நகுலாத்தை – குறிப்பு – கிஷோகர்
இற்றைக்கு சுமார் ஆறு ஏழு வருடம் இருக்கலாம். யாழ்ப்பாணம் அரியாலை, மாம்பழம் சந்தியில் உள்ள பபீடர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முற்றத்தில் நிலா காயும் இரவொன்றில் நண்பர்களாக பலதும் பத்தும் கதைத்துக்கொண்டு இருந்தோம். அப்போது யாரோ என்னிடம் யதார்த்தனின் ” மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் ” என்கிற சிறுகதை தொகுப்பை பற்றிய அபிப்பிராயம் கேட்டார்கள். அங்கே யதார்த்தனும் இருந்தார். நிறைய சொல்லவிலை. ரத்தின சுருக்கமாக ” குப்ப புத்தகம். நீ எல்லாம் எல்லாம் சிறுகதை எழுதேல்ல எண்டு ஆர் அழுதது ” என்று முடித்துக்கொண்டேன். சராசரிக்கும் கீழான மட்டமான கதைகளை கொண்ட தொகுப்பு அது. யதார்த்தனின் முதல் புத்தகம்.
அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஆறு ஏழு வருடங்களின் பின்னர் யதார்த்தனின் இரண்டாவது படைப்பும், முதல் நாவலுமான ” நகுலாத்தை ” படிக்கிறேன். நான் படித்த அவரது முதல் நூலுக்கும் இதுக்கும் சம்மந்தமே கிடையாது. வேறு எவரோ அவர் உடலில் புகுந்து எழுதியது போல ஒரு படைப்பு. மொழியாகட்டும், கனதியாகட்டும், கதைசொல்லும் விதமாகட்டும் , யதார்த்தன் தமிழின் இன்னுமொரு சிறந்த படைப்பை நிகழ்த்திக்காட்டியிருகிறார்.
ஈழம் குறித்தும், அதன் மக்கள் அவர்தம் வாழ்வியல் என்று ஆயிரக்கணக்கான படைப்புக்கள் வெளிவந்திருந்தாலும், அவை சொல்லப்படும் விதத்திலேயே அவை எத்தகைய சிறப்புடயவை என்கிற பெறுமானத்தை அடைகின்றன.
ஈழத்தின் போரை, குறிப்பாய் இறுதிப் போரை , முல்லைத்தீவை கதைக் களமாக கொண்டு, கீரிப்பிள்ளை மேடு என்கிற கிராமத்தை தன் கதையில் உண்டாக்கி, அங்கே உறையும் ஒரு ஆதிப் பெண் தெய்வத்தின் கோவிலோடு அணுக்கமாக கதை நகர்த்திச் செல்லும் இடத்திலேயே யதார்த்தன் வென்று விடுகிறார். காரணம், யதார்த்தன் நாவல் நெடுகிலும் சொல்லும் தொன்மக் கதைகள் (உ+ம்: ராஜ கீரி பாம்பை வேட்டையாடுவது, ‘அம்மான் என் கண்’ எனப் பாயும் அணை) தமிழ்கதையுலகில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு விதமாக வாய்வழிக் கதைகளாக சொல்லப்படுபவை. அந்தக் தொன்மக் கதைகளின் ஊடே ஈழத்தின் கதையை, அதன் கிராமம் ஒன்றை பதமான ஒரு சோறாக எடுத்து கையாண்டிருக்கும் யதார்த்தன் சிறு பிசிறும் அற்று ஆன்மாவுக்குச் சமீபமாக கதை சொல்கிறார். ஆச்சி, தாமரை, வெரோணிக்கா, நிர்மலா , சின்ராசன் என கதை நெடுக உலாவும் மாந்தர் அனைவரும் சற்று முன் நானே நீங்களோ , தெருமுனையில் கண்ட ஆட்கள் தான்.
காதல், காமம், போராட்டம், தகிப்பு, வேட்கை, ஏமாற்றம் என மனித மனஙகளின் அலைச்சலை, வாதையை, மகிழ்ச்சியை மிக நேர்த்தியான மொழியிலும் கதை சொல்லும் பாங்கிலும் அணுகி ஆச்சரியப்படுத்துகிறார்.
ஷோபா சக்தியின் ” Box ” நாவலில் ஒரு இடம் வரும். அந்த பௌத்த பிக்குச் சிறுவனுக்கு ,தமிழ் சிறுவர்கள் சிலர் இறுதி யுத்த காட்சியை நடித்துக் காண்பிப்பார்கள். நான்கு வரிகள் கடந்ததும், நம்மை அறியாமல் அந்த வரிகள் காட்சிகளாக விரிய ஆரம்பிக்கும். நாவலின் அந்த அத்தியாயம் முடியும் போது உடல் விதிர்விதிர்த்து அடங்கியிருப்பதை உணர்வோம். அப்படியான உடல் விதிர்க்கும் கணஙகளை நாவல் முழுதும் விதைத்திருக்கிறார் யதார்த்தன். Non – linear முறையில் நகரும் கதை , இந்த நாவலின் வெற்றியின் இன்னொரு உத்தி. ஆண்டு, திகதி, சம்பவம் சொல்லப்படாமல், கதாசிரியர் Non – Linear ஆக பேசிக்கொண்டு கதையை வாசகன் எந்தப் பிசிறுன் இல்லாமல் Linear ஆக வரிசப்படுத்தி புரிந்துகொள்கிறான் என்பதே எழுத்தாளரின் பெரிய வெற்றி. இதற்கு, நாவலின் பாத்திரங்களை வாசனுக்குள் ஏற்றிவிடுதல் அவசியம். அதற்கு நல்ல மொழியும், கனதியான கதையும் அவசியம். பழுத்த பக்குவப்பட்ட எழுத்தாளனைப் போல அநாயசமாக அதைக் கடந்திருக்கிறார் யதார்த்தன்.
ஈழம் சார்பாக , அல்லது ஈழத்தில் யாரைப் படிக்கலாம் என என்னிடம் எவர் கேட்ட்டாலும் ‘ ஷோபா சக்தியை ‘ படியுங்கள் என எடுத்த எடுப்பில் சொல்வது எனது வழக்கம். இப்போது ஷோபாவின் படைப்புகளோடு ‘ நகுலாத்தை ‘ படியுங்கள் என உடனடியாகவே சொல்லுவேன்.’ நகுலாத்தை ‘ ஈழத்தின் மட்டுமல்ல, தமிழில் எழுந்த ஆகச்சிறந்த பிரதிகளில் ஒன்று. வாய்ப்புள்ள நண்பர்கள் நிச்சயம் படியுங்கள்.