செபம் | காளம் 05
நண்பரான பாஸ்ரர் நேமியனின் கூடாரத்திற்கு செல்லும் வழியில் நான்கைந்து பிளாக்குகள் தாண்டி அருணாச்சலம் முகாமைப் பிரிக்கும் நீண்ட முட்கம்பி வேலியை அண்மித்தான் நுள்ளான். விடிந்ததில் இருந்து இவளின் நச்சரிப்பு தாங்காமல் ஏறுவெய்யிலுக்கு முன்பே புறப்பட்டிருந்தான். இவனோடு சமதையாக நடந்து வந்த அறியாத முகங்கள் சிலர் சட்டென்று தங்களைக் கலைத்துக்கொண்டு வேலியின் குறிப்பிட்ட இடங்களை நோக்கிச்சென்று பார்வையை இரண்டு திசைக்கும் எறிந்து பார்த்துக் கொண்டு வேலிகளில் இருந்த முட்கம்பிகளை நெக்கி, உட்புகுந்து அருணாச்சலம் முகாமிற்குள் சென்றனர். கொஞ்ச நேரம் அதில் நிதானித்து கவனித்த போது ஆட்கள் வேலியைக் கடந்து வருவதும் போவதும் சர்வசாதாரணமாகிவிட்டதைப் பார்த்து வியந்தான். அதுவொரு நீண்ட இராணுவ முட்கம்பி வேலி. முட்கம்பிகளில் இரண்டு வகைகளிருந்தன. சாதாரண முட்கம்பிகள் மற்றவை கொமோண்டோக் கம்பிகள். இராணுவ வேலிளைக் காக்கும் கொமோண்டோ கம்பிகள் கடினமானவை தூண்டில் முட்களைப் போல் நுட்பமானவை. உடலிலோ உடையிலோ கீறுவதற்குப் பதிலாக கவ்விக் கொள்ளக் கூடியவை. அவற்றின் மையச்சரட்டில் கனமான ஒற்றை இருப்புக் கம்பி ஓடியது அதைச்சுற்றி நுட்பமாக உட்பக்கம் கூர்கள் விரிந்த பட்டை உலோகம் மூடியிருக்கும். சாதாரண முட்கம்பியைப் போல அவற்றை வளைத்துவிட முடியாது. வேவுக்காரர்கள் இராணுவ தளங்களையோ எல்லைகளையோ கடக்கும் போது அக்கம்பிகளை வெட்டுவதற்கென்றே உருவாக்கிய குறடுகளைக் கொண்டு செல்வர். கம்பிகளை அறுபட முடியாதவையே தவிர நொய்யவோ வளையவோ முடியாதவையல்ல. எதையும் பழக்கம் மூலம் பணிய வைக்க முடிகிறது மனிதர்களால். இறுக்கத்தின் சிறு நுட்பத்தத் தெரிந்துகொண்டால் போதும். இத்தனை வருடங்களில் கொமொண்டோ கம்பிகள் சனங்களுக்கு பழகிவிட்டன. அவற்றை எவ்வாறு அழுத்தித் தாழ்த்துவதென்றும், எப்படி ஆடையில் சிக்காமல், உடலில் முட்டாமல் அவற்றைக் கடந்து செல்வது என்று அறிந்திருந்தார்கள். இராமநாதன் முகாமிற்கும் அருணாச்சலம் முகாமிற்கும் இடையில் வரிந்து இருந்த முட்கம்பி வேலி எட்டுப்படையாக அடிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இரண்டு மூன்று இடங்களில் ஆட்கள் புகுந்து மாறும் அளவிற்கு தாழ்த்தப்பட்டும் விரிக்கப்பட்டுமிருந்தன. அந்த வேலிகளில் கொஞ்சம் எட்ட எட்டத்தான் காவலரண்களிருந்தன. எனினும் கொமொண்டோ கம்பிகளை அழுத்திக்கொண்டு இரண்டு முகாம்களில் இருந்தும் பரஸ்பரம் ஆட்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் இராணுவமும் அது தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். வெளிப்புற வேலிகளைத்தான் அவர்கள் கடுமையாக அமைத்திருந்தார்கள். அத்தோடு இராணுவத்தினருக்கு யுத்தம் வெல்லப்பட்ட பிறகு ஏற்படும் அசட்டைத்தனம் மெல்ல மெல்ல வராமலுமில்லை.
அங்கே கொண்டுவரப்பட்ட நாட்களில் இருந்து முகாமின் எல்லைகளைக் கவனித்து வந்தான் நுள்ளான். அவர்கள் முட்கம்பிகளையன்றி பயத்தையே வேலியாக இட்டிருந்தனர். அதனால் வெளிப்புற வேலிகளில் வீதிக்கு அருகில் பிரதான வாயில் பக்கமே முட்கம்பிகளால் சோடனையிட்டிருந்தனர். ஆற்றங்கரையை தாண்டி இருந்த காடுகளையோ இராமநாதன், அருணாச்சலம், ஆனந்த குமாரசாமி என்பதாகப் பெயரிடப்பட்டு அடுத்தடுத்து இருந்த முகாம்களுக்கு இடையில் இருந்த வேலிகளை ஆரம்பம் முதலே பலமாக அமைக்கவில்லை. காவலரண்களைக் காண்பதால் சனங்கள் பயத்தினாலேயே எல்லையடைவர் என்று நினைத்திருப்பார்கள் போலும். ஆரம்ப நாட்களில் அந்த அச்சம் இருக்கத்தான் செய்தது. அந்த அச்சத்தை மீறியவர்கள் வளர்ந்தவர்களோ, இளைஞர்களோ இல்லை. சிறுவர்களும் சிறுமியரும். ஷெல் சத்தம் ஓய்ந்திருந்த இந்த நாட்களில் முட்கம்பிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பது பெரியவர்களை அவ்வளவாக ஒன்றும் செய்துவிடவில்லை. வேலிகளைக் கடந்தால் சுடப்படவோ, கைதுசெய்யப்படவோ கூடும் என்ற பயம் அவர்களை நிறுத்தியது. ஆனால் அவையெதுவும் அவர்களை அண்டவில்லை. வேலிக்குச் சமீபமாக இருந்த பிளாக்குகளில் இருந்த சிறுவர்கள் `தாலிக்கொடி` என்று அவர்கள் அழைக்கிற பதின்மூன்று வயதுப் பெடியனோடு சேர்ந்து திரிந்து இப்படி அட்டகாசங்கள் செய்தனர். பக்கத்து முகாமில் திறக்கப்பட்ட புதிய கடைகளில் பொருட்கள் வாங்கி வந்து, விலையிட்டு விற்பது அவர்களின் விளையாட்டு. அந்தச்சிறுவன் முகாமெங்கும் அறியப்பட்டிருந்தான். அவனைக் கண்டாலே நுள்ளானுக்கு எரிச்சல் வரும், பெரியவர்களுக்கு சிறுவர்களைக் கண்டால் ஏற்படும் எழுமாற்றான எரிச்சல். அவன் நடவடிக்கையும் தோரணைகளும் பிடிக்காவிட்டாலும், அவன் நேமியனுடன் நெருக்கமாக இருப்பதால் நுள்ளான் அவனை எதுவும் சொல்வதில்லை.
முகாம் ஆரம்ப நாட்களில் இருந்ததை விட `முன்னேற்றம்தான்`. அங்கே கொண்டுவந்து இறக்கப்பட்ட போது, வேலிகளோ அறிகையான முகாமாக இருக்கவில்லை. முதல் வாரம் எல்லோரிடமும் பசியிருந்தது. உணவுக்கும் நீருக்கும்தான் அலைந்து கொண்டிருந்தார்கள். நுள்ளான் அத்தைக்காரியின் நச்சரிப்பில் வரிசைகளுக்குள் புகுந்து நெரிபட்டு அடிபட்டு சோற்றுப்பாசல்களையும் , பிஸ்கற் பைகளையும் கொண்டு வந்தான். ஷெல் விழும்போதும் சன்னங்கள் சீறிவரும் போதும் இல்லாத பரபரப்பும் , குழப்பமும் , பிறர் வெறுப்பும் கொண்ட சனங்களை வரிசைகளில் கண்டான். இப்பொழுது அவர்கள் சர்வ நிச்சயமாக சாகப்போவதில்லை. எப்படியும் ஒரு துண்டு பிஸ்கற்றையேனும் உண்டுவிடலாம். ஏன் அந்த வரிசைகளில் குழறிக்கொண்டு பாய்கிறார்கள் என்று புரியவில்லை. வெளியில் நின்று சலித்த போதுதான் இவ் எண்ணம் தோன்றியது, அவர்களைத் திட்டிக்கொண்டேதான் வரிசைக் குழப்பத்திற்குள் சுமார் நூறு பேரை ஏமாற்றியும், தள்ளியும் , தூசணத்தால் திட்டிக்கொண்டும் முன்னேறிச்சென்று சோற்றுப்போதிகளை நெஞ்சோடு அணைத்து மீண்ட போது எப்பொழுதும் எழாத எக்காளமொன்று, மனத்தில் இருந்ததை அவனே வியப்போடு கண்டான்.
நேமியனின் கூடாரத்தின் வாசலில் சனங்கள் குழுமியிருந்தனர். அவர்களின் முகங்கள் முண்டியடித்துக்கொண்டே உடல்களின் மேல் மிதந்தன. மனுஷன் செத்துக்கித்து போனாரா என்ன என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டு நுழைந்தான். மரியம் அன்ரி முழங்காலில் இருந்து வானத்தைப்பார்த்து கையைத் தூக்கி பெரிய குரலில் ஜெபித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. வானத்தில் அவள் கண்கள் நிலைத்திருந்த பக்கத்தில் தேவ தூதர்கள் யாரும் தெரியலாம். பாவிகளுக்கு ஏது தேவகாட்சி ? ஆகவே அன்ரியை நெருங்கினான். பாஸ்ரரைக் காணவில்லை. கூட்டத்தில் இருந்து சபைக்கு வரும் ஒரு சில பெண்கள் அவளை நெருங்கி வந்து அவளைச் சுற்றி முழங்காலிடத்தொடங்கியிருந்தனர். இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எதையும் யோசிக்காமல் தன்னை நீக்கிக்கொண்டு கூட்டத்தோடு ஒன்றிப்போனான். கூட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு விடயமறிந்தவர்கள் நடப்பதைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அவேன்ர சபையிலை இருந்து பெரிய பாஸ்ராக்கள் வந்தவை, ஆமிப்பெரியவனோட நெமியன கூட்டிக்கொண்டு போகப்போகினம் போல, ஏற்பாடுகளுக்காக பெரிய பாதரைச் சந்திக்க முன்னுக்கு கூட்டிக்கொண்டு போட்டாங்கள், அவங்கள் போன கையோட மனிசி சந்தோசத்திலை செபிக்கத்தொடங்கினதுதான், நாலைஞ்சு மணித்தியாலமாச்சு எழும்பவே இல்லை, விசயம் முகாமெல்லாம் பரவ அவேன்ர சபைக்காரர் தேடி வரத்தொடங்கீட்டாங்கள், பாஸ்ரர் இன்னும் வரேல்ல, வந்ததும் வெளிக்கிட்டிடுவினம்`
`சபைக்காரர் காசாலை விளையாடுவாங்கள்`
மெல்ல மெல்ல வயிற்றெரிவுகளும் எழத்தொடங்கின, மரியம் அன்ரி நான்கைந்து மணிநேரமாக முழங்காலில் நின்று செபிக்கிறாள் எண்டால், பாஸ்ரர் வரப்பிந்தி விட்டால் அவளே ஒரு அதிசயத்தை நிகழ்த்திக்காட்டிவிடப்போகிறாள். இப்பொழுது அவர்களுக்கு நெருக்கமானவன் என்ற அடிப்படையில் தான் என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையே அவனுக்குப் பிடிபடவில்லை. வேடிக்கை பார்ப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடிய கருமம். ஆனால் இவர்களைப்போல பாஸ்ரர் மேலுள்ள நன்மதிப்பை தானும் இழந்துவிடக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டான். அவர் வெளியேறி தன் வாழ்க்கையை கம்பிகளுக்கு வெளியே அமைத்துக்கொள்வதுதான்சரி. இவர்களுக்கு அந்த மனுசன் முட்கம்பிகளைச் சுற்றி தலையில் வைத்துக்கொண்டு சிலுவையில் கிடக்க வெண்டும். அப்பொழுதுதான் மகிழ்ச்சியடைவார்கள். அவருடைய கூடாரத்தைச் சுற்றி நின்ற பெரும்பாலானவர்கள் `தண்ணீர்பாலத்தடியில்` பாஸ்ரரால் காப்பாற்றி அழைத்துவரப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்கள்தான்.
வலைஞர் மடம் கடற்கரையைப் பிடித்து மாலைவேளையில் புலிகளின் கனரக ஆயுதங்கள், மோட்டார் குழல்களைத் தாங்கிய அணியொன்று ஆட்காட்டிக்கொண்டே பகலில் கடந்து போன போது வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு `வண்டு சுத்துது, இஞ்சாலை வெளுக்கப்போறான், இவங்கள் என்னதுக்கு இதாலை போறாங்கள்` என்று யாரோ சொல்லிச் சலித்துக்கொண்டிருக்கும் போது பல்குழல் பீரங்கிகள் சனங்களின் கூடாரங்களுக்கும் பதுங்கு குழிகளுக்குமேலே தோன்றின. போதாதற்கு கடலில் இருந்து கலிபர்ச் சன்னங்கள் வானம் கடலில் சரிந்த கோட்டில் இருந்து புறப்பட்டு வந்தன. இடைவெளியே விடாமல் பொழியப்பட்ட சன்னதம். ஷெல்கள் விழும் குறுகிய இடைவெளிகளில் மட்டும் `அய்யோ` என்பதான ஓலங்கள் எழுந்து எழுந்து அடங்கின. இவள் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு பதுங்குகுழிக்குள் இவனருகில் சுருண்டு கிடந்தாள். அத்தைக்காரி பதுங்குகுழி வாசலில் ஒவ்வொரு ஷெல்லும் மரங்கிளையை மந்தி முறித்துக்கொண்டு கீழே விழும் சத்தத்தைப் பெருப்பித்து விட்டது போல் சுற்றிச்சுற்றி விழும்போதும் `அம்மாளாச்சி` என்று கூவிக்கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணப்படி வாசலில் உள்ளவர் தான் முதலில் சாவார்கள். ஷெல் பதுங்குகுழி வாசலைத்தான் தேடிவரும். ஆதலால் அவள் அவர்களுக்கு வரும் முதல் சன்னத்தை வாங்கிக்கொண்டு சரிவாள். பின்னர் இவர்கள் அனைவரும் பிழைத்துக்கொள்வார்கள். `உனக்கு பதுங்கு குழி என்றாலே மூச்சு முட்டும் அந்தப்பயத்தில்தான் வாசல்ல இருக்கிறது` என்று இவன் ஒவ்வொரு முறையும் கேலி செய்வான். `பங்கர் ஒரு நரகம்` என்பாள். நரகம்தான் பிழைத்திருப்பதற்கான நரகம். அன்றைக்கு எந்தச்சன்னமும் இவர்களின் பதுங்கு குழி வாசலுக்கு வரவில்லை, நள்ளிரவின் பின்னர் பல்குழல் கச்சேரி நின்றிருந்தது. ஆனால் இராணுவத்தின் துவக்குச்சன்னங்கள் மிக அருகில் வெடித்து வானைக் கிழித்துச்சென்றன. இவர்கள் வெளியே வந்தபோது யாருடைய ஓலமும் இல்லை. மனிதக்குரல்கள் அரிதாக்கேட்டன. காயம் கண்டு உத்தரித்த உடல்கள் இருட்டோடு கரைந்து விட்டன. சனங்கள் எதோ ஒரு திசையில் தப்பிச்சென்றிருக்க வேண்டும். கடலிடம் மட்டும் அசைவு தெரிந்தது. மெல்ல மெல்ல சந்தடிகள் எழத்தொடங்கின. ஷெல்கள் பிழக்காத பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்களும் ஓடித்தப்பாதவர்களும் தூரத்து சந்தடிகளாகத் தொடங்கி அருகில் வந்து சேரத்தொடங்கினர். யாரும் யாரையும் அழைக்கவில்லை. அதுவாகவே எழுந்த மெல்லிய மனிதப்பெருக்கு. இரண்டு திசைகளில் இருந்தும் வேட்டுச்சத்தங்கள் எழுந்தன. மெல்ல மெல்ல அவர்கள் எல்லோரும் நடுவில் சிக்கிக்கொண்டிருப்பது பிடிபடத்தொடங்கியது. குடும்பங்களும் தனிக்கட்டைகளுமாய் நாற்பது ஐம்பது பேர் இருந்தனர். கைக்குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் உட்பட எழுபதைத் தாண்டக்கூடிய சீவன்கள். கடற்கரையில் இருந்த தேவாலயத்திற்கு அருகில் யாரோ அழைப்பதாக குரல்கள் பரவின. அங்கே எல்லாமே யாரும் அறியாமல் தோன்றின. குரல்கள், சனங்கள் எல்லாமே. கால்கள் நடை எழ அங்கே நகர்ந்து போயின. நாய்கள் குரைத்தன. கைகள் இறுதியாக பற்றியிருந்த பைகளுடன் ஒவ்வொருத்தரும் இணைந்து சிறு கோடாகி தேவாலயம் நோக்கி நகர்ந்தனர். இவளுடைய பையையும் தன்னுடையைய உரப்பையையும் தோளில் ஏற்றிக்கொண்டு நடந்தான். அத்தைக்காரியையும் குழந்தையை ஏந்திய கைகளுடன் இவளும் . இவன் முன்னால் நடந்துகொண்டிருந்தனர். இரண்டு பக்கங்களில் இருந்தும் துவக்குகள் இவர்களைச் சுடப்பார்த்திருப்பது போல் உணர்வெழ முதுகு கூசிக்கொண்டே இருந்தது. நிறையப்பெண்களின் கைகள் இவளைப்போல குழந்தைகளை ஏந்தியிருந்தன. அசாதாரணமாக எந்தக்குழந்தையும் அழவில்லை. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும் போது மெல்லிதாகச் சினந்து உலகிற்கு மீண்ட வழியில் மீண்டும் ஆழத்துக்குச் சென்று துயின்றனர். அவர்களிடம் இருந்த அந்த ஆழ்ந்த அமைதி திடீரென்று வெறுமையான ஷெல்கள் உறுமிய வானத்தைவிடவும் இவனை அச்சுறுத்தியது. தேவாலயம் தலையில் சிலுவை அணிந்த பேரரக்கனைப்போல் இருட்டில் தெரிந்தது. எல்லோரும் தேவாலயத்தை நோக்கி வசியப்பட்டவர்கள் போலச் சென்றார்கள். தேவாலய வளவை நெருங்கும் போதுதான் யாரோ கேட்டார்கள்,
`எங்க போறம் ?`
`ஆமிக்கதான்`
இரண்டாவதாய் ஒலித்ததுதான் பாஸ்ரர் நேமியனின் குரல். தேவாலயத்தைக் கடந்து கடற்கரைச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க இயக்கம் விட்டு விலகிச்சென்ற நீண்ட மண்மேட்டை நோக்கிச்சென்றார்கள். நேமியனைச்சார்ந்த சில குடும்பங்கள் முன்னால் சென்றனர்.
`பாஸ்ரர் ஆண்டவரும் நீங்களும் தான் இப்ப எங்களுக்கு துணை`
யாரோ ஒரு பெண் நாடக ஒத்திகையை இருட்டில் செய்வதுபோல் கேட்டது. மிகவும் செயற்கையான வேண்டுதல் போல் இவனுக்குப்பட்டது. இப்போது யாரும் பிரார்த்தித்தால் அவர்களைக் கேலி செய்வதில் இருந்து அவர்கள் மீது இரக்கப்படத்தொடங்கிவிட்டான். அதுவே பெரிய வியப்பை அவனுக்கு அளித்திருந்தது. அந்தப்பெண் நாடகீயமாகச் சொன்னதை எல்லோரும் விரும்பியதைப்போலிருந்தது. கனத்த அமைதிக்கு மத்தியில் யாரோ வேட்டியைக் கிழித்து வெள்ளைக் கொடி ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அந்த மணல் மேடுகளுக்கு அப்பாலுள்ள புதர்காடுகளில் ஆமிக்காரன் இருக்கிறான் என்று எல்லோரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர். மேட்டில் ஏறும் போது புலிகள்தான் `மூவ்` எடுக்கிறார்கள் என்று அவர்கள் துவக்குகளைச் சுழற்றிப்பிடிக்கக் கூடும். அதனால் முதலில் வெள்ளைக்கொடியை உயர்த்துவதுதான் எல்லோரளவிலும் இருந்த முதல் திட்டம். இவளைப்பார்த்தான் இருட்டில் தன் கால்களைப் பார்த்துக்கொண்டே குழந்தையை அணைத்தபடி நடந்துகொண்டிருந்தாள். எல்லோரும் மேட்டின் சரிவில் சரிந்து கிடந்தனர். இப்பொழுது உச்சக்காட்சிகள் தொடங்கவிருந்தன. நேமியன் சர சரவென்று பையில் இருந்து எதையோ உருவி எடுத்தார். வெள்ளையாக. இன்னும் கொஞ்ச வெள்ளைக்கொடிகளா? இல்லை அதுவொரு வெள்ளை உடை. அவருடையதாக இருக்க வேண்டும். சரசரவென்று அதற்குள் நுழைந்தார். ஓ.. ஒரு உயிருள்ள வெள்ளைக்கொடி. பிறகு அவர் மரியமன்ரியின் இன்னொரு பையில் இருந்து பைபிளையும் சிலுவையையும் எடுத்தார்.
`ஆண்டவரின் நாமத்தோடு நான் எழுந்து நிற்கப்போகிறேன், என்னுடன் ஒருவர் எனக்குப்பின்னால் நின்று வெள்ளைக்கொடியை ஏந்த வேண்டும், அதை இருட்டில் அசைக்க வேண்டும், அவர்கள் நம்மைச்சுட்டாலும் சுடலாம், ஆனால் ஆண்டவரின் பெயரால் நாம் அவருடன் பரலோகத்தில் தொடர்வதா இங்கேயே தொடர்வதா என்று அவரே முடிவு செய்யட்டும்` என்றார். அவர் தன்னுடைய சாவை உறுதியாக நம்பவில்லை என்றுதான் தோன்றியது. அவரிடம் தெரிந்த நடுக்கம் வார்த்தைகளில் மட்டும் இல்லை என்பதே அவரளவில் இருந்த ஒரே நின்மதி. கொஞ்சநேரம் அமைதி மண்மேட்டில் சரிந்தே கிடந்தது. யாரும் எழவில்லை. மரியம் அன்ரி கூட. அவள் பையயை அணைத்துக்கொண்டு விசும்பிக் கொண்டிருந்தாள். இவன் சட்டென்று எழுந்தான். இவள் இவன் எழுவதற்கு சில நொடிகள் முன்னால் இவன் கையைப் பிடித்து அழுத்தி விட்டாள். அவள் அழுத்தாமல் இருந்திருந்தால் சிலவேளை எழ முடிவெடுத்த பிறகும் தயங்கி இருப்பான். அத்தைக்காரி பதறினாள். வெட்டுப்பட்ட கையைக் கொண்டு அத்தைக்காரியை அடக்கினாள்.
`விடுங்கோ`
மரியம் அன்ரியின் உடலில் சொற்கள் வற்றத்தொடங்கின. அன்றைக்கு மேட்டில் பாஸ்ரருக்குப்பின்னார் கொடியை அசைத்துக்கொண்ட போது, மரியம் அன்ரியிடம் இருந்து இப்படியொரு செபம் இரையும் குரலில் கேட்டுக்கொண்டு இருந்ததை கூட்டத்தினுள் நின்று இவன் நினைவு கூர்ந்தான். இவர்களைப் பயமுறுத்த அவர்கள் ஏழெட்டு சன்னங்களை மண்மேட்டில் சுட்டுப்புதைத்தனர், சில மேல் வெடிகளையும் வைத்தனர். கால்கள் நடுங்க நெமியனின் பின்னால் நின்று கொண்டிருந்தான். கைகள் கொடியை அசைப்பது உணர்வில் தட்டுப்படவில்லை. ஒருவேளை ஏதேனுமொரு சன்னம் இவன் தலையைச் சிதறச் செய்தாலும் கைகள் கொடியை நான்கைந்து அசைப்பேனும் அநிச்சையாக அசைத்துக்கொண்டிருக்கும் என்றே தோன்றியது. அந்தக்காட்சியைக் கற்பனைக்கு எடுக்கும் போது அநிச்சையான சிரிப்பொன்று ஒன்று உதட்டில் இவனை அறியாமல் உட்கார்ந்திருந்ததை பின்னாளில் நினைவு கூர்ந்தான். அன்றைக்குச் சுடப்பட்டிருந்தால், சீவன் போன பிறகும் அந்த ஆழ் முறுவல் உதட்டிலேயே இருந்திருக்கும் என்று தனக்குச்சொல்லி வைத்திருந்தான்.
செபித்துக்கொண்டிருந்த மரியம் அன்ரியின் உடல் நடுங்கத்தொடங்கி விட்டது. தொடைகளில் தொடங்கி வானுக்கு உயர்த்தி இருந்த கரங்கள் வரை அவ் நடுக்கம் வலுத்துச்சென்றது. அவள் மயங்கிச்சரியப்போகிறாள் என்பதை உணர்ந்து சுற்றி நின்ற பெண்கள் அவளின் முழங்கால் கோலத்தையும் செபத்தையும் குழப்பாத வண்ணம் அவள் மேல் கைகளை ஊன்றி நின்றனர். அவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் வாயில் செபமும் எழுந்தது. சுற்றி நின்ற கூட்டத்தில் முதலெழுந்த எள்ளல்களும் பின்னர் இரக்கமும் அடங்க. மரியத்தின் மனவுறுதி அவர்களை அசைத்தது. கைகள் அனிச்சையாகக் கூப்பின. அங்கே நின்றவர்களில் கிறிஸ்தவர்களோ இந்துக்களோ சபைக்காரர்களோ நின்றிருக்கலாம் ஆனால் அனிச்சையாக எல்லோரிடமும் எழுந்தது ஒரே பிரார்த்தனைதான். இவன் சுற்றிப்பார்த்தான். ஒரு சில பெண்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவன் நுழைந்த போது இருந்த கூட்டமல்ல அது. மரியம் அவர்களைத்தாண்டி எதையோ தொட்டிருந்தாள். அது அவளில் இருந்து பரவி அவர்களைத் தொட்டது. இவன் கூட்டத்தில் நிற்கமுடியாமல் தத்தளித்தான், மெல்ல முன்னகர்ந்தான். என்ன செய்யப்போகின்றோம் என்று எந்தத் தீர்மானமும் இல்லை ஆனாலும் மரியத்தை நோக்கிச்சென்றான். அவளுடைய தொடைகள் நீலம்பாரித்திருக்க வேண்டும். அணிந்திருந்த பாவாடையைத்தாண்டிய முழங்கால் நரம்புகள் நீலப்புழுக்களைப்போல நெழிந்து புடைக்கத்தொடங்கின. கால்களுக்கு இரத்தம் போகவில்லை என்பதை இவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் நெருங்குவதற்கு முன்பு குரலெழுந்தது.
`மரியம்`
கூட்டத்தை விலக்கிக் கொண்டு பாஸ்ரர் நேமியன் அங்கே தோன்றினார். பாய்ந்து வந்து மரியத்தை அணைத்து எழுப்பினார். மரியம் கண் விழித்து முகத்தின் எதிரில் நின்ற நேமியனைப்பார்த்து ஈரத்துணிமுடிச்சு அவிழ்வது போலொரு புன்னகையை இழக்கினாள். அவரும் அவளை நோக்கி புன்னகைத்தார். அவள் மெதுவாக உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று மீழும் தோரணையுடன் `ஆண்டவரின் திருக்கோயில்` என்றாள். நேமியனின் கண்கள் பொல பொலவென்று கொட்டத்தொடங்கின.
`உனக்கு அவரே வந்து சொன்னாரா?