முதல் நாள்

முதல் நாள்

அதிகாலையில் கலைந்தெழும் போது மூக்கடைத்திருந்தது. இரண்டு நாட்களாகக் தடிமனும் காய்ச்சலும். எழுந்தவுடன் வெண்முரசு அத்தியாயங்களை வாசிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.  குருகுலத்தில் இருப்பது போல் ஆசிரியரிலையே விழித்து விடுவது. வெண்முரசு – நீர்க்கோலம் ஒடிக்கொண்டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் வனத்தில் கழித்த பிறகு  ஓராண்டு மறைந்து வாழப் பாண்டவர்கள் புறப்படும் தருணம், வழியில் சந்தித்த சூதர்கள் நளனுடையதும் தமயந்தியினுடையதும் கதையைப் பாண்டவர்களுக்குச் சொல்லிக்கொண்டே வருகின்றார்கள்.  நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. எழும்ப வேண்டும் என்றாலும் ஏதேனுமொரு உச்சம் வரும் அதை வாசித்துவிட்டு எழும்பு என்ற உள்ளுணர்வைத் தடுக்காமல் விட்டேன். காய்ச்சலோடு விடுமுறை என்பதால் இன்றைக்கு  என் `சேக்கை ` கலைக்க நேரமெடுத்துக்கொள்ள இன்று வீட்டில் சலுகைகள் உண்டு.  சொல்லப்போனால் வீட்டு வேலைகளை விட முடிக்காமல் விட்ட என்னுடைய வேலைகள்தான் அதிகமழுத்துபவை.  முக்கியமாக காளம் 19 ஆவது அத்தியாயம் இன்றைக்கு எழுதி முடித்தாக வேண்டும். தம்பி என்னுடைய இணையத்தளத்தைப் புதுப்பித்து தந்திருந்தான். நான் கேட்ட படி வந்திருந்தது. சென்ற முறை  அவருடைய பட்டாடோபங்களை அனுமதித்திருந்தேன். இம்முறை என்னுடைய விருப்பம் போல் அமைந்திருந்தது.  இரவு நண்பர் தனுஸ் இலண்டனில் இருந்து `என்ன ஜெயமோகன் சைட் போல இருக்கு ` என்று  பகடி பண்ணியிருந்தார். ஆசிரியரின் சாயல் இல்லாத மெய் மாணவன் இருக்க முடியுமா ப்ரோ ! என்று சிரித்துக்கொண்டேன்.

இன்று மாலையில்  நண்பர் கிரிசாந்தோடு முக்கியமான உரையாடல் ஒன்று இருந்தது. இரண்டு நாட்களாக காய்ச்சலைச் சொல்லி என்னிடமிருந்து நானே  தப்பித்துக்கொண்டிருந்தேன்.  அதில் முக்கியமானது அவருடைய `ஆட்டுக்குட்டி சுவேதா` சிறுகதையை நான்  இன்னும்  வாசிக்கவில்லை. அதையும் வாசித்து விடவேண்டும்.  இன்றைக்கு அவருடைய பிறந்தநாளும். அவருக்கு வட்சப்பில் பின்னேரம் சில விடயங்கள், கதைக்க வேண்டும், பரிந்துரைகளும் அபிப்பிராயமும் உண்டு என்று மெசேஜ் செய்தேன். இந்தப்படுக்கையை விட்டு எழுந்து போக ஓர் கணத்தை எதிர்பார்த்துக்கொண்டே நீர்க்கோலத்தைத் தொடர்ந்தேன்  பதினைந்தாவது அத்தியாயத்தில் அது நிகழ்ந்தது.  நளன் தமயந்தியின் மணத்தன்னேற்பில்  அவளிடம் மாலை கொண்ட பிறகு தொடங்கும் அத்தியாயம்.

“ஏனென்றால் மானுடர் அறியும் காலமென்பது இழப்புகளின் அறுபடா தொடர். உலகியலில் இழப்புகளைக் கொண்டுதான் பெறுபவை அளவிடப்படுகின்றன. இங்கு ஒருவன் பெறுவது எதுவாக இருப்பினும் அது இழந்தவற்றுக்கு ஈடல்ல. ஏனென்றால் இழந்தவை வளர்கின்றன. பெறுபவை சுருங்குகின்றன.” தருமன் “தவம் என்பது காத்திருப்பது அல்லவா?” என்றார். “ஆம், தவமிருந்து பெறவேண்டியது இவ்வுலகு சாராததாகவே இருக்கவேண்டும். பெருநிலை, மெய்யறிவு, மீட்பு. இங்கு எய்துவனவற்றை தவமிருந்து அடைந்தவன் ஏமாற்றத்தையே சென்றடைவான்.

இனிப்படுக்கக் கூடாது என்று எழுந்து சென்று வேலைகளை முடித்து விட்டு வந்து கணணியின் முன் அமர்ந்தேன். ஏற்கனவே காளத்தின் அத்தியாயத்தின தலைக்குள் எழுதியிருந்தாலும் முதற் சொற்கள் பிடிபடாமல்  வெறும் திரைமுன் அமர்ந்திருந்தேன்.  மனம் ஒரு நிலைப்பட்டு காய்ச்சல் என்ற உணர்வை அறுக்க வேண்டும். அதற்கு  இப்பொழுது தேவை ஏதேனுமொரு நற்செய்தி என்று பட்டது. நோகும் நெஞ்சிலிருந்தும், சீரற்ற மூச்சிலிருந்தும்,  சோம்பலில் இருந்தும்  என்னை வெளியே தள்ளிவிடத்தக்க  சொல்லொன்று.

கிழமையில் ஒரே ஒருமுறை மட்டும் சமூக வலைத்தளங்களுக்குச் செல்வதுண்டு, மேலாக மேய்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்பேன். முக்கியமாக இலக்கிய உலகில் எனக்குகந்தவர்களை சென்று பார்ப்பேன். அதில் ஒருவர் அண்ணன் சிவராஜ் , போன கிழமை முழுக்க  அண்ணன் சோபாசக்தி  தன்னறம்` விருதைப் பெற்று ஆற்றிய ஆறு நிமிட உரையைப் பற்றித் தான் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தோம்.  சோபா குக்குவிற்கு அக்கணமே தன் விருது தொகையையும் அளித்திருந்தார். நெகிழ்வாக இருந்தது.  நண்பர்கள், எழுத்தாளர்கள், மீதி இருந்த தும்பி  இதழ்களை வாங்கியிருந்தார்கள். குறிப்பாக எங்களுடைய சொல் நம்பி அவற்றை வாங்கி, குழந்தைகளுக்கும், நூலகங்களுக்கும் அளித்தவர்களுக்கு என்றைக்கும் எங்களுடைய நன்றியும் அன்புமுண்டு. (கசப்பே அண்டாத பரிசு)  அவர்கள்  தும்பிக்கு   போதிய தொகையை அளித்திருக்கிறார்களா, என்று  எனக்குத் தெரியாது. ஆனால் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருந்தார்கள். சோபா செய்ததும் அதிலொன்றெனச் சேர்ந்துகொண்டது மகிழ்ச்சியே. இச்செயல்கள் இவ் எளிய உலகியல் உலகில்  சேராத பெருநிலைகளின் பாதைகள். 

முகநூலைத்திறந்ததும், அண்ணன் சிவாரஜ்  போட்டிருந்த பதிவு கண்முன் விரிந்தது.  

தை பிறந்தால் வழி பிறக்கும்…சித்திரை முதல் நாள்…

தும்பி சிறார் இதழ் மீண்டும் நற்துவக்கம்.

கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.  போனை எடுத்து கிரிக்கு தகவல் சொன்னேன், தெரியும் காலையில் மேசேஜ் அனுப்பியிருந்தார் என்றான். வெறும் திரையைத் திறந்து நாவலின் அத்தியாயத்தை, இப்படி ஆரம்பித்தேன். 

சித்திரை முதல் நாள், காட்டுப்பட்டிகளைச் சேர்ந்த இடையர்கள், அன்று  ஈன்ற கன்றுகளின் இளங்கொடிகளை உரைப்பையில் முடிந்து,    ஊருக்கு வெளியே  நின்ற பேராலின் விழுதுகளில் கட்டி, பூசைச் சடங்குகளை செய்து முடித்து விட்டுக் கலைந்து செல்வதை , நுள்ளானும் சகாக்களும் புதர்களாகவே தங்களைச் சோடித்துக்கொண்டு கிடந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். வசந்த காலத்தின் உச்ச நாட்களில் ஈணப்படும் கன்றுகள் செல்வங்களெனப்  பெருகி பட்டிகளை நிறைக்கப் போகின்றவை. போதிய புல்லும், நீரும் கிடைக்கும் இக்காலத்தில்  அவற்றின் தாய்ப் பசுக்கள் முலையூட்டும் பாலின் கடும் சுவையில்  வேனில் காலத்தின் சுவையும் பெருக்கும் இருக்கும்.  அதனால்தான் இக்காலத்தை அப்பட்டிகளைச் சேந்த மேய்ப்பர்கள். `பொலி` காலம் என்பர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here