உழவாரப் பணி / நாவற்காலம் -01

உழவாரப் பணி – நாவற்காலம் -01

Portrait by Australian impressionist Rupert Bunny (1864-1947)

ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக  இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த  இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல்  இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள்   மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன.  குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த  சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில்  இக்காலப்பகுதியில் ஏன் தரமான  நாவல்கள் எழுதப்படவில்லை,  ஈழத்து இலக்கியம் நாவல்களுக்கான காலத்தை  மீண்டும் எப்பொழுது வந்தடைந்தது.   போன்ற விடயங்களை  உரையாட இருக்கிறேன். அதன் முகாந்தரமாக நாவல் இலக்கியம் பற்றிய என்னுடைய தளம் என்ன, புரிதல் என்ன என்பதைத் தெளிவுபடுத்துதல் என் தரப்பு உரையாடலுக்குரிய களத்தை அடித்தளப்படுத்தும். என்னுடைய வாசிப்பின் அடிப்படையில் எண்பதுகளின் பின்னர் எழுந்த நாவல் முயற்சிகள் , நாவல்கள் பற்றி ஒவ்வொன்றாக உரையாட நினைக்கிறேன். இடையில்  இவ் உரையாடல்களில் நண்பர்கள் சிலரும் இணைந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவ் உரையாடல்களும்  இத்தொடரில் இணைவது முக்கியம் என்றே கருதுகிறேன். அது நாவல் தொடர்பான உரையாடல்களாகவும்,  ஈழத்து நாவல் தொடர்பான உரையாடலாகவும் இருக்கும்.

நாவல் என்றால் என்ன என்பதற்கு இதுவரை கோட்பாட்டாளர்கள் சொல்லிச்சென்ற அனைத்து வரையறைகளையும் உடைத்துக்கொண்டு இன்னொரு நாவல் வந்தபடியே இருக்கிறது. நாவல் என்றால் என்ன என்பதற்கு முற்றானதொரு இலக்கணம்  அடையப்பட முடியாதது.  ஆகவே முழுவதும் வாசகத் தரப்பில் இருந்தே நாவலை வரையறை செய்வது அதற்கான அளவு கோல்களை உருவாக்குவது நல்லது.   என்னுடைய வாசகத் தரப்பில் இருக்கும் நாவல் பற்றிய புரிதலை இவ்வாறு குறிப்பிடுவேன் ஓர் இலக்கியப்பிரதி ‘காட்ட நினைக்கிற வாழ்க்கையை  மொழியின் களத்தில்  தொகுத்துக்காட்டும் புனைவு முறை’.  இன்னொரு நிகரான வாழ்வை அது புனைவில் நிகழ்த்திக்காட்டுகிறது. வாசகருக்கு அவர் வாழ்வுக்கு நிகரான இன்னொரு வாழ்வைக் கற்பனையினால் உருவாக்கி அந்த அனுபவத்தை அளிக்கிறது. 

மேலும்  தரிசனம், புனைவு மொழி,  உரைநடை, அன்றாடச்  சித்தரிப்பு,  நிலக்காட்சி, பல்குரல்தன்மை , வளரக்கூடிய பாத்திரங்கள், கால தரிசனம், வரலாற்றில் வைக்கப்படும் இடம், போன்ற நாவலுக்குரிய அடிப்படையான  எழுத்து முறையும் அழகியல் அணுகுதல்களும் இருக்கின்றன.  அவை பற்றிய உரையாடல்களையும் என்னுடைய நிலைப்பாடுகளையும் இனிவரும் கட்டுரைகளில்  விரிவுபடுத்திக் கொள்வோம்.

ஈழத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது நவீன இலக்கியத்தில் ஈழத்துக் கவிதைகள் செறிவானவை.  சிறுகதைகளைப் பொறுத்தவரையில் கணிசமான முயற்சிகள் நல்ல சிறுகதைகளாக அமைந்துள்ளன. அவைபற்றி தனியாக ஒரு தொடர் எழுதும் எண்ணம் இருப்பதால் அவற்றைப் பற்றி இங்கே நீட்டி முழக்கத்தேவையில்லை என்று நினைக்கிறேன். எல்லா இலக்கியங்களினதும் அடிப்படையானது கவிதையே. சிறுகதையின் உச்சமோ முடிவோ கவிதைக்கு எத்தனிக்கும் போதோ கவிதையை அடையும் போதோ அது நல்ல சிறுகதையாக் நிலைக்கின்றது. தமிழில் எழுதப்பட்ட நல்ல கதைகளை எடுத்துப்பாருங்கள் கதையின் ஓட்டம்   ஒரு வரியிலேனும் கவிதையைத் தீண்டியே உச்சம் கண்டு திரும்புவதைக் காணலாம். அதே போல நாவல்களிலும் அதன் தரிசனத்தில் இருந்து விரிக்கப்படும் வாழ்க்கை கவிதைக்குரிய தருணங்களை நிச்சயமாக அடைந்திருக்கும்.  ஈழத்தைப் பொறுத்தவரையில் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நாள்வரை மிகவும் குறைவான நாவல்களே கவிதையைத் தீண்டியுள்ளன. என்னுடைய வாசகப் பார்வையில் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் எழுதவற்றில் அனேகமான நாவல்கள் நாவலென்று நினைத்து எழுதப்பட்டவையே. குறிப்பாக அக்காலத் தமிழ்ச் சூழலில் நாவலின் பணி, நாவலின் வடிவம் என்பன நன்றாக உருவாகி வந்திருந்த பொழுதும், இங்கே நாவல்களால் தங்களின் அசலான பணியையும் அதன் மூலமான வடிவையும் அடைய முடியவில்லை. 

பொதுவில் நாவல் என்பது அளவு சம்பந்தப்பட்டது என்றதொரு நம்பிக்கை இருக்கிறது. வடிவம் சார்ந்து நாவலுக்கு அப்படியொரு பெரும்பான்மை அடைவு இருக்கலாம். ஆனால் அதுவே நாவலுக்கான வரையறையல்ல. நாவலின் விரிவின் ஆழமுமே இங்கே குறித்த பிரதி நாவலா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல். தமிழில்  நீள்கதைகள், குறுநாவல்கள், நாவல்கள் போன்ற படைப்பாக்க முயற்சிகள்  நடைபெறுகின்றன.  அவற்றின் பக்க அளவுகளோ, வடிவமோ  `நாவலாதலைத்` தீர்மானிப்பதில்லை. அது ஆற்றும் பணியே  நாவலாகிறது.

ஈழத்தைப் பொறுத்தவரையில் நாவல் என்று குறிப்பிடப்பட்ட கணிசமானவை  நீள்கதைகளாகக் கருதப்படக் கூடியவை. அதே போல் ஒரு பெரிய தரப்பை நாவல்லாதவை என்று நிராகரிக்கவும் வேண்டியுள்ளது. அவற்றை நிராகரிக்கும் போது அவற்றுக்கான அளவுகோல்களை நிறுவிக்கொள்ளலாம்.பொதுவாக தமிழில் நாவல் பற்றிய பிரக்ஞை பூர்வமான எழுத்துகளோ உரையாடல்களோ மிகவும் குறைவு. கை. கைலாசபதி, (தமிழ் நாவல் இலக்கியம்) ஜெயமோகன் (நாவல் கோட்பாடு, எழுதும் கலை)  ஆகியோர் நாவல் இலக்கியம் பற்றிய தங்களின் பார்வைகளை முறையாக வரலாற்றுப் பின் புலத்தோடு எழுதியிருக்கிறார்கள். இவை தவிர ஈழத்தில்  நாவல் இலக்கிய வளர்ச்சி பற்றி சில நூல்கள் தரவுகளோடும் , குறித்த நாவல் முயற்சிகள் எவை பற்றியவை என்ற வழமையான கதைச்சுருக்கங்களோடும் எழுதப்பட்டிருக்கின்றன. சில்லையூர் செல்வராசன் ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி (1967) ,  நா. சுப்ரமணியம்  ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம் (1978)  இரகுநாதன்  ஈழத்துத் தமிழ் நாவல்: சில பார்வைகள் (2009) போன்ற முயற்சிகள் குறிப்பிட்டுச்சொல்லத் தக்கவை. ஆயினும் இவை வெறும் தகவல் சேகரங்களே, பல்கலைக்கழகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். பட்டியல் தன்மையைத் தவிர பெரிதாக அவற்றில் எதுவும் இல்லை. ஆயினும் ஆவணப்படுத்தல் முயற்சிகள் என்ற அடிப்படையில் அவற்றைக் குறிப்பிடவேண்டும்.  சமீபத்தில் எழுத்தாளர் தேவகாந்தன் எழுதிய இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம் என்ற நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது இன்னும் அது கையில் கிடைக்கவில்லை. ஈழத்தில் நாவல் இலக்கியம் தொடர்பில் கவனப்படுத்தப்பட வேண்டியவர் தேவகாந்தன். அவருடைய பார்வைகள் முக்கியமானவையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அந்நூல் வந்த பிறகு அது தொடர்பான அபிப்பிராயங்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

ஈழத்தின் நாவல் வளர்ச்சியினை அவற்றின் காலம்,  உரையாடும் விடயப்பரப்பு கருதி விமர்சகர் தரப்பிலிருந்து கால கட்டங்களாகப் பிரிக்கும் பண்புண்டு. ஆரம்ப கால காவிய நீட்சி கொண்ட  உணர்ச்சிக்கதை காலங்கள், சமூக சீர்திருத்த காலம்  அல்லது மதப்பிரச்சார காலம்,  சமூக விமர்சனகாலம் (பெரும்பான்மையாக சாதிய, பாலியல் சிக்கல்களைப் பேசிய காலம்) இறுதியாக இனப்பிரச்சினை போர்ச்சூழல் காலம், என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். இதில் சில விடுபடல்கள் நிகழவும் வாய்ப்புண்டு. அவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொண்டே எழுத வேண்டியிருக்கும். குறிப்பாக  நெடுங்காலம்  இந்த இலக்கியச்சூழலை  யாழ்ப்பாணத்தின் மையத்திலிருந்து நோக்கும் பார்வை முறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும்.  ஈழத்தின் தமிழிலக்கியம் என்பது   கிழக்கு, மலையகம், முஸ்லீம் தரப்புக்களையும் உள்ளடக்கியதே. இங்கே போர் நிகழ்ந்தது என்பதனாலும் நடைமுறை அரசியலும், அரசியல் சக்திகளும், போராட்டங்களும் கோலொச்சின என்பதனாலேயோ இலக்கியத்தில் வடக்கிற்கு `விசேட` இடமொன்றை வழங்க முடியாது. 

வாசகச் சார்பிலிருந்து எப்பொழுதும் இலக்கியத்தை அணுகுவது எனக்கு பிரியமானது. ஓர் எழுத்தாளன் என்ற அடிப்படையில் எனக்கு ஆய்வாளராக  இருப்பதோ, விமர்சகராக   இருப்பதோ உவப்பானதாக இருப்பதில்லை.   இரண்டும் என்னுடைய வேலைகள் இல்லை. வாசிப்பு அனுபவமே என்னுடைய வழிமுறை.  ஆனால் இலக்கிய வாசகர் ஒருவருக்கு விமர்சன பூர்வமான பார்வை இயல்பிலேயே உருவாகி வர வேண்டும். அது அவருடைய  வாசிப்பு, அறிதல் முறைகளில் இருந்தும், தனிப்பட்ட கூருணர்வுகளினாலும் மேலெழக் கூடியது. நான் நிறைய வாசிப்பதாக நானே நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வாசித்த  புனைவொன்றைப் பற்றி யாரேனும் கேட்டால், நல்லாருக்கு, நல்லாயில்லை என்ற இரண்டு பதிலே இருந்தது. உண்மையில் அதுவொரு முதிராத நிலை. ஏன் அந்த இலக்கியம் நல்லது, எப்படிப்படிப்பட்டது என்பதை தன்னுடைய அனுபவத்தில் இருந்து தன் சொந்த அபிப்பிராயங்களால், அறிதல் முறைகளால் சொல்லக் கூடிய வாசகரே  இலக்கியத்தையும் அதன் அறிவியக்கத்தை வந்தடைந்தவர். 

விமர்சனம் இரண்டு வகைகளில் இலக்கியத்தை அணுகும், துறைசார் விமர்சனம் மற்றும் அழகியல் விமர்சனம். இத்துறைசார் விமர்சனத்துடன் கோட்பாட்டு விமர்சனமும் முக்கிய பகுதியை எடுத்துக்கொள்வதுண்டு. உதாரணமாக  மொழியியல் துறைசார்ந்த ஒருவர் குறித்த நாவலொன்றில் இருக்கும் கிளைமொழி/ வட்டார மொழியைப் பற்றிய தன்னுடைய விமர்சனங்களை தன்னுடைய அறிவுத்துறைசார்ந்த மதிப்பீடுகள், அளவீடுகள், கோட்பாடுகளுடன் விமர்சனம் ஒன்றை வைப்பது துறைசார் விமர்சனம் என்று புரிந்துகொள்ளாலம். என்னுடைய முதிரா வாசகக் காலத்தில் இருந்த பெரும்பாலான இலக்கிய விமர்சனங்களோ அணுமுறைகளோ இவ்வாறானவை. குறிப்பாக மொழியியல், அமைப்பியல், பின்நவீனத்துவம் சார்ந்த கோட்பாடுகளின் வழியே பார்க்கும் இயல்பு இருந்தது. சொல்லப்போனால் இலக்கியத்தைப்  புறவயமான தன்மையுடன் அணுகக் கூடிய தன்மை அதில் அதிகமிருந்தது. கோட்பாட்டு விமர்சனமோ, துறைசார் விமர்சனமோ முக்கியமானதுதான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. அது நம் அறிவின் தர்க்கம் மூலம் அடையக் கூடிய புரிதல்களை அளிக்கிறது. அதேநேரம் நம்முடைய கற்பனை, உள்ளுணர்வு என்பவை மூலம் அடையக் கூடிய  ஒன்றை அது தவறவிடுவதை பின்னர் உணர்ந்து கொண்டேன். அதனால்தான்  விமர்சன / வாசிப்பு முறையான அழகியல் விமர்சனம் முக்கியமானது  என்கிறேன். 

நான்  மாக்சிய  அடிப்படைகளைக் கொண்டவன்.  எல்லா நிகழ்வுகளின் அடியிலும் உள்ள பொருளாதார நலன்களையே நான் பிரதானப்படுத்திக் காண்கிறேன், அங்கிருந்தே, பண்பாட்டிற்கும், பின்னர் வாழ்க்கையின் சிக்கலுக்குள் நுழைகிறேன். அங்கேயே இலக்கியம் எனக்கு அழகியல் , கற்பனை , உள்ளுணர்வின் மூலம் அடையப்படக்கூடிய தரிசனத்தை அளிக்கிறது. (அகத்தில் இது தலைகீழாக நடந்தாலும் நானதை மேற்கண்டவாறு ஒழுங்குபடுத்தும் போதே என் பார்வை முறையை நீங்கள் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்)  நான் மாக்சிய அழகியல் விமர்சகனோ, பின்நவீனத்துவ விமர்சகனோ அல்ல, எனக்கான  விமர்சனப் பார்வையை உருவாக்கிக் கொண்ட இலக்கிய வாசகன். எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கியத்தில் நானடையும் புது அனுபவத்தையே சதா எதிர்பார்த்திருப்பவன்.  நாவல்களை விரும்பி வாசிப்பது அது தரக்கூடிய பிறிதொரு வாழ்க்கையில் வாழ்ந்து களிப்பதற்காகவும் அதிலிருந்து என்னுடைய அனுபவங்களைத் திரட்டிக் கொள்வதற்காகவும்தான். என்னுடைய முதன்மையான அறிதல் முறை கற்பனைதான். நல்ல நாவல்கள் எனக்கு அவை நேரே சொல்லாத அனுபவத்தை மொழிக்குள் மறைத்து வைத்து தேடு என்கின்றன. அவ் எழுத்தாளரின் உழைப்பையே பல நேரங்களில் விஞ்சிச் சென்று வாசகரால் அந்நாவலில் அனுபவங்களை அடைய முடியும்.  தேர்ந்த வாசகர் அப்பயணத்தில் அடைகின்ற, போதும் , போதாமை இரண்டையும்  பற்றியதாகவே  என்னுடைய வாசிப்பனுபவமும் தீர்மானங்களும் இருக்கப்போகின்றன.

நாவல் எதைப்பேசுகிறது, எதை எனக்குத் தரிசனப்படுத்துகிறது என்பதோடு இத் தமிழ் இலக்கிய மரபில் குறித்த நாவலை எங்கே வைப்பது, அதை எழுதியவரை எவ்விடத்தில் நிறுத்துவது என்பதையும், அதன் வடிவம் என்ன மீறல் என்ன,  வீழ்ச்சி என்ன போன்ற என் அபிப்பிராயங்களை உரையாடல்களின் வழியே நிலைப்படுத்த நினைக்கிறேன். அவற்றோடு மிக முக்கியமாக  என்னுடைய வாசிப்பு இரசனையைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். என்னளவில் அது முக்கியமானது என்றே நினைக்கிறேன். இலக்கியத்தில் விரவும் நுண்ணுணர்வு கற்பனை என்பன என்னுடைய அறிதல் முறை என்று முன்பே சொன்னேன் அல்லவா? குறித்த நாவல் என்ன நல்ல கருத்தைச் சொல்கிறது? என்ன அரசியல் நிலைப்பாட்டை எடுக்கிறது  என்பதைக் கொண்டெல்லாம் மதிப்பிடப்போவதில்லை. நல்ல இலக்கியத்தின் அடிப்படையான மதிப்பீடு அதன் அழகியல் மூலம் அது அடையும் இடம் தான், இதுவரை இந்த மொழியில் நிகழாத எதை அது நிகழ்த்தியிருக்கிறது என்ற கேள்வியை தீப்பந்தத்தைப் போல் கைகளில் ஏந்திக்கொண்டே நாவலுக்குள் நுழைபவன். ஏனெனில் ஈழத்து இலக்கியத்தில், இலக்கிய விமர்சனத்தைப் போல் முடமானதொன்றைக் கடந்த இருபது ஆண்டுகளில் நீங்கள் காணமுடியாது. நல்ல சமூகத்திற்கு பயன்படக்கூடிய கருத்து அதில் இருக்கிறதா? இல்லையா என்பதுதானே நம்முடைய இலக்கிய விமர்சனத்தின் தலையாக கேள்வியாக இருந்தது.  கைலாசபதி, சிவத்தம்பி என்று தமிழின் அறிஞர்களே இக்கேள்வியின் பள்ளத்தைத் தாண்ட முடியவில்லை என்பதை என்னால் இன்றைக்கும் நம்ப முடியவில்லை. அக்கருத்துகளைத்தானே கடந்த நூறுவருடங்களாக கட்சி மேடைகளிலும் , பட்டிமன்றங்களிலும் காது கிழியக் கேட்கிறோம். இதற்கு எதற்கு கவிதையும் நாவலும் எழுத வேண்டும்?  ஈழத்தில் ஏன் மகத்தான பெரு நாவல்கள் எழுவதில் இவ்வளவு  முக்கலும் முன்கலும் என்பதற்கு நல்ல விமர்சகர்கள் இல்லை என்பதுமொரு காரணம். எழுதப்பட்ட எல்லாவற்றையும் , ஆகா ஓகோ என்றால் அதைத்தாண்டி யார் சிந்திக்கவோ கற்பனை செய்யவோ போகிறார்கள்?  

நான் இந்த தலைமுறையில் வாசிக்கும் வாசகன், எழுதும் போது எழுத்தாளன். எங்களுடைய தலை முறைக்கு  இருக்கக் கூடிய முக்கியமான பணி, இலக்கியங்களையும் எழுத்தாளர்களையும், எங்கே எங்கே அடுக்குவது என்பதை சரியான தர்க்கங்களுடன் முன்வைப்பது. இலக்கியப்படைப்புகள், அவை  இம் மொழியின் பண்பாடிலும், அறிவியத்திலும்  எப்படி நிலைப்படுத்துவது என்பதைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது.  அதிக காலம் இளம் தலைமுறை வாசகர்களாக, எழுத்தாளர்களாக இருந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள்தான். ஏனெனில்  இதற்கு முதல் இந்தப்பாதையில் கிடந்த கற்களையும் பாறைகளையும் எடுத்துச் சரியாக அடுக்கி  யாரேனும் முன் சென்றிருந்தால் எங்களுக்குப் பிறகு  இன்னொரு தலைமுறை விரைவாக வந்திருக்கும். எங்களுக்கும் இலக்கியம் இன்னும் அதிக காலத்தையும்  பயணத்தையும் அளித்திருக்கும் என்றொரு ஆதங்கம் என்னுள்  இருக்கிறது. ஈழ இலக்கியம் சிதறப்பட்டுக்கிடப்பதே மிகப்பெரிய வாசக இடைஞ்சல். அவ்வழி தெளிவாக வரைபடப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்து நிரைப்படுத்தப்பட்ட பாதைகள் எழ வேண்டும்.  வேறு வழியில்லாமல்தான் உழவாரத்தைக் கையில் எடுக்க வேண்டியிருக்கிறது.

(கதைப்போம்)

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’