ஞாபகமும் கலையும் -01

நிலத்தினதும் நட்சத்திரங்களினதும் வரைபடம்  என்ற என்னுடைய குறிப்பை வாசித்த நண்பர் ஒருவர் ஞாபக சத்தி / நினைவாற்றல் பற்றிக் கேட்டிருந்தார்.  குறிப்பாகக் கல்வி, கலை இலக்கியத்தில் அதன் பயன் பற்றியும் மனனம் செய்தல் போன்ற ஞாபகத்தை  நிலைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றியும் உரையாடல் ஒன்றைச் செய்யலாமா என்றார்.  என்னளவில் அவற்றைப்பற்றிய  புரிதல்களை உரையாடப் பார்க்கிறேன் என்றேன்.  

மனித நினைவாற்றல் என்பது அவர்களின் பரிணாம வளர்ச்சியோடு மேம்பாடு அடைந்து வந்த ஒன்று.  மொழி நிகழ்கின்ற முக்கியமான வெளி.  நினைவாற்றலை நிலைபடுத்தல் மேம்படுத்தல் என்பது கல்வியிலும், சிந்தனையிலும் , படைப்பாக்கத்திலும் முக்கியமான பகுதி. இன்றைக்கு எழுத்தியல், எண்ணியல் இரண்டிலும் தொழில் நுட்பம் நுழைவதன் மூலம் கோடிக்கணக்கான நீயுரோன்களாலும்  நொதியங்களாலும் உருவாக்கப்பட்ட நம்முடைய மூளையின் நினைவகம் வீணாக்கப்பட்டுக்கொண்டே  இருக்கிறது. அறிவியல் படி மனம் ஞாபகத்தில் உள்வாங்குவதும் செரித்துக் கொள்வதில்தான் நம்முடைய மொத்த ஆளுமையும் நடத்தையும் தங்கி இருக்கிறது.  உலகம் முழுவதும் உள்ள மேம்பட்ட கல்வி, கலை இலக்கியங்களைக் கொண்ட தேசங்களில் குழந்தைகளின் நினைவாற்றலைப் பெருக்குவதற்குரிய வழிமுறைகளை நாளுக்கு நாள்  கண்டறிந்து  பாலர் வகுப்பு முதல் பிள்ளைகளின் புழக்கத்திற்குக் கொண்டு வருகின்றார்கள்.அதை அவர்கள் வாழ்கையாக அடைவதற்கான சூழலை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

கீழைத்தேசங்களில் ஏற்கனவே இருந்த குருகுல மரபு இந்நினைவாற்றலை அடிப்படையான மானுடத் திறனாகக் கொண்டே  ‘பாடம்’ சொல்லி வந்தது. முக்கியமாக செயல்வழியும் சொல் வழியும் அங்கே காணப்பட்ட பயில்வு முறைகளை இன்றைய ’மாற்றுக்கல்வி’ முறை மீண்டும் செயற்படுத்த முயன்று கொண்டிருக்கிறது.  வகுப்பறையில் இருந்து பிள்ளைகளைச் சூழலுக்கு கொண்டு வருவதும். அவர்களின் அனுபவங்கள், மொழியாற்றல், படைப்பூக்கம் மூலம் நினைவகம் மற்றும்  மனத்தை விரிவுபடுத்துவதும் மாற்றுக்கல்வியின்  அடிப்படையாகியுள்ளது.

மானுட அறிவு என்பது எழுத்தறிவை அடைய முன்பு  ஒவ்வொருவராக அறிந்ததை பிறருடன் பகிர்ந்ததை கூட்டாக உருவாக்கியதை, சிந்தித்ததைக், கண்டடைந்தை எல்லாம் மொழி மூலம் நினைவில்  சுமந்தே  தலை முறைகளாகக் கடத்தி வந்திருக்கிறது. இன்றும்  எழுத்தறிவில்லாத பழங்குடிகள் தங்களின் நினைவையும் அறிதலையும் வாய் மொழியாகப் பயில்வதன் மூலம்தான் கைமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வம்சப் பெயர்கள், கதைகள், இயற்கை வாழ்விடம்  பற்றி அறிவு போன்றவை சொல்லிச் சொல்லி நினைவில் நிறுத்தி கைமாற்றுவதன் மூலமே நிலைக்கிறார்கள். 

The Thinker in The Gates of Hell at the Musée Rodin

கீழை மரபின் கல்வி கேள்விகளில் ‘பாடம்’ என்பதே நினைவில் நிறுத்துதலுடன் சம்பந்தப்பட்டதுதான். குருகுலக் கல்வி முறையில்  கற்றல் வழிமுறைகளில் அவதானம், தர்க்கம், மனப்பாடம் , செயல் போன்றவை அடிப்படையானவை.  மனப்பாடம் செய்வதற்கு உகந்த வழிமுறைகளில்  சொல்லிச்சொல்லி உள்வாங்குதல் கருத்தில் கொள்ளப்பட்டிருந்த ஒன்று.   வெறுமனே வாக்கியமோ சொல்லோ உள்ளத்தில் தங்கி விடுவதில்லை. உள்ளத்தில் ஒன்றி நிற்பதற்குக்  கேட்பவற்றை , அவதானிப்பவற்றை, வாசிப்பவற்றை  சிறப்பாக நினைவில் இருத்த   அறிவதை விருப்பத்தோடு அறிதல் , புரிந்து கொள்ளுதல், அழகியலோடு உள்வாங்குதல் ஆகியன முக்கியமானவை.   இங்கே அழகியல் என்பதில் ஞாபகத்தோடு நெருக்கமானது  இசையும் காட்சியும்.  இதற்கு மிகச்சிறந்த சமகால உதாரணம்  திரைப்படங்கள். திரைப்படக்காட்சிகளும் பாடல்களும் மனதில் பதியுமளவிற்கு எதுவும் பதிவதில்லையே என்பது பெரும்பாலும்  இருக்கும் பொது அங்கலாய்ப்பு இல்லையா?கணிதமோ, மொழியோ இசையோடு உள்வாங்கும் போது நெஞ்சில் நிற்கும் என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான். பழந்தமிழ் இலக்கியங்கள், நாட்டார் பாடல்கள் வாய்மொழியாக எப்படி நினைவில் நின்றன என்பதற்கு அவை கொண்டிருக்கின்ற  இசைத்தன்மை பொருந்திய இலக்கிய வடிவங்களே காரணம். வெண்பா, விருத்தம் போன்ற செய்யுள் இலக்கணங்கள் இசைத்தன்மை வாய்ந்தவை. அதனால்தான் மனனம் செய்யவும் இலகுவில் உள்வாங்கவும் முடிகிறது.   பழந்தமிழ் இலக்கிய வடிவங்களில் தலையானதும் பழையதுமான வெண்பாவிற்கு இன்னொரு பெயர் அகவற்பா.  திருக்குறள், நாலடியார், நளவெண்பா, முத்தொள்ளாயிரம் போன்ற மிகச்சிறந்த பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள இசைத்தன்மை அவற்றின் நிலைப்புக்கும் புகழுக்கும் முக்கியமான காரணம். விருத்தம் முதலான யாப்பிலக்கணங்களில் இருக்கக் கூடிய சந்தமும் ஒருங்கிசைவும் தமிழை இசையின் மொழியாக, சொல்லில் வாழத்தக்க மொழியாக  செம்மைப்படுத்தி வந்தன.  தமிழில் இயல், நாடகம் இவ்விரண்டின் அடியிலும்  மொழியோடு ஊடும் பாவுமாக இயங்கும் இசைப்பண்பு இருந்துகொண்டே இருக்கிறது. அது சொல்லிலும் மெளனத்திலும் இயங்கக்கூடியது.

நம்முடைய கல்வி முறை கட்டுப்பெட்டித்தனமாக ஆகிய பிறகு விரும்பிக்கற்றல் என்பதே அருகிச்சென்றுவிட்டது.  பாலர் பாடசாலைகளில் எண்ணும் எழுத்தும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரக்கூடாது என்பது சிறார் உளவியல் விதிகளில் ஒன்று. அவர்களுக்குரிய கற்றல் வழிமுறை கதையும் பாட்டும் விளையாட்டும்தான். ஆனால் இன்றைக்கு சிறார்களுக்கு எழுத்துக் கற்றுக்கொடுக்கவில்லை என்று பாலர் பாடசாலை ஆசிரியர்களுடன் பெற்றோரே முரண்படுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் முதாலம் வகுப்பில் சேரும் பிள்ளைக்கு எண்ணும் எழுத்தும் தெரியவில்லை என்றால் பிள்ளை கண்டிக்கப்படுகிறது, புறக்கணிக்கப்படுகிறது. பாடமாக்கு பாடமாக்கு , பார்த்தெழுது பார்த்தெழுது என்பதுதானே  வகுப்பறைச்சுவர்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட ஒலி.  

பள்ளிக்கூடத்தை கூட விட்டுவிடுவோம்  பல்கலைக்கழகங்களில் ’விரிவுரைகள்’ பிரதான கற்பித்தல் முறையாகும். அதனாலேயே அங்கே இருக்கும் ’குருவானோர்’ விரிவுரையாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இலங்கையின் பெரும்பாலான் பல்கலைக்கழகங்களில், முக்கியமாகக் கலைத் துறைகளில்  விரிவுரைகள் என்பவை பரீட்சைக்கான  கேள்விகளை முன்னிட்டு கொடுக்கப்படும் ‘நோட்ஸ்’ கள் மட்டும்தான்.  நோட்ஸ் தராத  விரிவுரையாளரோ பேராசிரியரோ மாணவர்களால் விரும்பப்படுவதில்லை.   கொஞ்சம் கூட சிந்திக்கத் தெரியாத ‘நோட்ஸ்’ மெல்லும் மாடுகளை உருவாக்கும் இடங்களாக மட்டுமே பல்கலைக்கழகங்களும் கலைத்துறைகளும் எஞ்சிவிடுகின்றன. இங்கே இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நோட்ஸ் மெல்லும் மாடுகளுக்கு இருக்கும் நினைவாற்றலை நினைவாற்றலாக கொள்ள முடியாது. பரீட்சை முடிந்த அடுத்த நாள் கேட்டால் கூட அதில் ஒரு வசனம் கூட திருப்பிச் சொல்ல முடியாத மாடுகள் அவை.  பாடங்களோ விரிவுரைகளோ அவர்களுக்கு புரிவதும் இல்லை,  உள்நிற்பதுமில்லை.

கலை இலக்கியத்திற்கு வருவோம். அச்சியந்திரம் பயன்பாட்டுக்கு வரும் வரை பேரிலக்கியங்கள் யாவும் வாய்மொழியில் இருந்தவைதான்.  ஓலைச்சுவடிகள் உபயோகத்தில் இருந்தாலும் அது எல்லோராலும் பயன்படுத்தவோ அச்சுப்பிரதிகள் போல் ஆயிரக்கணக்கில் பதிக்கவோ முடியாதவை. ஆகவே மூலப்பிரதிகளோ அதன் பிரதிகளோ பெரும்பாலும் ஆசிரியர்கள், பண்டிதர்களிடம் மட்டுமே  இருந்தன. ஆகவே இலக்கியமும், கதையும் அக்காலத்தில் வாய் மொழியாகவே பாடப்பட்டன. நம்முடைய பெளரானிக மரபு தொடக்கம் வில்லுப்பாட்டு வரை இசையும் பாட்டும்தான். நினைவே எல்லாவற்றினதும் அடிப்படையாக இருந்தது.  உரைநடை தோன்றி வளர்ந்த பிறகும்,அச்சியந்திரம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும்  நினைவும் அதன் இசைத்தன்மையும் மொழிக்குள் இல்லாமல் போகவில்லை.  இசை தனித்துறையாக வளர்ந்தாலும். இலக்கியத்தின் உச்ச வடிவமான கவிதைக்கு இசைத்தன்மை  இருக்கிறது. எல்லா இலக்கிய வடிவங்களும் கவிதை நோக்கி எழ இயங்குபவைதான். நல்ல இலக்கியத்தில் கவிதைத்தன்மை அரூபவடிவிலேனும் இருக்கும். அல்லது அது கவிதையை அடைய முயற்சியேனும் செய்திருக்கும்.

அப்பொழுது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  பஞ்ச புராணங்களும் முடிய சிவபுராணம் படிப்பார்கள்.  நான்கைந்து மாணவிகள் சென்று புத்தகத்தைப் பார்த்து வாசிப்பார்கள்.  நமச்சி வாய வாழ்க நாதன் தாழ் வாழ்க.. என்று தொடங்கினால் எப்பொழுது முடியும் என்று இருக்கும்.  இன்றைக்கும் தமிழ்ப்பாடசாலைகளில் பெரும்பாலானவற்றில் படிக்கப்படும் சிவபுராணத்தைக் கேட்டால்  மாணிக்கவாசகர் உடனே கழுத்தில் கத்தியை வைத்து ‘நவகண்டம்’ செய்துகொள்வார். அங்கே இருந்தது இரண்டு பிரச்சினைகள் ஒன்று  அதன் பொருளோ , அது பாடப்பட்ட கதையோ  பெரும்பாலும் பிள்ளைகளுக்குத் தெரியாது.  ஒவ்வொரு வெள்ளியும்  சொல்லிச்சொல்லி எல்லோருக்கும் மனப்பாடமாகி விட்டிருந்தாலும், தேவாரங்களோ சிவபுராணமோ அர்த்தமற்றவைதான்.  இரண்டாவது  துளிகூட இசையுணர்வு கிடையாது.  பள்ளிக்கூடத்தில் சங்கீத டீச்சர் என்ற பெயரில் தண்டத்திற்கு ஒரு சீவன் உட்கார்ந்திருக்கும் அவரைப்பொறுத்தவரையில் அது சமயப்பாட டீச்சரின்  வேலை. நான் சில கிறிஸ்தவ பிள்ளைகளும் இருக்கும் பாடசாலைகளிலும் படித்திருக்கிறேன். அங்கே  பிள்ளைகள் தேவ கீதங்கள் அற்புதமாகப் பாடுவார்கள்.   தேவாலய மரபில் இருக்கும் சங்கீதப்பயில்வு அவர்களை சிறுவயதில் இருந்தே பயிற்றியிருக்கும். இன்றைக்கும் தேவாரங்களை விட எனக்கு கிறிஸ்தவ கீதங்களே அதிகமாக நினைவில் இருக்கின்றன.  இப்படி இருக்க பள்ளிக்கூடத்திற்கு துஜிதா என்ற புது சங்கீத டீச்சர் வந்தார். மீட்பரின் வருகை போல எல்லாப்பள்ளிக்கூடத்திற்கும் அது நிகழ்வதில்லை எங்களுக்கு நிகழ்ந்தது.  இத்தனைக்கும் அவர் ஒரு  கத்தோலிக்கப்பெண். வந்த முதற் கிழமை சிவபுராணத்தைக் கேட்டுவிட்டு மாணவிகளை அழைத்து  அதன் பண்ணைச்சொல்லிக்கொடுத்து  பாடப் பழக்கினார். அடுத்த வாரம்  பிரார்த்தனையில் அம்மாணவிகள் அற்புதத்தை நிகழ்த்தினார்கள். தமிழிலக்கியத்தில் இசையும் பொருளுமாக அற்புதம் நிகழ்த்தக்கூடியது திருவாசகம். அதன் பொருளும் இசையும் உள்வந்துவிட்டால் போதும் அகலவே அகலாது.  எல்லா நினைவாற்றலுக்கும் இதுவே அடிப்படையானது.

நன்றாக அவதானித்துப்பாருங்கள் எங்களுடைய மரபார்ந்த அன்றாடம் என்று ஒன்று இருந்தது. அதன் அனைத்திலும் நினைவுக்கான பயில்வுகள் இருந்தன. எல்லாப்பண்பாட்டிலும் இருந்து வந்தன.  மொழியில் கதைகள், விடுகதைகள் சிலேடைகள், புதிர்கள், சொலவடைகள், பாடல்கள் , இருந்ததைப்போல விளையாட்டுகளில்  காட்ஸ் கூட்டம் தொடங்கி  சதுரங்கம் வரை  நினைவினால் ஆடிய ஆட்டங்கள்தானில்லையா?   எல்லாவற்றையும் நாம் மனப்பாடம் செய்ய முடியாது. தேவையும் இல்லைத்தான். ஆனால்  நினைவாற்றலை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றவேண்டும் என்கிறேன்.  கணிதத்தின் சூத்திரங்களை பார்த்ததும் நாம் அதிர்ச்சியாகி நிற்கிறோம், திருக்குறளைப் பார்த்ததும் உறைந்து போகிறோம். நன்றாகக் கணக்குப்போடத் தெரிந்த யாரையேனும் கேட்டுப்பாருங்கள், அவர்கள் அதை ஒரு பெருமையாகவே சொல்ல மாட்டார்கள், ஏனென்றால் அவை நினைவில் தங்குவதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது அதைப் புரிந்துகொள்வதும் விரும்புவதும் மட்டும்தான்.  இதில்  பெருமைப்பட  அவர்களுக்கு ஒன்றுமிருப்பதில்லை. புதிதாக ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடித்தால் அவர்கள் பெருமைப்படுவதில் ஒரு நியாயமிருக்கிறது.

எனக்கு எண்களை  ஞாபகம் வைத்துக்கொள்ளும் பிரச்சினை இருக்கிறது. அதேபோல் கவிதைகள் முன்பெல்லாம் நினைவில் இருக்காது.  நாவல்கள் கதைகளில் முக்கியமான இடங்களைத் தாவி வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு சில வரிகள் மட்டும் நிற்கும். வாசிக்க வாசிக்க கவிதை ஓரளவு பிடிபட மெல்ல மெல்ல வரிகள் தங்க ஆரம்பித்தன. இப்பொழுது நல்ல கவிதையை நன்றாக உள்வாங்கினேன் என்றால், அதன் இரசனையின் புள்ளிகளைத் தொடமுடிந்தால், அது நன்றாகவே ஞாபகத்தில் இருக்கிறது. நாவல்களின் மொழியும் பொருளும் , தரிசனமும் , அதன் சொற்களுக்கு இடையில் இருக்கும் மெளனமும் கூட இப்பொழுது அர்த்தப்படுகிறது. வாசிப்பின் இன்பம் ஒன்று உண்டு. அதன் அடிப்படை இங்கிருந்தே தொடங்குகிறது.  கலை இலக்கியத்தில் ஞாபகம் இயங்கும் விதம் கல்வியில் இயங்கும் விதத்தை விட மேம்பட்டது. அதை இன்னும் ஆழமாக விரிவாக  உரையாட முடியும்.

நண்பர்களே,  அடிப்படையில் கவிதையோ கதையோ அதன் பொருள் சாரப்படுத்தப்பட்டேனும்   ஞாபகத்தில்  நிற்கவில்லை என்றால்  இரண்டே பிரச்சினைதான் இருக்க முடியும். ஒன்று அது நமக்குப் புரியவில்லை, அல்லது  அது கவிதையில்லை.

(மேலும் )

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’