நட்சத்திரத்தில் இருந்து   சமூக நீதிக்கு சாதியப்பின்னொட்டுகளை நீக்குதல் தொடர்பான உரையாடல்

சில வருடங்களுக்கு முன்பு மலையாள/ தமிழ் சினிமா நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட நடிகை பார்வதி  தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்க கூட ‘மேனன்’ என்ற சாதியப் பின்னொட்டை இனிமேல் பயன் படுத்த போவதில்லை என்று அறிவித்தததோடு  தன்னுடைய உத்தியோக பூர்வ இணையப்பக்கங்கள், திரைப்படங்களில்  அவற்றை நீக்கினார்.   இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் அது  செய்த சிறிய நற்செயல் மட்டுமல்ல அது ஒரு பெரிய காலடி. ஏனெனில் இந்திய  மனங்களை , கருத்தியல் கூட்டை வடிவமைப்பதில் இந்திய சினிமாவின் ஒவ்வொரு மொழிச் சினிமாவும் பெரிய பங்கிருக்கிறது. நவீன இந்தியப் பண்பாட்டின் பொதுப்புத்தியை கடந்த நூறு வருடங்களுக்குள் தீர்மானித்த பண்பாட்டின் கூறுகளில் சினிமா பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றது.  இன்று வரைக்கும் இயக்குனர்கள், நடிகர்கள்  என்று ‘நட்சத்திரங்கள்’ சாதிய பின்னொட்டை வெளிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டும் அதனால் வரக்கூடிய அதிகாரத்தை பேணிக்கொண்டும் இருக்கின்றனர். பலர் சாதிய தடித்தனங்களை நியாயப்படுத்தி படங்களை எடுத்துக்கொண்டும், சாதியப்பின்னொட்டு, முன்னொட்டுகளுடன் பெயரிட்டு  தேவர் மகன், குங்குமப் பொட்டு கவுண்டர்,  தொடங்கி சமீபத்து அர்ஜுன் ரெட்டி வரை தொடர்கிறது. இளைஞர்களுக்கு தங்களுக்கு இப்படி ஒரு சாதிப்பெருமை உண்டு என்று பெருமிதமாக பெயர்களுக்குப் பின்னால் சாதிபின்னொட்டுகளை சேர்த்துக்கொள்வதை இன்றும் பெருமையாகக் கருதும் சூழலை தமிழ் நாடு முழுவதும் உண்டாக்கி அதை ‘உன்னதப்படுத்தியதில்’ சினிமாவின் பங்கு மிகப்பெரியது. இந்தச் சூழலை முன்னிறுத்திப் பார்க்கும் போது  பார்வதி எடுத்த நிலைப்பாடு பெயரைத் திருத்தும்  ‘சிறியதொரு’ வேலையென்று குறுக்கி விடுவதற்கில்லை.

தமிழ்நாட்டில்  புதிதாக ஆட்சியமைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு,  தமிழ் நாட்டுப் பாடப்புத்தகங்களில் இருக்கும் இத்தகைய சாதிய பின்னொட்டுக்களை நீக்குவதாக அறிவித்திருக்கிறது. ஒரு அரசாக , சாதிய நிலமைகள் பெருமெடுப்பில் நடைமுறையில் இருக்கும் தமிழ் நாட்டு அல்லது மொத்த இந்தியச் சூழலிலுமே இதுவொரு மிக முக்கியமான தீர்மானமாகும். சாதியிலிருந்து விடுவிக்கப்படப்படப்போகும் தமிழ் சூழலுடைய முற்போக்கான சிந்தனைக்கும் செயலூக்கங்களுக்கும் மிகப்பெரிய  பலத்தை அளித்திருக்கிறது. தமிழ்ப்பாடப்புத்தகங்களில், கலை இலக்கிய வரலாறுகளில் காணப்படக்கூடிய அறிஞர்களின் பெயர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாதிப்பெயர்களை நீக்குவது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் சாதி ‘இயல்பாக்கம்’  செய்யக்கூடிய பகுதி ஒன்றில் இருந்து காப்பாற்றப்படுகின்றார்கள்.  உதாரணத்திற்கு , தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும்  உ. வே. சாமிநாதரின்  பெயரின் பின்னால் இருந்த ஐய்யர் என்ற பின்னொட்டும், தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர் என்று அறியப்படும் வரதனேரி வெங்கட சுபரமணியரின் பெயரின் பின்னால் உள்ள ஐய்யர் என்ற பின்னொட்டு  நீக்கப்படுவதும் தமிழ் இலக்கி, சமூகச் சூழலில் முன்னேற்றமான செயற்பாடுகளாகும்.  இதனை முன்னிட்டு  நண்பர் கிரிசாந்  இக்காலப்பகுதியில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதங்களில் வைக்கப்பட்ட முக்கியமான விவாதம் ஒன்றை தன்னுடைய முக நூல் பதிவில் இவ்வாறு எதிர்கொள்கிறார்

’’தமிழ் நாட்டின் பாட நூல்களில் உள்ள பெயர்களில் இருந்து சாதி பின்னொட்டுகளை நீக்கியிருக்கிறார்கள். நல்ல விசயம். சில நண்பர்கள் இப்படிச் செய்வதால் எல்லாம் சாதி ஒழிந்து விடாது , மேலும் தேவையற்ற தகவல் குழப்பங்கள் ஏற்படும் என்று கூறிவருகிறார்கள். இரண்டாவது வாதம் சரிதான். இதற்கு அப்பாட நூல்களில் சாதியப் பின்னொட்டுகளை நீக்குவதற்கு காரணங்களாக, சாதி என்பதொரு இழிவான கருத்தியல். மனித மாண்புகளுக்கு எதிரானது, ஆகவே இவை நீக்கப்பட்டிருக்கின்றன போன்ற குறிப்புக்களைச் சேர்ப்பதும், அவை ஏன் நீக்கப்பட வேண்டும் என்பதற்கான காரண காரியங்களை குறிப்பிடுவதும் மாணவர்களை இன்னும் பகுத்தறியத் தூண்டும்’’

‘சாதியப்பின்னொட்டை நீக்கிவிட்டால் சாதி ஒழிந்து விடுமா? ’ என்றொரு ஏளனமான கேள்வி சமூகத்தின் பொதுப்புத்தியில் இருக்கின்றது. அதற்கு, மொழி என்றால் என்ன? மானுடர்களின் மனங்களை, அவர்களின் செயல்களை வடிவமைப்பதில் அது எத்தகைய வலிமையைப் பெற்றிருக்கின்றது , அது எவ்வாறு சிந்திக்கும் பகுதியாகவும், நினைவுகொள்ளும் பகுதியாகவும் இருந்துவருகின்றது, அதனுடைய ‘தொடர்பாடல்’ பணியின் போதும், சிந்திக்கும் பணியின் போதும் அது சின்ன சின்ன விடயங்களை எவ்வாறு மனித ஆளுமை உருவாக்கத்திற்குள் உட்புகுத்தி  ஒடுக்குமுறையையும், வன்செயலையும்  உருவாக்கிவிடுகின்றது என்பதை விளக்க வேண்டியிருக்கிறது. சமூக பண்பாட்டிலிருந்து சாதியை ஒழிப்பதில் பிரதான பணிகளில் ஒன்று அதன் மொழியில் உள்ள சாதிய நினைவைக் களைவதும் அதன் மீதான விழிப்புணர்வைச் சமூக மயப்படுத்துவதாகும்.

தமிழ் சூழலின் பொதுப்புத்தியை, தனிப்பட்ட ஆளுமைகளை வடிவமைக்கக் கூடிய அடிப்படை விடயங்களில் சாதியும் ஒன்றாகவிருக்கின்றது. அது மொழியினால் நினைவு கொள்ளப்பட்டு கடத்தப்படுகின்றது.  ஆகவே ‘வெறும் பின்னொட்டு’ தானே என்று ஒன்றைக் கடந்து போக முடியாது.  ஒரு சாதியப்பின்னொட்டு  இத்தனை காலமும்  இப்பொழுதும்  சமூகத்தின் மிகப்பெரிய ஒடுக்கு முறைப்பகுதியாக சமூகப்பிறழ்வாக இருக்க கூடிய சாதியினுடைய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. அது அர்த்தமற்றதோ, பெயரோடு ஒட்டி இருக்கும் வெறும் சொல்லோ அல்ல. அது பெயரோடு ஒட்டி இருக்க கூடிய  சமூகத்திற்குள்  இருக்கும், வரலாற்றில் இருந்து சீவித்துவந்த பெரிய விலங்கின் விசநகங்களில் ஒன்று. அது சர்வநிச்சயமாக ஆதிக்க தரப்புக்கு சாதிய அடையாளத்தையும், அதன் மூலம் கிடைக்க கூடிய எல்லாவகை  பயனையும் பெற்றுத்தருகிறது.  ஆதிக்க தரப்பைப் பொறுத்தவரை அது மரபார்ந்து கையளிக்கப்பட்ட மிகுந்த நலன்களைத் தரக்கூடிய ஒன்று. அது அவர்களின் ‘பிரிக்கும்’ நியாயங்களினதும் ‘ஒடுக்கும்’ இயல்பினதும் அடையாளமாகும்.

இலங்கைச் சூழலைப் பொறுத்த வரையில் இந்தியச் சூழலின் அளவுக்குச் சாதியப்பின்னொட்டுகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆயினும் இந்திய- தமிழ்நாட்டு சூழலோடு பண்பாட்டு அடிப்படையிலான நெருக்கமும், மொழியினூடான தொடர்பும் மிகவும்  ஆழமானது. குறிப்பாக  பண்பாட்டில் இருக்க கூடிய கலை, இலக்கியம், சினிமா, சமயங்கள், சடங்குகள், பழக்கங்கள், முதலானவற்றில் இப்பகிர்வுகள் இருக்கின்றன. ஆயினும் இலங்கை – தமிழ்நாட்டு சாதியச் சூழல் என்பது அமைப்பு அடிப்படையில் வெவ்வேறானது. வித்தியாசங்கள் உள்ளது. ஆனால் அவை கட்டமைப்பு வித்தியாசங்களும் கால இடைவெளிகளும் , சிந்தனை வித்தியாசங்களும் மட்டுமேதான். ஒடுக்குமுறை என்பதும், வன்முறை என்பதும் ஒன்றுதான்.  சாதிய ஒடுக்குமுறையைப் பொறுத்த வரையில்  ஈழத்தில்  ‘சைவ வெள்ளாள’ மனநிலை நிலவுகிறது. அதனுடைய ஒடுக்குமுறை வடிவங்கள் வெவ்வேறு தளங்களில் இருக்கிறது. மேலே  உரையாடி வந்த சாதியப் பெயர் பின்னொட்டுப் பிரச்சினை இலங்கையில் குறைவே தவிர தமிழ் சிங்களச் சூழலில் சாதியப்பின்னொட்டுக்களின் பயன்பாடு இல்லை என்று மறுப்பதற்கில்லை.

இலங்கைத் தமிழ்ச் சூழலில்  பெயருக்குப் பின்னால்  செட்டி, பிள்ளை. ஐய்யர், சர்மா  போன்ற சாதியப்பின்னொட்டுக்களைச் சேர்த்துக்கொள்ளும்  பழக்கம் இருந்துவருகின்றது.  செட்டிகள் எனப்படும் ஆதிக்க சாதித்தரப்பு வெள்ளாளர்களுடன் இணைந்து ‘செட்டி வெள்ளாளராக’ மாறிய பிறகு சமகாலத்தில் யாரும் பெயருக்குப் பின்னால் ‘செட்டி’ என்ற பின்னொட்டைச் சேர்த்துக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் பாடப்புத்தகத்தில் , இலக்கிய வரலாற்றில் இருக்க கூடிய  சைமன் காசிச்செட்டி போன்ற பெயர்கள் இன்னும் பயன்பாட்டிலேயே இருக்கின்றது. எனவே நம்முடைய பாடநூல்களிலும் அவற்றை நீக்கிவிட்டு நீக்கியதற்கான அடிக்குறிப்புக்களை கொடுப்பது முக்கியமானது . அதன் தொடர்ச்சியாக பண்பாட்டிலிருந்தும் அவை நீக்கப்படுவது நடைபெறும்.

 இலங்கைச் சூழலில் வெள்ளாளர்களிடமும் அவர்களோடு சேர்ந்து  ஒடுக்குமுறையின்அங்கமாகவும் சமூகப் பொதுப்புத்தியில், நம்பிக்கைகளில் பங்கெடுக்க கூடிய ; ‘சடங்கியல்’ பகுதியைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய பிராமணர்கள் , சைவக் குருக்கள் போன்றோர் இன்னுமும் ‘ஐய்யர்’ ‘சர்மா’ போன்ற சாதியப் பின்னொட்டுகளை பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஏனைவர்களை விட சமூகத்தில் அதிகாரமும், கெளவரச் சலுகைகளும் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. வெறும் கோயில் அர்சகர்களாக மட்டும் அவர்கள் இருப்பதில்லை. அவர்கள் கலப்புத்திருமணங்களுக்கு அனுமதிப்பதில்லை,  கோயில் நடைமுறைகளில், சடங்குகளில்,  ‘தீட்டும்’ ‘துடக்கும்’ சாதிய அடிப்படையில் பேணப்படுவதற்கு அவர்களே துணையாகவும் இருக்கிறார்கள். வெள்ளாளரிடமிருந்து சமுக அதிகாரத்தைப் பெறுகிறார்கள். உள்ளூர் வழிபாடுகளை அழிப்பதில், சமஸ்கிருதமயப்படுத்தலுல் பங்கெடுக்கிறார்கள். வேள்வியை, தடைசெய்வது, உள்ளூர் புலால் உணவுப்பண்பாட்டை எதிர்ப்பது  என்று தமிழ் நாட்டுப்பார்ப்பனியத்தின் குணங்குறியளோடே இயங்குகின்றார்கள். அவர்களிடமுள்ள சமய – சடங்கியல் அதிகாரத்தின் அரூப வேர்கள் மக்களின் ‘நம்பிக்கையின்’  பின்னால் மறைந்து வளர்ந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இலங்கையின் சாதிக்கட்டமைப்பின் முக்கிய தூண்களில் ஒன்றாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பார்பனர்களைப் போல ‘அதிகாரமற்ற’ தரப்பு என்று இலங்கைப் பிராமணர்களையோ, குருக்களையோ கடந்து போவதற்கில்லை. நேரடியாக அதிகாரமற்று இருந்தாலும் இந்துமதம் கொடுக்கக் கூடிய ‘வருண’ அவர்களுக்கு துணையாக இல்லாமலில்லை. அவர்களின் பெர்களின் பின்னால் உள்ள ஐய்யரும், சர்மாவும் அவர்களின் ‘மேலாதிக்கத்தின்’ மொழிக்கூறு என்றே எடுக்கப்பட வேண்டும். ஆக இலங்கையில் பயன்படுத்தப்படும் இத்தகைய சாதிய பின்னொட்டுக்களும் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும். அது சாதியத்திற்கு எதிரான போராட்டத்தின்  பெரிய பகுதியாக இணைந்துகொள்ளும்.

மேலும் ‘குறித்த நபருடைய சாதியப் பின்னொட்டை தூக்கிப்பிடிககதீர்கள், அவர் செய்த நற்கருமங்களைப் பாருங்கள், அத்தோடு அவர் அதை சாதிய பின்னொட்டாக பயன்படுத்தவில்லை , அது வெறும் பெயராக , அழைக்கும் சொல்லாகத்தான் பயன்பாட்டில் உள்ளது’ என்பதாகவும் தமிழ்ச்சூழலில் குரலொன்று இருந்து வருகின்றது. இது வடித்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?

ஒட்டுமொத்த உலகத் தமிழ் இலக்கியச் சூழலில்  பெரும்பாலான எழுத்தாளர்கள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள்,  தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதியப்பின்னொட்டுக்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. வெவ்வேறு கருத்தியல் – செயற்பாடுகள் சார்ந்து வேறுபாடுகள் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியச்சூழலில் செயற்படுபவர்களில் பெரும்பாலான சாதியப்பின்னொட்டுகள்  அடைமொழிகளைப் பயன்படுத்துவதில்லை என்பது நல்ல செய்தியாகும்.

இலங்கையின் ஆவணச் செயற்பாட்டில் பெரிய பங்கெடுப்பை மேற்கொள்ளும் நூலக நிறுவனத்தில் செயற்படக்கூடிய  ‘பத்மநாபர் தொடர்ச்சியாக ‘ஐய்யர்’ என்ற பின்னொட்டோடே அறியப்படுகிறார். பயன்படுத்துகிறார் ; அழைக்கப்படுகிறார். அதேபோல யாழ்ப்பாண பல்கலைக்கழக சமஸ்கிருத துறை  விரிவுரையாளரான சர்வேஸ்வரன், ஐய்யர் என்றே பயன்படுத்துகிறார்.   ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதிய சிவசுப்ரமணியம் , அவர் கலந்துகொள்ளும் இணையப்பொதுவெளி உரையாடல்களில் தன்னுடைய பெயருக்கு பின்னால் ஐய்யர் என்ற பின்னொட்டை பாவித்துக்கொள்கிறார்.  கலை, இலக்கியம் , கல்வி முதலான மனிதர்களை பகுத்தறிவூட்ட கூடிய துறைகளில்   ‘புத்திசீவிகளே’ இவ் அடிப்படை விடயங்களை அறியாமலும், அல்லது சாதிய மனநிலையுடனும் இருக்கும் போது தமிழ்ச்சமூகம் சமூக நீதி உள்ள சமூகமாக மாறுவது குதிரைக் கொம்புதான் இல்லையா?

இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதிய எதிர்ப்பு பற்றிய சிந்தனை, செயற்பாடுகளில் முன் நிற்கும் முக்கிய குழுக்களில் ஒன்றாக இருக்கும் கலை இலக்கியப்பேரவையினால் வெளியிடப்படும் ‘தாயகம்’ இதழில் கட்டுரை ஒன்றை எழுதும் பெண் ஒருவர் தன்னுடைய பெயரின் பின்னால் சர்மா என்று பயன்படுத்துகிறார், இதழும் கிஞ்சித்தும் யோசனை இன்றி அதைப் பிரசுரிக்கிறது. பொதுப்பார்வையில் இது அவ்வளவு பெரிய விடயமல்ல என்று தோன்றும், ஆனால் இத்தனை நூற்றாண்டுகளாக சாதியம் தன்னுடைய இருப்பிற்காக உருவாக்கி கொண்ட  பொறிகளில் மொழியில் நிலவக்கூடிய இத்தகைய பெயர்கள், ஒட்டுக்கள் எல்லாம் முக்கிய பகுதியாக இருக்கின்றன.

பொதுச்சமூகத்தையும் , அதன் பொதுப்புத்தியையும் விட்டுவிடுவோம் முற்போக்கான, கலை இலக்கியச்சூழலில் இது மிக அடிப்படையானது இல்லையா? தமிழ்ச்சூழலில் இருக்க கூடிய பிரதான ஒடுக்குமுறைகளில் ஒன்று சாதி என்று நாம் அறியாமலா இருக்கிறோம்? அப்படியிருக்க ஒரு பெயரில் இருந்து பின்னொட்டை எடுத்துக்கொள்வதில் என்ன தயக்கம் இருக்கப் போகிறது. நண்பர் ஒருவர் கேட்டது போல ‘சாதிய பின்னொட்டை எடுத்துவிட்டால் உங்களை யாருக்கும் தெரியாது என்றால் உங்களுடைய வாழ்நாட் பணியோடு எல்லாம் சாதியப்பின்னொட்டும் சேர்ந்து பயணித்ததா? அது பலாபலன்களை அள்ளித்தந்தா?’ சாத்தானுக்கும் கடவுளுக்கும் படைப்பது ஒரே நைவேத்தியம்தானா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆறுமுகநாவலருடைய தமிழ்ப் பணிகளைப் பேசும் போது அவருடைய சாதியச் செயற்பாடுகளை பேசாமல் தவிர்ப்பதை  அயோக்கியத்தனமான அரசியல் நீக்கம் என்கிறோம்தானே ?  இதுவும் அது போன்ற ஒன்றுதான் இல்லையா? ’

மேலும்  சாதிப்பின்னொட்டுகள் நடைமுறையில் , சில இடங்களில் ‘சாதிய அர்த்தத்தில்’ பாவிக்கப்படாதவையாக இருக்கலாம்.  உதாரணமாக ‘பிள்ளை’ என்ற பின்னொட்டு சாதியோட்டு ஆகும் , ஆனால் ஈழத்து நடைமுறையில் அது குறித்த சாதியைச் சாராதவர்களும் பயன்படுத்துகின்றனர். அது  பெயரிடலில்  பொதுப்பெயர்களில் ஒன்றாக  மாறி இருக்கிறது. ஆனால் அப்பெயர்களில் ‘மூலங்கள்’ சாதிய மூலங்களே என்பதனை தலைமுறைகளுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. அப்பெயர்களின் , பின்னொட்டுக்களின் பயன்பாட்டை நீக்க வேண்டியிருக்கிறது.  மேலும், பிள்ளை போன்ற பின்னொட்டுக்களை மட்டுமல்ல ‘அர்’ ’ஆர்’ போன்ற மரியாதை விகுதிகளைக் கூட பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த ஆதிக்க சாதிகள்  தடைவிதித்திருந்த காலமும் இருந்தது அல்லவா? சுவாரஸ்யமாக  ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக, கேலிக்குரலில் அழைக்கும் போது ‘பிள்ளை’ என்ற பின்னொட்டைப் பயன்படுத்துவது இன்றும் நடைமுறையில் இருக்கிறது.  பள்ப்பிள்ளை,, நளப்பிள்ளை, வண்ணாரப்பிள்ளை, அம்பட்டப்பிள்ளை என்று யாழ்ப்பாணத்து ஆதிக்க தரப்பின் நாக்குகள் இன்றும் அம்மக்களை கேலியாக இழிந்து விழிப்பதை மிகச்சகஜமாகக் காணலாம்.

சாதியினால் ஒடுக்குவதற்கு, கேலி செய்வதற்கு, வசைபாடுவதற்கு , ‘தரம் பிரிப்பதற்கு’  ஆதிக்க தரப்புகள் பெயரிடல் என்பதை தங்களுடைய நோக்கத்தை நடைமுறையில் வைத்திருக்கும்  மொழித் தந்திரங்களில் ஒன்றாக தொடர்ந்தும் பேணவே முயற்சிக்கிறது.  பகுத்தறிவுள்ள மக்கள் அதை அவதானிக்க வேண்டும். குறிப்பாக சமூகத்தில் இருக்க கூடிய கருத்துருவாக்கிகளான  கலைஞர்கள், புத்திசீவிகள் அசலான ‘கலைஞர்களாக’ இருப்பது என்பதன் அடிப்படைகளில் ஒடுக்குமுறைகளின் இத்தகைய பகுதிகளில் இருந்து  வெளியேறுவதும் ஒன்றாகும்.

இங்கே மக்களை அரசியல் மயப்படுத்துவது, சாதியை ஒழிப்பது என்பது என்ன?  ஒவ்வொரு சிறிய காலடியும் இந்தப்பெரிய பயணத்தில் எவ்வளவு முக்கியமானவை?   தமிழ்ச் சமூகத்தில் இன்னும் ஒடுக்குமுறையின் அதிகார பீடத்தில் இருக்க கூடிய சாதிக்கு எதிராக எடுக்க கூடிய ஒவ்வொரு முடிவும் முக்கியமானது.  நாம் நட்சத்திரப் பிரபலம் கொண்ட, அறியப்பட்ட எழுத்தாளராக, நடிகராக, அரசியல் பிரமுகராக, ஆவணப்படுத்துபவராக யாராகவும் இருந்துவிட்டுப்போகலாம், ஆனால் எரிகின்ற பிரச்சினை ஒன்றுக்கு எதிராக, சமூக நீதியின்  பக்கம் நின்று சுயமரியாதையோடு  நாம் எடுக்க கூடி ஒரு சிறிய முடிவும்  அவ்வளவு சிறியதல்ல.

 –யதார்த்தன்

 நன்றி – ஜீவநதி

 

 

 

 

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’