‘மற்றவர்கள்’ என்று யாரும் இல்லை – ரமணர்
தமிழ்ச் சமூக அமைப்பின் உருவாக்கத்தையும், அதன் வரலாற்றையும், போக்கையும் விளங்கிக்கொள்வதற்கு சாதிய ஆய்வுகளும் உரையாடல்களும் முக்கியமானவை. சாதியம் என்பது ஒருவகைச் சமூக உறவாகும். சமூகத்தில் உள்ள பல்வேறு சாதிகள் தமக்கிடையே கொண்டிருக்கிற பொருளாதார, அரசியல், பண்பாட்டு உறவுகளின் மூலமே சாதியம் என்ற சமூக அமைப்பு நிலைபெறுகின்றது. அடிப்படையில் இச் சாதிய உறவுகள் ‘சமத்துவமற்ற’ தன்மையினை அடிப்படையாக கொண்டவை. ஆதிக்கமும் வன்முறையும் நிறைந்தவை. தமிழ்ச் சமூகத்தில் இருக்க கூடிய ஆதிக்க சாதிகளில் வேளாளர்கள், பண்பாட்டு அதிகாரம், அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார அதிகாரம் மிக்கவர்களாகவும் ஒடுக்குபவர்களாகவும் வரலாற்றுக்காலங்களிலும் சரி சமகாலத்திலும் சரி தங்களுடைய சாதிய இருப்பை நிறுவி வந்திருக்கின்றார்கள்.
வேளாளர்களை மேலாதிக்க, மேலாண்மைத் தரப்பாக கொண்ட இலங்கைத் தமிழ்ச்சமூகத்தில் அவர்கள் பற்றிய உரையாடல், இலங்கைத் தமிழ் வரலாற்றிலும், இனவரைவியலிலும் (Ethnography) முக்கியமான பகுதியாகும். சாதிய அமைப்புக்களை கட்டுப்படுத்தக்கூடிய மேலாதிக்கமும் மேலாண்மையும் மிக்க வேளாளர்களைப் பற்றிய ஆய்வுகளும் உரையாடலும் இவ் இனவரைவியலின் பகுதிகளிலொன்றாக இருக்கின்றன. இக்கட்டுரையானது இலங்கையில் வேளாள சாதிக் குழுவானது எவ்வாறு ஆதிக்க சக்தியாக உருவாகி வந்திருக்கிறது என்பதையும் அது சமூகத்தின் ‘மேலாதிக்கம் மற்றும் மேலாண்மை’ ஆகிய இரண்டு வகை அதிகாரங்களையும் அதன் ஊடான நலன்களையும் கட்டமைத்தது என்பதனை, சமூக பண்பாட்டு மானிடவியல் பார்வைகளையும் கோட்பாட்டு சட்டகங்களையும் கொண்டு வியாக்கியானப்படுத்துவதையும் தொகுப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இக்கட்டுரையில் ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் முதல் சுதந்திரம் வரையிலுமான காலப்பகுதியில் வேளாளர்கள் எவ்வாறு ஒடுக்கும் அதிகாரத்தரப்பாக மாறி வந்தனர் என்பது பற்றி உரையாடப்படுகிறது.
இவ் உரையாடலில் மேலாதிக்கம் (dominon), மேலாண்மை1 (hegemony) என்ற இரண்டு கலைச்சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மாக்சியரான அந்தோனியோ கிராம்சி (Antonio Gramsci 1891 – 1937) சென்ற நூற்றாண்டில் மேலாண்மை, சிவில் சமூகம், கருத்துநிலை போன்றவை பற்றி உருவாக்கிய எண்ணக்கருக்கள் சமூகம், பண்பாடு போன்றவற்றில் நிலவும் அசைவியக்கங்கள் பற்றி விளங்கிக்கொள்ள உதவக்கூடியவை. மேலாதிக்கம் என்பது வன்முறையின் மூலம் பெறப்படும் இணக்கத்தைக் குறிக்கும். மேலாண்மை என்பது கருத்து நிலை மூலம் செலுத்தக்கூடிய அதிகாரத்தையும் இணக்கத்தையும் குறிக்கும்.
பொருளாதார அடித்தளத்திற்கும் சமூக அரசியல் பண்பாட்டு அமைப்புகள் என்ற மேலடுக்கிற்கும் உள்ள இயங்கியல் ரீதியான உறவுகளை விளக்குவதற்காகவும், ஒடுக்குமுறைக் கட்டமைப்புகளை நிலை நிறுத்துவதற்காக ஆதிக்க நிலை வர்க்கங்கள் கையாளும் நுட்பமான கருத்துநிலை கட்டுப்பாட்டு வடிவங்களை விளக்குவதற்காகவும் ‘மேலாண்மை’ என்ற கருத்தாக்கத்தை கிராம்சி பயன்படுத்துகிறார். (எஸ்.வி. ராஜதுரை , வ . கீதா : 2009) சமூகத்தில் மோசமான மேலாண்மை கருத்தியல்களும் நல்ல மேலாண்மைக் கருத்தியல்களும் நிலவுகின்றன.
சாதிய அமைப்பில் மேலாதிக்கம், மேலாண்மை இரண்டுமே தொழில்படுவதைக் காணலாம். சாதிய நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை வன்முறை மூலம் தண்டித்தல், அச்சுறுத்தல், காயப்படுத்தல், கொலை செய்தல் வரை சென்று அவர்களைக் கட்டுப்படுத்துவர். இதனை மேலாதிக்கம் என்று சொல்ல முடியும். அதே வேளை கருத்தியல் அடிப்படையில் ‘இந்து மதம்’ போன்ற அமைப்புக்கள் சாதியை கடவுளுடைய நியமிப்பு என்ற ‘வருணக் கோட்பாட்டை’ கருத்தாக மாற்றுவதன் மூலம் அதைப் பின்பற்றச் செய்கின்றன. அதாவது கருத்தை நிலைப்படுத்துவதன் மூலம் அக்கருத்தை ஏற்கவும் பின்பற்றவுமாக மக்களை மாற்றுவதன் ஊடாக பெறப்படும் ஆதிக்கத்தை ‘மேலாண்மை’ என்று அழைக்கிறோம். இங்கே பலப்பிரயோகமோ அச்சுறுத்தலோ தேவையில்லை கருத்தியலே இதன் சாரமாக இருக்கிறது. கிராம்சி இக்கருத்து நிலையை கல் மண் கலவையில் சீமெந்து பிணைப்பு சக்தியாக இருப்பதைப்போல மேலாண்மையும் கருத்தியலும் பிணைந்திருப்பதாகச் சொல்கிறார். (சண்முகலிங்கம்.க : 2005) சிவில் சமூகங்களில் (civil socities) அரசு எந்திரங்களின் துணையுடன் மட்டுமன்றி பண்பாட்டு மேலாண்மையின் துணையுடனும் ஆளுவோர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவர் என்ற கிராம்சியின் கூற்று சாதியமைப்பில் ஆதிக்க தரப்பாக இருக்கும் வேளாளர்கள் எவ்வாறானதொரு மேலாதிக்கமும் மேலாண்மையும் இணைந்த விதத்தில் தங்கள் சாதிய இருப்பை பாதுகாத்து வந்தார்கள் என்பதை விளங்கிக்கொள்ள உதவும்.
குறிப்பு- தமிழில் ‘மேலாண்மை’ என்ற கலைச்சொல் ஒரு ஆண் சொல்லாகக் கருதப்படக் கூடியது, எனினும் இதற்கு நிகரான ஆண் தன்மையற்ற கலைச் சொல் ஒன்றை தமிழ்ச் சூழல் இன்னும் கண்டறியவில்லை என்பதால் இக்கட்டுரையில் குறித்த சொல்லையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
சாதி அமைப்பின் கட்டுமானங்கள்
சாதி அமைப்பு எவ்வாறு ஒரு மேலாண்மைக் கருத்தியலாகவும் மேலாதிக்க நடைமுறையாகவும் அது தோன்றிய காலம் முதலே வளர்ந்து வந்தது என்பதனை விளங்கிக்கொள்வது இவ் உரையாடலைத் தொடர்வதற்கு முக்கியமானது. சாதியம் அடிப்படையில் ஒரு சமூக உறவாகும். இச்சாதிய அமைப்பானது அடிப்படையில் பொருளாதாரம், பண்பாட்டு உறவுகளினால் கட்டியெழுப்பபட்டது. தொழில் அடிப்படையில் ஆதிக்கசாதியினர் நிலம், செல்வம் போன்றவை உரித்தானவர்களாக இருப்பது பொதுவான இயல்பு. அதே போல அவர்களுடைய சாதிய மேலாண்மையை உறுதிப்படுத்த மதம், அரசு, மூலநூல்கள் போன்றன உருவாக்க கூடிய சடங்குகள், பிறப்பு பற்றிய கோட்பாடுகள், தூய்மை பற்றிய கோட்பாடுகளும் உதவுகின்றன. இவற்றை பொதுவாக கருத்தியல் சார்ந்த பண்பாட்டுக் கட்டுமானங்கள் என்று அழைக்கலாம். குறிப்பாக துடக்கு , தூய்மை போன்ற கோட்பாடுகள் இவ்வாறான கருத்தியல் சார் நிலவரங்களை உருவாக்குகின்றன. ‘செயற்கை நிலையிலேயே தமிழர் வாழ்விலே துடக்கு தற்பொழுது தொழிற்பட்டு வருவதைக்காணலாம். தனிமனித நிலையிலும், குடும்ப இயற்கை நிலையிலும் மாத்திரம் தொழிற்பட்ட துடக்கு சமூக நிலையில் செயற்கையாக மாறியுள்ளது. சாதி என்ற பாகுபாடு சமூக நிலையில் அழுத்தம் பெற்ற போது துடக்கும் அதனுடன் இணைக்கப்பட்டது. ’ ‘இந்து சமயத்தின் சமூக வடிவமே சாதியமாகும். இந்தச்சமூகத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் சாதியமானது ‘சதுர்வர்ணத்தால்’ ஆனது. சாதிகளின் தோற்றத்திலும் அவற்றின் வளர்ச்சியிலும் இந்து சமயம் பெரும் உந்து சக்தியாக இருந்து வந்தது. இதில் சமயம் சமூகம் இரண்டும் பரிவர்த்தனை வடிவங்களாகும். இவை சமுதாயத்தில் சட்டமாகவும் வாழ்க்கை நடைமுறையாகவும் (தூய்மை – தீட்டு ஆகிய கருத்தாக்கங்களைக் கொண்டவை ) இருந்து வருகின்றது. (பக்தவத்சல பாரதி :2012) இவ்வாறு இந்துமதம் கட்டமைக்கும் வருணக்கோட்பாடும், அதுசார்ந்த மூல நூல்களும் தென்னாசியாவில் சாதியம் ஒரு ‘கருத்தியல்’ தளத்தையும் மேலாண்மையையும் பெற காரணமாயின. பிரம்மாவினால் படைக்கப்பட்ட பிராமணர் , சத்திரியர், வைசிகர், சூத்திரர் ஆகிய நால்வர்ண சாதிகளும் அவர்களின் பாவ புண்ணியதிற்கு ஏற்றபடி விதிக்கப்பட்ட வாழ்வோடு பிறந்தவர்கள், அதனால் சாதிகளாக பிரிக்கப்பட்டனர் என்பது இதன் அடிப்படை கோட்பாடு. இக்கோட்பாட்டில் இருந்தே பின்னர் சாதியம் விரிந்து, வேறு வேறு வடிவங்களாகப் பரவியது என்று மானிடவியல் குறிப்பிடுகிறது. இதுவே சாதியினுடைய அடிப்படையான கருத்தியல் தளம். சாதிய கட்டுமானம் நிலை பெற பொருளாதார அடிக்கட்டுமானமும் சாதிய கருத்து நிலையில் இருந்து வரும் சமூக உறவுகளும் , நம்பிக்கைகளும் சடங்குகளும் நடைமுறைகளும் சாதிக்குரிய மேலாண்மை தளத்தை வளங்குகின்றன.
இலங்கைத் தமிழ்ச்சமூகத்தில் சாதியமைப்பு
இலங்கைத் தமிழர்களிடையே குறிப்பாக வடபுலத்து தமிழர்களிடையே, அமைந்திருந்த அதிகார அடிப்படையிலான சாதியப் படிநிலையில் உச்ச நிலையில் ஆதிக்க சாதியான வேளாளர் இருந்தனர். அவர்களுக்கு அடுத்து பிராமணர்கள் இருந்தார்கள். சிறு அளவுடைய பிராமணர்கள் சடங்கியல் அதிகாரம் கொண்டவர்கள், அதே நேரம் வேளாளர்களால் கெளரவமான இடத்தில் நடத்தப்படுபவர்கள். அடுத்தடுத்த படி நிலையில் பலதர நிலை வேளாளர்கள் எனப்படுவோரும் அவர்களை ஒத்தவர்களும் இருந்தனர். உடல் உழைப்பில் ஈடுபடும் சிறு நில குத்தகை விவசாயிகளான வேளாளர்கள் கணிசமானவர்களாவர். ஆனால் சாதிய ரீதியில் அவர்கள் உயர்வானவர்களாகவே கொள்ளப்படுவர். அடுத்த படிநிலை, கைவினைச் சாதிகளாக இருந்து சேவைகள் வழங்குவோராகக் கொள்ளப்படும் மக்களைக் கொண்டதாகும். இவர்களே இடைநிலைச் சாதியினர் என்று கூறப்படுகிறார்கள். உலோக, மர, மண் மற்றும் கட்டிட வேலை செய்வோர், சுயமாகத் தொழில் செய்வோர், கோவில் தொண்டு புரிவோர் போன்றவர்கள் இடை நிலைச் சாதிகளாகக் கொள்ளக் கூடியவர்கள். ஆரம்பத்தில் கோவியர் சாதியானது அடிமைச் சாதியாக கணிக்கப்பட்ட போதிலும் காலப்போக்கில் அச்சாதி இடை நிலைச் சாதிய வரம்பிற்குள் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் இடைநிலைச் சாதிகள் யாவும் படிநிலையில் ஒன்றன கீழ் ஒன்றாக இருந்து வருமாறு வகுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களை வேளாள ஆதிக்கத்திற்கான தொண்டூழியச் சாதிகளாகவே கொள்ள முடியும். இவ் இடைநிலைச் சாதியினரின் எண்ணிக்கை முப்பத்தைந்து வீதத்தினராகக் கொள்ள முடியும். இதற்கு அடுத்த நிலையில் அதாவது அடி நிலைச் சாதிகளாக தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களைக் காண இயலும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள ஐந்தாவது பிரிவினரான தாழ்த்தப்பட்ட தீண்டப்படாத சாதிகளைச் சேர்ந்த பள்ளர், நளவர், பறையர், வண்ணார், அம்பட்டர், துரும்பர், சக்கிலியர், பறையர் என்போர் பஞ்சமராகக் கருதப்பட்டனர். ஆனால் உயர் வேளாள ஆதிக்க சக்திகளின் நேரடிக் குடிமைகளாக இருக்க வேண்டிய தேவையின் பொருட்டு வண்ணார், அம்பட்டர் சாதியினர் சில சலுகைகளுக்கு உரிமை கொண்டிருந்தனர். இருப்பினும் சாராம்சத்தில் அவர்களும் தாழ்த்தப்பட்டோர் என்ற வரையறைக்குள் உள்ளவர்களேயாவர். இவ்வாறான தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் முப்பது வீதத்தைக் கொண்டது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது . (வெகுசனன் இராவணன் : 2007)
அறிஞர் கா. சிவத்தம்பி இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சாதியமைப்பை கட்டுப்பாடுள்ள , கட்டுப்பாடற்ற சாதிகள் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக வைத்து உரையாடுகிறார். யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பில் தொழிலே (Vocation) பிரதான அடிப்படையாகின்றது. வெள்ளாளரை மேலாண்மையுடையோராகக் கொண்டு மற்றைய சாதியினரின் இடம், பங்கு, பணியினை ஆராய முற்படும் பொழுது இம் மரபு காணப்படுவது இயல்பே. முன்னர் அடிமை குடிமை மரபினராகக் கொள்ளப்பட்டவர்கள் கட்டுப்பாட்டுக்குள் (Bound Mode) வருவதாகவும் பொருளாதார சீவியத்தில் வெள்ளாள மேலாண்மைக்குள் நேரடியாக வராதவர்கள் கட்டுப்பாடற்ற முறைமைக்குள் (Unbound mode) வருவதாகவும் அவர் கூறுவார். ஆய்வாளார் கெனத் டேவிட்டை மேற்கோள் காட்டும் சிவத்தம்பி கட்டுப்பாட்டு முறைமைக்குள் வருவோராக பிராமணர், சைவக்குருக்கள், வெள்ளாளர், கோவியர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர், பறையர், துரும்பர் போன்ற சாதியினரைக் குறிப்பிடுகின்றார். கட்டுப்பாட்டு முறைமைக்குள் வராதவர்கள் என்ற அடிப்படையில் வணிகர்கள், உள்ளுர்க் கைவினையாளர், சைவசெட்டி, ஆசாரி, தட்டார், கைக்குளர், சேணியர், முக்கியர், திமிலர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவற்றோடு கலப்பு முறைமை என்பதில் கட்டுப்பாடு உடைய பண்டாரம், நட்டுவர் (இசை வேளாளர்) போன்றோரையும் கலப்பு முறைமைக்குள் கட்டுப்பாடற்றவர்களாக கரையார், தச்சர், கொல்லர், குயவர் போன்ற சாதியக் குழுவினரும் குறிப்பிடப்படுகின்றனர். (சிவத்தம்பி .கா : 1993)
கட்டுப்பாடுள்ள, கட்டுப்பாடு அற்ற என்பது வேளாளரை மையம் கொண்டதாகவே அதாவது வேளாளரை ஆதிக்கத்தரப்பாக கொண்ட கட்டமைப்பில் இருந்தே உருவாகி வந்திருப்பதைக் காணலாம். இந்த மையமே இச்சாதிய அமைப்பின் மொத்த விரிவையும் நிலைப்படுத்திக் கட்டுப்படுத்துகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் குறைந்த பட்சம் 43 சாதிகள் வரையில் இருந்ததாக ஆய்வாளர் மைக்கல் பாங்ஸ் குறிப்பிடுகின்றார். (பாங்ஸ்,பனுவல்:2009) யாழ்ப்பாணத்தில் சாதி அடுக்கமைவைக் கொண்ட கிராமங்களை அவர் இனம் காண்கிறார். அதாவது வேளாளர்களையும் அவர்களுடைய அடிமைகளையும் குடிமைகளையும் கொண்ட கிராம கட்டமைப்பை இனங்காட்டுகிறார். கெனத் டேவிட் மற்றும் மைக்கல் பாங்க்ஸ் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளில் நாட்டின் சனத்தொகையில் 50 வீதமானோர் வேளாளராய் இருந்தார்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.(தங்கேஸ்:2009)
பொருளாதாரத்தினாலும் சமூக நிலைபேறினாலும் மிகவும் தாழ்த்தப்பட்டும் உழைப்புச் சுரண்டப்பட்டும் வேளாளார்களின் குடிமைகளும் அடிமைகளும் இருந்தனர். அவர்களுக்கு நிலமோ உரிமைகளோ தூரமாக்கப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையை நோக்கின் அது மிகவும் மோசமானதொன்றாகவே இருந்து வந்துள்ளது. வேளாளர் நெற்பயிர், புகையிலை போன்றவற்றைப் பிரதான பயிராக உற்பத்தி செய்யக்கூடிய வயல் நிலங்களையும், தோட்டங்களையும் கொண்டிருந்தனர்.
நிலப்பிரபுத்துவ காலத்திலும் சரி அதன் பின் வந்த கொலனிய ஆட்சிக்காலத்திலும் சரி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் மீதான உரிமை கடுமையாக மறுக்கப்படிருந்தது. அவர்கள் நிலவுடைமையாளர்களான வேளாளர்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கே தொண்டூழியம் செய்வோராக இருக்கச் செய்யப்பட்டனர். அடிமை குடிமை முறைகளினால் பிணைக்கப்பட்ட வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர், பறையர் என்போரில் பள்ளர், நளவர், பறையர் அடிமைச் சாதிகளாக வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை. குடியிருத்தப்பட்டனர். ஆனால் குடிமைச் சாதியினரான வண்ணார், அம்பட்டர் என்போருக்கு குடியிருப்பதற்கு ஓரளவு நிலம் வழங்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு குடிநிலம் பெற்றதாலும், மட்டுப்படுத்தப்பட்ட நிலம் வாங்க உரிமை பெற்றிருந்ததாலும், அத்துடன் உயர்குடியினரின் தேவையின் பொருட்டு சில சலுகைகளைக் கொண்டிருந்ததாலும் ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களை விடத் தாம் சற்று உயர்வான சாதியினர் என்ற கருத்து நிலையில் இவ்விரு சாதியினரும் இருந்து வந்துள்ளமையைக் காணலாம். எனினும் மொத்தத்தில் சாதி அடக்கு முறையின் அம்சங்களுக்கும், தீண்டாமைக்கும் இவ்விரு சாதியினரும் ஆளாகியே வந்துள்ளனர். இவ்விடத்தில் மற்றுமொரு அம்சம் நோக்குதற்கு உரியது. அதாவது அடிமை குடிமை வேலைகளில் பங்குபற்றும் பிரதான சாதியினரான கோவியர்கள் தாழ்த்தப்பட்டோர் என்ற வரம்பிற்குள் சேர்க்கப்படாது இருந்த போதிலும் அவர்களுக்கும் நிலம் வழங்கப்படாமல் இருந்ததைக் காணலாம். அவர்கள் உயர்குடியினரின் நிலங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வீட்டுத் தொண்டூழியமும் விவசாயமும் செய்விக்கப்பட்டதைப் பெரும்பாலும் காணமுடிகிறது. கூலி குத்தகை விவசாயிகளாகவும் அவர்கள் இருந்து வந்தனர். அவர்களது வாழ்நிலை ஏறத்தாழத் தாழ்த்தப்பட்ட மக்களின் தரத்திற்கு இருந்து வந்த போதிலும் அவர்கள் உயர் வேளாள ஆதிக்கத்தின் கரங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். (வெகுசனன், இராவணா : 2007)
கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் இம்மக்கள் வாழ்ந்து வந்தனர். தீண்டக்கூடாத சாதிகள் மட்டுமன்றி ‘துரும்பர்’ எனப்படும் ‘பார்க்க கூடாத’ சாதியும் கூட வேளாளர்களின் ஒடுக்குமுறைக்குள் இருந்து வந்தனர். பள்ளர், நளவர் மற்றும் பறையர் என்ற தீண்டத்தகாத சாதிகளுக்கப்பால், யாழ்ப்பாணத்தில் துரும்பர்கள் என்ற கண்ணிற்படக்கூடாத, தீண்டப்படாதவர்களின் துணிகளைச் சலவை செய்யும் ஒரு சாதியும் உள்ளது. இதையொத்த சாதியொன்று தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் முன்பிருந்ததாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியத்தில் துரும்பர் சாதியைச் சார்ந்த ஒருவர் பகல் வேளையில் வெளியே திரிவது அனுமதிக்கப்படவில்லை. இரவிற்கூட ஒரு பனையோலையைத் தமக்குப் பின்னால் இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. சிலரின் கருத்துப்படி, இது அவர் எங்கு இருக்கிறார் என்பதை ஓசையின் வழியாக அறிவிக்கும் ஒரு முறையாகும். வேறு சிலரின் கருத்தின்படி அவர் சென்ற வழியை அவர் வரைய வேண்டும். இதனால் அவருடைய காலடிகள் பட்ட இடத்தை அடுத்த நாள் உயர் சாதியினர் தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் கொள்ளப்படுகிறது. துரும்பர்கள் மங்கிய வெளிச்சமுள்ள வேளையில் வேகமாக நடமாடுதல் வரவேற்கப்படும். அத்துடன் பல வெள்ளாளருக்கு அவர்களின் இருப்புப்பற்றிக் கூடத் தெரியாது. (பாங்ஸ், பனுவல்: 2009 )
இவை தவிர சாதிய நடைமுறைகள் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் அடிப்படையான உரிமைகளோ, சுயமரியாதையுடன் வாழக்கூடிய வாழ்கையோ அற்றிருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கம் வேளாருக்கு குடி ஊழியம் செய்வதும், அடிமையாக இருப்பதும் தான் என்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இரகுநாதன் யாழ்ப்பாணத்தில் வழக்கத்தில் இருந்த 24 சாதிய அடிப்படையிலான தடைகளைப் பட்டியல் படுத்துகிறார். ஆண்கள் மேலங்கி அணியக்கூடாது, கணுக்கால் வரை வேட்டி கட்டக்கூடாது, தோள் சால்வை போடக்கூடாது, பெண்கள் மேற்சட்டை போடக்கூடாது, தாவணி போடக்கூடாது, சாலைகளில் கண்டபடி நடமாட கூடாது, பார்க்க கூடாத சாதிகள் வருகையை உணர்த்தும் வகையில் காவோலையை இழுத்துச்செல்ல வேண்டும், நகை அணியக்கூடாது, திருமணத்தில் தாலி கட்டக் கூடாது, சடங்குகளின் போது வெள்ளை கட்டக்கூடாது, விசேட சடங்குகளின் போதும் வெள்ளை உடுத்தக் கூடாது, பிரேதங்களை தகனம் செய்யாது புதைக்க வேண்டும், உயர் சாதியின் சுடலைகளில் பிணமெரிக்கக் கூடாது, நன்மை தீமைகளின் போது வாத்தியங்களைப் பயன்படுத்தக் கூடாது, உயர்சாதியின் குளம், கிணறுகளைப் பயன்படுத்தக் கூடாது, குடைபிடிக்கக் கூடாது, பாதணிகள் அணிதல் கூடாது, கல்வி கற்கக் கூடாது, உயசாதியின் தெய்வங்களை தங்கள் கோவில்களில் பிரதிட்டை செய்ய கூடாது, உயசாதியின் கோவில்களுக்குச் செல்லக் கூடாது, சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்யக் கூடாது, பஸ் வண்டியில் ஆசனங்களில் இருக்க கூடாது, பிற்காலத்தில் பாடசாலை அனுமதி கிடைத்த போதிலும் ஆசனங்களில் அமரக்கூடாது (இரகுநாதன் :2004) இப்படியாக பல சாதிக்கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் அன்றாடத்திலேயே இருந்தன. இவை மீறப்படும் போது வேளாளர்கள் அம்மக்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்தனர். காயப்படுத்துதல், தண்டனைகளை அளித்தல், அதிக பட்சமாக கொலை பாதகங்களுக்கும் இம்மக்கள் உட்படுதப்பட்ட ஏராளமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் அநீதியும் கொண்டு இயங்கிய இலங்கையில் தமிழ்ச் சாதிய அமைப்பின் மையமாகவிருந்து வரும் வேளாளருடைய மேலாதிக்கம் எவ்வாறு உருவாகி வந்தது? அது எவ்வாறு தன்னை அரசியல் பொருளாதார , சமூக பண்பாட்டு தளங்களில் நிலை நிறுத்திக்கொண்டது என்பதனை விளங்கிக்கொள்வது தமிழ்ச்சமூகத்தின் பிரதான ஒடுக்குமுறைகளில் ஒன்றான சாதிய அமைப்பையும் அதன் கட்டமைப்பையும் விளங்கிக்கொள்ள உதவும். குறிப்பாக வன்முறையான பலப்பிரயோகம் மூலம் வேளாள சாதிய மேலாதிக்கம் ஒரு பக்கத்திலும், மறு புறத்தில் சாதி என்பது பிறப்பினால் கிடைக்கப்பெற்ற ஒன்று, அது முன் சென்ம பாவ புண்ணியங்களில் இருந்து கடவுளால் வழங்கப்பட்டது என்ற ‘சாதிய மதக் கோட்பாடு’ என்ற விதத்திலும் மேலாண்மைக் கருத்து ஆழமாக நம்பும்படி செய்யப்படிருந்தது.
வேளாளர் என்பவர்கள் யார்?
வெள்ளாளர்கள் அல்லது வேளாளர்கள், தமிழ்ச் சமூக அமைப்பில் இருக்க கூடிய ஆதிக்க சாதியைச்சேர்ந்த குழுவைக் குறிக்கும் சொற்களாக புழக்கத்தில் இருக்கின்றன. வேளாண்மை என்னும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இருந்து இச்சொற்கள் உருவாகி வந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் வாய் மொழி மரபில் வெள்ளாளர் என்ற சொல்லுக்கும் வேளாளர் என்ற சொல்லுக்கும் வேறுபாடுகள் உண்டு. பரம்பரை பரம்பரையாக வயல்களைக் கொண்டவர்களும், ஆயிரம் வருட வம்சாவழியாக நிற்கும் மாடுகளை உடையவர்களுமே தங்களை வேளாளர்கள் என்று அழைத்துக்கொள்ள முடியும் என்றும் அப்படியான பரம்பரை உரித்தான வயலோ, மாடோ இல்லாதவர்கள், வேளாளரை விடவும் கொஞ்சம் ‘தாழ்ந்தவர்கள்’ என்ற அர்த்தத்தை குறிப்பதற்காக வெள்ளாளர் என்று ஒரு ‘ள்’அழுத்தத்தைக் கொடுத்தும் அழைக்கப்படுகிறார்கள். இவ் வாய்மொழி மரபின் ஊடாக வேளாளர் என்ற சாதிக்குழுவின் சமூக உருவாக்கத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். அதாவது நிலத்தை அடிப்படையாக கொண்ட நிலமானிய சமூக அமைப்பில் இருந்து தொழில் சார்ந்து இவ்வகை குழுக்கள் உருவாகி வந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தலாம். தமிழ் நாட்டில் பிராமணியம் முழுமையாக செல்வாக்கு பெறும் முதலே தமிழ் சமூகத்தில் தொழில் சார்ந்து வேளாளர் என்ற சமூகக் குழுமம் உருவாகி வந்திருப்பதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. தொல்காப்பியமானது வடமொழி நூல்கள் குறிப்பிடும் பிராமணர் , சத்திரியர், வைசிகர், சூத்திரர் என்ற வருணப்பாகுபாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாது சில மாறுபாடுகளுடன் தமிழ் மக்களைப் பாகுபடுத்தியுள்ளது. அதன் படி அரசர், அந்தணர், வணிகர் , வேளாளர் என்ற நான்கு பிரிவுகள் தொல்காப்பியத்தில் இடம்பெறுகின்றன. இவற்றுள் வேளாளர் குறித்து
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப
என்கிறார் தொல்காப்பியர்.(சிவசுப்பிரமணியன்:2022). இவ்வகையில் பார்க்கும் போது ஆரம்பத்தில் தொழில் சார்ந்து உருவாகிய வேளாளர் என்ற சமூகக் குழு பின்னாளில் சாதியாக மாற்றமடைந்து என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். சாதியாக மாற்றமடையும் போது வேளாள குழுவில் பல்வேறு வகையான சாதிகளும் இணைந்துகொண்டன. அவை காலப்போக்கில் வேளாளர்களுக்குள் பல்வேறு வகையினரை உருவாக்கின. தமிழ் நாட்டிலும் சரி இலங்கையிலும் சரி பல வேளாள வகையினர் தற்பொழுதும் இருந்துவருகின்றனர். தமிழ் நாட்டில் கொங்கு வேளாளர், சோழிய வேளாளர், பாண்டி வேளாளர், நாஞ்சில் வேளாளர், துளுவ வேளாளர், கார்காத்த வேளாளர், சைவ வேளாளர், இசை வேளாளர் போன்ற பல்வேறு வகையினர் இருக்கின்றனர். ஈழத்தைப் பொறுத்தவரையில் சைவ வேளாளர், செட்டி வேளாளர், கற்கொத்தி வேளாளார், இசை வேளாளர் போன்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இனவரைவியல் ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டால் இன்னும் சில வேளாளர் குழுக்களை அடையாளம் காண வாய்ப்புண்டு. வேளாளர்கள் என்ற சாதியக் குழு உருவாகும் போதும் அது அதிகாரத்தை அடையும் போதும் பின்னர் சாதிய அமைப்பின் மூலம் சமூக மேலாதிக்கத்தையும், மேலாண்மையையும் அடையும் போதும் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு பின்னணிகளில் பல குழுக்களும் வேளாளருடன் இணைந்துகொண்டனர். அதற்குச்சான்றாக
கள்ளர் மறவர் கனத்ததோர் அகமடியர்
மெள்ள மெள்ள வந்து வேளாளரானார்கள்
என்ற பழமொழி வழக்கில் உள்ளதனைச் சுட்டிக்காட்டலாம். தமிழ்ச் சமூகத்தின் பழமையான தொழில்களின் வரிசையில் போர் புரிதல், கால்நடை வளர்ப்பு, கால்நடை கவர்தல், என்பன இடம்பெறுகின்றன. இத்தொழில்களில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டு உணவு உற்பத்தி செய்யும் வேளான் தொழிலுக்கு புதிதாக ஒரு பிரிவினர் வந்துள்ளதையே இப்பழமொழி சுட்டுகிறது. (சிவசுப்பிரமணியன் :2022).
நிலமானிய அமைப்பும் வேளாளர்களும்
நிலத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகிவற்றைக்கொண்ட சமூகங்களை நிலமானிய சமூகங்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். வரலாற்று பொருள்முதல் வாதம் பற்றிய உரையாடலில் கார்ல்மார்க்ஸ் குறிப்பிடும் மனித வரலாற்றுக் காலங்களின் முக்கியமான காலமாக கருதப்படும் நிலத்தை அடிப்படையாக கொண்ட ‘நிலமானிய சமூகம்’ கொண்டிருக்க கூடிய இயல்புகளின் அடிப்படையில் நிலத்தின் உற்பத்தி, உற்பத்தி சார் உறவுகள், உற்பத்திக் கருவிகள், உபரி போன்றன அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கின்றன. கீழைத்தேசங்களின் மானிய முறைமை ஐரோப்பாவில் இருந்து முற்றிலும் மாறானது. ஐரோப்பிய உற்பத்தி முறையானது குறிப்பாக நிலமானிய சமூகத்தில் ‘வர்க்க அடிப்படையைக்’ கொண்டதாகும். ஐரோப்பிய நிலமானிய முறையில் நிலத்தினுடைய பொருளாதார அதிகாரம் அரசன், பிரபுக்களிடம் காணப்பட்டது, அவர்களுக்கு கீழ் குடியானவர்களும், அடிமைகளும் இருந்தார்கள். மதம் சடங்கியல் அதிகாரத்தை கொண்டிருந்தது. அது அரசனுக்கும் , பிரபுக்களுக்கும் ‘தெய்வத்தினால் வழங்கப்பட்ட’ உரிமையே அவர்களுடைய அதிகாரம் என்ற புரட்டை மக்களுக்குள் நிலைபெறச்செய்ய இயங்கியது. அரசன் நிலத்தினுடைய உரிமையாளனாக ‘கெளரவ’ வேடத்தை ஏற்றிருந்தான். நிலம் பிரபுக்களுக்குச் சொந்தமாக இருந்தது. செல்வம் படைத்த அவ் வர்க்கத்தின் நிலங்களில் குடியானவர்களும், அடிமைகளும் வேலை செய்தார்கள். இதனையே ஐரோப்பிய நிலமானிய உற்பத்தி முறையின் அடிப்படையான வரைபடமாகக் காணமுடியும்.
ஆனால் ஆசிய நிலமானிய உற்பத்தியைக் கொண்ட சமூகங்களின் நிலை வேறுபாடுகளை உடையது. ஆசிய உற்பத்தி முறையிலும் (Asiatic mode of production) சரி , கீழைத்தேச வல்லாதிக்க முறையிலும் (oriental despotism) சரி நிலம் முக்கியம் பெறும் அதே வேளை அதை அதிகாரமயப்படுத்துவதில் வர்க்கத்தை விட சாதிய அமைப்பே முக்கியமாக அழுத்தம் பெறுகின்றது. குறிப்பாக உபகண்டமான இந்தியாவில் அரசன், பிரபுக்கள், குடியானவர்கள், அடிமைகள் என்போர் வர்க்கத்தைக் காட்டிலும் சாதியை அடிப்படையாக கொண்டே பிரிக்கப்பட்டார்கள். அதனை சாதியை உருவாக்கிய இந்துமத சாத்திரங்கள் ‘வருணக் கோட்பாடு’ மூலம் ஒழுங்குபடுத்தி அதற்கான ‘நியாயப்படுத்தலை’ கடவுளிடம் இருந்து பெற்றுக்கொடுத்தன. அது பிராமணர்களுக்கு கீழே மக்களை சாதி அடிப்படையிலான ‘உற்பத்திக்கு’ பழக்கப்படுத்தியது. நிலத்தின் உரிமையினையும் சாதியடிப்படையிலேயே வழங்கியது.
இலங்கையின் நிலமானிய அமைப்புப் பற்றி கோட்பாட்டு ரீதியான மாற்று விவாதங்கள் பல இருக்கின்றன. ஆசிய உற்பத்தி முறையின் இயல்புகளோடு அது உடன்படும் – வேறுபடும் இடங்களில் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையை ஆய்வுக்களமாக கொண்ட ஆய்வாளர்கள் பலரும் ஆசிய உற்பத்தி முறையை விமர்சித்தும் அதுபற்றிய விரிவான ஆய்வுகளையும் செய்துள்ளனர். ஆயினும் வரலாற்று ஓட்டத்தில் இலங்கையின் சமூக உருவாக்கத்திலும் விரிவிலும் நிலம் சார்ந்த உற்பத்தி முறையில், சாதியம் அடிப்படையானது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக சிங்கள சமூகத்திலும் சரி தமிழ்ச் சமூகத்திலும் சரி நிலத்தின் உரித்தையும், அதில் உற்பத்தியையும் மேற்கொள்ளும் ‘வேளான்’ சமூகத்தினைச் சேர்ந்த சாதிகளே ஆதிக்க சமூகங்களாக இருக்கின்றன. தெற்கில் உள்ள சிங்கள சமூகத்தைப் பொறுத்தவரையில் ‘கொய்கம’ என்ற வேளாமை செய்யும் சாதிக்குழுவே ஆதிக்கம் மிக்கதாக இருந்துவருகின்றது. அதே போல தமிழ்ச் சமூகத்தில் வேளாளர்கள் ஆதிக்க குழுவாக இருந்துவருகின்றனர். கொலனித்துவத்திற்கு முந்திய சிங்கள சமூகத்தில் அரசன் நிலத்தினுடைய உரிமையைப் பெற்றவனாக இருந்தான். சிங்கள சமூகத்தில் சாதியை அடிப்படையாக கொண்ட ‘இராஜகாரிய’ முறை என்படும் அரசுக்கு சேவை வழங்கும் கட்டாய முறைமை இருந்து வந்தது. ரதல என்கின்ற ஆட்சி செய்யும் சாதியினரும் அவர்களுக்கு இணையாக ‘கொய்கம’ என்ற சாதியினரும் சமூகப்படிநிலையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தனர்.
சிங்களச் சனத்தொகையில் பெரும்பான்மையானோர் (அண்ணளவாக மொத்த சிங்களச் சனத்தொகையில் 50 வீதமானோர்) கொய்கம (உழவர்) சாதியினைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தமக்கென தனியான நிலங்களை வைத்திருக்கும் உழவர்களாவர். மேலும் சாதிப் படிநிலை காரணமாக அவர்கள் தமக்குக் கீழுள்ள அனைத்துச் சாதியினரிடமிருந்தும் சேவைகளைப் பெற்றுக் கொள்பவர்களாகவும் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளனர். ( தியூடர் சில்வா, தங்கேஸ்: 2009) இவர்களைப் போலவே இலங்கை தமிழ்ச் சமூகத்தில் வேளாளரும் 50 வீதத்தில் உள்ளனர் என்பதனை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். அதே போல் விவசாய நிலத்தினை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். தங்களுக்கு கீழே சாதிப்படிநிலையால் ஒழுங்குபடுத்தப்பட்ட சமூக பொருளாதார உற்பத்தியையும் அதிகார ஒழுங்கையும் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்களுக்கு சாதியை அடியொற்றிய இராசகாரியம் போன்ற நடைமுறைகளும் சட்டங்களும், தமிழர்களிடம் சாதிய அடிப்படையைக் கொண்ட தேசவழமை, முக்குவர் சட்டங்கள் போன்றனவும் நிலவிவந்தன.
இலங்கையில் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலம் முதற்கொண்டு கிடைக்கும் வரலாற்றுத் தகவல்களின்படி நிலத்தின் தலைவனாக அரசன் இருந்த போதும் பிரபுக்களான முதலிகள் போன்ற அதிகாரிகளே நிலவுடமையையும் அதன் அதிகாரத்தையும் வைத்திருந்தனர். அத்தோடு சிங்கள சாதியத்தை பெளத்தமும் உள்வாங்கிக்கொண்டது. அதே போல இந்து மதத்தினால் உருவாக்கப்பட்ட வர்ணக்கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட சாதிய அமைப்பின் இலங்கைக்கான பகுதியை ‘சைவ சமயம்’ பக்கபலமாக நின்று வளர்த்து வந்தது. இவை பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
இலங்கையில் வேளாளர்
வரலாற்றுச்சான்றுகளின்படி இலங்கையில் தமிழர்களின் சாதிக் கட்டமைப்பு, ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சி செய்த 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரையான காலத்தில் நன்கு நிலைபெற்ற வடிவத்திலேயே இருந்ததாகத் தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முன்பே வேளாளரை மையமாகக் கொண்டு இங்கு சாதிய அமைப்பு பலம்பெற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது. குறிப்பாக சோழர்கள், பாண்டியர்கள் போன்ற வேளாளர்களின் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ்நாட்டு பேரரசுகளின் படையெடுப்பு, திருமணம், குடிப்பெயர்வு போன்ற பண்பாட்டு தொடர்புகளின் போது சாதிய அமைப்பு இலங்கையில் மேலும் பலப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்ற வரலாற்று நூல்கள் யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது நடைபெற்ற சனவேற்றங்கள் பற்றியும் அவை சாதியடிப்படையில் நிகழ்ந்தவை என்பது பற்றியும் தகவல்களைக் குறிப்பிடுகின்றன. இவை கூறும் வேளாளரின் சனவேற்றம் என்பது அவர்களின் அடிமை, குடிமைகளையும் உள்ளடக்கியிருந்தது. இவை எல்லாப் பிரிவும் ஒன்றிணைந்து ‘பதினெண்சாதி’ என வையாபாடலில் குறிக்கப்பட்டுள்ளது. கைலாய மாலையில் இவ் வேளாளர்கள், வேளாமரசர்கள் எனவும் முடி, கொடி ஆகியன படைத்த சிற்றரசர்கள் எனவும் சித்தரிக்கப்படுவதை (சிற்றம்பலம் .சி.க :1992) கவனிக்கும் போது இலங்கையில் சாதிக்கட்டமைப்பு வேளாளரை அதிகாரக் குழுவாக கொண்டே ஏற்பட்டு இருப்பதனையும் உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும் இந்த வரலாற்று நூல்கள், வேளாளர்கள் தங்களுடைய அடிமைகளோடும் குடிமைகளோடும் ஒரு சமூகக் கட்டமைப்பாக எந்த இடங்களில் குடியேறினர் என்பதனையும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் குடியேறிய இடங்களாக திருநெல்வேலி, மயிலிட்டி, தெல்லிப்பளை, இணுவில், பச்சிலைப்பள்ளி, புலோலி, தொல்புரம், கோயிலாக்கண்டி, இருபாலை, நெடுந்தீவு, பல்லவராயன்கட்டு ஆகியன விளங்கின. (சிற்றம்பலம் .சி.க :1992) யாழ்ப்பாணம் ஒரு தனி இராச்சியமாக உருவாகும் போது அதன் நிலபுலன்களை நிர்வகிக்கவும் அதனை அடிப்படையாக கொண்ட குடிமைச் சேவைகள் மற்றும் அடிமைகளை நிர்வகிப்பதற்காகவும் அங்கு வேளாள பிரதானிகளே நியமிக்கப்பட்டு அதிகாரத்தில் இருந்தனர் என்பதனை அக்கால வரலாற்று நூல்களின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. கிட்டத்தட்ட இவர்கள் சிற்றரசர்களைப் போன்று தத்தம் இடங்களில் நிர்வாகத்தை மேற்கொண்டனர்.
தொழிலை அடிப்படையாக கொண்டு பகுக்கப்பட்ட இச்சாதிய அமைப்பு, ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் ஒரு தனி இராச்சியமாக வளர்ச்சியடையும் போது அடிப்படையான அரசியல், நிர்வாக, பொருளாதார மற்றும் பண்பாட்டு கட்டமைப்பாக மாறியது. குறிப்பாக நிலத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்திப் பகுதிகளான கிராமங்கள் ஒவ்வொன்றும் வேளாளரை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டன. அதாவது வெள்ளாளர் குடியிருப்புக்கள், அவர்களுக்கு உரித்தான நிலபுலன்கள், அவற்றில் வேலை செய்யும் குடிமைச் சாதிகள், அடிமைச் சாதிகள் என்போர் சாதியால் பாகுபாடுள்ள கட்டமைப்புக்குள் அமர்த்தப்பட்டனர். இன்றும் யாழ்ப்பாணத்தில் சாதிய இறுக்கம் உள்ள கிராமங்களில் இக்கட்டமைப்பை அவதானிக்க இயலும்.
ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்த யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பில் பிராமணர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆரியச் சக்கரவர்த்திகள் அரசர்களாக இருந்தார்கள். ஆரியச் சக்கரவர்த்தியின் அதிகாரத்திற்குள் அமைந்த பிரதேசங்கள் பல தரப்பட்ட பிரதானிகளால் ஆளப்பட்டன. நிலப் பிரபுக்களும் செல்வாக்குப் பெற்றவர்களும் நிர்வாகத்தில் உயர் பதவிகளைப் பெற்றிருந்தனர். பல பதவிகள் பரம்பரை உரிமையாக இருந்து வந்தன. (சிற்றம்பலம் 1992)
யாழ்ப்பாணத்தின் சனக்கண்ணோட்ட நிலையில் யாழ்ப்பாண மன்னர்களிலும் பார்க்க அவ்வப்பிரதேச முதலிமாரே முக்கிய இடம்பெறுவதை அவதானிக்கலாம். கண்டி மன்னன் சம்பந்தமாக சிங்கள மக்களிடம் நிலவி வந்த வரலாற்றுப் பிரக்ஞை யாழ்ப்பாண அரசர்கள் பற்றி யாழ்ப்பாண மக்களிடையே நிலவவில்லை. இதற்குக் காரணம் பிரதேச முதலிகளின் நிலவுடமை முக்கியத்துவமேயாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும் அங்குள்ள முதலிகளின் குடும்பத்தை மையமாகக் கொண்டே அங்கு நிலவிய சமூகக் கட்டமைப்பு ஒழுங்கமைக்கப் பெற்றிருந்தது. (சிவத்தம்பி :1993)
இவ் முதலிகள், வெள்ளாள சாதியில் நிலபுலன்களை உடையவர்களாக அதிகாரத்தோடு விளங்கினர். இந்து மதம் ஒழுங்குபடுத்தும் சாதியமைப்பில் உச்சியில் இருக்க கூடிய பிராமணர்கள் அரசர்களாக இருந்த போதும் அவர்கள் ஒரு ‘கெளரவ’ பதவியிலேயே தொடர்ந்து வந்ததுவும், நிலத்தின் அதிகாரம் வெள்ளாளர்களிடம் இருந்ததுவும் தெளிவாகத் தெரிகிறது. இங்கு சடங்கியல் அதிகாரம் சார்ந்து கிரிகைகளையும், ஆலோசனைகளையும் வழங்குவது மட்டுமே பிராமணர்களின் அதிகாரமாகவுள்ளது. ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து இன்றுவரை பிராமணர்கள் அதிகாரமற்ற தரப்பாகவே இருந்துவருகின்றனர். தமிழகத்தில் உள்ளதைப்போன்று பிராமண மேலாண்மை இங்கு இல்லை. சடங்காசாரமாக நோக்கும் பொழுது பிராமணர்களும் சைவக் குருமாரும் முன்னுரிமையாக வைத்துப் பேசப்படும் மரபு உண்டெனினும் உண்மையான சமூக அதிகாரம் வேளாளரிடமே உண்டு. (சிவத்தம்பி :1993) எனினும் பிராமணர்கள் வெறுமனே சடங்கியல் அதிகாரம் கொண்ட ஒரு குழுவாக மட்டும் இருக்கின்றனர் என்று அறுதிப்படுத்தவும் முடியாது. காரணம் பிராமணர்கள் கலப்புத் திருமணமற்ற அகமண முறையை வேளாளர் அளவுக்கு கடுமையாக கடைப்பிடிக்க கூடியவர்கள். அவர்கள் சமூக அதிகாரம் மிக்க வேளாளர்களோடு கூட திருமண உறவை வைத்திருக்கமாட்டார்கள். ஒரு வகையில் சடங்கியல், ஆசாரங்கள் மூலமாகவும் வேளாளரின் துணையுடனும் ஒருவகை சமூக மேலாண்மையை சாதி அடிப்படையில் பேணக்கூடிய குழுவாகவே பிராமணர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் பெரியளவில் தென்னாசியாவை நோக்கி வரத்தொடங்கியிருந்தனர். அவர்களின் வருகையோடு இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் ஐரோப்பியரிடம் வீழ்ந்தன. வடக்கை ஆட்சி செய்து வந்த ஆரியச் சக்கரவர்த்திகளின் வீழ்ச்சியானது ஐரோப்பியரின் இலங்கை வருகைக்கு பின்னர் நிகழ்கின்றது. கிபி 1505 இல் இலங்கையின் தென்கரையோரம் இறங்கி அதைக் கைப்பற்றிக்கொண்ட போர்த்துக்கேய காலனியினர் 1619 இல் யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகளின் கைகளில் இருந்து பறித்தெடுத்தனர். போர்த்துக்கேயர் இலங்கையை கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும் மதம் பரப்பும் நோக்கத்துடனுமே தீவிரமாகச் செயற்பட்டார்கள். அக்காலத்தில் போத்துக்கேயரின் மத நடவடிக்கைகளால், அவர்களுக்கு விசுவாசம் மிக்க ஒரு பகுதியினர் அரசில் உருவாக்கப்பட்டிருத்தனர். அவர்களில் முதலியார் குடும்பங்களைச் சேர்ந்த பலர் இருந்தனர். அவர்கள் போத்துக்கேயரின் நேரடி ஆட்சியை இங்கு ஏற்படுத்தக்கூடிய வகையிலான நடவடிக்கைகளைச் செய்தனர். (சிற்றம்பலம் .சி.க :1992) இலங்கையில் தமிழ்ச் சமூகத்தில் அதிகாரங்களில் இருந்த வெள்ளாள பிரதானிகளும் சரி அவர்களுக்கு பின்வந்த அவர்களின் வழித்தோன்றல்களும் சரி அந்நிய ஆக்கிரமிப்புகள் நடக்கும் போது யார் அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் பக்கம் சாய்ந்து பதவிகளைப் பெற்று தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும், தங்களின் நில புலன், சமூக அதிகாரம் என்பவற்றை தக்க வைத்துக்கொள்ளவும் பின் நிற்கவில்லை. கொலனிய காலத்தில் இந்த நிலையை நன்கு அவதானிக்கலாம். இங்குள்ள பிரதானிகள் தங்களுடைய சமூக அதிகாரம் என்று கருதியதும் பாதுகாத்ததும் சாதி அமைப்பைத்தான். மிக முக்கியமாக கொலனித்துவத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து தமது சாதிய அமைப்பைப் பாதுக்காக்க வேண்டிய தேவை, ‘வேளாளரை உச்சியில் கொண்ட ஆதிக்க சாதிய அமைப்புக்கு’ ஏற்பட்டது.
கொலனிய காலமும் சாதிய மேல்நிலையாக்கமும்
ஐரோப்பிய ஆட்சி இலங்கையில் ஏற்படத்தொடங்கிய பிறகு வேளாளருடைய சாதி அமைப்புக்குள் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக வேளாளருடைய சாதிக்குள் சேர்ந்து கொள்ளக் கூடிய வெவ்வேறு தொழில்களைக் கொண்ட சாதிகள் வந்து சேர்வதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அறிஞர் அரசரத்தினம் வேளாளரின் மேலாதிக்கம் தோற்றம் பெற்ற அரசியல் பின்னணியை அலசுகிறார். அவருடைய கருத்துப்படி வேளாளர் சாதியில் பல சாதிகள் சங்கமிக்கின்றன. அவை யாவும் வேளாளர்களுக்கு சமதையான அந்தஸ்து உடையவை என்று சொல்ல முடியாவிடினும் உள்ளீர்ப்பதற்குத் தகுதியுடையனவாக இருந்தன என்றே கருத முடியும். 1619ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சியுடன் ஆரம்பித்த இந்த ஒருங்கிணைவும், கலப்பும் 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் வேளாளர் என்ற பெரும்பான்மைச் சாதி உருவாகியது. இச்சாதியின் அந்தஸ்துக் கட்டமைப்பை நான்கு நிலைகளாக வகுக்கலாம். உயர் படியில் முதலியார், தலையாரி, மணியகாரர், விதானை எனவாறாக குடும்பங்கள் அமைந்தன. இரண்டாம் படியில் பெருமளவில் காணிகளை உடைமையாகக் கொண்டவர்களும் நெல் உற்பத்தியில் ஈடுபட்டவர்களுமான காணிக்காரர்கள் இருந்தனர். அடுத்தபடியில் நடுத்தர, சிறு உடமையாளர்கள் இருந்தனர். அதற்கும் அடுத்த நிலையில் சிற்றுடமை உழுகுடிகள் (Peasants) இருந்தனர். மடப்பள்ளிகள் என்போர் வேளாளர்களுடன் சேர்ந்து கொண்ட ஒரு குழுவினராவர். 1827ம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்கள் 10 வீதத்தினராவர் (12,995 பேர்). அரசனின் அரண்மனையில் பணியாட்களாக இருந்தவர்கள் இச்சாதியினர். இவர்கள் யாழ்ப்பாணம் முழுவதிலுமாக பரவி இருந்தனர். 18ம், 19ம் நூற்றாண்டுகளில் மேலும் ஐந்து குழுக்கள் வேளாளருடன் இணைந்தன. இக்குழுக்களும் பொருளாதார நிலையில் உயர்வு பெற்றிருந்தன. (சண்முகலிங்கம் .க : 2011)
அ)அகமுடையர் – இவர்கள் அரண்மனைக் காவலர்கள். மெய்ப் பாதுகாவலர்கள். நிலங்களை மானியமாகப் பெற்றனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டனர்.
ஆ) தனக்காரர் – இவர்கள் கோவில் சொத்துக்களின் பாதுகாவலர்களாக இருந்தவர்கள். யாழ்ப்பாணத்திற்குத் தெற்கே உள்ள காடுகளில் யானை பிடித்தல், யானை வர்த்தகம் என்பவற்றில் ஈடுபட்டனர்.
இ) செட்டிகள் – இவர்கள் வர்த்தகம் செய்தனர்.
ஈ) பரதேசிகள் – மதுரையில் இருந்து அரசர்களால் கொண்டு வரப்பட்டவர்கள். பலவித தொழில்களில் திறன்மிக்கவர்கள். பரதேசிகள் என்றால் பிறதேசத்தவர் என்பது பொருள்.
உ)மலையாளிகள் – இவர்கள் கேரளத்தில் இருந்து வந்தவர்கள். அரசனிடமிருந்து சேவைகளுக்காக நன்மை பெற்றவர்கள்.
(சண்முகலிங்கம் .க : 2011)
இந்தக் கலப்பும் மாற்றமும் வேளாளர்களுடைய சனத்தொகையை பெருக்கியது. பொதுவாக ஒடுக்குவோரின் சனத்தொகையானது ஒடுக்கப்படுவோரை விட குறைவாகவே காணப்படும். உதாரணமாக இந்தியா முழுவதும் அதிகாரம் மிக்க பிராமணர்கள் இந்திய சனத்தொகையில் மிகச்சிறிய அளவினரே ஆவர். ஆனால் இந்திய உபகண்டம் முழுவதும் அவர்கள் சாதிய அடுக்கின் உச்சியில் இருக்கின்றார்கள். மிகவும் ஆதிக்கம் மிக்க மேலாண்மை செலுத்தக்கூடிய தரப்பாக இருக்கிறார்கள். அதாவது அதிகார பிரமிட்டின் உச்சியில் இருக்க கூடிய சனத்தொகையின் அளவு குறைவாக இருக்கும் என்பதே பொதுவான இயல்பாக உள்ளது. ஆனால் வடக்கில் வேளாளர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள். இதுவும் அவர்களுடைய நிலைப்பிற்கும் ஆதிக்கத்திற்கும் முக்கியமான ஆதிக்க நலனாக மாறிக்கொண்டது. இலங்கையில் ஐரோப்பியர் காலத்திலேயே இக்கலப்பு பெருமெடுப்பில் நிகழ்ந்தது. இதனைச் சாதிய மேல்நிலையாக்கம் என்று அழைக்கின்றோம். அதாவது ஒரு சாதியானது சமூகத்தில் ஆதிக்கத்தில் உள்ள தரப்பாக அவர்களை ஒத்துள்ள, அல்லது சேர்ந்து கொள்வதற்கான பொருளாதாரம், சடங்கியல், பிரதேசம் போன்ற விடயங்களின் பின்னணியில் தாமும் ஆதிக்க தரப்பாகவே மாறிக்கொள்ளும் செயன்முறை இதுவாகும். புள்ளி விபரங்களும் இதனை ஓரளவு நிரூபிக்கின்றன. யாழ்பாணத்தில் 1790 இல் 30 வீதமாக இருந்த வேளாளர்கள் தற்பொழுது கிட்டத்தட்ட 50 வீதமாக அதிகரித்துள்ளனர். (ரகுமான் ஜான் :2019)
ஒல்லாந்தரும் தேசவழமையும்
இலங்கையின் கரையோர பிரதேசங்களை ஒல்லாந்தர் (டச்சுக்காரர்கள்) 1656 இல் கைப்பற்றிக்கொண்டனர். ஒல்லாந்தர் ஆட்சியின் போது அவர்கள் உள்ளூர் மரபார்ந்த ஆட்சி முறைகளை சிற்சில மாற்றத்தோடு தங்களுடைய நிர்வாகத்தை முன்னெடுக்க பயன்படுத்திக் கொண்டனர். அது அவர்களுக்கு மிகவும் காத்திரமான பயனைத்தந்தது. குறிப்பாக உள்ளூரில் நிலவும் சட்டங்கள், நிர்வாக ஒழுக்கங்கள், அமைப்புக்களை அப்படியே பின்பற்றி அவற்றைச் சீர்ப்படுத்தி தங்களின் ஆட்சியை முன்னெடுத்தார்கள்.
வேளாளர் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அவர்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டபோது காலத்துக்குக் காலம் இந்தியாவிலிருந்து விலைக்கு அடிமைகளைப் பெறும் நிலை இருந்திருக்கிறது. போத்துக்கேயரோ ஒல்லாந்தரோ அடிமை வியாபாரத்தையும் சாதியமைப்பையும் எந்தவகை மாற்றமுமின்றி அப்படியே பின்பற்றி வந்துள்ளார்கள். ‘பறங்கிச் சிறை’ ‘கம்பனிச் சிறை’ என்பன சாதியத்தால் அவர்கள் பெற்ற ஆதாயத்தின் வெளிப்பாடே. (வெகுசனன், இராவணா:2007) போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது ஏற்கனவே இங்கு வேளாள பிரதானிகளை கொண்ட ஒரு ஆட்சி முறை இருப்பதையும் ‘தேசவழமை’ என்ற சாதியை அடிப்படையாகக் கொண்ட சட்ட முறைமை ஒன்று வழக்கில் இருப்பதையும் இனங்கண்டனர். இங்கிருந்த தேசவழமையையும் தங்களின் நோக்கங்களையும் இணைத்து ஆட்சி முறை ஒன்றை உருவாக்கினர். குறிப்பாக முதலியார், உடையார், உலாந்தா போன்ற பதவி நிலைகளைப் பயன்படுத்திக்கொண்டனர். டச்சுக்காரர்கள் பதவி நியமனங்களை வழங்கிய போது நியமனக்கடிதங்களில் சாதிப்பெயர்களைக் குறிப்பிட்டனர். (அருமைநாயகம்.க.:2017) இங்குள்ள சாதிய நடைமுறைகளை தங்களின் வேளாள பிரதானிகளின் விருப்பத்தைப்போலவே நடைமுறைப்படுத்தினர். உதாரணமாக லோரன் பைல் (Lauren pyl ) என்ற டச்சுக் கவர்ணர் வெளியிட்ட ‘பிளக்காட்’ பின்வருமாறு பணிப்பு விடுத்தது.
‘உடையணிதல் போன்ற விடயங்களில் தாழ்ந்த சாதியினர் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் தம்மைப் பிறரில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காட்டும் வகையில் உரிய உடைகளை அணிதல் வேண்டும். தலைமுடியை வெட்டுவதோ காதில் தோடுகளை அணிவதோ கூடாது’ ( அருமைநாயகம் . க. : 2017)
யாழ்ப்பாண மாநிலத்தைத் தமது ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த ஒல்லாந்தர், நீதி பரிபாலனத்தினுக்கான மன்றுகளை நிறுவினார்கள். அம்மன்றுகளிலே ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சட்டத்தைத் தொகுக்க முனைந்த போது யாழ்ப்பாணத் ‘தேசத்தின் வழமையாகவிருந்த’ நடைமுறைகளையே சட்டமாகத் தொகுத்து எடுத்துக்கொண்டனர். அத்தொகுப்புப் பணிக்குத் திசாவையாகவிருந்த கிளாஸ் ஜசாக்ஸ் (Claasisaaks) என்பவர் பொறுப்பாயிருந்தார். 1706 ஓகஸ்ட் 14ல் கோணெலியஸ் ஜோன் சீமோன்சினால் (Cornellus Joan Simmons) பணிக்கப்பெற்ற இத்தொகுப்பு 1707ம் வருடம் ஜனவரி மாதம் 30ம் திகதி டச்சுத் தேசாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இத்தொகுதி, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, 12 தமிழ் முதலியார்களால், உண்மையான தேசவழமையே என அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர். 1707 டிசம்பர் 16 ஆம் திகதி சட்டப் புத்தகத்திற் சேர்த்துக்கொள்ளும் படிக்குத் தேசாதிபதியின் காவலாளரால் பணிக்கப் பெற்றது. (சிவத்தம்பி . கா:1993)
அடிப்படையில் இத்தேசவழமைச் சட்டமும் வேளாளருடைய சட்டமாகவே இருந்தது. அது ஒல்லாந்தர் ஆட்சியில் சட்டபூர்வமாக்கவும்பட்டது. ஒல்லாந்தர் தங்களுடைய ஆட்சியை மேற்கொள்வதற்காக உள்ளூரில் இருந்த முதலிகள், உடையார், மாப்பாணர், விதானை போன்றவர்களையே பயன்படுத்திக்கொண்டார்கள். சாதிய அமைப்பினால் இவர்களுக்குக் கிடைக்கும் நலன்களைப் பயன்படுத்தி ஒல்லாந்தர்கள் தங்களுடைய காலனிய ஆட்சியையும் சுரண்டலையும் மேற்கொண்டார்கள். அதேபோல பிரதானிகளும் வேளாள நலன்களோடும் அதிகாரத்தோடும் தொடர்ந்தும் இருந்தனர். தேச வழமைச்சட்டத்தின் மூலம் தங்களுடைய சொத்துரிமையையும் நிலவுரிமையையும் அவர்கள் பாதுகாத்தனர். இவற்றோடு சாதிய நிலமைகளைப் பாதுகாக்கும் அக மண முறையையும் அதன் மூலம் பரிமாறப்படும் சீதனம் என்ற முக்கியமான பொருளாதார பங்கிடுதலையும் ஆதிக்க சாதிகளுக்காக ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள். முதுசம், சீதனம், தேடிய தேட்டம் போன்ற யாழ்ப்பாணத்தின் குடும்ப அமைப்புக்களுக்குள் நிலவ கூடிய பொருளாதார உறுதிப்பாட்டை சாதிக்குள் வைத்து பாதுகாப்பதற்கு தேசவழமைச் சட்டம் பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் வழங்கியது. முக்கியமாக காணி நிலங்களை, தோட்ட நிலங்களை சாதிக்கு வெளியே செல்லாமல் பாதுகாக்கும் முறையை அவர்களுக்கு தேசவழமைச்சட்டம் வரையறுத்துக் கொடுத்தது.
தேசவழமைச் சட்டத்தில் இருக்கக் கூடிய மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாக சுவீகாரம் செய்தல் குறிப்பிடப்படுகின்றது. பிள்ளை ஒன்றைத் தத்தெடுக்கும் போது சாதிய அடையாளத்தையும், சொத்தையும் பாதுகாக்க கூடிய நடைமுறையாக ‘மஞ்சள் நீர் குடித்தல்’ என்ற சடங்கை இச் சட்டம் வைத்திருக்கின்றது. இங்கே சுவீகரிக்கப்படுகின்ற பிள்ளை வேளாளர் அல்லாத சாதியை சேர்ந்ததாக இருப்பின் அப்பிள்ளையைத் தூய்மைப்படுத்தி வேளாளர் ஆக்குதல் என்பதே இச்சடங்கின் அடிப்படை நோக்கமாகும்.
மேலும் இச் சட்டத்தின் எட்டாவது பிரிவு வேளாளரது குடிமைகள், அடிமைகள் பற்றிய நடைமுறைகளை வலியுறுத்துகின்றது. வேளாளரது நிலங்களிலும், அவர்களின் பிற கருமங்களிலும் குடிமைகளாகவும் அடிமைகளாகவும் பணி செய்ய கூடிய ஒடுக்கப்படும் மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணம், கடமைகள் மற்றும் அவர்களை கட்டிலிருந்து விடுவித்தல் போன்ற விடயங்கள் தேசவழமையில் குறிப்பிடப்படுகின்றன.
காலம் காலமாக வேளாள மையத்தைக் கொண்ட யாழ்ப்பாணச் சமூகம் எப்படிச் சாதியின் மூலம் அசமத்துவ நிலையை உருவாக்கி அதன் ஊடாக தங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, காலனிய ஆட்சியாளர்களின் மூலம் அதையே சட்டமும் ஆக்கி நடைமுறைப்படுத்தினர் என்பதை அறியும்போது அவர்கள் எந்த அளவிற்கு சாதிய அமைப்பைப் பாதுகாக்க முன் நின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
பேராசிரியர் சிவத்தம்பி தேசவழமை பற்றிக்குறிப்பிடும் போது இதன் மூலம் யாழ்ப்பாண சமூகம் கொண்டிருந்த உற்பத்தி முறைகள், இவ் உற்பத்தி முறைமைகளின் தொடர்ச்சிக்கு உதவும் அந்தச்சமூகத்தின் தனிமங்கள், இந்த உற்பத்தி முறைமைகளுள் மேலாண்மையுடையதாயிருப்பது, இவற்றின் நடைமுறைத் தொழிற்பாட்டுக்கான கருத்து நிலை உந்துதல்கள் (ideological motivations ) (சிவத்தம்பி. கா :1993) ஆகியவை எவ்வாறு இச்சமூக உருவாக்கத்தை விளக்க பயன்படும் என்பதை குறிப்பிடுகின்றார்.
யாழ்ப்பாண சமூகத்தின் உருவாக்கத்தின் அடிப்படையிலேயே சாதி புரையோடியிருந்தது. அது பொருளாதார பலத்துடனும், பண்பாட்டின் கருத்து நிலையை தனதாக்கிக் கொண்டதாகவும் இருந்துவந்தது. இங்கே சாதிகளுக்கு வழங்கப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட கடமைகளும் உற்பத்தி உறவுகளும் மொத்த சமுதாயத்தின் இயக்கத்தையும் தீர்மானித்திருந்தன. ஒல்லாந்தருக்குப் பின்னர் வந்த பிரித்தானியர்கள் இங்கிருந்த வேளாளப் பிரபுக்களின் மூலம் தங்களின் நலன்களுக்காகவும் குறித்த வழமைகளையே பயன்படுத்திக்கொண்டனர். அதாவது ஆட்சியும் வல்லாதிக்கமும் மாறினாலும் கூட சாதியமைப்பின் உச்சியில் இருந்துகொண்டு வேளாளர்கள் தொடர்ந்தும் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் வெற்றியடைந்தனர்.
ஆங்கிலேயரும் வேளாள மேலாண்மையும்
இலங்கையை 1796 – 1948 காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். 1815 இல் சுதந்திர இராட்சியமாக இருந்த கண்டியைக் கைப்பற்றியதன் பின்னர் முழு இலங்கையையும் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடாக மாற்றியிருந்தனர். பிரித்தானியர் ஆட்சியின் போதும் தமிழர் தரப்பு அவர்களுடன் அரசியல் முரண்பாடுகள் எதனையும் வெளிப்படுத்தியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பிரித்தானியர் காலத்தில் கலகங்கள், விடுதலைக்கோசங்கள் எதையும் தமிழர் தரப்பில் இருந்து வரலாற்றில் எங்கேயும் அவதானிக்க முடியாது. ஒல்லாந்தரைப்போலவே ஆங்கிலேயரையும் தமிழர் பிரதானிகள் ஏற்றுக்கொண்டனர் என்றே சொல்ல வேண்டும். பிரித்தானியரும் தமிழ் ஆதிக்க தரப்பின் சாதியமைப்பை பயன்படுத்திக்கொண்டனரே தவிர அதன் மீது நேரடியான எந்த சிக்கலையும் தொடுக்கவில்லை.
ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் புரட்சிகள், கைத்தொழில் புரட்சி போன்றவற்றின் பின்னர் ஏற்பட்ட சனநாயக முன்னேற்றங்களினால் பிரித்தானியர் இராஜகாரிய முறை ஒழிப்பு (1833) இலங்கையில் அடிமை முறை ஒழிப்பு (1844), சர்வசன வாக்குரிமை (1931) , அரசியலமைப்பின் ஊடான சட்ட மன்ற ஆட்சி முறைமை போன்றவற்றை அறிமுகம் செய்தனர். இப்பின்னணிகளில் இலங்கையின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியலில் முக்கியமான கட்டங்கள் நிகழ்ந்தன. இவ்விடத்தில் தொடர்ந்தும் வேளாளரை மையம் கொண்ட அதிகார அமைப்பு தமிழர்களிடத்தில் மிகவும் பலமாக நிலவி வந்தது. ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வொரு புது மாற்றங்களை எதிர்கொள்ளும் போதும் தமிழரின் தரப்பாக இருந்த வேளாள பிரதானிகள் எவ்வாறு செயற்பட்டனர் என்பதன் வரலாற்றை வியாக்கியானப்படுத்துவது அக்கால சமூக அசைவியக்கத்தை புரிந்துகொள்ள உதவும். அதனை பிரதானமாக பின்வரும் தலைப்புக்களின் கீழ் பார்க்கலாம்.
- அடிமை முறை ஒழிப்பும் சர்வசன வாக்குரிமையும்
- கிறிஸ்தவ மிஷனரிகளும் சைவமும்
- ஆறுமுக நாவலரும் சற்சூத்திர கோட்பாட்டாக்கமும்.
- ஆங்கிலக்கல்வியும் தமிழ் முதலாளித்துவமும்
அடிமை முறை ஒழிப்பும் சர்வசன வாக்குரிமையும்
பிரித்தானியரும் ஆரம்பத்தில் தமது காலனித்துவ நலன்களைத் தடையின்றி பெறுவதற்கு சாதியமைப்பைக் குலைக்காது ஆட்சி செய்வதே இலகுவானதும் தந்திரமானதுமான வழி என்பதை இனம் கண்டிருந்தனர். தாங்கள் கொண்டுவந்த சட்டப்பிரமாணங்களையும் நடைமுறைகளையும் உள்ளூர் பிரதானிகளின் மூலம் கிடைக்கும் நலன்களைப் பாதிக்காதவாறே பார்த்துக்கொண்டனர். குறிப்பாக பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் கலகங்களைச் செய்த போதெல்லாம், சட்டங்களை உருவாக்கியும் தங்களுடைய இராணுவ, பொலிஸ் பலங்களைக் கொண்டும் அவர்களை அடக்கினர். 1806 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கட்டளைச்சட்டம் பின்வருமாறு விதித்தது.
‘தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த யாவரும் உயர் சாதியினர் எல்லோருக்கும் பண்டைய வழக்கங்களின்படி அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். கோவியர், நளவர், பள்ளர் ஆகிய பிரிவினர்க்கும் உயர்சாதியினர்க்கும் இம்மாகாணங்களில் உரிமைகள், சலுகைகள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் பிணக்குகள் என்பன இம்மாகாணங்களில் இருந்துவரும் வழக்கங்கள், நடைமுறைகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படும் ‘ (அருமைநாயகம். க : 2017)
இதிலிருந்து உள்ளூரில் நிலவும் ஆதிக்க சாதியினர் சார்பான சட்ட நடைமுறைகளே ஒடுக்கப்படும் மக்களாலும் பின்பற்றப்பட வேண்டியது என்பதையும் பிரித்தானிய சட்டங்களோ நடைமுறைகளோ இவர்களுக்குச் செல்லாது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கருத்தியல் மாற்றம் காரணமாகவும் தாராள முதலாளிய வளர்ச்சிகளின் பின்னணியிலும் 1844 இல் பிரித்தானிய அரசினால் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் பாரிய அடிமை முறையாக இருந்தது சாதிய முறைமையே ஆகும். ஆனால் சாதியமைப்பு நிலவிய இந்திய, இலங்கைச் சூழலைப் பொறுத்தவரையில் அடிமை முறை ஒழிப்பு என்பது மனிதர்களை வாங்குவதையும் விற்பதையும் ஒழித்ததே ஒழிய தீண்டாமையையோ சாதிய ஏற்றத்தாழ்வுகளையோ ஒழிக்கவில்லை. ஏனெனில் இங்கே சாதியக் கட்டமைப்பு என்பது வாங்கும் விற்கும் சந்தைமுறைமையாக இருக்கவில்லை. அது சமூக அமைப்பாக உறுதியாக இருந்தது. ‘இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் அடிமை முறையை ஒழிப்பது இலகுவானதாக இருந்தது. உயர்சாதிகள் இதனைப் பற்றி அக்கறை காட்டவில்லை. அடிமை ஒழிப்புக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கவுமில்லை. மேற்கு இந்திய தீவுகள் போன்று யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட வகை நலன்கள் எதனையும் பாதுகாக்கும் தேவை பிரித்தானியர்களுக்கு இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அடிமை முறையை ஒழிப்பதால் ஏதாவது பயிர் ஒன்றின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை இருக்கவில்லை. விடுதலையளிக்கப்பட்ட அடிமைகள் பிற உயர்சாதிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை தொடர்ந்தும் இருந்தது. ஆகையால் அடிமை ஒழிப்பால் அடிமைச் சாதிகளுக்கு சமூக, பொருளாதார நன்மைகள் பெரிய அளவில் கிடைத்ததெனக் கூற முடியாது’ (அருமைநாயகம். க: 2017)
இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாதி தொடர்பான பிரித்தானிய காலனிய அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் வரத்தொடங்கின. கைத்தொழில் புரட்சியின் பின்னர் உலக முதலாளித்துவத்தின் எழுச்சியும் தாராண்மை வாதத்தின் வளர்ச்சியும் இதன் முக்கிய பின்னணிகளாகத் தொழிற்பட்டன. அரசாங்கம் அதிகம் வருமானம் பெறக்கூடிய முதலாளித்துவ நோக்கங்களை முன்நிறுத்த ஆரம்பித்தது. அத்தோடு சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட போது அது இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைகளாக இருந்த தடித்த சாதிமான்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணியது. வாக்குகளுக்காக தங்களுடைய குடிமைகளையும், அடிமைகளையும் சார்ந்து இருப்பதை அவர்கள் கிஞ்சித்தும் விரும்பமாட்டார்கள் என்பதை ஊகிப்பது கடினமில்லை. குறிப்பாக தடித்த வேளாள சாதிமானும், செல்வாக்கு மிக்க தமிழ் தலைமைகளில் ஒருவருமான பொன்னம்பலம் இராமநாதன் சர்வசன வாக்குரிமையை கடுமையாக எதிர்த்தார். கல்வி அறிவற்றவர்களிடமும் பெண்களிடமும் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்குரிமையை ஒப்படைக்கவே கூடாது என்று அவர் டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். அதனை ‘பன்றிகளுக்கு முன் முத்துக்களை வீசாதீர்கள்’ என்ற பிரபலமான பைபிள் வாசகத்தினால் சாடினார். இங்கே எல்லாவற்றையும் விட இராமநாதன் போன்ற சாதிமான்களை அச்சுறுத்தியது ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதிகாரம் போகவே கூடாது என்ற எண்ணம்தான். எனினும் சர்வசன வாக்குரிமையை பிரித்தானியர் அறிமுகப்படுத்தியது ஒருவகையில் இலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தின் பிறிதொரு பகுதியாக இணைந்து கொண்டதை மறுக்க முடியாது. பிரித்தானியர் சர்வசன வாக்குரிமையை தங்களுடைய முதலாளிய நலன்களுக்கும் சுரண்டலுக்கும் ஏற்றதாக ஆக்கிக்கொண்ட போதும் இலங்கையில் எதிர்கால மக்களாட்சியின் வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் ‘மேலாத்திக்க’ சாதியும், வர்க்கமும் சார்ந்திருக்க வேண்டிய தேவையை உருவாக்கியது.
கிறிஸ்தவ மிஷனரிகளும் சைவமும் தமிழும்
ஐரோப்பியர் வருகையோடு இலங்கையின் கரையோரங்களிலும் பின்னர் இலங்கை முழுவதும் கத்தோலிக்கம், புரட்டஸ்லாந்து போன்ற மதங்கள் பரப்ப பட்டன. குறிப்பாக தேவ ஊழியச்சபைகள் என்று அழைக்கப்பட்ட மிஷனரிகள் முதலில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதம் பரப்பினார்கள். சாதியால் எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சாதியற்ற சித்தாந்தங்களைக் கொண்ட’ கிறிஸ்துவ மதங்களுக்கு மாறினார்கள். எனினும் கடுமையாக பண்பாட்டு அதிகாரம் கொண்டிருந்த சாதி அமைப்பின் முன்னால் ஆரம்பத்தில் மிஷனரிகளால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆகவே மதத்தைக் கொண்டு சேர்ப்பிக்க சாதிய நடைமுறைகள் சிலவற்றை ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். எனினும் பின்னாளில் கொல்புறூக் – கமரோன் சீர்த்திருத்தங்களில் அரசாங்கம் சாதி அடிப்படையிலான நியமனங்களை வழங்குவது கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டது. மிஷனரிகளால் தொடங்கப்பட்ட கிறிஸ்துவ பாடசாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் கல்வியைப் பெற முடிந்தது.
இதன் பின்னணியில் சுதேசிய பண்பாட்டையும் மதங்களையும் பாதுக்காக்கும் பொருட்டு இலங்கை முழுவதும் ‘சமய மறுமலர்ச்சி’ இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இவை சுதேச மதங்களான பெளத்தம், சைவம் ஆகிய மத நெறிகளை கற்பிப்பதற்காக பெளத்த, சைவ பாடசாலைகளை உருவாக்கின. யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர், இவ் இயக்கத்தின் தலையானவராகவும் ‘கருத்தியல்’ மேலாண்மை கொண்டவராகவும் இருந்தார். நாவலரைப் போலவே பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றவர்களும் சுதேச சமயக்கல்வியை அடிப்படையாக கொண்ட பாடசாலைகளை நிறுவினார்கள். அப்பாடசாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் சமத்துவம் இல்லாது சாதி பேதங்களுடன் நடாத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் நிலத்தில் இருத்தி வைத்து கல்வி புகட்டப்பட்டனர். உணவருந்தும் போது சமபந்தியில் இருப்பதற்கு மறுக்கப்பட்டனர். இவை பிரச்சினையாகும் போது வேளாளர்களுக்கு ஆதரவாக பொன்னம்பலம் இராமநாதன் போன்ற சட்டத்தரணிகள் அவ்வழக்குகளை வாதிட்டு வெல்ல தயாராகவிருந்தனர்.
1920 – 30 களில் பாடசாலைகளில் சாதியமைப்பை ஊறு செய்யும் வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கு சம ஆசனம், சம போசனம் வழங்கப்படுவதற்கு எதிரான இயக்கம் இருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்க்கப்பட்ட வெள்ளாளரல்லாத மாணவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கு சமபோசனம் வழங்குவதை எதிர்த்து 1930 இல் சேர். பொன் இராமநாதன் தேசாதிபதியைச் சந்தித்தார் (சிவத்தம்பி . கா : 1993)
மேலும் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றுக்கொள்ளவும் சமூக அங்கீகாரத்திற்காகவும் ஆங்கிலக் கல்வியைப் பெற்றதோடு கிறிஸ்தவ மதத்திற்கு எல்லா சாதிகளில் இருந்தும் மக்கள் மதம் மாறினார்கள். குறிப்பாக வேளாளர்களும் மதமாற்றத்திற்குள் சென்றார்கள். இங்கே சாதியை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்துவ நெறியில் மதம் மாறினாலும் சாதியத்தை அவர்கள் முற்று முழுதாக உதறிவிடவும் இல்லை. ‘வேதக்கார வேளாளர்’ என்ற அடையாளத்தை அவர்கள் பேணினர். அக்காலத்தில் கோவில்களில் இருந்ததைப்போன்று ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குள் நுழையாமல் கயிறு கட்டப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்ட நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. சாதியற்ற மதங்களின் சித்தாந்தத்தினால் இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களிடமும் சரி தமிழர்களிடமும் சரி சாதியை இல்லாதொழிக்க முடியவில்லை. இந்து மதத்தினால் உருவாக்கப்பட்ட சாதியம் மதங்களை விடவும் வலியதாயும் ஆதிக்க சக்தியாயும் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.
சைவ சமயத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர் காலத்தில் பரவிய கிறிஸ்துவ மதம் அச்சுறுத்தலாக இருப்பதை கண்ட யாழ்ப்பாணத்தின் ‘சைவ வேளாள உயர் குழாமினர்’ தங்களுடைய குடிமைகளை சைவ சமயத்தில் உறுதியாக இருக்கக் கோரி ‘சைவப் பிரசங்கங்களைச்’ செய்தனர். பாடசாலைகள், கோவில்களில் இப்பிரச்சாரங்கள் நடைபெற்றன. இவ்விடத்தில் அக்காலத்தில் சைவ சமயத்தின் நிலையையும், அதில் வேளாளர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதையும் ஆறுமுகநாவலரை முன்னிலைப்படுத்தி உரையாடுவது முக்கியமானதாகும். காலனிய காலத்தில் சிதைய ஆரம்பித்த சாதியை மறுபடியும் மதத்தைக் கொண்டு ஆறுமுக நாவலர் எவ்வாறு மீளக் கட்டமைத்தார் என்பது வேளாள மேலாண்மை நிலையையும் இலங்கை தமிழ்ச்சமூக அமைப்பையும் விளங்கிக்கொள்ள உதவும்.
ஆறுமுக நாவலரும் சற்சூத்திர கோட்பாட்டாக்கமும்
ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரும் பொழுது இலங்கையில் இரண்டு வகையான வழிபாட்டு முறைகள் காணப்பட்டன. ஒன்று இயற்கை வழிபாட்டிலிருந்து வளர்ந்து வந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள். மற்றது ஆகம முறையில் அமைந்த, பிராமணர்களை சடங்கியல் மூலவராகக் கொண்ட வழிபாட்டுமுறைகள். நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளில் பெரும்பான்மையானவை ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்களாக இருப்பவை. ஆகம வழிமுறைகள் அற்ற அனைவரும் ‘தொட்டுக்கும்பிடக்’ கூடிய உள்ளூர் தெய்வங்கள் தமிழர் பிரதேசம் எங்கும் பரவியிருந்தன. இத்தெய்வங்களில் சில குறித்த சாதிகளுக்கு உரிய தெய்வங்களாகவும் இருந்ததை மனம் கொள்ள வேண்டும். இதில் அண்ணமார், பெரியதம்பிரான், விருமர், கொத்தி, நாச்சிமார், நாகதம்பிரான், வைரவர், காளி, கண்ணகை முதலான தெய்வங்கள் இருந்தன. இவை சமஸ்கிருதமயமான ஆகமத்திற்கு வெளியே இருந்தன. இவற்றில் சில தெய்வ கோவில்கள் வேளாளரிடமும், செட்டிகளிடமும் இருந்தன. குறிப்பாக கண்ணகை பிறப்பினால் ஒரு செட்டிப்பெண் என்பதால் செட்டிகளின் தெய்வமாக இருந்தாள். அதே வேளை எல்லோரும் சென்று வழிபடக்கூடிய நாட்டார் தெய்வமாக கண்ணகை இருந்ததற்கான சான்றுகளே அதிகம் கிடைக்கின்றன.
இந்து சமயம் குறிப்பிடும் ஷண்மத செல்வாக்கு அற்ற வழிபாட்டு முறைகளே இலங்கை முழுவதும் நிலவுகின்றது. சைவ, வைணவ சண்டைகளோ வேறுபாடுகளோ கிடையாது. ஆனாலும் ‘சைவம்’ பிரதான மதமாக தன்னை வியாபித்திருந்தது. அடிப்படையில் சைவம் வேளாளர்களால் அதிகம் பின்பற்றப்படும் மதம் என்பதை இங்கே மனம் கொள்ளுதல் முக்கியமானது. சைவ வேளாளர்களின் கோவில் வழிபாடுகளிலும், இடைநிலைச்சாதிகளின் கோவில்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில் பிரகாரத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தனர். யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய பிரபலமான கோவில்கள் பலதும் வேளாளருடைய தனிச்சொத்தாக, தனியார் கோவிலாகவே இருந்தன. இன்றும் இருந்துவருகின்றன. இன்றைக்கும் யாழ்ப்பாணம் முழுவதும் பல நூறு கோவில்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதியில்லாதவை என்பதையும் இவ்விடத்தில் ஞாபகம் கொள்வது முக்கியம். காலனிய காலத்தில் ஆகம விதிகளில் அமைந்த கோவில்கள் பிராமணர்களால் சடங்குகள் செய்யப்படும் கோவில்களாக இருந்தன. சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இக்கோவில்கள் பெரும்பாலும் சிவன், விஷ்னு, பிள்ளையார், முருகன் கோவில்களாக இருந்தன. ஆறுமுக நாவலர் முற்று முழுதாக சமஸ்கிருத மயப்பட்ட ஆகம விதிகளுக்குள் உண்டான கோவில்களையும் தெய்வங்களையுமே ‘சைவத்தினுடையவை’ என்பதில் உறுதியாக இருந்தார். இன்றை வரைக்கும் யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் தங்களைக் குறிப்பிடும் போது ‘உயர் சைவ வேளாளர்’ என்று சைவத்துடன் இணைத்தே தங்களுடைய சாதியைக் குறிப்பிடுவர்.
சமய மறுமலர்ச்சி இயக்கம் வலுப்பெறும் போது யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு ‘சைவமும் தமிழும்’ என்ற போக்கு உருவானது. அதனுடைய தலையாய பணியை ஆற்றக்கூடியவராக ஆறுமுக நாவலர் புகழ்பெற்றார். இவர் யாழ்ப்பாண சமூகத்தில் மரபார்ந்த ரீதியில் உயர் நிலை வகித்த ஒரு வேளாள குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் உட்பட சகோதரர்கள் அனைவரும் கொலனித்துவ அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருந்ததுடன் பன்மொழி ஆற்றல் மிக்கவர்களாகவும் தமிழ்ப் புலமை மிக்கவர்களாகவும் விளங்கினர் (ரகுமான் ஜான் : 2019) இவருடைய சைவ வேளாள அடையாளம், குடும்ப பின்னணி என்பவற்றோடு, அவருடைய எழுத்து, பதிப்பு முதலான ‘தமிழ்ப்பணிகளும்’, பிரசங்கங்களும், ஆங்கிலக்கல்வியும், பெர்சிவல் போன்ற ஆங்கில – கிறிஸ்துவ உயர் குழாமின இடையே அவருக்கு இருந்த செல்வாக்கும் அவரை கருத்தியல் மேலாதிக்கமும் புகழும் மிக்க ஒருவராக அவர் வாழும் காலத்தில் மாற்றியிருந்தது. அவர் நேரடியான பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத ஒரு சைவத் துறவியைப்போலவே இருந்தார் எனினும், அதைவிட பலம் வாய்ந்த பண்பாட்டு அதிகாரம் மிக்க உயர் குழாமாக (elite) தன்னை வளர்த்துக்கொண்டிருந்தார். ஆறுமுகம் பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டமானது நாவன்மை உள்ளவர் என்று பொருள்படும் விதத்தில் தமிழகத்தில் இருந்த வேளாள மடமாகிய திருவாவடுதுறை மடத்தினால் வழங்கப்பட்டது. (ரகுமான் ஜான் : 2019) நாவலரின் சைவப்பணி பின்னாளில் அவரை ஐந்தாவது சமய குரவராக (அகிலன் பா : 2004) கருதும் அளவிற்கு அவருடைய கருத்தியலை நிலை நிறுத்தியது.
ஆறுமுக நாவலர் எழுத்தில் ஈடுபட்டதோடு பைபிள் போன்றவற்றை மொழிபெயர்த்தும் தமிழ் நூல்களைப் பதிப்பித்தும் வந்தார். அவருடைய தமிழ்ப்பணியை மட்டும் பார்க்கும் போது அவருடைய ஆற்றலையும், தமிழ் புலமையையும் நாம் காணலாம். அவருக்கு தமிழ் இலக்கியத்திலும் அதன் செல்நெறியிலும் பொருத்தமான இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னொரு பக்கத்தில் தன்னுடைய ஆற்றலை அவர் ‘சைவ வேளாள’ கருத்தியலை ‘கோட்பாடாகவே’ நிறுவ வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் என்பதனை கவனிக்க வேண்டும். குறிப்பாக அவர் வேளாளர்களை ‘வர்ணக் கோட்பாட்டுக்குள்’ நிலை நிறுத்துவதில் தீவிரம் காட்டினார். சடங்கு ஆசாரங்கள் என்று வரும் போது பிராமணர்களும், சைவக்குருமார்களும் முன்னிலையில் வைக்கப்படுவார்களே தவிர சமூக அதிகாரம் என்பது வேளாளரிடமே இருந்தது என்பதை முன்னர் பார்த்தோம். வர்ணக்கோட்பாட்டில் அதிகார உச்சியில் இருக்கும் பிராமணர்களை விடவும் யாழ்ப்பாண வேளாளர்கள் அதிகாரம் மிக்கவர்கள். ஆனால் இந்து மதம் குறிப்பிடும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் வேளாளரும் சூத்திரர்களே. வர்ண அடிப்படையில் சூத்திரர்களே தாழ்த்தப்பட்ட இறுதிக்குழுமத்தினர். இந்த இக்கட்டு நிலையில் இருந்து வேளாளரை விடுவிப்பதற்காக சூத்திரரை இருவகையாக வகுத்து நோக்கும் ஒரு முறைமை உண்டு. அது சற்சூத்திரர், அசற்சூத்திரர் ஆகிய இரு பிரிவுகள் ஆகும். சற்சூத்திரர் என்போர் உயர்ந்தோர். இக்கொள்கையினை யாழ்ப்பாண மட்டத்தில் மிகவும் வற்புறுத்தியவர் ஆறுமுக நாவலர் ஆவார். மேலும் சற்சூத்திரரின் மேலாண்மைக்கு ஒரு கருத்து நிலை முக்கியத்துவம் வழங்குவதற்காக, வருண தர்மத்திலே பேசப்படாத இன்னொரு குழுமத்தைப் பற்றி (ஐந்தாவது வருணத்தைப் பற்றி) அழுத்திப்பேச வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ‘பஞ்சமர்’ என்ற கோட்பாடு யாழ்ப்பாணத்தில் சமூக வன்மையுடைய ஒன்றாகும். (சிவத்தம்பி. கா : 1993), பஞ்சமர் என்ற ஒடுக்கப்பட்ட ஐந்து சாதியினரைக் குறிக்கும் சொல் யாழ்ப்பாணத்திலேயே வழக்கில் உண்டு. கா. சிவத்தம்பியின் கருத்தை ஒட்டிப்பார்த்தால் அது வேளாளருடைய கருத்தியல் மேலாதிக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும் சாதிக்கட்டமைப்பை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டது என்ற வாதம் பொருத்தமானதாகவே படுகின்றது.
ஆறுமுக நாவலர் தீவிர வேளாள சாதிமானாக இருந்தார். அவர் முன்பு நாம் குறிப்பிட்ட கொலனிய காலத்தில் ஏற்பட்ட சாதிக்கலப்பு, அல்லது மேல் நிலையாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக செட்டிகள் வேளாளருடன் சேருவதை அனுமதிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். சைவ வேளாள அமைப்பை உறுதிப்படுத்த ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் உள்ள பல நாட்டார் வழிபாட்டு முறையிலமைந்த கோவில்களை ‘ஆகம’ விதிகளுக்கு மாற்றி சமஸ்கிருத மயப்படுத்தினார். முக்கியமாக கண்ணகை கோவில்களை, சிவன் – பார்வதி கோவில்களாக மாற்றினார். இன்றும் பல கண்ணகை அம்மன் கோவில்கள் சிவன் – பார்வதி மூலஸ்தானங்களோடு கண்ணகை வெளியில் வைக்கப்பட்டோ அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டோ உள்ளன. உள்ளூர் நாட்டார் தெய்வங்களின் பெயர்கள் முதற்கொண்டு நாவலரும் அவரின் வழிவந்தவர்களும் ‘நாட்டார் வழிபாட்டு முறைகளின் பண்பாட்டை’ இல்லாதொழித்து வந்தனர். நாட்டார் சமய எதிர்ப்பு, விலங்கு உயிர்ப்பலி எதிர்ப்பு என்பனவற்றையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவை அடித்தள மக்களின் பண்பாட்டுக்கு எதிரான தன்னின உயர்வுக் கொள்கையாக (Ethnocentrism) அவரிடம் அழுத்தமாக வெளிப்பட்டது. யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நல்லூரில் கந்தசாமி கோவில் தேர்த்திருவிழாவின் போது தேர்க்காலில் ஆடுவெட்டிப் பலி கொடுப்பது முன்னர் வழக்கம். இதைத் தடுத்து நிறுத்த நாவலர் போராடியுள்ளார். (சிவசுப்பிரமணியன் :2021 )
நாவலர் கண்ணகையை மிக முக்கியமாக மூன்று காரணங்களால் நிராகரித்தார். அதில் முதலாவது ‘அவள் ஒரு செட்டிப்பெண்’ என்பதாகும். அடுத்தது அவள் ஒரு மானிடப்பெண், மற்றையது அவள் ஒற்றை மார்பகம் இல்லாத ஊனமுற்றவள். இக்காரணங்களை அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார். கண்ணகி வழிபாடு என்பதை நாட்டார் கடவுள் வழிபாடாக அவர் பார்த்தமையும் அதன் பின் இயங்கிய சாதிய நோக்கங்களும் இதற்குக் காரணமாயிருந்தன. பின்வரும் அவரது கூற்று அவரது வன்ம உணர்வை வெளிப்படுத்துகிறது;
செட்டிச்சியும் புறச் சமயத்தவளுமாகிய கண்ணகி பரம்பொருள் எனவும், விநாயகக்கடவுள் சுப்பிரமணியக் கடவுள் இருவரும் அவளிற்றாழ்ந்தவர் எனவும் மயங்கி, அவளுக்குக் கோயில் கட்டுவித்து, அவ்விருவர் விக்கிரகத்துக்கும் நடுவே அவள் விக்கிரகந் தாபிப்பித்து வழிபடும் அதிபாதகர்களும், அவளுக்குப் பிரதிட்டை பூசை திருவிழாக்கள் செய்து அவளெச்சில் புசிக்கும் அதிபாதக சிரோமணிகளாகிய பிராமணர்கள் சைவ குருமார்களும், அவர்களை நமஸ்கரித்துங் கும்பிட்டும் அவர்களுக்குத் தக்ஷிணைகொடுத்தும் அவர்களைக்கொண்டு தீக்ஷை அந்தியேட்டிசிராத்தங் கலியாணச் சடங்கு விரதோத்தியாபனம் முதலியவற்றையுஞ் சிவாலய விக்கினேசுராலய சுப்பிரமணியாலயப்பிரதிட்டை பூசை திருவிழாக்களையுஞ் செய்விக்கும் நீங்களுமா சைவ சமய நிந்தகர்கள்? உங்களுக்கிரங்கி இவையெல்லாம் பாவம் பாவம் என்று போதிக்கும் நாமும் நம்போல்வார்களுமா சைவசமய நிந்தகர்கள்? விசாரியுங்கள். பொருளாசையினால் உங்கள் சொல்வழியே நடக்கம் உங்கள் பிராமணருங் குருமாரும். (சிவசுப்பிரமணியன். ஆ : 2021)
நாவலர் மேற்கொண்ட பிரச்சாரங்கள், எழுத்து, செயற்பாடு என்பவற்றின் பிரதான நோக்கம், கிறிஸ்துவ மதம் சைவத்தை அழித்துவிடும் என்ற பண்பாட்டு அச்சம் மட்டுமில்லை. சைவத்தை அழிப்பதன் மூலம் சாதி அழிந்துவிடும் என்பதுவும் சேர்ந்ததுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டார் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் அவர் அழித்தொழிக்க திருவுளம் கொண்டிருந்ததன் பின்னணியும் அதுவே.
இந்த தூய்மைப்படுத்தலானது அடிப்படையில் கிறிஸ்தவ மதத்திலிருந்து புரட்டஸ்தாந்து மதசீர்திருத்த இயக்கம் உருப்பெற்றதைப் போன்றதொரு மத சீர்திருத்த இயக்கமாக அல்லாமல் சைவ சமயத்தை அதன் அடிப்படையான மூலக்கோட்பாடுகளின் அடிப்படையில் புனருத்தாரணம் செய்வதாகவே இருந்தது. இந்த வகையில் இது புரட்டஸ்தாந்து மத சீர்திருத்த இயக்கத்துடன் ஒப்பிடும்போது, முற்போக்கான பாத்திரத்தை ஆற்றாமல், பின்னோக்கிச் செல்லும் ஒரு முயற்சியாகவே அமைந்தது. இந்த நோக்கில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் காணப்பட்ட சிறு தெய்வ வழிபாடுகளையும், படையல், பலி கொடுப்பது போன்ற நடைமுறைகளையும், கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள், வானவேடிக்கைகள், நடனங்கள் போன்றவற்றையும் கடுமையாகச் சாடி, இவை சைவ சமய நெறிமுறைகளுக்கு எதிரானவை என நிராகரித்தார். இந்த செயலின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களது தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் நிராகரித்து சைவ சமயத்தை அதிகார நிலைப்படுத்தினார். இதனை ‘சமஸ்கிருத நிலைப்படுத்தல்’ (Sanskritisation) என்பர். வீடுகளுக்கு பிராமணர்களை அழைத்து கிரியைகள் செய்வதை கண்டித்தார். கோயில்களில் சைவ ஆகம முறைப்படி பூசைகள் நடைபெற வேண்டியதை வலியுறுத்தினார். அவ்வாறு நடைபெறாத கோயில்களைப் பகிரங்கமாகவே கண்டித்தார். நாவலரது நெருக்குதல்களுக்கு பணிந்து பிராமணர்களும் சைவ ஆகமப்படியே பூசைகளை செய்யத் தலைப்பட்டனர். (ரகுமான் ஜான்: 2019)
கரையாரும் நாவலரும்
கரையார் எனப்படும் மீன் பிடித்தொழிலில் ஈடுபடக்கூடிய சாதியைச் சேர்ந்தோர் யாழ்ப்பாணத்தின் சாதிய கட்டமைப்பு ஒழுங்குகளின் கட்டுக்குள் வராத ஒரு பிரிவினராகவே இருந்து வந்தனர். கடல் வளம் அவர்களை வேளாளருக்கு இணையான பொருளாதார பலத்தையும் வழங்கியிருந்தது. கொலனிய காலத்திலும் அதற்கு முன்பும் மீன்பிடி, கடல் வணிகம் என்பவற்றின் மூலம் செல்வமும், சமூக உறுதிப்பாடும் மிக்க குழுவினராக கரையார் இருந்தார்கள். நாவலர் தன்னுடைய காலத்தில் கரையாரை, செட்டிகள் அளவுக்கு வெறுத்து ஒதுக்கினார். ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். கரையான், கரையான்’ என்று நாவலர் சொல்லும் தொடர் ஒன்றை இன்றும் வாய்மொழி ஞாபகங்களின் ஊடாக அறிந்துகொள்ள முடியும். அவர் கரையாரை இரண்டு காரணங்களுக்காக ஒதுக்கியிருக்க முடியும். ஒன்று வேளாளார் மையத்திற்கு, பொருளாதார, சமூக ரீதியில் கரையார் சமூகம் அச்சுறுத்தலாக இருக்கும் என்பது. இரண்டாவது கத்தோலிக்க , புரடஸ்லாந்து சமயங்களை முதலில் அதிகம் தழுவியவர்களில் கரையோரத்தில் இருக்கும் கரையார் கணிசமாக இருந்தனர் என்பது. இவை காரணமாகவே நாவலர் கரையாரை வெறுத்து ஒதுக்கியதுடன் அவர்களை சமூக நிலையில் வேளாளருக்கு கீழ்பட்டவர்களாக கருதும் நிலையையும் தன் கருத்தியல் மேலாண்மை மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்.
நாவலரின் தமிழ்ப்பணி, பதிப்புப் பணி என்பவற்றை அழுத்திச்சொல்லி சமகாலத்திலும் கருத்தியல் மேலாண்மையை கைக்குள் வைத்திருக்கும் இந்த வெள்ளாள சாதிச்சார்புடையோர், அல்லது அதன் நலன் ஓம்புவோர் நாவலர் ஒடுகப்பட்ட மக்களின் வாழ்க்கை மீதும் பண்பாட்டின் மீது பாய்ச்சிய நஞ்சை நுட்பமாகத் தவிர்த்துவிடுகின்றனர். சிதற ஆரம்பித்த சாதிய நிலைமையை அவர் கருத்தியல் – பண்பாட்டு தளத்தில் தீவிரமாகச் செயற்பட்டு மீளக் கட்டி எழுப்புவதற்கு, தன்னுடைய ஆற்றல் மற்றும் தமிழ்ப் பணி எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொண்டார் என்ற கோணத்திலும் பார்க்கமுடியும். நாவலர் மீது காட்டப்படுகின்ற இந்த ஏற்பும் தவிர்ப்பும் கொண்டிருக்க கூடிய அரசியலும் ஓர் வெள்ளாளச் சார்பு சாதி அரசியல் என்பதே உண்மை. இதன் அடிப்படையில் கருத்தியல் தளத்தை உறுதிப்படுத்தி சாதிக்கட்டமைப்பை பண்பாட்டுத் தளத்தில் இயங்க கூடிய ‘மேலாண்மைக்’ கருத்து நிலையாக நிலைநிறுத்துவதில் தான் வாழ்ந்த காலத்திலும் அதற்குப்பின்னரும் நாவல் வெற்றியடைந்தார்.
ஆங்கிலக்கல்வியும் தமிழ் முதலாளித்துவமும்
ஆறுமுக நாவலர் பண்பாட்டுத் தளத்தில் மொழி, சமயம் என்பவற்றைக்கொண்டு வேளாள மேலாதிக்கத்தை நிலை நிறுத்திய காலங்களில் பொருளாதார பலம், அரசியல் உரித்து, பதவி நிலைகள், செல்வாக்கு என்பவற்றைக் கொண்டு தமிழ் முதலாளிய வர்க்கம் ஒன்றும், அரசியல் உயர்குழாம் ஒன்றும் தமிழ்மக்களிடையே வளர்ந்து வந்தன. அதனுடைய பெரும்பான்மை தரப்பின் அடியாக வேளாளர்களே இருந்தனர். அவர்களே கொலனித்துவத்தின் இறுதிப்பகுதியிலும் அதன் பின்னரும் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு மேலாண்மை மிக்க உயர்குழாமாகவும் மாறினர். இவர்களில் பெரும்பான்மைத்தரப்பு சாதியத்தை கட்டிக் காக்கின்ற பிரயத்தனத்தோடு இருந்தனர். குறிப்பாக தங்களுடைய வேளாள மேலாதிக்கத்தை நிலைநாட்ட இம்முறை அவர்கள் ஆங்கிலக்கல்வி, பொருளாதார பலம், சமூக அந்தஸ்த்து, மற்றும் மேற்கத்திய செல்வாக்கு என்பவற்றைச் சம்பாதித்துக்கொண்டனர்.
19ஆம் நூற்றாண்டு ஆகும் போது கைத்தொழில் புரட்சியும் அதன் பின் உருவான பொருளாதார பெருக்கமும் ஐரோப்பாவில் தாராளவாத சித்தாந்தத்தை விரிவுபடுத்தியிருந்தது. ஐரோப்பிய கொலனிய நாடுகளிலும் இக்கொள்கை பரவியது. கொலனிய நிலங்களில் இருந்து வருமானத்தை எதிர்பார்த்து ஆட்சி செய்துவந்த ஆங்கிலேயர்கள் உள்ளூர் உற்பத்தியையும் அதுசார்ந்த உள்நாட்டு முதலாளித்துவத்தையும் ஊக்குவித்தனர். 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பறங்கிய சமூகங்களில் இருந்து புதிய முதலாளிய வர்க்கம் உருவாகியது.
குறிப்பாக மேற்கு மாகாணத்திலும், மத்திய மாகாணத்திலும் சாராய வியாபாரத்தின் மூலம் பெரும் செல்வத்தைக் கொண்ட சிங்கள முதலாளிகள் உருவானார்கள். இவை தவிர கறுவா, கோப்பி, தென்னைப் பயிர்கள், காரீய அகழ்வு, பின்னாளில் தேயிலை பயிர்ச்செய்கை போன்ற பல தொழில்களில் பெரும் முதலாளிகளாக மாறினார்கள். குத்தகை வியாபாரம், உற்பத்தி, ஏற்றுமதி என்று கொலனிய காலத்தில் நடைபெற்ற இம்முதலாளித்துவத்தின் எழுச்சியினைப் பற்றி ஆய்வாளர் குமாரி ஜயவர்த்தனா ‘அநாமதேயர்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை – இலங்கையின் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம் ’ (Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka) என்ற நூலில் விரிவாக ஆராய்கிறார். அவருடைய ஆய்வு முடிவுகளின்படி தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் முதாலாளிய எழுச்சியில் இருந்து பல மாறுபாடுகள் இருக்கின்றன. ஆயினும் சாதியப்பின்னணி, ஆங்கிலக் கல்வி இரண்டும் அங்கு முக்கியமான பின் புலமாக இம்முதலாளிய எழுச்சிக்கு துறை புரிந்தன. வடக்கு கிழக்கைப் பொறுத்த வரை, தெற்குடன் ஒப்பிடும் போது பாரிய முதலாளித்துவ எழுச்சி ஏற்படவில்லை.
முதலீடு, பெருவணிகம் என்பவற்றுக்குரிய மூலதனம், சனத்தொகைச்செறிவுள்ள் சந்தை என்பன இல்லாததால் சிங்கள முதலாளிகள் அளவிற்கு தமிழர்களால் செல்வத்தை ஈட்ட முடியவில்லை. வேளாளர்களுடன் மெல்ல மெல்ல கலந்துகொண்ட ‘செட்டிமார்’ கடல்வணிகம், வட்டிக்கு கடன் கொடுத்தல் போன்ற தொழில்களின் மூலமும் பரம்பரைச் சொத்துக்கள் மூலமும் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆயினும் ஒப்பீட்டளவில் இலங்கையின் முதலாளித்துவ எழுச்சியில் குறைவான பங்கையே அவர்களாலும் பிடித்துக்கொள்ள முடிந்தது.
ஆனாலும் தமிழர்கள் மூலதனத்திலோ உற்பத்தியிலோ நேரடியாகப் பங்கு பெறாமல் செல்வந்தர்களாவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும், ‘அறியப்பட்டவர்களாகவும்’ ஆவதற்கு அறிவுத்துறைசார் அதிகாரம் ஒன்றை நிறுவினர். வடக்கில் அமைக்கப்பட்ட மிஷனரிகளிலும், சுதேச பாடசாலைகளிலும் கல்வி கற்ற, முக்கியமாக ஆங்கிலக் கல்வி கற்ற ஒரு பெரிய குழாம் கொழும்பை நோக்கிச் சென்றது. செல்வாக்கும் முக்கியத்துவமும் பெற்ற தொழில்களையும் பதவிகளையும் அடைந்தது.
முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் குறுக்கப்பட்டிருந்த போதும் இலங்கைத் தமிழர்களில் சிலர், சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் கொலனித்துவ ஆட்சியின் போது ஏற்பட்டன. குறிப்பாக யாழ்ப்பாணத் தீபகற்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாய்ப்புகள் கிடைத்தன. கல்வி விருத்தியின் பயனாக அவர்கள் நகரம் சார்ந்த வர்த்தக முயற்சிகளிலும், உயர் தொழில்களிலும், அரசாங்க சேவையிலும் சிறந்து விளங்கினர். இலங்கையில் மட்டுமன்றி மலேசியா, பர்மா, இந்தியா ஆகிய இடங்களில் அரசாங்க சேவைத் தொழில்களில் தமிழர்கள் சேர்ந்து கொண்டனர். இதனை விட இலங்கையில் மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற உயர் தொழில்களிலும், வங்கித்துறை இடைத் தரகர்களாகவும் தமிழர்கள் உயர்ச்சி பெற்றனர். (குமாரி ஜெயவர்த்தனா:2015)
இவ்வாறு செல்வாக்கும் செல்வமும் மிக்கவர்களாக மாறிய சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல் சமூக வாழ்வில் மிடுக்குடன் விளங்கிய சிங்கள பூர்சுவாக்களில் (முதலாளிகள்) கிறிஸ்துவ குடும்பங்களே அநேகம். ஆனால் தமிழர் அரசியல் சமூக வாழ்க்கையில் இந்துக்களே முதன்மை பெற்றுத் தேசிய மட்டத்திலும் முன்னணியில் திகழ்ந்தனர்(குமாரி ஜயவர்த்தனா:2015) இந்தப்பின்னணியை இவ்வாறு விளங்கிக் கொள்ளலாம். கல்வி வாய்ப்பு, சமூக அதிகாரம், செல்வம் என்பவற்றோடு அதிகமாக உயர் கல்வி, செல்வாக்கு என்பவற்றைப் பெறக்கூடிய குடும்பங்களில் பெரும்பாலும் வேளாள சாதிப் பின்புலம் கொண்ட குடும்பங்களே கொழும்புக்கும் பின்னர் பிரித்தானியாவரையிலும் சென்று வந்தனர். அவர்கள் தீவிர சைவர்களாகவும் கடும் சாதியவாதிகளாகவும் இருந்தனர். உயர் கல்விக்கான செல்வமோ, சமூக ஏற்போ இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசக்கல்வி அறிமுகபப்டுத்தப்பட்ட பின்பும் இவ்வாறான நிலமையை அடைவது பகீரத பிரயத்தனமாகவே இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்வது கடினமில்லை.
கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள வங்கிகள், தொழில்பேட்டைகள், அரசாங்க திணைக்களங்களில் அதிகாரம் மிக்க இடங்களில் தமிழர்கள் அமர்ந்துகொண்டனர். மிகமுக்கியமாக ‘அரசியல் பிரதிநித்துவம்’, மற்றும் பிரித்தானிய அரசுடன் கொண்டிருந்த செல்வாக்கு என்பன சிங்கள முதலாளிகளுக்கு இணையான செல்வாக்குடன் அவர்கள் வலம்வர உதவின. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ வேளாள பின்னணியில் வந்த முக்கியமான குடும்பங்கள், மானியமுறை காலத்து பிரபுக்களைப் போல ஆங்கிலேயர் காலத்தில் உலவினர். மேம்பட்ட ஆங்கிலப் புலமை அவர்களை பிரித்தானியாவரை அழைத்துச்சென்றது. பொன். இராமநாதன், பொன். அருணாச்சலம் போன்ற இலங்கையின் முக்கிய அரசியல் குழாமினர் அங்கம் வகித்த ‘பொன்னம்பலம் குமாரசாமி’ குடும்பம், தமிழர்களின் அரசியல் தலைவிதிகளைத் தீர்மானிக்க கூடிய இடத்தில் இருந்ததை குமாரி ஜெயவர்த்தனா விபரிக்கிறார். கொழும்பு அரசியலில் செல்வாக்குடன் விளங்கிய இவர்கள் பிரித்தானிய லிபரல் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் நல்லுறவைப் பேணினர். பிரித்தானிய அரசாங்கத்தினால் ‘சேர்’ பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். பிரித்தானியர் போன்ற பட்டாடோபமும், நுனி நாக்கில் உயர்தர ஆங்கிலப்புலமையும் கொண்ட இவர்கள், இரண்டு விடயங்களில் சமரசமற்றிருந்தனர். ஒன்று சைவம், இன்னொன்று சாதிய அமைப்பு. இவர்கள் இலங்கையில் நிறுவப்பட்டிருந்த சட்டசபைக்கு பிரத்நிதிகளாக நியமிக்கப்பட்டனர். முக்கியமாக செல்வாக்கும் அதிகாரமும் மிக்க சட்டத்தரணிகளாக விளங்கினர். சேர்.முத்துக்குமாரசாமி போன்றோர் சட்டசபையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதும் அவர்கள் தமிழர்களின் நலன் என்று கருதியவை யாவும் சாதிய மத நலன்களாகவே இருந்தன.
’குமாரசுவாமி – பொன்னம்பலம் குடும்பத்தினர் கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களாய் இருந்தனர் என்பதைக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமுடையது. கிறிஸ்தவ எதிர்ப்பில் அவர்கள் தீவிரம் காட்டினர். இக்குடும்பத்தின் உறுப்பினர்கள் இந்து மதத்தின் நன்மைக்கான விடயங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்துப் பண்பாட்டையும், அறிவு, கல்வி விருத்தி என்பனவற்றையும் ஊக்குவித்தனர். அரசாங்கத்தின் சமயக் கொள்கைகளைக் கண்டித்தனர். கிறிஸ்தவர் அல்லாதவர்களின் நலன்களிற்காக வாதாடினர். கல்வித்துறையில் மிஷனரிகளின் ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். சட்டசபையில் கரை நாட்டுச் சிங்களவர்களின் பிரதிநிதிகளாக இருந்தோர் கிறிஸ்தவர்களாய் இருந்தமையினால் பௌத்தர்களின் பிரச்சினைகள் சட்டசைபையில் கிளப்பப்பட்ட போது அவை பற்றி தமிழ் இந்துக்களான பிரதிநிதிகளே பெளத்தர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேச வேண்டி ஏற்பட்டது’ (குமாரி ஜயவர்த்தனா:2015)
கொலனிய காலத்தில் அரசியல், பொருளாதார தளத்தில் செல்வாக்கும் அதிகாரமும் பெற்றிருந்த தமிழ்ப்பிரதானிகள் தங்களின் நலன்களையும் செல்வாக்கையும் தொடர்ச்சியான மேலாண்மையையும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேர் பிடித்து நிற்பது சாதியும் சைவமும் என்பதை நன்குணர்ந்திருந்தனர். அவர்கள் அதை ‘சுதேச பண்பாட்டை’ காக்க வேண்டும் என்ற பெயரில் முழங்கினாலும் உண்மையில் அது ‘உயர் சைவ வேளாள’ மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவே என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர்கள் அதற்காக ஆங்கிலேயருடைய விசுவாசத்தைப் பெறவும் தயாராக இருந்தனர். அதே வேளை சிங்கள முதலாளிகள், அரசியல் தலைமைகளின் சாதிய – மத நலன்களோடு ஒத்து ஓடவும் தயாராக இருந்தனர். உதாரணமாக
1911ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரான பொ. இராமநாதன் சிங்களவரான மார்க்கஸ் பெர்னாண்டோவைத் தோற்கடித்தார். மேலோட்டமான பார்வையில் இந்நிகழ்வு படித்த சிங்களவர்களின் முற்போக்குச் சிந்தனையைக் காட்டுவதாகத் தோற்றலாம். ஒரு சிங்களவருக்குப் பதிலாக தமிழர் ஒருவருக்கு அவர்கள் வாக்களித்ததன் மர்மம் யாது? இந்தப் புதிரை விடுவிக்கும் விளக்கம் ஒன்று அடிக்கடி கூறப்பட்டு வந்துள்ளது. சிங்கள கொவிகம சாதியினருக்கும் கராவ சாதியினருக்கும் இடையிலான சாதிப் போட்டியின் விளைவே இது எனவும் கொவிகம சிங்களவர்கள் சிங்கள கராவ ஒருவரை விட தமிழ் வேளாளர் ஒருவரை தேர்ந்து கொள்வதற்கு விரும்பினர் (வேளாளர், கொவிகமவுக்குச் சமதையான தமிழ்ச் சாதி) என்பதாக இவ்விளக்கம் அமைந்தது. இந்த விளக்கத்தின்படி கொவிகம் – கராவ என்ற சாதிகளிடையே கசப்புணர்வு தீவிரமாக இருந்தது. இத்தேர்தல் போட்டி பற்றி கருத்துரைக்கும் கே.எம்.டி. சில்வா ‘விறுவிறுப்பும் உயிர்ப்பும் கொண்டதான மிக வித்தியாசமான தேர்தல், சாதிப் போட்டி உச்சத்திற்குச் சென்றது’ என்று குறிப்பிடுகிறார். (குமாரி ஜெயவர்த்தனா :2015)
இவ் அரசியல் உயர் குழாமினர் செயற்பட்ட காலத்திலேயே பண்பாட்டுத் தளத்தில் ஆறுமுக நாவலரும் தன்னுடைய சாதிய மீள் கட்டமைப்புக்குரிய பிரசங்கங்கள், கோட்பாட்டாக்கம் , சமஸ்கிருதமயமாக்கம் போன்றவற்றை மேற்கொண்டிருந்தார். அவரின் பின்னர் அவர் உருவாக்கிய சைவ வேளாளாள கருத்து நிலை அவருடைய ‘பள்ளியைச் சேர்ந்த’ சைவ வேளாள கனவான்களால் நகர்த்திச் செல்லப்பட்டது. ஒரு சமூகத்தில் ‘கருத்தியல்’ மற்றும் அதுசார்ந்த நடைமுறைகள் நிலைபெறுவதற்கு அக்கருத்து பண்பாட்டு அதிகாரத்தையும், அரசியல், பொருளாதார அதிகாரத்தையும் பெற்றுக்கொள்வது முக்கியமானது. முத்துக்குமாரசாமி குடும்பத்துடன் நெருக்கமான நாவலர் அக்கால அரசியலில் அவர்களுடைய பங்கினை அழுத்தமாக வலியுறுத்திவந்தார். பொன்னம்பலம் இராமநாதனுக்கு ஆதரவாக பிரச்சாரங்களும் செய்திருக்கிறார்.
1879 மே 22 ஆம் திகதியன்று நாவலருடைய சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஏறத்தாழ மூவாயிரம் பேர் பிரசன்னமாகியிருந்த கூட்டத்தில் (குணசிங்கம் .மு : 2016) பொன்னம்பலம் இராமநாதனை ஆதரித்து உரையாற்றினார். நாவலரின் இந்த ஆதரவுத்தளம் சைவ வேளாள பின்னணியில் அமைந்த ஒன்று. ஒரு சமூகக் கருத்தியலை நிலை நிறுத்துவதில் பொருளாதார மற்றும் அரசியல் மேலாண்மையும் பண்பாட்டு மேலாண்மையும் ஒரே தளத்தில் ஒன்றுபட வேண்டும். உள்ளூர் நெல் உற்பத்தி, புகையிலை உற்பத்தி என்பவற்றோடு, வர்த்தகம், தரகு வேலைகள் உட்பட தமிழர்களின் பொருளாதாரத்தின் பெரும்பங்கையும் அதன் அதிகாரத்தையும் வைத்திருந்த வேளாள முதலாளிகளின் பொருளாதார பலமும், ஆங்கிலம் கற்ற அரசியல் உயர் குழாமின் அரசியல் செல்வாக்கும் உருத் திரண்ட காலத்திலேயே நாவலர் தன்னுடைய சற்சூத்திர கோட்பாட்டோடு தோன்றுகிறார். வெறுமனே நாவலரின் பிரசங்க நாவன்மை, அவரின் சைவப் பற்றுதல், தமிழறிவு, பதிப்புச் செயல், அவருடைய குடும்ப- சாதியப்ப்பின்புலம் என்பவை மட்டும் அவருடைய ‘சைவ வேளாள’ கருத்தியலை நிலை நிறுத்தவில்லை. வேளாளர்களுக்கு அக்காலத்தில் இருந்த கொலனிய அரசியல் செல்வாக்கும், பொருளாதார பலமும் அதன் அடிக்கட்டுமானங்களை பலமாக்கி நின்றன என்பதை காணவேண்டும். இந்த பொருளாதார – பண்பாட்டு உறவும், நாவலரின் பண்பாட்டுக் கருத்தியல் தளமும், அரசியல் உயர் குழாமினதும் தமிழ் முதலாளித்துவத்தினதும் அரசியல் – பொருளாதார தளமும் இணைந்து சைவ – வேளாள சமூக மேலாண்மையை கொலனிய காலத்தில் வெற்றிகரமாக நிறுவியது. வேளாளர்களே தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளாகவும், பண்பாட்டு கருத்தியலின் மேலாண்மை மிக்கவர்களாகவும் உறுதியாக மாறினார்கள்.
சாதிக் கட்டுப்பாடுகள் மீறப்படும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்ப்பதன் மூலம் மேலாத்திக்கத்தை நிறுவிவந்த வேளாளர்கள் எல்லாக் காலங்களிலும் வன்முறையில் தங்கியிருக்க முடியாது, அது உற்பத்தியையும் சமூக அமைப்பையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பக்கூடிய , பின்பற்றக்கூடிய சாதிய சமூக ஒழுங்குகளை நிலைப்படுத்தும் கருத்தியல் மேலாண்மையை நிறுவினர். முக்கியமாக அவர்களுக்கு இந்து மதத்தின் மிக வலிமைமிக்க வருணக்கோட்பாடும் சாதி பற்றிய மரபார்ந்த பயில்வுகளும் உதவின.
இலங்கை வரலாற்றில் நிலமானிய அமைப்பில் இருந்து மெல்ல வழுவி கொலனிய ஆட்சி முறைக்கும், பின்னர் சனநாயக ஆட்சி முறைக்கும் வந்து சேரும் போது இக்கருத்தியல் மேலாண்மையை ஆறுமுகநாவலர் போன்றோர் முன்நின்று உறுதியாக்கினர். இரண்டு மாபெரும் உலக யுத்தங்களின் பின்னர் உலகம் நவீன யுகத்திற்குள் நுழையும் போதும் சாதியம் இந்திய, இலங்கைச் சூழலில்தொடர்ந்தும் நிலவி வந்தது. அதே நேரத்தில் சாதிய போராட்டங்களும் வலிமை பெற்றன. இன்றைக்கு நாம் காணும் சாதிய நிலைமைகள், குறிப்பாக வேளாள ஆதிக்கம் நவீன காலத்தில் எவ்வாறு தன்னைத் தகவமைத்து வந்தது? அதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம்தான் என்ன? நிலத்தில் ஊழியம் செய்யும் நிலமானிய அமைப்பு தகர்ந்திருந்தாலும் நிலம், செல்வம் என்பன கொலனிய காலத்தின் பின் யாருடைய கைக்குள் இருந்தன? ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார மேம்பாட்டை அடைந்தாலும் சாதிய ஒடுக்குதல் தொடர்ந்தும் கருத்தியல் பண்பாட்டு தளத்தில் கோலோச்சுவது எவ்வாறு என்பதனையும், அதன் சமகாலத்தன்மை என்ன என்பது பற்றியும் தொடர்ந்து உரையாட வேண்டும்.
முடிவுக் குறிப்பு
கொலனிய காலத்தின் பிற்பகுதியில் 1940 களின் பின்னர் ரஸ்யாவில் கல்வி கற்று நாடு திரும்பிய ‘இடதுசாரிகளின்’ எழுச்சியும், 1948 இல் இலங்கை கொலனிய நேரடி அரசியலில் இருந்து விடுவிக்கப்பட்டமையும், அதன்பின்னர் கூர்மையடையத் தொடங்கிய தமிழ் – சிங்கள தேசியவாதமும், தமிழ் இடதுசாரிகளின் சாதியப் போராட்டங்களும், தொடர்ந்து வந்த ‘தமிழ்த் தேசிய’ கருத்து நிலையும், விடுதலைப் போராட்டமும் சாதியக் கட்டமைப்பின் மீது ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றமும் இலங்கையின் தமிழர் பண்பாட்டு அரசியலில் முக்கிய பரிமாணங்களைத் தீர்மானித்தன. 1950களின் பின்னர் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும், சாதிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் சாதிய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் வேலைத்திட்டங்களும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன. அதாவது சமூகப் பண்பாட்டு போக்கில் இருந்த வேளாள மேலாதிக்கம் குறைக்கப்பட்டது. மிக முக்கியமாக பல நூறு வருடமாக இருந்து வந்த அடிமை முறை, தீண்டாமை என்பன கருத்தியல் மற்றும் நடைமுறைத் தளங்களில் ஒழிக்கப்படும் முயற்சிகள் நடந்திருந்தன. இவை வேளாள அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு பின்னணிகளுக்கு எதிராக இயங்கின. இரண்டாயிரமாவது ஆண்டுகள் ஆகும் போது ஐம்பதுகளில் இருந்த சாதிய ஒடுக்கு முறைகள் வெகுவாக தணிக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்நாட்டைக் காட்டிலும் முன்னேற்றமான ஒரு சமூக கட்டமைப்பு உருவாகி வந்தது. ஆயினும் வேளாள அதிகாரமும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வெவ்வேறு வடிவங்களில் நவீன உலகிற்குள்ளும் வந்து சேர்ந்தன.
உசாத்துணைகள்
- சிவத்தம்பி . கார்த்திகேசு (1993) யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் (முதல் பதிப்பு) தர்ஷனா பிரசுரம்.
- சிவத்தம்பி கார்த்திகேசு (2000) இலங்கைத் தமிழர் யார் , எவர்? (முதல் பதிப்பு) கொழும்புத் தமிழ்ச்சங்கம்.
- சிற்றம்பலம் . சி. க (1992) யாழ்ப்பாண இராச்சியம் (முதற்பதிப்பு) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீiடு.
- வெகுஜனன், இராவணா (2007) இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் (முதற்பதிப்பு) சவுத் விசன் வெளியீடு.
- காலிங்க டியூடர் சில்வா, பிபி. சிவப்பிரகாசம், தங்கேஸ் பரம்சோதி (2009) சாதியின்மையா சாதிமறைப்பா? (முதல் பதிப்பு) சர்வதேச தலித் கூட்டொருமைப்பாட்டு வலைப்பின்னல், கொபன்ஹெகென் தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனம் , புது டில்லி மற்றும் குமரன் புத்தக இல்லம்.
- மாலதி டி அல்விஸ், குமாரி ஜயவர்த்தன (2002) முத்துக்களை வீசுதல் இலங்கையில் பெண்களின் வாக்குரிமை இயக்கம். (முதல் பதிப்பு) சமூக விஞ்ஞானிகள் சங்கம்.
- மனோன்மணி சண்முகதாஸ் (1991) சாதியும் துடக்கும், (முதல் பதிப்பு) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ப்ரைவேட் லிமிட்டட்.
- பக்தவத்சல பாரதி (2012) மானிடவியல் கோட்பாடுகள், (இரண்டாம் பதிப்பு) அடையாளம் பதிப்பகம்.
- பக்தவத்சல பாரதி (2008) தமிழர் மானிடவியல், (இரண்டாம் பதிப்பு) அடையாளம் பதிப்பகம்.
- செல்வகுணபாலன்.செ (2016) தேசவழமைச் சட்டம் (முதல் பதிப்பு) குமரன் புத்தக இல்லம்.
- ஜெபநேசன் . எஸ். (2007)தமிழின் நவீன மயவாக்கமும் அமெரிக்க மிஷனும் (முதல் பதிப்பு) குமரன் புத்தக இல்லம்.
- சசங்க பெரேரா, தா, சனாதனன், பா. அகிலன் (2005) இலங்கையின் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல் – இரண்டாவது தொகுதி (முதல் பதிப்பு) சமூக பண்பாட்டு கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம்.
- சசங்க பெரேரா, தா, சனாதனன், பா. அகிலன் (2005) இலங்கையின் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல் – மூன்றாவது தொகுதி (முதல் பதிப்பு) சமூக பண்பாட்டு கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம்.
- சிவசுப்ரமணியன். ஆ (2022) பிராமண போஜனமும் சட்டிச்சோறும் – இடைக்கால தமிழகத்தில் வைதீகமும் சாதிய உருவாக்கமும் (நான்காம் பதிப்பு) நியூ செஞ்சுரி புக் கவுஸ்.
- சிவசுப்ரமணியன். ஆ (2021) சாதியும் சமயமும் (முதல் பதிப்பு) பரிசல் வெளியீடு
- சிவசுப்ரமணியன். ஆ (2019) கூலித்தமிழ் காட்டும் சமுதாயம் (முதல் பதிப்பு) நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
- சிவசுப்ரமணியன். ஆ (2012) தமிழகத்தில் அடிமை முறை (ஐந்தாம் பதிப்பு) காலச்சுவடு வெளியீடு.
- ரகுமான் ஜான் (2019) ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாயப் பிரச்சனைகள் (முதல் பதிப்பு) வடலி வெளியீடு.
- சண்முகலிங்கம். க, மதிசூதனன்.தெ , (2005) சமூக சிந்தனை விடுபடும் எல்லைகள் (முதல் பதிப்பு) விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் வெளியீடு.
- சண்முகலிங்கம். க (2009) நவீன அரசியல் சிந்தனை ஓர் அறிமுகம் (முதல்பதிப்பு) குமரன் புத்தக இல்லம்.
- சண்முகலிங்கம்.க (2011) இலங்கை இனவரைவியலும் மானிடவியலும் (முதல்பதிப்பு) குமரன் புத்தக இல்லம்.
- நீயூட்டன் குணசிங்க (2018) சார்பு மண்டல முதலாளித்துவம் , இலங்கையின் கண்டியின் கிராமங்களில் சமூக பொருளாதார மாற்றங்கள் பற்றிய ஆய்வு (மொழி பெயர்ப்பு க. சண்முகலிங்கம் – முதல் பதிப்பு) குமரன் புத்தக இல்லம்
- குமாரி ஜயவர்த்தன (2015) அநாமதேயர்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை – இலங்கையின் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம், (மொழிபெயர்ப்பு – க. சண்முகலிங்கம் – முதல் பதிப்பு) குமரன் புத்தக இல்லம்.
- செனக பண்டாரநாயக்க (2020) நிலமானியம் – ஆசியாவினதும் இலங்கையினதும் சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வு (மொழிபெயர்ப்பு – க. சண்முகலிங்கம் – முதல் பதிப்பு) குமரன் புத்தக இல்லம்.
- சண்முகலிங்கம். க (2020) கண்டிய நிலமானியமும் சாதியும் (முதல் பதிப்பு) குமரன் புத்தக இல்லம்
- அருமைநாயகம். க (2017) யாழ்ப்பாணாத்தில் சாதிமுறை – 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் (முதல்பதிப்பு – மொழியாக்கம் – க. சண்முகலிங்கம்) குமரன் புத்தக இல்லம்
- பரமசிவன். தொ (2017) தெய்வம் என்பதோர்.. (மூன்றாம் பதிப்பு) காலச்சுவடு வெளியீடு.
- குலரத்தினம். க.சி (2008) நோர்த் முதல் கோபல்லாகம வரை (முதல் பதிப்பு) சேமமடு பதிப்பகம்.
- குணசிங்கம். மு (2020) இலங்கைத் தமிழர் ஓர் முழுமையான வரலாறு , தென்னாசியாவியல் மையம் சிட்னி.
- குமுதா சோமசுந்தர குருக்கள் (2007) யாழ்ப்பாணத்துப்பண்பாட்டில் மடமும் மடக் கட்டடக் கலையும் (முதல் பதிப்பு) குமரன் புத்தக இல்லம்.
- எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, (2009) பெரியார்: சுயமரியாதை சம தர்மம் விடியல் பதிப்பகம்.
- மைக்கல் பாங்ஸ் (2009) யாழ்ப்பாணத்தில் சாதியம் . பனுவல் ஏழாவது இதழ், பக். 06-27
- பெனாட் பெற் (2005) ஆறுமுக நாவலர்:1850 அளவில் சைவப் பிரசங்க மரபும், சமயத்தின் நிர்ணயமும். பனுவல் மூன்றாவது இதழ் ,பக். 166 – 187
- பாக்கியநாதன் அகிலன் (2004) ‘கருத்து நிலையும் விக்கிரகவியலும்’ ஐந்தாம் குரவராக ஆறுமுகநாவலர், பனுவல் இரண்டாவது இதழ், பக்49 -88
- இரகுநாதன் எம் , (2002) ஈழத்து நாவல்களில் சமூக பிரச்சினைகள், யாழ்ப்பாணம் மகாஜனா.
இந்தக்கட்டுரை இப்ப அதிமுக்கியத்துவம் வாயந்தது . முட்டாள்களே , கீழ்சாதி என நீங்கள் குறிப்பிடும் அவர்கள் உங்களை விட பொருளாதாரத்திலும் , கல்வியிலும் , எம்மை முந்தி மேல் நிலைக்கு வந்துவிட்டார்கள் .
நீங்கள் பழமை பேசி , உயர்த்திக்கொண்டு சமூகத்தை அழிக்காதீர்கள் .
வெளிநாடுகளில் வேளாளர் , வெள்ளானாக இருந்தவன் சங்கிலிய தொழிலில் , துரும்பன் தொழிலில் செய்கிறான் .
கீழ்சாதியாக இருந்தவன் , அரச அதிகாரங்களில் உயர்பதவி வகிக்கிறான் .
பொருளாதாரமும் , கல்வியும் யாரிடமும் உண்டோ , அவனே உயர்வு பெறுகிறான் . அது தான் மேல்சாதி .
இது தான் கால யதார்த்தம் .
ஆயுதப் போராட்ட காலத்தல் சாதீயத்தை போராடியவர்கள் கைவிட்டதால் , தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க ஒன்றினையக் கூடியதாக இருந்தது .
திரும்ப சாதீயத்திற்க்கு தூபம் போட உங்களைப்போன்றவர்கள் முனைந்தால் , அது தமிழ
த்தேசயத்தை அழித்துவிடும் .
பின் தமிழன் என்ற இனமே இல்லாமல் போய்விடும் .
எளியன் சாதி என்று அன்று சொன்ன அவன் இன்று வரலாற்றை எழுதினால் , நாம் எளியன் சாதி ! அதனை உணருங்கள் .
மனிதனை் மனிதன் மதிக்கவேண்டும் .
இப்படியான முட்டாள் தனமான கட்டுரைகள் எழுதுவதனை விடுத்து , விஞ்ஞான பூர்வமான சமூக முன்னேற்றம் கருதிய கட்டுரைகளை எழுதுங்கள் .
அது சமூக வளர்ச்சிக்கு உவப்பானதாக இருக்கும் .