போர்த் தெய்வம் | காளம் 12
ஆழமா வானமா என்று அறியாத இடம். எங்கே கிடக்கிறோம் என்ற உணர்வற்று கண்களைக் கசக்கிய போது ஒவ்வொரு இழையாக அவிழ்ந்து புலர்ந்து கொண்டிருந்தது காலை. மழை பெய்து நான்கு நாட்கள் கூட ஆகியிருக்காது நிலம் சூழையில் வைத்து எடுத்தது போல் காய்ந்து கிடந்தது. கூடாரங்களுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த சற்று தடித்த தறப்பாளின் கீழே நீரோடியதில் உண்டான நில வடுக்கள் அப்படியே இறுகியிருந்தன. அதில் சில குறு மேடுகள் முதுகை அண்டிக் கொண்டிருந்ததை உணர்ந்தான் தாலிக்கொடி. இரவு முழுவதும் அப்படியே கிடந்ததில் அவ்விடங்களில் லேசான பிடிப்பும் நோவும் தெரிந்தது. வெளியில் சனச் சந்தடிகள் தெரிந்தன. முகாம் எல்லைகளில் இருந்த கூடாரங்கள் கைவிடப்பட்டவை. ஆற்றுக்கும் காட்டுக்கும் அருகில் இருப்பதால் இரவில் பாம்புகளும் விசப்பூச்சிகளும் தற்ப்பாளின் அடியில் நெழிந்து செல்லும். எட்ட இருந்த பிளாக்குகளில் உறவு இணைப்பில் சென்ற குடும்பங்கள் விட்டுச்சென்ற கூடாரங்களுக்கு அங்கிருந்த குடும்பங்கள் இடம்மாறிச் சென்றனர். பின், அவ் எல்லைக் கூடாரங்கள் இரவில் ஆண்களும் பெண்களும் களியாடும் இரகசியங்கள் கவிந்த இடங்களாக மாறத் தொடங்கியிருந்தன. தாலிக்கொடி இப்போதெல்லாம் இக்கூடாரங்களில் தான் பெரும்பாலும் உறங்கினான். இவனாக வந்தானா புதுச் சகாக்கள் கொண்டு வந்து வளர்த்திவிட்டுப் போனார்களா என்று தெரியவில்லை. இரவும் குடித்திருக்கக் கூடாது என்ற நினைப்பு அடி நாக்கில் கைத்தது. நுள்ளானோ, அமலாவோ அறிந்தால் அவ்வளவுதான். அடி வயிற்றில் தொடங்கி நெஞ்சு வரை எரிந்துகொண்டிருந்தது. குற்றவுணர்விற்கு இனிக் காலம் முழுக்க கசிப்பின் மறு நாள் நெடிதான் இருக்கப் போகிறது. அம்மா இல்லாமல் போன பிறகுதான் யாரோடேனும் பொருந்திக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. தாங்க முடியாமல், அவளுக்கென்று கெவ்வி இன்னும் அழாமல் அலைந்து கொண்டிருப்பவன். அமலாவுடனும் , நுள்ளானுடனும் ஒட்டிக் கொண்டிருப்பது மட்டும்தான் வீடொன்று உள்ளதென்ற உணர்வைத் தந்தது.
அம்மா மிகவும் மெல்லியவள், சிறுபிராயம் முதலே விரதங்களும் நேர்சைகளும் இருந்து, மாமிசத்தைத் தவிர்த்து வந்தவள். ஒட்டியுலர்ந்த தேகம். இவன் வளரும் போதே , அவளுடைய முதுமையின் கூன் மெல்ல விழத் தொடங்கியிருந்தது. இவனோடு பனிக்குடம் இனித்தாங்காது என்று பிரசவ நேரத்திலேயே அகற்றிவிட்டனர் என்று ஒரு முறை சொல்லியிருந்தாள். எந்தத் தெய்வத்தின் முன்னாலும் நெட்டுருகி அழுபவள். அவளுடைய கண்ணீர் அவளுக்கு ஆழத்தை அளித்தது. கச இருட்டில் வாழும் தெய்வங்களைக் காணும் ஆழம். கோவில் பிரகாரங்களில் இவனை தூணோடு அருகமர்த்தி விட்டு அவள் பாடும் பதிகங்களைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தவன் தாலிக்கொடி. கூப்பிய கரமெனும் நீள் தாமரையின் விரலிதழ்கள் நடுங்க, கண் குழிக்குள் ஆழ்ந்து சொருக , உதடுகள் நடுங்க, உடல் ஊஞ்சலென மெல்ல முன்னும் பின்னும் அசைய, பதிகத்தின் உச்சமான கணம் ஒன்றில் மூடிய கண்களின் இமைப்பீலிகள் கசிந்து கன்னங்களில் வழியும். எரிதலும் உருகுதலுமே அவள் வழி. கண்ணீர் அவளுடைய அவிசு. தெய்வங்களை நெருங்கிச்செல்லும் அன்னையருக்கு கொடுக்கப்படுவது அதுதான் போலும். தெய்வத்திற்குப் பிறகு அவள் முழு உடலாலும் பதறி அழுவது இவனுக்கேதும் நேரும் போதுதான். அவளுடைய முதல் மகாஅழுகையை நினைவில் கொண்டு வந்தான்.அவள் நெஞ்சிலடித்துக்கொள்வது போலவும் அழுவது போலவும் காட்சியெழுந்தது. ஒருவகையில் அவளுடைய தண்டனை முறையும் அதுவே. அழுவாள், தன்னைத்தானே அறைந்து கொள்வாள். அவள் சொற்கள் அசலான இடங்களில் சென்று சுடும். அவளுடன் முதல் முறை சேர்ந்து அழுத போதுதான் கண்ணீரின் அமிலம் நெஞ்சை அறிந்தது.
`ஆமியும் இயக்கமும்` எல்லா ஊர்களிலும் பிரபலமான விளையாட்டு. இரண்டு `கன்னைகள்` சேர்த்துக்கொண்டு சண்டையிடுவது. ஒரு பக்கம் ஆமிக்காரர் இன்னொருபக்கம் விடுதலைப்புலிகள். ரப்பர் குண்டுகளை உமிழக் கூடிய விளையாட்டுத் துப்பாக்கிகள், மணல் கட்டிகள் கொண்டு இருபக்கமும் தாக்கிக் கொள்வார்கள். ஊரில் மாரி தொடங்கும் நேரத்தில் முன் மழை பெய்த பிறகு வயல்களில் ஏர் இறக்கி உழுவார்கள் , அப்பொழுது எழும் பெரிய மணல் கட்டிகளை அடுக்கி சிறுவர்கள் காவலரண்களை அமைப்பார்கள். தாலிக்கொடி பிறக்கும் போதே நொஞ்சானாக இருந்தான். எடை குறைவாக இருப்பதால் கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருந்ததாக அம்மா சொல்வாள். போதாதற்கு பிறந்த சில நாட்களில் அவனுக்கு மஞ்சள் காமாலை வந்து போனது. வைத்தியர்கள் அவன் பிழைத்தது அதிசயம் என்றே சொன்னார்களாம். அதைச் சொன்ன போது அம்மா அவர்களைப் பார்த்து கண் முட்டிக்கொண்டே சிரித்ததை அவர்கள் விசித்திரமாகப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் முகத்தை அம்மா நெடுநாள் ஞாபகம் வைத்திருந்தாள். தாலிக்கொடி பலவீனமான தோற்றம் உடையவன் என்றாலும் அவனுடைய முரட்டுத்தனத்தை அவர்கள் அறியாமலில்லை. அம்மா அவனுக்கு கொடுத்த `செல்லம்` அவன் எவ்வளவு உடலால் நலிந்தவனோ அவ்வளவு உள்ளினால் கோபமும், முரடும் பெற்று வளர்ந்திருந்தான். அவனுடைய உடலின் நலிவினால் விளையாட்டில் அவன் தோற்கின்ற `கன்னைக்கு` அனுப்பப் படுவான். தாலிக்கொடி எப்பொழுதும் தன் வயதுக்காரர்களுடன் சேருவதில்லை. அவர்கள் அவனுக்குச் சலிப்பானவர்கள். தன்னை விட இரண்டு மூன்று வயது மூத்த சிறுவர்களுடன் ஒட்டிக்கொள்வான். அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டியதுதான். எப்பொழுதும் அவன் ஆமிக்காரர்களின் பக்கம் தள்ளி விடப்பட்டான். அந்த வயல் களத்தில் சொல்லப்படாத விதி ஒன்றிருந்தது. ஆமிக்காரர்கள் தோற்றே ஆகவேண்டும். எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக விளையாடினாலும், பெரிய காவலரண்களை அமைத்துக்கொண்டு துல்லியமாக மணல் கட்டிகளை இயக்கத்தை நோக்கி எறிந்தாலும் இறுதியில் ஆமிக்காரர்கள் தோற்றாக வேண்டும். மணற்கட்டிகள் பட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வரம்புகளிற்குத் திரும்ப வேண்டும். நடுவர்களாக சிலர் அந்தப் போரை விபரித்தபடி அடிவாங்கியோரைப் பக்க வாட்டில் நின்று கவனிப்பர்.
அன்றைக்கு ஆமிக்காரர் பக்கத்தின் கை ஓங்கியிருந்தது, ஆனால் முடிவில் இவர்களாகவே சென்று மணல் கட்டிகளை உடலில் வாங்கிக்கொண்டு காவலரணை விட்டு வெளியேறிச் சென்றனர். தாலிக்கொடி மட்டும் தனியே பதுங்கியிருந்தான். இவனுடைய அணியினர் தாலிக்கொடியை வெளியே வந்து சாகும் படி கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். மூச்சு இரைக்க அவன் காவலரணின் பின்னால் நிலையெடுத்திருந்தான்.
அவனுள் அன்றைக்கு வயலில் அலைந்த துடித்தெய்வமொன்று இறங்கியிருந்தது. கையிலும், பொக்கட்டுகளிலும் தேர்ந்தெடுத்த மணல் கட்டிகள் இருந்தன. அவனால் இன்னும் கொஞ்ச நேரம் தாக்குப்பிடிக்க முடியும், அன்றைக்கு நெஞ்சில் ஓர் புதுச்சொல் மிதந்து எழுந்தது. இதுவரை தரப்படாத ஒன்றைப் பெறத்தயாராகும் படி அவனுள் இறங்கிய தெய்வம் சொல்லியிருந்தது. இரண்டு முறை எழுந்து அவர்களுக்கு `போக்கு` காட்டினான். அங்கிருந்து கோபமான மண்கட்டிகள் வந்து அரணில் மோதிச் சிதறின. எட்டி இயக்கத்தின் பக்கமிருந்த தரப்புகளின் நிலைகளை ஒவ்வொன்றாக அறிந்தான். எப்படி எறிந்து அவர்களைத் தாக்குவது என்று திட்டமிட்டான். எழுந்து ஆவேசமாக கட்டிகளை வீசினான். மூன்றில் ஒன்று துல்லியமாகத் தாக்கியது. அவனில் அப்படியொரு குறிச்சூட்டாளனை அவர்கள் கண்டதில்லை. ஒவ்வொருவராக வெளியேற அரணில் பதுங்க்கொண்டு அவர்கள் அறியும்படி பெரிய்தாகச் சிரித்து அவர்களைச் சீண்டி நிதானமிழக்கச் செய்தான். அவனை பிறனென்று கருதிக்கொண்டு அவன் மேல் ஆவேசமெழ அவர்கள் மண்கட்டிகளை வீசினார்கள். இயக்கத்தின் பக்கம், ஒவ்வொருத்தராக மண்கட்டி பட்டு வெளியேறி வரம்புகளில் ஏறிநின்றனர். தனி ஒருவனாக தாலிக்கொடி அவர்களைத் தாக்கிக்கொண்டிருந்தான். அவனை எந்த மண்கட்டியும் அணுகாத படிக்கு பாய்ந்து சுழன்று, பதுங்கி, தேர்ந்த பயிற்சிபெற்ற ஆமிக்காரனைப்போலப் போரிட்டான். வெளியேறியவர்கள் தரப்பில் இருந்து தோற்கச்சொல்லி கூச்சல்கள் எழுந்தன. இவன் கேட்டானில்லை.பதுங்கியிருந்து கட்டிகளை வீசிக்கொண்டிருந்தான். அவர்கள் சீழ்காய் அடித்து இவனைத் `துரோகி துரோகி` என்று கேலிசெய்தனர். உண்மையில் அவர்கள் கேலியைப் போல் தொடங்கினாலும், கொஞ்ச நேரத்தில் வன்மமும், கோபமும் எரியும் சொற்களாக மாறினர். போதாததற்கு வெளியேறி வரம்பில் நின்ற ஆமிக்காரர்களும், இயக்கமும் ஒன்று சேர்ந்து இயக்கத்தின் காவலரண்களுக்குள் இறங்கி மொத்தமாகச் சேர்ந்து தாலிக்கொடியைத் தாக்கத்தொடங்கினார்கள். தாலிக்கொடி அப்பொழுதும் அசைந்தானில்லை. அவனுள் இப்பொழுதுதான் பெரிய உற்சாகமே பிறந்தது. இன்னும் நிதானத்தையும் துல்லியத்தையும் வரவழைத்துக்கொண்டான். அவனுடைய மண் கட்டிகள் எப்பொழுது எழுந்தாலும் யாரேனும் ஒருவரைத் தாக்கிக் கொண்டிருந்தன. கடைசியில் அவர்கள் அவனைச் சீண்டத் தொடங்கினர்.
இவனுடைய பட்டபெயர்களைச் சொல்லிக் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார்கள். இவன் கட்டிகளை வீசிக்கொண்டிருந்தான். எளிய கேலிகள் அவனை அசைக்காது என்பதை உணர்ந்தனர் புலிகள்.
`கொப்பற்ற பேர் என்னடா?` ஒருவன் கத்தினான்.
அவ் வார்த்தைகள் அரணைத் துளைத்துச் சென்று தாலிக்கொடியைச் சுட்டன. மண் அணைகளை விட்டு வெளிப்பட்டான். அவர்களை நோக்கி கையில் இருந்த மண்கட்டிகளை வீசிக்கொண்டே பாய்ந்து சென்றான். அவர்கள் வீசிய மண் கட்டிகள் இவனை சூழ்ந்து பூசல் அம்புகள் என வந்து தாக்கின. அவற்றைக் கிழித்துக்கொண்டு அவ்விருவரையும் நோக்கிப் பாய்ந்து செல்ல அவர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டு நிலத்தில் தள்ளி அடித்தனர், கால்கள் முகத்தில் ஏறின. உடலெங்கும் குத்துக்கள் விழுந்தன. நிலத்தில் உருட்டப்பட்டான். உதட்டில் இரத்தம் கரித்தது. வயலில் நின்ற பெரியவர்கள் கூச்சல் கண்டு ஓடி வந்து தாலிக்கொடியை மீட்டனர். அவன் ஏறக்குறைய மயக்கத்தில் இருந்தான். அம்மாவின் முகம் தான் எழுந்தது. அவர்களுடன் விளையாடப் போகாதே என்று பலமுறை சொல்லியிருக்கிறாள். இம்முறை அடிவிழுந்ந்தாலும் ஆச்சரியமில்லை. இதுவரைக்கும் ஒரு நாளும் அவனை அடித்திராள். சொல்லால் கண்டிப்பதோடு சரி, தான் நலிவுள்ள பிள்ளை என்பதால்தான் அவள் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறாள் என்று நினைப்பான். இவன் மூர்சை தெளிந்த போது அம்மாவின் மடியில்தான் கிடந்தான். நோவில் உடல் ஒட்டிக்கொண்டிருந்தது. அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். அவ்வளவு நேரமும் வாழாதிருந்தவள். களத்தில் முள் சிக்கிய கொக்கைப் போல கெவ்வத்தொடங்கினாள். அவள் கண்கள் கொட்டுவதை உணர்ந்த போது அவனே அறியாத ஆழங்களில் இருந்து கரிச்சுவையுடன் பெருகிவந்தன வெவ்வேறு சுனைகள். ஒன்றாகிக் கொட்டியபோது அவன் நடுக்குற்றான். இருவரின் கண்ணீரும் ஒரே ஊற்றிலிருந்து வருபவை என்பதை உணர்ந்த அக்கணத்தை இருவரும் சட்டென்று அமைதியாகி மூக்கை உறிஞ்சிக் கொண்டனர். அம்மா அவன் கண்களைத் துடைத்து விட்டாள், இவன் அவளைத் துடைத்து விட்டான்.
இதை அமலாவிடம் விளையாட்டாக ஒருநாள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கண் கலங்கியிருந்தது. அவள் லேசில் அழுபவள் இல்லை. தவிர அதை அவன் பகடித் தோரணையிலேயே சொல்லி முடித்தான். அதுவரைக்கும் சிரித்துக்கொண்டே கேட்டிருந்தவள். `இரண்டும் ஒரே இடத்திலை இருந்து வந்த கண்ணீர்` என்று இவன் உணர்ந்தேன் என்று சொல்லும் போது அமலாவின் கீழ் இமைகள் கோட்டுக் குமிழென நீரடைந்ததைக் கண்டான்.
கண்ணை மீண்டும் கசக்கி, தன்னைத் திரட்டி முடிந்து கொண்டு எழுந்தான். காது மடல்களின் பின்புறம் உடல் சூடு எழுந்து தொட்டு, கொதித்துக் கொண்டிருந்தது. குளிர்ந்த நீரில் அனலடிக்கும் உடலை அமிழ்த்தி எடுக்க வேண்டும் போலிருந்தது. மழை பெய்யத் தொடங்கியிருந்ததால் ஆற்றில் மீண்டும் நீர்வரத்துக் கூடியிருந்தது. முகாம்கள் தோன்றிய பிறகு ஆற்றங்கரைகளில் எளிய சனங்கள் மலம் கழித்து விட்டனர். அவை மிதந்து வரத்தொடங்கிய பிறகு ஆற்றுப்பக்கம் யாரும் செல்வதில்லை. ஆறு பெருகிய பிறகு நீர் தெளிந்து வந்தது. அப்படியே நடந்து ஆற்றை நோக்கிச்சென்றான். முகாமில் அங்காங்கு மரங்களின் கீழும் கூடாரங்களின் பக்கங்களிலும் சனங்கள் குழுமிக் குழுமி எதையோ பார்த்து விட்டு வேகமாக அங்கிருந்து விலகிச்சென்றனர். இவர் ஆர்வம் உந்த நெருங்கிச்சென்று பார்த்தான்.
`எம் தலைவன் சாகவில்லை இன்னும் புலி ஓயவில்லை`
இரத்தத்தால் எழுதியது போல சிவப்பு மையினால் கூடாரங்களில் எழுதியிருந்தார்கள். அங்காங்கே இதைப்போல் நிறையப் `புலி வசனங்கள்` எழுதப்பட்டிருந்தன. இரவோடு இரவாக யாரோ இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இவன் அதை அசை போட்டுக் கொண்டே ஆற்றை நெருகிச் சென்றான். யாரோ நடுத்தர வயது முகங்கள் அவற்றைச் சொல்லிச் சலித்துக்கொண்டு சென்றன.
`இவங்கள் எல்லாரையும் காவு குடுக்காமல் ஓயாங்கள், தண்ணிக்கும் , சாப்பாட்டுக்கும் , கொட்டகைக்கும் அடிபடேக்க ஒரு குஞ்சும் எழும்பேல்லை, இப்ப வாய்கும் வயித்துக்கும் கிடைக்குதெண்டோண்ணை தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டாங்கள், அங்காலை ஒரு பிளாக்கிலை சிவப்பு துண்டிலை புலிப்படம் கீறி மரத்திலை கொடியேத்திக்கிடக்காம், ஏன் உந்த வீங்கின வேலை, அவன் ஆரைப்பிடிச்சு மிதிக்கப்போறானோ தெரியேல்லை, சுட்டுப்போட்டாலும் இனிக்கேக்க ஆருமில்லை`
தாலிக்கொடிக்கு இதை யார் செய்திருப்பார்கள் என்று ஓரளவு ஊகிக்க முடிந்தது, பின்பக்க பிளாக்குகளின் மர நிழல்களில் `கரம்` விளையாடும் இளந்தாரிகள் கொஞ்சப்பேர் திரிந்தனர். கூட்டமாக கூடியதில் வந்த மமதை. வேலியைக் கடப்பதை தடை செய்யக்கூடாது என்று அவர்கள் தான் சனத்தைத் தூண்டி ஆர்ப்பாட்டம் செய்யச் செய்தவர்கள். அன்றைக்கு ஆமிக்காரர் இரத்தக் களரி ஆடியிருந்தால் கூட கேட்பதற்கு நாதியில்லை. அவர்களின் அட்டகாசங்களில் ஒன்றாகத்தானிருக்க வேண்டும். அவர்களுக்கு தலைவனைப் போலொரு தடித்த ஆசாமியிருந்தான். அவனை நட்டுவக்காலி என்று அழைத்தனர். கடைசி சண்டை பற்றி கதையாக அளந்து விட்டுக்கொண்டிருப்பான், அவனைச்சுற்றி ஆட்கள் மொய்துக்கொண்டிருப்பர். `கடைசியில் என்ன நடந்தது` என்பதனையும் `அண்ணை இருக்கிறார்` என்பதையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பான். அரசாங்கம் காட்டிய தலைவரின் தலை உண்மையில்லை, என்பதற்கு பல கதைகள் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசி சண்டேல்ல நிண்டவர் கிளீன் சேவ் எல்லாம் எடுத்தோ நிப்பார், இவங்கள் என்ன விசரங்களோ ? என்று தொடங்கி , அவரைப்போல் உலகம் முழுக்க உள்ள ஏழுபேரில் இரண்டு பேரை `டம்மியாக` வைத்திருந்தார் என்பது வரைக்கும் அளந்து கொண்டிருப்பான். அவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று யாரும் கேட்காத வண்ணம் கதை சொல்லிக் கொண்டே இருப்பது அவனுடைய பிரத்தியேகங்களில் ஒன்று. தாலிக்கொடி ஆரம்பத்தில் அவன் பக்கத்தில் இருந்து அதைக் கேட்டிருக்கிறான். அப்படியே கொண்டு போய் நுள்ளானிடம் ஒப்பித்த போது நுள்ளான், இரண்டு தூசணத்தினால் நட்டுவக்காலியைப் ஏசி விட்டு, கொஞ்சம் எங்கேயோ வெறித்துப் பார்த்து விட்டு.
`சரியோ பிழையோ, தாங்கள் வாழ்க்கை எண்டு நம்பிற ஒண்டை அமைச்சுக்கொண்டு, அதுக்கு தன்னைக் குடுத்து செயலிலை இறங்கிற ஆரும் அடையிற விசர் குணம் ஒண்டு இருக்கு, அன்றைக்கு களத்திலை படத்தான் போறம் எண்டு அறிஞ்ச பழைய போர்வீரன், விடிய வெள்ளண எழும்பி சிரத்தையெடுத்து குளிச்சு, சவரம் பண்ணி , திரவியங்கள் பூசி, கவசம் பூட்டி, தீட்டி வச்ச வாள் வில் எல்லாம் கொழுவிக்கொண்டு, பூத்த முகத்தோடை களத்திலை போய் நிக்கிறத நான் கற்பனைல காணுறன். அண்டைக்கு அவன் செத்து விழேக்க அவனடைஞ்ச முகத்தின்ர அதே பிரகாசம் குறையாமல் அவன்ர சவம் கிடக்கும், போரே களியும் கூத்தும் எண்டு ஆடுற தெய்வங்கள் அவன் செத்த பிறகும் அந்த உடம்பை விட மனமில்லாம அடாத்துக் கொண்டு அப்பிடியே திரண்டு கிடக்குமாம், நெருப்புப்போ நிலமோ விழுங்கும் மட்டும் அவன்ர முகத்திலை உள்ள வேரொளி அப்பிடியே இருக்கும்’
அதைச் சொல்லும் போது முழு நிலவை நிமிர்ந்து பார்த்து ஊழைக்கு எழும் ஓநாயின் கண்களை அடைந்தவன் , ஏதோ அருட்ட சட்டென்று கனவிலிருந்து அறுந்து, அந்தப்பேச்சை அப்படியே விட்டு விட்டு, அவர்களின் பக்கம் போய் நின்று ‘ வாய்பாக்காதே! என்று எச்சரித்து விட்டிருந்தான்.
அவருடைய சாவின் செய்தி வந்து சேர்ந்த அன்று சனங்கள் சாரி சாரியாக ஏற்றி வரப்பட்டு முகாம்கள் நிறைந்து கொண்டிருந்தனர். எல்லோரும் அதைக் கேள்விப்பட்டனர். பத்திரிக்கைச் செய்தியில் இருந்த படங்களைப் பார்த்தனர். யாரும் எதுவும் வாய் திறக்கவில்லை, பார்வைகளைக் கூட பரிமாறிக்கொள்ள வில்லை. எல்லோரும் அந்நாளை முன்பே நெஞ்சுக்குள் நிகழ்த்திப் பார்த்து விட்ட தயக்கத்தை இம்மியும் காட்டிக்கொள்ளாமல் நீரையும், உணவையும் தேடி அலைந்துகொண்டிருந்தனர். உண்மையில் அந்த யுக முடிவினைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டது சிறுவர்கள்தானே. அவர்கள் பெரியவர்களின் உரையாடல்களை `வாய்பார்த்து` தங்களுக்கு என்று உருவாக்கிய கதைகள் ஒரு நூறு இருந்தது. குழந்தைக் கதைகளில்தான் போர்த் தெய்வங்கள் வாழ்கின்றார்கள்.
பெரியவர்களும் சிறுவர்களும் நிறுவிட எண்ணித் துணிவது தம் தந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதல்ல, அவர்கள் உயிர்த்தெழ வேண்டும் என்பதே. ஏனெனில் அங்கே அனைவரும் சாவின் அப்பட்டமான நிரந்தரத்தையும், அதன் ஓங்கிய வலிமையையும் நிகரில் கண்டவர்கள். அதனிடம் தோற்றவர்கள். தாலிக்கொடி இனி இதைப் பற்றிக் கதைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தான். ஆனால் புது நண்பர்கள் அதைச் சுற்றித்தானே எல்லாச் சம்பாசணைகளையும் நிகழ்த்துகிறார்கள். தாலிக்கொடி புதிதாக பழக்கம் ஏற்படுத்தியிருப்பவர்களும் நட்டுவக்காலியைச் சூழ்ந்திருக்கும் சிலருடன் தான். அவர்கள் இவனை விட நான்கைந்து வயது மூத்தவர்கள். அவர்களின் பழக்கம் பற்றி அறிந்தாலும் நுள்ளானோ, அமலாவோ இவனைக் கண்டிக்கத்தான் போகிறார்கள். நிச்சயம் நுள்ளானுக்கு அவர்கள் கசிப்போ சைடரோ அருந்துபவர்கள் என்று தெரிந்திருக்கும்.
உண்மையில் தனக்கது பிடித்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தான். குடிக்கும் போது உடல் மறைவதும் , மனம் அழிவதும் பிடித்திருந்தது. ஆனால் அதையெல்லாம் அடுத்தநாள் அடையும் தலை வலியும் உடல் நோவும் வெறுக்கச் செய்தன. ஆழத்தில் அவனுக்கு இருந்த பேரவா, வளர வேண்டும் என்பதுதான். அதை நன்கறிந்திருந்தான். வளர்ந்து முழு ஆணாக எழ வேண்டும். உக்காராவைப் போல். ‘ ஓம் தன் முன் அவன் தான் இருக்கிறான் ‘ என்று சொல்லிக் கொண்டான். அமலா அவனைப் பற்றித்தான் பேசுகிறாள். தாலிக்கொடி அறிந்த உக்காராவை கேட்டுக் கேட்டு அறிந்து கொள்கிறாள். மேலும் சொல்லு என்று மறைச் சொற்களால் உந்துகிறாள். இவனே அவளுக்காகத் தேடித் தேடி உயர்த்திக் கொண்ட ‘ உக்காரா’ என்ற பேராண் இருந்தான். இவ்வெண்ணங்களின் மைய விசை அமலாவேதான். அவளில் இவன் காண்பது தாயின் எதிர் உருவுள்ள பெண்ணை. நலியாத, அழாத , விறுமன் என்றான பெண்ணை. தாயிலிருந்து தன்னை பிரித்துக்கொள்ளாமல் கிருதியுள்ள ஆணென்று தான் ஆகிவிட இயலாது என்பதை தாலிக்கொடி அறிந்து கொண்டான். அமலாவின் அருகாமை அவனை ஆணென ஆக்கிச் செல்லும் விசை என்று அறிந்தான். உக்காராவின் உருவில், அல்லது அவன் சாயலில் உள்ளே எழும் உருவம் `தந்தை` என்று ஆவதை அமலாவும் தாலிக்கொடியும் அறிந்திருந்தனர். ஆனாலும் அதை அறியாதவர்கள் போல் தினம் அடையும் பாவனைகளில் தம்மை ஆழப்புதைத்துக்கொண்டனர்.
ஆற்றை நெருங்கினான், யாருமில்லை, நீர் வரத்து நேற்றை விட அதிகரித்திருந்தது. தெளிந்திருந்த நீர் கலங்கி , பாசிக்கூழாய் ஓடிக்கொண்டிருந்தது. சுழிகள் கடக்கக் கூடும், தாலிக்கொடிக்கு நீந்தத் தெரியும், குளத்திலும் வான்பாயும் வாய்க்கால்களிலும் நீச்சல் பழகியவன். நன்நீரின் எடையின்மை பற்றியும் ஓடும் நீரின் உக்கிரம் பற்றியும் , அறிந்திருந்தான். ஏற்கனவே அவ்வாற்றுப்பகுதியை நீரில்லாமல் இருக்கும் போது கண்டவன். அப்பாசிப்பாறைகளில் ஏறிச் சென்றிருக்கிறான். சிறுவர்களுடன் விளையாடியிருக்கிறான். கீழ் பதிந்த மருதுகளின் கிளைகளில் தொற்றி ஏறி ஆற்றில் பாய்ந்திருக்கிறான். காற்சட்டையை கழற்றி கையெட்டும் பாறையில் போட்டு விட்டு , நீரில் பாய்ந்தான். தகித்துக்கொண்டிருந்த உடலில் ஓடும் நீரின் நுண்ணூசி முனைகள் என்றான அருங் குளிர்ச்சி ஊடுருவிச் சென்று வெம்மையை ஆற்றி அவனைக் கழுவி எடுத்தது. நீரில் மனம் அழியும், அது தடையின்றிப் பாய்ந்து செல்லும் உடலாக ஆனால் போதும். உடலின் பாவங்களுக்கு அனலின் வடிவம், தாகமும் கண்ணீரும் குருதியும் கூட அனலின் வடிவங்கள்தான். நீர் அனலை ஆழம் என்னும் சொல்லுக்குள் அடைக்கிறது. நீர் தாலிக்கொடியை ஆடியது. தூய்மை செய்து , அலம்பி, குளிர் பாய்ச்சி, தாகத்தை விழுங்கி , கண்ணை இருட்டி , மூச்சைச் சீராக்கி மிதத்தியது. மீண்டும் மீண்டும். அவன் அனலை மறந்தான். கைகள் சுருங்கி விறைக்கும் மட்டும் கிடந்தான். பசிக்கும் வரைக்கும் நீரிலிருந்து எழத் தோன்றவில்லை. அடிவயிற்றை அனல் வென்று `பசித்தது`. கரையை நோக்கி நீந்தி காற்சட்டைக்குள் நுழையும் போது தன் குறியை கண்டான், மென்னரும்பி தடிக்கும் நிற்கும் ரோமங்களின் சிறுவெளியில் விடைத்திருந்தது. பெண் பிள்ளைகள் முதலில் உள்ளத்தினாலும் ஆண்பிள்ளைகள் முதலில் உடலினாலும் வளரிளமையை அடைகிறார்கள்.
நடக்கும் போது களைத்தது, நிறைய நேரம் குளித்துவிட்டான், பசி எரிய அதையே விசையென்று ஆக்கி நடந்து கொண்டிருந்தான். வழமையாக பிரதான கிரவல் சாலையை பிடித்து நடக்க மாட்டான், உள்ளுக்குள் இறங்கி புதினங்களைக் கண்டுகொண்டு நடப்பான். ஐம்பதாயிரம் மக்களின் வாழ்வையும் சுருக்கி ஒரே இடத்தில் வைத்திருக்கும் காலம் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும். வாழ்க்கையை சுருக்கி அடைக்கும் போதும் சரி திறந்து விடும் போதும் சரி, பாறையை இருப்பென அடைந்த சிறு செடியைப் போல் எப்படியோ எல்லாவற்றையும் வாழ்ந்து விட்டுப் போய்விடுகிறது இந்த வாழ்க்கை, அதன் கடல் வடிவில், சிறு துரும்பென அங்கு தாலிக்கொடி உலாத்தினான். அவன் வயதில் சிறுவர்களுக்கு வாய்க்காத கண் அவனுக்கு வாய்த்திருந்தது. அவனுக்கென்ற படும் காட்சிகள் தினமும் விரியும், அதற்கென்று அவனுள் இயல்பிலேயே அளிக்கப்பட்ட உணர்கொம்பு ஒன்று மறைந்திருந்தது. அது `கதைகளை`க் காணும் போதோ கேட்கும் போதோ விரைந்து சென்று தொட்டு அறிந்தது.
அவ்விடத்தில் சுவரொட்டிகளால் அன்றைக்கு எழுந்த பரபரப்புக் குறையவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. தங்கள் கூடாரங்களில் அப்படியான சுவரொட்டிகளை கண்டவர்கள் எழுந்து அவற்றைக் கண்டதும் பதறிப்போய் அவற்றைக் கிழித்தெறிந்திருப்பர். அங்காங்கே கூடிக்கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர். தாலிக்கொடி நடந்தான். காலை வெய்யில் உடல் கண்டிருந்த நீரை உலர்த்திக் கொண்டிருந்தது. ஏதோவொரு பாட்டைச் சீழ்கையடித்துக் கொண்டே எட்டி நடந்தான். தானே சீழ்கையை அவதானித்துக் கொண்டு திருத்தினான். மீண்டும் பாடினான். மனம் குவிந்திருந்ததால், பின்னால் வான் ஒன்று வேகமாக வந்து நெருங்கியதை இவன் செவிப்படவில்லை. யோசனையின் ஆழத்திற்கு சென்றிருந்தவன் மெல்ல மீண்ட போது வானில் இருந்து இறங்கிய இரண்டு மூன்று தடினமான ஆசாமிகள் தாலிக்கொடியை பிடித்து இறுக்கித் தூக்கினர். இவன் திமிறி உடல் விடைத்த போது , வானுக்குள் இருந்தான். கதவு சாத்தப்பட வான் ஒரு சுற்றுச்சுற்றி முகாமின் இரண்டாவது பிரதான வாசலோடு இருந்த இராணுவக் காவலரண்களை நோக்கி விரைந்தது.