இரு பெண்கள் | காளம் 17

இரு பெண்கள் | காளம் 17

ஆற்றுப்பக்கம் போனவர்களைக் குளவிகள் கொட்டியிருந்தன. மழைக்குப் பின்னர்  ஆற்றங்கரைகளில் உள்ள மரங்களில் அவை கூடெடுத்திருக்கும். ஆற்றுக்குள் குதிப்பதற்கு மரக்கிளைகளில் ஏறி அவற்றைக் கலைத்து விட்டிருக்கிறார்கள். அம்புலன்ஸ் வண்டிகள் முகாமிற்குள் வந்து அவர்களை ஏற்றிச்சென்றன.  பாஸ்ரர் நேமியன் குளவி கொட்டியவர்களின் குடும்பங்களைச் சென்று பார்ப்போம் என்று இவனை அழைத்து வந்திருந்தார். அவர்களில் பெரும்பாலனவர்கள் சபைக்கு வருபவர்கள் என்பதால் இவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. எதற்கென்றாலும் பாஸ்ரரை அழைத்துப் பழகிவிட்டனர். இவரும் ஓடிச்சென்று நிற்பார். குளவி தலையில் கொட்டியவர்கள் மட்டும் ஏற்றப்பட்டிருக்க எஞ்சியவரை சுற்றமும் சனமும் சூழ்ந்து கொண்டு அவ்விடத்தை வேடிக்கையாக்கி விட்டார்கள். நேமியனும் அவர்களுடன் இணைந்து கொண்டு பகிடி விட்டுக்கொண்டிருந்தார். பெண்களும் ஆண்களுமாக அவரைச் சூழ்ந்து நின்று கதை சொல்லிச் வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தனர்.   நுள்ளான் அவர்களை விட்டுத்தள்ளி வந்து   பக்கக் கயிறுகள் அறுந்து ஒரு பக்கம் சவண்டு கிடந்த கூடாரமொன்றின் நிழலில் இருந்து கொண்டான். கையில் இருந்த ஈக்கினால் பல்லைக் குத்திக்கொண்டு  நிலத்தைக் கவனித்தான். நீர் பிரவாகமாக ஓடிய  நிலத்தின் பொருக்குகள் வரி வரியாக எழுந்திருந்தன. 

எல்லாம் சரியாக இருந்தது போன்ற உணர்வு  நெடுநாட்களுக்குப் பின்னர்  மிதந்து கிடக்கும் சலனமின்மை. நின்மதியாக நாட்கள் நகரத்தொடங்கியிருந்தன.  முகாம் மாபெரும் சிறைக்கூடம் என்ற நினைப்பு அகல ஆரம்பித்திருந்தது. வேலிகள் கரைந்து வெளியில் நிகழும் காலத்துடன் கலக்க ஆரம்பித்திருந்தனர் வன்னிச்சனங்கள். நுள்ளான் இவ் ஆற்றொழுக்கு சீராக உள்ள மனதைக் காணும் போது உருவாக்கக் கூடிய பதட்டத்தை எழவிடாமல் அன்றாட வேலைகளில் மூழ்கி இருந்தான். கடலைக் காணும் போது ஆழத்தை எண்ணாமல் இருப்பதைப் போல். துப்பரவு தொழிலாளர்களுடன் வேலைக்குச் செல்வது சம்பளத்தைத் தாண்டி தன்னை வேறொரு ஆளாகக் காண்பதற்கு உதவியது. அமலா நூறு தடவை சொல்லியும் வேலைக்குப் போவதை நிறுத்தினானில்லை. அவன் கூலிக்காகப் போகவில்லை என்பதை அறிந்தும், சம்பிரதாயமாகச் சொல்லி வைப்பதை அமலா தொடர்ந்தும் செய்து வைத்தாள். செபக்கூட்டத்தில் இருந்து வருகின்ற  பணம்  அமலாவை அமைதிப்படுத்தியிருந்தது. முழு மகிழ்வுடன் இருந்தாள்.  நுள்ளானின் வேலை அவளுக்கு கவுரவ குறைச்சலாக இருந்திருக்கலாம்,  செபக்கூட்டத்திற்கு வருபவர்கள் யாராவது இவள் கணவன் `கக்கூஸ்` அள்ளுவதாக சாடை பேசியிருக்கலாம்.  வேறு விழைவுகளேதும் இல்லாத ஆண்கள் தொழிலில் தரக்கூடிய வருமானத்தைக் கடந்து சென்று விடுகிறார்கள். அதை வழிபாடெனச் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அதன் வழியாக அவர்களுக்கு நிறைவைப்போலொன்றேனும் வழங்கப்பட்டுவிடுகிறது. அமலா சொன்னாள், நிறையாமல் இருக்கவெண்டு பிறந்தவள் பொம்பிளை. நிறைக்க நிறைக்க பெருகிற பாத்திரம், எனக்கு பத்தியம் பாத்த வில்வமாச்சி ஒருக்கா சொன்னவள், தாயிலைதான் பெண் நிறையிறாள். அப்பவும் உந்தக்குடம் நிறையாமல் இருக்குமெண்டால், அவள் தெய்வமெண்டாகினால்தான் உண்டு` 

நேற்று,  இந்த வேலைக்குச் செல்வதில் அப்படியேதும் சங்கடங்கள் இருக்கிறதா என்று கேட்டான் , `நான் உன்னைக் காதலிக்கேக்க  நீ ஆக்களைச் சுட்டுக்கொண்டு திரிஞ்சனி` என்று சொல்லிச் சிரித்தாள். `ஒரு விடுதலைப் போராட்டத்தை கொலை எண்டு சொல்லிறியோ? ` என்று கொதித்துப்போனான். 

`இனி உங்களுக்கு திரும்ப கொம்பு முளைக்க தொடங்கீடும் என்ன,  உங்கட பக்கம் நியாயமே இருந்திட்டு போகட்டும், ஒரு பிள்ளையைப் பெத்த தாய்க்கு முன்னாலை இரண்டு பேர் மாறி மாறிச் சுட்டுக்கொள்ளும் போது அது கொலை எண்டுதான் ஆகும்,  அவளே ஒரு பக்கத்திலை சாஞ்சிருந்தாலும்,  கொல்லெண்டு சொன்னாலும்,  அவளே அதைச் செய்யத் துணிஞ்சாலும் , அவளுக்குள்ள ஒண்டை அழிக்கிறதை விரும்பாத தெய்வம் வாழ்ந்து கொண்டுதான் இருக்குது` அமலா அதைச் சொல்லிவிட்டு சட்டென்று திடுக்கிட்டு கண்ணை மூடிக்கொண்டாள். எங்கோ நின்றிருந்த யாருடையதோ சொற்கள் அவளையொரு ஒலி பெருக்கியென்றாக்கிக் கொண்டு அவளுள் புகுந்து வெளிப்பட்டது போலிருந்தது. இவனை நிமிர்ந்து `இவை தன்னுடைய வார்த்தைகள் இல்லை` என்பதைப் போல் பரிதாபமாக உடைந்த கண்களுடன் ஏறிட்டாள்.

அவள் எல்லாச்சாவையும் ஒன்றெனப்பார்க்கிறாள் . நுள்ளானுக்கு அதுவல்ல பிரச்சினை ,  அவனுக்கு தன் கையால் ஆற்றியவற்றுக்கு வேறு வேறு  காரண காரியங்களும், அவற்றைத் தர்கித்து முடித்த இடங்களும், நினைக்கவே அஞ்சும் நிகழ்வுகளுமிருந்தன. தாலிக்கொடியை மீட்ட பிறகு முகாமிலேயே வைத்துக்கொண்டிருக்கலாம்தான். இனி தாலிக்கொடி விடயத்தில் யாரும் தலை போட மாட்டார்கள் என்று நுள்ளான் நன்கறிந்திருந்தான். ஆனால்  தாலிக்கொடி அவனுடைய தர்க்கித்து முடிக்காத அந்நிகழ்வுகளின் வாலின் நுணி.  யானைகள் சூழ்ந்து கொண்ட  கச இருட்டில் அவனுடைய சேடம் இன்னும் பிடரிக்கும் பின்னால்  நின்றிருந்தது.

பாஸ் கிடைத்தால் உக்காராவுடன் சென்று தாலிக்கொடியைப் பார்க்க வேண்டும் என்று அமலா சொல்லிக்கொண்டிருந்தாள். இவனுக்குப் போகும் தீர்மானமேதுமில்லை.  கைகள் தொடையில் காய்ந்திருந்த தொப்பளத்தின் அயரை உரித்தன. அதன் நடுப்பகுதி இன்னும் தசையாளத்துடன் பொருந்தியிருந்ததால், சுருக்கென்று நுண் வலி பரவி அடங்கியது.

மழைக்குப் பிறகு அம்மை வேகமாக பரவியது.  அமலாவின் கைகள் தொட இரண்டு தினங்களில் அம்மை கடுமைப்படுத்தாமல் ஆறிவிடுவதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். சுற்றியுள்ள எல்லாக் கூடாரங்களில் இருந்தவர்களுக்கும் அம்மை கண்டது, நுள்ளானுக்கு இரண்டு தொப்பளங்கள் தொடையிலும் முதுகிலும் வந்தன. இரண்டு நாட்கள் கூடாரப்பக்கம் வரமால்  ஆற்றங்கரையில் உலாத்தினான். மாறி விட்டது, யாரிடமும் சொல்லவில்லை.   சுற்றியிருந்த எல்லாக் கூடாரத்தவர்களுக்கும் வந்த அம்மை இவர்களை அண்டவில்லை என்பதை  பிறிதொரு கதையாக ஆக்கினார்கள். அமலாபற்றிய கதைகளுடன் இதுவும் சேர்ந்து கொண்டது.  அரசாங்கம் அம்மைக்கென்று பூவரசம் குளம் வைத்தியசாலையை ஒதுக்கியிருந்தது. அம்மை கண்டவுடன் அங்கே ஏற்றினார்கள்,  அமலா தலை தொட்டு ஆசீர்வதித்தவர்களுக்கு அம்மை காணவில்லை என்ற தகவலை, நேமியன் தெய்வ கிருபை, தெய்வ கிருபை என்று செபம் சொல்லி கண்ணீர் விட்டார். நுள்ளானின் கைகளைப் பற்றிக்கொண்டு அமலாவைக் குறித்து கைகள் நடுங்க ஒப்பித்துக்கொண்டிருந்தார்.  தினமும்  இவனருகில் வியர்வை மணக்க அருகணைந்து கிடக்கும் பெண் பற்றி முகாமெங்கும் தெய்வக்கதைகள் பரவுவதை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் நுள்ளான்  கணம் கணமாய் திடுக்கிட்டுக் கொண்டிருந்தான். அம்மை அடங்கிய நாட்களில் கூடாரங்களுக்குப் பதிலாக தொடராக அடிக்கபப்ட்ட தகரக் கொட்டகைகள் பெரும்பாலும் எல்லோருக்கும் கிடைக்கப்பெற்றது.

மழைக்குப்பிறகு பெரியம்மை தோன்றி சில சாவுகளோடு மெல்ல மெல்ல இல்லாமல் போனது, பழைய பத்திய முறைகளை விட்டுவிட்டு பெரும்பாலனவர்கள் ஊசி போட்டுக்கொண்டார்கள், கடுமைப்படுத்தியவர்கள் பூவரசங்குளத்தில் தனி வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு குணமாகித் திரும்பி வந்தார்கள்.   `ஒரு கட்டு வேப்பங்குளை ஆயிரம் ரூபாய்க்கு வித்தவங்கள் ` என்று குணமாகித் திரும்பியவர்கள் அங்கலாய்த்துக் கொண்டதோடு மெல்ல  அவ்வருத்தம் அடங்கியது. 

தகரக்கொட்டகைகள் அமைக்கப்பட்ட பிறகு பத்திற்குப் பத்து அடியில் தமக்கென்று அறிக்கையுள்ள வீடொன்று உருவாகி வருவதை ஒவ்வொருத்தரும் உள்ளுணர்ந்தனர்.  சி சி எம் பிக்கள் எனப்படும் இராணுவ பொலிசாரின்  வாராந்த சோதனைகளும் மிகவும் குறைந்து விட்டன. கொஞ்ச நாளில் பாஸ் அனுமதி மூலம் வெளியில் சின்று வரலாம் என்று பேசப்பட்டது. தொழிலுக்காக வவுனியா, மன்னார் போன்ற நகரங்களுக்கு பகலில் சென்று வரலாம். தகரக் கொட்டகைக்குள் சமைக்க அனுமதியேதும் வழங்கப்படாவிட்டாலும் முற்றத்தில் சமைக்க ஆரம்பித்து பின்னர் உள்ளே அடுப்புகள் மூண்டன. அரசி, பருப்பு, மா எல்லாம் தேவைக்கு அதிகமாக வழங்கப்பட்டன.  

பாஸ்ரர் நேமியன் உள்ளத்தில்  ஏற்கனவே தேவாலயம் ஒன்று எழுந்திருந்ததை நுள்ளான் நன்கறிந்திருந்தான்.   இப்பொழுது அவருடைய  கனவு பெருகியிருந்தது.  பார்வை சென்று மீழும் தொலைவையும் சொற்களையும் அவனால்  ஓரளவிற்கு மேல் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடங்கும் போது இருந்த திட்டமேதும் அவரிடம் மிச்சமில்ல. அமலாவும் `ஆமிக்காரன் விட்டாலும், உந்தாள் விடாது` என்று சொல்லிச் சலித்துக்கொண்டாள். அவர் அங்கு தனக்கென்றொரு சுற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். சபையின் மேல் மட்டங்களால் அறியப்பட்டவராக மாறிக் கொண்டிருந்தார்.  இலத்தீன் மொழியில் `ஒளியை எடுத்து வந்தவர்` என்று பொருள்பட சபையினால் பாராட்டுச் சட்டகம் ஒன்றைச் செய்து அனுப்பியிருந்தார்கள். அது கிடைக்கப்பெற்ற நாட்களில் இருந்து அடிக்கடி அதைத் தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.  அமலா தினமும் பாஸ்ரரையும் மனைவியைப் பற்றித்தான் புறணி பேசிக்கொண்டிருந்தாள். ஆனாலும் இப்பொழுதெல்லாம் முழுநேரமாக பிரார்த்தனைக் கூடத்திலேயே கிடந்தாள். இவனோ அத்தைக்காரியோ  குழந்தையைத் தூக்கிச் சென்று பாலூட்டச் செய்ய வேண்டியிருந்தது.  நேமியன் பற்றி அமலா சொன்னதை இவனும் நன்குணர்ந்திருந்தான். அமலா  தீர்மானமாக, அவர் குடும்பத்தோடு வெளிநாடு செல்லும் எண்ணத்தை அவர் கைவிட்டிருந்தார்  என்பதை சொல்லி வைத்தாள்.  இப்பொழுது அவள் முழுமையாக நம்பியிருந்தது உக்காராவை மட்டும்தான். அன்றைக்கு இருவரையும் பாஸ்ரர் வரச்சொல்லியிருந்தார்.  நுள்ளானுக்கு அவரடைந்த தோரணையும் ஒளியும் கொஞ்சமும் ஒட்டவில்லை.  அங்கே செல்வதை முடிந்தவரை தவிர்ப்பதுண்டு. 

பாஸ்ரர் மழைக்குப் பிறகு அழிந்த  செபக்கூடத்தை சீமெந்துக் கட்டடமாக கட்டிக் கொள்ள  அனுமதி வாங்கியிருந்தார். இன்னும் வேலைகள் தொடங்கவில்லை. அவருக்குள் உருவாகிக் கொண்டிருந்த பெருந்திட்டங்கள் சிறிய எதையும் உடனே செய்ய அச்சப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

 சபையில் இப்பொழுது ஆயிரக்கணக்கில் சனங்கள் திரண்டனர், அதில் பாதிக்கு மேலே  ரோமன் கத்தோலிக்கர்களும், சைவர்களும் இருந்தனர். மழைக்குப் பின்னர் அவ்வரத்து அதிகரித்திருந்ததையும் அவர் உணர்ந்திருப்பார். அவருடைய பெயரில் சபை மழைக்கு நிவாரணங்களைக் கொண்டு வந்து கொட்டியது. சபைக்குரியவர்களுக்கு மட்டும் தரப்பட்ட நிவாரண மூட்டைகளை நான்காக பிரித்து  முடிந்தவரை  தங்களுடைய பிளாக்கிற்கும் அதைச்சுற்றியிருந்த பிளாக்குகளுக்கும்  கொடுக்கச் செய்தார்.  `ஏசு அப்பத்தைப் பிரித்தது போல` என்று அவர் சபையில் அதை அழுத்திச் சொன்னார்.  இவ்வளவு விரைவாக அதுவும் மாதக்கணக்கில்  இவ்வளவு சனங்களை சபைக்குத் திரட்டுவதில் அவருடைய நாவன்மை முன் நின்றது.  அமலாவின் `குணப்படுத்துதல்`  கூட்டங்களை கதைகளாக உருவாக்கிக் கொண்டார்.  தினமும் உற்சாகமாக எதையாவது புதிதாக யோசித்து வந்து சொல்வார். நாளில் ஒரு முறையேனும் நுள்ளானுடன் உரையாடுவதை வழக்கப்படுத்திக் கொண்டார்.  இவன் அவரிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தான். இடையனால் நன்கறியப்பட்ட ஆடென அவனை எப்படியோ பிடித்துவிடுவார்.

பாஸ்ரர் கொஞ்சம் புதிரானவரும் கூடத்தான். அவர் யாரையும் மதம் மாறவேண்டாம் என்றே சொல்வார். `நாமோரு மதமாக அல்ல ஆண்டவரின் சமூகமாக உருவாகியிருக்கிறோம் ` என்பார்.  அமலாவிடம் இதைச் சொல்லிச் சிலாகித்தால் `அவர் ஆரையும் மதம் மாத்த விரும்பேல்ல, தானொரு மதத்தை உருவாக்கோணும் எண்டு நினைக்கிறார்` என்றாள்.  சனங்கள் பெருகப்பெருக சபைக்காரனின்  ஆணைகளை அவர் ஏற்காமல் அவர்களுடன் விவாதிக்கத் தொடங்கியிருந்தார். அமாலாவைக் கொண்டுதான் ஆங்கிலத்தில் கடிதங்களை எழுதுவதால் அவளுக்கு அவருடைய எண்ணமும் போக்கும் கொஞ்சம் பிடிபட்டிருந்தது. ஆனால் அவர் சனங்களுக்கு முன் நிற்கும் போது சொல்வதெல்லாம், ஆட்களைத் திரட்டுவதற்கான பசப்பு வார்த்தைகளா , உண்மையா என்று புரிபடாது. எழுபதாயிரம் பேருக்கு மேலிருக்கும்  முகாமில்  நூற்றுக்கணக்கில் போதகர்களும், அருட் தந்தையர்களும், கன்னியாஸ்திரிகளும் இருந்தனர். அங்காங்கே வேறு சபைக்கூட்டங்கள், செபங்கள் எல்லாம் நிகழ்ந்தபடிதான் இருந்தன. ஆனால் நேமியனிடம்  மந்திரமென்று சொற்கள் எழுந்தன.  அவற்றின் செயல்வடிவமாக அமலா இருந்தாள். அமலா எந்த மத அடையாளங்களையும்  தாங்குவதில்லை.  தொடுவாள், நேற்றியில் குறியிடுவாள். ஒரு சொல்லும் சொல்வதில்லை. கடும் நோயாளிகளிடமும் குழந்தைகளிடமும் மட்டும் கனிவாகப் பேசுவாள். அவளுடைய தொடுகையில் உள்ள தெய்வத் தன்மையைப் பற்றி நுள்ளானுக்கு வகுப்பெடுப்பார்.

`ஆரம்பத்தில் ஆண்டவருக்கு ஒவ்வொருத்தரையும் தொட்டு அருளவேண்டியிருந்தது, தன் கரங்களால் அதிசயங்களை எழுப்ப வேண்டியிருந்தது, ஏனெண்டால்  முதல்ல கதையள் உருவாக வேணும்,  அது உருவாகிப் பரவின பிறகு ஆண்டவர் யாரையும் தீண்ட வேண்டியிருக்கவில்லை. அவருடைய சொல்லே எல்லோரையும் சென்று தொட்டது. குணப்படுத்தியது.  அவர் குன்றின் மேலோ, உயரச் சுவர்களின் மேலோ நின்று பேசினாலே போதுமாக இருந்தது.  சொல் ஒரு அப்பத்தையும் இரண்டு மீன்களையும் கொண்டு  நூறு பேரின் வயிற்றில் எரியும் பசியின் நெருப்பை அணைக்கக் கூடியது, ஆண்டவர் அழிக்கும் விடுவிக்கும் பெருங்காற்றை  எழுப்பிச் செல்லக் கூடியது , அது   கூட்டத்தை உருவாக்கியது, பிறகு கிராமங்களாகப் பெருகியது, நகரங்கள் இழுத்துக் கொண்டது , பின்னர் பெருகிப் பெருகி  ஆண்டவரின் அரசை அமைத்தது`  நேமியன் இப்பொழுது குன்றில் நின்றிருக்கிறார், அவர்  அருகில் நின்று பேரும் போது  இவனை ஒரு சாண் கீழே கண்களால் இறக்கிய பாவனையுடன் பார்த்தார்.

கனவு எழுந்த சாமனியனின் கண்களில்  அவனுடைய  கடந்த காலத்தின் எரிந்த சாம்பல் கூட எஞ்சுவதில்லை. நேமியன் வெறும் போதகராக இருந்த காலத்தில் அவரிடமிருந்தது  எதுவும் இப்பொழுது எஞ்சியிருக்க வில்லை.  முன்பெல்லாம் தன் ஆடைகளை அணிவதில் நேர்த்தியும் அதனளவில் பட்டாடோபமும் கொண்டவர். இப்பொழுது ஆடையின் இறுக்கத்தையும் , பாரத்தையும் குறைத்துக் கொண்டார். கதர் போன்றதொரு துணியை அணிந்து கொண்டார்.  தூரத்தில் லேசாக மாலையொளி விழுந்தது போல மஞ்சள் பாசாடை எழும் அருகில் சென்றால் வெண்மை என்றாகும் மயக்குக் கொண்டதாயிருந்தது.  அவருக்கும் சேர்த்து மரியம் அன்ரி வாயாலும் தோற்றத்தாலும்  நிறங்களை கூட்டிக்கொண்டு சென்றாள்.  ஓர் நலன்புரி முகாமிற்கோ, அகதிகளுக்கோ துளியும் சம்பந்தமில்லாத `பிரபுக்களின் ஆசை நாயகியரின் ` டாம்பீகம் அவளை நோய் போல் தொற்றிப் பெருகிக் கொண்டிருந்தது.  பிற பெண்கள் சட்டென்றொரு கீற்று வஞ்சத்தை உள்ளடையுமளவிற்கு இருந்தன அவளுடைய செய்கைகள். அமலா சீக்கிரத்தில் எதையும் தன்னோடு ஒப்பிட்டுக் குறுக்கிக் கொள்ளாதவள், ஆனாலும்  மரியம் அன்ரியின் பாவனைகள் அவளுள்  எப்பொழுதுமிருந்த அந்தப் பெண்ணை விரைவாகவே  சீண்டி , மரியம் அன்ரியின் மேல் `சலித்த` புகார்களுடன் தினமும் கூடாரத்திற்குத் திரும்பச் செய்தது. அடிக்கடி `எல்லாம் தன்னால் கிடைத்தது` என்பதை சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தாள்.  நுள்ளானை விட உக்காராவுடன் கைபேசியில் உரையாடும் போது  அவ்வப்போது காதில்படும் துண்டுபட்ட உரையாடல்களிலும் மரியம் அன்ரியைப் பற்றிய புகார்களே நிறைந்திருக்க கண்டான்.  பெண்களடையும் இவ் எளிய வஞ்சங்களை அணுக்கமான ஆண்கள் சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். இன்னொரு பெண்ணில் அநாவசிய வஞ்சமில்லாத பெண்ணை எந்த ஆணும் சந்தித்ததில்லை என்று ஒருமுறை உக்காரா சொன்னான்.  இருவரும் உரையாடிக்கொள்ளும் போது எழும் பெண்ணுரு இவளேதானேன்றாலும், சொல்லிக்கொள்வதில்லை. உக்காராவுடன்  கதைக்கும் போது முழுதும் ஆணினால் நிரம்பிக்கொண்ட உரையாடலையே நுள்ளான் விரும்பினான். முக்கியமாக  தாயையும் அமலாவையும் விலக்கிக் கொண்ட உலகத்தை வெகு நாட்களாக அவன் ஆழ் மனம் விரும்பிக்கொண்டிருந்ததை உக்காராவுடன் இருந்த  பொழுதில் தான் தன்னை விலக்கி அறிந்து கொண்டான்.  இருவரும் பிற பெண்கள் என்று ஆன கணத்தில் அவன் எப்பொழுதும் வாழ விரும்பியதைக் கண்டான். அந்தக்கணத்தில் அதுவே அவன் அஞ்சும் உணர்வென்றும் அவன் திழைக்கும் கணமென்றும் ஆனது.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’