சிதற்கால்கள் | காளம் 06
கூடாரத்தின் கண்பார்வையில் வான் வேரோடி நின்றிருந்த பெரிய பாலைமர அடியில் நுள்ளான் அடுக்கி வைத்திருந்த விசித்திரமான பச்சைப்பாசி நிறமேறிய வெண்கற்களின் இணைவின் மேல் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். நுள்ளான் அவற்றை அக்காட்டில் கிடந்த பெரிய யானையொன்றின் என்புகள் என்றான். முகாமை அமைக்கும் போது புல்டோசர்களின் இராட்சத கரங்கள் அவற்றை வழித்துச்சென்று புதர்களோடு பிரட்டியிருந்தது. அவற்றை எடுத்துவந்து இருக்கையாக ஆக்கி இருந்தான். அவை கற்கள் போன்றே இருந்தன. மென்குளிர்வுடன் தோதாக இருந்தன. அவற்றை இணைத்து மரத்தின் கருங்கால் அடியோடு இணைந்திருந்தது. நண்பகல் நெருங்கும் போது, தாலிக்கொடி வந்திருந்தான். திரும்பவும் எங்கோ சண்டையிட்டிருக்கிறான். முகம் வீங்கி அங்காங்கே நீலம் உறைந்த கண்டல்கள் முகிழ்ந்திருந்தன. அவனில் இருக்கும் வயதிற்கு மீறிய செயல்களில் கடுமையும் முன்சினமும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். இவளே, இரண்டொரு முறை ஏழெட்டு சிறுவர்களுடன் தனியே யாரிக்கு நின்று அவர்களை கீழே தள்ளி, அடித்துத் துவைத்ததைக் கண்டிருக்கிறாள். பெரிய தேகமொன்றும் இல்லாவிடாலும் மல்யுத்தம் புரிபவன் போல் துதிக்கைகளை பின்னிக்கொண்டு மத்தகங்களால் மோதும் யானையைப் போல எதிராளிகளை மோதி கீழே தள்ளி அவர்களின் மார்பில் ஏறி அமர்ந்து தாடையைப் பெயர்ப்பான். அதுவே அவனறிந்த சண்டை. அதில் அவனுடைய பதட்டமே எரிந்து அடங்கும். அவனுடைய கெட்டிக்காரத்தங்களை அப்பதட்டமே நாளும் உண்டு இலைப்புழு பெருங்கொடியை கன்றென வைத்துக்கொள்வது போல் உட்சுருட்டிக்கொண்டே இருந்தது. முகத்திலிருந்த காயங்கள் பற்றி எதுவும் கேட்கவில்லை. நுள்ளானுக்கு தாலிக்கொடியைப் பிடிப்பதில்லை. நுள்ளானை இவனும் பொருட்படுத்துவதில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளில் இருந்து ஊழினால் எதிர்கொண்ட ஆடிகள். பதட்டமும், நசிவும் உள்ள இரண்டு ஆண்கள். அவளருகில் வந்திருந்தவன் மடியில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டான். தாலிக்கொடி விசயமில்லாமல் வரமாட்டான். குழந்தையொரு சாட்டு அல்லது தொடக்கம். அவனால் குழந்தையைச் சமாளிக்க முடியாது. விரைவிலேயே அவனையறியாமல் பதட்டம் தொற்றி திணறி அவனே ’இந்தா பிடி’ என்று தந்துவிடுவான். குழந்தைகளைத் தாக்காட்டுவதற்கு வேட்டைக்காரனின் மனமடையும் பொறுமை தேவைப்படும். என்றாலும் கொஞ்சம் கால்களை நீட்டி ஆசுவாசிப்பதற்கு ஏதுவாக அவன் குழந்தையை வாங்கிக்கொண்டது கொஞ்சம் நின்மதியைத் தந்தது. முகாமில் புதிய அடையாள அட்டைகள் தந்திருந்தார்கள். `என்னையும் உங்களோட பதியுங்கோ` என்று அவன் கேட்டுக்கொண்டதற்கு சம்மதித்தாள். நுள்ளானும் ஒன்றும் சொல்லவில்லை. . நுள்ளான் ஏதேனும் சொன்னால் அவனுக்கு இதைக் குத்திக்காட்டி தாலிக்கொடிக்காக சண்டையிட நினைத்திருந்தாள். அவனுடன் எளிய வஞ்சங்களைக் காட்டுவது இவளை அறியாமலே இவளுக்குள் இருந்த விருப்பங்களில் ஒன்று. இவ் வஞ்சம் இல்லாமல் போகும் போது இந்த உறவும் இல்லாமல் போகும் என்பதை அறிந்திருந்தாள். தங்களுடைய கூடார இலக்கத்திலே தாலிக்கொடியைப் பதிந்திருந்தாள். நுள்ளானின் எதிர் உருவங்கள் மேல் அவள் கொள்ளும் நுண்மையான பரிவு ஒரு வித நாடகம்தான் என்றாலும், அவள் அதற்கு தன்னை இயல்பாகவே ஒப்புக்கொடுக்கக் கூடியவள். தாலிக்கொடி அப்படியொரு நிகழ்வு.
தாலிக்கொடி அடையாள அட்டையைப் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினான். பதினெட்டிற்கு பிறகுதான் தாலிக்கொடிக்கு தேசிய அடையாள அட்டை கிடைக்கும், ஆனால் முகாமில் முன் கூட்டியே கிடைக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முதல் பள்ளிக்கூடத்தில் தாபால் அடையாள அட்டைக்கு எடுத்து வைத்திருந்த படத்தைக் கொடுத்திருந்தான். புலிகளில் கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்ட சிறுவர்கள் தொடர்ந்தும் முகாம்களில் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவகையில் தன்னை அவன் முகாமெல்லாம் முரடன், குழப்படி என்றவாறு எல்லோருக்கும் பரிச்சப் படுத்திக் கொள்வதும் ஒரு வகை பாதுகாப்பைக் கொடுத்தது. பாஸ்ரருடனும், உக்காரவுடனும் கூட அவனே சென்று நெருங்கினான். காவலரண்களில் நிற்கும் சிப்பாய்களுடனு நெருக்கமாக முயன்றான். அவன் ஒரே நேரத்தில் சிறுவனாகவும் பெரியோனாகவும் இருக்க முயன்றான். அவனுக்குள் உறையும் அச்சத்தை யார் அறியாவிட்டாலும், இவள் நன்கறிந்திருந்தாள். அவன் நெருங்கியவர்கள் அவனுக்கு பழக்கத்தை மட்டும் கொடுத்தனர். அகலாதும் அணுகாதும் இருந்தனர். ஆனால் இவள் மட்டும் அவனுக்கு அடைக்கலத்தைத் தந்தாள். பெண் எவ்வளவு வெறுத்து ஒதுக்கினாலும், தப்பியோடினாலும், பெற்றாலும் பெறாவிட்டாலும், தாய் இயல்புகள் பெரும் பாலைவனப் பாறைகளின் அடியில் தேரைகளைப் போல் வாழ்ந்துவிடுகின்றன. சொல்லில் இல்லாவிட்டாலும், கண்களில் கனிவுடன் தாலிக்கொடியை கணமொன்றில் கண்டாள்.
குழந்தையை அவனிடம் விட்டுவிட்டு கூடாரத்திற்குள் சென்று நான்கு அடையாள அட்டைகளையும் ஒன்றாக எடுத்துவந்து நீட்டினாள் அவன் குழந்தையைத் தந்து விட்டு ஒவ்வொன்றாகப் பார்த்தான். நுள்ளானின் அடையாள அட்டையைக் கண்டதும் சிரித்துக்கொண்டே `சத்தியசீலன்` என்று நுள்ளானின் பெயரை உரக்கப்படித்தான். பின்னர் பெரியத்தையின் அடையாள அட்டையைப் பார்த்து விட்டு
`அத்தையும் அவரும் எங்கை?`
`தண்ணிக்குத்தான்`
தலையை அசைத்துக்கொண்டே , இவளுடைய அடையாள அட்டைக்கு வந்தான்.
`ஒலிம்பிராசா அமலோற்பவி`
`அவற்ற பேர் போடேல்லையோ ? `
`அப்பான்ர பேர்தான் போடச்சொல்லி உக்காரா சொன்னதாம், எங்களுக்கு பதிவுக்கலியாணம் ஒண்டும் நடக்கேல்லைத்தானே, தச்செலும் பாஸ்போட் எடுக்கிறதிலை பிரச்சினை வந்தாலும் எண்டு’ அவளே நினைத்துச் செய்ததுதான் என்றாலும், அதை இச்சிறுவன் தெரிந்துகொள்வதை அவள் விரும்பவில்லை. தாலிக்கொடி ஒன்றும் சொல்லாமல், குழந்தயை உற்றுப்பார்த்தான். பின்னர் இவளை நிமிர , சொல்லுடன் காத்திருந்தவள் போல `நான் கொண்டு போகமாட்டன்` என்றாள். குரலில் தயக்கமிருக்கவில்லை. குழந்தையை கூட்டிச்செல்லும் எண்ணம் அவளுக்கு எப்பொழுதும் எழுந்ததில்லை. அவள் எதைவிட்டெல்லாம் ஓட நினைக்கிறாளோ அதில் முதன்மையானது குழந்தைதான். அதைவளர்க்க விரும்பாதவனாக தன் அட்டையைப் பார்த்து விட்டு நான்கையும் சேர்த்து இவளிடமே நீட்டினான்.
`உன்ரைய நீ வச்சிரு`
`துலைச்சுப்போடுவன், கிடக்கட்டும்`
குழந்தை ஏதோ மழலையில் சொல்லி மடியில் இருந்து உன்னி இவனை நோக்கி எழுந்தாள். தன் ஆட்காட்டி விரலை குழந்தைக்கு நீட்ட பிஞ்சுக்கரம் பற்றிக்கொள்ள. கையில் மிதமிருதவுணர்வு பரவியது.
`அந்தாள் வரக்கிடையிலை நான் வெளிக்கிடப்போறன், உக்காரா அண்ணை பின்னேரம் மெயின் ஒவ்விசடிக்கு வரச்சொன்னவர்`
`இப்ப ஏன் வந்தனி ?`
`பாங் காரர் வந்திருக்கிறாங்கள் , கண்டனியோ ?
நேற்று முற்பகலில் ஒலிபெருக்கியில் அறிவித்திருந்தார்கள். நடமாடும் வங்கிச்சேவைகள் முகாம்களில் நடைபெறும் என்று. நுள்ளான் வந்து அந்த நடமாடும் வங்கியில் முண்டியடித்த சனத்தைப் பற்றிச்சொல்லியிருந்தான். கொண்டு வந்து சேர்த்த நகைகளை பாதுகாப்பாக பெட்டகங்களில் வைக்க பெரிய கூட்டம் அலைமோதியது. முகாம்களில் அரசாங்கமே சில கடைகளைத் திறக்கத்தொடங்கியதால் இரண்டு மாதங்களாக உணவும் நீரும் மட்டும் புழங்கி வந்த முகாமில் பணம் மீண்டும் புழங்கத்தொடங்கியது. உணவு நீர் உட்பட அத்தியாவசியங்கள் அனைத்தும் தொண்டு நிறுவனங்கள் கொண்டுவந்து குவித்திருந்தார்கள். கூடாரங்களின் பாதியைப் பிடித்து வைத்திருக்கும் அப்பொருக்களைக் கொண்டு அங்கே சாகாமல் பிழைத்துக்கொள்ளலாம். உடலைக் கழுவும் சவர்க்காரங்களே இன்னும் நான்கைந்து வருடங்களுக்குப் போதுமானதாக இருந்தது. நடமாடும் வங்கிகளில் முண்டியடித்தவர்களில் பாதிப்பேரை செத்து விழுந்த உடல்களில் கிடந்தவற்றைக் கழற்றி வந்தவர்கள் என்றும், மிகுதிப்பேர் `இயக்கம் உடைத்து விட்டதாகச் சொல்லப்பட்ட, அவர்களின் வங்கிகள், கடைகள், நகைப்பெட்டகங்களைச் சூறையாடி வந்தவர்கள் என்றும் கறுவினான். அதைச் சொல்லி விட்டு தாலிக்கொடியைவேறு இழுத்தான்.
`நீ ஒரு விசத்தை சேத்து வச்சிருக்கிற தானே, அவன் சொன்ன தாலிக்கொடி கதையை நீ நம்புறியோ? உருட்டுமாட்டுக்கு ஒரு உருவம் இருக்குமெண்டால் அது உவன்தான், அவன் ஆமிக்க வரேக்க கழுத்திலை போட்டு வந்த பத்துப்பவுண் தாலியும் கொடியும் அவன்ர கோத்தேன்ர எண்டத நான் நம்ப மாட்டன், உந்த பத்துப்பவுண் தாலி ஆற்ற ரத்தம் பிரண்டதெண்டு அவனுக்குத்தான் வெளிச்சம்`
நுள்ளானிடம் அவள் அசலாகக் கோவம் எழும் போது காட்டுவதில்லை. சொற்களைச் சேர்த்துவைத்து அற்பமான விடயங்களில் குரலை உயர்த்தும் போது தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் வஞ்சத்தைக் கொண்டு அவனை நொருக்குவாள். அதனால் அன்று ஒன்றும் சொல்லவில்லை. இருவருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட திண்ம நிலைதான் ஓரளவேனும் எல்லாவற்றையும் சரியாகக் கொண்டு போகின்றது. நுள்ளானிடம் ஏற்பட்டிருக்கும் குற்றவுணர்ச்சியினால்தான் தான் நினைத்ததை அடைய முடியும். ஆனால் அதன் எல்லை எதுவென்று அறியாமல் இருந்தாள். அவனைச் சீண்டுவதைப்போல எதுவும் ஆகிவிடக் கூடாது. கொல் மிருகம் ஒன்றைக் குடும்பத்திற்குள் உலவ விடலாம், ஆயினும் அதன் மீதொரு கண்ணும் அதற்கு எப்போது எதைச் செய்ய வேண்டும் என்று பழகிக்கொள்வது முக்கியம். பழைய நீதிக் கதைகளில் வரும் அறத்தெய்வங்களின் புனிதப் பொய்கையில் நீரருந்தும் இரண்டு கொல் விலங்குகள் தாங்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும்.
ஆனால் அந்தப்பெரிய அழுகையை நுள்ளானிடமிருந்து எதிர்பார்க்கவில்லைத்தான். அவனுக்கு இவள் முன்னால் அழுதது பெருத்த அவமானத்தைத் தந்திருக்க வேண்டும். ஆனால் அவன் குறுகியவன் போலில்லை. அவள் முன் அழுதது அடியாளத்தில் ஒரு நீர்த்துளியை இட்டிருப்பது போல் நுள்ளானின் முகம் கொஞ்சம் நெகிழ்ந்தது போலிருந்தது இவளுக்கு சில கணங்களில் காரணங்களேதுமின்றி அப்படித்தோன்றியதுண்டு. அவனுடைய முகம் இதுவல்ல என்று. முகமூடி அணிந்தவன் போலன்றி விசக்கடி கண்டது போல உள்ளுக்குள் இருந்தே இறுகிப் புடைத்திருக்க வேண்டும். முகத்தசைகளின் வேர் நுணிகள் அவனுடைய நினைப்பின் நீர்மட்டத்திலா விழுந்து மிதக்கின்றன? அல்லது அவன் தன்னை இன்னொன்றாக நிகழ்த்தி நிகழ்த்தி அதற்குள்ளேயே சிக்கிக்கொண்டிருக்கிறானா? அவன் முகத்தசைகள் கண்களில் முடிந்தன. அதனுடைய கல்லெழுந்த பார்வைதான் எல்லோரையும் அச்சப்படுத்தும். ஆணில் இயல்பாக எழுந்து ஊறிய பெருவேட்கை அதில் அற்றுப்போயிருக்கும். இவளறிந்து கண்ணில் மட்டும் காமமற்ற ஆண் நுள்ளான் மட்டும்தான். அடுத்த கணம் பாயத்தயாராகும் ஆண் மிருகம் ஒன்றின் முன் நிற்கும் போது கூட பெண்ணுக்கு ஆணின் வேட்கை மிக்க விழிகளை ஒரு கணம் சந்திக்காமல் சாகத்தோன்றாது. பயத்திலும், சினத்திலும், காமத்திலும், ஏன் உச்ச வெறுப்பிலும் கூட வேட்கை அற்ற ஆணின் கண்ணை நினைத்தும் பார்க்க முடியாதவள் பெண். அதிலொரு ஆதிக்குணமிருந்தது. ஆண் பெண்ணின் மொத்த உடலையும் பார்க்கத் துடிக்கிறான். பெண் முதலில் கண்ணைத் தெரிவு செய்கிறாள். நெஞ்செழாது அடக்கி அடக்கி அழத்துடிப்பவள் இவள், ஓர் ஆணைப்போல் வெடித்தழுவது அவளுக்குக் கைகூடுவதேயில்லை. அழுகை இவளை ஆழப்புதைத்துக்கொண்டே போகும். உள்ளுக்குள் பெருகுவது உள்ளுக்குள்ளேயே இருந்துவிடுகிறது. அவளுடைய தனிமையில் அழுகைக்கு இடமில்லை.
தாலிக்கொடி ஏதோ கேட்க வந்து கேட்காமலே தயங்குவது போலிருந்தது. அவன் சமையல் கூடத்தில் ஆட்கள் அசைவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். இவர்களுடைய கூடாரத்திற்கு சற்றுத்தள்ளி சமையல் கூடமிருந்தது. ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒவ்வொரு சமையல் கூடம். சமயல் கூடங்களும் அதற்கான வழங்கல்களும் மெல்ல மெல்ல வந்து சேரும் போதுதான் சாப்பாட்டு பாசலுக்கும் பாண் வாகனத்திற்கும் காத்திருந்து அடிபிடிபடும் அன்றாடம் கொஞ்சம் ஓயத்தொடங்கியது. சமையல் கூடத்தை ஆண்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். துள்ளான் எதற்கும் போகமாட்டான். முகாமிற்கு வந்த புதிதில் வரிசையில் நின்று கூட ஒன்றையும் வாங்க மாட்டான். இவள் ஏதும் புறுபுறுத்தாலோ அத்தைக்காரி நூறுமுறை நச்சரித்தாலோ கூட்டத்தைத் துளைத்துக்கொண்டு முன்னால் போய் பொதிசோறுடன் திரும்புவான். அவனால் அசாதாரணமாகப் பட்டினி கிடக்க முடியும். இத்தனை காலத்திலவன் சுவைத்து ஒரு உணவை உண்டு அறியாள். சமையல் கூடம் மெல்ல மெல்ல நிறுவனமானது. கூட்டம் போட்டு அதை நிர்வகிக்கும் ஆட்களை பிளாக்கில் தெரிவு செய்தார்கள். ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாக நியமித்தார்கள். இவனிடம் விறகு வெட்டி வருபவர்களுடன் போய் வரச்சொன்னார்கள். வேண்டிக்கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு இயல்பிலேயே இவனிடம் பயமிருந்தது. இத்தனைக்கும் அவர்களுடன் பேசிய வார்த்தைகளை கை கால் விரல்களைச் சேர்த்தே எண்ணி விடலாம். யாருடனும் பேசமாட்டான். அவன் அதிகம் கதைக்கும் ஒரே சீவன் அத்தைக்காரிதான். ஒவ்வொரு சனியிலும் விறகு வெட்டுபவர்களுடன் அவர்களை முறைப்படி விறகு பொறுக்குபவர்கள் என்று சொல்ல வேண்டும். இராமநாதன் முகாமையும் பக்கத்து முகாமையும் விறகுக்காடுதான் பிரித்திருந்தது. மெனிக் பாமில் முகாம்களை அமைப்பதற்காக பெரிய புல்டோசர்கள் காட்டை வழித்துச்சுருட்டி பெருஞ்சுவராக ஆக்கியிருந்தது. அதில் கிடக்கும் பெரிய பிளந்த மரங்களைச் சுமந்துவரவேண்டும்.
மரத்தடியில் இருந்து பார்க்கும்போது அதன் வெளியே கொதிக்கும் பெரிய பருப்புக்கிடாரங்கள் தெரியும். கோடை நாட்களில் வெய்யிலைவிடவும் இலையான்கள் மோய்த்துத் துன்புறுத்தின. எழுந்தபாட்டில் காற்றில் கைகளை வீசினால் குறைந்தது பத்து இலையான்களாவது கூடாரங்களுக்குள் விழும். கொதிக்கும் பருப்புக் கிடாரங்களைக் கடந்து பறக்கும் போது அதன் நீராவி பட்டு அந்தரத்தில் செத்து கிடாரத்திற்குள் விழும். ஆரம்பத்தில் அருவருப்பாய்தான் இருந்தது. இவள் சாப்பிடவே மாட்டேன் என்று வெறும்பாணை மென்று விழுங்கி விட்டுப்படுத்தாள். இரண்டு வேளை பாண்தான் சாப்பாடு என்ற போது நாக்கும் உடம்பும் பழகிக்கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
தாலிக்கொடி ஏதோ சொல்ல வாயெடுத்த போது, இவளின் குதிக்கால்களில் இருந்து கணத்தில் உருவாகி நச்சரவின் விடம் போலவொரு வலி பரவி மேலெழுந்தது. உடல் சுருங்க ஒரு கணம் நடுங்கினாள். சில கணங்கள் அவ் வலியைப் பொறுத்துக்கொண்டு அதை முழுமையாகக் காணக் கண்களை ஆழ மூடினாள். அவளுக்கு ஏதோ ஆகின்றது என்பதைக் கண்டாலும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் என்ன ? என்ன ? என்று அவளின் தோள்களைப் பிடித்து உலுக்கி அவளை உலகிற்கு மீட்டான் தாலிக்கொடி. குரலேதுமின்றி குழந்தையை மட்டும் இவனிடம் கை மாற்றி விட்டு கால்களை நிமித்தினாள். அவை நடுங்கிக்கொண்டிருந்தன. அழுத்தி வருடிக்கொடுத்துக் கால்களை உதறிக்கொண்டாள். வலி மெல்லப் பழகியது. முதற் தடவையில்லா விட்டாலும் அது தொடங்கும் போது முதல் தடவைக்குரிய எல்லா முத்தாய்ப்பையும் நிகழ்த்தி விடும்.
‘பறுவம் ஏதும் வருதா?’
`ஓம் நாலுநாளிலை பூரணை’
சொல்லி விட்டு அவளிற்கு ஏதேனும் வகையில் உதவி செய்ய முடியுமா என்று பார்த்தான். சுள் சுள் என்று குத்தும் அவ்வலியை ஒருமுறை நுள்ளானிடம் `கால் முழுக்க சிதல் நிக்கிற மாதிரி குத்தும்` என்றாள். தாங்க முடியாது சீவனைப்பிடித்து அறுக்கும். அவ்வலியை வேறெப்படியும் சரியாகச் சொல்ல முடியாது என்றே இன்றுவரை நினைத்தாள். ஆனால் அச்சொற்களும் போதாது என்ற எண்ணமும் அச்சொற்களில் மறைந்திருந்ததையும் அமலா அறியாமலில்லை.
ஒலிம்பி சிறுவயதில் சிலாகித்துக்கொள்ளும் போது இவளுக்கும் பெருமை பிடிபடாது. விடயம் தெரிந்த நாட்களில்தான் தாயின் கருப்பையையும் உயிர்வாசலையும் எத்தனை அலைக்கழித்து வெளிப்பட்டிருப்பேன் என்ற குற்றவுணர்வு உருவாகி வந்தது. அதன் பிறகே அவள் உடல் நொய்ந்து செத்துப்போனாள் என்பது அகத்தின் பிறிதோர் பகுதியில் காயமென்று உருவாகியிருந்தது. ஒவ்வொரு பறுவத்திற்கும் கால்களில் உருவாகும் வலியினாலும் அது கொடுக்கக் கூடிய தனிமையுடன் அந்தப்பெரும் புண்ணின் கரையில் தனித்திருந்தாள் அமலோற்பவி.
காலால் பிறந்தவர்கள், யாருக்கேனும் சுளுக்குக் கண்டால் இவர்களின் கால் கட்டைவிரலால் சுளுக்கு கண்ட இடத்தில் நீவிவிட வேண்டும். கொஞ்ச நேரத்தில் சுளுக்கும் நோவும் அற்றுப்போகும். பத்து வயது வரை வீட்டிலோ பக்கத்திலோ யாருக்கேனும் சுளுக்கினால் இவள்தான் விரலால் நீவி விடுவாள். இரண்டொரு நாளில் சுளுக்கும் வலியும் தீர்ந்து போம். அப்பொழுதெல்லாம் நோவோ குத்தோ இருந்ததில்லை. அம்மா கிறிஸ்தவ பெண் அப்பா சைவர். அப்பாவுடன் வந்த பிறகு அம்மா ஏறக்குறைய மதம் மாறிவிட்டாள். பாலன் பிறப்பிற்கு மட்டும் அவளுடைய சொந்த ஊரான மன்னாரில் உள்ள தோட்டவெளிக்குப் போய் வருவாள் என்று தகப்பன் சொல்வதுண்டு. அம்மா இவள் வயிற்றில் இருக்கும் போதே இவளுக்கு பெயரிட்டாள். தன் வயிற்றிலிருப்பது பெண் குழந்தைதான் என்று உறுதியாக நம்பினாள். பிரசவத்தின் போது `பெரும்பாடு` கண்டு அம்மா செத்துப்போனாள். அதன் பிறகு அப்பாதான் எல்லாவுமாயிருந்தார். அப்பாவின் தங்கைகள் மூவரும் இவளுக்கு தரப்படவேண்டிய தாயை ஆளாளுக்குப் பிரித்துக்கொண்டு இவளை வளர்த்தனர்.
அமலா அப்பாவை நினைத்துக்கொண்டாள். ஏற்கனவே தோன்றியிருந்த குத்தும் வலிக்குள் பிறிதொரு நோ நரம்பு தோன்றுவதுபோலிருந்தது. கோடைகால இரவொன்றில் வயற்கிணற்றுக்குள் வந்து விழுந்த சினைப்பட்ட பெண் பன்றியின் கண்களை நினைத்துக் கொண்டாள். அப்பாவைப்பற்றி இவளிடம் இரண்டு சித்திரங்களிருந்தன. ஒன்று அவரொரு அப்பாவாக இருந்த காலம். மற்றது அவரொரு பன்றியாக மாறி மடிந்துபோன காலம்.அவரந்த மூன்று வருடங்களும் அனுபவித்த வலியும் , பிறழ்ந்து போன அவருடைய மனமும் உடலும் என்றென்றைக்கும் இவளை முழுவதுமாகச் சிப்பிலியாட்டிக்கொண்டே இருக்கிறது. முழங்காலுக்குக் கீழே குருதிக்கும் தசைக்கும் என்பிற்கும் பதிலாக சிதல் நிற்பது போல கொதித்துவலிக்கும் ஒவ்வொருமுறையும் அப்பாவையும் , அந்தப் பெண்பன்றியின் கண்களையும் நினைக்கத்தவறியதில்லை.
யாருக்கேனும் சுளுக்குப் பார்க்காமல் இருந்தால் பறுவ நாட்களில் மெல்லிய நோவோடு போய்விடும் ஆனால் யாருடைய உடல் நோவையேனும் தொட்டு நீக்கினால் கால் முழுக்க சிதல் கூட்டும். மரியம் அன்ரி தண்ணீர் எடுக்கபோன இடத்தில் இடதுகாலைப் பிரட்டிக் கொண்டாள். இவளில் அவ்வளவு கரிசனை மிக்கவள். துடித்துக்கொண்டிருந்தவளை பார்த்துக்கொண்டிருக்க ஒப்பவில்லை. ஒரே நாளில் அவளின் சுளுக்கையும் நோவையும் எடுத்து விட்டாள். தலையில் கைவைத்து இவளை ஆசீர்வதித்தாள். மரியம் அன்ரி அளவிக்கு அமலாவிற்கு தெய்வங்களில் ஈடுபாடு இருந்ததில்லை. அமலாவின் முகத்தில் ஓடும் நுண்மையான யோசனை நரம்புகளை நிறுத்த நினைத்த தாலிக்கொடி
‘மரியம் அன்ரியாக்கள் தங்கட சபைக்கு பெரிய கொட்டில் ஒண்டு அடிக்க பொமிசன் வாங்கி இருக்கினமாம்’’
அமலா இதை முன் கூட்டியே அறிந்திருந்தாள். பாஸ்ரரை அழைத்துச் சென்ற சபைக்காரர், முகாமில் சபைப் பிரார்த்தனையின் அளவைக் கூட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக குறிப்பிட்ட தொகைப்பணமும் , விரைவிலேயே அவர்களை முகாமிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதாக உறுதியும் அளித்திருக்கின்றார்கள். மரியம் அன்ரி எந்த மந்தணத்தையும் தனக்குள் வைத்திருக்க முடியாதவள். நேமியன் ‘மூளையில் துளையுள்ளவள்’ என்று அவளைக் கடிந்துகொள்வார். செபத்திற்கான பெரிய கொட்டகையும் இவர்கள் அத்தோடு தங்குவதற்கு அறையொன்றும் எழுந்துகொண்டிருந்தது. முப்பத்து மூன்றாம் பிளாக்கில் இருந்தவர்களிடம் பேசி சபையாட்களை அவர்களின் கூடாரத்திற்கு முடிந்தவரை மாற்றிக்கொண்டிருந்தார் பாஸ்ரர் நேமி. அவருக்கு உதவியாக இருப்பது நுள்ளானும், தாலிக்கொடியும். தாலிக்கொடி அவரைக் ‘கஞ்சப்பயல்’ என்று கடிந்து கொள்வான். அவனிடமும் அவன் போன்ற சிறுவர்களிடம் வாங்கும் வேலைக்கு அவர் சில சாப்பாட்டுப் பொதிகளை ஆமிக்காரர்களிடம் இருந்து வாங்கித்தருவதோடு சரி. போதாததற்கு அவனை செபக்கூட்டங்களுக்கு வேறு வருமாறு நச்சரித்துக்கொண்டிருந்தார். பாஸ்ரரோடு இருப்பது தனக்கு பாதுகாப்பு என்பதால் மட்டுமே அவரோடு தாலிக்கொடி ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்று அமலா நன்கறிவாள். இருட்டில் ஏதேனும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்தேனும் அவன் குத்திவிடுவான்.
‘நான் ஒண்டு கேப்பன் தருவியோ?’
அஹா, இறுதியாக அவன் இவ்வளவு நேரமும் இவளுடன் நைந்து கொண்டிருந்ததன் நோக்கத்திற்கு வந்து சேர்ந்துவிட்டான். தாலிக்கொடியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
‘அம்மான்ர கொடியிலை கிடக்கிற ரெண்டு காசிலை ஒரு காசை கழட்டித்தாறியோ, பாங்கிலை வச்சால் கொஞ்சம் காசு கிடைக்கும் ?’
அமலாவின் மார்புகளுக்கு இடையில் கிடந்த தாலியின் தங்கத்திற்கே உண்டான நூல்நீர்க் குளிர்வை ஒரு கணம் நெஞ்சறிந்தது. அவனுடைய அம்மாவின் தாலியின் இரண்டு பக்கமும் தொங்கிய இலட்சுமிப் படங்கள் பொறிக்கப்பட்ட இரண்டு தங்க நாணயங்களும் இவளுடைய இரண்டு மார்புகளிலும் தொட்டுக் கொண்டிருப்பதை உடல் முழுவதும் உணர்ந்தது. அது அவன் தன்னிடம் தந்து வைத்திருந்த, தான் மணமானவள் என்று காட்டிக்கொள்ளவென அணிந்திருந்த தாலிக்கொடி என்பதை அவள் அக்கணம் வரை முழுவதும் மறந்திருந்தாள். தாலிக்கொடி அமலாவின் கண்களைக் காணத் தெம்பற்று குனிந்து கொண்டான். அமலாவின் தாலிக்கொடியில் ஒரு துண்டைக் கேட்பது போல அவன் தயங்குவது, தன்னுள் சுடரும் சிறுமகிழ்ச்சியையும் உதட்டில் மெல்லிய சிரிப்பையும் ஒருங்கே கண்டாள். சிறுவனோ பெரியோனோ ஒவ்வொரு ஆணின் தயக்கத்தின் போதும் அவள் எய்தும் மிகச்சிறு மகிழ்வும் முக்கியமானது. கால்களில் பரவியிருந்த நோ அகன்று கொஞ்ச நேரம் இவளை அவ்வுணர்வில் இருக்க முழுவதுமாக அனுமதித்தது. தாதையின் நெஞ்சில் பதிந்த மூதாயின் பாதங்கள் அடைந்த உணர்வு.