வடக்கிலும் தெற்கிலும் சுழன்றது ஒரே துவக்குத்தான் :   திரைக்கலைஞர் விசாகேச சந்திரசேகரத்துடன் ஒரு உரையாடல்

விசாகேச சந்திரசேகரம்
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விசாகேச சந்திரசேகரம், இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் பணியாற்றிவருகிறார். நாவல் ,  நாடகவாக்கம் மற்றும் திரைப்படங்களை இயக்கிவரும் ஒரு கலைஞர். சிங்களத்திலும் தமிழிலும் படைப்புக்களை ஆக்கிவருகின்றார்.  இவருடைய இயக்கத்தில் வெளியான Frangipani , Paangshu ஆகிய திரைப்படங்கள் புகழ்பெற்றவை. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றவை. இவருடைய இயக்கத்தில்  இவ்வருடம் வெளியான மணல் என்ற தமிழ்த் திரைப்படம் சமீபத்தில் திரைத்துறையில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான ரோட்டர்டாமின் (Rotterdam) சர்வதேச திரைப்பட விழாவின் (IFFR)  Tiger Special Jury  விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளது. இப்படம் ஈழத்தில் நடைபெற்ற போரின் பின்னணியைக் கதையாகக் கொண்டதுடன் ஈழத் தமிழ் திரைக்கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் உருவான முழுநீளத்திரைப்படமாகும்.

………………

சமகால இலங்கை சினிமாவில் தங்களுடைய படங்கள் அதிகம் பேசப்படுவதுடன், சர்வதேச விருதகளையும் பெற்றுக்கொண்டுள்ளன, இவ்விடத்திற்கு வந்து சேர்வதற்கு எடுத்துக்கொண்ட பயணம் பற்றி சுருக்கமாக பகிர்ந்துகொள்ள இயலுமா?

மணல் (Munnel)   முதன் முதலில் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்த  முதல் கதை .  2005 – போர்க்காலத்தின் போது என்று நினைக்கிறேன். இது ஒரு தாய் மற்றும் மகன் ஆகியோரின்  கதையாக இருந்தது. ஆனால் கதையின் ஆழமும் , அடுக்குகளும்  அப்போது  குறைவாக இருந்தன. சிங்கள  இராணுவத்தினரால்  பாதை மறிக்கப்பட்டிருந்தது. நான் அதை ஒரு கறுப்பு வெள்ளைப் படமாகக் கற்பனை செய்தேன். ஒரு மணி நேரப் படமாக இருக்கலாம். ஏறக்குறைய 20 வருடங்கள் வேகமாக உள்ளுக்குள் திரண்ட கதையானது, கதைக்களங்கள் மற்றும் கருப்பொருள்களின் அடுக்குகளைக் கொண்ட 100 நிமிட திரைப்படமாக இப்பொழுது மாறியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவது, குறிப்பாக ஆயுதங்கள், ராணுவச் சீருடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு, போர்காலத்தின் போது போது மிகவும் சிக்கலானதும் கடினமனாதுமாக இருக்கும் என்பதால் , இந்தப் படத்தை இவ்வளவு நாள் கிடப்பில் போட்டேன். ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், நான் சிங்களத் திரைப்படங்களை தயாரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தேன், ஏனெனில் இந்த நாட்டில் உறுதியான  அரசியல் மாற்றத்தை நாம் காண வேண்டுமானால், சிங்களத்தில் கதைகளைச் சொல்வது மற்றும் சிங்கள மக்களுடன்  உரையாடுவதன்  முக்கியத்துவத்தை நான் பலமாக நம்பினேன்.

கொழும்பைத் தளமாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் ஒன்று தமிழ்ப் படத்மொன்றைத் தயாரிப்பதற்காக   என்னை அணுகியது. எனவே என்னிடம் ஏற்கனவே ஒரு நல்ல கதை இருந்ததால் நான் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். பின்னர் எனது முதல் வேலையாக  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிஷி செல்வத்தை ஒளிப்பதிவாளராக என்னுடைய படத்தில் இணைத்துக்கொள்ள விரும்பி அவரை அணுகினேன்.  நான் சிறிது காலமாக அவருடைய வேலைகளைக் கவனித்து வந்தேன். அவருடைய  இந்தப் படத்தில் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அத்தனை பேரையும் ஈடுபடுத்த விரும்பினேன், முடிந்தால் அவர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். புதிய நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க நான் தயாராக இருந்தேன், ஏனென்றால் தெற்கிலிருந்து ஆட்களை வரவழைப்பதை விட உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவதில்  நம்பிக்கை கொண்டிருந்தேன். நிச்சயமாக நான் சிங்கள மொழி பேசும் திரைப்பட தொழில்நுட்ப வல்லுனர்களை எளிதாக அணுகலாம், ஆனால் தமிழ் மக்களுடன்  இணைந்தே ஒரு தமிழ் கதையை சொல்ல வேண்டும், அவர்கள் உண்மையிலேயே தங்கள் சொந்தக் கதைகளை  உடையவர்களாக இருப்பார்கள், அத்துடன் அவர்கள் என் கதையை சொல்ல எனக்கு வழிகாட்டுவார்கள்.

ரிஷி என்னை என் உதவி இயக்குனரான ஜெனோஷன் மற்றும் எனது தயாரிப்பு மேலாளர் பரத் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். இந்த மூன்று மனிதர்களும் எனது மிகப்பெரிய பலமாக மாறினார்கள். மேலும் அவர்கள் தங்கள் பொறுப்புக்களைத் தாண்டியும் பல தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். அதனால், படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆனார்கள். இந்த மூவரும் லிங்கேஷ்வரன் போன்ற படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்தை ஏற்க கூடிய நடிகர்கள், இசையமைப்பாளர் பத்மயன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ,  நடிகை லீலா மற்றும் பல திறமையான கலைஞர்களை எனக்கு அறிமுகப்படுத்தினர்.அவர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு மிகவும் பக்க பலமாக மாறினர்.  கிட்டத்தட்ட நிபந்தனைகளின்றி, மிகவும் கடினமாக உழைத்தனர். நாங்கள் திட்டமிட்டோம், திட்டமிட்டோம், திட்டமிட்டோம். 15 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க நினைத்தோம். இப்போது நான் திரும்பிப் பார்க்கிறேன், அந்த மாபெரும் பணியை நாங்கள் எவ்வாறு நிர்வகித்தோம் என்று ஆச்சரியப்படுகிறேன்.

ரோட்டர்டாமின் (Rotterdam) சர்வதேச திரைப்பட விழாவின் (IFFR) நிகழ்சித் திட்டத்தினைச் சேர்ந்த ஒருவர், எங்களின் படப்பிடிப்பின் கடைசி நாள் புகைப்படங்கள் சிலவற்றை முகநூலிலில் பார்த்தார். தோராயமாக, சில படக்காட்சிகளை பார்க்க இயலுமா என்று கேட்டார். அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களுடைய படம் பூர்த்தி செய்யும் என்று நாங்கள் ஒரு பொழுதும் நினைத்ததேயில்லை. ஆனால் பாருங்கள், அவர்கள் எங்கள் படத்தை நிகழ்விற்கு எடுத்துக்கொண்டதும் இல்லாமல், எங்களுக்கு டைகர் ஜூரி விருதையும் வழங்கியிருக்கிறார்கள்!

சிங்கள சினிமா,  ஈழத்துத் தமிழ் சினிமா ஆகிய இரண்டு  நிலைகளிலும் செயற்படுகிறீர்கள். இவ்விரண்டு சினிமாக்களும் சமகாலத்தில் எத்தகைய நிலையில் இருப்பதாகக் கருதுகின்றீர்கள்?

சிங்கள மற்றும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இரு சாராரும் கலைசார் திரைப்படங்கள் (திரைப்பட திருவிழா சார்ந்த திரைப்படங்கள்) மற்றும் வணிகத் திரைப்படங்கள் இரண்டையும் தயாரிக்கின்றனர். இந்த வகைப்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரண்டு போக்குகளையும்  அடையாளம் காண இதுவே சிறந்த வழிமுறையாகும். தெற்கில், கலை மற்றும் வணிகத் திரைப்படங்களுக்கு நடுத்தர அளவிலான சந்தை உள்ளது. கலைப்படங்கள் என்று நீங்கள் கருதும் எனது முந்தைய இரண்டு படங்களும் திரையரங்குகளில் ஒப்பீட்டளவில் நன்றாகவே வசூலித்துள்ளன. எங்களுடைய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இலங்கையில் இவ்விரண்டு வகையிலும் பிறழ்வை அடைந்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏனென்றால், தமிழ்த் திரைப்பட இரசிகர்கள்  பொதுவாகக் கலைத் திரைப்படங்களைப் பற்றி அதிகம் சட்டைசெய்வதில்லை. மேலும் சென்னைக்கு வெளியே தயாரிக்கப்படும் வெவ்வேறு வகைமாதிரிகளைக் கொண்ட திரைப்படங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சிலர் என்னுடன் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் நான் அப்படித்தான் உணர்கிறேன். இந்த போக்கு மாறும், இது மாற வேண்டும். நமது புதிய தமிழ் தலைமுறையினர் தங்கள் அடையாளத்தை – ஒரு புதிய ஈழம் (இலங்கை என்ற சொல்லுக்குப் பதிலாக  இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன்) – தமிழ் அடையாளத்தை வரையறுப்பதற்கான பாதைகளைத் தேடிச்செல்வார்கள், மேலும் அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த கலைகளையும் குறிப்பாக திரைப்படங்களையும் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். பிரச்சினை என்னவென்றால், நமது தென்னிந்திய தமிழ் பார்வையாளர்களை அல்லது நமது உள்ளூர் தமிழ் பார்வையாளர்களை தூண்டுவதற்கு அல்லது குறைந்த பட்சம்  நல்ல திரைப்படங்கள் மீதான ஆர்வத்தை  ஏற்படுத்துவதற்கான தடங்களை அல்லது அளவுகோல்களை நாம் எப்போது அடைவோம் என்பதே பிரச்சனை. நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச கவனத்தை விரும்பினால், நமது திரைப்படங்களின் கதை சொல்லும் தரம் (திரைப்படத் தொழில்நுட்பம் அல்லது திரைப்பட உபகரணங்களைப் பயன்படுத்துவதை விட) உயர்வை எட்ட வேண்டும்.

தங்களுடைய பாங்சு மற்றும் மணல் ஆகிய திரைப்படங்கள் முறையே சிங்கள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தையும், தமிழ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட விடுதலைப்போராட்ட கால கட்டத்தையும் பின்னணியாக கொண்டவை. மக்கள் போராட்டங்களையும் அவர்களின் துன்பங்களையும் சொல்லும் போது இலங்கையின் அரசியல், பண்பாட்டு நிலவரங்களை  திரைப்படங்கள் மூலம் எவ்வாறு எதிர்கொள்ள நினைக்கின்றீர்கள்?

முதலில் நான் ஒன்றைச்  சொல்ல வேண்டும், எனக்கு சிங்கள இனத்தின் மீதோ அல்லது தமிழ் இனத்தின் மீதோ எந்த விசுவாசமும் இல்லை. எனக்கு என்றொரு இன அடையாளம் கிடையாது. எனது இலங்கை (ஈழம்) அடையாளமும் ஓரளவு தெளிவற்றது. ஆனால் என்னுடைய கலப்பு (சிங்கள-தமிழ்) பாரம்பரியத்தின் காரணமாக இரு தரப்பையும் கருணையுடன்  பார்க்க வேண்டியிருந்தது. 1971 கிளர்ச்சியின் போதும் ,1983 க்குப் பிறகும், 1988-89 லும் தெற்கில் நடந்தவை வடக்கில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன என்று நான் நினைக்கிறேன் (நிச்சயமாக 2009 போரின் கடைசி கட்டத்தில் நடந்த கொடுமைகளைப்  போல் சமீபத்திய உலக வரலாற்றில் நாம் கணடதில்லை). நான் சொல்ல வருவது தெற்கில் இருந்து வடக்கிலும் வடக்கிலிருந்து தெற்கிலும் 180 பாகைக்கு சுழற்றப்பட்டது ஒரே துவக்குத்தான். நாங்கள் துரதிர்ஷ்டவசமாக எங்கள் இன வேறுபாடுகளைக் அடைந்தோம். ஆனால் எங்கள் ஒத்த இயல்புகளைக் காணத்தவறினோம். எங்கள் எதிரி ஒருவரே. நான் கடந்த காலங்களில் ஜே.வி.பியை விமர்சித்துள்ளேன். புலிகளின் அரசியல் சித்தாந்தத்தையும் நான் கடுமையாக விமர்சித்துள்ளேன் என்பது உங்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முரணாக  இப்போது நான் JVP தலைமையிலான NPP இன் ஸ்தாபக உறுப்பினர்களில் நானும்  ஒருவன்.  அதே வேளை மணல் படத்தின்  கதாபாத்திரங்கள் மூலம் விடுதலைப் புலிகள் மீதான அனுதாபமுள்ள பார்வையை நான் முன்வைக்கிறேன்.

தங்களுடைய  franqipan  குயர் (queer) சமூகத்தைப் பற்றிப்பேசுகின்றது, இலங்கையில் சிங்கள, தமிழ்ச் சூழலில் குயர் சமூகங்களின் கதைகளைப் படமாக்கும் போது எவ்வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள்? குறித்த விடயம் பற்றிய எதிர்வினைகள் எவ்வாறு அமைந்தன?

franqipan என்னுடைய முதல் படம். 2013 இல் தயாரிக்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு முன்னர் இப்போது போலவே சிங்கள சமூகம் உண்மையில் அதற்கு தயாராக இல்லை. ஆனால் ஒன்று தெரியுமா? என்னுடன் பணிபுரிந்த இளைஞர்கள் மற்றும் திரையுலகிற்கு வெளியில் இருந்து எங்களுடன் பணியாற்ற வந்தவர்கள் புதிய உரையாடல், புதிய சகாப்தம் மற்றும் புதிய கதைகளை எதிர்கொள்ளவும், புதிய கலைப்படைப்புக்களை ஆதரிக்கவும் தயாராக இருந்தனர். இந்தப் படத்தை அப்போதைய ராஜபக்சே அரசு தடைசெய்யும் என நான் எதிர்பார்த்திருந்தாலும், 2015 இல்  அவர்கள் அதிகாரத்தை இழந்ததால், இப்படத்திற்கு  அரசாங்க  தணிக்கைப் பிரிவினது  சான்றிதழைப் பெற முடிந்தது. 2015 முதல்  அவர்கள்  எந்தப் படத்தையும் தடை செய்யவில்லை அல்லது எந்தக் காட்சியையும் நீக்கக் கோரவில்லை.  இந்தத் திரைப்படம் எனது திரைக்குழுவினரில் பெரும்பாலானோரின் முதல் முயற்சியாகும், மேலும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த இரண்டு இளம் நடிகர்கள் தீவிரமான, துணிச்சலான நபர்களாய் இருந்தார்கள் . அவர்கள் ஏற்கனவே சிங்கள  மக்களின் வீடுகளில்  அறியப்பட்டவர்கள்ளாகவும் இருந்தார்கள். franqipan அவர்களை மேலும் பிரபலமாக்கியது. உண்மையைச் சொல்வதென்றால், franqipan யைப் பற்றி யாரும் தவறாகப் பேசவோ எழுதவோஇல்லை. அப்படத்தை நாங்கள் சனநாயகத்தின் பின்னணியில் உருவாக்கியிருந்ததுதான் அதற்கான காரணம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் படத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது நான் சொல்வேன்: “இது காதல் மற்றும் சனநாயகத்தைப் பற்றிய படம். இது அன்பைப் பற்றியது, ஏனென்றால்  இயல்பில் அன்பின் தன்மை மாறாதது,  இரண்டு ஆண்களுக்கு இடையில் நிகழும் போது கூட அது மாறுவதேயில்லை. இது சனநாயகம் பற்றியது. ஏனென்றால் குரலற்ற சிறுபான்மையினரின் ஆசைகளை நிராகரிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அடைய முடியாது. சிங்கள பார்வையாளர்கள் franqipan ஐ ஏற்றுக்கொண்டனர். ஒரு வித்தியாசமான குறிப்பு: ஃபிராங்கிபானி என்று ஒரு வினோதமான காதல் கதை இருப்பது தமிம் மக்களுக்கு  தெரியுமா? இல்லை. நாம் எவ்வளவு துருவப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று பாருங்கள்?

தொடர்ந்தும் இனவாதம் மதவாதம் முதலியன கூர்மைப்படுத்தப்படும் நிலையில் திரைப்படம்  இலங்கையில் இருக்கும் பல் சமூகங்களுக்கு இடையில் எவ்வாறானதொரு பணியைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

இனவாதம் மற்றும் மதவெறி இல்லாத புதிய சமூகத்தை நாம் காண வேண்டும் என்று தென்னிலங்கையில் உள்ள  செயலூக்கம் மிக்க கலைஞர்கள்  பல தசாப்தங்களாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். வெகு சிலரே எங்கள் பேச்சைக் கேட்டனர். வடக்கு மற்றும் தெற்கு அரசியலின் மையப் புள்ளிகள் இனத்தை அடிப்படையாகக் கொண்டவை. நமது மக்களின் அரசியல் தெரிவுகள் பழமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவர்கள் அதை இன அடிப்படையிலான அரசியல் என்று அழைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த இன ஆதிக்க அரசியலுக்குள் பாதிக்கப்படக்கூடிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள், குயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் ஒடுக்கப்படுகிறார்கள். இனங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளை  கண்டறியப்பட மறுக்கும் போதும் அல்லது அவர்களின் பொது எதிரியை அடையாளம் காண மறுக்கும் போதும், இனவாத  அரசியல்  எல்லா அடையாளங்களையும் கண்ணுக்குத் தெரியாமல் செய்கிறது. இனம் என்ற போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்த சமூக சிக்கல்களை வெளிக்கொணர்வதும், தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைவருக்கும் பொதுவான உண்மையான மனித மகிழ்ச்சியையும் துன்பத்தையும் வெளிப்படுத்துவதும் எங்களைப் போன்ற கலைஞர்களின் கடமையாகும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், ஓவியர்கள் மற்றும் பலர் இந்த மனித உணர்வுகளையும் உறவுகளையும் தங்கள் படைப்புகளில் கண்டறிய வேண்டும், உண்மையான மற்றும் முழுமையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்திய திரைப்படச்சூழலின் செல்வாக்கு அதிகம் காணப்படுகின்றது. வணிக ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இலங்கையின் திரைப்படத்துறை எவ்வாறு தன்னுடைய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்? அதற்கான சாத்தியங்கள் எவ்வாறு இருக்கின்றன ?

திரைப்படங்கள் மட்டுமல்லாது, இலங்கையில் உள்ள அனைத்து கலை வடிவங்களும் இந்தியாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நூறல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த பாதிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது.  அது ஒரு வரலாற்று மற்றும் அரசியல் நெறி. சில நேரங்களில் இந்த செல்வாக்கு இயல்பானதாகவும் பாதிப்பில்லாததாகவும் இருக்கும். மற்ற நேரங்களில், இந்த செல்வாக்கு ஒரு அதிநவீன அரசியல் மூலோபாயத்தின்  மூலம் திட்டமிடப்பட்டு,  கவனமாக செயல்படுத்தப்படுகிறது. அதை நான் ‘கலாசார ஏற்றுமதி’ என்று அழைக்கிறேன். சில சமயங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பி இரண்டுமே இந்தியக் கலைகளைத் தடை செய்தன. ஆனால் இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு அவர்களின் நடவடிக்கைகள் முதிர்ச்சியற்றதாகவும் பயனற்றதாகவும் இருந்தன. அதனால்தான் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்திய மற்றும் அண்டை நாடுகளை ஆச்சரியப்படுத்தக்கூடிய மகத்தான கலையை உருவாக்க கனவு காண்பதும்,    உருகும் கலாசார பானைக்குள் (cultural melting pot)  பாத்திரத்தில் நமது நியாயமான பங்கைக் கோருவதும்தான் என்று நான் நினைக்கிறேன். சமூக ஊடகங்களின் சகாப்தத்தில் இதை எளிதாகச் செய்ய முடியும் என்று நாங்கள் நினைத்தாலும், உலகப் போக்குகளை உருவாக்கும் வழிமுறைகளில் இந்திய மத்திய அரசு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள்  போன்ற சக்திகள் எளிதில்  செல்வாக்கைச் செலுத்திவிடுகின்றன.

எனவே, ‘சிறிய’ இலங்கையர்களான எமக்கு கலைச் சந்தையில் ஒரு சிறிய பங்கைக் கூட உரிமை கோருவது எளிதல்ல. ஆனால் ஒரு நாள் நம்மால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். நான் அதை நம்புகிறேன். ஏனென்றால் இந்தியாவின்  பிரதான கலைப்போக்கு குறிப்பாக இந்திய சினிமாவின் நிலப்பரப்பு வேகமாக மாறி வருகிறது, இச்சந்தர்ப்பத்தில் இம் மிகப்பெரிய கலை சந்தையில் நாம் ஊடுருவ முயற்சி செய்யலாம்.

சமகால அரசியல் மற்றும் பண்பாட்டு அரசியலைப் பேசுவதிலும் நிலைப்பாடு எடுப்பதிலும் திரைப்படத்தின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று  கருதுகின்றீர்கள்?

இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறைகளிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களும் அனைத்து கலைஞர்களும் கேட்க வேண்டும். வயதான பழமைவாத மற்றும் பிடிவாதமான அதிகாரிகயும் தலைவர்களையும் வழிகளை அடைத்து நிற்பவர்களையும் திருப்திப்படுத்துவதற்கு பதிலாக, நாம் இளைஞர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். அவர்கள்  பிரிவினை மற்றும் அழிவு அரசியலால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்கள் வாய்ப்புகள் நிறைந்த நவீன சமுதாயத்தில் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். சமமாக நடத்தப்பட வேண்டும். படைப்புகளை ஆக்குவதற்கும் பங்களிப்பை வழங்குவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். காலி முகத்திடல் போராட்டங்களில் நீங்கள் பார்த்தது இதைத்தான். அந்த இடம், சிறியது மற்றும் குறுகிய காலம் என்றாலும், அவர்களின் உண்மையான விரும்புங்களைக் காட்டியது. துரதிஷ்டவசமாக இந்நாட்டின் இளைஞர்களின் ஆற்றல் இந்த நாட்டின் அதிகார வெறி கொண்ட தலைவர்களால் இரத்தக்களரியாக திசை திருப்பப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கொடுத்து தங்கள் சக்தியை வீணடிக்கும் இந்த இளைஞர்களை கலைஞர்களாகிய நாம் நிறுத்த வேண்டும். அவர்கள் தூரிகைகள், பேனாக்கள், கிட்டார், கேமராக்களை எடுத்துச் சென்று தங்கள் விருப்பங்களையும் ஏமாற்றங்களையும்  கலையாக வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசின் தணிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றன? இனப்பிரச்சினை, போராட்டங்கள், குயர் விடயங்களை திரைப்படம் ஆக்கும் போது தணிக்கை நடவடிக்கைகள் தடைகளை ஏற்படுத்துகின்றனவா?

அரசாங்கத் தணிக்கைப் பிரிவின் அனுமதி இல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் இலங்கையில்  திரைப்படத்தையோ அல்லது நாடகத்தை அரங்கேற்ற முடியாது. 2003 ஆம் ஆண்டு எனது சிங்கள மேடை நாடகமான ‘கட்டு யஹன’ ஓரினச்சேர்க்கையாளர்களின் காதல் கதையை உள்ளடக்கியதாக இருந்ததால் ஆற்றுகை செய்யக்கூடாது என்று தடைசெய்யப்பட்டது. அப்போது நான் ஒரு போலி சான்றிதழைப் பெற்றதன் மூலம் பல இடங்களில் அதை நிகழ்த்தி முடித்தேன். ஆனால் நான் குறிப்பிட விரும்பிய விஷயம் என்னவென்றால், நாங்கள் தணிக்கையால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டோம். 2015 இல்  அரசாங்கம் எந்தவொரு கலைப் படைப்புகளையும் தணிக்கை செய்யாமல் பார்வையாளர்களை வகைப்படுத்துவதற்கு மட்டுமே முடிவு செய்தது. இப்படித்தான் ஃபிராங்கிபானி  தணிக்கைச் சான்றிதழைப் பெற்று  வெளிவந்தது. தற்போது இலங்கையில் வெளிப்படையான தணிக்கை எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. என்றாலும் உங்கள் கலைப் படைப்பில் நீங்கள் சுதந்திரமாக எதையும் வெளிப்படுத்த முடியும் என்று அதற்கு அர்த்தமில்லை. அரசு அதிகாரிகளை மட்டுமின்றி பல்வேறு அழுத்தக் குழுக்களையும் (pressure groups)  திருப்திப்படுத்த கலைஞர்கள் தொடர்ந்து தங்கள் படைப்புகளை சுய தணிக்கை செய்து வருகின்றனர். அரசாங்க தணிக்கைப் பிரிவை விடுங்கள். யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் எல்லாவகையான திரைப்படங்களயும் திரையிட்டுவிட முடியுமா சொல்லுங்கள்.

………….

உரையாடியவர்கள்

ஜெனோசன் ஜெயரட்ணம்

யாழ்ப்பாணம்  நாவாந்துறையைச்சேர்ந்தவர். திரைக்கலைஞர் . முழுநீள திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், மேடை நாடங்களில் நடிகராகவும், உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். மணல் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் பங்கெடுத்திருந்தார். தற்போது ரத்மலானையில் அமைந்திருக்கின்ற இலங்கை வாழ்க்கைதொழில் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தில் (UNIVOTEC) திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பினைத் தொடர்கிறார்

 

 

யதார்த்தன்

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் சரசாலை என்ற ஊரில் 1993 பங்குனியில் பிறந்தவர், குணரட்ணம் பிரதீப் என்பது இவருடைய இயற்பெயர். யதார்த்தன் என்ற பெயரில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எழுத்து மற்றும் சமூக செயற்பாட்டாளாராக இருக்கிறார். விதை குழுமம் என்ற சமூகசெயற்பாட்டு அமைப்பில் செயற்பட்டுவருகின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் இளமானிப்பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். தற்பொழுது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுமானிப்பட்டப்படிப்பைத் தொடர்ந்துவருகின்றார். விதை குழுமம் முன்னெடுக்கும் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடான “தொன்ம யாத்திரை” இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்துவருகின்றார். மரபுரிமைகள், சாதியம், மற்றும் சமகாலப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழில் வெளியாகும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் இணைய இதழ்களில் எழுதிவருகிறார்.

 

நன்றி – வெட்சி இதழ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here