சாதியும் மொழியும்

எங்களுடைய பாடசாலைக்காலத்தில் ஒரு பகிடி இருந்தது. மிகச்சாதாரணமாக, பிள்ளைகள் அதையொரு நகைச்சுவையாக, துணுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பொது வாசகசாலையொன்றில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது முக்குவர் சாதியைச் சேர்ந்த ஒருநபர் அங்கே வருகிறார். அவர் பத்திரிக்கை படிக்க விரும்புகிறார் ஆனால் மற்றவர் இவரைக்கவனிக்காமல் தொடர்ந்தும் வாசித்துக் கொண்டிருக்கிறார் உடனே இவர் அவரை ‘பேப் – பறையா வாசிக்கிறாய்?’ என்கிறார், உடனே வாசித்துக் கொண்டிருப்பவர் சளைக்காமல் ‘முக்குவரறிவித்தல் வாசிக்கிறன்’ என்று சடைந்து சொல்கின்றார். அவர் பேப்பரை பேப்பறை, என்பதாகவும் இவர் முக்கிய அறிவித்தலை முக்குவர் அறிவித்தல் என்பதாயும் இருவரின் தந்திரத்தையும் ஒரு துணுக்காகப் அப்போது பகிர்ந்து கொள்வார்கள். மொழியினால் நடாத்தப்படும் இத்தந்திரமான துணுக்கு ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தநபர்கள் உரையாடிக் கொள்வது போலச் சித்தரிக்கப்படுவது. நான் அறிந்தவரை இத்துணுக்கு ஆதிக்கசாதிப்பிள்ளைகளினால் அதிகமாக மிகச்சாதாரணமாகப் பகிர்ந்து கொள்ளப்படக் கேட்டிருக்கிறேன். ஒருதுணுக்கு ;ஒரு நகைச்சுவை ஆயிரம் வருடத்து சமூக வரலாற்றினால் கட்டமைக்கப்பட்டு வந்தமொழியின் கூட்டுநினைவால், தந்திரத்தால், சமூக வழக்கத்தினால் உருவாக்கப்படுகின்றது. நாம் ஒரு பெரிய சமூக ஒடுக்கு முறையின் பகுதிகளாக இணைந்து கொள்கிறோம்என்பதுதெரியாமலே ‘பிள்ளைகள்’ இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.


பெரியார் 1971 இல் அனிதாடீலுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலும் அதற்குப் பின்னரும் தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்று சொன்னதன் பின்னால் இருக்கக்கூடிய தார்மீக உண்மைகளுள் தமிழ் மொழியின் சாதியப் பங்குபற்றலும் ஒன்று. சாதிய நிலமைகள் நிலவும் சமூகங்களின் மொழிவழக்குகள்-அமைப்புகள் அச்சாதிய அமைப்புக்கு அதன்பயில்விற்கு கூட்டுநினைவகமாகவும் வழக்கை, வழக்காறுகளைக் கடத்தும் விதமாகவும் இருக்கின்றன.


மொழியின் மீது சமகாலத்தைச் சேர்ந்த முன்னேறிய வாசிப்பு முறைகளின் கதையாடல் களைப் பிரயோகிக்கும் போது மொழியின்பிறழ்வான அமைப்புக்களை, அதன் தந்திரங்களை, அடையாள, புனிதங்களால் கட்டமைக்கப்பட்ட மொழியின் சமூகப்போலித்தனங்களை, அதன் ஒடுக்குதல் முகத்தைக் காணமுடியும்.
இருபதாம் நூற்றாண்டு வரை மொழியின் வரலாறு, மொழியின் அமைப்பு, மொழியின் உளவியல், மொழியின் சமூக நிலைமைகள் பற்றிய விஞ்ஞானபூர்வமான பார்வைகள் குறைவாகவே இருந்தன, மொழியையும் அதன் சமூக இடத்தையும் ‘அமைப்பாக’ அணுகத் தொடங்கும்போது தான் மொழியின் அரூபமான உண்மைகளை வந்தடைந்தோம். இது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளிலும் அதன் பின்னரும் நடந்துவந்தது (அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின்நவீன நிலை முதலான கருத்தாடல்கள்) மேற்கத்திய அறிவுச் சூழலில் நிகழ்தது ஆனால் தமிழ்ச்சூழல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழியைப் புனிதத்தன்மையாக மாற்றின . பெரியார் சாதிய சமய அமைப்புக்களுக்கு எதிராக உருவாக்கியகுரலை, கருத்தியல்களை அவருடைய வழி வந்த திராவிட கட்சிகளே திசைமாற்றின. அது தன்னுடைய பெரிய எதிரிகளாகக் கண்ட பிற அரசியல், பொருளாதார மொழி அடையாளங்களோடு ஏற்படுத்த வேண்டியிருந்த போராட்டங்களுக்காக தமிழ்மொழியின் பிறழ்வுகளையும் சேர்த்து, அது கொண்டிருக்கின்ற ஒடுக்கும் முகத்தையும் சேர்த்து தமிழ் மொழியைக் கடவுளாகவடித்தது. ‘தமிழ்த்தாய்’ உருவத்திருமேனியும் பண்புகளும் கற்பிக்கப்பட்டு பெண் தெய்வங்களில் ஒன்றாகவே பொலிவிருந்த்தப்பட்டாள்


கடவுள் மறுப்பு, சாதிய மறுப்பு போன்ற பெரிய சுவர்களை எழுப்பிய திராவிட இயக்கத்தின் சமூகநீதி என்னும் அரணின் மத்தியில் டிரோஜன்குதிரையாக தமிழ்மொழி பிரதிட்டை செய்யப்பட்டிருந்தது. தமிழ் மொழியின் அறிதல் முறையை, அடையாளத்தை, மரபார்ந்த அறிவின் மீள்கண்டுபிடிப்புக்களை, நவீனதமிழ்இலக்கியத்தை, தமிழ்அடையாளத்தை, தமிழ்த்தேசியத்தை எல்லாம் தமிழ்ச்சூழல் உருவாக்கும்போதும் மொழி சாதிய நீக்கமோ, ஆண் மைய நீக்கமோ செய்யப்படமலே இருந்தது.


சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கை, நடைமுறை இரண்டையும் திராவிட இயக்கங்கள் திறம் படச் செய்தன, கடந்த அறுபது ஆண்டுகளில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக நிகழ்ந்த அறிவும் செயலும் தமிழ்ச் சூழலில் முக்கியமானவையே. ஆனால் மொழியை அறிவார்ந்து அணுகாது அதற்கு பெருமிதங்களாலும் செருக்கினாலும் செய்யப்பட்ட அனுட்டானங்கள் இத்தனை போராட்டங்களையும் உள்ளிருந்து அழித்துக் கொண்டிருக்கவும் பலவீனப்படுத்துகிறது.
சமூகம் மொழியினாலேயே தன்னுடைய மனத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. மனிதர்களால் மொழிக்கு வெளியே சிந்திக்கமுடியாது. தனி மனிதர்களின் பிரக்ஞை மற்றும் தன்னுணர்வு என்பதே மொழிக் குறிகளினால் அமைந்ததுதான். கருத்துருவங்களால் (மொழிக்குரியவடிவங்களால்) நிரம்பியநிலையைத் தான்பிரக்ஞை, தன்னுணர்வு என்கிறோம் சமூகவயமான உறவியக்கத்தில் இருந்து தான்மனம் என்பதே உருவாகின்றது. சமூக அமைப்பினால் உருவாக்கப்படும் மொழி என்னும் அமைப்பின் உள்ளார்ந்த நினைவும் சரி அதன் பிரயோகமும் சரி கொண்டிருக்கின்ற ஒடுக்குதல் வடிவங்கள் சமூகத்தின் மையநிலையில் இருக்கும் போது அது ‘கடவுளாக’ வழிபாட்டுப் பொருளாக, துதித்தலின் பண்பாடாக மாறும் போது புறவயமான முற்போக்குச் சிந்தனைகள் அபத்தமாக மாறுகின்றன. இவ் அவலத்தையே நாம் அவதானிக்கின்றோம். தலித்தியம் சார்ந்து இயங்கக்கூடிய, மார்க்ஸியம்சார்ந்து இயங்கக்கூடிய பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்,சமூக செயற்பாட்டாளர்கள் கூட மொழியின்மீதான ‘விழிப்புணர்வற்று’ இருக்கின்றனர். குறிப்பாக மொழியின் ஆண்தன்மை, மொழியின் சாதியவடிவங்கள் இரண்டிலும் அவர்களின் கரிசனை இல்லாது இருக்கின்றது. ஈழத்து தமிழ்ச் சூழலிலும் இத்தகைய தன்மைகளையே அவதானிக்கின்றோம்.


சாதியபோராட்டங்களில், சமூக நீதி தொடர்பான பயணத்தில்த மிழ்நாட்டுச் சூழலைவிட மேம்பட்ட போக்குடன் இருந்தாலும்மொழிபற்றிய ‘விழிப்புணர்வற்றே’ ஈழத்துச் தமிழ்ச் சூழலின் பயில் முறை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அறுபதுகளில் தொடங்கிய சாதிய எதிர்ப்பு போராட்டங்களையும், முப்பது வருட விடுதலைப்போரையும் கடந்துவந்த ஈழத்துச் தமிழ்ச்சூழல், ’தமிழ்செருக்கை’ உருவாக்கிக்கொண்டதில் தமிழ்நாட்டிற்குச் சளைத்ததில்லை. அச்செருக்கினுள் சாதிய அமைப்பும் தன்னுடைய கூறுகளைப் புகுத்திக் கொண்டிருக்கின்றது.

2
மொழி ஓர் பண்பாட்டுப் பின்புலமுடைய அமைப்பு என்ற வகையில் அது தன்னுடைய நினைவு, பேச்சு, இலக்கண அமைப்பு, எழுத்து, தொன்மம், மரபு முதலான கூறுகளினால் தன்னை இயக்குகின்றது ஒவ்வொரு கூறிலும் சமூகத்தின் பயில்வில் இருக்கும் சாதியக் கூறுகள் இருக்கக்காணலாம். முன்பு சொன்னதைப் போல, மொழியே மானுட கூட்டு நினைவகமாகத் தொழிற்படுகின்றது, அது சமூக நினைவில் மேலாதிக்கம் மிக்க கருத்தியல்களை அதிகம் ஞாபகத்தில் கொள்கின்றது. தன்னுடைய தொன்மங்களையும் மரபையும் வரலாற்றையும் உருவாக்குகின்றது.


சாதி பற்றிய சடங்கான நடைமுறைகளை ஒடுக்கு முறைகளாகவன்றி ,இயற்கையான தருவிப்பு, எனவும், பிறப்பினால் நேர்ந்தது எனவும் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளைக் கொண்டே இச் சடங்கு ஒரு சமூக இயல்பாக கூட்டு நினைவினுள் மொழி வடிவத்தில் பதியப்பட்டுக் கடத்தப்பட்டது. ழாக் லக்கான் கூறுவது போல் மனித நனவிலி அல்லது ஆழ் மனம் மொழியின் வடிவிலே அமைந்திருப்பின் உள்ளூர பதிந்துபோன, சாதிய மனநிலை மொழியில் விரவி இருப்பது தவிர்க்கமுடியாதிருக்கும்.
மொழியின் அடிப்படை வடிவங்களான சொற்கள் மொழியின் பேச்சு, எழுத்து ஆகிய இரண்டினாலும் சமூகத்தின் அர்த்தங்களின் குறிகளாக மாறுகின்றன, பொருத்தமான இடங்களில் அர்த்தங்களைப் பெறுகின்றன. மாற்றிக்கொள்கின்றன, பெருகவும்பல் தன்மை பெறவும் செய்கின்றன. சமூக மொன்றில் ஆண் மனநிலை ஆதிக்கம் செலுத்தும் போது ஆண்சொற்கள் உருவாகுவதுடன் அவை சமூகத்தினால் பால்சார் ஒடுக்குதலுக்கு துணைநிற்கின்றன. அதனால் அவை சொல்லையோ சொல்லற்ற இடங்களையோ உருவாக்கும் போது சமூகக் குறிப்பீடுகளைப் பெறும் உதாரணமாக தமிழின் முற்போக்கு சிந்தனையும் செயலும் கொண்ட எழுத்தாளர்கள், கருத்தியல் தலைவர்கள் கூட பாவிக்கும் மொழியில் விழிப்புணர்ச்சியற்று இருக்கின்றனர்.மனிதரை மனிதன் என்றும், எழுத்தாளரை எழுத்தாளன் என்றும் விழிக்கும் போது அவர்களை அறியாமலே ஆண் சொற்களாக சமூகத்தில் ஆண் மொழி நிலவுவதற்கு துணை செய்கின்றன, கருத்தியல் தலைமைகளும் முற்போகான கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் கூட ஆண் சொற்களைப்பாவிக்கும் போது, ஏனைய மக்களைப் பற்றி அவர்களின் மொழி விழிப்புணர்வு பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கும்.


சாதிய நிலைமைகளில்சொற்கள் சாதிய அர்த்தம் பெறும் இடங்களை, ஒடுக்குதலின் மொழி வடிவங்களைப் பெறும் இடங்களை நாம் சாதாரணமாகக் கடக்கின்றோம். சில நேரடியாகவே வசைகளாவும், இழிவார்த்தைகளாகவும், ஒடுக்குதலின் வெளிப்படையான காட்டுமிராண்டி வடிவங்களில் பயன்பாட்டில் இருக்கின்றன.
நாகரிகம்மிக்கதென்று பெருமைப்படுத்தப்படும் தமிழ்மொழியில் இருக்கின்ற வசைகளை இரண்டு பெருங்கூறுகளாகப் பிரித்தால் ஒன்று பெண்களை இழிவு செய்யக் கூடியபால், பாலியல் சொற்களினால் ஆனவையாகவும், மிச்சமிருப்பவை சாதிய வசைகளால் நிறைந்துமிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் நிகழத்தக்க இப்பெரும் ஒடுக்கு முறைகள் இரண்டின் பகுதியாக தமிழ் இணைந்து கொள்கின்றது. ஈழத்துச் சூழலைப் பொறுத் தவரையில் தமிழில் பறையா, சக்கிளியா, துரும்பா, நளவா போன்ற வசைகளும் இழி பொருட்பயன்பாடும் பேச்சுமொழியில் பயன்பாட்டில் உள்ளவை. குறிப்பாக ஒடுக்கும் சாதியாக இருக்கும் வெள்ளாளர்களும், இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தும் வசைகளாக இருக்கின்றன. இவ் வசைச் சொற்களின் பின்னால் இருக்கும் சமூகப்பகைப்புலமும் அது தன்னுடைய அர்தத்தைப் பெறுவதற்கு ஒடுக்கு முறையில் இருந்து கொய்துகொள்ளும் இயல்பும் சாதாரணமாகக்கடந்து போகின்றவையல்ல. ஒடுக்குபவர்கள் ஒடுக்கப்படும் மக்களை அவர்களின் சாதிய அடையாளத்தினாலே இழிவுபடுத்தும் போதும் சரி, ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர் அதேசாதியைச் சேர்ந்தவரை இத்தகய சாதிய வசைகளால் வையும் போதும் சரி, அந்தச் சொற்கள் சாதிய ஒடுக்குதலின் வெவ்வேறு நடைமுறைத் தருணங்களோடு இணைந்து கொள்கின்றன.


யாழ்பாணத்தமிழில் நீர், என்ற சொல்லை உதாரணப்படுத்துவதன் மூலம் சாதியப் பின்புலத்தினால் நோக்கத்தினால், எப்படிச் சொற்கள் குறிப்பீட்டைப் பெறுகின்றன என்பதை விளக்க நினைக்கிறேன். ‘நீர்’ என்பது தமிழில் முன்னிலை ஒருமைச் சுட்டாகவும் நேரடியான மரபிலக்கணப் பொருளில் மரியாதை ஒருமையாகவும் வரக்கூடியது. அதிலும் நீவீர், நீயீர் போன்ற பயன்பாட்டு வழக்கில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்களுடன் நெருக்கமானது எனினும் யாழ்ப்பாணக் கிளை மொழியில் இன்னும் வழக்கில் இருக்கிறது. ஆனால் சொல் ஒன்றின் பயன்படு சந்தர்ப்பங்களும் அது எடுக்கின்ற அர்த்தமும் அதற்கு அதுகொள்ளும் மேற்கூற்று இயல்பும் சந்தமும் ,அதன் முன்னும் பின்னும் உள்ள மெளனமும் சமூக உற்பத்தியாக கருதப்படும்போது, நீர் என்ற சொல் ஓர் அந்நியத் தன்மையை இயல்பிலேயே கொண்டிருப்பதையும் அது பின்னர் சாதிய அந்நியத்தை ஏற்படுத்துவதற்கு நுட்பமாகப் பயன்படுவதையும் கள ஆய்வின்மூலம் கண்டுகொள்ள முடிந்தது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது பல்கலைக்கழகத்தில் இருக்கும் யாழ்ப்பாணம் அல்லாத வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மாணவர்களிடம் பேட்டி கண்டபொழுது ‘நீர்’ என்று யாழ்ப்பாணத்துத் தமிழைக் கதைக்கக்கூடிய மாணவர்கள் நீர், என்று விழிக்கும் போது சட்டென்று ஒர் அந்நிய உணர்வையும் வேறுபடுத்தலையும் உணர்வதாகவும், அதன் மொழி இயல்பு ஒருவித நெருடலுடன் இருப்பதாயும் குறிப்பிட்டார்கள். ஆனால் இதே சொல்லை யாழ்ப்பாணத்து மாணவர்களிடம் குறிப்பிட்டுக் கேட்க, அவர்கள் அதைக் கவனப்படுத்திப் பார்க்கும் போது அதன் பயன்பாடு பெரும்பாலும் சட்டென்று ‘நீ’ என்பதற்கும் ‘நீங்கள்’ என்று விழிப்பதற்கும் இடைப்பட்ட ஒருசொல்லாக அதை உணர்வதாகச் சொன்னார்கள். இயல்பிலேயே அச்சொல்லின் அருகில் இருக்கும் மெளனத்திடம் ஒர் அந்நிய உணர்வு தொற்றிக் கொள்வதையே பல பயன்படு நிலைமைகளை நினைவு கூர்வதன் மூலம் கண்டறியமுடிந்தது.


பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே கிராமங்களுக்குச் செல்லும் போது அச்சொல்லில் இயல்பிலேயே பயின்று வந்த அந்நியத் தன்மையைச் சாதியமும் எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. குறிப்பாக நீர் என்ற சொல்லின் பொருள் நிலைமாற்றத்தின் மொழிப்பயில் வுவரலாற்றைத் தேடும் போது அறுபதுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போராட்டங்களும் முற்போக்கு கருத்தியல்களின் வளர்ச்சியும், சாதிய நிலைமைகளைக் குலைத்து விட்ட பிறகு வெளிப்படையாக, தீண்டாமையையோ கடுமையான நேரடி ஒடுக்குதலையோ செய்வது சமூகமனநிலையில் அநாகரீகமானதும், ஜனநாயக சட்டவாக்கங்களினால் குற்றமாகவும் கருதப்பட்டதாலும் நடைமுறையிலிருந்ததாலும். ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர்களும் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்களும் மரியாதை அற்றதாயும் இல்லாமல் மரியாதையுள்ளதாயும் இல்லாமல் இருக்கும் இச்சுட்டைக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நபர்களை அழைக்கும் வழக்கம் மொழியில் உருவாகிவந்துள்ளது. மேலும் தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில் விடுதலைப் போராட்டங்கள் உருவாகிவரும் போது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் போராட்ட இயக்கங்களில் சேர்ந்த போது அவர்களுக்கு இயக்கங்களின் சமூக அதிகாரம் கிடைக்கப்பெற்றது.


பெரும்பாலான விடுதலைப்போராட்டங்கள் கொள்கையளவிலும் நடைமுறையிலும் சாதியை எதிர்க்கவும் செய்தன. இப்பின்னணிகளில் போராளிகளை அவர்களின் சாதியை அறிந்து ‘நீ’ என்று அழைக்க முடியாத நிலையையும், நீங்கள் என்றும் அழைக்க முடியாத சாதிய மனநிலை தருகின்ற சங்கடத்தையும் தவிர்க்க ’நீர்’ என்ற வார்த்தையின் இரட்டை நிலையை தமது சாதிய மனநிலையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காகப் பயன்படுத்தினர் என்ற தகவல்களையும் பலரின் அவதானிப்புக்களுடன் உரையாடிய போது பெற்றுக்கொண்டேன்.


யாழ்ப்பாணத் தமிழில் ’எங்கடையாக்கள்’, ‘உங்கடையாக்கள்’ அல்லது வேறையாக்கள் போன்ற சொற்தொடர்கள் இருக்கின்றன. பொதுவாக இச்சொற்றொடர்கள் குழும மயப்படுத்தல், வேறுபடுத்தல் போன்ற நேரடி அர்த்தங்களில் வந்தாலும் இவ்விரண்டும் சாதிய குழுமப்படுத்தல் மற்றும் வேறுபடுத்தலுக்காகவே பிரயோகத்தில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ‘நம்மஆளுக’ ‘அவுகஆளுக’ போன்ற சொற்றொடர்களைப் போன்றவை இவை. மொழியின் இவ் உளப்படுத்தும்பாங்கு சாதிய உளப்படுத்தல் (cast inclusive) ஆகவே இருக்கின்றது.


மொழி ஒன்றினுடைய பெயரிடல் அமைப்பு இரண்டு வகையினதானது. ஒன்று இடுகுறிப்பண்பு, இன்னொன்று காரணப்பண்பு. இடுகுறித்தன்மை என்பதும் முதலில் காரணத்தினாலேயே உருவாகி இருந்தாலும் பிற்காலத்தில் அதன் குறிப்பீட்டுத் தன்மையின் காரணம் மறைந்து குறியானது, காரணப் பின் புலமில்லாத பெயராக மட்டும் எஞ்சுவதைக் குறிக்கும். உதாரணமாக மரம், மண், கடல் போன்றவற்றின் பெயர் உருவானதன் காரணம் கிடைப்பதில்லை எனினும் அப்பெயர்கள் ஏதேனுமொரு சமூகப் பகைப்புலமோ தனி மனிதரோ கண்ட காரணத்தின் விளைவாக பெயரிடப் பட்டிருக்கவும் ஒலிக் குறிகளால் உருவாகவும் வாய்பிருக்கிறது. பெயரிடல் என்பது சமூகப் பகைப்புலத்தினைக் கொண்டிருக்கும் போது அங்குள்ள சாதியம் பெயரிடலிலும் தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றது. தனிநபர்கள், தொழில் அடையாளங்கள், தெருக்கள், கிராமங்கள், குறிச்சிகள், வட்டாரங்கள், நீர்நிலைகள், சந்திகள் என்று பெயரிடும் போது சாதிய ஒட்டுக்களுடனோ சொற்களாலோ பெயரிடப்படுவதுடன் அவை தொடர்ச்சியாகப் பயன்பாட்டிலும் இருக்கின்ற.


செட்டிய குறிச்சி, வண்ணாங்குளம், தூவார மூலை, அம்பட்டன் கிராய் போன்றன யாழ்ப்பாணத்தில் இருக்கும்கிராமங்கள், குறிசிச்சிகள், நீர்நிலைகள் வயல்நிலங்களின் பெயர்களாகும். வட்டாரங்கள், குறிச்சிகள் போன்றவற்றை அறிந்து கொண்டு எந்தச் சாதியினர் என்று அறிந்துகொள்ளும் முறை தமிழ்ச் சமூகத்தில் இயல்பான ஒன்று போல் இருந்துவருகின்றது. சொத்து, நிலம், சாதிய ஒழுங்கமைப்பு என்பவற்றைப் பாதுகாக்கும் முக்கிய வடிவங்களில் பெயரிடலும் ஒன்றாகும். இப் பெரிய சாதிய வரைபடத்தை மொழியே வைத்திருக்கின்றது.


தனிநபர்களுக்குப் பெயரிடுதல் அல்லது அழைத்தலின் போது அவர்களின்தொழில், தகுதி என்பவற்றின் பெயரினால் அழைக்கப்பட்டனர். ஆனால் அவற்றின் பின்னால் சாதிய மனோநிலை அப்பட்டமாகத்தெரியும். ஆதிக்கசாதியைச் சேர்ந்தோர் கமக்காரன், நயினார், உடையார், பூசகர் போன்ற வழக்குகளால் அழைக்கப்பட்டனர். இவ்வழக்குகளுக்கு ஏற்பட்டிருந்த சமூகமதிப்புப் பொருளாதாரத்தாலும், சாதிய மரபினாலும்வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தாழ்த்தப்பட்டமக்கள் அம்பட்டன், வண்ணான், கட்டாடி, முப்பன், சாம்பன், பரியாரி, பறையன் என்றேன் அழைக்கப்பட்டதுடன் இவை சமூகமதிப்பில் தாழ்ந்த தொழில் நிலைமைகளாக சாதியப் பின்புலத்தினாலேயே பயன்படுத்தப்படுகின்றன.
அறுபதுகள் வரையும் ஏன் அதற்குப் பிறகும் கூட யாழ்ப்பாணத்தில் தனிநபர்களுக்கு பெயரிடும் போது தாழ்த்தப்பட்ட மக்கள் மரியாதை விகுதிகளான ‘அர்’‘ஆர்’ போன்ற வற்றினால் முடியும் பெயர்களை வைக்கக்கூடாது என்றநடைமுறையிருந்தது. உதாரணமாக கந்தர், செல்லர் என்று பெயர்வைக்க முடியாது அவற்றை ‘கந்தன்’ ‘செல்லன்’ என்றே பெயரிடவும் அழைக்கவும் முடியும். ஏனைய தீண்டாமை, சாதிய வன்முறைகளைப்போலவே இதுவும் ஓர் மொழியினால் நிகழ்த்தப் பட்ட சாதிய அடக்கு முறையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.


மொழியில் இருக்கின்ற மரபுத்தொடர்கள், பழமொழிகள், சொலவடைகள் என்பன, அம்மொழியின் சமூகபண்பாட்டு புலத்தினால் உருவானவை. மொழி ஒன்றின் செவ்வியல், அழகியல் தன்மையில் முக்கியமான கூறாக இணைந்து கொள்பவை. அவை மொழி ஒன்று வந்து சேரும் அறிதல் முறைகளாகவும் கலைத் தன்மைகளாகவும் இருக்கக்கூடியவை தான், ஆனால் முற்று முழுதாக அவை ஒடுக்குமுறையோ வன்முறையோ அற்றவை என்று குறிப்பிடமுடியாது. பல இடங்களில் அவை சாதிய காட்டு மிராண்டித்தன்மையின் கூறுகளுடன் கையளிக்கப்பட்டு வருகின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம்
புதுச்சுக்கு வண்ணான் பறை தட்டி வெளுப்பான்
நட்டுவன் குட்டிக்கு நொட்டிக் காட்டோணுமோ?
கெட்டாலும் செட்டி கிழிஞ்சாலும் பட்டு
இம் மூன்று தொடர்களும் சாதியப் பின்புலத்தில் இருந்து கொண்டு வெவ் வேறு விதமான அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன.

முதலாவது ‘புதியதைப்பிரஸ்தாபிக்கும்’ தன்மையினைக் குறிக்கின்றது. அது நேரடிப் பொருளில் தொழிலைக் குறித்தாலும் அதன் முழுவதுமான இயல்பில் சாதியம் நுட்பமாக இழையோடக் காணலாம். குறிப்பாக அங்கே ஒடுக்கப்பட்ட சாதித் தொழிலாளி மரியாதையற்று பகடிப்பொருளில் விழிக்கப்படுகின்றான். இத்தொடரில் நிகழும் சுவாரஸ்யமும் ‘புதுத்தன்மையும்’ சாதிய நிலவரத்தினாலே நிகழ்தப்படுகின்றது.


இரண்டாவது தொடர், புலிக்குப் பிறந்தது பூனையாகுமோ? என்ற பொது மரபுத் தொடரின் உள்ளூர் பேச்சுமொழி வடிவம். இடைநிலைச் சாதியைச் சேர்ந்த இசைவேளாளர்கள் என்று அழைக்கப்படும் நட்டுவர்களைக் கொண்டு, உருவாக்கப்படுகின்றது. இங்கே பயன்படுத்தப்படும் சாதியமனநிலை என்பது இழிவாகவோ, மரியாதைக் குறைவாகவோ அன்றி ‘கொஞ்சம்’ உயர்ந்ததாகக் கருதப்படும் தன்மையை அவதானிக்க முடியும்.


மூன்றாவது ஆதிக்கசாதியை நேரடியாகவே உயர்த்திப் பிடிக்குமாறு, உயர்வுநவிழ்ச்சித் தன்மையினதாக உருவகப்படுத்தப்படும் தொடராகும், ’கெட்டாலும்மேன்மக்கள்மேன்மக்களே’ என்ற தொடரைப் போல சாதி ஒன்றை உயர்த்திக் காட்டும் தொடராக விருக்கின்றதைக் காணலாம். இம் மூன்று தொடர்களின் மூலமாக மொழியினுள் சாதி எவ்வளவு நுட்பமாக இயங்குகின்றது என்பது புலனாகும். தமிழில் இவ்வாறு ஏராளம் பழமொழிகள், மரபுத்தொடர்கள், சொலவடைகள் காணப்படுகின்றன. குறிப்பாகப் பேச்சுமொழியில் அன்றாடப் பயன்பாட்டில் இவை அதிகம் காணப்படுகின்றன.


யாழ்ப்பாண சாதிய மனநிலையின் திரட்சியாகாவிருந்த ஆறுமுக நாவலர் வேளாளர்களுக்குச் இணையாக உற்பத்தியிலும் பொருளாதார பலத்துடனும் இருந்த, வெள்ளாளரனின் குடிமை முறைக்குள்ளோ, அடிமைமுறைக்குள்ளோ வராத கடல்சார்ந்த தொழில்களைச் செய்யும் ‘கரையார்’ களின் சமூக அதிகாரத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சாடியும் எதிர்த்தும் வந்தவர். அதனை முன் நிறுத்தி ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் கரையான் கரையான்’ என்பாராம். இது இன்று பேச்சு மொழியின் நினைவகத்தில் பகிரப்பட்டு வந்திருக்கின்றது.
தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களுக்குள் ஒடுக்குபவர்களைக் கேலி செய்யவும் ஓர் வகை எதிர்ப்பு உளவியலாலும் உருவாக்கிக்கொண்ட பழமொழிகள், சொலவடைகள், கூற்றுக்கள் காணப்படுகின்றன.


‘ஓத்தாராம் உடையார் இடுப்பில சலங்கை கட்டி’
‘உடையாற்ற திருவிழாவில சடையார் ஈக்குவாணம் விட்ட மாதிரி’
ஒடுக்குமுறையுள்ள சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்குள் இயல்பாகவே ஒடுக்கும் வர்க்கம், சாதி மீது கேலியையும் , நைய்யாண்டியையும் மொழியில் உருவாக்கிக் கொண்டு தமக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பு உள்ளது. இவ்வகை மொழிக்கூறுகள் பற்றிய ஆய்வுகள் தனியாகச் செய்யப்பட வேண்டியவையவை. ஏனெனில் ஒடுக்குமுறை மையத்தில் இருக்கும் போது ஒடுக்கப்படுவபர்கள் உருவாக்கும் இத்தகைய வடிவங்கள் மைய ஒடுக்குமுறைக்கு எதிரானவையாகவும் அவற்றைக் குலைப்பவையாகவும் இருக்கின்றன.


இவை தவிர மொழியில் காணப்படும் கதைகள், தொன்மங்கள், துணுக்குகள், விடுகதைகள் என்பவற்றிலும் சாதி நுட்பமாகச் சென்றுஅ மர்ந்திருக்கின்றது. நாம் மொழியினாலேயே சிந்திக்கிறோம் அதனாலேயே அறிவையும் பண்பாட்டையும் நிகழச்ச் செய்கிறோம் என்ற வகையில் நாம் கையாளும் மொழியில் இருக்கும் சாதியக் கூறுகளை, அறிந்தோ அறியாமலோ பயன்படுத்தும் போது நாமும் ஒடுக்கு முறையின் பங்காளர்களாக மாறுகிறோம். வெறும் சொல்லினால் என்ன நிகழ்ந்து விடப் போகின்றது என்று நினைக்கும் போது நாம் மொழியின் பண்பாட்டுச் சக்தியின் மீது அசிரத்தையைக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்லவேண்டும்.


தமிழ்ப் பேச்சுமொழியிலும் சரி, தமிழ் இலக்கியத்திலும் சரி இன்னும் நுட்பமாகச் சாதியப் பயன்பாட்டின் கரங்கள் ஓங்கியிருக்கின்றன. ஆதிக்க மனநிலை அதைத் தொடர்ந்தும் பயன்பாட்டில் வைத்திருக்கவே முனைகின்றது. மொழியைப் பெருமிதமாக அடையாளமாக கருதும் போது ஏற்படுகின்ற போது நாம் பார்வையிழக்கிறோம், மாற்றமுடியாத அசைக்க முடியாத ஒன்றாக பண்பாட்டையும் அதன் அடையாளங்களையும் சுமக்கத்தேவையில்லை. அடிப்படையில் பண்பாட்டின் இயல்பு முற்செல்லும் சிந்தனையைகளையும் சமூக விடுதலையையும் பற்றி ஏறுவதாயிருக்கவேண்டும்.


-யதார்த்தன்

 

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’