நிலத்தினதும் நட்சத்திரங்களினதும் வரைபடம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன். இரவுப்பயணம், பக்கத்தில் தன்னுடைய ஐம்பதுகளில் இருந்த நபரொருவர் அமர்ந்து வந்தார். அடிப்படையான விசாரிப்புகள், புன்னகையோடு அமைதியாகிவிட்டோம். பகல் வெக்கையின் களைப்பு உடம்பை வறட்டியிருந்ததால்,  கொஞ்சநேரம் வாசித்து விட்டு உறங்கி விட்டேன். நள்ளிரவிற்குப் பிறகு திடுக்கிட்டு எழுந்து  யன்னலால் பார்த்தேன். கிராமங்களின் தோற்றங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிங்களக் கிராமங்களா, தமிழ்க் கிராமங்களா என்று  மட்டுப்பிடிக்க முடியவில்லை. கைபேசியை எடுக்கப் போன போது பக்கத்தில் இருந்தவர்  மதவாச்சி நெருங்குது என்றார். நான் வெளியில் பார்த்தேன் உறுதிப்படுத்த முடியவில்லை. அவர் பார்க்காத போது கைபேசியை எடுத்து கூகுள் மப்பை எடுத்துப் பார்த்தேன். சரியாகத்தானிருந்தது. மீண்டும் தூங்கி விட்டேன். அம்மா எடுத்தாள். நித்திரை கொண்டிட்டியோ எவடம்? என்றாள். எனக்கு திரும்பவும் மட்டுப்பிடிக்க முடியவில்லை. மீண்டும் அவரே சொன்னார் புளியங்குளம் தம்பி. கைபேசியை மீண்டும் எடுத்துப்பார்த்தேன். சரியாகவிருந்தது.  அவரிடம் சிமாட் கைபேசியேதுமில்லை. என்னைப்போல் தூங்கித்தூங்கி எழுந்து கொண்டிருந்தார். ஆனால் இடங்கள் துல்லியமாக அவருக்குத் தெரிந்தன. பேச்சுக்கொடுத்தேன். என்னெண்டு சொல்லிறியள் ? அவர் சிரித்துக்கொண்டே ‘இப்பத்தானே தம்பி போன் எல்லாம் வந்த, நான் எண்பதுகளிலை இருந்து பஸ்ஸிலை போறன் வாறன், எப்ப எந்த இடம் வருமெண்டு தெரியாமல் போகுமோ? எல்லாம் பழக்கம் தான். நேரக்கணக்கு, யன்னலுக்கு வெளியே ஓடும் நிலவுருவின் ஞாபகங்கள் ; எதையோ தொகுத்து அவரால்  இடங்களை அறிய முடிகிறது. ஓர் அன்றாட அறிதல்.

அவர் சொன்ன கணக்கிற்கு கூட போகத்தேவையில்லை, பத்து பதினைந்து வருடங்களுக்கு முதல் கூகிள் மப் பயன்பாட்டில் இருந்ததா? இத்தனை லட்சம் பேர் எப்படிப்பயணித்து வந்திருக்கிறார்கள்? எல்லா நடத்துனர்களும் நடு இரவில் இன்ன இடம் வந்திட்டு இறங்குங்கோ என்பார்களா? தூக்கத்தில் கேட்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?  இருட்டில் ஓடும் பஸ்ஸில் இடங்களை , பாதைகளை, அவை கடக்கும் நேரத்தை, இருட்டில் நிலவுருக்களை எவ்வாறு ஞாபகத்தில் கொண்டு பயணித்திருப்பார்கள்.  கடலோடிகளும், தூரப்பயணிகளும் பாதைகளை எவ்வாறு அறிந்தார்கள். ஒவ்வொரு முறையும் கடக்கும் போதும் அவர்களுக்குள்  நிலமும் காலமும் சூழலும் மெல்ல மெல்ல சேகரமாகிறது. பாதைகள் படிகின்றன.  வெளியை அகம் தொகுத்துக்கொள்கிறது. அது தகவலாகவன்றி அனுபவத்தின்  இயல்பில் முளைத்தெழுந்த அறிதலாக உருவாகி வருகிறது. மிகவும் பழகிய பாதையில் இருட்டில் எங்கே பள்ளம் இருக்கும் என்று தெரிந்து சைக்கிள் கான்ரிலை கைகள் அனிச்சையாக திருப்பி ஓடும், மனித மூளையைப் பொறுத்தவரையில் மிகச்சிறிய அனுபவ நிகழ்வுதான் ஆனால் ஒரு நதி உருவாகி வர ஒவ்வொரு துளியும் முக்கியமானவை. ஒரு வகையில் நிலப்படம் நேரம் ,பற்றிய அறிதல் எல்லாம் மரபார்ந்தவையும் கூட. அடிப்படைக் கல்வியறிதலில் சேர்ந்திருந்தவை. எவ்வளவு மகத்தான மானுடச் சேகரம். ஓர் பழங்குடி காட்டையும் அதன் வழிகளையும் அறிவது போல, ஓர் பாலைவன வணிகன் திசைகளை அறிவது போல ஒவ்வொருத்தருக்குள்ளும்  அவரவர் தேவைகளுக்கு ஏற்றவாறு நிலவுரு உருவாகி வந்திருக்கும். மூளையும் அதன் நினைவும் அதன் தர்க்கமும் கற்பனையும் எவ்வளவு சுறுறுப்பாக ஒருங்கிணைவாக வேலை செய்திருக்கும். ஒருவகையில் நினைவில் உருவாகிவரும் நிலம் ஓர் படைப்பாக்கம்தானே. இன்றைக்கு கைபேசிகளில் சுருக்கப்பட்ட தேவைகள், வசதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் இயல்பாகவே வாழ்க்கைக்குள் உருவாகி வந்த அறிவல்லவா? இந்தக் கைபேசி மின்சாரமில்லாமல் செத்துப்போயிருந்தால் சரியான இடத்தில் இறங்கப் பதட்டப்பட வேண்டியிருக்கும். பக்கத்தில் இருந்தவர் கண்ணயர்ந்து விழிக்கும் போதெல்லாம் எங்கிருக்கிறேன் என்று சொல்கிறார். ஒவகையில் அவருக்குள் உள்ளூர விழித்திருக்கும் ஒன்று என்னளவில் செத்துப்போயிருந்தது. அதை இழந்திருக்கிறேன் என்று நினைத்த போது அந்தரப்பட்டேன். சிறுபராயங்களில் நிலவுருக்களை ஞாபகம் வைத்திருப்பதில் தேர்ந்தவனாக இருந்திருக்கிறேன். பரந்தனில் இருந்த காலத்தில் ஆனையிறவு, காஞ்சிபுரம் சிறுகாடுகளிலும் வெளிகளிலும் அலைந்திருக்கிறோம். ’ஆமியும் இயக்கமும்’ என்ற விளையாட்டின் அடிப்படையே தொலைந்து போதலும் தேடியடைதலும்தான். கொஞ்சம் இறங்கினால் எல்லாப்பக்கமும் ஒரே மாதிரி இருக்கும். ஆனாலும் ஒவ்வொரு முறையும் தொலைந்து மீளும் போதும் நிலவுரு உள்ளே தங்கிவிடும். பாதைகளை ஞாபகம் வைப்பது என்னளவில் மெல்ல மெல்ல வளர்ந்த உளவிரிவு. சிறுவனாக என்னிடமிருந்த மனம் ,  நினைவு போன்றன இன்னும் விரிவடைந்து இருக்க வேண்டுமில்லையா? வளர்வது என்பது முதிர்வது தானே? முதிர்வது என்பது கனிதலாக இருக்க வேண்டும். அழுகி வெம்புவதை முதிர்வென்றெடுக்க முடியாது.  குட்டி இளவரசனில் வருவது போல் நம்மில் சிலருக்குத்தான் சிறுவர்களாக இருந்தது ஞாபகமிருக்கிறதா?

எத்தனை முறை இந்தப்பேரூந்தில் போய் வந்திருக்கிறேன், இடங்களை அறிவதற்கான கொஞ்ச முனைப்பையும் அடைந்திருக்கவில்லை, சூழலை அறிவதுதான் அடிப்படையான பிழைத்தலும் அறிதலும்.  இது என்னளவில் அவலம்தான். ஏனென்றால் அதற்கான ஆர்வத்தையும் தேவையையும் அதன் மூலம் துளிச்சேரும் அறிதலையும் ஒரு செயலி நிரப்பி விட்டது. இந்த செயலிகளால் வாய்த்தவை சோம்பேறித்தனமும் அறிவீனமும்தானா? தொழில் நுட்பம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு வகுப்பில் டீச்சரிடம் சொன்ன பதில்கள் எத்தனை அபத்தமானவை. யன்னலைத் திறந்து வைத்து விட்டு வானத்தை அண்ணார்ந்து கொண்டே வந்தேன். பால்வீதி ஓடியது.

வானியல் பள்ளிக்கூட காலத்தில் ஏற்பட்ட ஆர்வம். பள்ளிக்கூடத்தில்  வருடத்திலொருநாள்  இரவில் உடுத்தொகுதிகள் பார்க்கும் பட்டறை நடக்கும். பெரிய திரையில் , தொலைகாட்டிகளில் உடுக்களைக் காட்டி பாடம் எடுப்பார்கள். ஒவ்வொரு உடுத்தொகுதிக்கும் பெயர் இருந்து. உருவமிருந்து. கதையிருந்தது. தொன்ம மிருந்து. அன்ரோமீடியன் பால் வீதியில் தெரியும் ஒவ்வொரு உடுத்தொகுதியைப் பற்றியும் தேடித்தேடி அறிந்தேன். நட்சத்திரக் கூட்டங்களுக்கு ஒவ்வொரு பண்பாட்டிலும் வேறுவேறு தொன்மங்கள், வேறு அறிதல் முறைகள், கதைகள் இருந்தன. மிகவும் ஆர்வமூட்டக்கூடிய துறையது. வானியல் மூலம் எந்த மாதத்தில், என்ன நேரத்தில் , எந்த திசையில் எந்த உடுத்தொகுதி தெரியும் என்று  வரைபடம் உருவாகி இருந்தது. பிரியமான ஓராயனையும், பெருங்கரடியையும் அடிக்கடி தேடுவதுண்டு. புறக்காரணமற்ற செயல்தான், ஆனால் அலாதியானது. நிறைய நாட்களாகவே வானியல் தொலைகாட்டி ஒன்றை வாங்கும் எண்ணம் இருந்தது. நட்சத்திரங்கள் பூனைகளவுக்கு இலக்கியத்தில் பேசப்பட்டவை, புனையப்பட்டவை. இன்றைக்குவரைக்கும் இரவுவானின் பெரும் புதிர்கள் விடுவிக்கப்படாமலே வளர்ந்து செல்கின்றன. அறியப்படாதவைகள் பற்றியதுதானே ஒருவகையில் அறிவின் பாதை. அறிவியல்  ஒவ்வொன்றையும் கண்டறியும் போதும் அதிலிருந்து நூறு புதிர்கள் விரிந்துகொண்டே போகின்றன. வானம் வாழ்க்கையைப் போலொன்று.

அப்பொழுது கைபேசியில் தொடுதிரையைத் தட்டிக்கொண்டிருக்கும் போது இன்னொரு செயலி கண்ணில் பட்டது. Sky walk: Night sky map.  இரண்டு வருடங்களுக்கு முதல் நண்பர் ஒருவர் இச் செயலியை அறிமுகம் செய்திருந்தார். நிலவின் பாதை, அமாவாசை பறுவம் தொடங்கி உடுத்தொகுதிகள் நட்சத்திரங்களை இனம்காட்டக்கூடிய செயலி.  சட்டென்று ஒரு பதட்டம்  உள்ளெளத் தொடங்கியது.

நடு இரவிற்குப் பிறகு  பேரூந்தில்  இருந்து  இறங்கியவுடன் கொடிகாமம் சந்தியில் நின்று வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.  வெறும் நட்சத்திரங்கள்.  குவியலாக. எந்த உருவமும் தெரியவில்லை. ஓராயன், தென்சிலுவை, பெருங்கரடி என்று யாரையும் காணவில்லை. எங்கே எவர் இருக்கிறார்கள் என்று மட்டுப்படவில்லை. அறிந்தது இருந்த இடத்தில் பெரிய வெற்றிடம்.  குவியல் குவியலாக ஒழுங்கற்ற வானத்து ஒட்டடை. கண்முட்டியது. எனக்குள் இருந்த சிறுவனின் முன் கரைந்து போய் நின்றேன்.

பன்னெடுங்காலமாக இரவுப்பயணிகளுக்கு நட்சத்திரங்களே திசைகளும் வரைபடங்களுமாயிருந்தன,  அவர்கள் வானத்தை அண்ணார்ந்தே நேரத்தைச் சொன்னார்கள். திசையைச் சொன்னார்கள். கடலைப், பாலை மணல் வெளியை, பெருங்காடுகளை கடந்து சென்றார்கள்.  இந்தப் பூமியின் நிரந்தரமான வரைபடம் அது.  கூகிள் மைப்பைப் போல் அது முட்டுச்சந்துகளில் கைவிடுவதில்லை, சிக்னல் இல்லாமல் விக்குவதில்லை. மின்சாரமில்லாமல் உரிய பொழுதில் கையறுந்து போவதில்லை. அது என்றென்றைக்குமான வரைபடம். எனக்குள் என்னுடைய நிலப்படம் என்று ஒன்று உருவாகியிருந்தது. என்னுடைய பால்யம் முழுவதும் தேடித் தேடி அடைந்த என்னுடைய உழைப்பு. ஒரு செயலி அதை முழுவதுமாக சிதைத்துவிட்டிருந்தது.

இந்த வாழ்க்கையை வாழ்வதற்கான பிரதான கருவிகள் நம் உடலும் அறிதலும். எவ்வளவு மூளையைச் சோம்பேறித்தனத்திற்குப் பழக்க முடியுமோ அவ்வளவு பழக்குவது தான், தொழில் நுட்பத்தின் முதலாவது  வணிகப்பணி. அதுதான் அவைகளின் முதலீட்டின் முன்னத்தி. அறிதல் என்பது தகவல்களை ஒழுங்குபடுத்தி ஞாபகப் படுத்தும் ஓர் செயற்பாடல்ல. அதுவொரு வாழ்க்கை முறை. அனுபவத்தினாலும் உழைப்பினாலும் தர்க்கம் ,கற்பனை போன்றவற்றினாலும் மனம் என்னும் பெருநிலத்தில் விழுந்து முளைத்த காடு. நாம் தன்னறிதலை, உழைப்பை, நினைவை செயலியொன்றிடம் ஒப்படைத்துவிடுகிறோம்.  அறிதலை கட்டுப்படுத்துவது  என்பதுதான் எல்லாக் காலத்திலும் எல்லோரையும் ஆளும்; அடிமை செய்யும் வழி. ஒருமுறை உங்களுடைய கைபேசியின் செயலிகளை உற்றுப்பாருங்கள். வேலையை இலகுவாக்குவது என்பது  கைத்தொழில் மற்றும் தொழில் நுட்பயுகங்களினால் உருப்பெருப்பிக்கப்பட்ட மிகப்பெரிய மானுட மோசடி.

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’