தாமசி | காளம் 03 

செட்டிகுளம் மெனிக்பாமிற்கு தெற்கே  ஒன்றரை மைல்கள் தள்ளி இருந்த  காட்டுக்குள் , நாகர்களுடைய ஈமைத்தாழிகளைத் தேடிவந்த தொல்லியல்காரர்கள் தோண்டிய  துளைகளிலொன்றை  இளம் அன்னை அகழான் வளையாக  ஆக்கிக்கொண்டது. அதே காட்டின் அடர் பகுதியொன்றில் சருகுப் புலி ஒன்றுடன்  நிகர் நின்றதில் இடது காற் தொடை கடித்துக் குதறப்பட்டு  வீறிட்டுக்கொண்டே புதருக்குள் பாய்ந்து தப்பியது  தாமசி என்ற  கணநரி. கடியுண்ட காலை இழுத்து இழுத்து வந்து அவ்வளையின் வாசலில் படுத்துக்கொண்டது. காயத்திலிருந்து பெருமளவு குருதி வெளியேறி உடல் சோர்ந்து கொண்டிருந்தாலும், அதன் மூக்கு கூர் மழுங்காது உள்ளுறையும் அகழான் குட்டிகளை மணத்துப்பிடித்தது. மயிரடர்ந்த தன் வாலை மெல்ல பொந்திற்குள் செலுத்திவிட்டுக் காத்திருந்தது. அதை அகழான் பிள்ளைகள் கவ்விய போது சட்டென்று அதை ஒரே இழுவையாக இழுத்து வாலோடு வந்தவற்றை ஒவ்வொன்றாக உண்டது.  நரிக்கு நல்லாண்டும், தீயாண்டும் இல்லை என்பது  முது சொல். முடிவுக்கும் ஆற்றலுக்கும் நடுவில் வாழ்பவை. எப்படியும் அவை பிழைத்துவிடும். அகழான்கள் ஒழிந்த பிறகு அவ்வளையைத் தனதாக்கிக் கொண்டது தாமசி. கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிய பின்னர் இடது தொடையின் ஆழத்தில் விழுந்த கூனினால் அதனால் உடலைச் சமன் செய்து நடக்க முடியவில்லை. அறணையொன்றைப்போல வளைந்து நடந்தது. நரிக்கு அம்புடல் என்பர் வேட்டைக்காரர்கள். காற்றில் எழுந்து தன்னை வில்விடுபடும் அம்பைப்போல் மாற்றிக்கொண்டு சிறு பொந்துகளையும் வளைகளையும் பிளந்து அங்குறையும் சீவன்களைக் கவ்வுபவை. அதனுடைய உடல் நிகரங்களை இழப்பதனால் முதலில் தன் கூட்டத்தை இழக்க நேரிடும். காயம்பட்ட தாமசி அக்கூட்டத்தின் பாதுகாப்புக்கும் வேட்டைக்கும் பெருங்கேடு. அதை அக்கூட்டமே கொல்லக் கொடுக்கும். அதனால் தாமசி தனியாகத்தான் பிழைத்தாக வேண்டும்.  கோடை தொடங்கியிருந்ததால்  அகழான்களும் , நண்டுகளும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்து விட்டன. தினமும் உணவு கிடைக்குமிடமொன்றைக் கண்டறிந்து செல்ல வேண்டியிருந்தது. மன்னார் மதவாச்சி வீதியை மாலை வேளை ஒன்றில் தாண்டி ஊர்ப்பக்கம் இறங்கியது.  கதிர்காமர் நலன்புரி நிலையத்தை அண்மித்து வளைந்து செல்லும் அருவியாற்றைத் தாண்டி பாலம் ஒன்றின் கீழ் மெல்ல நடந்து  நலன்புரி நிலையத்தின்  இராணுவ காவலரண்களுக்கான வழங்கல் பகுதியைக் கண்டடைந்தது. அங்கிருந்த கூடுகளில் கோழிகள், ஆடுகள் இருந்தன. அவை உணவுக்காக அழிக்கப்பட்டு எச்சங்கள் வெளியே வீசப்படும். தேடி உண்டது. ஒவ்வொரு நாள் மாலையிலும்  அங்கே சென்று கழிவு இறைச்சிகளை உண்டு வந்த தாமசி மெல்ல மெல்ல கூட்டுக்குள் தாழிடப்பட்டிருந்த உயிர்க் கோழிகளைப் பிடித்து உண்ண நினைத்தது. அது  நன்றாக உண்பதன் மூலம் தன்னுடைய  பழைய நேர் உடலை அடைய நினைத்தது. கொல் மிருகத்திற்கு கூன் என்பது சாவுக்கு நிகரானதுதான்.  புலியோ, ஓநாயோ  என்றால் இத்தனைக்கும் தாமசி அடைந்த காயத்தையும் அதன் விளைவையும் அடைந்திருந்தால்  வேட்டைதப்பி மாண்டிருக்கும். ஆனால் நரிகள் பிழைப்பதற்கென்றே தகவமைந்தெழுந்தவை. அவற்றுக்குள் உள்ளுறையும் வேட்டைக்குணத்தை விடவும் அதன் பிழைக்கும் வழிகள் மேம்பட்டவை. பெரு மிருகம் ஒன்றின் அன்றாட  உணவின் மிச்சங்களில் தங்கி நிற்கும் இயல்பு பல்லாயிரம் ஆண்டுகளாக அவற்றின் வாழ்க்கை மீது திரண்டு விட்டிருந்தது. தாமசி அக்குணத்தை காயம் கண்டபிறகு முழுதடைந்தது. தன்னுடைய உயிர் அச்சத்தை எரித்தே தன் தினத்தை வாழ வேண்டியிருந்தது. அதனுடைய ஊழையைடைந்த உடலே அதன் பிழைக்கும் குணத்தின் மூர்க்கத்தையும் தந்திரங்களையும் மேம்படுத்திச் சென்றது. அது கூடுகளுக்கு கீழே வளைகளைத் தோண்டி , இடைவெளிகளுக்குள் நுழைந்து சாமக்கோழிகளை சத்தமின்றிக் கழுத்தில் கவ்வி இழுத்து வரும் வழிகளை அடைந்தது. தாமசி வெற்றிகரமாக கூண்டுக் கோழிகளை ஒவ்வொன்றாக் பிடித்து உண்ணத்தொடங்கியது. 

……

மெனிக் பாம் என்ற பெயர்ப்பலகை உடைந்து தொங்குமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான் உக்காரா. கோடையில் வெய்யில் அடங்கும் நேரம் சற்று  வெப்பக்காற்று வீசும். `காட்டு வெக்கை` என்பர் ஊரவர்.  வியர்வை சேட்டினுள் கோடோடியது. நிலப்படத்தை எடுத்து இடத்தைச் சரிபார்த்து, நான்காக மடித்து நீளக்காற்சட்டைப் பைக்குள் திணித்தான். கிழவர் சற்று நேரத்தில் வந்து விடுவார். நன்றாக உறங்கி எழுந்து வந்ததால் மனமடைந்திருந்த நிதானம் எந்த எண்ணமும் இரையாத நின்மதியைத் தந்தது.  கதிர்காமர் முகாமினுள் நுழையும் பிரதான வாசலை நடந்து நெருங்கினான். வாசலில் நின்ற கோப்ரல் துசார `வணக்கம் மாத்தையா“ என்றான் தமிழில். அவனுக்கு வணக்கம் மட்டும்தான் தமிழ் தெரியும், இருபத்தியாறு வயது ஆகிறது. பஸ்துன்ரட்டை என்ற சிங்கள ஊரைச் சேர்ந்தவன்.  குடும்ப வறுமையினால் இராணுவத்திற்கு வந்தவன்.  2008 இல் மன்னாரில் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் சண்டை தொடங்கிய போது வழங்கல் பகுதியில் இருந்தான். பின்னர் மெனிக்பாமில்  கதிர்காமர் நலன்புரி நிலையத்தின் இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டான். இங்கும் அவனுடைய பணி உணவு வழங்கலும் வழமையான வாசல் காப்பும். நலன்புரி நிலையம் அமைக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து உக்காராவிற்கு அவனுடன் நல்ல அறிமுகமிருந்தது. அதிகபட்சம் சிகரட் கேட்பான். வாங்கி வந்து கொடுப்பான். அரச அதிகாரி என்று இவனை நன்கு கனம் பண்ணுவான். தான் அவ்வளவு பெரிய அதிகாரி இல்லாவிட்டாலும்,  அவனுடைய முகமன்களை உக்காரா தவிர்த்துவிடவில்லை. அவனை நெருங்கி பொக்கற்றில் பேப்பரில் சுற்றி வைத்திருந்த நான்கு சிகரைட்டையும் கொடுத்தான். பல் விரிய பெற்றுக்கொண்ட துசார அருகில் இருந்த போஸ்ட் கம்பத்தின் உச்சியைச் சுட்டிக்காட்டினான்.  முகத்தாடை பெயர்க்கப்பட்டு உடல் முழுவதும் காயத்திடன் வாலில் கயிறிடப்பட்டு தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது தாமசி. அதன் கண்கள் திறந்திருந்தன. இவனை வெறிக்கும் அவற்றைத் தவிர்த்தார். ஊன் மணம் குறிப்பிட்ட தூரம் வரை காற்றிலிருந்தது.  அதைக் கட்டியிருந்த  நூல் சற்றுத்தூரத்திற்கு மேல் தெரியாததால் தாமசி தலை  கீழாக  காற்றில் மிதப்பது போலிருந்தது.

`கோழிக்கள்ளனை பிடிச்சனாங்கள்` என்றான் துசார பெருமையாக.

உக்காரா அச்செந்நரியை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். துசார இவனைக் குரலினால் கலைத்து, மாத்தையா இதைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று இவனைக் கூடக் கேட்காமல் வலது மணிக்கட்டில் பின்னிய கறுப்பு நூல் ஒன்றைக் கட்டத்தொடங்கினான். அதில் பழுப்பு நிறத்தில் தாமசியின் பல் ஒன்று இழைநூலினால் கவ்விப்பின்னப்பட்டிருந்தது. 

`நரிப்பல்லுக்கு எந்தப் பேயும் அண்டாது எண்டு ஊரில் நம்பிக்கை, உங்களுக்கு புத்தர் சொன்ன நரிக்கதை தெரியுமா? என்றான். அவனுடைய வேடிக்கையான குணங்கள் அனைத்தும் சிரிப்பிலேயே அமர்ந்திருக்கும்.  இதோ ! இரகசியங்களை வெளிப்படுத்தப்போகிறேன் என்ற முத்தாய்ப்புடன் பாவனை எழும். எப்படியும் அதைச் சொல்லாமல் விட மாட்டான். இரசிக்கும்படியும் இருக்கும். அவனுக்கும் ஆண்களைப்பிடிக்கும்.  ’நரிகள் பேய்களைச் சேர்ந்தவை, மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் நடுவில் வாழ்பவை என்றாராம் புத்தர்’  கொஞ்சம் இடைவெளி விட்டு தோளில் இருந்த துவக்கை அரண் கட்டையில் வைத்து விட்டு ’புத்தர் சொன்னார் என்று இத்தனை ஆயிரம் கதைகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள் பாத்தீர்களா  மாத்தையா? அம்மா சொல்வாள் ‘ஆயிரம் கதைகளால் ஆனவர்தான் புத்தர்’ சொல்லிக்கொண்டே கயிற்றை மினக்கெட்டு கட்டி முடித்தான். பிடித்திருந்த கையை சில கணங்கள் தொட்டுக்கொண்டே உக்காராவை நிமிர்ந்து பார்த்துவிட்டு  பார்வையையும் கையையும் விடுவித்தான். அறியாச்சொல் ஒன்று இருவராலும் கொடுக்கவும் பெறவும் பட்டது. உக்காரா எதற்கும் பிடிகொடுக்காதவன் போன்ற தன் உறைந்த கண்களை மீண்டும் பெற்றான். நரிப்பல்லைப் பார்த்துச் சிரித்தான். அலுவலகத்தில் இது நரிப்பல் என்று யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இவனை அவர்கள் `நரி` என்ற காரணப்பெயரினாலே சங்கேதமாக தமக்கிடையே சங்கேதமாக அழைத்துக்கொண்டனர்.

வெங்கலசெட்டிகுளம்  பிரதேச செயலகத்தில் வேலைக்கு அமர்ந்து ஆறுவருடங்களுக்கு மேலாகிற்கு. காணிப்பகுதியில் உதவி அதிகாரிகளில் ஒருவராக இருந்தான். இவனுடைய மேலதிகாரிகளுக்கு முன்னால் எப்பொழுதும் காட்டும் குழைவின் பின்னால் அவர்களை வேரறுக்க எண்ணும் நஞ்செண்ணம் ஒன்றேனும் வைத்திருப்பான் என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் முக்கியமான வேலைகளை இவன் தலையில் கட்டிவிடுவதற்கு என்றும் தயங்கியதில்லை.  அவர்கள் இவனை `நரி` என்று  தங்களின் சங்கேத உரையாடல்களில் சீண்டிச்சிரிக்கும் போது அவன் இன்னும் இறுகி  நஞ்சைப் பெருக்கிக் கொள்வான். அவன் கள ஊழியனாக பயிற்சிக்கு அநுராதபுரம் அழைக்கப்பட்ட போது, அலுவலகத்திற்கு இவன் நியமனக் கடிதம் கிடைக்கப் பெற்றிருந்தது. அவர்கள் இவனுடைய பெயரைப் பார்த்து விட்டு `சிங்களவன்` என்று தீர்மானித்திருந்தார்கள். அவன் அலுவலகம் திரும்பிய பிறகும் தானொரு பச்சைத்தமிழன் என்று நிரூபித்த பிறகும் காரணமழிந்தாலும் அவர்களுக்குள் அவன் பற்றித் தங்கிய முதற் சொல்லின் நிழல் அப்படியே இருந்தது. யாருடனும் பேச்சுக்கொடுக்காத , அரட்டைகளில் பங்கெடுக்காத ஒருவனை அவர்கள்  கண்ட போது இடைவெளிகள் விரிந்தன. பாராபட்சமின்றி அனைவரும் வெறுக்கும்  நபர் என்றானான். தவிர ஓர் கள ஊழியன் என்ற வகையில் அவன் வேலை நாளில் முக்கால் பங்கு நேரம் அலுவலகத்திற்கு வெளியேவே இருந்தான்.  அவனோடு பேச்சுக்கொடுக்க முற்பட்டவர்களுக்கு எல்லாம் தன்னைப் பற்றி வெவ்வேறு கதைகளைச் சொல்லி வைத்தான். பலர் அவனொரு `ஆமி இண்டலிஜண்ட்` இவனும் அப்பாத்திரத்தையே அதிகம் பொருந்தியிருக்கப் பார்த்தான். அவனுக்கு அந்தப் பாத்திரம்  அவர்களின் அன்றாட கேலிக்கூத்துகளில் இருந்து விடுதலையளித்தது. இவனுடைய உயர் அதிகாரிகளை கச்சேரியில் எழுப்பி வைத்து  அரசாங்க அதிபரோ, வேறு அதிகாரிகளோ கேள்விகளேதும் கேட்டால் `இவன்தான்`  உளவு சொன்னவன் என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். அடுத்த நாளே சீறி விழுவார்கள். ஆனால் உள்ளூர அச்சமெழ அடங்கிப் போவார்கள். அலுவலகங்களில் மேலதிகாரிகளிடம் பெரும்பாலும் தேவையற்ற குறுக்கம் ஒன்று இருக்கும்.  இவனிடம்  இருந்த குறுக்கத்தின் அடியில் ஓடும் பெருங்கேலியை அவர்கள் உணரும் படியே குறுகி நிற்பான். பணிதலின் மூலம் கொடுக்கப்படும் எச்சரிக்கை சாவினது அச்சத்தைக் கொடுக்கும், அவர்களைத் தொந்தரவு செய்யும், உள்ளூர இருந்து நோய் கண்டு பரவும். ஒவ்வொருத்தரும் கொல்லும் விலங்காய் விழித்திருப்பார்கள்.

சலசலப்பிற்கு அஞ்சாமல் அம்மனித வனத்தினுள்  உலாத்தினான்.  வவுனியாவில் விடுதலைப்புலிகளின் எல்லைகளில் இருந்து தப்பி வரும் சனங்களை அடைத்து வைக்க  நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட தொடங்கிய பிறகு ஒரு பெரிய வேலைச்சுமையை இவன் மேல் போட்டனர். இரவு பகலாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மெனிக்பாமில் முதலில் கதிர்காமர் முகாம் அமைக்கப்பட்டது, அதன் நிர்வாக வேலைகளை செட்டிகுளம் பிரதேச செயலகமே கவனித்து வந்தது.  கள ஊழியர்களின் இவனையே அவர்கள் கசக்கிப் பிழிந்தார்கள்.  ஆமி இண்டலிஜண்ட் பூச்சாண்டிக் கதை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு பழகி விட்டிருந்தது. தவிர அலுவலக ரீதியான வேலைகளை தட்டிக்கழிக்கவும் முடியாது.  இயல்பிலேயே மூளையை ஏதோ ஒன்றில் போட்டுக்கொள்வது அவனுக்கு பிரியமானதுதான். எல்லா வேலைகளை எடுத்துக்கொண்டு கருமமாற்றினான். அது அவர்களை இன்னும் அச்சப்படுத்தியது.  மீண்டும் அவன் மேல் அச்சம் எழத்தொடங்கியது. முகாம்களின் வேலைகள் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து செய்ய வேண்டியது. நுணிநாக்கில் இவனுடைய இயல்பான சிங்களத்தை இராணுவ அதிகாரிகள் மனம்விட்டுப் பாராட்டினார்கள். மீண்டும் `ஆமி இண்டலிஜண்ட்` என்ற கதை மேலெழுந்தது. அவனும் அதையே விரும்பினான். அவற்றுக்கு அவனே சாட்சிகளைக் கொடுத்தான். கதைகள் பெருகப் பெருக அவர்களின் கண்களில் தெரியும் வெறுப்பையும் அச்சத்தையும் உக்காரா வெகுவாக இரசித்தான். வேலை எவ்வளவு ஆளை முறிக்கும் அலுப்பைத் தந்தாலும் அந்த வெறுப்பின் கண்கள் இவனுக்கு அளவிலாத  ஊகத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. யோகத்தையடைந்தவன் போல அக்கதைகளின் மேல் அம்பாரி ஏறிச்சென்றான். அந்தக்காட்டில் நரிதான் ராசாவாகவிருந்தது.

வீதியில் சந்தடியொன்று உருவானதை துசார கண்டு இவனை அசைத்துக்காட்டினான்

வீதியில் நின்று  மறுகரையில் தெரிந்த கதிர்காமர் நலன்புரி நிலயத்தின் வாசற் பக்கம் பார்த்தான். வீதியில் பணிக்கர் வருவது தெரிந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் ஏறமாட்டார்.  சற்று முன் கடந்து சென்ற பேருந்தில் எறி வந்திருக்க வேண்டும். அழுக்கேறிய வேட்டி  , அலை நீர் நின்று வற்றிய தாடாக மணல் போலச் வரிவரியாகச் சுருங்கிய வெற்று மேனி, தசையாடக் கிடந்தது. உருத்திராட்சங்கள் ஆடும் கழுத்து, பட்டை நீறு , கையில் தண்டம் போலொரு கோல். கால்களை எத்தி எத்தி மிதிப்பார். மொத்த உடலும்  உதறி உதறி அடங்கும்.  நெஞ்சில் கனலுள்ள கிழவர்.  சித்தமும் சொல்லும் தேயாதவர். இன்றைக்கும் நாடகத்தில் அவரளவுக்குரிய  நடிகர்கள் மன்னார் பக்கம் அரிது.  `பணிக்கன் சொல், வேழம்` என்பார்.  அவ்விடத்திற்கும் அவருடைய கிராமத்திற்கும் குறைந்தது நான்கு மைல் இருக்கும்.   மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் என்றால் சட்டென்று வேட்டியை அவிழ்த்து குண்டியில் இருக்கும் படுக்கைப் புண்களைக் காட்டுவார். எரிகாயம் ஆறி உரிந்தது போல், செந்தோல் எழுந்திருக்கும். அவ்வளவு சுத்தமான புண்களை இவன் கண்டதில்லை. எவ்வளவு தூரமும் தன்னைத் தள்ளிக்கொண்டு நடப்பார்.  

அவரும் இவனைக் கண்டுவிட்டார்.  துசாரவிடம் விடயத்தைச் சொல்லி விடைபெற்றான். கை காட்டி விட்டு வீதில் இருந்து காட்டுப்பக்கமாக இறங்கினான். வீதி செப்பனிடப்பட முதல் நிலத்தோடு அணுக்கமாயிருந்தது. இப்பொழுது ஒரு அடிக்குக் குறையாமல் மேலேற்றியிருந்தார்கள். மெனிக் பாம் – செட்டி குள கிராமங்களில்  மாரிகாலங்களில் அருவியாறு மேலேறி வெள்ளத்தைப்பெருக்கும் அதனால் வீதி அரித்துச் செல்லாமல் நான்கைந்து படை மேலேற்றி விளிம்புகளில் கிரவலால் இறுக்கியிருந்தார்கள். கிரவலில் கால் வைத்து இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கழிக்கு இடையில் புதைந்து கிடக்கும் உருளைப் பரல்கள் கால்களை உருட்டி வழுக்கிவிடும். நிதானமாகக்  இறங்கி வருந்த போது புதர் வெளித்திருந்த காட்டுக்கரை நிலம் அவனைத் துணுக்குறச் செய்தது. அதனிடமிருந்த செம்மை, இதுவரை நிலமொன்றில் கண்டிராதது. குந்தியிருந்து தொட்டுப்பார்த்தான்.  மணலைக் கைகளில் அளைந்தான். பொழுது ஏறக்குறைய சாய்ந்திருந்தாலும் நிலத்தில் சூடு குறையவில்லை. மாலை மூன்று மணிக்கு மேல் காட்டின் எழுச்சியைத்தாண்டி கதிர்கள் அந்நிலத்தைத் தொட்டிருக்காது.   பணிக்கர் திரும்பிப்பார்த்து  வெற்றிலை வாயால் சிரித்தார். . இவனுக்குள் ஓடுவதைப் பணிக்கன்  கண்டான்.  இரண்டோ மூன்று முறைதான் பணிக்கரிடம் வந்து போயிருக்கிறான். பணிக்கர் ஆட்களை உய்தறியும் அழப்புதையும் கண்னுள்ளவர். மனிதருக்கு எண்பதிற்கு குறையாமல் வயதிருக்கும். சுற்றியுள்ள கிராமங்களில் அவரே கடைசிப்பணிக்கர். நாடகம் தவிர தற்பொழுது எதிலும் ஈடுபாடில்லாமலிருந்தார். வெற்றிலைக் கூழை பொளிச்சென்று பக்கவாட்டில் துப்பி விட்டு. மண்ணை அளைந்து கொண்டிருக்கும் இவனைப் பார்த்தொரு அங்காரச் சிரிப்புடன் 

’முழத்தான் காடு, சாமத்துக்கு மேலதான் குளிரும் பெடியா’

நிமிர்ந்து , தலையசைத்தான். அவன் கண் கிழவரை விழுங்க விரிந்தன. ‘வித்தியாசமான மண்ணா இருக்கு, இன்னும் பங்குனி கூட நெருங்கேல்ல, குளிர்காலம்.  பின்னேர வெய்யில் கூட காட்டின்ர விசாலத்தைத் தாண்டி விழுந்திராது.   உதிர்ந்து கிடந்தாலும் சிவப்புக்கழி போலத்தான் தெரியுது. ஆனால் கழியில்லை.  ரோட்டுக்குப் போட்ட  கிரவல் மண்ணும் பெரிசா  கலந்த மாதிரி இல்லை. கிரவல்ல மணற் குறுனி பெரிசா இருக்கும்.  செங்களி வெளியிலைதான் சுடும்  வெய்யில் இருக்கேக்க மட்டும்தான் வெப்பத்தைத் தேக்கும். மற்றபடி உள்ளுக்கு விடாது. மணல் அளவுக்கு சூட்டை வச்சிருக்காது. இந்த மண் வித்தியாசமாக கிடக்கு.சூளையில  எடுத்த மண் போலக் கொதிச்சுக்கிடக்கு’ 

கையில் அள்ளிய மண்ணைக் கைவிடாமலே நிமிர்ந்தெழுந்தான்.  பணிக்கர் அவனுடைய கண்ணை ஊடுவிப்பார்த்தார்.  ஆழம் போய் சட்டென்று பார்வையை விலக்கினார். கண நேரம்தான் ஆனாலும் உட் தொட்டது. . ‘வா’ என்று  காட்டுக்குள் இறங்கி ஒற்றையடிப்பாதையில் நடந்தார். கையில் இருந்த கோலை ஊண்டி நடக்கத்தான்  வைத்திருப்பார் என்று நினைத்தான்.ஆனால் பாதைக்குக்  குறுக்கே சாய்ந்திருந்த கொடிகளையும் முள் முனைகளையும் விலக்கிக் கொண்டே வேகமாகப் போனார். அவர் இவனிடம் பரிவையோ , அன்பையோ காட்டாமலே மனதிலோர் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை விரும்பினான்.  

கதிர்காமர் நலன்புரிக் கிராமத்தை அமைக்க இடம் தேடிய போது , கிழவர்தான் இவனுக்கு இடம் காட்டினார்.  விடுதலைப்புலிகளின்  கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து அவ்வப்போது வெளியேறிய மக்களை அங்கே வைத்திருந்தார்கள். ஏறக்குறைய  முட்கம்பிகளுக்குள் இருந்த சிறிய கிராமம் போல மெல்ல மெல்ல உருவானது. அவ்விடத்தில் புதுக்கிராமம் ஒன்று அமைவதற்கான சூழலிருந்தது. அருவியாறும்,  சமதரையும் ஒருங்கி இருந்தது. பெரிய ஐதான மரங்களும் ஓங்கியிருந்தன.  யானையோ ஏனைய காட்டு விலங்குகளோ அண்டாத  இடமாக அதைத் தேர்ந்தவர் பணிக்கர்தான். வன்னியில் போர் உக்கிரம் கொண்டாடிக்கொண்டிருந்தது. சனங்கள் சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது புதிதாக இரண்டு அல்லது மூன்று பெரிய முகாம்களுக்குரிய இடங்களை அருவியாற்றங் கரையில்  கண்டுபிடிக்கச் சொல்லிக் கட்டளை வந்திருந்தது.

பணிக்கர் காட்டை விலக்கிக்கொண்டு எட்டி நடந்தார். அவருடைய தோரணையிலும் முகத்திலும் என்றைக்குமில்லாமல் புது ஆவல் வந்திருப்பதை இவன் கவனிக்கத் தவறினானில்லை.

‘கனதூரம் போகத்தேவையில்லை ஆத்தங்கரை வரைக்கும்தான் பிளானிலை இருக்கு’

எதுவும் பேசவில்லை. ம்ம் மட்டும் கொட்டிக்கொண்டு சென்றார். 

ஏதும் பிரச்சினையோ ?

’நாநூறு ஐநூறு பேர் இருக்கிற கிராமத்தை அமைக்கிறது வேற, பல ஆயிரம் பேருக்கு முகாம் அமைக்கிறது வேறை பெடியா.  நிலம் குற்றம் தாங்காது. ஒரே இடத்தில பட்டிமாடுகளை அடைக்கப்போறாங்கள் போலத்தான் கிடக்கு. என்னாலை இந்த இடத்திலை முள்ளுக்கம்பி வேலிக்குள்ள் ஆயிரம் ஆயிரம் முகங்களை இப்பவே பாக்க முடியுது.  சண்டை சதிர் ஆடி அனுப்பின சனத்தை ஒரே இடத்திலை அடைக்கப்போறான். சண்டைக்குப்பிறகும்  , இங்கை நடக்கப்போறதும் அழிவு எண்டுதான் நான் சொல்லுவன். மனுசரிலை ஓநாயும் , நரியும், நாயும் இருக்கு. எல்லாம் பாக்க ஒரே இனம் எண்டு சொன்னாலும் ஒவொண்டும் வேற வேற திக்குள்ளவை.  ’வெக்கை குடிகொல்லும்’ கடைசி சொற்களை  மந்திர வார்த்தைகளை போல் தன் இயல்பான  பேச்சிலிருந்து அல்லாமல் , ஆழ்ந்து  முது சொலவடைபோலச் சொன்னார் கிழவர்.  சிறிது இடைவெளிவிட்டு.

‘பிசாசுகளின்ர மண்ணுக்கு நரிதான் கொற்றம்’

சொல்லிவிட்டு முன்னால் எட்டுவைத்துச் சென்றார் பணிக்கர். இப்படி ஏதாவது அடிக்கடி அவருக்குள் இருந்து வரும், அவரிடம் கேட்டால், மந்தணமாய் ஏதும் சொல்லெழும், எனக்கு சொன்னதும் தெரியாது , பொருளும் தெரியாது என்பார். அவரை அறிந்தவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். உக்காரா  காட்டைக் கண்களால் அளைந்துகொண்டே நடந்தான்.   ஒரே காட்சியே மீண்டும் மீண்டும் எழுவது போலிருந்தது.  பன்னிரண்டு வயதுவரை காட்டிலேயே கழித்தவன். மன்னார் வவுனியா காடுகளின்  அக ஒழுங்குகளை நன்கறிந்தவன். ஐய்யா ஒவ்வொரு மரமாகத் தொட்டுத் தொட்டு சொல்லித்தந்தார். பட்டைகளை, வேர்களை, இலையைக் குருத்தை பிரித்து அவற்றுக்கெல்லாம் கதை சொல்வார்.   காட்டின் செழிப்பு  வானம் கொட்டும் மழையினாலும் நிலத்தடி நீரினாலும் ஓங்கிச்செறியும்.  மன்னார் வவுனியாவை கிழித்தோடும் ஒற்றை ஆறு அருவியாறுதான். கோடையில் பெரும்பாலும் வறண்டு விடும். அருவியாற்றங்கரையின் காடுகளை ஐய்யா ஆதிகாடுகள் என்பார். முதுவேழங்களைக் கொண்டு காட்டின் தொன்மை அளக்கப்படும் என்பார்.  அவைதானே  காட்டைத்தின்று காட்டைச் செய்தன. இவன் கணிப்பில் அருவாற்றங்கரை அடர்வனமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால் இதுவோர் போலிக்காடு. ஐய்யா பார்த்தால். வெறும் பற்றைகள் என்றுதான் சொல்வார். வியப்பென்னவென்றால் காட்டின் விசாலமளவிற்கு எழுந்து நின்றது கொடிகளின் திரட்சி , வெளியில் நின்று பார்த்தால் மராமரங்கள் ஓங்கிய வனம் என்ற பிரமை எழும். இத்தனை நாளும் அப்பாதையால் எத்தனை ஆயிரம் தரம் போய் வந்திருப்பான். இவன் கண்களும் அதைக் கண்டதேயில்லை. 

‘யானையள் ஆத்தைத்தாண்டி வாறேல்லையா?

பணிக்கர்  பெரிதாகச் சிரித்தார்.

‘வராது பெடியா, நீ கெட்டிக்காரன் தான்’

பெரிய பண்டிபிரிச்சான்லைதான் சின்னன் முழுக்க இருந்தனான், அய்யாவோட, கொஸ்ரலுக்குப் போகும்மட்டும் காடுதான்’

பணிக்கர் வேகத்தைக் கூட்டி நடந்துகொண்டிருந்தார்.  பற்றைகளுக்குள். ஆந்தைகள் தலையைச் சுற்றிப்பார்த்தன. உச்சிகளில்  பிராந்துக்கூடுகள், தெரிந்தன. குஞ்சுகள் மாலைப் போசனத்திற்கு குரலெழுப்பிக் கொண்டிருந்தன. அவன்  இன்னொன்றையும் கண்டான். ஆனால் அது சரியாக இருக்குமோ தெரியவில்லை. பேசாமலே நடந்தான். மீண்டும் மீண்டும் அதே காட்சிகள்.  தீடீரென கொடிச்செறிவினுளிருந்து கருந்தோள் பிராந்து ஒன்றும் ஆந்தையொன்றும் சண்டையிட்டவாறே வானில் எழுந்து மறைந்தன. ஆந்தையின் அலறல் அடங்கும் போது இரண்டும் காணாமல் போயின. சண்டை தொடங்கிய இடத்திலிருந்து ஆந்தையின் இறகுகள் சிலது மெல்ல மெல்ல நிலத்தை நோக்கி மிதந்து இறங்கின. இவனால்  இவ் வனச்செறிவைத் தாங்க முடியவில்லை.  

‘இதென்ன காளக்காடா?’

’ஏன் அப்பிடிக்கேக்கிறாய் ? 

’இல்லை, இதுக்காளாக்காடுதான். நிலம் வெந்து கிடக்கு,  பெரிய மரமொண்டையும் காணேல்ல, புதரும் பத்தையும் எழும்பியிருக்கு. இறங்கினதிலை இருந்து    கண்டதெல்லாம் கொல்லும் பறவையள் மட்டும்தான். ஒரு கொக்குக் கூட்டைக்கூட காணேல்ல, எதுக்கோ செய்த வாலையம் நிலத்துக்க கிடக்கு, பழைய ஈமைக்காடுகளுக்கு இந்தமாதிரி வெக்கையிருக்கும்’

’எல்லாம் சரிதான் பெடியா, முக்கியமானதை விட்டிட்ட?’

‘ஆனைதானே ? அதுதான் குழப்பமா கிடக்கு காளத்துக்கு ஆனை வரும். ’காளச்சூட்டு வேழம்’’ எண்டுவார் ஐய்யா. ஆனை வந்திருந்தால்  இந்தக்காடு இப்பிடி இருக்காது பெரு மரங்கள் செறிவா எழும்பி இருக்கும்’

‘அப்ப என்ன பிரச்சினை ?’

‘ம்ம் இப்பிடி இருக்கும், இந்தப்பக்கம் ஆத்திலை ஆழம் கூடவா இருக்கும், அதால யானை வாறேல்ல?

பணிக்கர் சிரித்தார் ‘நான் உன்னைக் கெட்டிக்காரன் எண்டு நினைச்சன் பெடியா, ஆனை நல்லாவே நீந்தும், அதோட அருவியாத்திலை கோடைல தண்ணி நூலாத்தான் ஓடும், ஆனை நடந்து கடக்கலாம்’

அப்ப ஏன் ஆனை வாறேல்ல?

’வா காட்டுறன் ‘

அவ்வளவு நேரமும் நேரே  போய் கொண்டிருந்தவன் மேற்காகத் திரும்பி நடந்தான். அங்கே எந்தப் பாதையுமிருக்கவில்லை.  ஆனால் பழக்கப்பட்டவர் போல  நுழைந்து சென்றார் பணிக்கர்.  காளக்காட்டின் இன்னொரு ருசுவை மட்டும்தான் அவன் இன்னும் காணவில்லை. அவை துர்தெய்வங்களும் பேய்களும். பணிக்கர்  காட்டுக்குள்  இறங்கியபிறகு அப்படியொரு சாயலைப் பெற்றுக்கொண்டே வந்தது போலத்தான் பட்டது. இவ்வளவு நாளும் செட்டிகுளத்தில்  தான் தேடிப்பிடித்ததும், இடம் காட்டச்சொல்லிக் கேட்டதும்  பிசாசாகிய ஒருத்தரிடமா?   கதிர்காமர் நலன்புரி நிலையத்தை அமைப்பதற்குரிய இடத்தையும் பணிக்கர் காட்டிய பிறகு, பெரு மரங்கள் இல்லாமல் இலகுவாக   புல்டோசர்கள்  வழித்து எடுக்கக் கூடிய  இடங்களைத் தெரிவு செய்யும்படி கேட்டிருந்தார்கள். இவனுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசமிருந்தது. அதற்குள் அறிக்கையை அனுப்பி விட வேண்டும்.  வன்னியின் நிலவரங்கள் மோசமடைய மோசமடைய   வடக்கு எங்கும் முகாம்கள் எழுந்துகொண்டே இருந்தன. ஆனால் அவை அனைத்தும் சிறிய முகாம்கள், பாடசாலைகளை பெரும்பாலும் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்படியே தொடர முடியாது.  மெனிக் பாமில்தான் மொத்த வன்னியையே அடைக்கப்போகிறார்கள் என்றுதான் தோன்றியது. இப்போதைக்கு மூன்று அல்லது நான்கு முகாம்கள். இரண்டு லட்சம் பேருக்குக் குறைவில்லாமல்,  மானுடப்பெருக்கு.

காட்டிற்குள் நுழையும் போது பெருமரங்களற்ற  இடம் போலத்தான் பட்டது. கூடாரங்கள் அமைப்பதற்கு இலகுவாக இருக்கும். வேகமாகவும் அமைக்க முடியும். இவனைத்தவிர வேறு யார் என்றாலும் உடனே இவ்விடத்தைத் தெரிவு செய்து அறிக்கையிட்டிருக்கத்தான் போகிறார்கள். ஆனால் விடயம் அறிந்த பிறகு  உள்ளூர நடுக்கமொன்று  எழுந்தது. காளக்காட்டில் அந்தச்சனங்களை  கொண்டு வந்து அடைப்பது  பெரிய பாவமொன்றின்  முதல் துளியை அருந்துவதற்கு இவனையா  தெரிவு செய்திருக்கிறது இந்தக்காலம்? இந்தப்பணிக்கர் எதைத்தான் காட்டப்போகிறார்?  நேராய்ச் சென்றவர் ஏன் திசையை மாற்றினார்?   பொழுது வேறு படத்தொடங்கியிருந்தது. இருட்ட முதல் திரும்ப வேண்டும். கதை கதையாக கேள்விப்பட்ட காளங்காட்டில்  நிற்பது கால்களில் நடுக்கமெழச் செய்யாமலில்லை. 

மெல்ல மெல்ல புதர்கள் விலகி விலகி ஐதாகின. வெளியொன்று வரப்போகின்றது என்று  உணரத்தொடங்க சட்டென்று வெளித்தது. சிறிய வெளிதான். பற்றைகள் எட்ட எட்ட திரண்டு எழுந்து நின்றன. பணிக்கர் நடுவில் இருந்த கொஞ்சம் விசாலமான பற்றையை நோக்கிச் சென்றார். அருகில் நெருங்கும் போதுதான் பற்றையைச் சுற்றி பொழிந்த பாறைகள் தெரிந்தன. கோள வடிவில் நிலத்தோடு பொருத்தப்பட்டு பாசி ஏறியிருந்தன. அவற்றின் உள்ளே சதுர வடிவ குழிகள் பொழிந்து தாழ்த்தப்பட்டிருந்தன.  ஏதோ பழைய கட்டங்களின் அடிக்கால்களாக இருக்க வேண்டும். அருகில் அருவியாற்றின் ஓடும் தண்ணொலி கேட்டுக்கொண்டிருந்தது. பற்றைகளுக்கு அப்பால் அது ஓடிக்கொண்டிருக்க வேண்டும். பணிக்கர் அப்பெரிய புதரை நோக்கிச்சென்றான்.  இவனை ஒரு முறை திரும்பிப்பார்த்து விட்டு. தன் கைத்தடியால் புதரை விலக்கிக் கொண்டு உள் நுழைந்தார்.  தேன் கூடு ஒன்று அதனுள் இருக்க வேண்டும். குளவிகளின்  இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. இவன் கொஞ்சம் தயங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.  முட்டைக்கோது போல உள்ளே  விசாலம் தான் தெரிந்தது.  பணிக்கர் வெள்ளைப்பாறை ஒன்றின் மேல் ஏறி நிற்பது போலிருந்தது. பாறையா அது ? அவரின் காலடியில் தொடங்கி ஒருவித வளைவோடு எழுந்தது அது. அதன் அருகில் வரி வரியாக இன்னும் சில வெள்ளைப்பாறைகள். அதன் முழு உருவம் சுற்றியிருந்த கொடிகளைத்தாண்டி இவனுக்குள் எழ சில நொடிகளை விழுங்கியது. பணிக்கரும் அவனும் ஓர் பெரிய விலங்கின் நெஞ்சறைக்குள் நின்றிருந்தார்கள். கண்கள் விரிந்து கூர்ந்தன. நெஞ்சில் பதட்டம் எழுந்தது. 

‘இவ்வளவு பெரிய ஆனையா?’

வாய்விட்டுக்கேட்டுக்கொண்டே அதனைத் துளாவிப்பார்த்தான், தலைப்பகுதி  புதருக்குள் மறைந்து கிடந்தது. அது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.  அப்பொழுது பணிக்கர்  தடியை வைத்து விட்டு நிலத்தில் எதையோ தேடி புதர்களை விலக்கினார்.  கருங்கல் திண்ணையொன்று வில் வடிவில் வெளிப்பட்டது. 

’பலி பீடமா?’

பணிக்கர் பேய்ச்சிரிப்பொன்றைத் தொடங்கினார்.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’