ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்நூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி நடுவில் என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்த்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ எப்போதும் நிறையப்பக்கங்களைச் செலவழித்து வெய்யோன் எழுதிக்குவிப்பதை அம்மான் எப்போதும் கண்டிப்பதுண்டு. எனினும் அவனுடைய புலனாய்வு முறைகளும், சிறப்பாக, விசாரணைக் கைதிகளிடமிருந்து நினைவின் மூலை முடுக்கெல்லாம் கிடக்கும் தகவல்களை உருவி விடுவதில் அவனுக்கு இருந்த திறனும் அவனை அவருடைய பிரதான நம்பிக்கையாளர்களில் ஒருவனாக மாற்றியிருந்தது.
மேற்படி அம்மானிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவு செய்யப்பட்ட பக்கங்களில் உள்ள துண்டுகள் கீழே ஒழுங்குபடுத்தப்படுகின்றது.
(பக்கம் 01)
மு.பெயர் – இராசப்பு – நடுவிலார் திருவடி. (நடுவில்)
வயது – 39
சொ. இடம் – மறவன்புலவு சாவகச்சேரி. யாழ்மாவட்டம்.
தொழில் – உருக்கு ஒட்டுபவர் (வெல்டர்)
குடும்ப விபரம் – தவமலர் நடுவிலார்திருவடி (மனைவி – இரண்டுமாதக் கர்ப்பவதி )
விசாரணைக்கான காரணம் – தமிழீழ விடுதலைப்புலிகளால் தடை செய்யப்பட்ட மாற்று இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திற்கு குறித்த உபகரணம் ஒன்றைச்செய்து கொடுத்ததாக கிடைத்த தகவல் ஒன்றை முன்னிட்டு.
(பக்கம் 3)
நடுவிலார் திருவடியைப்பற்றி அவருடைய ஊரில் விசாரித்தமட்டில் கொஞ்சம் அதிகம் கதைக்கக்கூடியவர். பதினைந்து வயதில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் வேலை செய்திருக்கிறார். அந்த நாளில் திரையரங்கில் பணம் கொழிக்கும் இடமாக இருந்த சிற்றுண்டிச்சாலையில் இருந்து ரொக்கம் பணத்தைத்திருடிக்கொண்டு கோச்சில் ஏறி ஹப்பிட்டி போல்லாவ என்ற அநுராதபுரத்திற்கு சமீபமாக இருந்த ஊரில் சிங்களவர் ஒருவரின் இரும்புப் பட்டறையில் சேர்ந்து வேலை பழகிக்கொண்டு அவருக்கு உதவியாளராக இருந்திருக்கிறார். அந்நாளில் அவ்வூரில் பிரபல வட்டிக்கு பணம் கொடுக்கும் நோனா என்ற பெண்னுடன் முறைகேடான உறவில் இருந்திருக்கிறார். (நோனா முதலான பல பெண்களைப்பற்றிச் சொன்னாலும் இந்த விசாரணையில் சந்தேக அடிப்படையான ருசுக்களாகக்கருதும் சிலரைப்பற்றியும் விசாரணை நோக்கத்தோடு தொடர்புபடுபவர்களைப்பற்றியும் நடுவிலார் திருவடி சொன்னவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.)
(பக்கம் 13)
“ஹப்பிட்டிக்கொல்லாவ நோணா எண்டா அப்ப ஊருக்க ஆம்பிளையளுக்கே மூத்திரம் போகும், அவள் ஒரு பொம்பிளை சண்டியன். வேறை என்னெண்டு சொல்லுறது. நாலஞ்சு லொறி நிண்டது, வட்டிக்காறி. லொறி யிலை நிக்கிற றைவர் கிளினர் எல்லாம் பெரிய தடியனவை, நோனா கண்காட்டினால் ஆளை முறிச்சு காட்டுக்க புதச்சுப்போடுவாங்கள், அந்த நாளிலை பொலிஸ் எண்டால் சனத்துக்குத்தான் பயம் நோணாக்கு ஒரு கமக்கட்டில சீட்டுத்துண்டு பேசெண்டால் மற்றக்கமக்கட்டுக்கை பொலிஸ்காரர்தான். நான் சொல்லுறதை வச்சு நோனாவை பேய் பூதம் மாதிரி கற்பனை பண்ணிப்போடாதேங்கோ, செயல்பாடுதான் அப்பிடி , அவள் அப்பிடி ஒரு வடிவு, கொண்டையொண்டு போட்டுக்கொண்டு அந்நாளிலை பேமசான சீத்தையிலை நூலோடித்தச்ச பூப்போட்ட சீலையும் கட்டிக்கொண்டு வெளிக்கிட்டு வந்தாளெண்டால் மயக்கிப்போடுவாள் என்ன? நோணா வாயைத்திறந்தால் தான் தூசணத்தாலை கொப்பளிப்பாள் வாயை மூடிக்கொண்டு இருந்தாளெண்டால் சுந்தரிதான்.”
நோனான்ர லொறியள் கண்துடைப்புக்கு ஓடும் செங்கலும் ஏத்தி இறக்கினாலும் அது வெறும் வெளிப்பார்வைக்குத்தான். டீசல் டாங்குக்குப்பின்னாலை ஒரு பெட்டி ஒட்டி அதுக்க தங்கக்கட்டி,ஹரோயின் எண்டு கள்ளச்சாமானுகள் வந்து போகும். அதாலதான் நோனாவுக்கும் எனக்கும் தொடுப்பானது. டீசல் டாங்க்குப்பின்னாலை பெட்டி ஒட்டிக்குடுக்கிறது வேறையார்? டாங்கு நீளத்துக்கு பிசிறும் தெரியாமல் பெட்டி ஒட்டி கிளிப் பூட்ட வேணும். பொலிஸ்காறன் படுத்துக்கிடந்து கிண்டினாலும் அது டீசல் டாங் மாதிரித்தான் தெரியும். நடுவில் கைவைச்சா சறுக்குமோ வேலை?
நோனாவோடயே இருப்பமெண்டுதான் நினைச்சனான். அவளுக்கும் என்னிலை சரியான விருப்பம். கலியாணம் செய்வம் எண்டு கூட முடிவெடுத்தம். ஆனால் தீடீரெண்டு ஒரு நாள் பொலிஸ் சுத்துவளைச்சு சுட்டதிலை நோனா க்கு வைத்திலை காயம் பட்டு பதினைஞ்சு நாள் ஆசுப்பத்திரிலை வச்சிருந்தும் அவளை மீட்க முடியேல்ல. அவள் செத்தவுடனே கூட நிண்டது திரிஞ்சதெல்லாம் எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு வெளிக்கிடத்தொடங்கினாங்கள். நோனாக்கெண்டு ஆரும் இல்லை. சொத்து உரித்தெல்லாம் பொலிஸ் அரசாங்கத்துக்கு எண்டு சொல்லிட்டு, அவள் எனக்கு ஒரு பெரிய சங்கிலி போட்டவள். அது மட்டும்தான் கழுத்திலை கிடந்தது. அவள் இல்லாமல் அங்கை நிக்க எனக்கு ஒரே அந்தரம். பஸ் ஏறி யாழ்ப்பாணம் வந்திட்டன். சங்கிலியை வித்து ஒரு வெல்டிங்கராஜ் போட்டன்.
பக்கம் 16
கோப்பாயில் பிரபலமான வெல்டிங் கராஜ் (ஒட்டுத்தொழிலகம்) நடுவிலார் திருவடியினுடையது. தவமலர் ஒட்டுத்தொழிலகம். நடுவிலார் திருவடி தன்னுடைய முப்பதாவது வயதில் தவமலரை த்திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருடைய சொந்த ஊரான மறவன் புலவில் குறித்த பெண்ணை கண்டு காதலித்து திருமணம் செய்திருந்தார்.
“பொம்பிளை இல்லாமல் இருக்கேலுமோ தம்பி, சின்னப்பெடியன், போராட்டம் எண்டு வந்திட்டாய் உனக்கு விளங்குமோ என்னெண்டு தெரியேல்லை, நான் சின்னப்பெடியனாய் இருக்கேக்க, அப்ப ஒரு அஞ்சு ஆறு வயசு இருக்கும். எனக்கொரு மாமி இருந்தவா, நான் சீத்தைச்சீலை மாமியெண்டுதான் கூப்பிடுறனான். அவாக்கு என்னிலை சரியான விருப்பம் என்னை தூக்கிக்கொண்டு திரிவா, அவான்ர முகம் எனக்கு இப்ப மறந்து போச்சு, மாமி வேப்பம் பூ ஆஞ்சு வடகம் போட்டு விக்கிறவா,அவாவை நினைச்சால் எனக்கு வேப்பம் பூ வாசம்தான் ஞாபகம் வரும், தூக்கி வச்சிருக்கேக்க அவான்ர சீத்தைசீலையிலை வேப்பம் பூ மணக்கும். சிங்கள நாட்டிலையும் சரி இஞ்சையும் சரி கனக்கப் பொம்பிளையளோட பழக்கம் இருந்த, ஆனால் எல்லாரையும் கட்டோணும் வாழோண்ணும் எண்டு விருப்பம் வரேல்ல. காதல் வரேல்லையெண்டு வச்சுக்கொள்ளன், ஹி ஹி ஹி.., ஆனால் தவமலரைதான் கட்டோணும் எண்டு நினைச்சனான், அவளில்லாட்டி வாழக்கூடாதெண்டு ஒரு நிலைப்பாட்டுக்கு வரவச்சிட்டாள், சொன்னால் நம்ப மாட்டாய் தவமலரிலைதான் பல வரியம் கழிச்சு சீத்தைச்சேலை மாமில மணக்கிற வேப்பம் பூ வாசம் வந்தது”
அவள் அதிஸ்ரக்காரியுமெல்லோ, அவளைக்கட்டினால் பிறகு ஒரு மிசின் எடுத்தனான், முப்பது பரப்பிலை வயல்காணி ஒண்டு வாங்கின்னான். நகையள் செய்து போட்டனான். வாழ்கைக்கு எண்டு ஒருத்தி வந்திட்டால் எல்லாத்திலையும் ஒரு பிடிப்பு வரும் கண்டியோ, அவள் எல்லாத்தையும் கொண்டிழுப்பாள். ஒருக்கா இப்பிடித்தான் என்ர மிசின் கிறாங் உடைச்சுப்போட்டுது, சிலவோடை சிலவாய் இஞ்சினையும் செய்வம் எண்டு கழட்டி பூட்டினன். எல்லாம் பூட்டி முடிஞ்சு ஓயில் வாங்க நான் வவுனியா வெளிக்கிட்டு போட்டன். அப்ப யாழ்ப்பாணத்திலை ஓயில் சரியான தட்டுப்பாடு. ஆமி உள்ளுக்கு விடுறேல்ல. தீடீரெண்டு உங்கடையாக்கள் இடம்பெயருங்கோ ஆமி வாறான் எண்டு சொல்லிப்போட்டாங்கள், மனிசிக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல தனி ஆளா நிண்டு நாலைஞ்சு பேரை பிடிச்சு கறாச் சாமானுகள் , வெல்டிங் சாமானுகள் வீட்டுச்சாமானுகள் எல்லாம் மிசின் பெட்டிக்குள்ள போட்டு ஏத்திப்போட்டு நான் ஓயிலோட வருவன் விட்டு ஸ்ராட்பண்ணி வெளிக்கிடுவம் எண்டு பாத்துக்கொண்டு நிண்டிருக்கு ஆனால் எங்கை நான் வந்தது, நான் கிளாலிலை போட் வருமெண்டு நிண்டன். மனிசிக்கு இருந்து பாத்திருக்கு செல்லுகள் கிட்டக்கிட்ட விழுற சத்தம், இயக்கப்பெடியள் வந்து வெளிக்கிடுங்கோ வெளிக்கிடுங்கோ எண்டு சொல்லியிருக்கிறாங்கள். கழட்டி வைச்சிருந்த கழிவோயிலை திரும்ப மிசினுக்க ஊத்தி பக்கத்தை வெளிக்கிட்ட இன்னொரு மிசின்ல கட்டி தானே ஸ்ரேறிங் பிடிச்சு வடமராட்சிக்கு கொண்டு போய் சேத்திட்டாள்.
“கலியாணம் செய்து கனகாலமாய் பிள்ளையொண்டு இல்லையெண்டுதான் ஒரே கவலை அவளுக்கு. எனக்கு அவளிருக்கிறாள் எண்டதே காணும் மாதிரி, ஆனால் பொம்பிளைக்கு ஒரு சீவன் வையித்திலை தங்காட்டி ஏதோ பெரிய குற்றமெண்டமாதிரித்தானே சொல்லி வளக்கிற, ஏன் பொம்பிளையெண்டால் கட்டாயம் பெறோணுமோ எண்டு கேட்டால், நான் எதோ ஆறுதல்படுத்தச் சொல்லுறன் எண்டு கண்கலங்கீடுவாள், வேற என்ன செய்யிறதெண்டு டொக்டர் மாருக்கும், கோயில் நேத்தியளுக்கும் காசைக்கரைச்சு இப்ப தவமலர் ரெண்டு மாசம். அதுக்குள்ளைதான் நீங்கள் பிடிச்சுக்கொண்டு வந்திட்டியள், என்ன செய்யிறாளோ? அவள் தனிய எண்டால் சமாளிப்பாள், இப்ப ரண்டு சீவனை ஒராளிலை வச்சுக்கொண்டு என்ன செய்யிறாளோ தெரியேல்ல, என்னை விட்டுடுவியள் தானே தம்பி?”
(பக்கம் 23)
புலனாய்வு அறிக்கைகள் குறிப்பிடும் தகவல்களுக்கும் நடுவிலார் திருவடிதன்னைபற்றி விசாரனையில் சொன்னவையும் ஒத்துபோவதை இங்கே மேற்கோள்காட்ட வேண்டும். முதலில் அவருடைய இளமைக்காலம் குடும்பப்பின்னணி என்பவற்றை விசாரித்தோம். கைது செய்யப்பட்ட மனிதரைப்போலில்லாமல் தான் விடுவிடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கையோடு அவர் தன்னைப்பற்றிச்சொல்லிக்கொண்டிருந்தார். புளோட் இயக்கத்தினரைப்பற்றி கேட்ட போது அவரிடம் ஒரே ஒரு தயக்கம் மாத்திரம் இருந்தது.
“தம்பி நான் எல்லாத்தையும் சொல்லத்தான் போறன், ஆனால் நீங்கள் எனக்கு ஒரு உறுதியளிக்கோணும் என்னை வெளியிலை விட்டாப்பிறகு புளோட்காரர் புழங்காத இடத்திலை எனக்கு ஒரு கடை எடுத்து தரவேணும், என்னை பிடிச்சது இத்தறிக்கு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவ்வளவு நாளும் என்னை நீங்கள் தேடினனியள் இனி அவங்கள் தேடப்போறாங்கள்”
“அண்டைக்கு இரவு பதினொருமணியிருக்கும், மட்டுவில் பக்கம் போய் கசிப்புக்கொஞ்சம் அடிச்சிட்டு சைக்கிள்ள வந்து புத்தூர் சந்தியிலை ஏறினான். அப்ப ஒரு நாலஞ்சு பேர் என்னை மறிச்சவை, அதிலை ஒருத்தனை எனக்கு தெரியும் பாலாலி பெரியாம்பியற்ற பெடியன், அவனைக்கண்டதுமே எனக்கு புளோட் பெடியள்தான் எண்டு விளங்கீட்டுது. எனக்கு மடியிலை கனமில்லை எங்கடை பெடியளிட்ட எனக்கென்ன பயமெண்டு இறங்கினன், என்னதம்பி பாக்கிறாய், எல்லாரும் ஒண்டாய்தானே நிண்டனியள், நாளைக்கு சேந்தாலும் சேருவியள் ஆருக்குத்தெரியும், பிறகு கேள் மறிச்சுப்போட்டு, அந்தபெடியந்தான் வந்து கதைச்சான். அண்ணை ஒருக்கா எங்களோடை வரோண்ணும் எண்டான், நான் நல்ல கணகணப்பிலை போன்னான், என்னத்துக்கு நான் என்ன செஞ்சனான் எண்டு உரப்பினன், பெடியன் நல்ல நிதானமானவன் ஒண்டுமில்லையண்ணை ஒரு வாகனம் ஒட்டோணும் கொஞ்சம் அவசரம் எண்டான். நான் நேரமில்லை மனிசி பாத்துக்கொண்டு இருக்கும் எண்டன். பெடியன் ஏதோ சொல்ல வந்தவன் அதுக்குள்ள பக்கத்தை நிண்ட ஒரு ஒல்லி வலட்டை கையை ஓங்கீட்டுது, நான் தடுமாறி சைக்கிளுக்கு மேலை விழுந்திட்டன். எழும்பி வேசை மோனே எண்டு அடிக்கப்போக என்னை அமத்திப்பிடிச்சு சாக்காலை தலையை மூடி கைகாலெல்லாம் கட்டி வாகனத்திலை தூக்கிப்போட்டுக்கொண்டு போறாங்கள். சாங்கு மணம்,சரியாய் பயந்தும் போனன். சுடத்தான் கொண்டு போறாங்களோ எண்டு யோசிச்சும் போட்டன். அவங்கள் என்னைச் சாக்குக்கை இருந்து அவுக்கேக்கை நல்லா விடிஞ்சு போச்சு. கண் முழிச்சால் ஏதோ காடுமாதிரி ஒரு இடம், தகரத்தாலை பெரிய செற் ஒண்டு போட்டு கறாச் ஒண்டு அடிச்சிருந்தாங்கள், நாலஞ்சு பெரிய வாகனங்கள் பலகையள் , இருப்பத்தகடுகள், வெல்டிங் மிசினுகள்,காஸ் சிலிண்டருகள் எண்டு எல்லாம் இருந்தது. எனக்கு வெறி முறிஞ்சு என்ன செய்யிற எண்டு தெரியாமல் முழிச்சுக்கொண்டு நிண்டன். அப்பத்தான் பொறுப்பாளர் பெடியன் ஒருத்தன் வந்து கதைச்சான், அவனுக்கு ஏதோ பேர் வசந்தனோ என்னவோ , அவன் வந்து தங்களுக்கு ஒரு வேலை செய்து தரோண்ணும், ரகசியமான வேலை செய்து தந்தால் கொஞ்சம் காசும் தருவம், எண்டான். அதுக்கு நான் அதுக்கு கட்டி தூக்கிக்கொண்டு வருவீங்களோ எண்டு கேட்டன், அவன் சின்னப்பெடியள் ஆளைகூட்டிக்கொண்டு வாங்கோ எண்டு சொல்ல பிடிச்சுக்கொண்டு வந்திட்டாங்கள், பாண்டியன் கோவலனை கொண்டு வரச்சொன்ன மாதிரி சொல்லியிருந்தால் கொண்டிட்டு வந்திருப்பாங்கள் நல்லவேளை கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டு சொன்னது, எண்டு பகிடி விட்டுச்சிரிச்சான். எனக்கு விசர் வந்தது. பேசாமல் இருந்திட்டன்.”
“பிறகு, அண்டைக்கு மனிசிக்கு வேலையாய் நிக்கிறார் வந்திடுவார் எண்டு போய் சொல்லியிருக்கிறாங்கள், மனிசி பயந்து ஊரைக்கூட்டி அழ மனிசய கூட்டி வந்து என்னைக்காட்டிப்போட்டு கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வந்தாங்கள். நான் வேற வழியில்லாமல் வேலை செய்துதர ஒத்துக்கொண்டன். ஊரிலை பெரிய வெல்டரவை எல்லாம் இருக்க என்னைத்தான் வேணுமெண்டு அவங்கள் நிண்டது எனக்கு உள்ளுக்கை ஒரு பெருமை ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் வெள்சுள் எண்டுதான் நிண்டன், கடைசியாய் பெடியன் ஒரு பெரிய மேசேலை படமெல்லாம் கீறின பேப்பருகளைக்காட்டினான், எதோ அரபு மாதிரி மொழியிலை எழுதிக்கிடந்தது, படங்கள்ள சில்லுகள், செயினுகள் எல்லாம் தெரிஞ்சுது பாக்க ஒரு செயின் புளக் மாதிரி இருந்து. நான் “இதென்னடாப்பா செயின் புளக்கோ? எண்டு கேக்க ஓம் எண்டு தலையாட்டினாங்கள். உங்களுக்கென்ன விசரோ வெல்டிங் கறாஜ்சிலை வச்சு செயின் புளக் செய்யலாமோ எண்டு கேட்டன். அவன் செயின் புளக் செய்ய சொல்லேலை செயின் புளக் மாதிரி ஒண்டு செய்து தரச்சொல்லுறம், துவக்குச்சுட்டால் துளைக்காத அளவுக்கு இரும்பு ஒட்டி ஓடக்கூடிய மாதிரி செய்யோணும், இஞ்ச ஒரு நல்ல பஜிரோவும், புல்டோசரும் நிக்குது ரெண்டையும் கழட்டி பூட்டி ஒட்டி செயின் புளக்கா மாத்த வேணும் எண்டான். இஸ்ரேல்ல இப்பிடித்தான் ஒர்ண்டு செய்தவங்கள் எண்டு சொல்லி அந்த செயின் புளக்கின்ர படங்கள் விளக்கங்களை காட்டினான். எனக்கு அதுகளை பாத்தோண்ணையே அதுகளின்ர ஒட்டு வேலை கட்டுவேலை எல்லாம் விளங்கீட்டுது. லொறிக்கு பொடியடிக்கிற மாதிரித்தான். இரும்பு சட்டங்கள், பலகையள ஏத்தி ஒட்டவேணும், உண்மையச்சொல்லோணுமெண்டால் எனக்கு அது நல்லாய் பிடிச்சுப்போச்சு ஒரு பெரிய ராணுவ வாகனம் ஒண்டு செய்யப்போறன் எண்ட சந்தோசம். உடனை ஒத்துக்கொண்டால் முறிச்சுப்போடுவாங்கள் எண்டு நினைச்சுக்கொண்டு ஒரு நிபந்தனை போட்டன்.
“இஞ்ச பாருங்கோ நான் இதை செய்து தர வேணும் எண்டால் இதுக்கு நாந்தான் பேர் வைப்பன்.” பொறுப்பாளர் பெடியன் யோசிச்சிட்டு வோக்கிலை அடிச்சு யாரையோ எதோ கேட்டான். பிறகு “சரி” எண்டான். அவனுக்கு என்னைப்பாக்க ஏதோ விளையாட்டுச்சாமானுக்கு பேர் வைச்சு விளையாடுறவன் மாதிரி இருந்திருக்கும் போல, முகத்திலை ஒரு நக்கல் சிரிப்பும். எனக்கு ஆரோ ஒருமன்னன் தாச்மஹாலை கட்டச்சொல்லிட்டு கட்டி முடிய இன்னொண்டு கட்டக்கூடாதெண்டு அவன்ர தலையை வெட்டி புதைச்சுப்போட்டான் எண்ட கதை டக்கெண்டு ஞாபகம் வர உள்ளுக்க வேர்த்துக்கொட்டிச்சுது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் வேலையத்துடங்கினன்.
(பக்கம்29)
புளொட் அமைப்பினர் இரகசியமாகச்செய்து முடித்த டாங்கிக்கும் துருப்புக்காவிக்கும் இடைப்பட்ட செயின் புளக் பற்றி நடுவிலார் திருவடி தந்த தகவல்களும் நம்முடைய புலனாய்வாளர்கள் சேகரித்திருந்த தகவல்களும் நன்கு பொருந்திப்போயின. குறித்த டாங்கி பற்றிய இரசியமான தகவல்கள் கிடைத்த போது யாரும் முதலில் அதை நம்பியிருக்கவில்லை. ஆனால் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நடுவிலார் திருவடி கைதுசெய்து விசாரிக்கப்பட்ட பிறகு குறித்த செயின்புளோக் இருப்பது உறுதியாகத்தெரியவந்துள்ளது. மேலும் குறித்த செயின் புளொக்கிற்கு “குசலாம்பாள்” என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பது புதுதகவலாகும்.
“அதென்ர காதலின்ர பேரெல்லோ, நான் ஹெப்பிட்டி போலாவவிலை இருந்து ரெயினேறி வந்து இஞ்ச வெல்டிங்கராஜ் போட்ட ஆலடிக்கு பக்கத்த ஒரு பிள்ளையார் கோயில் இருந்த கோயிலுக்கு பக்கத்திலை ஒரு ஐய்யர் வீடு. ஐய்யரெண்டால் குருக்களுக்கு படிச்சவர். ஐய்யருக்கு இரண்டு பெடியளும் ஒரு பெட்டையும், பெடியள் ரண்டு பேரும் கோப்பாயிலை ஒருத்தன் ஒரு சிவன் கோயில்லையும், மற்றவன் உரும்பிராயிலை ஒரு கோயில்லையும் பூசை. ஐய்யற்ற பெட்டைக்குப்பேர்தான் குசலாம்பாள். என்ர ஆள். எனக்கு குசலாம்பாளை பாத்த உடனையே பிடிச்சுப்போட்டுது. வேப்பம் பூ வாசம் வராட்டியும், ஒரு ஐய்யர் பெட்டையை கட்டோணும் எண்டுறது எனக்குள்ள ஒரு ஆசை. குசலாம்பாள் கொஞ்சம் மெல்லிசெண்டாலும் களைதான். கண்ணுக்கை மையில்லாம் அடிச்சு கிடிச்சு படிக்கப்போற வடிவொரு வடிவுதான். ஆள் போய் வரேக்க என்ர கறாச்ச தாண்டித்தான் போய்வருவா, இடைக்கிட சும்மா கதை குடுப்பன், முதல் பேசாமல் போனவள் பிறகு மெல்ல மெல்ல பதில் சொல்லத்தொடங்கினாள், தேப்பன் பூசைக்கு போற நேரம் தாயிட்ட கோயிலடியிலை நிக்கிறன் எண்டு சொல்லிட்டு என்னோட வந்து கதைப்பாள். சில ஆம்பிளையள் தங்கடை பழைய காதல் – தோத்துப்போன காதல் கதையளை தாங்கள் ஏதோ பெரிய காதல்மன்னன் எண்டும் , அவளை அப்பிடிப்பாத்தனான் இப்பிடி வச்சிருந்தனான் எண்டு புழுகி அநியாயமாய் தன்னை ஏமாத்திப்போட்டாள் எண்டு அழுது , கையைப்பிடிச்சு அழுது பிறகு தோளிலை கிடந்து அழுது, கடைசில மடியிலை கிடந்து அழுது ஒருமாதிரி ஓம் எண்டப்பண்ணிடுவாங்கள். நானும் வேறை என்ன செய்வன் நோனாவை நான் லவ் பண்ணின கதையைச் சொன்னன். வழமையாய் ஆம்பிளையள் சொல்லுறதை கொஞ்சம் மாத்தி நோனா என்னை விழுந்தடிச்சு காதலிச்சு அநியாயமாய் செத்து போனாள். அவளின்ர பிரிவு தாங்கேலாம கிடக்கு. உன்ர மூக்கும் அவளைப்போலத்தான் நல்ல கூரா இருக்குது உன்னைப்பாத்ததும் அவளின்ர ஞாபகம்தான் வந்தது அதுதான் கதை குடுத்தனான் எண்டு சொன்னன். இதிலை சிரிப்பு என்னெண்டால், நான் தவமலரை காதலிக்கேக்க நோனான்ர கதையும் குசலாம்பாளும் சேர்த்து ரண்டு கதை இருந்தது.
பின்ன கேளன் தம்பி,ரண்டு வருசமாய் குசலாம்பாளுக்கு கதை குடுத்து கதை குடுத்து ஒரு நாள் கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டு வடமராட்சிலை புறாப்பொறுக்கிச்சந்தியடில ஒரு வீடெடுத்து இருந்திட்டம். ஊருக்க நான் ஐய்யர் பெட்டை ஒண்டை கூட்டிக்கொண்டு போட்டன் எண்டு கதை. எனக்கு சரியான பெருமை. அவளை தாங்கு தாங்கெண்டு வச்சு தாங்கினன். ஒம்பதாம் நாள் ஐய்யற்ற மனிசி எங்கையோ மணந்து பிடிச்சு பெட்டைய கண்டுபிடிச்சு வந்திட்டா. இவள் இடைக்கிட அம்மா வேணும் அம்மா வேணும் எண்டு கொண்டு இருந்தவள். தாயை கண்டோண்ணை வாரப்பாடா இருத்திக்கதைச்சாள். நானும் அவளை மீறி என்ன நடக்கப்போகுதெண்டு நினைச்சுக்கொண்டு இருந்தன். ஆனால் ஐய்யரம்மா மாசாலக்கண்ணி. ஏதோகதைகதையெண்டு கதைச்சு என்ர ரண்டு வருசக்கதையை வெட்டி நல்ல கதையாய் ஏதோ சொல்லிப்போட்டு போட்டாள். ஒரு நாலைஞ்சு நாள் கழிச்சு இவள் “அம்மாட்டை ஒருக்கா போட்டு வரப்போறன் பஸ்ஸிலை ஏத்தி விடுங்கோ” எண்டாள். நானும் சரி போட்டு வரட்டுமன். ஐய்யர் வீட்டோட நல்லமாதிரியானால் பழைய படி ஊருக்கே திரும்பிடாலாம் எண்டு நப்பாசைப்பட்டு பருத்துறைக்கு கொண்டு போய் ஏத்தி விட்டன். போனவள் போனவள்தான். திரும்பவேயில்லை. அடிச்சுப்பிடிச்சு போய் கேட்டால் தான் வரமாட்டன் எண்டு உறுதியாய் நிண்டிட்டாள். காலிலை கூட விழுந்து பாத்தன். ஐய்யரும் மனிசியும் ஏதோ மையை போட்டிட்டாங்கள் போலை. விறுமன் குணம் பிடிச்செல்லோ நிண்டாள். இப்பவும் “நான் வரமாட்டன் ” எண்டு அவள் உலுப்பிக்கொண்டு சொன்னது கண்ணுக்கை நிக்குது என்ன. பிறகென்ன நாலைஞ்சு மாசம் கழிச்சு உருத்திரபுரத்திலை ஒரு புக்கைப்பிராமணிக்கு அவளைக்கட்டிக்குடுத்திட்டாங்கள். நான் அதுக்குப்பிறகு அவளைத்தேடவேயில்லை. ஆனால் அவளிலை ஒரு விருப்பம் உள்ளுக்கை கிடந்தது. கிடக்குது. கிடக்கும்.
பக்கம் 52
இவ்வறிக்கையின் கடைசிப்பகுதியை எழுதிக்கொண்டிருக்கும் போது குசலாம்பாள் என்கின்ற செயின் புளக் அமுக்க வெடி ஒன்றின் மூலம் அழிக்கப்பட்டதை அறிகிறேன். தொடர்ந்து, நடுவிலார் திருவடியின் விசாரணை அறிக்கையின் முடிவில் குறித்த நபர் விடுதலைப்புலிகளால் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றிற்கு செயின் புளொக் ஒன்றை செய்து கொடுத்தமையை ஒப்புக்கொண்டதுடன். அதனை ஏனைய புலனாய்வுத்தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் குறித்த செயின் புளக்கை மீண்டும் குறித்த அமைப்பு உருவாக்க வாய்ப்பிருக்கின்றது.இராணுவத்தின் கையிலோ அல்லது ஏனைய தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் கையிலோ குறித்த ஊர்தியின் கட்டுமானம் பற்றிய தகவல்கள் போவது போராட்ட நாட்களில் கணிசமான பலவீனத்தை தருமென்றே நினைக்கின்றேன்.
02
நடுவிலின் நினைப்பில் ஒரு பாதியும் அடி வயிற்றில் நேர்ந்ததற்கு ஒரு பாதியுமாக அழுது அரற்றி, அழுகை திண்மமாகி உள்ளூர இறுகிய பின்னரும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. இரண்டு முறை கருப்பையை சுத்தம் செய்ய வேண்டியிருந்தது தவமலருக்கு. “பிறக்காத சீவன் வெறும்கட்டுக்கதை மாதிரி அதுக்கு இப்ப இந்த உலகத்த பாக்க விருப்பமில்லாமல் திரும்பீட்டுது அதுக்காக அழாம அங்க உத்தரிச்சுக்கிடக்கிற நடுவிலை மீட்டுக்கொண்டு வாற வழியைப்பார் பிள்ளை” தாய்க்காரி மகளைத்தேற்றிக்கொண்டிருந்தாள். அடிவயிற்று ரத்தத்தின் சூட்டையும் நடுங்கும் உடலையும் தவமலரின் மனதினால் எதிர்கொள்ள முடியவில்லை. தவமலர் இயல்பிலேயே கடுமையும் உறுதியும் உள்ளவள். அவளுடைய பலவீனம் நடுவில் மட்டும்தான். தாய்க்காரி சொல்வதைப்போல அவளை விட்டு வெளியேறிய சீவனைக்கூடக்கடந்துவிடுவாள். ஆனால் அவளுக்கு நடுவில் வேண்டும். தன்னைப்பொருத்தி நிறுத்தக்கூடிய ஒரே இடைவெளி அவன் மட்டும்தான் என்பதில் இருந்த அசைக்கமுடியாத நேசம் எதில் வேரூன்றி நிற்கின்றது என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரண்டு நாட்களில் இரத்தப்போக்கு நின்றபிறகு அரசியல் துறை அலுவலகமே கதியென்று கிடந்தாள். உறைந்ததை உருக்கி கண்ணீரை வெளியே எடுத்து ஒவ்வொரு பொறுப்பாளரின் காலில் விழுந்து கதறினாள். காலையில் அவர்களுக்கு அவள் முகத்தில்தான் விடிந்தது. குலைந்து போன நூல்சுருளைப்போல காலம் அவளை துயரத்தின் பற்றைக்காட்டில் வீசி சிக்கவைத்திருந்தது. தவமலரின் தினசரிவாழ்வு அங்கேதான் கழிந்தது. ”அவரை விடுங்கோவில்” தொடங்கிய இறஞ்சும் வார்த்தைகளும் அழுகையும் “ஒருக்கா அவரைக்காட்டுங்கோ” வரை தேய்ந்தது. கடிதங்கள், படிவங்கள் , சிபாரிசுகள் என்று ஒவ்வொரு நாளும் அத்தனை சம்பிரதாயங்களாலும் அவளை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது நடுவிலை அந்த பேசில் வைத்திருக்கிறார்கள், இந்த பேசில் வைத்திருக்கிறார்கள் என்ற ஊகங்களைக்கூட விடாமல் பின் தொடர்ந்து புலிகளின் தங்குமுகாம்களைத்தொடர்ந்தாள். ஊரில் பெரியமனிதர்கள்,வால்கள் தலைகள், சிண்களை எல்லாம் பிடித்துக்கொண்டு போய் சிபாரிசுக்கு நிறுத்தினாள். நான்கைந்து பேர் பணம்கூட வாங்கினார்கள். ஒவ்வொரு சுற்றாகப்போகும்ப்போதும் ஏதாவது புதுத்தகவல் சொல்வார்கள். கண்களில் அத்தனை கயமை இருந்தாலும் அவரை நம்பு என்று மனத்திற்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.
சிவலிங்கப்பரியாரியார் வேறு ஒவ்வொரு வெத்திலைக்கும் மைக்கும் திசைகளை விற்றுக்கொண்டிருந்தார். இந்த திசையில் அசைவு தெரியுது, கொஞ்சம் அடிச்சிருக்கிறாங்கள் போலைதான் கிடக்கு, ஆனால் பயமில்லை ஆள் இருக்கிறான், நாப்பது தேசிக்காய் வெட்டி புரட்டினால் காவலுக்கு வைரவர் போய் நிக்கமாட்டோனோ? நீ ஒண்டும் யோசிக்காதை, என்று அவளை விட பரியாரிக்கு நடுவிலை உயிருடன் வைத்திருப்பது முக்கியமாகவிருந்தது. ஊரில் பிரபலாமான பிரபலமாக முயற்சி செய்துகொண்டிருந்த எல்லா கடவுளர்களும் அவள் வைத்த நேர்த்திகளுக்காக காத்திருக்கத்தொடங்கினார்கள். அண்ணமாரில் இருந்து அந்தோனியார்வரை வரிசையில் நின்றார்கள். திடுக்கிட்டு எழும் இரவுகளையும் கண்ணீருடன் அயர்ந்து உறங்கும் பகல்களையும் கழித்துக்கொண்டிருந்தாள்.
அரசியல் துறை பேசில் நின்றவர்கள் இவளை ஒரு அளவிற்குன் மேல் கையமர்த்தமுடியாமலும் சமாளிக்க முடியாமலும் இருந்தனர், சலித்தும் திட்டியும் பேசியும் ஏன் ஒரு தடவை இழுத்துச்சென்று கதவுக்கு வெளியே வளர்த்தியும் அவள் அவர்கள் முன் தோன்றி தன் துயரத்தையும் கோரிக்கையையும் வைப்பதை நிறுத்துவதாயில்லை. ஒரு கட்டத்தில் அவளுடைய உறுதியும் கண்ணீரும் அவர்களை அச்சப்படவைத்தது. அவர்களின் கண்ணில் முன்பிருந்த பரிதாபம்,அலட்சியம், எரிச்சல், சலிப்பு, கோவம் என்பவற்றைத்தாண்டி அவளுடைய துயரத்தின் முன்பும் உறுதியின் முன்பும் நிற்க பயப்பிட்டதை தவமலர் கண்டாள். \
ஒரு செவ்வாய் கிழமை மாலையில் (அதாவது லெப்.கேணல் வெய்யோன் அம்மானிடம் தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்து சரியாக மூன்று மாதங்கள் கழித்து) தவமலரும் தாய்க்காரியும் பேசிஸ்கு அழைக்கப்பட்டனர். நடுவில் கைது செய்யப்படும்போது அணிந்திருந்த நீல நிறச்சறமும் இடது கமக்கட்டுப்பக்கமாக லேசாக கிழிந்தும் நான்கைந்து தெறிகள் அறுந்துமிருந்த பச்சை நிற செக் சேட்டும் நன்கு துவைத்து அழுத்தப்பட்டு தவமலரின் கைகளில் வளர்த்தப்பட்டது. சம நேரத்தில்“உங்கட கணவர் தேசத்துரோகி எண்டு உறுதியானதாலை அவருக்கு சாவுறுப்பு வழங்கியாச்சு அம்மா” என்று சம்பிரதாயமான வார்த்தைகளால் எந்த உணர்வும் இன்றி கற்களை ஒழுங்குபடுத்தும் பாவனையை சொற்களின் இடையில் வைத்து சீரான கனமான வார்தைகளால் பொறுப்பாளர் சொல்லி முடித்தார்.
03
இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் ஒரு மாவீரர் நாளில் நடுவிலார் திருவடி கிளிநொச்சி நடுவப்பணியகத்தில் வைத்து விடுவிக்கப்பட்டான். புது நிறத்தில் விரிந்திருந்த அந்த சமாதான காலத்து உலகத்தினுடைய காட்சிகளைக்கடந்து அவன் தவமலரைத்தேடி யாழ்ப்பாணம் போயிருந்தான். மறவன்புலவில் அவனுடைய வீடு ஷெல் விழுந்து பாதி சரிந்து பற்றை மண்டிக்கிடந்தது. ஞாபகங்களை மீட்டுக்கொண்டு சுவர்களைத்தடவ அங்காங்கே சன்னங்கள் துளைத்த காயங்கள் சுவர்களில் அம்மைத்தழும்புகளைப்போல பரவியிருந்தன. காராஜ் இருந்த இடத்தில் யாருடையது என்று அவனுடைய ஞாபகத்திலிருந்து சுத்தமாக அழிந்து போயிருந்த பழைய ஆமைக்கார் ஒன்று கறள் ஏறிச்சிதைந்து நின்றிருந்தது. அங்கே சில இரும்புச்சாமான்களும் நிலத்தோடு நிலமாக கொடிகளோடு கொடிகளாகப் பரவிப்புதைந்திருந்தன. காரை ஆராய்ந்ததில், அதன் டாஷ்போட்டில் துருவேறிய சிறிய ஸ்குரூ ரைவர் ஒன்று சாம்பல் நிறப்பிடியுடன் கிடந்தது அதை எடுத்து சறத்திற்குள் பத்திரப்படுத்திக்கொண்டான். வீட்டிலிருந்து வெளியேறி அயலட்டையைத்தேடிச்சென்று விசாரித்ததில் அவர்கள் ஆச்சரியப்பட்டுக்கொண்டே தவமலரின் கருச்சிதைவும், நடுவிலார்திருவடியினுடைய மிகப்பழைய தேசத்துரோகத்தின் விளைவான மரணச்செய்தியையும் அவனுக்குச்சொன்னதோடு, இறுதியாக கொஞ்சம் தயக்கத்தையும் கவலையையும் செயற்கையாக வரவழைத்துக்கொண்டு (உள்ளூர அவர்கள் வேடிக்கையுடன்தான் அதைச்சொன்னதாக நடுவிலார் திருவடி நினைத்தான்) தவமலருக்கு திருமணமானதையும் குழந்தை ஒன்று இருப்பதையும் சொன்னார்கள்.
அவர்களிடமிருந்து வெளியேறி மீண்டும், புதர்களாலும் கொடிகளாலும் பிணைக்கப்பட்டிருந்த அவனுடைய கூரையற்ற சுவர்கள் சரிந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஷெல் சரித்தது போக தலையாக வேய்ந்திருந்த ஓடுகளையும் மரங்களையும் யாரோ வெகுகாலம் முன்பே கழட்டியிருக்க வேண்டும். பலவருடத்து மழை சுவர்களில் படை படையாக பாசியேற்றியிருந்தது. நடு வீட்டுக்குள் போயிருந்து. சுவரில் சாய்ந்து கொண்டு வானத்தைப்பார்த்தான் நிர்மலவானின் நீல வெறுமை அருகில் வந்து விரிந்தது.பத்துவருடங்களுக்கு முதல் சாவுறுப்பில் கொல்லப்பட்டதாகச் போனதாகச்சொல்லப்பட்ட அவனுடைய உடல் நடுங்கும்படி அடி நெஞ்சில் இருந்து அமிலம் போலப்பரவி மகாஅழுகையொன்று வெடித்தது. தலையில் அடித்துக்கொண்டு வானத்தையும் காலத்தையும் ஒப்பாரி சொல்லி அழத்தொடங்கினான் நடுவிலார் திருவடி.
04
தமிழீழ மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வலது பக்கமாக இருந்த தமிழீழ சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த மதில் சுவர் விளிம்பில் நடுவிலார் திருவடி பீடி ஒன்றை இழுத்து நெஞ்சுக்குள் புகையை நிறைத்துக்கொண்டு இருந்தான். மிருசுவிலில் இருந்த சிவலிங்கப்பரியாரியின் வீட்டில் அன்றைக்கு தவமலரை எதிர்கொண்ட காட்சிகளை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டான்.
வீட்டை விட்டு கொஞ்சம் விலத்தி நின்றிருந்த மாமரத்தின் கீழே இருந்த ”ட”வடிவக்கொட்டிலில் சற்று உயரமாகப்போடப்பட்டிருந்த கட்டிலில் சிவலிங்கப்பரியாரியின் மனைவி கொச்சிக்கிழவி நெஞ்சு எழுந்து தாழ்ந்துகொண்டே இரையுமாறு, செலைன் போத்தல் ஒன்றில் தொடங்கிய மெல்லிய வயரில் ஓடிய மருந்து சொட்டுச்சொட்டாக அவளுடைய கடைசி நாட்களை சீவனுக்காகத் தாமதப்படுத்திக்கொண்டிருக்க,கிழவி, நெஞ்சு எழுந்து தாழ்வதைத்தவிர சீவன் இருப்பதற்குரிய எந்த ருசுவுமின்றிக் குலைந்திருந்தாள். அவளுடைய மூத்திரப்பை கட்டிலுக்கு கீழே தடித்த பைப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து லேசாக வாடை வந்தது. அவளின் தலைமாட்டில் கொஞ்சம் மருந்துச்சரைகளும் ஊசிகள் கழட்டப்பட்ட சிறிஞ்சுகழும் காலியான வயர்கள் சுற்றப்பட்ட செலைன் போத்தல்களும் கிடந்தன. அவை அனேகமாக கிழவியின் நீரிழிவுக்கான இன்சுலின் சிரிஞ்களாக இருக்கவேண்டும். சிவலிங்கப்பரியாரி இறந்து மூன்று வருடமாகிவிட்டதாக விசாரித்து வரும் வழியில் கேள்விப்பட்டிருந்தான். சிவலிங்கப்பரியாரியின் கடைசி மகனைத்தான் தவமலர் தன்னுடைய இரண்டாவது வாழ்க்கைத்துணையாகத்தேர்ந்தெடுத்திருந்தாள் என்பது நடுவிலார் திருவடிக்கு பெருத்த ஆச்சரியத்தைக்கொடுத்தது. நடுவிலார்திருவடி ’சொடுகன்’ என்று பட்டப்பெயர் கொண்டு அழைக்கும் பால்ய சினேகிதனான பாலன் இப்போது அவனுடைய மனைவியின் கணவன் என்பதை எந்தத் திசையில் இருந்து சொன்னாலும் நம்பமுடியாதவனாகவிருந்தான். தவமலர் நடுவிலைப் பற்றிச் சாத்திரம் கேட்க அடிக்கடி பரியாரியாரிடம் போய் வரும் போது ஏற்பட்ட பழக்கத்தைப்பற்றி இவன் அறிந்துகொள்ள வாய்ப்பேதும் இருக்கவில்லை.
சிவலிங்கப்பரியாரி வீட்டில் கிழவியைத்தவிர வேறேதும் சந்தடியில்லை. கிழவிக்கு கிட்டப்போய் எணேய் எணேய் என்று அரற்றிப்பார்த்தான். பயனில்லை. பூட்டியிருந்த வீட்டைச்சுற்றி பின் பக்கம் வந்தான். தரையில் பூசணிக்கொடிகள், வேலிகளில் பாகல். கோடைகாலத்துக்குரிய வறட்சியுடன் அந்த சின்ன வீட்டுத்தோட்டம். தோட்டத்தின் வலதுபுறமாக குவிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற கடற்கரை மணலில் ஒரு சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். ஆறேழு வயதிருக்கும். ’சொடுகன்’ பாலனுக்கும் தவமலருக்கும் பிறந்த குழந்தை.
ஒரு மஞ்சள் நிற மணல் அள்ளும் பக்கோ இயந்திரம் போன்றதொரு விளையாட்டு பொருளை வைத்திருந்தாள். அந்த சிறிய பக்கோவின் கோலும் கையை தன்னுடைய கைனால் மடக்கி மணலைக்கோலி அப்படியே திருப்பி கொட்டினாள். மீண்டும் கோலி கொட்டினாள். நான்கைந்து முறை கோலிக்கொட்டி விட்டு மீண்டும் கொட்டிய மணலைக்கோலி பழைய இடத்தில் ரப்பர்- இயந்திரக்கரத்தால் கொட்டினாள். நடந்து அவளருகில் போனான். அப்போதுதான் சந்தடி கேட்டு குழந்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆர் நீங்கள் அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை”
“எங்கை போட்டினம்?”
“அப்பா வேலைக்குபோட்டார், அம்மா சந்தைக்கு”
“எப்ப வருவா?”
“இப்ப கொஞ்சத்திலை”
அவன் குழந்தையின் அருகில் போய் இருந்துகொண்டான். தவத்தின் முகத்தை குழந்தையில் தேடினான். அவளின் அருகில்- மணல் குவியலின் கரைகளில் இன்னும் சில விளையாட்டுப்பொருட்கள் இருந்தன. சில கார்கள், டிப்பர்கள், ரப்பர் பாம்பு, சிறிய துப்பாக்கி, அடுக்கி விளையாடக்கூடிய இராணுவ பொம்மைகள், என்று சிதறிக்கிடந்தன. குழந்தையிடம் என்ன கதைப்பதென்றே தெரியவில்லை. அவள் ”நீங்கள் ஆர் ? நீங்கள் ஆர்? என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள். கேட்பதும் சட்டென்று விளையாட்டுக்குள் புகுந்து மண்ணள்ளி கொட்டுவதும் மீண்டும் கொட்டுவதுமாகவிருந்தாள். அவளுடைய உலகத்தில் தீடிரென தென்பட்ட அந்நிய ஜீவராசியைப்போல அவளுக்கு அவனுடைய வருகை அசெளகரியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குழந்தையிடம் தன்னை வெளிப்படுத்த விரும்பாதவனாக தாயைப்பற்றி சில வார்த்தைகள் விசாரித்தான். அவள் பதில் சொல்வதைக்காட்டிலும் விளையாட்டில் லயிப்பதிலேயே குறியாக இருந்தாள். அவனுக்கு அவளுடைய உலகத்திற்குள் நுழைந்தாலன்றி அவளுடன் கதைக்கவியலாது என்பதையுணர்ந்தான்.
“ஏன் கையாலை பிடிச்சு கோலிக்கொட்டுறீங்கள் மிசினெண்டால் கையாலையே வேலை செய்யிறது?”
“வேற என்னெண்டு கோலுறது இது கையாலைதான் வேலை செய்யும்”
”அப்ப இதுக்கு ரண்டு மூண்டு ஹடோலிக் பூட்டி வேலைசெய்ய விடுறதானே?”
“அதென்னெண்டு பூட்டுறது?”
“அப்பம்மான்ர பழைய சிறிஞ்சுகளும் , செலைன் வயருகளும் கிடக்கெல்லோ?”
“ஓம் ஆனால் அம்மா அதுகளைத்தொடக்கூடா மருந்து நஞ்செண்டு பேசுறவா”
“அம்மா இல்லைத்தானே நீ எடுத்துக்கொண்டுவா நாங்கள் ஒரு வேலை செய்வம்”
குழந்தை எங்கிருந்தோ கொள்ளை ஆர்வத்தை எடுத்து அணிந்து கொண்டு கொட்டில் பக்கம் ஓடினாள். அதற்குள் இவன் அங்கே வேலிகளை ஆராய்ந்து நான்கைந்து கட்டுக்கம்பிகளை முறித்து எடுத்துக்கொண்டான். குழந்தை செலைன் வயர்கள், சிரிஞ்கள் மற்றும் கத்தியோடு வந்தது. அவளிடம் அவற்றை வாங்கிக்கொண்டு கொஞ்சம் தண்ணீர் அள்ளி வரும்படி சொன்னான். செலைன் வயர்களை வெட்டி தீப்பெட்டியல் வயரின் வாய்களில் சூடுகாட்டி சிரிஞ்ச்களின் பீச்சும் வாய்களில் பொருத்தினான். மூன்று வயர்களில் இரண்டு இரண்டாக ஆறு சிரிஞ்ச்கள் பொருத்தி சிரிஞ்களில் தண்ணீரை நிரப்பி நான். ஒரு சிரிஞ்சின் பிடியை அழுத்த வயர் வழியே அமுக்கம் கடத்தப்பட்டு மற்ற சிரிஞ்சின் பிடி உயர்ந்தது. மிண்டும் அதை இழுக்க மற்ற சிரிஞ்சின் பிடி தாழ்ந்தது. அவற்றின் கச்சியத்தன்மையை சரிபார்த்து விட்டு மூன்று சிரிஞ் ஹைடோலிக்குகளையும் பக்கோ இயந்திரத்தின் கையில் கோலும் பகுதிக்கு ஒன்றும், மடங்கும் முழங்கை போன்ற இடத்திற்கு ஒன்றும் அடியில் அசைவதற்கு ஒன்றுமாக கட்டுக்கம்பிகளை வரிந்து இறுக்கி கட்டிப்பொருத்தினான். பிறகு நேர்த்தியாக வயர்களை ஓடி இன்னொரு பலகையில் கட்டளையிடும் சிரிஞ்ச்களைப்பொருத்தினான். பிறகு பக்கோவை நிறுத்தி சிரிஞ்களை அழுத்தி பக்கோவின் கைகளை அசையச்செய்தான். பக்கோவில் கை வைக்காமலே உன்மையான பக்கோவைப்போல அது சிரிஞ்களின் கட்டளைக்கு பணிந்து மணலை அள்ளிப்போட்டது. மீண்டும் மீண்டும், வேகமாக.
குழந்தை “ஐசா” என்று கைதட்டி சிரித்தாள் பலகையை வாங்கிக்கொண்டு ஆர்வமும் ஒளியும் முகத்தில் பரவ விளையாடத்தொடங்கினாள்.
“ஆர் பிள்ளையது கேற்றைத்திறந்தது?”
குரல் அருட்ட, மணல் குவியலின் சரிவில் இருந்து எழுந்து நின்றான். தவமலரின் கறுத்து இருண்ட கண்கள் இவன் முகத்தைச்சந்தித்தன. கண்களில் தொடங்கி நடுக்கம் உடலெங்கும் அதிர்ந்துகொண்டே பரவியது. இருவரிலும் சலனமில்லை. வெப்பக்காற்று எழுந்து மோதியது. தவமலர் உள்ளூர நெருப்பால் அருட்டப்பட்டாள். அழுகை முற்ற. தலையில் அடித்துக்கொண்டே. ஐய்யோ ஐய்யோ என்று அலறினாள். அப்படியே நிலத்தில் முழங்கால்களைக்குற்றி இருக்கப்போனவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
“இப்ப ஏன் வந்தனீங்கள்?”
வார்த்தை நதியின் குறுக்கே விழுந்து மூடியது.
நடுவிலார் திருவடி பீடியை அணைத்து விட்டு கடந்து போன ஒருவரிடம் நேரத்தைக்கேட்டான். இரண்டரை. தீர்ப்பு மூன்று மணிக்கு. ஏறக்குறைய முடிவு தெரிந்ததுதான்.
“சட்டப்படி இப்பிடி நீங்கள் கேக்கேலாது, அவா இப்ப இன்னொருத்தரோட மனைவி நீங்கள் உயிரோட இல்லையெண்ட படியால்தான் கலியாணம் கட்டினவா. அவை ரண்டு பேருக்கும் ஒரு பிள்ளையும் இருக்கு. இப்ப வந்து அவா உங்களோடை வரோண்ணும் எண்டுறது நியாயமில்லை. அவா விருப்பப்பட்டா டிவோஸ் ஒண்டு எடுத்திட்டு உங்களோடை வரலாம். ஆனால் அவா தெளிவாய் சொல்லுறா. நீங்கள் செத்தது செத்ததுதான் எண்டு. இஞ்ச பாருங்கோ தம்பி நீங்கள் இப்ப தனியாள். ஏதோ போராட்ட நடவடிக்கைகளிலை நடந்த சின்னச்சிக்கலால இவ்வளவும் குழப்பமும் வந்திட்டு. அதுக்காக ஒரு குடும்பத்தைக்குலைகிறது நல்லதில்லை. அது முறையும் இல்லை.”
“நீங்கள் என்ன கதைக்கிறியள் அம்மா, அவள் என்ர பெஞ்சாதி, என்ர தவம். அவள் என்னோடதான் இருக்கோணும், என்னோடை விடுங்கோ நான் அவளை சந்தோசமாய் வச்சிருப்பன். உவன் சொடுகன் ஏதோ தேப்பன்ர மையை தடவி என்ர மனிசியை குழப்பி ஏமாத்திக்கட்டியிருக்கிறான். அவள் என்னோடைதான் வாழோண்ணும் அவள் என்ர பெஞ்சாதி”
திரும்பத்திரும்ப முடிவான வார்த்தைகளில் விம்மி வெடிக்கும் நடுவிலார் திருவடியை பரிதாபமாகப்பார்த்துக்கொண்டே குடும்ப நீதிமற்றின் தலைமை நீதிபதி சந்திரலேகா மேசையில் தட்டி, மாலையில் தீர்ப்பென்று அறிவித்து மன்றைத்தற்காலிகமாகக் கலைத்திருந்தாள். நடுவிலார் திருவடி அந்தப்புதுமையான வழக்கைப்பார்வையிட வந்திருந்த வேடிக்கைக்கண்களைத்தாண்டி வேகமாக வந்து பீடியை மூட்டிக்கொண்டு சட்டக்கல்லூரிக்கு முன்னால் அமர்ந்திருந்தான்.
இடது கை இடுப்பிற்கு அனிச்சையாகச்சென்றது. வீட்டில் எடுத்த கறள் ஏறிய ஸ்குரூரைவரின் துருவின் சொரப்பில், தடவிச்சென்று, கறட் கூரில் விரல்கள் பட்டு நடுங்கின. சட்டென்று கையை விலக்கி சேட்டை சரி செய்து ஸ்குருரைவரை மறைத்துக்கொண்டான். பீடியை கடைசி முறை இழுத்து நெஞ்சை நிரப்பிக்கொண்டு அடிக்கட்டையை எறிந்தான். நிதானமாக நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தான். இடதுபக்கமாக குற்றவியல் நீதிமற்ற அறைக்கு வெளியே இருந்த கதிரையில்தான் தவமும் பாலனும் இருக்கவேண்டும். நடையை நிதானமாக்க உடல் படாத பாடுபட்டது. மரங்களின் ஊடே நடந்து போனான். மன்றுக்குள் ஏறும் வழிக்கு அருகில் நிழலில் இருந்த கற்கதிரைகளில் ஒன்றில் குழந்தை அமர்ந்திருந்தாள். இவனைக்கண்டதும் இறங்கி ஓடிவந்து கையில் வைத்திருந்த கார் பொம்மையை காட்டி
“மாமா இது வைன் கார் , இஞ்ச பாருங்கோ ” என்றவள் கைகளில் காரை உருட்டி வைன் ஏற்றி இவனுடைய கையில் விட்டாள், உள்ளங்கையில் இறங்கி மணிக்கட்டால் ஓடி விழுந்தது கார். மீண்டும் வைன் கொடுத்து ஓட விட்டுச்சிரித்தாள், நடுவிலார் திருவடி அவளுடைய உலகத்தில் தெரிந்த முகத்தின் ஒளியைப்பார்த்தான்.
“உன்ர பேர் என்ன?”
“குசலாம்பாள்”
மார்புக்குள் கற்கள் உருண்டு சரிந்தன. நீர்ப்பிடிப்பு வேகமாகத்தள்ள கண்கள் வேகமாக வழியைத்தீர்மானித்து ஓடின.
“உனக்கு நான் செயின் புளக் செய்துதாறன் என்னோட வாறியோ?”
குழந்தை மகிழ்ச்சியாகத்தலையாட்டினாள். கலங்கிய கண்களுடனும் வாஞ்சையுடனும் அவளை அணைத்து தூக்கிக்கொண்டு வீதியில் இறங்கி பஸ் ஒன்றில் ஏறினான் நடுவிலார் திருவடி.
அன்றிலிருந்து மனைவியின் குழந்தையைக் கடத்திய வழக்கில் தமிழீழ காவல்துறை நடுவிலார் திருவடியை தமிழீழ நிலப்பரப்பெங்கும் தேடிவந்தது.
-யதார்த்தன்
6.8.18