பேற்றுக் குணுங்கு | காளம் 09

பேற்றுக் குணுங்கு | காளம் 09

குழந்தை இல்லாத இரண்டாவது நாள்.   கடந்து சென்ற கூவும் காற்று, இவர்களின் கூடாரத்தின் மூடு துணியைச் சடசடத்துக் கொண்டிருந்தது. அத்தைக்காரியும் தாலிக்கொடியும் வெளியே தறப்பாளில்  படுத்திருந்தனர்.  வானம் ஒளிகொண்டு விரிந்து கிடந்தது. கச இருட்டிற்கு மேலே   தாரகை வீதியின் ஒளியில் முட்டிய தன் கண்கள் பளபளத்ததை தானே கண்டாள். சின்னத்தை பிள்ளையை பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்த்ததை கைபேசியில் அறிந்த பிறகும் மனதின் அலைவு  அடங்காமலிருந்தது. நுள்ளானைக் கண்டவுடன் வெடித்து அழுதாள். கைகளை யாசிப்பவள் போல் அவன் முன் ஏந்திய பொது ஆற்றாமை திரண்டு பின்னொரு நாளுக்கென கொஞ்சம் வஞ்சத்தையும் சமைத்து  மூடியது. அவனருகில்  விக்கி விக்கி மூச்சிரையானாள்.  அவளை அவன் நம்பி விட்டாலே போதுமானது. அந்தக் காட்சியின் இறுதித்தேவை அதுமட்டுமே. தண்ணீர் பொளிச்சென்று முகத்தில் அறையப்பட்ட போது விழித்துக்கொண்டவள். தொடர்ந்தும் விம்மிக் கொண்டிருந்தாள். இவனின் அத்தைக்காரி கால் மாட்டில் இருந்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். நுள்ளான் எந்த உணர்வும் இன்றி இவளை விட்டு விட்டு தன் அத்தைக்காரியை `ஊரைக்கூட்டாதே` என்று கடிந்து விட்டு நிலத்தில் குச்சியொன்றினால் முக்கோணங்களை வரைந்து கொண்டிருந்தான். தாலிக்கொடி அமலாவின் அருகில் அமர்ந்து அமலாவையும் நுள்ளானையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தான்.. அவளுடைய ஆழங்களுக்குள் என்ன ஓடி அடங்கியிருக்கும் என்பதை நுள்ளான் அறிவான். ஆனாலும் தன்னுடைய பாத்திரத்தை அவள் ஆற்றி  முடிக்கட்டும் என்று அமைதியில் நிறைந்திருந்தான். உக்காரா `ஆமிக்காரரின் பிரச்சினையள் அடங்கட்டும் எப்படியாவது கொண்டு வந்து சேர்கிறன்` என்று உறுதி சொல்லியிருந்தான். சின்னத்தை தானே புது மகவை ஈன்றவள் போலக் மகிழ்ச்சியாகப் பேசினாள். குழந்தைக்கு அருகே கைபேசியைப் பிடித்து சிரிக்கும் ஒலியையும் விளையாட்டையும் இவர்கள் கேட்கச் செய்தாள். `தாயைத்தேடாமல் நாள் முழுக்க இருக்கிற பிள்ளையை நான் இப்பான் பாக்கிறன்` என்றாள். அமலா பதிலேதும் சொல்லவில்லை. மீண்டும் ஒருமுறை அழுது வைத்தாள். பெண்கள் இடை அறுவதை  கண்ணீரால் ஒட்டிக்கொள்ளும்  சிலந்திகள். மூன்று வேளையும் போச்சியில் பால் குடித்துவிட்டு குழந்தை உறங்குகிறாள். என்று  சின்னத்தை கைபேசி அழைப்பில் சொல்லிக்கொண்டிருந்தாள். நுள்ளான் வழமைபோல் இவளை ஏறிடாமல் திரிந்தான். அக்கம்பக்கக் கூடாரங்களுக்கு விடயம் தெரிந்ததால், அவர்களுடன் வில்லங்கத்திற்குப் போய் தன் சோகத்தைப் பகிர்ந்து கொண்டான். பாஸ்ரர் நேமியனும் , மரியம் அன்ரியும் வந்திருந்தனர்.  மரியம் அன்ரி, தானொரு விசயம் இவளிடம் கேட்க வந்ததாகவும் இப்பொழுதி நிலைமை சரியில்லாததால் பிறகு வருகிறேன் என்று பீடிகை வைத்துவிட்டுப்போனாள்.

நுள்ளானுடைய  செயல்கள் எல்லாவற்றையும் விட  விந்தையாகி விட்டதைக் கவனித்தாள். இந்தவிடயத்தில் அவன் மட்டுமே பொருட்படுத்தவன்.  ஒன்றும் பேசியிருக்கா விட்டாலும் நடு இரவு வரை நேற்று சுழன்று சுழன்று படுத்தான். அன்றாட உலாத்தல்களுக்கும் போகவில்லை.  மரத்தடியில் பெரும்பாலும் தென்பட்டான்.  பாணும் பருப்புக்குழம்பும் வந்தது. தாலிக்கொடியும் இவனின் அத்தைக்காரியும் மட்டும் சாப்பிட்டு விட்டுப்படுத்தனர்.   அவன் உறங்குவதுபோல் கிடந்தாலும், பெருமூச்சினால் விழித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். கூகாற்றிலும் அவனுக்கு வியர்த்து உலர்ந்தது. வியர்வை நாற்றம் குப்பென்று அடித்துக்கொண்டிருந்தது.  

தன் அடிவயிற்றைத் தொட்டுப் பேற்றுத் தழும்பின் வட்டவடிவச் சுருக்கங்களை அளைந்தாள். சாதாரண நாட்களில் அதைக் காண்பதையோ தொடுவதையோ தவிர்த்து விடுபவள்.  தன் அகத்தின் சரியான வடிவம் அதுவென்று  தனக்குச் சொல்லிக்கொள்வாள்.  மெல்லிய பொருக்கு வடிவ சுருக்கங்கள் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தாள்.  தோலின் அலைகளென அவை பொருமிக்கொண்டிருந்தன. உடலின் ஆழத்தில் பெரிய வெம்மை ஒன்று இருந்தாலும், வெளியே குளிர்ந்துகொண்டிருந்தது. எழுந்து அமர்ந்தாள். கூடாரத்தின் நேர் எதிரே இருந்த சமையல் கூடத்தின் வாசலில் யாரோ குந்தி அமர்ந்திருப்பது போல் இருட்டில் தோற்றம் எழுந்தது. வாயில் சுருட்டைப்போல் தீக்கங்கு ஒன்று புகைந்துகொண்டிருந்தது. பெண்ணுருதான்.  வெற்றுடல். அவ் இருட்பெண்ணின் தொங்கிய பெரிய மார்புகளை இரவின் கூர் வெளிச்சத்தில் கண்டாள்.  உற்றுப்பார்க்க யாருமில்லை. மறைந்ததை இவள் காணவும் இல்லை. பார்வையையும் எடுத்தாளில்லை. பின் வருவது குலதெய்வத்தின் குணம் என்பாள் ஒண்டம்மா.

அவ்வுருவம் முன்பும் அறிமுகமான நெடுநாள் பரிச்சமுள்ளது என்று தோன்றிற்று. கொத்தியாத்தை இவளின் தந்தை வழிக் குலதெய்வம்.

`உலகத்திலை அண்டைக்கு பிறக்கிற எல்லாப் பிள்ளைக்கும் பாலூட்டக் கூடியவள் கொத்தி,  ஆனால்  எந்தக்குழந்தையும் அவளுக்கென்று கொடுக்கப்படாமல் அவள் மார்புகள் கட்டி உயிர் தவ்வக்கூடிய வெலியோட மெல்லிய முனகலோட நடந்து வந்து பிள்ளை பிறக்கிற, வீடுகளுக்கு கிட்ட, செத்தைக்கையும் பத்தேக்கையும் நிப்பாள் கொத்தி , காவுக்கு வந்தவளைக் கட்டி, காவலுக்கு இருத்தினால் எவ்வளவு அவாவோடையும் வஞ்சத்தோடையும் அவள் பிள்ளைத்தாச்சியளையும் பிள்ளையளையும் பாத்துக்கொண்டிருப்பாள், அந்த வஞ்சம் தான் அவளுக்க முலைபபல் திரளுற போல  ஆற்றலைத் திரட்டித் தருது `

ஒண்டம்மா கனவிலே பேசுவதுபோல்தான் கொத்தியைப் பற்றிச் சொல்லும் போது வார்த்தைகளைக் கொண்டுவருவாள். எளிய மருத்துவிச்சியில் இருந்து அவளே அறியாமல் பெருகுபவை அவளுடைய சொற்கள். பெண் அறியாமல் இருக்கும் அவளின் உள்ளைத்தான் தெய்வங்கள் வாழ்ந்து செல்கின்றன, என்பது தாதையர் சொல். பெரியத்தையின் மூத்த மகள் பிறக்கும் போது  ஒண்டம்மாவிடம்  `ஏன் வீட்டிலை வச்சு பேறு பாக்கோணும்`  என்று கேட்டாள் சிறுமி அமலா. சின்னக்குஞ்சே, இங்கிலிஸ் வைத்தியம் வந்ததும், எங்கட சனம் அதுக்கு எடுபட்டது. இங்கிலிஸ் மருந்து தோலிலையும் தசையிலையும் உள்ள புண்னையும் கிருமியையும் பிடிச்சு வைத்தியம் பாக்கிறது. அதுக்கு உடம்புதான்  தானம். சிங்களத்து மருத்துவிச்சியளும் சரி எங்கடை ‘பார்வைக்’ காரியளும் சரி நாடியைப் பிடிச்சு  வருத்தத்தின்ர  வேருக்கு வைத்தியம் செய்றவளவை.  பச்சைத்தண்ணி அடுப்பிலை பட்டோணை கொதிக்கோணு எண்டு கோவணம் கட்டுற கதையில்லை எங்கடை வைத்தியம். அது  உடம்புக்கை இறங்கிச் மெல்லச்சுவறும். ஆங்கில வைத்தியம் தாயின்ரை நாடிக்காலை நுழைஞ்சு வைத்திலை முளைச்ச குஞ்சைப் பாக்கிறவளவை.  வைத்திலை குஞ்சு முளைவிட்ட நாளிலை இருந்து  கொடிவெட்டுற நாள் வரைக்கும் ஆத்தைக்கும் குஞ்சுக்கும்  கொத்தியைக் காவல் இருத்துவாள். கொத்திதான் எல்லாருக்கும் மூத்த செவிலி, மருத்துவச்சி அவளின்ர கருவிதான், ஆனால் கொத்தியை சாங்கியம் செஞ்சு  கட்டி  இருத்திறதும் அவளேதான், எங்களுக்கெல்லாம் கொப்பாட்டி கொத்தி` 

பிறக்கும் போதே தாயைக் கொன்றவள் என்ற  நீண்ட சொல் அமலாவின் அடி நெஞ்சில் அப்படியே இருந்தது. மிகுதி எல்லாம் அதிலிருந்து பெருகியவை. சிறுவயது முதலே பிறப்புப் பற்றிய கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருப்பாள். அவ்வூரில் பிரபலமான `பார்வை` மருத்துவிச்சிகளில் கடையானவள் என்பதால் ஒண்டம்மா பேத்திக்கு ஆற இருந்து ஒவ்வொன்றாய் விளக்குவாள். அம்மா எப்படி இறந்தாள் என்பதற்கு  `கொத்தியோடை யாரிக்கு நிண்டு தன்னை குடுத்து  உன்னை மீட்டவள் கோத்தை`  என்பாள்  ஒண்டம்மா. ஒரு நூறு கொத்திக்கதைகள் ஒண்டம்மா சொல்லிச்சொல்லிச் வளர்த்தாள்.   பேற்றிற்கோ பத்தியத்திற்கோ போகும் போது ஒண்டம்மாவோடு ஒட்டிக்கொள்வாள். . ஒரு நூறு கதைகளால்  ஆனவள் கொத்தி. 

மூதாய் தெய்வம்,  ஆதித் தாதையோடு  களியாடிக் கொண்டிருந்தாள். பேரம்பலத்திலை அவனுக்கு இணையாய் ஆடுவதென்றால் சுலபமில்லை. பிரபஞ்சத்தை ஆடுபவன் அவன். படைத்தவளின்  கருவி இவள்.   கொடும் காமத்தை அவியாக்கித்தான் அவள் அந்த நாட்டியத்தை ஆட வேண்டியிருந்தது. வானத்திற்கும்  பூமிக்கும் இடையில் தங்களை நிறைத்து, விலகி , எல்லாமாகி அவர்கள் ஆடிய ஆடலே புடவி எங்கும் நிறைந்து நின்றது.  மூதாய் அப்பனோடை இணைஞ்சு ஆடிய களியில்  ஒருநாள் கருவுற்றாள். வயிற்றில்   உயிர் பூத்ததும் அவளின்  உடல் வெளிறி, உடல் சோர்ந்து வியர்த்து  ஆட்டத்திலை அப்பன்ர கை ஓங்க ,  மூதாய்க்கு தன்னில் கோவம் எரியத்தொடங்கியது.  அன்னை என்று ஆகும் போது எளிய பெண்ணிற்கும் பெரும் தெய்வத்திற்கும் ஒரே விளைவுகள்தான். சோர்வும் இயலாமையும் எழ , அவை சென்று அன்னையின்  அகங்காரத்தைத் தொட்டது.  ஆடலும் களியும் அவனை வெல்லும் விழைவும் கூடியதால், தன் மடி உண்டான விதைக்கு பிறிதொரு ஏற்பாட்டைச் செய்தாள் மூதாய்.  தன் வியர்வைத் துளி ஒன்றினால்  தன் தினவுள்ள தெய்வம் ஒன்றைப் படைத்தாள் பேரன்னை. அன்னையின் வியர்வையில் இருந்து எழுந்த கொத்திக்கு அன்னையின் வயிற்றில் உறையும் பிள்ளையை நின்று காக்கும்படி அன்னையின் ஆணை வந்தது.  அன்னையின் கருவுக்கு காவலாய் நின்றாள் கொத்தி.  யுகம் யுகமாய் நிகழ்ந்த களி நடனம் முடிந்து. படைப்பு முழுதடைந்தது. அன்னைக்குப் பேறுகாலமும் கூடியது.  அன்னை அம்மகவை ஈண,  பேருரு சுருக்கி எளிய குடில் ஒன்றில்  மானுடப் பெண் போலாகி, தன் திருவயிற்றுடன் சாய்ந்து அடங்கினாள். கொத்தி அவளுக்கு பத்தியம் பார்த்தாள். துர்ச் சொற்களை அண்டாமல் காத்து நின்றாள்.  அன்னைக்கு பேறு நெருங்கியது. அவளின் பெறுவாய் மொச்சை கண்டது. அன்னையின் பனிக்குடம் பிளந்து  மகவு வெளிப்பட்டது. கொத்தி அம்மகவைக் கையில் ஏந்தினாள். அதன் சிற்றுடலும்  மொச்சை மணமும். அவளைக் கவர்ந்தன. முலைகளில் இதுவரை உணரா ஏக்கமொன்று பரவிற்று.  நோயைப் போல அவ்விழைவை அறிந்தாள். சட்டென்று கரவு கொத்தியில் குடிகொண்டது. எளியவர்களின் வழியே அவளுக்கு உகந்தது என்றாள். அன்னை பேற்று மயக்கு அழியாது. குருதி பெருகக் கிடந்தாள்.  நீண்ட புதைசேற்று மயக்கம்.  குடிசையில் இருந்து குழந்தையுடன் வெளிப்பட்ட கொத்தி வேகமாக நடந்து காட்டைத்தாண்டி மானுடர்  வாழும்  ஊர்மனைகளுக்குள் நுழைந்தாள்.  மயக்கம் தெளிந்த அன்னை, தன்னைத் திரட்டிக் கொண்டு  எழுந்தாள். கொத்தி  தன்னை ஏமாற்றி மகவைக் கவர்ந்து சென்றதை அறிந்து சினம் கொண்டு எழுந்தாள். அவளின் பேற்று வாயில் பெருகிய குருதி கூடி கட்டித்து இறுகிக் கூர்வாள் என்று ஆனது. அதைத் தாங்கிக் கொண்டு அன்னை ஊருக்குள் வந்தாள். மூதாய் வருவதை அறிந்த கொத்தி ஊரவரிடம் தன் குழந்தையைப் பறிக்க வனயட்சி ஒருத்தி அன்னை வேடம் கொண்டு வருகிறாள் தன்னையும் பிள்ளையையும்  நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அழுது அரற்றினாள் ஊர் அவள் மாசாலக் கண்ணீரை நம்பி, அவளையும் பிள்ளையையும்  ஊரவர் மருத்துவச்சியின் வீட்டில் இருந்த மூலிகைப் பானைக்குள் ஒழித்து வைத்தனர். ஊரேறிய மூதன்னை தன் குழந்தையுடன் தப்பிய கொத்தி எங்கே என்று ஊரவரைக் கேட்டாள். அவர்கள்  மானுடப் பெண் உருவில் இரத்தச் சேறால் குளித்த கையில் செவ்வாள்  ஏந்தியவளை கொத்தி சொன்னது போல் வனயட்சி ஒருத்திதான் என்று முடிவு செய்து,  ஊர் மாந்திரீகர்களைக் கொண்டு வந்து அவளைக் கட்டப் பார்த்தனர்.  கோபத்தில் எரிந்த பேரன்னை அவ் எளிய மானிடப் பெண்ணுடலைக் கிழித்துகொண்டு தன் மெய்வடிவாய் எழுந்து வானை நிறைத்தாள். செய்த பிழை அறிந்து அச்சனங்கள் அன்னையைப் பணிந்தனர். மருத்துவிச்சி தன் மூலிகைப் பானைக்குள்  இருந்த கொத்தியை கொண்டு  வந்தாள். அன்னையின் மகவை  அவளிடம் இருந்து பிடுங்கினாள். கொத்தி வீறிட்டுக் கத்தினாள். அவள்  பெருமார்புகள் பாலைப் பொசிந்து  பிள்ளையின் உடலை நனைத்தன. அன்னை அவள் முலைப்பாலைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டாள். அடுத்த கணம் தன் கொல்லெரியும் கோபத்திற்குத் திரும்பி கொத்திக்குச் சாபமிட்டாள். வாழ் நாள் எல்லாம் முலைகட்டி, பெருவலியுடன் நீ பிள்ளைக்கு காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கருவுற்ற பெண்ணையும்   அவள் மகவையும்  காவல் செய்ய வேண்டும். அப்பத்தியத்தில் தரப்பட்டவற்றை மட்டும் உண்ண வேண்டும். நீயாக உன் துர் குணத்தின் இயல்பினால் குழந்தையை கவர்ந்தால் அத்தாயின் கண்ணீர் உன்னை அடைந்து  பிள்ளை உன்  கையால் இறக்கும். அப்பாவமும் பழியும் உன்னைச் சேரும். எப்பொழுது தாயொருத்தி மழு உள்ளத்துடன் அவள் மகவை நீ சென்று பாலூட்டி  அழைத்துச்  செல்லச் சொல்கிறாளோ அப்பொழுது நீ விண்ணுக்கு மீள்வாய்’ என்று  தீச்சொல் இட்டு தன் மகவுடன் மறைந்தாள்.

இப்படி நூறு கொத்திக்கதைகளை ஒண்டம்மா ஏட்டில் உள்ளதைப்போல் ஒப்பித்து முடிக்க அமலா ஆவென்று கேட்பாள். கொத்திக்கு ஒரு குழந்தை தேவைப்பட்டது. பல ஆயிரம் யுகங்களாக அவளொரு குழந்தைக்கு அலைந்தாள். காணும் இடங்களில் எல்லாம் கர்ப்பிணிக்கு காவல் இருந்தாள்.  காத்திருந்து ஆற்றாமல் குழந்தை பிறந்தவுடன் தூக்கிக்கொண்டு ஓடப்பார்த்தாள். பயனில்லை. கொத்தியைச் சடங்கினால் கட்டி காவலுக்கு இருத்திவிட்டு சுகப்பிரசவமானதும், தரையிலோ, கூரையிலோ தட்டி `பத்தேக்கை நிக்காதை கொத்தி செத்தேக்க நிக்காதை கொத்தி` என்று விரட்டினர்  மருத்துவிச்சிகளும் செவிலிகளும். 

குழந்தை வயிற்றில் இருப்பதை  அறிந்த அன்று ஓங்கி வயிற்றில் அறைந்து இவள் அரற்றிக்கொண்டே `கொத்திக்குக் குடுப்பன்` என்று இவள் சொன்னதை  கேட்டிருந்தால்  ஒண்டம்மா பதறிப்போயிருப்பாள்.  எதையும் அறியாது அழுவாரைப்போல் நின்றிருந்த நுள்ளான் ஓடி வந்து வயிற்றை அறையும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். கருவுறும் நாள் வரை  இவளைப் பெண் எண்று அணுகியவன், தன்னுடைய கீழ்மைகளையும் பலவீனத்தையும் , பொய்களையும் இவள் மேல் கொட்டிக்கொண்டிருந்தவன், குடும்பமற்ற அக்குடும்பத்தில் இருவரையும் இணைத்தது உடலில் வாழ்ந்த விருப்பங்களே அன்றிவேறில்லை. ஆனால் குழந்தை என்ற கணம் நுள்ளானில் அவதானித்த மாற்றங்கள்  இவளுக்கு முதலில் எரிச்சலூட்டின.  ஒலிம்பியரை நினைவுபடுத்தின. முழுவதும் வெறுத்து ஒதுக்கும் ஒரு உருவத்தை நுள்ளான் அடைவதை துயருடன் கண்டாள். முக்கியமாக அவனுக்கு இவளில் எழும் விரும்பங்கள் அடங்கிச் சென்றதை  ஏற்கமாட்டாமல் இவள் பெண் விழைவுகள் நாளும் நலிவு கொண்டன.  கசப்பு எஞ்சியது. குழந்தை,  வயிற்றிலிருந்த காலத்தில் இவர்களின் வசைகளையும் சண்டைகளையும்  கேட்டே வளர்ந்தது. ஆரம்பத்தில் மறு சொல் எடுக்க முடிந்தாலும் கொஞ்ச நாளில் நுள்ளான் தந்தை என்று அடங்கினான்.  ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்து இவை அனைத்தும் நுள்ளானின் கவனக்குறைவே என்று முழுதும் நிறுவினாள்.  இரவுகளை அழுதே கழித்தாள்.  நுள்ளான் தன் முழு இயல்பையும் இழந்தான். இவளுடையை அன்றாடமென்னும் தொழும்பில் தன்னைப் பிணைத்துக்கொண்டு,  எந்த மறுபேச்சும் இல்லாமல் இவள் சொல்லுக்கு ஆடினான்.நுள்ளானளவிற்கு கீழ்மையைத் தொட்ட ஆண்மகனை  காண்பது அரிதுதான். அவனுடைய பாவங்களுக்கென்றே பிரத்தியேகமாக செய்யப்பட்ட நரகம் என்று தன்னை ஆக்கினாள்.  அவனுடைய கடந்த காலத்தை தனக்கென வளைத்துத் தீர்ப்பிட்டாள். கர்ப்பகால மசக்கையும் எரிச்சலும் இவனைச் சுட்டெரித்தன. 

`கோத்தையைக் கொண்ட மாதிரி என்னையும் கொல்லேலும் எண்டு நினைக்காத, நான் ஏற்கனவே செத்திட்டன்`

இவள் சொல் கேட்ட நாளில் இருந்தே கொத்தி இவள் பிடரியில் வந்து அமர்ந்திருக்க வேண்டும். இவளே அறியாத வசைகளும், கடுமையும் சொல்லிலும் செயலிலும் எழுந்தது.  இரண்டு முறை கிணற்றுக்குள் குதிப்போம் என்று கண்ணீரோடு சென்று இயலாமல் திரும்பினாள். `கட்டி வெட்டும்` காலம் கடந்திருந்த போதும் அதற்காக ஆட்களைத் தேடிச்சென்றாள்.  தன் துயரினால் அழிக்கக் கூடிய அனைத்தையும் அழித்துப்பார்த்தாள். நுள்ளானைத் தவிர எதுவும் மீண்டு வரவில்லை. இயக்கம் சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்பவர்களைத் தடை செய்திருந்தது. இவள் தினமும் எரிச்சல்பட்ட முகத்தோடு  நுள்ளானின் சைக்கிளில் `கிளினிக்` சென்று வரும் போது  ஒருமுறை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு `கலியாணம் செய்தாலும் பிடிக்கிறாங்களாம், எல்லாம் நல்லதுக்கெண்டே நினைச்சுக்கொள், இல்லாட்டி உன்னை அப்பிக்கொண்டு போயிருப்பாங்கள்` சைக்கிளை நிப்பாட்டு என்று சொல்லி விட்டு , இறங்கி எதுவும் சொல்லாமல் நடந்து வந்த பேரூந்தில் ஏறிப்போய்விட்டாள்.  மாஞ்சோலை வைத்தியசாலையில்  குழந்தை பிறந்த போது  கிளிநொச்சி மாவட்ட எல்லைகளை இராணுவம் பிடித்துக்கொண்டிருந்தது.  சண்டைக்குள் குழந்தையோடு அல்லல் பட்டாள். பதுங்குகுழிகள், இடம்பெயர்வுகள். ஷெல்வீழ்ச்சிகளுக்கு  நடுவில் உழன்றன மாதங்கள்.  கொத்தி இன்னும் ஆவலுடன் காத்திருந்தாள். கொத்தியின் அருகாமையை உள்ளின் ஏதோ ஒரு கணம் உணர்ந்தபடியே இருந்தது. இத்தனை பெருங்காலத்தில் கொத்தியின் காதில் முதல் முதலில் `கொத்திக்குக் குடுப்பன்` என்ற முதற் சொல் விழுந்தது, அவளுடைய துடித்தெய்வத் தனிமையை உலுக்கி எழுப்பியிருக்க வேண்டும். முதலில் அருகிருந்தவள், தொடர்ந்தவள், காத்திருந்தவள் மெல்ல மெல்ல இவளே என்று ஆனாள். இவள் முகத்தை எப்பொழுது குழந்தை ஏறிட்டாலும் வீறிட்டு அழுதது. அல்லது மார்புக்குள் முகத்தைத் திருப்பி ஒடுங்கிக்கொண்டது. நுள்ளான் தன் மடியில் வளர்த்தும் போது நீண்டு சிரித்தது.  குழந்தைகள் முதலில் ஆண்களையே விடுவிக்கிறார்கள். 

மீண்டும் கூவென்ற காற்றுத் திரட்சி கடந்து போனது.  நுள்ளான் உறங்கி விட்டதன் அறிகுறியாக அவன் மூச்சின் சீர்தன்மை எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தது. பிள்ளையில்லாமல் திரும்பும் போது `நினைத்ததைத் சாதிச்சிட்டாயோடி அறுதல் வேசை` என்று ஓங்கி ஒரு அறைவான் என்று நினைத்துக்கொண்டே வந்தாள். ஆனால் அவன் நிலத்தில் குந்தி இருந்து அழுதவளின் அருகில் இருந்து தலையைக் தடவினான். இவளை மிகவும் அறிந்திருந்தாலும்,  அவளுக்குரிய தேற்றல் சடங்குகளை ஆண் என்றும்,  துணைவன் என்றும் நின்று ஆற்றினான்.  விரல்களை நகர்த்தி இருட்டில் உறங்கும் அவன் தோள்களைத் தொட்டாள்  அவன் வியர்வை வாசனை உலர்ந்து அடங்கியிருந்தது.  அவன் உள்ளுக்குள் அடைந்திருக்கும் துயரை மனதால் சொல்லி உணர்ந்தாள். கண்கள் கலங்கிற்று உடல் வெம்மை கொண்டது.  உள்ளங்கைகள் மட்டும்  குளிர்ந்தன. மார்புகளில் வியர்த்து உள்ளிருந்த மனம் நெஞ்சில் எழுந்து தாழ்ந்தது. சுழன்று அரையுடலை அவனில் சாத்தினாள்.  முன்பெப்போதும் இல்லாத நடுக்கம் பரவியது. காமத்தில் இருவரும் நேரடியானவர்கள். இம்முறை அப்படியில்லை. எது தயக்கியது என்பதைக் காண்பதைத் தவிர்த்தாள். மார்புகளை அவனுடலில் அழுத்தினாள். குமிழ்க் காம்புகள்  உலோக முனையென்று ஆகிக் குத்தின.  அவன் வியர்வையின் வாசனையை நுகர்ந்து தனக்குள் நிரப்பினாள். அல்குல் பூத்து நீர் கண்டது. அம்மலர் பெண்ணின் அச்சத்தை விலக்குவது,  அவளுள் உறையும் விலங்கின் பிலவாயிலும் அதுவேதானில்லையா ?  கைகளை அவனில் ஓட்டி  ஆயிரம் வருடத்து நித்திரையில் இருந்து தன் நிலத்திற்கு இழுத்தாள். வெளியில் கூகாற்று இரையத்தொடங்கியது.   இரவு கருமை கூட்டிக்கொண்டது. காற்று குரல்களை மந்தணத்தில் நிறைத்தது. நெடுநாள் கடந்த காமம் வழமைபோலிருக்காதது.  ஓடும் ஆறும் அகன்று உருமாறுவது.  தங்களின் நேரடித்தன்மையை அவர்களே இழந்து விட்டதை இருட்டில் அறிந்தனர். பொருந்துவதும் பிரிவதும் அன்றாடத்தில் அடைந்தே சலித்துப்போயிற்று. முன்பு  வெறும் புணர்ச்சியில் இணைந்த  உடல்கள்,  வெறும் ஒற்றை வேட்டை என்றிருந்த சொல், களம் என்று ஆனது.  ஆயிரம் உடல்களாய் எழுந்து ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர். ஐம்புலன்களாலும் கடக்கப்பட்டது பேராறு. படைக்கும் போதும் அழிக்கும் போதும் தெய்வம் அடையும் உவகை. சுக்கிலம் ஊசிமுனையினால் வெளியேற உடல்நடுங்கி அவனை இறுக்கப் பொருந்தினாள். களி என்றான முதல் காமம் அதுவென்று  இக்கணத்தை எடுத்து வைத்தது ஆழ்.  தலைகீழாகி அவன் அவள் மலர்வை உண்டான். அவள் அவன் வெம்மையை அருந்தினாள். காமத்தின் பெருநாற்றம் எழுந்து நிறைந்தது. மனதை அம்பென்றாக்கி எய்வது பெருங்களி கொண்ட காமம். விடுபட்டாலும்  அம்பின் நுணி அடையும் யாவற்றையும் அப்படியே சுவைத்தது வில். இப்பரு எதற்கென்று வந்ததோ அதற்கென்று ஆவதன் கச்சிதம்.  எல்லாவடிங்களையும் முடித்துக்கொண்டு நீர் கடலென்றாவது. தருக்கங்களின் வேள்வி நெருப்பு. குரலை  விட  முடியாது அடித்தொண்டைக்குள் கீச்சிட்டு அடங்கினாள்.  எழுந்து கூர்கொண்ட முக்கோணத்தின் உச்சிமுனையில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் முழுதெனக் கண்டு,  வெவ்வேறு பக்கங்களுக்குச் உடல்கள் தோலுரித்த வேட்டைக்கறியைப் போல் சரிந்தன. 

அமலா, கண்களை இறுக்கி முடியிருந்தாள்.  களியில் இரண்டு முறை கண்ணீர்  ஓடியிருந்தது.  மனதில் எதுவுமில்லை.  அணிந்திருந்த சீத்தைச் சட்டையைச் சரி செய்து கொண்டு  எழுந்து முழங்கால்களில் மார்பை அமத்திக்கொண்டு  அமர்ந்தாள். மனம் நிலையாக தன்னை இழந்த  மகிழ்ச்சியின்  போது இவ்வாறு அமர்ந்து கொள்வாள். நெடுநாட்களுக்குப் பிறகு முழங்கால்களில் தன்னைச் சரித்துக்கொண்டிருக்கிறாள். அப்படியே கண்ணை மூடி தன்க்குள் புதைந்தாள். அவள் அந்த  கூடாரத்திற்குள் அமர்ந்திருக்கும் காட்சியை அவளே ஆழத்தில் கண்டாள்.  இருட்டு மெல்ல தன்  கருமையை விலக்கி நீலம் கொள்ளத்தொடங்கியது. அவளால் இப்பொழ்து தன்னை தெளிவாகப் பார்க்க முடிந்தது. தலை குலைந்திருந்தது. கேசச்சாய்வில் மென்நீல ஒளி.  பெரிய மார்புகள் காலில் புதைந்திருந்தன. முகம் கன்றிய இருட்டில் கரந்திருந்தது. கொஞ்ச நேரம் தன்னைத் தானே காணக்காண தன்னிலிருந்து விலகியதை அறிந்தாள். சொற்ப நேரத்திலேயே அது தானில்லை என்பதைக் கண்டு திடுக்கிட்டாள். இவளுக்கு அவ்வளவு பெரிய மார்புகளோ கேசமோ கிடையாது, ஆனால் உடல் இவளைப் போலத்தான் இருந்தது, மனம் அவ்வுருவினுள் இருந்துதான் இதைக் காண்பதாக அடித்துச் சொல்லிற்று. அருகில் சென்று பார்க்க நினைத்து காட்சியை நெருக்கினாள்.  அமர்ந்திருந்தவளில்,  அன்னையின் பேறுகால உடலின் குணுங்கும் நாற்றம் எழுந்து வந்து இவளை அறைந்தது.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’