நாற்பது முழத்தான் | காளம் 02

 

பெரிய மன்றாடியாரின் பெயரன் என்று கிழவரிடம் சொல்லுங்கள்` வாயில் காவலரிடம் சொல்லி விட்டு,  சுருவத்தடியில்  அமர்ந்து கொண்டான் உக்காரா. பணிக்கர் கிழவரின் களரிக்கு அனுமதியில்லாமல் போக முடியாது. தனக்குரிய கனம் பண்ணுகைகளை எதிர்பார்ப்பவர்.  மன்றாடியாரின் அணுக்கமான சீடப்பிள்ளை என்றாலும், இவனுக்கு அவர் பெரிதாகப் பழக்கமில்லை. சிறுவயதிலேயே தாயுடன் மதவாச்சிக்குச் சென்றுவிட்டான்.  ஆனால் அவரை பெரிய மன்றாடியாரின் கடைசி நாட்களில் அவரின் சொற்களில் இருந்து அறிந்து கொண்டவன். கால்கள் வலித்தன. செட்டி குளத்தில் உசுப்பிய மோட்டார் சைக்கிளை வாசலில் வந்துதான் நிறுத்தியிருந்தான்.  கால்களுக்கு இரத்தவோட்டம் குறைந்து கண்ணறிய வீங்கிப்போயிருந்தது.  ஆற நீட்டி   காற்பெருவிரல்களில் பார்வையை நிறுத்தினான்.  வெறொரு உடலைச் சேர்ந்தவையாக மரத்துக்கிடந்தன.  மெல்ல அசைத்துப்பார்த்தான்.  வயல் எலியை விழுங்கிய  பாம்புகள் போல் திம் என்றிருக்க நுணிகள் மட்டும் நுண்ணியசைந்தன. சற்றுத்தள்ளி வாய்க்கால் ஏதேனும் ஓட வேண்டும். நீரோசை அறுபடாமல் வந்து கொண்டிருந்தது. அருவியாற்றிலிருந்து  கிளைக்கு  இன்னொரு நீர்ப்பாம்பாகவிருக்கும். மன்றாடியார் அருவியாற்றை `நாற்பது முழத்தான் பெரும்பாம்பு` என்று விழிப்பார். இராட்சசன் குளத்தின் பாசனக் குடியேற்றங்களுக்கு அருவியாறே நீர் கொண்டு வந்த பாம்பு. மலைநாட்டிலிருந்து  பல்லாயிரம் சிறு  சர்ப்பங்கள் சேர்ந்து உருவான பெரு நாகம்.  `கட்டுடைச்சுப் பாஞ்சு ஊழியாடின காலத்திலை இராட்சசன் குளம் எண்ட பேரழிஞ்சு ,கட்டுக்கரைக் குளம் எண்டு ஆகிப்போட்டுது` என்றவாறே பெயரனார் குளத்திசைக்கு  கையெடுத்துக் கும்பிடுவார்.

`இண்டைக்கும் சிங்களவர் அதை ஜோத வெவ எண்டுறாங்கள், வெள்ளைக்காரன் ஜெயண்ட் டாங் எண்டுறான், எங்கடையாக்கள் மட்டும் கட்டுக்கரை குளம் எண்டுறம். எத்தினை யுகங்கள் மனுசருக்கு மேலால உருண்டு போனாலும் நெஞ்சுக்கை ஊறின பயம் போகாது, கதை கதையாச் சொல்லி ஆழத்திலை நிப்பாட்டினது, அதாலதான் `நாப்பது முழத்தானை  நினைக்கிறதைக் கூட சனமந்த குளமுடைச்சுப் பாஞ்ச அழிவோட கைவிட்டிருக்கு.  

இவனுக்கு நல்ல ஞாபகம் இருந்தது.,  நீரோட்டம் பாக்கிறதுக்கு  வெள்ளாமைக்காரரும் சரி,  மீனினம் கரையேற்றம் காணுறதைக் கணிக்க வாற சம்மட்டிகளிடமும் சரி முதலில் இருத்தி வைத்து  நாற்பது முழத்தான் கதையைச் சொல்லிப்பதிய வைக்காமல் விடுவதேயில்லை. இன்றைக்கு வரைக்கும் மனுசர் ஏன் அந்தக் கதைக்குள்ளே இவ்வளவு புதைந்து போயிருந்தார் என்று உக்காராவல் உய்துக்கொள்ள முடியவில்லை. அவரிடம் பழைய கூத்து ஏடுகள் இருந்தன. இராட்சசன் குளத்தைச் சுற்றியிருந்த கத்தோலிக்க பங்குகளுக்குரிய கூத்துக்கட்டுபவர்களிடையே மன்றாடியாரின் மூதேடுகள் பிரபலமானவை. கூத்துக்கட்டும் படியேட்டுக்காரர்கள், பிரதிக்கையார்களும் ஏடுகளில் எழுத்தோ சொல்லோ விடுபடும்போது மன்றாடியாரிடமே வந்து நிற்க வேண்டியிருந்தது. மொத்த மன்னார் மறை நிலத்தின் நாடக மரபிற்கும் அவரே `தாய்க் கொப்பி` யாகவிருந்தார்.  

`கூத்தொண்டும் களிக்கு ஆடுற பொழுது போக்கில்ல  கண்டியோ?  ஒரு சொல் பிழைச்சாலும் அறம் விழுத்தும் தெய்வம் சூர் எழும்பும் எண்டுறது வழக்கு, அப்ப நான் சிறு பெடி. தகப்பனார் தோளிலை தொத்திக்கொண்டு திரிவன். இரவிரவா நடைகூட்டிப்போய் கூத்துப்பாப்பம். இப்பிடித்தான் ஒருக்கால் கொக்குக்குப்படையானிலை நொண்டி நாடகம். குருவானவர் முன்னாலை அண்டைக்கு பங்குக்கோயில்லை  சனம் திரண்டு நிக்குது. பூசை முடிஞ்சு நாடகம் தொடங்கீட்டு. அண்டைக்கு பிரதிக்கையர் ஒரு வேணாவில்காரன். அவனுக்கு சாதுவான கொன்னை.  சொல்லுப்பிழைச்சால், கையறம்` எண்டு வழக்கு. அது நிண்டு பலிக்கும். அண்டைக்கு குளக்கட்டுப்பாட்டு ஒண்டு பிழைச்சது. இப்பவும் நல்ல ஞாபகம் எனக்கு. அவன்ர பேர் மறந்திட்டு பச்சைக்கிளாச்சிக்காரன், நல்ல நடிகன் ஆனால் சொல்லை விட்டிடுவான். பிரதிக்கையான் பிழையா சொன்னானோ , இவனுக்கு கொன்னை தட்டிச்சுதோ யாருக்கும் தெரியாது.

குளக்கட்டு தறிக்கப்போனன்

குளக்காரன் துரத்தி வந்தான்

வழுக்கலால் விழுந்தோடிப்போனன்

வழுக்கி அந்தக்கால் சுழுக்கினதப்பா

எண்டுதான் பாட்டு. ஆனால் இவன் விசரன் அந்தக்கால் எண்டதை இந்தக்கால் எண்டு பாடிட்டான். அவ்வளவுதான் அம்பலம் வழுக்கி ஆளை விழுத்தீட்டு . கால் முறிஞ்சிட்டு. காலுக்கு புக்கை கட்டி சரியாக்கிப் போட்டம். ஆனால் அவன்ர காதுக்க எலும்பு முறிஞ்ச சத்தம் அதுக்குப்பிறகும் கேட்டுக்கொண்டே இருந்ததாம். மடுமரியாளுக்கு நெர்ச்சை வெட்டித்தான் சத்தம் நிண்டது. 

அவருடைய உடல் கதையைச் சொல்லெடுப்பதைத் தாண்டிச்செல்லும். அவர் முழு உடலால் அதை நிகழ்த்தியே காட்டுவார்.  அவனறிந்தவரை அவர் மேடையேறிக் கேட்டதில்லை அவரிடம் சொல்லும் உடல் மொழியும் பெருகி வந்தபடியே இருக்கும்.  அவர் அவ்வளவு பக்தரோ சபை விசுவாசியோ கிடையாது. ஆனால் அவர் சொல்லில் எழும் தெய்வங்களை ஆட்டுவிக்கும் போது அவரிடம் அவை குறித்த அச்சமும்,  குறுக்கமும்  வெளிப்படும்.  நெல் நிலங்களில் `வாரி` குறைந்தால்   இராட்சசன் குளத்துக் கிராமங்களில் கூத்துக்கட்டுவார்கள். கூத்துக்கட்டினால் இராட்சதன் உக்கிரம் குறைந்து  மாரி திறக்கும். அருவியாற்றிலும், நிலத்துக்கு அடியிலும் நீரோட்டம் குறைந்தால் அதைக் கண்டு சொல்வது மன்றாடியாரின் பணி.  நடந்து போகும் போதும் அவருள்ளம் மண்ணுடன் பிணைந்து கிடந்தது. தோள்பையில் விதம் விதமாக் ஈர்க்குகள் இருக்கும் அவரறியாமலே கை அநிச்சையாக ஈர்கை எடுத்து விரலேந்தும். தன் காலுக்கு கீழிருந்த அத்தனை நீர்ப்பெருக்கையும் அறிந்தவர் போலிருப்பார். நிலத்தடியில் ஓடும், உறையும், வறளும் நதிகளை அவரால் துல்லியமாகக் காணமுடியும்.

`மேலை  மழையும், அருவியாறும் , இராட்சசன் குளமும் எப்படி அவன்ர நெருப்பை நீறாக்கி வச்சிருக்கோ, நிலத்துக்க ஆயிரம் ஆறும் குளமும் அதே வேலையைச் செய்துகொண்டிருக்கு` எத்தனை பழைய கதை, எவ்வளவு பழைய அச்சம்.  `நாலுமுழத்தான் பற்றிய பயம், அவரே திரட்டியெடுத்ததல்ல, என்பார். தன் தாதைகள் திரட்டித் திரட்டி உறைந்த  மணற்கேணியது என்பதை  உறுதியாக நம்பியவர் மன்றாடியார். நாப்பது முழத்தான் எக்கணமும் எழுந்து விடுவான் என்று  பயந்தபடியிருந்தார். அவர் ஒன்றும் பயந்தவரோ பிசகியவரோ கிடையாது. அவரிடம் மூதாதைகளின் சொற்கள் இருந்தன. அவர் அஞ்சியது அதற்கு மட்டுமே. ஒரே ஒருமுறை இவனுக்கு நாலுமுழத்தான் ஏட்டை எடுத்து படித்துக்காட்டியிருக்கிறார்.  ஏடுகளில் மெய்யெழுத்துகள் இருக்காது.  எழுத்தாணி துளையிட்டால் ஏடுகள் கிழிந்துவிடும். நாலுமுழத்தான் ஏட்டைப் படிப்பதற்கு மிகுந்த புலமை வேண்டும். எளிய  மன்றாடியொருவருக்கு புலவரைப்போல்  பாண்டித்தியம் இருந்தது அவர் காலத்தில் பெரிய வியப்புக்குரியது.

`காட்டாளராய் அலைந்து கிடந்த குலங்குடியெல்லாம் பயிர்செய்து பிழைக்க வெளிக்கிட்ட பெருங்காலமொன்றில்  காட்டிலிருந்த தெய்வங்களும்  யக்சர்களும் கைவிடப்பட்டார்கள். கோவம் கொண்ட முதற் தெய்வங்கள் இந்த தீவை நீங்கிச்செல்ல, அத்தெய்வங்களின் வாக்கினால் கட்டுப்பட்டு மலைகளுக்குள் கட்டுண்டு கிடந்த யக்சர்கள் தங்களின் மலைப்பிலங்களை விட்டு வெளியே வந்தார்கள். பிலத்தில் உறைந்த காலத்தில் அவர்களுக்கு மலையும் நீரூற்றுகளும் உண்டியும், நீரும் அளித்தன. நீள் தூக்கமே அவர்களின் ஊழ்கமென்று மலையின் தெய்வங்கள் அவர்களுக்கு விதித்திருந்தன. கட்டுக்கள் அவிழ்ந்த போது  நிலைமை தலைகீழானது. காடுகள் அவர்களின் வயிற்றிற்கு போதுமானதைக் கொண்டிருந்தன. ஆனால் அவர்களின் பேருரு அளவிற்கு மமதையும் பகையும் வானெழுந்தது. தங்களுக்குள் சண்டையிட்டனர். காடுகளை விட்டு வெளிப்பட்டு சனங்களின் கழனிகளை அழித்தொழித்தனர். காட்டில்  வேழங்களை விரும்பி உண்ட அவர்கள்  மனிதர்களைப் பிடித்து உண்ட போது  கல்லெழுந்து கனல் கொண்டன  பயிர் நிலத்தில் முழைத்த துடித்தெய்வங்கள். குளிர் உறையும் மலைக்காடுகளை விட்டு வெளியேறாதபடி அவ் இராட்சதர்களையும், அவர்தம் பெண்டுகளையும் மீண்டும் பிலங்களுக்குள் சுருளச் செய்தனர்.  மலைநாட்டைக் கடந்தால் அவர்களின் உடல் வெப்பு நோய் மிகுந்தது. உடல் எரிந்து மாழ்வர் என்பது அவர்களுக்கு  தெய்வங்களிட்ட சொல். இப்படியே பல கோடி கோடி கோடான கோடி ஆண்டுகள் மலைப்பிலங்களுக்கு சுருண்ட அவ் யக்சர்கள் மலையென்றும் குன்றென்றும் கலந்தனர். அவர்களை காத்த தெய்வங்களும்,  சொல்கட்டிய தெய்வங்களும் மறைந்து போயின. அவர்களுக்கு  விழிப்பு அழிந்து போயிற்று, உறக்கமே ஊழ்கமாகி மீண்டும் மீண்டும் கல்லென இறுகி, கல்லென  இறுகி பெருமலைகளின் உயிர் விழைவென உள்ளுறைந்தார்கள். தென் மலைநாட்டின் எல்லையில் இருந்த பெரிய பிலமொன்றில் முது யக்சப் பெண்ணொருத்தியும் அவளுடைய இளங்குமாரனும் வாழ்ந்து வந்தார்கள். அவள் கருவுற்றிருந்ததால் பல ஆயிரம் வருடங்களுக்கு அவளை மலைகள் கொள்ளவில்லை. ஆதலால் பிலத்துக்குள் அப்பெண் நீண்ட துயிலிலேயே கருக்காத்து வந்தாள். ஊற்றுக்களும்,  பூச்சியினங்களும் தம்மை அவளுக்கு உணவாய் அளித்தன. திறந்திருந்த அவளுடைய குகைவாய்க்குள் அவை தாமாகச்ச் என்று அவியாகும் படி தெய்வங்களால் விதிக்கப்பட்டன. பெருமழைக்காலமொன்றில் அவள் திருவயிறுறைந்த குமாரன் அவளைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான். அதில் குருதி பெருகி பேருறக்கத்திலேயே அப்பேரன்னை மடிந்தாள்.  எந்த ஓலங்களும் இல்லாமல் மலைத்தெய்வங்கள் அவளுக்கு முடிவை அளித்தன.  வயிற்றைக் கிழித்து வந்தவன் நான்கு அங்குலமே இருந்தான். அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அந்தப்பிலங்கள் பிடிக்கவில்லை. அப்பெருமலைப் பிலத்தை விட்டு எப்படி வெளியேறிச் செல்வது என்பதே அவன் மனதில் சதா எரிந்த விழை. அதை அவனே அறிந்திருக்கவில்லை. அவனுக்கு எந்த மொழியும் இல்லை, அவனிடம் இருந்தது அந்த விழைவு மட்டுமே. மூசினான், அசைந்தான்,  பிலங்களை அறைந்து பிளக்கப் பார்த்தான். வீறிட்டான். தெய்வங்கள் அப்படியே பார்த்திருந்தன. அவை அவனை உறக்கத்தில் ஆழ்த்தவும் மனமின்றியிருந்தன. நெடுநாட்களுக்கு பிறகு அவை தம் சூர் அழிந்து அம்மகவை ஏந்தும் தங்களின் ஆதித் தாய்மையை மீளுணர்ந்தனர். அவனைத் தொட்டு எடுத்து மார்பிலிட்டு கொஞ்சும் கனவு அவர்களுக்குள் நுழைந்து அவர்களை எளிய அன்னையராயும் தந்தையராயும் ஆக்கியது. தெய்வங்கள் காமத்தையும் , தாய்மையையும் உணரும் போது மட்டுமே  ஆணென்றும் பெண்ணென்றும் உணர்பவை. காமம்  எழும்போது புரியும் உடற்களியினால் யுகங்களுக்கு ஒருமுறை அவை மகிழ்ந்து அடங்குகின்றன. அது போல் தாய் என்று ஆகும் போது  தம் சூர் அடங்கி கனிவு கொள்கின்றன. மலைத்தெய்வங்கள் கொள்ளும் கனிவு நதிகளாகப் பெருகி இத்தீவெங்கும் நிறைந்து  கடலைச் சேர்ந்தன. அவற்றின் மவுனம் பேருறைந்த தாய்மையில் அவன் வளார்ந்தான். தன் வளையில் இருந்து வெளியேறும் செயலையே தன் முழு ஊழ்கமென்று கொண்டு  பிலங்களைக் குடைய ஆயிரம் வருடங்கள் முயன்றான். அவன் விரல்களை விடக் கடுமையான ஏதேனும் ஒன்று வேண்டும் என்று அறிந்தது அவனுடைய ஊழ்கம். தன்னருகில் பேருருவ என்பாகக் கிடந்த தன் அன்னையின் விலா என்பையும் வலிமையான இடது கால் எலும்பையும் உடைத்து எடுத்தான், அவள் சுருள் மயிற்களை அறுத்து  நேராக்கி அவ் இரு என்புகளையும் சேர்த்துக்கட்டி விலாவின் வளைவை தீட்டி கூராக்கி, தன் கோடரியைச் செய்தான். அதைக்கொண்டு சில நூறு வருங்களிலேயே பிலங்களைப் பிளந்து மலைகளி கருவிலிருந்து  வெளியே ஏறினான். தெய்வங்கள் தாய்மையில் களித்திருந்த காலத்தில் அவனுக்கு எல்லாம் அனுமதிக்கப்படும். அவைகளின் முலைகள் தாமாகச் சுரந்து ஓடும் பேருவகையில் அவை மெய்யும் சொல்லும் மறந்து கிடந்தார்கள்.  தாய்மையே தெய்வங்களின் களி என்றன ஆதிப்பாட்டுகள். பிலங்களைப் பிளந்து வந்த நாலுமுழத்தான்,  அப்பொழுது நாற்பது முழம் வளந்து உயர்ந்து பேருருவனாகி நின்றதைக் கூட அவர்கள் காணவில்லை. மகவுகளின் பேருருவை அன்னையர் அவர்கள் வளர்ந்த பின்னரே  தீடீரென ஓர் நாள் கண்டு திடுக்கிடுவர். அச்சமும் மமதையும் ஒருங்கே அடைவர். அவன் வெளியுலகை அடைந்து மலைகளைத் தாவிச்சென்றான். காட்டு வேழங்களைப் பிடித்து உண்டான்.  மூதாதைகளின் சுவை அவன் நாவில் அழியாதிருந்தது.  கொல் வேழமும் ஆயிரம் குற்றம் பொறுக்கும் என்பது தாதையர் சொல்.  இவன் உண்டு களித்த வேழங்களே ஆயிரம் கடந்தன. சூர் கொண்ட வனத்தெய்வங்கள்  வேழங்களில் உறைபவை, அவற்றின் உக்கிரமான கோபம் எழுந்தது.  கோபம் நெருப்பாய் ஆனது. அனல் சென்று நாற்பது முழத்தானின் உடலில் ஏறியது.  உடலொடு மனமும் எரிய வெப்புக் கண்டவனாக  அலறினான். மலை வடியும் அருவிகளை குடித்துத் தீர்த்தான், உடலெரிவு அடங்க வனங்களின் மடியில் உருண்டான்,  முகில் அணையும்  பொருமுகடுகளில் வெற்றுடலாய் நின்றான். எதற்கும் கேட்கவில்லை வனத்தெய்வங்கள்.  தம் மகவு அடைந்த பெரு நெருப்பை தாய்மையில் திளைத்திருந்த மலைத்தெய்வங்கள் அறிந்து கண்ணீர் விட்டனர். மார்புகள் விம்ம தம் மைந்தனை விடுவிக்குமாறு வனத்தெய்வங்களை வேண்டினர்.  குற்றம் பொறுங்கள் என்று கெஞ்சினர். வனத்தெய்வங்களின் மூத்தவளும்  பேரன்னையுமான  மாய்தாழி மனமிரங்கினாள். 

வனதெய்வங்களுக்கு பிரியமான நிலங்கள் தீவின் வடக்கில் பரவியிருந்தன. இயக்கர் என்பட்ட குடிகளின் தெய்வங்களாக அவர்கள் அமர்ந்திருந்தனர். அக்குடிகள் தம் நிலங்களுக்கு நீர்பாச்ச  மடுவொன்றை வேண்டினர். தம் தெய்வங்கள் கனிந்து இறங்க நோன்பிருந்தனர். விழாக்கூட்டினர். பெரும்பலிகளிட்டனர். கலையாடிகள் மூச்சிரைத்துச் சரிந்தனர். மாய்தாழி அவர்களுக்கு கனிந்தாள். மலைத்தெய்வங்களிடம் `நும் மகவின் எரியடங்க அவனை வடக்கே நடத்துக என்றாள். அவர்களும் சம்மதம் , சம்மதம் சம்மதம் என்று மூன்று முறை பதிலளித்தனர்.. நாற்பது அங்குலத்தான்  தலைக்குள் வண்டுகளென இறங்கி வடக்கே செல் என்று ரீங்கரித்தனர் மலைத்தெய்வங்கள், தன் அன்னையின் காலாலும் விலாவினாலுமான அகழ் கருவியை எடுத்துக்கொண்டு மலைநாட்டில் இருந்து  நெடுங்கோட்டுக் குழியொன்றை வரைந்து கொண்டே எரிச்சலோடு நடந்தான். அவன் குழிக்கோட்டை மலைத்தெய்வங்கள் தங்களின் மார்பிலிருந்து சுரந்து நிறைத்தனர். பெரும்பாம்பொன்று மலையிறங்கிச் செல்வது போல நாற்து முழத்தான் பின்னால்  நிகழ்ந்து சென்றது நீர்பாம்பு.  

தன் பின்னே வந்த பேராற்றை கடலில் முடித்துவிட்டு, இயக்கர் குடிக்குரிய பெருமடுவைத் தோண்டத்தொடங்கினான்.  காடு குளிர்ந்த அந்நிலத்தில் கால் வைக்கவே அவன்  பாதங்களில் எரிவு அடங்கியது. முதன் முதலில் சேறு கண்ட பன்றியென அச்சதுப்பெங்கும் உருண்டார். அனல் ஒடுங்கிக் குளிர்ந்தது. அப்படியே கிடந்தான். அவனைத் தம் அடிமையெனக் கொண்ட இயக்கர் குடிகள் முழவுகளை ஆர்த்து அவனைக் கலைத்தனர்.  மடுவைத் தோண்டு என்றனர். அவன் அசையாமல் கிடந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. கையை நீட்டி அவர்கள் எதிர்பாராத கணத்தில் ஒவ்வொருவராகப் பிடித்து வாய்க்குள் போடத்தொடங்கினான். குடிகள் அலறி ஓடினார்கள். தம் தெய்வங்களிடம்   சென்று விழுந்தனர். கலையாடிக்குள் இறங்கிய அவர்தம் தெய்வங்கள் அவனுக்கு வேழங்களை அளிக்குக என்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேழம் அவனுக்கு அளிக்கப்பட்டது. தன் அகழ் கருவியால்  காட்டைத்தோண்டினான். பத்து திங்கள் நீண்டது அகழும் பணி. இயக்கர் குடிகள் அவன் கிண்டிய சேற்றை அணையாக எழுப்பினர். மந்திரமும் கல்லும்  கலந்து கட்டி நிமிர்த்தினர். தோண்டச்சுரந்த அந்நிலத்தோடு அவன் கொண்டு வந்த அருவியாற்றை திருப்பி விட்டான். தன் அன்னையரின் முலைகனிந்த அந்நீர் மடுவை நிறைத்தது அப்படியே அதனுள் இறங்கினான். முழுவெம்மையும் அடங்கிற்று. சில திங்கள்கள் அங்கேயே கிடந்தான். ஒவ்வொரு நாளும் வரும்  வேழங்களை உண்டு விட்டு மடுவினுள் கிடந்தான் அந்த இராட்சசன். குடிகள் அவனை அங்கிருந்து மீண்டும் மலைக்கே அனுப்பச் சொல்லி தெய்வத்திற்கு நேச்சையிருந்தனர். பலிகள் அளித்தனர்.  வேழங்கள் அடங்காமல் அவன் மீண்டும்  காட்டாளர்களை பிடித்தும் உண்கிறான் என்ற கதை பரவியது. அச்சம் தான் பெருங்கதைகளைகள் காற்றென எடுத்துச் செல்வது. சொல்லைப் பெருக்கிப் பெருக்கி நாவுகளும் காதுகளும் உள்ளம் நிறைந்து  சொல் மிதமேறி ஆடிகளாகிப் பெருகிச் செல்கின்றன.  கடைசியில் குடிகள் கூடி அவனைக் கொன்றுவிட முடிவெய்தினர். 

மன்றாடியார்  ஏடு முடியும் முதலே அவ்விடத்தில் கதையை நிறுத்துவார். அவருடைய மூச்சு தெய்வத்திற்குப் படைத்த வாலயத்துணவை உண்ட மயிலைப் போல வெய்துயிர்க்கும். கழுத்தில் நீல நரம்புகள் புடைத்து ஓடி குரல் வளைக்குள் பாம்புகள்தான் நுழைந்துகொண்டிருக்கின்றன  என்ற அச்சத்தையும் மயக்கையும் உண்டுபண்ணும். வஞ்சகமாக அவனை எவ்வாறு நஞ்சூட்டினர் என்பது அவருடைய  சொல்லில் எழும்.  பெருங்களிறு ஒன்றைக் காட்டில் பிடித்து பணிக்கர்கள் தம் நெறிமீறி அவற்றுக்கு நஞ்சு இலைகளும் ,தளைகளும் அளித்தனர்.  ஒரே நாளில் மொத்தமாய் அளிக்கும் காலம் வேழத்தைக் கொன்று விடும். தேர்ந்த மூலிகைச் செடிகள் கூட்டிய நஞ்சுச்சாறு சில திங்கள்களாக அவ்வேளத்திற்கு  ஊட்டப்படும். ஒவ்வொரு நாளும் காலையில் அதன் விட்டையைக் கிளறி பச்சிலைக்காரர்கள் வேழத்தில் ஏறிய நஞ்சின் வீரியத்தைப் கணிப்பர். விடம் ஏற ஏற வேழம் தன் உள்ளிருந்து எழும்  சாவின் கூர் முனை கண்டு அஞ்சியது. அதன் மத்தகமெங்கும் மதநீர் பெருகிற்று.  உடல் வெளுறிச் சாம்பல் கண்டது. நூறாயிரம் குற்றங்களை ஒரே தேகத்தில் பொறுத்துக்கொண்டு நின்றிருந்தது அப்பெருவேழம். இதற்கு மேல் ஒரு துளி நஞ்சும் அப்பெருடைலச் சாய்க்கும் என்ற நாள் கண்டவுடன் ஊரவர் கூடி அவ்வேழத்தை, நடத்திச் சென்று அப்பேருருவனுக்கு சந்தேகம் எழாமல் வழமையான இடத்தில் கட்டிவிட்டு வந்தார்கள்.  மடுவில் உடல் பரப்பிக் கிடந்த  நாற்பது முழத்தானை  வேழத்தின் வாடை ஈர்த்தது வழமைபோல், நூறுவருடம் பாசிக்குள் கிடந்த பேராமை  வெளிச்சத்தை நோக்கி நீந்தி வருவது போல் மடுவில் இருந்து எழுந்தான். உடலை உதறிக்கொண்டே வேழத்தை நெருங்கினான். அவன் பேருரு கொண்டு உள்ளிருந்த பழைய அச்சங்களால் உலுக்கப்பட்ட அவ்வேழம் பிழிறி  பதறியது. அவனைக் கண்டபோதே தன்னுள் கூடிய நஞ்சையும் அது அறிந்தது.  தானே தன்னையுண்ணும் நாவென அறிந்தது. அவன் அதன் முகக்கையைப் பற்றவும் அது அலறிச் சரியவும் தோதாக அமைந்தது . கொஞ்சமும் சந்தேகமின்றி அப்பெரு நஞ்சுப் பிண்டத்தைப் பற்றி சதை பிய்த்து உண்டான் நாற்பது முழத்தான். தொண்டைக்குள் சதையிறங்க உடலிறங்கியிருந்த தீயின் தெய்வங்கள் எழுந்தன. அடிவயிற்றில் இருந்து வெப்பமெனப் பரவின. அரைவயிறு உண்டபோதே நெய்கண்ட திரிகள்  பெருங்காடு எரியும் வெப்பத்தை அவனுள் பரப்பின. அலறித்துடித்தான்.  ஓடிச்சென்று மடுவினுள் பாய்ந்தான். சுற்றியிருந்த நான்கு குடி நிலமெங்கும் மக்கள் மழையோ என நினைக்கும் வண்ணம் நீர் தெறித்து பெய்திற்கு. நீரில் அமிழ்ந்து எழுந்த போதும் அந்த வெப்பம் கூடியதே ஒழிய குறையவில்லை.  நீரை அள்ளி அள்ளி  உடலில் அறைந்தான். வயிறு நிறைந்த பெரு முதலையைப் போல  உடல் பிரட்டிச் சுழன்று மடுவிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து மீண்டான். நீரை அள்ளிக்குடித்தான். மலைநாட்டில் இருந்த அவனுடைய அன்னைத் தெய்வங்கள் செய்வதறியாது கண்ணீரைப் பெருக்கினர். மிக நீண்ட தொப்பூள் கொடியாய  நீண்டிருந்த அருவியாற்றில் தண்ணீர் பெருகி வந்து அவனை மூழ்க நனைத்துக்கொண்டே இருந்தது. அவ் அன்னைத்தெய்வங்களால் ஆனது அதுவொன்றே. தன் அகழும் கருவியைப் பற்றிக்கொண்டு ஒருவாரு எழுந்தான். அன்னையரை நோக்கி ஓட வேண்டும் என்ற நினைப்பு அவனுள் எங்கிருந்தோ எழுந்து வந்தது. ஆற்றுக்கரையைப் பிடித்து  எழுந்து அசைந்தான். வெம்மை கூடிக்கொண்டே வந்தது.  மொழியோ சொல்லோ அறியாத அவன் மலைகள் இருந்த திசையைப்பார்த்து. `மா` என்று மட்டும் கூவினான். மலைகளின் தாய்த் தெய்வங்கள் அலறினர். வயிற்றிலடித்தனர்.  நதிபெருகி வந்தது அடிகளை எடுத்து வைத்தான்.  மடுவை நீங்க நீங்க  எரிச்சல் அதிகமானது. உடல் தசை உருகி வழிவது போலுணர்ந்தான்.  எத்தனை காலடிகள் வைத்தான் என்று மனமறியவில்லை. ஓரிடத்தில் சித்தம் சோர்ந்தது.  தொண்டை வறள ஆற்றின் படுக்கையை நோக்கிச்சரிந்தவன், பெருமரம் குரலெழச் சாய்வது போல் நிலத்தில் அறைந்து விழுந்தான். மூன்று நீள் துடிப்புகள் உடலில் பரவி அடங்கினான். மலைகளில் இருந்து ஓர் முது அன்னைத் தெய்வம்  தன் மார்புக்குமிழ் ஒன்று வெடிக்க அலறினாள். அங்கிருந்து எழுந்த ஓர் பெரலை ஆற்றின் வழியே வந்து அவனைச் சூழ சேறிட்டது.  அடிமடியின் குளிர்ச்சியோடு அவனை நிலம் விழுங்கிக்கொண்டது.

உக்காரா மன்றாடியாரின் இருளில் மிதக்கும் கண்களை நினைத்தான். அவரே அந்த வெப்பையும் சாவையும் எதிர்கொண்டவர் போல ஆவார். உடல் நடுங்கிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு வருடமும் அவன் புதைந்த நிலத்தில் பலியும் சடங்குகளும் நிறைந்தன. அவன் புதைந்த அன்றிலிருந்து  மொத்த மன்னாரும் வெக்கை கண்டது என்பார். மழை பிழைத்தால் அவனுக்கு யானைகளைப் பலியிட வேண்டும். வெப்பம் கூடி காண்டவ வனம் நிண்டாலோ, அக்னித்தாரகை உச்சமிறங்காது நின்றாலோ அவனுக்குப் பலிச்சடங்கு செய்ய வேண்டும். செட்டிகுளத்தில் அவன் விழுந்த இடம் காடு மூடியது. அவ்விடம் தனக்குத்தெரியும் என்றும் அவர் பிரஸ்தாபித்துக் கொள்வதுண்டு.

`உங்களை அய்யா வரட்டாம்`

யாரோ நாடகத்தில் சிறுவன் வேடம் போடுபவன் வந்து சொல்லி விட்டுப்போனான். பணிக்கர் களரியில்தான் இருந்தார். `குடி கொண்ட சங்கிலி` கிழவரின் பிரபலமான நாடகங்களில் ஒன்று. பறங்கியர் மன்னாரில் இறங்கி நாநூறு பேரை மதம் மாற்றினார்கள் என்று கேள்விப்பட்டு தன் பரிவாரங்களுடன் சென்று தன் கையாலேயே அவர்களை அரிகிறான் சங்கிலி. அப்பாவத்தைச் சரி செய்யவும் குடிகளின் அன்பைப் பெறவும்  நாற்பது முழத்தான் புதைந்த நிலத்தின் மேல் ஊருக்குள் இறங்கி பயிரைக் கொய்துகொண்டிருந்த ஆனையைப் பலிகொடுக்கிறான். அதனால் வெப்பம் அடங்குகிறது. மக்கள் அவனை மன்னாக ஏற்கின்றார்கள். தாயினாலும் குடிகளாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட அவன் எவ்வாறு வென்றெழுந்தான்  என்பது நாடகத்தின் முதற்பாதி. அதன் முதற்பாதி ஆதியில் செவிவழி வந்த கூத்துப்பாடல்களைத் தொகுத்து எடுத்து ஆக்கப்பட்டது. பிற்பாதி முழுவதும் கிழவரின் கை வண்ணம்.   அறம் விழும் நாடகங்களை எழுதுவதில் பணிக்கர் மன்னார் எங்கும் பிரபலமானவர். மன்றாடியாரின் நேரடி மாணவர்களில் ஒருவர். பணிக்கரை அறிவது மொத்த மாந்தை நிலத்தையும் அறிவதைப் போன்றது.  அதனால்தான் உக்காரா அவரைத்தேடி வந்திருந்தான். தேகம் வற்றி நரம்புகள் நீரோடிய மரத்தடிபோல் வெளிதெரியும். இன்றைக்கு நாடகம் போடும் பெரும்பாலான அண்ணாவிமார் இவருக்கு இளையோரே. உடல் வற்றினாலும் குறையாத சொல்லும், பாட்டும் நாவில் எழும்.  பசாடை ஏறிய கண்களில் குறையாத ஒளியே அவர். அந்தத் தேகம் அவர் சொல்வது போல் அவருடையதல்ல, அவருக்குக் கொடுக்கப்பட்டது. நாடகம் தவிர, கிழவர் பேசுவது  பாதிப்பேருக்கு விளங்காது. இவனுக்கே சில வேளைகளில் `இந்தாளுக்கு மன்றாடியார் எவ்வளவோ பரவாயில்லை` என்று ஆகிவிடும்.  முக்கியமாக இவனுடைய பெயரை அவர் என்றைக்கும் நினைவில் இருத்தியதில்லை. உக்காரா கொஞ்சம் உயரம்.  அவனை அவர் `நாப்பதங்குலத்தான்` என்றே அழைத்தார். களரியை நெருங்க, நாற்பது அங்குலத்திற்கு மேல் உயரமான நீண்ட பொய்கால் தடிகளில் நடந்து வந்தார்.  அவர் அருகில் பெரிய யானை உருவொன்று நிறுத்தப்பட்டிருந்தது. இவன் அண்ணார்ந்து பார்த்தான்.இவனைக் கண்டதும் முகத்திலிருந்த அரிதாரத்த்தை   துவாயால் அழித்துக்கொண்டே மேலிருந்து சிரித்தார். 

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’