ஈழத்து சினிமாவும் இலங்கை சினிமாவும் – ஒரு உரையாடல்

‘உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் சொந்தப்பண்பாட்டில் நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்’ என்றார் இயக்குனர்அபாஸ் கிரயோஸ்தமி. இந்திய வணிக சினிமாவின் முன்னால் பண்பாட்டின் களத்தில் நின்று நல்ல படம் எடுப்போம் என்று நிற்பது  முக்கியமான கலைத்துவ முடிவுதான். அப்படியான கலைஞர்களை நோக்கிச்செல்வதே இந்த உரையாடல்களைத் தொடக்க முக்கியமான காரணம்.  இலக்கியத்தில் இருந்துகொண்டு ஏனைய சமகால கலைவடிவங்களுடன் உரையாடிப்பார்ப்பது  அதை எழுத்திற்கு கொண்டுவருவது மெல்ல மெல்லச் செய்தாலும் பயன் பெறுமதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்து இவ்வகை உரையாடல்களை தொடர விரும்புகிறேன். சமகால திரைப்பட மற்றும் அரங்குசார்  கலைஞர்களுடனான உரையாடல்களில் இது இரண்டாவது. இதில் சமாகால இளம் திரைக்கலைஞகளான சோபன் வேல்ராஜா , நவயுகா குகராஜா, பரமேஸ்வரன் பிரசாந் ஆகியோருடன் சமகால சினிமா இத்தீவில் எத்தகையதாய் அவர்களால் புரிந்துகொள்ளப்படுகின்றது என்பதை உரையாடும் விதமாக ஒரே கேள்விகளோடு மூவரையும் அணுகி அவர்களின் பதில்கள் தொகுத்திருக்கிறேன். |யதார்த்தன்

இலங்கையில் சுயாதீன  சினிமாவிற்கு  பொருளாதார பின்புலம் , தொழில்நுட்பம் இவை இரண்டும் கைவரப் பெற்றாலும்  அதன் விடயப்பரப்பு / கதை சொல்லுதல் என்ற அடிப்படையில் போதாமைகள் இருப்பதாக சொல்லப்படும் கருத்துகள் பற்றி உங்களுடைய அபிப்பிராயம்?

சோபன் : இலங்கையில் இருக்கிற தமிழ் சினிமா சுயாதீனமான கட்டமைப்பினுள் தான் இன்னும் இயங்கி வருகின்றது. அதற்கென்று இன்னும் வணிக ரீதியான கட்டமைப்பு ஒன்று வந்து சேரவில்லை.  இந்த சுயாதீனமான கட்டமைப்புக்குள் இரண்டு வகையான போக்குகளை அவதானிக்கின்றேன்.  ஒன்று இந்தியச் சாயலையும் பாணிகளையும் கொண்ட திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்களை எடுக்கின்ற போக்கு. இதற்கே பெருந்தொகையான பணமும் செலவழிக்கப்படுகின்றது.  அதேநேரம் இன்னொரு தரப்பு கலைப்படங்கள், அல்லது சினிமா திருவிழா சார் திரைப்படங்களை உருவாக்கும் போக்குடன் இயங்கி வருகின்றது.  சிறிய கதைகளைக் கொண்ட உணர்வு பூர்வமான இத்திரைப்படங்களுக்குரிய பொருளாதாரமும் தொழில்நுட்ப சாத்தியங்களும் மட்டுப்பட்டு இருக்கின்றது.  பெரும்பான்மை வணிகம் சார் இந்திய பாணி திரைமுயற்சிகள் இந்தியப்பாணியையே ‘கதை’ என்று நம்புகின்றார்கள். எதையெல்லாம் கதையாகச்சொல்ல முடியும் , சொல்லப்பட வேண்டும் என்ற பயணத்தை விரித்துச்செல்வதில் பலருக்கும் அக்கறையில்லை என்றே தோன்றுகின்றது.  அத்துடன் திரைக்கதை பற்றிய பரிச்சமும் மிகவும் குறுகிய , இந்திய –தமிழ் சினிமாவில் உள்ளதே ஒரே திரைக்கதை அமைப்பும் சொல்லுதல் முறையுமாகும் என்ற நம்பிக்கையே பெரும்பான்மையான தரப்பிற்குள் நிலவுகின்றது. திரைக்கதையின் விரிவு, எல்லைகள், மாற்றங்கள் பற்றிய தேடல்4கைய ஒரு பயணத்திற்கு தயாராகவில்லை. அத்தோடு எங்களுடைய  அரசியல், பொருளாதார, பண்பாட்டு சமூகச் சூழலுக்கு எந்தமாதிரியான கதை, திரைக்கதை தேவை என்பதான தெளிவுகளும் பிடிபடாமலே இருக்கின்றதா என்ற சந்தேகமும் என்னிடம் உண்டு. 

ஒரு கலைப்படைப்பு  உருவாகும் போது  எமக்குள் உள்ள உணர்வுகளும்  பிரச்சினைகளும் அதனூடே வெளிப்படும் என்று நினைக்கிறேன்.  படைப்பாளிக்குள் இருக்கக் கூடிய ஏதோ ஒரு முனைப்பும், உச்சமுமே கதையாகவும் கலையாகவும் வெளிப்படுகின்றது என்று நான் நம்புகிறேன். இந்தப்பின்னணியில்  இங்கே உள்ள சூழலில் எந்த மாதிரியான பிரச்சினைகள் இருக்கின்றன.  எவ்வாறான அரசியல் சூழல் நிலவுகின்றது, பண்பாடு எவ்வாறு இயங்கின்றது  என்ற பல பின்னணிகளில் இருந்து உருவாகி வரக்கூடிய கதையைத்தேடிச்செல்வதும், திரைக்கதையை அமைத்துக்கொள்வதும் இங்கே அரிதாகவே நிகழ்கிறது.

உதாரணமாக  ஈரானிய சினிமாக்களில் இயக்குனர் அபாஸ் கிரோயொஸ்தமி ( Abbas Kiarostami)  இயக்கிய Where Is the Friend’s House? (1987) என்ற திரைப்படம்  இருக்கின்றது. அந்தப்பம் ‘ஒரு சின்னப்பெடியன் தன்ர நண்பன் ஒருத்தனின் கொப்பி ஒண்டை மாறி எடுத்துக்கொண்டு வந்திடுவான். அடுத்தநாள் வீட்டு வேலைகள் இருப்பதால் அந்தக் கொப்பியை அவனிடம் சேர்ப்பிக்க வேணும், அதற்காக அந்த பெடியன் தன் நண்பனின் வீட்டைத்தேடிப்போவான்’  இந்தப்பயணமே படத்தின் கதை. இந்தச் சின்னக்கதையின் திரைக்கதை பார்வையாளர்களை படத்தோடு அவ்வளவு நெருக்கமாக ஒன்ற வைக்கும்.  கொப்பி கொடுக்கப்போகும் ஒரு சின்ன சம்பவம் எப்படி கதையாக மாறுகின்றது  என்பதுதான் சினிமாவில் முக்கியம்.  அதற்கான திரைக்கதையே அதன் பெரிய கலைவடிவம்.

இங்கு பார்க்கும் பெரும்பான்மையான கதைகள் கதாநாயகன், வில்லன், கதாநாயகி  என்ற வழமையான  பாணியிலேயே திரும்ப திரும்ப சிக்கிக்கொண்டு சுழன்றுகொண்டிருக்கின்றது.  இங்குள்ள பிரச்சினை என்ன அதன் பின்னணி என்ன என்ற தெளிவில் இருந்து  சினிமாவில் கதை சொல்ல  ஒரு சிறிய கதையே போதும்.  அந்தக்கதை எவ்வாறு சினிமாவின் மொழியாக, திரைக்கதையாக மாறுகின்றது  என்பதே அதன் ‘கலையாக’ இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு கொப்பியைக் கொடுக்கப் போகும் சம்பவத்தில் விரியும் உணர்வும், நிலக்காட்சிகளும் ,  மக்களின் வாழ்வியலும் உருவாகி வர இயலும் என்ற புரிதலை அடையும் போதே  கொஞ்சச் செலவில் கூட ‘நல்லபடங்களை’ எடுக்க முடியும்.

நவயுகா :இலங்கையின் தமிழ்ச் சுயாதீன சினிமாவிற்கு இன்னும் பெரியளவு பொருளாதார பின்புலம் கிடைத்ததாக நான் நம்பவில்லை அத்தோடு தொழில் நுட்பமும் பொருளாதாரமும் மட்டுமே ஒரு நல்ல சினிமாவை உருவாக்கிவிட முடியாது. சரியான கதை மற்றும் திரைக்கதையோடு அதற்குத் தேவையான பொருளாதாரம், தொழில்நுட்பம்  வழங்கப்பட்டு  அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தமது கடமையை சரிவரச் செய்கின்ற போது ஒரு நல்ல திரைப்படம் கருக்கொள்ளும். நீங்கள் சொல்வதைப்போல விடயப்பரப்பு, கதை சொல்லுதலில் இன்னும் தெளிவும் தேடலும் நமக்கு அவசியமாகவே இருக்கிறது. ஒரு நல்ல சினிமாவின் ஆரம்பம் கதை மற்றும் திரைக்கதை. அதைச் சரியாகச் செய்ய பல திரைக்கதை எழுத்தாளர்கள் உருவாக வேண்டும். இன்னும் அதிகளவான தேடலும் பயிற்சியும் அவசியமாக இருக்கிறது.  2020 ம் ஆண்டு அமெரிக்கா எழுத்தாளர் சங்கத்தில்  50,000 பிரதிகள் பதிவு செய்யப்பட்டு 25 மட்டுமே விற்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல பல நூறு வருட சினிமாவைக் கொண்ட நாடுகளிலேயே திரைக்கதை எழுதுவதில் போதியளவு அறிவின்மை நிலவுகிறது. அத்தோடு நமது சினிமா தனது வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது.  எனவே நான் உட்பட நாம் அனைவரும் கற்பதிலும் தேடுவதிலும் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும் படைப்புக்களைச் செய்வதிலிலும் சர்வதேசத் தரமுள்ள சினிமாவை உருவாக்குவதில் இன்னும் கவனமெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

இலங்கை சினிமா , ஈழ சினிமா  ஆகிய இரண்டு அடையாளங்கள் பேசப்படுகின்றன. அதாவது சிங்கள சினிமா , தமிழ் சினிமா என்ற அடிப்படையில் இரண்டு பிரிப்புக்கள் நிகழ்கின்றன. இவை தொடர்பில் எவ்வாறு பார்க்க வேண்டும்தமிழ் , சிங்கள சினிமா இணைந்து  இங்குள்ள சினிமா பயணிக்க வேண்டும் என்று கருதுகின்றீர்களா ? ஏன் ?

பிரசாந்: இலங்கை சினிமா என்பது ஒட்டுமொத்தமாக இங்கிருந்து வெளிவருகின்ற எல்ல திரைப் படைப்புக்களையும் தான் சுட்டுகின்றது. சிங்களமோ, தமிழோ எதுவானாலும் அது இலங்கை சினிமா தான். மொழி ரீதியாக இலங்கை சிங்கள சினிமா, இலங்கை தமிழ் சினிமா என்று உள்ளடுக்காக மேலும் இரண்டு பிரிப்பை செய்யலாம்இப்போதைக்கு இந்தக் குழப்பம் இல்லாமல் எல்லாவகையிலும் ஒரு தொழில்முறை கட்டமைப்பையும் தொழில்நுட்ப வளங்களையும் கலைஞர்களையும் கொண்டிருக்கின்றது என்ற அடிப்படையிலும், உலகரங்கில்  அடையாள முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு இருக்கிறது  என்ற வகையிலும் இலங்கை சினிமா என்கின்ற பொது பெயர் சிங்கள சினிமா என்று ஆதிக்கம் பெற்றிருக்கிறது என்று  குறிப்பிடலாம். எனவே கேள்வியில் குறிப்பிட்டது போல இலங்கை சினிமா என்பது சிங்கள சினிமா என்ற புள்ளியை எட்டுவோம். அதே நேரம் தெளிவாக தமிழ் சினிமாவும் ஈழம் சினிமாவும் ஒன்றல்ல. இலங்கையில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வெளிவருகின்ற தமிழ் திரைப்படைப்புக்களை எடுத்து  எவை எல்லாம் ஈழம் சினிமாவுக்குள் வரும் என்கின்ற கேள்விக்குள்  போனால் அங்கே சிதறுதல்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான தெளிவான கோடுகள் இருப்பதை கவனிக்கலாம். உதாரணத்துக்கு கொழும்பிலிருந்து வந்தால் அது இலங்கை தமிழ் சினிமா என்று பொதுமைப்படுத்தியும், மலையகத்தில் இருந்து வந்தால் மலையக தமிழ் சினிமா என்று பொதுமைப்படுத்தியும் அடையாளப்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். இது தெரிந்தும் தெரியாமலும் வேறுபாடுகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது

ஈழம் சினிமா என்பது இலங்கை தமிழ் சினிமாவின் ஒரு பகுதி. ஒரு அசைவியக்கம். ஒரு சிந்தனைப் பள்ளி. அது தன்னை தனித்துவம் மிக்க ஒன்றாக இங்கே கட்டமைக்க விரும்புகின்றது.   ‘தமிழ் சினிமாஎன்ற சொல்லை வளர்ச்சி பெற்ற  தென்னிந்திய திரைத்துறையுடன் தொடர்ப்புபடுத்தியே நாம் இதுவரை பயன்படுத்தி வந்ததன்  வழியாக அதே சொல்லை அப்படியே பயன்படுத்தவதில் உடன்பட முடியாமல் இருக்கின்றோம். இதற்கு எதிராக அல்லது மாறாக வேறுபட்ட, எமக்கென தனித்துவமான சினிமாவை கட்டமைப்பதற்கான, அடையாளபடுத்துவதற்கான ஒருமித்த கூட்டுச் சிந்தனை தான் ஈழ சினிமா என்கின்ற சிந்தனைப் பள்ளியாக வளர்ச்சி கண்டிருக்கின்றது. குறிப்பாக வடக்கை மையமாக வைத்து அது  மேலெழுகின்றது. அது ஒரு பிராந்திய சினிமா. ஈழம் சினிமாவில் நிலத்தையும் தமிழ்தேசியத்தையும் பிரிக்கமுடியாது. ஈழம் சினிமா பிராந்திய சினிமா என்று குறிப்பிட்டதற்காக அதன் எல்லைகளை குறுக்கக் கூடாது. படைப்புக்களின் கருக்கள், கதை மாந்தர்கள், மொழி, பண்பாடு, கலைஞர்கள், அவர்களின்  கருத்தியல் போன்ற  பல விடயங்கள் ஈழம் சினிமா என்கின்ற தனித்துவமான சினிமாவை கட்டமைப்பத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றனஇதற்கான விதைகள் விடுதலைப் போராட்ட காலத்திலேயே போடப்பட்டாயிற்று. அதன் தொடர்ச்சியாக இயங்கிய முன்னோடிக் கலைஞர்களின்  காவுதலும் எமக்கான சினிமாவுக்கான  சிந்தனை வழிகாட்டலுமாகவே  ஈழம் சினிமா  பரவலடைந்தது எனலாம். முதல் சொன்னமாதிரி அதன் எல்லைகளை குறுக்க முடியாது. கடல்கடந்து புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழம் சினிமா பற்றிய சிந்தனையோடு வெளியாகும் படைப்புக்களை புலம் பெயர் ஈழ சினிமா என்று குறிப்பிடுகின்றார்கள்இறுதியாக இலங்கைத் தமிழ் சினிமா என்பது பல்பரிமாணத் தன்மையைக் கொண்டிருகின்றது. கிளைகளைக் கொண்டிருகிறது. அதற்கான அங்கீகாரம் என்பது தெளிவற்றது.

ஈழம் சினிமா பொதுவழக்கில்தமிழ் சினிமா’(தென்னிந்தியஅல்லஆனால் இலங்கை தமிழ் சினிமாவின் ஒரு பகுதி, அதே நேரம் இலங்கை தமிழ் சினிமா என்பது ஈழம் சினிமா தான் என்று அழுத்த விடும்புகின்றோம். இது இரண்டாக பிரிகின்றது ஒன்று உள்ளூர் படைப்புக்களாக அடையாளம் காணும் ஈழம் சினிமா மற்றையது  புலம்பெயர் நிலத்தில் இருந்து வெளிவரும் ஈழம் சார்ந்த திரைப்படங்கள் புலம்பெயர் ஈழ சினிமா

இலங்கை தமிழ் சினிமா வளர்ச்சியில் ஆரம்பத்திலேயே தமிழ் சிங்கள கூட்டு உழைப்பு என்பது இருந்துள்ளது. இன்றைக்கு சிங்கள சினிமா சிறப்பான தொழில்துறையாக வளர்ச்சி கண்டிருக்கின்றது. உலகளவில் நாம் பின்தங்கி இருக்கின்றோம். சினிமாவில் இருக்கக் கூடிய வெவ்வேறு துறைகளுக்கான சிறப்பான கலைஞர்கள் சிங்கள சினிமாத்துறையில்  உருவாக்கப்பட்டிருகின்றார்கள். தொழில்நுட்ப வளங்கள் எல்லாமே அங்கே ஒருங்கமைக்கப்பட்டு இருக்கின்றன. எங்களுக்கு மிக அருகில் இத்தனை வளங்கள் இருக்கிறது. அங்கிருந்து நாம் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்அறிவைப் பகிர முடியும். மீளவும் கூட்டுழைப்பை செய்யமுடியும். அதில் தவறில்லை. சிலவேளை நமது கலைஞர்கள் மட்டும் என்கின்ற அல்லது வேறு சிந்தனைகள் இடம்கொடுக்காமல் இருக்கலாம். அதற்கு  இன்றைக்கு உலகம் சுருங்கி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்

நவயகா : சினிமா என்பது ஒரு மொழி. அதில் பிரிவினைகளைக் கடந்தது. ஆனாலும் இங்கே நாம் சில பகுப்புக்களுக்கு உட்படுத்தப்படுகிறோம். ஈழ சினிமா ஈழம் சார்ந்த கதைகளை மட்டும் பேசுமானால், ஈழம் சாராத கதைகளைப் பேசுகின்ற சினிமாவை உள்வாங்குவதற்கு மீண்டும் இன்னுமொரு வகைப்படுத்தல் தேவைப்படுகிறது. எனவே ஈழ சினிமா என்பதற்கான வரையறையை நான் சரியாக அறியவில்லை, இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறேன். மலையக மக்கள், தலைநகரில் வாழும் மக்கள், வட கிழக்கு மக்கள் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ்  மக்கள் அனைவரையும் இணைத்த எல்லா பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற சினிமாவை உள்வாங்குவது அவசியம் என்று கருதுகிறேன். சிங்கள சினிமா தனக்குத் தேவைப்படும் போது நம்மை உள்வாங்கிக் கொள்ளும் நாமும் அப்படியான சந்தர்ப்பங்களில் இணைந்து பயணிக்கலாமே  தவிர  நமக்கான தனித்துவம் பேணப்படும் நமது தமிழ் சினிமா வளர்க்கப்படவேண்டும். சிங்கள சினிமாவில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன். தமிழோ சிங்களமோ எதுவாக இருப்பினும் நாம் தவிர்க்கப்பட முடியாதவர்களாக இருக்க வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது.

சோபன் : இங்கே இரண்டு சினிமா இருக்கும் என்பதில் எனக்கு பெரிய சந்தேகங்கள் கிடையாது. மொழி, கலாசாரம் என்ற அடிப்படையில் அவற்றை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்.  ஆனாலும் இதில் தமிழ்ப்படங்கள் எதை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்பதில்  தமிழ்ப்படங்கள அவற்றின் அடையாளம் பற்றிய நிலைப்பாடுகளில் தெளிவாக இருக்க வேண்டும். இன்னும் ஒடுக்குமுறைக்குள் இருக்கும் சமூகங்கள் என்றவகையில் சிறுபான்மை மக்கள் சார்ந்த மொழி, பண்பாட்டை கொண்ட படங்கள் கொண்டிருக்க கூடிய அரசியல், பண்பாட்டு அடையாளப்படுத்தல் முக்கியமான ஒன்றே.  ஆனால்  ‘ஈழ சினிமா’ என்ற பதம் ஒரு கற்பனையைப்போல மாயையைப் போல இருக்கிறது என்றே படுகின்றது.  ஈழம் என்பது கற்பனையான ஒன்றாக இருக்கும் போது  யதார்த்தத்தில் அதை சினிமாவிற்காக எப்படி அடையாளப்படுத்துவது என்ற சிக்கல் எழுகின்றது. உதாரணமாக  இங்கிருந்து ஒரு தமிழ் சினிமா சர்வதேச திரைப்பட திருவிழாக்களிலோ அல்லது சர்வதேச திரையிடல்களிலோ திரையிடப்படும் போது  அது ஈழ சினிமாவாக சொல்லப்படும் போது நடைமுறைசார்ந்து இல்லாத ஒன்றைக் கொண்டு எவ்வாறு அதை அடையாளப்படுத்திக்கொள்வது என்ற கேள்வி இருக்கின்றது.  இலங்கையில் இருந்து திரையிடப்படுகின்றதா ஈழத்தில் இருந்து திரையிடப்படுகின்றதா என்ற  கேள்வி அங்கு எழப்போவதில்லை. அங்கே இல்லாத ஒன்றிற்கான நடைமுறையை கோரமுடியாது இல்லையா?  அதே வேளை இது இலங்கை தமிழ் சினிமா என்று சொல்லும் போது இலங்கையில் தமிழர் என்று ஒரு இனக்குழு இருக்கின்றது , அதன் பிரச்சினைகளைப் படம் பேசுகின்றது, அல்லது அந்தப்பண்பாட்டின் பின்னணியில் இப்படம் எழுந்துள்ளது, அதன்  கதைகளைப் பேசுகின்றது என்பது அற்கு அரசியல் , பண்பாடு, வரலாறு எல்லாம் இருக்கின்றது என்பதை சினிமாவின் கலைத்தன்மை மூலம் பேசும் போது அது நடைமுறைக்குள் கலையாகவும் அடையாளமாகவும் , எதிர்கொள்ளப்படுவது சிக்கலற்று இருக்கின்றது இல்லையா? 

ஈழம் இன்று வரைக்கும் ஒரு கற்பனையான இலட்சியமான ஒன்று என்று அனைவரும் அறிவோம். ஈழம் ஒன்று ஒன்று இல்லை. போராட்டம் முடிந்து விட்டது.  இனி ஒரு போருக்கான எந்த முத்தாய்ப்பும் இல்லை.  ஈழப்போருக்கான பலமோ அதற்கான உணர்வோ நம்மிடம்  குறைந்துவிட்டது என்பது வெளிப்படையாகவே நமக்குத்தெரிகிறது.  ஒரு கற்பனையைச் சொல்லி அதை நம்பிக்கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இப்ப , எங்கட இருப்பைத் தக்க வைக்கிறதுக்கு என்ன என்ன யதார்த்தமான உண்மையான வழிகள் இருக்கின்றன என்பதை தேடிச்செல்வதுதான் இப்போது எங்களுக்கு நல்லது  என்று நான் யோசிக்கிறேன். இல்லை என்று ஆகி விட்ட ஒன்றைச் சொல்லி அதற்கு மேல் வரையறைகளைக் கொண்டுவந்து, அதை ஒரு மதமாக்கி  அதை வாழ்வாக கருதுவது  ஒரு முட்டாள்தனம் என்றுதான் நான் யோசிக்கிறேன். எனக்கு அதில் உடன்பாடில்லை.

சினிமா மாதிரியான சக்திவாய்ந்த ஊடகம் ஒன்றை வைத்துக்கொண்டு  தமிழர் என்று ஒரு இனக்குழு இங்கே இருக்கு, அதுக்கொரு வாழ்வியல் இருக்கு,  அதற்கொரு வரலாறும் பண்பாட்டு வாழ்க்கையும் இருக்கு, அந்த வாழ்க்கைக்குள் சாதி, ஆணாதிக்கம், வர்க்கம் என்று ஏற்றத்தாழ்வுகள் பிரச்சினைகள் இருக்கு,  முரண்பாடுகள் இருக்கு  என்பதாக சினிமாவின் மூலம் எங்கட கதைகளைச் சொல்லும் போது  கற்பனையான ஒன்றைவிட அதிகாமான வீச்சுள்ள போராட்ட வடிவமா சினிமா என்கின்ற கலையும்  மாறும்.  அது நடைமுறைசார்ந்து எங்களுடைய இருத்தலை நிலைப்படுத்திக்கொள்ள உதவும்.  உலகம் நடைமுறை சார்ந்த உண்மையினாலேயே அறியப்படும் அசலான போராட்டமும் கலையும் அதைச்சார்ந்தே இருக்க வேண்டும்.  தெளிவான வழியும் அதுதான்.

அதோட கட்டாயம் ஒரு சமயத்தில் நாங்கள் சிங்கள சினிமாவோட இணைந்துதான் பயணித்தாக வேண்டும் என்றே நினைக்கிறேன்.   இப்ப இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் பெரிய அளவில் தயாரிப்பு வேலைகளைச் செய்யும் போதும் ’இலங்கை சினிமா’ ஒரு industry ஆக மாறும் போது  இலங்கைத் தமிழ் சினிமா தனித்து நிற்கமுடியாது.  சேர்ந்து இயங்கியே ஆகவேண்டும்.  நடைமுறையில்  வளம், ஆளணி, பார்வையாளர்கள் என்று  தொழில் நுட்பம் சார்ந்தும்,  தமிழர்களின்  இருப்பு, அடையாளம், இணக்கமான வாழ்க்கை போன்ற எதிர்காலம் சார்ந்தும்  தமிழ் சினிமா ’இலங்கையில்’ இருந்து தனித்து இயங்குவது சாத்தியமே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை சினிமாவின் பொற்காலமாக கருதப்படக்கூடிய இனப்பிரச்சினை கூர்மையடையாத காலத்தில் எழுந்த ஆரம்பகால இலங்கைச் சினிமாவின் வரலாற்றை எடுத்துப்பாருங்கள்  தமிழ் , சிங்கள சினிமா இரண்டும் இணைந்தே அக்காலத்தில் இயங்கியுள்ளதைப் தெளிவாக அவதானிக்க இயலும்.

இந்திய, தமிழ்நாட்டு வணிக சினிமா சூழலும் சரி , பண்பாட்டுச் சூழலும் சரி  இலங்கையின் சினிமாவில் எத்தகைய தாக்கங்களை உண்டுபண்னுகின்றன? அவற்றை எவ்வாறு சமகால இலங்கை சினிமா எதிர் கொள்ளலாம் ?

நவயுகா : இந்திய சினிமா நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வணிகச் சூழல் என்கின்ற போது தமிழ்ப் படங்களுக்கு இலங்கையில் சரியான விநியோக முறை கூட இல்லாத நிலையில் நாமிருக்கிறோம் ஆனால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் திரைப்படங்களுக்கு சிறப்பான விநியோக முறை இருக்கிறது இதை விட மக்கள் பல வருடங்களாக இந்திய சினிமாவிற்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள். நமது சினிமா சரியான முறையில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கின்ற போது நல்ல சினிமாவை மக்கள் கொண்டாடி இருப்பதும் கொண்டாடப் போவதும்  நிச்சயம்மூடிய கதவுகள் இருந்தால் புதிய கதவுகள் திறக்கும் எனவே நல்ல சினிமா தான் வணிகச் சூழல் தொடர்பான சவால்களுக்குப் பதிலடியாக அமையும்பண்பாட்டுச் சூழலைப் பொறுத்தவரை மக்கள் சற்றுத் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது. குறிப்பிட்ட சிலர் சினிமாவினால் பாதை மாறிப் போகிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது தான் . ஆனால் சினிமாக்கள் அதிகளவான இளைஞர்களைக் கனவு காண வைத்திருக்கிறது, வாழ்வதற்கான நம்பிக்கை கொடுத்திருக்கிறது என்றே நான் நம்புகிறேன்

சோபன்முழுக்க முழுக்க இங்குள்ள சினிமாவும் கலைஞர்களும் இந்திய தமிழ் சினிமா படங்களின்  முழுத்தாக்கத்தையும் பெற்றிருக்கிறார்கள். அங்கிருந்து தான் அவர்களின் சினிமா பற்றிய முனைப்பே தொடங்குகின்றது.  இங்கே  இந்திய சினிமாவின் தொடக்கம் என்ன அதன் பின்னணி என்ன என்பதனைப் பார்க்க வேண்டும்.  எம். ஜி. ஆரை அங்கு கொண்டாடிய அளவிற்கு இங்கேயும் கொண்டாடி இருக்கிறார்கள். இந்த தாக்கம் பல தசாப்தங்களாக இருந்து வருகின்ற ஒன்று.  இதனை உடனே மாற்ற இயலாது. இங்கே இந்திய – தமிழ் சினிமாவிற்கு மாற்றான சினிமாவை உருவாக்கும் போதுதான் நாங்கள் துறைசார்ந்து பயணிக்க முடியும் என்று நினைக்கிறேன். இந்திய சினிமாவின் பெரும்பான்மை தரப்பின் பாணிகள்  அமெரிக்க  ஹொலிவூட்  பாணியின் குறிப்பிட்ட அமைப்பில் தான் திரும்பத்திரும்ப இயங்குகின்றது.  சின்னச் சின்ன மாற்றங்கள் வருமே ஒழிய  முழுமையான மாற்றங்களை அடைவது கிடையாது. அது முழுமையான ஒரு ‘வணிக சினிமா’ மாதிரியைக் கொண்டே இயங்கி வருகிறது. இன்று இந்த பாணியை மீறிய படங்களையே cult movies என்று அழைக்கிறோம். அமெரிக்க சினிமாவிற்கு மாற்றாக இயங்குபவை ஐரோப்பிய படங்கள்தான். இலங்கை தமிழ் சினிமா தனித்துவமான பாணியை அடைய வேண்டும் என்றால் எங்களுக்கு ஐரோப்பிய சினிமாவின் தாக்கம் தான் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் இந்திய திரைப்பட பாணியை மீறி எழும் மாற்றான தனித்துவமான ‘திரைமொழியை’ உருவாக்க முடியும். முதலில் இந்தியப்பாணியை மீற வேண்டும். முக்கியமாக வணிகப்படங்களில் கூட இந்த மீறல் அமைய வேண்டும்.  இன்று கொரிய சினிமா அதற்குப் பெயர் போனதாக உள்ளது. கொரிய வணிக திரைப்படங்கள் கூட வித்தியாசமான பாணிகளைக் கொண்டவைதான்.  ஹொலிவூடில் இருக்க கூடிய பாணிகளில் இருந்து அவை பெரியளவில் வேறுபடுகின்றன. அதைப்போல இந்திய சினிமாவிற்கு மாற்றாக என்ன இருக்கின்றன என்பதை தேடிச்செல்ல வேண்டும். அதிலிருந்துதான் ஒரு வணிகப்படத்தையோ கலைப்படத்தையோ எடுக்க வேண்டும். இந்தியாவில் மலையாள திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு தனித்துவமான கதை சொல்லும் முறையும், சினிமா மொழியும், கைவரப்பெற்றிருக்கின்றன. இந்திய அளவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி அவர்களுக்கு என்று தனித்துவமான இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. இப்போது நாங்கள் அந்த மலையாளப் பாணியை பிடித்தால் கூட குழப்பமடைவோம். இங்கே ‘எங்களுக்கு எண்டு’ ஒரு தனித்துவமான பாணியை உருவாக்க வேண்டும் என்றால் உலகம் முழுவதும் உள்ள மாற்றான சினிமாவைப் பார்த்தோம் என்றால்  எங்களுக்கான மாற்று சினிமா எது என்பதை நோக்கிச் செல்ல முடியும். எவை எங்களுடைய எல்லைகள், களங்கள் , சொல்லல் முறைகள் என்பதை தீர்மானிக்க முடியும். அப்படியொரு கண்டடைதல் நிகழ்வது மூலமே இங்குள்ள திரைக்கலைஞர்களால் நல்ல படங்களை  உருவாக்க முடியும்,  இவற்றைச் சாத்தியப்படுத்த கூடிய கட்டமைப்பும் வெளியும் இங்கே உருவாகி வரவேண்டும்.

இலங்கையில் வணிக இலாபத்துடன்  திரைப்படங்கள் , குறும்படங்கள்  வெளிவர வாய்புக்கள் எவ்வாறு காணப்படுகின்றன?  சினிமா திருவிழா சார் படங்களை விட வணிக : பொழுதுபோக்கு திரைப்படங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

சோபன்: வணிக இலாபத்துடன் வரும் குறும்படங்களோ , திரைப்படங்களோ கூட இந்திய பாதிப்பில் வந்தாலும் அதற்கான தெரிவுகள் குறைவாகவே இருக்கும். நாங்களே எங்களுக்குள் திரையிட்டு கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொள்ளக் கூடியதாக இருக்குமே தவிர பெரியளவில் முன் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கிறது.  அதற்கான கட்டமைப்பும் இங்கே மட்டுப்பட்டதாக உள்ளது. இங்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் கிடையாது.  அத்தோடு இந்திய படங்களைப் பார்த்துப்பழகிய சனங்களுக்கு வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் போது  கட்டாயம் அவற்றைப் பார்ப்பார்கள்.  ஆனால் இங்கே உள்ள சினிமா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்  மாற்றான சினிமாக்களை எடுத்து வெளியிட தயாராக இருப்பார்களா என்பதுதான் கேள்வி? இந்த மாற்றான தேடல் இருந்தால் வித்தியாசமான கதைக்களம் இருக்கும்  வணிக சினிமாக்கள் கூட எடுக்கப்பட முடியும்.  இந்திய பார்வையாளர்களை இலக்கு வைத்துக்கூட அங்கே கொண்டு சென்று கூட திரையிட முடியும். அங்கேயும் எங்களுக்கான வணிக நிலைப்படுத்தலை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.  அதற்கான தனித்துவத்தையும், தரத்தையும் கொண்டு செல்லக்கூடிய உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம்.நடைமுறையில் இங்கு படங்களுக்காக பணத்தைப் போடுபவர்களும் பெரும்பாலும் வணிகம் சார்ந்த படங்களைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அவர்களும் பெரும்பாலும் இந்திய தமிழ் திரைப்படங்களின் பாதிப்பு உள்ளவர்கள் என்பதால்  வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்களுக்கு மாற்றான சினிமா பற்றிய பார்வைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்குமில்லை. ஒரு சிலர் மட்டும்தான் அப்படியான மாற்று சினிமாக்களை விரும்புகிறார்கள். அதற்கான பணத்தை முதலிடத்தயாராக இருக்கிறார்கள். ஆகவே இங்கே கருத்தியல், சொல்லுதல் முறைகளில் மாற்றம் வரும் வரைக்கும் நாங்கள் சின்ன சின்ன வெற்றிகளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கலாமே தவிர பெரியளவில் அவை வந்து சேர்வதற்கு வாய்ப்புக்கள் குறைவுதான்.

நவயுகா:நிச்சயமாக! குறும்படங்கள் you tube மட்டும் நம்பி எடுக்கப்படாமல் கட்டணம் அறவிடும் சில app, OTT தளங்களை நோக்கியதாக இருக்க வேண்டும். வெப் சீரிஸ் செய்யும் முயற்சிகளில் ஈடுபடலாம். திரைப்படங்கள் தரமாக இருக்கின்ற போது அவற்றை OTT தளங்களுக்கு கொடுக்கலாம். திரையரங்குகளில் வெளியிடலாம். எல்லாமே நம்மைச் சுற்றி இருக்கிறது நாம் நல்ல தயாரிப்புக்களைச் செய்வது மட்டுமே மீதமாக இருக்கிறது. சரியான முதலீட்டாளர்கள் சரியான திரைக்கதையையும் கலைஞர்களையும் தெரிவு செய்து அதில் முதலிடுகின்ற போது நிச்சயமாக லாபமீட்ட முடியும். வணிக சினிமா என்பது இலாபமீட்டுகின்ற சினிமா! திருவிழா சார் படங்களையும் நல்ல தரமான சினிமாவிற்கான அம்சங்களோடு செய்கின்ற போது அது வணிக சினிமாவாக மாறும். திருவிழா சார் படங்கள் என்பவை எப்படி வேண்டுமானாலும் எடுக்கப்படலாம் என்பதல்ல, அனைத்துமே மக்களால் ரசிக்கப்பட வேண்டும். பொழுது போக்கு சினிமாக்கள் தேவையாக இருக்கிறது ஏனெனில் ஆறாத வடுக்களோடு இருக்கும் எம் சமூகத்திற்கு உள ஆறுதல் தேவைப்படுகிறது. நல்ல கருத்துக்களைப் பேசும் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் உருவாகுவதும் சமூகத்தின் தேவையாக இருக்கிறது

இலங்கையில் சினிமாவை தொழில் முறை கல்வியாக வழங்குவதில் என்ன பிரச்சினைகள் இருக்கின்றன?

பிரசாந் சினிமா தொழில்முறை கல்வி எத்தகையது ? இலவசமானதா! பணம் சார்ந்ததா! அதன் தரம் எப்படிப்பட்டது! அத்தொழில் கல்வியின் என்ன நோக்கம்! போன்ற கேள்விகள் தொடர்ச்சியாக எனக்கு வருகின்றன. சில பொதுவான பதில்களை வழங்க முயற்சிக்கிறேன்எல்லாவற்றுக்கும் முதலாவது பொருளாதாரம். சினிமாவை ஒரு தொழில்துறைக் கல்வியாக வழங்குவதற்கு பணம் நிச்சயமாக செல்வாக்குச் செலுத்தும். ஒரு அடிப்படைக் கல்வியைக் கொடுப்பதற்குமே நிச்சயமாக பணம் தேவை. செலவில்லாமல் சினிமா செய்யமுடியாது. சுதந்திரமாக வளந்துவரும் இந்த தொழில்துறையை வளப்படுத்துவதற்காக  பெருந்தொகையான பணத்தை யார் வழங்குவார் என்கின்ற முதல் கேள்வி, அதன் மூலமாக அவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்ற

அடுத்த கேள்வி! உடனடி லாபம் கிடைக்குமா என்பதும் இன்னொரு கேள்வி. வீணே யாரும் பணத்தை கொட்டமாட்டார்கள். அரசபோசிப்பு நிச்சயமாக கிடைக்காது. எல்லாமே சுரண்டலுடன் கூடியவைலாபநோக்காக  மற்றும் சேவை நோக்காக சினிமா தொழில் கற்கையாக வழங்க உருவாக்கப்பட்ட  இரு தனியார் நிறுவனங்களை நான் அறிவேன். ஒன்று கற்கை நெறிக்கு ஒரு தொகைப் பணத்தை அறவிட்டது. மற்றையது மாணவர்களை இனம்கண்டு அவர்களின் ஆற்றலை வளப்படுத்தும் விதமாக இலவசமாக செயற்பட்டது. இந்த இரண்டு நிருவனமும் தமது செயற்பாட்டில் இருந்து ஒரே வருடத்தில் வீழ்ச்சியைக் கண்டன. இவற்றில் இருந்து வெளிவந்த எத்தனை மாணவர்கள் தொடர்ந்து சினிமாத்துறையில் இயங்குகின்றார்கள் என்று பார்த்தால் கேள்விக் குறி தான் இருக்கும்.  

ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் மனநிலை ஆகியனவும் முக்கியமானவை. இன்றைக்கு  இந்த சினிமா துறை அங்கும் இங்கும் ஆக எதோ ஒருவகையில் தொழில்துறை சார்ந்த ஒரு கல்வியை, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் கற்றுக்கொண்ட  தமிழ் தொழிநுட்பக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அதே போல சுய  கற்றலின் வழியாக தம்மை தடம் பதித்துக்கொண்ட கலைஞர்கள் இருக்கின்றார்கள். இப்படி அரிதாக இருகின்ற கலைஞகர்களில் சில  கலைஞர்கள் தான் இது ஒரு கூட்டு உழைப்பு என்ற வகையில் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கின்றார்கள். மற்றும் சிலர் தமக்கான போட்டி நிலையைக் கருத்தில் கொண்டு தவிர்த்து விடுகிறார்கள். மிகவும் அரிதாக இருகின்ற தொழில்துறை வேலைவாய்ப்பு ஒரு காரணமாக இருக்காலாம். அதே போல அவர்களும் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருகின்றார்கள். ஆகவே இங்கே சினிமா தொளில்கற்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டால்  முதலில் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறை என்பது இருக்கும். செயல்முறை ரீதியான கற்றல் இல்லாமல் சினிமா தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளுதல் என்பது சாத்தியம் இல்லாது. அருகில் இருக்கக் கூடிய சிங்கள கலைஞர்கள் தொழிநுட்ப வல்லுனர்களை கொண்டுவரும் பட்சத்தில் தமிழ் மாணவர்களுக்கு மொழி பிரச்சனையாக இருக்கின்றது. அதை சமாளிப்போம். அதே போல தங்குமிடம் வசதி வாய்ப்புக்களும் செலவு அதிகம் எடுத்துக் கொள்கின்றது. நிரந்தரமற்ற ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கற்றலை முடித்து அனுப்ப வேண்டி இருக்கும். அது எவ்வளவு நிறைவானதாக இருக்கும் என்பது தெரியாதுஇந்தியாவில் இருந்து ஆசிரியர்களைக் கொண்டுவந்தாலும் அவர்களுக்குமான போக்குவரத்து சம்பளம் மற்றும் செலவுக் கணக்குகள் அதிகமாகவே இருகின்றனயார் தயாராக இருக்கிறார்கள் என்பதும் ஒரு கேள்வி. வெளிநாடுகள் ன்றால் நேரலையிலேயே முடிந்து விடுகின்றது

 மேலும் நிச்சயமற்ற பொருளாதாரத் தன்மையைக் கொண்டிருகின்ற சினிமாவை முழுமையாக நம்பி மாணவர்கள் இறங்க அச்சப்படுவார்கள். தீவிரமான பற்றுடன் இருப்பவர்கள் ஆசைக்கு படைப்புக்களில் ஈடுபடலாம். ஆனால் பொருளாதார நிலைப்படுத்தல் இங்கே சினிமாவை ஒட்டி அமைக்கப்படவில்லை என்பதால் வெவ்வேறு வேலைகளை நோக்கி ஓட வேண்டி இருக்கிறது. இந்த நிலை இன்று வரைக்கும் நீடிக்கின்றது. சினிமாவினால் பொருளாதாரம் மற்றும் தனது வாழ்க்கை நிலையில் செழிப்பான எதிரிகாலம் இருக்கும் என்கின்ற நம்பிக்கை வரும்பட்சத்தில் தான் மனம் ஒருமித்து இதை செய்வார்கள். மற்றும்படி இங்கே கலைஞர்களுக்கு வாழ்வில்லை என்பதை காலம் கற்பித்துகொண்டே இருக்கிறது. கலைஞர்களாக சிந்திப்பதற்கு இங்கு வெளி இல்லை. இது உடனடியாக மாறக் கூடிய ஒன்றல்ல. மெல்ல மெல்ல  மாறும் என்று நம்புவோம். ஆகவே கற்றலை கொடுத்த பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்கான சினிமா வேலைவாய்ப்புக்கள் தொடர்ச்சியாக கிடைக்குமா ஒரு படைப்புக்கான பொருளாதாரம் கிடைக்குமா அல்லது அவர்கள் வாழ்க்கை பொருளாதார தன்மையில் மாற்றம் இருக்குமா போன்ற கேள்விகள் இங்கே  அடுத்தடுத்து அடுக்கப்படும்போது இதன் சிக்கல் தன்மையின் ஆழம் புரியும். இது எல்லாமே ஒரு மாணவனின் மனதில் ஓடும். முழுமையான கற்றலை அவனால் செய்யமுடியாது

அத்தோடு சினிமா ஒரு தொழில்நுட்பக் கலை என்ற அடிப்படையில்  தொழிநுட்பக் கற்கையை தருவதற்கு அதனுடன்  அதனுடன் தொடர்புபட்ட தொளிளுட்பக் கருவிகள் வளங்கள் இல்லாமல் சாத்தியமில்லை. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிவடிவமைப்பு என்று பல துறைகளுக்கு தொழில்நுட்ப வளம் தேவை. இவற்றை சொந்தமாக கற்றல் நிறுவனம் கொள்வனவு செய்து வைத்திருப்பதற்கோ நிறுவதற்கோ பெருந்தொகையான பணம் தேவையாக இருக்கும். அல்லது வாடகை அடிப்படையில் என்றாலும் அதற்கும் பணம் தேவை. அதிலும் பல சிரமங்கள் இருகின்றன. மாணவர்கள் நினைத்தமாத்திரத்தில் பயன்படுத்தக் கூடியமாதிரி  ஒரு அடிப்படை தொழிநுட்பக் கருவிகள் கற்றல் நிறவனத்தில் இருக்கவேண்டும். ஒரு அடிப்படை சினிமாக் கற்கைக்கான தொழில்நுட்ப வளங்கள் இல்லாமல் கற்கை சினிமாத் தொழில்துறைக் கற்கை நெறி என்பது அபத்தமானது

பாடத்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொழில் முறையான கல்விக்கு முக்கியமானவை. மூன்று வருடமோ நான்கு வருடமோ டிகிரி கொடுப்பதற்கு ஒரு சினிமாக் கல்லூரி நிருவாகமும் இங்கு இல்லை. அவ்வளவு தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. வழிகாட்டலும் இல்லை. அல்லது தகுதி வாய்ந்தவர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்! மாணவர்கள் கற்று முடிந்த பிறகு அவர்களுக்கு தொடர்ச்சியாக இயங்குவதற்கான களமும் இல்லை. தகுந்த திட்டமிடலும் இல்லை. சினிமாத்துறைக்குள் இருக்கக் கூடிய அடிப்படை திரைத்துறைகளையும் அது சார்ந்த கலைஞர்களையும் தொழில் நுட்ப வல்லுனர்களையும் உருவாக்காமல் அது எப்படி ஆரோக்கியமான தொழில்துறையாக மாறமுடியும்! ஒளிப்பதிவு, இயக்கம் இதை தவிரவும் மற்ற துறைகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்கள் இங்கு எந்தமாதிரியான பாடத்திட்டத்தை செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றதுகுறுகிய காலத்தில் நிறைவான விடயங்களைப் பெறவதற்கும் அவர்களுக்கு எவற்றை கொடுக்க வேண்டும் எப்படிப்பட்ட படைப்பை அவர்களிடமிருந்து பெறவேண்டும் என்பதில் அந்த திரைத்துறை கல்வி வழங்குபவர்களுக்கு ஓரளவுக்காவது தெளிவு இருக்கவேண்டும். தூரநோக்கான திட்டமுடல் இருந்தால் தான் இந்த தொழில்துறையை வளர்க்க முடியும்.  

 ஆகவே திரைக் கற்கை நெறி தொடங்கப்படால் அது இது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். கலைஞர்களை ஒருமைப்படுத்துதல் அதற்கூடாக மேலும் கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் உருவாக்குதல், படைப்புக்களையும் படைப்பாளிகளையும் வளப்படுத்துதல், அவர்களுக்கான பொருளாதார ஸ்திரத் தன்மைக்கான கட்டுமானத்தை உருவாக்குதல் அதாவது தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் போன்ற எல்லாமே கவனம் பெரும்பட்சத்தில் தான் இது ஒரு தொழில்துறையாக முன்னேறும்.

இலங்கையில் சினிமா தயாரிப்பு என்பது தனிநபர், நிறுவனம் இரண்டினாலும் செய்யப்படுகின்றது, அதன் சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

பிரசாந் :ஒரு படைப்பை உருவாக்குவதற்கு பணம் போடுகிறவர்தான் தயாரிப்பாளர் என்கின்ற மனநிலை இங்கு நிறையத் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. பணம் இடுதல் முதல் மற்றும் லாபம் என்கின்ற இரண்டு விடயங்கள் இவர்கள் மனதில் இருக்கிறது. துர்அதிஸ்ட வசமாக தயாரிப்பு என்பதை இவர்கள் இப்படி தான் புரிந்து வைத்திருகின்றார்கள். சினிமா தயாரிப்பாளருக்கு அதன் அத்தனை பரிமாணங்களும் தெரிந்து இருக்க வேண்டும். ஒரு படைப்புக்கான அடிப்படைகள் கிடைத்தபிறகு அதன் பெறுமானம், அதற்கு இடக்கூடிய முதல், எத்தரத்தில் எடுக்கவேண்டும், யார் யார் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அதனை எவ்வழியில் வெளியீடு செய்யலாம், போட்ட முதலை எடுப்பதற்கான வழிகள் எவ்வாறு உள்ளது சாத்தியப்பாடுகள் எவ்வாறு உள்ளது என்று எல்லாவற்றையும் கவனிக்க வேணும். மாறாக இங்கே எல்லா வேலையையும் ஒரு இயக்குனர் தலையில் போட்டு விட்டுக் கடந்து விடுகின்றார்கள்இயக்குனர் தன்னால் முடிந்த மட்டும்  அந்தப் படைப்பை சுமந்து கொண்டு திரிவார். மேலும் இந்த தகமைசார் விடயங்கள் இங்கே கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதனால் எறுமாறாகத்தான் எல்லாம் இருகின்றன. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் மாற ஆரம்பித்து இருக்கிறது. இந்தக் குறைப்பாடுகளினாலும், வெளிப்புற சூழகளினாலும் படைப்பில் போடப்பட்ட முதல் மீண்டும் திரும்ப எடுக்கப்பட்டதா என்கின்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு இல்லாத போது தனிநபர்கள் முதளிடுவதை நிருத்துகின்றார்கள். கால ஓட்டத்தில் காணாமலும் போகின்றார்கள். நிரந்தரமற்று இருகின்றார்கள். மாறிக்கொண்டே இருக்கிறார்கள்நிறுவனங்கள் சினிமா தயாரிக்கும் செயத் திட்டங்களைக் கொண்டுவந்தாலும் அதுவும் லாபமில்லாமல் போகும்போது அல்லது கொண்டு நடந்த முடியாத போது, தயாரிப்பதை நிறுத்தி விடுகின்றனதனிநபர் தயாரிப்பு என்பது தன்னிலை விருப்பு வெறுப்புக்களை சார்ந்துள்ளது. பொதுவாக படைப்புக்கள்  ஜனரஞ்சகம் என்பதை ஒட்டி இருக்கிறது. அரிதாக கலைத்தன்மையிலான படைப்புக்கள் வரும்.   தனிநபர் முதலிடுவதும் தயாரிப்பும் குறிப்பிட்ட வட்டத்துக்குள் அல்லது குழுவுக்குள் நின்று விடுகின்றது. ஏனைய கலைஞர்களுக்கு இதனால் வாய்ப்புக் கிடைக்காது. அத்தோடு இவர்கள் தங்களினால் முடிந்த எல்லையிலேயே நின்று கொள்வார்கள் அல்லது  தமது விளம்பரத்துக்காக சினிமா தயாரிப்பது என்று இயங்குவார்கள். சமகாலத்தில் இலங்கை தமிழ் சினிமா தயாரிப்பு பற்றிப் பார்த்தால் தனிநபர்களின் பங்களிப்பு தான் அதிகம் இருக்கும். இவர்களுக்காகூடாக ஏராளமான பாடல்கள் மற்றும் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை பெரும்பாலும் youtube இனை மனதில் வைத்தே உருவாக்கப்படுகின்றனஅதே போல இங்கிருகின்ர பணவலுவுள்ள நபர்கள் மற்றும்  புலம்பெயர் நபர்கள் என இங்கும் அங்கும் முழுநீளத் திரைப்படங்களை எடுத்து முடித்து இருகின்றார்கள். சொல்லப்போனால் இலங்கைத் தமிழ் சினிமா என்பது தனிநபர் தயாரிப்பாளர்களினால தான் இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறது

நிறுவனமயப்படுத்தப்பட்ட சினிமாத் தயாரிப்பு என்பது இன்னமும் சாத்தியப்படவில்லை என்பது தான் உண்மை. சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தி, சமூகனல்லிணக்கம் போன்ற கருத்தியல்களோடு சினிமாத் தயாரிப்பில் ஈடுபட்டு இருகின்றன. அவை ஒரு அஜண்டா அடிப்படையாகக் கொண்டு இருந்ததுடன் குறுகியகால இயன்குகாலத்தையும் கொண்டிருந்தன. தொடர்ச்சியாக வெவ்வேறு அஜண்டாகள் குறும்படங்களை எடுக்கத்தூண்டியது இங்கு நிகழ்ந்த ஒரு மாற்றமாக இருக்கலாம். இதற்குள் சில அரச நிறுவனங்களும் உள்ளடங்கும். அடுத்து அடுத்து தொடந்து  இயங்கப்  பணம் வரும் என்கின்ற மனநிலை மற்றும் அடையாளம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை கலைகர்களை அப்பக்கம் திருப்பி இருந்தது. அது ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இருக்கவில்லை. சினிமாவுக்கான பெரிய அசைவியக்கங்கள் இவற்றுக்கூடாக நடக்கவில்லை.

சில தனியார் நிறுவனகள் சினிமா தயாரிப்புக்கூடாக தம்மை இங்கே  திடப்படுத்துவக்கான சாத்தியப்பாடுகள் இருந்தும் வலுவிழந்து போயின அல்லது நம்பிக்கையிழந்து விலகிப்போயிருகின்றன. இன்னுமொரு வகையில் இந்த நிறுவனங்களுக்குப் பின்னால் தனிநபர்கள் இருப்பதும் அவர்களின் கருத்தியல்களையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒரு தரமான படைப்பு என்பதில் அந்நிறுவனங்கள்  எவ்வளவு கவனமாக இருகின்றன என்பது கேள்விக்குறி. அப்படியே அவர்கள் தயாரித்தாலும் அவற்றை எப்படி வணிக ரீதியாக வெற்றி பெறச்செய்வது என்பது அவர்களுக்கான அடுத்த சவாலாக இருகின்றது. சில நிறுவனகள் தமக்கான ott தளங்களை கூட உருவாக்கி படைப்புக்களை வெளியிட்டு லாபம் பார்க்க முயற்சித்து தோல்வி கண்டுள்ளனகாரணம் அதற்கு போதுமான படைப்புக்களை தொடர்ச்சியாகக் கொடுக்கமுடியாமல் ஸ்தம்பித்தது தான்

சில தயாரிப்பு நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக அடிப்படை சினிமாத் தொழில்நுட்ப வளங்களை தமக்குள்ள வைத்திருகின்றன. அதனால் அபரிமிதமாக வருகின்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும் ஒரு படைப்பு முழுமையடைவதற்கு  வேறு பல காரணங்களும் இங்கே குறுக்கே நிற்கின்றன. இவை பற்றிப் பேசப் போனால் நீண்டுகொண்டே போகும்உதாரணத்துக்கு ஒன்றுயாழ்ப்பணத்தில் இயங்கிய தனியார் நிறுவனம் குறும்படங்களையும் பாடல்களையும் முழுநீளத் திரைப்படங்களையும் தொடர்ந்து உருவாகிக் கொண்டு இருந்தது. மேலும் குறிப்பிடா திரைத் தொழில்நுட்ப வளங்கள் இந்த நிறுவனத்தில் இருந்தது. பாடல்களும் குறும்படங்களும் அவ்வப்போது வெளிவந்தாலும் நிறுவனத்துக்கு வெளியில் இயங்கிய கலைனர்களினால்  தயாரிப்புச் செலவு தாண்டியும் முடிக்கப்படாமல் இரண்டு  முழுநீளப்படங்கள் இழுத்தடிக்கப்பட்டன. இதுக்குக் காரணம் படைப்பு குறித்த பற்றுதலும் அறமும் இல்லாத இந்த திரை கலைஞர்கள்பெருந்தொகையான பணம் முதலாகப் போட்டு இந்தப் படங்கள் முடங்கியதால் அடுத்து திட்டமிட்ட முழுநீளப் படம் தயாரிப்பதற்கு பணம் இல்லாமல் நிறுத்தப்பட்டதுஇது யாருடைய தவறு. இந்த காரணத்துக்காக தான் பல தனிநபர் தயாரிப்பாளர்கள் காணாமல் போனார்கள். இப்படி ஒரு படைப்பை உருவாக்க நினைப்பதில் இருந்து வெளியீடு செய்வது வரையில் இருக்கும் தடைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு சவால்மிக்கது

ஆக இப்போது வரைக்கும் தாம்  நினைத்தமாதிரி ஒரு விடயத்தை தனிநபர் தயாரிப்பாளர்களோ நிறுவனங்களோ எட்டவில்லை என்பதுதான் உண்மை. தமக்கான பார்வையாளர் யார் அவர்களுக்கு முழுமையாக இந்தப் படைப்புக்களை எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும், மற்றும் அவர்ற்குக்கான  சந்தை போன்ற விடயங்கள் கவனித்து  இப்பொது வரைக்கும் போட்டகாசை திரும்ப எடுத்தவர்கள் என்பவர்கள் ஒரு சிலர் தான் இருப்பார்கள். மற்றவர்கள் நட்டத்தில் நகர்வதாகவே சொல்லுகின்றார்கள். வெற்றி கண்டவர்களின் வழிகள் தொடர்ந்தும் சாத்தியப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்தப் புள்ளிகளை சரியாக கண்டடைவதற்கு இன்னும் கொஞ்சம் காலங்கள் எடுக்கும். ஓரவஞ்சனை இல்லாமல் கலைங்கர்களை வளப்படுத்தும் வாழவைக்கும் தயாரிப்பு நிருவனகள் மற்றும்  தயாரிப்பாளர்கள் வரவேண்டும். எல்லப்பாக்கமும் உளைப்புச்சுரண்டல் அற்ற நிலை வரவேண்டும். நிறையக் கலைஞர்கள் வரவேண்டும், தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவேண்டும், தொடர்ந்து நல்ல படைப்புக்கள் வரவேண்டும். மக்கள் தேடிவந்து பார்க்ககூடிய நிலை வரவேண்டும். இப்படி நிறைய வரவேண்டி இருக்கிறது. அப்படிதான் இங்கு ஆரோக்கியமான திரைத்துரைக்கான ஒரு நம்பிக்கை வெளிச்சம் வரும். எதோ ஒருவகையில் தனிநபரோ நிறுவனமோ இந்தமாதிரி  தயாரிப்பு முயற்சியகளை செய்யாமல் இருந்து இருந்தால்  இந்த சினிமாத்துறையில் பெரிய விரிசள் விழுந்து இருக்கும் அல்லது  அது வளர்வதற்கான எந்த அடிப்படைகலுமே உருவாக்கப்படாமல் போயிருக்கக் கூடும். இப்போதைக்கு இந்த விடயங்கள் எல்லாமே சிறுதுளிதான்.

 இலங்கை   திருவிழா சார்/ கலைசார் சினிமா க்கள் போர்  பற்றிய கதைகளுடன் அதிகமாக படைப்பாக்கம் செய்யப்படுகின்றன , மேலும் இத்தகைய கலை சார் படங்கள் எப்பிரச்சினைகளை தவிர்கின்றன? அவற்றின் பின்னணி பற்றி உங்களுடைய அவதானங்கள் ?

சோபன் :கலைசார் திரைப்படங்களும் கலைஞர்களும் இங்கே தொடர்ந்தும் குறித்த வட்டத்திற்குள்ளேயே இயங்குவது போலப்படுகின்றது.  இன்னும் அவர்கள் நிறைய இடங்களைத்தொடவில்லை. அசலான பிரச்சினைகளை நெருங்கிச்செல்லவில்லை.  நிறைய விசயங்களைப் பேசவில்லை.  பொது அபிப்பிராயத்தில் கலைப்படங்கள் என்பவை ‘கவலையான சினிமாக்கள்’ என்றோ எதோவொரு பெரிய பிரச்சினைகளை (போர் போன்ற) மட்டும் பேசக்கூடியவை என்ற மனநிலை இங்கு நிலவுகின்றது.  அதோடு சில இடங்களில் அதுவே ஒரு பிரச்சாரத்தன்மையாக (propaganda) மாறியும் விடுகின்றது.  போரைத்தான் கதைக்க வேண்டும் என்பது அழுத்தப்படுவது போலவும் இருக்கின்றது. ஆனால் கலை என்பது எத்துறை சார்ந்தும் முழுக்க முழுக்க படைப்பாளரின் தெரிவாகவே இருக்க வேண்டும்.  சினிமாவும் ஓவியம் போல , இலக்கியம் போல ஒரு படைப்பாளியின் சொந்த தெரிவாகவும் உருவாக்கமாகவும் இருக்க வேண்டும். கலை என்பது பிரச்சார நெடிகளைக் தாண்டி  உலகளாவிய (universal) தன்மையைப் பெறவேண்டும்.  அதற்கு அடிப்படையானது இந்த தெரிவுகளில் படைப்பாளருக்குரிய சுதந்திரம்தான்.  ஒரு சமூகத்தில் இருக்க கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் கலைகள் பேச முடியும். இங்கே போர் என்பது வெறும் போர் மட்டுமில்லை. எல்லா பிரச்சினைகளோடும் இணைந்ததே அந்தப்போர்.  இங்கு போர் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் இருக்கும் சிக்கல் என்ன என்றால் அவை வெறும் போர்க்கதைகளாகவே எஞ்சுகின்றன. ஒற்றைப்படையானவையாக இருப்பதனால் அதன் பன்மைத்துவமான அவதானங்கள் தவறிவிடுவது போல இருக்கின்றன. சினிமாவில் இயங்குபவன் என்பதைத் தாண்டி  ஒரு போரால் பாதிக்கப்பட்ட நபராகவும், அதனை உணர்வு பூர்வமாக அணுகும் ஒரு பார்வையாளராக என்னை இங்கு எடுக்கப்படும் போர் சார்ந்த திரைப்படங்களுடன் ஒன்ற முடியவில்லை.  ஒரு அசலான போரின் பிரச்சினையையோ உணர்வெழுச்சியையோ இங்கு எடுக்கப்படும் போர்த்திரைப்படங்களில் அனுபவப்படுத்த இயலவில்லை. அவை அதற்கான கலைத்தன்மையை பெறாத போது  போர் உடல் உளத்தில் உருவாக்கிய தாக்கம் படங்களில் குறைக்கப்பட்டு இருப்பதைப்போலவே ஆதங்கமாக உணர முடிகிறது. போர் சார்ந்த கலைப்படங்களாக சொல்லப்படுபவை இங்கு தனிமனிதர்களுக்குள் ஊடுருவிச்செல்லாமல் அவை வெறுமனே ஆயுதச்சண்டைகளின் மோலோட்டமான சரி பிழைகளை அறுதியிடுபவையாக மட்டுமே எஞ்சுகின்றன. 

ஆனாலும் நான் இப்படியான படங்களிளை  ஒரு தொடக்க காலமாகவே புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாகவே நாம் அந்த ஆழத்தைச் சென்று அடையலாம் என்று நினைக்கிறேன்.  அதாவது இச்சூழல் சினிமா பண்பாட்டின் தொடக்க நிலையில் இருப்பதாகவே கருத வேண்டும்.  அடிப்படையில் இவ்வாறான முயற்சிகள் நல்லது என்றே கருதுகிறேன்.  இப்படியான தொடக்க முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக உச்சநிலையைச் சென்று சேர வேண்டும்.  அத்தோடு போர் பற்றிய படம் என்பதைத்தாண்டி வாழ்க்கை பற்றிய படம் என்று கருதும் போதே போரோடு இணைந்து அசலான எல்லா பிரச்சினைகளையும் சிக்கல்களையும் ஆழமாகப் பேச இயலும்.  அதற்கு நிறைய வாசிப்பும் நல்ல படங்கள் பார்ப்பதும் ஆரோக்கியமான திறந்த உரையாடல்களும் தேவை.

இலங்கை சினிமா என்ற கலைத்துறையில் பெண்கள்  படைப்பாளிகளாகவும், கலைஞர்களாகவும் தொழிற்படும் சாத்தியங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நவயுகா: இலங்கை சினிமா துறையில்  பெண்கள் நடிகைகளாக இருப்பதற்கு அவர்களிடம் நடிப்பு சார்ந்த திறன்கள் ஐய்யத்துடன் பார்க்கப்படுவதோ வாய்ப்புக்களுக்கான இடங்கள் மட்டுப்படுத்தப்படுவதோ குறைவானதாகவே இருக்கின்றது. ஆனால் திரைத்துறையில் தொழில் நுட்பட்பம், படைப்பாற்றல் சார்ந்து  இயக்கம், ஒளிப்படக்கலை, படத்தொகுப்பு போன்றவை என்று வரும் போது பெண்கள் என்பதனால் ‘வேலை தெரியுமா?’ என்ற சந்தேகத்துடனும் தயக்கத்துடனுமே அணுகப்படுகின்றோம். பெண் சினிமாவில் நடிகையாக மட்டும் இருக்கக் கூடியவள் என்ற பொது முன் முடிவுகள் இல்லாமல் ஆக்கப்படுவது முக்கியம்.

சினிமாவில் உள்ள பெண்கள் என்று வரும் போது  பாலியல் சுரண்டல்கள் , துஷ்பிரயோகங்கள் போன்றவை அதிகமாக இருக்கும் என்ற பொதுப்புத்தி சார்ந்த நம்பிக்கை நிலவுகின்றது. ஆனால் நான் தனிப்பட்டு இப்படியான பிரச்சினைகள் எதனையும் இத்தனை வருடகாலங்களில் இலங்கை தமிழ் சினிமா துறை சார்ந்த நபர்களிடம் எதிர்கொண்டதில்லை. இதுவரை நான் வேலை செய்த அத்தனை குழுக்களும், தனிநபர்களும் மிகவும் கண்ணியமாகவே நடந்துகொண்டுள்ளனர். தனியாக இருக்கும் போது, பயணப்படும் போது நான் எந்த பாதுகாப்பு இன்மையையும் எதிர்கொண்டதில்லை.  பெண்கள் துஷ்பிரயோகம், சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது என்பது வெறுமனே இந்த துறையில் தான் இருக்கும் என்று அழுத்த முடியாது இல்லையா? 

துஷ்பிரயோகங்களோ சுரண்டலோ எல்லாத்துறைகளிலும் இருக்கின்றது, நம்முடைய சமூகத்தில் இருக்கிறது, அது பேரூந்திலோ, அலுவலகங்களிலோ நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதை ஒரு துறைக்குள் முடிச்சுப்போட்டு அழுத்துச்சொல்வது பொருத்தமானதாக இராது.  நம்முடைய சமூகம் பெண்ணைத் தெய்வமாக்கி , மரியாதைக்குரியவள் ஆக்கி, தாயாக ஆக்கி, அந்தப்பெண்ணை மென்மையானவள் என்ற இடத்திற்கு கொண்டுவந்து , பாதுகாப்பாக, கட்டுப்பாடாக இருக்க வேண்டியவள் என்ற இடத்தில் வைத்து ,பயத்தை உருவாக்கி வைத்திருக்கின்றது.  என்னைப்பொறுத்தவரையில் பெண் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய ஒருத்தியாக இருக்க வேண்டும்.  அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் , தனக்கான தெரிவுகளைச் சரியாக எடுத்துக்கொண்டு  தனக்கான பயணத்தைத் தெரிவு செய்துகொள்ளும் அளவிற்கு  அறிவும், ஆற்றலும், தைரியமும் , பலமும் பெண்ணுக்கு இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போதே கலாசார பிற்போக்கு தனங்கள், துஷ்பிரயோகங்களுக்கு எதிராக  இயங்கிச்செல்ல முடியும். காலப்போக்கில் இது மாறும்  அதற்கு நோக்கமும் தெளிவும் பெண்களுக்கு இருக்க வேண்டும்.

 

சோபன் வேல்ராஜா: முல்லைத்தீவில் கணுக்கேணியை சேர்ந்தவர். திரைப்பட இயக்குனர். உதவி இயக்குனராகவும், ஒளிப்பதிவாலளராகவும் பணி புரிந்து வருகிறார். 2021ஆம்  ஆண்டு “பற” (FLY) என்னும்  குறும்படத்தையும், 2022ல் ”கொட்பு” (KODPU) குறும்படத்தையும், 2023ல்  “எல்லையற்று விரிகிறதோர் இரவு” (A NIGHT EXPANDS INTO THE INFINITE) குறும்படத்தையும் உருவாக்கி இருக்கிறார் . மணல்  மற்றும் தொலைப்பயணம் திரைப்படங்களில் இரண்டாம் உதவி இயக்குனராக வேலை புரிந்தார். இப்போது, ASIAN PACIFIC SCREEN AWARDS திரைப்படவிழாவின் ஒரு பகுதியான, ASIAN PACIFIC SCREEN LAP உதவியோடு முழு நீள திரைப்படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருகிறார்.

நவயுகா குகராஜா : யாழ்ப்பாணம் வசாவிளானைச் சேர்ந்தவர். இயக்குனர், நடிகை.  “பொட்டு”, “வாகை” , “பெட்டைக் கோழி கூவி” போன்ற குறுந்திரைப்படங்கள்  , வெளிவர இருக்கும் “பொம்மை” திரைப்படத்தின்  இயக்குநர். ஆறாம் நிலம், ஒற்றைப் பனை மரம் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் சமகால இலங்கை திரைப்பட துறையில் தமிழ் சிங்கள திரைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிவருகிறார்.

 

 

புவனேஸ்வரன் பிரசாந்: யாழ்ப்பாணம், அல்லைப்பிடியைச் சொந்த ஊராகக் கொண்டவர். எழுத்தாளர், சுதந்திர திரைக்கலைஞர். 2020 இல் யாழ்பல்கலைக்கழகம்,  நுண்கலைத்துறையில் இளங்கலைமானிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து திரைக்கலைமீதான ஈடுபாட்டுடன்  2021 இல் பாலுமகேந்திரா நூலகத்தினால் நடாத்தப்பட்ட திரைப்பட கற்கைநெறியினை  மேற்கொண்டதுடன்,  kubrick team production என்னும் தமது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்  குறும்படங்களை தயாரித்தும்இயக்கியும் வருகின்றார். அதே போல ஏனைய திரைக்கலைஞர்களுடன்  இணைந்து,  திரைகதை எழுத்தாளர், உதவி இயக்குனர்,   தயாரிப்பு வடிவமைப்பாளர் என  ஏனைய துறைகளிலும் ஈடுபட்டுவருகின்றார்

 

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’