ஆல்பர் காம்யூ கிரேக்க தொன்மங்களில் ஒன்றான sisyphus இன் உருவகக் கதையை குறிப்பிடுவார், கிரேக்க புராணங்களின் படி sisyphus கடவுளர்களால் தண்டிக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஓர் உருளை வடிவப்பாறையை ஒலிம்பஸ்மலைமேலே ஏற்ற வேண்டும் உச்சிக்கு ஏற்றிய பின் அங்கிருந்து அதை தள்ளி விட வேண்டும். மீண்டும் கீழே வந்து அதை மேலே ஏற்றிச்செல்ல வேண்டும் மீண்டும் மீண்டும் இடை விடாது இதைச்செய்ய வேண்டும் பசியோ, தாகமோ, மூப்போ , மரணமோ sisyphus க்கு இருக்காது. தொடர்ந்து இதையே செய்ய வேண்டும். இதுதான் தண்டனை. sisyphus இப்பிரச்சினைக்கு தீர்வாக காம்யூ sisyphus மகிழ்ச்சியைக் கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான் வேறு வழியில்லை’ என்பார். கற்பனையை மானுட விலங்கிற்கு மட்டும் ஏற்படக்கூடிய இருத்தல் பற்றிய சிக்கலுக்கு பதிலாக முன்வைக்கிறார். மனித விலங்குகள் ஏனைய விலங்குகளுடன் இயற்கையின் இயல்பூக்கத்தேவைகளான பசி, தாகம், பாலியல் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு இவை மட்டும் வாழப்போதுமானதாக இல்லை. அவர்கள் வாழ்க்கை பற்றிய தன்னுணர்வையும், பகுத்தறிவையும் கற்பனைக்கான ஆற்றலையும் அடைந்ததன் பேறாக இயற்கையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இயற்கையில் வாழும் விலங்குகளில் இயற்கையோடு பிணைந்தும் அதேநேரம் அதில் இருந்து வெளியேற்றப்பட்டும் உள்ள ஒரே விலங்கு மனிதர்கள்தான். இயற்கைக்கு திரும்ப முடியாத மனிதர்களின் நிலையை உளவியலாளரும் மாக்சியருமான எரிக்ப்ராம் பிரபலமான விவிலியக் கதையான ஏடன் தோட்டத்தில் இருந்து மானுடர்கள் சிந்தித்ததன் பயனாக கடவுளால் வெளியேற்றப்பட்டமையை ஓர் குறியீட்டுக்கதையாக குறிப்பிடுவார். மனிதர்கள் இதே பூமியில் ஏனைய விலங்குகளுடன் தங்களின் வாழ்வைப் பகிர்ந்துகொண்டாலும் இந்தப்பூமியின் இயற்றையில் வாழ்வதற்கான அவர்களின் ‘போதாமைகள்’ காரணமாக விலங்கு இராச்சியத்தின் ஆதிக்க தரப்பாக தங்களை மாற்றிக்கொண்டனர். அதாவது அவர்களுக்கு இயற்கையில் ‘வாழ்வதற்கான அடிப்படைகளை’ தாண்டிய தேவைகள் ஏற்பட்டன. அன்பு , அடிபணிதல் , ஆதிக்கம் அடையாளம் ஐக்கியம் , மதம்,படைப்பாக்கம்,கற்பனை,உறவு, தத்துவம் போன்றவற்றின் ஊடாக தங்களின் இருத்தல் சிக்கலுக்கான பரிகாரங்களைத் தேடிக்கொள்கின்றனர். இவ்வகையில் விலங்காகவும் , அதேநேரம் மானுடச்சிக்கலோடும் இருக்கக் கூடிய மனிதர்களின் விலங்கு இருத்தலுக்கும் மானிடச்சிக்கலுக்கும் இடையிலான நடைத்தைக் கோலங்கள், உளவியல் போன்றவற்றை இலக்கியம் எவ்வாறு எதிர்கொள்கிறது. இலக்கியத்தில் விலங்குகளும், மனிதர்களும் எவ்வாறு நடமாட விடப்படுகின்றனர். இலக்கியம் காயம்பட்ட விலங்கான மனிதர்களை என்னவாக நிகழ்த்துகின்றது அதன் சாத்தியங்களும் அரசியலும் என்ன என்பதை என்னுடைய உரையாடல் பகுதியில் எடுத்துக்கொண்டுள்ளேன். தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் என்னுடைய புதிய நாவலில் இருக்கும் இரண்டு அத்தியாயங்கள் இப்பட்டறையில் வாசிக்கவும் அதன் மூலம் உரையாடலும் நிகழவிருக்கிறது.
என்னுடைய பகுதியைத்தொடர்ந்து விலங்குச்சிக்கல் பற்றிய தன்னுடைய அவதானங்களையும், முன் வைப்புகளையும் விரிவுரையாளர் மகேந்திரன் திருவரங்கன் அவர்கள் மேற்கொள்ள இருக்கின்றார். புக்கர் விருது குறும்பட்டியலில் இடம்பெற்ற நாவலான இந்திரா சின்ஹாவின் ‘Animal’s People’ நாவலைக் குறிப்பிட்டு விலங்கு நிலையும் குறைபட்ட குடியுரிமையும் பற்றிய திருவரங்கன் பட்டறையின் இரண்டாம் பாதியை நிகழ்த்துவார். ஊறுபட்ட விலங்கு நிலையை ஓர் அரசியல் பரிபாலன நிலையில் வைத்து பார்க்கும் போது நாம் வழங்க வேண்டிய நிவாரணம் என்ன? காயம்பட்ட விலங்கு நம்மிடம் என்ன வேண்டுகின்றது போன்ற கேள்விகளுக்கு இலக்கிய வடிவங்கள் உரையாடல்கள் ஊடாக எவ்வகையான அடைவுகளைக் கடந்திருக்கிறோம், கடக்கப்போகிறோம் என்பதான உரையாடல்களும் , அனைவருக்குமான பங்குபற்றல்களும் இப்பட்டறையில் அமையும் என்று எதிர்பார்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் குயர் திருவிழாவில் 23 செப்டெம்பர் 2023 சனிக்கிழமை காலை 9 மணிதொடக்கம் 4 மணிவரை முழுநாள் அமர்வு. இடம் – கலம்