ஓர் அறிவிப்பு

 

போர்க்கதைகள் நான் மிக அறிந்ததாய் இருந்தன. புனைவிலக்கியத்தில் அறிந்ததை எழுதுவது போலச் சலிப்பான வேலை வேறில்லை. அறிந்தவை ஒரு வகையில் அகங்காரத்தைச் சேர்ந்தவை. அறிந்ததை விடவும் அறியாததே சூர் கொண்ட பெருந் தெய்வம். அறிந்ததை அழித்து முன் செல்லும் பெருக்கே புனைவெழுத்து. அறியவியலாத அத் தெய்வத்திற்குத் தலையைக் கொடுக்காமல் அது யாருக்கும் திறப்பதில்லை. தன்னகங்காரத்தை பலி கொடுத்தே அதன் பாதைகளைத் திறக்க வேண்டும். அதுவே செயலூக்கத்திற்கான அடிப்படை.

புறமனதின் களி கூடிச்செல்லும் போது அது தன்னைத் தருக்கி செயலின்மையை அடைகிறது. அதை சாட்டையால் விளாச வேண்டும். அதற்கொரு சடங்கும் பயிற்சியும் தேவைப்பட்டது. தினமும் இவ்வளவு வாசித்தாக வேண்டும் என்ற பயிற்சியில் வென்றெழுந்து விட்டேன். எழுத வேண்டும் என்பதில் உள்ள அன்றாடத்தை இன்னும் கடுமையாக்க நினைத்தேன். பாதியில் விட்ட நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்று எண்ணினேன். இந்த நாவல் போரின் பின்னர் எழுந்த நலன்புரி முகாம்களைக் களமாகக் கொண்ட கதை. ஏற்கனவே இதைப் பலமுறை மனதால் எழுதி எழுதிப் பார்த்து சில அத்தியாயங்கள் மட்டும் சொல்லில் எழுதி நிறுத்தியிருந்தேன். அறிந்ததை மட்டும் எழுதலாம் என்ற எண்ணங் கொடுக்கும் சலிப்புத்தான் இதை இடையில் நிறுத்தியது. முக்கியமாக நாவலொன்றை எழுதுவதற்கான அடிப்படைக் கேள்வியை நான் முழுதடைந்திருக்கவில்லை. இப்பொழுது அதை அடைந்திருக்கிறேன் என்று துணிந்த பிறகு இதை அன்றாடம் எழுதுவதற்குரிய செயலூக்கத்திற்கான பயிற்சியாக வாரம் இரண்டு அத்தியாயங்களாக எழுதிப் பிரசுரிக்கலாம் என்று நினைத்தேன். எனக்கு முதல் ஜெயமோகன், வெண்முரசை இத்தனை ஆயிரம் பக்கங்களில் தினமும் எழுதியிருக்கிறார். நண்பர் கிரிசாந் தன்னுடைய அழிகளம் நாவலை தினமும் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி வருகிறார். நூறு நாட்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார். அவரின் அருகமர்ந்து உரையாடுவதால் அவர் அளிக்கும் செயலூக்கமும் முக்கியமானது. அவருக்கு என் அன்பு.

காளம் என்ற இந்நாவல் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் என்னுடைய yatharthan.com என்ற வலைத்தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாகப் பிரசுரமாகும்.

அனைவருக்கும் எனதன்பு.

முதல் அத்தியாயம்  வாசிக்க:

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’