அரசியலற்ற கலையை வணங்குதல் : கட்டட மரபுரிமைகளும் ஒடுக்குதல் வடிவங்களும்

 

மறைந்து போன அத்தனை தலைமுறைகளின் மரபுகளும், வாழ்ந்திருப்பவர்களின் மூளையை அழுத்திக்கொண்டிருக்கின்றன.
-கார்ல் மார்க்ஸ்

பொருட்களும் சேணங்களும் மனிதர்களைச் சவாரி செய்கின்றன.
-எமர்சன்

1

ஈழத்தில் காணப்படக்கூடிய கலாசார மரபுரிமைகளுக்குள் அதனுடைய கட்டடக்கலைகளும் கட்டட மரபும் பிடித்துக்கொள்கின்ற இடம் முக்கியமானது. ஒரு கட்டடத்தை; அது நிரப்பியுள்ள வெளியினதும், அதை சூழ்ந்துள்ள வெளியினதும் அக, புறவயமான வரலாற்றுப் பின் புலம் , சமூக அர்த்தப்பாடு, அழகியல் என்பவற்றைக்கொண்டு அவற்றை மரபுரிமைகளாகக் கருதுகின்றோம். ஆனால் பொதுப்புத்தியில், இக்கட்டடங்களை வாசிக்கும்போது நம்மிடம் அரசியல் மயமற்ற தன்மையினால் கட்டடங்களில் விரவியுள்ள பிற்போக்குத்தனங்களை, ஒடுக்கக்கூடிய வடிவங்களை அசட்டையாகக் கடந்துவிடுகிறோம். குறிப்பாக பொதுப்புத்தியில் பயிலப்படும் அவற்றின் வரலாறு, மரபுத்தன்மை, கலைத்தன்மை, அடையாளவுணர்ச்சி என்பன நம்மை அக்கட்டடத்தினதும் வெளியினதும் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு இடமழிக்காமல் வைத்திருக்கின்றன.

எனக்குப்பரிச்சமான சூழல் என்ற வகையில் இக்கட்டுரைக்குரிய உதாரணங்களை யாழ்ப்பாணத்தின் கட்டடங்களினதும் அவைசார் அரசியல், பொருளாதார , பண்பாட்டுச்சூழலில் இருந்தும் எடுக்க விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தில் காணப்படும் கட்டடங்களில் கோயில்கள், வளைவுகள் (தோரணங்கள்) , விகாரைகள், தேவாலயங்கள், கோட்டைகள், வீடுகள், மடங்கள், கேணிகள், குளங்கள், மதில்கள், படலை அமைப்புக்கள், திண்ணைகள், மண்டபங்கள், சிலைச்சூழல், பொதுக்கட்டடங்கள் போன்றவை முக்கியமானவை. இக் கட்டட அமைப்புகள் காலத்தினாலும் சமூக பயன்பெறுமதியினாலும், அரிதாக இருத்தலாலும் மரபுகள், அடையாளங்கள் போன்றவற்றுக்குள் வந்து சேர்கின்றன. ஆனால் அவை கொண்டிருந்த, கொண்டிருக்கின்ற ’ஒடுக்குதல்’ பொருட்பாட்டையும், நடைமுறையையும் அறியாமல் அவற்றை அடையாளப் பெருமிதங்களுக்குள் அடக்கி விடுகிறது சமூகப்பொதுப்புத்தியின் ஆபத்தைச் சமூகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

வரலாற்றுச்செய்திகள், மரபுகள், தொன்மங்களை சமூகப்பொதுப்புத்தி எதிர்கொள்ளும் விதம், ஆதிக்க வர்க்கத்தினால், மதத்தினால், சாதிய அமைப்புக்களால் , ஆண்களினால் ஒழுங்கு செய்யப்படும் சமூகஉளவியல் அடிப்படைகளைக் கொண்டவை என்பதை நாம் உணர வேண்டும். ஏனெனில் மரபுகளை, வரலாற்றை, அடையாளங்களை சமகாலத்தில் நின்று வாசிக்கும் போது இவ்வகையான பிற்போக்குத்தனங்களால் நிறுவப்பட்ட பொதுப்புத்தியின் கதைக்குள் எடுபடுவது மிகப்பெரிய ‘அரசியல் விழிப்புணர்வற்ற’ சமூக பிறழ்வென்றே கருத வேண்டியிருக்கிறது.

கட்டடங்களின் அரசியலைப் புரிந்து கொள்வதற்கு முடியாட்சிமுறை, வரலாறாகக் கருதப்படும் தொன்மம், காலனிய ஆதிக்கம், சாதி, மத ஒடுக்குமுறை போன்ற பிரச்சினைகளும் அயோக்கியத்தனங்களும் எப்படி கட்டட அமைப்புகளின் வரலாறு, மரபு, அடையாளம் மற்றும் அழகியல் நம்பிக்கைகளின் பின்னால் ஒழிந்துகொண்டிருக்கின்றன என்பதை இக்கட்டுரையில் விளக்க நினைக்கிறேன்.

2

தொன்மத்திற்கும் வரலாற்றுக்குமான குழப்பம் மரபுரிமைகளை வியாக்கியானப்படுத்துவதன் சிக்கலுக்குள் தொடர்ந்தும் இருந்துவருகின்றது. தொன்மம் வரலாறாகவோ, கட்டாயமாக உண்மையாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லாதது. வரலாற்றாய்வாளர் வேண்டிடோனிக்கர் ‘நாம் வரலாற்றையும் தொன்மத்தையும் ஒன்றையொன்று புரிந்து கொள்ள அவற்றை எப்படிப்பயன்படுத்துகிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு கதை உண்மையில்லை என்பதற்குப் பெரியளவில் சான்றுகள் இருந்தாலும் அதை நீண்டகாலமாக மக்கள் நம்பிவருகின்ற போது அது தொன்மமாக வரையறுக்கப்படலாம்’ என்கிறார். கட்டட மரபுகள் அதுசார்ந்து நம்பப்படும் தொன்மங்களை வரலாறாக அணுகும் போது அது ஆபத்தான சமூகப் பெருமிதங்களுக்குள்ளும், பகுத்தறிவுத்தன்மையற்ற பொதுப்புத்திக்குள்ளும் சென்று சேர்கிறது. உதாரணமாக யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் நிலாவரை என்ற இடத்தில் இருக்கும் ‘இயற்கைமரபுரிமையாகவும் தொல்லியல் சின்னமாகவும் கருதப்படும்’ பெரிய கிணறு அல்லது நீர் நிலையில் தேசிக்காய் ஒன்றைப்போட்டால் அது கீரிமலை கடல் கேணியில் சென்று மிதக்கும் என்றொரு தொன்மக் கதை- நம்பிக்கை இருந்துவருகின்றது. ஆனால் புவியியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாக அதில் உண்மைத்தன்மை கிடையாது. அதுபோல இலங்கையின் பல்வேறு இடங்களில் இருக்கின்ற காலடி போன்ற இயற்கை அமைப்பு சிவனுடையது, புத்தருடையது, அனுமாரினுடையது , சீதையினுடையது, இராமனுடையது என்ற தொன்மங்கள் நிலவுகின்றன, ஆனால் அவை வெறும் இயற்கை வார்ப்புக்களாகவும், தொன்மக் கதைகளாகவுமே உள்ளன. இவற்றை நாம் வரலாறாக வரன்முறைப்படுத்துவது முறையன்று. அடிப்படையில் வரலாறு சான்றாதாரங்களின் வழியாக, அறிவார்ந்த தர்க்கங்களின் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டிய உண்மைகளின் நிலவரத்தைக் கோருவது, எனவே தொன்மத்தினுடைய தன்மைகளையும் வரலாற்றின் தன்மைகளையும் வேறுபடுத்திப்புரிந்துகொள்ள வேண்டும். இதைப்போலத்தான் பல்வேறு கட்டட அமைப்புக்கள் மீதும் சொல்லப்படுகின்ற கதைகளை நாம் தொன்மாகவே வாசிக்கவும் அவற்றின் சமூக இருப்பை பார்க்கவும் வேண்டியிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் காலனிய காலத்தில் அமைக்கப்பட்ட, மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு தோரணவாயில் என்பன, யாழ்ப்பாணத்து மன்னர்களினுடையது என்ற பொது நம்பிக்கையும் கதைகளும் இருக்கின்றன. போலியான வரலாற்றுச்செய்திகளையும் தொன்மங்களையும் குழப்பும் போது அறியாமை தொடர்ச்சியாக வீண்ட் பெருமைகளையே சமூகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கின்றது. குறிப்பிட்ட ஓர் காலத்தின் அசலான வரலாற்று வாசிப்பை மறைத்து சமூகத்திற்குள் சிந்தனை வறட்சியை தொடர்ந்தும் பேணி வருகின்றது.

இன்றிருக்கும் மன்னர்களின் சிலைகள், அவையுள்ள சிலைச்சூழல்கள் வரலாற்று அடையாளமாக, கருதப்படுவதுடன் அம்மன்னர்கள் இப்பொழுதும் ‘வீர புருஷர்களாக’ கொண்டாடப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, வரலாற்றுச்செய்தியின் படி சங்கிலி மன்னன் தன்னுடைய எல்லைக்குள் இருந்த மன்னாரில் வசித்த மக்கள் கத்தோலிக்க சமயத்திற்கு மாறி விட்டார்கள் என்றதும் தானே நேரில் சென்று அறுநூறிற்கு மேற்பட்ட மக்களை தன் கையினால் வெட்டிக்கொன்றான் என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. சாதியால், வர்க்க அமைப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் ’புது மத்தத்தை’ தெரிவு செய்தார்கள் என்ற சமூக வரலாற்றின் கேள்வியில் தொடங்கி கொல்லப்பட்ட அம்மக்களில் இருந்தே நம்முடைய வரலாற்றைப் பார்க்கவும் எழுதவும் வேண்டிருக்கின்றது. ஆனால் ஒரு கொலைகார மன்னனுக்கு சிலையமைத்து வருடா வருடம் பிறந்த நாளும் திதியும் கொண்டாடி வருகின்ற போக்கை சமூக ஆபத்தாகப் பார்க்க வேண்டும். சிவ சேனை போன்ற இந்திய இந்துத்துவப்பயங்கரவாதத்தின் போசிப்பின் கீழ் இயங்கும் இப்படியான அமைப்புகள் சங்கிலியனைக் கொண்டாடிக்கொண்டிருப்பதன் ‘மதவாத அரசியலை’ நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அச்சிலை ஏந்தியிருக்கும் வாளில் ஒடுக்கப்பட்ட சனத்தின் இரத்தத்தையும், ஓலத்தையும் காண வேண்டும் இல்லையா?
சங்கிலி மட்டுமல்ல வரலாற்றின் எல்லா மன்னர்களும் ஒடுக்குமுறையின் பிரதான மையங்கள். இலங்கையில் சாதி, இராசகாரியம்,அடிமைமுறை, நிலமானியம், மதவாதம், இனவாதம், ஆணாதிக்கம் என எல்லா ஒடுக்குமுறையாளர்களாக இருந்தவர்களையே இதுவரைகாலமும் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட வரலாறு மன்னர்கள் என்றும் வீர புருசர்கள் என்றும் கொண்டாடி வந்துள்ளது. மனிதத்துவத்தை, சமதர்மத்தை, சுயமரியாதையை அடையும் பயணத்தில் இருக்கின்ற சமகாலம் இவ் வீண் பிரதாபங்களைக் களைந்து விட்டு மனிதர்களின் வரலாற்றைப் பார்க்க வேண்டும். மரபுகளை, மரபுரித்தாகக் கருதும் போது அவற்றின் பின்னுள்ள சமூக வரலாற்று ஒடுக்குமுறைகளைப் பேசியாகவேண்டும்.

பெளத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் உரித்துள்ள வெளிகளில் புத்தர் சிலைகளையும், புதுச்சைத்தியங்களையும் நிறுவதன் ஊடாக இன ஒடுக்குமுறைக்கு தீனி போடும் போது அவற்றை எதிர்க்கும் சிறுபான்மையினர் தங்களுடைய மரபுரிமைகளை அதற்குரிய எதிர்ப்பு வடிவமாகக் கையாள்கின்றார்கள். ஆனால் இருக்கின்ற மரபுரிமைகளை சரியாக வாசிக்கவோ ஆவணப்படுத்தவோ அக்கறையில்லாது, புதிய ‘கட்டடங்களை’ நிறுவுவதன் ஊடாக அவற்றுக்கு இன, மத அடையாளங்களை ‘செருக்காக’ வழங்குவதன் மூலம் பேரும்பான்மை ஒடுக்குமுறை சக்திகள் செய்யும் அதே வேலைகளையே திரும்பச்செய்கிறார்கள். இது பலம் கொண்ட அவ் அமைப்பின் ஒடுக்குமுறைக்கு உதவுமே தவிர அவ் ஒருக்குமுறைக்கு எதிரானதாக மாறப்போவதில்லை. திருட்டு ‘லிங்கங்களையும்’ அவற்றுக்கான ஆலயங்களயும் நிறுவுவது, அவற்றுக்கு வரலாற்றுச்சான்றோ பண்பாட்டு வளர்ச்சியோ அற்ற புராணத் தொன்மமான இராணவணின் பெயரை இடுவது போன்ற பிற்போக்கான செயற்பாடுகள் மூலம், இந்து அடையாளத்தை, மத வாதத்தை கொண்ட வெளியாக மாற்றுவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். யாழ்ப்பாணம் நாவற்குழியில் பேரின பெளத்தம், விகாரை ஒன்றை அமைக்கும் போது பக்கத்தில் நூறு லிங்கங்களைக் கொண்ட தனியார் ‘திருவாசக அரண்மனை’ ஒன்றையும், அக்கோயில் பரிபாலனத்தை சேர்ந்தவர்களே ‘சிவ பூமி அருங்காட்சியகம்’ ஒன்றையும் அமைப்பதும், அவ்விகாரை செய்கின்ற செயலுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதே உண்மை. இவ் திருவாசக ஆரண்மனையும் அருங்காட்சியகமும் இந்திய இந்துத்துவ பயங்கரவாதத்தின் முகவர்களாக மாறுவதும்தான் கள நிலமையாக இருக்கின்றது.

வடக்கைப்பொறுத்தவரை தேசிய தொல்பொருள் அரும்பொருட்சாலை, பழுத்த- சாதிய ஒடுக்குமுறையாளரான ஆறுமுகநாவலரின் வீட்டுச்சுவற்றின் அருகே ஒரு இருண்ட குகை போன்ற கட்டடத்தில் எந்தவித முறையான பாதுகாப்போ அருங்காட்சியக அழகியல் வெளியோ இன்றிக்கிடக்கின்றது. அதைக்கேட்பாரில்லை. இலங்கையில் இருக்கக் கூடிய அருங்காட்சியகங்களில் நான் பார்த்தமட்டில் மிக மோசமான அருங்காட்சியகம் யாழ்ப்பாணம் தொல்பொருள் அருங்காட்சியகமென்றுதான் சொல்வேன். தனியார் ‘மத அருங்காட்சியகங்களை’ அமைக்கும் பிறழ்வின் காலத்தில் அசலான வரலாற்றுச்சான்றுகள் மக்கி அழியும் துயரத்தை எதிர்கொண்டிருக்கின்றோம். அரும்பொருட்கள், தொல்பொருட்கள், மரபுரிமைகள் தனியாராக்கப்படுவது மத அடையாளங்களைப் பூணுவது சமூகத்தின் பேரழிவுக்கான முத்தாய்ப்பாகவே கருதவேண்டும்.

நிறுவனமயப்பட்ட பேரினவாத பெளத்த அடையாளங்கள் ஒடுக்குதலுக்கு வரும் போது, இந்து அடையாளங்களை, புதிய வரலாற்றை உருவாக்குவதாக நினைத்துக்கொண்டு அசலான வரலாற்று, மரபுரிமைச்சான்றுகளையும் அவை பற்றிய சிந்தனை பூர்வமான அறிவார்ந்த உரையாடல்களையும் தவிர்க்கிறோம். நாகதீபம், கந்தரோடை முதலானவற்றின் பண்பாட்டு இருப்பின் மீதும் உரித்தின் மீதும் பேரின நிறுவன மதமானது மேலாண்மையை எடுத்துக்கொள்ளும் போது நம்மால் நம்முடைய வரலாற்றைப் பேசக்கூடிய சான்றுகளையும், ஆவணங்களையும் சிந்தனையும் வைக்க முடியவில்லை. பல்கலைக்கழகங்கள் உறங்குநிலையில் இருந்து மீள்வதாயில்லை, ஆய்வாளர்கள் ‘பிரச்சினை’ இல்லாத வலயங்களுக்குள் நிலை எடுத்துக்கொள்கிறார்கள். மாற்றான, அறிவுபூர்வமான உரையாடல்களை இம்மரபுரிமைகள் மீது மேற்கொள்ள முடிவதில்லை. உதாரணத்திற்கு மேற்சொன்ன நாகதீபம், கந்தரோடை முதலான கட்டட மரபுரிமைகள் மீது பெரியளவில் தொன்மக்கதைகளும் சரி, வரலாற்றுச்சான்றுகளும் சரி விரவியிருக்க கூடிய ‘தமிழ் பெளத்தம்’ பற்றிய அறிவியல் பூர்வமான வரலாற்று உரையாடலை மேற்கொள்வதற்கு துறைசார்ந்த புலைமையாளர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? தனி நபர்களை விட்டுவிடுவோம் புலமை மரபின் மையமாக விளங்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் அசமத்துவமும் கள்ள மெளனமும் எத்தகையது? ஒரு பல்கலைக்கழகம் கட்டடமாக இருப்பதற்கும் கலைக்கூடமாக இருப்பதற்குமான இடைவெளியில் பல்கலைக்கழகங்கள் எங்கே நிற்கின்றன?
இங்கே வரலாறு, தொல்லியல், மரபுரிமை பற்றிய வாசிப்பும் செயற்பாடும் குறைவாகவே நிகழ்கின்றன. அவற்றில் இருக்க கூடிய மிகப்பெரிய பலவீனம் அவை கொண்டிருக்கக் கூடிய அரசியலற்ற தன்மையாகும். மரபுரிமைகளின் , தொல்லியல் சான்றுகளின் அரசியலைப் பேசுவதில் இருந்து பெரும்பாலும் தப்பிச்செல்கின்றன.கட்டடங்களோ இதர காண்பிய கலைகளோ, மரபுரிமைகளோ கொண்டுள்ள மதவாதம், சாதிய அசமத்துவம் போன்றவற்றைத் தவிர்க்கும் ‘அரசியல் மயமற்ற’ தன்மையே புலமைத்துவ வெளியில் காணப்படும் போது சாதாரணமக்களின் பொதுப்புத்தியை அரசியல் மயப்படுத்தலுக்கு எடுத்த வரக்கூடிய தூரத்தையும் இடர்களையும் உள்ளுணர முடிகிறது இல்லையா? கலை கலைக்கானது, கலையை நோக்கியே மக்கள் வரவேண்டும் என்ற சென்ற நூற்றாண்டிலே முடிந்துவிட்ட விவாதங்களின் கட்டடங்களில் இருந்து புலைமைத்துவம் வெளியேற வேண்டும்.


3

தொன்மம், மத நிறுவனங்கள் கொண்டுள்ள கட்டடங்கள் மீதான மேலாதிக்கத்தைப்போலவே ‘சாதியச் சமூகம்’ கொண்டுள்ள ஆதிக்கத்தையும் உருவாக்கி விட்டுள்ள பொதுப்புத்தி ஆபத்துக்களையும் தனித்து உரையாட வேண்டும்.
இலங்கையில் சமூகப் பங்குபற்றல் செறிவாக இருக்கக்கூடிய சமூக நிறுவனங்களாக ஆலயங்கள், தேவாலயங்கள், விகாரைகளைக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக ஆகம மயமாக்கப்பட்ட பாரியதும் சிறியதுமான பழைய இந்துக் கோயில்கள், காலனிய காலத்தைச்சேர்ந்த தேவாலயங்கள், பழைய விகாரங்கள் என்று மதசார்புத்தன்மை நீக்கப்படாத ஏராளமான கட்டட மரபுரிமைகள் காணப்படுகின்றன.

இங்கே மத மையத்தோடு இணைந்து ‘சாதியும்’ பின்னியுள்ளதை அவற்றின் வரலாறு, அழகியலின் பின்னால் மறைத்துவிட முடியாது. அசலான பெளத்த நெறி சாதியத்தை ஏற்காத ஒன்று, ஆனால் நிறுவனமான இலங்கை பெளத்தம் ‘ஆரிய நம்பிக்கைகளால்- ஒடுக்கும் அரசவைப் பண்பாட்டுப்பகைப்புலத்தால்’ பெரிதும் கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. அதனுடைய இதயம் எடுத்துவரும் போதே நிறுவனப்படுத்தப்பட்டு அரசரிடமிருந்து அரசருக்கு கையளிக்கப்பட்டது. அதனிடம் சிங்கள மக்களிடையே இருக்க கூடிய சாதிய தன்மைகள் வரலாற்றுக்காலமெங்கும் இருந்து வந்துள்ளதை மனம் கொள்ள வேண்டும். உதாரணமாக பெளத்த மத உயர் பீடமான ‘மாக நாயக்கராக’ வரக்கூடிய தகுதி ‘கொய்கம’ சாதியைச்சேர்ந்த பெளத்தர்களுக்கு மட்டுமே உண்டு. ஆகவே பெளத்த மக்களின் வாழ்க்கை முறைக்குள் அவர்களின் கட்டட அமைப்புக்குள் வர்க்கம், சாதி என்பன புரையோடி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் மத நிறுவனங்கள் பெரும்பாலும் நிறுவன மயப்பட்ட, வர்க்க நலன்களை, சாதிய நலன்களைப் பேணுவதைக் கொண்டவையே தவிர அவை மக்கள் மைய நிலை அமைப்புக்கள் அல்ல.

கத்தோலிக்கம், சாதியத்தை ஆதரிக்காத மூல நூல்களால் வழிநடத்தப்பட்ட ஒன்று ஆனால் இந்திய, இலங்கைச் சூழமைவில் காலனியர்கள் மதங்களை நிறுவும் போது சாதியைப் பயன்படுத்துக்கொண்டதோடு அங்கிருந்த ஆதிக்க சாதி மனநிலை கத்தோலிக்கர்களுக்கு இருந்து வந்துள்ளது. இப்பொழுதும் இருக்கின்றது. முன்பு யாழ்ப்பாணத்தில் இந்துக்கோயில்களைப்போலவே கத்தோலிக்க தேவாலயங்களில் தாழ்த்தப்பட்டவர்களை பகுத்து – விலக்கு கட்டடங்களின் தூண்களுக்கு இடையே கயிறு கட்டப்பட்டு பிரிக்கப்பட்ட தகவல்களை சான்றுகளின் ஊடாகப் பெறுகின்றோம், பங்குக்கோயில்கள், பிரதேச தேவாலயங்களில் இன்றும் சாதிய பாகுபாடு கட்டடங்களுக்குள் மக்களை ஒழுங்குபடுத்துவதுகின்றது. பல தேவாலயங்கள் , இந்துக்கோயில்களின் கட்டடங்களின் உப பிரிவுகள் அமைப்பு சாதிய ஒழுங்குபடுத்தல்களை கையாள்வதனை மனம் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதனை காணலாம். கத்தோலிக்க வெள்ளாள தன்மை இன்றும் யாழ்ப்பாணத்திருச்சபைக்குள் நன்கு விரவிப்புரயோடிப்போயிருக்கின்றது. அதிகமாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சென்று மதத்தைப் பரப்பிய யாழ்ப்பாணக் கத்தோலிக்கத் திருச்சபையில் இன்று வரை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எவர் ஒருத்தரும் ‘பிஷப்பாக’ வந்ததில்லை என்பது சாதாரணமானதல்லவே?

இந்து ஆலய மரபில், வைதீக அல்லது சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட பெருந்தெய்வக் கோயில்கள் என்று சொல்லப்படுகின்ற கோயில்களில் பிராமணர்களும், சைவக் குருக்களும் மட்டும் போகக் கூடிய தொடக்கூடிய நிலமைகளால் ஒழுங்கமைக்கப்பட்டதை நன்கறிவோம். ஆனால் நாட்டுப்புற வழிபாட்டில் மதச்சார்பற்ற எல்லோரும் தொட்டு வணங்கக் கூடிய தெய்வங்கள் பெரிய கட்டடங்கள் அற்ற திண்ணை, மேடை , அல்லது சிறு வரி கட்டப்பட்ட மரங்களுக்கு கீழே இருக்கும் வெளியை ஏற்படுத்திக்கொள்கின்றன. பொதுவாக கட்டடங்களோ விதானங்களோ கோபுரங்களோ, காலனியப் பார்வை கொண்ட கலைவரலாற்றினால் கலைகள் என்று கொண்டாடப்படுகின்றது. ஆனால் பெரும் வெளியை நிறைத்த கட்டடங்கள் உள்ள அமைப்பு, சாதியைப் பாதுகாக்கவும் கட்டங்கள் குறைந்து வெளி அதிகமாக உள்ள அமைப்பு சாதியற்ற பாகுபாடற்ற வெளியைக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டியது.
கோயில் அமைப்பிற்கு அடுத்தபடியாக மடங்கள், அல்லது அம்பலங்கள் முக்கிய பெறுகின்றன. மரபுரித்துகளாக கருதப்பட வேண்டிய தன்மையினையும் வரலாற்று பின்புலத்தையும் சமூகப்பங்குபற்றலையும் கொண்டிருக்கின்றன. வடக்கில் மடக்கலையும் பண்பாடும் முக்கியமான பண்பாட்டு இருப்பாக கருத வேண்டியனவைதான். தெருமூடி மடம் முதலான பிற இடங்களில் இல்லாத மடப்பண்பாடும் அமைப்பும் ஈழத்தின் வடக்கில் பரவலாக இன்றும் நிலைத்திருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் மடங்கள் அமைக்கப்பட்டதன் பின்னால் உள்ள சாதிய மனநிலையை, குறிப்பாக ஆறுமுக நாவலர் போன்ற சாதியக் கருத்தின் தலைமைப்பீடங்கள் மடங்களைக்கொண்டு கையாண்ட தந்திரங்களையும் அறிந்துகொண்டே மடங்களை வாசித்துச்செல்ல வேண்டும்.

காலனிய காலத்தில் சுதேச மதங்களை ஐரோப்பிய மதப்பிரச்சாரங்களில் இருந்து பாதுகாப்பதற்கு ‘சைவ’ பிரச்சாரகர்கள் மதப்பிரசங்கம் செய்வதற்கான வெளி அவசியமாயிருந்தது. கோயில்களுக்குள் ‘பார்க்கக்கூடாத’ “தீண்டத்தகாத” மக்களை வரவழைக்க விரும்பாத சாதிய மான்கள் மடங்களை அமைப்பதன் ஊடாகவும் புதுப்பிப்பதன் ஊடாகவும் ஆலயத்துக்கு வெளியே மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்ய மடங்களைப்பயன்படுத்தினார்கள்யாழ்ப்பாணத்தில் கீரிமலை சிறாப்பர் மடம் பிரபலமாகவிருந்த மடங்களில் ஒன்று. அம்மடத்தின் வாசலில் பின்வரும் குறிப்பு இருக்கிறது.

“இம்மடத்தில் சைவ சமயிகள் அல்லாத பிற மதத்தவர்கள் தாக சாந்தி செய்யலாகாது, வசிப்பதற்கு இடங்கொடலாகாது, கட்டிடத்தின் உள்ளாக மாமிசம் புசித்தல், அசூசைப்படுத்துதல், சுருட்டுப் புகைத்தல் ஆகாது, போசனம் செய்பவர்கள் எச்சிமாற்றி போகவேண்டியது, வசிப்பவர்கள் சமாதானமாகவிருந்து போகவேண்டியது….”

என்று இக்குறிப்பு தொடர்ந்து செல்லும்.இங்கே வெளிப்படையாகப் பார்த்தால் சமயம் சார்பானவர்களை மட்டும் குறிப்பதாக இவ்வறிவுறுத்தல் தெரியும் . ஆனால் இது சாதிய கையாள்கையுடன் தொடர்பு பெற்ற ஒன்றாக இருக்கிறது. எப்படியெனில் காலனிய காலத்தில் ஐரோப்பிய மதப் பிரசாரகாரர்கள் ஈழத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் சென்றே அவர்களை தமது சமயங்களைப் பின்பற்ற ஆற்றுப்படுத்தினர். அதனால் அக்காலத்தில் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே கத்தோலிக்கத்தைப் பின்பற்றினார்கள். எனவே பிற சமயத்தவர் என்று குறிப்பிடுவதன் உள்ளார்ந்த நோக்கம் சில மடங்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளெடுக்கக் கூடாது என்பதனாலேயே ஆகும். அவை பெரும்பாலும் கோவில் சார்ந்த மடங்களாக இருந்துள்ளன. ஆறுமுக நாவலர் போன்ற மேட்டுக்குடியினர், சாதியமான்கள் ஐரோப்பிய கத்தோலிக்கர்களுடன் அன்பு பாராட்டினாலும் சாதிய அடிப்படையில், மதம் மாறிவர்களைச் சாதிய நடைமுறைகளின் பொருட்டு நுட்பமாகவும் திட்டமிட்டும் கையாண்டிருக்கிறார்கள்.

கட்டட மரபில் , வீடமைப்பும் அதன் உப அமைப்புகளும் சாதிய நிலைகளைக் கையாள்வதில் தன்னுடைய வெளியை ஒழுங்கமைக்கும் சாதிய அரசியலைக் கொண்டிருந்தது. வரலாற்றில் யாரெல்லாம் நிலத்தை, ’கட்டிய’ வீட்டைச் சொத்தாகக் கொண்டிருக்க கூடிய உரித்தைப் பெற்றார்கள் என்பதில் தொடங்கி நாம் வீடுகளை அமைப்பதன் சாதிய, வர்க்க ஒடுக்குதலையும் ஒடுக்கப்படுதலையும் நன்கறிந்து கொள்கிறோம். வெள்ளாளரின், பிராமணரின் வீடுகளுக்குள் செல்ல, வீடுகளின் எந்தெந்தப் பகுதிகளுக்குள் செல்ல எவ் எவ் சாதியினர் அனுமதிக்கப்பட்டனர் என்ற ஒழுங்கு முக்கியமானது. தீட்டு (துடக்கு) , சடங்கு போன்றவை இங்கே செல்வாக்குடன் இருந்தன. இடைநிலைச்சாதியைச்சேர்ந்த கோவியர் வெள்ளாளர்களின் சமையலறைக்குள் அனுமதிக்கப்பட்டனர், தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த வண்ணார், முடிதிருத்துபவர்கள், முற்றம் வரையும் வீட்டின் வாசல் வரையும் அவர்களின் தொழில் நிமிர்த்தம் ஆதிக்க சாதியினரால் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் நடை முறை சடங்கு என்பவற்றின் ஊடாகவும் கட்ட அமைப்புக்களில் திண்ணை, தலைவாசல் போன்ற வீட்டோடு இணைந்த அமைப்புக்களாலும் கட்டுப்படுத்தினர். இதைப்போல பிராமணர்கள் தூய்மைப்படுத்தல் வேலைகளைச் செய்வதற்காக (சபிண்டீகரம்) யாழ்பாண ஆதிக்க சாதிய வீடுகளில் அமைக்கப்பட்ட ’சவுக்கண்டி’ என்ற அமைப்பும் கட்டட அமைப்பின் சாதிய நிலைமையினதுடையதாகும். அதே போல யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சாதி வீடுகளில் இன்றும் ’சங்கடப்படலை’ என்ற அமைப்பு வீட்டு மதிலின் நுழைவு வாசலில் சிறிய விதானத்துடன் அமைக்கப்பட்டு திண்ணையும் வைக்கப்படும். இவ் அமைப்பு தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்கள் நிற்பதற்காக ஆதிக்க சாதியினர் அமைத்திருந்த கட்டட அமைப்பாகும்.


இவை தவிர பொதுக்கிணறுகள், கேணிகள் சாதிய நிலமை செறிந்திருந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மூடியிருந்தன. குளங்கள், துரவுகள் சாதிப்பெயர்களால் பெயரிட்டு அழைக்கப்பட்டன. மயானங்கள் சாதி மயானங்களாகவே இன்னும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அண்மையில் நடந்த ‘புத்தூர்’ கிராமத்தின் மயானப்போராட்டம் மிகக் கிட்டிய சாட்சிகளில் ஒன்று. இன்று புதிய கட்டட அமைப்புக்களை அமைக்கின்றோம். கோயில்களில் பிரமாண்டமான கோபுரங்கள், விதானங்கள், மதில்கள்,வளைவுகளை நிறுவுகிறோம், பெருமளவு செல்வம் தனியாரிடம் அல்லது அறங்காவலர் சபைகளிடம் குவிகிறது. அதைப்போல ஆலயப்பாணியை கொண்ட வீதி வளைவுகளும் பலலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. மன்னர் காலத்தில் பிரமாண்டமான கோயில்கள் வளைவுகள் தோரணங்கள் அமைக்கப்பட்டதன் அதே மனநிலை கோயில்களுக்கு இப்போதும் இருப்பது ஒரு பெரிய சமூக அநீதி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மன்னன் தன்னுடைய ஆட்சிச்செருக்கையும் வரிப்பணத்தையும், பிற தேசங்களில் கொள்ளையிட்ட கப்பமாகப்பெற்ற செல்வத்தையும் அடிமைகளாக வைத்திருந்த, பிடித்துவரப்பட்ட மக்களையும் கொண்டு இப்பெரிய கட்டடங்களை அமைக்கிறான். உலகம் முழுவதுமுள்ள இன்று கலைப்பொக்கிசங்களாக, மரபுரிமைகளாக உள்ள கட்டட அமைப்புகளில் பெரும்பாலானவை சாதாரண மக்களின் உழைப்பையும், வாழ்கையையும் சுரண்டியும் பலியிட்டும் எழுப்பப்பட்டவை. முடியாட்சிகளுக்கு எதிரான புரட்சிகளும், சிந்தனை மாற்றங்களும் நிகழ்ந்து இன்று சனநாயகத்தை நோக்கி மானுட சமூக வந்து சேர்ந்துள்ள பயணம் சாதாரணமானதல்ல. இலங்கையில் முடியாட்சியும், இராசகாரியமும் ஒழிக்கப்பட்டு நூற்றாண்டு கடக்கப்போகிறது. ஆனால் ஆலயங்களையும் கோட்டை கொத்தளங்களையும் அமைக்கும் மனநிலை வேறுவடிவங்களில் திரண்டெழுந்துவருகின்றது. வைதீக முறைக்கோயில்கள் தங்களை ஒரு அரசபீடமாகவே எழுப்ப நினைக்கின்றன. பகிரப்பட வேண்டிய மக்களின் செல்வத்தை கடவுளின் பெயரால் ஒரிடத்தில் குவிக்கின்றன. நீருக்கும் உணவுக்கும் அடிப்படைத்தேவைகளுக்கும் அல்லல் படும் மக்கள் அண்ணார்ந்து பார்க்கதக்க பெரிய கோபுரங்களும் தோரணங்களும் எழுகின்றன. கலைவரலாற்றாய்வாளர்கள் உட்பட அனைவரும் அவற்றைக் கலைப்படைப்புகளாக கொண்டாடுகின்றனர். அவற்றை அடையாளமாக, வரலாறாக, மரபுரிமையாக கருத வேண்டிய தங்களுக்கு இயைபான சாதிய, மத நடைமுறைகளை, முடியாட்சி மனநிலையைப் பாதுகாக்க கூடிய அமைப்பிற்கு ’கலைகளை’ சாட்சியாக மாற்றுகின்றனர். வரலாற்றைக் காவல் வைக்கின்றனர். மரபுரிமையாக பிரகடனம் செய்கின்றனர். இவற்றை நம்பும்படி மக்களை சிந்திக்காது அரசியல் மயப்படாது வைத்திருக்கும் எல்லா உபாயங்களையும் சமூகத்திற்கு அவிழ்த்து விடுகின்றனர்.

போர்க்காலத்தைக் கடந்து வந்த நிலம் என்ற வகையில் வரைபடத்தில் இருந்த பெருமளவு கட்டட நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மிகுதி இருப்பவை முறையற்ற புனருத்தாரணம் செய்யப்பட்டு அவற்றின் தொல்லியல், அழகியலோடு மரபுரிமைத் தன்மையும் வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலைப்புரிந்துகொண்டே நாம் மரபுரிமைகள் மீதான, குறிப்பாக கட்டட மரபுரிமைகள் மீதான கவனத்தை ஏற்படுத்த வேண்டும். புனரமைத்தல், நிர்மாணித்தலோடு பேணுதலின் ஆவணப்படுத்தலின், அவற்றை மக்கள் மயப்படுத்தலின் விரிவான உரையாடல்கள் மீது ‘அரசியல் மயப்பட்ட’ பார்வையையும் செயலையும் ஒழுங்கமைக்க வேண்டும். கட்டடங்கள் உயருவதோ பரவுவதோ மக்கள் மயப்பட்டதாக இருக்க வேண்டும், பணமுள்ள, அதிகாரமுள்ள தரப்புக்களின் ’மெத்தித் தடவிய சந்தனமாக’ இருக்கக் கூடிய கட்டட அமைப்புக்கள் சமூகத்தின் உடல் மீது எழக்கூடிய விசக்கட்டிகளாகும். கட்டட அமைப்புக்களையும் அவை நிற்கும் வெளியையும் அரசியல் அற்றுப்பார்க்கின்ற, கொண்டாடுகின்ற அபாயம் தொடர்ச்சியாக நிகழ்வதனால் அவை தாங்கி நிற்கக்கூடிய அவற்றின் அழகியல், வரலாற்றுக்காலப்பெறுமானத்தின் பின்னால் ஒழிந்திருக்க கூடிய மத, சாதிய அடையாளங்களை, கருத்தை களைவதற்கு ஒவ்வொரு கட்டடத்தின் காலம், ஊடகம், கலைப்பாணி, அமைத்தவர், அமைப்பித்தவர் என்பவற்றோடு அவற்றின் சமூக வரலாற்றினை, அவற்றின் அரசியலையும் சேர்த்தே உரையாடவோ கற்பிக்கவோ தலைமுறைகளுக்கு கடத்த வேண்டும். வரலாற்றை, மரபுரிமைகளை வாசிக்கும் சரியான முறையும் அதுவே. புதிய கட்டட அமைப்புக்கள் தேவையா? அவற்றின் சமூகப் பயன் பெறுமதி என்ன? அவற்றின் அசலான கலைத்தன்மை என்ன? அரசியலற்ற அல்லது அரசியல் நீக்கப்பட்ட கலை என்பது ஓர் சமூகப்புரட்டாகத்தான் இருக்க முடியும். அது மக்களின் மரபுரிமையாக கருதப்பட வேண்டுமா? நிலைக்க வேண்டுமா என்பது தொடர்பில் விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பெருங் கோபுரத்தைக் கடந்து செல்லும் போதும், தலைக்குக் கையெடுத்துக் கும்பிடும் போதும், மதத்தால், சாதியால், வர்க்கங்களினால் ஒடுக்கப்பட்டவர்களின், தலைமுறைகளின் உழைப்பும், குருதியும் ஒலமும் நம்மை அச்சப்படுத்த வேண்டும்.

-யதார்த்தன்

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’