நம்முடைய பொதுச்சமூகம் அல்லது பெரும்பான்மை சமூகம் அறியும், நம்பும் வரலாறு பழைய வரலாற்று எழுத்துமுறை சார்ந்தது. பழைய வரலாற்று எழுத்துமுறை என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால் ஏதோவொரு அதிகார நலனுக்காக எழுதப்பட்ட வரலாறு. அது பன்மைத்துவத்தையும் நெகிழ்வையும் மாற்றம்மிக்க விசைகளையும் மறுப்பதுடன் வன்முறைகளுக்கான விதைகளைக் கொண்டதுமாகும். அவற்றின் மையப்பகுதிகளில் அதிகாரமற்ற யாரின் குரலும் கிடையாது.
பழைய வரலாற்று எழுத்துமுறை அரசர்கள், ஆதிக்கக் குலக்குழுக்கள், ஆதிக்க சாதிகள், ஆண்கள், எசமான்கள், பிரபுக்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் போன்றோரால் அவர்களைப்பற்றி அவர்களும் அவர்களின் புரவலர்களும் எழுதிச்சென்றவை. நாம் இன்று பாடப்புத்தகங்களிலும் அரசியல் மேடைகளிலும் கேட்கும் வரலாறு இத்தகைய ஒன்றே. இப்பழைய வரலாற்று எழுத்துக்கும் அது உருவாக்கும் பார்வைகளுக்கும் சில அடிப்படையான இயல்புகள் இருக்கின்றன.
- வரலாறு என்றால் ஒன்றே என்றும் அது முற்று முழுதான உண்மையே என்றும் ஆழமாக நம்புவை, அந்த நம்பிக்கையை எல்லோரிலும் திணிக்க முயல்பவை.
- அவற்றை இனவாதம், மதவாதம், ஆணாதிக்கம், சாதியம் போன்ற ஒடுக்கு முறையாளர்கள் தங்களை நியாயப்படுத்தவும், ஆள்புலம் சேர்க்கவும் பயன்படுத்துவர்.
- பழைய வரலாற்று எழுத்துக்கள் போலியான உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தாண்டி எந்த மானிட முன்னேற்றத்தையும் சென்று தீண்டாதவை.
- பெருமிதம், செருக்கு, காழ்புகளை அள்ளித்தெளிப்பதுடன் இன்னொரு வரலாற்றை கிஞ்சித்தும் ஏற்காதவை. அதே நேரம் வேறொரு இனக்குழுவோ, சமூகக் குழுவோ ஆதிக்கம் செலுத்தும் போது தங்களை தயங்காமல் அதனுடன் சமரசம் செய்துகொள்ளக் கூடியவை. அவற்றுக்கு இருக்கக் கூடியது தம் அதிகாரம் சார்ந்த நலன்கள் மட்டும்தான்.
- தொன்மங்கள், புராணங்கள், இதிகாசங்களை கொஞ்சமும் அறிவுரையாடல் இன்றி அவற்றை வரலாற்று உண்மையாக எடுத்துக்கொண்டு தம் ஒடுக்கும் கருவியாகவும் பெருமிதமாகவும் பயன்படுத்துபவை.
மேற்சொன்ன இயல்புகளை எழுமாற்றாக நடைமுறை சார் கட்சி அரசியல்களுடன் பொருத்திப்பாருங்கள். இன்றைக்கு தமிழ், சிங்கள அரசியல் களங்களின் மேடைகளில் இவ் அனைத்து இயல்புகளும் நாடகத்தைப் போல நிகழ்த்தப்படுகின்றன.
சாமானிய மக்களின் அரசியல் அதிகாரத்தைப்பெற ஆதிக்கத் தரப்பிற்கு அடிப்படையான வழிமுறை அவர்களை வரலாற்றுப் பெருமிதங்கள் மூலம் உசுப்பி விடுவதுதான். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளொடு தோன்றிய முதல் குடி என்ற வசனத்தைக் கேட்காத தமிழ் மேடைகள் உண்டா என்ன? கொஞ்சம் நிதானமாக யோசித்தாலே இது எவ்வளவு அசட்டுத்தனமான கோசம் என்று விளங்கும். அப்படியே இதை ஒரு உயர்வு நவிழ்வான படிமம் என்று சொன்னாலும் , ஒரு இனக்குழு ஏனைய இனக்குழுக்களில் மூத்ததாக இருப்பதில் அப்படி என்ன பெருமை இருக்கிறது ? அது மற்ற மானிடர்களிடம் இருந்து நம்மை எவ்வகையில் விசேசமானவர்களாக்கிறது ? தமிழர்கள் முன்பு பிறந்ததால் கவச குண்டலங்களோ , தலைக்குப்பின்னால் ஒளிவட்டத்துடனா பிறந்தார்கள்? யார் முதலில் என்பது நமக்கென்ன வகை பெருமையைக் கொடுக்க முடியும்? யார் முதலில் என்ற கேள்விக்கு ஆதிக்குரங்கினம் தானே கைதூக்க முடியும்? முதலில் என்பதன் அறிவார்ந்த பயன் என்ன? நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்பதுதான் பாசிசத்தின் அடிப்படை அல்லவா? ஹிட்லரும் இதைத்தானே சொன்னார்? சிங்கள இனவாதமும் இதைத்தானே சொல்கிறது? அவர்கள் தாங்கள் சிங்கத்திலிருந்து வந்தவர்கள் என்று பெருமையடித்துக்கொள்வதைக் கேலி செய்கிறோம் இல்லையா? வாளொடு பிறந்தோம் என்பதை கேலி செய்ய முடியாதா?
வெற்றுப்பெருமைகளை ஆலாபனைகளை செய்வதுடன் தொன்மங்கள் புராணங்களை, அதிலுள்ள பாத்திரங்களை தங்ளுக்காக எடுத்துக்கொண்டு இனவாதம், மதவாதம் பேசுவது அதை வரலாறு என்று கொண்டாடுவது நெடுங்காலம் சிங்கள தமிழ்ச் சமூகங்களில் உள்ள பிறழ்வு. இராவணன் என்ற எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத கட்டுக்கதையை தங்களது மூதோன் என்று இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் அடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். குகைகளிலும் காடுகளிலும் புஷ்பக விமானத்தை இன்றைக்கும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கண்முன்னே நடக்கும் இந்தக் கேலிக்கூத்தை என்னவென்று சொல்வது ?
இலங்கையில் பன்மைத்துவத்தை ஏற்கும் வரலாறுப் புரிதல் இல்லை என்பதே அதன் அனைத்து வன்செயல்களினதும், பிரச்சினைகளினதும் ஊற்று முகம். இங்கே பழைய வரலாற்றுப்பெருமிதங்களை தம் அதிகார நலன்களுக்காக பயன்படுத்துபவர்கள் ஆதிக்கம் மிக்க பிறிதொரு அதிகாரக் குழுவுடன் சமரசம் செய்யத் தயங்குவதே இல்லை. உதாரணத்திற்கு முஸ்லீம் , கத்தோலிக்க வியாபாரிகளின் மாட்டிறைச்சிக் கடைகளை மூட வேண்டும், அவர்களின் உணவுப்பண்பாட்டையும் தொழில்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்து மதவாத அமைப்புகள் இனவாதத்தின் மத முகமாக இருக்கும் பிக்குகளுடன் சேர்ந்து உண்ணா நோன்பிருக்கிறார்கள். இலங்கையின் நிறுவன பெளத்தத்தை தங்களின் ‘புது உறவாக’ ஆக்கிக்கொள்கிறார்கள். இது தொல் வரலாற்று நம்பிக்கைகளின் இயல்புகளில் ஒன்றே.
விளிம்பு நிலைச் சமூகங்களை ; அதன் பண்பாடுகளை அழிப்பதை வரலாறாக எழுதும், அங்கிருந்து வழிமுறைகளை எடுக்கும் இயல்பையே பழைய வரலாற்று எழுத்து அதை நம்பக்கூடிய சமூகங்களுக்கு வழங்குகிறது. சமகாலத்தில் பெரும்பான்மை தமிழ்ச் சமூகமும் பெரும்பான்மை சிங்களச் சமூகமும் அத்தகையதே. இத்தனை வருடகால இனப்பிரச்சினையின் முதல் வேர் இவ்விரு இனங்களின் வரலாற்றை பயிலும் நிகழ்த்தும் முறையிலேயே அமிழ்ந்திருக்கிறது. இந்த மொத்த இனப்பிரச்சினையையும் ஒரே வரியில் சாரப்படுத்துவதென்றால், இந்த தீவின் மூத்ததும் உரித்துள்ளதுமான குடிகள் யார் ? என்ற சண்டைதானே மையமாகி நிற்கிறது.
இன்றைக்கு நம்முடைய பெரும்பான்மை கற்கின்ற, முக்கியமாக நம்புகின்ற வரலாற்று எழுத்து சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் துணைபோவது. அப்படியென்றால் வரலாற்றை எவ்வாறு வாசிக்க வேண்டும் , எழுத வேண்டும் என்ற அடிப்படைகளை உரையாட வேண்டியுள்ளது. வரலாற்று எழுத்தின் மீது சமகால அறிவியக்கத்தின் நீரைப் பாய்ச்ச வேண்டும். நவீன வரலாற்று எழுத்து (historiography) பற்றிய உரையாடல்கள் ஆழத்தோடு விரிவையும் அடைய வேண்டும்.இலங்கையில் நம்முடைய கல்வித்தளங்களான பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் , சமூக சிவில் அமைப்புக்கள் பெரும்பாலும் அதிகார மையங்களாகவும், இன மத சாதிய நலனோம்புவையாகவுமே இருக்கின்றன. அங்கே கற்பிக்கப்படும் வரலாறும் பண்பாடும் மிகவும் ஒற்றைப்படையானவையும் ஆபத்தானவையுமாகும்.
நவீன வரலாற்றெழுத்து என்பது இதற்கு முற்றெதிரானது. அது அடிப்படையில் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. வரலாறு என்பது ஒற்றைப்படையானது அல்ல என்பதில் இருந்து தன் உரையாடலை ஆரம்பிப்பது. அதாவது அது கடந்தகாலத்தை ‘வரலாறுகள்’ என்றே எழுதிச்செல்கிறது. அதிகார வர்க்கத்தின் நலன்சார்ந்த வரலாற்று எழுத்தை சமகால சிந்தனை மூலம் கேள்விக்குட்படுத்துவதுடன் தனக்கேயான அறிவியக்க உரையாடல்கள், அறிவியல் வழிமுறைகள் மூலம் மாற்றான வரலாற்றுப் புரிதலை நோக்கி நகர்ந்து செல்வது. அறிவார்ந்த தரப்புகளை இணைத்துக்கொண்டு மேம்பட்ட சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்து செல்வது. நவீன வரலாற்று எழுத்து ஐரோப்பியர்களிடம் இருந்து உலகம் முழுவதும் பரவியது. ஒவ்வொரு சிந்தனைப்பள்ளியில் இருந்தும் அறிவியக்கவாதிகள் தோன்றி வந்து நவீன வரலாற்று எழுத்துக்கான பார்வை முறைகளை ஏற்படுத்தினர். அதே போல் உலகெங்கும் வளர்ந்து சென்ற தத்துவங்களும், இலக்கியமும் அறம், மானிட, விழுமியம், நீதி போன்ற மானுடச் சீர்மைகளை சமகாலத்துக்குரியதாக வளர்த்தெடுத்து நவீன வரலாற்றுக்கு புதிய கண்களை வழங்கி வருகின்றன.
வரலாறு என்பது முற்றொருமையானதல்ல, அது சமகாலத்தின் மேம்பட்ட சிந்தனையால் வாசிக்கப்பட வேண்டும் என்ற அறிவொளியை நவீன வரலாற்று எழுத்து வலியுறுத்துகிறது. பழம் வரலாறு முறுக்கேற்றிய கயிற்றில் இடைவெளிகளைக் கண்டறிந்து அதை நெக்குவிடச்செய்து மறுவாசிப்புச் செய்வதற்கு உதவுவது நவீன வரலாற்று எழுத்தின் அடிப்படைகளில் ஒன்று. பழைய வரலாறு ,தொன்மம்,புராணம், பழமரபு என்று யாவற்றின் மீதும் இப் பெருஞ்செயல் நிகழ வேண்டும்.
இலங்கை வரலாற்றில் துட்டகைமுனு என்ற மன்னனை அனைவரும் அறிவர், சிங்கள இனவாதத்தின் வரலாற்று நாயகன். அநுராத புரத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னனான எல்லாளனை தனிப்போரில் வென்றவன். என்று சிங்களபெளத்த இனவாதத்தின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. தெற்கு இலங்கையில் இருந்த சிற்றரசுகளை ஆண்ட மன்னன் மகனான கைமுனு வடக்கில் (அநுராதபுரத்தில்) தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதால் தன்னால் நிமிர்ந்து துயில முடியவில்லை என்று சிறுபிள்ளையாக இருந்த போதே தாயிடம் சொன்னது போன்ற அவனுடைய கதநாயகக் கதைகளை அந்நூல் குறிப்பிடுகிறது. இறுதியாக இலங்கையில் நடந்த இனப்போரில் வென்ற சிங்கள இனவாதிகள் துட்டகைமுனுவை தங்களின் பெரும் ஆதர்சமாகக் காட்டிக்கொண்டனர். இன்றைக்கும் கண்டி போன்ற நகரங்களில் உள்ள சுவரோவியங்களில் கைமுனுவின் போரும் பிராகிருதியும் பேருருவங்களாக வரையப்பட்டிருக்கக் காணலாம். போரை நடத்திய ராஜபக்ச குடுமபத்தைச் சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச இன்னொரு துட்டகைமுனுவாகவே கொண்டாடப்பட்டார்.
அதே போல எல்லாளனை தமிழ்த்தரப்பு எடுத்துக்கொண்டது. அவனை சிங்களவரை எதிர்கொண்ட பெரும் மன்னன் என்று கொண்டாடுகிறது. புலிகள் தாங்கள் நடத்திய தாக்குதலுக்கு எல்லாளன் என்ற பெயரை இட்டனர். தங்களின் ஆயுதக்குழுக்களுக்கு அப்பெயரிட்டனர். அவனை விடுதலைப்போராட்டத்திலும் சேர்த்துக்கொண்டனர். அவனை வரலாற்றில் நிகழ்ந்த விடுதலைப்போராளியாக நிலைப்படுத்தினர். இவ் இரு எதிர் நிலைகளையும் நாம் பழைய வரலாற்று எழுத்துக்குரியதாகவே சேர்க்க முடியும். ஏனெனில் இரண்டு பக்கமும் இருப்பவை பெருமிதங்கள் மட்டுமே. அவை போரை நடத்தவே உதவக்கூடியன. இனவாதத்தை குறைப்பதற்கோ தீர்ப்பதற்கோ இவ்வரலாற்றுத்தகவல்கள் உதவப்போவதில்லை. மாறாக கூர்மைப்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நவீன வரலாறு இவ் கைமுனு – எல்லாளன் வரலாற்றில் உள்ள இன்னொரு தகவலைக் கண்டடைகிறது. எல்லாளன் அநுராத புரகாலத்தில் இருந்த சிங்கள மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியவன் என்று இனவாதம் செறிந்த நூலான மகாவம்சமும் இன்ன பல சிங்கள் இலக்கியங்களும் தகவல் தருகின்றன. அதனால் துட்டகைமுனு அவனை வென்று – கொன்றபின் அவனுக்காக சமாதி ஒன்றை எழுப்பினான் என்றும், அச்சமாதியை கடக்கும் அரச ஊர்வலங்கள் குடைகளைதாழ்த்தி, மேளங்களை அமைதியடையச்செய்து அவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கினான் என்கின்றன. அந்நடைமுறை அடுத்து வந்த எழுநூறு வருடங்களுக்கு தொடர்ந்து இருந்தது என்று சமகால ஆய்வுகளும் உறுதிப்படுத்துக்கின்றன. இங்கே எல்லாளனுக்கு கைமுனு மரியாதை செய்தது அவன் அடைந்த குற்றவுணர்வாலும், எல்லாளன் தீய மதத்ததைத் தொடர்பவன் ஆயினும் நல்லாட்சி புரிந்ததனாலேயே என்று குறிப்பிடுகிறது.ஒரு வகையில் கைமுனுவைப் பெருந்தன்மை மிக்கவன் என்று உயர்த்திச் சொல்லவே இத்தகவலையும் தவிர்க்க முடியாது மகாவம்சம் சேர்த்துக்கொள்கிறது. ஆனால் அங்கே அவன் குற்றவுணர்வோ , மரியாதை உணர்வையோ அடைந்தானா என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஆயினும் இந்நிகழ்வு உண்மையாக நிகழ்ந்துள்ளது. நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள் நாம் கற்ற வரலாற்றில் இத்தகவல் மறைக்கப்பட்டே சொல்லப்பட்டது. இனவாத போரில் இறங்கிய சிங்கள, தமிழ் இரண்டு ஆதிக்கத் தரப்புகளுக்கும் இத்தகவல் தேவையில்லாத ஒரு சிடுக்கு. அப்படியென்றால் இதை எவ்வாறு வாசிக்கலாம்? இலக்கியத்தில் இயங்குபவன் என்ற அடிப்படையில் நவீன வரலாற்று எழுத்தின் பின்னணியில் இதை இப்படி வாசிக்க முயற்சி செய்கிறேன்.
எல்லாளனின் சமாதி எழுப்பப்பட்டதும் மரியாதைச் சடங்கு ஏற்படுத்தப்பட்டதும் அங்கே இருந்த மக்களிடம் திரண்டெழுந்த அறத்தினால் நிகழ்ந்திருக்கிறது.. ஏனெனில் அரசு என்பது மக்கள்தான். அரசன் ஒருவன் அரசுசூழ வேண்டுமென்றால் அவன் முதலில் மக்களின் மனதை வென்றெடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைகளின் முன்னால் அடிபணிந்தாலே அவனால் அரசு கட்டில் ஏற முடியும். நிலைக்க முடியும். ஆகவே நல்லாட்சியும் மக்களின் அபிமானத்தையும் பெற்ற எல்லாளனை வெல்வதை விட அவன் ஆண்ட மக்களை வெல்வதே கைமுனு எதிர்கொண்ட பெரும் போராக இருந்து இருக்க முடியும். இங்கே எல்லாளனை மரியாதை செய்யும் முடிவிற்கு இட்டுச்சென்றது அக்கால மக்களின் அறம்தான். முக்கியமாக அவ் மரியாதையும் அவன் சமாதியும் அடுத்து வந்த எழுநூறு ஆண்டுகள் நிலைத்தது என்று அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதி’ (‘The Tomb of Elara at Anuradhapura) என்றநூலில் ஜேம்ஸ். ரி. இரத்தினம் குறிப்பிடுகின்றார். வெறுமனே கைமுனு உருவாக்கிய நடைமுறை என்றால் அவனுக்குப் பின் சில தலைமுறைகளில் அவ்வழக்கம் கைவிடப்பட்டிருக்கும், ஆனால் அது மக்களின் அறத்திலிருந்து உருவாகி அவர்களின் நினைவின் ஆழ்மைக்குள் சென்றுவிட்டது என்பதால் அதன் நிலைப்பு எழுநூறாண்டுகள் சாத்தியப்பட்டது. இப்படி சமூகத்தில் திரழக்கூடிய அறவுணர்வுகள், விழுமியங்களே மானிடத்துவத்தை முன்னகர்த்தி வந்திருக்கிறது. அது அபூர்வமானது எனினும் உறுதியானது. அதிகாரமும் ஒடுக்குமுறைகளும் குருதியும் ஓடும் பழைய வரலாற்றின் இடைவெளிகளில் உருவாகிவந்த அறவுணர்வுகளும் விழுமியங்களுமே மானிடரை பண்படுதல் நோக்கி அசைக்கும் திசைக்காற்று.
மேலதிக வாசிப்பிற்கு
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் ( நூல்)
அநுராதபுரத்தில் எல்லாளன் சமாதி ( கட்டுரை)
இராவணன் தமிழ்ச் சமூகத்தின் தாழ்வுச்சிக்கல் (கட்டுரை)