தொ.ப – அரசியல் மயப்பாடும் நிலைப்பாடும்

அரசியல் மயப்பாட்டிலிருந்தே தனிமனிதரினதும்   அமைப்பினதும் சிந்தனையும் செயல்வாதமும் அரசியல் நிலைப்பாட்டிற்குச் செல்கின்றன. அடிப்படையில் சமூகத்தில் இருக்க கூடிய  ஒன்றையொன்று அதிகாரம் செய்யக்கூடிய ‘அரசியல்’ தன்மை கொண்ட கருத்துருவாக்கங்கள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வுகளை அடைவதும் அவை பற்றிய சொந்த சிந்தனைனையை வந்தடையும் போது தனி நபர்களோ அவர்கள் பங்குபற்றக்கூடிய அமைப்புகளோ அரசியல் நிலைப்பாட்டை எட்டுகின்றன. உதாரணமாக பெரியாரிய கருத்தியலை ஆதரிக்கவும் அதன் பின்னணியைக் கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை எடுக்க கூடியவர்கள்  இன, மத, சாதிய , பால் நிலை ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர்களாகவும், சமூகத்தில் சுயமரியாதை சமத்துவம் ஆகியன நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தக்கூடிய வாழ்க்கை முறைகளைத் தெரிவு செய்வதுடன் அதற்கான சித்தார்ந்த வளர்ச்சியையும் பற்றிச்செல்கின்றனர். இங்கே அரசியல் நிலைப்பாடு என்பதை அறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகவன்றி விமர்சனங்களை, பிற தர்க்கங்களை, நிலைப்பாடுகளை சனநாயக வெளியில் எதிர்கொள்ளவும் பகிரவும் நிலைப்பாட்டை விரித்துச்செல்வுமான பரப்பாக கருத வேண்டும்.

கீழை அறிவுச்சூழல் 

மனித சமூக வரலாற்றில், சமூக அறிவியல் துறைகள் சனநாயக மயப்படுத்தப்படும் போது அவற்றின் உப துறைகளும், புதிய சமூக அறிவியல் துறைகளும் இருபதாம் நூற்றாண்டின் பின்னர் தோன்றி வளர்ந்தன. உதாரணமாக மரபிலக்கணம், இலக்கியம் இவ்விரண்டும் மொழிகள் தொடர்பில் கொண்டிருந்த அறிவுமுறை, சித்தாந்தம், அணுகுமுறைகள் போன்றவற்றின் போதாமை காரணமாகவும் புதிய வெளிச்சங்கள் கண்டடையப்பட்டதாலும் ‘மொழியியல்’ என்பது தனித்துறையாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றி வளர்ந்தது. அதேபோல வரலாறு, தத்துவம், கலை போன்ற மரபார்ந்த அறிவுத்துறைகளில் நிகழ்ந்த  சிந்தனை மாற்றங்கள் குறித்த துறைகளை நவீனப்படுத்தியதுடன் அங்குள்ள போதாமை, தேவைகள் கருதி பண்பாட்டு ஆய்வுகள், மானிடவியல், கலைவரலாறு போன்ற புதிய துறைகளைத் தோற்றுவிக்கும் தேவை மானுட அறிவுச்சூழலுக்கு உருவானது. மானுடவியலானது வரலாறு, தொல்லியல், கலைவரலாறு, சமூகவியல், அரசியல் போன்ற அறிவியல் பரப்புக்களின் இடைவெளிகளை நிரப்பியும் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தவுமாக இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்தது. 

கீழைத்தேசத்தில் காலனியர்கள் தங்களுடைய  பொருளாதார, மத நலன்களைக் கருதி ஆசிய, ஆபிரிக்க நிலங்களை தங்களின் பண்பாட்டு, சமூகவியல், மானிடவியல் ஆய்வுப்பரப்பின் பிரதான கச்சாப்பொருளாகக் கொண்டனர். உதாரணமாக இந்திய உப கண்டத்தின் சமூக வலிமை மிக்க ‘அமைப்பாக’ இருந்த சாதியை ‘அறிவியல்’ பூர்வமாக முதலில் அணுகியவர்கள் காலனியர்களே. ஆனால் அவர்களால் சாதி அமைப்பினுடைய அடிப்படைகளை அதனுடைய மைய நிலைக்குச் சென்று கண்டறிய முடியவில்லை என்பதே வரலாறு.  காலனியர்கள் அறிமுகம் செய்த கல்வி முறைமூலம் கற்றுவந்த சுதேசிகள் காலனியர்கள் கண்டறிய முடியாத  நிலத்தின் இதயப்பகுதிகளுக்குள் பயணப்பட்டனர். உதாரணமாக  அரசியல், சட்ட, சமூக செயற்பாட்டாளரும் சிந்தனையாளருமான அம்பேத்கர் அடிப்படியில் ஒரு மானிடவியல் மாணவராகவும் ஆய்வாளராகவும் இருந்தார். அவரே இந்திய நிலத்தின் சாதிகளைத் தாங்கி நிற்கும் பிரதான வேர்களைக் கண்டறிந்து அறிவியல் பூர்வமாக அவற்றை முன் வைத்தார். அகமணமுறையே சாதியின் தொடர்ச்சியை நிலத்தில் பாதுகாக்கின்றது என்பது கீழைத்தேசத்தின் சமூக வரலாற்றில் ஓர் மிக முக்கியமான கண்டறிவாகும்.

எனவே மானிடவியல் அதனுள் அமைந்த பண்பாட்டு ஆய்வுகள், இனவரைவியல் போன்றவற்றின் நவீனத்துவ வடிவம் மேலைத்தேய உருவாக்கமாக இருந்தாலும், அதனுடைய சிந்திப்பு முறையும், ஆய்வும் சுதேச நிலத்தின் உள்ளூர் அறிவுடன் தொடர்புபடும் போது அது பயன் பெறுமதியை அடைகின்றது. இது சுதேச நிலத்தில் இருந்து உள்ளூர் அறிவை ‘அரசியல்’ மயப்பட்டவர்களாகக் கண்டடைந்த மானிடவியல் சார் சிந்தனையாளர்களாலும் , ஆய்வாளர்களாலும் சாத்தியப்பட்டது. அவ்வகையில் தமிழ்ச்சமூகத்தினுடைய மானிடவியல், பண்பாட்டாய்வுகள் சார் சிந்திப்புமுறையைப் பொறுத்தவரையில் தமிழ் நாடு, ஈழத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் வழங்கிய  மூளை உழைப்பும் , செயல்வாதமும் முக்கியமானது. அவர்கள் அவர்களுடைய சிந்தனை மற்றும் செயற்பாடுகளால் நினைவுகொள்ளப்படுதலும் உரையாடப்படுதலும் ஓர் ஆரோக்கியமான சமூக அசைவாகும். 

தமிழ்ச்சூழலில் மானிடவியலாளர்கள் என்றும், சமூக சிந்தனையாளர்கள் என்றும், பண்பாட்டு ஆய்வாளர்கள் என்றும், அடையாளப்படுத்தக் கூடியவர்களில் பெரும்பாலனவர்கள் இடதுசரிய , பெரியாரிய அரசியலையும், சிந்திப்பு முறைகளையும் கொண்டிருந்தமை: இருக்கின்றமை, மத, சாதிய, இன வாத சார்புகளை எடுக்காத ஆய்வுகளையும் கண்டுபிடிப்புக்களையும்,  நிலைப்பாடுகளையும் சமூகத்திற்கு வழங்கியிருக்கிறது. இது எதேட்சையானது அல்ல. இதை தமிழின் அறிவுச்சூழலின் அரசியல் மயப்படுத்தலின் விளைவாகவே கருத வேண்டும். எனெனில் தமிழின் அறிவுச்சூழலை மேம்படுத்தியதில், நவீனப்படுத்தியதில் மாக்சிய சிந்தனைகள், திராவிட இயக்கங்களின் சிந்தனைகள் , பெரியாரிய சிந்தனைகள் மற்றும் இவற்றின் செயல்வாதங்கள் சமகால உலக ஓட்டத்தையும் அதன் சிந்தனைச் சூழலையும் அரசியல் மயப்பாட்டையும் தமிழ்ச்சமூகத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதிலும் உள்ளூர் அறிவுப்பண்பாட்டை இற்றைப்படுத்திச் செல்வதிலும் பெரிய பங்கை எடுத்துக்கொண்டன. கொண்டிருக்கின்றன.

இப்பெரிய பண்பாட்டுச் செயல் வாதத்தின் முக்கிய பகுதியாக தொ.பவும் இருந்திருக்கின்றார். அவர் தன்னுடைய ஆய்வுகளை வெறும் தகவல் திரட்டுவதற்கோ ‘முனைவர்’ ‘பேராசிரியர்’ பட்டங்களுக்கும் தகைநிலைகளுக்குமாகவோ தேடித்தொகுத்தவராகவோ இருக்கவில்லை. தொ.ப தன்னுடைய சமகாலத்தில் தன்னுடைய சுய சிந்தனையும், கருத்தியல் நிலைப்பாட்டையும் செயல்வாதத்தையும் முன் வைக்க கூடிய, மக்களுடன் பகிரக்கூடிய வாழ்க்கை முறையொன்றை அமைத்துக்கொண்டார். அவருடைய வாழ்க்கை ஒரு தனிமனிதருடைய வாழ்நாட் காலங்கள் பற்றியதல்ல. அது அரசியல் மயப்பட்ட அறிவுச்சூழலின் முக்கியமான பகுதியாக இருந்தது என்பதையே இங்கே சாரப்படுத்த விரும்புகிறேன்.

தொ.ப – அரசியல் நிலைப்பாடும் ஆய்வுகளும்

அண்மையில் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர், மானிடவியலாளர் தொ. பரமசிவன்  தமிழ்ச்சூழலில்  அவருடைய ஆய்வுகள, சிந்தனைகள் என்பன கொண்டுள்ள செயல்வாதங்களின் அடிப்படையை உருவாக்க கூடியது அவர் வந்து சேர்ந்திருந்த அரசியல் நிலைப்பாடாகும். பேட்டி ஒன்றில் தன்னை 95 % பெரியாரிய வாதி என்கின்றார். அதாவது பெரியாரியத்தை விமர்சன பூர்வமாக அணுகக் கூடிய ஒரு சுயசிந்தனையாளராக தன்னைக் கருதுவது சமகாலச் சூழலில் மிக முக்கியமானது என்றே கருதுகிறேன். நாட்டுப்புறவியல், பண்பாட்டு ஆய்வுகள் , இனவரைவியல்  போன்றவை செயற்படக்கூடிய தெய்வங்கள், சடங்குகள், வழமைகள், புராண இதிகாசங்கள், தொல்பொருட்கள், கதைகள், தொன்மங்கள் போன்ற ‘மரபார்ந்த’ வடிவங்களோடு புழங்கக்கூடிய வெளியில் இயங்கக்கூடிய ஆய்வாளர்கள் பெரியாரையும் அவருடைய சிந்தனையும் வெறுமன ‘பின் தொடரக்கூடிய’ வர்களாக இருப்பதை நல்ல பெரியாரிய செயல்வாதமாக பெரியாரே ஏற்றுக்கொள்ள மாட்டார். இங்கே ’முற்போக்கானது’ என்பது சிந்திப்பதும், விமர்சனபூர்வமாக அணுகுவதும், புத்தாக்கப் பண்புகளைக் கொண்டிருப்பதுமாகும். ஆகவே பெரியாரியம் பற்றி தொ. ப எடுக்க கூடிய நிலைப்பாடுகளில் அவருக்கு இருந்த தெளிவும் சொந்த சிந்தனையும் அதை  பொதுவெளிக்கு வைக்க கூடிய அறிதலும் முக்கியமானவை..

’’பெரியாரியம் என்று நாம் வகைப்படுத்தும் சிந்தனை மரபு பெரியாருக்கு முன்னரே தொடங்கிய ஒன்று அது அவருக்குப்பின்னரும் தொடர்வதாகும். ஒரு கலக மரபின் பேராளுமையாக அமைந்த காரணத்தாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்த அவரது செயற்பாடுகள் நம் கண்முன்னே நிகழ்ந்தவை என்பதாலும் இச்சிந்தனை மரபைப் பெரியாரியம் என்கின்றோம்’’ 

என்று தன்னுடைய நிலைப்பாட்டின் பின்னணியின் ஒரு பகுதியை விளக்கும் அவரே 

“பெரியாரிடத்திலே நம்மைப்போல கலை இலக்கியவாதிகள் நூற்றுக்கு நூறு உடன்பட முடியாது. பெரியாருக்கு கலை இலக்கியம் பற்றி எந்தவித உயர்ந்த அபிப்பிராயமும் கிடையாது. ஒரு தவறை -அந்தத் தவறை வரலாற்றில் கௌதம புத்தரும் செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்- பெரியார் செய்தார். பெரியார் தன்னுடைய இயக்கத்துக்குப் பின்புலமாகச் சொத்துகள் இருந்தால் பலமாக இருக்கும் என்று கருதினார். அவருடைய மூதாதையரின் சொத்துகளையும், அவரின் சொத்துகளையும் சேர்த்து இயக்கம் பெரியதொரு சொத்துடமை நிறுவனமாகிவிட்டது. பெரியார் இருக்கும் வரை எல்லோரும் சரியாக இருந்தார்கள். பெரியார் மறைந்த பின்பு, ஒரு சொத்துடமை நிறுவனத்துக்கு இருக்கக் கூடிய எல்லாப் பலவீனங்களும் பெரியாரின் இயக்கத்துக்கும் வந்து சேர்ந்தன. பெரியார் கொள்கைகளை மாத்திரம் வைத்துவிட்டுப் போயிருப்பார் என்றால் இந்த வீழ்ச்சி நிகழ்ந்திருக்காது. பார்ப்பனியம் மறுபடியும் மேலெழுந்திருக்க முடியாது. பெரியார் தன்னுடைய இயக்கத்தைச் சொத்துடமை நிறுவனமாக்கியது பெரும் தவறு என்றுதான் நான் இப்போது அபிப்பிராயப்படுகிறேன்

பெரியாரியத்தைப் நிலைப்பாடாக வரித்துக்கொண்டு மக்களின் சமூக வாழ்க்கையின் ஒடுக்குதல்கள் அற்ற வடிவங்களை, ஒப்பீடுகளை, அவர்களின் கற்பனைகளை, நம்பிக்கைகளை, கூட்டு வாழ்க்கையை கண்டடைவது பண்பாட்டு ஆய்வில் எங்ஙனம் நிகழ்த்த முடியும் என்பதை தொ.ப தன்னுடைய அன்றாடத்திலும் சிந்தனையிலும் கொண்டுவந்தார். சமகாலத்திற்கு அது முக்கியமான உரையாடல் வெளி என்றே கருத வேண்டும். நாட்டாரியல் மரபுரிமை, வரலாறு போன்றவற்றை எவ்வாறு மூளையில் இருந்தும் இதயத்திலிருந்தும் வாசிப்பது என்பதற்கு தொ.ப  எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள் தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்சூழலுக்கு முக்கியமானவை.. ’’பெரியார் பிள்ளையார் சிலையை உடச்சாரு காத்தவராயன், சுடலை மாடன் சிலையை உடச்சாரா ? காத்தவராயன் செடலைமாடன் வழிபாட்டுல அதிகாரக் கட்டமைப்பு இல்லை’ என்பதான அவருடைய குரல் முக்கியமானது.

தமிழ்ச் சமூகத்தில் இருக்கக் கூடிய, இந்திய சமூகங்களில் இருக்கக் கூடிய சமயங்கள் பற்றிய அவருடைய ஆய்வுகளும் நிலைப்பாடும் பண்பாட்டு அசைவுகளின் சமகால நிலைப்பாடுகளை ஆவணப்படுத்துவதுடன் அவற்றுக்கான பொருத்தமான விபரணைகளையும் தொ.ப முன் வைக்கிறார். இந்துத்துவ எதிர்ப்பு, பிராமணியீய எதிர்ப்பு, போன்றவற்றோடு இந்திய பண்பாட்டுச்சூழலிலும் தமிழ்ப் பண்பாட்டுச்சூழலிலும் பெளத்தம், சமணம் போன்ற சமயங்கள் பற்றிய அவருடைய தேடலும் கண்டடைவுகளும் விரிந்தவை. மேலும் இஸ்லாமியர்களின் வருகை, கத்தோலிக்க சமயம் மற்றும் காலனியத்தின் வருகை பற்றிய அவருடைய கட்டுரைகள் முக்கியமானவை… அழகர் கோவில், சமயங்களின் அரசியல், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர் முதலான அவருடைய பனுவல்கள் தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு வாசிப்பிலும் பண்பாட்டை எப்படி அணுகுவது புரிந்துகொள்வது என்பதிலும் புது வெளிச்சங்களைத் தந்திருப்பவை. ‘நாம் பண்பாட்டை எப்போது உணர்கிறோம் என்றால் அது மீறப்படும் போதுதான்’ என்ற அவருடைய வார்த்தைகள் ‘பெருமிதங்களோடும் புனிதங்களோடும் ’ பண்பாட்டை அணுகிச்செல்லும் பொதுப்புத்தியை திருப்பி அனுப்பி விடுகிறது.

‘பிரமாண்டம் என்பதே இங்கு மதத்தின் வெளிப்பாடுதான், அதிகாரமும் மதமும் நாணயத்தின் இருபக்கங்களைப் போல, பிரிக்க முடியாதவை. தெய்வ நம்பிக்கை என்பது வேறு மதம் என்பது வேறு தெய்வ நம்பிக்கை என்பது அதிகார மையமாக உருவாகும் போது எப்படி மதம் வருகின்றதோ அப்போதுதான் அரசும் வருகின்றது.’

அவர் கடவுள் – தெய்வம் என்ற இரண்டு சொற்களையும் வேறு வேறான பண்பாட்டுக்கதையாடல்களாக முன் வைக்கின்றார்.  வைதீக, அவைதீகம், இயற்கை வழிபாடு  என்பவை தொடர்பில் அவருடைய உரையாடல்கள் சமூகத்திற்கு இன்னும் பலகாலம் தேவைப்படுவன.

‘தமிழர் சமயம்னு ஒன்று இருக்கணுமா? தமிழன் சாமி கும்ப்பிட்டானான்னு கேழுங்க, நியாயமான கேள்வி. இயற்கை கலந்த தெய்வத்த நம்புனானான்னு கேழுங்க? சமயம் இருக்கணும்னு என்ன அவசியம்? இன்னும் சொல்லப்போனா கடவுள்ன்னுற வார்த்தையோ, இறைவன்னுற வார்த்தையோ இல்ல. தெய்வங்குறதுதான் பழைய வார்த்தை. நாட்டார் தெய்வங்கள்ன்னு தான் சொல்றோம் நாட்டார் கடவுள்ன்னு சொல்லக்கூடாது.’

மொழி தொடர்பிலும் , மொழியியல் தொடர்பிலும் தொப  கொண்டிருந்த , அறிந்திருந்த விடயங்கள் தமிழ்ச்சமூகத்தின்  அறிவுச்செயல் வாதங்களுக்கு முக்கியமானவை.   தமிழ் இலக்கியச்சூழலின்  மரபு இலக்கியத்தில் அவருக்கு இருந்த அறிதலை அவருடைய ஒவ்வொரு பனுவலிலும் உரையாடலிலும் காணலாம். முக்கியமாக அவரிடம் இருந்தது மொழி பெற்றிய பெருமிதமோ செருக்க அல்ல, அவர் அதை சிந்திக்கும் வெளியாக, ஞாபகத்தின்ம், படைப்பாக்கத்தின்  கூறாகக் கண்டார், தவிர வரலாற்று, பண்பாட்டு வாசிப்பில் மொழியின் மூலம் கிடைக்க கூடிய கச்சாப் பொருட்களை அவர் தன்னுடைய ஆய்வுகளுக்கும், யோசனைகளுக்கும்  பின்னணிகளாகவும் ருசுக்களாகவும் மாற்றிக்கொண்டார்.  உதாரணமாக தமிழில் இருக்க கூடிய கிரந்த எழுத்துக்களை மேற்கோள் காட்டி 

‘இந்தப்பண்பாடு ஆரியம் அல்லாத பண்பாடு என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம் இந்தக் கல்வெட்டுகளை எழுதியவர்களும் தெளிவாக இருந்திருக்கிறார்கள். எனென்றால் கிரந்தப்பகுதி என்று ஒன்று இருந்தால் அதற்குக் கீழே தமிழ்ப்பகுதி என்ற ஒன்று எல்லாக் கல்வெட்டுகளிலும் விரிவாக உண்டு. கிரந்தம் என்பது வடமொழியை எழுதுவதற்கு தமிழர் கண்டு பிடித்த எழுத்துமுறை’  என்பதாக பண்பாட்டை வாசிக்கிறார்.

மேலும் தமிழ்ச்சமூகத்தின் ‘தாய்வழிச்சமூக’ கூறுகளையும் அவற்றின்  தோற்றம் தொடர்ச்சி எச்சங்களையும் ஆணாதிக்க நிலைப்பாடுள்ள பண்பாட்டுக் கூறுகளின் தன்மைகளுக்கு மாற்றுக்களை ஏற்படுத்தும் நிலைப்பாடுகளுடன் தொ.ப முன் வைப்பது  ‘மாற்று’ உரையாடலின் பகுதிகளாக இணைகின்றன. 

மேலும் தமிழ்த்தேசியம், மரபு, சமய நல்லிணக்கம் – சமயச்சார்பின்மை,  சடங்கியல் அதிகாரங்கள் ,  உணவு உடை உறையுள் தொடர்பான பண்பாட்டு வாசிப்புக்கள், தொழில் முறைகள், திருவிழாக்கள் ,பண்டிகைகள், சிறுதெய்வ வழிபாடுகள் ,உறவு முறைகள்,  வரலாறு – மாற்று வரலாறு, சமகால அறிஞர்கள், சமகால இலக்கியங்கள் போன்றவை தொடர்பில் தொ.பா வின் எழுத்துக்களையும் உரையாடல்களையும் தமிழ்ச்சமூகம் அறிந்துகொள்ள வேண்டும்.

தொ. ப எதையெல்லாம் ஆய்வு செய்தார் எதையெல்லாம் கண்டுபிடித்தார் என்பது எவ்வளவு முக்கியமானதோ அதைவிட அவர்  தன்னுடைய சமகாலத்தில் எவ்வகையான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தார், தான் நம்பிய  அரசியல் நிலைப்பாடுகளின் மூலம் தன்னுடைய பண்பாட்டு ஆய்வுகளிலும் மானிடவியல் ஆய்வுகளிலும்  ஏன் தன்னுடைய வாழ்க்கை முறையிலும் கலைத்தன்மையினதாய் மாற்றியிருந்தார் என்பதும் முக்கியமானது. அடிப்படையானது.

இன்று தமிழ்சமூகத்தின் அறிவுச்சூழலுக்குள் இயங்கும் பல நூறு ஆய்வாளர்களும் வெறும் தகவல் சேகரிப்பாளர்களாகவும் கண்டடைந்தவைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாத , அரசியல் நிலைப்பாடு ஒன்றை எடுக்காது, சுய சிந்தனையோ புத்துருவாக்கமோ இல்லாமல் ‘பொதுப்புத்திகளோடு’ எடுபட்டு எந்த சமூக பயன் பெறுமதியும் இல்லாமல் காணாமல் போகின்றார்கள். அதனால் மூளை உழைப்பும் அறிவுழைப்பும் வீண் செய்யப்படுகின்றது. அல்லது  மோசமானவற்றுக்கு துணைபோகின்றது.. இவ் இடத்தில்தான்  தொ.ப போன்ற ‘நிலைப்பாடுள்ள’ தங்களின் நிலைப்பாட்டினை எப்போது விமர்சன பூர்வமாக அணுகிச்செல்லத்தக்க மக்கள் மயப்பட்ட ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும் முக்கியமானவர்கள்.  தமிழ்ச்சமூகத்தின் சிந்தனை மரபு, தத்துவமரபு   மதங்களில் இருந்தும், சாதியிலிருந்தும், இனவாதங்களில் இருந்தும், ஆணாதிக்கத்திலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்டு சமூகப்புரட்சி நிகழ்ந்து நகர்வதற்கு தொ.ப போன்றவர்களின் இவ் அரசியல் மயப்பட்ட பண்பாட்டு ஆய்வுகளும் நிலைப்பாடுகளும் பெரியளவில் துணை நிற்பன. மேலும் அறிவை மக்கள் மயப்படுத்த வேண்டும், என்பது அவருடைய மொழியிலேயே தெரியும், அவருடைய எழுத்துக்கள் மிகச்சுருக்கமாக அறிவை எல்லோருக்கும் பகிரத்தக்க மொழியில் இருக்கும். அவரிடமிருந்த வெகுசன மொழியும் அவருடைய அரசியல் தெரிவே ஆகும், மரபிலக்கியம், நவீன இலக்கியம் இரண்டிலும் பாண்டித்தியம் பெற்ற தொப தன்னுடைய மொழியை பெரியாரைப்போல ‘மக்கள்’ மயமாக்கி விடுகின்றார். தமிழ்ச்சூழலின் வித்துவத்தன்மைப் புரட்டுக்களுக்கு எதிரான ஒர் மக்கள் மயப்படுத மொழி என்று தொ.ப வின் எழுத்துக்களையும் அவருடைய உரைகளையும், நேர்காணல்களையும் கூறலாம். மேலும்  தொப தன்னுடைய இறுதி நாட்கள் வரை மிகவும் சமகாலத்தைச் சேர்ந்தவராக இருந்தார். அவர் எவ்வளவு சமகாலத்தவர் என்றால் 

’அவைதீக மரபு தான் தமிழர்களோட தத்துவ மரபு எல்லாவற்றையும் Centralized  பண்ணுறதோ குவி நிலைக்கு கொண்டு வாறதோ இல்லை. இப்ப Post – modernism எண்டு சொல்றாங்கள்ல; எல்லாவற்றுக்கும் விதி விலக்கு இருக்கு, எதுவும் கெட்டிப்படுத்தப்பட்ட திடமான பொருளாக இல்லை.எல்லாமே திரவ நிலையில தான் இருக்கு.

(உரையின் கட்டுரை வடிவம்)

-யதார்த்தன்

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’