உங்களிடம் குமாரதேவனுடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றேனுமுள்ளதா?

இயற்கை மற்றும் சமூகச்சூழமைப்பில் மனிதர்கள் இயங்கும் முறையும் அவர்களின் நடத்தை முறையும்தான் உளவியலின் அடிப்படைகள்.

-மிக்காயில் பக்தின்

அன்பை ஒரு செயல்வடிவமாக, செயலூக்கத்துடன் இணைத்து நிகழத்தக்க கலையாக அணுகுவதையே விரும்புகிறேன். ஒவ்வொருத்தரின் இருப்பையும் அவர்களுடன் இச்சமூகம் கொண்டிருக்கும் கொடுத்து வாங்குகின்ற பண்பையும் பிரக்ஞை பூர்வமாக அவர் வாழ்ந்த சூழலில் அவர்தம் செயல்களினால் புரிந்துகொள்வது பொருத்தமானது. குமாரதேவன் பற்றிய ஞாபகங்களை அவருடைய  தமிழ்ச்சூழலின் மீதான் பங்களிப்பை அவ்வாறு அணுகுதலே அவர் மீதிருக்கும் அன்பின் ஆகக்கூடிய செயலாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

அவருடைய மரணச்சடங்கலிருந்து திரும்பிய பிறகு நண்பர்கள் கூடியிருந்தோம். ஒவ்வொருத்தராக அவரைப்பற்றிப் பகிர்ந்துகொள்ளும் போது உள்ளூர உணர்வுவசப்பட்டிருந்தேன். உணர்வான அவருடனான பழக்கங்களில் அவரின் சிறு சிறு விருப்பங்களையும் மகிழ்வையும் நான் அவதானித்த வகையில் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நாமிந்தக் நினைவுக் குறிப்பில் சென்று சேரக்கூடிய இடங்களுக்கு அவர் பற்றிய இச்சிறு உணர்வுப்பாங்கான என்னுடைய அவதானிப்புக்கள் உதவலாம். 

எங்களுடைய காலத்தில் அவருடைய வயதுக்காரர்கள் அல்லது தலைமுறையிலிருந்த மனிதர்களில் இளைஞர்களுடன் இத்தனை நெருக்கமாகவும் அவர்தம் மற்றமைகளையும் நியாயங்களையும் எந்தவித முற்கற்பிதமும் மாற்றுக்கருத்துக்களை சொந்த விடயமாகக் கருதாத எல்லாச்சூழலிலும் இருந்து உரையாடத்தக்க வயதை ஒரு பொருட்டாக எடுக்காத மனிதர் அவர். சொல்லப்போனால் யாழ்ப்பாணத்தின் சகல தரப்பையும் சமரசமற்று விமர்சன பூர்வமாக அணுகக்கூடியவராயும் தன்னுடைய கருத்தியலை நியாயங்களுடன் முன் வைக்கக்கூடியவராயும் அனைவரையும் இணைக்கக்கூடியவராயும் செயலூக்கத்துடனும் அன்புடனும் இருந்த சீவன் அவர்.

“அதென்ன குமாரதேவன் ஐய்யா எண்டுறியள் குமாரதேவன் எண்டு கூப்பிடுங்கோ ” என்பார். நானும் சில நண்பர்களும் முடிந்தவரை அவரைக் குமாரதேவன் என்றே அழைத்தோம்.  இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது  அவருடைய தமக்கையாரின் வீட்டிற்குச்சென்று அவரை ஆவணப்படுத்துவதற்காக அவர் பற்றிய ஆவணங்கள், போட்டோக்களைப் பெற்றுக்கொள்ளச்சென்றிருந்தோம். குமாரதேவன் அவருடைய சிறுபிராயத்தில் எடுத்துக்கொண்ட படம். கொழும்பில் அவர் இருந்த நாட்களில் எடுத்துக்கொண்ட ஒரு படம். சிறுவன் குமாரதேவன் ஒரு சிறு அரைக்காற்சட்டையும் நன்கு அயன் செய்த அரைக்கைச் சேட்டும் டையும் கட்டி  ஸ்டூடியோ ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படம். புகைப்படத்தின் பின்னால்  25.8.1971 என்று இடது மேல் மூலையில் பேனாவாலும், LAKSHMI FOTO,53 KOTMALE ROAD NAWALAPITIYA  என்று குறித்த ஸ்டூடியோவின் பெயர் சீலும் செய்யப்பட்டிருந்தன.

நான் பழைய போட்டோக்களில்  பெரும்பாலானோர் கமராவைப் பார்த்து விறைத்துப்போய் நின்பதைப்பார்த்துச் சிரித்திருக்கிறேன். காரண காரிய அடிப்படையில் புரிந்துகொள்வதென்றால் கமரா தரும் அசூசையும் புது உணர்வும் காலனியம் எடுத்துவந்த புகைப்படத்திற்கு இப்படித்தான் உடலை நிகழ்த்த வேண்டும் என்ற கற்பிதங்களும் பழைய கறுப்பு வெள்ளைப்புகைப்படங்களின் உடல் மொழிகளில் வெளிப்படுவதுண்டு. ஆனால் சிறுவன் குமாரதேவன் தன்னுடைய உடலின் மொழியை நிகழ்த்தியிருக்கும் விதத்தை நீங்கள் பார்க்க வேண்டும். பார்வையை வேறொங்கோ நிறுத்தி ஒரு கையை பொக்கற்றினுள் வைத்துக்கொண்டு ஒரு ”தோரணை “ 

இங்கே இதைக்குறிப்பிட்டது குமாரதேவன் போட்டோக்களை எடுத்துக்கொள்வதில் பிரியமுள்ளவர்.

அவருக்கு எந்த சமூக உடகங்களையும் பயன்படுத்தத்தெரியாது. அவர் எழுதியதும் , அவரின் படங்கள் அதிகமாகப் பிரசுரமானது பத்திரிக்கைகளிலும்தான். ஆனால் அவர் தன்னுடைய போட்டோக்களை நாங்கள் யாரும் பதிவேற்றினாலோ யாரிடமாவது கேள்விப்படுவார். சண்முகம் கடைக்கு வரும் அவருடைய நண்பர்கள் யாரும் காட்டினால் எங்களுக்கு உடனே அழைப்பு வரும் அல்லது நேரில் கண்டவுடன்,

“என்ன படமெல்லாம் போட்டிருக்கிறியளாம் சொல்லவும் இல்லை காட்டவும் இல்லை ” என்பார் மகிழ்ச்சியாக. நான் பகிடியாக

“யாழ்ப்பாணத்தின்ர மொஸ்ட் வொண்டட் செலிபரட்டி நீங்கள், மக்கள் போட்டோ போடத்தானே செய்வினம்” என்பேன். சிரிப்பார்.  ஏதேனும் நிகழ்வுகளின் முடிவில்  நடக்கும்  நிகழ்வுக்கு வெளியே அன்றைய நாளைப் பத்தியப்படுத்துதற்காக நடக்கும் உரையாடல்களின் போது, கூப்பிடுவார். அவர் முன்பு வாசித்த அவர் நேசித்த எழுத்தாளர், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், என்று பல வயதில் பலருடனும் அவர் போட்டோக்களை எடுத்துக்கொள்ள விரும்புவார். என்றைக்கோ பல வருடம் முதல் பேப்பர் ஒன்றில் ஒரு நல்ல கதையை எழுதிவிட்டு அங்கீகாரமோ சன்மானமோ இன்றில் சலித்துப்போய் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் ஒருவரை குமாரதேவன் “இத்தினியாம் ஆண்டு இந்த திகதிலை இந்தக்கதை இந்தப்பேப்பர்ல வந்தது” தானே என்று அந்த நபரே வாயடைத்துப் போகும் அளவிற்கு ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் படுத்திக்கொண்டே  யதார்த்தனையோ கிரிசாந்தையோ தனுசையோ கூப்பிட்டு போட்டோ ஒண்டு எடுங்கோ என்பார். இந்த சமூகம் விளிபுக்குத் தள்ளிவிட்டு வாழ்வு மீது சலிப்பேறியபடியே இலக்கியக்கூட்டத்திற்கு வந்து சென்றுகொண்டிருக்கும் எழுத்தாளரை ஒரு முதிர்ந்த வாசகராகர்  உறைந்து போன அவருடைய காலத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து சமகாலத்தில் நிறுத்தி உரையாடுவதன் மகத்தான கணத்தை சிறுவன் குமாரதேவன் தன்னுடைய கடைசிக்காலம் வரை புகைப்படங்களில் நிகழ்த்தினான். என்னுடைய நண்பர்களைப்பார்த்து குமாரதேவன் பற்றிய உரையாடலில் “நீங்கள் செல்பி எடுத்துக்கொள்ள விரும்பக்கூடிய  ஒரு மூத்த தலைமுறையாள் யார் யார் ?” என்று கேட்டேன். எங்களில் பெரும்பாலான நண்பர்களின் செல்பிக்களில் குமாரதேவன் இருப்பார்  அவருக்கு அது மிகவும் பிடிக்கும். “இப்ப எல்லாப்பெடியளும் உப்பிடித்தான்” என்று சலித்துக்கொள்ளும் மூத்த தலைமுறையும் “பெரிசுகள் புறணிவிடும்” என்று விலகிச்செல்லும் இளைய தலை முறையும் கொண்டிருந்த தூரத்தைக் குமாரதேவ மிக இலகுவாகக் கடந்தார். இறுதியாக அவர் என்னை ஆச்சரியப்படுத்திய நிகழ்வொன்று,

சிறகுகள் அமையம் என்ற அமைப்பில் இயங்கும் பிறேமிஷா என்னுடைய நெருக்கமான நண்பர்கள் வட்டத்தில் இருப்பவள். ஆயினும் இலக்கியம் சார்ந்தோ எங்களுடைய  செயற்பாட்டு வடிவங்கள் சார்ந்தோ நெருக்கமில்லாத நண்பி.  குமாரதேவன் இறந்த அன்று  தகவலைப் போஸ்ட் செய்து விட்டு படுத்திருந்த போது அழைத்தாள். நான் எடுத்து விபரம் கேட்க, ”நீ ஓகேதானே ?” என்றாள். எனக்கு சட்டென்று அவளையும் குமாரதேவனின் மரணத்தையும் தொடர்புபடுத்த முடியவில்லை. “ஏன் என்ன உடம்புக்கு ஒண்டுமில்ல, நண்பர் ஒருத்தர் இறந்திட்டார் போகோண்ணும்  ” என்றேன் அவள் “ஓம் அதுதான் கேட்டனான், எனக்குக்  கஸ்ரமா இருக்கு”  என்றாள். “அவரை உனக்கென்னெண்டு தெரியும்?” இலக்கியச்சந்திப்பு ஏதோ செய்தனியள்தானே? அண்டைக்கு முதல்நாள் நீங்கள் வரல்லை அமைப்பால புத்தகம் கலக் பண்ணப்போனான், எங்கடை வேலையள பற்றியும் புத்தகம் அன்பளிப்புச்செய்யுங்கோஎண்டும் நிகழ்விலை கதைச்சனான். நிகழ்வு முடிய என்னைத்தேடிவந்து கதைச்ச விசயங்கள் நல்லா இருந்தது எண்டு விசாரிச்சவர். நிறைய விசயங்கள் சொன்னவர். அந்நிய உணர்வு கொஞ்சமும் வராமல் கதைச்சவர்” என்றாள். அவளுக்கு குரல் தழுதழுத்தது. எனக்கு  தலை விறைத்தே போனது.

“நண்பர்களே உங்களிடம் குமாரதேவனுடன் எடுத்த செல்பி உள்ளதா?”

குமாரதேவனின் உடல் நிலை அவருடைய ஐம்பதுகளின் பிற்பகுதியில் இத்தனை மோசமடைய  இடையில் அவர் குடித்தது ஒரு காரணம் என்று அவரும் சரி குடும்பத்தாரும் சரி அடிக்கடி சொல்வதுண்டு.  வாழ்க்கை, மானுடத்தெரிவு , சொந்த தத்துவங்கள் போன்ற பின்னணிகளை குமாரதேவன் குடித்ததால் அழிந்தார் என்று  இரண்டாவம் நிலையில் அவரின் மேல்உள்ள அன்பும் அவருடைய இருத்தலின் பயன்பெறுமதியின் மேல் கொண்ட அக்கறையாலும் நானும் கவலைப்படுவதுண்டு . நண்பர்கள் மது அருந்தும் போதும், சிகரெட் புகைக்கும் போதும் அருகில் இருப்பார். “சிகரட் ஒரு கெட்ட சாமான்” என்பார். ஆனால் நீ குடிக்காதே புகைக்காதே என்ற தொனியிருக்காது. அவருக்கு அவற்றைப்பற்றியதான புரிதல்கள் இருந்தன. அவர் ஒரு கலாசாரக் குடிகாரராக இருந்தவர். மிக நுட்பமான சில விசயங்களை நகைச்சுவைகளை நிறையப்பகிர்ந்துகொள்ளக் கூடியவர்.

“கள்ளுக்கு கதை புருசன்” என்ற சொலவடையை அடிக்கடி அவர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்.  

குமாரதேவனுக்கு சுவையான உணவுகள் குறிப்பாக புதிய  சிற்றுண்டிகள் பிடிக்கும். நாற்பது வருடங்களுக்கு மேலே சண்முகம் கடையில் வேலை செய்தவர்.  மிகப்பழைய உணவகங்களில் ஒன்று உபசரிப்பிற்கும் குறைந்தவிலையில் தரமான உணவை இன்றுவரையும் தரும் உணவகம் ஒன்று.  கண்முன்னே கொதிக்கும் சுத்தமான பாலில் போட்டுத்தரும் தேனீர் அற்புதமாகவிருக்குமங்கே. குமாரதேவன் அந்தக்கடையில் பலவருடங்களாக வேலை செய்தார். சண்முகம் கடை முதலாளி குமாரதேவன் இறந்த அன்று ,மாடும் குமாரும் ஒண்டாச்சாகோணும் எண்டு இருந்தனான். மாடும் செத்திட்டு குமாரும் போட்டான் நான் மட்டும்தான் இருக்கிறன் என்றார் என்று அவரின் ஊழியர்கள் சொல்லிக்கொண்டிருக்கக் கேட்டேன். சண்முகம் தமிழிலக்கியம் மட்டுமில்லை, யாழ்ப்பாணத்தின் உணவுப்பண்பாட்டில் சண்முகம் கடைக்கு ஒரு ஆற்றுகைப்பங்கு இருக்கும் என்றால் குமாரதேவனுக்கும் இருக்கத்தான் போகிறது.கடைசிக்காலம் மட்டும் அதன் பக்கத்தில் இருந்த ஸ்ரோலில்தான் கடைசிக்காலங்களில் குமாரதேவன் வாழ்ந்தார்.

 இலக்கியக்கூட்டங்களோ, உரையாடல்களோ   சில இடங்களில் மேலைத்தேசப்பாணியிலான செல்ப் சேவிங்குகள் இருக்கும், தேனீரோ சிற்றுண்டியோ நாம்தான் ஆக்கிக்கொள்ள வேண்டும். குமாரதேவன் அவ்விடங்களில் கொஞ்சம் அசூசைப்படுவார், வயதும் நோயும் அவருடைய கைகளை வேறு நடுங்கவைத்திருந்தன. எனவே அப்படியான சந்தர்ப்பங்களில்  பெரும்பாலும் அவருக்கு தேனீர் போட்டுக்கொடுத்துவிட்டுதான் நாங்கள் தேனீரொ சிற்றுண்டிக்கோ போக வேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோம். நாற்பதுவருடம் ஒரு பிரபல தேனீர்க்கடையில் மனேச்சராக இருந்த குமாருக்கு தேனீர் போட்டுக்கொடுத்திருக்கிறோம் என்ற அலாதியை மரணச்சடங்கு முடிந்து வந்து அவரைப்பற்றி ஒவ்வொருதராகப் பகிந்துகொள்ளும் போதுதான் என்னையறியாமல் தன்னுணர்வில் வந்த சொற்களில் இருந்து கண்டுகொண்டேன்.

அவர் பயணங்களை அதிகம் விரும்பினார் நோயும், கால் நோவும் வீக்கமும் இருந்த போதும், மட்டக்களப்பு, மலையகம்  என்று நாட்டின் பல்வேறு பாகங்களில் நடந்த இலக்கிய நிகழ்வுகளுக்கு பயணப்பட்டு வந்திருக்கிறார். தன்னுடைய வாசிப்பில் நின்று ஒவ்வொரு பயணத்திலும் தன் கருத்தை விமர்சனத்தையும் தட்டிக்கொடுப்பையும் சொல்லிவந்திருக்கிறார். மலையக நண்பர்கள், முஸ்லீம் நண்பர்கள், சிங்கள நண்பர்கள் அவருக்கு நாடுமுழுவதும் இருப்பதற்கு அவருடைய பயணங்களில் அவர்நிகழ்த்திய உரையாடல்களும் ஒரு காரணமென்று சொல்லலாம். இலக்கியம், சினிமா அரசியல் என்று பல துறைகளிலும்  செயற்படுபவர்கள் அவரை அறிந்திருந்தனர் உரையாடியிருக்கின்றனர். இலக்கிய விழாக்கள், சினிமா திருவிழாக்கள் , மரபுரிமை நடை, பசுமை நிகழ்வுகள் என்று பல்வேறு செயற்பாட்டியக்கங்களுடன் சேர்ந்து பயணித்திருக்கிறார். 

நோய் நிலைமை முற்றிய நாட்களில் கொஞ்சம் மாறாட்டமும் மறதியும் இருந்தாலும் அவருடைய கூரான ஞாபகமும் அதை மீட்டு தற்காலத்துடன் தொடர்புபட்டதாக வாதிக்கக்கூடிய புரிதலும் கொண்வர் குமாரதேவன்.  அவருடைய தலை முறையின் பெரும்பாலான இலக்கியகாரர்களும் செயற்பாட்டாளர்களும் , வாசகர்களும் சிக்கிக்கொண்ட  காலத்தில் உறைந்து போதல்’ என்பதை குமாரதேவன் தன்னுடைய வாசிப்பினாலும் புரிதலாலும் கடந்து வந்தார். தொண்ணூறுகளை தொண்ணூறுகளில் சென்றும், எண்பதுகளை எண்பதின் கருத்தியல்களோடு நின்று வாதிடாமல் நாட்களில் வளர்ச்சியையும் வரலாற்றையும் பண்பாட்டின் நெகிழ்வையும் பின்புலங்களையும் அவர் நுட்பமாகப் புரிந்துகொண்டிருந்தார். அவரின் வார்த்தையில்  “எந்த இசங்களுக்கும் சிக்கவில்லை”  என்பதை அவர் குறித்த கருத்தியல் சட்டகங்களினுள்ளும் காலத்தினுள்ளும் சிக்கவில்லை, தன்னை விழிப்புணர்வு கொண்ட ஒரு மனிதராகவே கண்காணித்து வந்துள்ளார் என்றே விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மாறாக அவருக்கு இசங்கள் மீது வெறுப்போ புரிதலின்மையோ இல்லை என்று கருதவில்லை. கடுமைப்படுத்தப்பட்ட மொழியில் எப்போதும் அந்நியத்தை உணர்வது போல அவற்றின் சொல்லாடல்களில் அந்நியப்பட்டிருந்தாலும்  எல்லாவற்றினதும் அடிப்படையான சாரம் சிந்திப்பதிலும் வாழ்வைப்புரிந்துகொள்ளுதலிலும் இருந்ததை குமாரதேவன் அறிந்திருந்தார்.

குடும்பத்தினர் இன்றுவரை வருந்துவது அவர் தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை, குடும்பத்தை, ஒரு வீட்டை அவர் தனக்கெனக் கொண்டிருக்கவில்லை என்பது. அந்தக்கவலை அவருக்கு நெருக்கமான பலருக்கும் இருந்தது. ஆனால் என்னைப்பொறுத்து அவர் தன்வாழ்வை முன்னிட்டு முடிவெடுக்கும் சுதந்திரத்தைக்கொண்டிருந்தார் என்பதும்  எல்லாம் மானுட பலவீனங்கள், கீழ்மைகளின் பின்னணியில் தன்னுடைய அறிவுக்கும் தெரிவுக்கும் ஏற்படுத்திக்கொண்டார் என்று நினைத்துக்கொள்வேன்.  அவருக்கு நோய் நிலமை முற்றிய நாட்களில் அவருக்கு என்று ஒரு அறையோ வீடோ எடுப்பதற்கு அவருடைய மருமகன் கெளதமன் கிரிசாந்துடன் கதைத்திருந்தார், குமாரதேவனும்  சண்முகம் கடையில் கடைப்பொருட்களுக்கு மத்தியில் அட்டைப்பெட்டிகளில் தன்னுடைய புத்தகங்களையும் தன்னையும் வைத்துக்கொள்ள முடியாது தனக்கொரு இடம் பார்க்குமாறு சொல்லியிருந்தார். ”தூரம் போகாமல் கூட்டங்களுக்கு வந்து போகக்கூடிய மாதிரி டவுனச்சுத்தி பாருங்கோ” என்றார்.  வீடு பார்த்து முடிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன.

குமாரதேவன் எளிமையானவர் , சொந்த பந்தங்கள் இருந்தும் தனக்கென காரைநகரில் வீடு இருந்தும் ஒரு கடையின் குடோனுக்குள் எளிமையாக வாழ்ந்தார் என்று அவரை “எளிமையானவர்” என்று  மனோரதியப்படுத்து விட்டு கடந்து போக நான் விரும்பவில்லை. ஆடம்பரங்களிலோ தனக்குரிய வெளியில்லாத இடங்களில் வாழ்வதையோ அவர் விரும்பாவிட்டாலும். அவருடைய எளிமையில் இருந்தது  துயரமும் கூடத்தான். அவர் ஒரு சில உடைகளையே வைத்திருந்தார். முன்பு சொன்னது போல அவர் தங்கியிருந்த இடம் அவரை அழுக்காகவே வைத்திருந்தது.  தளர்ந்த உடலால் தன்னைப்பாரமரிக்க முடியாமலும் இருந்தது. அதே நேரம் யாரிடமும் எதுவும் கேட்காகத ஓர்மையையும் அவர் பிடித்துக்கொண்டே இருந்தார். மிகவும் நெருக்கமாகவிருந்த சசியண்ணரும் சரி கிரிசாந்தும் சரி அவருக்கு ஒரு ஷேட்டையோ வேட்டியையோ ஒரு தொலைபேசியையோ வில்லங்கப்படுத்தியே கொடுக்கவேண்டியிருந்தது. அவர் சில குணங்களை எங்களுக்காக தளர்த்திக் கொண்டார். குடும்பம் அவரைபுரிந்துகொள்ளவில்லை.  தரும் உணவை உண்டுவிட்டு ஒரு மூலையில் படுத்துக்கொள்வார், என்னும் முதியவருக்கான குடும்ப அமைப்பின், சமூகத்தின் ஒடுக்குதல்களை கற்பிதங்களை அவரை நெருங்க முடியவில்லை. 

  இறுதி நாட்களில் அவருக்கு கிடைத்த அங்கீகாரமும் உரையாடக்கூடிய வெளியும் அவரின் இயலுமான காலத்தில் விளிம்பிலேயே அவரை நிறுத்திவிட்டது என்றே கூறவேண்டும். ஏதோ ஒரு கட்டத்தில் தனிமையால் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். அவரைக் குலைத்துப்போட்ட குடி அவருக்கு வெறும் போதைக்கு மட்டும்தான் உதவியது எனலாமா?  எங்களுக்கு அறிமுகமான நான்கைந்து வருடங்களில் நடைபெறும் பெரும்பான்மையான அரசியல் கலை இலக்கிய ஒன்று கூடல்களில் இடைவிடாது பிரசன்னமாகியபடியிருந்தார்.  அரசியல் கலை இலக்கியச் செயலூக்கம் தன்னுடைய சலிப்பையும் தனிமையுணர்வையும் கடக்கவும் மகிழ்ந்திருக்கவும் உதவக்கூடியன என்ற புரிதலை அடைந்து அதை வாழ்கை முறையாக மாற்றிக்கொள்வதற்கு முன்னதான அவருடைய நீண்ட நாட்கள் பற்றி நாம் ஒருவரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லையல்லவா? அவர் தன்னுடனும் சமூகத்துடனும் ஆற்றிய இடைவினைகளின் வடிவம்தானே  நாம் கண்ட கூடப்பயணப்பட்ட குமாரதேவன்.

சிறுவர்கள், புலியெதிர்ப்பாளர்கள், அதிகப்பிரசங்கிகள், பின்னநவீனத்துவம் பேசுபவர்கள் , ஷோகாட்டுபவர்கள் என்று ஈழத்தின் அரசியல்  கலை இலக்கிய  சமூகங்களின் பெரும்பான்மைப் பொதுப்புத்தியால் விமர்சிக்கவும் வசைபாடவும்  ஏளனப்படும் போதும் ,  கலை இலக்கியச்செயற்பாடுகளில் ஈடுபடவும்  கருத்து, செயற்பாட்டு பலவீனங்களை சரிசெய்யவும் வளர்த்துக்கொள்ளவும் முயன்று கொண்டிருந்த ஒரு இளைஞர் தலைமுறை எங்களுடன் இருந்தார் இவற்றையெல்லாம் சொன்னார் என்று வெறும் நினைவுகளால் மட்டும் கடந்து போகக்கூடியவராகக் குமாரதேவனை நான் பார்க்கவில்லை. அவர் எங்களுக்கு வெளியே நின்று கற்பிக்கும் அறிவுரைசொல்லும் புறம் பேசும் ஒருவராக அவர் இருக்கவில்லை. குமாரதேவன் எங்களில் ஒருவராக இருந்தார். எந்த அடையாளங்களையும் இசங்களையும் பூணாத குமாரதேவன்  இறுதிநாட்களில்  தன்னை எங்கேனும் அடையாளப்படுத்தும் போது “விதை குழுமம் எண்டு போடுங்கோ” “புதிய சொல் எண்டு போடுங்கோ” என்று அவராகவே சொல்லும் போது தனிப்பட்டு எங்களுக்குள் எழுந்த மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். 

மூத்த எழுத்தாளார்கள் செயற்பாட்டாளர்களோடும் சரி இளைய எழுத்தாளர்களுடனும் சரி பிரதியை வாசித்துக்கொண்டு உரையாடும் போது அவருடைய உரையாடல்கள் கதைகளுக்குச் சொல்லும் கதைகள் என்று சுவாரஸ்யமாயிருக்கும். எங்களுடைய தலைமுறையில் எழுத வந்த கிரிசாந்த், யதார்த்தன்,ஆதிபார்த்தீபன், கபில் , பிருந்தன் அனோஜன், தர்முப்பிரசாத்  போன்றவர்களின் பிரதிகளை விரும்பி வாசிக்கவும் அபிப்பிராயங்கள் கூறவும் செய்வார்.  “இப்போது வாசிப்பதை நிறுத்திக்கொண்டேன்” என்பதை கண்டடைதலைப்போலச் சொல்லும் அவருடைய தலைமுறைக்காரர்களில் பெரும்பான்மையோரால் இளையசமூகத்தை புரிந்துகொள்ளவும் சேர்ந்து வேலை செய்யவும் முடியாது போனதற்கும் குமாரதேவனால் அதைச் செய்ய முடிந்ததற்கும் இதுவும் ஒரு காரணம். எழுத்தாளராகப் பிரபலமாக அறியப்படுவதைவிட ஆத்மார்ந்து அவர் தன்னை “வாசகர்” என்று அழைப்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து நாம் வாழ்கையின் இன்னொரு துண்டை கண்டெடுத்துக்கொள்கிறோம் இல்லையா?

குமாரதேவன் தன்னுடைய சொந்த நிலமான காரைநகர் தொடர்பில் இருந்த ஞாபகங்களை அவர் மிகவும் நேசித்தார். பிரதேசவாதமாகவன்றி தனக்குப்பரிச்சமான நேசமான நிலம் என்ற அக்கறை அவனிடமிருந்தது. அவருடைய பிறந்த வீட்டிற்குச்சென்றிருக்கிறோம். கோவளம்   வெளிச்சவீடு நின்றும் கடற்கரையில் இருந்த பெரிய வீடு அவர் இருந்த கால்த்திலேயே வெறுமையாய் கிடந்தது.  வீட்டின் முன்புறம் பழைய வீட்டின் படிக்கட்டு ஒன்று மட்டும் விடப்பட்டிருந்தது. அங்கே அழைத்துச்சென்று அது விவேகானந்தர் மிதித்த இடம் என்று காட்டினார்.  நிறையச்சுவாரஸ்யமான கதைகளை அங்கே வைத்துத்தான் சொன்னார்.  அவர் மிகுந்த சுவாரஸ்யமாயும் சிரித்துக்கொண்டும் சொன்ன கதைகளில் ஒன்று பனி வண்ண அழகி (snow white ) எனப்பட்ட ஊரின் அழகான பெண்ணொருத்தியின் கதையை என்னுடைய நாவலில் “றோஸ்மேரி” என்ற பெண்ணின் பெயரில்  எழுதியிருப்பதாகச்சொல்லியிருந்தேன். சந்தோசப்பட்டார்.  அடிக்கடி நாவல் எப்ப வரும் நாவல் எப்ப வரும் என்று கேட்டுக்கொண்டேயிருப்பார். அவருடைய கையினால் வெளியிட வேண்டும் என்றேயிருந்தோம். 

சிலநேரங்களில் அவருடைய அழைப்புக்களை எடுக்காமல் இருந்திருக்கிறேன். சில இடங்களுக்கு அவருடன் வருகிறேன் என்று விட்டு போகாமல் விட்டிருக்கிறேன். சில நேரம் நியாயமான காரணமிருக்கும் சில நேரம் என்னுடைய சோம்பேறித்தனமும் மறதியும் காரணாமகவிருக்கும். எனினும் எங்களுடைய எல்லா மற்றமைகளையும் கீழ்மைகளையும் தாண்டி  அன்பு கொண்டிருந்தார், இணைந்து செயற்பாட்டார், கருத்துக்களைப்பரிமாறினார். ஒரு பெரிய வாசகனின் வாழ்க்கைச்சருக்கங்களுக்கு வெவ்வேறு வழிகள் இருக்கும் வெவ்வேறு கதைகள் இருக்கும் அவருடன் பழக்கிய ஒவ்வொருத்தரின் ஞாபகங்களும் புரிந்துணர்வும் பகிர்ந்துகொள்ளப்படும். நினைவும் அவருடைய எழுத்துகளும் பேச்சுகளும், அவரைப்பற்றிய ஆவணப்படுத்தல்களும்  தலைமுறைகளுக்கு கடத்திச்செல்லப்படும்.  சமூக உறவுநிலைகளின் மூலம் மனம் உருவாகின்றது, பிரக்ஞையும் தன்னுணர்வும் கருத்துருவாக்கம் செய்கின்றன. கருத்துகள் சமூகத்தை வழிநடத்துகின்றன. வரலாற்றையும் காலத்தையும் அசைக்கின்றன. ஓடுகின்ற வாழ்வுப்பெருநதியில் சொந்தக்கருத்தோடும் கண்டடைதல்களோடும் இருந்த மானுடர்கள் அவர்களின் செயலாலும் சிந்தனையாலும் கலைஞர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் நினைவுகொள்ளப்படுவார்கள். தமிழிலக்கியத்தில் கலையுணர்வும் சிந்தனையும் கொண்டிருந்த ஒருவர் தன்னை “வாசகர்” என்றே அழைத்துக்கொள்ள விரும்பினார். 

நண்பர்களே! உங்களிடம் குமாரதேவனுடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றேனுமுள்ளதா?

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’