ரஜோ | காளம்  14

ரஜோ  |  காளம்  14

இரவு முழுவதும் மழை மிதமாகப் பெய்து கொண்டிருந்தது. இப்பொழுதான் கொஞ்சம் கடுமையாகக் கொட்டத் தொடங்கியிருந்தது. சொத சொத வென்ற உணர்வு எல்லோரிலும் தொற்றி, மழை அருவருப்பான சேறாக எல்லோரிலும் இறைந்து  கிடந்தது.  யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. கூடாரங்களின் கீழே நீரோடிக்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பிருந்து பகுதியளவில்  அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தகரக் கொட்டகைகளைச் சிரமப்பட்டு   அடைந்து  கிடந்தனர். அங்கு இடம் கிடைக்காதவர்கள், தண்ணீர்கான்கள், மரக்குற்றிகள் ,  கற்களை தம் கூடாரங்களுக்குள் அடுக்கி தன்கள் உடமைகளுடன்  ஏறி குந்தி அமர்ந்திருந்து,  மழையை எரிச்சலும் தூக்க கலக்கமுமாக பார்த்தபடியிருந்தனர். இடியும் மின்னலும் வானத்தில் வெண்கிளைகளென வெடித்த போது மின்சாரமும் நின்று போனது.  இராணுவக் காவலரண்களும்  இருளில் கிடந்தன. அவர்களுக்கு மின் வழங்கும் மின்பிறப்பாக்கிகளும்   இடியுடன் அணைந்திருக்கலாம். அருகில் எங்கோ கடும் மழை பெய்து கொண்டிருக்க வேண்டும். அதன் விளிம்பு மேகங்களே இங்கே சரிந்து கொண்டிருந்தன. நுள்ளான் நாசிக்குள் மட்டும் மென் தகனமெனப் போய்வரும் மூச்சை பிடித்துக்கொண்டு நடந்தான். காற்றின் கூதலில் காதில் ஏதோ பிராணி கவ்விக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. இந்த அதிகாலையில் எங்கே போகின்றோம் என்ற தீர்மானம் இல்லாமல்  கால்விரல்கள் செங்கழிக்குள் புதைய நடந்து கொண்டிருந்தான். ஒழுங்கற்று பூட்டப்பட்டிருந்த சேட்டின் தெறிகள் சேட்டை காற்றில் அறுந்து தொங்கும் சிலந்தி வலையைப் போலாக்கி இருந்தன. அவனைக் கரைக்கவே பொழிவது போல் கொட்டிக் கொண்டிருந்தது மழை.  அங்கே  யாரேனும் தம்பாட்டிற்கு எழுந்து நடந்தால் அவர்களை கால்கள் ஆற்றை நோக்கியே இழுத்துச்சென்றன.  நான்கைந்து நாட்களாக ஆற்றின் மறு கரையில் தொடங்கும் பெருங்காட்டினுள் யானைகள் பிளிறிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அவை ஒன்றாகப் பிளிறுவது  ஆயிரம் கொம்புகளும் முழவுகளும்  வெவ்வேறு திசைகள் அதிர ஊதப்படுவதைப் போல ஓலமாய் எழுந்தது.  குழந்தைகளும் முதுமைக்குள் முடங்கியோரும் திடுக்கிட்டு எழுந்து பயத்தில் மலங்க விழித்தனர். விடிந்த போது முகாம் முழுவதும் அவ் யானைக் கூட்டம் பற்றிய கதைகள் உருவாகின. ஏதோ பெருந்துட்டி ஒன்றுக்கான முத்தாய்புகளில் ஒன்றென  மூத்தோர் சொல்லிச்சொல்லி பதைத்தனர்.  அவை பிளிறும் போது ஆற்றங்கரையை நெருங்கிச்சென்று பார்த்த இளந்தாரிகள் மிக அருகில் அவற்றின் ஒலி கேட்டாலும் அவை எதுவும் கண்ணில் படவில்லை என்றனர். ஆற்றின் மறுபக்கம் எழுந்திருந்த பெரிய மரங்களே பிளிறுவது போல் அவர்கள் பிரமைப்பட்டனர்.   நுள்ளான் இன்னும் அந்த பிளிறல் ஒலியைக் கேட்டானில்லை.  கேட்கும் பட்சத்தில் அவை அவனை மீண்டும் குடும்பி மலைக்காட்டுக்குள்  ஈரச்சருகுகளுக்கு இடையில் குருதியும் சேறுமாகக் கிடந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும். அன்றைக்கு  எத்தனை யானைகள் அவனைச் சூழ்ந்து நின்றன என்று அறியான்.  தாலிக்கொடி இருந்திருந்தால் காட்டு யானைகளைப் பற்றி நூறு கதையோடு வந்திருப்பான். விரிந்து கிடக்கும் முகாமின் முழு உருவையும் அறிந்தவன் தாலிக்கொடிதான்.  மொத்தமுகாமையும்  பலமுறை சுற்றி வந்தான்.  படகுகள் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் கடலில் இருந்து திரும்பியவர்கள் போல் ஒவ்வொரு நாளும் முகமெல்லாம் கதையோடு வந்தான். போகும்  இடமெல்லாம் அவனுக்கு வயது  வித்தியாசமின்றி கூட்டாளிகள் உருவானார்கள்.  அவனிடம் ஆரம்பத்தில் இந்த வசீகரமும் வெடிப்பேச்சும் இருந்ததா என்று நுள்ளானால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.  ஒவ்வொரு நாளும் அவனில் வெளிச்சமும் ஈர்ப்பும்  கூடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறான்.  அவன் பிடிபட்ட செய்தி முகாம் முழுவதும் அறிந்தது. அறியப்பட்டதால் தானே அவன் பிடிக்கவும் பட்டான். அவனிடம் அந்த பயம் இருக்கவே செய்தது. ஆனால் அறியப்படுவது ஓர் எல்லைவரைதான் கைக்குள் இருக்கும். முகாமெங்கும்  இராணுவ  வேவுக்காரர்கள் அலைந்து அலைந்து ஆட்களை இனங்கண்டு  பிடித்துச் சென்றனர். சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்ற முறைப்பாடுகள் அங்காங்கே பரவலாக எல்லா முகாம்களிலும் இருந்தன. தாலிக்கொடியை அள்ளிச் சென்ற போதுதான் அவனை அறிந்தவர்கள் எல்லோரும் தமக்குத்தான் நடக்கிறது என்ற எண்ணத்தால் உலுக்கப்பட்டனர்.  செம்பியன் மாஸ்ரர் ஒரு முறை  பாசறை வகுப்பில் சொன்னார் ‘முதல் மனிதன் சுடப்படும் போது அந்தக் குண்டை ஒவ்வொருத்தரும் தங்கள் உடலில் வாங்க வேணும்’. 

முகாமில், தாலிக்கொடி   கடத்தப்பட்டதை கதை கதையாகச் சொன்னார்கள். பார்த்தவர்கள் யாரும்   கதை சொல்லவில்லை. உள்ளதை மட்டும் சிலர் சொல்லியிருக்கலாம். மிச்சமெல்லாம்  சொல்லப்பட்ட கதைகள் மட்டும் தான். சொல்லப்போனால் தாலிக்கொடி சிறுவர்களுக்கு இடையில் சாகச கதையின் குட்டி நாயகனைப் போல்  அறியப்பட்டான்.

`ஏழெட்டு பேர் வந்தவங்களாம், தாலிக்கொடி நாலு பேரை எட்டி உதஞ்சிருக்கிறான். திமிறி கடிச்சு கீழ தள்ளி விட்டிருக்கிறான். அவனை அமத்தி பிடிக்க அவங்கள் பட்டபாடு. எல்லாரையும் உலுக்கி எடுத்துப் போட்டானாம். கடைசில ஏலாமல் ஒருத்தன் துவக்கை எடுத்து தாலிக்கொடின்ர தலையிலை வச்சதும் தான் அடங்கி இருக்கிறான். இப்படித்தான்  சிறுவர்களின் காவியங்கள் உருவாகி வந்தன.  அவனோடு திரியும் சிறுவாண்டுகள் யாரும் இப்பொழுது சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் மீண்டும் தங்கள் பிள்ளைப்பருவத்திற்கே திரும்பி விட்டனர்.  அவர்களின் குழந்தைக் கதைகளில் ஒன்றாக மாறிவிட்டான் தாலிக் கொடி. அவர்கள் எல்லோரும் அவன்  திரும்ப மாட்டான் என்ற முடிவோடுதான் எல்லாக் கதைகளையும்  சொல்லிக் கொண்டிருந்தனர்.  அவர்களுக்கும் அதுதான் தேவைப்படுகின்றதோ என்று  நுள்ளானுக்குத் தோன்றியது. 

தாலிக்கொடி காணாமல் போன நாளில் இருந்து அமலாவுடனும் சரி அத்தையுடனும் சரி பேச்சுக் குறைந்து போனது. கேள்வி பதில்களோடு சரி. அமலா பெரும்பாலும் கூடாரத்தில் தங்குவதே கிடையாது. மரியம் அன்ரியின் செபக்கூட்டங்களுக்கு அவளுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.  அத்தை குழந்தையோடு இருந்தாள். பாலூட்டும்  நேரங்களில் மட்டும் கூடாரத்திற்கு திரும்புவாள். குழந்தையை வாங்கிக் கொண்டு மரத்தடிக்கு  சென்று   வெண் எலும்பு இருக்கையில் அமர்ந்து பாலூட்டி  குழ்ந்தைய கண்வளர்ந்ததும்,  விசில சமயங்களில்  மட்டும் குழந்தையுடன் மரியம் அன்ரியிடம் போவாள். மற்றபடி குழந்தை அத்தைக்காரியுடன்  இருந்தாள்.  அத்தைக்கு அமலாவை சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட்டது. குறிப்பாக அவள் செபக் கூட்டங்களுக்குச் செல்வது. 

சொல்லப்போனால் அங்கே அவள் புகழ்பெற்றுக்கொண்டிருந்தாள். அவளுடைய கைகளும், கால்களும் குணமாக்க வல்லன என்று அவள் தொட்டு ஆற்றியவர்கள் சொல்லிச்சொல்லி நாளுக்கு நாள் கூட்டம்  பெருகி வந்தது. பாஸ்ரர் நேமியனுக்கு  பமர திருப்தி.  மகிழ்ச்சியில் சபைத் தலைமைக்கு புதிய சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களோடு அறிக்கைகளும் கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். அவர்கள் அவருக்குரிய அப்பங்களை அவருக்குப் பிரித்துக் கொடுக்காமல் அவர் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியாது  என்று நுள்ளான்  நினைத்தான். 

அமலா அவர்களுடன் ஒட்டி உறவாடுபவள் இல்லை. அவள் உள்ளுள் புதிய  திட்டங்களும் நம்பிக்கைகளும் உருவாகி இருக்க வேண்டும். தாலிக்கொடிக்கு இப்படி நடக்கும் என்று மட்டும்  அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.  நேமியனும் அன்ரியும் அவள் மேல்  வாரப்பாடை பொழிந்தது இவனுக்கு எரிச்சல் தராமலில்லை. ஆனால் இவர்களுக்கு உள்ள நல்ல துணை அவர்கள் தானே. எக்காலத்திலும் நேமியனையும் அன்ரியையும் ஏற்றிய இடத்தில் இருந்து இறக்கப் போவதில்லை என்று அவர்களை எண்ணி சலித்துக் கொள்ளும் சொற்கள் முடிந்து போகும்  தறுவாயில் சொல்லிக் கொண்டான். 

அமலா அவர்களிடம் கொண்டிருக்கும் ஒட்டுதல் எல்லாம் தன் எண்ணங்களை ஈடேற்றுவதற்கு தான்  என்று அவளை  அறிந்த அளவுகளை கொண்டு தொகுத்துக் கொண்டான். 

பாஸ்ரரோ  மரியம் அன்ரியோ இவளை யாரையும் குணப்படுத்து என்று சொல்வதில்லை.   இவளாகத்தான் செய்தாள்.  சத்திர சிகிற்சைக்குச் சென்ற சிறுமி திரும்பி சுகமாகி வந்தாள். அவளுடைய தாய் கூடார வாசலில் அமலாவின் காலில் வந்து விழுந்தாள். குழந்தையின் நெஞ்சைத்திறந்து பார்த்த வைத்தியர்கள் அங்கிருந்த இரும்புத்துகள் கரைந்து போய் விட்டது என்றிருக்கிறார்கள். எக்ஸ்ரேயில் தசைக்குள் தெரிந்தது திறந்ததும் மறைந்து போயிருக்கிறது. நுள்ளான் அத்தோடு நிறுத்திக்கொள் என்று சொன்னான். தானும் விருப்பப்பட்டு இதைச் செய்யவில்லை என்றாள்.  மரியம் அன்ரியிடம் அவள் பணமேதும் கேட்டிருக்க வேண்டும். கடமைப்பட்டு விட்ட  மென் குறுக்கமொன்று தெரிந்தது. அமலா அவ்வளவு எளிதில் நசிந்து போகக் கூடியவள் இல்லை. இதெல்லாம் தாலிக்கொடியை மீட்கவா அல்லது இவள் கடலைக் கடப்பதற்கா என்று தெரியவில்லை. உக்காராவிற்குத் தெரிந்திருக்கலாம். அவன் சொல்ல மாட்டான்.  நரியன் ! 

உக்காரா, தாலிக்கொடியை மீட்க, முடிந்தவரை முயற்சி செய்து கொண்டிருந்தான்.  தாலிக்கொடி விசயத்தில் அவனால் ஒரு அளவிற்கு மேலே நெருங்கிச் செல்ல முடியவில்லை. உயர் மட்டங்களின் தொடர்புகளும் நிறையக் காசும் தேவைப்படலாம் என்றான். தாலிக்கொடி இயக்கத்தில் இருந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிப்பதாக மட்டும் உக்காராவல் அறிய முடிந்தது, தள்ளாடியில் அல்லது வவுனியாவில் அவனை வைத்திருக்கலாம் என்றார்கள். தாலிக்கொடி நிச்சயமற்ற செய்திகளாய் ஆகியிருந்தான். தாலிக்கொடி ஓமந்தையில் இருந்து முகாமிற்கு  வந்த புதிதில் இவளிடம்  தானும் ஒரு போராட்ட அமைப்பின் தலைவர் தான் என்று சொல்லிப் பகிடி விட்டுக்கொண்டிருந்தான். நுள்ளான் அருகிருந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

` நான் அப்ப சரியான இயக்க விசுவாசி, சொல்லப்போனால் அண்ணையிலைதான் அவ்வளவு விருப்பம்,  ஒருக்கா அண்ணேன்ர பிறந்த நாளுக்கு அவற்ற பேரை நெஞ்சிலை பச்சை குத்தப்போறன் எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சனான், ஊராக்கள் ஆரோ `எடி வசத்தம் உன்ர மோன் இயக்கத்துக்கு போகப்போறான்` எண்டு சொல்லி இருக்கினம்.  என்னை கூப்பிட்டு அண்டைக்கு கிளுவம் தடி முறிய நல்ல விளாசல், முதுகெல்லாம் வீங்கிப்போட்டுது, அம்மாக்கு இயக்கம் எண்டாலே பிடிக்காது, அவளுக்கு சண்டையோ அரசியலோ கூட தெரியாது, கோவிலும் குளமும் எண்டு கிடப்பாள். அவளுக்கு நான் மட்டும் தான் உலகம். இயக்கம் எண்டு சொன்னால் மட்டும்  எங்கையோ அவளுக்கை படுத்திருந்த முனி எழும்பி  வந்திடும். அண்டைக்கு அவள் அடிச்ச அடியிலை முதுகிலை வரி வரியாய் கோடு, மூலைக்க சுருண்டு கிடந்து அழுதுக்கொண்டிருந்தனான். பின்னாலை வந்து இருந்து முதுகைத் தடவி விட்டாள். நான் கையை தட்டி விட்டு விலகிப்போக, என்னை அணைச்சுக்கொண்டு பெரிசா அழத்தொடங்கீட்டாள். எனக்கு அம்மா அழக்கூடாது, தாங்க மாட்டன். நானும் சேர்ந்து அழுதன். நிக்காமல் கன நேரம் ஒராளை மாறி ஒராள் பாத்துப்பாத்து அழுதம். கொஞ்சம் கொஞ்சமா அழுகை கூடி ஒரு கட்டத்துலை  அழ ஏலாம விக்கலோட சிரிக்கத்தொடங்கினம். பேய்ச்சிரிப்பு. ஏன் சிரிக்கிறம் எண்டோ ஏன் அழுதனாங்கள் எண்டோ அறியாத சிரிப்பொண்டு. அழேக்க விம்மிக்கொண்டுதான் இருந்தனாங்கள், ஒரு சொட்டு கண்ணாலை விழேல்ல, ஆனால் அழேக்க கண், மழைப்பீலி திறந்து விட்டமாதிரி கொட்டினது. சிரிச்சுக்கொண்டே முதுகைத்தடவிப்பாத்தன் வரி வரியாய் வீங்கி இருந்தது.  

`பாரடி  வசந்தம் இப்ப நீதான் என்னைப் புலி ஆக்கி இருக்கிறாய்` 

அந்த வீக்கங்களை திரும்ப தொட்டுப்பாத்து திரும்ப அழுதாள். என்னட்ட இயக்கத்துக்கு போக மாட்டன் எண்டு தன்ர தாலிலை கையை வச்சு சத்தியம் வாங்கினாள். 

பிடிப்பிரச்சினை தொடங்கின நேரம் ஊருக்க பெரிய குழப்பம், இயக்கத்தை சனம் மண் அள்ளித்தூத்த தொடங்கீட்டு.  எங்க ஊருக்கு பக்கத்து உரிலை  வெரோனிக்கா எண்டு ஒரு அக்கா இருந்வா, எங்கட பள்ளிக்கூடத்திலைதான் படிச்சவா. என்னோட நல்ல மாதிரி, படம் எல்லாம் கீறுவா. அவாவ ஒரு நாள் பிடிச்சுக்கொண்டு போனாங்கள். அவான்ர அம்மா `என்ர பிள்ளையை விடுங்கோடா `  எண்டு அந்த வாகனத்திலை பிடிச்ச கையை விடேல்ல, அந்த ஊரி ரோட்டெல்லாம் கொஞ்சத்தூரம் சட்டையும், முழங்காலும் கிழிய இழுபட்டுக்கொண்டு போனா.ஒருத்தரும் வரேல்ல. எனக்கு அண்டையோட விசாரக்கினது. சனம் எல்லாம் அரசியல் துறைக்காரர் தான் பிள்ளைபிடிக்கிறாங்கள், உதெல்லாம் தலைவருக்கு தெரியாது எண்டு கதைச்சவை. நானும் அதைத்தான் நம்பினான்.  `அண்ணைக்குத் தெரியாதெண்டு`. கொஞ்ச நாள் இவங்கட அட்டகாசம் கூடிப்போச்சு அப்பத்தான் எனக்கொரு யோசனை வந்தது. பேசாமல் அண்ணைக்கு ஆதரவா இந்த அரசியல் துறை பிள்ளை பிடிகாரர எதிர்த்து அமைப்பொண்டு தொடங்குவம் எண்டு முடிவெடுத்தன்.  என்ர கூட்டாளிமார் நாலைஞ்சு பேர் இருந்தவங்கள் எல்லாருக்கும் இருத்தி வச்சு விளங்கப்படுத்தின்னான்.   ஆராலையும் அண்ணை ஊப்பிடி ஒரு ஓடர் குடுத்திருப்பார் எண்டத நம்ப முடியேல்ல. எல்லாரும் ஒத்துக்கொண்டு அமைப்பு தொடங்கினம் அமைப்புக்கு `தமிழீழ மக்கள் மீட்பு படையணி` எண்டு பேர் வச்சம். அமைப்பு செய்யிற முதல் வேலை என்னெண்டு கலந்து கதச்சம். முதல் தீர்மானமே இந்த பிள்ளை பிடி பற்றி அண்ணைக்கு விபரமா ஒரு கடிதம் எழுதுறது எண்டு முடிவானது.  பன்ரெண்டரைப் பக்கத்திலை அந்தக்கடிதம் இருந்தது. கடிதத்துக்கு கீழ எல்லாரும் கையெழுத்து வச்சம். தலைமைச்செயலகத்தின்ர முகவரி போட்டு அனுப்பிட்டம். எல்லாருக்கும் பெரிய திருப்தி. நாலைஞ்சு நாள் கழிச்சு வீட்டுக்கு முன்னாலை ஒரு வாகனம் வந்து நிண்டுது, என்னை எங்கை எண்டு கேட்டு வீட்டுக்க நாலைஞ்சு இயக்கப்பெடியள் வந்தாங்கள், அம்மா என்னை  இயக்கத்துக்கு பிடிக்கத்தான் வந்திட்டாங்கள் எண்டு  இறுக்கி கட்டிப்பிடிச்சிட்டா. மார்கண்டேயர் லிங்கத்தைப் பிடிச்ச கணக்கா மனிசி என்னை விடேல்லை, அவங்கள் பிடிச்சு இழுக்க இழுக்க இறுகிக்கொண்டே போனாள்.  அஞ்சு பேர் சேர்ந்தும் அம்மாட்டை இருந்து என்னை பறிக்கேல்லாம போச்சு. அதுக்குள்ள ஊராக்கள் கூடிட்டினம். அவங்களாலை ஒண்டும் செய்ய முடியேல்லை. பிடிக்க வரேல்லை விசாரணைக்குத்தான் எண்டு அவங்களுக்கு பொறுப்பா வந்தவன் சொன்னான்.  அம்மா , அப்ப தானும் வருவன் எண்டு நிண்டாள். சரியெண்டு ஏத்திக்கொண்டு போனாங்கள். கிளிநொச்சி அரசியல் துறையிலை வச்சு அம்மாக்கு நாங்கள் எழுதின கடிதத்தை  வாசிக்க குடுத்தாங்கள். அம்மா வாசிச்சிட்டு, அவங்களுக்கு முன்னாலை என்னைப்போட்டு அடிச்சாள். திரும்பவும் அவளுக்க  கிடந்த முனி ஏறி வந்து என்னிலை  இறங்கிட்டு. அம்மா என்னை அடிச்ச அடியைக் கண்டு அவங்களே திகைச்சுப் போனாங்கள். இயக்கப்பெட்டையள் ஓடிவந்து அம்மாவைப்  பிடிச்சு இழுத்துக்கொண்டு போக, என்னை அடிக்கேலாம  குஞ்சு சாகக் கண்ட பறவை செட்டைய  நெஞ்சிலை அடிக்கிற மாதிரி தன்ர நெஞ்சில `தொம் தொம்` எண்டு சத்தம் கேக்க அறைஞ்சு கொண்டே போனாள். அதுக்கு பிறகு அவங்கள் என்னை இருத்தி வச்சு கதைச்சாங்கள். இனி இப்பிடி செய்யக்கூடாது எண்டு வோன் பண்ணி விட்டாங்கள்,  அண்டையோட எங்கட அமைப்பு கலைஞ்சு போச்சுது.  உங்களுக்கு ஒண்டு தெரியுமோ  ` விடுதலைப்புலியள் கடைசியா தடை செய்த இயக்கம் தமிழீழ மக்கள் மீட்பு படையணிதான்`

அதைச்சொல்லி விட்டு தாலிக்கொடி சிரித்த சிரிப்பு நுள்ளானுக்குள் இன்னும்  இருந்தது.   சிறுபராயத்திலேயே அதை இழந்து பெரியவர்களாக தம்மை கருதி  தம்மை நிகழ்த்தக் கூடிய சிறுவர்களை வளர்ந்தோர் வெளிப்படையாக எரிச்சலூட்டுபவர்களாகப் பார்த்தாலும் அவர்களின் ஆழத்தில் அச்சிறுவர்கள் எப்படியோ விரும்பப்படுகிறார்கள். அச்சிறு பைதல்களின் கண்ணில் தெரியும் கனவுரு தாம் தான் என்று அறியும் போது மகிழ்கிறார்கள். தாங்கள் அடையாத மேலானதொன்றை அவர்கள் தம்மை முன்னத்தி என்று பற்றிச்சென்று அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனாலேயே அவர்கள் மேல் கண்டிபையும் விலக்கத்தையும் உண்டுபண்ணுகிறார்கள். நுள்ளானுக்கும் தாலிக்கொடிக்கும் அப்படியொரு உறவுதானிருந்தது. காவோலையுடன் முடிந்து விட்டதாக கருதிய பெயரிடாத உணர்வின் தொடர்ச்சியென்றே அதை அறிந்திருந்தான். தாலிக்கொடி,  உக்காராவைப் போலாக வேண்டும் என்று வெளிப்படையாக அறிவிப்பவனாக இருந்தாலும் அவன் நுள்ளானைச் சுற்றிக்கொண்டே திரிந்தான். இவனுடைய வாழ்கையைத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு அவ்வளவு விருப்பமிருந்தது. எப்படியோ சுற்றி வந்து இவனுடன்  கொஞ்ச நேரம் என்றாலும் இருந்து கதைக்காமல் போகான். அமலாவும் இவன் தாலிக்கொடியைக் கடிந்து திட்டும் போதெல்லாம் ஒரு வித நக்கல் சிரிப்பொன்று சிரிப்பாள் , `ஒராளை ஒராள் வித்துக்கொண்டாலும் ஒண்டாய்தானே திரியிறியள்` என்பாள். நுள்ளானிடம் பழைய இயக்கக் கதைகள் கேட்பதில் அவனுக்கு  அவ்வளவு ஆர்வமிருந்தது.  நுள்ளான் கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்தால்,  `உங்களுக்கு ஏற்கனவே ஒருக்கா செத்தவீடு செய்ததாம் , இப்ப உள்ளுக்கு உயிர் இருக்கோ இல்லையோ?`  இப்படித்தான் ஆரம்பித்துச் சீண்டுவான். நுள்ளான் எதையும் சொன்னதில்லை. அமலாவும் சொல்ல மாட்டாள். எல்லாம் அத்தையின் வேலைதான், அவளை அங்கே பொருட்டென மதித்து இருந்து `நியாயம் பிரிப்பது`  தாலிக்கொடி மட்டும்தான். அத்தையும் பேய் பிடித்தவள் போலத்தான் திர்ந்தாள். உக்காராவிடம் அவள் கதைத்ததே இல்லை, அன்றைக்கு கைபேசியை வாங்கி அழுது தள்ளி விட்டாள். 

`நான் கலியாணம் செய்யேல்லை தம்பி, எனக்கு சூரியனிலை செவ்வாய், கலியாண ஆசை சின்னன்லையே போட்டுது, ஆனால் ஒரு பிள்ளை இருந்தால் வளத்து இளந்தாரியாக்குவன் எண்டு ஒரு விருப்பம் இருந்தது, எப்பிடியாவது என்ர பிள்ளையை மீட்டுக்குடு“

எல்லோரும் உக்காராவைத் தான் மலைபோல நம்பினார்கள், அவன் அவர்களை எதுவும் சொல்லிக் குலைத்துவிடுவதில்லை. ஓம் ஓம் என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தான். அமலாவிற்குக் கூட நம்பிக்கையான வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தான். அது நல்லது என்றே பட்டது. ஓர் ஆணாகவும் அவள் முன் கையறுந்து நிற்பதைச் சொல்ல அவன் ஒப்பாமல் இருக்கலாம். நுள்ளானிடம் உள்ளதை உள்ளபடி சொன்னான்.

`ஆரும் பெரியாக்களை பிடிக்காமல்  வாய்ப்பே இல்லை, கேஸ் போட்டு கோட்டுக்கு விட்டால் கூட வாதாடி மீட்கலாம், இது ஆள் தெரியாமல் கடத்தி இருக்கு. தாய் தகப்பன் கூட இல்லை, புனர்வாழ்வுக்கெண்டாலும் விட்டுத்தான் எடுப்பாங்கள், பதிவோடை  தாய் தகப்பன் கையிலை கொண்டு போய் குடுத்த பெடியள், பிள்ளையளுக்கே என்னை நிலமை எண்டு தெரியேல்ல, இதுக்க இவனை என்னெண்டு மீட்கப்போறம் ? அவங்கள் இயக்கம் எண்டு முடிவு கட்டாமல் தூக்கி இருக்க மாட்டாங்கள், காம்புக்க சுவரொட்டி எழுதினது இவன் இல்லாட்டியும்,  சனத்தைப் பயப்படுத்தி வைக்கோணும் எண்டுதான், பட்டப்பகல்ல ஆக்கள் பாக்க அள்ளிக்கொண்டு போயிருக்கிறாங்கள்`

மழை மீண்டும் கொஞ்சம் வலுக்கத் தொடங்கியது, தோளில் பட்டு நோகும் போதுதான் மழை பெருத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். ஆற்றங்கரைக்கு கிட்ட வந்து விட்டான், உள்ளாடைக்குள் பொலித்தீன் சுற்றிய கைபேசி இருந்தது. அதை ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டான். சறமும் உள்ளாடையும் ஏற்கனவே நனைந்துதான் கிடந்தன. கைபேசி நனையாது என்று உறுதிசெய்து கொண்டான்.  ஆட்கள் இல்லாத கூடாரம் ஒன்றில் நுழைந்து அங்கிருந்த மரக்குற்றியில் அமர்ந்து கொண்டான். மழை வெள்ளைத்திரையென்று ஆகியிருந்தது. ஆற்றுக்கு அருகில் இருந்தாலும் ஆற்றின் சத்தம் எழவில்லை, பாறைகளைத் தாண்டி வெள்ளம் மேலெழுந்திருக்க வேண்டும். பெரும் புரழ்வுகளும் பெருக்கும் சத்தமில்லாதவை. இப்படியே மழை வலுத்தால், ஆற்றுப்பெருக்கு கரையை மேவி எழலாம். அங்கே தனித்தனியாக  ஒன்றும் செய்வதற்கில்லை. மொத்தமாக அவர்கள் எதேனும் செய்யட்டும்.  தலையைத் தட்டிச் சிலுப்பினான். நேரம் நான்கு மணியைத் தாண்டியிருக்க வேண்டும். மழையிருள் என்றாலும் மெல்லிய வெளிச்சம் கண்ணுக்குள் பரவியது. 

இடுப்பினுள் கையை நுழைத்து கைபேசியை எடுத்துக்கொண்டான்.  அந்த அழைப்பை யாருக்கும் தெரியாமல் மேற்கொள்ள தீர்மானித்திருந்தான். அமலா கூட அறியக் கூடாது. மழைக்குளிருக்கு நடுங்காத கைகள்  கைபேசியை ஏந்தியவுடன் வெட வெடக்கத் தொடங்கிவிட்டன.  சொந்த அச்சத்தை ஆனைகள் சூழ்ந்து நின்ற அந்த முதற்சாவின் இருளிலேயே  இழந்தவன். அதன் பிறகு அவன் கைகள் நடுங்கியது,  ஆஸ்பத்திரியில் மயக்கத்தில் உறங்கிக்கிடந்த அமலாவின் பக்கத்தில் வளர்த்தியிருந்த குழந்தையை தாதி எடுத்து இவன் கைகளில் தந்த போது மட்டும்தான். எண்களை அழுத்தினான். எண்ணை அவர் மாற்றியிருக்க கூடும்.  எட்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தாலிக்கொடியை நினைத்துக்கொண்டான். தீமையின் ஆழத்தை அடைந்தவர்கள் அங்கேயே இருக்க வேண்டும், செத்து உடல் உப்பினால் மட்டுமே மேலே எழ வேண்டும்.  தொட்ட பிறகு, எப்படியோ உதறிக்கொண்டு எழுந்து வந்த பிறகு எப்பொழுதும் அச்சுழல் கழுத்து வரை பற்றிக்  உள்ளே இழுத்தபடியே இருக்கும். நடுவில் இருப்பதுதான் நரகம். நடுவில் இருக்கும் அச் சுழல் சாசுவதமானது. அது இழுத்துக்கொண்டே இருப்பதைத் தவிர எதையும் அறியாதது.  ஒளித்துண்டுத் திரையில் எண்களை மீண்டும் சரி பார்த்தான். பச்சைக் குறியை அழுத்தினான். அழைப்பு ஒவ்வொரு குற்றாக தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. காதுக்கு கொடுக்க,  எதிரில் மணியொலித்தது. ஆறாவது ஒலிப்பில் தொலைபேசி எடுக்கப் பட்டது. பெண்ணின் குரல். ஹலோ என்றது. 

`புரன் அப்பு சேர் ?`

`பொட்டக்கிண்ட`

நுள்ளான் நன்றாகச் சிங்களம் கதைப்பான். கதைப்பதோ காட்டிக்கொள்வதோ இல்லை.  ஓமந்தையில் ஆமிக்காரர் விசாரிக்கும் போது கூட சிங்களம் தெரியாது என்றே சொல்லிவைத்தான். அவன் எதையும் நினைக்க விரும்பவில்லை. அழைப்பு சில நிமிடங்கள் லேசான இரைச்சலுடன் இருந்தது. அங்கும் மழை பெய்துகொண்டிருக்க வேண்டும். தொலைபேசி பற்றப்படும் ஓசை கேட்டது. கால் விரல்களில் தொடங்கிப் பரவி மேலே வரும் இறுக்கத்தை ஒரு கணம் கண்டான். மீண்டும், ஹாலோ. தடிப்பான ஆண் குரல்.

சேர் மம  ரஜோ …

குரல் தயங்கித் தொடங்கியது. 

நுள்ளான் கூடாரத்திற்குளிருந்து  வெளியே வரும் போது மழைத்துளிகள்  வெள்ளைத் தோட்டாக்களென இறங்கிக்கொண்டிருந்தன. கண்ணைத் திறக்க முடியவில்லை.  கணுக்காலை மூடி நீர்  மேலோடிக்கொண்டிருந்தது. உடல் நொந்தது.  கண்ணை மூடிக்கொண்டு கால்களின் போக்கில்  உடலை விட்டான். அக்கனமழையின் பேரிரைச்சல் காதை அடைத்துப் பொழிந்து கொண்டிருந்தது உலகின் வேறெந்த ஒலியும் இனி இராது என்பது போன்ற உணர்வு உள்ளோடி அக்கணத்தில் மனமே அவ்விரச்சல் என்றாகிப்போனது.  புற உலகோ, உடம்போ, நினைப்போ, மழையோ, குளிரோ எதுவுமில்லை. வெறும் இரைச்சல், மெல்ல மெல்ல அவ் இரச்சலும் அழிந்து கொண்டு போனது. எதுவுமில்லை என்ற சொல் விழித்திருந்த எதோவொரு இறுதியையும் அழித்துவிட உட்பரவிச்சென்றது. அப்பொழுதுதான் , காதிற்குப் பின் புறம் இரைச்சலைப் பிளந்து கொண்டு முழவு ஒங்கியொலித்து அணைவது போல  ஆனைகளின் பிளிறல் சத்தம் தோன்றி அடங்கியது.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’