`இருட்டின் ஆழமே மெய்யானது. தீயும் ஒளியும் அதில் நிகழ்ந்த தற்செயல். தந்தையும் தாயுமற்ற ஒற்றை நிகழ்வு. அக்கணமே தோன்றி அக்கணமே இருந்தது. இருளின் மேல் மலர்ந்த இந்நிகழ்விலே முதல் சொல் பிறந்தது. `மா` எனபதே அது. அதில் உருவாகினள் மூதன்னை. தற்செயல்களால் சூழப்பட்டு இருளின் ஆழத்தில் காலமற்றுக்கிடந்தவளைத் தீண்டி அறிந்தது தீ. ஆதலால் அது தீ எனப்பட்டது`
மந்தணமெனக் காதில் விழுந்து கொண்டிருந்த இளம் பாணர்களின் முது பாடல்கள் துண்டு துண்டாகச் செவிப்பட்டு உள்ளம் தொகுத்தவை மட்டும் எஞ்சி மீண்டன. உள்ளும் புறமும் முறுகி வெடித்தெரியும் நெருப்பின் தழற்குழைவைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதன் நாக்குகள் வானிற்கு எழவே துடித்துக்கொண்டிருந்தன. நெய்யிலிருந்தும் விறகிலுமிருந்தும் அதை யாரேனும் விடுவித்தால் வானேகிவிடும். உள்ளெரியும் நெருப்பிற்குத் திசைகளிருப்பதில்லை. அதன் நோக்கம் வெளியேறுவதுதான். சாமம் உச்சியை அடைந்திருந்தது. வீரர்களும் படைத்தலைவர்களும் பாணர்களும், பூசாரிகளும், பணியாளர்களும் உறங்கியவர் போக மிகுதிப்பேர் சொல்லாடிக் கொண்டிருந்தாலும், அவர்களின் கண்கள் தன்னில்தான் நிலைத்திருக்கின்றன என்பதை அகத்தினால் கண்டான். அவர்கள் இவனைக் கண்டு அச்சமடைந்திருக்கிறார்களா? தானே அச்சமடையும் படி ஆடிய வெறியாட்டைக் கண்டு பிரமித்தார்களா? இல்லம் திரும்பியதும் இவர்கள் தம் சுற்றமும் சொந்தமும் கேட்கச், சொல்லப்போகும் கதைகள் தான் என்ன? வினா விழைவுகளால் தன்னைப் தருக்கமாக்கி, அறியத் தலைப்பட்டுக்கொண்டே இருந்தான். அவனுடல் ஆடிய சதிர் மனதெங்கும் களிகூடச்செய்திருந்தாலும் பேருள்ளத்தின் பிறபகுதி சொல்லற்ற சொற்களால் முள் எழுந்தது. குருதியின் மணம் பாவத்தில் தேங்கிற்று.
இளம் பணிக்கர்கள் சிலர் எட்ட இருந்து, வேழக்கயிறுகளைப் பின்னிக் கொண்டிருந்தனர். அவர்களின் மெல்லிதான அரட்டையொலி சொல் பிடிபடாது கேட்டுக்கொண்டிருந்தது. பிணைத்திருந்த புரவிகள் காலடிகளை எடுத்து வைத்து உடலைச்சமநிலைப்படுத்திக்கொண்டே உறக்கத்திற்கு மீண்டன. பாணர்களில் முதியவனும், அன்னைக்கு அணுக்கமானவனுமான உசன் என்ற தலைமைப்பாணன், கையில் ஒளடதச் சிரட்டையுடன் இளவலின் அருகில் வந்தான்.
`இளையவரே, இதை அருந்துங்கள், நேரமாகிறது`
அவன் அதைத்தொடவில்லை. இருளின் திரையிலிருந்து கண்களை எடுக்காமலே சிறிது இடைவெளி விட்டான். முதுபாணன் அப்படியே நின்றிருந்தான். நடு இரவிற்குரிய மருந்தை அவன் அருந்தியாக வேண்டும். இளவலுக்கு இருந்த வெப்பு நோய்க்கு தகுந்தநேர இடைவெளியில் பச்சிலைச் சாற்றைக் கொடுக்க அரண்மனையில் வைத்தியருந்தார். அரண்மனைக்கு வெளியே போகும் போதும் வைத்தியரோ அவர் உதவியாளர்களோ உடனிருப்பார்கள். பயிற்சிக்கோ வேட்டைக்கோ போகும் போது உசன் என்ற அம்முதுபாணன் வைத்தியர்களிடம் பச்சிலைகளை வாங்கி வைத்துக்கொள்வான். உசன் எவ்வளவு சுதந்திரமானவனோ அவ்வளவு இவனுடன் கட்டுண்டும் கிடந்தான். அவனே அறிந்திராமல் அவனிடம் கனிந்திருந்த தாயுள்ளத்தை தன் தாயளவுக்கு வெறுத்தான். அதனாலேயே உசனிடம் இறுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அவனை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் மனமுன்னினான். ஓர் அரசனுக்குரிய கடுமையும் சினமும் வேண்டுமென்றே சதிரெழுப்பினாலும், அவனிலெழுந்த அன்னையின் ஆடியுருவை வெல்ல முடியவில்லை. அதுவே நஞ்சென்றாகி நாவை நிறைத்தது. நம் உடலில் உறையும் சர்ப்பங்களில் நாவே முதன்மையானது.
`அருந்துங்கள் இளவரசே , எரிச்சல் அதிகமானால் சோர்ந்து விடுவீர்கள், ஆற்றக் கருமங்களிருக்கின்றன`
பதிலொன்றும் பேசினானில்லை. கையை நீட்டி வாங்கிக்கொண்டான். முகம் பச்சிலைத் தொன்னையைத் தொடும்போது கோணத்தொடங்கியது. அந்தக்கசப்பு இத்தனை வருடங்களுக்கும் கசப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அருந்தும் போதும் முதல் முறைக்குள்ள சுவையோடு. முன்பெல்லாம் அதைக் குடித்துவிட்டு பனங்கட்டியொன்றைக் கடித்துக்கொள்வான். நாளாகப் பனங்கட்டி சுவையற்றுப் போனது. பனங்கட்டியை கைவிட்டான். கசப்பு நெஞ்சினது சுவை, அது எஞ்சுவது போல் வேறெந்தச் சுவையும் நெஞ்சில் நிலைப்பதில்லை. ஒரே மிடறில் தொண்டைக்குள் இறக்கி விழுங்கினான். அடி நாக்கிலிருந்து காறி உமிழ்ந்தான். எழுந்து கொண்டவன் ஆற்றுப்பக்கமாக நடக்கத்தொடங்கினான். முதுபாணனும் எதுவும் கேளாமல் அவனைத் தொடர்ந்து போனான். இளவல் அவ்விடம் அகல்வதையுணர்ந்த அமர்ந்திருந்த மெய்க் காவலர்கள் சிலர் எழப்போனார்கள். அவன் அவர்களை கைகளால் அடக்கி விட்டுப் பாணனோடு நடந்து போனான். ஆற்றங்கரையை நோக்கி வெறுங்காலுடன் அவன் நடந்து செல்வதைக் கண்டு முதுபாணன் துணுக்குற்று, `அவ்விடம் விடத்தேர் வேலிகள் இருக்கிறது அரசே, ஆனைகளுக்காகப் போட்டிருக்கிறார்கள்` இளவரசன் அதைக் கேட்டுக்கொண்டே நடந்தான். பின்னாலிருந்து இளம்பாணன் ஒருவனின் குரல் சற்று உரத்து ஏட்டை வாசிக்கும் தோரணையில் எழுந்தது.
`நோயிலும் பாவத்திலும் உள்ளிருக்கும் பிள்ளை உடன் நாடுவது அவளைத்தான். அம்மகவு அவளிலிருந்தே சதையை அறிந்தது. அவளிலிருந்தே குருதியை அறிந்தது. அவளிலிருந்தே நோயை அறிந்தது, அவளில் இருந்தே காமத்தை அறிந்தது. அவளிலிருந்தே பாவத்தை அறிந்தது`
`அவனை அழை` திரும்பாமலே சொன்னான். முதுபாணன் குரலை உரத்தான்.
`அடேய் பிசினான் மகனே , இங்கே வா`
அவ் இளம் பாணர் குழுவில் இருந்து ஏட்டை உச்சரித்துப் படித்துக்கொண்டிருந்த அவ் இளம்பாணன் வேகமாக ஓடி வந்து இளவரசனை வணங்கி நின்றான். இளவரசன் அவ் உயிர் வேலிக்கும் தனக்குமிடையே சில அடிகள் மட்டும் இருக்க , உடலை இருட்டில் அமிழ்த் திக்கொண்டு அவ் இருட்டில் கரைந்து நின்றபடி கேட்டான்.
என்ன படித்தாய் ? காவியமா?
`ஆம் இளவரசே, நானே யாத்தது, முதுபாணர் எங்களை தங்களின் இப்போருலாவைப் பார்க்க அழைத்தது எங்கள் பாக்கியமன்றி பிறிதில்லை, இன்னும் நூறு வருடங்களுக்கு நீங்கள் காவியங்களிலும், சொற்களிலும் கதையெனப் பெருகுவீர்கள், அப்பெருக்கில் நானுமொரு அலையை உண்டு பண்ண விழைந்தேன் இளவரசே!`
`ஆனால் நீ அன்னையைப் பற்றியெல்லவா உரத்துக்கொண்டிருந்தாய் ?`
`ஆம் , சொல்லப்போனால் என் காவியத்தின் மையமே நீங்கள் அன்னைப் புண்ணில் இருந்து எப்படி எழுந்து வந்தீர்கள் என்பதுதான். `
`என்ன நினைத்துக்கொண்டு இதை என்முன்னால் சொல்கிறாய், என் அன்னையைப் புண் என்கிறாயா?`
உண்மையைப் பாடுவது என்னுடைய வேலை இளவலே. நீங்கள் சுதந்திரமான பாணர்களை அழைத்து வரச்சொன்னதாகத் தான் கேள்விப்பட்டு வந்தோம், உங்களுக்கு உகந்ததைப் பாட தங்கள் தந்தையாரின் அரசவையிலும் வாசலிலும் நூறு இரவலர்கள் நிற்பார்கள். நான் எதை அறிகிறேனோ அதையே பாடுகிறேன். என்னுடைய தெய்வம் இந்தச்சொல். அதற்கன்றி யாருக்கும் அஞ்சேன். தலைகொடேன். தவிர, இதில் தங்களையோ அரசியாரையோ சுட்டி நானேதும் சொன்னேனில்லை. பொதுவில் அன்னையைப் பாடினேன். அவள் இயல்பை கொண்டு வந்து நிறுத்தினேன். அன்னை என்பது ஓர் இயல்பு அவள் ஒற்றைப்பெண் அல்ல, அவள் முழுதும் பரவிய, பரம். அதிலொரு சொட்டை எடுத்து காவியத்தில் வைத்தேன்.
`தாய்மையைப் புண் என்று பாடிவிட்டு இப்போது என்ன பிதற்றல் ?`
இளவரசே நீங்களிதை முழுதும் வாசித்தறிய வேண்டும். இக்காவியத்தை நானொரு கூத்து வடிவிலேயே எழுதியிருக்கிறேன். கொஞ்ச நாட்களில் பேரம்பலங்களில் கூத்தாகவும் ஆடப்படலாம். ஊழுக்கு எத்தனை வழிகள் என்று யாரறிவார்? இது இசையோடும் வினையோடும் ஆடும் களியும் உக்கிரமும் நிறைந்தது. அன்னையில் தொடங்கி அன்னையில் முடிவது. ஒவ்வொரு சீவனும் புவி தொடும் போது அதன் உடல் புண்ணென்றே ஆகிவருகிறது. தோலின் உள்ளிருப்பது வெளியே புரைவதையே புண் என்கிறோம். இந்த மொத்தவுடலும் புண்ணாய் உள்ளுறைகிறது. இப்பருவுடலுக்கு காயம் என்றும், பாவம் என்றும் எத்தனை பெயர்களை இடுகிறோம்? நம்முடைய உடல் அன்னையளித்த புண். அவளில் இருந்து விலகும் போது நாமதை ஆற்றிக் கொண்டே வெளியே வருகிறோம். உடல் இப்பருவுலகை அடைந்து அதற்கு பழகி எழுகிறது. அன்னைப்புண்ணில் இருந்து எழுந்தே வாழ்கிறது. புண் ஆறி ஆறி திசைகளின் விலங்காய் ஆகிறது. ஆயினும் அது முழுதும் அவளில் இருந்து வெளியேற முடியாதது. மானுடரின் உள்ளத்தின் அடியாழத்தில் உறைகிறது. இளவரசே! எந்த இழிவரலும் இதில் இல்லை. மெய்மையின் ஒரு துண்டை சொல்லடுக்கி வைத்திருக்கிறேன். அன்னைப்புண் விளைந்தோனின் நோய்க் கூறைச் சொல்லவிழைந்தேன். அப்புண்ணாறியோரையே நாம் தெய்வம் என்றும் ஞானியர் என்றும் சொல்கிறோம். மற்றோரெல்லாம் புண்ணுடை மானுடரே !
`எழுதியதைத் தொகுத்துச் சொல்`
இளம்பாணன், கண்வாளை இளவலில் இருந்து கணமொன்றில் எடுத்து முதுபாணனின் பார்வையை சந்தித்து ஒரு வீச்சில் அதை வெட்டிக் கொண்டு ஏந்தியிருந்த சுவடியை இடையில் சொருகினான். தன் நினைவில் இருந்து காவியத்தின் முற்பகுதியைத் தொகுத்துச் சொல்லத்தொடங்கினான்.
மனதளவில் பலவீனமானவர்கள் எப்பொழுதும் தாயை ஏங்குகிறார்கள். தங்களை அறிந்த முதற் தெய்வம். அவர்களுடைய பாவத்தையும் நோயையும் கொள்ளக்கூடிய கூடிய பேராழி. அவர்களால் எந்தத் துயரையும் தாங்க முடியும். எப்பாவத்தையும் கிலேசமின்றிச் செய்து முடிக்க முடியும். ஆனால் சிறுதுயரைக் கூட தாங்க மாட்டோம் என்று தம்மை நினைத்துக் கொள்கிறார்கள். பாவம் செய்யக்கூடாது என்று அஞ்சுகிறார்கள். அதிலிருந்து தப்பிச்செல்ல அவர்கள் தந்திரமும், பொய்யுமாக வாழ்கிறார்கள். அத்தற்காலிக மகிழ்ச்சிக்கு விட்டிலின் ஆயுள் இருந்தும் அதைத்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் நாடுகிறார்கள். பெரும்பாலும் அவை அற்ப உலகியல் இன்பங்களாகவே இருக்கும். இவர்கள் தங்களவில் பெருமிதமும் அதைப்பாதுகாக்க பிரயத்தனம் கொள்ளும் உறவுகளான தாய்மை, நட்பு, காதல் இவை மூன்றும் இவர்களைப் பெருந்துயரில் இருந்து தாங்குவதாலேயாகும். தூய்மையான அன்பென்று அதைச் சொல்லுதல் தகாது. அவர்களைத் தாங்கிச் செல்வதைத்தவிர அவர்களிடமிருந்து எதுவும் தேவைப்படுவதில்லை. துயரை எதிர்கொள்ளாமல் தப்பிச்செல்லச் செல்ல அவர்களை உண்மையில் அந்தத் துயர் அவர்களை அறியாமல் அவர்களின் ஆழத்தை ரணப்படுத்திக்கொண்டே இருக்கும். தாங்கள் மென்மையானவர்கள், கனிவானவர்கள் , தீமைக்கும் நோவுக்கும் அஞ்சுபவர்கள் என்று அவர்கள் தங்களை அறுதியிட்டுக்கொள்வர். ஒரு சாவைப்பார்ப்பதையும், மூப்பில் படுக்கைப் புண் அழுகியோரையும் காண்பதையும், விபத்தொன்றில் குருதியோடும் உடலை நெருங்கி உதவுவதையும் தவிர்ப்பார்கள். தாங்கள் தாங்க மாட்டோம் என்று தம்மையே நம்ப வைப்பார்கள். ஆனால் கீழ்மையால் தீண்டப்பட்டு தீண்டப்பட்டு நஞ்சூறி மரத்திருக்கும் அவர்களின் ஆழ் நெஞ்சு உண்மையில் எந்தப் பெருந் துயருக்கும் அஞ்சுவதில்லை. வருந்துவதில்லை. அவர்கள் தற்செயலில் அப்படியொன்றைச் சந்திக்கும் போது அவர்களே வியந்து போகுமளவிற்கு அதை சாதாரணமாக தாண்டிச்செல்வர். அவர்களே இவ்வுலகிற்கு உண்மையில் துயரை எடுத்துவரும் சீவன்கள்.
இளம்பாணன், நேரடியாக கொலைப்பழியை தன் மீது சுமத்த தயாராகி விட்டான் என்பதை முன்னுணர்ந்தான். எல்லா நியாயங்களையும் தருக்கி, நிறுத்தினாலும், சொல்லின் முன்னால் எழும் அச்சம் மனிதர்களை உலுக்காமல் மீண்டதில்லை. இளவல் அதை அறிய விழைந்தான். பாவத்தை அறிவது அதைக் கடப்பதற்கான முதற் சொல்.
`பாணரே! புரவியில் இருந்து இறங்கி வாளை ஓங்கி அச்சனங்களின் ஓலத்தின் மத்தியில் நின்றபோது, பூதவராயரே மெய்யெழுந்து நின்றதைப் போலிருந்தது என்றான் என் படைத்தலைவன். அவன் என்னில் எப்பொழுதும் அப்படியொரு காட்சியை எதிர்பார்த்திருக்க வேண்டும். அவனுக்குப் போரே தொழில். அதாலால் அக்கணம் நான் தெய்வம். பாணனே நீர் என்னை மாந்தையில் கண்டிருந்தீரென்றால் நான் அக்குருதிச்சேறில் என்னவாக நின்றிருந்தேன்? அச்சனமிட்ட சாபத்தின் முன் எதுவானேன்? மகவுகள், பெண்டிர், ஆண்கள் என்று யாரையும் பார்க்கவில்லை என் உடைவாள், உடல் முழுக்கக் தெறித்த குருதியில் என்றுமில்லாதவாறு ஓர் குளிர்ச்சியை மனமுணர்ந்தது. சொல்லப்போனால் இனி அது அதையே கனவும் காணக்கூடும். விடாயுடன் என்னை அலைக்கழிக்கும் என்னுடைய கோபம் மட்டும் அக்கணம் எரிந்தடங்கியிருந்தால், அது என்னை வருத்தியிராது. ஆனால் கொலைபுரிகையில் என் மனம் களித்திருந்ததை நானறிந்தேன். இவ்விடாய் வாழ்வெல்லாம் அடங்காமல் குருதி குடித்தலையப்போகிறேன் என்றனவென் தெய்வங்கள், குருதியின் அனலடங்கிய போது நெஞ்சிலெழுந்தது அன்னையின் முகம்.
இளவரசே! நான் இதை வேறொன்றாகப் புரிந்துகொண்டேன். அரசனின் வாள் கொலைக்கருவியல்ல, அது தெய்வத்தினால் தாழ்த்தியளிக்கப்பட்டது. அது அரசனின் உள்ளத்திற்கு ஓரளவுதான் கட்டுண்டு இருக்கும் என்பது தெய்வச் சொல். உனக்கு வாளெடுக்கத் தெரியாது என்றவர்கள் எல்லாம் இனி உன்னை அஞ்சுவார்கள். தங்களின் காவல் தெய்வம் என்பார்கள், பாணரும் விறலியரும் உன் மெய்கீர்த்திகளை எடுத்துச்சென்று போர்க்களமெங்கும் நிறுத்துவர். புலவர்கள் காவியம் பாடுவர்.
இருட்டில் இளவரசன் முகத்தில் தன்னேளனச் சிரிப்பொன்று எழுந்தது.
`எப்படி தன் குடிகொன்ற சங்கிலி என்றா?`
இல்லை இளவரசே, நீங்கள் உங்களை உலகத்தின் மீது பொருத்துகிறீர்கள், உங்களுடைய துயரங்களில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். காவியத்திலும் கதைகளிலும் வெறொருவராய் நிலைப்பீர்கள், அப்படியேதான் நினைவுகொள்ளப்படுவீர்கள், நீங்களொரு கதை, நீங்களொரு வாழ்வு`
`பிதற்றாதே நானறியாத நான் என்று ஒன்றுண்டா என்ன?`
`உண்டு அரசே, பல ஆயிரம் நீங்கள் உங்களுக்கு வெளியேதான் இருக்கிறீர்கள், என்னுடைய இக்காவியத்தில் உள்ளவர் நீங்களறியாத இளவரசர். இதோ இந்த முதுபாணர் ஒரு கதை சொல்வாரில்லையா? அதில் நீங்கள் வேறொருவர். இப்படி சொல்லச் சொல்ல ஒவ்வொருத்தராலும் பெருக்கி அறியப்படுவீர்கள், நீங்கள் இவற்றையெல்லாம் ஏன் செய்தீர்கள் என்பதற்கு உங்களிடம் ஓர் கதையுண்டெல்லவா? ஓர் அரசனுக்குரிய அறமுள்ளதல்லவா? எப்பொழுதும் அரசு சூழும் போது அரசன் இரண்டெல்லவா, அவனும் அரசனும். அரசனுக்குரிய கதைதான் சரித்திரத்தில் இருக்கும் இளவரசே, அரசனே நினைத்தாலும் அதை மாற்றவியலாது, அதுதான் நம்காலத்துச் சரித்திரத்தின் ஊழ், எளியவர்களின் தூற்றலோ, உங்கள் நெஞ்சுணரும் பாவத்திற்கோ அங்கே மதிப்பேதுமில்லை. கதைகள் தெய்வங்கள் போலப் பெருகி செல்லும். இன்றைக்கு நீங்கள் இந்த வெந்நிலத்திற்கு அளிக்கப்போகும் பெருங்குருதியில் இருந்து எப்படிப் பெருகப்போகிறீர்கள் என்று உணருங்கள். பலவீனமானவன், நோயுற்றவன் , குடி கொன்றவன் என்ற பெரும்பழி அழிந்து பெருவீரன் என்று, உத்தர நாட்டின் அரசுகட்டிலுக்கு முழுதுரித்தானவன் என்று குடிகளே உங்களை ஏற்றுவர். நீங்கள் செல்ல முதல் அங்கே கதைகள் பெருகியிருக்கும். இப்பொழுதே சாவாகத்தில் இருந்து வலிகாமம் வரை களித்திருவிழாக்கள் தொடங்கியிருக்கும், அங்குள்ள ஒவ்வொருத்தரையும் நான் காண்கிறேன் இளவரசே! எல்லோரும் உங்களுடைய கதையை நடிக்க பாத்திரமேற்று விட்டனர் இளவரசே, தாங்கள் தான் இன்னும் தயாராகவில்லை!
இளம்பாணன் உணர்வு கட்டற்று ஏற தெய்வத்தின் முன் அரற்றுபவன் போல் சொல் பெருகி நின்றான். அருகில் நின்றிருந்த முதுபாணன் உசன் சட்டென்று அவ் இளம்பாணனை அணைத்துக்கொண்டான். கண்ணீர் பெருக்கினான். இளவரசன் சொல் ஏதுமற்று இருட்டில் கரைந்திருந்தான். கால்களில் நிலத்தின் சூடு பரவியது.
நதியைத்தாண்டி காட்டுக்குள் இருந்து பணிக்கர் முழவுகள் ஆர்த்தன. கொம்புகள் ஊதப்பட்டன. அவ்வுரையாடலை முடிக்கக் காத்திருந்த குரலில் அம்முது பாணன் சொன்னான் `பணிக்கர்கள் மீண்டு விட்டனர்` இருவரும் திரும்பி முழவெழுந்த திசைநோக்கிச்சென்றனர். துயின்றிருந்தோர் எழுந்து பந்தங்களைத் தாங்கினர், பரபரவென்று வேலைகளாயின. இளம் பணிக்கர்கள் வடங்களை எடுத்து தோள்களில் ஏற்றிக்கொண்டு அங்குசங்களையும், தூவுப்பொடிகளையும் எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு முழவை நோக்கிப்போயினர். படைத்தலைவர்கள் புரவிகளை அவிழ்த்து விட்டு புதர்களைத்தாண்டி ஈமைக்கல்லை நோக்கிச் சென்றனர். ஈமைக்கல்லினைச் சுற்றி புதிதாகக் கொழுத்திய பந்தங்களின் ஒளியில் தலையற்ற கொல்காளியின் சிலையுரு எழுந்து நின்றது. அப்பொழுதுதான் தோன்றினேன் என்ற அறிவிப்பு அவள் அனலுருவில் அப்படியே உறைந்திருந்தது.
முழவுகள் ஆர்ப்பது மெல்ல மெல்ல அதிகரித்தது. இருட்டுக்குள் மெல்லிய ஒளி பரவியிருந்தது. பந்தங்களின் வெளிச்சங்களில் ஒவ்வொருவரும் தனித்தனி ஒளித்தீவாகிக் காத்திருந்தனர். கோட்டான்கள் அலறும் ஒலிகள் அங்காங்கே கேட்டுக்கொண்டிருந்தன. முழவுச்சத்தத்திற்கு இடையில் அவை எப்படிச் செவிகளை அடைகின்றன என்று ஒவ்வொருத்தரும் நினைத்தனர். உசன் இளவரசனுக்குப்பக்கத்தில் நின்றான். அவர்கள் சற்றும் எதிர்பாராத கணத்தில் இருட்டுக்குளிருந்து பேருருவம் தோன்றியது. அதன் கரிய உடல் வந்ததைப்போலன்றி இருள் குன்றொன்று எதிரில் தோன்றி அசைந்து வந்தது. சந்தடியே இல்லை. அதன் கழுத்தில்லொரு முதுபணிக்கன் இருந்தான். அவன் கையில் பொடியும் அங்குசமுமிருந்தது. அதன் கால்களைச்சுற்றி ஆறு பணிக்கர்கள் நடந்து வந்தனர். அதில் இருவரின் கைகளில் முழவும் கொம்புமிருந்தன. அம் மா வேழம் தன் பெரிய கொம்புகளின் வெள்ளை வளைவைக் கொண்டு இருள் துணியைக் கிழித்துக்கொண்டு வந்து நின்றது. வன்னியெங்கும் கதையாக உலவிய அப்பெருவேழத்தின் முன் அனைவரும் மண்டியிட்டு எழுந்தனர். உசன் இளவரசனின் காதுக்கு அருகில் சரிந்து, தெய்வமாட்டியின் குரலில் நிதானமாகச் சொன்னான்.
`இளவரசே இதோ உங்களுடைய புகழும் பாவமும், அதன் குருதியை இந்த மண்ணுக்களியுங்கள் `
`ஆம் அவ்வாறே ஆகுக `