ஒலிச்சி | காளம் 07

ஒலிச்சி | காளம் 07

மாசிப்பனி,  கட்டை விரல் நுணியை மரக்கச்செய்து நுண்மையான ஊசி முனைகளால் நெருடியது. சகட்டுப் பனிக்குள்ளும் தன் நாளாந்த சடங்குகளை ஆரம்பிப்பதற்கு ஒலும்பி  பெருங்கிராய் வயல் பரப்பின் கிழக்காக நீளும் வரம்பை நெருங்கினார்.  ஒவ்வொரு நாளும் அவருக்கு வயற்கிணற்றடியில்தான் விடிய வேண்டும். கடைவாய்க்குள் வேப்பங்குச்சியை அதக்கிக்கொண்டே வரம்புகளில் நடந்து வந்தார். மென்பனியின் கசட்டு மைமலில் துலாவின் அந்தம் கரைந்து வானத்தில் சொருகியிருப்பது போன்ற பிரமையைத் தந்தது. கிணற்றை நெருங்கி  துலாவைச்சாய்த்து  பட்டை வாளியில் தண்ணீரை மொண்டு முகத்தில் அறைந்தார். வெதுவெதுப்பான தண்ணீர்.  சுற்றி எல்லாருடைய கிணறும் உவர்த்துக்கிடக்க கையில் அள்ளினால் பளிங்காகச் சரிந்து விழும் அவருடைய கிணற்றின் நல்ல தண்ணீர் அவருடைய தம்பட்டம்.  ஊரே  இடம்பெயந்து சென்ற நாட்களில் கூட  கிணறு அவனுடைய தலைக்குள் இருந்தது. அதைப்பற்றிய பேச்சை எப்படியோ சம்பாசணைக்குள் கொண்டுவந்து சிலாகித்துவிடுவார்.  அதனாலேயே  ’கிணறு காவி’ ஒலிப்பியர் என்றே பெயராகிப்போனது. காடுப்பக்கம் இருந்து  இரவுக்காவலுக்குப் போனவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். மாரி முடிந்து பங்குனி கடந்தால்தான் காவலை நிறுத்த முடியும். நரிகள் மாரியில் வயல்களை அடுத்துள்ள கண்டல் காடுகளில் இருந்து வெளியேறி காடுகளுக்குள் போய்விடும்.  வயலும் கண்டலும் நிரம்பிய நாட்களில் அவை பட்டினி கிடந்து சாக முடியாது. மேற்குப்பக்கமுள்ள சமதரைப் புதர்காடுகளில் மழைக்காலத்தைக் கழித்த பன்றிகள் நரிகள் திரும்ப முதல்  வயல்களை உழுது கிழங்கெடுக்க வந்து விடும். நெற்பயிர்களை விட தோட்ட நிலங்கள்  அதிகமுள்ள இடம். கண்டல் தேக்கும் உவர் நீர்  உட்புகாத கெட்டித்த களி வயல்களையும் தோட்டத்தையும் விளைநிலமாகவே வைத்திருக்கச் செய்தது.  பக்கத்தில் உவர் செறிந்த கண்டல் நிலமிருக்க  ஒலும்பியின் கிணற்றில் நல்லூற்றுக்கள் பீறிட்டுக் கிடப்பது அதிசயம்தான்.  எதிரில் ஆளுருவங்கள் பனிக்குள் ஊசாடின. முகம் வெளிக்காவிட்டாலும் ஆட்களை உணர முடிந்தது. சிவராசனும் சகாக்களும். 

‘சிவராசு, ராத்திரி வெடிச்சத்தமா கேட்டுக்கொண்டிருந்தது, எத்தினை உருவன் விழுந்தது ? 

சிவராசன் பனிக்குளிருந்து வெளிப்பட்டான். கையில் இடியன்  இருந்தது.  முகம் புகாரில் கரைந்திருந்தது. இறுகிய வெற்றுடலில்  பனி இறங்கி ஈரமிருந்தது. 

‘ஏழெட்டுப்பேர் இறங்கினவை, மூண்டு வெடி தீர்த்தனாங்கள், பெரிய சாமான் ஒண்டு இறங்கின, இவங்கள் முதல் ஆற்றையோ மாடு எண்டுதான் சொன்னவங்கள், பாத்தால் நல்ல பெரிய பண்டி. இழுத்தடிச்சனான் ஒரு வெடி. நான் சொல்லுறன் பிடிச்சிட்டு பிடிச்சிட்டு எண்டு இவங்கள் இலையண்ணை  கத்தேல்லை எண்டுறாங்கள். உள்ளுக்க இறங்கித்தேடிப்பாத்திட்டம் கிடைக்கேல்ல. காடுக்கை ஓடின அசமந்தம் இல்லை, காட்டுக்கரைக்க எங்கட சிங்கனவை குலைச்சுக்கொண்டு இறங்கி மறிச்சிட்டாங்கள் ஆக ஆள்  எங்கையோ பத்தேக்கை இழுத்துக்கொண்டோ ஆள்முடிஞ்சோ கிடக்கோணும்`

ஊரில் பண்டிக்கால் பேச்சியம்மன் கோவில் படைப்பாட்டு ஒன்றில் ஊர்ப்புலவுகள் அம்மன் பன்றிகளை அழித்த பிறகே உருவானவை என்றொரு கதையிருந்தது.  இப்புலவில்  பன்றிகள்தான் தெய்வமும் பன்றிகள்தான் சத்துருவும்.  சின்ராசன் சகாக்களிடம் சொல்வான் `ஒலும்பியருக்கு பண்டி பிடிக்காது, அது குழம்பிலை கொதிக்கும் வரைக்கும்தான்`  ஒலும்பிக்கு பெருத்த ஏமாற்றம் முகத்தில் இறங்கியது.  

‘இந்த முறை மழை இறக்கம் கூடத்தானே, சித்திரைலதான் நரியள் இறங்கும் அதுவரைக்கும்  இரவு உபத்திரம்தானடாப்பா.  ஒண்டு ரண்டு விழுந்தால்  கொஞ்ச நாளைக்கு கூட்டமா இறங்காதுகள், தோட்டப்பக்கம் எயிறு பதிஞ்சு நான் பாக்கக் கூடாது அவ்வளவுதான், மதியம் மனிசிட்ட வந்து இந்தமாசக் காவல்  காச வாங்கிக்கொண்டு போ, வெடிபட்டது கண்டால் உரிச்சு என்ர பங்கை அனுப்பிவிடு, பின்னேரம் கள்ளுக்கு வேணும்’ சின்ராசு சிரிதுக்கொண்டே தலையாட்டிக்கொண்டு ‘வாறன் அண்ணை’என்று சகாக்களுடன் கடந்து போனான். அவர்களில்  உடல் வியர்த்துலர்ந்த வாசனை குப்பென்று அடித்தது. பன்றிகளின் உரோமம் காவோலை நெருப்பில் கருகும் போது அப்படியொரு வாசனை எழும். ஒலும்பி நடந்தான்.  காட்டுப்பக்கம் பனிக்குள் சந்தடியின்றியிருந்தது. 

நரிகள் திரும்பும் மட்டும் உபத்திரம் அடங்காது. `காட்டுப்பண்டிக்கு நரிநாணம்` என்பது ஊர் வழக்கொன்று. கொப்பாட்டன்கள்  காட்டை அரிந்து இந்நிலத்தை வெளிக்கச்செய்யும் போது இங்கே பன்றிகளின் பெரிய கூட்டங்களும் அவற்றின் பாழிகளும் இருந்தன.  எல்லையில்  துட்டவிறுமனைக் காவலுக்கு இருத்தி அவனுக்கு நரிகளை வாலயம் செய்து பெருங்காட்டிலிருந்து நரிகளை வரவழைத்தது பன்றிக்கால் பேச்சியின் சக தெய்வமான  துட்டவிருமனின்  மடைபபாட்டில் கதையாகச் சொல்வார்கள். பன்றிகளை நரிகளால் வேட்டையாட முடியாது. காட்டுப் பன்றிகளுக்கு சிறுத்தை சிங்கமெல்லாம் அஞ்சும். அவற்றின் சிறிய  வலிமையான கால்கள் அவற்றின் பேருடைலத்தாங்குவதுமில்லாமல் அசாதாரண வேகத்தையும் வழங்கின.  முகத்தில் எழுந்து வளர்ந்த அவற்றின் எயிறுகள்  நிலத்தைக் கிளர்வதற்க்கு  வளைந்து பரிணாமம் பெற்றிருந்தாலும்  பன்றி கொள்ளும் வேகம் அவற்றைக் கூரம்புகளின் முனைகளாக்கும். மொத்தப்பன்றியும் ஆபத்திலும் மூர்க்கத்திலும் தன்னுடலைப் அம்பென்று ஆக்கிவிடுபவை.  இடிக்கின்ற வேகத்தில் எதிராளி நிலைகுலைந்து போகவோ சாகவோ கூடும்.  பன்றிகள்  கண்மூடித்தனமானவை. அவற்றுக்கு பார்க்கும் திறன் குறைவு. மங்கிய பார்வையுள்ளவை. அவற்றின் கண்கள் நாசியிலிருந்தன. நிலத்தையும் சூழலையும் முகர்ந்தபடி நகர்ந்து செல்வன.  வாசனையும் ஒலியும் அவற்றின் கண்கள். அதனால்தான் அவை இரவில் வெற்றிகரமான வேட்டை விலங்காக உலவித்திரிகின்றன. நரிகளின் வாடை அவற்றுக்கு  அறவே ஆகாது.  நரிகள் தங்களின் எல்லைகளைக் குறிக்க மூத்திரம் பெய்யும் இடங்களின் அருகில் கூடப் பன்றிகள் போகாது. அதனாலேயே அவை  தலைக்குமேல் தங்களின் வருகையை கண்டு மிரண்டு காட்டுக்கே தண்டோரா போடும் மந்திகளையும் , நரிகளையும் வெறுத்தன.  துட்டவிருமனுக்கு வாலயம் செய்யப்பட்ட நரிகள்  காட்டிற்குத்திரும்பினால் ஊர் எல்லைகளான வயல்களின் பொந்துகளில் உறையும் அகிழான்களையும், நண்டுகளையும் பிடிக்க  இரவில் வயற்கரைகளில் சுற்றிவரும். தங்களின் எல்லைகளைக் குறிக்கும். ஊழையிடும். இரவெல்லாம் அவற்றின் வாடை பரவிக்கிடக்கும். காட்டுப்பன்றிகள்  தோட்டங்களுக்குள் இறங்காது. மற்றபடி காட்டில் பன்றிகள்தான் கோலொச்சின. நரியையோ மந்திகளையோ ஒரே குத்தில்  தூக்கி வீசி காட்டுப்பன்றிகள் அவற்றை விரும்பி உண்ணும்.   பன்றிகள்  அபூர்வமாக மாமிசம் உண்பவை தாம் வஞ்சம் கொண்டவற்றின் ஊன் அவைகளுக்கு பிரியமானது.

பனிக்குளிரில் தொண்டை கட்டியிருந்தது. இருமி உமிழ்ந்தான். கிணற்றடி வெளித்துக்கொண்டிருந்தது. கிணற்றை நெருங்கியபோது பனியில் விறைத்த ஆண்குறியைப்போல  துலா மைமலுக்குள் கறுத்து நிமிர்ந்திருந்து முழுமையாகக் கண்ணில் பட்டது.  கிணறின் பெருவாய்க்குளிருந்து என்றைக்குமில்லாத அலப்பலும் உறுமலும் எழுந்துகொண்டிருந்தது. ஆவலாகி ஒலிம்பி வேகாமாகிச் சென்று கிணற்றை எட்டிப்பார்த்தான். மனம் ஊகித்தபடி  அசாதாரண உயரமும் பருமனும் கொண்ட காட்டுப்பன்றி அரைவாசி உடல் தண்ணீருகுள் ஊறிக்கிடக்க கிணற்றைச்சுற்றிச் சுற்றிவந்து அலப்பிக் கொண்டிருந்தது. அதனுடைய பருமனும் வயிற்று வீக்கமும்  அதுவொரு சினைப்பட்ட தாய்ப்பன்றி  என்பதை ஒலும்பி அறிந்துகொண்டான்.  சிவராசனும் சகாக்களும் போன திசையைப்பார்த்து வாயில் விரலை வைத்து பெரிதாகச் சீழ்கையடித்தான். பனிப்புகாரைத்தாண்டி அவ்வொலியம்பு வேகமாய் போனது. அரைமணித்தியாலத்திற்குள் அரைவாசி ஊரும் கிணற்றைச் சுற்றியி நின்றிருந்தது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள். அமலா விடயம் கேள்விப்பட்டு அப்பாவைத்தேடி அத்தைக்காரிகளுடன் வந்திருந்தாள். அவளை அழைத்து, கிணற்றுக்கட்டிற்கு மேலாக எக்கி அப்பன்றியைக் காட்டினார்.

‘கண்டியோ?’

‘ஓம் பெரிசு, பிள்ளைத்தாசியோப்பா ?’

‘ஓமோம், கெட்டிக்காரி, என்னெண்டு கண்டு பிடிச்சனி, வயிறு பெருத்திருந்ததோ ?

‘இல்லை பாத்தோண்ணை அப்பிடித்தான் நினைச்சன் ஏனெண்டு தெரியேல்லை’

‘சரி அத்தையோட நில்லுங்கோ அலுவலப் பாப்பம்’

அவளுடைய ஆர்வத்திலும் கண்ணிலும் ஒலிம்பி எப்பொழுதும் பார்ப்பது தன்னையன்றி வேறொன்றுமில்லை.  அவளில் எந்தப்பெண் பிள்ளையின் இயல்பையும் அவர் விரும்பியதில்லை. ‘கொம்மாமாதிரி ஆகாத’ என்பதுதான் அவனுடைய மந்திரம். பெண் குழந்தைகள் தந்தையை ஆண் என்றே முதலில் அறிகிறார்கள். ஒலிம்பிக்கு  மூன்று சகோதரிகள்.  சுமா, சுபதினி, சுபலா. அவனுடைய பிரதிமைகள் போலிருப்பார்கள்.  வெவ்வேறு வகையான  இறுக்கமும் தளர்வுகளும் கொண்டவர்கள். மூத்தவள் சுமா, அமலாவை முதலில் கைகளில் ஏந்தியவள். அமலாவிற்கு நான்கு வயதிருக்கும் போது சுமா அத்தை இயக்கத்திற்குப்போனாள். அடுத்த இரண்டு வருடங்களில் சண்டை ஒன்றில் செத்துப்போனாள். உடல் தரப்படவில்லை. தகவலும் படமும் வந்தது.  அமலாவிற்கு தாயின் முகம் என்று நினைப்பில் இருந்தது சுமா அத்தையின் முகம்தான்.  இரண்டாமவள் சுபதினி, முன்கோபி. அடம்பிடிப்பதற்கு அவளே அன்னை. அமலாவின் பிள்ளைப்பருவம் முழுவதும் அவளுடன் கழிந்தது. ஒலிம்பியரின் கடைசி தங்கைகும்  அமலாவிற்கும்  ஐந்து வருடங்கள்தான் வித்தியாசம், என்றாலும் கொஞ்சம் தோற்றம் கொண்டவள்,ஆகிருதி பெண்ணுக்கு ஆணைவிட பலமடங்கு தோரணையை அளிக்கிறது.  பெண்ணைப்போல் அதிகாரத்தை தொழும்பில் கட்டிவைக்க ஆண்களால் முடிவதில்லை.. அமலா அவளையே `அம்மா` என்று அழைப்பாள். சுபலா ஆண் பிள்ளைகளின் உடைகளையே அமலாவிற்கு உடுத்திப் பார்ப்பாள்.  பன்னிரண்டு வயதுவரை குழந்தையின் முடியைக் கூட கத்தரித்து ‘கிப்பி’ யாகவே வெட்டி வைத்திருந்தாள். அவளுடைய பேச்சே குடும்பத்தில்  ஆடும்.  நினைத்ததை நிகழச்செய்யும் கடும் குரல் கொண்டவள்.  அமலா  மூன்று பெண்களிலும் வேர் விட்டெழுந்து தந்தையை நோக்கி வளர்ந்தாள். `ஆண்பிள்ளை போன்றவள்` என்ற பரவலான கண்டிப்பை விரும்பித் தன்னில் சூடிக்கொள்பவள். அன்றைக்கு சின்னத்தையுடன் பன்றியைக் காண வந்த போது அதுவொரு  பெரிய பெண் பன்றி என்றதும் அவளுள்  சொல்லறியாத முனைப்பு எழுந்தது.  ஆர்வமாகி இருந்தாள்.   சின்னத்தையை  `தூக்கடி` என்று சொல்லிச் சொல்லி கிணற்றை மீண்டும் மீண்டும்  எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தாள்.

வெளியில் ஆட்களைக் கண்டபிறகு பன்றி வெருளத்தொடங்கியிருந்தது. ஊர்ப்பெரியவர்கள், அடிக்கடி யாரும் எட்டிப்பார்க்க வேண்டாம் என்று  எல்லோரையும் கிணற்றை விலக்கினர். கிணற்றடியில் ஆண்கள் என்ன செய்யப்போகிறோம் என்று  மந்திராலோசனைக்குக் கூடினர். இளந்தாரிகள் அவர்களைச் சூழ்ந்தார்கள். சிறுவர்கள் ஆவென்று பார்த்தபடி நின்றார்கள். தாய் மார்களும் இளம் பெண்களும் வீட்டுவேலைகளை   முன்னிட்டு புறுபுறுத்தபடி கலைந்து சென்றார்கள். குடும்பம் முதலில் அழித்தது பெண்ணின் வேடிக்கைபார்க்கும் பெருவிழைவை.  இளம் பெண்களும் சிறுமியரும் ஆர்வமாய் நின்றார்கள்.  சிலர் பிள்ளைகளைக் கூட்டிப்போக எத்தனிக்க அவர்கள் வரமாட்டோம் என்று முறுகினார்கள். கிழவிகள் மட்டும்  பன்றிகளைப் பற்றிய தொல்கதைகளைத் திரும்பச்சொல்லத்தொடங்கினார்கள். கூட்டத்தில் பவுணப்பு என்ற எண்பத்தைந்தைத் தாண்டிய கிழவர் தன் பெரிய வில்லைகளைக் கொண்ட கண்ணாடியைக் கழற்றி பெட்டியில் போட்டுக்கொண்டு; தன் இளமைக்காலத்தை மீண்டும் வரவழைத்தார்.

துவக்குச்சத்தத்திற்கு தெறிச்சு ஓடி வந்து விழுந்திருக்கு. பொதுவா ஆண் பண்டி நிதானமில்லாதது. பெண் பண்டி நிதானமும் பொறுமையும் உள்ளது. இது என்னெண்டு விழுந்ததெண்டு தெரியேல்லை.  கிணத்துக்கட்டை எப்பிடி தாண்டிப் பாஞ்சிருக்கும் எண்டு மட்டுப்பிடிக்கேலாம கிடக்கு, அலவலாதிப்பட்டு ஓடும் போது பாயலாம், ஆனால் எப்பிடி பாஞ்சாலும் அது பண்டிதான், குதிரை இல்லையே கண்டியளோ ?   பண்டிக்கு நிலத்துக்கு மேலை உள்ளதுதான் மங்கலா தெரியும், ஆனால் நிலத்திலை உள்ளதையும் நிலத்துக்க உள்ளதையும் அது அறிஞ்ச அளவுல யாரும் அறிஞ்சிருக்க மாட்டினம். அது சினைப்பட்டு உள்ளதாலை தடுமாறி இருக்கலாம். இப்ப இதுகளின்ர ’ஒலிச்சி’ குலைஞ்சு போயிருக்கும், யாருக்குத் தெரியும் இதுதான் அதுகளின்ர பெருந்தாயோ என்னவோ ?’ 

அவர் அந்தப்பெருந்தாயை அழுத்திச்சொன்னதில் காரணமிருந்தது.  பன்றிகள் பெண் தலைமைகளைக் கொண்டவை.   ஆண்கள் தனியன்களாகவே அலைய வேண்டும். பெண் பன்றிகளே  குட்டிகளுடன் கூட்டமாக அலையும். ஒவ்வொரு கூட்டத்தையும் ’ஒலிச்சிகள்’ என்பது ஊர்வழக்கு. ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு ஒலிவழக்கும் சமிக்கைகளும் இருக்கும். அவற்றைக்கொண்டுதான் அவை ஒன்றையொன்று அறியும். ஒலிச்சிகள் மிகவும் வலிமையான கூட்டம். எந்தக் கொல்லும் விலங்கும் தனியாக ஒலிச்சிகளை நெருங்க அச்சப்படும்.  இணைசேரும் காலம் தவிர வேறெப்போதும் ஆண் பன்றிகளுக்கு ஒலிச்சிகளின் கூட்டத்தில் இடமில்லை. ஆண் பன்றியொன்று பெண் பன்றியொன்றோடு இணை சேருவதற்கு அதற்கு போட்டியாக இருக்கும் இன்னொரு ஆண் பன்றியை அப்பெண் பன்றியின் முன் போரிட்டு வெல்ல வேண்டும். அதன் பிறகே அதனுடன் இணைசேரும்.  ஓவ்வொரு பெண் பன்றியும்  இணை சேரும் போது தன் உமிழ்நீராலும், மூத்திரத்தாலும் தன் இணைப்பன்றியை அடையாளப்படுத்தும். இணைசேரும் காலம் முழுக்க அவ் ஆண் பன்றியை ஏனைய பெண்பன்றிகள் நெருங்காது. இணைசேரும் பருவம் கலைந்தவுடன் ஆண்பன்றியை மூத்த பெருந்தாயும் ஏனைய ஒலிச்சிகளும் சேர்ந்து எயிற்றால் முட்டிக் கலைத்துவிடும். அது மீண்டும் தன் பெருந்தனிமைக்குத் திரும்பும்.

ஒலிச்சிகள் கூட்டத்தில் சினைப்பட்ட சக பன்றிகளையும் குட்டிகளையும் காத்து நிற்பதற்கு அவை தம்முள் கொடுந்தெய்வத்தைக் கூட இறக்கும். கிணற்றுக்குள் உள்ள பெரும் தாய்ப்பன்றி தண்ணீருக்குள் நின்று அத்தனை அட்டகாசம் செய்வது தன் வயிற்றில் உள்ள குட்டிகளுக்காகத்தான்.  அன்னையில் எழும் அச்சத்தைக் கொண்டு தனக்குள் தெய்வத்தை இறக்கிக் கொண்டிருந்தது.  தண்ணீரைக் கலக்கி கூழாக்கியது, சுவரில் தன் எயிறுகளால் முட்டியது.  மூச்சை  பொந்துகளுக்குள் கூவும் பெருங்காத்து என்றாக்கியது. அது  உள்ளுள் எரிந்தது.  அச்சம் ஆன்மாவைக் கண்ட கணம் முதல் சாவதை நடித்துக்காட்ட ஆரம்பிக்கிறது. பன்றிக்கு முன் அதன் மரணம் நூறு விதமாக நாடகமிடப்பட்டிருக்க வேண்டும். அதனுடைய அச்சத்தை அதன் கருவினுள் இருந்த குட்டிகளின் உடலிலும் குருதியாய் பாய்ந்திருக்கும். அதன் அடிவயிற்றில் அவைகள் அடைந்த அச்சம்  தீயெனக் கனன்றது.

கிணற்றுக்குள் இருந்து மூசும் பன்றியை வெளியில் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை.  அதற்கு கயிறு போட  அத்தனை அடிக்கும் கீழே இறங்கி கயிற்றை எறிய வேண்டும், தண்ணீரைத்தொட முதல்  இறங்குபடியில் வைத்து ஆளைக்குத்தி விழுத்திவிடும். சினைப்பட்ட அத்தாய்ப்பன்றி ஏறக்குறையத் துடித்தெய்வம். அது சினைப்பட்டிருக்காவிட்டால் யோசனை ஏதுமின்றி  சிவராசனின் இடியன் உறுமியிருக்கும். ஆனால் சினைப்பட்ட பன்றியைக் கொல்வது பெரும்பாவம். அதற்குள் இருக்கும் தெய்வத்தைப் பேயாக ஆக்குவதற்குச் சமம். அதன் சினை அதைக்காத்து நிற்கிறது. அது சினைப்பட்டு நிற்காவிட்டால்  ஒலிம்பியே இடியனை எடுத்து வெடியைத் தீர்த்திருப்ர். அவருக்கு இப்பொழுதும் உள்ளுக்குள் கோபமெரிந்து கொண்டிருந்தது. அவனளவில் அவனுடைய கிணறே அவன் வயலின் சினை.  சேற்றில் உழலும் ஒரு காட்டுப்பன்றி அதை  மாசுபடுத்திவிட்டது. இப்பொழுது கிணற்றை இறைக்க வேண்டும், சாந்தியும் கழிப்பும் செய்ய வேண்டும். ஆனாலும் அவனுளிருந்த ஆண், அந்தச்சாகசத்தை விரும்பாமலில்லை. தன்னுடைய நல்ல தண்ணீர் கிணறு பாழ்பட்டதை  மீண்டும் மீண்டும் விசனப்பட்டுக்காட்டினான். பெண்களின் முன் சினந்து கொண்டே சகாக்களுக்கு கயிற்றை எடுத்துவா, வலையை எடுத்துவா என்று சொல்லிக்கொண்டிருந்தான். செயலின் போது ஆணில் கிருதி கூடிச் செல்கிறது, சுற்றத்தையும் குடியையும் அவனே வேகப்படுத்தத் தொடங்குகிறான். சொல் ஆணையென்றாகிறது.  பிறர் அவனுக்கு கட்டுப்படுகின்றார்கள், அல்லது இயைந்து ஒழுங்குகிறார்கள். முக்கியமாக பெண்கள் அவனை நெருங்கி வரப்பிரியப்படுவர். அமலா அத்தையின் கையை விட்டு விட்டு ஒலும்பியின் கையைப் பிடித்துக்கொண்டாள்.  அவளுக்கு பன்றியைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.  ஆனால் ஒவ்வொரு முறையும் பன்றி விழும் போதும், காவோலை போட்டு எரித்து விடுகிறார்கள். அதன் ரோமங்களைத் தழுவாமல் உப்பிக்கறுத்த , மெல்லிய சிவப்புக் கோடுகளாய்  பிளந்த அதன் உடலைப்பார்க்க அருக்குளிக்கும் இவளுக்கு.  அதன் ரோமங்கள் ஆபத்தானவை  இறைச்சியோடு வாய்க்குள் போய் விட்டால் திரும்பாது, வெளியேறாது என்பதால் பன்றியை நெருப்பில் வாட்டி உரோமங்களைக் கருக்கி விடுகிறார்கள். அதனாலேயே என்னவோ அவளுக்கு அந்த உரோமங்களைத் தடவிப்பார்க்க வேண்டும் என்றொரு விருப்பமெழுந்தது.

கடைசியில் பன்றியைக் கொல்வதில்லை என்று  ஊர் தீர்மானமெடுத்தது. பக்கத்து ஊர்களில் வலைக்குச் சென்றவர்கள் வலைகள் இல்லாமல் திரும்பினர்.  கிணற்றில் விழும் விலங்குகளைப் பிடிக்கும் வலைகளை முன்பு சில வேட்டைக்காரர்கள் வைத்திருந்தார்கள். இயக்கப் பிரச்சினைக்குப் பிறகு இராணுவம் உள்ளூரில் துவக்குகளைப் பிடுங்கிக்கொண்டது. அதனால் வேட்டைக்காரர்கள் மெல்ல மெல்ல தொழிலைக் கைவிட்டனர். இயக்கம் மீண்டும் இராணுவத்தை  விரட்டிய பிறகு  கமக்காரர்களிடம் மட்டுமே துவக்குகள் இருந்தன. வேட்டைக்காரர்களும் அவர்களின் துவக்குகளும் பொறிகளும் வலைகளும் இல்லாமல் போயின.  பெருவேட்டைகளும் தடை செய்யப்பட்டன.  பக்கத்து ஊர்களில் இளைஞர்கள் நாய்களை அழைத்துக்கொண்டு பொல்லுகளுடன் ‘தவிச்சமுயலடிக்கச்’ செல்வதோடு சரி. இறுதியாக கயிறுகளை வாங்கி வலையொன்றை வேகமாகப் பின்னி முடிப்பது என்று முடிவானது. ஒலும்பி தன் சொந்தச் செலவில் கயிறு வாங்க சிவராசனின் சகாக்களை அனுப்பினான். யாரோ சிலர் அரசியல் துறைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்கள். 

 ’பேசாமல் இயக்கத்திட்டையே விடுவம், பெடியளைப் போட்டு பண்டியை மீட்பாங்கள்’

‘அவங்களை சண்டைபிடிச்சு நிலத்தை மீட்கச்சொல்லு, சமாதானம் எண்டு சந்திரிக்காக்கு பின்னாலை திரியாமல்’

ஒலிம்பி உரப்பிக்கொண்டு  நின்றார். அமைந்திருப்பது தன்னுடைய களம், பன்றி இருப்பது அவருடைய அருங்கிணறு. அதை எக்கணமும் விட்டுக்கொடுக்க அவருடைய தினவு ஒப்பிவிடாது. அவருக்கு இயக்கத்தின் மேல் கடும் கோபங்களிருந்தன. முக்கியமாக தங்கைக்காரி வீரச்சாவடைந்த பிறகு  இவரை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இரண்டொரு முறை சில உதவிகளுக்கு அரசியல் துறைக்குப் போயிருக்கிறார்.  மாவீரர் குடும்பம் என்பது வெறும் பகட்டிற்கு புலிகள் உருவாக்கி வைத்திருந்த மாயை. அது எந்தச் சலுகையையும் அளிப்பதில்லை. ஒலும்பிக்கு இயக்கத்தில் இருந்த விலக்கம் எல்லோரும் அறிந்தது. இன்றைக்கு அவர்களின் உதவியைப் பெற்றுவிட்டால்,  சோலி முடிந்தது. அப்பன்றியை வென்றே ஆகவேண்டும்.

கயிற்றுவலை பின்னிமுடிக்க மதியத்திற்குமேலாகிவிட்டது. பன்றி கொஞ்சம் கூட களைப்படையாமல் கிணற்றைச் சுற்றிச்சுற்றி வந்தது. வலைக்கயிறு அதன் மேல் விழுந்த போது  எயிறால் அதைக்கிழிக்கப்பார்த்தது. திமிறியது.  வெளியில் நின்று வலையின் விடு கயிறுகளைப் பிடித்திருந்தவர்களின் கைகளை இழுத்தது. ஏழெட்டு முறைக்குப் பிறகுதான் அதன் முழு உடலையும் மூடி வலை இறங்கியது. அப்படியே ஊர் கூடித்துக்கத்தூக்க  ஒலிம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றவள் ஆர்வமானாள். ஒலிம்பி அவளைத் தூக்கி அருகில் நின்ற தங்கச்சியாரிடம் கொடுத்துவிட்டு கையில் அலவாங்குடன்  கிணற்றை நோக்கிப்போனான். வலை கப்பியில் மேலேறியது.  சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாப்பாகத் தள்ளி நிற்கச்சொன்னார்கள்.

கயிற்றுவலையை இழுத்து தொப்பென்று நிலத்தில் போட பன்றியில்  தலை வெட்டிய பாம்பினுடலில் பரவும் திடுக்கிடலுடன் மெல்லிய அசைவு  மட்டுமிருந்தது. மூசல் சத்தமெழுந்தது. வலையின் வாசலை இறுகி அடைத்துக்கொண்டு இளைஞர்கள்  அலவாங்குகள், பொல்லுகளுடன் தயாராக இருந்தனர். கிணற்றுக்குள் இருக்கும் போது வழைமையான காட்டுப்பன்றியைவிட பெருத்து வளர்ந்தது என்பது  பிடிபட்டாலும் வலையிலது  நன்கு வளர்ந்து பருத்த உள்ளூர்  கட்டைமாட்டின் அளவில் இருந்தது. அப்படியொரு தாய்ப்பன்றியை இதுவரை யாரும் கண்டதில்லை. சிவராசன் தன் துவக்குச் சத்தத்திற்குத்தான் தெறித்தது என்று பெருமை பேசிக்கொண்டிருந்தான். ஒலிம்பிக்கு அருகில் வந்த மகள் அவன் முகத்தை ஏறிட்டாள். அவனுக்குப் புரிந்தது. வா என்று தூக்கிக்கொண்டு பன்றிக்கு அருகில் போனான். அமலாவிற்கு உள்ளங்கை வியர்த்தது. தொடைகளில் நடுக்கம் தொடங்கி தலைவரை பரவியது. எனினும் தகப்பனை இறுக்கிக் கொண்டாள். அவள் அந்தப் பன்றியை தொட மட்டுமே விரும்பினாள். அதனால்  தகப்பனின் தோளுக்குப் பின்னால் தலையைத் திருப்பிக் கொண்டாள். பன்றியின் அருகில் சென்று ’பயபிடாமல் பாரம் அப்பா நிக்கிறன் தானே?  என்றான். மெல்ல திருபினாள். தகப்பனின் காலடியில் பன்றி கிடந்தது அதன் எயிறு  வலைக்கு மேலே நீட்டியிருந்தது.  ஒலிம்பி மகளை மெல்லத்தாள்த்தினான். வலையப்பிடித்திருந்தவர்கள் இன்னும் அதன் பிடியை இறுக்கினர். கையை நீட்டி நனைந்த அதன் வயிற்றில் கை வைத்தாள். மூச்சிரைத்தது. ஈரத்திலும் ஒரு சூடு இருந்தது. சுடுதண்ணீர் குணத்தில்.  முடிகளை அளைய அவ்வளவு மூடி இருந்த அதன் கண்கள் சட்டென்று பெரிதாகத் திறந்தன. சடாரென வெருண்டெழுந்தது. பிடித்திருந்த கைகள் சூடு கண்டது போல ஒரே கணத்தில் கையை விட்டன.  ஒலிம்பி மிரண்டு போய் எழுந்தான்  அதற்குள் அது வலையோடு அவன்  இடது தொடையை நோக்கிப் பாய்ந்தது. அத்தனை கைகளையும் சுட்டு விட்டு அதன் மூர்க்கம் வலையைப் பிய்துக்கொண்டு பாய்ந்து சுதாகரித்து; மகளைத்தூக்கிக்கொண்டு விலத்திய ஒலிம்பியின் தொடையில்  அதன் இடது எயிறு முட்டித்தள்ள ஒலிம்பி நிலை தடுமாறி ஐய்யோ என்றபடி மகளோடு விழுந்தான்.  ஒலிம்பியைக் கடந்து அது இரண்டு எட்டு வைக்க முதல் சிவராசனின் கையில் கிடந்த பெரிய அலவாங்கு ஈட்டியைப்போல் அவன் கையில் இருந்து விடுபட்டு பன்றியின் பெருவயிற்றைக் கிழிகித்துக்கொண்டு மறுபக்கத்திற்கு வந்தது.  பன்றி தனக்குளிருந்த பன்னிரண்டு உயிரோடு சேர்ந்து  அலவாங்கில் நெட்டுயிர்த்து அடங்கியது. சனங்கள் உறைந்து போய் நிற்க காட்டுக்கரையில் அப் பிற்பகல் வேளையில் நரியொன்றின் ஊழை எழுந்தது. 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’