சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நீண்ட காலம் தொடர்ந்து வரும் போது  பெரும்பாலும் ஏதேனுமொரு வலுவான சித்தாந்தமோ, தத்துவ தரிசனங்களோ  பின்னணியாக  இருக்கும்.  அவை எந்தக்காலம், எச்சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவை, எவ்வாறு வளர்ந்தன, வாதிட்டன, போன்ற விடயங்களை அறிந்து தொகுக்கும் போது நமக்கு முழுமையான சித்திரம் கிடைக்கிறது.  ஈமைச்சடங்குகளில் ஈழத்தில் எரிக்கின்ற சடங்கு தொன்மையானது. அதையொட்டிய சடங்குகளின் ஆழ் நினைவுகளே தொடர்ச்சியாக இருப்பவை. சங்கப்பாடல்களில் வரும் ஈழத்துப் பூந்தந்தேவனார்  இந்நிலத்தைச் சேர்ந்தவர் என்ற ஊகத்தை அவர் பாடலில் உள்ள  ஈமைச் சிதையெரிக்கும் காட்சியைக் கொண்டே   நிறுவிக்கொள்கிறோம்.

அது தவிர சைவத்தில் மட்டுமல்ல உலகமும் முழுவதும் உள்ள மதங்களில், பண்பாடுகளில், பழங்குடி நம்பிக்கைகளில் இவ்வகையான சடங்குகள், நம்பிக்கைகள் எழுந்திருக்கும். பெரும்பாலும் மனிதர்கள் பகிர்ந்துகொள்ளும் நம்பிக்கைகளின் அடிப்படைகள்  ஒத்த இயல்புகளைக் கொண்டிருப்பவை.  இங்குள்ள உடலைச் சிவமாகக் காணும் சடங்கிலிருந்து, எகிப்தில் `மம்மியாகப் பாடம் செய்யப்படும்`  உடலுக்கு  ஒரு கோட்டை இழுக்க முடியும் இல்லையா?  தொகுப்பதன் நோக்கமே அதுதான்,  அறிதலின் நோக்கம். முழுமையான உண்மை நோக்கிய பயணம். தொகுத்தலில்,  வரலாற்றுப் பின்புலம், தத்துவ அல்லது சித்தாந்தப் பின்புலத்தையும் சேர்த்துக்கொள்ளும் போது முழுச்சித்திரம் வெளிப்பட ஆரம்பிக்கிறது. அதேநேரம் முழுதான முடிவாகவும் அவற்றை மூடிவிடத்தேவையில்லை. அறிவின் முக்கியமான இயல்பு எப்பொழுதும் திறந்திருத்தல். மாபெரும் விவாதங்களின் பின்பும், தத்துவ மோதல்களின் பின்பும்  ஒரு `கொமா` இருந்துகொண்டே இருக்கும் என்பது மனதிலிருக்க வேண்டும்.

அடிப்படையில் தொகுப்பதற்கான விசையும் விழைவும் தேவையில் இருந்து வருகின்றது என்பதைக்காட்டிலும் அறிதலுக்கான விருப்பத்தில் இருந்து எழுந்து வரும் போது   மனதை விரிவாக்குகின்றது. மகிழ்ச்சியுடன் கருமமாற்றச் செய்கிறது. முக்கியமாக தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு என்பன விரிவடைந்து அறிதலும் விரிவடைகிறது.

நிகர்மனம் தொகுப்பதைவிட ஒருபடி மேலானது, நனவு மனம் தொகுப்பது. அது நம்முடைய உள்ளுணர்வின் ஆடல் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக புனைவிலக்கியம் சார்ந்து இயங்குபவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள்.  எழுதும் போது தொகுத்தெழும் அறிவோ , மொழி நிகழ்த்துகைகளோ `இது நம்முள்தானா இருந்தது?` என்று ஒவ்வொரு கணமும் வியக்க வைக்கும். அதுவே அச்செயலின் மகிழ்வையும் செயல் புரிவதற்கான  விசையாகவும் மாறும். அக்கணத்தையே படைப்புச் செயற்பாட்டின்   உச்சமான தருணம் எனலாம்.   முக்கியமாக நம்மை அறியும்  பெருநடனமொன்றை ஆழ்மனமும் மொழியும் அறிதலின் வழியே நிகழ்த்துகின்றன. தொகுத்தலும், பகுத்தலும்  ஊடும் பாவுமாக ஓடி மேலேறும்  பெரும் தறி.  இலக்கியத்தின் நோக்கமும் அறிதல்தான். இலக்கியம், அறிவு- அறிபவர்- அறிபடுபொருள் மூன்றையும் நேர்கோட்டில் இணைத்துச் செல்வதற்கு தொகுப்பும் பகுப்பும் அடிப்படையானவை.  சிந்தனையில் சட்டென்று தோன்றும் ஒரு பொறியைத் தொகுத்துத் தொகுத்து வெளிச்சமாக்கிக்கொள்வது.  அதுதான் மணிவாசகரையும் கந்தசாமி அய்யாவையும்   சிவனையும் இணைக்கிறது. 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’