வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும்

Jaffna Pride Walk 2022

வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும்

நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே  குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள்  என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள்.  ஆயினும் அவளால் அவர்களைப் பற்றிச் சொல்லெழுப்ப முடியவில்லை. ஆனால் கற்றவளும் துறவியுமான ஏவா தயக்கமே இல்லாமல் மிகச்சாதாரணமாக `நீங்கள் இருவரும் காதலர்களா?` என்று கேட்பாள். ஆச்சியால் ஏன் அவ்வுறவைப் புரிந்துகொள்ள முடியவில்லை , ஏவாவால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதற்கு அடிப்படையான காரணம் ஏவா அதை அறிந்திருந்ததுதான். ஆச்சி அவ்வுறவைப் புரிந்துகொண்டிருந்தால் கூட அவளால் அதைச் சொல்லெடுக்கவோ வெளிப்படுத்தவோ முடியும் என்று நினைக்கவில்லை. இடையில் வெரோனிக்கா போராளியாகப் பயிற்சி எடுத்து  குடும்பத்தைச் சந்திக்கும் போது தாமரையும் வெரோனிகாவும் முத்தமிட்டுக்கொள்வார்கள் அப்பொழுது  மொத்தக்குடும்பமும் சேர்த்து அவரளை முழுதும் தயாராகாத இவ்வுலகிற்கு மறைத்து நின்றனர் என்பது போல் எழுதியிருந்தேன். அதை எழுதி ஆறு வருடங்களுக்கு மேலாகிறது.   இவ்வகையான  உறவுகள் புரிந்துகொள்ளப்படுவதற்கும் ஏற்கப்படுவதற்கும்  இரண்டு வகையான வழிகள்  இருக்கின்றன. ஒன்று அறிதலின் வழி. அவற்றை அறிவதன் மூலம் புரிந்துகொள்ளுதல், இரண்டாவது உணர்வின் வழி. அவ்வுறவை  மானுட உணர்வினால் புரிந்துகொள்ளுதல். என்னைக்கேட்டால் இவ்விரண்டும் இணைந்தே இவ் உறவுமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பேன்.  அடிப்படையில் இங்கே  உள்ள சமூகத்தளைகளைப் புரிந்துகொண்டாலே மக்கள் அவற்றை மெல்ல மெல்ல கைவிடுவர். எனெனில் இது போன்ற விடயங்கள் அவர்களின் தலைகளுக்குள் மூடநம்பிக்கைகளாகவும், நடைமுறைகளாகவுமே இருக்கின்றன. அவை அறிவாகவோ தத்துவமாகவோ இருப்பதில்லை. ஏனெனில்  உண்மையற்றவை எதுவும் அறிவாக நிலைப்பதில்லை, சித்தாந்தமாக ஆவதில்லை.

சமூக செயற்பாடுகள், பண்பாட்டு அமைப்புகளில் இருந்து வெளியேறி, இலக்கியமே முழுமையான தளம் என்று ஆகிய பிறகு அதன் மூலம் என்ன செய்ய முடியும் என்பதே என்னுடைய பங்களிப்பாக இருக்க முடியும்.  எதிர்மறையான அணுகுதல்கள், தனிமனிதர்களின் தவறுகள், காழ்ப்புகள், வேற்றுமைகளைத்தாண்டி சில அவதானங்களையும் தேவைகளையும் ஓர் எழுத்தாளனாக தொகுத்துக் கொள்ள நினைக்கிறேன். முக்கியமாக குயர் சமூகத்திற்கான அறங்களும் நீதியும் கொண்ட ஒரு கூட்டு மானிடப் பிரக்ஞை பற்றிய உரையாடலின் தேவையை உணர்கிறேன்.

குயர் சமூகத்தினரைச் சுட்டி சமூக வலைத்தளங்களில் `வானவில் நண்பர்கள்` என்ற கேலியும் வசையும் நடக்கிறது என்று தம்பியொருவன் சில ரீல்களைக் காட்டினான். வவுனியாவில் சுயமரியாதை நடை மேற்கொள்ளப்படுவது தொடர்பிலும் பல கிண்டல், கேலிக்கள், சீற்றங்களையும் காட்டினான். பன்மைத்துவத்தின் அடையாளமான வானவில்லை LGBTQA+  சமூகங்கள் தாங்குவதை வழமைப்போல இந்தச்சாரசரிகள் கேலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குயர் சமூகங்கள் அடைந்திருக்கும் இன்று என்பது நேற்றைவிட மேம்பட்டிருக்கிறது. பண்பாட்டு அமைப்பாக ஆகுதல், குயர் திருவிழாக்களை நிகழ்த்துதல், சுயமரியாதை நடைபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுத்தல் என்று நாளுக்குநாள்  முன்னேற்றத்தை  அவதானிக்க கிடைக்கிறது. கொழும்பில் மட்டும் நடைபெற்றுக்கொண்டிருந்த சுயமரியாதை நடை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ,வவுனியா போன்ற இடங்களிலும் நடைபெறத்தொடங்கியிருக்கிறது. விதை குழுமத்தில் இயங்கும் போது, 2015 இல் யாழ்ப்பாணத்தில் `மாற்றுப்பாலினத்தவர்` பற்றியும் குயர் சமூகம் பற்றியுமான உரையாடலைத் தொடங்கியவர்கள் நாங்கள்.  தொடர்ச்சியாக அது தொடர்பான உரையாடல்களையும், சுயமரியாதை மாதம் மற்றும் `நாங்களும் இருக்கிறம்` என்ற ஆவணப்படத்தையும் வெளியிட்டோம். இலக்கியத்தளத்திலிருந்தும் செயற்பாட்டுத்தளத்தில் இருந்தும் குயர் சமூக உரையாடல்களுக்குரிய செயற்களத்தில் இருந்தவர்கள். பண்பாட்டு அமைப்புகளில் இருந்து வெளியேறிய பின்பு  இலக்கியத்தளத்திலிருந்து தொடர்ந்தும்  புனைவுகள், கட்டுரைகள், உரையாடல்கள் மூலம் குயர் சமூகங்களைப் பற்றியும் நானும் நண்பர்களும் கரிசனைப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அந்த அடிப்படையில் இவ்வுரையாடலுக்கான அறிவார்ந்த அடிப்படைகளை விரிவாக்குவதிலும் விமர்சனபூர்வமான பார்வைகளை முன்னிறுத்துவதும் முக்கியமானது.

2015 இல் விதை குழுமம் முன்னெடுத்த முதல் உரையாடலின் போஸ்டர்

இன்றைக்கு LGBTQA+ சமூகம் உலகம் முழுவதும் போராடிக்கொண்டு இருக்கிறது. கடுமையான பண்பாட்டு நிலைமைகள் இருக்கின்ற இலங்கை போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக குயர் சமூகங்களுக்கான சமூக மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்றுத்தருவதற்கான உரையாடல்களும் நடைபெறுகின்றன. ஆனால் இவ்வகையான உரையாடல்கள் சமூகமயப்படுத்தப்படுவதோ, ஆவணமாக, எழுத்துவடிவான அறிவாக மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுவதில்லை என்ற நிலை தொடர்ந்தும் நிலவுகிறது. சட்டமோ, நீதியோ உருவாதற்கு  தொடர்ச்சியான சமூக உரையாடல்கள் தேவை. தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம்தான் சமூகத்தில் நீதி திரட்டிக்கொள்ளப்படுகிறது.  நீதி உருவான பிறகும் தொடர்ந்தும் அது உரையாடல் தரப்பைக் கைவிடுவதில்லை. அது விரிந்து சென்றுகொண்டு இருக்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக இலங்கையில் அடிமைமுறை, சாதிய ஒடுக்குமுறை என்பன  கடுமையான போராட்டங்கள், உரையாடல்கள் மூலம் அவற்றைப் பின்பற்றுவது  அநீதியான ஒன்று, சட்டத்திற்கு எதிரானது என்ற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால் ஏதோ ஒருவகையில் சாதி தொடர்ந்தும் இருந்துவருகிறது. வேறுவடிவங்களை எடுக்கிறது. அதனால் தொடர்ந்தும் அதுபற்றிய  உரையாடல்களும் எழுத்தும் அவசியப்பட்டுக்கொண்டே இருக்கிறது இல்லையா?  அதுபோலத்தான், குயர் சமூகங்களும் நீண்டகால நோக்கோடு தங்களின் நீதிக்கான, சமூக அறிதலுக்கான வழிகளைத் திறக்க வேண்டும்.

நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது  `நான் இந்த மாற்றுப்பாலினத்தவரை முதல்ல ஏற்றுக்கொள்ளுறேல்ல, ஏதோ குறைபாடு எண்டோ, கர்மா எண்டோதான் நினைப்பன். ஆனால் `தனுஜா` என்ற திருநங்கையின் தன்வரலாற்று புத்தகம் கிடைத்தது. அதை வாசித்த பிறகு என்னுடைய மரபார்ந்த எண்ணங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன. மேலும் அவர்களைப்பற்றித் தேடி வாசித்தேன். இஞ்ச நிறையப்பேர் என்னை மாதிரி `தெரியாமலே` தான்  இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் மாற்றுப்பாலினத்தவருடன்  தற்பாலீர்ப்பாளர்களையும் சேர்க்கிறீர்கள் அது எனக்குப்புரியவில்லை. என்னால் அப்படியொன்றை கற்பனை செய்யவே முடியவில்லை. எப்படி அவர்களுடன் இவர்களைச் சேர்க்க முடியும்? `

 இப்படி சமூகத்திடம்  ஒராயிரம் கேள்விகள் இருக்கின்றன.  ஆனால் எங்கே சென்று அறிவது ?   தற்பாலீர்ப்பு போன்ற உறவுகள் பற்றிப்பேசும்போது வெறுமனே பாலியல் காட்சியாகவும் அதுபற்றிய ஒவ்வாமையாகவுமே சராசரிகள் கற்பனை செய்வார்கள். அவர்களுக்கு காதலைப்பற்றி, உடலைப்பற்றி எப்படி விளக்குவது ?   LGBTQA+  இல்  A  என்பது பாலியல் நாட்டமற்றவரைக் குறிக்கிறது  இல்லையா  அதை எவ்வாறு விளக்குவது ?  உணர்வு பூர்வமாகவும் தர்க்க பூர்வமாகவும் அவர்களின் மனங்களுடன் எவ்வாறு உரையாடுவது ? இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும்  உரையாடல்கள், சுயமரியாதை நடைகள் (Pride Walk) வெறுமனே சமூக வலைத்தளங்களுடனும்  ஒரு நாள் நடையுடனும் ஓய்ந்து போகின்றன?  பெருமளவு நிதி  NGO , INGO களாலும் செலவழிக்கப்படுகிறது.  ஆனால்  குயர் சமூகங்கள் பற்றி ஒரு துண்டுப்பிரசுரம் கூட எழுதப்படுவதில்லை.  முக்கியமாக இலக்கியம் சார்ந்த  எந்த முயற்சியையும் காண முடியவில்லை. தொடர்ந்தும் சமூகத்துக்கும் குயர் சமூகத்திற்குமான இடைவெளிகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. சில குயர் நண்பர்கள், தாங்கள் கேலி செய்யப்படும் போது கோவப்படுகிறார்கள்.  சராசரிகள் மீது பாய்கிறார்கள் அல்லது புறக்கணித்துவிடுகிறார்கள். இப்புறக்கணிப்பு எந்தவகையிலும் உதவாது. சமூகத்தளைகளில் இருந்து வெளிவருவதும், தம்மை வெளிப்படுத்துவதும் எல்லா குயர் நபருக்கும் சாத்தியமானதல்ல. 

குயர் சார்ந்த நபரோ பிள்ளைகளோ  தங்களின் பால்யத்திலும் அதன் பிறகும் தங்களின் பால்நிலை, பாலியல் தேர்வுகள் தொடர்பான குழப்பங்கள், வெளிப்படுத்தும் ஆற்றல் , சூழல்  என்பன கைகூடாமல் சொந்த உடலே நரகமாக கொண்டிருக்கும்,இவர்களுக்கு எப்படி உதவி செய்யப்போகிறோம்? அவர்களை எப்படி அறிவூட்டப்போகிறோம். அதுவும்  இச்சமூகங்களுக்கான அறத்தின், நீதியின் பகுதியில்லையா?

மனிதர்களின் அறிதல் முறைகளில் கூட்டுப் பிரக்ஞைகளை உருவாக்கித் தருபவற்றில் கலை இலக்கியங்களே முதன்மையானவை. வரலாறு முழுவதும் இலக்கியமே நீதிசார்ந்த உரையாடல்கள், தொகுக்கப்பட்ட இடம். சமூகத்தின் அறங்கள், நெறிகள், சட்டங்களின் ஆவணம். முக்கியமாக  நீதிக்கான பெருங்கனவு உருவாகி விரியும் இடமும் அதுவே. மக்கள் உணர்வதாலும் அறிவதாலுமே மாறுகின்றனர்.  சமூகத்தின் கூட்டுப்பிரக்ஞையில் உருவாகக்கூடிய நீதி உணர்வே  பெருநீதிகளையும் சட்டங்களையும் உருவாக்கி அளிக்கின்றது.  குயர் சமூகங்கள் இந்த நுகர்வு வெளியில் இயங்குவது பற்றியும், வெளிநாட்டு தூதரகங்கள், NGO , INGO   குயர் சமூகத்தை தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வது பற்றியும், பண்பாட்டு அமைப்புகளாக இயங்க வேண்டிய  குயர் சமூகங்கள்  NGOகளாகவே மாறிவிடும் அபாயம் என்பது உலகெங்கும் நிகழ்வதுதான். இவை பற்றி எனக்கும்  கடுமையான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வேறொரு தளத்தில் எதிர்கொள்ளவேண்டும். பண்பாட்டு அமைப்புகளாக இயங்குவதன் முக்கியமான பகுதி அங்கு எழுத்து, படைப்பு, ஆவணமாக்கல் என்பன சுதந்திரமாகவும் திறனுடனும் இயங்குவதாகும். ஒடுக்கப்படுகின்ற குழுக்களில் முதன்மையான ஒன்றாக இருக்கும் குயர் சமூகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களோ, கலைஞர்களோ இல்லைத்தான். ஆனால்  நான் இங்கே அவதானிப்பது செயலின்மையும் சோம்பேறித்தனத்தையுமன்றி வேறில்லை.  வீதியில் நடப்பது வெறுமனே ஒரு நாள் நிகழ்வு,  ஓர் அடையாள நாள். அதை ஊதிப்பெருப்பித்து திருப்திப்பட்டுக்கொண்டு கலைந்து விடுகிறோம். அதற்கு முன்னும் பின்னும் எந்த அறிவுழைப்பும் கிடையாது.   நண்பர் ஒருவர் குயர் சமூகங்களின் மீதான `வானவில்` கேலிக்கு கீழே சென்று கடுமையாக சராசரிகளைத் திட்டியிருந்தார். அவ்வளவு கோவம். நியாயமானதுதான். ஆனால் அதற்கு பெறுமதியேதேனும் இருக்கிறதா?  ஒவ்வொரு சராசரியையும் எதிர்கொள்ள முடியுமா நம்மால் ? மொத்தமாக கூட்டாக  மனநிலையை மாற்றுவதைத் தவிர வேறென்ன தெரிவு உள்ளது ? ஏதோ ஒருவகையில் உலக ஓட்டத்தில் அரசாங்கம் குயர் சார் சட்டங்களைக் கொண்டு வந்துவிட்டதென்று வைத்துக்கொள்வோம், சராசரிகள் ஓய்ந்து விடுவார்களா? மடமை முடிந்து விடுமா?  

தனுஜா பற்றிக் குறிப்பிட்ட நண்பர், அந்தப்பெண்ணை முதலில்  டிக் டொக்கில் பார்த்திருக்கிறேன்.  அந்தப்பெண்ணா இந்தப் புத்தகத்தில் இருக்கிற பெண் என்று நம்பாமலிருந்ததாகவும் குறிப்பிட்டார்.  தனுஜா சமூக வலைத்தளங்களில் இயங்கும் விதம், பேசும் முறைகள் தொடர்பில் கொஞ்சம் விசனப்பட்டார். நான் சொன்னேன் `அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எனக்கு எந்த அபிப்பிராயமும் கிடையாது, நான் வலைத்தளங்களில் பார்த்தமட்டிலும் எனக்கு அவரிடம் தவறாக எதுவும் பெரிதாகப் படுவதில்லை, என்னுடைய நண்பி ஒருவர் அடிக்கடி தனுஜாவை  SHE IS CUTE  என்பதை  நானும் மறுப்பதில்லை என்றேன். தவிர  இலக்கியம் என்பது அன்றாட வாழ்க்கையின் துக்கம், சலிப்பு, மகிழ்ச்சி, அறியாமை, பகடி எதையும் பொருட்படுத்துவதில்லை. அது எழுதும் போது நனவிலிருந்து எழுந்து வருகிறது.  உண்மையைச் சென்று தொட நினைக்கிறது. அதுதான் இலக்கியத்திற்கும் சமூகவலைத்தளங்களுக்கும்  உள்ள வேறுபாடு. புற உலகத்தின் அன்றாடங்கள் இலக்கியத்திற்கு பொருட்டல்ல, என்று சொன்னேன்.

ஒவ்வொரு குயர் நபரும் தன் சொந்தக் கதையை ( புனைபெயரிலேனும்) நான்குவரி எழுதினால் கூட கண்முன்னால் மாற்றத்தைப்பார்க்கலாம். இலக்கியம் தனிமனிதர்கள் பற்றியதாகக் கூட இருக்கலாம் ஆனால்  அதன் நோக்கமும் விழைவும் மொத்த உலகிற்குமானது.  பத்துவருடங்கள் பண்பாட்டு அமைப்பில் இயங்கிய அனுபவத்தில் சொல்கிறேன். சமூக வலைத்தளங்களில் குவித்துப்போட்ட சொற்களுக்கும் புகைப்படங்களுக்கும், பின்னூட்டங்களுக்கும்  ஒரு  புல்லுக்கூட அசைந்து கண்டதில்லை.  வசைகளை, முரண்களைத் தவிர அங்குள்ளவர்கள் எதையும் ஞாபகம் வைத்திருப்பதில்லை. அதுவொரு கேளிக்கை நுகர்வுக்கூட்டம். நிஜத்தில் அவர்கள் தங்களுக்குள் சுருண்ட நத்தைகள். ஆனால் நாங்கள்  எதையெல்லாம் எழுத்தில் நிகழ்த்தினோமோ ,கலையில் நிகழ்த்தினோமோ அதையெல்லாம் இந்தச்சராசரிகளால்  சீண்டக்கூட முடியவில்லை. கண்ணுக்கு முன்னால் சொல்லினதும் செயலினதும்  பயனைக் கண்டிருக்கிறோம். கொண்டாட்டமும் ஓர் அறிதல் முறைமைதான். அதை ஒரு அடையாளமாக நிகழ்த்திவிட்டுப்போகலாம். அனால் அன்றைத்தவிர எந்தப்பெறுமானமும் அதற்குத் திரளப்போவதில்லை. 

குயர் சமூகத்தில் இருக்கும்  ஒரு நூறு பேரின் கதைகளை இருந்து கேட்டிருக்கிறேன்.  கண்கள் முட்ட அவர்களின் கைகளைப் பற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது அத்துக்கத்தினைத் தீர்க்காது என்று அக்கணமே உணர்வதும் உண்டு.  ஆரம்பத்தில் உணர்ச்சிவசப்பட மட்டுமே வாய்க்கும். அவர்களுடன் இருக்க வேண்டும், உதவ வேண்டும் என்பதே ஓடும். ஆனால்  உணர்வுகளால் தனித்து நிற்கவே முடியாது. அதற்கு கண்ணீரைத்தவிர, ஏளிய மானுடத்துக்கம் என்பதைத்தவிர வேறேதும் நிகழ்வதில்லை. எல்லா ஒடுக்குமுறைகளிலும் இதுதான் நிலைமை.  என்னைக்கவியும் எல்லாவித துக்கங்களில் இருந்தும் விடுவிக்கவே இலக்கியத்தைச் சூடிக்கொண்டேன்.  அறிதலை வழியாகக் கொண்டேன். ஆதி இயற்கை தரிசனமான சாங்கியத்தில் ஓர் சொல்லுண்டு

 `சிந்தனையே துக்கங்களில் இருந்து விடுவிக்கும்`

நாங்களும் இருக்கிறம் ஆவணப்பட இணைப்பு

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’