நீரியல் சூழலும் மரபுரிமைப் பண்பாடும்.

கேணிகள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள்

மரபுச்சின்னங்கள் – சமூக வரலாற்றை எழுதுதலும் அடையாளமும்.

ஒடுக்கப்படுகின்ற இனம் தன்னுடைய இனவரலாற்றை நிகழ்காலத்திலிருந்து ஒழுங்குபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. அது இதுகாறும் சொல்லப்பட்ட கடவுள்களின், அரசர்களின், முதலாளிகளின், பணக்காரர்களின் வரலாறாக  எழுதப்படலாகாது. ஒரு இனம் தன்னுடைய இனவரைபின் வரலாற்றை சமூக வரலாறாக எழுதவேண்டும். அது விளிம்புநிலை சமூகங்களின், ஒடுக்கப்பட்டவர்களின், குரலற்றுப்போனவர்களின், குரலற்று இருப்பவர்களின் நிலைமைகளையும்  உள்வாங்கி பன்மைத்துவ நிலையில் எழுதுப்படுவதாக இருக்கவேண்டும்.   மன்னர்களின் வரலாற்றையே வரலாறாக எழுதும் ”மேலிருந்து கீழ்நோக்குதல்” என்ற பழைய வரலாற்றெழுத்து முறையைப் புறந்தள்ளிவிட்டு கீழிருந்து மேலே செல்லும் மக்களின் வரலாற்றை எழுதுவதே ? வரலாற்றெழுத்தாகும். மார்க்சிய அறிஞர்கள் சொல்வதைப்போல “வரலாறு என்பது சமூகத்தை மாற்றியமைக்கவே எழுதப்படவேண்டும்”. இனமொன்றின் சமூக வரலாற்றெழுத்தில் சமகாலத்தில் அவ்வினம் கொண்டுள்ள தொன்மங்கள், பழங்கதைகள், கதைப்பாடல்கள், நாட்டார்கதைகள், நாட்டார்புராணங்கள், சொலவடைகள், புதிர்கள், வம்சவரலாறுகள், நிகழ்த்து கலைவடிவங்கள், வழிபாட்டுமரபுகள், வெளிப்பாட்டுமரபுகள், தொல்லியல் சான்றுகள், மரபுச்சின்னங்கள் போன்ற மொழி மற்றும் பண்பாட்டு நிலைசார்ந்த கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இனமொன்றின், குறிப்பாக பேரினவாதம் ஒன்றினால் ஒடுக்கப்படுகின்ற இனமொன்றின் சமூக வரலாற்று எழுத்தும் அதுசார்ந்து காக்கப்படும் ரூப, அரூப பண்டங்களும் அந்த இனத்தின் “அடையாள” நிலமைகளைக் கையாளும் ஒன்றாகவிருக்கின்றன.மனிதமனமானது தன்னைச்சுற்றியுள்ள சுற்றுச்சூழல், இடம், நிலம், தாவரங்கள், விலங்குகள், பொருட்கள், பிரபஞ்சம் என  எல்லாவற்றையும் தன் பண்பாட்டு அறிதிறன் பாங்கோடு (cognitive pattern) பாகுபடுத்திக்காண்கிறது. அவ்வாறே மனிதனையும் மனிதசமூகங்களையும் பாகுபடுத்திக்கொள்கிறது. இப்பாகுபாடானது முதலில் பருவநிலையிலும் பின்னர் நுண்நிலையிலும் அமைகிறது.  (Levi-strauss 1969)தனக்கான இனவரலாற்று, இனப்பண்பாட்டு, வரைபுகளை ஒழுங்குபடுத்துவதன் ஊடாக அவ்வினம் தன்னுடைய வாழ்தலிற்கான தகவமைத்தலை மேற்கொள்ளும்போது தன்னுடைய சின்னச்சின்ன அடையாளங்களையும் அவற்றின் பின்னணியில் இயங்கும் சமூக நிலமைகளையும் நிகழ்காலத்திலிருந்து வரலாற்றுக்கண்டோட்டத்தில் கவனித்தே எழுதவேண்டியிருக்கிறது. அத்தோடு அவ்வடையாளங்களைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் உணரவேண்டியுள்ளது.

இந்த இடத்திலேயே  சமூக வரலாற்றெழுத்து மற்றும் அடையாளச்சிக்கல்களை கையாள்வதற்கு மரபுரிமைச் சின்னங்கள் சமூக அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகின்றன. அவை மாற்று வரலாற்றினை எழுதும்போதும் சமகாலத்தில் நின்று அதை வாசிக்கும்போதும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக நிகழ்த்தக்கூடிய சமூக வாழ்வை உருவாக்கும், அடையாள நிலையை வலுப்படுத்தும் திறனை சமூகத்திற்கு வழங்குகின்றன. அவை மேட்டிமைச் சமூகத்தினால் உருவாக்கப்பட்டிருந்தாலும் சரி, விளிம்புநிலை சமூகத்திற்கு நெருக்கமாக இருந்தாலும் சரி, தாம் எதனுடைய பிரதிநிதிகளாக இருந்தோம் என்பதை சமூக வாசிப்பின் மூலம் கலைத்து வாசிக்க துணையிருக்கின்றன.

உதாரணமாக ஒரு  பழைய கோட்டை என்பது அதிகாரத்தின் சின்னமாகும், ஆனால் அது சமகாலத்தில் சமூக வரலாறாக வாசிக்கப்படும்போது வெறும் கடந்தகாலத்தில் மையவதிகாரம் கொண்டிருந்த அபத்தமான சமூக வகிபங்கை காட்டும். அதேபோல அந்தக் கோட்டையைக் கட்டவும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் என்று அதிகாரத்துக்கு கீழே மடிந்து போன விளிம்புநிலை மக்களின் கதைகளையும் ஒருங்கே தாங்கியே நிற்கின்றது. அதேபோல விளிம்புநிலை சமூகமொன்றின் நாட்டார் வழிபாட்டிடத்தை எடுத்துக்கொண்டாலும் அது அச்சமூகம் பெரிய கோயில்களிலிருந்து தள்ளிவைக்கப்பட்ட செய்தியை பின்னணியில் ஒலிக்கச்செய்கிறது. அச்சமூகத்தின் அதிகார வரலாற்றெழுத்தினால் கவனிக்கப்படாத சடங்குகள், நம்பிக்கைகள், ஆற்றுகளைகள் சார்ந்த வாழ்வுமுறையின் கதைசொல்லியாகவும் அவ்வழிபாட்டிடம் இருக்கின்றது. எனவே எல்லா மரபுச்சின்னங்களும் மாற்று வரலாற்று எழுத்தின் அடையாள நிலமைகளின் பங்குதாரர்களாக இருக்கின்றன. அதிலும் அதிகார வயப்பட்ட பெருங்கதையாடல்களால் எழுதப்பட்ட வரலாற்று மரபுச்சின்னங்களை விடவும்  சமூக வாழ்கைக்குள் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு நெருக்கமாயிருந்த மரபுச்சின்னங்கள் இன்னும் விசேடமானவை.

இவ்விடத்தில் நின்று யாழ்ப்பாண மரபுரிமைச்சின்னங்கள் யாழ்ப்பாண வாழ்வியலின் வாசிப்பு புள்ளிகள், போரின் பிறகு சனநாயகத்தையும் பேரினவாததத்தின் வன்முறைக்கெதிரான அடையாள கதையாடல்களாகவும் அவை எஞ்சியிருக்கின்றன. இங்கே கேணிகள், ஆவுரஞ்சிக்கற்கள், சுமைதாங்கிகள் பற்றிய உரையாடலை நிகழ்த்துவதன் மூலம் இம்மரபுரிமைச் சின்னங்களின்  தற்போதைய இருப்பினதும் அவற்றின் மீதான  வரலாறுகள், அடையாளம் மற்றும் மக்களின் வாழ்வு பற்றிய கதையாடலை நிகழ்த்த முனையலாம். மேற்படி கேணிகள், ஆவுரஞ்சிக்கற்கள் மற்றும் சுமைதாங்கிகள் ஒரு பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் ஒருங்கிணைந்ததும் நெருக்கமானதுமான வாழ்வியல் வடிவங்கள். மூன்றும் பெரும்பாலும் ஒருங்கிணைந்த சூழமைவினைக்கொண்டவை. குறிப்பாக அவை யாழ்ப்பாணத்தின் நீரியல் பண்பாடு, விவசாயம் மற்றும் கால்நடை பண்பாட்டுடன் மடப்பண்பாடு, போக்குவரத்து என்வற்றின் கூட்டானவையாக உள்ளவை.

பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் மடம், கேணி, பொதுக்கிணறு, ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி என்பனே ஒரே இடத்தில் அமைந்திருக்க அவதானிக்கலாம்.  சில இடங்களில் தேவை கருதி ஒன்றிரண்டு அமைக்கப்படாமல் இருந்துமிருக்கின்றன.  ஆனால் இன்றும் பல இடங்களில் காணக்கிடைக்குமளவிற்கு ஒரேயிடத்தில் இச்சூழமைவினை அவதானிக்கலாம். மேலும் நாச்சார்வீடுகள், பொதுக்கட்டடங்களுக்கு அருகிலும் அவற்றோடு சேர்ந்தும் இவ்வகையான அமைப்புக்களைக் காணக்கூடியதாகவும் உள்ளது. மடம் யாழ்ப்பாணப் பண்பாட்டை வாசிப்பதில் தனிப்பெரும் பிரிவான ஒன்று  தெருமூடிமடம் உள்ளிட்ட தனித்துவமான மட அமைப்பு முறைகள் அவைசார்ந்த பண்பாட்டு இயங்கியல்கள் பற்றிய ஆய்வுகள் மரபுரிமை சார்ந்தும் தொல்லியல் ஆய்வுகள் சார்ந்தும் கணிசமான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பயணத் தங்குமிடங்களாகவும், இளைப்பாறும் இடங்களாகவும், பொழுதுபோக்கு இடங்களாகவும் இருக்கும் அமைக்கப்பட்ட மடங்களைக்கொண்டு யாழ்ப்பாணத்து சாதிய நிலைமைகளையும், மடம் அமைத்துக் கொடுப்பதில் இருந்த உள்நோக்கங்களையும் பற்றித் தனியாகவும் விரிவாகவும் வாசிக்க வேண்டும். அம்பலம் என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படும் இம்மடங்களும் மேற்சொன்ன சூழமைவில் முக்கிய இடமாக இருந்தன. 

(மடம் பற்றிய விரிவான வாசிப்பிற்கு ஈழத்து மடப்பண்பாடு பற்றிய பா.அகிலனின் கட்டுரைகளையும், குமுதா சோமசுந்தரக்குருக்கள் இன் ஆய்வையும் (யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் மடமும் மடக்கலையும்) தெருமூடி மடம் பற்றிய யதார்த்தனின் கட்டுரையையும்  வாசிக்கலாம்)

இந்த இடத்தில் குறித்த சூழமைவில் இருக்கும் கேணிகள், ஆவுரஞ்சிக் கற்கள் சுமைதாங்கிகள் பற்றித் தனித்தனியாகப் பார்கலாம்.

கேணிகள்

கரையோரச் சமவெளியான யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலவமைப்பு மற்றும் புவியியல் சூழல் என்பவை பாரிய நீர் நிலைகளைக் கொண்டிராதவை. இங்கே துரவுகளும், கேணிகளும், சிறிய குளங்களும், கிணறுகளுமே (நிலத்தடி நீர்) பிரதான நீர் தரும் மூலங்களாக இருக்கின்றன. இப்பின்னணியில் கேணிகளை அமைப்பதென்பது பழைய விவசாயப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கின்றன. 

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இரண்டு வகைக் கேணிகளை அமைப்பு மற்றும் தேவை அடிப்படையில் இனங்காணலாம்.

ஆலயச்சூழலில் அமைக்கப்படும் தீர்த்தக்கேணிகள் 

மக்கள் புழக்கச் சூழலில், குறிப்பாகப் பயணப்பாதைகளில்  அமைக்கப்படும் ஒரு பக்கம் திறந்த கேணிகள். ஆலயச் சூழலில் அமைக்கப்படும் கேணிகளைப் பொறுத்தவரையில் இயற்கையான நீரூற்றுக்களை இனங்கண்டோ அல்லது  நீரோட்டம் பார்த்தோ அமைப்பார்கள். ஆலயச்சூழலில் அமைக்கப்படும் கேணி புனிதத்தன்மை கற்பிக்கப்பட்டதாகவும். ஆலயத்தினுடைய “தீர்த்தக்கேணி” என்றும் அழைக்கப்படும். பெருங்கோயில் மரபில் தீர்த்தத் திருவிழா வருடார்ந்த உற்சவத்தில் ஒரு முக்கிய சமயச்சடங்காக நிகழும். பழைய நீர்நிலை சார்ந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக இவை இருக்கின்றன. மேலும் கேணிகளினோடு இருக்கும் நம்பிக்கைகளும், தொல்கதைகளும் முக்கியமானவை. யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற சில கேணிகள் பழைய தொல்கதைகள், புராண நம்பிக்கைகளுடன் தொடர்புடையவை. யாழ்ப்பாணத்தில் உள்ள இவ்வாறான கேணிகளில் கீரிமலை தீர்த்தக்கேணி பழைய புராண நம்பிக்கையோடும் பழங்கதைகளோடும் தொடர்புடையது. 

“கீரிமுகமுடைய முனிவர் இக்கேணியில் நீராடி சாபம் நீங்கப்பெற்ற கதை” கீரிமலை நகுலேச்சர ஆலயத்தினுடைய பழைய மரபுக்கதையாகும்.  மேலும் யாழ்ப்பாணத்தின் மக்களினிடையே கீரிமலைக் கேணி பற்றிய பிறிதொரு  தொல்நம்பிக்கையும் உள்ளது. கேணி அமைப்பில் இருக்கும் “நிலாவரை கிணற்றிலும் வேறு சில நீர் நிலைகளிலும் போடப்படும் தேசிக்காய் கீரிமலையில் போய் மிதக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இதுதவிர இறந்தவர்களுக்கான பிதிர்க்கடன் கழித்தல் போன்ற சடங்குகள் மேற்கொள்ளப்படும் சடங்குடனும் கீரிமலைக்கேணி தொடர்புபடுகிறது.

இதைப்போல யமுனா ஏரி போன்ற பழைய தொல்லியல் சின்னங்களும் இத்தகைய கேணி அமைப்புக்களாகவே உள்ளன. நல்லூர் சங்கிலித்தோப்பில் உள்ள யமுனா ஏரி யமுனை நீர் கொண்டுவந்து புனிதப்படுத்தப்பட்டதாக ஒரு வரலாற்றுக்குறிப்பில் சொல்லப்படுகின்றது (Pushparatnam – tourism and monunents Page 95). வாய் மொழியூடாகச் சொல்லப்படும் இதுபோன்ற நம்பிக்கைகள் உருவாகிவரும் பின்னணியும்  நீர்நிலை சார்ந்த சமூக வாழ்வியலை வாசிப்பதில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.

இத்தகைய தொல் கதையாடல்கள் புனைந்தவையா? நம்பகத்தன்மை வாய்ந்தவையா? என்று எண்ணத் தோன்றலாம்.  அவ்வாறு எண்ணுவோரின் நனவு அறிவு வெளியில் தருக்க நிலையிலான சாதாரண விளக்கங்காணல் (Reasoning) மிகுந்திருக்கும். அவை உண்மையானவையாக இல்லாவிட்டாலும் கூட இவை வழங்கப்படும் சமூக, பண்பாட்டு, வரலாற்றுச்சூழல்களின் தருக்க உறவுகளை கருத்தாடல் செய்கின்றன என்ற அளவில் அவை முக்கியம் பெறுகின்றன (பக்தவச்சல பாரதி – வரலாற்றுமானிடவியல் பக்.95).

இவை தவிர வீதிகளில், மடங்களுக்கும் இளைப்பாறுமிடங்களுக்கும், வயல் வெளிகளிலும் அமைந்திருக்கும் சமய நிலைக்கு வெளியேயான கேணிகளும் முக்கியமானவை. இவை பழைய மரபுக்கதையாடல்களை மட்டுமன்றி தன்னோடு அமைந்த ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி என்பவற்றுடன் பங்கீடான சூழமைவினை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் இவ்வகைக் கேணிகள் நாட்டார் தெய்வங்கள், பெருந்தெய்வங்களின் வழிபாட்டு இடங்களுக்கு சமீபமாக அமைத்திருந்தாலும் அமைப்பு அடிப்படையில் இவை மனிதர்களின் பயன்கருதி மட்டுமன்றி கால்நடைகளின் பயன்பாட்டுக்கும் உகந்தவாறு மூன்றுபக்கம் பக்கச்சுவர்களாலும் ஒரு பக்கத்தில் சாய்ந்து இறங்கி நீரைச் சென்றடையக்கூடிய அமைப்பினையும் பெற்றிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு முதலான தீவுக்கூட்டங்கள் தொடக்கம் குடாநாடு முழுவதும் ஏராளமான பழைய கேணிகள் இருக்கின்றன. பல இன்று அழியும் அபாயக்கட்டத்தில் இருந்தாலும் மற்றவை இயங்கு நிலையில் பயன்பாட்டில் உள்ளனவாகவும் இருக்கின்றன.  இவற்றின் வாசலில் ஆவுரஞ்சிக்கல்லும் அருகில் சுமைதாங்கியும்  சில இடங்களில் ஓய்வெடுக்கும் மடங்களும், அம்பலங்களும் பெரிய நிழல்மரங்களும் இருக்கின்றன.

ஆவுரஞ்சிக்கல்

மேற்படி சூழமைவில் அடுத்து பார்க்க வேண்டியவை ஆவுரஞ்சிக்கற்கள். ஆவுரஞ்சிக்கற்களை யாழ்ப்பாணத்தின் கேணிகள், கிணறுகள், கற்தொட்டிகளுக்கு அருகில் அவதானிக்கலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் “தினவு” எனப்படும் ஒரு வகை உடல் உபாதையை உராய்ந்து போக்கிக்கொள்வதற்காக ஆவுரஞ்சிக்கற்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக நீர்நிலை அருகே தாகம் தீர்த்த பின்னர் கால்நடைகள் தமதுடலை உராய்ந்து செல்லும்.

ஆவுரஞ்சிக்கல் என்பது அதன் பயன்பாடு கருதி ஏற்பட்ட காரணப்பெயராக இருக்கின்றது. (ஆ (பசு) + உரைஞ்சுதல்) ஆவுரஞ்சி கற்களின் தொல்செய்திகள் தொல்லியல் மற்றும் இலக்கிய மூலாதாரங்கள் மூலம் வந்து சேர்கின்றன. பழைய தமிழிலக்கிய இலக்கண நூல்களான  குற்றாலபுராணம், சூடாமணிநிகண்டு, கந்த புராணம் முதலியவற்றில் இக்கல் ‘ஆவுரஞ்சுதறி’, ‘ஆதீண்டுக்குற்றி’ ’மந்தைக்கல்’ முதலான பெயர்களால் இனங்காட்டப்படுகின்றது. இது மக்களின் தானதருமங்களில் ஒன்றாகவும் உள்ளது. பெரும்பாலும் ‘கண்டகல்லினால்’ (மயோசின் சுண்ணாம்புக்கல்) அமைக்கப்படும் இவ் ஆவுரஞ்சிகற்கள் மடங்கள், கேணி, கிணறு, கற்றொட்டி முதலான மூலங்கள் என்பவற்றின் அருகில் பெரும்பாலும் அமைந்திருக்க காணலாம்.

யாழ்ப்பாணத்தில் 2500 வருடங்களுக்கு முதலே  விவசாய உற்பத்திக்காக மாடுகள் வளர்க்கப்பட்டமைக்கான  ஆதாரங்கள் கந்தரோடை, ஆனைக்கோட்டை முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ் ஆவுரஞ்சிக்கற்கள் பெரும்பாலும் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்படுகின்றன.  அதற்கான குறிப்புக்களையும் பொறித்திருக்கக் காண்கின்றோம். இம்மரபினை பண்டைய தமிழர்களிடம் இருந்து வந்த ”நடுகல்” பண்பாட்டுடன் தொடர்புபடுத்தியும் பார்க்க வேண்டியிருக்கிறது.

“வடமராட்சி – உடுப்பிட்டிக் கிராமத்திலுள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஆவுரஞ்சிக்கல், அக்கிராமத்து பெண் ஒருவர் இறந்ததன் நினைவாக அமைக்கப்பட்ட வரலாற்றைக்  கல்லில் பொறித்து சாசனமாக  அமைக்கப்பட்ட நிலையில் தொல்லியல் சிறப்புக்கலை மாணவரான வி.மணிமாறன்  என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. வடமராட்சி, உடுப்பிட்டிப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டினை பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்.  தும்பளையில் காணப்படும் சில ஆவுரஞ்சிக்கற்கள் அவற்றை அமைத்துக் கொடுத்தவரின் சமய ஈடுபாட்டை பிரதிபலிக்கும் நோக்கில் சூரியன், சந்திரன், வேல், சூலம் முதலான குறியீடுகள் பொறிக்கப்பெற்றுள்ளன. ஆவுரஞ்சிக்கற்கள் இலிங்க வடிவில் அமைக்கப்பட்டதால் அவ்விடங்கள் பிற்காலத்தில் சிவன் ஆலயமாக மாற்றமடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு.

(வீரசிங்கம் சிவரூபி – யாழ்ப்பாண வாழ்வியல் பக்.68)

சுமைதாங்கிகள்

தெருவழியே சுமைகளுடன் கால்நடையாகப் போகின்றவர்கள் தமது சுமையை இறக்கி வைத்து இளைப்பாறும் பயனாக்கத்தைக் கொண்ட அமைப்புக்களே சுமைதாங்கிகள். இச்சுமைதாங்கிகளும் கேணி, மடம், ஆவுரஞ்சிகல், நிழல்தருமரங்களின் அருகில் என்று பெரும்பாலும் கூட்டுச் சூழமைவிலேயே அமைக்கப்படுகின்றன.எனினும் இவை மரணம் தொடர்பான நம்பிக்கையுடன் தொடர்புபடுத்தப்பட்டு அமைக்கப்படுகின்றமை இவற்றின் பெளதீக மற்றும் பயனாக்க மானிடப்பெறுமானங்களைக் கொண்டுவருகின்றது.குழந்தையைப் பிரசவிக்கும்போது கர்ப்பத்துடன் இறந்த பெண்ணின் உத்தரிப்பை அதாவது அவளுடைய சுமையால் ஏற்பட்ட வலியை களைவதான நம்பிக்கையின் பொருட்டு சுமைதாங்கிகள் அமைக்கப்படுவதாக  திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகின்றது. குடாநாட்டில் உள்ள பெரும்பாலான சுமைதாங்கிக் கற்கள் இறந்த கருவுற்றிருந்த பெண்ணின் நினைவாக அமைக்கப்பட்டதாகவே உள்ளன. அவற்றில்  பொறிக்கப்பட்ட விபரங்களில் இறந்தவர் பெயர், இறந்ததற்கான காரணம் மற்றும் அவரின் சமய நம்பிக்கை சார்ந்த விடயங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சுமைதாங்கிக் கற்களை அமைத்துக்கொடுத்தவர்கள் தமது குடும்பப்பெண் இறந்த நாளிலே அச்சுமைதாங்கியை அலங்கரித்து  அதன் முன்னால் சமயக்கிரியைகளைச் செய்யும் வழக்கத்தை இன்றும் வடமராட்சிப்பகுதிகளில் அவதானிக்க முடிகின்றது.

சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் சில இடங்களில் மாறுபட்டவையாக காணப்படுகின்றன. அதேபோல அவற்றின் அமைப்பு, பருமன், கலைமரபு என்பன பிரதேச அடிப்படையில் வேறுபட்டிருப்பதை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பிராந்தியங்களின் சுமைதாங்கிளை ஒப்புநோக்கும்போது இனங்காணலாம். 

கேணிகள், ஆவுரஞ்சிக்கற்கள், சுமைதாங்கிகள் சூழமைவின் அரசியல் சமூக பண்பாட்டு  நிலமைகள்

யாழ்ப்பாணத்திற்கு 2009 நவம்பரில் வருகை தந்த தமிழ்நாட்டு மானிடவியலாளரான பேராசிரியர் பக்தவத்சலபாரதி யாழ்ப்பாணம் பற்றிய தன்னுடைய குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

”யாழ்ப்பாணத்தில் ’நாட்சார் வீடு முக்கியமானது சுமைதாங்கி, நீர்த்தொட்டி, கொண்ட நாட்சார் வீடு அமைப்பு முறைமை புராதனமானது நாட்சார் வீடானது பண்டைய யாழ்ப்பாண மக்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதாகவிருந்தது. சங்கடப் படலை என்பது வீட்டின் முகப்பில் கட்டப்படும் நிழல்தரும் சாரமாகும். எவரும் இங்கு சற்று இளைப்பாறலாம் இதன் அருகே சுமைதாங்கிகளும் நீர்த்தொட்டிகளும் உள்ளன. இவை வழிப்போக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுகின்றன.

தஞ்சாவூர் டெல்டா பகுதிபோல் காட்சியளித்த வழுக்கையாறு வழியாக நாங்கள் சென்றபோது ஆவுரஞ்சிக்கல், கேணி இரண்டும் அங்காங்கு கண்ணில் பட்டன. கேணிகள் அவ்வழியாக வரும் ஆடுமாடுகளின் தாகத்தைத் தணிக்கின்றன. ஆவுரஞ்சிக்கல் ஏறக்குறைய நான்கு அடி உயரமுள்ள உருண்டையான கற்றூண். ஆடுமாடுகள் உடலை உரசிக்கொள்வதற்காக இது நடப்பட்டிருந்தது. விவசாய நாகரிகத்தின் அச்சாணியாக விளங்கிய கால்நடைகளின் மீது யாழ்ப்பாணத்து தமிழர்காட்டிவந்த  மனிதநேயத்தின் சாட்சியாக இவை இன்றும் நிற்கின்றன. ஆப்பிரிக்க நூயர்(Nuer) பழங்குடியினரே கால்நடைகளை மிக அதிகமாக நேசிப்பவர்கள் என்ற இனவரைவியல் கருத்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றவுடன் என்னுள் மாறத்தொடங்கிவிட்டது.”  (பக்தவச்சலபாரதி – வரலாற்றுமானிடவியல் பக்.174-175)

காலநிலை, நிலம், காலம் என்பவற்றின் பின்னணியில் எழும் இத்தகைய மரபார்ந்த அமைப்பு வடிவங்கள்  மானுட வாழ்வியலை விளங்கிக்கொள்ளவும்  தற்கால கதையாடல்களுடனும் சிந்தனையுடனும் பொருத்திப்பார்த்து ஆராய்ந்து முன்செல்லவும் கொடும்அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு வடிவங்களை உருவாக்கவும் உதவக்கூடியன. ஆனால் அவை மரபார்ந்த வரலாற்று வாசிப்பினாலன்றி சமகால சமூக வாசிப்பு நிலைகளினால் எதிர்கொள்ளப்படும்போதே பொருத்தமான மானிடவாழ்வியலுக்குரிய தகவல்களையும் கதையாடல்களையும் ஒழுங்குபடுத்தித் தருகின்றன.

மேலே  குறிப்பிட்ட அடையாளங்களாகவும் மரபுரிமைகளாகவும் கருதக்கூடிய மடம், கேணி, ஆவுரஞ்சிகல், சுமைதாங்கி ஆகியவை அமைக்கும் சமூகத்தின் நோக்கம் சார்ந்து பார்க்கும்போது சமூக அந்தஸ்த்து, அதிகாரம் என்பவற்றை நிலைநாட்ட அமைக்கும் தன்மை காணப்படுகின்றது. அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படியான அமைப்புக்களை அமைப்பதற்கு அக்காலத்தில் அனுமதியிருந்ததா? அல்லது யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் இருந்த சாதிய, வர்க்க நிலமைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகளை முதலில் எழுப்பவேண்டியுள்ளதுடன் அவற்றின் உருவாக்கத்தில் பதிந்துள்ள உயர்குழாம், ஆதிக்க சமய, அதிகாரச்சாதிய அமைப்புக்களின் அரசியலை புரிந்துகொள்ளவும் வேண்டும்.

ஆனால் ஜனநாயகத்தின் மெல்ல முகிழ்ந்த தன்மை, சாதிய, வர்க்க நிலைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அறிவார்ந்த உரையாடல்கள் என்பன செய்த, செய்துகொண்டிருக்கும் சமூகமாற்றமானது இச்சின்னங்கள் கொண்டிருந்த அதிகார முகத்தினை மெல்ல மெல்ல வழக்கிழக்கச்செய்து பொதுப் பயனாக்கங்கள் என்ற நிலைமைக்குக் கொண்டுவருவது மட்டுமன்றி நவீன கருவிகள், வாகனங்கள், பயனாக்க பொருட்களின் பயன்பாட்டின் காரணமாக பயனாக்க நடைமுறைகளில் இருந்து கைவிடப்பட்டு விடும்போது, அவை பழைய சின்னங்களாக மட்டுமே எஞ்சுகின்றன. உதாரணமாக இப்போது சுமைதாங்கிகள் முற்றுமுழுதாகவே தனது பயனாக்கத்தை இழந்து போயுள்ளன. அவை பழைய சடங்கு மரபினையும், மரபடையாளத்தையும் மட்டும் தாங்கி நிற்கின்றன. 

இந்நிலையில் சமூக வாசிப்பு நிலமைகளை இவற்றின் மீது பிரயோகித்து அவை உருவான பின்னணியையும் அவை தற்பொழுது அடைந்திருக்கின்ற மானிடப் பெறுமானத்தையும் பார்க்கவேண்டும். மேலும் அதிகார முகங்கள் இழக்கப்படும்போது மக்களின் அன்றாட வாழ்வில் தொடர்ச்சியாக அவை எதிர்ப்படும் போது உருவாக்குகின்ற ஞாபகங்கள், புதிதாக உருவாகிவரும் அவைசார்ந்த ஞாபகக் கதைகள் என்பன கூட்டு நனவிலியில் புதிய கலாசார நினைவுகளைப் படைக்கின்றன. அவை அடையாளம், ஞாபகம் சார்ந்த பிரக்ஞைகளை காலப்போக்கில் உருவாக்குகின்றன. குறிப்பாக மொழிவழியும், பண்பாட்டுக்கல்வி, அடையாளவிழிப்புணர்வு வழியிலும் இவை பற்றிய ஞாபகங்களை உருவாகிவிடுகின்றன.

மேலும் நம்பிக்கை,சடங்குகள், பழங்கதைகள், தொன்ம நிலவரங்கள் என்பன இவ் அமைப்புக்களில் இருந்து கிளர்ந்து சமூக கூட்டு நனவிலியைச் சென்றடையும்போது குறித்த சமூகத்தின் அல்லது இனத்தாரின் கூட்டுமனம், அவ்வினத்தின் அன்னியோன்னியமான கூட்டுத்தன்முனைப்பு, தங்களைப்பற்றிய முழு அர்த்தப்பாடாக மாறும். ஆகவே இத்தகைய தொன்மங்களும் அடையாளங்களும் சமூகத்தின் கூட்டு மனப்பதிவுகளாக மாறுகின்றன. மானிடவியலிலும் சரி, வரலாற்று எழுத்திலும் சரி இவை உயிரோட்டமுள்ள பங்குதாரர்களாக மாறுகின்றன.

மேலும் வரலாற்று எழுத்து, அடையாளச் சிக்கல்களைப் பற்றிப் பேசும்போது மரபுரிமைச்சின்னங்களை எதேச்சதிகாரத்தின் பெருங்கதையாடல்களுக்கு எதிராக நிற்கும்  பலமான கதையாடல்களாகக் கொள்ள இயலும். அவற்றைப் பற்றிய அறிதல் எல்லையையும், அவை பற்றிய கூட்டு உரிமைக்குரலையும், ஆவணமாக்கல், பாதுகாத்தல் போன்ற பயன் தரும் செயற்பாடுகளையும், அவை சார்ந்த கொண்டாட்ட, கலை நிகழ்த்துகைகளையும் செய்ய வேண்டும். தொன்மயாத்திரை போன்ற மரபுநடைகள் வரலாற்று ஆவணமாக்கல் எழுத்துக்கள், மானிடவியல் மற்றும் கலைவரலாற்று உரையாடல்கள் போன்றன இத்தகைய புலங்களைக் கட்டியெழுப்பும் நோக்கங்களிலேயே செயற்படுகின்றன.

இன்று இம்மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதற்குரிய சமூகவயப்பட்ட இயங்குதல்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன. உலகமயமாதல் சூழலின் பின்னணியில் வீதி அகலிப்புக்கள், புதிய கட்டுமான நிறுவல்முயற்சிகள் என்பன இத்தகைய மரபுச்சின்னங்களை அழிக்கின்றன. கலைச்சின்னங்கள் திருடவும் பயன்மதிப்பு அறியாமல் விற்கப்படவும் செய்கின்றன. எனவே சமூக செயற்பாடும் அறிதலினால் வரும் விழிப்புணர்வும் சாதாரண மக்களின் வாழ்வியல்  எண்ணங்களின் உள்ளும் நடத்தைகளுக்குள்ளும் புகுத்தப்பட வேண்டும். ஒடுக்கப்படுதலுக்கு எதிரான குரல் எழவும் இருத்தலை தக்கவைக்கவும் உறுதிசெய்யவுமான கூட்டு நிகழ்தல் நடக்கவும் இத்தகைய மரபுச்சின்னங்கள் பெருந்துணையாக இருக்கின்றன என்ற பிரக்ஞை சமூக வயப்படவேண்டும்.

தொன்ம யாத்திரை என்ற ’மரபுரிமை நடை’ மூலமாக கேணிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆவணமாக்கல் செயற்பாட்டையும் மேற்கொண்டிருந்தோம் 2017 ஆம் ஆண்டு யூன் மாதமளவில் மேற்கொண்டிருந்தோம். அதன் பின்னர்  வடக்கு மாகாண சபையினால் 2017 ஆம் வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் இனங்காணப்பட்ட கேணிகள், ஆவுரஞ்சிக்கற்கள், மடம் என்பவை புனரமைக்கப்படவுள்ளதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. அதன் பின்னர் அத்திட்டம் செயற்படுத்தப்படாமலே வடமாகாண சபை பதவிக்காலம் முடிந்து கலைக்கப்பட்டது.

மேலும் சுதீந்திர குமார் வசீகரனின் ‘கரும்பாவளி’ என்ற ஆவணப்படத்தையும் தொன்ம யாத்திரை மூலமாக வெளியிட்டிருந்தோம். உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் பெண் அந்தக் கிராமத்திற்கு கேணிகளையும், ஆவுரஞ்சிக் கற்களையும், தண்ணீர்ப்பந்தலையும் தானங்களாக அமைத்துக் கொடுத்துள்ளார். மந்தை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட அந்தக் கிராமத்தின் மக்களுக்காக வீராத்தை செய்திருக்கும் பணிகளையும், அதைக் குறித்ததாக அந்தக் கிராமத்தில் நிகழும் வாய்மொழி வழக்காறுகளையும் ஆய்வு ரீதியிலான தகவல்களையும் திரட்டி ஆவணமாக்கும் முயற்சியே கரும்பவாளி என்கிற ஆவணப்படமாகும்.

தொன்ம யாத்திரையின் ஆறாவது நடை கண்ணகை மரபினை அறியவும் ஆவணப்படுத்தவுமாக இவ்வருடம் (2020 புரட்டாதி) இலங்கைக்கு கண்ணகை வழிபாடு எடுத்துவரப்பட்ட முதலாவது இடமான அங்கணாமக்கடவைக்குச் சென்றிருந்தோம். அங்கு வழுக்கையாற்றங்கரைப் பண்பாட்டோடு தொடர்புபடும் கண்ணகை மரபின் வருகையையும், பருவகால நீர் நிலையாகவும் தொல்லியல் மரபுரிமைப் படுக்கையாகவும் இருக்கும் வழுக்கையாற்றின் மக்கள் சார் நம்பிக்கைகளையும் வரலாற்றுத்தகவல்களையும் பகிர்ந்துகொண்டதுடன் அங்குள்ள தொல்லியல் சின்னமான குளத்தைப் பற்றியும், ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி என்பவற்றைப் பாதுகாப்பதும், புனரமைப்பதும் தொடர்பான விழிப்புணர்வுச்செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தோம். 

ஊர்மக்களே தங்களுடைய ஊரில் உள்ள மரபுரிமைச் சின்னங்கள், சூழல் என்பவை தொடர்பில் அக்கறையுடன் இருப்பதும், கூட்டாக, அமைப்பாக இணைந்து கருமமாற்றுவதன் அவசியத்தையும் உணர வேண்டியவர்கள். ஏனெனில் சட்டங்கள் அளிக்கக்கூடிய பாதுகாப்பைக் காட்டிலும் சமூகச்சூழல் தங்களுடைய ‘உரித்துக்கள்’ தொடர்பில் அரசியல் மயப்பட்டிருத்தல் அவசியமாகும். எனவு அவ் உரித்துக்கள் பற்றிய அறிதல் மூலமே அரசியல் விழிப்புணர்வைக் கூட்டாக ஏற்படுத்தவும், அவ் உரித்துக்களில் காணப்படக்கூடிய தனியுடைமை, சாதிய அடையாளம், மதவாத அடையாளம் போன்றவற்றை விலக்கி அவற்றைக் கூட்டாகப் பாதுகாக்கவும் தலைமுறைகளுக்குக் கையளிக்கவும் வேண்டும். தமிழ்ச்சூழலில் காணப்படும் சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகள் நீர் நிலைகளை ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பயன்படுத்தவும், புழங்கவும் இன்றைக்கும் சில இடங்களில் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. குளங்கள், கிணறுகள், கேணிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் புழங்குவதற்கும் ‘நீர்’ யாவருக்குமானது என்பதை அடைவதற்குமான போராட்டங்களும் கதைகளும் அந்நீர் நிலைகளின் மரபுரிமை பற்றிய அறிதலோடு இணைத்துக் கடத்த வேண்டியவை. 

ஆறுகள், குளங்கள், கேணிகள், தரவைகள், கிணறுகள் போன்ற நீர்மூலங்களும் அவற்றைச்சுற்றியுள்ள மனதப்புழங்கு பண்பாடும் தொடர்ச்சியாக அழிக்கப்படவும் மாற்றியமைக்கப்படவும் செய்கின்றன. நீர் வாழ்வினுடைய அடிப்படை என்ற வகையில் சேமிக்கவும் மாசுபடுத்தாமலும் இருப்பதற்காகவும் மக்களிடையே போதுமான அளவு விழிப்புணர்வுடன் பகிரப்படவும் வேண்டும் என்றால் நீர் என்ற இயற்கை மரபுரிமையை வைத்திருக்கும், சூழ இருக்கும் அரசியல், பண்பாட்டுச்சூழல் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.

உசாத்துணைகள்.

கிருஷ்ணராஜா, செ. தொல்லியலும் வடமராட்சியின் பண்பாட்டுத்தொன்மையும். பிறைநிலா வெளியீட்டகம்.

குமுதா சோமசுந்தரக்குருக்கள். யாழ்ப்பாணத்துப்பண்பாட்டில் மடமும் மடக்கலையும், குமரன் புத்தக இல்லம்.

இந்திரபாலா கார்த்திகேசு. யாழ்ப்பாணத்தில் தொல்பொருளாராய்ச்சி, இளவேனில் (2ஆம் ஆண்டு மலர் ) 1970.

கிருஷ்ணராஜா, செ. இலங்கை வரலாறு பாகம் 1, பாகம் 2

இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், ஒரு இனக்குழுமம் ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம்.

புஸ்பரட்ணம், ப. தொல்லியல் நோக்கில் இலங்கைத்தமிழர் பண்பாடு. மணிமாறன், வி. வடமராட்சியில் அடையாளம் காணப்படும் மரபுரிமைச்சின்னங்கள்,  திருவுடையாள் பிரதேச மலர் (4), பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு

அகிலன்.பா, காலத்தின் விளிம்பு – யாழ்ப்பாணத்தி  மரபுரிமைகளும் அவற்றைப்பாதுகாத்தலும், பேறு வெளியீடு,2015.

.சிவசுப்பிரமணியன்.ஆ ,வரலாறும் வழக்காறும், காலச்சுவடுபதிப்பகம்,2008.

Pushparatnam.P, Tourism and monuments of archaeological heritage in northern srilanka. Dip.of history university of Jaffna,2014.

பக்தவதசலபாரதி,வரலாற்றுமானிடவியல்,அடையாளம் பதிப்பகம்,2013.

புஸ்பரட்ணம்.ப (தொகுப்பு), யாழ்ப்பாணவாழ்வியல், எக்ஸ்பிரஸ்நியூஸ்பேப்பர் வெளியீடு.2011.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’