காடெனும் தந்தை | காளம் 16

காடெனும் தந்தை | காளம் 16

உக்காரா தாலிக்கொடியை ஏற்றிக்கொண்டு நேராக தோமையர் பிலவிற்குப் போனான். பணிக்கர் அடிவானம் வரை கையை நீட்டி  இவ்வளவும் `எங்கடை` என்பார். ` தாதைப் பணிக்கனுக்கு அரசன் அளித்த நிலம்` என்று பழைய  வரிவடிவில்  எழுதிய பழைய செப்பேட்டின் கறுப்பு வெள்ளைப்படம் ஒன்று அவரின் கொட்டிலில் கண்ணாடிச் சட்டகத்தில் பொருத்தி வைத்திருந்தார். அச்செப்பேடு இப்பொழுது இங்கிலாந்து  அருங்காட்சியகத்தில் இருப்பதாக  பெருமைப்பட்டுக் கொள்வார்.  வவுனியா மன்னார் எல்லைக்கிராமங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு  அரைச்சதுப்பும் வயல் நிலங்களும் கொண்டது. இருந்த தொமையர் கோவிலைத் தவிர சீமெந்து கொண்டு அப்பிய ஒற்றைச் சுவர் கூட இல்லாத  குடி. சதுப்பும், வயலும் காடும் மூன்று பக்கமாகச் சூழ்ந்து கிடக்கும். காலத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் என்றைக்கோ  அந்நிலம் தன்னை விடுவித்துக்கொண்டது போலிருக்கும். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் போக ஊரை நீங்கித் திரும்பும் பிள்ளைகள் வெறொரு இடத்திற்குத் திரும்புகிறோம் என்று பிரமைப்படுவது வாடிக்கை.. வேட்டையும் கூத்தும் அவர்களுடைய தொழில் என்றாலும் வேட்டையை விற்பதில்லை.  அறுபது குடும்பங்கள்வரை அங்கேயிருந்தனர். வெளியில் மணம் செய்து சென்றாலொழிய யாரும் ஊரை நீங்குவது அரிது. சில நிலங்களே, நாம் யாரோ காணும் கனவுதான் என்று எண்ணும்படி  சில சமயம் தோன்றும். சங்கிலி நாடகத்தின் முடிவில் சில சமயங்களில்  தோமையர் பிலவின் கதை அசரீரியின் குரலில் வெறும் மேடையில் சுருக்கமாக ஒலித்து ஓயும்.

`சங்கிலி குருதி கொண்ட போது , ஏசுவின் திரு நாமத்தை ஏற்றிருந்த  கூத்துக் கலைஞர்கள் தொலைவில் எங்கோ களரி அமைக்கச் சென்றதால் பிழைத்தனர், அவர்கள் திரும்பியதும் ஊரழிந்து கிடப்பதைக் கண்டு அச்சப்பட்டு அன்றைக்கு இரவே புறப்பட்டு தோமையர் பிலவிற்கு வந்தனர்` 

பணிக்கர் ஒரு முறை  சொன்னார் `பாவம்  சொல்லிச் சொல்லி நிலைப்பது` அன்றைக்கு இங்கே வந்த குடிகள் வெளி உலகோடு ஒன்றுவதைக் கைவிட்டனர். அவர்கள் உள்ளத்தில் தலைமுறைகளுக்கும் ஆறாத நீள் காயமொன்று ஏற்பட்டிருந்தது.  இன்றைக்கு வரைக்கும் அவர்கள் கூத்தொன்றைத் தவிர எதன் மூலமும் உலகைத் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை.  அவர்களில் உலகம் தெரிந்த ஒரே ஆள் பணிக்கர் மட்டும்தான்.

உக்காரா தாலிக்கொடியை மீட்க முடியும் என்ற நம்பிக்கை  பிறக்கத் தொடங்கும் போதே அவனைப் பணிக்கரிடம் விடுவதுதான் சரி என்று யோசித்து வைத்திருந்தான். பணிக்கரிடம் கேட்டபோது எந்தத் தயக்கமும் காட்டவில்லை. எனினும் அவனை மீட்ட அன்றிரவு , என்னோடை இருக்கிறியா? என்று கேட்டுப்பார்த்தான்.

`இல்லை, ஆவணங்கள்,  பதிவுகள் இல்லாமல்  இருக்கேல்லாது, என்னோடை ஏழெட்டு பெடியளை வச்சிருந்தவங்கள். எல்லாரும் காம்புகளிலை இருந்து பிடிச்ச ஆக்கள். என்ர வயசு கூட இல்லை. இயக்கம் பிடிச்சுக்கொண்டு போய் ஒரு நாள் இயக்கத்திலை இருந்திட்டு ஓடி வந்த பெடியனைக் கூட விடேல்ல, என் புனர்வாழ்வுக்கு வராமல் உச்சிக்கொண்டு திரிஞ்சனி எண்டு தூக்கி வந்திருக்கிறாங்கள்,  காச்சட்டையோட சலம் மலமெல்லாம் போக அவங்கடை காலைப்பிடிச்சு குழறினவங்கள்,  விடேல்ல,  எண்டைக்கு இருந்தாலும் நான் வாய்க்கு கிட்ட போய்  பல்லிலை ஏறி இருந்திட்டு வந்திருக்கிறன், ஏதும் பிரச்சினை எண்டு வந்தால் அவங்களுக்குத் தேவை எண்டால் பிடிக்கலாம், என்னாலை தேவையில்லாம உங்களுக்கு பிரச்சினை வரக்கூடாது`

கம்பி வேலியிலும் கைபேசியிலும் கதைக்கும் போது எல்லாவற்றுக்கும்  `மிகைந்து உணர்ச்சிவசப்படும்` சிறுவன் கண்டவனின் குரலும் பாவனையும் முழுவதும் வடிந்திருந்தது. பணிக்கரைப்பற்றிச் சொன்னபோது  உடனே போவோம் என்று விட்டான். இரவு முழுவதும் அமலாவுடன் கைபேசியில் கதைத்தான். அவர்கள் இன்னும் செட்டி குளம் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முழு முகாமும்  வெள்ளம் வற்றாமல் கிடந்தது. ஏழேட்டுப்பேர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். அன்றிரவு நுள்ளான் அமலாவையும் குழந்தையையும் அத்தைக்காரியையும்  ஏற்றி அனுப்பி விட்டு ஆட்களை மீட்க  உதவி செய்யப்போயிருந்தான். இரண்டு நாட்களாகத் தகவல் இல்லை.  கடைசியாக வவுனியா வைத்திய சாலையில் இருந்து யாருடையதோ கைப்பேசியில் இவனை அழைத்தான்.  எங்கோ மயங்கிப் போனானாம்.  செஞ்சிலுவைக்காரர்கள் மீட்டு வைத்திய சாலையில் சேர்த்திருக்கிறார்கள். அவனைப்போய்ப் பார்த்தான். அழைத்து வந்து வீட்டில் வைத்திருந்தான்.  இரண்டு நாட்கள். நுள்ளான் தேறியதும்,  செட்டிகுளம் பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று விட்டான். மழையோடு பலரும் வெளியேறி இருக்கலாம். தப்பிச்சென்றிருக்கலாம், பள்ளிகூடத்தில் கூட அத்தனை பாதுகாப்பில்லை. ஆனால் அவர்கள் இப்பொழுது உருவாக்கியிருப்பது,  ஆவணங்களின் சிறை. தப்பினால் கடலேறி விட வேண்டும், ஆவணங்கள் இல்லாமல் சிக்கானால் அவ்வளவுதான். உக்காரா தனிக்கிருந்த கொஞ்ச செல்வாக்கினையும், அரச வேலையையும் வைத்துக்கொண்டு இவ்வளவும் செய்து கொண்டிருந்தான்.  நுள்ளானை அங்கே கொண்டு சென்று சேர்ப்பித்த அன்று மாலையில் தாலிக்கொடியை மீட்பதற்கான அழைப்பு வந்திருந்தது.  உக்காரா வாழ்நாளில் இவ்வளவு உற்சாகமாக நாட்களை கடந்ததில்லை.  பள்ளிக்கூடத்திற்கு ஒவ்வொரு நாளும் ஏதேனும் வாங்கிக்கொண்டு போய் வந்தான். அமலாவினதும் நுள்ளானிதும் அருகாமை அவனுடைய அன்றாடத்தை சலிப்பிலிருந்து மீட்டெடுத்துக் கொண்டிருந்தது.

உக்காரா மோட்டார் சைக்கிளை வழமைபோல்   அத்தி நிழலில் சரித்து விட்டு இவனை அழைத்துக்கொண்டு  தோமையர்  கோவில் முன்றலில் நிழல் பரப்பியிருந்த  கொழும்புப் பூவரசுகளை நோக்கி நடந்தான். ஊர் கூடியிருந்தது. பணிக்கர் வழக்கம் போல பிரசங்கி அவதாரத்தில் இருந்தார். சுற்றமும் தமரும் கூடியிருக்க  அவருடைய குரல்  உரப்பிக் கொண்டிருந்தது.

காடும் நிலமும்  கடலும்  சேர்ந்து மொத்தமா ஒரு உயிர் , இன்னது எண்டு அறியாத, பெரிய மிருகம் ஒண்டின்ர  உரோமங்களுக்குள்ள வாழுற உண்ணியளும் தெள்ளும்  போலத்தான் மனிசர்.   காட்டுக்க இருக்கேக்க நிலமும், தண்ணியும், கல்லும் மலையும், புல்லும், பத்தையும், மரங்களும், செடி, கொடியளும், காட்டு விலங்குகளும் எல்லாமே அந்த  ஒரு உயிருக்க அடங்கும். எண்டைக்கும் அதுகள் தாங்கள் வேறை எண்டு அறிஞ்சதில்லை.  ஆனால் பாவப்பட்ட மனிசர் அதுக்குள்ள சேரமாட்டம். ஏனெண்டால் நாங்கள் அந்த உயிரைப் பிச்சுக்கொண்டு வெளிக்கிட்ட சீவன்கள்.  நானெண்ட அகங்காரம் முத்தி வெடிச்ச அண்டைக்கு நீ வேறை நான் வேறை எண்ட மிகப்பழைய பொய் உருவானது. அண்டைக்குத்தான் மனிசர் பிறந்திருக் இருக்க வேணும்.  கருக்குடத்திலை கிடந்த பிள்ளை தன்னை  இன்னார் எண்டு உணரும் போது அது பிறக்குது. ஈணுற அண்டைக்கு மனிசர் பிறக்கிறேல்லை, அறியிற அண்டைக்குத்தான் பிறக்கிறம். மனிசரின்ர பிறப்புத்தான் முதல் அழிவு. 

 பிறப்பு தெய்வத்துக்கு எதிரானது எண்டு  கொப்பாட்டன் சொல் ஒண்டு இருக்கு. ஈனப்பிறவியள் நாங்கள், பிச்சுக்கொண்டு வெளிக்கிட்டாலும் ஒரு தாயைப்போல காடும், கடலும் எங்களிட்ட கருணையோட இருக்கு,  தாயும் சேயும் எண்டாலும் அதுக்கெண்டு ஒரு நெறியிருக்கு,  அவளின்ர உக்கிரத்துக்கு முன்னாலை உண்ணியளும் தெள்ளுகளுமாய் வாழ்ந்திட்டுப்போக உருவானதுதான் நெறி. காடுதான் நெறிகளின்ர பிறப்பிடமும். மனிசருக்கு எண்டுள்ள ஒரே தெய்வம். தாயைத் திண்டுதான் நாங்கள் இஞ்ச வாழ வேணும். ஆனால் முலையூட்டுறதுக்கும்,  காம்பைக் கடிச்சு சதை தின்னுறதுக்கும் வித்தியாசம் இருக்கு, இண்டைக்கு நீங்கள் செய்ய வெளிக்கிட்டது அப்பிடி ஒண்டுதான். மனிசர மட்டும்தான் தெய்வங்கள் கைவிட்டிருக்கு, ஆனால் பறவையிலையும் , விலங்கிலையும் , புழுவிலையும் , பூச்சிலையும் வந்திறங்கிறதை தெய்வங்கள் கைவிட்டதில்லை எண்டதுதான்  பழம்பாட்டுச் சொல்லுறது.

பணிக்கர் கண்களால் எரிந்துகொண்டிருந்தார். 

பணிக்கர் எதற்கு அசராதவர், கொடும் சாவுகளும்  கூட அவரை அசைப்பதில்லை. ஆனால் அவர் ஆழ நம்பும்  அக உலகின் பின்னல்களை யாரும் குலைக்கும் போது நிதானமிழந்து விடுகிறார். அவர் முன் நின்றிருந்த இளைஞர்கள் த அவரை ஏறெடுக்க முடியாமல்,கண்களைத் திசைக்கொன்றாக எறிந்துகொண்டிருந்தனர். அவருடைய கண்ணோ சொல்லோ தம்மில் நின்று விடாமல் தடுக்க அவர்களின் உடல் மொழி சிறுத்துச் சிறுத்து ஓடி மறைந்து கொண்டிருந்தது. அவர் சொற்களின் வெம்மை துருத்திவாசலில் காட்டிய உலோகமென   நுண்ணதிர்ந்து கொண்டிருந்தது. பணிக்கருக்குத் தெரியாமல் அழுங்கு ஒன்றை அடித்து விற்றிருக்கிறார்கள்.  பொலிஸ் பிடிக்கும் என்பது போக அழுங்கு அபூர்வமான உயிர். காட்டை  லட்சபோ லட்சம் என்று பெருகும் சிற்றுயிர்களிடமிருந்து காத்து, காட்டின் சமநிலையைப் பேணும் விலங்கு. பணிக்கரால் அதைத்தாங்க முடியவில்லை.  நாடகீயமான சொற்களைச் சொல்லக்கூடியவர்தான், கூத்துக்கட்டிக் கட்டி சொல்லும் நாவும் எதற்குப் பழகியது அதுவாகவே ஆனவர்களின் பேச்சு இயல்பிலேயே அத்தகையதாகிவிடுகிறது. அவர்கள் தம்  உள்ளம் பெருகும் போது தடுக்கமுடியாதவர்கள் என்றாலும், சொற்கள் நீர்மட்டம் கொண்டு அடுக்கியது போல  எழும். பணிக்கரிடம் ஏற்கனவே முழுவதும் ஒப்பித்திருந்தான். கூத்தும் வேட்டையுமாக அவரே கட்டிக்காப்பது இச்சிறுகுடி

தாலிக்கொடி ஆர்வமாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.   உக்காரா  இரவே இவனுக்கு காட்டைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் சில நாட்கள் அங்கிருக்க நன்றாக இருக்கும். ஆனால் அதுவே அன்றாடம் என்று ஆகும் போது ஓர் கிராமத்தைப் போலவோ நகரத்தைப்போலவோ இருக்காது என்றான். தன் யெவ்வனத்திலிருந்து அவர்  இவற்றைச் சொன்னான்.  கனக்கும் அமைதியும் அழிக்கும் உக்கிரமும் கொண்டது காடு.  இதுவரை அறிந்த எல்லாவற்றையும் உதறிவிட்டு குழந்தைக்குரியை ஆவலொடு ஒவ்வொன்றாக எதிர்கொண்டு அறிந்து அறிந்து அதனோடு பொருந்திப்போக வேண்டும் என்றான். ஒவ்வொரு எறும்பையும் ஒவ்வொரு  செடியையும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கும். `காடு தாய்மையை அறியாதது, அதற்கு தகப்பனின் இயல்புகள், கடுமையும் நேறியுமே அங்கே வாழ்க்கை, நிலம் தாயெண்டால் காடு தேப்பந்தானே`  பணிக்கரின் சொல்லையே அவனிடமும் சொல்லி வைத்தான்.

உக்காரா நுள்ளானுக்கும் அமலாவிற்கும் வாக்களித்திருந்தான். பள்ளிக்கூடத்தில் இறுதியாக விடைபெறும் போது நுள்ளானும் அமலாவும் `சரியா வருமோ ?` என்று கேட்டுக்கொண்டேயிருந்தனர். நுள்ளான் இவனோடு கழித்த இரண்டு நாட்களும் தாலிக்கொடி பற்றியே கவலைப்பட்டான். உக்காரா அவனிடம் எப்படி அதைச்செய்தாய் ? என்ற புதிரை தெரிந்துகொள்ள விரும்பினாலும் எதையும்  அவனிடம் கேட்கவில்லை. அமலாவை விட நுள்ளானே தனக்கு மிகவும் அணுகியிருந்ததை அவர்களை நேரில் கண்டபோது அவனே வியந்திருந்தான். நுள்ளானின் நெருக்கம் எல்லாக்கேள்விகளையும், விடுப்புக்களையும் அகற்றியது, உக்காரா நுள்ளானை அக்கணத்தில் அணுகி நெருங்குவதைத் தவிர எதையும் செய்ய விழையாமல்  இருந்தான்.  நுள்ளான் நுட்பமாக அமலா பற்றிய பேச்சுக்களை இவனிடம் இருந்து தள்ளித் தள்ளி வைப்பதைக் கண்டு உள்ளூர மகிழ்வும் நிறைவும் அடைந்தான். 

பள்ளிக்கூடத்தில் அமலா தாலிக்கொடியைப் பற்றி விசாரித்த போது `வேறை ஆரோ மாதிரி ஆகிட்டான், கதைக்கிறான் இல்லை` என்றே சொன்னான் உக்காரா.அந்த ஒன்றரை மாதங்களில் தாலிக்கொடி தன்னுடைய பைதல் பருவத்தை முழுதும் இழந்திருந்தான். ஆணை நோவும், சாவும் ஒடுக்கி கல்லென்று ஆக்கிவிடுகிறது. சொல் குறைந்து ,  ஆள் பெருகிவிடுகிறான். பெண்ணுக்கோ   இயல்பிலேயே சாத்தியிருந்த அவளின்  மடைகளை உடைத்து விடுகிறது. அவள் தன்னைச்சொல்லிச் சொல்லி ஆற்றப்பாக்கிறாள். புலம்புகிறாள், வஞ்சமடைகிறாள் கதை கதையாக தன்னை கொட்டிக்கொண்டே இருக்கிறாள். தானே தன்னைச் சலித்து  முழுதடங்கும் இடம் அவளை விட்டுத் தூரம் சென்றுவிடுகிறது.  தாலிக்கொடியில் அதுவரை வாழ்ந்தது  தாய்க்காரிதான்.  அவன் அடைக்கப்பட்டிருந்த நாட்களும் , கொடுமை செய்யப்பட்ட நாட்களும் அவனில் இருந்த தாய்க்காரியை முழுதழித்திருந்தது. அமலா அதை  உக்காரவிடம் சொல்லவில்லை என்றாலும் ,  தாலிக்கொடியை நன்குணர்ந்தாள். தாயை அழித்து மேலெழும் ஆண்பிள்ளை அழிப்பவன் என்று ஆவான் இல்லையா?  நுள்ளானை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தாள்.  அவளுக்கு  அளிக்கப்படும் எல்லா ஆண்களும்  முடிவில் ஒரே உருவத்தைத் தான் அடைகிறார்கள். பின்னர் உக்காராவை நிமிர்ந்தாள். தாலிக்கொடியை அவன் பார்த்துக்கொள்வதற்கும் இவ்வளவு மினக்கெடுவதற்கும் என்ன காரணங்கள் இருக்க முடியும். ஓர் இடைத்தரகராக அழைத்துவரப்பட்டவன். எல்லாம் சிதறி அழிந்த பிறகு தன்னை மட்டும் எடுத்துக்கொண்டு  வேறெங்கோ போய்விடும் அவளுடைய எண்ணம் மிகவும் ஆழத்திற்குப் புதைந்துகொண்டிருந்ததை அவள் காணப் பயந்தாள்.  தகப்பனின் பன்றிக்கண்கள் எழுந்தடங்கின. நுள்ளான், குழந்தை, தாலிக்கொடி, இப்பொழுது உக்காராவுமா? உதற உதற ஒட்டிக்கொண்டே இருக்கிறது எல்லாம். தாலிக்கொடியை மீட்ட பிறகு அவள் மீண்டும் தன்னுடைய அலுவல்களைப் பார்க்கச் சொன்னாள். நுள்ளான் இருக்கும் போதே அதை அழுத்திச்சொன்னான். நுள்ளான் எதுவும் சொன்னானில்லை. நுள்ளானிடம் பணிக்கரைப் பற்றிச்சொன்னான். பயப்பட ஒன்றுமில்லை என்றான். நுள்ளானுக்கு தாலிக்கொடியை யாரும் இனி நெருங்க மாட்டார்கள் என்று தெரிந்திருந்தாலும்,  அக்கறையுடன் விசாரித்தான்.  அமலா தாலிக்கொடி என்றாலே எரிந்து விழுந்த நுள்ளானில் தகப்பன் என்று ஆனவொன்றைக் கண்டாள். மகளொருத்தி பிறந்த போது கூட அவனந்த முகத்தை அடைந்திருக்கவில்லை. 

`ஏலுமெண்டால் பள்ளிக்கூடம் விடுங்கோ !`

அமலா கொஞ்சம் அதிகமாக ஆசைப்படுவது போல் தோன்றினாலும் உக்காராவிற்கு அவள் உள்ளம் புரிந்தது.  

`ஒரு வருசம் இறங்கிப் படிக்கிறதாலை ஒண்டும் குறையாது, பிரச்சினையள் ஓஞ்ச மாதிரிக் கிடக்கு ஆனால் அப்படியில்லை`

அமலா தன்னிடம் இருந்த சிறு தொகையை இவனிடம் கொடுத்தாள். வேண்டாம் என்று சொல்லும் போது,  எப்பொழுதும் இல்லாத நாடகம் ஒன்றை நடிக்கும் உணர்வை  மூவருமே அடைந்தனர்.  அவர்கள் மூவரும் வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூவரையும்  சந்திக்க வைத்தது பாவம் அன்றிப் பிறிதல்ல. ஆனால் தாயும் தந்தையருமென அவர்கள் நடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தத்தமது தனிமையில் இருந்து விடுபடும் போதுதான், பயந்தார்கள், ஆனாலும் 

பணிக்கரிடம் அவனைப் பராமரிப்பதற்கான சிறு தொகையை மாதா மாதம் தந்துவிடுவதாகச் சொன்னான். பணிக்கர் சினப்பட்டார். 

`இஞ்சை  மொத்தம் இருவத்திரண்டு பொம்பிளையளும், இருபது ஆம்பிளையளும் இருக்கிறம், எல்லாருக்கும் வெளியிலை சொந்தமிருக்கு, வெளிநாட்டிலை பிள்ளை குட்டி இருக்கு, நினைச்சால்  காலுக்கு மேலை காலைப் போட்டுக்கொண்டு அட்டூழியமா வாழலாம், ஆனால் இது கூத்தும் வேட்டையும் உள்ள குடி. இஞ்ச தன்ர வயித்துக்கு தாங்கள்தான் உழைக்கோணும், தின்னோணும்.  வேட்டையும் கூத்தும்தான் எங்கடை சீவியம். இஞ்ச அதுதான் வாழ்க்கை. எளிய மனிசருக்கு உழைச்சு திண்டாலே போதும், ஆனால் எங்களுக்கு அப்பிடியில்லை. இவன் எங்களிலை ஒராளாதான் வாழோணும்.  பதின்நாலு வேட்டைக்காரரிலை  என்ர  மூத்தவன்ர பெடியன் இடியன் வெடிச்சு துடைபிஞ்சு  கிடக்கிறான்.  துடை எலும்பு பிளந்து போட்டுது.  இனி அவன் வேட்டைக்கு வரமாட்டான். இந்தப் பெடி என்ர பேரன்ர இடத்தை நிரப்பட்டும். ஒரு மாசம் கழிச்சு வா, நிக்கப்போறான் எண்டால் நிக்கட்டும்,  வரப்போறான் எண்டால் கூட்டிக்கொண்டு போ`

உக்காரா தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.  பணிக்கர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.  தெய்வத்திடம் முறையிட்டு விட்டு பாரமிறங்கிச் செல்பவனைப்போல் எடையிழந்தபடி விடைபெற்றான். போகும் வழியில் பள்ளிக்கூடம் போய்  அமலாவையும், நுள்ளானையும் பார்த்து விசயத்தைச் சொல்லிச் செல்வதாக தாலிக்கொடியிடம்   சொன்னான்.  எங்கிருந்து எழுந்தது என்று அறியாமல் தாலிக்கொடியை ஒருமுறை அணைத்துக் `கவனம்` என்றான். 

`நீ வெளிக்கிடு, இவனுக்கு ஒரு ஐசி எடுக்கேலும் எண்டால் என்ர ரெண்டாவது பெட்டை முருங்கனிலை இருக்கிறாள், அவள் வீட்டு முகவரியை போட்டு எடுக்கப்பார், தச்சலும் ஒரு பிரச்சினை எண்டால் பிடிச்சுக்கொண்டு நிக்க ஒரு மட்டையாவது வேணும் தானே?`

உக்காரா தலையாட்டினான். தாலிக்கொடி அவனிடம் முன்பு போல்  ஆர்வத்துடன் எதையும் கதைக்கவில்லை. நுள்ளானைப்போல்  நீட்டிமுழக்காமல்தான் பதில் சொன்னான். தனக்கொரு கைபேசி வாங்கித்தரும்படி மட்டும் கேட்டான். அவனுக்கு அமலாவுடன் பேச வேண்டும் என்றான்.  உக்காரா தன்னுடைய கைபேசியை அவனிடம் கொடுத்தான்.  பணிக்கரிடம் சில ஆயிரம் ரூபாய் தாள்களைத் திணித்து,`என்ர திருப்திக்கு `என்றான். அவர் மறுக்கவில்லை. `உனக்கு பிடியொண்டு கிடைச்சிட்டு எண்டு மட்டும் தெரியுது, இந்தப்பெடியிலை இல்லை, வேற எங்கயோ ` சொல்லிவிட்டு கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’