பெருநா – தெய்வம் | காளம் – 04
அருவியாற்றுக்கும் மன்னார் மதவாச்சி வீதிக்கும் இடையில் எதிரில் எழுந்திருந்தது இராமநாதன் நலன்புரி முகாம். செட்டிகுளம் மெனிக்பாமில் இருந்த அகதி முகாம்களில் இதுவே மிகப்பெரியது. இத்தனை ஆயிரம் பேர் மிக அருகில் பார்வைத் தொலைவில் இருந்தாலும், எந்த சத்தமும் இல்லாமல் ஆற்றங்கரை அமைதியில் நின்றிருந்தது. அசாதாரணமாக இம்மனிதப்பெருக்கு அடைந்திருக்கும் இரைச்சலின்மைதான் என்ன? கிராமங்கள் இரைவதில்லை. வீடுகள் சனங்களின் சொற்களை வெளியில் அனுமதிப்பதில்லை. நகரங்கள் பகலில் கூச்சலிடும் விலங்குகள். இரவில் அவை தம்மைத்தாமே வீடாகப் புனைகின்றன.. முகாம்கள் உறங்குவதில்லை. உணவுக்கும், நீருக்குமான வரிசைகள் நீண்டு மந்தம் கூட்டிக்கொண்டே இரவுபகலாக நகரும் பெரும்பாம்புகளைப் போல அக் கூடாரங்களுக்கு இடையில் நிகழ்ந்தபடியே இருந்தன. ஒவ்வொரு உடலும் அலைந்து கொண்டே இருந்தன. உறங்கும் போதும் கூட அலைச்சலின் முழுதுணர்வை அடைந்தன. தொடர்ந்து அச்ச வளையங்களுக்குள் குறுகிக் குறுகி பதுங்குகுழிகளுக்குள் கிடந்தவை உடல் விடைக்க நடந்து அலைவதாக நுள்ளான் எண்னினான். ஆனால் அவை மீண்டும் உறங்கவும் குறுகிக் கொள்ளவுமே அலைந்தன. மனிதர்களின் ஆதி விழைவு பனிக்குடத்திற்கு திரும்புவது தானே! முன்பு குகைகளும் பின்னர் வீடுகளும் அதன் புறவடிவங்கள். மனிதர்கள் உறங்குவதிலே அவர்களுக்கு உவப்பானது குறுகி உறங்குவதுதான். கோடையில் நூலாக வறண்டு ஓடிக்கொண்டிருக்கும் அருவியாற்றில் நீர் மோதும் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.
நுள்ளான், பாறைகளில் தொற்றி ஏறி, இரண்டாள் உயரமுள்ள பாறையின் வழுக்கும் பாசிப்பெரும் படிவை வென்று, உச்சியை அடைந்தான். நெஞ்சுப்பகுதியில் கிழிந்திருந்த பச்சை நிற டீசேட்டுக்குளிருந்து அவனுடைய மார்பிலிருந்த தைத்து மூடிய காயத்தின் தழும்பு முற்றிய மண்புழுவைப் போல தொடக்கமும் முடிவும் இல்லாது திரண்டு நீண்டிருந்தது. கண்மட்டத்தில், அப்பால் தெரிந்த முகாமின் வெள்ளைக் கூடார நிரைகள் மதிய வெக்கைத் தகிப்பில் வெள்ளொளியாகிக் கண்கூசின. அங்கிருந்து கீழே எட்டிப்பார்த்தான். துவைத்துக்கொண்டிருந்தவள், மேலே வந்த பிறகு தென்படவில்லை, தோய்க்கும் ஒலியும் ஆற்றில் நீர்ச் சலம்பலும் கேட்டுக்கொண்டிருந்தது. மதிய வேளை என்பதால் ஆற்றில் சனமே இல்லை. இவர்கள் இருவரும் மதியங்களில்தான் குளிக்கவோ துவைக்கவோ ஆற்றுக்கு வருவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்.
தலைக்கு மேலே விசுக்கென்று காற்றுத்திரள் ஒன்று கடந்து போகும் நீளொலியெழுந்தது. அண்ணார்ந்தான்.தகைவிலான் வலசை ஒன்று தலைக்கு மேலே சுழன்று அருவியாற்றின் மேலாக எழுந்து காற்றில் மிதந்து குழைந்து வெட்டிச் சென்றன. ஒன்றாகத்திரும்பும் போது அவற்றின் நெஞ்சுப்பகுதியின் சாம்பல் வெண்மை அந்திமஞ்சள் பட்டு கணப்பொழுது மினுங்கிப் புரண்டு சென்றது. அவளுக்கு அந்த வலசையைக் காட்ட நினைத்தான். அவள் ஏறி வருதற்குள் தகைவிலான்கள் தள்ளிச் சென்றுவிடக்கூடும். என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று கூடத்தெரியவில்லை. வா பறவை காட்டுகிறேன் என்றால் தூசணம் தான் வரும். இப்போதைக்கு தன்னைத்தவிர எல்லாம் அர்த்தமற்றவை அவளுக்கு, தன்னோடு மட்டும் இருக்கக் கூடியவள். ஏன் இவனை இன்னும் கைவிட்டாளில்லை என்ற புதிரில்தான் தான் பொருந்தி அவளுடன் இருக்கிறேன் என்று எண்ணிக்கொள்வான். வழமை போல `பம்புடுசிங்கி` என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டான்.
தகைவிலான்களில் வலசைச் சத்தமும் நீர் மேல் இறங்கி பறந்தபடியே அருந்தும் ஒலிகளும் மீண்டும் மீண்டும் கேட்டபடியிருந்தது. ஆற்றங்கரைகளில் விசாலித்து எழுந்த மரச்செறிவுகளுக்கு மேலே பறந்து ஐதான இடங்களில் ஆற்றுக்குள் இறங்கி தண்ணீர் அருந்தியபடியே காற்றைக்கிழித்தேறி மீண்டும் கூட்டத்துடன் சேர்கின்றன. இம்முறையும் மழை கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. தகைவிலான்களின் வலசை வானத்தில் யாரும் காணாத முன்னறிவிப்பொன்றை எழுதிக்கொண்டிருந்தது. சென்றவருடம் மன்னார் முழுவதையும் விடுதலைப்புலிகள் இழந்த போது, காவோலை `சா மேகம்` என்று உடையார் கட்டு குளத்தின் மேலே திரைமூடிய தகைவிலான்களின் வலசையைக் காட்டிச்சொன்னதை இப்பொழுது நினைத்துக்கொண்டான் நுள்ளான். சண்டை உக்கிரமடைந்த போது பெரும் புயல் வடக்கை உலுக்கிப்போட்டது. எளியவன், குடிகாரன், கொலைகாரன், சொல்வதெல்லாம் பலிக்குமென்றால் இந்த உலகம் தெய்வங்களால் செய்யப்பட்டது என்ற பழஞ்சொல்லின் பொருள்தான் என்ன? தெய்வங்களின் பணி என்பது வெறுமனே இருப்பதுதானா? அவற்றிலிருந்து விதியோ அருளோ பெருகுவதில்லையா? அவற்றிலிருந்து பெருகுவது கதைகள் மட்டும்தானா? காவோலை அவனளவில் சிறுகச்சிறுக கண்டு பெரிதாகிப் பெரிதாகி உருவான உருவம். இவனுடைய பிள்ளைப்பராயம் முழுவதும் நிறைந்து, அவனே இவனாக ஆகிவிட்ட அழிவு. அவனுடைய இயல்புகளில் இருந்தும் சொற்களில் இருந்தும் உன்னியெழுவதே நுள்ளானுடைய மிகுதி வாழ்வாக அமைந்து போனது. காவோலை, இன்றைக்குச் சம்பந்தமே இல்லாமல் வந்து அலைக்கழித்துக் கொண்டிருந்தான். எங்கிருந்து இந்த எண்ணம் வந்தது என்று குலைத்துக்கொண்ட நினைவுச்சுருளிலிருந்து எழுமாற்றாக ஓர் நூலைப் பிடித்து தொடக்கத்தை நோக்கிச் செல்வது போல வரும் வழியில் இவள் சொன்னதை நினைத்தான். இறுதிச் சமரில் இறந்தவர்களுக்கு எல்லோருக்குமாக அபரக்கிரியைகளை செய்யப்போவதாக இந்து மக்கள் ஒன்றியம் அறிவித்திருந்தது ஆற்றுக்கு வரும் வழியில் இவள்தான் சொல்லியிருந்தாள். ஏதோ பேப்பரிலோ ரேடியோவிலோ அறிந்ததை அதே வார்த்தைகளால் சொன்னாள். `எல்லோருக்குமாக` என்ற சொல் தனித்து நின்றது. மாத்தளனில் காவோலை தன்தசை வெள்ளத்தில் தானே நீந்திக் கிடந்த போது கடல் மணலை அள்ளி ஏறக்குறைய குழைத்து மூடிவிட்டு நாய்கள் இழுக்கக் கூடாது என்ற பதட்டத்தில் தகரம் ஒன்றை எடுத்து அச் சிவந்த மணற் பிட்டியை மூடிவிட்டு வந்ததை நினைத்தான். காவோலைக்காக அழக்கூடிய ஒருத்தி அம்மா மட்டும்தான். அவளும் இல்லை. காவோலைக்கு அபரக்கிரியை செய்யக் கூடியவர்களில் இவன் மட்டுமே எஞ்சியிருந்தானில்லையா? மானுடர்களின் உறவுகள் அறுபடும் போது சடங்குகளும் சாங்கியங்களும் எழுந்து வந்து இழுத்துப்பிடிக்கின்றன. காவோலையைக் கைவிட முடியாதா? உறவுகளைப் பிரிவதில் நீக்குவதில் , கடந்து செல்வதில் இருக்கக் கூடிய முதன்மையான வாதை என்பது அவர்களைப் பிரிகின்ற துயரல்ல, அவ் உறவுகளைக் கொண்டு உருவாகி வந்திருக்கும் சிக்கல்கொடுக்கக் கூடிய துக்கமே அது. எளிமையான எதுவும் உறவாக இருக்கமுடியாத பழியில்தான் இத்தனை பேர் பிறந்து மடிகிறோம். காவோலையின் உறவுப்பெயர் கூட இவனுக்கு உவப்பானதில்லை. அம்மாவின் தூரத்து உறவினன் , அவளுக்கு தம்பி முறையாக வேண்டும் என்று சொன்னால் இவனே சிரித்து விடுவானில்லையா? வேண்டுமென்றால் அவளை தேசி மரத்தடியில் ஆழப் புதைத்தவன் என்பதான உறவாக ஆக்கிக் கொள்ளலாம். ஊரில் கரந்திருந்த மந்தணப்பேச்சின் அடியாக அவன் இவனுக்கு இன்னொரு தகப்பன் என்றா சொல்ல முடியும். இவனால் அவனுடைய சாவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காவோலை ஒரே ஷெல்லில் உடல் சிதறிச் செத்துப்போனான். ஒரு கணத்தில் சாகுமளவுக்கு சிறியவையா அவனுடைய பாவங்கள்? எதிரிநாட்டிலிருந்து பிடித்து வந்த உளவாளியைப் போல், கடவுளர் அவனை விதம் விதமாக சித்திரவதைப்படுத்தி, உயிர் எடுப்பர் என்றெல்லவா நினைத்திருந்தான் இவன். அந்தக்கடற்கரை மணலில் ஈமைக் காரியங்களுக்காக காத்திருக்கிறானா? நீரும் அவிசும் அளித்து பிதிர் செய்ய வேண்டுமா? சீ அறுதலி மகனே ! என்று வெளியே சினந்து அவன் நினைப்பை அகற்றப் பார்த்தான். மானுடமனம் விசித்திரமாகத் துக்கத்தை எதிர் கொள்கிறது. அது துக்கத்தை நினைவு கொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியை ஞாபகம் கொள்வதில்லை. அதனுடைய தலையான கூருணர்வு மீண்டும் அத்துக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதிலேயே குவிந்திருக்கிறது. அதனால் அது அதை மீண்டும் மீண்டும் ஆழங்களில் இருந்து எடுத்துவருகிறது. காவோலையை விலக்கும் போதெல்லாம் அவன் பெருகித் தோன்றினான். எந்தப்பக்கம் திரும்பினாலும் ஓர் தளவாடி நின்றது. அதில் காவோலையின் சாயல் கொண்ட உருவம் எழுந்தது..வெறுப்பினால் அழித்து தள்ள நினைக்கும் போதேல்லாம் காவோலை பேருருவை அடைந்து இவனை ஆக்கும் இன்னொன்றானான். காவோலையை அழிப்பது இவனை அழிப்பது போன்றது என்று ஆகிவிட்டதே நுள்ளானின் ஊழ். முக்கியமாக `சொல்லித்தந்தவன்` என்ற இடத்தை பேருருவாக நிறைத்து நிற்கும் காவோலைக்கு முன்னால் சிறுவனாகவே தோன்ற முடிந்தது. என்ன வஞ்சினமும் கொலைமனமும் எழுந்தாலும் தந்தையென்றும், சொல்லித்தந்தவன் என்று ஆனவன் முன் தன்னை முழுதும் வென்றெழ முடியவில்லை என்பதை நுள்ளான் இக்கணம் அறிந்தான்.
காவோலை, பெறாமலே தந்தைக்குண்டானதெல்லாம் எடுத்துக்கொண்டவன். அலோசியஸ் பாஸ்ரர் ஒரு முறை சபையில் சொன்னார். தந்தையான ஆண்டவரின் பணிதான் என்ன? பிள்ளையை அறிவுக்கு கூட்டி வருவது, தந்தையே முதல் ஆசிரியன். அன்னையை நீங்கி வாழ நேரிடும் என்ற உண்மையின் முதல் சொல்லாக தந்தையரே நிற்கிறார்கள். ஆண்டவர் அதையே முதல் காரணமான அறிதல் என்றார். தன்னை தந்தையாக அமர்த்திக்கொண்டார். அன்னையிலிருந்து மேலெழும் போது பிள்ளையடையும் தனிமையில் இருந்து அவர்களை மீட்கும் வழியறிந்தவர் தந்தைதானே? ஆதலால் தான் பிதாவும் சுதனும் தங்களை தந்தை மகனாக இப்பூவுலகிற்கு எடுத்து வந்தனர். தந்தைமை என்பது குருதியால் மட்டும் அடையப்படுவதில்லை, அது கருமங்களின் விளைவு`
மீண்டும் வலசைக் கூட்டம் விருட்டென வெட்டிச்சென்றது.
இந்தக் குருவிகளை தானே பெயரிட்டவன் போல் நுள்ளானுக்கு அறிமுகம் செய்தவன் காவோலைதான். உடையார்கட்டு குளத்திற்கு மேலே இறங்கிய தகைவிலான்களைக் காட்டி காவோலை `கூ` காட்டி அவற்றின் வலைசைக் குழைவின் சீரிசையை ஒரு கணம் குலைத்துக்கொண்டே சொன்னான். தலைவிலான்கள் இமையம் வரை பறந்து செல்பவை , சிவனின் சடாமுடியில் கூடு கட்டி முட்டையிடப்போய் அவனுடைய தீச்சொல்லை ஏற்றவை. நிலமே தொடாது வாழுங்கள் என்றிருக்கிறான் மூன்று கண்ணன். காவோலை குளத்திற்கு மேலே பறக்கும் அக்கூட்டத்தை உற்றுக்கவனிக்கச்சொன்னான்.
`தகைவிலான்கள், களைப்பில்லாமல் விருட்டெண்டு பறந்துகொண்டே இருக்கும். அதுகள் அளவுக்கு வானத்தை யார் அறிய ஏலும்? காத்திலை இருக்கிற தண்ணியை நாசியால அறியுது, அதுகள் மண்டை சின்ன சின்ன காந்தங்கள் போல பூமி எண்டுற பெரிய திசையுள்ள காந்தத்தோட இணைஞ்சு இருக்கும். நிலத்தின்ர ஈர்ப்புக்கும் வானத்தின்ர அழைப்புக்கும் நடுவிலை காத்தை கிழிச்சுக்கொண்டு பறக்கும். கூட்டமாக வலைச்சைக்கு எழும் பறவைகள் வானத்தில் ஒன்றே என தம்மை அறிபவை. `தான்` என்பது வானத்தில் இருப்பதில்லை. உள்ளிருக்கும் தான் அழிந்து போகும் போது அந்தச் சிறிய உடம்புக்குள்ள வானம் முழுமையாவே வந்திடும். பூமியையும், வானத்தையும் அறியும் போது காத்தையும் ஈரத்தையும் தகைவிலான்களைத் தவிர ஆர் அறிய முடியும்? காத்தின்ர ஈரம்தான் மழை, காற்றை அறியிற பறவை மழையையும் அறியுது. மழையைஅறிவதனால் எல்லாவகை நீரையும் அது அறியுது. நீரை அறியும் போது அழிவையும் அறியுது` சிறுவனான நுள்ளானுக்கு கோர்வையாக எதுவும் விளங்காவிட்டாலும், அது மழையை முன் அறியும் என்பதே பெருவியப்பைத் தந்தது.
’எப்ப கீழ வரும் அப்ப?’
’வராது . நான் கண்டதில்லை’
மாத்தளனில் எங்கிருந்தோ வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டான். இவன் நிவாரண கஞ்சியை வாங்கிக்கொண்டு பதுங்குகுழியிருந்த கூடாரத்திற்குத் திரும்பும் போது அதன் வாசலில் அமர்ந்திருந்தான் காவோலை. இவனைக் கண்ட வெருண்டான் . அடிப்பான் என்று பயந்திருப்பான். அது இவனுக்கு உள்ளுர சிறு மகிழ்வைத் தந்தது. அகங்காரமடைந்த மனம். வெல்லும் தருணங்களை எவ்வூழி வெளியே நிகழ்ந்தாலும் காத்திருந்து சேர்த்துக்கொள்கிறது. அவனிருப்பதை அறியாதவன் போல் கடந்து போய்விட்டான். ஒரு சொல்லும் அதன் பிறகும் சொன்னானில்லை. காவோலையின் மேல் மேல் ஷெல் விழுந்த போது அங்கிருக்க முடியாது என்று எல்லோரும் ஓவென்று கத்திக்கொண்டு கடற்கரையில் ஓடத் தொடங்கும் போது சிதறிக்கிடந்தவனைக் காட்டி, அவன் உனக்குத் தகப்பனைப்போன்றவன் என்றாள் பெரியத்தை.
‘எப்படி அம்மாவைக் கொன்று வளர்த்தினோமே அந்த வகையிலா ? என்று கொண்டே காலால் மணலை வழித்து காவோலைகளை மூடி, மேடிட்டு தகரத்தை வைத்து விட்டு வந்தான்.
மீண்டும் தன் சொற்களை நினைத்த போது கால் தசை துடித்தது. உடலில் வெம்மை ஏறி நடுநடுங்கினான். இதயத்திற்கு மட்டும் எதுவும் எட்டாமல் இருந்தது. பாறையில் ஈர உடைகள் மோதும் சத்தம் கீழே கேட்டது. அமர்ந்திருந்த பாறையின் கீழே நின்றாலும். ஒவ்வொரு விசுக்கிற்கும் எழுந்து தாளும் நெஞ்சின் மூசொலி மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. விசுக்கிய நீர்த்திவலைகள் உயரத் தெறிப்பதையும் அவன் கண்டான். காவோலையை ஈரக்கடல் மண்ணை அணைத்துப் புதைத்து விட்டு அன்றிரவு பதுங்குகுழியில் இருந்த போது இவள் அவனுடனான உறவைப் பற்றி இவள் கேட்டாள். நுள்ளான் அசாதாரணமாக அடையும் கனத்தை அவனருகிருந்தே அறிந்ததால் அதைக்கேட்டாள். அவள் அப்படி ஏதும் கேட்பது அரிதிலும் அரிது. தானும் நெருங்காள் , இவனையும் கேள்விகளுடனோ அபிப்பிராயங்களுடனோ அனுமதிப்பதில்லை. எனினும் காவோலையைப் பற்றிக் கேட்கும் போது நன்றாக நறுக்கி எடுக்கப்பட்ட கேள்வியாக இருந்தது. `உங்களுக்குள்ள என்ன உறவு ?` அவள் அதன் பெயரைக் கேட்கவில்லை. என்று நன்கறிவான். ஆனால் நுள்ளானுக்கு அதைச் சரியாகச் சொல்ல வரவில்லை. நெடுநேரம் பதுங்குகுழிக்குள் திரண்டிருந்த மூதிருளையே வெறித்துக்கொண்டிருந்தவன். மெல்லக் குரலைத் திறந்தான்.
`அப்ப நான் மூண்டாம் வகுப்பு படிச்சுக்கொண்டிருந்தனான். ஒருநாள் பள்ளிக்கூடம் போய்டு வீட்ட நடந்து வாறன், வீட்டுக்கு முன்னாலை காவோலை தன்ர மான்கொம்புப் பிடிபோட்ட கத்தியை தீட்ட வச்சிருந்த சீவு கட்டேலை இருந்து `அம்மா அழுது கொண்டிருந்தாள். அப்பாவும் காவோலையும் தடல் புடலாக எங்கையோ வெளிக்கிட்டுக் கொண்டிருந்தாங்கள். அயலவர்கள் சிலரிடம் அப்பா இரைந்து கொண்டிருந்தார். `பொறுக்கித்தின்னி நாய்க்கு பொம்பிளையோட என்ன சண்டித்தனம்?` நான் அம்மாக்கு கிட்ட போக அம்மா என்னைக்கண்டிட்டு கண்ணைத் துடச்சிட்டு `வந்திட்டியோ, என்று தூக்கி மடியிலை வச்சுக்கொண்டு எனக்காக அணைச்சிருந்த அழுகையை திரும்ப ஆர்ம்பிச்சாள். ஒரு சொட்டு நேரம்தான் அழுகையை நிப்பாட்டி, விட்ட இடத்திலை இருந்து திரும்பவும் தொடங்கினாள். என்ர ஆத்தைக்காரி உலகத்தின்ர முழுப்பொம்பிளையளுக்குமாய் அழக்கூடியவள். நாடகமொண்டு போடோணும் எண்டு ஆலமந்திட்டால் கடலே வந்தாலும் கலி தீராமல் எழும்பாள். அப்பருக்கு அவள் அழக்கூடாது. தவிர, வீட்டுப்பொம்பிளையளை ஆரும் சேட்டைவிட்டால் ஆம்பிளையள் யோசிக்காமல் நிலைகுலைஞ்சு போனதால நடந்ததுதான் உலகத்தின்ர முக்கால்வாசி சண்டையள், வயித்துக்க உருவான உயிரை ஆக்கிறதுக்கு எவ்வளவு கனியிறாளோ, எதையாவது அழிக்கவும் அவ்வளவு கல்லெண்டு ஆவாள்`
அப்பரையும் காவோலையையும் பாவைப்பிள்ளை அவளுக்கு.
`கறுவிக்கொண்டு நிண்ட அப்பருக்கு கிட்ட போக, கோத்தைய உவன் எளிய வேசைமோன், அடிக்க கையோங்கி இருக்கிறானடா தம்பி, ஓடிப்போய் சைக்கிள்ள ஏறு` எண்டார். காவோலை கிட்டவந்து சிரிச்சுக்கொண்டே `என்னடா தைலான் மகனே அவனை அடிப்பியோ ?` நான் தலையை ஆட்டினன். அப்ப பாஞ்சு வந்த அப்பர் காவோலேன்ர சறத்தை உருவி இடுப்பு பெல்டிலை கொழுவி இருந்த கத்தியை பறிச்சிட்டார். அதை அங்காலை அம்மாட்டை எட்டிக்குடுத்திட்டு ` உவன் விசரன் குத்தினாலும் குத்திப்போடுவான், கத்தியை குடாதை` எண்டிட்டு சைக்கிள்ள ஏறினார். காவோலை ஏமாற்றத்தோடு `வம்பிலை பிறந்தவனை கையாலை முடிப்பன், நீ வாவன்` என்றபடி சைக்கிளின் பின்னால் ஏற அம்மாவின் அருகில் போவதா வேண்டாமா என்று நிண்டன். ஏனெண்டால் அப்பர் அயலுக்கு படம் காட்ட என்னை வரச்சொல்லி இருக்கலாம். புறப்படும் போது தயங்கி நின்ற என்னை காவோலை கூப்பிட்டு சைக்கிளின் முன்னால் ஏற்றிக்கொண்டான். மூவரும் சூசையப்பர் கோவிலடியை நெருங்கும் போது அந்தாள் சைக்கிளில் எதிரில் வந்தான். அவனை மறித்து கதைவழிப்பட்டார்கள். கைகலப்பு முற்றியது. ஒரு கட்டத்தில் நான்கைந்து பேர் பிடிக்க வந்தார்கள். அப்பரையும் அந்தாளையும் பிடித்துவிட்டார்கள். காவோலையை பிடிப்பதற்கு குறைந்தது நால்வர் வேண்டும். தன் மடத்தல் கைகளை விசுக்கி ஆள்பேர் தெரியாமல் அடிப்பான். தன் எதிரில் அந்தாளை அவர்கள் பிடித்துக்கொண்டிப்பதைக் கண்டதும் ஓரமாக நின்ற என்னிடம் `டேய் கொண்டாடா அந்த மான்பிடியை` என்று கூவினான். நான் பொக்கற்றுக்குள் இருந்த காவோலையின் பிரபலமான மான்கொம்பு பிடிபோட்ட கத்தியை எடுத்துக்கொடுத்தன். கணப்பொழுதுதான் பாஞ்சு போய் அந்தாளின்ர தோளிலை ஒரே இறக்கா இறக்கிட்டான். அந்தாள் சுருண்டு விழ சண்டை முடிவுக்கு வந்தது.
நிறுத்திவிட்டு காவோலை அவளை நிமிர்ந்து கண்ணில் நிலைத்தான். பிறகு அடித்தொண்டை இறுகிய குரலில்,எனக்கும் அவனுக்கும் என்ன உறவெண்டு நீ கேட்டால் எனக்கு சரியா சொல்லத் தெரியாது , அண்டைக்கு அப்பர் பறிச்சு எறிஞ்ச கத்தியை நான் கொண்டுவந்திருப்பன் எண்டு அவனுக்கு எப்படித் தெரியமோ, அதுதான் அவனுக்கும் எனக்கும் இருந்த உறவு`
நுள்ளான் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து இவள் நுள்ளானை அறிவாள். ஆனால் அவன் எல்லோராலும் முரடன் என்றும், சண்டைக்காரன் என்றுமே அறியப்பட்டான். அவனை நெருங்கி அவனுள் ஒரு மானுடன் வாழ்கிறான் என்பதை அறிவதற்கு யாருக்கும் வாய்ப்பளிப்பதில்லை. திருமணச்சடங்கு கிளிநொச்சியில் நடந்த அன்றிரவு `நீ உள்ளுக்கு படு நான் வெளியிலைபடுக்கிறன்` என்று தலையைக் குனிந்துகொண்டு அவன் சொன்னபோது தன் இறுக்கங்களை அவளும் தளர்த்திக்கொண்டிருந்தாள். நுள்ளானிடம் அறிந்ததெல்லாம் காவோலையைச் சுற்றியவைதான். பெற்றதாயைக் கொன்றபோது, `அறைந்தேன் தலை மோதி இறந்து விட்டாள்` என்று சொன்னான். அவனுக்கு, தான் வெறுக்கக் கூடிய மகாமனிதன் என்ற நினைப்பையே அவள் உண்டுபண்ணியிருந்தாள். கசப்பே இருவரையும் கூட்டிச்செல்லும் வழியாக இருந்தது. நான்கு வருடங்களுக்கு மேலே ஆகி விட்டிருந்தது. எவ்வளவோ மாறி விட்டது, விழைவுகளும் , கனவுகளும் கூட அழிந்தொழிந்தாயிற்று. எது இவர்களைக் கட்டியதோ அது இவர்களை விடுவிக்காமலே அழிந்து போனது. பாறையில் இருந்து சறுக்கி கீழே இறங்கினான்.
`உனக்கு உதாலை விழுந்துதான் சாவெண்டால் நான் என்ன செய்யிறது ?`
பாறையால் சறுக்கி இறங்குபவனைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னாள். ஈர உடைகளை இரு தோள்களிலும் ஏற்றியிருந்தாள். அவற்றைத் தரும்படி நெருங்கிப்போனான். மறுத்து விட்டாள். எதிர்பார்த்தவன் போல முன்னால் ஆற்றங்கரையோரம் நடந்து மேலேறப்போனான். சட்டென்று திரும்பி இவளை ஒருகணம் ஏறிட்டான்.குறுக்குக் கட்டிற்கு மேலாக துவாயைச் சுற்றியிருந்தாள். தலை ஈரம் காயாமல் சொட்டிக்கொண்டிருந்தது. வழமைபோல கேசப்பொழிவை துவாயால் இரண்டு அடி அடித்து மார்பைச் சுற்றி அதன் மேல் தெறிகளற்ற ஈரச்சட்டையொன்றையணிந்திருந்தாள். உன்னித்த முலைகளின் எழுச்சியை துவாய் இன்னும் உருப்பெருப்பித்திருந்தது. தகைவிலான்களின் வலசையொலி தலைக்கு மேலே விசுக் விசுக் என்று கேட்டபடியிருந்தது. திரும்பி வெறிப்பவனை நிலைத்துப்பார்த்தாள். துக்கமும் காமமும் ஒருங்கே எழும் அவனுடைய கோலத்தை நெருக்கமாக உணர்ந்தாலும். வழமைபோல அவனைச் சீண்டி நிறுத்தினாள்.
`இரவும் நெஞ்சுக்க கை வந்தது, நீ உடுப்பு தோய்ப்பம் எண்டு வெளிக்கிடேக்கையே நினைச்சனான். மிதிப்பன். பேசாமல் நட` என்றாள் கடுமையாக. கண்ணில் மட்டும் நெடுநாளுக்கு பிறகு, மறுக்கும் பெண்ணின் ஆதியான இகழும் பார்வை விரிந்து அகன்றது. ஆற்றங்கரையில் அசமந்தங்கள் இல்லைத்தான். இவர்கள் சற்று தூர நடந்து முள் வேலிகள் முடியும் இடத்தில் துவைப்பார்கள். அவ்விடம் வரை பொறுமையாக நடந்து யாரும் குளிக்கவோ துவைக்கவோ வருவதில்லை. கண் எதற்கும் இருக்கட்டுமே என்று சுற்றும் பார்த்துவைத்தது. இரவு நெஞ்சுக்குள் கை புகுந்த போது அதை அகற்றி விட்டு குழந்தையின் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். குழந்தைக்கு அப்பால் படுத்திருந்த அத்தைக்காரி உறங்காமல் கைகால்களை உழற்றிக் கொண்டிருந்தாள். இதுவொரு செய்யப்பட்ட குடும்பம் என்றாலும் அடிப்படை ஒழுங்குகளை இவள் விட்டுக்கொடுப்பதில்லை. பாவனை என்பதை மறந்து எல்லா நெறிகளுக்கும் ஒழுங்குகளுக்கும் இயைந்து போனாள். ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது நுள்ளானை அனுமதித்து. இரவு கைகள் மணலணைந்த நண்டாகித் துளாவியபோது, நடுங்கி விதிர்த்ததையும் , வாசனை எழுந்ததையும் நுள்ளான் அறியாமலிருக்க மாட்டான். அப்படியே நின்றாள். அசையாமல் வேறெங்கோ பார்த்தபடி கண்ணில் தாழ்வில்லை. அதுவொரு அழைப்பு. அவனுக்கும் அது தெரியும். அவளுடைய வஞசம், ஏளனம், வெறுப்பு, கனவு எதுவும் அவளுடைய காமத்தை அண்டுவதில்லை. அவளுக்குள் காமத்துக்கென்று மட்டும் தூய தெய்வம் ஒன்று வாழ்ந்தது. உண்ணும் நாக்கே உடலென்றானது. கொலைபுரிக என்பதே அதன் நாவெழுந்த ஒற்றைச் சொல். துக்கமென்றான நுள்ளானின் கண்கள், அவள் கண்ணுக்கு காமத்தின் சாயையை போலிருந்தன. முழு உடலும் அழைப்பென்றாகி அப்படியே நின்றாள் அந்த ஆற்றுப்படுக்கையின் குளிர்ச்சி தொடைகளில் ஏறி மேற்சென்றபடியிருந்தது. அது நுள்ளானுக்காக நீண்டு காத்திருக்கும் பாவனையை நிகழ்த்தத் தொடங்கியது. அருவி ஆற்றின் நூலோடை ஒலி உடலுக்குள் புகுந்தது. நுள்ளான் அவளை நெருங்கி இயல்பென விலத்தினான். அத்தெய்வத்தைக் காணத பாவனையில் அவளைக் கடந்து ஆற்றுச்சரிவை மேவி ஏறத்தொடங்கினான். அவள் அப்படியே நின்றிருந்தாள்.
அச்சரிவில் கால்பதியும் போது பாதங்கள் மிருதை மிதித்த உணர்வு. காலடியில் எதையோ கண்டு துணுக்குற்று குந்தி இருந்தான். இறக்கைகளை விரித்துப்போட்டபடி தலை பக்கவாட்டில் சரிந்து கிடக்க, சிவப்பு எறும்புகள் மொய்த்து பாதித் தலை தின்னப்பட்டு என்புகள் வெளித்தெரிந்தபடி தகைவிலான் குருவி ஒன்று கிடந்தது. அதைக் கைகளில் எடுத்து இரண்டு கரங்களாலும் ஏந்தினான். அதன் மண்டையோட்டினுள் இருந்து எறும்புகள் வெளியேறின. நுள்ளான் பாதத்தில் தொடங்கி நொருங்கும் ஆடியென அப்படியே பொத்தென்று முழங்கால் குத்த இருந்தான். குருவியின் உடலைக் கண்களில் ஒற்றிக்கொண்டு குலுங்கியழத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து ஏறிய அப்பெருநா – தெய்வம், அவனைப் பொருட்டெனவும் கருதாது சரிவில் ஏறி அப்பக்கமாக மறைந்தது.