கோடையின் முடிவு  | காளம் 11

கோடையின் முடிவு  | காளம் 11

ஐப்பசிக்கு இன்னும் சில நாட்களே இருந்தது, அந்தி இளவெய்யில் சரிந்து செம்மஞ்சள் ஒளி, புழுதிப் புகாரின் மீது விழுந்து நுண்தூசிகள் மிதந்தலைவதைக் காட்டியது,  குளிர் காற்று அருவியாற்றின் பக்கமாக காட்டுக்குள் இருந்து  தாழ்ந்து இறங்கிக் கூதலிட்டுச் சென்றது. அக்காற்றசைவு வெய்யிலைத் தொட்டது போன்ற எந்தக் காட்சியும் தோன்றவில்லை.  தூரத்தில் எங்கோ மழை பெய்துகொண்டிருக்க வேண்டும். காட்டுப்பக்கம் உச்சி வானில் மெல்லிருள் திரண்டிருந்தது. முகாம் வாசிகள் எல்லோரும் அதைக் கண்டனர். குழந்தைகள் பெரியவர்களை உசுப்பி அதைக் காட்டினார்கள்.  மழை என்ற சொல்லே கூடாரங்களில் இருக்கும் சனங்களை அச்சப்படுத்தியது, அதைச் சொல்லாது தவிர்த்தனர். வானமும் குளிரும் அதையே மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளச் செய்தன. கண்ணிறைந்த மஞ்சள் அந்தி அவர்கள் ஆழ் உள்ளத்தில் கண் மயக்குப் போலவே உணரப்பட்டது. அமலா  திரண்டிருந்த முகில்களைப் பார்த்தபடியே செபக்கூட்டம் நடக்கும் கொட்டகைக்கு  வந்து சேர்ந்திருந்தாள். மீண்டும் தாழ்ந்து வந்த குளிரலைக் காற்றுச் சலனமொன்று  பறவையின் விருட்டொலியென பின் காது விளிம்பு சில்லிடக் கடந்து போனது.  புதிய செபக்கூட்ட கொட்டகையின் வாசலில் இருந்த மரக்குற்றியில்  மரியம் அன்ரியின் மடியில் அமர்ந்திருந்தாள் மாதுமை. இந்நாட்களில் நாடுமுழுவதும் மாதுமை அறியப்பட்ட சிறுமி.  தன்னார்வலர் அமைப்புகள் பலதும் அவளுக்காக  போராடிக் கொண்டிருந்தன. முகாமிற்கு வெளியே குரல்கள் பெருத்துக் கொண்டிருப்பதாக உக்காராவும் சொல்லியிருந்தான். மெலிந்த உடலும் ஒட்டிய இடிந்த கட்குழிகளுமான   முகத்தில் சோர்வு புற்றென எழுந்திருந்தது.  குழந்தைகளுக்கு என்று அளிக்கப்பட்டிருந்த முகத்தொளி அழிந்து கிடந்தாலும் கண்கள் எதிரில் அமர்ந்திருந்த அமலாவை அகம் வரை கண்டு சிரித்துக்கொண்டிருந்தன. அவள் சிரிக்கும் போது  இது இன்னது என்று சொல்லிவிட முடியாத ஒளித்தன்மை ஒன்று கணத்தில்  வெளித்து மறைந்தது. நடப்பதொரு நாடகம் என்றே மனதைச் சொல்லச் சொன்னாள் அமலா. இரவு நெடு நேரம் உக்காராவுடன் மரியம் அன்ரி வேண்டிக் கொண்டவை பற்றியே  கதைத்துக் கொண்டிருந்தாள். அவன் தொடர்பில் நாளுக்கு நாள் அச்சம் வளர்ந்தது. கூர் உள்ள பெண்ணை வீழ்த்த வல்லது அவளுக்கெனக் கனிந்த ஆணின் சொல்லன்றிப் பிறிதொன்றுமில்லை.  சொல்லால் வெல்லும்  இயல்பும், மகிழ்சியை தன் கவரும்  கருவியென்றும் கொண்ட ஆணை  பெண்  குளிறெனக் கவ்விக் கொள்கிறாள். 

‘ எங்கடை அய்யாக்கள், காலம் காலமாய்  மன்றாடியாரவை. வைத்தியமும் செய்யிறனாங்கள், அய்யா ஒருக்கா என்னட்டச் சொன்னார், உனக்கு  குணப்படுத்துற ஆற்றல் தரப்பட்டு இருக்கெண்டால் நீ அதால  ஏற்படுற  சந்தோசத்தையும் மன நிறைவையும் முழுசா அடையோனும். அப்பத்தான் உன்ர நோவை நீ வெல்லலாம்.  ஆனால் அது கூட   முதற்படிதான். அதுக்கு பிறகு அதிலே நிரந்தரமா இருக்கோணும் எண்டால் நீ ஆணவத்தை வளத்துப் பெரிசாக்க  வேணும். அதோடை முடிஞ்சிடும் எண்டு நினைக்காத, ஆணவத்துக்கு பிறகு கிடைக்க கூடியது தெய்வத் தன்மை. ஆணவத்தை அறிஞ்சு மேலெழுந்தால்  இருக்கிற இடம் தெய்வம் இருக்கிற இடம். தெய்வம் எண்டது , வேறை ஒண்டும் இல்லை தனிமைதான். இதை   நீ தொடர்ந்து செய்வ எண்டால், உனக்கு மிஞ்சப் போறது தனிமைதான்` 

பெரிய மன்றாடியாரின் வார்த்தைகளைக் கனவில் ஒலிக்கும் குரலாகச் சொல்லிக்கொண்டிருந்தான் உக்காரா. 

‘இதுவரைக்கும் தெய்வமான பெண்ணெல்லாம்  வாழ்ந்து கண்டது தனிமையில்லாமல் என்ன? தனிக்காமல் தெய்வமானவள் யாரும் இருக்கிறாளோ? எனக்குள்ளை அன்பு கருணை எல்லாம்  கூட இருக்காது  எண்டு நினைக்கிறீங்களோ?  இருக்கக் கூடாதெண்டு  நினைக்கிறீங்களோ ? ‘

அமலாவிற்கு தான் அவனுடன் பேசும் போது தனக்குள் இந்தச் சொற்கள் எல்லாம் இருந்தவை தானா என்ற  வியப்பெழும். இவற்றை எங்கே எப்பொழுது இந்த மனம் தொகுத்துக் கொண்டது?  தானறியா தன்னிலை ஒன்று உள்ளிருப்பதைக் காண்கின்ற போது  அறியா விலங்கொன்றின் இருட் குகையில் அது  தன் குரலில் பேசுவதைக் கேட்பது போலிருக்கும்.

‘நீங்கள் மற்றவையோட உள்ள உறவின்ர வழிமுறைகள் பற்றிக் கதைக்கிறீங்கள் அமலோற்பவி. நான் உங்களைப் பற்றி மட்டும் கதைக்கிறன், நீங்கள் உங்கடை அகங்காரத்தாலை வெல்ல நினைக்கிறது உங்கடை நோவையா, காரணத்தையா?  ‘ 

‘அன்ரி அந்தப் பிள்ளைக்கு மட்டும் ஒரு சின்ன நம்பிக்கையைக் குடுக்கோனும் எண்டு தான் கேட்டவா. அதோட சரி. இனி சுளுக்கு கூட நான் பாக்கப் போறதில்லை. ‘

உக்காரா  எதிர் முனையில் சிரிப்பது கேட்டது.  திரும்ப திரும்பச் செய்யும் போது எல்லாம் சுழலாகத்தான் மாறும். அது  பிடிச்சாலும் பிடிக்காட்டியும் தனக்குள்ள இழுக்கிற வேலையைச் செய்து கொண்டேதான் இருக்கும்.  இதுதான் கடைசி முறை எண்டது ஒரு கட்டதுக்கு மேலை குடிகாரன் சொல்லுத்தான், நீங்கள் உங்கடை நோவை வெறுக்கிற மாதிரித் தெரியேல்ல, அதுக்கு மேலை ஒண்டு உங்களை போட்டு வருத்திக்கொண்டு இருக்கு `

 அவனுடைய கடைசிச் சொற்கள்  அடியாழத்தில் சுருண்டிருந்த முதற்பாம்பைச் சென்று தீண்டியது. பதறிக் கதையை மாற்றினாள். கைபேசியை அணைத்து விட்டு மரத்தடியில் கவிந்திருந்த இருட்டில் கரைந்து மூச்சிரைத்தாள். கால்கள் குளிர்ந்து  உணர்வற்றன. 

`இவனோடை இனிக் கதைக்க வேண்டாம்`

மாதுமை அமலாவின் முகத்தை உற்று வாஞ்சையாகப் பார்த்தாள். அதனூடே சிறு தயக்கமும் அச்சிறுமிக்கு இருப்பதைக் கண்டவள், மாதுமையின் கன்னத்தை வருடிச் சிரித்தாள்.  மாதுமை பதிலுக்குச் சிரித்து இவளின் விரல்களை ஒவ்வொன்றாக எண்ணுவது போல் பற்றிக்கொண்டிருந்தாள்.

மாதுமைக்கு அடுத்த சில   நாட்களுக்குள் சத்திர சிகிற்சை ஒன்று செய்ய வேண்டி இருந்தது.  கைவேலியில் விழுந்த மோட்டார் குண்டு ஒன்றில் இருந்த நுண்ணிய சன்னம் ஒன்று அவள் நெஞ்சில் புதைந்தது. இரணைப்பாலையில் மெடிக்ஸ்காரர் அவ் இரும்புத் துண்டை அகற்றினாலும், அதனுடைய மிகச்சிறிய துண்டு ஒன்று மாதுளையின் நெஞ்சின் தசை நார்களை அறுத்துகொண்டு இதயத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இராணுவம் அவளையும் தாயையும் கொழும்பிற்கு சிகிற்சைக்கு  அனுப்ப ஒப்பிவிடும் நிலைக்குத்தான் வந்திருந்தது.  வெளியில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் முகாமில் தெரியாது. ஊகிக்க முடியாமலில்லை. அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கம் மாதுமையின் தந்தை தடுப்பில் உள்ள முக்கிய போராளி என்பதும் , குழந்தை ஒன்றின் மீது எறிகணை வீசப்பட்டது தொடர்பாக கேள்வி எழும் என்ற தயக்கம் இருந்திருக்கலாம். ஆனால் வென்றவர்களுக்கு வெற்றி அளிக்க  கூடிய மமதையின் ஆற்றுப் பெருக்கில் சருகுகள் போல் மோதிச்செல்லப்படக்கூடியவை தான்  இவையெல்லாம்.  வைத்தியர்கள் மாதுமை பிழைப்பதற்கு நூறில் நாற்பது வீதம் தான் வாய்ப்பிருக்கும் என்றனர். அந்த நுண்ணெஃகுத்துண்டு  தசையை  விலக்கி  சிகிற்சைச் சாவணங்களால் நெருங்கப்படும் போது  வேகமாகச் சென்று இதயத்தை அடையலாம். 

அமலா மாதுமையைப் பார்த்தாள். அவழடைய தூர்ந்த விழிகளுக்குத் தேவைப்பட்டது எல்லாம்  நம்பிக்கை அளிக்கும் எதும் ஒன்று. பற்றக்கூடிய இறுக்கமான கரடு முரடான ஒன்று. அவளில் மொத்த உலகமும் அன்பைப் பொழியலாம் ஆனால் அவளுக்கு நம்பிக்கையை சாதாரண மனிதச் சொற்களால் வழங்க முடியாது. அவளுக்கு ஏற்கனவே சாவும் நோவும் நன்கு தெரியும்.  மரியம் அன்ரி  முதலில் கேட்கும் போது மாட்டேன் என்றாள், அமலா. அவளுக்கு மீண்டும்  ஒலும்பியின் ஞாபகம் வந்தது. ‘என்ர ஆத்தை’ என்று கும்பிட்ட  கையும் கூசிய  பன்றியின் முகமும்.  மரியம் அன்ரி எப்படியோ இவளைத் தான் கரைத்து விட்டதாக நினைத்துக் கொள்ளும்படி பார்த்துக்கொண்டாள். உக்காரா தெளிவாக இவள் எதை நோக்கிச் செல்கிறாள் என்பதைச் சொல்லியிருந்தான். நேரடியாக அவனுக்கு எதுவும் தெரியாது. நுள்ளான் ஏதாவது சொல்லியிருக்கக் கூடும், சின்னத்தை ஏதேனும் சொல்லிக் கண் கலங்கியிருக்கக் கூடும். இவளின்  பெருமந்தணத்தின் முழுவடிவங்களையும் அடைய இவர்கள் எல்லோரும் ஒரே சொல்லில் வந்து சேர வேண்டும். அவ்வாறு இருந்தாலும், இவளே சென்று பொருந்தாமல் எங்கும் முழுமை வாய்ப்பில்லை. தானந்தக் குழந்தைக்கு உளமார உதவப் போகும் எண்ணத்தை இவளே உருவாக்கி, தன்னைத் தானே நம்பச் செய்தாள்.

‘இவளை  ஆண்டவர் தானே நிண்டு இரட்சிப்பார் எண்டு  அவரிலை அளவில்லாத விசுவாசம் கொன்ட நானே உறுதி  சொல்ல மாட்டேன். ஆனால்  பிள்ளேன்ர  நெஞ்சிலை  உள்ள இரும்புத் துண்டை விட  கூரானது அவளுக்கு இந்த  வயசிலை குடுக்கப்பட்டிருக்கிற  இந்தப் பயமும் வேதனையும்.   செபிக்கிறதின்ர முதல் நோக்கம் பயத்தை எடுக்கிறதா தான் இருக்கோணும். யாவாரிகள் தான் பயத்தைப் பெருக்கி ஆண்டவரை விக்கிறதுண்டு. நம்பிக்கையாளர்களும்    விசுவாசிகளும் அப்படியில்லை. பிரார்த்தனை எண்டது  வானுறையும் சம்மனசுகள் கையில் ஏந்தும் ஆண்டவரின் வலிமையான வாளை நம்பிக்கையோட அவங்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறதுதான். இந்தக்குழந்தை கிறிஸ்தவமோ ,  சபையைச் சேர்ந்த குடும்பமோ கிடையாது. அவள்  ஆண்டவரை அறிந்திருப்பாளோ எண்டு கூடத் தெரியாது. ஆனால் அவள் அண்டைக்கு முட்டுக்கால்ல இருந்து ஆண்டவரிட்ட மண்டானித கண்டு அழாத சனம் இல்லை. நூறு வருடம் பிரார்தனையில் திழைத்த கன்னியாஸ்திரி கூட ஆக்களை இப்பிடி கரைக்கேலுமோ  எண்டு தெரியேல்ல. ஆண்டவரின்ர பேராலை, அவளுக்கு நாங்கள் கொஞ்சம் நம்பிக்கையை குடுத்தாலும், அது பெரிசுதான்`  மரியம் அன்ரி  சொல்லும் போது கண்கள்  முட்டினாள்.  மாதுமையின் தாய் மாதுமையை அன்ரியின் பொறுப்பில் விட்டு விட்டு அவளின் சத்திர சிகிற்சைன் அலுவல்களைப் பார்க்க முகாமின் நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றிருந்தாள். அவள்தான் அமலாவிடம் மாதுமை அமலாவை எவ்வாறு அறிந்தாள் என்பதை ஒப்பித்திருந்தாள்.   அவள் தாயிடம் அடம்பிடித்து  `மரியம் அன்ரிக்கு அவாவைத் தெரியுமாம்` என்று அழுது தாயுடன் புறப்பட்டு வந்திருந்தாள்.  

மாதுமை  அமலா  காலால் சுளுக்குப் பார்ப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஏறக்குறைய என்பு முறிந்தது போல் வேதனையில் கத்திக் கொண்டிருந்த சிறுவனுக்கு  மாதுமை காலால் வருடி விட்டதும் படிப்படியாக வலி குறைந்து, வீக்கம் குறைந்து அடுத்த  நாளே அவனெழுந்து நடந்ததை அவளுடைய சகபாடிகள் சொல்லியிருக்கிறார்கள். அமலாவின் கால்களால் பார்வை பார்க்கும்  கதைகள் சிறுவர்களிடையேதான் அதிகம் பிரபலம். தாலிக்கொடியினால் பரவிய கதைகள். அவன் இவளைச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்வதுண்டு.  அவன் மெய்யாகவே இவள் மேல் பெருமிதமும்  அன்பும் கொண்டவன் என்று அமலா நன்கறிவாள். ஆனால்  இன்னொரு உயிரனத்தையும் தன்னுடைய வளையங்களுக்குள் விட மனது ஒப்பாலமல் இருந்ததால், அவனிடமோர்  தூரத்தையும் காட்டி வந்தான். ஆரம்பித்திருக்கும் அவனுடைய யெளவனத்தில் தாயைப்போன்றதொரு பெண் வந்தமர்வது பெரிய வியப்பில்லை. மாதுமையும் அவன் மூலம் தான் அமலாவை அறிந்திருக்கிறாள். 

மரியம் அன்ரி செபமாலையையும் வேதாகமத்தையும்  எடுத்து வந்தாள்.தோதாக இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு,  அமலாவின் கையை எடுத்து மாதுமையின் நெஞ்சில் வைத்தாள். அமலா மாதுமையின் குட்டிக் கண்களின் சாம்பல் நிறத்தை ஊன்றிக் கவனித்தாள். சூத்தைப் பற்கள் தெரியச் சிரித்தாள். மரியம் அன்ரி இருவரையும் கண்களை மூடுங்கள் என்று விட்டு செபிக்கத் தொடங்கினாள்.  அமலா கண்களை மூடித் தன்னுள் புதைந்து கொண்டு செபத்தின் சொற்களைக் கவனித்தாள். மெல்ல மெல்ல சொற்கள் மனதில் ஒட்டாமல் உதிர,  மாதுமையின்  என்பு துரித்திய மார்பினது  ஓசையைக் கேட்கத்  தொடங்கினாள். ஓசையோடு  சற்று இடது பக்கமாக இருந்த  வடுவின் மெல்லிய தசைக் குழப்பம் துரித்தியது. நுள்ளானுக்கு இருக்கும் பெரிய காயத்தின் வடுவிற்கு இதே போன்றதொரு துருத்தும் தன்மையை உணர்ந்திருக்கிறாள்.  மாதுமையின் நெஞ்சுச் சட்டையின் மென் முரட்டைத் தாண்டி அக்காயத்தின் வடுவை  கற்பனையினால் கண்டாள்.  காயம் என்று அதை உணர உணர உடல் நடுங்கத் தொடங்கியது. நுள்ளானின் காயத்திடமும் அமலாவிற்கு  தொடத்தோன்றி உலுக்கும் அசூசை உணர்வொன்று இருந்தது. பச்சைக் காயத்தைக் கூட அவளால் தொட்டு, சீழும், அயரும் அகற்றிக் கழுவி, அதன் பெருங்கண்னில்  மருந்திடக் கூடியவள்.  ஒலிம்பியை பன்றி இடித்த காயத்தை இவளே தினமுன் கழுவி சுத்தப்படுத்தி மருந்திட்டு குணப்படுத்தினாள். ஆறிய வடுவைத்  தொடுவது மயிர்க் கூச்செறிந்து, சொல்லினால்  பொருத்திக் கொள்ள முடியாத உணர்வைத்  தந்தது.  விரல்களை  நகர்தினால் அக்காயம்  இன்னும்   தன்னை விரல்களுக்கு காட்ட  விழைவது போல்    உணர்வு செறிந்தது. அதனால் செபம் முடியும் மட்டும் அப்படியே வைத்துக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தாள். மனதைக் கொண்டு அச்சிறுமிக்காக பிரார்திக்கலாம் என்று எண்னி முயன்று தோற்றாள். அவளுக்கு பிரார்தனை எந்தக் காலத்திலும் கைகூடியதில்லை. தெய்வத்தின் முன் அழுததில்லை.  மெய் அதிரச் செபித்ததில்லை. அம்மாவிற்குப் பிறகு ஒலும்பி தெய்வங்களைக் கைவிட்டார்.  மூத்த அத்தைக்காரியின் சாவுக்குப் பிறகு ஏறக்குறைய எல்லோரும் கைவிட்டனர்.  அமலாவிற்கு அம்மாவின் பக்க கிறிஸ்துவர்களைத் தெரியாது. அம்மா ஒலும்பியுடன் போக்கில் வந்தவள். ஊர்காவற்றுறை, மன்னார் பகுதிகளில்  அம்மாவின்  சொந்தமும் சுற்றமும் இருப்பதாக ஒலும்பி சொல்லிக் கேட்டிருக்கிறாள். கடுமையான கிறிஸ்துவக் குடும்பங்கள் அவர்கள். ஒரு வேளை அம்மா இருந்திருந்தால் செபங்களுக்கு பழக்கப்பட்டிருக்கலாம். அம்மாவிற்கு என்று தன்னிடம் எஞ்சி இருப்பது பெயர் ஒன்றுதான். அதுவும் `அமலா`  என்று சுருங்கி விட்டது. ஒண்டம்மாவோடு பேறு, பத்தியம் எல்லாம் கைவிடப்பட்ட போது குலதெய்வமான கொத்தியும் கைவிடப்பட்டாள். சின்னத்தையிடம் மட்டும் கொஞ்சம் கதைகளும் நம்பிக்கைகளும் சிறு சடங்குகளும் ஒட்டிக்கொண்டிருந்தன.  

முகாமில் இருந்த சனங்களுக்கு உணவும் நீரும் கொஞ்சம் சீராகக் கிடைக்கத்தொடங்கியிருந்தன. கடைகள்  வரத்தொடங்கியிருந்தன. வெளிநாட்டுகளில் இருந்து நடமாடும் வங்கிகள் மூலம் பணம் வரத்தொடங்கியிருந்தது. முதல் மூன்று மாதங்களும்  பணம் பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு  நினைக்கப்படவே இல்லை என்ற நாட்கள் வந்து போயின. உள்ளவரும் இல்லாதவரும் வரிசையில் நின்றனர். சோற்றுப்பொதிகளுக்கு அடிபட்டனர். தன்மானமும் சுயகவுரவமும் குழாயடிகளிலும், மலசலகூட வாசலிலும் யார் முந்திச்செல்வது என்ற சண்டைகளுக்கு அவியென்று அளிக்கப்பட்டன. கடைகளும் பணமும் வரத்தொடங்க, வெளித்தொடர்புகள் இரகசியமான கைபேசிகள் மூலம் பகிரப்பட, வெளியே காத்திருந்த சமகாலம் மெல்ல உள்ளே நுழையத்தொடங்கியிருந்தது. இவை எல்லாவறுக்கும் பிறகே தெய்வங்கள் வரத்தொடங்கின. சன்னங்களும் ஷெல்களும்  பொழிந்த இரவுகளில், களங்களில்  சனங்கள் கூவியழைத்த தெய்வங்களை மீண்ட பிறகு அழைக்கவில்லை.  சரைகளில் திருநீறுகளோடு வந்த முதியவர்கள்  காலையில் சடங்காக அவற்றைப் பூசிக்கொண்டனர்.  செபமாலையோடு  மீண்டவர்கள் அவற்றைத்தொட்டு இரண்டு மணிகளை உருட்டிவிட்டு அதைப் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தனர்.  தெய்வங்கள் பிரார்த்தனைகள் மூலம் தான் வலுக்கொள்கின்றன, அவற்றின் ஆகிருதம் அவர்களை  பெருகி எழச் செய்கிறது என்றொரு உள்ளூர் வழக்கிருந்தது. தெய்வங்கள் முகாம்களுக்குள் இறுதியில்  வந்து சேர்ந்தனர். சாவின் விளிம்பு தெரியும் போதும், அச்சம் பெருஞ்சுழல் என அணுகும் போது நாவில் எழுந்த நேர்ச்சைகள் சனங்களுக்குள் நினைவில் எழுந்தன. மணிப்பேர்ஸ்களுக்குள்ளோ,   காவி வந்த ஆவணங்களுக்குள்ளோ இருந்த சிறிய  தெய்வங்களின் படங்கள்  கூடாரங்களின் மூலைகளில் கிழக்குப்பார்க்க ஒட்டப்பட்டன. அங்காங்கே இருந்த பூசாரிகளும், பிராமணர்களும், போதகர்களும், பாதிரியார்களும் மீண்டும் தம்மை அணிந்து கொண்டனர். முகாமில் பிளாக்குகளில் சிறு கோவில்கள் எழுந்தன. `தங்கடை ஆக்களோடு` இடம்மாறிக்கொண்ட்டனர் சனங்கள். பாஸ்ரர் நேமியனின் சபைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் சேர்ந்தனர். ஏற்கனவே சபையில் இருந்தவர்களைக் காட்டிலும் இப்பெருந்துயர் காலத்தில் புதிதாக தம்மைத் தேடிவருவோரைப் பெருக்கிக் கொள்ளச் சொல்லியே நேமியனுக்கு சபையின் தலைமைகள் அறுவுறுத்தியிருந்தன. அவர் முகாம் முழுவதும் சிறு கூட்டங்களை நடாத்திக்கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும்  `நானுன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்`  என்ற  வரியை ஆண்டவரின் குரலால் கனத்துச் சொல்லிக்கொண்டே இருந்தார். முகாமில் மீண்டும் தெய்வங்கள் பெருகத்தொடங்கினர். பின்னர் இரகசியமாக கசிப்பும், சைடரும் கூட வடிக்கப்படத்தொடங்கியாயிற்று என்று தாலிக்கொடி வந்து சொன்னான்.  `தெய்வத்துக்குப் பிறகு திருவிழாதானே`  என்று  சொல்லிச் சிரித்தான் நுள்ளான். அவனை மட்டும் எக்காலத்திலும் தெய்வங்கள் அடைவதில்லை. 

இன்றைக்கு காலையில் தான்  மரியம் அன்ரி கேட்டதை நுள்ளானுக்குச் சொல்லியிருந்தாள். இரவு உக்காராவுடன் கைபேசியில்  மரத்தடியில் இருந்து கதைத்துக்கொண்டிருந்ததை அவன் நித்திரைப் பாசாங்கிலிருந்து கொண்டே அறிந்திருந்தான். அவன் முகம் கொஞ்ச நாட்களாக விடியாமலிருந்தது. அவனுக்கு எந்தக் குற்றவுணர்வையும் தனக்களிக்க உரித்தில்லை என்றாலும், அம்முகத்தை இவள் முள்ளெனக் கண்டாள். தன்னை ஓங்காரித்துக்கொண்டு அதைப் பொருட்டில்லை என்று காட்டிக்கொண்டாள். மாதுமை பற்றிச் சொன்ன போது அவன் `உனக்கேன் தேவையில்லா வேலை, பிறகு கால் கொதிக்குது எண்டு மனிசரை உலைக்குள்ள தள்ளுவாய்` என்று சலித்த சொற்களைக் கேட்க நினைத்தே சொன்னாள். அவன் `நானும் வாறதோ ?` என்றான்.  வேண்டாம் என்று சொல்லிவிட்டு கூடாரத்தடியை விட்டு வெளியேறி வந்தாள். யாருடைய அகங்காரத்திற்குள் யார் சிக்கப்போகிறோம் என்ற விளையாட்டை `தான்` விரும்புகிறேனா என்ற எண்ணம் அவளை  இடமறியாது நடத்தி வந்து செபக் கொட்டகையில் சேர்த்தது.  

மாதுமையின் நெஞ்சுச் சூடு கைகளில் ஏற , நுள்ளானின் வெற்றுச் சொற்கள் மீண்டும் குரலென ஒலித்தன. கண்கள் முட்ட செபத்தின்  சொற்கள் மரியம் அன்ரியில் இருந்தன்றி தனக்குள் இருந்து எழுந்து நிறைவதாக எண்ணிக்கொண்டாள்.  அமலா மாதுமைக்காக செபிக்கத்தொடங்கினாள். வெளியில் இருள் கவ்விக்கொண்டிருந்ததை அவர்கள் மூவரும் கண்டார்களில்லை. காட்டுக்கு மேலாக நின்றிருந்த மேகங்கள் முகாமிற்கு மேலாக வேகமாக வந்து திரண்டு நின்றன. மறைய முதலே வை அந்தியை அழித்தன. கோடையை முடிக்கும் அம்முதல் மழையின் முகில் குவைகள் தாமொடுங்கிச்  சடசடவென்று கொட்டத்தொடங்கின.  

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’